அத்தியாயம் 03
அத்தியாயம் 03
அன்றைக்கு வெள்ளிக்கிழமை. வீட்டில் மூன்று பிள்ளைகளும் இருந்ததால் சமையலை அமர்க்களப்படுத்தியிருந்தார் சல்மா. வெள்ளிக்கிழமை மதியத் தொழுகை முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அன்றைக்குக் கிழக்கிலங்கைப் பகுதிகளில் அநேகமாக கடைகள் மதியத்திற்கு மேல் இருக்காது. முஸ்லிம் பாடசாலைகளும் அரை நாளோடு தங்கள் பணியை முடித்துக் கொள்ளும்.
இன்றைக்குக் கல்வியில் கிழக்கு மாகாணம் மிகவும் முன்னேறி இருந்தாலும் ஒரு காலத்தில் மீன்பிடித் தொழிலையும், நெசவையும், விவசாயத்தையும் மாத்திரமே நம்பியிருந்தது. அப்போது முதல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு விடுமுறை கிடையாது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெள்ளிதான் விடுமுறை நாள். ஆண்கள் பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காகச் செல்ல வீடுகளில் பிரியாணி, நெய்ச்சோறு என வாசம் மூக்கைத் துளைக்கும்.
அன்று மதியத்திற்கு மேல் முக்கியமான விரிவுரைகள் எதுவும் இல்லாததால் ஆல்யாவும் வீட்டிற்கு வந்துவிட்டாள். பெண்கள் இருவரும் தங்கள் தொழுகையை முடித்துவிட்டு அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
“அப்பாவும் அண்ணாவும் வந்ததும் எல்லாத்தையும் எடுத்து மேசையில வெச்சிடுங்க, நான் சீக்கிரமாத் தொழுதுட்டு வந்திடுறேன்.” சல்மா சொல்லவும் பெண்கள் இருவரும் சமத்தாகத் தலையை ஆட்டினார்கள்.
“டிகிரி முடிச்சிட்டு என்ன பண்ணப்போறே ஆல்யா?”
“தெரியலைக்கா, நான் அதைப்பத்தியெல்லாம் ரொம்ப யோசிக்கலை.”
“ம்… நான் மேல படிக்கணும், ஸ்பெஷல் பண்ணணும்.” என்றவளின் கண்களில் கனவு மிதந்தது.
“அப்பாக்கிட்டப் பேசிட்டீங்களா?”
“ம்ஹூம், இன்னும் இல்லை, ஃபோன்ல பேசுற விஷயமில்லை இது, இன்னைக்கு எப்பிடியாவது நேர்ல பேசிடணும், அதுக்குத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.”
“அம்மா எப்பிடியும் இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்கக்கா.”
“அது தெரிஞ்ச விஷயந்தானே, ரஷ்யா போறதுக்கு அம்மா சம்மதம் சொன்னாங்களா என்ன? ஆனா நான் போகலை? அது மாதிரித்தான் இதுவும், அதுசரி, அமர் இந்தப் பக்கம் வந்தாரா?” ஆவலாக வந்த கேள்வி இளையவளைப் பதம் பார்த்தது.
“ம்… அன்னைக்கு வந்தாங்க.”
“எப்பிடி இருக்காரு? அவரோட கேட்டரிங் பிஸினஸ் நல்லாப் போகுதாம், இஷான் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அந்த மனுஷனோட புகழ் பாடுறான்.”
“அப்பா வந்துட்டாங்கப் போல.” வராத அப்பாவைத் தேடிக்கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டாள் ஆல்யா. மனம் படபடவென அடித்துக் கொண்டது. இந்த அக்கா ரஷ்யாவிலேயே இருந்திருக்கலாம். எதற்காக இங்கு வந்திருக்கிறாள்? எண்ணம் தவறாக இருந்தாலும் அப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால். சிறிது நேரத்தில் பள்ளிவாசலுக்குப் போயிருந்தவர்கள் வந்துவிட வீடு சாப்பாட்டு மேசையில் கூடியது.
“அப்புறம் மஹி, என்ன முடிவெடுத்திருக்கே? எப்போ கல்யாணத்தை வெச்சுக்கலாம்?” கரீம்தான் பேச்சை ஆரம்பித்தார்.
“அதைப்பத்தி நானே உங்கக்கூடப் பேசணும்னு நினைச்சிருந்தேன்பா.”
“சொல்லும்மா.” இப்போது கரீம் தன் மனைவியை ஒரு பார்வைப் பார்த்தார். சல்மாவின் கண்களிலும் இலேசான கலக்கம் தோன்றியது. ஆனாலும் வாய் திறந்து பேசிவிடவில்லை. மகள் என்ன சொல்ல வருகிறாள் பார்க்கலாம் என்று அமைதியாகப் பரிமாறினார்.
“அப்பா… கல்யாணத்தை நீங்க எப்ப வேணும்னாலும் வெச்சுக்கோங்க, நாளைக்குன்னாலும் எனக்கு ஓகே, ஆனா… அதுக்கப்புறம் நான் மேல படிக்கணும்பா.” மகளுக்குச் சட்டென்று பதில் சொல்லாமல் அமைதியாக உண்டு கொண்டிருந்தார் கரீம். சல்மாவும் இதற்குக் கணவனின் பதில் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அமைதியாகத் தன் உணவை உண்ண ஆரம்பித்தார்.
“படிக்கலாம்மா, அது ஒன்னும் பெரிய விஷயமில்லை, கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு அப்புறமாப் படிக்கலாம், நான் அமர்கிட்டப் பேசுறேன்.”
“நான் மேல படிக்கிறதுக்கு நீங்க எதுக்குப்பா அவங்கக்கிட்டப் பேசணும்?” அந்தக் கேள்வியில் ஆல்யா தவிர மற்றைய மூவரும் கொஞ்சம் நிதானித்தார்கள். தங்கள் பெண் பெண்ணியம் பேசுகிறாள் என்று புரிந்தது. இஷானின் முகத்தில் சட்டென கோபம் துளிர்த்தது. சல்மாவின் முகமும் கடுகடுத்தது. ஆனால் கரீம் நிதானமாக விஷயத்தைக் கையாண்டார்.
“அப்பிடியில்லைம்மா, கல்யாணத்துக்கு அப்புறமாச் செய்யுற எந்த விஷயத்தையும் நாம அமர்கிட்ட ஆலோசிக்கிறது நல்லது, ஏன்னா இதுல அவனோட வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு.”
“சரிப்பா, அப்போ நீங்கப் பேசிடுங்க.”
“கல்யாணத்துக்கு அப்புறமா நீ அமர் வீட்டுக்குத்தான் போக வேண்டியிருக்கும் மஹி, வீட்டைப் பெருசா எடுத்துக் கட்டணும்னு அவன் முடிவு பண்ணியிருக்கான்.” இது இஷான்.
“இது என்னப்பா புதுசா இருக்கு? இதைப்பத்தி அமர் எங்கிட்ட எதுவும் சொல்லலையே!”
“இல்லைப்பா, அவன் எங்கிட்ட இதைப்பத்திப் பேசிட்டான், கல்யாணத்துக்கு அப்புறமா மஹி அவங்க வீட்டுலதான் போய் இருக்க வேண்டியிருக்கும், அவங்க வீட்டைக் கல்யாணத்துக்கு முன்னாடி திருத்திக் கட்டப்போறானாம், இதை மாமாக்கிட்ட நீயே சொல்லிடுன்னு எங்கிட்டச் சொன்னான்பா.” இப்போது கரீம் தன் மனைவியைப் பார்த்தார். சல்மாவின் முகமும் குழப்பத்தையே காட்டியது.
“திருத்திக் கட்டினாலும் நம்ம வீடு போல அவங்க வீடு வராதுண்ணா.”
“வருதோ இல்லையோ, நீ அங்க போய்தான் வாழ வேண்டியிருக்கும்.” கறாராகச் சொன்னான் அண்ணன்.
“இதென்ன? கல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனைக் கண்டிஷன் போடுறாரு?”
“ஏன்? இப்போ நீ போடலை? கல்யாணத்துக்கு அப்புறமா நான் படிக்கணும்னு?” இஷான் முகத்தைச் சுருக்கினான்.
“படிக்கிறது ஒரு தப்பா?”
“இல்லைதான், ஆனா அதை நீ மச்சான்கிட்டப் பேசணும், ஆலோசனைப் பண்ணணும், நான் படிக்க எதுக்கு அவன்கிட்டக் கேட்கணும்னு கேட்கிறே? உனக்கு மனசுல ஆசைகள் இருக்கிற மாதிரி அவனுக்கும் வரப்போறவளைப் பத்தி நிறையக் கனவுகள் இருக்கும், அதையேன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கிறே!” இஷான் பல்லைக் கடித்தான். ஒரு ஆண்பிள்ளையாக அமரின் கோரிக்கையை அவன் தவறாக எடுக்கவில்லை. ஆனால் தன் தங்கையின் பேச்சு அவனுக்கு அத்தனை நல்லதாகப் படவில்லை. கல்யாணம் என்ற பேச்சுக்குத் தான் சம்மதிக்காவிட்டால் தன்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதற்காக இவள் சம்மதிக்கிறாளா? இதனால் பாதிக்கப்படப் போவது அமரின் வாழ்க்கையும் அல்லவா!
“அப்பா, நான் ஸ்பெஷல் செய்யுறதா இருந்தா லண்டன் போகணும்.” அடுத்த குண்டை மகள் தங்கள் தலையில் அமைதியாகத் தூக்கிப் போடவும் சல்மா கொதித்துவிட்டார்.
“உம்மனசுல நீ என்னடீ நினைச்சுக்கிட்டு இருக்கே? ஏதோ படிக்கணும்னு ஆசைப்பட்டேன்னு கண் காணாத தேசத்துக்கு அனுப்பி வெச்சா நீ ஆடிப் பார்க்கிறியா? இதுக்குத்தான் உங்கக்கிட்ட அப்பவே சொன்னேன், படிப்பாவது மண்ணாங்கட்டியாவதுன்னு! இப்போ பார்த்தீங்கல்லை இது எங்க வந்து நிற்குதுன்னு?”
“சல்மா, கொஞ்சம் பொறுமையா இரு, ஏம்மா? ஸ்பெஷல் பண்ண எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்? அதை நம்ம நாட்டுல பண்ண முடியாதா?”
“இங்கப் பண்ணுறதா இருந்தா அஞ்சு வருஷ சர்வீஸ் வேணும்பா, ஆனா அங்க அப்பிடியில்லை, அஞ்சு வருஷத்தை வேஸ்ட் பண்ண நான் தயாரால்லை.”
“இதுக்கு அமர் ஒத்துக்கணுமே?”
“ஒத்துக்கிட்டா நல்லது, இல்லைன்னா வேற மாப்பிள்ளைப் பாருங்கப்பா.” அசால்ட்டாகச் சொன்னவள் அத்தோடு எழுந்து தனது அறைக்குப் போய்விட்டாள். அங்கிருந்த அத்தனைப் பேரும் மஹியின் பேச்சில் திகைத்துப் போனார்கள். ஆல்யாவின் முகத்தில் மெல்லிய கீற்றாக ஒரு புன்னகை மலர்ந்தது.
“அப்பா, இந்தப் பேச்சை இதோட நாம நிப்பாட்டுறது நல்லது, இவ ரொம்ப சுயநலமா இருக்கா, இவளால அவனோட வாழ்க்கையும் சீரழிஞ்சு போயிடும், இவளைக் கட்டிக்கிட்டு அவன் சந்தோஷமா இருக்க மாட்டான்.”
“என்னடா இஷான் இப்பிடிப் பேசுறே?!”
“இல்லைப்பா, அமர் நம்மளை ரொம்ப நம்புறான், மாமா வீடு நமக்கு நல்லது மட்டுந்தான் பண்ணும்னு அவன் நினைக்கிறான்.”
“நாம நல்லதுதானே இஷான் பண்ணுறோம்?”
“இல்லைப்பா, இவ்வளவு நாளும் நானும் அப்பிடித்தான் நினைச்சேன், ஆனா மஹியோட பேச்சு எல்லாமே ஒரு தினுசா இருக்கு, எவ்வளவு சுலபமா வேற மாப்பிள்ளைப் பாருங்கன்னு சொல்லிட்டுப் போறா, அப்போ அவ மனசுல அவனைப் பத்தின எந்த எண்ணமும் இல்லைன்னுதானே அர்த்தம்? ஆனா அவன் அப்பிடியில்லைப்பா, அவனோட மனசுல நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு, அதுக்கு மஹி நியாயம் செய்வான்னு எனக்குத் தோணலை, அவங்க அம்மா அப்பா உயிரோட இருந்திருந்தா அவங்கப் பையனுக்கு எப்பிடிப் பொண்ணு பார்த்திருப்பாங்கன்னு சுயநலமில்லாம யோசிச்சுப் பண்ணுங்கப்பா.”
“அந்தப் பையன் ரொம்ப நல்ல பையனேடா!” இது சல்மா. அவருக்கு எப்படியாவது தன் மகளை அமருக்குக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை.
“உங்க மக குடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கோங்க, படிப்பு மட்டுந்தான் வாழ்க்கைன்னு உங்கப் பொண்ணு நினைக்கிறா, ஆனா ஒரு கட்டத்துல தான் எவ்வளவு நல்ல வாழ்க்கைய இழந்திருக்கோம்னு அவ வருத்தப்படுவா.”
“அவசரப்படாதே இஷான், அப்பா முதல்ல இதையெல்லாம் அமர்கிட்டப் பேசிப் பார்க்கட்டும், ஒருவேளை அமர் இதுக்கெல்லாம் சம்மதம் சொல்லிட்டா?”
“ஏம்மா? இதே மாதிரி ஒரு பொண்ணு எனக்கு ஆயிரம் கண்டிஷன் போட்டா நீங்க சந்தோஷமாத் தலையை ஆட்டுவீங்களா? ஒரு மாமியாரா உங்களோட ரியாக்ஷன் எப்பிடி இருக்கும்?” அந்த ஒரு கேள்வியில் சல்மாவின் தலை குனிந்து போனது.
“அமர்கிட்டப் பேசுங்கப்பா, நான் வேணாம்னு சொல்லலை, ஆனா உங்கப் பேச்சு நியாயமா இருக்கணும், அவனை நீங்க வற்புறுத்தக் கூடாது, மாமா சொன்னா அவன் மறுக்கமாட்டாங்கிற நிலையை நீங்க அவனுக்கு உண்டுபண்ணக் கூடாது.”
“மஹி கல்யாணத்தை முடிச்சுட்டு இந்த வருஷம் நானும் உங்கம்மாவும் ஹஜ்ஜுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன், இவ்வளவு பணத்தைச் சேர்த்து வெச்சுட்டு இன்னும் அந்தக் கடமையை முடிக்காம நாங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்கோம், இந்தப் புள்ளைங்களுக்கு இதெல்லாம் ஏன் புரிய மாட்டேங்குது!”
“உங்க மூத்த பொண்ணு எப்பதான் சுயநலமில்லாம யோசிச்சிருக்கா? உங்கப் பொண்ணுங்களுக்குன்னு ஆண்டவன் விதிச்சிருக்கவன் இனிமேலா பொறந்து வரப்போறான்? இவங்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காம நீங்க உங்கக் கடமைகளைச் செய்யுங்கப்பா.” அதற்கு மேல் அங்கு இஷான் இருக்கவில்லை. எழுந்து போய்விட்டான். சந்தோஷமாக ஆரம்பித்த பேச்சு இப்படி முடிந்து போனதில் பெற்றவர்கள் இருவரும் அலமலந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்.
***
அந்த ப்ளாக் ஆடியை தன் ஆஃபீஸின் முன்பாக நிறுத்திவிட்டு இறங்கினான் அமர். வெள்ளை நிற வேஷ்டியில் இள நீலநிற பார்டர், அதே நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்தான். அன்று வெயில் அதிகமாக இருந்ததால் அணிந்திருந்த சன் கிளாஸை கழட்டி சட்டையில் சொருகிக் கொண்டவன் உள்ளே வந்தான்.
இன்றைக்கு ஒரு முக்கியமான சமையல் கலை நிபுணரைச் சந்திப்பதாக ஏற்பாடாகி இருந்தது. இவர்கள் ஏரியாவில் ஒரு திருமணம். ஆனால் மாப்பிள்ளை வீடு மத்திய மலைநாட்டைச் சேர்ந்தவர்கள். அதனால் அந்தப் பிரதேசத்தின் உணவுப் பொருட்கள் விருந்தில் அதிகம் இருக்க வேண்டும் என்று பெண் வீடு விரும்பியது. அதற்காக மத்திய மலைநாட்டைச் சேர்ந்த பிரபலமான ஒரு நபரை அமர் வரவழைத்திருந்தான். இன்றைக்குத்தான் அவர் வருவதாக ஏற்பாடாகி இருந்தது.
“அண்ணா! செஃப் வந்துட்டாங்களா?” சத்தமாகக் கேட்டபடி உள்ளே வந்தவன் சட்டென நின்றான். ஏனென்றால் வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அவன் மாமனது இரு பெண்களும் அமர்ந்திருந்தார்கள். இவனைக் கண்டதும் இருவரும் எழுந்து நின்றார்கள்.
“வாங்க… ஒரு ஃபோன் பண்ணியிருந்தா நானே வீட்டுக்கு வந்திருப்பேனே!” என்ன பேசுவதென்று தெரியாமல் பேச்சை ஆரம்பித்தான் அமர். ஆனால் அந்தக் குழப்பம் எல்லாம் அவனுக்குத்தான் என்பது போல சரளமாகப் பேச ஆரம்பித்தாள் மஹிரா.
“உங்கக்கூடப் பேசணும், ஆஃபீஸ் எங்க இருக்குன்னு எனக்குத் தெரியலை, அதான் ஆல்யாவையும் கூட்டிக்கிட்டு வந்தேன்.”
“உள்ள வாங்க.” இவன் அழைக்கவும் மஹிரா அவனோடு கூட நடந்தாள்.
“அக்கா, நான் வரலை, நீ போய் பேசிட்டு வா, நான் இங்கேயே இருக்கேன்.” இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு முணுமுணுத்தாள் இளையவள்.
“என்னாச்சு ஆல்யா?” இது அமர். அவனுக்கு மஹிராவின் முகம் பார்த்துப் பேசத்தான் ஒரு மாதிரியாக இருந்தது. ஆல்யாவோடு இலகுவாகப் பேச முடிந்தது.
“இல்லை… எனக்குக் கொஞ்சம் படிக்கணும், மத்தியானம் எக்ஸாம் இருக்கு… அக்கா கூப்பிட்டாளேன்னு வந்தேன்.” சட்டென்று தோன்றிய பொய்யைச் சொன்னது பெண். அக்கா கூட அழைத்த போது அவளால் மறுக்க முடியவில்லை. அவள் சொன்ன இடத்திற்கு அழைத்து வந்துவிட்டாள். ஆனால் அவர்கள் இருவரையும் அருகருகே வைத்துப் பார்க்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. இது போதாதென்று அவர்கள் பேசும் அழகை வேறு கண்டுகளிக்க வேண்டுமா!
“எதுக்கு மஹி படிக்கிற பொண்ணை டிஸ்டர்ப் பண்ணினே? கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே.”
“அது பரவாயில்லை… நீங்க போய் பேசுங்க.” என்றவள் ஒரு புத்தகத்தை எடுத்து அதற்குள் தலையைப் புகுத்திக் கொண்டாள். அமரின் பிரத்தியேக அறைக்குள் போனவர்கள் பதினைந்து நிமிடம் கூட பேசியிருக்க மாட்டார்கள். அவசரமாக வெளியே வந்த தன் அக்காளைப் பார்த்த போது ஆல்யா எழுந்து நின்றுவிட்டாள்.
“போகலாம் ஆல்யா.” அமர் வெளியே வருவதற்கு முன்பாக தங்கையை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள் பெரியவள். அவர்கள் என்ன பேசினார்கள், என்ன ஆனது, எதைப்பற்றியும் இளையவள் கவலைப்படவில்லை.
“அக்கா, நீ வீட்டுக்குப் போ, நான் அப்பிடியே கிளம்புறேன், எனக்கு எக்ஸாம் இருக்கு.” என்றவள் திரும்பியும் பார்க்காமல் போய்விட்டாள். பல்கலைக்கழகம் வந்த பிற்பாடும் ஆல்யாவின் மனது அமைதிப்படவில்லை. நேற்று வீட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளை இவள் அறிவாள் என்பதால் எதற்காக இப்போது அக்கா, அமரைப் பார்க்கப் போயிருப்பாள் என்று அவளால் யூகிக்க முடிந்தது. தன் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள் என அனைத்தையும் அவரிடம் பேசியிருப்பாளா? அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
ஆனால் அமர் தனது ஆஃபீஸ் அறையில் மஹிராவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறியது இளையவளுக்குத் தெரியாது. அன்று ஏற்கனவே அவன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு அவனை அழைக்கவும் தன் சொந்தப் பிரச்சனையைத் தூக்கித் தூர வைத்துவிட்டுத் தொழிலில் தன் கவனத்தை முதலில் செலுத்தினான். அவன் நினைத்தது போல அனைத்தும் நடந்துவிட எப்போதும் போல அனைத்தையும் பட்டியல் போட்டு ஒழுங்கு பண்ணியவன் மீண்டும் தனது அறைக்குள் வந்து அமர்ந்தான். சரியாக அந்நேரம் அவனது அலைபேசி சிணுங்கியது.
“சொல்லுடா மச்சான்.” இஷான்தான் அழைத்திருந்தான்.
“பிஸியா இருக்கியா? உங்கூடப் பேசணும், எங்க இருக்கே நீ?”
“ஆஃபீஸ்லதான், என்ன? இன்னைக்கு உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் என்னைப் பார்க்கிறதெங்கிற முடிவுல இருக்கீங்களா?”
“யாரைச் சொல்றே? மஹி உன்னைப் பார்க்க வந்தாளா?!”
“ரெண்டு அம்மிணிங்களும் இப்போ இங்க வந்தாங்க, நீ சொல்லு மச்சான்.”
“என்னடா பேசினா?” இஷானின் கேள்விக்கு அமர் சட்டென்று பதில் சொல்லாமல் சிறிது மௌனம் சாதித்தான்.
“மச்சான், மனசுல இருக்கிறதைத் தெளிவாச் சொல்லுடா, எனக்கு என்னோட தங்கச்சி முக்கியம் எங்கிற மாதிரி நீயும் முக்கியம்டா, இது உன்னோட வாழ்க்கை, அதை யாருக்காகவும் நீ விட்டுக் குடுக்கணும்னு அவசியமில்லை.” பின்னால் நிகழ இருக்கும் விளைவுகள் புரியாமல் வார்த்தைகளை விட்டான் இஷான்.
“மச்சான், மஹி சொல்ற எல்லாத்துக்கும் என்னாலத் தலையாட்ட முடியாதுடா.”
“இங்க யாரும் உன்னை அப்பிடித் தலையாட்டச் சொல்லலை, நான் உண்மையைச் உடைச்சுப் பேசுறேன் மச்சான், உனக்கு மஹி செட்டாகமாட்டா, ஆனா உம்மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெளிவாத் தெரியணும், உனக்கு மஹி மேல லவ்வு கிவ்வுன்னு ஏதாவது இருந்துச்சுன்னா தாரளமாச் சொல்லு, நான் அவ மனசை மாத்த ட்ரை பண்ணுறேன்.”
“ஆரம்பத்துல இருந்தே இது சரியா வருமா, சரியா வருமாங்கிற கேள்விதான் எனக்குள்ள எப்பவும் இருந்துச்சு மச்சான், அதைத்தாண்டி நான் வேறெதையும் யோசிக்கலைடா, படிப்பை ஓரங்கட்டி வெச்சுட்டு நான் கையில எடுத்த தொழில் மச்சான் இது, இதை விட்டுட்டு நான் எப்பிடிடா அவ பின்னால போறது?”
“உன்னோட அடையாளத்தைத் தொலைச்சுட்டு நீ யார் பின்னாடியும் போக வேணாம், ஆனா எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு, கல்யாணத்தைப் பண்ணிட்டு அவ வேணும்னா படிப்பை முடிச்சுட்டு வரட்டும், நாம காத்துக்கிட்டு இருப்போம்னு உனக்குத் தோணுதா?”
“டேய்! என்னடா பேசுறே? கல்யாணம் பண்ணுறது வாழுறதுக்கு, ஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்கா?” தனக்கான எல்லாப் பதில்களும் கிடைத்துவிட இஷான் திருப்தியானான். அன்றைக்கு இரவு உணவின் போது மீண்டும் அவர்கள் வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது.
“அப்பா, நாம மஹிக்கு வேற இடத்துல மாப்பிள்ளைப் பார்க்கிறது நல்லது, நான் இன்னைக்கு அமர்கிட்டப் பேசிட்டேன்.” அண்ணனின் வார்த்தைகளில் ஆல்யாவின் முகத்தில் பல்ப் எரிந்தது.
“என்னப்பா சொல்றே?!”
“இன்னைக்கு மஹி போய் அமரைப் பார்த்து எல்லாத்தையும் பேசியிருப்பாப் போல, அதால நான் கேட்டதும் அவனோட முடிவை அவனும் சொல்லிட்டான்.” அப்போது மஹிராவும் அங்குதான் அமர்ந்து உண்டு கொண்டிருந்தாள். சல்மாவின் முகம் சோர்ந்து போனது. கரீமும் வாடிப்போனார்.
“அவனோட தொழிலை விட்டுட்டு வெளிநாடு போகவோ, இல்லை கல்யாணம் பண்ணிட்டுக் காத்துக்கிட்டு இருக்கவோ அவன் ரெடியில்லை, பேசாம நீங்க உங்க மகளுக்கு வேற நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க, அதான் எல்லாரோட வாழ்க்கைக்கும் நல்லது.” என்றவன் கோபமாக எழுந்து போய்விட்டான். தனது தங்கை ஒரு நல்ல கணவனை, மனிதனை இழந்துவிட்டாளே என்ற கோபம் அவனது ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் தெரிந்தது. அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என்று சல்மாவும் கரீமும் அமைதியாகிவிட்டார்கள்.
அடுத்த வந்த ஒரு மாதத்தில் தனது மூத்த மகளுக்காக ஒரு மாப்பிள்ளையைப் பார்த்திருந்தார் கரீம். பையனும் டாக்டர்தான். ஊரில் அவர்கள் இருக்கும் வீடு, கொழும்பில் ஒரு வீடு, புத்தம் புதிய கார், இரண்டு கோடி ரொக்கம் என பேரம் பேசப்பட்டது. இன்றைய சந்தையில் மாப்பிள்ளை மாடுகளின் (டாக்டர்கள்) விலையும் அதுதான் என்பதால் கரீம் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
“உங்கப் பொண்ணும் ஒரு டாக்டர்தான்பா.”
“உன்னோட தங்கச்சி போடுற கண்டிஷன் அத்தனைக்கும் தலையாட்டுறவன் சும்மா வரமாட்டான் இஷான்.” ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மாப்பிள்ளை நல்ல பையனாம். விசாரித்த வகையில் எந்தத் தவறான பேச்சும் பெண் தரப்பினருக்கு வரவில்லை. மற்றபடி இந்தப் பேரம் அவனைப் பெற்றவர்கள் பேசியது என்று தன்னைச் சமாதானம் செய்து கொண்டார் கரீம். அவருக்கு அமரை இழந்த வலி இன்னும் போகவில்லை.
கல்யாண வேலைகள் ஜரூராக ஆரம்பித்தன. மண்டபம் பிடித்து, பத்திரிகை அடித்து, ஜவுளி வாங்கி என்று நாட்கள் பறந்து கொண்டிருந்தன. முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் போது லீவு சொல்லிவிட்டு இஷானும் ஊருக்கு வந்துவிடுவான். மஹிரா மிகவும் உற்சாகமாகத்தான் இருந்தாள். அவள் இருந்தாளோ இல்லையோ, ஆல்யா இந்தத் திருமணத்தால் அவ்வளவு சந்தோஷமடைந்தாள். எத்தனைப் பெரிய கண்டத்திலிருந்து தப்பியிருக்கிறாள்! அவள் கனவிலும் நினைக்காத திருப்பமல்லவா இது!
இதற்கு என்ன அர்த்தம்? தனக்குக் கிடைக்காது என்று அவள் நினைத்திருந்த ஒரு விஷயம் இன்றைக்கு மீண்டும் அவளுக்கென்று வந்திருக்கிறது என்றால் அவள் காதலுக்கு அத்தனை சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? நினைக்கும் போதே அவளுக்குச் சிலிர்த்தது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கும் ஆயுள் அதிகமில்லை என்பது போல வந்து சேர்ந்தது இன்பத்தின் அழைப்பு. அன்றைக்கு சல்மாவை அலைபேசியில் அழைத்திருந்தார் இன்பம்.
“இது உங்களுக்கே நியாயமா இருக்கா சல்மா? அம்மா அப்பா இல்லாத பிள்ளைங்க, உங்களைத்தானே மலை போல நாங்க நம்பியிருந்தோம்? பொண்ணு பார்க்கச் சொன்னதுக்கு உங்க பொண்ணைக் கட்டிக் குடுக்கிறதாச் சொன்னீங்க, இப்ப என்னடான்னா எதுவுமே நடக்காத மாதிரி எல்லாத்தையும் ரப்பர் வெச்சு அழிச்சுட்டு நீங்க பாட்டுக்கு உங்க பொண்ணுக்குக் கல்யாணம் நடத்துறீங்க, அப்ப எம் பையனுக்கு என்ன முடிவு? அவனைப் பத்தி யாரும் யோசிச்சீங்களா?” கண்ணீர் குரலில் அவர் கேட்ட கேள்வி பெண்ணைப் பெற்றவளை வாள் கொண்டு அறுத்தது.
உண்மைதானே! அவர் சொல்வதில் என்ன தவறிருக்கிறது? இந்தப் பேச்சைத் தங்கள் வீடுதானே ஆரம்பித்தது. எல்லாவற்றையும் இவர்களே ஆரம்பித்துவிட்டு இப்போது இவர்களே முடித்தும் வைத்தால் அவர்கள் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்! ஆனால் இது எதுவும் புரியாமல் முட்டாள்தனமாக படிப்பு படிப்பென்று புத்தகத்தைக் கட்டிக்கொண்டு அழும் தன் மகளை நினைத்து அழுதார் அந்தத் தாய்.
“தப்புத்தான் இன்பம், எங்களை மன்னிச்சிடுங்க, தேவையில்லாம இந்தப் பேச்சை ஆரம்பிச்சு உங்களுக்கு வேதனையைக் குடுத்தது நானும் எம் புருஷனுந்தான், அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.” இப்படிச் சொல்பவரிடம் எப்படிச் சண்டை போடமுடியும்?
“மன்னிப்பு எங்கிறது பெரிய வார்த்தை சல்மா, அதை இங்க யாரும் எதிர்பார்க்கலை, உங்கப் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச கையோட அமருக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க, அதான் நான் உங்கக்கிட்டக் கெஞ்சிக் கேட்டுக்கிறது.”
“கண்டிப்பா.” என்று வாக்குக் கொடுத்தவர் அன்றைக்கு இரவே அதைக் கணவரிடமும் சொன்னார்.
“இன்னைக்கு இன்பம் பேசினா, மஹி கல்யாணம் முடிஞ்ச கையோட அமருக்கும் ஒரு நல்ல பொண்ணைப் பார்க்கணுங்க.” உணவோடு சேர்த்துத் தனது துக்கத்தையும் விழுங்கிக் கொண்டு சொன்னார் சல்மா.
“நானும் அதைத்தான் நினைச்சேன், தெரிஞ்சவங்கக்கிட்டச் சொல்லி வெச்சிருக்கேன், அமருக்கு பொண்ணைத் தேடணுமா என்ன? சொன்னதுமே நாலைஞ்சு பொண்ணுங்களைச் சட்டு சட்டுன்னு சொன்னாங்க, எல்லாம் நல்ல பெரிய இடத்துப் பொண்ணுங்கதான், அதால…”
“அப்பா!” கரீம் முழுதாகப் பேசி முடித்திருக்க மாட்டார். அதற்குள்ளாகக் கையிலிருந்த சப்பாட்டை உதறிவிட்டு எழுந்தாள் ஆல்யா. சின்னவளின் செய்கையில் மற்றைய நால்வரும் திகைத்துப் போனார்கள்.
“இந்தப் பேச்சை நிறுத்துங்கப்பா!” மீண்டும் ஆங்காரமான குரல்.
“ஏய்! என்னடீ இது? அப்பாக்கிட்ட இப்பிடித்தான் பேசுவியா?” அம்மாவின் அதட்டலையும் அவள் பொருட்படுத்தவில்லை. ஒரு முறை அவளை விட்டுச்சென்ற வசந்தம். மீண்டும் அதைக் கோட்டைவிட அவள் என்ன முட்டாளா?
“இப்போ எதுக்குப்பா அமர் மச்சானுக்குப் பொண்ணு பார்க்கிறீங்க?”
“அவனுக்குப் பொண்ணைப் பார்க்காமப் பின்னப் பையனையா பார்ப்பாங்க?” இது இஷான்.
“ஒரு மண்ணையும் பார்க்க வேணாம்.”
“ஏன்? அப்போ அமரை நீ கட்டிக்கப் போறீயா?” ஒரு பேச்சிற்குத்தான் கேட்டாள் மஹிரா.
“ஆமா! அமர் மச்சானை நாந்தான் கட்டிக்கப் போறேன், நீங்க யாரும் அவருக்குப் பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்ப வேணாம்.” என்றவள் கோபமாகத் தனது அறைக்குப் போய்விட்டாள். வாயில் வைத்த உணவை விழுங்க மறந்து அனைவரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.




