அத்தியாயம் 04
அத்தியாயம் 04
ஆல்யா பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரிய அங்கிருந்தவர்களுக்குச் சிறிது நேரம் பிடித்தது. திகைத்துப் போய் சில நொடிகள் அமர்ந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக சுயநிலைக்கு வந்தார்கள்.
“என்ன சொல்லிட்டுப் போறா இந்தச் சின்னப் பொண்ணு?!” கரீம்தான் முதலில் வாயைத் திறந்தார்.
“இவளுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா என்ன?” இது சல்மா. மஹிரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஆனால் இஷான் அப்படி அமர்ந்திருக்கவில்லை. நேராகத் தங்கையின் அறைக்குப் போனவன்,
“ஏய் ஆல்யா! வெளியே வா.” என்றான் அதட்டலாக. ஒரு அண்ணனாக அவன் செய்வது சரி என்பதால் யாரும் அந்த வீட்டு ஆண்பிள்ளையைத் தடுக்கவில்லை. ஆல்யாவும் என்ன நினைத்தாளோ! மறுப்புச் சொல்லாமல் எழுந்து வெளியே வந்தாள்.
“உனக்கு அறிவிருக்கா? இல்லை என்னதான் பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறியா?”
“நான்… பேசினதுல என்ன தப்பிருக்கு?” இளையவனின் கேள்வியில் கரீம் தன் மனைவியைத் திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தார்.
“வெச்சேன்னா ஒரு அடி பல்லு அத்தனையும் கொட்டிரும், இது என்னப் பேச்சுன்னு இப்போ பேசுறே நீ! உன் வயசென்ன அவனோட வயசென்ன?”
“வயசு பார்த்து வர்ற விஷயமில்லை இது.”
“அடி வாங்கப்போறே நாயே நீ! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…” இஷான் தன்னை மறந்து கத்தியபடி கையை ஓங்க,
“இஷான்!” என்று கத்தினார் கரீம்.
“ஏம்பா, அமர் மச்சான் ரொம்ப நல்ல மாதிரி, அவங்க மஹியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா மஹி நல்லா இருப்பான்னு நீங்களும் அம்மாவும் பேசிக்கிட்டீங்களே, அப்போ மஹிக்கு மட்டுந்தான் நல்ல மாப்பிள்ளைப் பார்ப்பீங்களா? எனக்குப் பார்க்க மாட்டீங்களா?”
“ஆல்யாம்மா, அமர் ரொம்ப ரொம்ப நல்ல பையன், இப்பவும் மஹிக்கு அவனை முடிச்சு வெக்க முடியலையேன்னு நான் வருத்தப்படுறேன், ஆனா உனக்கு எப்பிடிம்மா? உனக்கும் அவனுக்கும் நிறைய வயசு வித்தியாசம்டா, நாங்களே சம்மதிச்சாலும் அமர் இதுக்கு ஒத்துக்க மாட்டாம்மா.” இதமாக எடுத்துச் சொன்னார் தந்தை.
“உங்கப் பிரச்சினை அதுதான்னா நான் அவங்கக்கிட்டப் பேசுறேன்.”
“இங்கப்பாரு ஆல்யா, என்னைக் கொலைகாரன் ஆக்காதே! நீயும் அவனும் நடந்து போனா அப்பாவும் பொண்ணும் நடந்து போற மாதிரி இருக்கும்டீ!”
“ஏன்? நீங்களும் நானும் நடந்து போனா அப்பிடியா இருக்கு?” வாய்க்கு வாய் தங்கை பேசவும் பெரியவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது. தங்கையிடம் விரைந்து வந்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“என்னடீ சொன்னதைக் கேட்காம வாய் ரொம்பத்தான் நீளுது! இவ்வளவு வயசு வித்தியாசத்துல மாப்பிள்ளை ஒன்னைக் கண்டுபுடிக்க நீ ஒன்னும் இங்க ஒன்னுமத்துக் கிடக்கலை, வாயை மூடிக்கிட்டுப் படிக்கிற வேலையை மட்டும் பாரு, இல்லைன்னாத் தோலை உரிச்சிடுவேன்.”
“நீங்க தோலை உரிச்சாலும் சரி, இல்லை என்னைக் கொலையே பண்ணினாலும் சரி, என்னோட முடிவு இதுதான், நான் கட்டிக்கிட்டா அவங்களைத்தான் கட்டிக்குவேன், இல்லைன்னாக் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்!” உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று தானும் கத்திவிட்டு அறை வாங்கிய தன் கன்னத்தைப் பிடித்தபடி உள்ளே போய்விட்டாள் சின்னப் பெண்.
ஏன் தாங்கள் சொல்வதைத் தங்கள் இரு பெண்களும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்ற கவலையோடு கரீம் அமர்ந்திருந்தார். ஆனால் அவசரப்பட்டு எந்தக் கருத்தையும் சொல்லிவிடாமல் சல்மா சாப்பாட்டைப் பிசைந்து கொண்டிருந்தார். எப்போதும் போல இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விட்டாள் மஹிரா.
“சல்மா… என்ன எதுவும் பேசமாட்டேங்கிறே?” இஷான் தனது அலைபேசியோடு அப்பால் போகவும் வாயைத் திறந்தார் கணவர்.
“அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேணாங்க, சின்னவ சொல்றது ஒன்னும் அவ்வளவு தப்பா எனக்குத் தோணலை.” இப்போது நிதானமாக வந்தது பேச்சு.
“என்னம்மா பேசுறே? சின்னவளுக்கு இன்னும் இருபத்திரண்டு கூட ஆகலை, அமருக்கு இஷானோட வயசு, இது சரியா வருமா?”
“ஏங்க சரியா வராது? ஏழு வருஷம் வித்தியாசம், ஏன்? நம்ம காலத்துல இப்பிடியெல்லாம் கல்யாணம் பண்ணி நல்லா வாழலையா? இப்பதான் இந்தப் பொண்ணுங்க படிப்பு படிப்புன்னு காலத்தை வீணாக்குதுங்க, அந்தக் காலத்துல எல்லாம் இருபது வயசு வித்தியாசத்துல கல்யாணம் பண்ணி புருஷனுக்கு முன்னாடி போனவங்களும் இருக்காங்கதானே?”
“அப்போ… இது சரி வருங்கிறியா?!”
“அமர் மாதிரி ஒரு நல்ல பையனை இன்னொரு வீட்டுக்கு எதுக்குக் குடுக்கணும்? நாம பார்க்க வளர்ந்த பையன், ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, உழைக்க அஞ்சாத புள்ளை, அஞ்சு நேரமும் தொழுது, நோன்பு புடிச்சு மார்க்கத்துல ஈடுபாடான பையன், அவனை பெரியவ கட்டினா என்ன? இல்லை சின்னவ கட்டினா என்ன?”
“நீ முடிவே பண்ணிட்டியா?!”
“சின்னவ பேசினதைப் பார்த்தீங்கல்லை, நாமதான் அவளை இன்னும் சின்னப்புள்ளையா நினைச்சுக்கிட்டு இருக்கோம், ஆனா அவ மனசுலயும் ஆசை இருந்திருக்கு, இதுக்கு முதல்ல அமர் சம்மதிக்கணும், அது கஷ்டம்னுதான் எனக்கும் தோணுது, ஒருவேளை ஆண்டவன் நமக்கு நல்லதை நாடி அந்தப் பையன் ஒத்துகிட்டா நாம மறுப்புச் சொல்ல வேணாங்க.”
“இஷான் இதுக்கு ஒத்துக்குவானா? சட்டுன்னு கையை நீட்டிட்டானே!”
“நாம எடுத்துச் சொன்னா அவன் புரிஞ்சுக்குவான், ரெண்டு பேரும் பொறந்ததுல இருந்து ஒன்னா இருக்காங்க, அதுவே உறவா ஆனா நல்லதுதானே?” ஆனால் இது எதுவும் புரியாதவன் போல அமரை அழைத்துக் கொண்டிருந்தான் இஷான்.
அப்போதுதான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஹாலில் கிடந்த சோஃபாவில் கால் நீட்டிப் படுத்திருந்தான் அமர். உடம்பு மிகவும் அசதியாக இருந்தது. அலைபேசி சிணுங்கவும் அலுத்துக் கொண்டவன் அதை காதிற்குக் கொடுக்காமல் ஸ்பீக்கர் மோடில் போட்டான்.
“சொல்லுடா மச்சான், கல்யாண வேலை வெச்சு செய்யுதோ?”
“டேய் நல்லவனே! இன்னைக்கு எங்க வீட்டுல நடந்த கூத்தைக் கேட்டா நீ கடுப்பாகிடுவே.”
“என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?” இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது சமையலறையில் நின்றிருந்த இன்பத்திற்கும் கேட்டது.
“இந்தச் சின்னக் குரங்குக்கு இன்னைக்கு ஒரு அறை விட்டேன் பாரு! கன்னம் இன்னேரத்துக்கு வீங்கியிருக்கும்.”
“டேய் ராஸ்கல்! எதுக்குடா அவளை அடிச்சே? சின்னப் பொண்ணுடா அவ!”
“அவளாடா சின்னப் பொண்ணு? அவ இன்னைக்கு என்ன பேசினா தெரியுமா?”
“ரெண்டு பேரும் சண்டைப் போட்டீங்களா? அதுக்கு நீ அவளை அடிப்பியா? உனக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா?”
“நான் இப்போ சொல்லப் போறதைக் கேட்டா உனக்குத்தான் பைத்தியம் புடிக்கும்.” என்றவன் சற்று முன்பு தங்கள் வீட்டில் நடந்த கூத்தைச் சொல்லி முடித்தான். நண்பன் சொன்னதைக் கேட்ட அமர் முழுதாக உறைந்து போனான்.
“இப்போ சொல்லு, அவளுக்கு இன்னும் நாலு அறை நான் குடுத்தாலும் தப்பில்லைத்தானே?” இப்போதும் அமர் எதுவும் பேசிவிடவில்லை. அவனுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படியொரு விஷயத்தை அவன் கனவிலும் நினைக்கவில்லையே!
எப்போதும் கரீம் மாமாவின் பெண்கள் அவன் உடன்பிறப்புகள் போல. மஹிராவைப் பற்றி மாமா முதல் முறையாகப் பேசிய போதே இவன் திணறினான். ஆனாலும் அதிக வயது வித்தியாசம் இல்லை என்பதால் அதைப்பற்றி அவனால் சிந்திக்க முடிந்தது. ஆனால் ஆல்யா! அவனைப் பொறுத்தவரை அவள் ஒரு குழந்தை. அமர் மச்சான் என்று எப்போதும் அவனைச் சுற்றிச் சுற்றி வரும் குழந்தை அவள். அந்தப் பிஞ்சு மனதில் இந்த எண்ணம் எப்படி வந்தது?! யார் போட்ட விதை இது?!
“மச்சான்… என்னடா…” அமருக்கு வார்த்தைகள் சிக்கின.
“விட்டுத் தள்ளுடா, அம்மிணி வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களாம், செவிடு கிழிய இன்னும் நாலு அறை குடுத்தா எல்லாம் சரியா வரும்.”
“மச்சான் டேய்! இப்பிடியெல்லாம் பண்ணாதடா, பொறுமையா எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்குவாடா, கையை நீட்டாதடா.”
“ஆமா, நீதான் அவளுக்குப் பொறுமையா எடுத்துச் சொல்லு, எனக்கு இப்பிடித்தான் சொல்ல வரும்.”
“டேய்! முதல்ல அவ நம்பர் குடு எனக்கு, நான் பேசுறேன் அவகிட்ட.” அமர் கேட்டதும் பின்விளைவுகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் இளைய தங்கையின் அலைபேசி எண்ணை நண்பனுக்கு அனுப்பி வைத்தான் அண்ணன்.
அடுத்தநாள் காலை எட்டு மணி போல அமரின் ஆஃபீஸ் அறையில் அமர்ந்திருந்தாள் ஆல்யா. அழுதழுது முகம் வீங்கிப் போயிருந்தது. ஒரு பக்கக் கன்னம் அவள் அண்ணனின் கைத்தடம் பட்டு சிவந்து போயிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது அவள் கோலம். இவன் ஒரு மெஸேஜ் மாத்திரம்தான் அனுப்பியிருந்தான். வருவாளா, மாட்டாளா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் நீ எங்கே, எப்போது அழைத்தாலும் நான் கிளம்பி வருவேன் என்பது போல சொன்ன நேரத்திற்கு வந்து நின்றது பெண்.
“இன்னைக்கு யூனிக்கு போகலையா?” இது அமர்.
“ம்ஹூம்.” தலையைக் குனிந்த படி வந்தது பதில். இந்தக் கோலத்தோடு எப்படி அவளால் வெளியே போக முடியும்?
“இன்னைய படிப்பு எல்லாம் வீணாப் போகுமே?”
“உடம்புக்கு முடியலைன்னு சொன்னா ஃப்ரெண்ட்ஸ் நோட்ஸை அனுப்புவாங்க.”
“ம்…” அதற்கு மேல் இவளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. முழங்காலைத் தொடும் குட்டிச் சட்டைப் போட்டுக் கொண்டு,
“அமர் மச்சான், எங்கண்ணா என்னை அடிக்கிறான், அவனை நீங்க அடிங்க.” என்று தன்னிடம் புகார் சொன்ன பெண்தான் இன்றும் அவன் கண்ணுக்குள் நிற்கிறாள். அதற்கு மேல் அவனால் சிந்திக்க முடியவில்லை.
“எதுக்கும்மா இப்பிடியெல்லாம் பேசி அண்ணன்கிட்ட அடி வாங்கணும்!” ஆதங்கத்தோடு அவன் சொன்னதுதான் தாமதம். இதுவரை அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் பெருக்கெடுத்து உடைந்து அவள் கன்னத்தில் கொட்டியது. விசும்பி விசும்பி அழும் பெண்ணைப் பார்த்த போது அமருக்கு வலித்தது. வேதனையாக இருந்தது. எழுந்து அவளருகில் வந்தமர்ந்தவன் அவள் தலையை வருடிக் கொடுத்தான். அவள் இப்போது சின்னப் பெண்ணல்ல. வயதுக்கு வந்த வளர்ந்த பெண். அவளைத் தீண்டுவது பாவம் என்று தெரிந்த போதும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை.
“இங்கப்பாரு கண்ணம்மா, நீ சின்னப் பொண்ணுடா.”
“சின்னப் பொண்ணுன்னா? பாட்டில்ல பால் குடிக்கிற பச்சைக் குழந்தையா? இன்னும் ரெண்டு மாசம் போனா எனக்கு வயசு இருபத்திரண்டு.” இவனை நிமிர்ந்து பார்த்து படபடவென பொரிந்த பெண்ணைப் பார்த்து அமர் ஒரு கணம் வியந்து போனான். உண்மையைச் சொன்னால் இதுதான் ஆல்யா. சிறுமியாக இருந்தபோது இப்படித்தான் படபடவென பேசுவாள். நடுவில் கொஞ்ச நாட்கள் அமைதியாக நடமாடினாள். அது இவனுக்கே மிகவும் ஆச்சரியமான விஷயம். பருவ வயதை அடையும் போது இயற்கையாக பெண்களுக்குள் தோன்றும் அமைதி அதுவென்று புரிந்து கொள்ளும் அளவிற்கு அமருக்குப் பக்குவம் இருக்கவில்லை.
“என்னமோ பால்ய விவாகம் பண்ணுற மாதிரிப் பேசுறீங்க!” மீண்டும் படபடப்பு.
“நீ புரிஞ்சுதான் பேசுறியா? உன்னோட வயசென்ன? என்னோட வயசென்ன?”
“அமர் மச்சான், நீ உங்கக்கா மாதிரி கலரா இல்லை, அழகா இல்லை, உன்னை எனக்குப் புடிக்கலை, இப்பிடி என்ன வேணும்னாலும் சொல்லுங்க, அதை விட்டுட்டு உனக்கு வயசு பத்தலை, நான் அம்பது வயசுக் கிழவன்,
இப்பிடியெல்லாம் தேவையில்லாத கதை சொல்லாதீங்க.” கன்னத்தில் மீண்டும் கண்ணீர் வழியப் பேசியவளைப் பார்த்த போது அமருக்குச் சிரிப்பு வந்தது. இவளை இஷான் அடித்ததில் எந்தத் தப்பும் இல்லை என்று அந்த நொடி தோன்றியது.
“உனக்கு வர்ற அதே ஃபீலிங்ஸ் எனக்கும் வரணுமில்லை ஆல்யா? உன்னைப் பார்க்கும் போது எனக்கு அப்பிடி எதுவும் வரலையேம்மா!” அந்த வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி இருக்க வேண்டும். கண்களில் வலியோடு சட்டென நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வை அமரை என்னவோ செய்தது.
“ஓஹோ! அப்போ மஹியைப் பார்த்தப்போ மட்டும் உங்களுக்கு அந்தமாதிரி ஃபீலிங்ஸ் வந்துச்சோ! என்னைப் பார்த்தா மட்டுந்தான் அப்பிடி எதுவும் தோணலை?” குதர்க்கமாகக் கேள்வி கேட்டாள் பெண். உன் அக்காவைப் பார்த்த போதும் எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை என்று எப்படி இவளிடம் சொல்வது? அமர் அமைதிகாத்தான்.
“ரொம்ப நல்லது! எங்கப்பா சம்பாரிச்சு வெச்சிருக்கிற பணத்தைத் தவிர எங்கிட்ட உங்களுக்குப் பொருத்தமா எதுவுமில்லைன்னு நீங்க நினைக்கிறீங்க, கரீம் மாமாவோட மூத்த பொண்ணுக்கிட்ட இருக்கிற எந்தத் தகுதியும் சின்னப் பொண்ணுக்கிட்ட இல்லைன்னு சொல்லாமச் சொல்றீங்க, என்னைத் தட்டிக் கழிக்க உங்களுக்கு வயசு ஒரு காரணமாப் போச்சு, ஏன்னா ஊருக்குள்ள யாரும் ஏழு வருஷ வித்தியாசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டதே இல்லைப் பாருங்க.” கண்ணீரை உள்ளங்கையால் துடைத்தவள் மளமளவென எழுந்து வெளியே போய்விட்டாள். அமர் தலையில் கையை வைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
***
அன்றுதான் மஹிராவிற்குத் திருமணம். வெள்ளிக்கிழமையைத் தேர்வு செய்திருந்தார் கரீம். ஜூம்ஆ தொழுகை (மதியத் தொழுகை) நிறைவுற்ற கையோடு பள்ளிவாசலில் வைத்தே ரெஜிஸ்டர் பண்ணுவதாக ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்வு முடிந்த பிற்பாடு மண்டபத்தில் எல்லோருக்கும் மதிய விருந்து. அதன்பிறகு மாலை வரவேற்பு என்று முடிவாகியிருந்தது.
ஆண்கள் எல்லோரும் தயாராகி பள்ளிவாசலுக்குச் சென்றுவிட பெண்கள் மண்டபத்தில் கூடியிருந்தார்கள். விசேஷமாக வரவழைக்கப்பட்டிருந்தப் பெண்கள் இருவர் மணப்பெண்ணை அலங்கரித்திருந்தார்கள். அன்றைக்கு ஆல்யாவும் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். அவ்வப்போது பல்கலைக்கழக விழாக்களுக்குப் புடவை உடுத்துவதால் அது ஒன்றும் பெரிய விஷயமாக அவளுக்குத் தோன்றவில்லை.
பச்சையுமல்லாத நீலமுமல்லாத ஒரு நிறத்தில் அடர் பின்க் நிறத்தில் பார்டர் வைத்த பட்டுப்புடவை. மயில் கழுத்து நிறத்தில் முழுக்கை ப்ளவுஸ் அணிந்திருந்தாள். அவளது மெல்லிய மேனிக்கு அப்படி முழு நீளத்தில் கை வைத்த ப்ளவுஸ் அணிவது அழகாக இருந்தது. அக்காவை அலங்காரம் செய்ய வந்த பெண்கள் இலேசாகத் தங்கைக்கும் அலங்காரம் பண்ணிவிட்டார்கள். பெண் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.
வீட்டில் அதிகம் பெண்கள் புழங்கியதால் சல்மா நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் ஆண்கள் அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிடுவார்கள். அதற்குள்ளாக இங்கே இருக்கும் அத்தனைப் பேரையும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கென ஒரு பெரிய மினிபஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருந்தார் கரீம்.
“இன்பம், அலமாரியில இருக்கிற ஆரத்தையும் மஹியைப் போடச் சொல்றீங்களா, எடுத்துக் குடுக்க மறந்துட்டேன்.” கையில் சாவியோடு வந்த இன்பத்தை நிறுத்திச் சொன்னார் சல்மா. அமரின் கார் சாவி இன்பத்திடம்தான் இருந்தது. இன்றைய மதிய விருந்து அவனிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததால் எல்லா வேலைகளையும் முடிக்க அவனுக்கு நேரம் போய்விட்டது. இன்னும் தாமதித்தால் தொழுகை தவறிவிடும் என்பதால் அவசரமாகக் கார் சாவியை வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து தருமாறு கேட்டிருந்தான். அதற்குள்ளாக சல்மா ஒரு வேலை சொல்லவும் மறுக்க முடியாமல் பெண்ணின் அறைக்கு வந்தார் இன்பம்.
“அம்மாடி மஹி, பெரிய ஆரம் அலமாரியில இருக்காம், அதையும் எடுத்துப் போடச் சொன்னாங்க அம்மா.” என்றவர் அப்போதுதான் அங்கு ஆல்யாவும் நிற்பதைக் கண்டார். அழகாகப் புடவை உடுத்தி, நகைகள் அணிந்து, இலேசான ஒப்பனையில் நின்றிருந்தது பெண். இன்பம் என்ன நினைத்தாரோ,
“ஆல்யா, என்னோட கொஞ்சம் வாம்மா.” என்று இளையவளைக் கையோடு அழைத்து வந்தார். பின் பண்ணுவதற்காக ஷாலை கையில் எடுத்த பெண் அதைத் தலையில் அணியாமலேயே இவரோடு வந்தது.
“மாமி, என்னால வெளிய வர முடியாது, நான் இன்னும் ஷால் போடலை.”
“பரவாயில்லை நீ வா.” என்று இவர் அவளை அழைத்துக்கொண்டு வீட்டு முன் வாசல் வருவதற்கும் அமர் அம்மாவைத் தேடிக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
“எங்கம்மா போயிட்டீங்க? சீக்கிரமா சாவியைக் குடுங்க.” என்று பரபரத்தவவன் அப்போதுதான் ஆல்யாவைக் கவனித்தான். எப்போதும் சுடிதாரில் அல்லது சல்வாரில் பார்க்கும் பெண். இன்றைக்குத்தான் அவளை முதல் முதலாகப் புடவையில் பார்க்கிறான். ஏதோ பெரிய பெண் போல இருந்தாள். அழகாக இருந்தாள்.
“இது யாரு?! நம்ம ஆல்யாவா?!” வாய்விட்டுச் சத்தமாகவே அமர் ஆச்சரியப்பட்டான்.
“மாமி, இங்க யாருக்கிட்டயாவது ஃபீடிங் பாட்டில் இருந்தா அதுல கொஞ்சம் பாலை ஊத்தி எங்கிட்டக் கொண்டு வந்து குடுங்க.” என்றவள் அமரை முறைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அமர் இப்போது உண்மையாகவே சிரித்துவிட்டான். அவனுக்கு இன்னும் ஆச்சரியம் குறையவில்லை.
“என்னம்மா இவ! புடவைக் கட்டினதும் பெரிய மனுஷி மாதிரி இருக்கா? நம்மக் குட்டிப்பொண்ணா இதுன்னு இருக்கு எனக்கு!” அவன் மனதில் எந்தக் கல்மிஷமும் இல்லாததால் அந்த நொடி மனதில் தோன்றியதை அப்படியே இன்பத்திடம் சொன்னான்.
“பொண்ணு வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒன்னுன்னு சொல்லுவாங்க.” என்றவர் சாவியை அமரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அன்றைக்கு அமர் ஹாலில் படுத்துக் கிடந்தபடி இஷானிடம் பேசியதைக் கேட்டதிலிருந்து இன்பத்தின் மனது ஒரு நிலையில் இல்லை. அடிக்கடி அவர் கண்களுக்குள் ஆல்யா வந்து போனாள். என்ன நடந்தது என்று அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதை அமரிடம் அவர் கேட்கவுமில்லை. ஆனால் ரெஹானிடம் பேசும்போது விசாரித்துப் பார்த்தார். ஆனால் அவனுக்கும் எதுவும் தெரியவில்லை.
தனக்கு எதுவும் தெரியாவிட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்று அவரது மனது சொன்னது. மஹிராவின் கல்யாணம் முதலில் முடியட்டும். பிற்பாடு நிதானமாக சல்மாவிடம் இதைப்பற்றிப் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் இன்றைக்கு இளையவளை அலங்காரத்தில் பார்த்தபோது அவர் கண்கள் நிறைந்து போனது. சொல்லப்போனால் மணப்பெண்ணை விட இவள்தான் அத்தனை அழகாக இருந்தது போல தோன்றியது. சாவியை எடுக்க அமர் வருவான் என்றும் அவருக்குத் தெரியும். தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அந்தத் தாய் மனது பெண்ணை அழைத்து வந்து தான் பெறாத மகனின் கண்ணில் காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தது.
முஸ்லிம்களின் திருமணத்தைப் பொறுத்தவரை ‘நிக்காஹ்’ மிகவும் முக்கியமான சடங்கு. பெண்ணைப் பெற்றவர் தன் மகளை மணமகனுக்குத் தாரை வார்க்கும் சடங்கு அது. மணமகள் கேட்கும் தொகையை ‘மஹர்’ மணமகன் அவளுக்குக் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பேரீச்சம் பழமாகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் பல லட்சங்களாக, கோடிகளாகவும் இருக்கலாம். அது மணப்பெண்ணிற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகை. தன்னை மணமுடிப்பவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அந்தப் பெண்ணிற்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் கடைப்பிடிப்பவர்கள் அரிது. மஹரை விட சீதனமே இன்றைக்குத் தலைவிரித்தாடுகிறது.
மஹிராவுக்கு மஹராக ஒரு ஆரம் வழங்கப்பட்டிருந்தது. சபையில் அதன் தொகை குறிப்பிடப்பட தன் மகளை கரீம் சட்டபூர்வமாக அதற்குப் பொறுப்பானவர் முன்பு தாரைவார்த்துக் கொடுத்தார். இந்த நிகழ்வில் ஆண்கள் மாத்திரமே கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வு முடிந்தால் திருமணம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். பள்ளிவாசலில் அந்த நிகழ்வை முடித்துக் கொண்டு ஆண்கள் அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிட விருந்து ஆரம்பமானது.
அமர் நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தான். இது அவன் வீட்டுத் திருமணம். மஹிராவைத் தனக்குத்தான் முதலில் பேசிவிட்டுப் பிற்பாடு அந்தப் பேச்சு இல்லாமல் போனது என்ற வருத்தம் நூலளவு கூட இல்லாமல் அந்தத் திருமண வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான் அமர். சாப்பாடு படு பிரமாதமாக இருந்தது. தனக்கென்று பிரத்தியேகமாக ஒரு சமையல் குழுவை அவன் வைத்திருந்தான். ஒவ்வொரு சாப்பாட்டு வகையறாக்கும் கை தேர்ந்தவர்கள் அவனிடம் உண்டு. பரிமாறுவதற்குத் தனியாக ஒரு குழுவைப் பயிற்றுவித்து வைத்திருந்தான். ஆண்களுக்கு ஒரு பந்தியும் பெண்களுக்கு ஒரு பந்தியும் என வேறுவேறாகப் பரிமாறப்பட்டது.
“ஆல்யா, எங்கடீ உன்னோட ஆளைக் காணலை?” இளையவளின் நண்பிகள் நால்வர் கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். தன் அக்காளின் கல்யாணத்திற்கு அவர்களை இவள்தான் அழைத்திருந்தாள். கல்யாணத்திற்கு வந்தார்களோ இல்லையோ, அமரின் விருந்திற்காக வந்திருந்தார்கள்.
“நீ எங்கக்கா கல்யாணத்துக்கு வரலை, வேற விஷயத்துக்குத்தான் வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும்.” இது ஆல்யா.
“தெரியுதில்லை, அப்ப கூப்பிட்டு எங்களையெல்லாம் அறிமுகப்படுத்து.” நண்பிகளின் கோரிக்கையை மறுக்க முடியாமல் அங்கே பரிமாறிக் கொண்டிருந்த ஒரு இளைஞனை அழைத்தாள் ஆல்யா.
“அண்ணா, அமர் மச்சான் எங்க இருக்காங்க?”
“அடுத்த பந்தியில இருக்காங்கம்மா.”
“கொஞ்சம் வரச் சொல்றீங்களா, ப்ளீஸ்.” அமருக்கு இவர்கள் சொந்தம் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் பார்த்துக் கொண்டிருந்த வேலையை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அப்பால் போனான் அந்த இளைஞன். சற்று நேரத்திலெல்லாம் இவர்களைத் தேடிக்கொண்டு வந்தான் அமர். அவனைப் பார்த்ததும் கூட நின்றிருந்த இளவட்டங்கள் மலர்ந்து போனார்கள்.
“ஆல்யா, என்னாச்சு? ஏதாவது வேணுமா? சாப்பாட்டுல ஏதாவது குறையா?” அவன் கவலை அவனுக்கு!
“இல்லை… இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ், சொல்லப் போனா உங்க ஃபேன்ஸ், உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க.” இதை அமர் எதிர்பார்க்கவில்லை. இளம் பெண்கள் நான்கு பேரின் முன்பாகத் தன்னை நிறுத்தி வைத்து இப்படிச் சொல்லவும் அவன் கூச்சமாக உணர்ந்தான். ஆனால் சொல்வது தன் மாமன் மகள்.
“ஓ… ஹலோ, சாப்பிட்டீங்களா? சாப்பாடு எப்பிடி இருந்துச்சு?” ஒரு நாகரீகமான கேள்வி. ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டான். ஆனால் அந்த இளம் பெண்களுக்கு அது போதுமானதாக இருந்தது.
“சூப்பர் சார்! அருமையா இருந்துச்சு! எப்பிடி சார் இந்த வயசுல இந்த ஃபீல்டை செலெக்ட் பண்ணினீங்க?” இப்படி ஆரம்பித்தது கேள்வி. அதன்பிறகு ஒரு இன்டர்வியூ எடுக்க அவர்கள் ஆரம்பிக்கவும் அமர் திணறிப் போனான். ஆல்யா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அவனை இப்போது இங்கே அழைத்தால் இவர்கள் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்பார்கள் என்று அவளுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் வேண்டுமென்றுதான் கோர்த்துவிட்டாள்.
“நாம எல்லாரும் இன்னொரு நாள் சந்திச்சு சாவகாசமா பேசலாமே, இப்போ எனக்கு நிறைய வேலை இருக்கும்மா.” கெட்டிக்காரத்தனமாக அவன் கழன்று கொண்டான். அதற்கும் அவர்கள் வாயைப் பிளந்தார்கள்.
“ஆல்யா, என்னடீ இந்த மனுஷன் இவ்வளவு ஸ்வீட்டா இருக்காரு, எவ்வளவு அழகா எல்லார் கூடவும் பேசுறாரு, இவரை நீ மிஸ் பண்ணிடவே கூடாதுடீ.” பல அறிவுரைகள் சொல்லிவிட்டுத்தான் நண்பிகள் கூட்டம் கிளம்பியது.
அன்று மாலை நடந்த வரவேற்பில் ஆல்யா அழகான ஸராரா அணிந்திருந்தாள். மெரூனும் மாம்பழக் கலரும் சேர்ந்த ஆடையில் தங்க வேலைப்பாடு நிறைந்திருந்தது. அதே வண்ண ஷால் கொண்டு தலையை அழகாக மூடியிருந்தாள். மிதமான ஒப்பனை அவளை இன்னும் அழகாகக் காட்டியது. இன்பத்தின் கண்கள் அன்றைக்கு முழுவதும் இவளையே வட்டமிட்டன. இளையவளின் மனதில் அமரைப் பற்றிய ஏதோவொரு எண்ணம் இருக்கிறது என்று அவர் உள்மனது அடித்துச் சொன்னது.
“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கே ஆல்யா.” இயல்பாகவே பேச்சை ஆரம்பித்தார். பெண் இலேசாக நாணப்பட்டது. ஆனாலும் அந்தக் கண்களில் தெரிந்த ஏக்கம் பெரியவருக்கு ஏனென்று விளங்கவில்லை. மேலும் பேச்சை வளர்த்தார்.
“மஹி கல்யாணம் முடிஞ்சதும் அமருக்கும் பொண்ணு பார்க்கணும், உங்கம்மாக்கிட்டயும் சொல்லி இருக்கேன், வயசு போகுதில்லைம்மா.”
“பொண்ணு பார்க்கச் சொல்லி அவங்க சொன்னாங்களா?”
“தம்பி எப்பிடிம்மா சொல்லும்? நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும், அம்மா அப்பா இல்லாத பசங்க, எங்கடமையை நான் சரிவர செய்யணுமில்லைம்மா, அனாதையா இருந்த எனக்கு எவ்வளவு பெரிய கவுரவத்தை அந்தத் தம்பி குடுத்திருக்கு!” பேசும் போதே இன்பத்தின் கண்கள் கலங்கிவிட்டன. ஆல்யா இப்போது பெரியவரின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
“அமருக்கு நல்ல தங்கமான பொண்ணா பார்க்கணும், அந்தப் புள்ளை மனசுக்கு அவனைத் தாங்கிற மாதிரி ஒரு பொண்ணு வரணும், வாழ்க்கையில நிறையக் கஷ்டங்களை வயசுக்கு மீறி பார்த்திடுச்சு, அதையெல்லாம் ஈடுகட்டுற மாதிரி ஆண்டவன் வைரமா ஒரு பொண்டாட்டியைக் குடுக்கணும்.” இரு கைகளையும் மேலே ஏந்தி பிரார்த்தனை செய்வது போல கண்கள் மல்க இன்பம் கூறிய போது ஆல்யாவிற்கும் ஒரு மாதிரியாகிப் போனது.
“உங்கிட்டச் சொல்றதுக்கு என்னம்மா, உங்க வீட்டுச் சம்பந்தம் வந்தப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, உங்க வீடு அமரை நல்லாப் பார்த்துக்கும்னு நான் நிறையவே சந்தோஷப்பட்டேன், ஆனா… அதைவிடு.” சலிப்பாக அவர் பேசவும் இவள் முகம் சுருங்கியது.
“ஏன் மாமி? உங்க கண்ணுக்கும் மஹி மட்டுந்தான் அழகா, உங்க அமரை நல்லாப் பார்த்துக்கிறவளாத் தெரியுதா? என்னைப் பார்த்தா அப்பிடியெல்லாம் தோணலையா?” இந்த நேரடித் தாக்குதலை இன்பம் எதிர்பார்க்கவில்லை. சில நொடிகள் திணறினாலும் பூரித்துப் போனார்.
“அடித் தங்கம்! அப்பிடி யாரு சொன்னா? உனக்கென்னடி ராஜாத்தி குறை? மூத்தவளை விட நீதான் அழகா இருக்கே, கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கே, அமருக்குப் பொருத்தமா இருக்கே!” பட்டியல் நீண்டு கொண்டே போனது.
“இத்தனையும் உங்கக் கண்ணுக்குத்தான் தெரியுது, அவங்கக் கண்ணுக்குத் தெரியலை.” ஆல்யாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“அப்பிடி யாரு சொன்னா?”
“அவங்களே சொன்னாங்க.” கண்ணீர் கோடாகக் கண்களில் இறங்கியது.
“தம்பி என்ன சொல்லிச்சு?”
“நான் ரொம்ப சின்னப் பொண்ணாம்…” அதற்கு மேல் பேச முடியாமல் ஆல்யா தடுமாறினாள். வார்த்தைகள் தொண்டையை விட்டு வர மறுத்தன. ஆனால் இன்பத்திற்கு நிலைமைத் தெளிவாகப் புரிந்து போனது. அமரின் மனது அவருக்கு விளங்கியது. தனக்குள் சில முடிவுகளை எடுத்துக் கொண்டவர் இளையவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தார்.




