அத்தியாயம் 3
மதுராவின் இந்த நிமிர்வை சோனா எதிர் பார்க்கவில்லை.
முகம் கறுக்க, வெறியோடு மதுராவை நோக்கிய சோனாவின் முகத்தில், நாகப்பாம்பின் சீற்றம் தென்பட்டது.
தனது இரை, ‘மிஸ்’ ஆகி விட்ட கடுப்பு அவள் முகத்தை விகாரமாக்கியது.
அப்போதே மதுராவை அடித்துக் கொன்று விடும் வெறி அவள் முகத்தில் தென்பட்டது.
“ஆனாலும் உனக்குத் திமிர் ஜாஸ்தி தான் டார்லிங்!…” என்றாள் சோனா.
“பட்…. பிச்சைக்காரிக்கு, இவ்வளவு திமிர் இருக்கக் கூடாதே சோனா!..” என்றது அருகில் இருந்த ஒரு ஜந்து.
“அந்தத் திமிர், இருக்க போய்த் தானே, கொழுத்தப் பணக்காரன் எவன் கிடைப்பான் என்று அலைய முடிகிறது.” என்றது இன்னொரு சாக்கடைப் புழு.
“உன் ஸ்டேட்டஸுக்கு, இவளை எல்லாம் உன் அருகவே சேர்த்து இருக்க கூடாது சோனா டியர். நீ பாவம் பார்த்தே!… இந்த, ‘மோகினி பேய்’ உன் வாழ்க்கையே பங்கு கேட்கிறாள்.” என்றது இன்னொரு ஜால்ரா.
“பணத்துக்காக என்றால் ஊரில் வேறு எவனுமே கிடைக்கலையா உனக்கு?… எங்க சோனுவின் புருஷன் தான் கிடைத்தாரா?… அதற்குத் தான் ஊரில் பல ஹோட்டல் இருக்கே!” என்றாள் இன்னொரு குடிமகள்.
“சொல்லுடீ!… எவ்வளவூ பேர் கேட்கிறாங்கல?… உனக்கு என் புருஷன் தான் கிடைத்தாரா!… பணம் தேவை என்றால் சொல்ல வேண்டியது தானே!… ஒ!… வெயிட் வெயிட். பணத்தோடு, படுக்கை அறைக்கும்… என் ஹப்பி தான் வேணுமா உனக்கு?” என்று சென்சார் செய்யும் அளவு மேலும் தொடர்ந்தாள் சோனா.
“அம்மா!…” என்ற அலறல், அந்த மாளிகை முழுதும் எதிரொலிக்க, தன் கை எறிந்த பிறகே, ‘தான் சோனவை பலமுறை மாறி மாறிக் கன்னத்தில் அறைந்து இருக்குகிறோம். சோனாவின் உதடு கிழிந்து ரத்தம் சொட்டுகிறது என்பதையும், அடித்த அடிகளின் வேகம் தாள முடியாதவளாய், அந்த ஹாலின் ஒரு மூலையில் சோனா விழுந்து இருக்கிறாள் என்பதும், தன் கோபத்தை கண்டு மற்ற புழுக்கள் மூலைக்கு சென்று நிற்கின்றனர்’ என்பதே மதுராவின் புத்திக்கு உரைத்தது.
ஒரு விரலை உயர்த்திய மதுரா, சோனவை நோக்கிக் காட்டி, “இன்னொரு முறை உன் சாக்கடை வாயைத் திறந்தே, வாயைக் கிழித்துடுவேன். உன்னையும், உன் கூடச் சுத்துற, இந்த ஜால்ரா கோஷ்டியின் குரவளையை கடிச்சு ரத்தம் குடிக்காமல், விட மாட்டேன்டீ.
மவளே!… உன் கிட்டே வேலை பார்த்தால் எது வேண்டும் என்றாலும் பேசி விடுவியா என்ன?… சங்க அறுத்துட்டு போயிட்டே இருப்பேன். த்தூ!… நீயெல்லாம், ‘தெய்வம் மாதிரியான கனகா பெரியம்மா’ வயத்திலே பொறந்தவளாடீ!… குப்பை புத்தி.
நானடி உன் வீட்டு படியேறி, ‘அம்மா!… தாயே!… அடுத்த வேளை சோற்றுக்கு கூட, வழி இல்லாமல் இருக்கோம். வேலை குடுன்னு’ கேட்டது!
நீ வந்தே… என் வீட்டு படியேறி நீ வந்தே. பத்து தடவை நீ என் வீட்டு படியேறி, என் அப்பா காலில் விழுந்து ட்ராமா போட்டு, நீலி கண்ணீர் வடிச்சே. ‘பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கணும்’ என்று கதை அளந்தவ நீ…. அப்பவே நெனச்சேன், ‘ஓவர்ரா இருக்கேனு’. புத்திய காட்டிட்டே.
என்னவோ உன் ‘புருஷனை வளைக்கிறேன்’ என்று வாய் கூசாம சொல்றேயேடி… ஆடிட், நடக்கும் போது நான் மட்டுமா இருந்தேன்!
மொத்தம் எட்டு பேர். உன் தாத்தா, அப்பாவோடு சேர்த்து தான் சொல்றேன்… இதுல மூன்று பேர் பெண்கள். பல வாரமாய் இரவு, பகல் பாராமல், பசி, தூக்கம் பற்றி யோசியாமல் வேலை செய்துட்டு இருக்கோம். என்னடி, சொன்ன உன் புருஷனோடு!… பச்சையா பேசுறியே, நீயெல்லாம் குடும்பபெண்ணா?.. மவளே!
உன் லோலாயித் தனத்தை காட்டினே, நான் சங்கரனின் மகள். இளநீர் சீவுவது போல, ‘ஒரே வெட்டாக உங்க தலைகளை வெட்டிட்டு, அதோடு போலீஸ் ஸ்டேஷன் போகும் தில்’ எனக்கு இருக்குடி. பார்கறீயா!… பார்கறீயா?..” என்றவள் அங்கு இருந்த சாம்பைன் பாட்டிலை டேபிளில் உடைத்து, கூர் முனையைச் சோனாவின் கழுத்திலேயே வைத்து அழுத்தினாள்.
மதுராவின் கண்களில் தெரிந்த, ‘உண்மை என்னும் நெருப்பை’, கோபத்தைப் பார்க்க முடியாமல் ஒரு நொடி, சோனாவின் கண்கள் நிலம் பார்த்தது.
“உன்னை, உன் வீட்டில் அடக்கி இருக்கனும். பெரியப்பா அடக்கலை. உன்னைக் கட்டினார் பாரு, ‘உலகத்திலேயே வேறு பெண் இல்லை’ என்று, காதலித்து மணந்தார் பார்… அந்த, ‘விஜய கருணாகர மகாராஜா’ அந்த ஆளாவது உன்னை அடக்கி இருக்கனும். உன்னை அவரும் அடக்கலை.
ஸோ, உன் பிறந்த வீட்டிலும், உன் புகுந்த வீட்டிலும் உன்னை அடக்க, எவனுமே ஆண் இல்லை போல இருக்கு.
வாடி!… என் பாசக்கார அக்கா!… நான் அடிக்கற அடியில், உன்னைப் பிடிச்சு இருக்கற மொத்த பேய்யும், திமிரும் அடங்கிடும்டி.” என்று கன்னம் கன்னமாய் அடி கொடுத்தவள்,
“இனி என் வீட்டு பக்கம் வந்துடாதே. பாட்டில் சொருகியது போல கத்தியைச் சொருக யோசிக்கவே மாட்டேன்” என்று பெண் சிங்கமாய், பத்ரகாளியாய் கர்ஜித்தவள் இழுத்து வைத்து மேலும் அறைந்த பிறகே, வாயிலை நோக்கிச் சென்றாள்.
அந்த மாளிகையினுள் இருப்பதே அருவெறுப்பாக இருக்க, வேக நடை போட்டு வாயிலை நோக்கிச் சென்றாள் மதுரா.
மான, ரோசம் உள்ள யாரும், அங்கு அதற்கு மேல் இருக்க மாட்டார்கள் தானே!
“நில்!… எங்கே போற மதுரா?” என்றாள் சோனா.
“நான் எங்கே போறேன், வரேன்னு உனக்கு ரிப்போர்ட் கொடுக்க முடியாது.” என்றாள் மதுரா, தன் நடையை தொடர்ந்தவாரே திரும்பாமல்.
“ஆபீஸ் பைல்ஸ் எடுத்து வந்தியே, உங்கப்பனா வந்து எடுத்துப் போவார்?… டேக் இட்.” என்றவளை, ‘வெட்டவா குத்தவா?’ என்பது போல், திரும்பி முறைத்தாள் மதுரா.
“அடியேய்!… நீ இவ்வளவு பேசிய பிறகும் உன்னிடம் வேலை செய்ய எனக்கு என்ன பைத்தியமாடீ?… இவ்வளவு வெளுத்துக்கட்டிய பிறகும் நீ அடங்கவே மாட்டியா?
நான் சோத்துல உப்ப போட்டுச் சாப்பிடுற ரகம். ஸோ, எனக்கு மானம், ரோசம், சூடு, சொரணை எல்லாத்துக்கும் மேலே, கெளரவம், தன்மானம் என்று இருக்கு. பணத்துக்காக வாய இளிச்சிட்டு எந்த எல்லைக்கும் போற கீழ்த்தனமான பிறவி நான் இல்ல.
இதோ!… எச்சை இலைக்காகப் பறக்கும் காக்கை கூட்டம் நிக்குதுங்களே, இந்த அல்லக்கைகளில் யாருக்காவது உன் உயர்ந்த வேலையைக் கொடு. ஏதாவது பச்சையா சொல்லிடப் போறேன்.” என்றாள் மதுரா கோபத்தோடு.
“ஹா!… ஹா!… ஹா!… குட் ஜோக். நல்லா தான் பேசுறே. பட் உன்னை அவ்வளவு சுலபமா விடவா மூன்று வருடம், நாயைப் போல, அலையோ அலைன்னு அலைந்து திரிந்து, உன்னைக் கண்டுபிடிச்சு, என் கஸ்டடிக்கு கொண்டு வந்தேன்?
வாழ்க்கையில், ‘இன்னும் நீ எவ்வளவோ துடிக்கனும், கதறனும். ஏன் பிறந்தோம், ஏன் உயிரோடு இருக்கனும்’ என்றும் ஒவ்வொரு நொடியும் நீ அழணும்னுடீ. அதற்குள் எஸ்கேப் ஆகி விடுவாயா?
ஆக தான் விட்டுவிடுவேனா?… என்னடீ!… என்னவோ அப்படி சாமி ஆடினே!… இப்போ என்ன இப்படி முழிக்கறே!.. என்ன புரியலையா? வெயிட் செய்.” என்ற சோனா, அங்கு இருந்த சில பேப்பர்களை தூக்கி மதுராவின் மேல், விட்டு எறிந்தாள்.
அவற்றை படித்து பார்க்கப், பார்க்க மதுராவிற்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது.
ஐந்து வருட பணி ஒப்பந்தம், வேலையில் சேரும் போது மதுரா, படித்துப் பார்த்து சைன் போட்டது தான்.
அப்போ இருந்த சரத்தும், இன்று இவள் கையில் இருந்த பத்திரத்தில் இருந்த விஷயமும் முற்றிலும் மாறி இருந்தது. இல்லை சோனாவால் மாற்றபட்டு இருந்தது.
‘ஐந்து வருட பணி காலத்தில் எக்காரணம் கொண்டும் வேலையே ரிசைன் செய்ய முடியாது. உயிர் போனால் தவிர!.. அப்படி விலகிப் போக வேண்டும் என்றால், ‘ஒரு கோடி ரூபாய், ‘இந்தர் இண்டஸ்ட்ரிஸ்க்கு’ நஷ்டஈடாகத் தர வேண்டும்.’ என்று இருந்த ஒப்பந்த பத்திரம், மதுராவின் சைன் பெற்று, தன் கோர முகத்தைக் காட்டியது.
இதுவே, மதுராவை தலைச் சுற்ற வைத்தது என்றால், அடுத்த பத்திரம் அணுக்குண்டை வெடிக்க வைத்தது. ‘சங்கரன் சோனாவிடமிருந்து மூன்று கோடி கடன்’ பெற்று இருப்பதாகக் கூறியது.
பத்திரத்தில் இருந்தது சங்கரனின் கையெழுத்து தான். அது பதிவும் செய்யபட்டு இருந்தது, மதுராவின் பணி ஒப்பந்த பத்திரம் போல்.
‘கடன் திருப்பப்டவில்லை’ என்று சோனா நினைத்தால், எந்நேரமும் சங்கரனின் மொத்தக் குடும்பமும் கைது செய்யபடலாம்.
‘ஓசி டீ கூட, வாங்கிக் குடிக்காத தன் தந்தை, மூன்று கோடி கடன் வாங்கினாரா!… இருப்பதை வைத்து மன நிறைவோடு வாழும் மனிதர் ஆயிற்றே!… தன் குடும்பத்தையும் அப்படி தானே பழக்கினார்.
மூன்று கோடி ரூபாய்க்கு அவர் எதற்குக் கடன் வாங்க போகிறார்? சொந்த வீடு, கார், சம்பாதிக்கும் மகன், மனைவி, மகள். யாருக்கும் உடல் நல குறைவோ கிடையாது. அப்படியே என்றாலும் மருத்துவ காப்பீடு எல்லார் பேரிலும் இருக்கிறது. கைக்காசு போட்டுத் தான், வைத்தியம் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை.
தனக்கோ, ரகுவுக்கோ இப்பொது எந்தத் திருமண ஏற்பாடும் நடக்கவில்லை. திருமணம் கூடக் கோயிலில் செய்து விட்டு, பார்ட்டி மட்டும் கொடுக்கும் எண்ணத்தில் தான் மதுராவும் ரகுவும் இருந்தனர். கார்த்திக் குடும்பமும் அதை ஆதரித்தனர்.
பின் எதற்குத் தந்தை, இவளிடம் மூன்று கோடி கடன் வாங்கினார்? என்ன அவசியம்?… அவசரம்?…’ என்று பலவாறு யோசித்து பார்த்தும், தன் தந்தை, ‘எதற்காகச் சோனாவிடம், அவ்வளவு பெரிய தொகை கடன் வாங்கினார்’ என்பது விளங்கவில்லை மதுராவிற்கு.
“வாட் டார்லிங்!… அப்படி குதிச்சே!… இப்போ பெட்டி பாம்பா அடங்கிக் கிடக்கறே!… ஓ… ஓ… நாலு கோடி காரணமா?… இதெல்லாம் ட்ரைலர் தான் கண்ணு. மெயின் பிக்சரே, இனிமே தாண்டீ இருக்கு. ஓசி டீயை கூடக் குடிக்காத உன் அப்பா, ‘எப்படி மூன்று கோடி கடன் வாங்கினார்?’ என்று யோசிக்காதே மது பேபி!.
அவர் அப்படி வாங்கவே இல்லை. ஆனால் இந்தப் போலி பத்திரம் சொல்லும், அவர் கடன் வாங்கி இருக்கார் என்று. யு நோ… என் தாத்தா சொன்னது போல யுவர் டாட், ‘சென்டிமென்டல் இடியட்’. கண்ணைக் கசக்கியவாறு, ‘அப்பா பேசணுமாம் சித்தப்பா!…’ என்று போன் கொடுத்தேன்.
போனில் பேசிக் கொண்டே, படித்து கூடப் பார்க்காமல் சைன் செய்து விட்டது உன் முட்டாள் டாடி. அந்தளவு பாசம். என் கிராண்ட்பா சொன்னது போல, ‘உன் டாடி, யூஸ் லெஸ் பெல்லோ’ தான்.
பணம் பத்தும் செய்யும் மதுரா. நாலு கட்டு தூக்கிப் போட்டேன். போர்ஜ்ரி செய்து ரெண்டு டாக்குமெண்ட்ஸ் கொடுத்துட்டாங்க. ஸோ சிம்பிள். சொல்லுடீ…. என் பவர் காட்டட்டுமா?
போலீசை விட்டுக் குன்னூரில், இருக்கும் உன் அப்பனை கைது செய்து காட்டட்டுமா?… செய்ய மாட்டேன்ன்னு மட்டும் நினைக்காதே!…
உன்னை இப்படி நிற்க வைக்க, மூன்று வருஷம் திட்டம் போட்ட எனக்கு, உன் பேமிலி மொத்தத்தையும், ஜெயிலில் தள்ளுவது ரொம்ப ஈசி பேபி.
மதுரா குட்டி!… ஒரு டவுட்டீ செல்லம். ஊர் புல்லா, பெயர் நாறிய பிறகு, உன் டாடி, அவர் மட்டும் சூசைட் செய்து கொள்வாரா?… இல்ல சினிமாவில், கதைகளில் வருவது போல, ‘மொத்தக் குடும்பத்தையும் கொன்னுட்டு தானும் தற்கொலை’ செய்து கொள்வாரா?
டெஸ்ட் செய்து பார்க்கலாமா?… என்ன பெட் செல்லம்?… என் பிரென்ட், ‘உன் டாடி மட்டும் தற்கொலை செய்து கொள்வார்’ என்கிறாள்.
நான், ‘பாமிலியோடு தற்கொலை செய்து கொள்வார்’ என்கிறேன்.
பெட் பணம் எவ்வளவு தெரியுமா மூன்று கோடி!… நீ சொல்லு, ஹெட் ஆர் டெய்ல்ஸ்?” என்றாள் சோனா, விகாரச் சிரிப்போடு.
நடப்பது கனவா, நனவா என்று புரியாமல், மூளை செயல் பட மறந்து விட, மீண்டும் சிலையாக நின்றாள் மதுரா.
‘இவ என்ன சைக்கோவா!… மன நலம் பாதிக்கபட்டவளா!… இவளுக்குத் தான், எந்தக் கெடுதலையும் செய்யவே இல்லையே!
இவ பேசுவதை பார்த்தால், பல வருட பிளான் போல் இருக்கே!… வீட்டை விற்றால் கூட, ஒரு கோடி கிடைக்குமா என்பதே சந்தேகம். சில பல லட்சம் என்றால், கூடச் சமாளித்து விடலாம்.
ஆனால், இவ செக் மேட் நான்கு கோடிக்கு அல்லவா வைத்து இருக்கிறாள்!… அவ்வளவு பணத்திற்கு எங்குப் போவது!… யாரிடம் கேட்க முடியும்?… சரிதான் போடீ… உன்னால் முடிந்ததை பார்த்துக்கோன்னு போக முடியுமா?
இப்படி சொல்ல ஒரு நொடி போதும். ஆனால், அதன் விளைவு. அப்பா நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டார். ‘ஊர் முழுக்க கடன் வாங்கியதால் கைது’ என்று தெரிய வந்தால், உயிரை விட்டு விடுவார். ரோஷம் அதிகம் உள்ளவர்.
ஒரு வார்த்தை, அண்ணன் சேதுபதி சொல்லி விட்டார் என்று பதினைந்து வருடங்களாக அவருடன் பேசாமல் இருந்தவர் ஆயிற்றே!…
டிவி, மீடியானு பெயர் அடிபட்டால்!… கடவுளே!…’ மனம் கதறியது மதுராவிற்கு.
“ஏன்?” என்றாள் மதுரா, தோற்ற குரலில்.
என்ன யோசித்தும், இவள் ஏற்படுத்திய சிக்கலிலிருந்து மீளும் வழி தென் படவில்லை.
“ரிவென்ஜ். மதுரா செல்லம். ரிவென்ஜ். பழிக்கு பழி. நீ அழணும், கதறித் துடிக்கணும். நீ இப்படி துடிப்பதைப் பார்த்து, ‘அந்தப் பிச்சைகாரப் பயல் கருணாகரனும்’ தவிக்கணும்.
‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ மதுரா.” என்றவள் மதுரா, ஸ்தம்பித்து நிற்கும் போதே, தன் ஜால்ராக்களுடன், பீச் ஹவுஸ் விட்டு வெளியேறிக் காரில் பறந்து விட்டாள்.
ஒருத்தி அங்குத் துடிப்பதை கண்டும், லட்சியம் செய்யாமல், சோனா கிளம்பிய சில நொடிகள் மதுரா, அந்த ஹாலில் அப்படியே நின்றாள்.
தன்னை சமாளித்து அவள் நிமிரும் போது சோனா காரில் ஏறிக் கொண்டு இருந்தாள்.
“சோனா!… சோனா!… நில்லு சோனா!… சோனா!…” என்று கத்திய படியே ஓடி வந்த மதுராவை, அவள் கண்டு கொள்ளவில்லை.
அந்த மாபெரும் பீச் ஹவுஸ் வாயிலில் நின்ற மதுராவிற்கு, தலை சுற்றியது. மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க சென்ற காரையே வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.
அவள் எண்ணத்தைத் தடை செய்தது வாட்ச்மேனின் குரல்.
“தா பொண்ணு!… ஹே!.. உன்ன தான். என்ன சும்மா முழிச்சுட்டு நிற்கறே?… பங்களாவை விட்டு வெளியே போ. பங்களாவை பினாயில் ஊத்திக் கழுவ சொன்னாங்க. ஹே பொன்னி!… தோ இந்தப் பொண்ணு, நின்ன இடத்தியெல்லாம் மூணு, நாலு முறை பினாயில் ஊத்தி கழுவ சொல்லிச்சு சின்ன மேடம்.
“ஹே!… தா… நில்லு!… இந்தப் பைலுகளை உங்க அப்பனா தூக்குவான்?… கொண்டு போ. பொன்னி கழுவி தள்ளுப் புள்ள.” என்று சொல்லிய வாட்ச்மேன், மதுராவை வெளியே தள்ளாத குறையாய், காம்பௌண்ட் கேட்டை இழுத்து மூடிப் பூட்டு போட்டு, உள்ளே சென்று விட்டான்.
வேலைக்கார பெண் பொன்னியும், வீட்டைப் பினாயில் ஊத்திக் கழுவ ஆரம்பித்தாள்.
வேலைக்காரர்களிடம் கூட இப்படி நடக்க சொல்லி விட்டுச் சென்று இருந்த சோனாவின், ‘அடுத்த திட்டம் என்ன’ என்று புரியவில்லை மதுராவிற்கு.
வேலையாட்களின் அலட்சியம், இப்படி பேசுவதற்கான தைரியம் யாரிடமிருந்து வந்தது என்பது புரிந்து விடக் குன்றி போனவளாய், அந்தப் பங்களாவை விட்டு வெளியேறினாள்.
மனம் முழுக்க, ‘ஏன் என்ற கேள்வி’ மட்டுமே. சுற்று புறத்தை மறந்தவளாய், கால் போனா போக்கில் நடக்க ஆரம்பித்தாள். சுற்றம், நேரம் என்று எதுவுமே மனதில் பதிய வில்லை.
‘எப்படியாவது என்னைத் துடிக்க வைக்கும் வேகம் என்ன?..
ஒரு வேலை வெறியோ?…
அதுவும் தான் எதற்கு?… இன்று தவிர, கடந்த ஒரு வருடத்தில், எதற்குமே சோனாவை எதிர்த்துப் பேசியது கூட இல்லையே!…
இந்த ஒரு வருட பி.ஏ வேலையின் போது கூட, கொடுக்கப்பட்ட சம்பளத்திற்கும் மேலாகத் தானே உழைத்தேன்!
‘ஒரு வார்த்தை யாரும் சொல்லி விடக் கூடாது, சோனா வேலையில் ஒரு குற்றம்’ கூடக் கண்டு பிடிக்கக் கூடாது என்று மாடாய் உழைத்தது எல்லாம் வீண். பெற்றோர் தலை குனியக் கூடாது என்று பார்த்துப் பார்த்து நடந்தது எல்லாம், ‘விழலுக்கு இரைத்த நீரின் கதை’ தானோ!…
இல்லை… இல்லை இவளே சொன்னாளே!… பல வருட பழி, திட்டம் என்று… மூன்று வருடம் தேடி அலைந்தாகச் சொன்னாளே!… சொன்ன அவளின் முகத்தில், அந்த நொடி தெரிந்த கோவம், வெறி!
ஐயோ!… அப்பா!… பாசத்தில் படுகுழியில் நீங்களும் விழுந்து, என்னையும் அல்லவா மாட்டி விட்டு இருக்கிறீர்கள்!… இதை எப்படி தாங்குவீர்கள்?… இதிலிருந்து, எப்படி அப்பா மீளப் போகிறோம்?’
மனம் ஊமையாய் புலம்ப, அந்த இருட்டில் தென்னன்தோப்பிலிருந்து, ஆள் அரவம் இல்லாத, முந்திரி தோப்பிற்குள் நுழைந்து இருந்தாள்.
இ.சி.ஆர் ரோட்டில், ஒதுக்குபுறமான இடத்தில், பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்ரமித்து கட்டபட்டு இருந்தது அந்தக் கடற்கரை மாளிகை.
கஜேந்திரனின், ‘பினாமி சொத்துக்களில்’ இதுவும் ஒன்று.
சில கிலோமீட்டரில் கடற்கரை ரிசார்ட் ஒன்றும் கூட உண்டு.
தென்னம் மரங்கள், முந்திரி தோப்புகள் சுற்றி நிறைந்து கிடக்க, அந்த இரவு வேளையில், ‘ஒரு அமானுஸ்ய தன்மையோடு’ நின்று இருந்தது அந்தப் பங்களா.
நடந்து கொண்டு இருந்த பயங்கரத்திற்கு, வாய் மூடி மௌன சாட்சியாகிக் கொண்டு இருந்தன.
தன் எண்ண ஓட்டத்தில் முழுகிக், கால் போனப் போக்கில் நடந்து கொண்டு இருந்த மதுராவை, ஆறு கண்கள் கவனித்து கொண்டு தான் இருந்தன.
அதில் ஒருவன், மதுராவை காமத்துடனும், மற்ற இருவர் வேதனையுடனும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!