அத்தியாயம் 6
“அண்ணா!… நீங்க சொல்வது எல்லாம் சரி தான். ஆனால், அந்த துஷ்ட ஜென்மம், ‘பெவிகால் போட்டு விலக்கவே முடியாமல் ஒட்டிக் கொண்டே தான் தீருவேன் என்று சபதத்தில் இருந்தால்’ நான் என்ன அண்ணா செய்வது?” என்றவள் அன்று மாலை, சோனாவின் பங்களாவில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
சோனா, ‘வெட்கம், கூச்சம், பண்பாடு’ என்று அறியாமல் சொன்ன சிலவற்றை, கட் செய்து விட்டு மேலாக நடந்ததை, அவள் பேசியதை கூறவும், பல முறை தடுமாற வேண்டி இருந்தது.
எப்படி பூசி முழுகி சொன்னாலும், சோனாவின் பேச்சு மகா கேவலமான குற்றச்சாட்டாக தானே இருந்தது!…
கேவலத்தை எப்படி நல்லதாக கூற முடியும்?
அதுவும் குடும்பப் பெண்கள் சொல்ல அஞ்சும் வார்த்தைகள் .
மற்ற இருவரும் , திக் பிரமை பிடித்து அமர்ந்து இருந்தனர்.
‘கேட்ட தங்களுக்கே இதை ஜீரணம் செய்வது கஷ்டமாக இருக்கும் போது, குற்றம் சாற்றப் பட்ட மதுராவின் நிலை!…
எப்படியெல்லாம் துடித்திருப்பாள்?’ என்ற எண்ணமே அவர்கள் இருவரின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
“சனியன்!.. சனியன்!… இது எல்லாம் பிறக்கவில்லை என்று எவன் அழுதது?… வாயில் பச்சைப் பச்சையா வருது. சும்மாவாடி விட்டு வந்தே?. பொண்ணா அது!….
கர்மம்!… சரியான கீழ்ப்பாக்கம் கேஸ். சரியான சைக்கோ. இப்படி எல்லாமா ஒருத்தி பேசுவா?… அதுவும் திருமணம் ஆனவள், தன் கணவனைப் பற்றி!… சே!…. கருணா சார் யாரு!… என்ன மாதிரி மனுஷன்!… அவரைப் போய்… மனசே ஆறலைடீ.” என்றாள் சுபா வேதனையோடு.
‘சிஸ்டர்!…’ என்று எந்தப் பெண்ணையும் வாய் நிறைய அழைப்பவன்.
பெண்களுக்கு மரியாதையை தரத் தயங்காதவன்.
பெண்களை சமமாகக் கருதும் உத்தமன்.
இவனைப் போய்… சே!… நல்லவங்களுக்கு எல்லாம் சீக்கிரம் சாவு வருது. இந்தச் சோனா மட்டும் குத்து கல்லு போல இருக்கு. போய்த் தொலைஞ்சா கூட நிம்மதியா இருக்கும்.’ மனதிற்குள் புலம்பித் தள்ளினாள் சுபா.
“அது தான் எனக்கும் புரியலை சுபா. பதினைந்து வருடமாச்சு அவளையோ அவள் குடும்பத்தையோ பார்த்து. திருமணத்திற்கு கூட எங்களுக்கு அழைப்பு வரலை. திடீர் என்று, என் வீடு தேடி வந்ததும் அவள் தான்.
பேசிப் பேசியே, டாடியை கரைத்து, ‘என்னை அவளுக்குப் பி.ஏ என்று’ ஆகியதும் அவள் தான். இங்கே, ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ்’ வேலைக்குச் சேர்ந்த அன்றே, என்னைக் கருணாகரன் சார்க்கு, பி.ஏ என்று மாற்றியதும் அவள் தான்.
இவ என் டாடி கிட்டே நான், அவளுக்குப் பி.ஏ என்று சொல்லியதால் தான், அவர் வேலைக்கு அனுப்ப சம்மதித்ததே.
‘அவளிடம் வேலைக்குச் செல்ல வேண்டாம்’ என்று அம்மா, ரகு, கார்த்திக், ஏன் பெரியப்பா கூட வேண்டாம் என்று தான் சொன்னார்கள். அப்போ டாடி பேச்சை ஏனோ கேட்டேன்.
ஒரு வருடமாய் கருணாகரன் சார் இடம், பி.ஏ வாக வேலை செய்ய வைத்தவளும் அவள் தான்.
இன்று எனக்கும், அவருக்கும், ‘தவறான உறவு இருக்கு, சின்ன வீடு, mistress… வைப்பா….’ என்று முத்திரைக் குத்துகிறவளும் இவள் தான்.
இல்லை… இல்லை…. நூறு சதவீதம் உறுதியே செய்து விட்டாள். எத்தனையோ தடவை யோசித்து இருக்கேன், ‘இவளிடம் அப்படி என்ன கண்டார்?’ விஜய் இவளை லவ் செய்து மேரேஜ் செய்தார் என்று.
மனுஷன், ‘ரோபோ மாதிரி, முசுடுக் கணக்காய், விஜிபி சிலை மனிதன்’ மாதிரி ஜடமாய் இருக்காரே என்று!
இப்படி ஒருத்தியை கட்டினால், யாராய் இருந்தாலும், விஜய் சார் போல, ‘கல்லாய், பாறை போல தான்’ இருப்பார்கள் போல் இருக்கு.
பெரியப்பா, பெரியம்மா, விஜய் சார் கூடப் பலமுறை இத்தனை மாதங்களில் கேட்டு விட்டார்கள்,
‘அப்படி என்ன, இங்குத் தான் வேலை செய்தாக வேண்டிய தலை எழுத்து என்ன என்று?… வேறு வேலை வாங்கித் தரேன்’ என்று கூடச் சொன்னாரே!
‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ போல, ச்சே!… புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் அப்படி என்ன தான் பிரச்சனையோ!…
என் தலையைப் பிடித்து ஆட்டுது அந்த வேதாளம்.” என்று தன் தலையை இரு கைகளாலும் பிடித்து புலம்பிய மதுரா, அறியவில்லை விஜய், சோனாவின் கணவனாய், அவளின் கை பொம்மையாய் நடக்கவில்லை என்பது தான் சோனாவின் பிரச்சனையே என்பதை.
“ஏன் மதுரா!… ஏதோ அக்ரீமெண்ட் என்றாயே, படித்துப் பார்க்காமலா சைன் போட்டே?… படித்த பெண் தானேம்மா நீயி!… சைன் போடும் முன் எதையும் படிக்காமல், அவ சொல்லியதற்கு எல்லாம் ஒகே சொல்லிடுவாயா?” என்று பொரிந்தான் பாலாஜி.
“அட!… நீங்க வேற அண்ணா!.. ஒன்றுக்கு இரு முறை படித்துப் பார்த்தே, சைன் செய்தேன். இது போன்ற கண்டிஷன்ஸ் நான், சைன் செய்த அக்ரீமெண்ட்டில் இல்லவே இல்லை.
அவளே சொன்னால், ‘நாலு கட்டுத் தூக்கிப் போட்டதும் போர்ஜ்ரி செய்து கொடுத்துட்டாங்க’ என்று.
சட்ட பதிவும் செய்யப் பட்டு இருக்கு. சாட்சிக் கையெழுத்து கூட இருக்கு. இந்தாங்க!… நீங்களே படித்துப் பாருங்க.” என்ற மதுரா, சோனாத் தூக்கி எறிந்த அக்ரீமெண்ட் இரண்டையும், பாலாஜியிடம் கொடுத்தாள்.
படித்துப் பார்த்த மற்ற இருவரின் முகத்தில், ஈ ஆட வில்லை.
“என்னடி மதுரா!… அப்பா, எப்போ டீ இந்தப் பிசாசு கிட்ட கடன் வாங்கினார்… அதுவும் மூன்று கோடி?” என்றாள் சுபா, நெஞ்சில் கை வைத்து.
“ச்சூ சுபா!… அப்பாவது கடன் வாங்குவதாவது. வரும் வருமானத்தில் நிறைவாய் வாழும் மனிதர். கைச்சுத்தம் தெரியாதா உனக்கு?… அவரை ஏமாற்றி கை எழுத்து வாங்கி இருக்கா அவ. என்ன சொல்லி, அவளைத் திட்றதுனு கூடப் புரியல. குன்னூர் வீட்டை விற்றால் கூட, ஒரு கோடி தேறாது. மீதம் மூன்று கோடிக்கு, எங்குப் போவது?” என்றாள் மதுரா.
“இது போலி அக்ரீமண்ட் என்று, சுலபமாய் கோர்ட்டில் நிரூபித்து விடலாம். உன் அக்ரீமெண்ட் போலி என்று சந்தேகம் கிளப்பி விட்டுப் புரூவ் செய்து விட்டால், இந்த அக்ரீமெண்ட் கூடப் போலி என்று நிரூபிக்க முடியும்.” என்றான் பாலாஜி.
“கோர்ட் போகலாம் அண்ணா. நீதி, நேர்மை சாகவில்லை என்று தான் நினைக்கிறன். யார் கண்டது சோனாவின் பணம் பாதாளம் வரை பாயும். இங்கே பாயாது என்று சொல்ல முடியாது.
ஆனா, முக்கியப் பிரச்சினை சோனா இல்லை. அப்பா தான். உங்களுக்கே என் அப்பாவை பற்றித் தெரியும்.
ஊர், உலகம் என்ன சொல்லும் என்று வாழ்பவர். தன்னை, ‘மற்றவர் ஒரு விஷயத்தில் கூட, தவறாகச் சொல்லி விடக் கூடாது’ என்ற வைராக்கியம் உடையவர்.
கோர்ட் போனால், நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டார். அது சோனாவிற்கும் நன்றாகத் தெரிந்து இருக்கிறது.
அது தெரிந்து தானே, அந்தக் காட்டேரி கும்பல் பெட் வைத்துக் கொண்டது.
‘அவர் மட்டும் த… தற்கொலை செய்து கொள்வாரா அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வாரா?’ என்று…
பெட் பணம் நான்கு கோடியாம்.” என்ற மதுரா, கண்களில் நீர் வழிய எங்கோ வெறித்தாள்.
“மதுரா!… நல்லா யோசித்து சொல்லு. அவ ஏதாவது காரணம் சொன்னாளா?…. இப்படி பிளான் போட்டு, உன்னைக் கார்னெர் செய்வது என்றால், நிச்சயம் ஏதாவது அழுத்தமான காரணம் இருக்கும். அதைச் சொன்னாளா?” என்றான் பாலாஜி ஒரு வித பதற்றத்துடன்.
மதுரா இருந்த மனக் குழப்பத்தில் பாலாஜியின் இந்த பதற்றம், அவனும் சுபாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு மௌனமாய் பார்வை மூலம் எதையோ பேசிக் கொண்டதை கவனிக்கவில்லை.
பாலாஜியின் பதற்றம் புரியாமல், “ஏதோ ரிவென்ஜ் என்றாள் அண்ணா. நான் அழ வேண்டுமாம். கதறித் துடிக்க வேண்டுமாம். நான் அப்படி துடிப்பதைக் கண்டு விஜய் சாரும் துடிக்கணுமாம்.
நான் கஷ்டப்பட்டால் சார் ஏன் துடிக்கப் போகிறார்?…
என்ன லாஜிக்கோ புரியலை.
ஒரு கல்லில் ரெண்டு மாங்காயாம். அவ டார்கெட் நானா, விஜய் சாரா?… சார் தான் காரணம் என்றால், லவ் செய்து திருமணம் முடித்த இவரோடு, என்ன பகை?… இவர்கள் மண வாழ்க்கையில், எனக்கு என்ன அண்ணா தொடர்பு இருக்க போகிறது? எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?…
நான் அவரின் பி.ஏ என்பதை தவிர்த்து!
இந்தப் பதவிக் கூடச் சோனா உருவாக்கியது தானே!… நானா விஜய்யிடம் வேலை செய்வேன் என்று அடம் பிடித்தேன்?…
அவர் ராமனாக, நெருப்பாகத் தான் இருக்கிறார். இவளே அவரை தசரதன், ஆக்கி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பாள் போல இருக்கிறது. இந்த அளவு பொறாமை, பொசசிவ்நெஸ் இருப்பவள், எந்த இதுக்கு, என்னைப் பி.ஏ ஆக்கினாள்?
நீங்கள் தானே அண்ணா, எனக்கு முன்பு விஜய் சார் இடம் பி.ஏ வாக இருந்தீர்கள். உங்களைத் தூக்க வேண்டாம் என்று எவ்வளவு போராடினார்.
‘இது என் கம்பெனி, யாரை வேலைக்கு வைக்க வேண்டும் என்பது என் முடிவு. மாச சம்பளம், பிச்சை வாங்கும் நீயெல்லாம் அதைக் கேட்கக் கூடாது.’ என்று கட்டிய கணவன் என்று, கூடப் பாராமல், அன்று நம் முன்னே தானே, அப்படி சத்தம் போட்டாள்.
அப்படி பேசி விட்டு, இன்று அவளே என்னையும், சாரையும் சேர்த்து வைத்துப் பேசுவது…. முடியல சுபா.
விஜய் சார், ‘Gem of a person, Ideal Man, Man of decency (கண்ணியமான), Man of discipline (ஒழுக்கம்), Man of decorum (நல்ஒழுக்கம்), Man of distinction (ஒப்புமை கூற முடியாத தனித் தன்மை வாய்ந்த உண்மையான மனிதன்), a complete man (முழுமையான ஆண்மகன்).” என்றாள் மதுரா.
சுபாவும், பாலாஜியும் பார்வை பரிமாறிக் கொண்டு, ஜன்னலைப் பார்க்க, ஜன்னல் அருகே நின்று இருந்த அந்தப் பெரியவரும், ஆல்வினும், விஜய் தோளின் மேல் கை வைத்து நின்றனர் அவனைச் சமாதானப் படுத்துவது போல.
பெருமுயற்சி செய்து தன்னை, நிலை படுத்திக் கொண்ட விஜய் முகம் அதுவரை கண்ட, முகபாவம் பொய் என்னும் விதமாக உணர்ச்சிகள் அற்ற கற்பாறையாக மாறியது.
‘மாற்றிக் கொண்டான்’ என்று சொல்ல வேண்டுமோ!…
உணர்ச்சிகள் காட்டாதக் கற்பாறையாய், அவன் இருக்கும் வரை தான் அவனுக்கு வெற்றி. சிறிது உணர்ச்சிகள் வெளிப்பட்டாலும், அது சோனாவிற்கு கிடைக்கும் இன்னொரு பகடைகாய் ஆகிவிடுமே!
“சரி மா மதுரா, போய்ப் படுமா. ஏதாவது வழி கிடைக்கும். இனி மேல், இங்குக் கீழே, நீ தனியாக இருக்க வேண்டாம். நானும், சுபாவூம் கூடக் கீழே தங்கி விடுகிறோம். சுபா கூட்டி போ. டைம் ஆகுது பாரு.” என்றவன் அவர்கள் இருவரும், மதுராவின் அறைக்குச் சென்று தாளிடும் வரை அந்த ஹாலில் அமர்ந்து இருந்தான்.
மதுரா இருந்த குழப்பத்தில், சுபா தன் கணவனுக்குச் சைகை காட்டியதையோ, இருவரும் உள்ளே சென்றவுடன் சுபா கதவைத் தாழ் இட்டத்தையோ, கதவு தாளிடும் வரை ஹாலில் இருந்த பாலாஜி, கதவு தாழ் இட்டப் பிறகு, வெகுவேகமாக வீட்டின் பின் புறம் சென்றதையோ கவனிக்கவில்லை.
அந்த வீடு, இரண்டு மாடிகள் கொண்ட வீடு.
நாற்புறமும் சுற்றி இடம் விடப் பட்டு, மரங்கள், செடிகள், தோட்டம் அமைக்கப் பட்டு இருந்தன.
காலை வேளையில் பார்த்தால், அதன் அழகு மனதை நிச்சயம் மயக்கும்.
அந்த நேரத்தில் அந்த வீட்டின் தோட்டத்தில் அமைக்கப் பட்ட முல்லை, மல்லி பந்தலின் அருகே, வானத்தை வெறித்தவாறு நின்று இருந்தான் விஜய்.
வானத்தில் எதைத் தேடுகிறான்?
தொலைந்து போன நிம்மதியையா, சந்தோஷத்தையா?
கைகள் பின்னால் கட்டி, கால்களை அகற்றி, கண்கள் வானத்து நிலவை வெறிக்க, தலைத் தூக்கி நின்ற அவன் நிலை, மற்றவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தியது.
அவனின் வலி, வேதனை நன்கு புரிந்தவர்கள் அவர்கள். ஆல்வின், பாலாஜி, விஜய் உடன், பள்ளி முதல் ஒன்றாகப் படித்து வந்த உயிர் நண்பர்கள்.
அவன் வாழ்வின் அனைத்து இன்ப, துன்பங்களையும், ரகசியங்களையும், அறிந்தவர்கள். விஜய்க்கு ஒன்று என்றால், உயிரைக் கொடுக்கவோ, எடுக்கவோ தயங்காத உண்மையான ஆத்ம நண்பர்கள்.
ஆல்வின் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறான்.
பெரிய நிறுவனங்களுக்கு இவன் செக்யூரிட்டி நிறுவனம் தான் காவலர்களை அனுப்புவது.
தொழில் அதிபர்களுக்கு இடையே பாலமாய் இருப்பவன்.
‘Facilitator’ என்பார்களே அது.
தொழிலும் வெகு சிறப்பாகவே நடக்கிறது.
காதல் திருமணம் புரிந்தவன்.
மனைவி வீட்டில், இவன் வேறு மதம் என்பதால் இவ்வளவு வருடங்களாக ஏற்கபடாதவன்.
பாலாஜி, விஜய் உடன், ‘இந்தர் இண்டஸ்டரிஸ்’ இல் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவன்.
விஜய், சோனாவை மணந்து கம்பெனிக்கு, M.D ஆன போது, அவன் பி.ஏ ஆனவன்.
சுபாவும் இவனும் காதல் திருமணம் என்றாலும், இரு குடும்பங்களும் ஏற்று கொண்டு நடந்த ஒன்று.
நண்பன் வருந்துவது பிடிக்காமல், அவனைத் திசை திருப்ப, “சோனா, போட்டு வாங்கி இருக்கா மாதிரி தான் தெரியுது… இன்னும் எதுவும், சோனாவிற்கு தெரியாது கருணா.” என்றான் பாலாஜி.
“தெரியாத வரை நிம்மதி. இதற்கே இந்த ஆட்டம் ஆடி விட்டாள். இன்னும் தோண்டித் துருவினால் என்ன செய்வது?… மதுராவிற்கு ஆபத்தாகி விடுமே!…” என்றார் அந்தப் பெரியவர்.
“நீங்க ஏன்பா கவலைப்படுகிறீர்கள்!… நான், பாலாஜி, சுபா, நீங்க உட்பட இதில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் நான்கு பேர் தான். யாரும் வாய் திறக்கப் போவது இல்லை.” என்றான் ஆல்வின்.
‘தன்னையும் அவர்கள் இருட்டில் தான் வைத்திருக்கிறார்கள். முழு உண்மையைத் தங்களிடம் கூட அவர்கள் சொல்லவில்லை’ என்ற உண்மை தெரியாத பெரியவர், மதுராவிற்க்கு சோனாவால் என்ன ஆபத்து வரும் என்ற கவலையில் இருந்தார்.
“என்ன கருணா!… நீ எதுவும் பேசமாட்டேன் என்கிறாய்!.” என்றான் பாலாஜி.
“பைத்தியக்காரி!… நான் எது எல்லாம் இல்லையோ, அது எல்லாம் நான் என்று பாராட்டி விட்டுப் போய் இருக்கிறாளே!….
ஐடியல், கம்ப்ளீட் மனிதன், நானா?… எனக்கு என்னத் தகுதி இருக்கிறது மனிதன் என்று சொல்லிக் கொள்ள?… எத்தனையோ பெரிய பாவம் செய்தவன் நான். என்னைப் போய், எப்படி உயர்த்தி பேசுகிறாளே அப்பா இந்த லூசு.” என்றான் திணறியவனாக.
“அது நீங்க இல்லை என்றால் வேறு யார் தான் அண்ணா, அதற்குத் தகுதி உள்ளவன்?” என்றாள் அங்கு வந்த சுபா.
சட்டென்று கருணா வீட்டை நோக்க, “மதுரா தூங்கிட்டா அண்ணா. நீங்கச் சொன்னப் படி, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டேன். இல்லை என்றால் புலம்பியே தூங்க மாட்டாளே!.” என்றாள் சுபா.
“தூங்கட்டும்மா… அவளாவது நிம்மதியா தூங்கட்டும். ரெண்டு நாட்களுக்கு அவள் ஆபீஸ் வர வேண்டாம். பார்த்துக்கோ சுபா. அவ வளர்ந்தக் குழந்தை மா. தனியா விடாதே!.
சோனா வேறு இவளை நன்றாகக் குழப்பி விட்டு இருக்கா. யோசித்து, யோசித்து தூங்காம, சாப்பிடாம உடம்பைக் கெடுத்துப்பாமா. ரெண்டு, மூன்று நாட்களுக்கு, நைட் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுமா.
ஆபீஸ்லேயும் கவனிச்சுக்கோ. ஒழுங்கா சாப்பிடுறாளா என்ன என்று. இல்லை என்றால் சிலை வைக்கும் அளவு எல்லா வேலையும் இழுத்து போட்டுச் செய்துட்டு இருப்பா.
இனி அவள், எங்குப் போவது என்றாலும் பாலாஜி நீயோ, சபரியோ உடன் இருங்கள். அது எங்கே என்றாலும் சரி சுபா. முடிந்த அளவு மதுரா கிட்டே, ‘சோனா எங்கே கூப்பிட்டாலும், தனியே போக வேண்டாம்’ என்று சொல்லி விடு. தேவை ஏற்பட்டால், ‘சுமன் பற்றிச்’ சொல்லிடுமா.” என்றான் விஜய், தன் முழு கம்பிரத்திற்கு நிமிர்ந்து.
“நான் போய் அவளைப் பார்த்துட்டு வந்துடுறேன்.” என்றவன் மதுரா, படுத்து இருந்த அறைக்குள் நுழைந்தான்.
சிறு பிள்ளைப் போல, முகத்தில் புன்னகையுடன் உறங்கியவளை பார்க்கத் தெவிட்டவில்லை விஜய்க்கு.
மண்டியிட்டு அவள் முன் அமர்ந்தான். அவளை பார்க்கப், பார்க்க கண்கள் தானாகக் கலங்க ஆரம்பித்தது.
“சாரிமா….. என்னால் தானே, உனக்கு இவ்வளவு ஆபத்துகள். நான் இருப்பேன். என் கடைசி மூச்சு உள்ள வரை, உனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டேன். பிராமிஸ் மது.
நீ கார்திக்கோடு நூறு வருஷம் சந்தோஷமா வாழ்வதைப் பார்க்கனும். நிச்சயம் உன்னை வாழ வைப்பேன்…. நீ வாழ, யாரின் உயிராவது போக வேண்டும் என்றாலும், எடுக்கத் தயங்க மாட்டேன்.
உன் முகத்தில் உள்ள புன்னகை, என்றுமே மாறக் கூடாது மது…. உனக்கு ஏற்றவன், கார்த்திக் தான் மது. உன்னை நல்லா பார்த்துப்பான்.
நான் இருக்கேன்டா உனக்கு. என்னை மீறித் தான், எந்தத் துன்பமும், ஆபத்தும் உன்னை நெருங்க முடியும். பயப்படாதேடா!… அப்படி எதுவும் ஆக விடமாட்டேன்.
சாரி!… ரொம்ப சாரி. இன்னைக்கு எப்படியோ தவறு நடந்து போச்சு.
கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துட்டேன். இனி அது போல நடக்காதுடா. நீ எதுக்குமே கவலை படாமல் இரு. எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்.” என்றவன் முகத்தில் புரண்ட அவள் முடியை, விரல் நுனிக் கூட மேல் படாமல் தள்ளி விட்டு, போர்வையை நன்றாகப் போர்த்தி விட்டு அறை வாயிலுக்கு சென்றான்.
“பாவா!… என்னை விட்டு போகாதீங்க பாவா!….” என்ற மதுராவின் குரல் கேட்டு, திகைத்து திரும்பியவன், மதுரா தூக்கத்தில் புலம்பிக் கொண்டு இருக்கிறாள் என்பதை உணர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.
ஒரு கணம் அவன் முகத்தில் வந்து போன சந்தோசம், அடுத்தக் கணம் வந்த பயம், அடுத்து மதுரா உறக்கத்தில் தான், கனவு ஏதோ கண்டு உளறுகிறாள் என்பதை அறிந்ததும் வந்த நிம்மதி என்று நவரசமும் வந்து போனது விஜய் முகத்தில்.
பெருமூச்சு விட்டு தன்னை சமாளித்து கொண்டவன், பின் கடகடவென வாசலுக்குச் சென்று காரில் அமர்ந்து விட்டான்.
பாலாஜி கொடுத்த மதுராவின் இரண்டு அக்ரீமெண்டையும் ஆல்வின் வாங்கிக் கொண்டு கிளம்பி விட, கருணாகரனும் அந்தப் பெரியவரும் தங்கள் காரில் ஏறிப் புறப்பட்டனர்.
அவர்கள் கிளம்பும் வரை வாசலில் நின்று கொண்டு இருந்தனர் பாலாஜியும், சுபாவும்.
அவர்கள் கிளம்பிய உடன், கதவைத் தாளிட்டு ஹாலுக்கு வந்த சுபா, பாலாஜியின் தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.
“என்ன சுபா இது. சின்னப் பிள்ளை போல?… இந்த நிலைமையில் அழலாமா?…. கண்ணைத் துடை.” என்றான் அவளை அணைத்தவாறு.
“அண்ணாவை இப்படி இடிஞ்சி போய்ப் பார்க்க முடியல பாலு. அண்ணாக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?… எவ்வளவு நல்ல மனுஷன். இப்போ இறுகிப் போய் இருப்பதை, கண் கொண்டு பார்க்க முடியலை பாலு. அவர் சிரிப்பு எவ்வளவு அழகா இருக்கும்!.
சிரித்தால் முகமே ஜொலிக்குமே!… அந்தச் சோனாவை கொன்று விடும் அளவு ஆத்திரம் வருதுடா.
கருணா வாழ்க்கையை அழித்தது மட்டுமில்லாமல், மதுராவின் மானத்தையும், இப்படி அழிக்கப் பார்க்கிறாளே!…. பேசாமல் சோனாவை கொன்று விடலாமா?… எல்லோருக்கும் நிம்மதி.” என்றாள் சுபா, வேதனையோடு.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் பாலு. நண்பனின் புன்னகை நினைவுக்கு வர, அவன் கண்களும் கலங்கியது.
“கொல்வது எளிது சுபா. ஆனால் பின் விளைவுகள்?… கஜேந்திரன் சும்மா இருப்பாரா!… ஆசை பேத்தி ஆயிற்றே!…
அந்த ஆள், மனித உருவில் வாழும், ‘நிஜ அரக்கன்’ சுபா. அந்த ஆள் செய்து உள்ள கொலைகளுக்கு அளவே இல்லை. தான் நினைத்ததை அடைய, எந்தக் குறுக்கு வழியையும் கடைப் பிடிப்பார்.
சோனவையோ, சுமனையோ கொல்வது கருணாவால் முடியாது என்றா நினைக்கிறே?… நிறைய விளைவுகள் ஏற்படும் சுபா. அதை எல்லாம் யோசித்து தான், நாங்க யாருமே இதில் நேரிடையாக இன்வால்வ் ஆவதில்லை.
முடிந்த அளவு நாம் தான் மதுராவை காப்பாற்றி வருகிறோம் என்று தெரிந்தால் சோனா, சுமன், கஜேந்திரன் எப்படி ரியாக்ட் ஆவார்கள், எந்த எல்லைக்குப் போவார்கள் என்று சொல்ல முடியதுமா.
மதுரா, அவள் குடும்பம் மட்டும் அல்ல…. இதில் உள்ள நம்ம யாரின் உயிரும் போகக் கூடாது என்று மிக எச்சரிக்கையாக இருக்கோம் சுபா. இதுங்க எல்லாம் ஆலமரம் மாதிரி, கிளையை வெட்டினால் போதாது, வேரோடு சாய்க்க வேண்டும்.
கருணா அமைதியாக இருப்பது போல தெரியலாம். ஆனால், சோனா, கஜேந்திரனை விட நூறு ஸ்டெப்ஸ் அவர்களுக்கு முன்னாடியே யோசித்து இருப்பான். தைரியமாக இரு சுபா. மதுராவுக்கு ஒன்றும் ஆகாது.” என்றான் பாலாஜி.
அதே சமயம், சென்று கொண்டு இருந்த காரில், கனத்த மௌனம் நிலவியது. சட்டென்று அந்தப் பெரியவர் குலுங்கி அழ ஆரம்பித்தார்.
தவம் தொடரும்…






நான் இந்த நாவலை முன்பே படித்துள்ளேன். நீங்கள் எப்போது பதிவு செய்வீர்கள் என்று காத்திருந்து மிகவும் ஆவலுடன் படித்துள்ளேன். மதுராஷி - விஜய் கதாப்பாத்திரம் புடிக்கும்
thanks a lot. this is updated version ma. added more chapters. feel free to comment