அத்தியாயம் 5
மூவரில், ‘அவன்’ காரை விட்டு இறங்கிய தோரணையே அலாதியாக இருந்ததது.
கண்களில் எரிமலையின் சீற்றம்.
பேசும் தோரணை சிம்ம கர்ஜனையாக இருந்ததது.
செதுக்கி வைத்த முகம்.
கண்களின் தீட்சண்யம் நிச்சயம் மரியாதையை, மதிப்பைப் பெற்று தரும்.
சிக்ஸ் பேக் உடல் அமைப்பு. ஆறடி உயரம். முகத்தில் தென்பட்ட களை ஏதோ, ‘ரோமாபுரி இளவரசனை’ நியாபகப்படுத்தியது.
‘ஆல்பா மேல்’ என்ற தலைமை பண்புக் கூற்றுக்கு உதாரணம் இவன் மட்டுமே.
மொத்தத்தில் பல பெண்களின் கனவு நாயகன். பல பெண்களின் தூக்கம், இவனால் கெட்டு இருக்கும்.
நடை ராஜ நடை.
உலகமே எதிர்த்து வந்தாலும் அதை, ‘ஒன் மேன் ஆர்மி/one man army’ யாக எதிர்க்கும் துணிவுக் கொண்டவன்.
சட்டென்று பார்க்க நம்ம, ‘இளைய தளபதி விஜய்’ போல இருந்தான்.
நீல நிற ஸ்போர்ட்ஸ் பனியன், சந்தன நிற டெனிம் ஜீன்ஸ் என்று, ‘இவனால் ஆடைக்குக் கம்பீரமா’ என்று பிரித்துக் கூற முடியவில்லை.
முடியாத அளவிற்கு ஆணழகன்.
கழுத்தில் மெல்லிய தங்க செயினில், ‘மெர்மைட்’ எனப்படும், ‘ கடல் கன்னி’ கையில் பூவை வைத்திருப்பது போன்ற டாலர், அவனுக்கு மேலும் அழகு கொடுத்தது.
அவன் விஜய கருணாகரன்!
“தம்பி!… கருணா!…. வேண்டாம்பா விட்டு விடு. செத்துட போறான்.” என்றார் அவர்களில் பெரியவர்.
“போய்த் தொலையட்டும் அப்பா. இவனைப் போன்ற ஈனப் பிறவிகள் பூமிக்கு பாரம் தான். செத்து தொலையட்டும்.” என்றவனின் கோபத்தைக் கட்டுபடுத்த முடியாமல் மற்ற இருவரும் திணறினர்.
பெரும்பாடுப் பட்டு, அதன் பிறகே கிழே கிடந்தவனைக் காப்பாற்ற முடிந்தது. அவனின் கோபம் அப்போதும் அடங்கவில்லை. கீழே விழுந்து கிடந்தவனை சட்டையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினான்.
“டேய்!… நான் யாருன்னு தெரியுமாடா?… யார் மேல கையை வச்சு இருக்கே தெரியுமா?… உன்னைக் கொன்னுடுவேன்டா.” என்று குழறலோடு, அவன் கத்தியதன் சாராம்சம் இது தான்.
அந்த மனித மிருகத்தின் பெயர் சுமன்.
சென்னையில் மிக பிரபலமான தொழில் அதிபர், ‘மாசிலாமணியின்’ அருந்தவ புதல்வன்.
கோடிக் கணக்கான சொத்துக்கு, ஒரே வாரிசு.
தந்தைக்கு, சமுதாயத்தில் எவ்வளவு நல்ல நல்ல பெயரோ, அதைப் பயன்படுத்தி வெறியாட்டம் போடும் அரக்கன்.
“உன் மேல் கை வைக்கலைடா… காலை வைத்தேன். அதுவும் உன் கழுத்தில்…. உன்னை எல்லாம், போட்டுத் தள்ள எவ்வளவு நேரம் ஆகும்டா?… ஆனா, நீ உயிரோடு இருக்கனும்.
‘ஏன் உயிரோடு இருக்கிறோம்?’ என்று தினம், தினம் நீ கதறி அழணும். உயிரோடு இருந்து, நரகத்தை அனுபவிக்கனும்.
எத்தனை பெண்களின் வாழ்வை நாசமாகியவன் நீ. அத்தனை சுலபத்தில் உன்னை எல்லாம் கொன்று விட்டால், அந்தப் பெண்களுக்கு, நியாயம் எங்கிருந்து கிடைக்கும்?… பணம் இருக்கும் திமிர்.
உன்னைப் போல், தறுதலையைப் பெற்று, அவன் செய்யும் தவறுகளுக்குப் பணத்தால் நீதியை விலைக்கு வாங்கும் பெற்றோர் இருக்கும் தைரியம், அரசியல் பலம், விலைக்குப் போகும் அரசு ஊழியர்கள்.
இந்த மதப்புத் தானேடா, ‘குழந்தைகளைக் கூட, விட்டு வைக்க மாட்டேன்’ என்று நாசம் செய்கிறீர்கள்?” என்ற விஜய், அவனைக் கன்னம் கன்னமாய் அடித்தான்.
அவன் அலறல், அந்தத் தென்னம் தோப்பில் அந்த இரவு நேரத்தில், மிகப் பயங்கரமாக எதிரொலித்தது. கொடுக்கப்பட்ட அடி, உதை தாங்க முடியாமல் மயங்கி விழுந்தவனிடமிருந்து அந்த, ‘ஆண் சிங்கத்தைப்’ பிரித்து எடுக்க, மற்ற இருவரும் திணறி விட்டனர்.
“விடுங்க அப்பா என்னை, இவனுக்கு இது எல்லாம் போதாது.” என்று உறுமினான் விஜய்.
“அவனைக் கொல்வது எளிதுப்பா. மாசிலாமணி சார், உன் குரு. அவருக்காகப் பாருப் பா.” என்றார் பெரியவர்.
‘மாசிலாமணி’ என்ற அந்தப் பெரியவரின் பெயரைக் கேட்டதும் விஜய கருணாகரன் நிதானித்தான்.
“எத்தனை மாத்திரை கொடுத்து இருக்கே ஆல்வின்?” என்றான் விஜய்.
“மூன்று மாத்திரை. அட்லீஸ்ட் ரெண்டு நாள் ஆகும் இவன் கண் விழிக்க.” என்றான், ‘ஆல்வின்’ என்று அழைக்கப்பட்டவன்.
“பத்தாது ஆல்வின். ஒரு வாரம் இவன் கண் விழிக்கவே கூடாது. மருந்தை இஞ்செக்ட் பண்ணிட்டே இருக்க சொல்லிடு. ‘ராயப்பேட்டை ஆல்பர்ட்’ கிட்ட சொல்லி, இவனைக் கல்கத்தா சதுப்பு நில காட்டில், விட்டு விடச் சொல்லு. ஒரு கையையும் காலையும் கவனிச்சுடு.
மதுராவை தொட முயன்ற இந்த கை, அவனுக்கு இனி பயன்படக் கூடாது. ஆட்டோ பின்னாடி யார் போய் இருக்கா?” என்றான் விஜய்.
“ராசுவும், அப்துல்லாஹ்வும். நீ கிளம்பு கருணா. இவனை நாங்க பார்த்துகிறோம்.” என்றான் ஆல்வின்.
தலை அசைபோடு, அந்தப் பெரியவரும், விஜய்யும் தங்கள் காரில் கிளம்பி விட, ஆல்வின் அவன் உடன் இருந்தவர்களும் கிழே கிடந்தவனை, ‘கல்கத்தா சதுப்பு நில காட்டிற்கு பேக்’ செய்தனர்.
சுமனின் கை, கால் உடைக்கப் பட்டு, அதற்குக் கட்டுக் கட்டிய பிறகு.
அங்கு இரு தென்னம் மரங்களுக்கு இடையே கட்டப்பட்டு இருந்த கயிற்றினை இருவர் அவித்து விட்டனர். மதுராவை பிடிக்கப் போய், இவன் குழியில் விழுந்தது இவர்கள் கட்டியிருந்த கயிற்றால்.
மதுரா அறியாமல், இவர்கள் மதுரா முன்னே வராமலே, சுமனைத் தட்டி விட்டு அவளைக் காப்பாற்றி விட்டனர்.
சில வினாடிகளில் முன் சென்ற ஆட்டோவைப் பிடித்தது அந்தக் கருப்பு நிற கார். ஆட்டோவின் வேகத்திற்கு ஈடு கொடுத்த படி, அதன் பின்னால் பயணப் பட்டது.
பைக்கில் பின் தொடர்ந்தவர்கள், காரில் இருந்தவன் ஏதோ சைகை செய்ய, அவர்கள் விலகிக் கொண்டனர். ஹை வெயில் டோல் பூத் அருகே, ஆட்கள் இருந்த இடத்தில் ஆட்டோ நிறுத்தினார் சபரி.
“என்ன அண்ணா!… வண்டி மீண்டும் ரிப்பேரா?” என்றாள் மதுரா.
“இல்லை தங்கச்சி!… டிபன் சாப்பிடு. எப்போ சாப்பிட்டேயோ என்னவோ!… சூடா இருக்கும் போதே சாப்பிடு.” என்று டிபன் பாக்ஸில் இருந்து ஆவி பறக்கும் இட்லி, சுடச் சுட சாம்பார் கொடுத்தார்.
காலையில் சாப்பிட்டது. அதன் பிறகு ஒரு முறை ஜூஸ் மட்டுமே குடித்து இருந்தாள். இந்நேரம் வரை பச்சைத் தண்ணீர் கூடச் சோனா கொடுக்கவில்லை.
‘தமிழர்களின் விருந்தோம்பல்’ என்ற பண்பினை அவள் அறியவில்லை போல் இருக்கு.
வெகுவேகமாக நான்கு ஐந்து இட்லிகளை விழுங்கிய பிறகே தெம்பு மீண்டு விட, “ஐயோ அண்ணா!… நானே எல்லாம் சாப்பிடுகிறேன் உங்களுக்கு?” என்றாள் தயக்கத்துடன்.
“எனக்கு ஏற்கனவே வாங்கி கொடுத்து… வாங்கிச் சாப்பிட்டுட்டேன் தங்கச்சி…. நீ வெசனப் படாதே!… சாப்பிடு. உள்ளே இன்னும் இட்லி இருக்கு. காபி, தண்ணீர் பாட்டில் கூட இருக்கு. நீ நிம்மதியா சாப்பிடு. நான் வெளிய நிற்கறேன்.
சாப்பிட்டு அங்கே லேடீஸ் ரூம் இருக்கு. முகம் கைக்கால் கழுவிக்கோ.” என்ற சபரியின் தடுமாற்றப் பேச்சினையோ, சபரிக் கொடுத்த உணவு, ஐந்து நட்சத்திர ஹோட்டல் பெயரில் இருந்ததையோ, கிழே இறங்கிய சபரி, பின்னால் சற்று தூரத்தில், நிறுத்தப்பட்டு இருந்த கருப்பு காருக்குச் சைகை காட்டியதையோ மதுரா கவனிக்கவில்லை.
அவள் உண்டு முடித்து, தன்னை சுத்தம் செய்து கொண்டதும், மீண்டும் ஆட்டோ கிளம்பியது. பின்னால் இடை வெளி விட்டுத் தொடர்ந்தது அந்தக் கறுப்பு கார்.
ஒரு மணி நேர பயணம் கடந்து, சுபாவின் வீட்டு முன் நின்றது ஆட்டோ.
சபரி இருந்ததால், பாதுகாப்பு உணர்வோ, உடல் களைப்போடு, மனமும் வெகுவாகப் பாதிக்கபட்டு இருந்ததால், தன்னை மீறி உறங்கி இருந்தாள் மதுரா.
“மதுரா!… மதுரா!… வீடு வந்தாச்சு. உள்ளே வந்து தூங்குமா.” என்றாள் சுபா, மெல்ல தட்டிய படி.
அந்த நள்ளிரவிலும், சுபாவும், பாலாஜியும் மதுராவிற்காகக் கண் விழித்துக் காத்து கிடந்தனர். கண் விழித்த மதுரா, எதிரே நின்ற தோழியை கண்டதும், நடு ரோடு என்று கூட பாராமல் அணைத்து கொண்டாள்.
“சுபா!… பாலு அண்ணா, சபரி அண்ணா மட்டும் இல்லைன்னா, என் நிலைமை நெனைச்சுக் கூட பார்க்க முடியலைடீ.” என்று உடல் பதற கூறினாள்.
“ஷ்!… மதுரா!… என்னடீ இது!… சின்னக் குழந்தை போல?… அதான் பத்திரமா வந்துடே தானே!… அதை மட்டும் நினை. இனி அந்த சனியன் ஆச்சு, அவள் வேலை ஆச்சுன்னு விட்டுட்டு, ஊருக்கு கிளம்பும் வழியை பாரு.” என்றாள் சுபா.
மதுரா ஏதோ சொல்வதற்குள், “மதுரா!… நடு ரோட்டில் நின்று தான் பேசணுமா?… உள்ளே போ மா. பொறுமையா பேசிக்கலாம்.” என்றான் பாலாஜி.
“ஐயோ!… சபரி அண்ணாவுக்கு பணமே தரலியே!…. பசி அறிஞ்சு சாப்பாடு கூட, அவர் தான் வாங்கிக் கொடுத்தார்.” என்ற மதுரா, ஹாண்ட் பாக் தேட,
“நீ உள்ளே போ தங்கச்சி. பணத்தை புறவூ வாங்கிக்கறேன். சுபாமா!… தங்கச்சி, பயந்து கிடக்கு… உள்ளே கூடி போ, வரேன் பாலு.” என்றவர் ஆட்டோவை கிளப்பி சென்றார்.
பெண்கள் இருவரும் உள்ளே சென்றதும் வீட்டின் வாயில் கதவை மட்டும், பூட்டாமல் சாத்திய பாலாஜி, காம்பௌண்ட் கேட் மூடாமல் திறந்து விட்டான்.
ஹாலில் மதுரா அமர்ந்ததும், சூடான ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள் சுபா.
“சாரி சுபா!… ரொம்ப சாரிடி. நீயே மாசமா இருக்கே. இந்த மாதிரி சமயத்தில், உன்னை மிட் நைட் இப்படி தொல்லை பண்ணிட்டேன். சாரி அண்ணா!… சாரி சுபா.” என்றாள் மதுரா, இறங்கிய குரலில்.
“பெரிய மனுசி மாதிரி பேசிட்டு இருந்த கடிச்சுடுவேன். ஒழுங்கா பாலை குடிடீ.” என்றாள் சுபா, மதுராவின் தலையில் கொட்டியப் படி.
அப்போதும் மதுராவின் முகம் தெளியாததைக் கண்டு பாலாஜி, “மதுரா!… நீ கூட பிறக்கவில்லை என்றாலும் என் சகோதரி நீ தான். ரகுவிடம், அவனுக்கு மனைவி ஒருத்தங்க வந்தா, இப்படி தான் சாரி கேட்பியா என்ன?….
இதனால் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. நீ நல்ல படியாக வந்து சேர்ந்ததே போதும். என் வீட்டு பெண்ணுக்கு செய்கிறோம். இதில் நீ வருந்த என்னமா இருக்கு?.
பட், இதுவே உனக்கு ஒரு பாடமாய் இருக்கட்டும் மதுரா. எத்தனையோ பேர் சொல்லியும், ‘அப்பா சொன்னார்’ என்று மாட்டினே இல்ல!… இனி இது தெரிந்தால், அவரே உன்னை வேலைக்கு அனுப்ப மாட்டார்.
நாளை காலை குன்னூருக்கு கிளம்பும் வழியை பாரு. டிக்கெட் புக் செய்து, நானே உன்னைக் கொண்டு போய் விட்டு வரேன். உன் சம்பாத்தியத்தில் தான், உன் வீட்டு அடுப்பு எரியும் நிலமை இல்லை.
வேலைக்கு போய் தான் ஆக வேண்டும் என்றால் கார்த்திக், ஆஸ்திரேலியாவில் இதை விட நல்ல, பாதுகாப்பான வேலை ஏற்பாடு செய்வான்.
‘துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும்’ மதுரா!.” என்றான் பாலாஜி, கண்டிப்பானக் குரலில்.
பெருமூச்சை வெளி ஏற்றிய மதுராவின் முகத்தை பார்த்த மற்ற இருவரும் திகைத்தனர் .
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!