21
சங்கரனின் பாராட்டைக் கேட்டு, தலையில் இரு கைகளையும் வைத்து அமர்ந்து விட்டான் விஜய்.
வாழ்க்கையில், ‘பாராட்டுக் கேட்டு மனம் நொந்து போவோம்’ என்று யாராவது சொல்லியிருந்தால், விஜய் நம்பியே இருக்க மாட்டான்… ஆனால், இன்று சங்கரன் மூலம் குவிந்தப் பாராட்டு என்னும் சுனாமிக்கு, எப்படி ரியாக்ட் ஆவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
முதல் அடியே இவ்வளவு பெருசாய் இருந்தா அவன் என்ன செய்ய முடியும்!…
அவனுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று கூடத் தெரியவில்லை. முதல் பாலில், எதிராளியை அவுட் செய்து இருந்தார் சங்கரன்.
“அண்ணா!… லேடீஸ் ஹாஸ்டல்… பயமா தான் அண்ணா இருக்கு. ஊர், உலகத்தில் எவ்வளவு பயங்கரங்களை கேள்விப் படறோமே!… நெஞ்சு படபவென அடித்துக் கொள்கிறது தான். அதனால்…” என்று இவர் நிறுத்த, டீம் ஒன்றுடன் பவானி, ரகு கூட நிமிர்ந்து அமர்ந்தனர்.
‘மதுரா வேலைக்குப் போக வேண்டாம்.’ என்று கூறப் போகும் நல்ல செய்தியைக் கேட்க.
“அதனாலே அண்ணா, கஜா மாமா கிட்டே கேட்டு, மதுராவை உங்க வீட்டுக்கேக் கூட்டிப் போய்டுங்க அண்ணா. உங்க வீட்டில் இருந்தால் அண்ணி, அம்மா, பூரணிக் கூட இருக்கான்னு நாங்க நிம்மதியா இருப்போம்.” என்றாரே!
“என்ன..து!” சேதுபதிக்கு, நெஞ்சு வலியே வந்து விடும் போல இருந்தது. மற்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
போனினை மியூட் போட்ட விஜய், “அப்பா! சான்ஸ்சே இல்லை. முழு பார்ம்ல இருக்காரு உங்க தம்பி. அந்தப் பேய், இவரை நல்லா பிரைன் வாஷ் செய்து இருக்கு. இவருக்கு எல்லாம், ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ என்று உடைச்சு சொன்னக் கூடப் புரியுமா என்பது சந்தேகம் தான்.” என்றான் தவிப்பாக.
“அண்ணா!…. மதுராவை எப்போ அண்ணா, உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறீங்க?” என்றார் அந்த அப்பாவி தந்தை, தன் மகளின் வாழ்வுக்குத் தானே, குழிப் பறிப்பதை அறியாதவராய்.
‘நான்கு வாரம் போராடி, வீட்டை விட்டு வெளியேறி, வனவாசம் போகாத குறையாய், சோனாவின் பிளான் உடைத்து விட்டு நிமிர்ந்தால், இவர் மறுபடியும் ஆப்பு வைக்கிறாரே’, என்று கைகளால் முகத்தை மூடி அமர்ந்தான் விஜய்.
‘என்னடீ!…. மது!… இது… இவ்வளவு பிரைட்டான உனக்கு, இப்படியொரு டியூப் லைட் அப்பாவா?…. எப்படிடீ வீட்டில் இந்த மனுஷனை சமாளிக்கறீங்க?… முடியலைடீ.!…’ என்று மனதிற்குள் மதுராவிடம் புலம்பினான் விஜய்.
“சங்கரா!… மாமாவுக்கு இது எல்லாம் பிடிக்காதுப்பா. வயசு பெண் வீட்டில் தங்க வைக்க ஒற்றுக் கொள்ள மாட்டார். தினமும் அவரைக் காண, ஆயிரம் பேர் வருவார்கள், போவார்கள். யார் எப்படின்னு நமக்கு எப்படிப்பா தெரியும்!
நாங்களே அவர் சொல்லித் தானே, பூரணியை ஹாஸ்டெலில் தங்க வைத்து இருக்கிறோம்!…
சென்னையில் இல்லாத கல்லூரியா!… ஏன் மாமாவின், ‘GM கல்லூரியே’ இல்லையா!… இருந்தாலும் சின்னவளை ஏன் ஊட்டிக்கு அனுப்பினோம்?… இதற்காகத் தானே!” என்று உண்மையும், பொய்யும் கலந்து விட்டார் சேது.
“ஓஹ்…. அப்படியா அண்ணா!…. சாரி அண்ணா. பெரியவர், பெரியவர் தான் இல்லையா!…. எப்படி எல்லாம் யோசிக்கிறார் இல்லை!… ரியலி கிரேட் அண்ணா. ஆனா, மதுராவை எங்கே அண்ணா தங்க வைப்பது?” என்றார் சங்கரன்.
“சங்கரா!… சொல்வதைக் கேளுப்பா. மதுராவுக்கு வேலை என்ன அப்படி அவசியம்?… வயசாகுது இல்லை. காலா காலத்தில் கார்த்திக்கோடு திருமணத்தை நடத்திடுப்பா.” என்றார் சேது.
“இல்லைன்னா…. கார்த்திக், மதுராவுக்கு சரி வருமான்னு யோசனையா இருக்கு. உங்கக் கிட்டே சொல்றதுக்கு என்ன அண்ணா. வேலைக்குப் போன பிறகு கார்த்திக், ரொம்ப மாறிட்டான்.
சிகரேட், குடி, பார்ட்டி என்று மாறிட்டான்
நான் தூக்கி வளர்த்தப் பிள்ளைத் தான். அவனுக்கு மதுரான்னு சொல்லிச் சொல்லித் தான் வளர்த்தோம். இப்போ அவன் ஸ்டேட்டஸ் இணையான பெண்ணை விரும்பறான் போல இருக்கு.
அவன் வாழ்க்கை முறைக்கு, நம்ம பொண்ணு தோதுபடுமான்னு தெரியலை. அதான் சோனாம்மா, ‘மதுராவிற்கு ஏற்ற மாப்பிளை பார்க்கிறேன்’ என்று சொல்லிச்சு. சரிம்மான்னு, சோனா கண்ணு கிட்டேயே, அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன் அண்ணா.
நம்ம பொண்ணு யாரைக் கைக்காட்டுதோ, அவர் தான் மதுராவிற்கு கணவன் என்று முடிவு பண்ணிட்டேன்…. சந்தோசமா அண்ணா?….” என்றார் சங்கரன்.
மற்றவர்களின் மனநிலையை விவரிக்க, உலகில் உள்ள அனைத்து மொழிகளின் வார்த்தைகள் கூடப் போதாது தான்.
‘அப்பா!… சங்கர்!… அப்பாவியா இரு. வேணாம்களை. அதுக்குன்னு இப்படியா இருப்பே!…. சத்தியமா சொல்றேன். வேணாம். முடியல. அழுதுடுவேன். உன்னையும் நம்பி பவானியை, கட்டி கொடுத்தார் பார் ஒருத்தர், அவரைச் சொல்லணும். கண்ணைக் கட்டுதே!’ என்று மனதிற்குள் புலம்பினார் சேது.
பிளட் பிரஷர், ஹார்ட் அட்டாக், நரம்பு தளர்ச்சி, பைத்தியம் என்று எல்லாவற்றையும் வரவழைத்து விட்டார் சங்கரன்.
ஆனால், இவர்கள் பயந்தது போல, சோனா எந்த மாப்பிளையும் கொண்டு வரவில்லை. அவளுக்குத் தான் மதுராவை அழிப்பது குறி ஆயிற்றே! அவளா திருமண வாழ்க்கை அமைத்து தரப் போகிறாள்!
சோனாவின் பிளான் பற்றி முழுமையாக அறிந்தவர்கள், ‘மீட்பு குழுவினர்’ என்று இருக்கும் மூன்று குழுக்கள் மட்டுமே!
இந்த டீமில் பவானி இல்லாதலால், சரி வர அவருக்கு விஷயம் தெரியவில்லை. தெரிந்து இருந்தால், சோனாவை கொன்று இருப்பார். சங்கரனை விவாகரத்து செய்து இருப்பர்.
தாயின் உள்ளுணர்வுவால் மட்டுமே அவர் பயந்து கொண்டு இருந்தது. ஆனால், மகள் சொன்னதைக் கேட்ட பிறகு, கனகா , மரகதம் மதுரா சொன்னதை உறுதி செய்தப் பிறகு மகளை வேலைக்கு மட்டும் அல்ல, பக்கத்துக்கு வீட்டுக்குக் கூட அனுப்ப கூடாது என்று முடிவு எடுத்து விட்டார்.
முடிவு மட்டுமே அவரால் எடுக்க முடியும் என்பதையும், ஆனால், அது நிறைவேற வேண்டும் என்றால், அது சோனாவின் கையில் தான் உள்ளது என்பதை அன்று இரவே சோனா, அவருக்குப் புரிய வைத்து விட்டாள்.
சங்கரன் வீடு திரும்ப மணி பதினொன்று ஆகி இருந்தது. மதுராவும், ரகுவும், உறங்கச் சென்று இருந்தனர். வீடு திரும்பி இருந்தவரின் முகத்தில், நண்பரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சி என்பது துளியும் இல்லை என்பதைக் கண்டுக் கொண்டது பவானியின் கண்கள்.
‘மனைவிகளுக்கே உரிய சூட்சும உணர்வு,’ ஏதோ சரியில்லை என்பதை உடனே கண்டுக் கொண்டது. மனைவிமார்கள் கணவனின் முகத்தைக் கண்டே, அவர் எந்த மூடில் இருக்கிறார் என்பதை கண்டு பிடித்து விடுவார்களே!
அதுவும் கணவனின் சிறு அசைவைக் கொண்டே, அவர் நினைப்பதை உணர்ந்து விடும், ‘பவானி போன்ற அதி புத்திசாலி மனைவிக்கு’ உள்ளுர பதற ஆரம்பித்தது.
என்றுமே சங்கரனை இத்தனை கோபத்தில் அவர் கண்டது இல்லை.
இன்னும் சொல்லப் போனால், ‘பேய் அறைந்தது போல முகம் வெளுத்து, கண்கள் கோபத்தில் கோவை பழமெனச் சிவந்து கிடக்க, அதையும் தாண்டி வலியைக் காட்டி’ சங்கரன் இருந்தது இல்லை.
“மதுரா!… எதற்கு வந்து இருக்கா?” என்ற சங்கரனின் கேள்வியில், ‘இவர்க்கு யார் சொன்னது’ என்று சற்று திகைத்தவர், கணவனின் குரலின் பேதமும், முகத்தில் தென்பட்ட கோபத்தையும் கண்டு நிதானித்தார் பவானி.
கணவன் வந்தப் பிறகு, அவருக்குத் தேவையானவற்றை செய்து, உறங்கச் செல்லும் போது அவரிடம் மெல்ல, மெல்ல விஷயத்தைச் சொல்லத் தான் பவானி நினைத்து இருந்தது.
‘எந்த விஷயத்தையும் சொல்லவும் நேரம் காலம் என்று ஒன்று இருக்கிறது’ இல்லையா!… அதுவும் இது எத்தகைய விஷயம்!… அதனால் இவர் தக்க நேரத்திற்கு காத்து இருக்க, வரும் போதே சங்கரன் வந்து நின்ற கோலமே பவானிக்கு திக்கென்றது.
“வேலையை விட்டு வந்துட்டாங்க.” என்றார் மெல்ல.
சேலை மறைவில் இருந்த மொபைலை ஆன் செய்தவர், அழைத்துச் சேதுவிற்கு.
“என்ன காரணம்?” சங்கரனின், குரல் டெசிபல் உயர்ந்து கொண்டே இருந்தது.
கணவர் மூத்த மகளாகக் கருதும் சோனாவை பற்றிப் பாலீஷாக எப்படி சொல்வது, சொல்லி எப்படி புரிய வைப்பது என்று சற்று திணறிப் போனார். கணவர் இருந்த மனநிலை, அதற்கு பொருத்தமற்றதாகத் தோன்றியது.
“உன்னைத் தான் பவானி கேட்டேன். என்ன காரணம்?” என்றார் சங்கரன் மீண்டும்.
அவரின் உயர்ந்தக் குரல், உறங்கிக் கொண்டு இருந்த மதுரா, ரகுவைக் கூட எழுப்பி விட, இருவரும் ஹாலுக்கு வந்து விட்டனர்.
சங்கரனின் கவனம் ஒரு கணம் ஹாலுக்கு வந்த பிள்ளைகளின் மேல் திரும்ப, அந்தக் கணத்தில் சேலையில் இருந்த மொபைலை அங்கு இருந்த சோபாவின் ஒரு மூலையில் வைத்து விட்டார்.
அந்த இரவு வேளையில் பவானி அழைக்க, விஷயத்தின் தீவிரத்தை அறிந்த சேது, மற்றவர்களைத் தன் அறைக்கு அழைப்பை ஸ்பீக்கரில் போட்டார்.
“பதில் சொல் பவானி!…. எதற்காக உன் மகள் வேலையை விட்டு வந்திருக்கிறாள்!… பதில் சொல்.” என்று காது செவிடாகும் படி கத்தினார் சங்கரன்.
பெருமூச்சு வெளியிட்டுத் தன்னை தயார் படுத்திய பவானி, “சோனா ஆபிசில் ட்ரின்க் பண்ணிட்டு… அய்யோ!… அம்மா!…” என்று கன்னத்தைப் பிடித்தவாறு தரையில் விழுந்தார் பவானி.
சங்கரன், பவானியை சோனாவுக்காக அடித்து இருந்தார்.
“அம்மா!…” அதிர்ந்து போன மதுராவும், ரகுவும் தரையில் கிடந்த தாயிடம் ஓடினர்.
“சே!… நீயெல்லாம் ஒரு பெண்ணா!… தாயாடீ!… பெண்ணாய் பிறந்து, என் அண்ணன் மகள் மேல், பழிப் போட எப்படிடீ துணிஞ்சே!… இனி உனக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை, பந்தமும் இல்லை. எல்லாம் இன்றோடு முடிஞ்சு போச்சு.
என் கண் முன் நிற்காதே!… பாவி!…. பாவி!… படுபாவி!… ராட்சசி!… சோனா, நம்ம மூத்த பொண்ணுடீ!…. திருமணம் ஆனவ. இன்னொருத்தரின் மனைவி. இதை மட்டும் கருணா தம்பிக் கேட்டு இருக்கனும், உன்னை வெட்டிப் பொலி போட்டு இருப்பார்.
சே!… நீயி எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை. நம்பினேன். உன்னை முழுசா நம்பினேன். சோனா போன் செய்து சொன்னப்ப கூட, நான் நம்பலையே!… போனிலேயே கதறி அழுதுதுச்சுடீ அந்தப் பொண்ணு.
‘சித்தி, எனக்கு இன்னொரு அம்மா. அவங்களா சித்தப்பா என்னைச் சந்தேகபட்டுத் தங்கச்சியைக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க?….’ என்று கேட்டாடீ. பாவி!… படுபாதகி!… கொலைகாரி!
ஒரு பிள்ளைத்தாச்சிப் பொண்ண இப்படி பேச, எப்படிடீ மனசு வந்தது உனக்கு!…
அய்யோ!… என் அண்ணன் வம்சத்தை கருவறுத்துதியேடீ.
அய்யோ!… ஐயோ!…” என்று முகம் மூடிக் குலுங்கி குலுங்கி அழுதார் சங்கரன்.
“என்ன…து?… குழந்தையா?….” என்று பல குரல்கள், ஏக காலத்தில் அலறியே விட்டன.
சொல்லி வைத்தது போல அனைவரும் அவர்கள் நெஞ்சிலேயே கை வைத்துக் கொண்டனர்.
“ஆமாடீ பாவி!… சோனாவுக்கு அபார்சன் ஆகிடுச்சு… பாவி உன்னாலே தாண்டீ!… ஐயோ!… என் அண்ணன், கருணா தம்பி முகத்துல எப்படி விழிப்பேன்!… கடவுளே!…. குழந்தை இறந்து விட்ட பிறகுக் கூட அந்தப் பொண்ணு, ‘சித்தப்பா!… சித்தி பாவம். யார் பேச்சைக் கேட்டு இப்படி பேசிட்டாங்களோ!
அவங்களை எதுவும் சொல்லாதீங்க. என்னால தாங்கவே முடியாது. எனக்கு, நீங்க முக்கியம். நீங்கக் கவலை படாதீங்க…. என் அபார்சன்னுக்கு காரணம், சித்தித் தான்னு யாரிடமும் சொல்லவே மாட்டேன். நீஙகளும் சொல்லிடாதீங்க!’ என்று உனக்காக அந்த நிலையையிலும், வக்காலத்து வாங்கிக் கதறி அழுவுறாடீ.” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.
‘இன்னும் எத்தனை பேருக்குத் தான் இந்தச் சோனாவால் நெஞ்சு வலி வரப் போகிறதோ!…’ விஜய், மதுராவின் மைண்ட் வாய்ஸ் இதுவாகத் தான் இருந்தது.
“ஏன் பவானி இப்படி செய்தே!… நம்ம வீட்டிலும் வாழ வேண்டிய பொண்ணு இருக்கே!…. யாரோ சொன்னதைக் கேட்டு இப்படி, கரு அழிய காரணமாகி விட்டாயே!
அவ நம்ம மூத்த பொண்ணுடீ!… என் ரத்தம். ஏன் கல்லு மாதிரி நிற்கறே!… சொல்லித் தொலை. எவ அவ என் மகளைப் பத்தித் தப்பா சொன்னவ! சொல்லுடீ… அவ தலையைச் சீவிட்டு வரேன்.
என் குடும்ப வாரிசு அழியக் காரணமாய் இருந்தவ, உயிரோடு இருக்கக் கூடாது. சொல்லுடீ யாருடீ அவ?… ” என்று பவானியை, உலுக்கியவர் பதில் வராது போகவே, கன்னம் கன்னமாய் அறைந்தார்.
“நீங்க உங்க அண்ணா, அண்ணி கிட்டேயே கேளுங்க.” என்று மேலும் பவானி சொல்வதற்குள், மேலும் அறை விழுந்தது அவர் கன்னத்தில்.
“புத்திக் கெட்டுப் போச்சாடி உனக்கு!… சந்தேகப் படறதேத் தப்பு. அவ நம்ம மூத்த மகன்னு, சொல்லிட்டு இருக்கேன். அண்ணாவை கேளு, அண்ணியை கேளுன்னு சொல்றே!
நம்ம மதுராவை பற்றி, இப்படி யாராவது சொன்னால் தாங்குவோமா நாம?…
அண்ணாவுக்கும், அப்படி தாணேடீ இருக்கும் வலிக்கும்!
நாமளும் பெண்ணைப் பெத்து இருக்கோம்…. ஊரார் சாபம் சும்மா விடுமாடீ!… எவ அவ, என் மகளைத் தப்பாச் சொன்னவ, சொல்லு.” என்றார் சங்கரன், மீண்டும் அறைந்தவாறு.
“அப்பா!…” என்று சங்கரனை, தடுத்த மதுரா, ஏதோ சொல்வதற்குள் பவானி, மகளின் கைப்பிடித்து அழுத்திப், பின் இழுத்தார்.
“அம்மா!…” என்று அதிர்ந்த மதுரா, தாயின் ஒரே பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்.
‘எதையும் பேசாதே!….’ என்ற கட்டளை, அந்தப் பார்வையில் இருந்தது.
“ஏய்!… மதுரா!…. எல்லா திங்ஸ் பேக் பண்றே. பொழுது விடிஞ்ச உடனே உன்னைச் சென்னைக்கு கூட்டிப் போறேன். ஒண்ணும் இல்லாத காரணத்திற்காக, எவளாவது, ‘வேலை விட்டு வா என்று கூப்பிடானு’ வந்தே நடக்கிறதே வேறு.
உன் அம்மாவுக்குத் தான் அறிவு இல்லை…. படிச்சவத் தானேடீ நீயி! யோசிக்க மாட்டியா?…
அவ சொன்னாளாம், ‘இவ இது தான் சாக்குன்னு’ கிளம்பி வந்துட்டா… கட்டினதும் சரி, இல்லை. நான் பெத்ததும் சரி இல்லை.
சோனா சொல்படி இனி நடக்கற. அந்தப் புள்ளைக்கு இனி ஏதாவது பிரச்சனை கொடுத்தீங்க, என்னை உசிரோடு பார்க்க முடியாது. உன் அப்பா உயிரோடு இருக்கணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ.” என்றவர் பவானியிடம்,
“சோனாவுக்கு போன் செய்யுறேன். செய்தது தப்புன்னு சொல்லிச் சாரி கேளு.” என்றவர் சோனாவுக்கு கால் செய்தார்.
“நான் தான் சோனாமா… தூங்கிட்டு இருந்தியா!… ஒஹ், என் போன்னுக்கு தான் வெயிட் செய்துட்டு இருந்தீயா!… ஏம்மா… நீயே உடம்பு சரி இல்லாம இருக்கே!… இல்லைம்மா, உன் சித்தியை எதுவும் சொல்லலை. நீ தான் சொல்லிட்டியே, கண்டிப்பா மதுரா வேலைக்கு வரா.
நாளைக்கு நானே கொண்டு வந்து விடறேன். இதோ சித்தி பேசணுமாம்.” பவானியிடம், போனினை கொடுத்தவர் அதிர்ந்து நின்றார், பவானியின் கண்களைக் கண்டு.
தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்த பவானி, “த்ரீ தி ங்ஸ் கெனாட் பி ஹிடேன் பார் லாங். சன், மூன், ட்ருத். (three things can’t be hidden for long- sun, moon,The ultimate truth)” என்று சோனா ஏதும் பேசுவதற்குள் சொன்னவர், போனினை சங்கரனின் காலடியில் விட்டு எறிந்தவர், கெஸ்ட் ரூமிற்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்.
அழவில்லை, கதறவில்லை.
‘இவ்வளவு வருடம் வாழ்ந்தேனே என்னை நம்பவில்லையா!…’ என்று போர்க்கொடித் தூக்கவில்லை.
அஞ்சி நடுங்கவில்லை.
‘தானாக வந்து பவானி வந்து கெஞ்சி பேசி, மன்னிப்பு கேட்பார் என்று சங்கரன் எதிர்ப்பார்க்க, ‘மௌன சத்தியாகிரகம்’ ஆரம்பித்து இருந்தார். அத்தனை வருட இல்லறத்தில் எந்த அளவிற்கு தாழ்ந்து போக முடியுமோ அந்த அளவிற்கு தழைந்து போன பவானியின் இந்த காளி அவதாரம், ஒதுக்கம் சங்கரன் எதிர்பாராத ஒன்று.
பவானியின் கையால் செய்த உணவை உண்பதில்லை என்று போர்க்கொடி சங்கரன் உயர்த்த, பவானி மூலையில் அமர்ந்து அழ எல்லாம் இல்லை. தனக்கு மட்டும் செய்து எடுத்து கொண்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மகன் வார இறுதி நாட்களில் வரும் போது அவனுக்கும் சேர்த்து விருந்து படைப்பார்.
வெளி உணவு ஒற்றுக்கொள்ளாமல் மருத்துவமனையில் ரெண்டு வாரம் சங்கரன் சேர்ந்தது எல்லாம் தனி கதை.
அத்தனை வருடம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பார்த்து பார்த்து அவரை கவனித்துக் கொண்ட பவானியின் இந்த ஒதுக்கம் சங்கரனை நிலை குலைய வைத்தது என்னவோ உண்மை.
பவானியின் இந்த நிமிர்வு, ஒதுக்கம் சங்கரனைத் தான் உலுக்கி விட்டது.
‘தவறு செய்தவரிடம் இந்த நிமிர்வு இருக்காதே!…’ என்று ஒரு கணம் திகைத்துப் போனார் சங்கரன்.
பவானி சொல்லியது ஒரு புத்த தத்துவம்.
‘சூரியன், நிலா, உண்மை ஏதாவது காரணத்தால் மறையலாம், மறைக்கப் படலாம். ஆனால், இவை என்றுமே மறைந்து இருக்காது. மறைத்து வைக்க முடியாதவை’ என்று புத்தர் கூறிய பொன்மொழிகள்.
உண்மை, சத்தியத்தின் சக்தியை மிக எளிதாக உலகிற்கு கூறும் வாக்கு.
‘சோனாவின் வார்த்தை நீ நம்பு…. ஆனால், உண்மை என்பது ஒன்று உண்டு. உண்மை மறைந்தே இருக்காது. ஒரு நாள் இதை நீ புரிந்து கொள்வாய்.’ என்று மறைமுகமாய் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
சோனாவின், ‘ மாஸ்டர் பிளான்’ அப்படி பட்டது. முழு பூசணிக்காயை அவள் கையாலேயே மறைத்து இருந்தாள். மதுரா வேலை விட்டுப் போனாலும், இனி ஒரு முறை வேலையை எக்காரணம் கொண்டும் விட முடியாத படி, சங்கரனை கொண்டே காய் நகர்த்தி, மீண்டும் மதுராவை, தன் கண் பார்வைக்குக் கொண்டு வந்து விட்டாள் சோனா.
போன் செய்யாத பவானி போன் செய்து, யார் பேச்சையோ நம்பி தன்னை கேவலமாகத் திட்டியதாகவும், மதுராவை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும், மன அழுத்தம், துக்கம், துயரம் தாங்காமல், இல்லாதக் குழந்தை கருவிலேயே அழிந்து விட்டதாகவும், இந்த விஷயம் தெரிந்து சங்கரன், பவானியை எதுவும் செய்யக் கூடாது என்று சத்தியம் வேறு வாங்கி சங்கரனை கொண்டே, ‘மதுராவிற்கு செக்மேட்’ வைத்து விட்டாள் என்பது அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்தது.
பவானியின் கண்களில் இருந்தது என்ன!…
அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாதவராய் சங்கரன் தான் முகத்தை திருப்பிக் கொண்டார்.
அவரின் மனசாட்சிக்குப் பவானி, ‘குற்றமற்றவர் என்பது புரிந்ததோ’ என்னவோ!
இனி சோனாவே போன் செய்து தன்னைப் பற்றி உண்மையைக் கூறினாலும், சங்கரன் நம்ப போவதில்லை என்பது உறுதியாக விளங்கியது.
பாசம், ஒரு குழந்தை தன் மனைவியால், இறந்து விட்டக் குற்ற உணர்வு அவரை ஆட்டிப் படைத்தது.
தன் குறுக்குப் புத்தியால், இருபத்து எட்டு வருட மண வாழ்வில் சோனா புயலை கிளப்பி விட்டாள். அன்று அவள் எழுப்பிய புயல் தொடர்ந்து ஆறு மாதமாய் மதுராவின் குடும்பத்தில், சங்கரன் -பவானியின் வாழ்வில் வீசிக் கொண்டு இருந்தது.
‘ஆதர்ச தம்பதி’ என்று பேர் எடுத்த இருவரும், பேசுவது கிடையாது.
கோர்ட் படி ஏறாமலே, ‘மன விவாகரத்தை’ இருவருக்கும் அந்தப் புண்ணியவதி பெற்று கொடுத்து விட்டாள்.
பவானி அஞ்சி நடுங்கி, கதறி அழவில்லை.
அவருடையது தார்மீக கோபம்.
எந்த மனைவியும் கணவனிடம் எதிர்பார்க்கும் அடிப்படை விஷயம் நம்பிக்கை.
அது தகர்ந்து போக, எவளோ ஒருத்தியின் போன் கால் போதுமானதாக இருந்தால், ‘அப்போது அவர்கள் வாழ்ந்த மணவாழ்வுக்கு அர்த்தம் தான் என்ன’ என்பது தான் பவானியின் அமைதியின் பின் இருந்த கேள்வி.
சங்கரனும், பவானியை பேசவே விடாமல், அவரே போலீஸ் ஆக விசாரித்து, அவரே நீதிபதியாகி, ‘பவானி குற்றவாளி’ என்று தீர்ப்பு வழங்கி விட்டார்.
‘குற்றம் தகுந்தச் சாட்சியுடன் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாற்றப் பட்டவரும் நிரபராதியே!’ என்ற அடிப்படையை மறந்து விட்டார்.
இது மனைவியின் கெளரவம், தன்மானப் பிரச்சனை என்பதை முக்கால்வாசி கணவன்மார்களை போல அவரும் உணரவில்லை.
திருமணம், இரு மனங்களை மட்டும் அல்ல, இரு குடும்பத்தையும் இணைக்கிறது, என்பதை இந்த வயதுக்கு பிறகு மறந்தது யாரின் தவறு?
‘என் குடும்பம். அதைத் தான் நம்புவேன். இதில் நீ தலையிடாதே.’ என்று பிள்ளைகளின் முன்பே, கூறுவது அந்த மனைவிக்கு எவ்வளவு பெரிய மரண அடி என்பதை உணர தவறியது எப்படி?
‘இப்படியொரு காரியத்தைத் தன் மனைவி செய்வாளா?…’ என்று இவ்வளவு காலம் வாழ்ந்த மனிதர்க்கு, எப்படி மறந்து போனது!…
இத்தனை வருடத்தில், மனைவியின் குணத்தை கூடவா இவர் புரிந்து கொள்ளவில்லை!
அவரையும் முழு குற்றவாளி என்று சொல்ல முடியாது தான். அவரின் ஒரே குற்றம், அளவுக்கு அதிகமான பாசம், வைக்கத் தகுதி இல்லாதவளின் மீது பாசம் வைத்து, மகளாக ஏற்றுக் கொண்டது.
மகள் ஸ்தானத்தில் அவர் நினைத்து இருந்தவள், ‘உன் மனைவியால் என் கரு கலைந்து விட்டது.’ என்று குற்றம் சாட்டி, அழும்போது தந்தையாகத் துடித்து போனார்.
இப்படியொரு பெண், அதுவும் தன் சொந்த ரத்தம் பொய்யும் சொல்வாள் அதற்கு மேலும் போவாள் என்று அந்த நல்ல உள்ளம் அறியாமல் போனது.
சங்கரன் நெஞ்சை, நெஞ்சை பிடித்துக் கொள்ள, சோனாவை பற்றிய உண்மை அவரிடம் தைரியமாகக் கூற கூட, விஜய் உட்பட யாருக்கும் வரவில்லை. அங்குப் பணயமாய் இருப்பது அவரின் உயிர் அல்லவா!
மறுநாள், மகளைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார் சங்கரன். மதுரா தாயிடம், தந்தையிடம் மாறி மாறித் தூது சென்று நொந்து போனாள் என்பது மிகையல்ல.
இருவரும் தங்களின் நிலையிலிருந்து இறங்கவே இல்லை. இருவரின் கெளரவம், பிடிவாதத்திற்கு முன் மகளின் வாழ்வு பலியானது.
தவம் தொடரும் ….





