27
“ஓகே… ஓகே… சாரி டா… லூசு மாதிரி பீஹேவ் பண்ணிட்டேன் இல்லை! சாரி… ரொம்ப சாரி…” என்றான் கார்த்திக்.
“சரி, சரி போனா போகுதுன்னு விடறேன்… பொழச்சி போ… இன்னும் வச்சு, செய்யலாம்னு தான் நினைச்சேன். மணமேடை வரை கொண்டு போலாம்னு நெனச்சேன்.
விளக்கெண்ணெய் குடிச்சா மாதிரி, முகத்தை வைத்துச் சுத்திட்டு இருந்தியா பார்க்கவே சகிக்கலை.
அதான், உண்மையைச் சொல்லிட்டேன்.
ரகு, எப்படியோ அது தான் நீயும். அவன் கிட்டே, ஷேர் செய்ததை விட, உன்னிடம் தானேடா நான் எல்லாத்தையும் ஷேர் செய்வேன்!… உன் மனசு, எனக்குத் தெரியாதா பைத்தியக்காரா?….” என்றாள் மதுரா, புன்னகையுடன்.
“அடி ஆத்தி!… பசு மாதிரி அமைதியா இருந்துட்டு, புலிப் போல பாயாரே!… ஆனா, சான்ஸ்சே இல்லடீ… வாயைத் திறந்து, எதையும் பேசறது கிடையாது. அமைதியா இருந்துட்டு, எல்லாத்தையும் நோட் செய்ய வேண்டியது. அதன் பின் ஆடினா, ருத்ரதாண்டவம் தான்.” என்றான் கார்த்திக், ஆற்றாமையோடு.
“என்ன பிரதர்!… வஞ்சப்புகழ்ச்சி அணியா?… ஆப்பு பெருசா வச்சுடுவேன். சரி போனா போகுது, ‘இந்த மூஞ்சியையும், விழுந்து விழுந்து ஒருத்தி லவ் செய்யறாளே!…’ என்று விடறேன்…
மவனே!… ஒழுங்கா நடந்துக்கோ. நாத்தனார் முடிச்சி, நான் தான் போடணும்.” என்றாள் மதுரா.
“என்னடி, உளறல் மறுபடியும்!… அது யார், ‘புது கேரக்டர் என்னை லவ்ஸ் விடறது’. அதுவும் எனக்கே தெரியாமல்.” என்றான் திகைப்புடன்.
“அந்தக் கதையைப் பிறகு சொல்றேன்… முதலில், இந்த ஓவியங்களைப் பாரு.” என்றவள் தன் லேப்டாப்பில் இருந்த சில ஓவியங்களைக் கார்திக்குக்கு காட்டினாள் .
அதில் இருந்தது அவன் தான்.
திருமணக் கோலத்தில், பார்க்கில், பீச்சில், குடும்பத்தோடு, இன்னும் வருங்கால மகன், மகளோடு என்று அனைத்து ஓவியங்களிலும் இருந்தது அவன் தான்.
நிழல் முகத்தின் பாவம் , அதில் தெரிந்தக் காதல், நிஜத்தை உலுக்கி விட்டது.
“என்னடீ… இது?…” என்றான் கண்களை அகற்றாமல்.
கார்த்திக், தன்னை அப்படியே கண்ணாடியில் பார்ப்பது போன்று, அத்தனை தத்ரூபம் அந்த ஓவியங்களில்.
கார்த்திக்குக்கு பேச வாயே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டுமோ!
“செமையா இருக்குல்ல… முதலில் பார்க்கும் போது, நான் கூடத் தாண்டா ஷாக் ஆனேன். முகத்தில் உள்ள expression சான்ஸ்சே இல்லை. Marvelous.
இந்த அளவுக்கு, ஒருத்தி மனதில் பதிஞ்சு இருக்கே கார்த்திக்.” என்றாள் மதுரா, பெருமையுடன்.
“யாருடீ… யார்!…” என்றான் கார்த்திக், பரிதவிப்புடன் .
“நாலு வருஷத்திற்கு முன், உன் நண்பர்களுடன் ஊட்டி நிலச்சரிவு ரெஸ்கியூ கேம்ப் போனே இல்லை!… அங்கே, நீ காப்பாற்றியப் பெண்.
வழித் தவறி, சென்று விட்ட அவளை கண்டுபிடித்து, காப்பாற்றி, நைட் புல்லா அவளுக்கு துணையாக இருந்தாய். மறந்து போச்சா?….” என்றாள் மதுரா .
“ஏய்!… சத்தியமா ஞாபகத்தில் இல்லடீ…. நீ தானே சொல்லி இருக்கே!… ‘உதவின்னு செஞ்சுட்டு, அமைதியா போயிட்டே இருக்கனும்… செய்யும் உதவி நாம் தான் செய்தோம் என்று சொல்லக்கூடாது என்று…’
உன் அளவுக்கு இல்லை என்றாலும், நீ எல்லாம் பத்தாவது படிக்கும் போதே… ஏன் அதற்கு முன்னரே, உதவுவதை ஆரம்பித்து விட்டே!…
உன்னை பின்பற்றி, நானும் இது போல செய்துட்டு வரேன். நூற்றுக்கணக்கானவர்களுக்கு பெயர் கூடக் கேட்டுக் கொள்ளாமல் உதவி செய்திருக்கேன். இதுல யாருன்னு… தெரிலடீ…” என்றான் கார்த்திக், நெற்றியைத் தேய்த்தவாறு .
கார்த்திக் கூறிய உதவிகள், மனதில் வலம் வர, ஒரு கணம், ரத்த வெள்ளத்தில், இருந்த ஒரு முகம், கண் முன்னேத் தோன்ற, மதுராவிற்கு பயத்தில் உடல் சிலிர்த்தது.
“உங்களுக்கு ஒன்றும் இல்லைங்க… நான் இருக்கேன்… இதோ ஹாஸ்பிடல் வந்துடுச்சுங்க… நான் இருக்கேன்…. பயப்படாதீங்க சார்!…. உங்களுக்கு ஒன்றும் இல்லை….” என்ற அவள் குரல், மதுரா மடியில் இருந்த அந்த முகம், அந்த முகத்தில், ‘கடவுளைக் கண்டு விட்ட பக்தனின் முகபாவம்!’ நினைவுக்கு வர, மதுராவிற்கு மூச்சடைத்தது.
அங்கிருந்த பாட்டில் தண்ணீரைக் குடித்து, தன் பதட்டத்தைத் தனித்து கொண்டாள்.
கார்த்திக் கவனம், கையிலிருந்த தன் ஓவியம் மேல் நிலைத்திருக்க, மதுராவின் முக வெளுப்பை, திணறலை கவனிக்கவில்லை.
அந்த மொட்டை மாடியில் இருந்தது, நிலா வெளிச்சம் மட்டுமே என்பதால், மதுராவின் முக மாறுதல்களைக் கார்த்திக் கவனிக்கத் தவறியிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏதோ தெரிய வேண்டிய ஒன்று, பிடிபடாமல் விளையாட்டு காட்டுவதாய் மதுராவிற்குத் தோன்ற, அதைப் பற்றி யோசிக்கும் சமயம் அது அல்ல என்பது புரிந்து விட, கார்த்திக் மேல் தன் கவனத்தைத் திருப்பினாள்.
“என்ன சார், ஏதோ புராணக் கதைகளில் சொல்வார்களே!… ஏதோ ஓவியத்தைப் பார்த்தே, மனதை பறிகொடுத்தக் இளவரசின்னு…. என்ன அது போல், உங்களுக்கும் லவ்ஸ் பொத்துக்கிச்சா என்ன கார்த்திக் சார்?” என்றாள் மதுரா, கார்த்திக் முகத்தில் வந்து போய்க் கொண்டிருந்தப் பாவங்களைப் பார்த்து.
“ச்சே!… ச்சே!…. லவ் அதெல்லாம் இல்லை… இதென்ன, இன்ஸ்டன்ட் காபி மாதிரி, இன்ஸ்டன்ட்டாய் காதல் வருமா என்ன!…
இவ்வளவு அழகாய் வரைந்து இருக்காங்க…. செம்ம டாலேண்ட். அதான் ரசிச்சுட்டு இருக்கேன்…” என்று வாய்க்கு வந்ததை அடித்து விட்டான் கார்த்திக்.
“உனக்கு லவ்ஸ் வந்திருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியாது. அந்தப் பெண்ணிற்கு, உன் மேல் லவ்ஸ் பொத்துக்கிட்டு வந்து, நாலு வருடமாய் உன்னைத் தான் கணவனாய் நினைத்து வாழ்ந்துட்டு இருக்காம்.
இந்த மெயில் படிச்சு பாரு…. உனக்கே புரியும்.
இன்னொரு விஷயம், காதல் வர, வருஷக் கணக்கெல்லாம் தேவை இல்லை. ஒரு நொடி பார்வை, ஒரு வார்த்தை, ஒரு செயல் போதும்.” என்றவள் தன், g-மெயில் ஓபன் செய்து கொடுத்தாள் .
“உயர்திரு. கார்த்திக் அவர்களுக்கு…” என்று ஆரம்பித்து இருந்த மெயில் வாசகத்தை பார்த்தவன்,
“ஏய்!… இது எனக்கு அனுப்பி இருக்காங்க…. ஆனா, உன் மெயில் அக்கௌன்ட்டில் இருக்கு….” என்றான் வியப்புடன்.
“ஏய் லூசு!…. உன் மெயில் ஐடி, எனதும் ஒரு நம்பர் தான் வித்தியாசம். மறந்து போச்சா!… ஒரு 1 அதிகமா போட்டா, உன் மெயில் ஐடி. ஒருவேளை, நீ எழுதும் போதே விட்டு இருக்கனும்… இல்லை அழிஞ்சிப் போய் இருக்கனும்… இல்லை, இவங்க சரியா பார்க்காம, இல்லைனா type செய்யும் போது, தவறுதலாக அடிச்சு இருக்கனும்… கேள்விக்குப் பிறந்தவனே!… மெயில் படிடா…” என்றாள் மதுரா, அவன் தலையில் தட்டி.
“உயர்திரு. கார்த்திக் அவர்களுக்கு, என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
என் பெயர் ஊர்வசி.
நான்கு வருடங்களுக்கு முன்பு, ஊட்டி நிலச்சரிவில், நீங்கக் காப்பாற்றிய பலருள், நானும் என் தோழியரும் அடக்கம்.
அன்று, நீங்கள் மட்டும் இல்லையென்றால், எங்கள் நிலை யோசித்து கூடப் பார்க்க, எங்களால் முடியவில்லை. வெறும் வாய் வார்த்தையாக, நன்றி சொன்னால் கூட அதற்கு ஈடு ஆகாது.
அது தெரிந்தோ என்னவோ, என் தோழி, தன் மனதையே, உங்களுக்குக் காணிக்கை ஆக்கிக் கொண்டு இருக்கிறாள்.
ஒரே நாளில், ‘கண்டதும் காதலா?’ என்ற என் கேள்விக்கு, அவளின் பதிலை அப்படியே தருகிறேன்.
‘ஒரு நாள் தான்… ஆனால், அந்த ஒரு நாளில், ‘அவர் எனக்குத் தாயுமானவனாக’ இருந்து பாதுகாப்பையும், அன்பையும், பாசத்தையும் காட்டினார்.
‘ஒரு தோழனாக’ இருந்து மடி தாங்கினார்…
‘ஒரு பாதுகாவலனாக’ இருந்து, ‘ஒரு ஆண்மகனாய், என் பெண்மையை’ காப்பாற்றினார்.
இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு!… ஒரே நாளில் எனக்கு, எல்லாமுமாக இருந்து விட்டார். அவரை என் கணவராக, ஏற்றுக் கொண்டு விட்டேன்.
இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல, வரும் எல்லா ஜென்மத்திலும், அவர் தான் என் வாழ்க்கை, என் உலகம், என் எல்லாமும்…’.
இது தான் அவளின் பதில்.
உங்கள் மனைவியாகத் தன்னைத் தானே நினைத்து வாழ்ந்து வருகிறாள்.
‘நீங்கள் தான் உலகம்’ என்று நாலு வருடமாய், உங்கள் சட்டையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். உங்களுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு என்று கேள்விப் பட்டதிலிருந்து இவளைக் கண்காணிப்பதே, எனக்கு வேலையாகி விட்டது.
‘ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவாளோ!…’ என்று தினமும் கலக்கமாக உள்ளது.
அதனால் தான், உங்கள் மெயில் id வாங்கி விஷயத்தைத் தெரிவிக்கிறேன்.
தவறாக நினைக்க வேண்டாம் பிரதர். நல்ல முடிவாக எடுங்கள்.
சகோதரி ஊர்வசி.” என்று ஆங்கிலத்தில் இருந்தது மெயில்.
“என்னடீ இது!… நாலு வருசமா, என்னை லவ் செய்யறான்னு இருக்கு…” என்றான் கார்த்திக், அதிர்த்தவனாய்.
“எனக்கும் அதே, யோசனையாய் தான்டா இருக்கு… ஒரு வேலை அவ பைத்தியமோ என்னவோ!…
உன்னை எல்லாம், விழுந்து விழுந்து நாலு வருடம் லவ்ஸ் பன்றாளே!…” என்றவள் ஓட, அவளை அடிக்கத் துரத்தினான்.
கையில் சிக்கியவளை, நாலு மொத்து, முதுகில் மொத்தியவன், “டீ!… அந்த ஊர்வசி, ‘அந்தப் பொண்ணு யாருன்னு’ சொல்லவே இல்லையேடீ!… யாருன்னு கேட்டுப் பார்ப்போமா?…” என்றான் ரொம்ப தயங்கியபடி.
“என்ன, யாருன்னு தெரிஞ்சுக்கணுமா பிரதர்?…. ரொம்ப அவசரமோ?” என்றாள் மதுரா.
“ச்சே!… ச்சே!… அப்படி எல்லாம் இல்லை.” என்று தலை அசைத்தவன், “ஆமாம்…” என்றான் வெட்கத்துடன்.
‘ஆண்களின் வெட்கமும் அழகு தான்’ என்று நினைத்துக் கொண்டாள் மதுரா.
“பிரதர்!… நீ ரொம்ப ஸ்லோ… ஏற்கனவே டீடெயில்ஸ் கலெக்ட் செய்துட்டேன். அந்த மெயில் கீழே, போட்டோ இருக்கு பாரு…” என்றவளின் வார்த்தை கேட்டுப் போட்டோவைப் பார்த்தவன் பிளாட்.
ஏற்கனவே முகம் அறியா பெண் வரைந்து இருந்த ஓவியங்கள், தோழியின் வாக்குமூலம், அவளின் வார்த்தைகள் கேட்டு மனம் தடுமாறி நின்றவன், தன்னைக் காதலிக்கும் பெண்ணின் போட்டோவைக் கண்டதும், அவளிடம் தன் இதயத்தைப் பறிக் கொடுத்து விட்டான்.
அவளின் அழகு, அவனை மொத்தமாய் வீழ்த்திவிட, கண்களால் அவளை விழுங்கிக் கொண்டு இருந்தான்.
எவ்வளவு நேரம் அந்தப் போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தானோ, சட்டென்று சுதாரித்தவன் முகம் திகைப்பைக் காட்டியது .
“மதுரா!… இது… இது… இவ… இவ…” என்று தந்தி அடித்தான்.
“கண்டுபிடிச்சுட்டியா!… சேது பெரியப்பா, ரெண்டாவது பெண் அன்னபூரணி தான் இது…
நாலு வருசமாய் உனக்காகத் தவம் இருப்பவள்.” என்றாள் மதுரா.
“ச்சே, ச்சே!… இது ஒத்து வராது மதுரா….” என்றான் கார்த்திக் தலையைப் பிடித்துக் கொண்டு.
“ஏன் பாஸ்!… என்ன ப்ரோப்லம்?” என்றாள் மதுரா, அவனைத் தன் புறம் திருப்பி.
“ஏய்!… அவ சோனா தங்கச்சிடீ!… அந்தப் பிசாசுக் கூட்டத்தில், இருப்பவ… உன் வாழ்வை, அங்கிள், ஆன்ட்டி வாழ்வை நாசம் செய்து கொண்டு இருப்பவ. அந்தச் சோனா, உன்னை டார்கெட் செய்து, அந்தச் சுமனை, இறக்கி இருப்பது மறந்து போச்சா என்ன?… என்றான் கார்த்திக், வேதனையோடு.
“தம்பி!… இந்த வேலை செய்வது சோனா. பூரணி இல்லை கண்ணா. இராவணன் தீயவன் தான். ஆனால், அவன் சகோதரன், விபீஷணன் நல்லவன் தானே!…
சோனா, சொர்ணா, கஜேந்திரன் தீயவர்களாய் இருந்தால், ‘அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் கெட்டவங்களாய் இருப்பார்கள்’ என்று ஏன் நினைக்கிறாய்?
அந்தப் பிசாசுங்க இருக்குற, அதே குடும்பத்தில் தான் சேது பெரியப்பா, கனகா பெரியம்மா, பாட்டி, விஜய் எல்லாரும் இருக்காங்க. அவங்க எல்லாம் கெட்டவங்க என்று சொல்லிவிடுவாயா!…
நீ கட்டப்போவது பூரணியை. சோனாவை அல்ல. அவளைக் கட்டிய விஜய்யே, ‘இரும்பு மனிதனாய்’ தான் இருக்கார். பூரணி ரொம்ப நல்லவடா… அவ சோனா மாதிரி, சைக்கோவா இருந்தா, இந்நேரம் உன்னைத் திருமணம் செய்யப் போவதாய் இருந்த என்னைத் தானே ஏதாவது செய்திருப்பா!….
‘தன்னையே அழித்துக் கொள்வாளோ!’ என்று பயமாய் இருக்குன்னு, ஊர்வசி சொல்வதிலிருந்து தெரியவில்லையா!…. பூரணி நல்லவ என்று. யோசிக்காதே!…” என்றாள் மதுரா.
“இல்லை மதுரா… ஒத்து வாரதுமா… அவ கோடீஸ்வரி!… மாளிகையில் வாழ்பவ… ஏணி வைத்தாகௌ கூட எட்டாது. நான் சாதாரண மிடில் கிளாஸ். அந்தளவு வசதி எல்லாம் என்னால் கொடுக்க முடியாது.
சேது சார் மாதிரி, கருணா மாதிரி, ‘வீட்டோடு மாப்பிள்ளை’ எல்லாம் எனக்கு ஒத்து வராது. தவிர சோனா, கஜேந்திரன், சொர்ணா என்று ஒரு ஸ்டேட்டஸ் வெறிப் பிடித்தக் கூட்டம் உண்டு.
நான் சினிமா ஹீரோவோ, கதையில் வரும் ஹீரோவோ கிடையாது. அடி, தடி, வெட்டுக், குத்து எல்லாம் சினிமாவுக்கு, கதைக்கு நல்லா இருக்கும். ரியல் லைப்க்கு ஒத்து வராதுமா… அவங்க ஒத்துக்க மாட்டாங்க.” என்றான் கார்த்திக்.
“இங்க பாரு… இந்த abcd, கதை எல்லாம் வேண்டாம். உனக்குப் பூரணியை, பிடிச்சு இருக்கா?… அதை மட்டும் சொல்லு. மத்த ஈர வெங்காயம் எல்லாம் நான் பார்த்துகிறேன்.
உன்னை எதுக்கு கேக்கணும்?… அந்தப் புள்ளைக்கு, உன்னப் பிடிச்சிப் போச்சு. உன் கையைக், காலைக் கட்டி மண மேடைக்கு ஏத்திடுவேன். நாளைக் காலை ரெடியா இரு.
ஊர்வசி வீட்டில், அவ அண்ணிக்கு, வளைகாப்புன்னு, உன் ஆளைக் கூட்டிட்டு வரேன்னு ஊர்வசி சொல்லியிருக்கா. பட்சி, ஈவினிங் லேண்ட் ஆகி இருக்கும். நாளைப் போறோம். அவ லவ் accept பண்றே, சொல்லும் நாளில் அவ கழுத்தில் தாலியைகௌ கட்டறே
நடுவுல ஏதாவது கோல்மால், பண்ணலாம்ன்னு நெனைச்சே, என்னைத் தெரியும்ல… போ, போய்த் தூங்கி ரெஸ்ட் எடு….” என்றாள் மதுரா, கடுப்பாக.
“இதெல்லாம் உனக்கே ஓவர்ராத் தெரிலை…” என்றான் கார்த்திக், பாவமாக.
“எந்த ராவாவும் தெரிலை…. அது என்ன ஆண்களுக்குக் காதல் வந்தால் மட்டும், ‘பெண்ணைப் பிரிதிவிராஜ் கணக்கா’ தூக்குவீங்களோ!… பூரணி சரின்னு சொல்லட்டும்… உன்னைத் தூக்கிடுவோம்…” என்றாள் மதுரா, நக்கலாக.
“பாவம்!…. ரொம்ப கஷ்டம்…. நான் தப்பிச்சேன்.” என்றான் கார்த்திக் , கமுக்கமாகச் சிரித்தபடி.
“என்ன பாவம்?… எது ரொம்ப கஷ்டம்?…. எதுக்கு சார்வாள் தப்பிச்சீங்க என்று சொல்ல வருவது, எதை பற்றியோ!…” என்றாள் மதுரா, அவனைச் சந்தேகத்துடன் பார்த்தபடி.
“ரொம்ப பாவம்… ‘உன்னைக் கட்டப் போகும் அந்த மவராசன்’ தான். ரொம்ப கஷ்டம், ‘உன் கழுத்தில் தாலிக் கட்டிய பிறகு, அவன் நிலை’ தான்…
நீ, ‘பாச மலர் படம்’ ஒட்டிக் காண்பித்ததால், எனக்குக் கீழ்ப்பாக்கம் போக வேண்டிய நிலையிலிருந்து நான் தப்பிச்சேன்னு சொன்னேன் பப்புமா…” என்றவன் மதுராவின், கையில் சிக்காமல் கீழே ஓடி ஒளிந்தான்.
மதுரா, பற்களை நறநறவெனக் கடித்த சப்தம், டெல்லி வரைக் கேட்டது என்று தான் சொல்ல வேண்டுமோ!
மதுராவின் கையில் சிக்கப் போகும், அந்த அப்பாவி ஜீவன் யாரோ!
தன் அறைக்குச் சென்றவள், பல் பல நினைவுகளுடன் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தாள்.
தவம் தொடரும்…





