arrow_back
என்ன தவம் செய்தேன்! 47
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 47 / 85

47

visibility 20
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“மது!.. மது!.. மது!…” அவனின் அலறல், தவிப்புத் துடிப்பு என்று எதற்கும் அவளிடம் பதில் இல்லை.

தண்ணீர் தெளித்தும், அவள் மயக்கம் தெளியவில்லை என்றதும்,
“மது!…”  என்று  அடி வயிற்றில் இருந்து, உயிர் போகும் குரலில் அலறியவன், அவளை  இழுத்து  அணைத்தான்.

கண்களில்  கண்ணீர்  பெருக்கெடுக்க,  அவளை  அணைத்து  கதறிக்  கொண்டு இருந்தான்.

“மது!… சாரி… மது… கண்ணைத் திற மது. நான்… சாரி மது… ஐ லவ் யுடா. இது  லவ் தாண்டீ…  நீ நல்லா இருக்கனும் என்று தான்டீ.
அய்யோ! கண்ணை  திறடி.  உன்னை  இழக்க  முடியாதுடீ.

முதல்  முறை உன்னை இழந்த போதே, நான் செத்துடேன். கண்ணை திறடீ கடவுளே!.. மது பேபி, angel… நான் உன் ஒருத்தியைத் தாண்டீ… உன் ஒருத்தியைத்  தாண்டி  லவ்  செய்யறேன்.

உனக்காக   தான்டீ   காத்து  இருக்கேன்.  அய்யோ!.. மது!… ப்ளீஸ்! கண்ணை  திறடி.  இப்படி  பயமுறுத்தாதேடீ!…  சாரி… சாரி… மது… கண்ணைத் திற…” என்று   அவள்  கன்னத்தில்,  பல  முறை  தட்டிக்  கூட,  ‘அவள்  கண்      விழிக்கவில்லை’  என்றதும்  முழுவதுமாக  உடைந்து  போனான்.

தொழிலில், வாழ்க்கையில் பல முடிவுகளைச் சூறாவளியாய் எடுத்தவன், பலருக்குச் சிம்ம சொப்பனமாய் விளங்கிக் கொண்டிருப்பவன், பல பெண்களைக் காத்தவன், தொழிலில் முடி சூடாசக்ரவர்த்தியாய், ஜொலிப்பவன், ஒரு முழுமையான ஆண்மகன், ‘அடுத்து என்ன’ என்று கை, கால் ஓடாமல், மூளை வேலை நிறுத்தம் செய்து இருக்க, பித்துப் பிடித்தவன் போல், மதுராவை அணைத்து கதறிக் கொண்டு இருந்தானே ஒழிய, அடுத்து செய்ய வேண்டிய எதுவும் அவனுக்கு   நினைவுக்கு   வரவில்லை.

‘மதுரா’ என்ற  ஒருத்தியோடு,  அவன் எண்ணம், செயல்  எல்லாம்  நின்று போய் இருந்தது.

‘பாஸ்!…  மெடிக்கல் எமெர்ஜென்சி என்றால்,  ‘ஹாஸ்பிடல் கூட்டிப் போகணும்,  அத்துவானக் காட்டில், காருக்குள்ளே அழுதுட்டு இருந்தால்,  எல்லாம் சரி ஆகி விடுமா?…
இந்த அறிவு,  ‘முத்தம் என்ற  பெயரில்,  என்னை  ஒரு  வழி  செய்யும்  போதே இருக்கணும்.’ என்பது தான்  மதுரா  முழித்து  இருந்தால்,  அவளின்  பேச்சாக இருந்திருக்கும். 

ஒரு  சிலர்   ஆபத்து  என்றால்,  துணிந்து  தன்  உயிரையும்  பணயம்  வைத்து மற்றவர்களை  காப்பாற்றி விடுவார்கள்.  ஒரு சிலரோ உறைந்து போய் நின்று விடுவார்கள்.

விஜய்  முதல்  வகை  சார்ந்தவன்  தான் என்றாலும், அந்த நொடி அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், மதுராவை அணைத்து கதறிக் கொண்டு இருந்தான்.

அவன் கதறலுக்கு செவி சாய்த்தோ, இல்லை மதுராவின் உயிர் பிரியும் வேளை வரவில்லையோ, காரின் கண்ணாடி உடைக்கபட்டது வெளிபுறம் இருந்து.

மதுராவின்  பக்கம்,  கார் கண்ணாடி உடைக்கப் பட, அதிர்ந்து  நிமிர்ந்த  விஜய், அங்கு  நின்று இருக்கும்,  ஆல்வினைக்  கண்டதும்  தான்,  அடுத்த மூச்சு சரியாக  விட்டான்.

“ஆல்!.. மது… என்  மது…  இவளுக்கு ஏதாவதுன்னா, நான் உயிரோடு இருக்க   மாட்டேன்.  என்  மதுவை  காப்பாத்துடா.” என்றான்.

நண்பன்  இருக்கும்  நிலைக்  கண்டு,  ஒரு கணம், கண்களை அழுந்த மூடி திறந்த  ஆல்வின், 
“மதுரா  சிஸ்டருக்கு   எதுவும்  ஆகாது. ஹாஸ்பிடல் கூட்டிப்  போகணும்.  கீழ் இறங்கி வந்து சிஸ்ட்டரை பின் சீட்டுக்கு தூக்கிப் போ.
மிருதுளா  கிட்டப் போன் செய்து, நாம ஹாஸ்பிடல் வரும் விஷயத்தை சொல்லு. நான் காரை எடுக்கறேன். கெட் டவுன் விஜய்.” என்ற ஆல்வின்,   சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டு, செயல்பட முடியாமல் உறைந்து  போயிருந்த  விஜய்யை மெல்ல மீட்டான்.

ஆல்வின் சொல்வதை,  செய்யும் அளவுக்குத் தான் விஜய்யால் அப்போது முடிந்தது. அவன்  மதுராவுக்கு  நல்லது  செய்ய  போய், அதுவே  வினையாகி விட,  அவனால் எதையும் நினைக்கவோ,  அடுத்து என்ன என்று சிந்திக்கவோ  முடியவில்லை.

மதுராவை  மடியில் தாங்கிப் பின் சீட்டில் விஜய் ஏறி விட, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ஆல்வின், அசுர வேகத்தில், காரைத் தன் மனைவி மிருதுளாவின்  ஹாஸ்பிடலை  நோக்கி  செலுத்தினான்.

மதுராவை மடியில் வைத்து கொண்டு, மிருதுளாவிற்கு போன் செய்தான் விஜய்.

“மிருது!… எங்கே இருக்கே?… ஹாஸ்பிடல்லா?… சொல்வதைக் கேளு. மது…மது… மயங்கிட்டா… நோஸ் ப்ளீட் ஆகுது. அங்கே தான் வரோம்.  எத்தனை டாக்டர்ஸ் வேண்டுமோ, எத்தனை நர்ஸ் வேண்டுமோ ரெடி செய்துக்கோ. தெரியலை… நல்லாத் தான் பேசிட்டு இருந்தா… திடீர்னு இப்படி…” என்றான் விஜய், குரல் நடுங்க.

“அவங்களுக்கு முன்னாடியே, ஏதாவது மெடிக்கல் கண்டிஷன் இது போல் இருந்ததா  அண்ணா?… ஏதாவது தெரியுமா?” என்றாள் மிருதுளா.

“மூன்று  மாதம்  முன் கூட, சுபாவோடு சேர்த்து இவளுக்கும் மெடிக்கல் செக்அப்  செய்தோம்.  அந்த  ரிப்போர்ட்டில், எல்லாம், நார்மல் தான் வந்துச்சு.

ரிப்போர்ட் ஆல்வின் கிட்டே தான் இருக்கு. ஹ்ம்ம்!… உன் ஈமெயில்  ஐடிக்கு  இப்போ  தான்  அனுப்பிட்டானாம்.” என்றான் விஜய்.

“சரி  அண்ணா,  இப்போவும்  நோஸ்  ப்ளீட் ஆகுதா?” என்றாள் மிருதுளா.

“ஆகுது ஆனா அதிகமா இல்லை. தண்ணீர் அடிச்சு பார்த்தேன். மயக்கம் தெளியலை மிருது.” என்றான் விஜய்.

“அண்ணா!… அவங்களை முன் பக்கமா குனிய வையுங்க. மூக்கின் மேல் பகுதியை, ரொம்ப போர்ஸ் கொடுக்காம அழுத்தி பிடிங்க. ஆனா, அவங்க சுவாசிக்கறதுக்கு தடைப்படக் கூடாது.

மெடிக்கல்  ரிப்போர்ட்டில்,  எந்த ஹெல்த் ப்ரோப்லம் இல்லைன்னுத் தான் காட்டுது. பயப்படும் படியா எதுவும் இருக்காதுன்னா. நீங்க டென்ஷன் ஆகாம வாங்க.” என்ற மிருதுளா கால் cut செய்து விட்டு, கணவனுக்கு அழைத்தாள்.

“என்னங்க!… அவங்களுக்கு  என்ன  ஆச்சு?” என்றாள் மிருதுளா.

“தெரியலை… கருணா கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவனைப் பத்தித் தான் தெரியும் தானே!… மதுராவிற்கு ஏதாவது ஒன்று என்றால்,  அவன்  அவனாகவே  இருக்க  மாட்டானே!…

அங்கே வீட்டைக் காவல் காக்க நிறுத்தி இருந்த ஆள், சிஸ்டர், கருணாவை காரின் உள் வைத்து லாக் செய்துட்டு, பின் அவங்களே காரை ஓட்டிட்டு போறாங்கன்னு இன்போர்ம் செய்தான்.
அதான்  கிளம்பி வந்தேன்…

இவன் கார் gps, கண்டு பிடித்து வந்து பார்த்தால்,  சிஸ்டர்  மயங்கி  கிடக்காங்க.
இவன்  கதறிட்டு  இருக்கான்.  வெளியே இருந்து எத்தனையோ தடவைத் தட்டிப் பார்த்து, சத்தமா கூப்பிட்டும்,  இவன் கவனம் இங்கு இல்லை.
அதான் கார் கண்ணாடியை உடைத்து… இவனைக் கிளப்புவதற்குள், மறுபடியும், ‘சாகப் போறேன்னு!…’  டயலாக்  விட  ஆரம்பித்து விட்டான்.

ஹி  இஸ்  நாட்  ஹிம்செல்ப்  நவ்… சிஸ்டருக்கு எதுவும் இருக்காது இல்லை! போனத் தடவையே இவனை மீட்டு வருவதற்குள்… உனக்கேத் தெரியும் தானே!..” என்றான் ஆல்வின் பயத்துடன்.

“செக் செய்யாமல், எதையும் சொல்ல முடியாது ஆல்… சீக்கரம் கூட்டி வாங்க..” என்றாள்  மிருதுளா.

அடுத்தப் பதினைந்து  நிமிடத்திற்குள் மிருதுளாவின், ‘லைப் கேர்’  ஹாஸ்பிடல்  வாசல்  முன்  வந்து  நின்றது   அந்த கார்.

வாசலிலேயே ஸ்ட்ரெட்ச்சரோடு, நர்ஸ், டாக்டரோடு நின்று இருந்தாள் மிருதுளா. மதுரா ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கபட்டு, இன்டென்சிவ் கேர் யூனிட் (ICU ) கொண்டுச் செல்லபட, கால்கள் தோய்ந்து, வராண்டாவில் இருந்த  நாற்காலியில்  பொத்தென்று  அமர்ந்தான் விஜய்.

அவன்  பருகச்  சூடாகக்  காபிக்  கொண்டு வந்து கொடுத்த ஆல்வின், “சிஸ்டருக்கு ஒன்றும் ஆகாது கருண். கண்ட்ரோல் யுவர்செல்ப்.” என்றான் ஆல்வின்  நண்பனை  அணைத்து.

“என்  மதுவிற்கு,  நானே  எமன்  ஆகிட்டேன்டா.  அய்யோ!… அவளை நானே  கொன்னுட்டேன்.  நான் பாவி!… பாவி!… கிராதகன்!…” என்று கலங்கித் துடித்த,  அவனை  என்ன சொல்லி சமாதானம் செய்வது  என்று  ஆல்வினுக்கு  புரியவில்லை.

“என்ன நடந்தது கருண்?” என்றான் அவனை டைவர்ட் செய்யும் எண்ணத்தில்.

“நாம இவளுக்கும், கார்த்திக்கும் மேரேஜ் செய்து அனுப்பி வைக்க வேண்டும்  என்று   நினைத்தோம்   இல்லை!…” என்று விஜய் சொல்ல,
‘அது நீ நினைத்தே விஜய்… ‘கார்த்திக் தான், மதுராவிற்கு ஏற்றவன், வல்லவன்,  நல்லவன்  என்று,  பலர்  காதில்  ரத்தம் வரும் அளவுக்குக் கிளாஸ்  எடுத்தே’   நீ…’  என்று மனதிற்குள் புலம்பினான் ஆல்வின்.

“ஆனா,  இந்த  லூசு,  அந்தக் கார்த்திக்கை, நம்ம  பூரணிக் கூடச் சேர்த்து வைச்சிடுச்சு. பூரணி,  கார்த்திக்கை  நாலு  வருடமாய்  லவ்  செய்யறாளாம். அவன்  இவளுக்கு  அண்ணனாம். 
‘பாச மலர் பார்ட் டூ’ ஓட்டிட்டா…”  என்றான்  விஜய்,  தலையைப்  பிடித்துக்  கொண்டு.

‘அட்ரா சக்கை!… சபாஷ் மதுரா!… இவன் எழுப்பியக் கோட்டை அடித்தளத்தையே பாம் வச்சி தகர்த்துட்டே!… சபாஷ்!… அப்போ இந்தச், சிம்பன்சி  முகம் எப்படி போச்சுன்னு  பார்க்காம போயிட்டேனே!…’ என்று ஆல்வின்,  மனம்  குத்தாட்டம்  போட்டது.      
           
“என் கண்ட்ரோல் மொத்தமா போச்சுடா… ‘எங்கே கார்த்திக், இவளைத் திருமணம்  செய்து  கொள்வானோ’ என்று உள்ளுக்குள் ஒரு வலி இருத்துட்டே  இருந்தது. கார்த்திக் இவளுக்கு பிரதர் என்றவுடன், இவள் அருகில் வந்ததும், அங்கே ஊர்வசி வீட்டில் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிட்டேன்.

அதை  இவ, நோட் செய்துட்டா. என்னுடன் பேசத் தனியே, காரில் கூட்டிப் போனாள். ஏதாவது செய்து, அதை தடுத்து நிறுத்தாமல்,  அவளோடு போனது  என்  முட்டாள்  தனம் ஆல். நான் அவளை லவ் செய்றது, அவளுக்கு தெரிஞ்சுப் போச்சுடா.” என்று ஏதோ, கொலைக் குற்றம் செய்தவன் ரேஞ்சுக்கு சொன்னவனை, என்ன செய்வது என்றே ஆல்வினுக்கு தெரியவில்லை.

“அவளை  விலக்கி  நிறுத்த, என்னை  வெறுக்க வைக்க வேறு வழித் தெரியலை. அது கூடப் பொய் தான். இத்தனை நாள், அடக்கி வைத்த உணர்ச்சிகளுக்கு, ‘வடிகால் என்று அவளிடம் வரம்பு மீறி’ நடந்து கொண்டேன்.
அய்யோ!… நான் மிருகம்டா. எனக்கும், சுமனுக்கும் வித்தியாசமே இல்லைடா!” என்று அழுத நண்பனை, கண்டு ஆல்வின் திகைத்து விழித்தான்.

அவனால்  விஜய்யைத்  தவறாக  நினைக்க  முடியவில்லை. 
விஜய்  காதலை,  அருகில்  இருந்து  கண்டு  வியந்தவன்  அவன்.

அந்த காதல் கிடைக்காமல், உயிர் வாழும் எண்ணமே இல்லாமல், நடைப்பிணமாக  இருந்தவனைக்  கண்டுத்  துடித்தவன்  அவன்.

நண்பனின்  வாழ்க்கைத்  திசை  மாறிப்  போன  போது,  அதைத்  தடுக்க  எதையும்  செய்ய  முடியாமல்,  உள்ளுக்குள்  உடைந்தவன்  அவன்.

கடந்த ஒரு வருடமாய், நண்பனின் காதலியைக் காக்க, அவனுக்குத் தோள் கொடுத்தவன் அவன்.
அந்தக் காதலை, நண்பன் புதைக்க முயன்ற போதும், மதுராவிற்கு இன்னொருவனைக் கணவனாக கொண்டு வர முயன்ற போதும், நண்பனின் காதலின் ஆழத்தைக் கண்டு, கலங்கிக் கொண்டு இருந்தவன் அவன்.

விஜய்யின்  மனத்  திடத்தையும்,  இப்போ  அதே காதல், அந்த வைராக்கியத்தை  உடைத்துத்  தன்னை வெளிப்படுத்திக் கொண்டதை அவனால்  வரவேற்க  மட்டுமே  முடிந்தது.

“கருண்!…  நீ  முன்  பின்  தெரியாத  பெண்ணிடம் வரம்பு மீறி நடக்கவில்லை.  சிஸ்டர்,  உன் உயிர். சிஸ்டர் உன்…” என்றவனை,
“ஸ்டாப்!…  அவ  எனக்கு யாரும் இல்லை. ஷி இஸ் நாட் மை லவர்!…
ஷி இஸ் நாட் மை எனிதிங்!….
அவ எனக்கு யாருமே இல்லை…” என்று உறுமினான் விஜய்.

“சும்மா  லூசு  மாதிரி  பேசாதே விஜய்!… மதுரா, ‘உனக்கு யாரும் இல்லை என்று  உன் மனசாட்சியைத் தொட்டு’ சொல்லு…
உன் இதயம் துடிப்பது, ‘மதுரா என்ற ஒரே ஒரு பெண்ணிற்காக இல்லை’ என்று சொல்லு பார்க்கலாம்.   

இதே  இடத்தில,  வேறு  எந்த  பெண்  இருந்தாலும், அவ உலக அழகியாகவே இருந்தாலும்,  அவ  உனக்கு  தூசுக்கு,  சமமாய்  தான்  இருந்து இருப்பா. பிறந்த மேனியாய் யார் உன் முன் நின்றிருந்தாலும் கூட உன் உணர்வுகள் விழித்திருக்காது. கல்லையும் மண்ணையும் கடப்பது போல் கடந்து போயிருப்பே! 
உன் கண்ட்ரோல், ‘நீ  யாரிடம்  இழக்க  வேண்டி  இருந்ததோ,  அவர்களிடம்  தான்   இழந்து   இருக்கேடா!…

சிஸ்டரிடம்  மட்டுமே, உன்னால் இப்படி நடக்க முடியும். ஆனா, இதற்கு மேலும்  லூசுத்தனமா,  ‘சிஸ்டருக்குத்  திருமணம்  செய்யறேன்னு  தரகர் வேலை’ பார்க்காதேடா!…

எல்லாத்தையும்  சிஸ்டரிடம் சொல்லு. அவங்க நிச்சயம் உன்னை ஏத்துப்பாங்க.” என்றவனைத் தடைச் செய்தது விஜய்யின் கோபப் பார்வை.

“பைத்தியம் மாதிரி உளறாதே ஆல்வின். எனக்குத் தான் அவ காதலி. அவளுக்கு நான் மூன்றாம் மனுஷன் தான். நான் அவளுக்குத் தகுதி இல்லாதவன் தான்.  அது  மாறி  விடாது.
மதுரா தேவதை!.
நான் பாவி.

சோனா போன்றச் சாக்கடைப் புத்திக் கொண்டவளின் கணவன். அது அப்படியே இருந்துட்டு போகட்டும். ‘என் மதுராவிற்கு’, நல்வாழ்க்கை அமைத்து கொடுப்பேன். அவ சந்தோசமா வாழணும்.
மதுராவிற்கு,   என்னால்  இந்த  ஒரு  வருஷத்தில்  ஏற்பட்டக்  கஷ்டம்  போதும்.  பெஸ்ட்  மாப்பிள்ளையா, ‘என்  மதுவை’, ‘உள்ளங்கையில் வைத்து ராணி மாதிரி  பார்த்து’ கொள்பவன்  கிடைத்தால்  சொல்லு.  மத்த  எதையும் என்னிடம்  பேசாதே!

கடவுளுக்கே  தெரிந்து  இருக்கு. நாங்க ஒண்ணு சேரக் கூடாது என்று… அதான் இப்படி  எல்லாம் நடந்து இருக்கு.”  என்றவன் அங்கு இருந்து, எழுந்து நடக்க   ஆரம்பித்து  விட,  ஆல்வின்  தலையில்  கை  வைத்துக்  கொண்டான்.

‘வார்த்தைக்கு  வார்த்தை,  ‘என் மது,  என் மது’ என்று சொல்கிறவன்  தான் முரணாக,  அவளுக்குக்  கணவன்  தேடச்  சொல்கிறான்…  பேசாமல் மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்து விடலாமா?
கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாமா?’ என்று கூடத் தோன்றி விட்டது ஆல்வினுக்கு.

ரெண்டு  மணி  நேரத்திற்கும் மேலாக,  விஜய்யின் முன்னுக்குப் பின், முரணானப்  பேச்சுகளால்  திக்கித்,  திணறி,  நொந்து   நூடுல்ஸ்   ஆகி  கொண்டு  இருந்த,  ஆல்வினைக் காக்க,  அவசர  சிகிச்சை பிரிவில் இருந்து வெளி  வந்தாள்   மிருதுளா.

காதலிக்கும் போது கூட, அவள் வரவை அந்த அளவு ஆல்வின் ரசித்து இருப்பானா என்பது சந்தேகமே!

குணா கமல், ‘அபிராமி!’  ரேஞ்சுக்கு, தன்னை லுக் விடும் கணவனின் பார்வையில், மிருதுளாவே ஒரு நொடி ஸ்தம்பித்துத் தான் போனாள்.

அவளுக்கு எங்கே தெரியப் போகிறது, விஜய், அந்த அளவுக்கு ஆல்வினை படுத்தி  இருப்பது.

அவள்  வருவதைக்  கண்ட  விஜய்யின்   கவனம்,  அவள் மேல் திரும்பி விட, அது  வரைப்  பிடித்து  இருந்த  மூச்சை  வெளியிட்டான்  ஆல்வின்.

“மிருது!… மது.. என்.. மதுக்கு…. உயிரோடுத் தானே!… அவளுக்கு ஒன்றும்… நல்லா இருக்காளா?…அவளுக்கு உயிர்…. அவளுக்கு ஒன்றும்… நல்லா…” என்று  அவளை  பேச  விடாமல், பிடித்து உலுக்கி,  துடித்து, தவித்து கொண்டு  இருந்தவனைக்  கண்டு,  ‘தன்  கணவன் ஏன்,  தன்னை  அப்படி பார்த்தான்’  என்று  புரிந்தது  மிருதுளாவுக்கு.

மனதிற்குள்  சிரித்து  கொண்டவள்,  ‘பயப்  புள்ள  நல்லா  மாட்டி,  விழிப் பிதுங்கி நிக்குது.’ என்பது விளங்க, ‘புரிந்தது’ என்ற  பார்வையை, கணவன் பக்கம்  செலுத்தினாள்.

தவமிருப்போம்…

அடுத்த அத்தியாயம்

48

"அண்ணா!...அண்ணா!.... ரிலாக்ஸ்...அண்ணா!... என்னைப் பேச விடுங்க அண்ணா!…”என்று பலமுறை கெஞ்சிய பிறகே, விஜய், தன் புலம்பலை நிறுத்தினான்.“அண்ணா!... அண்ணிக்கு ஒன்றும் இல்லை. அவங்க நல்லாத் தான் இருகாங்க.” முடிக்க விடவில்லை விஜய்.“பொய்  சொல்லாதே!..  என்  மது,  என்னை  விட்டுப்  போய்ட்டா…. அவளை …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்