22
மறுநாளே, மதுராவை மீண்டும், ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ்’ விட்டு, ஆயிரம் தடவை விஜய்யிடம், மன்னிப்பு கேட்டுச் சென்றவரின், ‘வெள்ளை உள்ளம்’ இன்று தன்னை நிறுத்தி இருக்கும் இடம்!
நடந்ததை மீண்டும் அசை போட்டவளிடமிருந்து பெரு மூச்சு எழுந்தது.
ஒரு பக்கம் பெற்றோரின் வாழ்வு, மறுபுறம் தன் மானம், உயிர் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் மிகப் பெரிய ஆப்பு, செக்மேட் வைத்து விட்டு இருந்தாள் அ (எ)ருமை சகோதரி.
‘இவளுக்கு விஜய் மீது கோபம், வன்மம் என்றால், அவனை பிடித்துக் கொள்ள வேண்டியது தானே, இந்த வேதாளம்!… இதுங்க ரெண்டுத்துக்கும் என்ன தான் அப்படி பிரச்சனையோ!…
அதற்கு நான் தான் பலியாடு போல் இருக்கு.
‘மரமூஞ்சி, ரோபோர்ட், சிரிக்கக் கூடத் தெரியாதப் பாறை!…. சிரிப்பு என்றால் என்ன என்று கேட்பான் போல இருக்கு.
மனுஷியா கூடப் பார்க்கமாட்டான். கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல் ஒரு லுக்.
வாயைத் திறந்து ஆபீஸ் விஷயத்தைத் தாண்டி, ‘சாப்பிடுகிறாயா, சாப்பிட்டாயா?’ என்று கூட , அவன் என்றுமே கேட்டது கிடையாது.
‘சுபா மட்டும், தன் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை என்றால், தன் கதி!…. பல நாள் சுபாவும், பாலாஜியும் வெளியே செல்ல வேண்டி வரும்போது கூட, நேரத்திற்க்கு ஹோட்டலில் தனக்குப் பிடித்த உணவை இன்று போல், வாங்கிக் கொடுக்காமல் சென்றது இல்லையே!…’ என்று யோசித்து கொண்டு இருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
‘வழக்கமாய் வரும் ஹோட்டல் உணவு தான் ஆட்டோ சபரி, இன்று வாங்கி கொடுத்தது. ஆனால், அதை வாங்கி கொடுத்தது சுபாவோ, பாலாஜியோ இல்லையே!…
எனக்குப் பிடித்த உணவு வகைகளை, இன்று வாங்கி கொடுத்தது விஜய் தானே!… அப்படியென்றால் இத்தனை நாள், அலுவலகத்தில் பியூன், ‘சுபா அம்மா, வாங்கிக் கொடுக்கச் சொன்னாங்க.’ என்று சொல்லிக் கொடுத்துச் சென்ற உணவு எல்லாம் விஜய், வாங்கிக் கொடுத்தது தானா?’ உண்மை மிகத் தெளிவாய் புரிய, நெஞ்சில் கை வைத்து அமர்ந்தாள் மதுரா.
‘ஹ்ம்ம்!… அவனுக்காவது துளியாவது தன் மேல் கருணை இருப்பதாவது. ஆபீஸ் வேலை ஒழுங்காய் நடக்க வேண்டும் இல்லையா, அதற்குத் தான் அந்த உபசரிப்பு எல்லாம்.
நீ, ‘வைரல் பீவர்’ வந்து கஷ்டப்பட்ட போது விஜய், சொல்லியதாகச் சொன்ன விஷயம் மறந்து விட்டதா என்ன!
‘மகாராணி, லீவு போட்டா மலை போல் குவிந்து கிடக்கும் வேலை எல்லாம், யார் பார்ப்பது என்று எரிந்து விழுந்தான்.’ என்று தானே சொன்னார்கள்.
‘பாவம் மா!… நீ’ என்று கூட ஆபீஸ்சில் வேலை செய்பவர்கள் சொன்னார்கள் தானே!
வைரல் பீவரால் ஹாஸ்பிடலில், ஒரு வாரம் கிடந்த போது கூட நலம் விசாரிக்காதவன் அவன். ஒட்டுமொத்த அலுவலகம் வந்து விசாரித்து விட்டு போனது.
‘ராங்கி ரங்கம்மா, சோனா’ கூட ஒரு கூடை ஆப்பிள், உடன் வந்தாளே!
‘இந்த ஆப்பிள் எல்லாம், நீ எங்கே சாப்பிட்டு இருக்க போறே!…’ என்று சொன்னாளே!
அதிலும், ஒரு கொட்டு வைக்கவில்லை என்றால், அவளுக்கு தூக்கம் வராதே!… அதற்காகவே கிளம்பி வந்திருக்கிறாள். பின் என்ன அவளுக்காவது பாசம், அன்பெல்லாம் சுரந்து விட போகிறதாக்கும்.
ஆனால், இந்த விஜய், அப்படிபட்டவன் இல்லையே!… யாருக்காவது சின்ன அடி என்றால் கூட, அவர்களோடு ஹாஸ்பிடலுக்கே சென்று விடுவான் விஜய். பத்து முறை கால் செய்து விசாரிப்பான்.
அவனா தன்னைப் பற்றி அப்படி சொன்னது!…. இன்னும் கூட விஜய் அப்படி எல்லாம் சொல்லி இருப்பான் என்பதையே நம்பத் தான் முடியவில்லை.’ என்று மூளை புலம்ப, மனமோ வேறு ஏதோ ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது.
மதுரா உடல் நலம் தேறி, அலுவலகம் வந்த நாள் அன்றே, விஜய் உடல் நலம் இல்லாதவனாய் இருந்தான். வற்புறுத்திப் பாலாஜித் தான் விஜய்யை, மருத்துவமனை அழைத்துச் சென்றது.
ஒரு வாரம் விஜய் அதன் பிறகு அலுவலகம் வரவேயில்லை.
‘என்ன?…’ என்று கேட்டதற்கு, ‘உடல் நலம் இல்லை.’ என்ற பதில் மட்டும் தான் கிடைத்தது. அதன் மேல் உரிமை எடுத்து விசாரிக்க மதுராவிற்கும் ஒரு மாதிரி இருந்தது.
அப்போது தான் சுபா, பாலாஜி வசிக்கும் போர்சனுக்கு சென்றது. பாலாஜி மிகவும் டென்ஷனாக இருந்தான்.
இவர்களிடம் பேச வந்த மதுரா, ‘அவர்கள் ஏதோ பர்சனல்லாக பேசுகிறார்கள் சற்று காத்திருப்போம்’ என்று வெளியே பால்கனியில் நின்று, தன் போனை நோண்டிக் கொண்டு இருந்தாள்.
மதுரா, வெளியே நிற்பதை கவனிக்காமல், கணவன் மனைவியின் உரையாடல் தொடர்ந்தது.
“விடுங்க பாலு!… அண்ணாவைப் பத்தித் தான் உங்களுக்கே தெரியுமே!…” என்று சுபா, கணவனைச் சமாதானம் செய்து கொண்டு இருந்தாள்.
‘அண்ணாவா!… சுபாக்குத் தான் அண்ணனே இல்லையே!… புதிதாய் எந்த அண்ணன், நமக்குத் தெரியாமல் வானத்திலிருந்து வந்து குதித்திருக்கிறான்?…’ என்ற நினைவோடு தான், அவர்கள் பேச்சின் மேல் மதுராவின் கவனம் திரும்பியது.
“சரியான லூசுடீ உங்க அண்ணன்!…. அவன் லூசாவது போதாது என்று எங்களையும் லூசாக்கிட்டு இருக்கான். இந்தக் குளிர் காலத்தில், பச்சைத் தண்ணீரில் குளித்து, ‘அங்கப்பிரதக்ஷணம் இவன் செய்யவில்லை’ என்று யார் அழுதது?… சரியாகச் சாப்பிடாமல் விரதம் வேறு.
இப்போ மிருதுளா, ஆல்வினோடு சேர்ந்து என்னைப் போட்டுக் கடிச்சி வைக்கறாங்க!
‘இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆகியிருந்தா, நேரா டிக்கெட் எடுத்திருப்பார்…. என்ன இவ்வளவு சீரியஸ்சாக இருக்கும் போது கொண்டு வந்து இருக்கிறீர்களே!…’ என்று எங்களைப் பிடிச்சிக் காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி எடுக்கிறார்.
ஹாஸ்பிடலிலிருந்து வந்தவன், ரெஸ்ட் எடுக்காம, உடனே கீழ் திருப்பதியிலிருந்து நடந்தே சென்று இருக்கிறான்.
கேட்டால், ‘அவளுக்கு உடல் நலம் தேறி விட்டால், நடந்தே வருவதாக வேண்டிக் கொண்டேன்!’ என்கிறான்.
இவனை எல்லாம்.” என்று பாலாஜி கோபப்ட்டுப் பேசியது, நினைவுக்கு வந்தது.
‘ஏதோ ஒரு அண்ணனைப் பற்றிப் பேசுகிறார்கள்’ என்று அந்தக் கணம் தான் நினைத்தது தவறு.
அந்த அண்ணன், ‘விஜய் தான்’ என்று மதுராவிற்கு புரிந்தது.
அப்போ, அவன் செய்த அங்கபிரதக்ஷணம், விரதம் எல்லாம் தனக்காகத் தான்.
‘நெஞ்சைப் போட்டு ஏதோ பிசைவது போன்ற உணர்வை’ மதுரவால் விளக்க முடியவில்லை.
‘ஏதோ தெரிந்திருக்க வேண்டிய ஒன்று…. தெரியாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருக்கிறது….
எதற்கு இந்த ரெட்டை வேடம்?…’
யோசிக்க, யோசிக்க மதுராவிற்கு, ‘தலை கிர்’ என்றது.
‘சரியான துர்வாச முனிவர்!…. இப்படி பட்ட பிராகன்ஸ்டைன், இயந்திர மனிதனோடு, ‘அப்பேர்’ ஒன்று தான் குறைச்சல். ஆள பார்த்து ஜோடி சேர்த்தா பாரு பைத்தியக்காரி.
உணர்ச்சியே இல்லாத ஒரு பார்வை!….
என்ன பார்வையோ அது!…
அந்த நாள் முழுவதும், இவள் தான் முழித்துக் கொண்டு, ‘என்னத் தவறு செய்து விட்டோம்!’ என்று தலையை பிய்த்துக் கொள்வாள்.
‘இல்லை அது உணர்ச்சி அற்ற பார்வை இல்லை…. சோனா போதை மருந்து எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்த போது, விஜய் பார்த்த அதே பார்வை!
கணம் கூடத் தன் முகத்தை விட்டு, நீங்க விரும்பாத பார்வை!
‘உயிரைக் கண்களில் தேக்கிக் கொண்டு அவன் பார்க்கும் பார்வை அது!’
மனம் சொல்ல மதுராவிற்கு, உலகமே சுற்றியது.
‘விட்டுடு…. நான் போகிறேன்.’ என்று சொன்னாலும் விடாமல், நாலு கோடி காரணத்தை உருவாக்கி, விஜய்யை விட்டுப் போக விடாமல் செய்பவளை என்ன தான் செய்வது!
அவனுக்கு மனைவியை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கத் தெரியாது.
மனைவியை அவள் இஷ்டம் போல ஆட விடுவானாம்.
அவ மன நிலை பாதிக்கப்பட்ட, ‘சைக்கோ’ மாதிரி இன்னொரு பொறுக்கியோடு சேர்ந்து பிளான் போட்டுக் கார்னெர் செய்வாளாம்.
இவர், ‘திரைக்கு வராதக் கதை’ போலே யாருக்கும் தெரியாமல், ‘damsel in distress’ இருக்கும் போது, எல்லா கதைகளிலும் வரும் ஹீரோ போலப் பின்னால் இருந்து காப்பாற்றுவாராம்!
எதுக்கு இப்படித் தலையைச் சுற்றி மூக்கை தொடணும்!… நேரே ரதிதேவியை, மாதருள் மாணிக்கத்தை அழைத்து,
‘அம்மா!… தாயே!…
தர்ம பத்தினி!…
ஐ லவ் ஒன்லி யூ மா!….
பொறாமை படாதே!…
நான் உன்னுடைய, ‘ஹோல் சேல் ப்ரொபேர்ட்டி!.’ என்று சொல்லித் தொலைக்க வேண்டியது தானே!…
நட், போல்ட் கழன்ற கேஸுங்க!.’ என்று விஜய்க்கு, மனதில் மண்டகப்படி நடத்திக் கொண்டு இருந்தாள் மதுரா.
அதிலும் ஒன்று இடித்தது.
விஜய் தான், ‘தாலியே கட்டவில்லை’ என்கிறாள் சோனா.
நான்கு வருடமாய், அவனை நெருங்க முடியாமல், சோனா இருக்கிறாள். என்னடா நடக்குது இங்கே!
யோசிக்க யோசிக்க, ஒன்றும் இல்லாத ஒன்று இல்லாத ஒன்று, மிகப் பூதாகாரமாய், விஸ்வரூபம் எடுத்து அவளை மிரட்ட ஆரம்பித்தது.
அங்கே, ‘யாருமே முகமூடி இல்லாமல், அவளிடம் பழகவில்லை’ என்ற உண்மை புரிய, ‘எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறார்கள்!’ என்று யோசித்து கொண்டே நேரம் போவது தெரியாமல் அந்தத் தோட்டத்தில் அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மதுரா.
தோட்டத்தில், பந்தலின் அடியில் அமர்ந்து, ஒரு வருடமாய் நடந்த நிகழ்ச்சிகளை அசைப் போட்டுக் கொண்டு இருந்தவளின் தோளின் மீது ஒரு ஆண் கரம் படிந்தது.
அதிர்ந்து போய்த் திரும்பி பார்த்தாள் மதுரா.
அதே சமயம், மதுராவிற்குச் சோனா கால் செய்து விட்டு, சுமனைத் தேடி சென்ற அறை மணி நேரம் கழித்து, ‘கஜா போர்ட்’ இல் இருந்த மரகதத்தின் அறைக்கு அடித்துப் பிடித்து ஓடி வந்தார் கனகா.
“அம்மா!…” என்றார் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.
“என்ன கனகா?” என்றார் மரகதம், தான் படித்துக் கொண்டு இருந்த ராமாயணத்தை மூடி வைத்தவாறு.
“அதுக எல்லாம் வெளியே போய்டுச்சுமா.” என்றார் கனகா, நிம்மதி பெருமூச்சோடு.
“சீக்கிரம் கதவை மூடு கனகா. உன் வீட்டுக்காரரும், விஜய்யும் எங்கே?” பேசியவாறே, அந்த அறையில் மேடை மேல் வைக்கப்பட்டு இருந்த, ஆள் உயர பளிங்குக் கிருஷ்ணர் சிலையை அதன் பீடத்திலிருந்து நகர்த்தினார் .
பீடத்தின் அடியில் சிறிய துவாரம் தோன்ற, அதனுள் கை விட்டுச், ‘சாம்சங் மொபைல்’ ஒன்றை வெளியே எடுத்தார்.
“அவரும் தம்பியும் இப்போ தான் தூங்கறாங்க. உங்க மாப்பிளை, கருணாவை நினைத்து நைட் புல்லா புலம்பிட்டே இருந்தார். கருணாவும் யார் யாருக்கோ போன் செய்து பேசிட்டே இருந்தான்மா. சிட் அவுட்ல தூங்காம, விடிய விடியக் கிட்டார் வாசிச்சுட்டு இருந்தான்.
நான் தான் போய்த் தூங்க சொன்னேன். தினமும் அவன் படும் வேதனையைக் கண் கொண்டுப் பார்க்க முடியலை அம்மா. ஏன் தான் இவனுக்குப் போய் இப்படி எல்லாம் நடக்குதோ!…
எப்போ தான் இவனுக்கு விடிவு காலம் பொறக்குமோ!….” என்று புலம்பியவர், பெருமூச்சை விட்டார்.
“விடிவு காலம் பொறந்தாலும், நம்ம பொறக்க வைச்சாலும் அவன் தான், ‘தியாகச் செம்மல் பட்டம் வாங்கியே தீருவேன்’ என்று அடம் பிடிக்கிறானே!
இவன், தன் நிலையில் இருந்தே பேசறான். மதுரா மனசுப் பற்றி, அவள் விருப்பம் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறான். நாமளும், எங்கு எல்லாமோ விசாரித்து விட்டோம்.
ஒரு சின்னக் க்ளூ கூடக் கிடைக்க மாட்டேங்குது. அப்படி ஏதாவது கிடைத்தாலும், மதுரா கிட்டே நாம பேசி விடலாம். கையில் சாட்சி, ஆதாரம் எதுவும் இல்லாம எப்படி பேச முடியும்?” என்றவர் அணைத்து வைத்து இருந்த மொபைலை உயிர்ப்பித்தார்.
மொபைல் ஆன் ஆன உடனே, அதில் இருந்த மூன்றில் ஒரு நம்பரை அழைத்தார். நான்காவது அழைப்பில் அழைப்பு ஏற்கப்பட்டது.
“என்ன மரகதம்!… என்ன பிரச்சனை?…. யார் கிளப்பியது?” என்றது எதிர்முனை மிகக் கம்பீரமாக.
அட!… இது நம்ம சிவகாமி பாட்டி!
இப்போ தான் புரிகிறது.
ஒன்றுமே இல்லாத சிவகாமி பாட்டி, ரஜினி படத்தில் வருவது போல ஒரே பாட்டில், ‘ஏழை சிவகாமி, கோடீஸ்வரி சிவகாமி’ ஆனாங்க என்று.
பின்னால் இருந்து உதவுவது, இந்த அளவுக்குச் சிவகாமி பாட்டியை, ஏற்றி விட்டது மரகதம் பாட்டி.
மரகதம் பாட்டி, ‘வாய் இல்லா பூச்சின்னு’ நினைத்தா, கஜாவின் கண்ணில், மறைமுகமாக விரலை விட்டு கொண்டு இருக்கிறார். சிவகாமி பாட்டிக்கு, இன்னொரு திருமணம் நடத்தி வைத்ததும் மரகதம் பாட்டி தான்.
‘கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும்’ என்று இல்லாமல், ‘சைலன்ட் கில்லர்.’ மாதிரி உடன் இருந்தே, கஜாவின் அரக்கச் சாம்ராஜ்ஜியத்தை எதிர்க்கும் ஒரு பெண் சிங்கத்தின் பின் நிற்கிறார்.
“பிரச்சனை என்றால் தான் உனக்கு நான் அழைக்கணுமா என்ன!… சும்மா பேச அழைத்திருக்கக் கூடாதா?” என்றார் மரகதம் புன்னகையுடன்.
“சும்மா பேச, நமக்கென்று நேரம் கிடைத்து இருக்கிறது!… போர்க் களத்தில் நிற்கிறோம். தினமும் ஏதாவது யுத்தம் நடந்து கொண்டு தானே இருக்கிறது!…
சொல்லுமா, இந்தத் தடவை யார் யாரிடம் மாட்டி இருப்பது?” என்றார் சிவகாமி.
“மதுராக்ஷி!… மாப்பிளை சேதுவின் தம்பி, ‘சங்கரன்’ தெரியும் இல்லையா! ஹ்ம்ம்!…. ஆடிட்டராக குன்னூர்ல இருக்கார்ல அவரின் மகள், சோனாவிடம்…” என்று முன் தினம் இரவு, சுமனோடு சேர்ந்து சோனா நடத்தியக் கொடூரத்தை சொன்னார்.
“அந்தப் படுபாவி, சுமனை வேறு கூட்டுச் சேர்த்து இருக்கா… அவனும் மதுராவிற்குக் குறி வைத்து இருக்கிறான். மாசிலாமணி முகத்திற்காகப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
கருணா தக்கச் சமயத்திற்கு சென்றதால், எந்த விபரீதமும் நடக்காமல் தடுக்க முடிந்தது. ஒண்ணு கடக்க ஒன்று நடந்து போச்சுன்னா… நினைக்கவே பதறது.” என்றார் மரகதம் வேதனையுடன்.
“ஹ்ம்ம்… மதுராக்ஷி!… மதுரா அம்மா பவானி, என் உறவு தானே!… தெரியாமல் இருக்குமா என்ன!… கண்ணுக்கு லட்சணமா, துலக்கி வைச்ச குத்து விளக்கு கணக்கா அம்சமா இருப்பாளே!…
வேலையிலும் படுச் சுட்டி என்று கேள்விப் பட்டு இருக்கேன்.
ஏற்கனவே உங்கக் கிட்டே, கருணாவிடம் அவளைப் பி.ஏவா சேர்த்தப் போதே சொன்னேன் தானே!… கருணாவின் காலேஜ் வாழ்வு பற்றி, கடந்தக் காலம் பற்றி, சோனாவிற்கு ஏதோ க்ளூ கிடைத்து இருக்கு.
அதை வைத்து மதுராவை இங்கே கொண்டு வந்து இருக்கா. மதுரா இங்கே வேலை செய்வது ரெண்டு பேருக்குமே நல்லது இல்லை என்று.
ஒன்று கார்த்திக்கோடு திருமணத்தை நடத்தி இருக்க வேண்டும், இல்லை விஜய் மனதையாவது மாற்றி இருக்க வேண்டும். ஒரு வருடமாய் எதையும் செய்யாமல், பின்னால் இருந்து காப்பது யாருக்கு தான் பயன்!
முலையில், கிள்ளி இருக்க வேண்டிய விஷயத்தை, ஆலமரமாக்கி விட்டு இருக்கிறாயே!… கருணாவைப் புத்திசாலி என்று நினைத்தேனே!… அவன் கூடவா, இப்படிக் கோட்டை விட்டு நிற்கிறான்!” என்றார் சிவகாமி கடுப்பாக.
“கருணா மட்டும் என்ன செய்து விட முடியும்!… சங்கரனை கொண்டு, மதுராவை ரெண்டு முறை வேலைக்கு வரவழைச்சு இருக்கு, இந்தப் பேய். நாங்க மதுராவிற்காக ஒரு விரலை அசைத்தால் கூட, அது நூறு மடங்கு மதுராவிற்கே திரும்புது.
ஆறு மாசம் முன்பு, ஆஃபிஸில் சோனா நடத்தியக் கூத்தை வைத்து மதுராவை வேலையை விட்டு நிறுத்தினான் கருணா. என்ன ஆச்சு!… போன ஒரே நாளில், திரும்ப வர வழைச்சுட்டா. சங்கரனும், பவானியும் கோர்ட் போகாதக் குறை. ஆறு மாசம் ஆகியும், ரெண்டு பேருக்கும் பேச்சுவார்த்தையே கிடையாது. நல்லா இருக்குற குடும்பத்துல கூத்தடிக்கிறதுக்கு அவளுக்கு சொல்லி கொடுக்கணும்?
இது உனக்கே தெரியும் தானே!… சோனாவிடம், மதுராவிற்குப் மாப்பிளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைச்சு இருக்கும் சங்கரனின் மூளையை மியூசியத்தில் தான் வைக்க வேண்டும்.
அந்தக் கார்த்திக்கும், லூசு மாதிரி வேலை செஞ்சு வைச்சுட்டு இருக்கான்.
அதுதான் ஜில்லா கேடி தெரியும்தானே!… இல்லாதக் குழந்தையே, கலைஞ்சுப் போச்சுன்னு பொய் சொல்லி, சங்கரன் குடும்பத்தையே நாசமாக்கி வச்சு இருக்கு. சோனா பத்திப் பேச்சு எடுத்தாலே, அந்த மனுஷன், சங்கரன் நெஞ்சை நெஞ்சை பிடிச்சுக்கறார்.
ஒண்ணுக்கடக்க ஒண்ணு ஆகிப் போச்சுன்னா என்ன செய்வது என்று புரியாமல்’ திகைச்சி போய் இருக்கோம்.
சேது கூட, இந்த அளவு சோனாவால் நெஞ்சை பிடித்தது இல்லை. அந்த மனுசனிடம், பேசவே பயமா இருக்கு. இன்று காலைத் தான் சுபா, மதுராவிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கா…. கொஞ்சம் அவளும் சூதனமா நடந்துப்பா இல்லை.” என்றார் மரகதம்.
“நாலு கோடி எல்லாம் பெரிய விஷயமே இல்லை. நாளைக் காலை, சோனாவின் முகத்தில் அந்தப் பணத்தை வீசி எறிந்து, மதுராவை நாங்கக் கூட்டிப் போறோம். கருணாவோ இல்லை நீங்களோ இன்வால்வ் ஆனா தானே பிரச்சனை!… சோனாவால் எங்களை என்ன செய்து விட முடியும்!
‘நாங்க இறங்கி இருக்கிறோம்’ என்று தெரிந்தாலே, சோனா பல் பிடுங்கின பாம்பு. இதற்கு எல்லாம் கவலைப் பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே மாரா. இத்தனை பேர், எதுக்கு இருக்கோம். என் கிட்டே சொல்லிட்டேல, நான் பார்த்துகிறேன்.
நீ விஜய் மனதை மாற்றும் வழியைப் பாரு. மதுரா என் பேத்தி. என் பொறுப்பு. வச்சிடறேன்.” என்றவர் தொடர்பைத் துண்டித்தார்.
‘சிவகாமி பாட்டி குடும்பம்’ மதுரா மீட்பு குழு ரெண்டு.
சிவகாமியிடம், மதுராவின் பொறுப்புச் சென்று விட, மன நிம்மதி அடைந்த மரகதமோ, பொறுப்பை ஏற்றுக் கொண்ட மரகதமோ அறியவில்லை, மதுராவை எதிர் காலத்தின் பொறுப்பை இன்னொருவன் ஏற்று கொள்ள போகிறான் அதுவும் அன்றே!…
அதுவும் மின்னல் வேகத்தில் என்பதை.
விஜய், மதுராவிற்காக இதுவரை கெட்டவர்களை எதிர்த்து நின்றான். ஆனால், ‘இனி யுத்தம் ஒரு நல்லவனோடு’ என்பதையும், இருவரும் வெவ்வேறு திசையில் இருந்தாலும், இருவரும் போராடுவது மதுராவின் பாதுகாப்பிற்காக என்பதையும் யாரும் அறியவில்லை.
தவம் தொடரும்…





