அத்தியாயம் 4
தனக்கு பின்னால், இருளோடு இருளாகத், தள்ளாடியவாறு தொடரும் அந்த வெறி பிடித்த, ‘மனித போர்வையில் வாழும் மிருகத்தை’ மதுரா கவனிக்கவில்லை.
சாதாரண நேரமாய் இருந்து இருந்தால், பெண்களுக்கே உண்டான உள்ளுணர்வு, ஆபத்தைக் கூறி இருக்கும்.
சோனா தான் முழுவதுமாய் குழப்பி விட்டாளே!…
‘தந்தையின் மானம், உயிர் தன் கையில்’ என்ற நிலையில், மகளாகத் தந்தைக்கு கலங்கி தவித்தது அவள் மனம்.
‘மயிர் நீக்கின் வாழக் கவரி மான்’ வகை அவள் தந்தை.
எந்த அளவு நேர்மையை கடை பிடிக்கிறாரோ, அந்த அளவு அப்பாவி. அதைத் தானே தனக்கு சாதகமாகப் பயன்படுத்திச் சங்கரன், பவானியின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆக்கி விட்டு இருந்தாள் சோனா.
‘ஆதர்சன தம்பதி’ என்று ஊரே வியந்த பெற்றோர்.
‘வள்ளுவனின் வாசுகியாக’ வாழந்த தாய்.
‘மனைவியின் கண் பார்த்தே தேவை அறிந்த கணவன்’ என்று வாழ்ந்தவர்கள்.
‘வாழ்ந்தால் இவர்களைப் போன்ற கணவன் மனைவியாக வாழ வேண்டும்’ என்று பலர், பார்த்துப் பொறாமைப்பட்டவர்கள்.
சோனா, ‘என்று இவர்கள் குடும்பத்தில் பாசப் பறவையைப் பறக்க விட்டு நுழைந்தாளோ, கடந்த ஆறு மாதமாய் பேச்சு வார்த்தை கூடக் கிடையாது’ சங்கரனுக்கும், பவானிக்கும்.
உபயம், சாட்சாத் சோனா தேவியார்.
இருபத்து ஐந்து வருட மணவாழ்க்கையை, ஒரே நாளில் காலி செய்து விட்ட புண்ணியவதி.
இதில், இது வேறு என்றால் மதுரா தவித்துப் போனாள்.
அந்த, ‘தவிப்பு, குழப்பம், இனி என்ன’ என்ற கேள்வி, பின் தொடர்ந்த ஆபத்தைக் கவனிக்கவிடவில்லை.
“டார்லிங்!… பேபி!… ஸ்வீட்… நில்லு… ஸ்டாப்… டார்லிங்!” என்று வாய் குழறிய படி, கால்கள் தள்ளாட, கண்கள் அதீதப் போதையில் சிவந்து கிடக்க, கைகளை நீட்டி மதுராவைப் பிடிக்க, முயற்சி செய்து தோற்று கொண்டு இருந்தான் அவன்.
கைகளிகள் மேலும் ஒரு பீர் பாட்டில். ஆனால் அதற்குள் என்னென்னவோ போதை வஸ்துக்கள் எல்லாம் கலந்து இருக்கும்.
நடுவே நடுவே நின்று அதிலிருந்து குடிக்கவும் மறக்கவில்லை அவன்.
ஒரு கையில் பீர் பாட்டில், மாற்றுரு கையில் கத்தி என்று மதுராவை பின் தொடர்ந்தவன் கைகள் நீட்டி, அவளைப் பிடிக்க முயன்று தோற்று கொண்டு இருந்தான்.
அவன் இருந்த நிலைமை, அவன் வேகத்தை மட்டுப் படுத்தி இருந்தது. அவன் கூப்பிட்டது அவனுக்கே கேட்டு இருக்காது. அவ்வளவு குழறல்.
ஓவர் குடி.
அளவுக்கு அதிகமான போதை.
ஏற்கனவே முழு போதையில் இருந்தான் அவன். நடுவே நடுவே மேலும் குடிக்க, குடிக்கத் தள்ளாடியவன் பொத்தென்று பள்ளத்தில் விழுந்தான்.
‘எங்கோ நாய் குறைக்கும் சப்தம், பின்னால் பாட்டில் உடைந்த சப்தம்’ என்று தன் குழப்பத்துக்குளே மூழ்கிக் கிடந்த மதுரா, சட்டென்று தன்னை சமாளித்து, தன் எண்ணங்களிலிருந்து மீண்டாள்.
தன் எண்ணங்களிலிருந்து மீண்ட மதுரா அதிர்ந்து நின்றாள். தான் இருக்கும் இடம், வாட்ச் காட்டிய நேரம், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கவிந்து கிடந்த இருட்டு, யாரும் அற்ற தனிமை நெஞ்சில், பய பந்து உருள ஆரம்பித்தது.
சோனா என்றுமே இவளை, இவ்வளவு தூரம் அழைத்து வந்தது இல்லை. இன்று, ‘ஆடிட் ரிப்போர்ட் வேண்டும். அதில் டவுட்’ என்று மதியமே அழைத்து வந்து விட்டாள்.
‘ரொம்ப தூரமா இருக்கே சோனா!…’ என்று தயங்கியதற்கு, ‘எவ்வளவு நேரம் ஆனாலும், நானே கொண்டு விடுகிறேன் மதுரா.’ என்று பச்சை புள்ள போலச் சொன்னியேடி ராட்சசி.
என் பெற்றோரிடம், நீ விளையாடிய போதே, நான் சுதாரித்து இருக்க வேண்டும். ஏதோ தப்பு செய்து விட்டு, அதனால் அம்மாவை மாட்டி விட்டே என்று நினைத்தால், உன் புத்தியே இப்படி தான் என்று நிரூபித்து விட்டாயே!… கையில் மட்டும் கிடைச்ச மவளே!… உனக்கு எல்லாம் அடி மட்டும் பத்தாது. தோலை உரிச்சு விடணும்.
‘இல்லை… இல்லை இதுவும் ஏதோ ஒரு பிளான். மதியம் அழைத்து வந்து விட்டு, ஒரு வாய் தண்ணீர், சாப்பாடு கூடக் கொடுக்காமல், கடைசி இரண்டு மணி நேரத்தில் குதறி எடுத்து, வீட்டை விட்டுத் துரத்தி இருக்கிறாள். அதுவும் இரவு பதினோரு மணிக்கு மேல்.
நடமாட்டமே இல்லாத ஒதுக்குபுறமான தோப்பு இருக்கும் இடம்.
‘இரவினில் ஆட்டம்,
பகலினில் தூக்கம்’ என்று வாழும் சில உயர்ந்த உள்ளங்கள், தங்களது மன விகாரங்களைத், தீர்த்து கொள்ள தோதான இடம்.
‘பெரிய மனிதர்கள் என்ற முகமூடியினை இறக்கி விட்டு, மனிதர்கள் மிருகங்ககளாய்’ உலவும் வேட்டை பொழுது.
மிகவும் சரியாகத் தான் கணித்தாள் மதுரா.
மதுரா அறியாதது அந்த மன விகாரம் மிக்க ஒருவன், பின்னால் அதுவரை வந்து கொண்டு இருந்ததை.
அவனிடம் மேல் தட்டு வாடை வீசியது.
அதாவது, ‘சோனா அண்ட் கோ’ போலக் குடி, போதை, பார்ட்டி, ட்ரக்ஸ், வரை முறை அற்ற உறவுகள், கலாச்சார சீர்கேடுகள் உடைய சோனாவின் ஆண்பால்.
மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை பழக்கமாய் கொண்ட ராட்சசன் அவன்.
தூணுக்குச் சேலை கட்டி இருந்தால், அதைக் கூட விட்டு வைக்காத ரகம்.
‘குடும்ப பெண், மாற்றான் மனைவி’ என்ற பேதம் எல்லாம் அவனிடம் இல்லை. மனித உருவில் வாழும் சாக்கடை புழு.
அவனின் குறி தற்போது மதுரா.
அந்த இடத்திற்கு மதுராவிற்காக, அவன் காத்து இருக்கும் போதே முழு போதையில் இருந்தான். மதுராவின் நல்ல காலமோ, இல்லை ஏதோ ஒன்று, அந்த மனித மிருகத்தை மதுராவை நெருங்க விடாமல் தடுத்து இருந்தது.
பெண்களின் வாழ்க்கையில் விளையாடுவது, ‘யூஸ் அண்ட் த்ரோ’ போலப் பயன்படுத்துவது அவனது ஹாபி.
நான்கு பெண்கள் மரணத்தில், இவன் மேல் சந்தேகம் இருந்தாலும், ‘விட்னஸ் இல்லாத, இல்லாமல் ஆக்கப்பட்ட காரணத்தால்’ வெளியே இருப்பவன்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘நடு தெருவில் நிற்க வைத்துக் கல்லால், அடித்தே கொல்ல பட வேண்டியவன்’.
‘ஏதாவது நடந்து கத்தினால் கூட, உதவிக்கென்று யாருமே வர முடியாத இடம். மெயின் ரோட்டுக்கு போகவே இன்னும் பல கிலோமீட்டர் நடக்க வேண்டி இருக்கும் போல இருக்கிறதே!… அதன் பிறகு இந்த நள்ளிரவில் ஆட்டோ, பஸ், டாக்ஸி என்பது எல்லாம் கிடைக்குமா என்பது சந்தேகமே!
அண்ணா நகர் எங்கு இருக்கிறது, இ .சி.ஆர் எங்கு இருக்கிறது!
கடவுளே!…
அப்படியே கிடைத்தாலும், ‘எந்த நம்பிக்கையில் அவர்களோடு’ போவது?…
நடுவே போலீசிடம் சிக்கினால், நிச்சயம் தன் கதையை நம்புவார்களா என்பதே சந்தேகம்.
சோனாவிடம் அவர்கள் விசாரித்தால், பைத்தியக்காரி, ‘எனக்கு இவளைத் தெரியவே தெரியாது.’ என்று சத்ய ப்ரமாணமே செய்தாலும் செய்வா.’
மதுரா சாதாரமான எல்லா பெண்களையும் போலத் தைரியசாலி தான் என்றாலும், அந்த நேரத்து தனிமை, இடம், நேரம் அவளைக் கோழையாக்கிக் கொண்டு இருந்தது.
‘பாவி!… பாவி!… நெய் வடிவது போலப் பேசி வரச் சொன்னியேடி…. உன் பேச்சைக் கேட்டு, வந்த ஆட்டோவை கூடத் திருப்பி அனுப்பிவிட்டேனே!…
ஆட்டோ அண்ணா, எத்தனை தடவை கேட்டார். ‘எவ்வளவு நேரம் ஆனாலும், வெயிட் செய்கிறேன்’ என்றாரே!…
பாதகத்தி!.. உன் பேச்சை நம்பினேனே!…. ‘எவ்வளவு நேரம் ஆனாலும், நானே கொண்டு போய் விடுகிறேன்’ என்று கதை அளந்தியே!
என் மடத்தனத்தை, தான் நொந்து கொள்ள வேண்டும். ஆமா இவ, ‘இப்படி பாம்பாய் கொத்துவாள்’ என்று யார் எதிர்பார்த்தா?… நம்ப வைத்துக் கழுத்தை அறுத்து விட்டாளே!… பெண்ணா அவ?
‘பெண் என்று சொன்னால் மொத்த பெண் இனத்துக்கும் கேவலம்’ என்று மனதிற்குள் புலம்பியவாறு, நடந்தவளை நிறுத்தியது அவள் மொபைலிலில் வந்த அழைப்பு.
மனக்குழப்பத்தில், தன்னிடம் மொபைல் இருப்பதை கூட மறந்து இருந்தாள் மதுரா.
ஒரு ராணுவத்தையே, நிலை குலைய வைக்கும் ஆற்றல் கொண்டது பயம், குழப்பம், மன சோர்வு.
“மதுரா!… எங்கடீ இருக்கே?… மணி என்ன பார்த்தியா?… இல்லை ஆஸ்ட்ரிச் மாதிரி வேலையில் முழுகி, மறந்து போய்ட்டியாடி எருமை!…. இதுக்காக உனக்கு என்ன, ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ்ல’ என்ன சிலை வைக்கப் போறாங்களா?
என்னைக்கும் இல்லாத திருநாளாய் அந்தச் சனியன், ஏன் கணக்கு வழக்கைப் பார்க்குது?… நாளைக்கு வந்து முடிக்கிறேன் என்று சொல்லிட்டு கிளம்புடீ.” என்று மறு முனையிலிருந்து அவளது அலுவலக தோழி சுபா, இவளை வறுத்து எடுத்தாள்.
சுபாவின் வீட்டில், வாடகைக்கு குடி இருந்தாள் மதுரா.
சுபா அவள் கணவன் பாலாஜி, மதுரா மூவரும், ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ்’ தலைமையகத்தில் ஒன்றாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சுபாவின் வீட்டில், வாடகைக்கு குடி இருந்தாள் மதுரா.
சுபா அவள் கணவன் பாலாஜி, மதுரா மூவரும், ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ்’ தலைமையகத்தில் ஒன்றாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.
“சுபா!…” என்று அழாதக் குறையாய் வெளி வந்த தோழியின் குரலில், பயந்து போனாள் மற்றவள்.
எதற்கும் சட்டென்று ரியாக்ஷன் காட்டாத பெண் மதுரா.
அவளே, ‘திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் அழு குரல்’ கொண்டு பேசினால், இவள் என்ன என்று நினைப்பது?
“ஏய்!… மதுரா!.. என்னாடீ… என்ன ஆச்சுடீ?… என்னமா!… அழாதேடீ. என்ன சொல்லித் தொலை.” என்று எதிர் முனையில் பதறினாள் சுபா.
“சு… சுபா!… அந்தச் சோனா, என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டு, அவ கூடச் சுத்துங்களே அந்த அல்லக்கைகளோடு காரில் போய்ட்டாடீ…. அவ பங்களா கிட்டே இருகேண்டீ.” என்றாள் மதுரா கேவலுடன்.
“அடியேய்!…. அந்தப் பிசாசிற்கு ஊர்ப்பட்ட பங்களா இருக்கு. இதுல, எங்கடீ இருக்கே?… நானும் வரேன், ‘வெயிட் பண்ணுன்னு’ எத்தனை தடவை, தலைப்படா அடிச்சிட்டேன் கேட்டியாடீ.?
உங்க அப்பா, அம்மா மேட்டருக்கு பிறகும், இவளைப் போன்ற பச்சோந்தியை எப்படிடீ உன்னால நம்ப முடியுது?… எங்கே இருக்கே?…. சொல்லித் தொலை. நானும், அவரும் கிளம்பி வரோம்.” என்றாள் சுபா, கடுப்போடு.
“அது… அது… இ.சி.ஆர்ல அவளுக்கு ஒரு பீச் ஹவுஸ் இருக்கு. அங்கே இருக்கேன்…. முந்திரி தோப்புக்கு நடுவே, எந்தப் பக்கம் போகணும் என்று கூட, இந்த இருட்டில் தெரியலை சுபா.” என்றாள் மதுரா.
“என்ன…து!… இ.சி.ஆர்… பீச் ஹவுஸ்சா!… அறிவு கெட்டவளே!… கொஞ்சமாவது மூளை, இருக்கா உனக்கு?… அந்த இடம், அவ பீச்… பீச் ஹவுஸ் எதுக்கு எல்லாம் பயன்ப்படும் தெரியுமா?… பைத்தியக்காரி!… மரமண்டை!
போன வாரம், அங்கே போலீஸ் ரைட் நடந்து, பத்து பெண்களைப் பலான கேஸ்சில் உள்ளே போட்டாங்க. அங்கே பெண்களைக் கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையும் நடக்கும். வாய் திறந்து சொல்ல முடியாத பல கேவலங்கள் நடக்கும் இடம் அது. அங்கே, என்ன xxxxxxx போனே நீ?” என்று பொரிந்து தள்ளினாள் சுபா.
“நான் என்னடீ செய்வேன். காலையிலிருந்து பத்து இடத்திற்கு, நாய் மாதிரி அலைய வச்சா. எல்லா அலுவலக கிளையில் இருந்தும் பைல் வாங்க சொன்னா.
இவ ஏதாவது சொல்லியிருப்பா போல் இருக்கு. பைலை கொடுக்காம இழுத்து அடிச்சாங்க…. அப்பவே அவ கிட்டே சொன்னேன் சுபா…. ரொம்ப அவுட்டோர் ஏரியாவா இருக்குன்னு.’
‘நானே கூட்டிப் போய் விடறேன்’ என்று சொல்லிச்சுடீ அந்தப் பேய்…. இப்போ வாட்ச்மென் விட்டு, என்னைக் கழுத்தைப் பிடித்து, வெளிய தள்ளாதக் குறையாய், தள்ளிட்டுப் போய்ட்டா… இப்படி செய்யும் என்று, எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?
பெண் தானே, அதுவும் சொந்த ரத்தம், அக்கா வேறு. இந்த மாதிரி, வேலை செய்து தொலைப்பாள் என்று எவன் கண்டது?… நட்ட நடு, முந்திரி தோப்பில் இருக்கேன். மெயின் ரோடு வரவே இன்னும் எவ்வளோ கிலோமீட்டர் போகணும்னு தெரியலை.
கடைசியிலே, ‘டேக் டைவெர்சன், டேக் டைவெர்சன்’ என்று விவேக் மாதிரி’ நான் ஆந்திரால, போய் நிற்கப் போறேன்.” என்றாள் மதுரா, தன் நிலையை நொந்தப் படி.
“என்னங்க இவ இப்படி சொல்றா?… இவ இ.சி.ஆர் பங்களாக்கு போனது, அவங்களுக்கு தெரியுமா தெரியாதா?… எப்படி அவளோ தூரம் போக விட்டாங்க?… எங்க தப்பு நடந்தது?” என்று மறுபுறம் சுபா, தன் கணவனிடம் விசாரிக்கத், தலையும் புரியாமல் வாலும் புரியாமல், வழக்கம் போல மதுரா, பேய் முழி முழித்த படி நின்றாள் தோப்புக்கு நடுவே.
“ஏய் சுபா!… என்னடீ, என்னவோ பேசுறே?…. ஒன்னும் புரியலை.” என்றாள் மேலும் குழப்பத்தோடு.
“கொஞ்ச நேரம் லைன்னில் வெயிட் செய் மதுரா. இங்கே பாலு பேசிட்டு இருக்கார். அவசரப்படாதே!…” என்றாள் சுபா, கணவன் மற்றொரு போனில் பேசுவதை கவனித்தவாறு.
“ஏய்!… லூசு!… கிளம்பி வரச் சொல்லு அண்ணனை. அதை விட்டுப் போனில் பேசி, என்ன செய்யப் போறார்? பயமா இருக்குடீ.” என்றாள் மதுரா.
சட்டென்று போன் கை மாறியது.
“மதுரா!… நான் பாலாஜி பேசுறேன். சொல்வதைக் கவனி. நான் கிளம்பி வந்தாலும், அங்கு வந்து சேர குறைந்தது, ஒரு மணி நேரம் ஆகும். அதுவரை உனக்கு, அங்குப் பாதுகாப்பு இருக்குமா என்று தெரியலை. நான் நமக்கு ரெகுலரா ஆட்டோ ஓட்டும் சபரி அண்ணன் அவரிடம் பேசி இருக்கேன்.
அவர் அங்கே சவாரி முடிச்சிட்டு, ‘ஆட்டோ ரிப்பேர்’ என்று அருகில் தான் இருக்காராம். இன்னும் பத்து நிமிடத்தில், அவர் உன் முன் இருப்பார் மதுரா. எதற்கும் பயபடாதே!…. உனக்கு ஒன்றும் ஆகாது.
உன் பையில் பேப்பர் ஸ்ப்ரே, சின்னக் கத்தி இருக்கு தானே?… மிளகாய் பொடி கூட இருக்கு தானே?… தைரியமா இரு.
மதுரா!… சபரி அண்ணன், இப்போ வந்துடுவார். அதுவரை போனில் பேசிட்டே இரும்மா.” என்று தைரியம் கொடுத்தான் பாலாஜி.
இவர்கள் பேசியதிலேயே, தன்னைச் சுதாரித்து கொண்டாள் மதுரா.
சொல்லி வைத்தது போல அந்தச் சபரியும், பத்தே நிமிடத்தில் ஆட்டோவோடு வந்து சேர்ந்தார்.
‘செம வேகமாக வந்து இருப்பார் போல இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள் மதுரா.
வெளியே செல்லச் சுபாவும், மதுராவும் இந்த அண்ணனின் ஆட்டோவைத் தான் பயன்ப்படுத்துவார்கள். சில சமயம், பாலாஜியின் கார் டிரைவர் ஆகக் கூட இந்தச் சபரி கூட வருவார். பாலாஜி போல இவரும் மதுராவிற்கு ஒரு அண்ணன்.
சில சமயம், ரத்த சொந்தத்தை விட, இது போல எங்கு இருந்தோ வரும் நட்பு, சொந்தம், உறவுகள் வாழ்க்கையினை மெருகேற்றி விடுவதுண்டு.
பாலாஜியும், சபரியும் சிறந்த உதாரணம்.
“தங்கச்சி!… ஏறுமா. குடு அந்த மூட்டையை.” என்றார் சபரி.
“பாலாஜி அண்ணா!… சபரி அண்ணா வந்துட்டார். நான் ஆட்டோவில் ஏறிட்டேன். நாங்க கிளம்பிட்டோம் அண்ணா. சுபாவிடம் சொல்லிடுங்க.” என்ற மதுரா, அழைப்பைத் துண்டித்தாள்.
அவளைச் சுமந்த அந்த ஆட்டோவும், அண்ணா நகர் நோக்கிக் கிளம்பியது.
ஆட்டோ கிளம்பிய சற்று நொடியில் சற்று தொலைவில் மறைவாக இருந்த, ‘பிளாக் பி.எம்.டபுள்.யு. காரிலிருந்து’ இருவர் இறங்கினர்.
மௌனமாக அவர்களைப் பின் தொடர்ந்தான் மற்றொருவன்.
மூவரும் மௌனமாகப் பள்ளத்தில் விழுந்து, குழறறிய படி இருந்த அந்த ராட்சசனை நோக்கிச் சென்றனர்.
மூவரில் ஒருவன், கீழே கிடந்த, ‘அவன்’ குரல்வளையில், தன் பூட்ஸ் காலால் அழுத்தினான், தன் பலம் கொண்ட மட்டும்.
குரல்வளை நெறிக்கப் பட, கீழே கிடந்த அவன் துடிக்க ஆரம்பித்தான்.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!