25
‘விஜய், சோனா, சுமன் வாழ்வில் தான் வந்தது எப்படி?…’ என்று அதே யோசனையில் இருந்த மதுரா, தன் தோளின் மீது ஆண் கரம் விழவும் திகைத்துப் போய்த் துள்ளிக் குதிக்காதக் குறையாய் திரும்பினாள்.
அங்கு ரௌத்திரத்துடன் நின்று இருந்தான் மதுராவின் அண்ணன் ரகு.
“ரகு!… நீ எப்படிடா இங்கே?” என்றவளுக்கு பதில் கூறாத ரகு, அவளை இழுத்து வைத்துக், கன்னம் கண்ணமாய் அறைந்து தள்ளினான்.
“உன்னை எல்லாம் வெட்டிப் பொலி போடணும்னுடீ!… இத்தனை பேர் சொன்னோமே!…. ‘வேண்டாம், வேண்டாம்’ என்று… பெரிய இவளாட்டம் கிளம்பி வந்துட்டே!
நேத்து, அந்தச் சுமன் கிட்டே மாட்டி ஒண்ணுக் கிடக்க ஒன்று நடந்து இருந்தால், ‘குடும்பமே தற்கொலைத் தான்’ செய்து கொண்டு இருக்க வேண்டும்.
பைத்தியக்காரி!… பெருசா பாசம் வைக்கறாளாம். அந்தச் சனியன், புத்தி தான் தெரியுது இல்லை!
நம்ம அப்பா, அம்மா வாழ்க்கையில் விளையாடியப் போதேத் தெரியலை, அது எவ்வளவு கேவலமான வேலை எல்லாம் செய்யும் என்று!….
என் முதலாளி ருத்ரா, விடியற்காலை நாலு மணிக்குப் போன் செய்து, சோனா செய்து வைத்த வேலையைச் சொல்றார்.
இதயமே நின்னு போச்சுடீ பாவி!… மனசுக்குள்ள பெரிய இவன்னு நினைப்பு….
இங்கே வந்து சேரும் வரை, உன்னை முழுசா பார்க்கும் வரை, என் உயிர் என்னிடம் இல்லை. போ போய்க் கிளம்பு. நீ வேலை பார்த்துக் கிழித்தது போதும்…. ஊருக்கு முதலில் கிளம்பு.
அடுத்த முகுர்த்தத்தில், உனக்கும் கார்திக்கும் திருமணம். அவன் ஏதோ டான்ஸ் ஆடிட்டானாம்… ஏதோ பிரிண்ட்லியாய் டான்ஸ் ஆடியதைப் பெருசாக்கிட்டு… இது எல்லாம் பெரிய விஷயம்ன்னு.
கிளம்புடீ… கிளம்புன்னு சொல்றேன். கையைக் கட்டிட்டுப் போஸ் கொடுக்கறே!… வாங்கின அறை பத்தலியா!… கிளம்புடீ எருமை மாடே!” என்றான் ரகு கோபத்துடன்.
ரகு கோபமாகக் கத்தி விட்டு நிற்க, “பிரதர்!… பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சுடீயா?… ரிலாக்ஸ் ஆகிக்கோ. இப்போ நான் பேசலாமா? வாயை, மூடிட்டு கேக்கறீயா?” என்றவளின் கை, ரகுக் கன்னத்தைப் பதம் பார்த்தது.
கொடுத்த அடியின் வேகம் தாங்க முடியாதவனாய், தானாக ரெண்டு அடி பின்னெடுத்து வைத்தான் ரகு.
“சாரி அண்ணா!… இது நீ என்னைத் திட்டியதற்காகவோ, என்னை அடித்ததற்காகவோ நான் கை ஓங்கவில்லை…. என்னை அடிக்கவோ, திட்டவோ, உனக்கு இல்லாத உரிமையா சொல்லு.
‘அண்ணன் என்பவன் இன்னொரு தந்தை’ என்பது எனக்கு நல்லாவே தெரியும். ஆனால், தவறு செய்வது சொந்த அண்ணனாய் இருந்தாலும், அப்படியே விட முடியாதில்லை.
இன்னும் கற்கால மனிதன் மெண்டாலிட்டியோடு இருக்கே பாரு, அது மாறணும் என்று தான்…. உன்னைப் பார்த்து, உன்னைப் போலவே நாலு லூசுங்க கிளம்பக் கூடாது இல்லையா!… அதற்குத் தான் இந்த ஸ்லாப்…. அது என்னவென்று பின்னாடி சொல்றேன்.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்.
என்னை இத்தனை அடி அடிச்சியே!… இந்த அடியை, நம்ம அப்பா சங்கரனுக்கோ, அம்மா பவானிக்கோ, இல்லை உன் உயிர் நட்பு கார்த்திக்குக்கோ, இல்லை அந்தச் சோனா, சுமன் பிசாசுகோ, கொடுக்க உன்னால் முடியுமா?
அந்தத் தில் உனக்கு இருக்கா பிரதர்?….
என்ன, அப்படி பேய் அறைந்தது போல லுக் விடறே!… என்ன, இவங்க யார் மேலயும் கை வைக்க முடியலை, முடியாது…. அப்படி தானே!
பாசப் பயிரை…, மயி… ரை வளர்க்கறேன்னு, கிளம்பியது நம்ம அப்பா!
சோனா, ‘இல்லாதக் குழந்தைச் செத்து போச்சுன்னு ட்ராமா செய்த போது’ மறுபடியும் இட்டு வந்து இவளிடம் விட்டது அப்பா!
அவ தான் ட்ராமா செய்யறான்னு தெரிஞ்ச உடன், என்னைக் கூட்டிட்டு, அவங்க அப்பா வீட்டுக்குக் கிளம்பி இருக்கணும் நம்ம அம்மா!
‘புருஷன் உயிர் முக்கியம், இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கை முக்கியம்’ என்று புத்தத் தத்துவம் சொல்லத் தெரிந்த அம்மாவிற்கு, என் வாழ்க்கை கண்ணுக்குத் தெரியலை. அவங்க பாட்டுக்கு ரூமில் தர்ணா நடத்தறாங்க.
ஒரு வார்த்தை எனக்காகப் பேசலை. ‘என் பெண்ணை, அந்தச் சோனாக் கிட்டக் கூட்டிட்டுப் போனீங்கன்னா உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் விஷ பாட்டில் எடுக்கத் தெரியும். தூக்குக் கயிறுல தொங்கத் தெரியும்ன்னு’ ஒத்த வார்த்தை சொன்னாங்களா?
‘எமோஷனல் பிளாக்மெயில்!’ சங்கரனுக்கு மட்டும் பட்டா போட்டு எழுதி வச்சிருக்கா என்ன?
அந்த சோனா தான், அத்தனை வருஷ இவங்க இல்லற வாழ்க்கையில கும்மி அடிச்சான்னு ரோசம் வந்து கதவை அடைத்துக் கொள்ளத் தெரிந்த அம்மாவிற்கு, மகளின் மானம், உயிர் அங்கு பணயமாக இருக்கிறது என்பது ஏன் நினைவுக்கு வரவில்லை?
அப்பா, காரில் கூட்டிட்டு கிளம்பும் வரைக் கூட, ‘அம்மா ஏதாவது வந்து சொல்வார்கள்’ என்று எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா!
ஆனா, அவங்களுக்கு அவங்க இல்லற வாழ்வு தான் முக்கியமாக போய்விட்டது.
சரி, இது எல்லாம் நடக்கும் போது, இவ்வளவு இப்போ பொங்கரியே, நீயும் பிடிச்சு வைத்தப் புள்ளையார் மாதிரி, அங்கேத் தானே நின்னே!
ஒரு வார்த்தை ரெண்டு பேரிடமும் எனக்காகப் பேச, உன் வாய் அப்போ ஏன் திறக்கலை?… அப்பாவோட காரில் நான் ஏறும்போது கூடச் கற்சிலையாக நின்று கொண்டு இருந்தாய் தானே!
இப்போ, ‘நான் அண்ணன்!’ என்று பொங்கும் நீ, அப்பொழுதும் எனக்கு அண்ணனாகத் தானேடா இருந்தே!….
‘பிடிச்சி வைத்த பிள்ளையார்’, மாதிரி அமைதியா தானேடா நின்றே!
சரி அதை விடு…. சின்ன வயது முதல் கார்திக்குக்கு நான், எனக்கு அவன் என்று பேசினார்களா இல்லையா!…
பிரென்ட்லி!…
அப்போ எங்க ஆபீஸ்ல பார்ட்டி நடக்கும்…. நானும் பிரின்ட்லியா ட்ரின்க் பண்ணறேன், பிரிட்ன்லியா எவன் கூடாவது ஆடுறேன், பிரிண்ட்லியாக் கட்டி பிடித்து முத்தம் தரச் சொல்றேன்!…
இவ்வளவு ஏன், எனக்கும், விஜய் சாருக்கும், ‘இல்லீகல் அபேர்’ என்று சோனா சொல்லிட்டு இருக்கா இல்ல… அதுக்காகவாது ஒரு நாள், அவருடன் ராத்திரி… ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்துட்டு…
என்ன பிரதர் முகம் மாறுது?…. நீ தானே சொன்னே, ‘கார்த்திக் செய்தது பிரின்ட்லி!’ என்று… போட்டோ எடுத்துக் காண்பிக்கிறேன். அதை ஏற்று கொள்ளும் பெரிய மனசு, உனக்கும் அவனுக்கும் இருக்குமா?…. முடியாது இல்லை!
உங்க வீட்டுப் பொண்ணுங்க, தலை முதல் கால் வரை மூடிட்டு இருக்கணும். நீங்க, எவக் கூட வேண்டும்னாலும் ஆடிட்டு வருவீங்க. நான் அதை, ‘பிரிண்ட்லி’ என்று ஏத்துக்கணும்.
‘நாளாயினி’ மாதிரி அவனைக் கூடையில் சுமந்து, எவ வீட்டுக்காவது போனாத் தான் நான் நல்லவ, உத்தமி அப்படி தானே!…. அப்படி ஏற்று கொண்டால் தான், ‘குடும்பக் குத்து விளக்கு’ ஆஸ் பெர் யுவர் லாஜிக்?
எந்த ஊர் நியாயம் பிரதர் இது?….
எனக்கு வரவன் கோடீஸ்வரான இருக்கணும் என்று நான் கேட்கலை. பாரதியார் சொன்ன, ‘கற்பு என்பதை ஆண், பெண் இருவருக்கும் சமமாய் வைப்போம்’ என்று இருப்பவனாகக் கேட்கிறேன். அது தப்பு என்பாயா?
சரி அதைக் கூட விடு… அந்தக் கார்த்திக், ‘எனக்குப் பிடிக்காது என்று தெரிந்தே’ அதை ஏன் செய்தான் என்று எனக்குத் தெரியும். அவனைப் பற்றி, உனக்குத் தான் தெரியாமல், அவனுக்குச் சொம்பு தூக்கிட்டு, முழுகாத ஷிப்ன்னு வந்து நிக்கறே!….
எதையுமே வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு உடைத்து பேசணும்… அது அந்த லூசுக்கு சுத்தமாய் தெரியாது. அதனால் தான் இந்த அனர்த்தமே!….
அப்புறம் என்ன, ‘சுமன் என்னை ஏதாவது செய்து இருந்தால், குடும்பத்தோடுத் தற்கொலை’ செய்துக்கணுமா!…
எந்த மயி…க்கு நான் தற்கொலை செய்துக்கணும்!…. இந்த வார்த்தை சொன்னே பாரு…. இதுக்குத் தாண்டா உன்னை அடிச்சது.
ஒரு பெண்ணிடம் வன்முறை செய்பவன் உண்மையான ஆண் இல்லை.
வன்முறையைக் கையாண்டு தொடுபவன் மட்டும் அல்ல, ‘காமத்திற்கு காதல் என்று முகமூடி அணிவித்து நம்பும் பெண்ணின் நம்பிக்கையை உடைத்து’, அவளைப் படுக்கைக்கு மட்டும் என்று முடிவு செய்பவன் எல்லாம் மனித ஜென்மமே இல்லை.
‘கற்பு’ என்பது உடல் சம்பந்தபட்டது இல்லை பிரதர். அது மனது சம்பந்தப்பட்டது. சாக்கடையில் இருக்கும் பன்றி, நம் மேல் இடித்து விட்டால், அதற்காக நம்மையே எரித்துக் கொள்ளவா முடியும்?
என்னை மீறி, அவனால் எதுவும் செய்து இருக்க முடியாது. அப்படியே நடந்து இருந்தாலும், உடலில் ஏற்பட்ட காயத்தை, டாக்டர் கிட்டே போனா சரி செய்து கொள்ள முடியும்.
அவன் ஈன செயல்களுக்கு, ‘நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்’ என்று நீ சொல்றே?…
எத்தனையோ பெண்களைச் சதை வெறிக்காக, நாசப்படுத்திய அந்த நாய், xxxx… அது மிதப்பா, இன்னும் எவ கிடைப்பான்னு நெஞ்சை நிமிர்த்திட்டு அலைஞ்சிட்டு இருக்கு.
ஆனால், தப்பே செய்யாத நான், அவன் என்னைச் சப்போஸ் தொட்டு இருந்தால், தூக்குக் கயிற்றையோ, விஷ பாட்டிலையோ, கடலை நாடி எதுக்கு போகணும் என்று சொல்றே?
அது என்ன ஒருத்தன் தொட்டால் கெட்டு போறதுன்னு முத்திரை குத்தறீங்க ? கெட்டு போக ஒரு பெண்ணின் கற்பு என்பது என்ன பாலா?… அது வெறும் சதை காயம் மட்டும் தான்.
நாய் நக்குறதுனால, சிவலிங்கம் என்னைக்குமே செக்காகி விடாது.
கோபுரக் கலசமும், ஒரு பெண்ணின் பெண்மையும், கற்பும், மானமும் காக்கையெச்சில் படுவதால் என்றுமே கலங்கமாகி விடாது.
ஒரு அண்ணனாய், ‘அவன் தலையை வெட்டி இருப்பேன்!’ என்று சொல்லி இருந்தால், கூடச் சந்தோசபட்டு இருப்பேன். அதை விட்டுக், ‘குடும்பத்தோடுத் தற்கொலை’ செய்யணுமாம்.
புத்தியை என்ன அடகு வைச்சு இருக்கியா!
என் கேரக்டர் பற்றி உனக்கே தெரியும். ‘ராணி பத்மாவதி’ படம் பார்க்கும் போதே, உன்னிடம் என்ன சொன்னேன்?….
ராணியுடன் சேர்ந்து, அந்த அறுபதினாயிரம் லேடீஸ் வாள், வில், அம்புக் கொண்டு, கில்ஜியை எதிர்த்துப் போராடி உயிர் விட்டு இருக்கணும் என்று சொன்னேனா இல்லையா!
‘ஒரு பெண்ணின் உயிர் போகும் முன்’, அவளின் அந்த நிலைமைக்கு யார் காரணமோ, அவனின் உயிர் முதலில் போய் இருக்கணும்.
தொடைக்கு நடுவில் மட்டும் யோசிக்கும் சுமனைப் போன்று ஈனப்பிறவிகள் ஓவராக ஆட்டம் போடக்கூடாது என்று தான், அந்த இடத்தையே அவ்வளவு வலிமைக்குன்றியதாக இறைவன் படைத்திருக்கிறான்.
கையில் நகம், வாயில் பல் எல்லாம் ஆண்டவன் எதுக்கு கொடுத்து இருக்கான்?… சும்மா கண்டதை எடுத்து வாயில் போட்டு அரைக்கிறதற்காகவும், நகத்தில், ‘நெய்ல் பாலிஷ்’ வச்சிட்டு அழகு பார்க்கிறதற்காகவும், ஊர் வம்பு பேசிட்டு சுத்துறதுக்காகவும் என்பது தான் உன் எண்ணமா?
வாயில் இருக்கும் முப்பத்திரெண்டு பற்கள், கையில் உள்ள பத்து விரல்கள் அதில் உள்ள நகங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெண்ணிற்கும், கடவுள் கொடுத்து இருக்கும் ஆயுதம் தான்டா….
இந்த மாதிரி அரக்கனை வதம், சூரசம்ஹாரம் செய்ய இருக்கும் ஆயுதங்கள்.
தன்னைக், ‘கெடுக்க வருபவனை கொன்றால், அது கொலையே இல்லை’ என்று இந்திய சட்டமே சொல்லுது.
‘ justifiable homocide’ என்று இதைச் சொல்வார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம், செச்டின் 96, 97, 103, 104, 106 இந்த உரிமையை, இந்தியாவில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் கொடுத்து இருக்கு. அப்படி இருக்கும் போது எதுக்கு என்னைச் சாகச் சொல்றே?
தங்கள் பெண்களுக்கு ஒன்று என்றால் கத்தி, வேல்கம்பு, வீச்சரிவா என்று களம் இறங்கும் லட்சக்கணக்கான தந்தை, அண்ணன், தம்பி இங்கு உண்டு.
அதைச் செய்து இருந்தால், நீ என் அண்ணன்.
இந்நேரம், ‘என் தங்கையையா தொட நினைத்தே!…’ என்று அந்தச் சுமன் தலை, இல்லை கையோடு, இங்கே என் முன்னே நின்று இருந்தாய் என்றால், நீ என் அண்ணன்.
எவனோ, எவளோ செய்தப் பைத்தியக்காரத்தனத்திற்கு, என்னை அறைந்து நிற்கும், நீயா என் அண்ணன்!… ச்சே!…. ச்சே!…” என்று பெண் சிங்கமாய் கர்ஜித்த மதுராவைக் காண, ஒரு கணம் தீமைகளை அழிக்கப் போர்க்கோலம் பூண்டு நிற்கும், ‘மகிஷாசூரமர்த்தினி தேவியாக, காளிதேவியாகத்’ தான் தெரிந்தாள் அங்கு இருந்தவர்கள் கண்களுக்கு.
தவம் தொடரும்…





