82
ஆல்வின், உத்தமின் அந்தப் பாசம், அவர்களை மதுராவின் பாதுகாப்பிற்காக, அனுப்பி வைத்த விஜய், சூர்யாவின் அக்கறை பார்த்ததும், அவருக்குத் தன்னையே எதைக் கொண்டாவது அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
“ச்சே!… என்னால் தானே, நம்ம பொண்ணு, இத்தனை கஷ்டப்படறா! முன்னே பின்னே தெரியாதவங்க எல்லாம், இவளுக்காகப் போராடிட்டு இருக்காங்க.
ஆனா, நான் பாவி. மஹா பாவி, பவானி. நானே என் மகளை, அந்தப் பிசாசுக் கிட்டே மாட்டி விட்டு இருக்கேனே!…” என்றார் சங்கரன், கண்கள் கலங்க .
“ரகுப்பா!… என்ன இது? இன்னும் எத்தனைத் தடவைத் தான், கண் கலங்குவீங்க?
‘அப்பா!…’ என்று வாய் நிறைய அழைத்தப் பெண்ணை, எப்படி சந்தேகப் பட முடியும் சொல்லுங்க?
நானே, ‘அவ கொஞ்சம் திமிர் பிடித்தவ’ என்று மட்டும் தான் நினைச்சேன்.
ஆனா, இந்த அளவுக்குச் சாக்கடையாக இருப்பாள் என்று எதிர் பார்த்தேனா என்ன!…
கிட்டத் தட்ட, ஒரு வருஷம், நானும் தானே, கண் இருந்தும், குருடாய் இருந்து இருக்கேன்.
விதி!
வேறு என்ன தான் சொல்ல முடியும்.
ஏதோ போதாதக் காலம், ‘நம்ம மக கஷ்டப் படணும்’ என்று அவ தலையில் எழுதி இருக்கு போல் இருக்கு.
நீங்க மட்டும் காரணம் இல்லை. நம்ம எல்லோரையும், அவ நல்லா யூஸ் செய்துட்டா. விடுங்க பார்த்துக்கலாம்.” என்றார் பவானி .
“உன் வாய் தான், இப்படி சொல்லுது பவானி. ஆனா, முகம் சரி இல்லையே!…. இன்னும் ஏதோ இருக்கு.” என்றார் சங்கரன் .
“இது உங்களால் இல்லைங்க…” என்றவர் விஜய், சூர்யாவின் காதல் கதையைச் சொல்ல, சங்கரன் அதிர்ந்து போனார் .
“என்ன பவானி சொல்றே!… மாப்பிள்ளையும், சூர்யாத் தம்பியும் நம்ம பொண்ணை விரும்பறாங்களா?…” என்றார் காதில் கேட்டதை நம்ப முடியாதவராய் .
“ஹ்ம்ம், ஆமாம் ரகுப்பா. திருப்பியும் வரலாறு, திரும்பி விடுமோ என்று தான் ருத்ராவை, மதுராவிற்கு முடித்து விடலாம் என்று நினைத்தேன்.” என்றவர் நடந்ததைச் சொல்லி முடிக்கச் சங்கரன், மீண்டும் கண் கலங்க ஆரம்பித்தார் .
“நம்ம பெண்ணுக்காக, அட்லீஸ்ட் நீ இதையாவது செய்ய முயன்றே! ஆனால், நான் என் மகளின் வாழ்வை அழிக்க வந்த சனியனை, தலையில் தூக்கி வைத்து ஆடியது மட்டும் தானே செய்தேன். என்னை எல்லாம், ‘குடும்பத் தலைவன்’ என்று சொல்லிக் கொள்ளவே அருகதை இல்லை, தானே பவானி?” என்றார் கண்ணீர் வழிய.
“இங்கே பாருங்க… நம்பக் கூடாதவளை நம்பி விட்டோம். நம்பிக்கை வைத்த பிறகு, சந்தேகப்படவும் கூடாது தான்.
ஏதோ கடவுள் புண்ணியம்.
இதுவரை, நம்ம மக பத்திரமா இருக்கா. இனி, என்ன செய்து அவளைக் காக்க முடியும் என்று யோசிப்போம்.” என்றார் பவானி.
“சொல்லு பவானி, என்ன செய்யணும்?… அந்தச் சுமனையும், சோனாவையும், கொன்று விடட்டுமா?” என்றார் சங்கரன் .
“ஏன் ரகுப்பா!… உங்களுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?
மனசுக்குள் என்ன, ‘சினிமா ஹீரோன்னு’ நினைப்பா?
வயசான காலத்தில், ‘கபாலி, காலா’ ரேஞ்சுக்கு, ‘கத்தி எடுக்கறேன்’ என்று காமெடி செய்துட்டு இருக்கீங்க!….
அதை எல்லாம் விஜய், சூர்யாவே பார்த்துப்பாங்க. எனக்குச் சுமன், சோனா பத்திக் கவலை இல்லை. என் பிரச்சனையே விஜய், சூர்யா தான்.
விஜய் கூடக் கணக்கில் வரமாட்டார். ஆனா, இந்தச் சூர்யா வில்லங்கம் பிடித்தவன். தான் பிடிச்ச, ‘முயலுக்கு மூணு காலு’ என்று நிரூபித்து விடுவான். அவனை நினைத்தால் தான், பக்குப் பக்குன்னு இருக்கு.” என்றார் பவானி.
“ஏன், விஜய்யும் தானே மதுராவை விரும்பறார்?” என்றார் சங்கரன் .
“ரூபிணியை மறந்துடீங்களே!… அவன் தங்கை மணந்து இருப்பது, கஜாவின் சொந்தக்காரன் திவாகரைத் தானே!… ரூபிணி, திவாகரன் மனைவியாக இருக்கும் வரை, ஒரு அண்ணனாய் விஜய், சோனவை டைவோர்ஸ் செய்யமாட்டான்.
அந்த ஒரு விஷயத்தை வைத்துத் தான் சோனா, இந்த அளவு ஆடியும், விஜய் தம்பி அமைதியா இருக்கார். சோனாவும் வெறி பிடிச்ச பைத்தியக்காரி.
அந்த அளவுச் சுலபமா டைவோர்ஸ் எல்லாம் கொடுத்திட மாட்ட. ஆனா, இந்தத் தளைகள் எல்லாம் இல்லாதவன் சூர்யா.
அவனுமே மதுராவின் சம்மதம் ஒன்றுக்காகத் தான் காத்து இருக்கான்.
அவன் கட்டுப்படுவது மதுராவிடம் மட்டும் தான். ஆனா, அமைதியா இருக்க மாட்டான்.
இதோ, உங்களை இங்கே வரவழைச்சதே எடுத்துக்காட்டு. எனக்கு வேலை, தங்க பங்களா, ரகுவின் ட்ரான்ஸபெர் என்று அவன் கண் பார்வையில், நம்மைக் கொண்டு வந்து விட்டான்.” என்றார் பவானி .
“என்னது!… மதுராவிற்காகத் தான் எனக்கு இந்த வேலையா?” என்றார் சங்கரன்.
“அப்படியும் சொல்ல முடியாது. உங்களின் திறமையும் அதிகம் தான். ஆனால், முக்கியமான காரணம் நம்ம மக தான்.” என்றார் பவானி .
“அப்போ, இங்கேயும் மதுராவை மாட்டி வைத்தது நான் தான்.” என்றார் சங்கரன், தன்னைத் தானே நொந்து கொண்டு .
“நடந்ததை நினைத்துப் புலம்புவதில் பிரயோஜனம் இல்லை. அடுத்து என்ன என்று யோசிங்க. செய்தத் தப்பை, எப்படித் திருத்த முடியும் என்று பாருங்க.” என்றார் பவானி .
“நீயே சொல்லும்மா… என்ன செய்யணும் என்று சொல்லு. இனி அப்படியே நடக்கிறேன்.” என்றார் சங்கரன் .
“நாளைக் காலை, சூர்யாவை போய்ப் பார்த்துப் பேசுங்க. திரும்பவும் நம்ம குன்னூருக்கோ, வேறு எங்காவதோ, போக முடியுமா என்று பாருங்க. இதுவரை மதுரா ஸ்டெடியா தான் இருக்கா.
ஆனா, ‘பஞ்சையும், நெருப்பையும்’ பக்கத்தில் வைத்து இருப்பது ஆபத்து. முடிந்த அளவு, இவங்க ரெண்டு பேரையும் விட்டு, மதுராவை தூரக் கூட்டிப் போய் விட வேண்டும்.
அதற்கு முன், நல்ல வரனாய் பார்க்க வேண்டும். மதுராவின் கழுத்தில், திருமாங்கல்யம் ஏறும் வரை, எனக்கு நிம்மதி இல்லை.” என்றார் பவானி .
“சரி பவானி!… நீ சொன்னபடியே சூர்யா கிட்டே பேசிடுறேன்.” என்றார் சங்கரன்.
‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச், சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்ற கான்செப்ட் தான் என்றாலும், சூர்யா, மதுராவை பொறுத்த வரை, ‘பிரச்சனை ஏற்படுத்தும் சண்டைக்காரன் இல்லை’ என்பது ஏனோ அந்தப் பெற்றோருக்குப் புரியவில்லை .
‘காதல்’ என்ற ஒன்றுக்கே இவர்கள் இப்படி பதறிக் கொண்டிருக்க, அதைவிட மிகப் பெரியதாய், பல விஷயம் மறைக்கப்பட்டு இருப்பது மட்டும் தெரிந்தால், இவர்கள் என்ன அவர்களோ!
மதுரா பஞ்சும் அல்ல, அவளை எரிக்க விஜய்யும், சூர்யாவும் நெருப்பும் அல்ல என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த மூவருக்கும் நடுவே, ‘காதல் என்பதையும் தாண்டி, மிக ஆழமான நட்பு’ ஒன்று இருப்பதையும், மதுரா என்பவளுக்காக, உயிரைக் கொடுக்க கூடத் தயங்காத, அந்த ஆண்கள் இருவரும் தான், மதுராவின் மனம் வருந்த விடுவார்களா இல்லை, அவளைத் துன்புறுத்துவது போல நடந்து கொள்வார்களா என்று யோசிக்க தவறினார்கள்.
மறுநாள், மேக மூட்டத்துடன் அந்த நாளை ,வரவேற்க சென்னைவாசிகள் தயாராகிக் கொண்டு இருந்தனர்.
மழை நின்று இருந்தாலும், குளிர் சற்று அதிகமாகவே இருக்க, போர்வைக்குள் கோழிக்குஞ்சினை போல் சுருண்டு படுத்துக், கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தாள் மதுரா.
‘காதல் தேசம்’ படத்தின், ‘என்னைக் காணவில்லையே நேற்றோடு’ பாடல் பின்னணியில் ஒலிக்க, அப்பாஸ், வினீத்துக்கு பதில், அங்கு விஜய்யும், சூர்யாவும், தபுவிற்கு பதில், இவளை துரத்திக் கொண்டு இருந்தனர்.
கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்த துரத்தல், இன்றளவும் நின்றபாடாய் இல்லை என்பது தான் ஹைலைட் .
‘அப்பாடா!… ஒரு வழியாய் முடித்தார்கள்.’ என்று இவள் கனவில் பெரு மூச்சு விட்டு நிமிர்வதற்குள், ‘டூயட்’ படப் பிரபு, ரமேஷ் அரவிந்துக்கு பதில், இவர்கள் சோகக் கீதம் பாட ஆரம்பித்தனர்.
‘என் காதலே!…
என் காதலே!…
என்னை, என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன், கண்ணிரெண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள், சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளி விட்டு,
ஏன், தள்ளி நின்று பார்க்கிறாய்?
இனி மீள்வதா?… இல்லை வீழ்வதா?…
உயிர் வாழ்வதா?… இல்லை போவதா?…
அமுதென்பதா?… விஷமென்பதா?…
உன்னை, அமுத விஷமென்பதா?
காதலே!… உன் காலடியில்,
நான் விழுந்து, விழுந்து தொழுதேன்
கண்களை, நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக், குலுங்கி அழுதேன்,
இது மாற்றமா?… தடுமாற்றமா?…
என் நெஞ்சிலே!… பனி மூட்டமா?…
நீ தோழியா?… இல்லை எதிரியா?…
என்று தினமும் போராட்டமா?...’ என்று பாடி வைக்க, கனவில் தலையில் கை வைத்துக் கொண்டு நின்ற மதுரா, இருவரையும் பார்த்துக் கையெடுத்து கும்பிட்டு,
‘ஏய்!… போதும்பா முடியலை…’ என்று முடிப்பதற்குள்,
‘சத்தத்தினால் கொண்ட
பித்தத்தினால்,
காதல் யுத்தத்தினால்,
எமது இரத்தத்தினால்,
கவிதை எழுதி வைத்தேன் தோழி,
இரு கண் இருந்தால் வாசித்துப் போடி.
கண் பார்த்ததும்,
கெண்டை கால் பார்த்ததும்,
உன்னைப் பெண் பார்த்ததும்,
தள்ளிப் பின் பார்த்ததும்,
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை
தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால்,
என்னை நிந்திப்பதால்,
தலையைத் துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ, தீ அள்ளித் தின்ன சொல் தின்பேன்.
உண்டென்று சொல் ,
இல்லை நில் என்று கொல்,
எம்மை வா என்று சொல்,
இல்லை போ என்று கொல்.
இம் என்றால் உள்ளதடி சொர்க்கம்,
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்.’ என்று கவிதையைச் சுட்டு, சொல்லிக் காட்டி, கையில் ஆளுக்கொரு தாலியோடு, இவளை நெருங்கி வந்தனர்.
“கடவுளே!…” என்று அலறியபடி இவள் எழ, இவளை எழுப்பிக் கொண்டு இருந்த பவானி, இவள் அலறிய அலறலில் நான்கு அடி எகிறிக் குதித்தே விட்டார்.
நெஞ்சின் மேல் கை வைத்துத் தன்னைச் சமாளித்து கொண்டவர், “ஏண்டீ!… இப்படி, காலங்காத்தால படுத்தி எடுக்கறே?” என்றார் .
“ஹி… ஹி… ஹி… ஒண்ணும் இல்லைமா… கெட்டக் கனவு. அதான்… பேய்களா வந்துச்சா, அதான் பயந்துட்டேன்… ஹி… ஹி…” என்றாள் மதுரா சமாளிப்பாக .
‘விஜய்யும், சூர்யாவும் உனக்குப் பேய்யா செல்லம்?…
நல்லா வருவே மா நீயி!…’ என்றது அவளின் மனசாட்சி.
“சரி… சரி… கிளம்பு… அஷ்ட லட்சுமி கோயிலுக்குப் போகணும். அர்ச்சனை செய்யணும். சீக்கிரம் ரெடி ஆகு.” என்றார் பவானி .
“என்னமா!… பூஜை புனஸ்கராம் என்று தடபுடல் படுது!…
மிஸ்டர் சங்கரனின், கழன்று இருந்த நட் போல்ட் சரி ஆனதற்கா?…
பாவம் மா கடவுள்!…
கொஞ்சம் அவரும், மத்தவங்களை கவனிக்கட்டும். ஒட்டுமொத்தமாக, நீங்களே குத்தகைக்கு எடுத்தால், எப்படி ஹிட்லர் மேடம்?” என்றவள் அவர் கைகளுக்குச் சிக்காமல் பாத்ரூமிற்குள் ஓடி ஒளிந்தாள்.
அவள் உள்ளே சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பவானி, “பூரணி!… நான் சொன்னதை கேட்டியா?… என்ன சொன்னா?..” என்றார் .
‘பவானி அம்மா சான்ஸ்சே இல்லை. அம்மா என்பதை அடிக்கடி நிரூபிக்கறீங்க.’ என்றது பூரணி மனசாட்சி.
“குழப்பத்தில் இருக்கா அத்தை. ரெண்டு பேருமே நண்பர்கள். யாருக்கு துரோகம் செய்வது என்கிறாள். பெற்றோர்களை எப்படி வேதனை படுத்துவேன் என்றாள். நீங்கக் காட்டும் மாப்பிளைக்கு, நோ ஆப்ஜெக்ஷன் என்று தான் நினைக்கிறன்.” என்றாள் பூரணி .
பெருமூச்சு விட்ட பவானி, “சரிம்மா… கிளம்பி வாங்க.” என்று சொல்லி விட்டு, டிபனை எடுத்து வைக்கச் சென்றார் .
கோயில் என்பதால் வெள்ளை நிற வெண்பட்டில், தயாராகி வந்த மதுராவின் அழகினைக் கண்டவர்கள், ஒரு கணம் உறைந்து தான் போனார்கள்.
‘உத்தமும், ஆல்வினும் சிறந்த நண்பர்கள்’ என்பதை நிரூபிக்க, மற்றவர்கள் அறியாமல், இவளைப் போட்டோ எடுத்து விஜய்க்கும், சூர்யாவிற்கு அனுப்பத் தவறவில்லை.
காலை டிபன் முடித்து, அவர்கள் கிளம்ப மணி எட்டாகி விட்டது .
“அம்மா!… அப்பா எங்கே?” என்றாள் மதுரா.
“ஆபீஸ் விஷயமா போய் இருக்கார். கோயிலுக்கு நேரா வந்துடுவார். கிளம்புங்க. நல்ல நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும்.” என்றவரின் குரலுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் கிளம்பினார்கள் .
கார்த்திக் சும்மா இல்லாமல், “என்ன மதுரா!…. இன்னைக்கு தான் குளிச்சியா என்ன?… அழுக்கு எல்லாம் போய் ரொம்ப வெள்ளையா இருக்கே!” என்றான் .
“மவனே!… வாடி… இன்னைக்கு புல்லா, பூரணிக் கிட்டே எப்படி நெருங்கறே என்று பார்க்கிறேன்… அவ கிட்டே பேசணும். கூட்டி வான்னு ரொமான்ஸ் பண்ண கேட்பே இல்லை… அப்போ இருக்குடீ உனக்கு.” என்றாள் மதுரா.
“ஐயோ, தாயே!… அங்காள பரமேஸ்வரி!… அடி மடியிலே கை வைக்காதே. என் செல்லம் இல்லை.
என் கண்ணுக் குட்டி இல்லை.
என் புஜ்ஜு குட்டி இல்லை.
என் நாய் குட்டி இல்லை.
ப்ளீஸ், ப்ளீஸ் செல்லம்ஸ். இந்தக் கார்த்திக் பாவம் இல்லை…” என்று கெஞ்சலில் இறங்கினான்.
அவன் பிரச்சனை அவனுக்கு.
“இந்த மூளை, முதலிலேயே இருந்து இருக்கணும்… சாரி தம்பி!… punishment confirm.” என்றாள் மதுரா .
“செல்லமா!… நீ யாரு, என்ன… நீ ரொம்ப அழகா இருக்கிறதை தான், அப்படி சொன்னேன். உன்னைப் போய் அசிங்கம் என்று யாராவது சொல்வார்களா!…
ஐஸ்கிரீம் வாங்கி தரேன். பேமிலி பேக். சரவண பவன் கூட்டிப் போறேன். ஒண்டர்லா கூட, ஒரு நாள் கூட்டிப் போறேன்… ப்ளீஸ்!” என்றான் கார்த்திக் .
“சரி, சரி பொழைச்சி போ… பூரணிக்காக விடறேன்… டீல் மறந்தே!… நீ காலிடா. உன் பாஸ்போர்ட் என் கையில்…” என்று கார்த்திக்கை கடுப்படித்த படி, வந்தவளின் கால் வாசற்படியில் மோதத், தடுமாறி விழப் போனவளை பவானியும், கார்திக்கும் விழாமல் பிடித்தனர் .
பவானிக்கு ஒரு கணம் இதயம் நின்று துடித்தது.
‘கிளம்பும் போது, இது என்ன அபசகுனமாய்!…’ என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
காலை எழும்பும் போதே, அவர் மனதில், இனம் புரியாத சஞ்சலம் ஏற்பட்டு இருந்தது.
காய்ச்சிய பால் திரிந்து போனது. எழுப்பிய போதே மகளின் அலறல்.
இப்பொது கிளம்பும் போது கால் இடறல், என்று ஒவ்வொன்றையும் மனம் முடிச்சு போட்டுக் குழப்பியது .
“கிளம்பும் போது கால் இடறுது உள்ளே வந்து உட்கார் மதுரா. தண்ணீர் குடிச்சுட்டு, பத்து நிமிடம் கழிச்சு கிளம்பலாம்…” என்றார் பவானி .
“அம்மா!…” என்ற மதுராவின் சிணுங்கலுக்கு, முறைப்பை பதிலாகக் கொடுத்தவர், “சொல்வதை செய் மதுராக்ஷி.” என்றார் .
அவரிடம் விவாதிப்பதில் பயன் இல்லை என்று புரிந்து கொண்ட மதுரா, அவர் சொல்லியபடியே செய்து பிறகு, பத்து நிமிடம் கழித்தே, கிளம்ப சம்மதித்தார் அதுவும் அரை மனதாகத் தான்.
அன்று செல்லவே, அவருக்கு மனம் இல்லாமல் தான் போய் விட்டது. ஆனாலும், அனைவரையும் கிளம்ப வைத்தப் பிறகு, தன் சஞ்சலத்தைச் சொல்லி நிறுத்த மனம் இல்லாதவராய் கிளம்பினார்.
ஒருவேளை அவரின் பயம், கவலை உண்மையாகப் போகிறது என்பது மட்டும் முன்னரே தெரிந்து இருந்தால், மகளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி இருப்பாரோ!
தன் அறையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த விஜய்யின் மனமும், நிலை இல்லாமல் தான் தவித்துக் கொண்டு இருந்தது.
எழும் போதே, அவன் மனம் அமைதியாய் இல்லை .
ஆல்வினுக்கு அழைத்தவன், “ ஏதாவது பிரச்சனையா என்ன?” என்றான். வீட்டிற்க்கு போய் விட்டு, அப்பொழுது தான் மதுராவின் பாதுகாப்பை ஏற்று இருந்தவரிடம்.
“பிரச்சனையா!… அப்படி எல்லாம் எதுவும் இல்லையே!…எல்லோரும் குடும்பமா பெசன்ட் நகர், அஷ்டலக்ஷ்மி கோயிலுக்குக் கிளம்பட்டு இருக்காங்க. நானும், உத்தமும் கூடவேத் தான் போறோம். ஏன், ஏதாவது நியூஸ் வந்ததா என்ன ?” என்றான் ஆல்வின் .
“நத்திங்… யு கேர்ரி ஆன்…” என்றவனின் குரலில், சுரத்து இல்லை என்பதை கண்ட ஆல்வின், மதுராவைத் தான் எடுத்தப் புகைப்படத்தை அனுப்பி வைத்தான்.
ஒருவேளை நடக்க போவதிற்கான, ‘எச்சரிக்கை தான் தங்களின் மனசஞ்சலம்’ என்பதை பவானி, விஜய் இருவருமே உணரத் தவறி விட்டார்களோ!
விதியும், தன் விளையாட்டை ஆரம்பித்து இருந்தது. பலரின் வாழ்வை மாற்றப் போகும், அணுகுண்டு மதுராவால் வெடிக்க வைக்கப்பட, ஆயுத்தப் பணி, ‘பெசன்ட் நகர், அஷ்டலக்ஷ்மி கோயிலில்’ இவளுக்காகக் காத்து இருந்தது புதிதாய் இருவர் வடிவில் .
உத்தமின் கார் முன்னே செல்ல, நடுவே கிளம்பிய பொலிரோவை பாலாஜி ஓட்ட அவன் அருகே சுபா, நடு இருக்கையில் பவானி, மதுரா, பூரணி, பின் இருக்கையில் கார்த்திக், ரகு அமர்ந்து இருக்க, பின்னால் வந்த காரினை ஆல்வின் ஓட்டி வந்தான் .
ஏதோ, V.I.P கார் பரேட் போவது, போன்ற அணிவகுப்பு அது.
இவர்கள் கோயிலுக்குச் சென்று கொண்டு இருக்க, சங்கரனோ சூர்யாவின் முன் அமர்ந்து இருந்தார்.
அவ்வளவு காலையில், அவரைத் தன் வீட்டில் சூர்யா எதிர்ப்பார்க்கவில்லை .
“என்ன அங்கிள்!… ஏர்லி மார்னிங் வந்து இருக்கீங்க?… எனி ப்ரோப்லேம்?” என்றான் .
‘குடும்பமே கோயிலுக்குச் சென்று கொண்டிருப்பதாகத் தானே சற்று முன் உத்தம் போன் செய்து சொன்னார். இவர், அவர்களுடன் போகாமல் தன் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று குழம்பிப் போனான் சூர்யா.
“உங்கக் கிட்டே, இதை நான் எதிர் பார்க்கவில்லை தம்பி. பிறகு உங்களுக்கும், அந்தச் சுமனுக்கும் என்ன வித்தியாசம்?” என்ற சங்கரனின் குற்றசாட்டு, சூர்யாவை அதிர வைத்தது .
“புரியலை அங்கிள்!… எந்த விதத்தில் நான் சுமன் மாதிரி, பிஹேவ் செய்தேன் என்று சொல்றீங்க?” என்றான் மனதில் அடி வாங்கியவனாக .
“எனக்கு, உங்க அலுவலகத்தில் வேலை, என் மனைவிக்குப் பிரின்சிபால் உத்தியோகம், என் மகனுக்குச் சென்னை ட்ரான்ஸபெர், என் மகளுக்கு வேலை… இங்கே பங்களா என்று ஒட்டுமொத்தமாக எங்களைச் சென்னைக்கே வரவழைத்தது எந்த நல்ல எண்ணத்தில்?
உங்கள் கண் பார்வையில், என் மக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே!…
இது எதற்கான விலை தம்பி?” என்றார் சங்கரன் .
சூர்யாவின் முகம், கற்பாறையாக இறுகி விட, கை முஷ்டிகளை அழுந்த மூடியவன், கண்களை மூடி, மூச்சினை ஆழ்ந்து இழுத்து, ஒன்று முதல் பத்து வரை எண்ணி, கோபம் சற்று மட்டு பட்டப் பிறகே பேச ஆரம்பித்தான் .
“இவ்வளவு கேவலமாக, மதுராவை பேசியது நீங்களாக இருப்பதால் பிழைச்சீங்க அங்கிள்.
வேறு எவனாவது இருந்தால், குடலை இந்நேரம் உருவி இருப்பேன்.
மதுராவிற்கு நான் விலை வைக்கிறேனா?
ஒன்று சொல்லுங்க, மதுராவிற்கு அவள் குணத்திற்கு, அன்புக்கு, அந்த நல்ல மனதிற்கு யாராவது விலை வைக்க முடியுமா!…
அப்படி விலை போகிறவள் தான் அவளா அங்கிள்?
தேவதையை, ஆராதிக்கத் தான் அங்கிள் முடியும். மதுரா தேவதை பெண்.
அவளுக்குப் போய், விலை அது, இதுன்னு. நான் நல்ல எண்ணத்தில் தான் செய்தேன் அங்கிள்.
என் மனைவி ரித்திகாவின் நிலை, மதுராவிற்கு வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்.
நானும், விஜய்யும் சென்னையில் தான் இருக்கோம். எங்கத் தொழில் எல்லாம் இங்கே தான் இருக்கு. மதுராவை குன்னூருக்கு அனுப்பிவிட்டு எவ்வளவு நாளுக்குத் தான் ஆட்களை அனுப்ப முடியும் .
இல்லை வேலை விட்டு, எங்க இரண்டு பேராலும், அங்கேயே தங்க முடியுமா? ப்ராக்டிகலா யோசிங்க.
சென்னை என்றால் நான் இருக்கேன். என் கவனம் சிதறினாலும், விஜய் இருக்கான். சிவகாமி பாட்டி இருக்காங்க.
மாத்தி, மாத்தி எங்களால் காவல் இருக்க முடியும். நான் உத்தம் எல்லாம் வெளியே இருந்து தான் காவல் இருக்க முடியும்.
சுபா ப்ரெக்னெண்ட்டா இருக்கும் சமயத்தில், நீங்க, ஆன்ட்டி, ரகு, கார்த்திக் தான், கூடவே இருக்க முடியும் 24 மணி நேரமும்.
பங்களாக் கூடச் செக்யூரிட்டி ரீசன்காகத் தான் அங்கிள் ஏற்பாடு செய்தேன். அது போஷ் ஏரியா. உள்ளே காம்பவுண்டுக்குள் வர வேண்டும் என்றாலே, பல சிசிடிவி, செக்யூரிட்டி செக், தாண்டித் தான் யாருமே உள்ளே வர முடியும்.
மதுரா என்னை நன்றாகப் புரிந்தவள் அங்கிள். அதனால் தான், இன்று வரை, என் சட்டையைப் பிடித்து, ‘இது எல்லாம் எதற்கான விலை?’ என்று, உங்களை மாதிரி கேட்கவே இல்லை.
அவளுக்குத் தெரியும் என்னைப் பற்றி. நான் வெயிட் செய்வது, ஊர் அறிய, உலகம் அறிய மதுராவை, என் மனைவி ஆக்கத் தான் அங்கிள்.
வேற தவறான எண்ணத்தில் இல்லை.
நான் காத்து இருப்பது, ‘மதுராவின் சம்மதம்’ என்ற ஒரு வார்த்தைக்காக மட்டுமே!
ஒரு முறை மதுராவை இழந்து, நான் தவித்த நரகம் போதும். அவளை மறக்கவும் முடியாமல், என்னை நம்பி மணந்தவளுக்கு, துரோகம் செய்யவும் முடியாமல், பைத்தியம் பிடிக்காதக் குறையாய் நான் அலைந்து இருக்கிறேன்.
இன்னொருத்தியை மணந்து இருந்தாலும், மதுராவின் மீது இருக்கும் என் காதலுக்கு, யாரின் அக்மார்க் முத்திரையும் எனக்குத் தேவையில்லை.
என் மனதிற்கு தெரியும் என் காதலின் அளவு .
முடிவு மதுரா கிட்டே தான் இருக்கு. சரி என்றாலும், இல்லை என்றாலும், என் கடைசி மூச்சு உள்ளவரை, அவளின் நண்பனாகத் தான் இருப்பேன் அங்கிள்.
அவளைக் காதலிக்கும் முன்பு இருந்தே, பெஸ்ட் தோழி அங்கிள். என் தோழியே, எனக்கு மனைவியாக வந்தால், என்னை விட வேறு பாக்கியம் செய்தவன் யாரும் இல்லை.
‘பெஸ்ட் தோழி’ அது என்றுமே மாறாது. என் மதுராவை, யார் தவறாக ஏன், அவ பெற்றோர் ஆக இருந்தாலும், பேச அனுமதிக்க முடியாது.” என்று கர்ஜித்தவனை கண்டு, சங்கரன் வெலவெலத்துப் போனார் .
‘பெண்ணிற்கு ஒரு சிறந்த ஆண் நண்பனாய் கிடைப்பது’ என்பது வரம். எல்லா பெண்களுக்கும், ‘உண்மையான, ஆத்மார்த்தமான இப்படியொரு நட்பு’ கிடைக்காது.
‘அந்த வரம் மதுராவிற்கு, இருவர் மூலம் கிடைத்து இருக்கிறது’ என்பதை அந்தத் தந்தை, அந்த நிமிடம் உணர்ந்தார்.
பெண்ணிற்கு நல்ல கணவன், காதலனாக இருப்பதை விட, சிறந்த நண்பனாய், வழிகாட்டியாய் அமைந்து விட்டால், அதை விடச் சுவர்க்கம் இந்தப் பூமியிலிருந்து விட முடியுமா என்ன!
‘பவானிக்கு தான் அத்தகைய நண்பனாக என்றாவது இருந்து இருக்கிறோமா!’ என்று யோசித்த சங்கரன், சராசரி கணவன்மார்களை போல் தான், ‘சிறந்த கணவனாகவே இல்லாத போது, ‘எப்படி சிறந்த நண்பனாக’ இருந்து இருக்க முடியும்’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை .
‘இல்லறம்’ என்பது காதல், காமம், கடமையின் சங்கமம் மட்டும் இல்லை. அங்குப் புரிந்துணர்வு, நட்பும் இருப்பது அவசியம்.
தோள் தாங்கும் தோழமையும் வேண்டும்.
கல்லூரியில் அனைத்துமாய் அமையும் தோழமை. கட்டிய கணவனையோ, மனைவியையோ தனக்குச் சமமாக ஏற்கும் தோழமை.
‘எல்லாமாக நான் இருப்பேன்’ என்ற நம்பிக்கை கொடுக்கும் தோழமை.
‘தன் மகள் பாக்கியம் செய்தவள். இப்படி சிறந்த தோழர்கள் கிடைப்பதற்கு.
தன் மனைவித் தான், வேண்டாததை எல்லாம் போட்டுக் குழப்பிக் கொண்டு இருக்கிறாள்.
இவர்கள் இருவரில், யார் கணவனாக மதுரா தேர்ந்து எடுத்தாலும், அவளின் வாழ்வு மிக சிறப்பாக அமைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இருவரைத் தவிர, மதுராவை உள்ளார்த்தமாகப் புரிந்து கொண்டு, அவளின் வாழ்க்கையை சிறக்க வைக்க வேறு யாராலும் முடியாது.’ என்று எண்ணியவர் பெருமூச்சு விட்டு,
“மன்னிச்சுடுங்க தம்பி!… மகளின் வாழ்வு என்றதும் பதறிப் போனோம். மஹாப்பெரும் பாவம் தான், உங்களைச் சுமன் உடன் இணைக் கூட்டிப் பேசியது.
ஆனா, நீங்க எதை நினைத்தாலும் அதை எப்படியாது அடைந்தே தீருவீர்கள். மற்றவர்களின் எண்ணத்திற்கு, மதிப்பு தர மாட்டிர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கோம்.
‘உங்களிடம், கருணையை எதிர் பார்க்கவே முடியாது’ என்று கூடத் தான்.
அதான், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இங்கேயே கொண்டு வந்த முறை, தவறாக எண்ண வைத்து விட்டது.
இதற்கு, ‘இப்படியும் விளக்கம் இருக்கும்’ என்று யோசிக்க மறந்து விட்டோம்.
மன்னிச்சுடுங்க தம்பி. உங்க நல்ல மனசு புரியாமல்…” என்றார் சங்கரன் .
“லுக் அங்கிள்!… நீங்கக் கேள்விப்பட்டது, 100% உண்மை தான். எனக்குத் தேவையானதை, எல்லா விஷயத்திலும் அடைந்தே தீருவேன் தான். நான் நினைத்தது நடக்காமல், இருக்க விட்டதும் இல்லை தான்.
நீதி, நேர்மை, நியாயம், அநியாயம், கருணை, பாவம் எல்லாம் பார்ப்பவன் இல்லை தான்.
ஆனால், இதற்கு ஒரே விதிவிலக்கு மதுரா மட்டும் தான்.
அவள் மேல், எந்த அளவுக் காதல் இருக்கிறதோ, அதே அளவு, நட்பும் இருக்கு. மரியாதையும் இருக்கு அங்கிள்.
என்றுமே, அவள் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்படுபவன் நான் அங்கிள். அவளை மீறி, அவள் மனம் நோகும் வண்ணம் என்றுமே நான் செயல்பட்டதும் இல்லை.
இனி செயல்படப் போவதும் இல்லை.
என்னால் ஒரு உத்திரவாதம், சத்தியமே கூடச் செய்து தர முடியும். ஏன் எழுதியே வேண்டும் என்றாலும் தந்து விடுகிறேன்.
மதுராவிற்கு, என்னாலும், விஜய்யாலும் என்றுமே, கெடுதல் என்ற ஒன்று வரவே வராது அங்கிள்.” என்றான் சூர்யா.
இதற்கு மேல் அவரால் என்ன பேச முடியும்!
மன பாரத்தோடு வந்தவர், யோசனையுடன் கிளம்பினார் கோயிலை நோக்கி.
‘பவானியிடம், இது பற்றி நிறைய பேச வேண்டி இருக்கும் என்பதையும், மதுரா எந்த முடிவு எடுத்தாலும், அதற்குத் தான் துணை நிற்க வேண்டும் என்பதையும், புதிதாக வரன் கொண்டு வருவது தேவை அற்ற வேலை’ என்றும் முடிவு செய்து கொண்டு, தன் காரினை பெசன்ட் நகர் நோக்கித் திருப்பினார்.
தவம் தொடரும்…






Next episode sekirama upload pannunga
started again