arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 05
Anbe… Azhage! chevron_right பகுதி 5 / 21

அத்தியாயம் 05

visibility 8
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 05

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து போயிருந்தது. முக்கியமான சொந்தங்களுக்கு இரவு விருந்தையும் மண்டபத்திலேயே ஏற்பாடு பண்ணியிருந்தார் கரீம். பகல் விருந்து முடிந்த பிறகு சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு இரவு உணவிற்கான வேலைகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அமர் மிகவும் பிஸியாக எல்லாவற்றையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மணமேடையில் புகைப்படம் எடுக்கும் படலம் போய்க்கொண்டிருந்தது. மணமக்கள் விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுத்து முடிக்க, சொந்தங்கள் தங்கள் குடும்பத்தோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குறை சொல்லும் விதமாக இல்லாமல் மாப்பிள்ளை எந்த பந்தாவும் காட்டாமல் எல்லோரோடும் இதமாகவே நடந்து கொண்டார். மாப்பிள்ளை என்று ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் அது நாட்டியம் ஆடும் என்று சொல்வார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அந்தத் துரும்பு டப்பாங்குத்தே ஆடும். அதுவும் டாக்டர் துரும்பு என்றால் கேட்கவும் வேண்டாம்!

“அமரைப் பார்த்தியா?” கரீம் குடும்பமாக நின்று மணமக்களோடு புகைப்படம் எடுக்கும் போது தங்கையின் காதைக் கடித்தாள் மஹிரா. 

‘ஏன்? அவருக்கு என்னாச்சு?’ வாய்திறந்து கேட்கவில்லை என்றாலும் ஆல்யாவின் முகம் தன்‌ அக்காளைக் கேள்வியாகப் பார்த்தது. அப்போது ஏதோ ஒரு வேலையாக அந்தப்பக்கமாக வந்த அமரை, மஹிரா தன் கண்களால் சுட்டிக்காட்டினாள்.

“இன்னைக்கு நம்ம வீட்டுல விசேஷம், ஊருக்கே தெரியும் அவரு நம்ம சொந்தக்காரர்னு, கொஞ்சம் பார்க்கிற மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரவேணாம்!” மஹிரா சொன்ன பின்புதான் அவனை சரியாகக் கவனித்தாள் பெண். வேஷ்டி சட்டையில் இருந்தான்.‌ வேலை செய்ய இலகுவாக இருக்கும் என்று இப்போது முழங்கால் வரை வேஷ்டியை மடித்துக் கட்டியிருந்தான்.

அவள் கண்களுக்கு அவன் ஆடையில் எந்தக் குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைக்கு வந்த அவள் நண்பிகளும் அவனைப் பார்த்து ஜொள்ளு விட்டுவிட்டுத்தானே போனார்கள்! ஆனாலும் மஹிராவின் கூற்றை அவளால் புறக்கணிக்க முடியவில்லை.

“அமர், நீயும் வாப்பா.” கரீம் சத்தமாக அழைத்தார். பெண்கள் இருவரும் தங்கள் சம்பாஷணையை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

“இன்பத்தையும் வரச்சொல்லுங்க, நான் கூப்பிட்டா வரமாட்டா, நீங்கக் கூப்பிடுங்க.” இது சல்மா. கணவரின் காதோடு சொன்னார்.

“அம்மாவையும் கூட்டிக்கிட்டு வா அமர்.” கரீம் கூப்பிடவும் இன்பத்தையும் அழைத்துக் கொண்டு மேடையேறினான் அமர். கரீம் குடும்பத்தோடு அவர்கள் இருவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் மேடையிலிருந்து இறங்கும் போது,

“அமர் மச்சான், கெஞ்சம் நில்லுங்க.” என்றாள் ஆல்யா. அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் இவர்கள் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை. அவர்களோடு சேர்ந்து இன்பமும் நின்றார்.

“இது யார் வீட்டுக் கல்யாணம்?” இவள் கேள்வி ஒரு தினுசாக வரவும் அமர் தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தான். இன்பத்திற்கும் இளையவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை.

“நம்ம வீட்டுக் கல்யாணம்.” இயல்பாக வந்தது அவன்‌ பதில்.

“தெரியுதில்லை, அந்தக் கல்யாணத்துக்கு நீங்க இப்பிடித்தான் வருவீங்களா?”

“ஏம்மா? நான்‌ வேற எப்பிடி வரணும்?” அமருக்கு உண்மையிலேயே அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை. இன்பத்திற்கும் புரியவில்லை.

“எங்கண்ணா எப்பிடி ட்ரெஸ் பண்ணியிருக்கான், இது உங்க வீட்டுக் கல்யாணம்னா நீங்களும் அவன் மாதிரித்தானே ட்ரெஸ் பண்ணியிருக்கணும்?” அப்போதுதான் அவள் எண்ணம் புரிய அவன் முகத்தில் சிரிப்புத் தோன்றியது. இன்பமும் புன்னகைத்தபடி அப்பால் போய்விட்டார்.

“இவ்வளவு நேரமும் மண்டபத்துல இதே ட்ரெஸ்லதான் நான் நிற்கிறேன், இப்ப மட்டும் மேடமுக்கு என்னாச்சு? யாரு என்ன சொன்னாங்க?” குறும்பாகத்தான் அவன் கேட்டான். ஆனால் ஒரு நொடி ஆல்யாவின் கண்கள் தொட்டுச் சென்ற இடம் அவனை வேதனைப்படுத்தியது. அந்த நொடி மஹிராவும் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு இந்த வேஷ்டி சட்டையே நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் சில இடங்கள்ல ஊருக்காகவும் நாம வாழ வேண்டியிருக்கு, புரிஞ்சுக்கோங்க.” அதட்டலாகச் சொன்னவள் அப்பால் போய்விட்டாள். அமருக்கு, மஹிராதான் தன்னைப் பற்றி இவளிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள் என்று புரிந்தாலும் அந்தக் கவலை சில நொடிகளில் மறந்து போய்விட்டது. பெரிய மனுஷி போல தன்னை மிரட்டிவிட்டுப் போகும் சின்னப்பெண் சிரிப்பை வரவழைத்தாள். 

இவள் சொல்வதும் சரிதானா? இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பித்த பிற்பாடு கிழக்கிலங்கையைப் பொறுத்தவரை அமரின் பெயர் பிரசித்தம். தன்னைத் தொடரும் இளவட்டங்களின் பார்வையையும், பெரியவர்கள் கொடுக்கும் மரியாதையையும் அவன் கவனித்திருக்கிறான். அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் நான்‌ இன்னும் கொஞ்சம் என்மேல் கவனம் செலுத்த வேண்டுமா?

“உனக்குன்னு நம்ம ஏரியாவுல ஒரு இமேஜ் இருக்குடா மச்சான்.” அன்றைக்கு இஷான் சொன்னது இப்போது காதில் ரீங்காரமிட்டது. அவனது அலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான். வாட்சப்பில் நான்கைந்து புகைப்படங்கள் வந்திருந்தன. எல்லாம் ஆண்களுக்கான புதிய மாடல் ஆடைகள். அன்றைக்கு அவன்‌ சேமித்து வைத்திருந்த ஆல்யாவின் எண்ணிலிருந்து வந்திருந்தது. சட்டென்று சுற்றும் முற்றும் பார்த்தான். அவளைக் காணவில்லை. ஒரு புன்னகையோடு தலையசைத்தபடி நகர்ந்து போகும் அவனை அவள் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

“சல்மா…” அழைத்தபடி வந்தார் இன்பம்.‌ இரவு உணவையும் முடித்துக் கொண்டு பெரும்பாலானோர் கிளம்பிப் போயிருந்தார்கள். 

“என்ன இன்பம்?”

“இன்னைக்கு ஆல்யாவை நான் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா?”

“என்னாச்சு? என்ன திடீர்னு?” சல்மா குழம்பிப் போனார்.

“இல்லை… வீட்டுல இன்னைக்குச் சடங்கு, சம்பிரதாயம்னு நிறைய இருக்கும், வயசுப் பொண்ணு எதுக்கு அங்க இருக்கணும்னு தோணிச்சு…”

“ஓ…” இந்த எண்ணம் சல்மாவிற்கும் இருந்தது. இஷானை அவர்களது பழைய வீட்டில் போய் தங்கச் சொல்லலாம். ஆனால் ஆல்யாவை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இன்பம் நம்பிக்கையானவர் என்பதால் சட்டென்று பதில் சொன்னார் சல்மா.

“நீங்க சொல்றதும் சரிதான், வீட்டுக்குப் போயி ட்ரெஸ் எடுத்துக்கிட்டு உங்கக்கூட வரச்சொல்லுங்க இன்பம், காலையில நான் வந்து கூட்டிட்டு வர்றேன்.”

“அது எதுக்கு நீங்க மெனக்கெட்டுக்கிட்டு, நான்‌ அப்பிடி என்னத்தை வெட்டி முறிக்கிறேன், நானே கூட்டிட்டு வர்றேன், வேற ஏதாவது செய்யணும்னாலும் தயங்காமச் சொல்லுங்க.” என்றவர் ஆல்யாவோடு கிளம்பிவிட்டார். இன்பத்தோடு கிளம்பிப் போக அம்மா அனுமதி அளித்தது இளையவளுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.‌ அண்ணனின் காதுகளுக்கு இந்தச் செய்தி போகும் முன்பாக அவசரமாகக் கிளம்பிவிட்டாள். 

ஆல்யா அந்த வீட்டிற்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன. வயதுக்கு வந்த பின்னால் அமரின் தந்தை தவறிய போது ஒருமுறை இங்கு வந்திருக்கிறாள். அதன்பிறகு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை நாட்கள் கடந்த பின்னும், அமரின் நிலை இவ்வளவு உயர்ந்த பின்னும் வீடு அதே போலத்தான் இருந்தது. ஹாலில் மாட்டியிருந்த அமரின் பெற்றோரின் புகைப்படத்தைப் பக்கத்தில் போய் சில நொடிகள் பார்த்தாள். அமரின் தாயை அவளுக்கு அவ்வளவு நியாபகம் இருக்கவில்லை. ஆனால் தந்தையை நன்றாக இனம்காண முடிந்தது.

“ரெண்டு பசங்களையும் அநாதரவா விட்டுட்டுப் போயிட்டாங்க.” இது இன்பம். கவலையான குரலில் சொன்னார்.

“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே மாமி.” என்றவளைத் தனது அறைக்கு அழைத்து வந்தார் இன்பம்.

“உங்க வீடு மாதிரி இங்க வசதி இருக்காதுடா ராஜாத்தி…”

“அது பரவாயில்லை.” என்றவள் இரவு ஆடைக்கு மாறிக்கொண்டாள். எப்போதும் இரவில் பைஜாமா அணிவதுதான் அவளுக்குப் பிடிக்கும். வெளியே இருந்த பாத்ரூமில் இதர தேவைகளை முடித்துக் கொண்டு பெண்கள் இருவரும் தூங்கிப் போனார்கள். அன்றைய நாளின் சோர்வு அவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.

அமர் வீடு வரும்போது இரவு பதினொன்று தாண்டிவிட்டது. இரவு உணவை முடித்துவிட்டு, மண்டபத்தை ஒழுங்கு பண்ணிவிட்டு, என்று அவனுக்கு வேலைகள் வரிசைக்கட்டி நின்றிருந்தன. எல்லாவற்றையும் மேற்பார்வைப் பார்த்துவிட்டு அவன் உண்ணும் போதே மணி பத்தைத் தாண்டியிருந்தது. தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக எப்போதும் இராப்போஜனத்தை முடித்துவிடுவான். இல்லாவிட்டால் தொப்பைப் போடும். ஆனால் இன்றைக்கு அது முடியவில்லை. அதனால் வீட்டிற்கு வந்ததும் உடம்பு கழுவிவிட்டு முன்வாசலில் சிறிது நடை பயின்றான்.‌

கொல்லைப்புற கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.‌ இன்பம்தான் எழுந்து பாத்ரூம் போகிறார் என்று நினைத்தவன் சற்று நேரத்தில் கேட்ட சத்தத்தில் அவசரமாக அங்கே போனான். ஆல்யாவை, இன்பம் தன்னோடு அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தது இவனுக்குத் தெரியாது. இன்பமும் அதை இவனிடம் சொல்லவில்லை.‌ சொன்னால் ஏதாவது மறுப்புச் சொல்வானோ என்று மறைத்துவிட்டார்.

“அம்மா! என்னாச்சு?” என்றபடி அங்கே வந்தவன் பார்த்ததெல்லாம் தலையைக் குனிந்தபடி வாந்தியெடுத்த பெண்ணையும், அவள் தலையைத் தாங்கியபடி நின்ற இன்பத்தையும்தான். இவன்‌ கேள்விக்குப் பதில் சொல்லாமல் சின்னவளின் முதுகைத் தடவிக் கொடுத்தார் பெரியவர்.

“தம்பி, கொஞ்சம் தண்ணி எடுத்துக் குடுக்கிறீங்களா?” என்றவர் சொன்னதைச் செய்யாமல் அப்படியே மலை போல நின்றிருந்தவனைத் திரும்பிப் பார்த்தார். அவன்‌ கண்கள் ஆச்சரியத்தால் விரிந்து போய் கிடந்தன. 

“தம்பீ…”

“இதோ! கொண்டு வர்றேம்மா.” என்றவன் ஓடிப்போய் நீர் கொண்டு வந்தான்.

“ஆல்யாவை நாந்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.”

“அது பரவாயில்லை, ஆனா என்னாச்சு இவளுக்கு? ஏன் வாந்தி எடுக்கிறா?!”

“அதெல்லாம் அப்பிடித்தான்பா பொண்ணுங்களுக்கு.” என்றவர் அவள் முகத்தைக் கழுவிவிட்டார். வாய் கொப்பளிக்க வைத்து முகத்தைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டார். 

“மெள்ள வாம்மா.” என்றபடி உள்ளே அழைத்து வந்தார். அப்போதுதான் அந்த ரூமை சரியாகப் பார்த்தான் அமர். பழைய கட்டில், ஒரு அலமாரி, சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி, இவை எதற்கும் சற்றும் பொருத்தமில்லாமல் ஆல்யா! 

“அம்மா, டாக்டர்கிட்டப் போகணுமா?”

“தேவையில்லை அமர், வாந்தி எடுத்ததே இப்போ இவளுக்கு நல்லா இருக்கும், கொஞ்சம் கழிச்சு ஏதாவது குடிக்கக் குடுத்து மாத்திரைப் போட்டா சரியாகிடுவா, டயர்டா இருக்கும், போய் தூங்குங்க.” அந்தப் பழைய கட்டிலில் படுத்தவள் இன்பத்தின் இடையைக் கட்டிக்கொண்டு ஏதோ புலம்பினாள்.

“ஒன்னுமில்லைடா தங்கம்.” என்றபடி அவள் வயிற்றை, இடையை மெதுவாகத் தடவிக் கொடுத்தார் பெரியவர். ஏதோ புரியவும் அமர் ஹாலுக்கு வந்துவிட்டான். பெண்களுக்கு வரும் தொல்லை இதுவென்று புரிந்தது. ஆனால் இவள் எப்படி இங்கே?! அந்தக் கேள்வி மண்டையைக் குடையவும் தனது ரூமிற்குப் போகாமல் சோஃபாவில் படுத்துக் கொண்டான். இதுநாள் வரை இந்த வீடு அவனுக்கு ஒரு குறையாகத் தெரியவில்லை. ஆனால் இன்றைக்கு எதுவோ குறைவது போல தெரிந்தது.‌ அவனுக்கு அன்றைக்குச் சரியான தூக்கம் வரவில்லை. 

அடுத்தநாள் காலை அவன் கண்விழித்த போது எட்டு மணியாகியிருந்தது. இன்பம் அடுப்படியில் ஏதோ வேலையாக நின்றிருந்தார். இவன்‌ கொல்லைப்புறம் போகும் போது அம்மாவின் அறைக்கதவு திறந்துதான் கிடந்தது. ஆனாலும் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் நேராக அன்னையிடம் வந்தான்.

“இப்போ எப்பிடியிருக்கும்மா?”

“ஓகேப்பா, ராத்திரி தூங்கும் போது நாலு மணியாச்சு, மாத்திரைப் போட்டுட்டுத்தான் தூங்கினா, அதான் இன்னும் தூங்குறா.” என்றார் புன்னகைத்தபடி. 

“அவங்கம்மாக்குச் சொல்ல வேணாமா?”

“எதுக்கு? சல்மா இன்னைக்கு நிற்க நேரமில்லாமச் சுத்துவா, கொஞ்சம் கழிச்சு நாமளே கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்திரலாம்.”

“ம்…” என்றவன் பின்வாசலுக்கு வந்துவிட்டான். வீட்டிற்குப் பின்னால் பெரிதாக இடம் இருந்தது. இதுநாள் வரை அம்மா அப்பா வாழ்ந்த வீட்டில் கை வைக்க மனம் வரவில்லை. ஆனால் இன்றைக்கு அந்த வீடு அவர்களுக்குப் போதாது என்ற எண்ணம் முதல்முதலாகத் தோன்றியது. ரெஹானிடம் பேசிவிட்டு யாராவது ஒரு என்ஜினியரை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“தம்பி, இன்னைக்கு வலீமா இருக்கில்லை?” வலீமா என்பது திருமணம் முடிந்த பிற்பாடு மாப்பிள்ளை கொடுக்கும் விருந்து. இதுவும் இஸ்லாமிய திருமணங்களில் ஒரு முக்கிய சடங்காகும். 

“ஆமாம்மா, வலீமா முடிஞ்சதும் ஈவ்னிங் ஹோம் கம்மிங்னு இஷான் சொன்னான்.” கல்யாணத்திற்கு மறுநாள் மாப்பிள்ளையும் பெண்ணும் மாப்பிள்ளையின் வீட்டிற்குப் போய் நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு வருவார்கள். அதன்பிறகு மாப்பிள்ளை, பெண் வீட்டில்தான் இருப்பது இவர்கள் வழக்கம். இன்பம் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டவன் அதைக் குடிக்க ஆரம்பித்தான்.

“இன்னைக்கு விருந்துக்கு இவளும் போகணுமில்லை? முடியுமா இவளால?”

“அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா, தூங்கி எந்திரிச்சதும் சரியாகிடுவா.”

“இங்கேயே இவ இருக்கட்டும்மா, அங்க மாமி பிஸியா இருப்பாங்க, அவங்களால இவளைக் கவனிச்சுக்க முடியாது, நீங்க விஷயத்தை மட்டும் சொல்லிடுங்க, இன்னைக்கு இவ உடுத்த வேண்டிய ட்ரெஸ்ஸ நான் போய் எடுத்துக்கிட்டு வர்றேன்.”

“ம்…” என்று தலையாட்டிய இன்பத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆல்யா எழுந்ததும் அவளுக்குக் காலை ஆகாரம் கொடுத்து, அவளுக்குக் குளிக்க உதவிகள் செய்து என்று இன்பத்திற்கு நேரம் சரியாக இருந்தது. காஷ்மீரி வொர்க் செய்த சில்க் சேலை, பார்டரில் எம்பிராய்டரி வேலை செய்யப்பட்டிருந்தது. டார்க் க்ரீம் கலரில் சிவப்பு, பச்சை, நீலம் என‌ அழகிய வேலைப்பாடு உடல் முழுதும் அமைந்த டிசைனர் சேலை. பெண் உடுத்தி முடித்த போது இன்பத்தின் கண்கள் கலங்கிவிட்டன.

“அம்மாடி! நீ எதுக்கு இவ்வளவு அழகா இருக்கே! அடிக்கடி இதுமாதிரி புடவை கட்டு, அந்தச் சுடிதாரைப் போட்டா சின்னப் பொண்ணு மாதிரி இருக்கே.” என்றவர் இளையவளின் அருகில் வந்து திருஷ்டி கழித்தார். ஏதோ வாய்க்குள் முணுமுணுத்து ஓதி இவள் முகத்தில் ஊதினார்.

“எத்தனைக் கண்ணு படப்போகுதோ!” எனவும் ஆல்யாவின் முகம் சிவந்து போனது.

“ரொம்ப ஓவராப் புகழுறீங்க மாமி.” என்றவள் முகத்திற்கு இலேசான ஒப்பனைப் பண்ணிக் கொண்டாள். பெண்கள் இருவரும் ஆயத்தமாகிக் கொண்டு வெளியே வரவும் அமர் அவனது அறையிலிருந்து வரவும் சரியாக இருந்தது.

“அமர்!” தன்னை அறியாமல் இன்பம் வாய்விட்டு மகனை அழைத்திருந்தார்.‌ ஏனென்றால் தனது வேஷ்டி சட்டையை மறந்துவிட்டு இன்றைக்கு அடர் நீலத்தில் ஜோத்பூரி ஸ்டைலில் ஆடை அணிந்திருந்தான். அவனது உடல் கட்டிற்கு அந்த ஆடை அத்தனைப் பொருத்தமாக இருந்தது.‌ ஆல்யா இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள். நேற்றைக்கு அவள் அவனுக்கு அனுப்பி வைத்திருந்த ஆடை மாடல்களில் இதுவும் ஒன்று.‌ அதற்கிடையில் எங்கே போய் இதை வாங்கினான்! 

“எப்பிடியிருக்கும்மா?” இவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அம்மாவிடம் கேட்டான்.

“சூப்பரா இருக்கு அமர்! எப்பவும் வேஷ்டி சட்டை, இல்லைன்னா ஜீன்ஸ்தானே, அடேயப்பா! இது செமையா இருக்கே! ரெஹானுக்கு ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பணும், ஆல்யா, உங்கிட்ட ஃபோன் இருக்கில்லைம்மா? தம்பியை ஒரு ஃபோட்டோ எடும்மா, ரெஹான் பார்த்தா அப்பிடியே அசந்திடுவான்.” ஆர்ப்பரித்த அம்மாவைப் பார்த்துச் சிரித்தவன், 

“ஐயையோ! அதெல்லாம் வேணாம்மா.” என்றுவிட்டு நகர்ந்தான். ஆனால் ஆல்யா சந்தர்ப்பத்தைத் தவறவிடவில்லை. அலைபேசியை எடுத்தவள் அவன் நடக்கும் போதே இரண்டொரு ஃபோட்டோ எடுத்தாள்.

“அமர் மச்சான்.” சட்டென்று அவள் அழைக்கவும் அவன் திரும்பிப் பார்க்க அந்தக் கணத்தையும் அலைபேசிக்குள் அடக்கிக் கொண்டாள். அவள் செய்கை பார்த்து அவன் புன்னகைக்க அந்தக் கணமும் அவள் மனதுக்குள்ளும் அலைபேசிக்குள்ளும் பதிவாகிப் போனது.

அமர் தனது ப்ளாக் ஆடியை ஸ்டார்ட் செய்யவும் பெண்கள் இருவரும் வந்து ஏறிக்கொண்டார்கள். மதிய விருந்து மாப்பிள்ளை வீட்டார் பொறுப்பு. அவர்கள் வேறு ஒரு கேட்டரிங் ஆட்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்ததால் இன்றைக்கு முழுவதும் இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. 

“ஏய் சின்னப் பொண்ணே! உனக்கு நானென்ன ட்ரைவரா? முன்னாடி வந்து உட்காரு!” இன்பத்தோடு சேர்ந்து அவளும் பின்னால் ஏறி அமர்ந்திருந்தாள். 

“இல்லை…” முன்னால் அவனோடு உட்கார்ந்திருந்தால் அதன் அர்த்தமே வேறென்று அவளுக்குத் தோன்றியது.

“என்ன இல்லை? இப்போ முன்னாடி வந்து உட்கார்றியா இல்லையா?”

“போம்மா, அதான் தம்பி சொல்லுறாங்கல்லை?” இன்பமும் வற்புறுத்திச் சொல்லவும் தயங்கியபடியே இறங்கியவள் அவனருகில் வந்து உட்கார்ந்தாள். நடப்பவற்றைப் பார்க்கும் போது பெரியவருக்குச் சந்தோஷமாக இருந்தது. இளையவளுக்குக் குப்பென்று இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உடலெங்கும் பரவியது. ஆனால் இது எதுவும் புரியாமல் அமர் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். பார்ப்பவர்கள் மனதில் ஒரு பிழையான பிம்பத்தை உருவாக்குகின்றோம் என்று அவன் புரிந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு வந்திருந்தார்கள்.‌ வீட்டை நெருங்கும் போதே பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. வாசலில் காரை அமர் நிறுத்தும் போது அங்கு ஏற்கனவே இஷானும், கரீமும் நின்றிருந்தார்கள்.‌ அமரின் காரைப் பார்த்ததும் மலர்ந்த இஷானின் முகம் தன் தங்கை அமருக்குப் பக்கத்தில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும் சுருங்கிப் போனது. கரீமிற்கும் ஒரு மாதிரியாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாதவர் மகளிடம் வந்தார்.

“நீ ஓகேயா ஆல்யா?” என்றார் மகளின் தலையைத் தடவியபடி. நேற்று இரவு மகளுக்கு வயிற்று வலி வந்ததையும், அவள் வாந்தி எடுத்ததையும் சல்மா கணவரிடம் கூறியிருந்தார். இது ஒவ்வொரு மாதமும் அவர்கள் வீட்டில் நடப்பதுதான்.

“ம்… ஓகேப்பா.”

“நீ எந்த வேலையும் பார்க்காம ஒரு இடத்துல போய் உட்காரு, அம்மா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க.” பெண்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு கரீமும் போய்விட்டார்.

“என்னடா மச்சான் அசத்துறே? ட்ரெஸ்ஸெல்லாம் சூப்பரா இருக்கு!” இது இஷான்.

“அதையேன் கேட்கிறே? நேத்து உன்னோட தங்கச்சி ஒரே அதட்டல் போ! எனக்கு ஒழுங்கா ட்ரெஸ் பண்ணத் தெரியலையாம், ஃபோனுக்கு நாலஞ்சு மாடல் வேற வருது, சரி, அதையும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்னு வாங்கிட்டேன்.” எதையும் மறைக்கும் நோக்கம் இல்லாமல் இயல்பாகப் பேசினான் அமர்.‌ ஆனால் இஷான் தனது நண்பன் மட்டுமல்ல, ஆல்யாவின் அண்ணனும் கூட என்று அவன் எண்ணவில்லை.‌ வீட்டில் பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் அண்ணன்மாரின் பார்வையே வேறு என்று அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. 

“இந்த மாடல் நம்ம ஏரியாவுல கிடைக்குதா என்ன?” அண்ணன் ஆழம் பார்த்தான்.

“இல்லைடா, கண்டி டவுன்ல இருக்கிற ஹமீடியாஸ்லதான் இருந்துச்சு, ராவோட ராவா பஸ்ல போட்டுவிடச் சொன்னேன், காலைல ஐட்டம் கைக்கு வந்திடுச்சு.”

“ம்…” இஷான் உறுமியதையும் இவன் கவனிக்கவில்லை. மஹிராதான் தன்னைப் பற்றிக் குறையாகச் சொல்லியிருக்கிறாள் என்பது இவனுக்கு ஏனோ வலித்தது.‌ அது ஏனென்று அவனுக்குத் தெரியாது.‌ ஒருவேளை அவளோடான கல்யாணப் பேச்சு உருவானதால் அவள் பக்கம் இவன் மனம் இலேசாகச் சாய ஆரம்பித்திருக்குமோ! தன்னை மாற்றிக் காட்டிவிடும் நோக்கத்தில் இருந்தவன் சுற்றி இருந்தவர்களின் பார்வையைக் கவனிக்கவில்லை. 

மஹிராவுடனான தனது திருமணம் நின்று போனதோ, அல்லது அவள் இன்னொருவனோடு அவளை இணைத்துக் கொண்டதோ, எதுவும் இவனைப் பாதிக்கவில்லை.‌ சொல்லப்போனால் ஆரம்பத்திலிருந்தே இந்தத் திருமணம் சரியாக வருமா என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது. ஆனால் அவள் தன்னைப் பற்றிக் குறையாகக் கூறியது இவனுக்கு ஏனோ வலித்தது!

அதன்பிறகு விருந்து ஆரம்பித்துவிட்டது. இன்றைக்கு ஒரு நாள் எந்த வேலையும் இல்லாமல் இப்படி நிம்மதியாக உட்க்கார்ந்து சாப்பிடுவதும் அமருக்கு நன்றாக இருந்தது. அன்றைய நாளை அனுபவித்துச் செலவழித்தான் இளைவன். மஹிராவின் கல்யாணம் இனிதே நடந்தேறியது. 

***

இரண்டு மாதங்கள் பறந்து போயிருந்தன. அவரவர் வாழ்க்கையில் எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மஹிரா வெளிநாட்டுப் படிப்பிற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தாள். ஆல்யா அவளது படிப்பில் கவனம் செலுத்தினாள். இஷான் கல்யாண வேலைகளுக்காக அதிகம் விடுமுறை எடுத்திருந்ததால் இனி ஊர் பக்கம் வருவதையே நினைக்க முடியாமல் தனது வேலையில் ஐக்கியமாகி இருந்தான்.

அன்றைக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு விழா.‌ இரண்டாம் ஆண்டு மாணவர்களும், மூன்றாம் ஆண்டு மாணவர்களும் அந்த நிகழ்வை இணைந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். பிரதம அதிதியாக ஒரு மந்திரியை அழைத்திருந்தார்கள். அதிதிகள், விருந்தினர்கள், விரிவுரையாளர்கள் என‌ அனைவருக்கும் நிகழ்வின் இறுதியில் மதிய உணவு ஏற்பாடாகி இருந்தது.‌ 

அந்த ஏரியாவிலேயே ஏதாவது முக்கிய நிகழ்வென்றால் அமர்தானே விருந்து! பல்கலைக்கழகம் அவனையே அதற்கு ஏற்பாடு பண்ணியிருந்தது. ஆல்யாவிற்கும் இந்தத் தகவல் ஏற்கனவே தெரியும் என்பதால் அழகாகப் புடவை அணிந்து கொண்டு வந்திருந்தாள்.‌ அது இன்பத்தின் அறிவுரை.‌ புடவை கட்டினால் அவளது சிறுபெண் போன்ற தோற்றம் காணாமல் போய்விடுவதாக அறிவுரை வழங்கியிருந்தார். தன் மச்சானை நெருங்க அவளுக்கு அந்த அறிவுரை மிகவும் பிரயோஜனமாக இருந்தது.

“என்னடீ? உன்னோட ஆள்தான் சமையல் போல?” நண்பிகளின் கேலியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தாள் பெண். அவளுக்கு இன்றைக்கு அமர் என்ன உடையில் வருகிறான் என்று ஒரே பரபரப்பாக இருந்தது. அன்றைக்கு அவள் சொன்னதால்தான் அவன் தனது வேஷ்டி சட்டையை விட்டுவிட்டு வேறு உடையில் வந்தான் என்பதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. இன்றைக்கு அவன் உடை என்னவாக இருக்கும்?!

“வாவ்! என்னடீ ஆல்யா இது?! வேஷ்டி சட்டையிலேயே உன்னோட ஆளு அசத்துவாரு! இப்போ இப்பிடி விதவிதமா உடுத்திக்கிட்டு வந்தா நாங்க என்னப் பண்ணுறது?!” கூட இருந்த தோழி ஒருத்தி கூவவும் அந்த ப்ளாக் ஆடி நின்றிருந்த திசையை நோக்கித் திரும்பியது பெண். வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் ஷர்ட், கறுப்பு நிற கால்சட்டை. இடுப்பில் கறுப்பு நிற பெல்ட். ஷர்ட்டை இன் பண்ணியிருந்தான். சாதாரண உடை. அதில் கூட கனகம்பீரமாக நின்றிருந்தவனைப் பார்த்த போது இவளுக்கு உள்ளுக்குள் வெடித்துச் சிதறியது. 

“சரிசரி, உங்க வேலையைப் பாருங்கப்பா, அங்க என்னப் பார்வை வேண்டிக் கிடக்கு?” இது ஆல்யா.

“ஆஹா! பொண்ணு அவளோட ஆளைப் பாதுகாக்கிறாப்பா!” நண்பிகளின் கேலியை இரசித்தபடி தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள். ஷிவா என்கின்ற பையன் இவளது சீனியர். இவள் வேலை செய்யும் நேர்த்தி அவனுக்கு எப்போதும் பிடிக்கும் என்பதால் ஏதாவது வேலை என்றால் இவளிடம்தான் வருவான். இன்றைக்கும் ஏதோவொரு வேலை வரவும் அதை இவள் கையில் ஒப்படைத்திருந்தான். ஆல்யாவிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அவள் திறம்பட அதைச் செய்து முடிப்பாள் என்று அவனுக்குத் தெரியும். அவ்வப்போது வந்து அவளுக்குத் தேவையான தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

“ஆல்யா, இந்தக் கணக்கையும் அதோட சேர்த்துக்கோ, இன்னும் ஒரு ஐயாயிரம் வரவு வை, அந்த நோட்டை யாருக்கிட்டயும் குடுத்துராதே, நீயே கையோட வெச்சுக்கோ.” இப்படி ஆயிரம் விஷயங்கள் இருந்தது ஷிவாவிற்கு அவளோடு பேச. ஆனால் இதை இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருப்பதை அவர்கள் இருவரும் அறியவில்லை. சற்று நேரத்தில் ஒரு சீனியர் அவளிடம் வந்து,

“ஆல்யா, கொஞ்சம் எங்கூட வா.” என்று அழைக்கவும் எதுவும் புரியாமல் எழுந்து போனாள். அந்த சீனியர் அவளை அழைத்துச் சென்றது அமரிடம்.

“என்ன மேடம், எங்களையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க?!” அமரின் கேள்வியில் அவளுக்குக் கோபம் சர்ரென்று தலைக்கு ஏறியது. மற்றவர்களைக் கவராத வகையில் தொடர்ந்தது இவர்களது சம்பாஷணை.

“உங்களுக்குத்தான் நாங்க கண்ணுக்குத் தெரிய மாட்டோம், வேற யாராவது எங்களை விட வயசுல மூத்த கிழவிங்கத் தெரிவாங்க.” அவளும் வில்லங்கமாகவே பதில் சொன்னாள். இப்போது அமரின் பார்வை அவளை முறைத்தது. இவளுக்கு இவ்வளவு பேச வருமா என்று அவனுக்கு ஆச்சரியமாக வேறு இருந்தது.

“எதுக்கு இப்போ என்னை முறைக்கிறீங்க? நான் உங்கப் பக்கமே திரும்பிப் பார்க்கலையே, உங்க வயசுக்கு ஏத்த மாதிரி இங்க யாராவது சீனியர் பொண்ணுங்க பல்லைக் காட்டுவாளுங்க, நீங்க அவளுங்களோட பேசுங்க.” என்றவள் நகரப் போக,

“அது யாரு அந்தப் பையன்? எப்பப் பார்த்தாலும் உங்கூடவே பேசுறான்?” என்று அவளை நிறுத்தியது அவன் குரல். எலி இத்தனை நேரமும் அம்மணமாக ஓடியது ஏனென்று இப்போது புரிந்தது அவளுக்கு.

“நான் யாரு கூடப் பேசினா உங்களுக்கு என்ன மச்சான்? அந்தப் பையன் ஷிவா என்னை விட ஒரு வருஷந்தான் பெரியவன், ஏழு வயசு பெரிய கிழவன் கிடையாது.” அமருக்குப் பொறுமை பறந்து கொண்டிருந்தது.

“முஸ்லிம் பையன் இல்லைப் போலத் தெரியுது.” அந்தக் கேள்வியில் ஆல்யாவிற்கு இரத்தம் கொதித்தது. இப்போது கூட அவனுக்கு நான் இன்னொரு பையனோடு பேசியது பிரச்சனையல்ல. அது முஸ்லிம் பையனா இல்லையா என்பதுதான் பிரச்சனை.

“இது யூனி, இங்க இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது, எல்லாப் பசங்களும் எனக்கு ஒன்னுதான்.” என்றாள் கோபமாக.

“ஓ… மேடம் இப்போ என்ன சொல்ல வர்றீங்க? நாங்க யூனிக்கெல்லாம் போனது கிடையாது, அதால எங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்ல வர்றீங்களா?” அவன்‌ பேச்சு மேலும் குதர்க்கமாகவே வந்தது. அவனுக்கு இவள் காதல், கீதல் என்று எங்காவது வீழ்ந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது.

“இப்ப உங்கப் பிரச்சினை என்ன? நான் அந்தப் பையன் கூடப் பேசினதா? அதை அப்பிடியே போய் உங்க ஃரெண்ட்டுக்கிட்டச் சொல்லுங்க, அவன் வந்து எனக்கு இன்னொரு அறை வெப்பான்.” என்று வெடித்தவள் அப்பால் போய்விட்டாள். ஆனால் அமர் அந்தத் தவறைச் செய்யவில்லை. மாறாக இன்னொரு வேலை செய்தான். விழா முடிந்த பிற்பாடு விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவர்களின் தரவுகளுக்காக நிறைய புகைப்படங்கள் எடுத்தார்கள். அவர்களோடு மாணவர்களும் இணைந்து கொள்ள அமரும் எல்லோரோடும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டான்.

ஆல்யா தனது குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை எல்லோருக்கும் பறை சாற்ற அவளைத் தன்னருகிலேயே வைத்துக் கொண்டான். பல்கலைக்கழகம், மற்றும் மாணவர்கள் என பலரது முகநூலிலும் இந்தப் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. துரதிருஷ்டவசமாக அந்தப் புகைப்படங்கள் இஷானின் கண்களிலும் பட்டுத் தொலைத்தன. அமரின் அருகில் முகம் முழுவதும் புன்னகையோடு நின்றிருந்த தங்கை, அவளருகில் புன்னகை முகமாக நின்றிருந்த அமர். ஒரு அண்ணனாக இஷானுக்குள் வெப்பம் பரவியது.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 06

அத்தியாயம் 06அன்று சனிக்கிழமை. மதியத்திற்கு மேல் அமருக்கு எந்த முக்கியமான வேலையும் இல்லாததால் அம்மா கையால் உண்டுவிட்டு விச்ராந்தியாக சோஃபாவில் அமர்ந்திருந்தான். முகநூல் பக்கம் போய் நான்கைந்து நாட்கள் ஆகியிருந்ததால் அதை நோண்டிக் கொண்டிருந்தான். போன வாரம் பல்கலைக்கழகத்தில் எடுத்த புகைப்படங்களைப் பதிவேற்றம்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்