arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 06
Anbe… Azhage! chevron_right பகுதி 6 / 21

அத்தியாயம் 06

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் 06

அன்று சனிக்கிழமை. மதியத்திற்கு மேல் அமருக்கு எந்த முக்கியமான வேலையும் இல்லாததால் அம்மா கையால் உண்டுவிட்டு விச்ராந்தியாக சோஃபாவில் அமர்ந்திருந்தான். முகநூல் பக்கம் போய் நான்கைந்து நாட்கள் ஆகியிருந்ததால் அதை நோண்டிக் கொண்டிருந்தான். 

போன வாரம் பல்கலைக்கழகத்தில் எடுத்த புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்திருந்தார்கள். அந்த நிகழ்வே அவனை மிகவும் பரவசப்படுத்தியிருந்தது. பல்கலைக்கழகம், மேற்படிப்பு இவையெல்லாம் அவனுக்கு எட்டாத விஷயங்களாகிப் போயின. இருப்பினும் அன்றைக்கு அந்த வளாகத்திற்குள் காலடி எடுத்து வைத்ததே அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு விரிவுரையாளரே நேரடியாக வந்து இவனை வரவேற்றது இளையவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

புகைப்படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு ஃபோட்டோக்களில் இவனுக்கு அருகில் ஆல்யா நின்றிருந்தாள். ஆனால் பல இடங்களில் அவளுக்கு அருகில் அந்த ஷிவா நிற்கவும் இவனுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது. சனிக்கிழமை என்பதால் ஆல்யாவை அலைபேசியில் அழைத்தான். அழைப்பை ஏற்றவள்,

“ஹலோ.” என்றாள் அமைதியாக. குரலில் அன்னியம் தெரிந்தது. 

“பிஸியா இருக்கியா ஆல்யா?”

“இல்லை, சொல்லுங்க.”

“இப்பதான் யூனி ஃபோட்டோஸ் பார்த்தேன், நீ பார்த்தியா?” இவன் பேசுவது இன்பத்திற்கும் கேட்டது. ஆல்யாவோடுதான் இவன் பேசுகிறான் என்று அவருக்குப் புரிந்தது. ஏற்கனவே அவள் சம்பந்தமாக அமரிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தவர் இந்தப் பேச்சுவார்த்தை முடியட்டும் என்று காத்திருந்தார். 

“ம்…” அன்றைக்கு ஷிவா பற்றி இவன் பேசிய பேச்சு இன்றைக்கும் ஆல்யாவிற்குக் கோபத்தையே கொடுத்தது. ஆனால் இப்போதும் அவன் அதைத்தான் பேசப் போகிறான் என்று தெரியாமல் அழைப்பை ஏற்றிருந்தாள்.

“செகன்ட் இயர் பசங்க யாரும் உங்கிட்டப் பேச மாட்டாங்களா? தேர்ட் இயர் பசங்களுக்கு உங்கிட்ட என்னப் பேச்சு?” அமரின் குரலும் இப்போது வில்லங்கமாகவே வந்தது. ஏற்கனவே கோபத்தில் இருந்த பெண்ணிற்கு இந்தப் பேச்சு இன்னும் வெப்பமூட்டியது. 

“உங்கப் பிரச்சினை இப்போ என்ன மச்சான்? எதுக்காக இப்பிடித் திரும்பத் திரும்ப அதையே பேசுறீங்க?” அவள் குரல் உச்சஸ்தாயியில் வந்தது. 

“எதுக்காக உனக்கு இப்போ இவ்வளவு கோபம் வருது? நான் கேட்கிறதுல என்னத் தப்பிருக்கு? நாளைக்குக் கண்ட பிரச்சினையிலயும் மாட்டிக்கிட்டா யாருக்கு மானம் போகும்? உங்கப்பாவைப் பத்தி நீ யோசிச்சுப் பார்த்தியா?” 

“நான் அப்பிடி என்னப் பிரச்சினையில மாட்டிக்குவேன்னு நீங்க நினைக்கிறீங்க?” இதற்குப் பதில் சொல்ல அமர் விரும்பவில்லை. ஒருவேளை அவளின் மனதில் அந்த ஷிவா பற்றி அப்படி எந்த எண்ணமும் இல்லாமல் தான் எதையும் பேசிக் குழப்பி விடக்கூடாது என்று நினைத்தான். ஆனால் ஆல்யாவிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவனைத் தவிர வேறு யாரையும் அவள் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. அப்படியிருக்க இவன் இப்படியெல்லாம் பேசுவது அவளுக்கு வருத்தமாக இருந்தது. 

“இங்கப்பாரு ஆல்யா, உங்கப்பாக்குன்னு நம்ம ஊருக்குள்ள மட்டுமல்ல, இந்த ஏரியாவுலயே நல்ல பெயர் இருக்கு, வெளிநாட்டுக்குப் போய் படிச்சாலும் மஹியால அவரோட நல்ல பெயருக்கு எந்தக் களங்கமும் வரலை.” மஹிராவை அவன் உதாரணம் காட்டவும் இவளுக்கு ஆத்திரம் வந்தது.

“இப்போ என்னால எங்கப்பாக்குக் கெட்ட பெயர் வந்திடும்னு சொல்றீங்க, அதானே? என்னைப் பத்தின உங்க நல்ல அபிப்பிராயத்துக்கு ரொம்ப நன்றி மச்சான்.” என்றவள் அதற்கு மேல் பேசாமல் சட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அமர் திகைத்துவிட்டான். இந்தப் பெண் என்ன மரியாதை இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறது?!

“என்னாச்சு அமர்?” இன்பம் வந்து கேட்ட பிறகுதான் அலைபேசியையே வெறித்தபடி இருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

“யாரு? ஆல்யாவா?”

“ஆமாம்மா.”

“என்னவாம்? என்னப் பிரச்சினை அவளுக்கு இப்போ?” புன்னகைத்தபடி கேட்டார் பெரியவர். இவர்கள் பேசியது அவருக்குக் கேட்டதால் ஓரளவு நடந்ததை அவரால் அனுமானிக்க முடிந்தது. 

“அதில்லைம்மா…” அமருக்கு எப்படிச் சொல்வதென்று விளங்கவில்லை.

“அமர், ஆல்யாவைப் பொறுத்தவரை உங்களைத்தவிர வேற யாரையும் அவ கல்யாணம் பண்ணிக்கமாட்டா, அதை முதல்ல நீங்கப் புரிஞ்சுக்கணும்.”

“இதொரு பேச்சுன்னு நீங்களும் பேசுறீங்களாம்மா?”

“ஏம்பா? அந்தப் பொண்ணுக்கு என்ன குறை?”

“அவ வயசென்ன ? என்னோட வயசென்ன?”

“அப்பிடியென்ன பெரிய வயசு வித்தியாசம் உங்க ரெண்டு பேருக்கும்? ஏழு வருஷம், அவ்வளவுதானே?”

“என்ன இவ்வளவு சுலபமாச் சொல்லிட்டீங்க?”

“வேற எப்பிடிச் சொல்றது? ஆல்யாவை விட இந்த வீட்டுக்கு இன்னொரு நல்ல பொண்ணு கிடைப்பான்னு எனக்குத் தோணலை, உங்கம்மா இருந்திருந்தாலும் இதையேதான் சொல்லியிருப்பாங்க.”

“கல்யாணம் பண்ணுறது பெரிய வேலை இல்லைம்மா, அதுக்கப்புறம் வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு, நான் தூக்கி வளர்த்த பொண்ணும்மா அவ, அவகூட… அவகூட எப்பிடி?” இளையவனுக்கு வார்த்தைகள் சிக்கின. இன்பம் இப்போதும் புன்னகைத்தார்.

“அவளால அப்பிடியெல்லாம் சிந்திக்க முடியுதே!” 

“ஆனா என்னால முடியலையே?”

“எவ்வளவு அழகா இருக்கா தம்பி! அவ்வளவு வசதியான வீட்டுல வாழ்ந்த பொண்ணு, அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தப்போ எந்தக் குறையும் சொல்லாம எவ்வளவு அழகா நடந்துக்கிட்டா, மனசு முழுக்க உங்க மேல பாசம் இருக்கு, அன்பு இருக்கு, இதுக்கு மேல உங்களுக்கு என்ன தம்பி வேணும்? கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா உங்க மாமா வீடு உங்களைத் தாங்கும், அன்பான, அழகான பொண்டாட்டி, உள்ளங்கைல வெச்சுத் தாங்கிற மாமியார், மாமனார், ஆல்யாவை நீங்க வேணாம்னு சொல்றது முட்டாள்தனம்னு எனக்குத் தோணுது.”

“அம்மா…”

“நீங்க இப்போ பேசினது அந்தப் பொண்ணை ரொம்பவே காயப்படுத்தியிருக்கும், அவளோட மனசை நீங்க இன்னும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம்.”

“நான் இதுக்கு ஒத்துக்கிட்டாலும் மாமா வீடு இதுக்கு ஒத்துக்காதும்மா.”

“அதை நான் பார்த்துக்கிறேன், உங்க மாமாக்கு உங்களை அவங்க வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக்கணும், அவ்வளவுதான், அவங்களைப் பொறுத்தவரை நீங்க மூத்தவளைக் கட்டிக்கிட்டாலும் சரி, இளையவளைக் கட்டிக்கிட்டாலும் சரி.” 

“…” அமர் இப்போது மௌனமாகிவிட்டான். அவன் கண்களுக்குள் அன்றைக்குப் புடவை கட்டிக்கொண்டு வந்து நின்ற பெண் நடை போட்டாள். குழந்தை போல தன்னோடு விளையாடிய பெண் தனக்கு மனைவியா?! தன் வாழ்க்கைத் துணையா? என் காதல், என் தேடல், என் வேட்கை, என் தேவை, என எல்லாம் அவளுடனா?!

“கல்யாணம்னு ஒன்னு ஆனா எல்லாம் சரியாகிடும் தம்பி, ரொம்ப யோசிச்சு ஒரு நல்ல பொண்ணை இழந்திடாதீங்க, இன்னும் பத்து வருஷத்துக்கு அப்புறமா அம்மா சொன்னது சரின்னு உங்களுக்குத் தோணும்.”

“இஷான்… அவன் என்ன சொல்லுவான்?”

“உங்களை மாதிரிச் சின்னப் பையன், அவரும் உங்களை மாதிரித்தான் யோசிப்பாரு, ஆனா‌ இன்னும் கொஞ்ச காலம் போனதுக்கு அப்புறமா, சாரிடா மச்சான், நாம தப்பா முடிவெடுத்துட்டோம்னு சுலபமாச் சொல்லிட்டுப் போவாரு, ஆனா இழந்தது நீங்களா இருப்பீங்க, அதால மத்தவங்களைப் பத்திக் கவலைப்படாதீங்க தம்பி, உங்களுக்கு எது பொருத்தம்னு யோசிங்க.”

“அம்மா… என்னால முடியுமா?” தடுமாறியவனின் அருகில் வந்து அவன்‌ தலையைத் தடவிக் கொடுத்தார் இன்பம்.

“அன்னைக்கு ஆல்யா நம்ம வீட்டுக்கு வந்துச்சே, அப்போ உங்களுக்கு எப்பிடி இருந்துச்சு தம்பி? உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சா?”

“ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லைம்மா, அவ நம்ம வீட்டுப் பொண்ணு, அவளுக்கு இங்க எந்த வசதியும் இல்லையேன்னுதான் தோணிச்சு.”

“அது போதும் தம்பி, இனி ஆல்யாவை, கரீம் மாமாவோட பொண்ணுன்னு மட்டும் பார்க்காம அதுக்கு மேல யோசிங்க, நாளைக்கு அவ இந்த வீட்டுக்கு வந்தா அவளுக்கு இங்க இன்னும் என்ன வசதியெல்லாம் பண்ணிக் குடுக்கணும்னு சிந்திங்க, அம்மா உங்களுக்கு நல்லதைத்தான் சொல்லுவேம்பா.” என்றவர் அமரைத் தனியாகச் சிந்திக்க விட்டுவிட்டுக் கொல்லைப்பக்கம் போய்விட்டார். 

தலையைக் கையால் தாங்கி, கண்களை மூடியபடி அமர்ந்துவிட்டான் இளையவன்.‌ அம்மா சொல்வதும் சரியென்று ஒரு மனது சொன்னது.‌ மூத்தவளை இவனுக்காகப் பேசிய போது இது சரியாக வருமா என்ற எண்ணம்தான் மலையளவு தோன்றியது. ஆனால் இளையவளை நினைக்கும் போது அந்த எண்ணம் வரவில்லை. மனதுக்கு இவள் நெருக்கமாகத்தான் தோன்றினாள். அந்தக் குழந்தையோடு தன்னால் குடும்பம் நடத்த முடியுமா என்ற கவலைதான் வந்தது. வயது வித்தியாசம்தான் நெருடியது. ஆனால் அவள் குழந்தையல்ல, குமரி என்கின்ற எண்ணமும் அவனுக்குள் கூடிய சீக்கிரமே உருவானது. 

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அன்றைக்கு அமருக்கு உடம்பெல்லாம் வலித்தது. மதியத்திற்கு மேல் அவனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அவனது ஆஃபீஸ் அறையிலேயே கண்களை மூடி அமர்ந்திருந்தான். வேலைகள் பெரிதாக இருக்கவில்லை என்பதால் ஓய்வெடுப்பது நல்லது என்று தோன்றியது. சரியாக அந்நேரம் அவனது அலைபேசி சிணுங்கியது. ஆல்யாதான் அழைத்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணைப் பார்க்கவும் ஆர்வமாக எடுத்தான். அன்றைய வாக்குவாதத்திற்குப் பிறகு அவள் தன்னோடு பேசமாட்டாள் என்றுதான் அமர் நினைத்திருந்தான்.

“சொல்லு ஆல்யா.”

“எங்க இருக்கீங்க?”

“ஏம்மா? என்னாச்சு?”

“எங்க யூனி பக்கம் எங்காவது இருக்கீங்களா?” அவளது கேள்வி இவனைக் குழப்பியது.

“என்ன விஷயம்? சொல்லு?” 

“இல்லை… இன்னைக்கு பஸ் ஸ்ட்ரைக் போல இருக்கு, ஒரு மணி நேரமா காத்துக்கிட்டு இருக்கேன், பஸ் ஒன்னும் வரலை, ஆட்டோல தனியாப் போக பயமா இருக்கு, வீட்டுக்கு எடுத்துச் சொன்னா அம்மா ஒரு டான்ஸே ஆடுவாங்க…”

“நான் பக்கத்துலதான் ஒரு வேலையா இருக்கேன், பத்து நிமிஷத்துல வந்துடுவேன், பஸ் ஸ்டாப்ல நிற்காம யூனிக்குள்ள போய் இரு.” என்றவன் அவசரமாக காரை ஸ்டார்ட் செய்தான். அவன் ஆஃபீஸிலிருந்து அவள் இருக்கும் இடம் போக அரைமணி நேரம் பிடிக்கும். அதைச் சொன்னால் அவள் மறுப்பாக ஏதாவது கூறுவாள் என்றுதான் உண்மையை மறைத்தான். ட்ராஃபிக் அதிகம் இல்லாததால் இருபது நிமிடங்களில் அவளிடம் போய் சேர்ந்துவிட்டான். காரை அவன் பாதையிலிருந்து உள்ளே செலுத்த அப்போதும் அவள் தனியாக இல்லை. கூடவே அந்த ஷிவா நின்றிருந்தான். 

அன்றைக்குப் போல் அல்லாமல் இன்றைக்கு அந்தப் பையனைப் பார்த்த போது இவனுக்கு எரிச்சல் வந்தது. காரை அதற்குரிய இடத்தில் நிறுத்தியவன் அவள் வரும் வரை பொறுக்காமல் இறங்கினான். இவள் காரை நோக்கி நடந்து வர அவனும் கூட வந்தான். வந்தவன் சும்மாவும் வரவில்லை, வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி வந்தான்.

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா?!” என்று முணுமுணுத்தபடி அமைதியாக நின்றிருந்தான் அமர்.

“ஹாய் சார்.” பையன் படு கூலாகத்தான் பேசினான்.

“ஹாய் ஷிவா.”

“சூப்பர் சார், என்னோட பெயரெல்லாம் நியாபகம் வெச்சிருக்கீங்க?!”

“உங்களை மறக்க முடியுமா?” என்றவன் ஆல்யாவைப் பார்க்க,

“பாய் சீனியர்.” என்றவள் காரில் வந்து ஏறினாள். 

“பாய் ஷிவா.” என்று இவனும் ஏறிக்கொள்ள அந்த ஷிவா போய்விட்டான்.

“அம்மிணி பாடிகார்ட் எல்லாம் வெச்சிருக்கீங்கப் போல!” அமரின் குரல் சோர்வாக இருப்பது போல இருக்கவும் அவனைத் திரும்பிப் பார்த்தது பெண்.

“உங்களுக்கு என்னப் பண்ணுது? உடம்புக்கு முடியலையா?” அவள் ஒரு பார்வையிலேயே அவனைப் புரிந்து கொள்ளவும் அவன் திடுக்கிட்டான். அவனை நன்றாக ஊன்றிப் பார்த்தவள் அவனைக் கேளாமலேயே அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். நெற்றி சூடாக இருந்தது. அவள் புறங்கையின் குளுமை அவனுக்கு இதமாக இருக்கக் கண்களைச் சில நொடிகள் மூடிக்கொண்டான். 

“காய்ச்சல் மாதிரி இருக்கு, டேப்லெட் ஏதாவது போட்டீங்களா?” அவள் கேள்விக்கு அவன்‌ இல்லையென்று தலையாட்டினான். 

“அந்தப் பையனுக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு எப்பப் பார்த்தாலும் உங்கூடவே இருக்கான்?” இந்தப் பேச்சு பெண்ணுக்கு சலிப்பை உண்டுபண்ணியது.

“ஐயா சாமி! அந்த ஷிவாக்கு ஏற்கனவே கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கு, சும்மா ஒரு பாசத்துலதான் எங்கிட்ட வந்து பேசுவாரு.” அவள் சொன்னதை நம்பாதவன் போல இவன் ஒரு பார்வைப் பார்த்தான். 

“அவன் மனசுல அப்பிடி ஏதாவது தப்பான எண்ணம் இருந்திருந்தா உங்கக்கிட்ட வந்து இப்பிடிப் பேசுவானா? வீட்டுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுன்னு சொல்லிட்டு எனக்குக் காவல் இருந்தான், அவன் தப்பானவன்னா, வா உன்னை நான் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லி இந்நேரம் பைக்கை எடுத்திருக்க மாட்டான்?” அவள் அவ்வளவு விளக்கிச் சொன்ன போது இவன் மனது இலேசாகச் சமாதானம் ஆனது.

“மத்தவங்களை அப்புறமாப் பார்க்கலாம், உங்களை முதல்ல கவனிங்க.”

“ஏன்? எனக்கென்னாச்சு?” என்றவன் கண்களை நன்றாக மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

“ஐயையோ! என்னாச்சு உங்களுக்கு?” அவள் பதறினாள்.

“லைட்டா உடம்பு வலிக்குதும்மா.” அவனையும் அறியாமல் அவன் குரல் சோர்ந்து போனது. இப்போது எந்தத் தயக்கமும் இல்லாமல் அவன் கழுத்தில் தன் கையை வைத்துப் பார்த்தாள் பெண். சூடு அதிகமாகத்தான் இருந்தது.

“உடம்புக்கு முடியலைன்னா சொல்லியிருக்கலாமில்லை? நான் அப்பாவை வரச்சொல்லி இருப்பேனே? உங்களால இப்போ ட்ரைவ் பண்ண முடியுமா என்ன?” 

“இல்லைன்னா என்னப் பண்ணுறதா உத்தேசம்? நீங்க ட்ரைவ் பண்ணப் போறீங்களா?”

“ஆமா, இது பெரிய ஏரோப்ளேன், இதை ஓட்டுறது பெரிய சீன வித்தைப் பாருங்க.” வாய்க்குள் அவள் முணுமுணுத்தாலும் அவனுக்கு அவள் பேசியது கேட்டது. முகம் முழுவதும் புன்னகை  மலர அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தான். 

“கொஞ்ச தூரம் போனா அங்க ஒரு ஃபார்மசி இருக்கு.” இப்போது கண் திறந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“இல்லை… அங்க போனா டேப்லெட் வாங்கலாம்…” அவள் சொல்வது அவனுக்கும் சரியென்று தோன்றியிருக்கும் போலும். காரை ஸ்டார்ட் செய்து அவள் சொன்ன இடத்தில் கொண்டு போய் நிறுத்தினான். மளமளவென இறங்கியவள் முதலில் ஃபார்மசிக்குச் சென்று என்னவோ வாங்கினாள். பிற்பாடு பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் சென்றாள். அவள் வெளியே வரும்போது கையில் தண்ணீர் பாட்டிலும் இன்னும் ஏதேதோ பொருட்களும் இருந்தன. 

“முதல்ல இதைச் சாப்பிடுங்க.” என்று அவள் எதையோ நீட்டவும் அவள் முகத்தையே அவன் பார்த்திருந்தான்.

“நான் என்ன சர்வரோக நிவாரணியா? என்னைப் பார்த்தா வருத்தம் குணமாக? முதல்ல இதைச் சாப்பிடுங்க.” அவள் கையில் இருந்த கட்லட்டை வாங்கி அவன் உண்டான்.

“இப்போ இந்த டேப்லெட்டைப் போடுங்க.” என்ன, ஏதென்று ஒரு வார்த்தைக் கேட்காமல் அவள் சொன்னதையெல்லாம் செய்தான். அப்போது பார்த்து அவள் அலைபேசி அழைத்தது. சல்மாதான் அழைத்துக் கொண்டிருந்தார். ஸலாம் சொல்லி பேச்சை ஆரம்பித்தது பெண்.

“எங்க இருக்கே? உங்கப்பா ஒரு கேக்கை வாங்கிக் கொண்டாந்து வெச்சுட்டு பத்துத் தடவை கால் பண்ணிட்டாரு, எம்புள்ளை வந்து கேக் சாப்பிட்டாளான்னு.”

“வர்றேம்மா, இப்ப அதான் முக்கியமா?”

“நீ எங்க இருக்கே? பஸ் ஏறிட்டியா?”

“இல்லைம்மா, இன்னைக்கு பஸ் ஸ்ட்ரைக், ஒரு வேலையா எங்க யூனிக்கு அமர் மச்சான் வந்தாங்க, அவங்கக் கூடத்தான் இருக்கேன்.”

“ஓ… அமர் கூட இருக்கியா? அப்ப சரி, வீட்டுக்கு வரும்போது அமரை உள்ளே கூப்பிடு, அப்பிடியே வாசலோட அனுப்பிடாதே.”

“சரீ…” பல்லைக் கடித்தபடி சொல்லிவிட்டு ஃபோனை வைத்தவள் வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தாள். கண்களை மூடியபடி இருந்தாலும் அவள் செய்கைகள் அனைத்தையும் அவன் கவனித்தபடிதான் இருந்தான். அம்மாவும் மகளும் பேசியது வேறு அவன் காதில் விழுந்திருந்தது.

“எதுக்கு உங்கப்பா இப்போ கேக் வாங்கிட்டு வந்திருக்காரு? வீட்டுல ஏதாவது விசேஷமா?”

“…” அவள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். அவள் பக்கமாகத் திரும்பிப் பார்த்தவன்,

“உன்னைத்தான் கேட்கிறேன்?” என்றான்.

“இன்னைக்கு என்னோட பர்த்டே.” தலையைக் குனிந்தபடி வந்தது பதில். அமர் ஒரு நொடி திகைத்துப் போனான். அன்றைக்கு அவனோடு ஆஃபீஸ் அறையில் வைத்து சண்டை போடும்போது, இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு வயது இருபத்தி இரண்டு என்று ஏதோ சொன்னாளே!

“ஏய்! சொல்லவே இல்லை!”

“அடுத்த வருஷம் மறக்காம போஸ்டர் அடிச்சு ஒட்டுறேன்.” அவள் சிரிக்காமல் சொன்னாள்.

“ஹாப்பி பர்த்டே.” அந்த வாழ்த்து அவளுக்கு இனித்திருக்கும் போலும். புன்னகைத்தாள். சட்டென்று எதுவோ தோன்ற அமர் அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்தான். 

“மாமி, நான் அமர் பேசுறேன்.”

“சொல்லுப்பா.” அந்தப்புறம் சல்மாவின் குரல் கேட்டது. 

“இன்னைக்கு ஆல்யாவோட பர்த்டேயாம்? எனக்குத் தெரியாது, இப்பதான் சொன்னா, நான் கொஞ்சம் அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா?” 

“ஐயையோ! அதெல்லாம் வேணாம்! நான் என்ன சின்னப் பொண்ணா பர்த்டே கொண்டாட?” அம்மாவை முந்திக்கொண்டு பதில் சொன்னாள் பெண்.

“சின்னப் பொண்ணு இல்லாம பின்ன என்ன கிழவியா நீ? நீங்க சொல்லுங்க மாமி, ஏழு மணிக்கு முன்னாடி வந்திருவோம்.” 

“சரி அமர், மாமாக்கிட்ட நான் சொல்லிடுறேன்.” சல்மா சொல்லவும் அழைப்பைத் துண்டித்தவன் காரை நகர்த்தினான். ஒரு பிரபலமான நகைக்கடைக்கு முன்பாக அந்த ப்ளாக் ஆடி நின்றது.

“இதெல்லாம் எனக்கு வேணாம்.”

“உங்கிட்ட நான் எந்த அபிப்பிராயமும் கேட்கலை, முதல்ல இறங்கு.” அதிகாரமாகச் சொன்னவன் அவள் பக்கக் கதவைத் திறந்துவிட்டான். காரை விட்டு இறங்கியவள்,

“ப்ளீஸ், சொன்னாக் கேளுங்க, இன்னைக்கு என்னோட பர்த்டேன்னு தெரிஞ்சு நீங்களா ஏதாவது வாங்கிக் குடுக்கிறது வேற, நானா என்னோட வாயால சொல்லிட்டு… எனக்குச் சங்கடமா இருக்கு.” 

“சாரிம்மா, எனக்கு இன்னைக்கு உன்னோட பர்த்டேன்னு தெரியலை, இனி மறக்க மாட்டேன்.” அவன் குரல் மிகவும் தணிந்து வந்தது. தனது பையில் இருந்த சின்னச்சின்னப் பரிசுப் பொருட்களை வெளியே எடுத்து அவனிடம் நீட்டியது பெண். ஒரு சிரிப்போடு அதையெல்லாம் வாங்கியவன் ஒவ்வொன்றாகப் பார்த்தான். அவளது நண்பிகளின் பரிசுப் பொருட்கள். கூடவே ஷிவாவும் எதுவோ கொடுத்திருந்தான்.

“ஓஹோ! நம்ம ஹீரோவும் என்னமோ குடுத்திருக்காரு!” அவன் தமாஷாகத்தான் சொன்னான். சட்டென்று அவன் கையிலிருந்த அத்தனைப் பொருட்களையும் பறித்தவள் மீண்டும் தன் பைக்குள் போட்டுக் கொண்டாள். இப்போது அமரின் சிரிப்புச் சத்தம் பலமாக இருந்தது.

“உள்ள வா ஆல்யா.” அதற்கு மேலும் பிகு பண்ணாமல் பெண் இவனோடு உள்ளே போனது. இவன் தலையைக் கண்டதும் கடையின் முதலாளியே வந்து வரவேற்றார்.

“தம்பி, வாங்க வாங்க.” ஆனால் அந்த மனிதரை இவனுக்கு யாரென்று தெரியவில்லை. 

“எங்கண்ணாவோட பொண்ணு கல்யாணத்துக்குத் தம்பியோட கேட்டரிங்தான், அருமையான சாப்பாடு, சம்பந்தி வீட்டுக்காரங்களுக்கு அவ்வளவு சந்தோஷம், அன்னைக்கே உங்கக்கிட்டப் பேசணும்னு நினைச்சேன், ஆனா சந்தர்ப்பம் அமையலை.” அவர் தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டார்.

“சந்தோஷம் சார்.” இவனும் புன்னகைத்தான்.

“என்னப் பார்க்கிறீங்க தம்பி? தம்பிக்குக் கல்யாணம் ஆச்சா? மேடம் யாரு?”

“இல்லையில்லை, இது என்னோட மாமா பொண்ணு.” 

“அப்பிடியா, என்ன பார்க்கிறீங்கம்மா?”

“எனக்குச் சின்னதா ஒரு ரிங் போதும்.” அவன் காதோடு கிசுகிசுத்தது பெண். கடையை ஒரு பார்வைப் பார்த்தவன் நெக்லஸ் இருந்த பகுதிக்குப் போனான். இருவரும் அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

“இவ்வளவு காஸ்ட்லியா வேணாம்.” 

“கரீம் மாமா பொண்ணுக்கு எவ்வளவு காஸ்ட்லியா வேணும்னாலும் வாங்கலாம்.” அந்த வார்த்தைகளில் அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ! சட்டென்று எழுந்து நின்றாள்.

“ஓ! சாரி சாரி, எங்க ஆல்யாக்கு எவ்வளவு காஸ்ட்லியா வேணும்னாலும் வாங்கலாம்.” அவன் சட்டென்று திருத்திச் சொல்ல மலை இறங்கியவள் மீண்டும் அமர்ந்தாள். அமருக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்தது. அந்தச் சின்னப் பெண் அவள் இஷ்டத்திற்குத் தன்னை வளைக்க நினைக்கிறாள் என்று புரிந்த போதும் அவனுக்குக் கோபம் வரவில்லை. மாறாக வாஞ்சை உணர்வுதான் உண்டானது. ஆனால் இந்த உணர்வு ஒரு திருமணத்திற்குப் போதுமா? குழந்தை போல இருக்கும் இவளை எப்படி மணந்து கொள்வது?! ஆனால் இன்றைக்கு அவன் மேல் அவள் காட்டிய கரிசனம், அக்கறை அவனுக்குப் பிடித்திருந்தது.

அம்மா என்ற வார்த்தை அவனது பதினைந்து வயதிலேயே தொலைந்து போனது. வீட்டின் மூத்த மகன், ஆண்பிள்ளை. அம்மா மேல் அவனுக்கு அளவில்லாத பாசம் இருந்தது. அந்த அம்மா இல்லை என்று ஆனபோது அமர் துடித்தது கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அன்னையை இழந்த தம்பி, மனைவியை இழந்த அவன் அப்பா என அக்கறை காட்டவேண்டிய பல உறவுகள் அவனுக்கிருந்தது. இது போதாதென்று ஆண்டவன் தந்தையையும் பறித்துக்கொண்ட போது இளையவன் நிலைகுலைந்து போனான். இந்த இழப்புகள் அனைத்துக்கும் ஆண்டவன் கொடுத்த ஒரே மருந்து இன்பம் என்ற பெண்மணிதான்.

இன்பம் அந்த இரு பையன்கள் மீதும் அன்பைக் கொட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் அடிக்கடி அவன் மனம் தன் அன்னையைத் தேடும். அந்தத் தாய் மடி கொடுக்கும் சுகத்திற்காக ஏங்கும். அவன்‌ தொலைத்த அந்தத் தாய் மடியை இந்தச் சின்னப் பெண் கொடுப்பாளா?!

“இந்த டிஸைன் பாருங்க சார்.” ஒவ்வொன்றாகக் கடையில் நின்றிருந்த பெண் எடுத்துக் காண்பிக்க அதில் ஒன்றைத் தெரிவு செய்தான் அமர்.

“இது புடிச்சிருக்கா பாரு.” அவன் காட்டிய மாடல் மிகவும் அழகாக இருந்தது. ஆனால் அதில் இருபது கிராம் என்று எழுதியிருப்பதைப் பார்த்தவள் வேண்டாம் என்றாள். இரண்டரைப் பவுனா?! இன்றைய விலையில் இரண்டரைப் பவுன் தங்கத்தின் விலை என்ன?! அவள் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டவன் அதையே பேக் பண்ணச் சொன்னான். ஆல்யாவால் எதுவும் பேச முடியவில்லை. அவள் கூறியதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை. 

“நல்லது தம்பி, கல்யாணத்துக்கு நகை எடுக்கிறதா இருந்தாலும் நம்ம கடைக்கு வாங்க, நல்லபடியா எல்லாத்தையும் முடிக்கலாம்.” வாயெல்லாம் பல்லாக அவனை வழியனுப்பி வைத்தார் கடை முதலாளி. இருவரும் காருக்கு வந்துவிட்டார்கள்.

“எதுக்கு இந்த மூஞ்சியை இப்போ இப்பிடி வெச்சிருக்கே?”

“இவ்வளவு காஸ்ட்லியா எனக்கு… கிஃப்ட் வாங்கிக் குடுக்க நீங்க யாரு?” அவள் கேட்டுவிட்டாள். தனது மனதுக்குள் முள்ளாய் தைத்த கேள்வியைக் கேட்டுவிட்டாள். ஆனால் அவனிடம் அந்தக் கேள்விக்குப் பதிலில்லை. மாறாகக் கோபம் வந்தது. 

“அந்த ஷிவா வாங்கிக் குடுக்கலாம், நான் வாங்கிக் குடுக்கக் கூடாதோ?!” குதர்க்கமாக வந்தது கேள்வி. இப்போது தனது பைக்குள் இருந்த பரிசுப் பொருட்களில் ஷிவா கொடுத்ததை எடுத்தவள் அதை மளமளவெனப் பிரித்தாள். உள்ளே சின்னதாக ஒரு கண்ணாடி உருண்டைக்குள் ஒரு சின்னப்பெண் உட்கார்ந்து சிந்திப்பது போல ஓர் பரிசுப் பொருள் இருந்தது.

“ஃப்ரெண்ட்ஸ் இப்பிடித்தான் கிஃப்ட் குடுப்பாங்க, மிஞ்சி மிஞ்சிப் போனா இது ஒரு ஆயிரம் ரூபா இருக்குமா? இல்லைன்னா ரெண்டாயிரம் ரூபா? ஆனா நீங்க வாங்கிக் குடுத்திருக்கிறதுக்கு அர்த்தம் என்ன? எனக்குப் புரியலை.” அவள் கேள்வி நியாயமாகத்தான் இருந்தது. அந்த நியாயம் அவனைச் சுட்டிருக்கும் போலும்.‌ பதில் எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்தான். அவன் கோபம் அத்தனையும் இப்போது அந்தக் கறுப்பு இயந்திரத்தின் மேல் காட்டப்பட்டது. கரீமின் வீட்டிற்கு முன்பாக அந்த ப்ளாக் ஆடி நின்றது. 

“அம்மா உள்ள கூப்பிடச் சொல்லிச் சொன்னாங்க.” 

“ஓ… அப்போ நீயாக் கூப்பிடல்லை, உங்கம்மா கூப்பிடச் சொன்னதால கூப்பிடுற, அப்பிடித்தானே?” அவன் உள்ளத்தில் உதித்த வெப்பத்தை எப்படித் தணிப்பது என்று தெரியாமல் அவள் மீது எரிந்து விழுந்தான். ஆனால் ஆல்யா அசரவில்லை. அவனை நேராக ஓர் பார்வைப் பார்த்தாள். 

“எங்க வீட்டுக்குள்ள மட்டுமில்லை, என்னோட ரூமுக்குள்ள கூட உங்களைக் கூப்பிட நான் ரெடி, உள்ள வர நீங்க ரெடியா?” நிதானமாக, ஆணித்தரமாகக் கேட்டவள் இறங்கிப் போய்விட்டாள். கார் சீட்டில் அவள் வைத்துவிட்டுப் போன ரெட் வெல்வெட் பெட்டி இவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 07

அத்தியாயம் 07கோபமாக சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் அமர். அவன் முன்பாக அந்தச் சிவப்பு நிற வெல்வெட் பெட்டி கண் சிமிட்டியபடி தானும் அமர்ந்திருந்தது. சற்று அப்பால் முகத்தில் புன்னகையோடு இன்பம் நின்றிருந்தார். வீட்டினுள் வந்ததும் வராததுமாக அம்மாவிடம் நடந்தது அனைத்தையும் கொட்டியிருந்தான் மகன்."அந்தச்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்