அத்தியாயம் 8
“நரகம் வந்தாச்சுப்பா.” என்றான் எக்குப் போன்ற குரலில்.
“ஹ்ம்ம்!….” நீண்ட பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டார் சேது.
‘கஜேந்திரன்’ என்ற ராட்சசஸின் கோட்டை பெயர், ‘கஜா போர்ட்’.
அந்த நள்ளிரவில், அழகிய ஆபத்தாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது.
இரண்டு பெரும் வாயில் கதவுகளை திறந்து விட்ட பாதுகாவலர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவே, சிறிய சைஸ் மலை போலிருந்தார்கள்.
மெல்ல ரன்வேயில் கார் செலுத்தினான் கருணா.
“எங்கே இருந்தோம்?” என்றான் கருணா.
“ஆஃபிஸில்.” என்றார் சேது மரத்தக் குரலில்.
“என்ன செய்தோம்?” என்றான் கருணா.
“புது ஆர்டர் சீனாவுடன்… அங்கிருந்து டெலிகேட்ஸ், அடுத்த வாரம் வராங்க. அவங்களுக்கு, ‘கஜா இண்டஸ்ட்ரீஸ்’ உடன் பார்ட்னர் ஆகும் ஆசையும் இருக்கிறது.” என்றார் சேது மனப்பாடம் செய்ததை ஒப்புவிக்கும் குரலில்.
“அதற்கு ஏன் எவ்வளவு நேரம்?” என்றான் கருணா.
“வீடியோ கான்பரன்ஸ் பேசினோம். எல்லாத்தையும் விளக்க நேரம் ஆகி விட்டது. கோடிக்கணக்கில் இன்வெஸ்ட் செய்வதால், துருவித் துருவி விசாரித்தார்கள்.” என்றார் சேது.
“ஆபிஸில் யாருமே இல்லையே!… நீங்க வெகு சீக்கிரமே கிளம்பி விட்டதை சிசிடிவி பதிவுக் காட்டியதே!… செக்யூரிட்டி சொன்னார்களே!…” என்றான் கருணா.
“செக்யூரிட்டி அடிக்கடி வந்துட்டே இருந்தான்… ஒரு வேளை அவன், ‘வெற்றிக் குரூப்ஸ் உளவாளியோ’ என்று சந்தேகமா இருந்தது. எனவே, ‘நுங்கம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ்க்கு’ போய்ட்டோம். ஆடிட்டர், ‘பாஷியம் சார்’ கூட வந்துட்டார்…’
யப்பா!… சாமி!… இவ்வளவு கேள்வி கேட்பாங்க என்று நினைக்கிறே?…. அதுவும் நள்ளிரவு இரண்டு மணிக்கு ?
பேய் கூட முழிச்சி இருக்காதுபா. அதுங்க எப்பவோ, ‘பத்து பாட்டில் சரக்கை’ உள்ளே அனுப்பிட்டு, மட்டையாகி கிடக்கும்.
பசி உயிர் போகுதுடா!….
மயக்கமே வரும் போல் இருக்கு.” என்றார் சேது நொந்தக் குரலில், கார் விட்டு இறங்கியவாறு.
“அப்பாக்காரு!… கொஞ்சம் அக்கட சூஷ்கோவண்டி!…
‘வரவேற்பு கமிட்டி’ ஆல்ரெடி ஹாலில் இருக்கு… கெட் ரெடி!… எப்.பி.ஐ, சி.ஐ.ஏ, ரா எல்லாம் தோற்பது போல் இருக்கும் பாருங்க, விசாரணை. அவங்க விசாரணை முடியும் போது, உங்களுக்கு பிபி, ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்…. மயக்கம் எல்லாம் ஜுஜுபி.” என்றான் கருணா.
படியேறி மாளிகைக்குள் வந்தவர்களை வரவேற்றது மூவர் அடங்கிய விசாரணை குழு.
சோனா! சொர்ணா! கஜேந்திரன்!
முழுதும் நெட்டில் ஆன, ஒளி புகும் உடையில் ஏதோ, ‘நள்ளிரவு மசாலா பட நாயகி’ போல, ஒரு சோபாவில் படுத்துப் போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள் சோனா.
கருணா உள்ளே வந்தவுடன், உடலை வளைத்து நெளித்து என்று அவன் கவனத்தைக் கவர, ஏகப் பட்ட சேஷ்டைகள்.
சேது வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டார்.
‘இப்படி எல்லாம் ஐடியா, இந்தச் சனியனுக்கு எவ கொடுப்பது?… கன்றாவி!
வேலையாட்கள் நடமாடும் இடத்தில இப்படியா கடை விரிப்பாள்!….
வேண்டாம் கருணா!…. வாய் திறக்காதே!… இது தான் சாக்கு என்று அட்டையாக ஒட்டிக் கொள்வாள்.’ என்று மனசாட்சி, எச்சரிக்கை விடுக்க, கஜேந்திரனை பார்த்தபடியே, மாடியில் உள்ள தன் அறைக்குச் செல்ல முயன்றான் கருணா.
கருணா நிலை அது என்றால், சேதுவின் நிலை அதைப் போல மோசமாகத் தான் இருந்தது. சோனாவாது இளம் வயதினள்.
தன் புருஷனை கவிழ்க்க ஏதோ செய்கிறாள்.
ஆன்டியை தாண்டிய, பாட்டி வயசில் சொர்ணாவும், ஏறக்குறைய அதே போல, இரவு உடையில், தங்கை கணவனான தனக்கு போஸ் கொடுக்க, சேதுவிற்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது.
‘எங்கே அங்கேயே வாந்தி எடுத்து விடுவோமோ!..’ என்று தன் அறைக்கு ஓடப் பார்த்தார்.
இந்த வயசில், இப்படி உடை அணிந்து அவருக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்துக் கொண்டு இருந்தாள் சொர்ணா.
இப்படி ஓட முயன்ற இரு மருமகன்களையும், தடுத்து நிறுத்தியது கஜேந்திரனின், சிம்ம + வெங்கல குரல்.
கஜேந்திரனுக்கு அறுபது வயது. ஆனால், பார்க்க நாற்பது போல இருப்பார்.
திமிர், தெனாவட்டு, ஆணவம், டாம்பீகம், வெறி என்று பணத்தை, மதிப்பைப் பெற எதை வேண்டும் என்றாலும் செய்யத் தயங்காத ராட்சசன்.
அகராதியில், ‘கெட்டது’ என்று தேடினால், அதற்கு விளக்கமாகக், ‘கஜேந்திரன்’ என்ற பெயர் தான் இருக்கும்.
அந்த வீட்டுக்கு, எடுப் பிடியாக உள்ளே நுழைந்தவர் இந்தக் கஜா.
அந்த வீட்டு மாப்பிளை, சோமசுந்தரத்திற்கு, ‘நண்பன்’ என்ற பெயரில் கிடைத்த, ‘ஆலகால விஷம்.’
‘ஆமை நுழைந்த வீடும், ஜப்தி செய்ய அமீனா புகுந்த வீடும்’ விளங்காது என்பது போல், கஜேந்திரன் இருக்கும் இடத்தில், அவரைத் தவிர மற்ற அனைவரின் வாழ்வும் பாழாகி விடுவது திண்ணம்.
சோமசுந்தரத்தின் மனைவி மரகதம்!
ஜமீன் வம்ச அழகு சிற்பம்!
அதன் மேல் கஜாவின் கண் விழுந்தது. நல்லவரான சோமசுந்தரத்திற்கு மது, மாது, போதை என்று பழக்கப்படுத்தி, இரண்டே வருடத்தில் அவரைக் கொன்று விட்டான் . இவர் மேல் சந்தேகம் வராத மாதிரி, கொல்வதில் இவருக்கு நிகர் இவரே.
இளம் மகள், விதவை ஆகி விடத் தவித்த மரகதத்தின் தந்தை, நல்ல பெயர் எடுத்து இருந்த கஜாவை மரகதத்திற்கு இரண்டாம் திருமணம் நடத்தி வைத்தார் அந்த அப்பாவி தந்தை.
‘தன் முதல் மருமகன் இறக்கக் காரணமே கஜா கொடுத்த விஷம் தான்’ என்ற உண்மை தெரியாத அப்பாவியான மகளும், தந்தையும், கஜா விரித்த வலையில் விழுந்தது தான் பரிதாபம்.
திருமணம் வரை, ‘நல்லவன்’ என்ற முகமூடி அணிந்தவர், திருமணம் ஆன, மறுநொடியிலிருந்து தன் சுயரூபத்தைக் காட்டினார்.
ஏற்கனவே மகளின், ‘விதவைக் கோலம் கண்டு’ ஒரு முறை ஹார்ட் அட்டாக், வந்து இருந்த மரகதத்தின் தந்தை, இரண்டாம் மருமகனின் சுயரூபம் தெரிய வர, மகளின் வாழ்வை தாமே கெடுத்து விட்ட கவலையில் போய்ச் சேர்ந்து விடக், கஜாவை அடக்க ஆள் இல்லாமல் போனது.
மரகதம் வாய் இல்லா பூச்சி. எதற்குமே அவர் வாய் திறக்காதது, இவருக்குச் சாதகமாக போய் விடப் பேயாட்டம் ஆடினார், ஆடிக் கொண்டு இருக்கிறார்.
மரகதத்தின் சொத்து முழுவதும் இவர் கையில்!… பதவி, பணம், மதிப்பு என்பதின் மேல் வெறி… வெறி… வெறி மட்டுமே. பணத்தைச் சம்பாதிக்க மற்றவர் வாயில், வயிற்றில் அடிக்கக் கஜா தயங்கியதே இல்லை.
ஆரம்பத்தில், ‘மறுவாழ்வு தந்த தெய்வமாக’ இவரை மரகதம் பார்க்க, ஆனால், அவரோ ஏற்கனவே திருமணம் ஆகி, முதல் மனைவி, ‘சிவகாமி’ பிள்ளைத்தாச்சியாக இருக்கும் போது, நடுத்தெருவில் அவர்களை விட்டு விட்டுத் தான், மரகதத்தைக் கரம் பிடித்திருந்தார்.
விஷயம் தெரிய வந்த இரு பெண்களும் உடைந்து தான் போனார்கள்.
சிவகாமியின் வயிற்றில் வளர்வது, ‘தன் பிள்ளை, தன் ரத்தம் என்ற பாசம் கூட இல்லாமல், ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்பதையெல்லாம் தூசாகி, ‘அந்த பிள்ளையே தனது இல்லை’ என்று சிவகாமியை விரட்டி அடித்தார்.
கஜா சூழ்ச்சி செய்து, ஒரு உயிரை பறித்து, நாடகம் ஆடி, ரெண்டாவதாய் கரம் பிடித்த மரகத்திற்கும், இவருக்கும் பிறந்தவர்களே சொர்ணாவும், கனகாவும்.
சொர்ணா, கஜாவை போலவும், கனகா மரகதத்தை போலவும் குணத்தில் இருந்தனர்.
காலம் யாருக்கும் நில்லாமல் உருண்டோட, கஜாவின் ஆட்டங்களும், அக்கிரமங்களும், கொடூரங்களும் அவரின் பெண்களை போலவே வளர்ந்து கொண்டே தான் போனது.
பெண்கள் இருவருக்கும் மணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கனகா மனதாலும், உடலாலும் அழகானவள்.
ஆனால், சொர்ணா, அழகுப்படுத்தி கொள்ளத் தெரிந்தவர்.
தனக்கு பார்த்தப் மாப்பிளை விடுத்து, மரகதத்திற்கு பார்த்து முடிவு செய்யப்பட்டு இருந்த, ‘வரதராஜனை மட்டுமே மணப்பேன்’ என்று தகராறு செய்து, அவரை மணந்து, ‘அமெரிக்கா’ சென்று விட்டாள் சொர்ணா.
கனகா குணவதி!
குறுக்கு வழித் தெரியாத பாசக்கார பெண்!
கனகாவை பொறுத்த வரை திருமணம் என்பது, ‘அந்த நரகத்திலிருந்து அவளுக்குத் தப்பிக்க கிடைத்த வாய்ப்பு.’
அதைத் தட்டி பறித்துக், ‘கோடீஸ்வரனின் மனைவி’ என்று வெளிநாடு சென்றாள் சொர்ணா.
‘உண்மையான அழகு எது, வாழ்வில் பணத்தை விட எது முக்கியம்’ என்று வரதராஜனுக்கும், அவன் குடும்பத்திற்கும், இரெண்டே நாளில் காட்டி விட்டாள் சொர்ணா.
‘வாழ்கை சில உண்மைகளைத் தலையில் அடித்துப் புரிய வைக்கும் போது’ மனிதன் எழ முடியாது.
வரதராஜன் நிலையும், அப்படித் தான் ஆகிப் போனது .
வெளி புற அழகினை விட, அரிதார பூச்சு ஒப்பனைகளை விட, ஆணோ பெண்ணோ அங்கு மிக முக்கிய தேவை அன்பு, பாசம், கருணை, இரக்கம், விட்டு கொடுத்து போகும் குணம் என்பதை புரிந்து கொள்ள வரதராஜன் கொடுத்த விலை என்னவோ மிக அதிகம்.
கனகாவிற்கு மரகதம், அவர்கள் சொந்தத்திலேயே நல்லவனாய், பணம் இல்லை என்றாலும், நேர்மை, உழைப்பு, குணம் இருந்த சேதுபதியை, திருமணம் முடித்தார். ஏழை என்றாலும் சேது கடின உழைப்பாளி!
வரதராஜன் போல அழகு இல்லையென்றாலும், மேல்தட்டு வர்க்கம் இல்லையென்றாலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி கொண்டு மாடல் போல் இல்லையென்றாலும், உழைப்பின் நிமிர்வு, சேதுவிற்கு தனிக் களைக் கொடுத்து இருந்தது. அதைக் கண்டு, காதல் கொண்டே சேதுவை கரம் பிடித்தார் கனகா.
எல்லாம் நன்றாகப் போய் இருக்கும். ஏழை வீட்டு மருமகளாய், சேதுவின் மன ராணியாய் உயிர்ப்போடு வாழ்ந்து இருப்பார் கனகா சேதுவின் வீட்டில்.
ஆனால், சேதுவின் தயார் உடல் நிலை மோசமாகி ஆபரேஷன், செய்யப் பணம் தேவைப் பட்டது.
தம்பி சங்கரனை, படிக்க வைக்கப் பணம் தேவைப் பட்டது.
தங்கைகளுக்கு மணம் முடிக்கப் பணம் தேவைப் பட்டது.
பணம்! பணம்! பணம்!.
இது கஜேந்திரனிடம் அள்ள, அள்ளக் குறையாமல் இருந்தது.
வள்ளலாய் வாரி இறைத்தார் கஜா.
“மாமா, ரொம்ப நல்லவர் கனகா. கேட்காமலே இவளோ உதவி செய்கிறார்.” என்று சேது கண் கலங்க, அவர் எவ்வளவு நல்லவர் என்பதையும், காரணம் இல்லாமல் ஒத்தை ரூபாய் கூடச் செலவு செய்யாதவர் என்று புரிந்தக் கனகாவும், மரகதமும் பயந்து நடுங்கினர்.
‘விலை இல்லாமல் ஓசியில் கிடைப்பது எதுவுமே இல்லை’ என்று சேதுவிற்கு புரிய வைக்கப்பட்டது.
கொடுத்த பணத்திற்கு விலையாக, ‘வீட்டோடு மாப்பிளை இல்லை வீட்டோடு அடிமை, வேலைக்காரன், எடுபுடி’ என்று சொல்ல வேண்டுமோ, அப்படி ஆக்கப்பட்டார் சேது .
கனகா – சேதுபதியின் சிறகுகள் பிய்க்கப்பட்டன.
சேது ஏழை என்பதால், ஒருவித துவேசம் கஜாவிற்கு. குடும்பத்திற்காகப் பலிக் கொடுக்கப்பட்டார் சேது.
திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை சொர்ணவிற்கு. இது பிரச்சினை கிளப்பும் என்று தெரிந்தே கனகாவும், பிள்ளை உண்டாவதை தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தார். ஆனால், விதி, யாரை தான் விட்டது .
கனகா தாய் ஆனார். கனகாவின் மயக்கம் தெளியும் முன்னே, பிறந்தக் குழந்தையின் முகத்தைக் கூட, யாருக்கும் காட்டாமல், யாரையும் பார்க்க விடாமல், யாரிடமும் அனுமதி பெறாமல், அமெரிக்கா தூக்கிச் சென்று விட்டார்.
சொர்ணவால், அவள் குணத்தோடு வெளிநாட்டில் வளர்ந்த அந்தக் குழந்தை தான், ‘இன்று மதுரா, விஜய் வாழ்வில் விளையாடும்’ சோனா.
சோனாவிற்கு பனிரெண்டு வயதான போது, மீண்டும் தாய் ஆனார் கனகா. இந்த முறையும் பெண் குழந்தை. ஆனால், அந்தக் குழந்தை மரகதம், கனகா, சேதுபதியின் குணத்தோடு, அழகோடு வளர்ந்தது. பெயர் அன்னபூரணி.
பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படிக்கும் சுட்டி.
வயது வந்த பெண்களுக்குத் திருமணம் ஆகப் போகும் வயதில், கணவனோடு சண்டைப் போட்டு, விவாகரத்து கொடுத்து விட்டு, சோனாவுடன் ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பி இருந்தார் சொர்ணா.
‘கப்பல் ஏறிப் போயாச்சு!… சுத்தமான ஊராச்சு!…
விடுதலை!… விடுதலை!…’ என்று அமெரிக்காவில் பாடும் ஜீவன், சாட்சாத் வரதராஜன் தான்.
வரதராஜன் அத்தனை வருடம் கழித்து தப்பித்தார். ஆனால், இவர்கள், வந்த நேரம் இங்கே பலர் வாழ்வு, தடம் மாறி போனது.
இவர்களின் வரவு பலர் வாழ்வில் சனி ஒட்டுமொத்தமாகப் பிடிக்க காரணமாய் இருந்தது. பலரின் வாழ்வு அழிந்தது.
பலர் வாழ்வு நாசம் ஆனது.
இருவரும் மொத்தமாக வருவது தெரிந்த உடன் மரகதம், கனகா, சேது செய்த முதல் வேளை, பூரணியை ஹாஸ்டெலில் விட்டது தான்.
இவர்கள் மூவரும் சென்று பார்ப்பார்களே ஒழிய, பண்டிகை, நல்ல காரியம் என்று எதற்குமே பூரணியை வீட்டுக்கு என்றுமே அழைத்ததில்லை.
பிசாசுகளின் கண்ணில், இந்தத் தேவதைப் பெண் ஏன் பட வேண்டும்!
இவர்கள் என்னவோ அன்னபூரணியை சோனா, சொர்ணவிடமிருந்து காக்கத் தான், அவ்வாறு செய்தார்கள். ஆனால், காப்பற்ற முயன்றவர்கள் அறியவில்லை,
‘எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத அனாதையாய்’ அங்கே ஒரு பெண் வளரும் கொடுமைக்கு ஆளாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை.
‘யாருமே இல்லை’ என்றால் அது ஒரு விதம்.
‘இல்லாமல் போனால்’ அது வேறு விதம்.
‘இருந்தும், இல்லாமல் போவது’ என்பது நரகம்.
தங்கள் மகள் அன்னபூரணியை காப்பாற்ற முடிந்தவர்களால், விஜய் வாழ்க்கையை காப்பாற்ற முடியாமல் போனது. சோனா, சொர்ணாவின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜீவன், விஜய் தான்.
முதல் பலி அவனும் அவன் குடும்பமும் தான். கருணாரனுக்கும், சோனாவிற்கும் திருமணம் நடத்தபட்டது. சேது போல, குடும்பத்திற்காகப் பலி ஆன மான, ரோஷம் உள்ள இன்னொரு ஆண்மகன்.
சேதுவை அடிமை ஆக்கிய கஜாவோ, குறி வைத்து மணந்த சோனாவோ, விஜயை வளைக்க முடியவில்லை என்பது உண்மை.
அவன், ‘இரும்பு மனிதனாக’ இருந்தான்.
விஜய் கற்பாறை போன்றவன். அவனை இளக்கவோ, ஓடைக்கவோ, அற்ப புழுக்கள் ஆன கஜா, சோனாவால் முடியாமல், இன்று வரை திணறிக் கொண்டு இருந்தனர் .
‘பேரழகி’ என்று பட்டம் பெற்ற சோனாவைக் கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல தான் பார்த்து வைத்தான்.
“லுக் மிஸ்டர் கஜேந்திரன்!… நான் உங்கள் கம்பெனி M .D. அந்தப் பதவி மட்டுமே என்னுடையது. திருமணம் என் தங்கையின் மானத்தோடு விளையாடி, என் தங்கை கழுத்தில் கத்தி வைத்து அவளின் ரத்தத்தில் நடந்தது. எனக்கும், உங்கள் பேத்திக்கும் நடந்தது திருமணமே அல்ல, வியாபாரம்!
திருமணத்தை மதிப்பவளாக இருந்தால், திருமாங்கல்யம் கட்டிய, அரை மணி நேரத்தில், அதைக் கழற்றி குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்று இருக்க மாட்டாள். அப்படி போனவள் யாரோடு போனாள் தெரியுமா?அந்தச் சுமனோடு.
நீங்க, ‘அவனை தான் மாப்பிள்ளை’ என்று கூப்பிடணும் எல்லா வகையிலும்….. என்ன ஒண்ணு…. அவனுக்கு ஒருத்தி என்றுமே போதாது. அதுவும் உங்க பேத்தி எல்லாம், ‘அவனுக்கு சைட் டிஷ்’ மாதிரி தான்.”என்று விஜய் உண்மையை தெள்ள தெளிவாக உரைக்க சொர்ணா, கஜேந்திரனின் முகம் அஷ்டகோணலது.
உண்மை என்ற நெருப்பு சுட தானே செய்யும்.
“திருமணத்திற்கு உரிய மரியாதையை, எந்த வகையிலும் தராத இவள், ‘எந்த வகையில் என் மனைவி!’ என்று விளக்கிச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
வேறு ஏதாவது ட்ரை செய்தீங்க, அது யாராக இருந்தாலும் தலையைச் சீவிட்டு போயிட்டே இருப்பேன்.” என்று எரிமலையாய் பொங்கியவனை பார்த்துச் சோனா, சொர்ணா, கஜா மிரண்டு போனார்கள்.
அதற்குள் அடங்கி விட்டால் அவர் கஜா இல்லையே, “இப்பவும் உன் குடும்பத்தை அழிக்க என்னால் முடியும் கருணாகரா. இந்தக் கஜா மோசமானவன்.” என்றார் வீரப்பாக.
அடுத்த நொடி அவர் குரல்வளையை, பிடித்து நெறிக்க ஆரம்பித்து இருந்தான்.
“செய்யுங்க!…. செய்து பாருங்கோ என்று தான் சொல்கிறேன். இந்தப் பூச்சாண்டிக்கு பயப்படும் கேனையன் வேறு எவனாவது இருப்பான். அவன் கிட்டேயே காட்டுங்க…. உங்களை மாதிரி, கையில் அழுக்குப் படாம வேலை செய்பவன் நான் இல்லை.
என் குடும்பம் இருக்கும் வரை தான், உங்களுக்குப் பாதுகாப்பு. அவங்க, ‘கையில் சின்னக் கீறல் விழுந்தால் கூட’ உங்க தலை உங்களுக்கு இல்லை. நான், உங்கள் மாப்பிள்ளை சேது போன்றவன். இல்லை குட்டக் குட்ட குனிய….
நீங்க பத்து அடி பாய்ந்தால், நான் ஆயிரம் அடி உங்களுக்கு முன் பாய்ந்து குதறி விடுவேன்.” என்றவனின் கை அழுத்தம் கூடி கொண்டுப் போக, அவனிடமிருந்து அவரை ஆறு பேர் மிகவும் கஷ்டப் பட்டுப் பிரித்து விட்டனர்.
பெருத்த அவமானம் வீட்டு வேலை ஆட்கள் முன்.
சும்மா இருப்பாரா கருணாவின் தம்பி, ‘ரஞ்சித் சாகர்’ சென்ற பைக் விபத்தை செய்து வைக்கக், கால் முட்டிச் சிராய்ப்போடு தப்பித்தான்.
ஆனால், அன்று இரவே சோனா, சொர்ணா, கஜா சென்ற கார் விபத்துக்குள் உள்ளாகி கை, கால் உடைந்து ஆறு மாதம் மூவரும் ஹாஸ்பிடலில் கிடந்தனர்.
“என்ன மிஸ்டர் கஜா!…. இப்படி ஆகி போச்சுங்களே!… பாவி பசங்க, உங்க கால், கையை உடைத்து விட்டார்களே!….” என்று வெகுநக்கலாக ரஜினி வாய்ஸில், ‘சிவாஜி’ பட டயலாக் விட்டவனை வெட்ட, குத்தவா என்று முறைத்தார்.
“நீங்கப் போடும் பிச்சை காசுக்குக் காக்கை கூட்டம் வரும் கஜா!… ஆனால், நான் சொல்லக் கூட இல்லை…. குடும்பத்தோடு படுக்க வைத்து விட்டார்கள்!…. வாய் திறக்காத போதே, இப்படி என்றால், நான் வாய் திறந்தால்!… உங்க உயிர் உங்களது இல்லை. பார்த்து நடந்துக்கோங்க கஜா. எல்லாம் பாசக்காரப் பசங்க. ” என்றான் விஜய்.
இவர் கை, கால் உடைக்க பட்டு, விஜய்யால் படுக்க வைக்கப்பட்டு இருக்க, அவர் ஏற்றுமதி இறக்குமதி உட்பட பல்வேறு தொழிலில் லாஸ் ஏற்பட, லாயர் பரிந்துரையின் பேரில், ‘விஜய்க்கு அவர் தொழிலை நடத்தும் பவர் எழுதிக் கொடுப்பதைத்’ தவிர வேறு வழி கஜாவிற்கு இருக்கவில்லை.
ஆறு மாதம் கழித்து, கஜா அலுவலகம் வந்த போது அங்கு ஒரு ராணுவத்தின் கட்டுகோப்பு இருந்தது. அலுவலகத்தில் இருந்த, ‘புல்லுருவிகள், களைகள் களையப்பட்டு’ விஜய் என்ற, ‘தொழில் சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியின் கோட்டையாக’ மாறி இருந்தது.
அதன் பிறகு, ‘விஜய்யின் அசுர வளர்ச்சி நிற்கவேயில்லை’ என்று தான் சொல்ல வேண்டும். விஜய் போன்றத் திறமையாளர்களுக்கு தேவை, ‘தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு களம்’ தான்.
அந்தக் களம் கிடைத்து விட, அவன் திறமை கோபுர விளக்காய் சுடர் விட்டுப் பிரகாசிக்க, கஜா மிரண்டு போனார் என்று தான் சொல்ல வேண்டும்.
அவரை விட விஜய், மிக திறமையானவனாக இருந்தான். நேர்மையுடன், அயராத உழைப்புசேர, ‘கஜா இண்டஸ்ட்ரீஸ்’ வளர்ச்சிப் பலருக்கு பிரமிப்பை கொடுத்தது.
குறுக்கு வழியில் அவர் சேர்த்ததை விட, நூறு மடங்கு நேர் வழியில், நான்கே வருடங்களில் விஜய் சம்பாதித்தான்.
அவன் அசுர வளர்ச்சி, அவன் அறிவு, கஜாவையே உலுக்கி விட்டது. அவன் இல்லை என்றால், ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ் இல்லை’ என்ற நிலைமை உருவாகி இருந்தது.
தொழிலாளிகள் அவன் பக்கம்.
அரசு அதிகாரிகள் அவன் பக்கம்.
அவன் முன் நின்று பேச கூடத் தயங்கும் நிலைக்கு வந்து விட்டார் கஜா.
அதிகமாக யாரிடமும் பேசமாட்டான். ஆனால், அவனின் ஒரு கூர் பார்வை ஆயிரம் லேசர் கதிர் வீரியத்துடன், கூர் வாட்களை போல மனதைக் கிழித்து விடும்.
தங்குவதற்கும், உண்பதற்கும், ‘மன்னன் பட ரஜினி ஸ்டைலில்’ தனக்கு மட்டும் பணம் செலுத்தி விடுவான்.
அங்கு, ‘விஜயசாந்தி’ ராட்சசியாக இருந்தாலும் திருமாங்கல்யத்திற்கும், கட்டிய கணவனுக்கும் உரிய மரியாதையை கொடுத்தது. அதனால் மனைவிக்கும் சேர்த்து, ரஜினி பணம் கொடுத்தார்.
இங்கு இந்தச் சோனாவை, ‘மனைவி’ என்றால் திருமணம் ஆன பெண்களை அவமதிப்பது போலாகி விடும். உணவு கூட அவன் அறையில், மட்டுமே சாப்பிடுவான். அதுவும் மரகதம், கனகா பரிமாறினால் மட்டுமே உண்பான்.
காலை ஆறு மணிக்கு வெளியே சென்றான் என்றால், நள்ளிரவு பன்னிரண்டு முதல் ரெண்டு ஆகி விடும் அவன் திரும்ப.
இரவு உணவு அதிகமா வெளியே தான் இருக்கும். தொழில் துறை பார்ட்டி என்று அனைத்து இரவும், வெளியே தான் அவன் உணவு.
அந்த வேளையில் மரகதம், கனகாவை தொந்தரவு செய்யமாட்டான். ஆனால், அவன் வருகைக்கு மூன்று ஜீவன் தவம் இருக்கும் தினமும் -சேது, மரகதம், கனகா.
சொந்த மகனாகவே பாசம், அன்பு கட்டினார்கள் சேதுவும், கனகாவும். மரகததிற்கு அவன் அன்பு பேரன்.
நள்ளிரவு வேலை முடித்துக் களைத்து வந்தாலும், அந்த மூவரோடு, சற்று நேரம் பேசாமல் உறங்க செல்லமாட்டான். சில நாட்கள் மரகதம், கனகா மடியில் தலை வைத்துத் தூங்கியும் விடுவான்.
அவனுடன் பேச, ‘மழைக்கு ஏங்கும் சாதகப் பட்சிகள்’ போல, ‘மாடி வீட்டு, இல்லை… இல்லை பங்களா ஏழைகள்’ அவன் அன்புக்கு தினமும் ஏங்கிக் கிடந்தன.
சொந்த மகள், இவர்களை மனிதர்களாகக் கூட மதிக்காதப் போது, ‘எங்கிருந்தோ வந்தவன், மகனாகிப் போனது’ விசித்திரம் தான்.
சேது, ‘வீட்டோடு மாப்பிளை, அடிமை’ என்றால் அதில் உள்ள, உள் குத்துக்களை நன்றாக அனுபவித்தவர் ஆயிற்றே!…
அதுவும் கஜா போன்ற, ‘குள்ள நரி வீட்டு மாப்பிளை’ என்றால் சுலபமா என்ன!
தான் அனுபவித்த கேவலங்களை, தன் மருமகனாக வந்து, மகனாக மாறி இருந்த விஜய், படாமல் அரணாய் நின்று காத்தார் அந்தத் தந்தை.
மனம், வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டனர் அன்னையர் இருவரும்.
ஆனால், விஜய், சேது போல நாணலாய் வளைந்து கொடுப்பவன் இல்லை. அவன் வளைவது அவனுக்கு உரியவர்களிடம் மட்டுமே.
அவன் ஆழிப்பேரலை போன்றவன்.
எரிமலையின் சீற்றம், சூரியனின் கடுமை கொண்டவன் என்பதை சோனா, சொர்ணா, கஜாவிற்கு ஒரு வாரத்திலேயே உணர்த்தி விட்டான்.
அவனிடம் தெளிவு, உழைப்பு, நேர்மை இருந்தது.
மதுரா சொன்னது போல, எல்லா வகையிலும் முழுமையான ஆண்மகன் விஜய கருணாகரன்.
“அச்சமில்லை!… அச்சமில்லை !…
அச்சம் என்பதில்லையே!
உச்சிமீது வான் இடிந்து
வீழும் போதிலும்
அச்சமில்லை!… அச்சமில்லை !…
அச்சம் என்பதில்லையே!
இச்சகத்தில் உள்ளார் எல்லாம்
எதிர்த்து நின்றபோதிலும்
அச்சமில்லை!… அச்சமில்லை!….
அச்சம் என்பதில்லையே!….” என்று கர்ஜிப்பவன்.
அவனைக் கண்டு அஞ்ச ஆரம்பித்தது கஜா மட்டும் இல்லை, ஆசைப் பட்டு, சூழ்ச்சி செய்து மணந்த சோனாவின் நிலையும் அது தான்.
அவளிடம் இருந்த எதுவும் அவனைக் கவரவில்லை. பணத்தால், சூழ்ச்சியால் அவனைக் கணவனாய் ஆக்கிய, அவளால் அவனை நான்கு வருடங்களாக நெருங்க முடியவில்லை.
தவம் தொடரும்…






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!