74
“டேய்!… நீ தானேடா, இவர் தான், ‘ராதாவின் நண்பன்’ என்று கைக்காட்டினே?’ என்று முதன் முதலில் கம்பளைண்ட் செய்தவனைக் கேட்டாள் மதுரா .
“ஹி! ஹி! ஹி!… மதுரா, அது வந்து சார் காரில் வந்து இறங்கினாரா!… பார்க்க, அப்படியே பெரிய இடத்து பையன் போல் இருந்தாரா!
அதான் இவர் தான், சேர்மன் ரிலேட்டிவ்வாக இருப்பார் என்று நினைத்து…” என்று தலையைச் சொரிந்து நின்றான் அவன் .
“போடாங்!… உன் நினைப்பில் அனகோண்டா வந்து கொத்த.
சாரி ஜி!
உங்களை இவன் தோஸ்து என்று நினைத்துத் தான்… ஆமா நீங்க யாரு?” என்றாள் மதுரா .
மீண்டும் சூர்யா பதில் சொல்வதற்குள், “ஏய்!… அதான்பா நார்த் இந்தியன் ஒருவர், MBA சேரப் போவதாக, நம்ம கிரிச் சொல்லிட்டு இருந்தானே!…
பிரபு லேட்டா ஜாயின் செய்யப் போறார்… படிச்சிட்டே வேலை பார்க்கப் போறார் என்று சொல்லிட்டு இருந்தானே!..
அந்த, MBA இவர் தான் போல் இருக்கு.” என்றான் ராதாகிருஷ்ணன்.
“வெல்கம் டு அவர் காலேஜ் சீனியர்!.” என்ற மதுரா, கை நீட்ட, அவளின் கைப்பிடித்துக் குலுக்கினான், அந்தக் கல்லூரியை விலைக்கு வாங்க வந்த தொழிலதிபர், சூர்ய பிரதாப் ரத்தன் சிங் .
கல்லூரியை விலைக்கு வாங்க வந்தவனை, மாணவன் ஆக்கி விட்டது அவன் மதுராவின் மேல் கொண்ட காதல்.
அடுத்த ஆறு மாதத்திற்கு, மதுராவிற்காகவே தான், வாங்க வந்த கல்லூரியில் மாணவனாகி மதுராவின் சிறந்த நண்பன் ஆனான்.
இவனுக்குக் காவலாக வந்து சேர்ந்த உத்தம், இவனின் நண்பனாக வந்து, மதுராவின் சகோதரன் ஆகி போனான் .
“இது தான்பா எங்க பிலாஷுபாக். சீனியர் இவன். அது தெரியாமல் குழப்பத்தில், இன்ட்ரோ ஆகி, சிறந்த நண்பன் ஆகிட்டான்.” என்றாள் மதுரா.
“இது எப்போ நடந்தது?” என்றான் கார்த்திக் சந்தேகத்துடன்.
“ஒரு ஐந்து, ஆறு வருஷம் இருக்கும். நான் bsc மூன்றாம் ஆண்டு படிக்கும் போது… ஏண்டா கேட்கிறே?” என்றாள் மதுரா .
“நீ, எந்த அளவு லூசா இருக்கே என்பதைத் தெரிஞ்சுக்கத் தான்.” என்றான் கார்த்திக்.
“ஏய்!… என்னடா?…” என்றாள் மதுரா ஒன்றும் புரியாமல் .
“நீ சொல்லும் வருடத்தில், இவர் தன் தந்தையின் தொழிலில் இறங்கிட்டார். அதுவும் அமெரிக்காவில், ‘ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்’ உலகின் தலை சிறந்த, முதல் இடத்தில உள்ள யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றப் பிறகு.
அங்குப் படித்துப் பட்டம் பெற்றவர் தான், ‘உன் காலேஜில் படிக்கச் வந்தார்’ என்பது மூளை உள்ள யாருக்குமே, ஒத்துவராதக் கதை.
என்ன, ஏது என்று விசாரித்து வை.
எப்போ கிளம்பப்போறியோ, அப்போ சொல்லு. நான் வெளியே வெயிட் செய்யறேன்.
சாரி பாஸ்!… எனக்கு மதுரா முக்கியம்…” என்ற கார்த்திக், உத்தமோடு, வெளியே சென்று விட்டான் .
அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தாள் மதுரா.
சூர்யாவை திரும்பிப் பார்த்தார் போல் அமர்ந்த மதுரா, “அவன் சொல்வது எல்லாம் உண்மையாடா?…” என்றாள் மதுரா.
“உண்மை தாண்டீ…” என்றான் சூர்யா, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு .
“ஏன்?”
“உனக்காகத் தான்.உன்னைப் பிரிய முடியாமல் தான். என் டாடி தான், அந்தக் காலேஜ் வாங்க போவதாக இருந்தது. மம்மிக்கு உடம்பு சரியில்லை என்றதும், என்னைப் போகச் சொன்னார்.
வேண்டா வெறுப்பாகத் தான் வந்தேன். வந்த இடத்தில உன்னைப் பார்த்ததும், ‘கம்ப்ளீட் பிளாட்’ ஆகிட்டேன்.
நீயும், உன் நண்பன் பேச்சை நம்பி என்னை, ‘பிரபு, mba படிக்கச் வந்தவன்’ என்று முடிவுச் செய்துட்டே!… அதை மாற்றத் தோன்றவில்லை.
உன்னுடன் இருக்க, உன்னுடன் படிக்க, உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள, கிடைத்த சந்தர்ப்பம் என்று அதை யூஸ் செய்துட்டேன்.
உன்னோடு இருந்த, அந்த ஆறு மாதம் தான், ‘கோல்டன் டைம் ஆப் மை லைப்’ மதுரா.
எனக்குமே, ‘இது உண்மையான லவ் தானா, இல்லை வெறும் இனக்கவர்ச்சியான்னு’ தெரிய வேண்டி இருந்தது.
உன்னை மிஸ் செய்ய முடியலை. அதான் உனக்காகப் பிரபுவாகவே இருந்துட்டேன்.
பலமுறை, உன்கிட்ட என் காதலை ப்ரபோஸ் செய்ய செய்ய முயன்றேன். முடியவில்லை.
பயம்!…
எங்கே, ‘உங்களை, என் நண்பனாகத் தான் நினைக்கிறன்’ என்று சொல்லி விடுவாயோ என்ற பயம்.
எத்தனையோ, தொழில் எதிரிகளை வெகு அசால்ட்டாய் ஹாண்டில் செய்த என்னால், ஒரு சின்னப் பெண்ணிடம் என் காதலைச் சொல்ல வாய் வரலை.
அந்தப் பயத்தை, அன்று என்னால் கடக்கவே முடியலை மதுரா.
என் காதலுக்கு நடுவே, ‘நட்பு என்ற இரும்புத் திரை’ வந்து விடுமோ என்ற அச்சம்.
உன்னை, உன் நட்பை இழந்து விட்டால், அதன் பிறகு, இந்த வாழ்க்கையில் உயிர்ப்பே இருந்திருக்காது.
என்னால் உன்னை, உன் நட்பை இழக்க முடியலை.
நம்மோடு படித்த இன்னொருவன், உன்னிடம் காதலை சொன்னான். அவன் காதலை நிராகரித்த நீ, ‘ உங்களுடன் நான் பழகியது நட்புடன் தான். உங்கள் மனம் சலனம் அடையும் வண்ணம், நான் என்ன செய்தேன் என்றே தெரியவில்லையே!…” என்று காதலை இழந்த அவனை, விட நீ தான் அதிகமாய் அவனுக்காக அன்று துடித்தே.
உன் துடிப்பை பார்த்து, எனக்கு உன்னிடம் வாயைத் திறக்கக் கூடப் பயமாய் இருந்தது மதுரா.
உன்னைக் கன்வின்ஸ் செய்வதற்குள், டாடியை கொல்லப் பார்த்தாங்க. அதான் சொல்லமா கொள்ளாம கிளம்பிட்டேன். ஆனா, விட்டுப் போய் இருக்கக் கூடாது. உன்னைக் கன்வின்ஸ் செய்து இருக்கனும். பைத்தியகாரன் மாதிரி, உன்னை இழந்துட்டேன்.” என்றான் சூர்யா ஜன்னலின் அருகே சென்று நின்று வெளியே பார்த்தவாறு .
“எதிலுமே நான் தோத்தது இல்லை. ஆனா, வாழ்க்கையில் தோற்ற எனக்கு, உன்னைப் பேஸ் செய்யும் தைரியம் இல்லை.
நான் திரும்பி வருவதற்குள் நிறைய நடந்து போச்சு. ஒரு வருஷத்தில் டாடியும் எனக்கு மேரேஜ் ஏற்பாடு செய்துட்டார். அவர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற நான், திருமணம் செய்யும் நிலை வந்து விட்டது.
உன் சம்மதமும் இல்லை என்னும் போது, உன்னை வருத்த எனக்கு இஷ்டம் இல்லை.
காதல் தானாக வர வேண்டும். உன்னைப் போர்ஸ் செய்ய மனம் இல்லை.
எங்கே, ‘உன்னை வருந்தும் படி செய்து விடுவேனோ’ என்று தான் மேரேஜ்க்கு ஒகே சொல்லிட்டேன்.
எங்கே வரம்பு மீறி விடுவேனோ, என் காதல் மூர்க்கத்தனமாக மாறி, உன்னை ஏதாவது செய்து விடுவானோ! என்ற பயம்.
நினைத்ததை எல்லாம், நடத்தியே பழக்கப் பட்டவன் இல்லையா!… அதான் ரொம்ப பயமா போச்சு.
சாரி மதுரா!…” என்று கண்கள் கலங்க, கண்ணை மூடி ஜன்னலில், தலை சாய்த்து பேசிக் கொண்டு இருந்தான் சூர்யா.
“மன்னிச்சுடு மதுரா!… உன் கிட்டே, எல்லாம் சொல்லி இருக்கணும். சொல்லத் தைரியம் வரலை… சாரி… அப்போ தைரியம் இல்லை.
இனி, நீ, இல்லாமல் வாழ முடியாது மதுரா.
என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?….
உன்னை, என் கடைசி மூச்சு உள்ளவரை உயிராய் பார்த்துக் கொள்வேன்.
எனக்கு உன் கொள்கைகள் தெரியும் தான்.
‘ஸ்ரீராமன் போல் ஒருவன்’ கணவனாக வர வேண்டும் என்று என்னிடமே சொல்லி இருக்கிறாய். அப்போ, ஸ்ரீராமனாக இருந்த போது, சொல்லத் தைரியம் வரலை.
இப்போ நான் ஸ்ரீராமன் இல்லை தான். ஆனால், உன்னை மட்டுமே விரும்புகிறேன் மதுரா, அன்றும் இன்றும்.
உனக்கான என் காதல் அப்படியே தான் இருக்கிறது.
ப்ளீஸ்!…
எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு மதுரா.” என்றான் சூர்யா.
வெகுநேரம், மதுராவிடமிருந்து பதில் வராமல் போகவே, திரும்பியவன், “மதுரா!…” என்று அலறியப்படி அவளிடம் ஓடினான் .
மதுரா மீண்டும் மயங்கி இருந்தாள்.
அவள் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது .
“மதுரா!… என்னடி ஆச்சு!…. கண்ணைத் திற… மதுரா!… கண்ணைத் திற.” என்று அவள் கன்னத்தில் தட்டியவன் அவள் விழிக்காமல் போகவே, தண்ணீர் தெளித்துப் பார்த்தான்.
அப்பொழுதும் அவள் கண் விழிக்கவில்லை என்றதும், அவளைக் கையில் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.
மதுராவைத் தூக்கிக் கொண்டு, புயல் என அவன் வருவதைக் கண்ட கார்த்திக்கும், உத்தமும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று, அவன் பின்னால் ஓடினார்கள் பயத்துடன் .
“என்ன ஆச்சு சூர்யா?…” என்றான் கார்த்திக்.
“தெரியலை. நான் பேசிட்டு இருந்தேன். திரும்பிப் பார்த்தா மயங்கிக் கிடக்கா!… மூக்கிலிருந்து ரத்தம் வழியுது.
தண்ணீர் தெளிச்சுக் கூடப் பார்த்தேன். மயக்கம் தெளியலை.
உத்தம்! டாக்டருக்குப் போன் செய்… நம்ம ஹோஸ்பிடலில் உள்ள ஸ்பெஷலிஸ்ட் எல்லோரும் அங்கே இருக்கணும். சந்திராவுக்கு கால் பண்ணு. கெட் தி கார்…” என்றவன் உதறியக் கைக், கால், பதறிய இதயத்தை, வெளிக்காட்டாமல், அவளுக்காகக் கலங்கிக் கொண்டு இருந்தான் உள்ளுக்குள்.
‘அங்கே ஒருத்தன், முத்தம் கொடுத்தே, இவளை மயங்க வைத்தான்.
இங்கே இவன், ப்ரொபோஸ் செய்தே மயங்க வைத்து விட்டான்.
இந்த பிள்ளையும் அடிக்கடி மயங்கி மயங்கி விழுது!…
என்னப்பா நடக்குது இங்கே!’
விதியே, ஒரு கணம் என்ன நடக்கிறது என்று புரியாமல், திகைத்துத் தான் போனது.
மதுராவைத் தூக்கிக் கொண்டு முன்புற வாசலுக்கு, சூர்யா விரைய, உத்தம் ஏற்கனவே போனில் சொல்லி இருந்ததால், கார் வாயிலில் வந்து நின்றது.
உத்தம், டிரைவரை விலகச் சொல்லி விட்டு, அவன் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.
கார்த்திக் முன்புறம் ஏறிக்கொள்ள, மதுராவின் தலையைத் தாங்கியபடி பின்னால் ஏறினான் சூர்யா .
இதனை அந்த அலுவலகமே, திகைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தது. ஏற்கனவே சூர்யாவை, மதுராவை அடிக்கத் தூரத்தியது, ‘வைரல் நியூஸ்’ போல், அந்தக் காம்பௌண்ட்டில் பரவிக் கொண்டு இருந்த வேளையில், சூர்யா மயங்கிய பெண் ஒருத்தியைத் தூக்கி கொண்டு, பதட்டத்துடன் ஓடியது, மேலும் பல கதைகளைப் பரவச் செய்தது.
அதில் ஒருவன் தனியாகச் சென்று, யாருக்கோ அழைத்து விஷயத்தைச் சொன்னது மட்டுமில்லாமல், ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த விடீயோக்களை பேசிய நபருக்கு அனுப்பி வைத்தான் .
அவன் அனுப்பி வைத்த நபர், விஜய கருணாகரன்.
முதல் விடியோவை கண்டுக் கொதித்து போன விஜய், இரண்டாவது வீடியோ கண்டுப் பயந்து போனான்.
அடுத்த நொடி, சூர்யாவின், ‘ மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்’ நோக்கிச் சீறி பாய்ந்தது அவன் கார்.
இங்கு உத்தமை விரட்டிக் கொண்டு இருந்தான் சூர்யா.
சென்னை ட்ராபிக்கில், அவனும் முடிந்த அளவு விரைவாகத் தான் ஒட்டிக் கொண்டு இருந்தான் என்றாலும், சூர்யாவிற்கு எவ்வளவு வேகம் எடுத்தாலும் பத்தவில்லை.
கார்த்திக், உத்தம் டிரைவிங் ஸ்பீட் கண்டு, வாய் உலர்ந்து, சீட் உடன் சீட்டாகப் புதைந்து அமர்ந்தவாறே, பவானிக்கு போனில் அழைப்பு விடுத்து கொண்டு இருந்தான் .
ஒரு பார்ம் ஹவுஸ்குள் அப்பொழுது தான் நுழைந்து கொண்டு இருந்த பவானி, அந்த அழைப்பினை ஏற்காமல் இருந்தார்.
அந்த வீட்டின் ஹாலில், அமர்ந்து இருந்த வெற்றி மாறன், எழுந்து நின்று, “வா பவானி!… எப்படிமா இருக்கே?” என்றார் புன்னகையுடன் .
“நல்லா இருக்கேன் சார்!… நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்றார் பவானி.
“எல்லோரும் ஆண்டவன் அருளில் மிக நன்றாகவே இருக்கோம். நீ இந்தச் சாரை விட மாட்டியா?
எத்தனை தடவை சொல்வது?” என்று செல்லமாகக் கோபித்து கொண்டார் .
பவானி வெறும் புன்னைகையை பதிலாகக் கொடுக்க, “உன்னைத் திருத்த முடியாது…
இது ரகு தானே!…
என்னமா வளர்ந்துட்டான். சின்ன வயசுல பார்த்தது. காலம் எவ்வளவு வேகமா ஓடுது இல்லை!…
ஹ்ம்ம்ம்!…
உன் புருஷன் எப்படி இருக்கார்?” என்றார் வெற்றிமாறன் .
“அவருக்கென நல்ல தான் இருக்கார். எங்க உயிரை வாங்கிட்டு.” என்றார் பவானிக் கடுப்போடு .
“என்ன பவானி இது!…. சங்கரன் பத்தி, இப்போ தான் உனக்குத் தெரியுமா என்ன?
அவர் நல்ல மனசுக்காரர். வெள்ளந்தி. என்ன கொஞ்சம் தான் மட்டுமே, குடும்பத்தில் எல்லா முடிவையும் எடுக்கணும், எல்லோரும் அதற்குக் கட்டுப்படணும் என்று எதிர்பார்ப்பார் .
நிறையக் குடும்பத்தில் இது தானே நடக்குது. உன்னை விட மோசமான நிலையில் தான், பல மனைவிகள் இருக்கிறார்கள்.
சரி எல்லாம் சரி ஆகிடும்… வா… வா…. அம்மா உனக்காக ரொம்பவே ஆவலா காத்துட்டு இருக்காங்க.” என்றவர் மாடியில் இருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்.
இவர்கள் உள்ளே நுழைய, எழுந்து நின்ற சிவகாமி, தன் இரு கைகளையும் நீட்டி, “பவா!… வாடாக் கண்ணா.” என்றார்.
ஓடிச் சென்ற பவானி அவரை அணைத்து கொண்டு, கண் கலங்கினார். “எப்படி இருக்கீங்க?….” என்றார்.
“எனக்கு, என்னடா கண்ணாக் குறை?… ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?… இத்தனை வருடம் பார்க்காமலேயே இருந்துட்டியே!… இப்பாவது, என்னைப் பார்க்க வரணும் என்று தோணிச்சே!….” என்றார் சிவகாமி, பவானியை அணைத்தபடி.
சிறிது நேரம் இருவரும் ஒருவரையொருவர், அணைத்தபடி பேசாமல் அப்படியே நின்றனர்.
“ஹ்ம்ம்!… உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம்?… நாங்களும் உனக்குச் சங்கரனோடு, திருமணம் நடந்ததும் விலகிப் போனது தப்புத் தான்.
சங்கரன் குடும்பம், அவர் அண்ணன் பற்றித் தெரியாமல், உன் அப்பா நடத்தி முடித்த திருமணத்திற்கு, நீ என்ன செய்ய முடியும்?
அப்பொழுது சிலரை எதிர்க்கும் சக்தியும் எங்களிடம் இல்லையே!
என்னையும் கருவில் இருந்த வெற்றியையும் காப்பாற்றி, எனக்கு மறுத்திருமணம் செய்து வைத்தது உன் அப்பா என்பது சிலருக்கு தெரியக் கூடாது என்றும் தான் விலகிப் போனேன்.
அப்படியே தொடர்பு விட்டுப் போச்சு. உன் அப்பா, அம்மா இறப்புக்குக் கூட நாங்க வரமுடியலை…
விதி எப்படி எல்லாம் சோதிக்கிறது. இப்பாவது நீ, என்னிடம் திரும்பி வந்தாயே!… அதுவே போதும்.
நான் தூக்கி வளர்த்தப் பெண்.
ரத்தச் சொந்தம் இல்லை என்றாலும், எனக்குச் சொந்தம் என்று இருப்பது நீ மட்டும் தானேடீ!…” என்றார் சிவகாமி, உணர்ச்சி வசப்பட்டவராய் கண்ணில் கண்ணீர் வழிய .
கஜேந்திரனால் ஏமாற்றபட்டு, நடுத்தெருவில் ஜீவனாம்சமோ, இருக்க இடமோ இல்லாமல் துரத்தி அனுப்பபட்ட சிவகாமியை காப்பாற்றி, வெற்றிக்கு பத்து வயது ஆகும் வரை, துணை இருந்தது பவானியின் குடும்பம் தான்.
பவானிக்கு இன்னொரு அன்னையாய் மாறியது சிவகாமி.
வெற்றி மாறனை தூக்கி வளர்த்தது பவானி.
சிவகாமியின் வாழ்வு, ஆதிகேசவனோடு தொடங்கவும் ஏற்பாடு செய்தது பவானியின் குடும்பம்.
‘பாட்ஷா’ படத்தில் வரும் டயலொக், ‘கடவுள் நல்லவர்களை ரொம்ப சோதிப்பான், ஆனா கை விடமாட்டான்.’
அது சிவகாமியின் வாழ்வில் நடந்தது.
கஜாவிடம் சிக்கி, வாழ்வை இழந்தவருக்கு, ‘ஆதிகேசவன் என்ற உண்மையான ஆண்மகன் கணவனாய்’ வந்து வாழ்வை வசந்தமாக்கினார்.
கடவுள் சோதித்தார், ஆனால் கை விடவில்லை .
“வா… உட்காரு… இவர் தெரியும் தானே!… ஞாபகம் இருக்கா?… வெற்றியின் அப்பா ஆதி, என் கணவர்.” என்றவரைக் கண்டு ஆதியும், வெற்றியும் புன்னகை புரிந்தனர் .
வெற்றிக்கு உயிர் கொடுத்தது வேண்டும் என்றால், கஜாவாக இருக்கலாம். ஆனால், ‘தந்தை யார்’ என்று கேட்டால், அடுத்த நொடி அந்தக் குடும்பத்தின் பதில், ‘ஆதி’ என்பது தான்.
சில சொந்தங்களை, ரத்த சம்பந்தம் நிர்ணயிப்பதில்லை .
“சொல்லு எல்லோரும் எப்படி இருக்கீங்க?..” என்றார் சிவகாமி உபசரிப்புகளுக்கு பின் .
“நல்லா இருந்தா, உங்க உதவித் தேடி, ஏன் அத்தை வரப் போறேன்?” என்றார் பவானி .
“எதைச் சொல்றே!… சோனா வெறி பிடித்து உன் மகளை, டார்ச்சர் செய்ததைச் சொல்றியா?…
இல்லை அக்ரீமெண்ட் விஷயமா?… இல்லை சுமனா?…
இதில் எது?” என்றார் சிவகாமி, அலட்டிக் கொள்ளாமல்.
அதிர்ந்து தான் போனார்கள் பவானியும், ரகுவும்.
“உங்களுக்கு எப்படி?…” என்றார் பவானித், திகைப்பு நீங்காதவளாக.
“அநியாயத்தை எதிர்க்க எப்பொழுதுமே, ‘கடவுள் நேரில் வரமாட்டார்’ பவா!…
சில மனிதர்கள், ‘தெய்வமாய் இருந்து தான் இந்த வேலையைச்’ செய்வார்கள்.
உன் குடும்பம் என்னை மனதளவில் உடையாமல், வாழ்க்கை வெறுத்த சமயத்தில், அடைக்கலம் கொடுத்து மறுவாழ்வினை கொடுத்தது போல், மரகதம் அக்கா, தேவையான பண உதவியினை, பக்க பலமாக அவர்கள் பேரன் விஜய் எங்களுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
உன் மகளையும், ஒரு வருடமாய் காப்பாற்றுவது, விஜய்யும் அவன் நண்பர்களும் தான்.
அவர்களையும், எங்களையும் மீறித் தான், உன் மகளை யாருமே நெருங்க முடியும்.
அவளுக்கே தெரியாமல் அவளைச் சுற்றி, பல அடுக்கு காவல் இருக்கும் போது, எதற்குப் பவானி எப்படி கவலை படுறே!… நாங்க எல்லோரும் இருக்கோம்.” என்றார் சிவகாமி, பவானியின் கைகளைத் தட்டி கொடுத்தவாறு.
தவம் தொடரும்…





