அத்தியாயம் 7
“அப்பா!… என்னப்பா இது?” என்றான் விஜய், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அவர் புறம் திரும்பி, அவர் கைகளை பிடித்துக் கொண்டு.
“கடவுளே!… நீ மட்டும் இன்று இல்லை என்றால் மதுரமாவின் கதி. சங்கரனுக்கு, என்ன பதில் சொல்லி இருக்க முடியும். என் மகளாய், இருந்து கொண்டு, இப்படி கேவலமான வேலை செய்கிறாளேப்பா!… தாங்க முடியலை கருணா.” என்று அழுதார் சோனாவின் பாவப்பட்டத் தந்தை சேதுபதி, கருணாவின் மாமனார்.
“அப்பா!…. உங்களுக்கு நானும், பூரணியும் மட்டும் தான் பிள்ளைகள். சோனா, சொர்ணாவின் மகள். கஜேந்திரனின் பேத்தி. அவ்வளவு தான்.
உங்களுக்கோ, கனகா அம்மாவிற்கோ சோனா மகள் கிடையாது. வளர்த்தது நீங்கள் இல்லை. சொர்ணா. பெண் பாதை மாறிப் போனதிற்கு, அவர்கள் தான் வருந்த வேண்டும்… நீங்கள் இல்லை அப்பா.
இந்தாங்க… தண்ணீர் குடிங்க. உங்களுக்கு எத்தனையோ முறை சொல்லி விட்டேன், ‘உங்கள் விலை உயர்ந்த கண்ணீருக்கான தகுதி சோனாவிற்கு இல்லை’ என்று.” என்றான் விஜய், அவரை அணைத்தப் படி.
தன்னைச் சமாளித்து கொண்ட சேது,
“இனி என்னப்பா செய்வது?”என்றார்.
காரைக் கிளப்பிய விஜய், “தெரியலை அப்பா யோசிக்கணும்.” என்றான்.
“பதினைந்து வருடங்கள், சங்கரனையும், என் குடும்பத்தையும் , கஜேந்திரனிடமிருந்தும், சோனா, சொர்ணா பெண் என்ற இரண்டு பெண் பிசாசுகளிடமிருந்து காப்பாற்றி விட்டதாக ரொம்பவே சந்தோசபட்டேன் கருணா.
இப்படி மடத்தனமாய் தானும் மாட்டி, இந்த அப்பாவிப் பொண்ணு மதுரவையும், மாட்ட விட்டு இருக்கிறானே!.
அவன் பதினைந்து வருடம் கழித்து, ‘அண்ணா!…’ என்று அழைத்த போதே, ‘எனக்குத் திக்குன்னு’ இருந்தது. நான் தான் மாட்டி இருப்பது புதைக் குழி.
எனக்கு தான் ரட்சிப்பு இல்லை. அவனாவது நிம்மதியாய் கண் காணா இடத்தில் இருக்கட்டுமே, என்று தானே, வீண் சண்டையைக் கிளப்பி விட்டு அவனை பிரிந்தேன்.” என்றார் சேது, வருத்ததுடன்.
“சோனா, ‘குன்னூர் போறா!…’ என்றதும் நாம் உஷாராகி இருக்க வேண்டும். வழக்கம் போல, ‘ஆண் நண்பர்களுடன் கூட… ‘ என்று நினைத்தது தப்பாகி விட்டது. கரெக்ட்டா செக்மேட் வைத்து இருக்கு. அதுக்கு தான், குறுக்கு வழி மூளை நன்றாக வேலை செய்யுமே!
மதுரா இனி இங்கிருந்து நகர முடியாது. சோனா, சுமன் கண்காணிப்பு நிச்சயம் இருக்கும். சுமன் மேட்டர், தெரிய வந்தால், ‘இன்னும் என்ன செய்யலாம் என்று வெறியோடு’ அலைவாள். சுமனும் இவ்வளவு நடந்தப் பிறகு அமைதியா இருக்க மாட்டான்.” என்றான் விஜய்.
“அரக்கக் கூட்டம்!… சாடிஸ்ட்கள்!… எப்படி தான் எல்லா பேய், அரக்க ஜென்மங்கள் ஒன்றாக, ஒரே மாதிரி மற்றவர்கள் துன்பத்தை மட்டுமே யோசிப்பார்களோ!… தெரியலை. எல்லாத்துக்கும் மற்றவர்களைத் துடிக்க வைத்துப் பார்க்கும் வெறி.
முப்பது, நாற்பது வருடமாய் நாங்கள் தான் தினம் தினம் இவர்களிடம் தெரியாமல் மாட்டி, செத்துச் செத்து பிழைச்சுட்டு இருக்கோம்.
என் தலை எழுத்து தான் இப்படி என்றால், உன் தலை எழுத்துமா இப்படி இருக்கனும்!… கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் உன் மேல், கருணை இருந்திருக்கலாம் கருணா. இந்தப் புதைக் குழியில் மாட்டிக் கொண்டு, இப்படி நீ துடிப்பதைக் காண முடியலை.” என்றார் சேதுபதி கண்ணில் நீர் வழிய.
“அப்பா!… போதும்பா. ரொம்ப அழுகாச்சி சீன்னா இருக்கு… முடியலை. கொஞ்சம் உங்க கண் டேம் கிளோஸ் செய்யுங்க.” என்றான் கருணா, அவரைப் பார்த்து நக்கலாக.
“அடேய்!… நான் உனக்காகப் பேசிட்டு வரேன். நீ என்னையே கலாய்கறீயா?… உன்னை….” என்றவர் சுற்றும் முற்றும் காரில் தேடினர்.
“என்னப்பா தேடறீங்க?… என்னை அடிக்கக் கட்டை வேணும் என்றால் சொர்ணா கிட்டே கேளுங்க அப்பா… எல்லாம் கிடைக்கும்.” என்றான் கருணா, அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“நீ வேற ஏன்டா மானத்தை வாங்கறே?…” என்றார் அவர் தலையில் அடித்துக் கொண்டு.
“ச்சே!… போங்க அப்பா!… உங்க ஒர்த் உங்களுக்கே தெரியல… பட் சொர்ணா அத்தை, ரொம்ப ஷார்ப்.” என்றான் கருணா விடாமல்.
“அடேய்!… நிறுத்துடா. முடியலை. ஐம்பது வயசுக்கு மேல், சொர்ணா கொடுக்கும், ‘லவ் டார்ச்சர்’ தாங்க முடியலை. ‘எங்கே போய் முட்டிக் கொள்வது’ என்று எனக்கே தெரியலை. நீ வேற லொள்ளுப் பண்ணிட்டு.” என்றார் சங்கடத்துடன்.
“ஐ!… அப்பா!… வெக்கபடறீங்க போல இருக்கு. பாமா, ருக்மணி, வள்ளி தேவயானை போல, ‘இந்தப் பக்கம் சொர்ணா அத்தை, அந்தப் பக்கம் கனகா அம்மா!…’. செம காம்பினேஷன் கலக்குங்க அப்பா கலக்குங்க.
கண்ணா!… ரெண்டாம் லட்டுத் தின்ன ஆசையா?” என்றான் கருணா வாய் விட்டுச் சிரித்து.
“உன்னை அடிக்கப் போறேன் கருணா!. நீ வேற வயித்து எரிச்சலை கொட்டிக்காதே!…. அந்தச் சொர்ணா, இந்த வயசில் வழிவது, சின்னப் பெண் போல் நூல் விடுவது, முகத்தை மூடி வெட்கப் படுவது, வாந்தியே வருது.
ஏன் வீட்டுக்கு… தப்புத் தப்பு நரகத்திற்கு போகிறோம் என்று இருக்கிறது. என்னை நம்பி, ‘இன்னும் அப்பாவியான மூன்று ஜீவன்’ அங்கு இருக்கே!… இல்லை என்றால், ‘கண் காணாத இடத்திற்கு’ ஓடி விடுவேன்.” என்றார் சேது, கடுப்பாக.
“மூன்று ஜீவன்… ஹ்ம்ம்!…. கனகா அம்மா, மரகதம் பாட்டி, அன்னபூரணி. இந்த லிஸ்டில் என்னை விட்டுடீங்களே அப்பா!….. மீ ஆங்கிரி….” என்றான் அந்த இரும்பு மனிதன், சிறு பிள்ளையாகச் சிணுங்கி.
சாலை விளக்கின் வெளிச்சத்தில், அவனைக் கண்ட அவரின் கண்கள் மீண்டும் கலங்கின.
“நீ இப்படி சிரித்து பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. சிரிப்பையே தொலைச்சுட்டியே கண்ணா!…. எப்படி இருந்த பிள்ளை நீ, கடவுளே!… அந்தக் கடவுள் தான் உனக்கு வழிக் காட்டணும்.” என்றார் சேது வேதனையோடு.
“காலையில் கண்ணாடி பார்க்கும்போது கூட, ‘ஹாலிவுட் ஹீரோ!..’ ரேஞ்சு இருந்தேன்பா… இப்போ அவளோ மோசமாக வா இருக்கேன்?…. உங்க கண்ணை டெஸ்ட் செய்யணும். நமக்கு எத்தனை ரசகுல்லாஸ், விசிறியா கிடைச்சு இருக்குனு வாக்கெடுப்பு நடத்தலாமா, என்று தேர்தல் கமிஷன் இடம் பேசலாம் என்று இருக்கேன்.
இப்போ போய் இப்படி சொல்லிடீங்களே அப்பா!…. இந்த லிட்டில் ஹார்ட் சின்ன இதயம் தாங்குமா?…
அய்யகோ, வானகமே!…
வையகமே!….
இந்த கொடுமையை கேட்க ஆள் இல்லையோ!….” என்றான் தன் தலையைக் கோதியவாறு.
தன்னைக் குற்ற உணர்வில் இருந்து மீட்க தான், ‘மருமகனாய் வந்து, மகனாய் மாறி இருக்கும் அவன்’ இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று சேதுபதிக்கு புரிந்தேத் தான் இருந்தது.
“போடாப் போக்கிரி!… .” என்று அவனை மொத்தியவர்,
“தம்பி!… மதுராவால் ஒரு கோடி ஏறக்குறைய புரட்ட முடியும். ஆல்வின், பாலாஜி, கார்த்திக் கூட ஹெல்ப் செய்வார்கள்.
கனகவிடமும், மரகதம் அத்தையிடமும், சில வைர நகைகள் மற்ற யாருக்கும் தெரியாமல் இருக்குப்பா.
அதைப் பிலேட்ஜ் செய்யலாம், வேணும் என்றால் விற்று விடலாம் கண்ணா. நீயும், உன்னால் முடிந்த அளவு ட்ரை செய்ப்பா. சுலபமாய் நான்கு கோடி புரட்டி விடலாம். மதுராவையாவது காப்பாற்றி விடுவோமே!…” என்றார் சேது.
“பணம் எல்லாம் பிரச்சைனையே இல்லைபா. நான்கு கோடி என்ன, எனக்காகக் கேள்வியே கேட்காமல், சூரிட்டி கூட வாங்காமல் பத்து கோடி என்றாலும் கூடத் தர ஆள் உண்டு. உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரியனுமா என்ன?
ஆனால், கொடுப்பது நீங்களும், நானும் என்று தெரிந்தால், மதுராவிற்காக, நாம் சிறு சைகை, ஜாடை, ஒரு விரல் அசைத்தோம் என்று சோனாவிற்கு தெரிய வந்தால், அவளோடு சேர்ந்து கஜேந்திரன் எப்படி ரியாக்ட் ஆவார் என்று தெரியாது.
சோனாவிற்கு தேவையே நம் ரியாக்ஷன் தான். அதற்குத் தான், இந்தத் துடிப்பை, வலியைக் காண தான் அவள் காத்து இருக்கிறாள். இப்பாவது கௌரவுமாக வேலை ஒப்பந்தம், கடன் என்று ஓர் அளவு இருக்கிறது.
அந்தப் பெருச்சாளிக்கு உண்மை தெரிஞ்சுச்சு,
‘போட்டி கம்பெனியின் உளவாளி,
கம்பெனி ரகசியத்தை மதுரா விற்றாள்!
பள்ளி, கல்லூரிகளில் போதை மருந்து மதுரா கூவிக் கூவி விற்றாள்! தீவிரவாதிகளுக்குத் துணை புரிந்து தேசத் துரோகம் செய்தாள்!
சுபா, பாலாஜியுடன் அந்த வீட்டில் பலான தொழில் செய்தாள்!…’ என்று வாய் கூசாமல் புகார் சொல்லுவாள்.
எவிடென்ஸ் கூட இவளே உருவாக்கி வைத்தாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. இதோ, இன்று பிளான் போட்டாளே!…. என்ன மாஸ்டர் பிளான் பார்த்தீங்களா?
காலையில் இருந்து, ஒவ்வொரு இடமாய் மதுராவை அலைய வைத்து, சாப்பாடு கூட கொடுக்காமல், பேசிப் பேசி மனதளவில் தளர வைத்து, பதினோரு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேற்றி, அங்கே சுமனை வரவழைத்து, அவனுக்கு பலிக் கொடுக்க, ஒவ்வொன்றையும் பக்காவாய் பிளான் செய்ததில் இருந்து தெரியவில்லையா, எந்த எல்லைக்கும் போகச் சோனா தயாராகி விட்டாள் என்று.
இது எல்லாவற்றையும் மதுராவோ, அவள் குடும்பத்தினரோ தாங்குவார்களா?…. ஊர் முழுதும் பெயர் இப்படி எல்லாம் அடிபட்டால் கூடக், கார்த்திக்கின் குடும்பம் மதுராவை ஏற்குமா?
இப்படி நிறைய இருக்குபா… சோனா, ‘நான் தான் மதுராவை காப்பாற்றுவது’ என்று கண்டுபிடித்தால் என்றால், மறு கணம் மதுராவை கொல்லக் கூடத் தயங்கமாட்டாள்.
எவிடென்ஸ் இல்லாமல் கொள்வதற்கு இந்த அரக்க ஜென்மங்களுக்கா தெரியாது?…. எந்த எல்லைக்கும் போகும் அந்தப் பேய். இடியாப்பச் சிக்கல் நிறைய உண்டுபா. பொறுமையாத் தான் ஹாண்டில் செய்யணும்.” என்றான் விஜய்.
“என்னப்பா இது!…. எந்தப் பக்கம் போனாலும், கண்ணைக் கட்டுதே!… மதுராவை எப்படி கண்ணா காப்பாற்ற போகிறோம்? நினைச்சாலே தலை சுத்துது.” என்றார் சேது, கவலையாக.
“ஒரு பிசாசு இருந்ததாலே சமாளிப்பது கஷ்டம். கூடவே, ‘குட்டிச்சாத்தான், காட்டேரி, ராட்சசன்’ என்று எல்லாமே அல்லவா சேர்ந்து ஆட்டம் போடுதுங்க. ஒரு வருடம் காப்பாற்றவில்லையா மதுராவிற்கே தெரியாமல்?… இப்போ அவளுக்கும் கொஞ்சம் விஷயம் தெரிந்து இருக்கும் .
வழி கிடைக்கும். டென்ஷன் வேண்டாம் அப்பா. உங்க உடம்புக்கு நல்லதில்லை ரிலாக்ஸ் ஆகுங்க. இதைப் பத்தி பேச வேண்டாம். பாட்டு கேளுங்க.” என்று ரேடியோவை ஆன் செய்தான்.
சீர்காழி டாக்டர் கோவிந்தராஜன் குரலில், ‘ஜஸ்டிஸ் விஸ்வநாத்’ என்ற படத்தில் வரும் பாடல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.
‘இது நீரோடு
செல்கின்ற ஓடம் ,
இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்?
எந்த நெஞ்சங்கள்,
எதனாலே ஆறும்
எந்தக் குற்றங்கள்,
எதனாலே தீரும்
சட்டம் ஏமாந்து
போனாலும் போகும்
தர்மம் எப்போதும்
பழி வாங்கி தீரும்
நீ, உனக்காக
உருவாக்கும் நியாயம்
அது அநியாயம்,
ஆனாலும் ஆகும்
தெய்வம் தான்….
அன்று இருந்த ராமன்
பொய் மானைத் தேடியதும் பேதம்
நல்ல அறிவோடு ,
வாழ்ந்தரும் உண்டு
வந்த விதியோடு ,
சென்றாரும் உண்டு.
அந்தச் சினம்,
என்றும் சேர்ந்தாரை கொல்லும்
நல்ல மனம் தானே
எந்நாளும் வெல்லும்.
நெஞ்சில் தெய்வங்கள்,
சில நேரம் வாழும்
அந்த மிருகங்கள்
சில நேரம் ஓடும்!…’
எவ்வளவு உண்மையான தத்துவங்கள்!
மிக எளிமையாகக் கண்ணதாசன் பாடி எழுதி விட்டார்.
கருணாவின் நிலையும் அது தானே!
“அட!… ரேடியோக்காரன் கூட நம்மை ஓட்டறான் பாருங்க அப்பா!..” என்று வாய் விட்டுச் சிரித்தவனின் முகம், சட்டென்று கற்பாறையாக இறுகியது எதிரே நின்ற அந்த மாளிகையைக் கண்ட உடன்.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!