arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 07
Anbe… Azhage! chevron_right பகுதி 7 / 21

அத்தியாயம் 07

visibility 7
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் 07

கோபமாக சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் அமர். அவன் முன்பாக அந்தச் சிவப்பு நிற வெல்வெட் பெட்டி கண் சிமிட்டியபடி தானும் அமர்ந்திருந்தது. சற்று அப்பால் முகத்தில் புன்னகையோடு இன்பம் நின்றிருந்தார். வீட்டினுள் வந்ததும் வராததுமாக அம்மாவிடம் நடந்தது அனைத்தையும் கொட்டியிருந்தான் மகன்.

“அந்தச் சின்னப் பொண்ணுக்குக் கொழுப்புக் கூடிப் போச்சு, எவ்வளவு ஆசையா அவளோட பர்த்டேன்னு தெரிஞ்சு வாங்கிக் குடுத்தேன், இப்பிடி வாங்கிக் குடுக்க நீ யாருன்னு கேட்டுட்டுப் போறா!”

“நீங்க வாங்கிக் குடுத்தது அவளோட பிரச்சினை இல்லை தம்பி, இவ்வளவு காஸ்ட்லியா வாங்கினதுதான் அவளுக்குப் புடிக்கலை.”

“ஏம்மா? நான் அவளுக்குக் காஸ்ட்லியா வாங்கக் கூடாதா?”

“அவளோட கேள்வியே அதுதானே? கரீம் மாமாவோட பொண்ணு எங்கிறதைத் தவிர உங்களுக்குள்ள வேற என்ன உறவிருக்கு? அந்த உறவின் அடிப்படையில நீங்க வாங்கிக் குடுக்கிற எதுவும் எனக்கு வேணாம்னு சொல்றா, அது எனக்குத் தப்பாத் தோணலை.”

“அப்ப அவ மட்டும் எம்மேல அக்கறைக் காட்டலாமா? அது மட்டும் சரியா?”

“அதுக்கு அவ வேற பேரு சொல்றா, அந்த உறவு வேறங்கிறா, ஆனா நீங்க அப்பிடி எதுவும் சொல்லலையே தம்பி!”

“நீங்க ஏன் இப்போ அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க? நீங்க எனக்கு அம்மாவா? இல்லை அவளுக்கு அம்மாவா?”

“உங்களுக்குத்தான் அம்மா, எம் பையன் நல்லா இருக்கணும்னுதான் நான் இப்போ பேசிக்கிட்டு இருக்கேன், நீ எனக்குக் கரீம் மாமாவோட பொண்ணு மட்டுமில்லை, நாளைக்கு என் வாழ்க்கையே நீதான்னு சொல்லிப் பாருங்க, அந்த நகைக்கடையையே மொத்தமா வாங்கிக் குடுங்கன்னு கேட்பா.” சல்மா சொல்லிக்கொண்டிருக்கும் போது அவரது அலைபேசி அழைத்தது. 

“ஆல்யாதான் கூப்பிடுறா.” என்றவர் அவசரமாக அழைப்பை ஏற்றார்.

“சொல்லும்மா ஆல்யா.” அவர் பேச்சை ஆரம்பித்த பிறகும் அவள் பேசவில்லை. மாறாக விசும்பும் சத்தம் கேட்டது.

“என்னடா கண்ணா ஆச்சு? ஏன்டா ராஜாத்தி நீ இப்போ அழுறே?!” இன்பம் இளையவளின் கண்ணீர் குரல் கேட்டுப் பதறிப் போனார். அதுவரை அமைதியாக இருந்த அமரின் முகத்திலும் கலவரம் சூழ்ந்து கொண்டது.

“மாமி… இன்னைக்கு…”

“தெரியும்டா செல்லம், தம்பி இப்பதான் எல்லாத்தையும் சொன்னாங்க, என் தங்கப் பவுனில்லை, அழாமப் பேசுடா, நீ அழுதா எனக்குக் கஷ்டமா இருக்குடா.” இன்பம் இளையவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தார். அமரின் முகத்திலும் கவலை தெரிந்தது.

“எதுக்கு இவ்வளவு பெரிய கிஃப்ட்னு கேட்டேன், அது தப்பா மாமி?”

“தப்பில்லைடா ராஜாத்தி, ஆனா தம்பி ஆசையாத்தான் வாங்கிக் குடுத்திருக்கு, அதை நீ புரிஞ்சுக்கணும்.”

“கரீம் மாமாவோட பொண்ணுக்கு ஆசையா வாங்கிக் குடுத்திருக்காங்க, என்னோட இடத்துல இன்னைக்கு மஹி இருந்திருந்தாலும் அவங்க இதையேதான் பண்ணியிருப்பாங்க, எனக்கு அப்பிடி வாங்கிக் குடுக்கிறது எதுவும் வேணாம்.” கண்ணீரைத் துடைத்தபடி அவள் சொல்ல இன்பத்திற்கு என்னப் பேசுவது என்று தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டார்.

“சரிம்மா, விட்டுத்தள்ளு, பர்த்டேன்னு சொல்லிட்டு இப்பிடி அழுதா எப்பிடி? பர்த்டே பொண்ணு கேக் சாப்பிட்டாச்சா?” பேச்சை மாற்றினார் பெரியவர்.

“இல்லை மாமி.”

“அடடா! என்னப் பொண்ணு நீ?! அப்பா ஆசையா கேக் வாங்கி வெச்சிருக்காங்கல்லை? முதல்ல அதை போய் சாப்பிடும்மா, மாமி அப்புறமாக் கூப்பிடுறேன் என்ன?” என்றவர் பேச்சை முடித்துக் கொண்டார். 

“இன்னைக்கு மஹிக்கு பர்த்டேன்னு சொல்லியிருந்தாலும் நீங்க இதையேதான் பண்ணி இருப்பீங்களாம், சொல்லிட்டு அழுறா, பாவம் தம்பி அந்தப் பொண்ணு, உங்களை நினைச்சு அழுது.” இன்பத்தின் வார்த்தைகள் அமரை என்னவோ செய்தன. மஹிக்கு இன்றைக்குப் பிறந்தநாள் என்றிருந்தாலும் நான் இப்படித்தான் ஐந்து லட்சத்தைத் தூக்கிக் கொடுத்திருப்பேனா?! இல்லை என்று சொன்னது மனது. எதைப்பற்றியும் யோசிக்காமல் இவ்வளவு பெரிய தொகையைத் தூக்கிக் கொடுத்தது ஆல்யாவிற்காக. அதை ஏன் அவள் புரிந்து கொள்ள மறுக்கிறாள்?!

ஐந்து ஆயிரங்களில் ஒரு மோதிரத்தை வாங்கிக் கொடுக்காமல் ஐந்து லட்சங்கள் செலவு பண்ணியது ஒரு குற்றமா?! ஆனால் அவள் அழுகிறாள் என்ற வார்த்தை அவனை ரணப்படுத்தியது. எப்போதும் முகத்தில் கண்ணீரோடு, ஏதாவது ஒரு புகாரை எடுத்துக் கொண்டு அவள் தன்னிடம்தானே வருவாள். இன்றைக்கு அந்தக் கண்ணீர் முகம் தன்னிடம் வராமல் தன்னைப்பற்றியே அம்மாவிடம் பிராது கொடுத்தது அவனுக்கு வலித்தது. அவளோடு பேச வேண்டும் போல இருக்கவும் அவளது எண்ணை அழைத்தான். ஆனால் அவள் அவனது அழைப்பை ஏற்கவில்லை. 

“தம்பி, என்ஜினியர் வந்திருக்காங்க.” இன்பம் வந்து சொல்லவும் அந்த வேலையைப் பார்க்க எழுந்து போய்விட்டான். வீட்டைப் புதிதாகக் கட்ட ஏற்கனவே தம்பியோடு கலந்தாலோசித்து முடிவெடுத்திருந்தான். இன்றைக்கு அது சம்பந்தமாகப் பேச என்ஜினியர் வருவதாக ஏற்பாடாகி இருந்தது. ஆல்யாவின் முகம் அவ்வப்போது மனதுக்குள் வந்தாலும் தனது தேவைகள் எவையென வந்தவரிடம் விளக்கிக் கொண்டிருந்தான். மனது இலேசாகக் கனத்தது போல இருந்தது. 

***

அடுத்து வந்த இரண்டு வாரங்களும் அமருக்கு அத்தனை நன்றாகக் கழியவில்லை. எதுவோ குறைவது போல உணர்ந்தான். இவன் கேட்டதற்கு ஏற்ப வீட்டின் வரைபடத்தை வரைந்து அனுப்பியிருந்தார் என்ஜினியர். தம்பிக்கு ஒரு காப்பியை அனுப்பியவன் இன்பத்திடமும் அதைக் காட்டினான்.

“ரொம்ப நல்லா இருக்கு தம்பி.” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆல்யாவிடமும் காட்டினால் நன்றாக இருக்கும் என்றுதான் அவருக்குத் தோன்றியது. ஆனால் அதை மகனிடம் சொல்லும் தைரியம் இருக்கவில்லை. கப்போர்டைத் திறக்கும் போதெல்லாம் அங்கே உட்கார்ந்து கொண்டு கண்சிமிட்டும் அந்தச் சிவப்பு வெல்வெட் பெட்டி வேறு அவனை என்னவோ செய்தது. இன்றைக்கும் அவளது அலைபேசியைத் தொடர்பு கொண்டான். ஆனால் பதிலில்லை. அமரின் பொறுமைப் பறந்து கொண்டிருந்தது.

“உங்க செல்லப் பொண்ணு எங்க? சத்தத்தையே காணோம்?” இன்பம் இப்போதெல்லாம் அவளிடம் அடிக்கடி பேசுவதை இவனறிவான். தன்னுடைய அழைப்புகளை மாத்திரம்தான் அவள் ஏற்பதில்லை என்றும் அவனுக்குத் தெரியும். 

“ட்ரிப் போயிருக்காங்க, யுனிவர்சிட்டி பசங்க எல்லாம்.” சிரித்த முகமாகச் சொன்னார் அம்மா.  அவளைப் பற்றிப் பேசினாலே இவர் முகம் மலர்ந்து போகும்.

“ம்… எங்க? எங்க போயிருக்காங்களாம்?” 

“ஹம்பாந்தோட்டை, ஏதோ மாலலன்னு சொன்னா, எனக்குச் சரியாப் புரியலப்பா, ஏதோ படிப்பு விஷயமா நிறையப் பசங்க போயிருப்பாங்க போல, கவனமா இருந்துக்கோடா ராஜாத்தின்னு சொன்னேன்.” 

ஹம்பாந்தோட்டை (அம்பாந்தோட்டை). இலங்கையின் தெற்குக் கரையோர நகரம். சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பிரதேசம் இப்போது அதிக வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. சிறிதே உலர்ந்த காலநிலை இருக்கும் இந்தப் பிரதேசத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி உண்டு. 

அமரின் இருப்பிடத்திலிருந்து இருநூற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த இடம். எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த நாள் காலை அந்த ப்ளாக் ஆடி ஹம்பாந்தோட்டை நோக்கிப் புறப்பட்டது. ஏற்கனவே அவன் கேள்விப்பட்ட இடம்தான். இப்போதெல்லாம் வெளிநாட்டு வாசிகள் அதிகம் வந்து போகும் இடம். போகவேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அவனது வேலைப்பளு அதற்கு இடம் கொடுக்கவில்லை. 

முழுதாக இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும் நோக்கத்துடன் பயணத்தை ஆரம்பித்தான் இளையவன். நல்லவேளையாக அவனுக்கு இந்த இரு நாட்களிலும் எந்த விஷேட வைபவங்களும் இருக்கவில்லை. ஏ ஃபைவ் பாதையில் ஐந்து மணிநேர ஓட்டம். அந்த ப்ளாக் ஆடி அவன் சொன்னதையெல்லாம் கேட்டது. ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டு அமர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது மாலை மணி நான்கு. அந்த மாதத்தில் அதிக மழை வீழ்ச்சி இருக்கும் என்பதால் இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. 

பச்சைப் பசேலென இருந்தது அந்த இடம். சுற்றிவர இயற்கையாகவே இருந்த நீர்நிலை அந்த இடத்திற்கு இன்னும் குளுமை சேர்த்தது. மழை தூறிக் கொண்டிருந்ததால் பார்க்க அத்தனை அழகாக இருந்தது அந்த இடம். தென்னை மரங்கள், அடர்ந்த பச்சைப் புதர்களுக்கு நடுவே கட்டடம் அமைத்திருந்தார்கள். நடுவே பெரிய நீச்சல் குளம். பகல் பொழுதை விட இரவு வேளையில் அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்கும் என்று தோன்றியது அமருக்கு. 

“அம்மா…” இன்பத்தை அழைத்திருந்தான். இப்போதும் அவன் ஆல்யாவின் அலைபேசிக்கு அழைக்க அவள் அதை எடுக்கவில்லை. கோபம் இலேசாகத் துளிர்த்தது. 

“சொல்லுங்க தம்பி.”

“உங்க செல்லப் பொண்ணு என்னோட காலை ஆன்ஸர் பண்ண மாட்டேங்கிறா, கொஞ்சம் நீங்க எடுத்துச் சொல்லுங்க.”

“அவதான் ஊர்ல இல்லையேப்பா, நேத்து நான் சொல்லலை, டூர் போயிருக்காங்க.”

“அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு, அவ இருக்கிற ஊர்லதான் இப்போ நான் இருக்கேன்.”

“என்ன?! என்ன தம்பி சொல்றீங்க நீங்க?!”

“அதுக்கு எதுக்கும்மா நீங்க இவ்வளவு ஷாக் ஆகுறீங்க? இந்தா இருக்கிற ஹம்பாந்தோட்டைக்கு நான் வர்றது அவ்வளவு பெரிய விஷயமா என்ன?”

“இல்லை… இல்லைப்பா… அது…” இன்பத்திற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மனதுக்குள் குப்பென்று ஒரு சந்தோஷம் பரவியது. அமர், ஆல்யாவைத் தேடிக்கொண்டு இவ்வளவு தூரம் போயிருக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்?! 

“இதோ… இப்பவே நான் ஆல்யாக்கு எடுத்துச் சொல்றேன்.” என்றவர் அதன்பிறகு என்ன செய்தார் என்று அவனுக்குத் தெரியாது. காரை விட்டு இறங்கியவன் அந்தச் சாரல் மழையை அனுபவித்தபடி நின்றிருந்தான். நீலநிற ஜீன்ஸ், வெள்ளை டீ ஷர்ட் அணிந்திருந்தான். கண்களில் சன் கிளாஸஸ். ஐந்து நிமிடங்களில் அவன்‌ நின்றிருந்த இடத்திற்கு ஆல்யா அரக்கப் பறக்க ஓடிவந்தாள். இவனுக்கு அருகில் வந்து நின்றவளுக்கு மூச்சு வாங்கியது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் தனது மனதுக்குள் எதுவோ நிறைவது போல உணர்ந்தான் அமர்.

“என்னாச்சு மச்சான்? ஏதாவது வேலையா வந்தீங்களா? மாமி சொன்னாங்களா என்னையும் போய் பார்க்கச் சொல்லி?” நடந்ததை மறந்துவிட்டு அவன் வந்தது மட்டும் போதும் என்பது போல பேசிக் கொண்டிருந்தாள் பெண். அவன் தலையை இடம் வலமாக ஆட்டினான்.

“யாரும் எதுவும் சொல்லலை, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.” எந்த லஜ்ஜையும் இல்லாமல் அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். 

“எதுக்…கு…” 

“உள்ள வா சொல்றேன்.” என்றவன் காரிற்குள் ஏறி உட்கார்ந்தான். அவளும் ஏறிக்கொள்ளவும், அவளிடம் ஒரு காகிதத்தை நீட்டினான்.

“என்ன இது?!”

“பிரிச்சுப் பாரு.” அவள் அந்தக் காகிதத்தைப் பிரித்தாள். ஒரு வீட்டின் வரைபடம் இருந்தது.

“நாம புதுசாக் கட்டப்போற வீட்டோட மேப், நல்லா இருக்கா?” அவன் தன்னிடம் அபிப்பிராயம் கேட்டதை நம்ப முடியாதவள் போல அவனை ஒரு பார்வைப் பார்த்தது பெண்.

“என்னோட மூஞ்சைப் பார்க்காம மேப்பைப் பாரு, உனக்கு ஏதாவது திருத்தம் செய்யணும்னா சொல்லு.” அவன் சாதாரணமாகச் சொன்ன விஷயங்கள் அவளுக்குள் ஏதேதோ கனவுகளுக்கு வித்திட்டது. 

“இதை… இதை ஏன் எங்கிட்டக் கேட்கிறீங்க மச்சான்?”

“ஏய் லூசுப் பொண்ணே! நம்ம ஒரு வீடு கட்டப் போறோம், அதை உங்கிட்டக் காட்டி அபிப்பிராயம் கேட்டா எங்கிட்ட ஏன் காட்டுறீங்கன்னு கேட்கிறே?”

“இல்லை… ரெஹான் மச்சான் என்ன சொன்னாங்க?” அவளுக்குச் சில விடயங்களைத் தெளிவு பண்ண வேண்டியிருந்தது.

“அவன் நல்லா இருக்குன்னுதான் சொன்னான், சீக்கிரமா வேலையை ஆரம்பிக்கச் சொன்னான்.”

“ஓ… மாமிக்குப் புடிச்சிருக்காமா?”

“ம்… அவங்களுக்குப் பயங்கர ஹாப்பி, அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ உனக்கேத்த மாதிரி எந்த வசதியும் நம்ம வீட்டுல இல்லையேன்னு வருத்தப்பட்டாங்க.” எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வந்தது பதில்.

“நல்லாருக்கு மச்சான், அப்போ பழைய வீட்டை இப்போ உடைக்க மாட்டீங்க, இந்த வீடு முடியும் வரைக்கும் அது இருக்குமா?”

“ஆமா.” 

“எவ்வளவு நாள் எடுக்குமாம் கட்டி முடிக்க?”

“குறைஞ்சது ஒரு நாலு மாசமாவது ஆகும்னு என்ஜினியர் சொல்றாரு.”

“பரவாயில்லை, நாலு மாசம் பறந்து போயிரும், எங்க வீட்டுல என்ன சொன்னாங்க?”

“உங்க வீட்டுல இன்னும் நான் காட்டலை, ரெஹானுக்கு மேப்பை மெயில் பண்ணினேன், அவங்கிட்டப் பேசிட்டு அம்மாக்கிட்டயும் பேசினேன், அப்புறமா உங்கிட்டத்தான் காட்டுறேன்.” அந்த பதிலில் அவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவனைக் கட்டிக் கொள்ளலாம் போல ஆசை வந்தது.

“உள்ள வர்றீங்களா?” என்றாள் புன்னகை முகமாக.

“பர்மிஷன் குடுப்பாங்களா? ஏதோ படிப்பு விஷயம்னு அம்மா சொன்னாங்க.”

“ஆமா, ஒரு ப்ராஜெக்ட் பண்ணுறோம், வந்த வேலை முடிஞ்சிருச்சு, ஆளாளுக்கு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க.”

“உங்க பேட்ச்சா?”

“நாங்களும் சீனியர்ஸும்.”

“ஓ… அப்போ நம்ம ஹீரோவும் இருக்காரா?”

“இருக்காரு இருக்காரு, குடும்பமா இருக்காரு.” அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்.

“என்ன சொன்னே? குடும்பமா?!”

“அந்தக் கூத்தை வந்து பாருங்க.” அவள், அவனை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். அந்த இடத்தையே முழுதாக இவர்கள்தான் முன்பதிவு செய்திருப்பார்கள் போலும். எங்கு பார்த்தாலும் பல்கலைக்கழக மாணவர்களே கண்ணில் பட்டார்கள்.

“ஹலோ சார்.” எங்கிருந்தோ குரல் வரவும் அமர் திரும்பிப் பார்த்தான். ஷிவாதான் வந்து கொண்டிருந்தான். கூடவே ஒரு பெண். அழகாக இருந்தாள்.

“நம்ம ஹீரோவோட ஹீரோயின்.” அமரின் காதில் சொன்னாள் ஆல்யா.

“ஓ… இப்பதான் தேர்ட் இயர், அதுக்குள்ள இது வேறயா?” இது அமர்.

“அங்க யுகேல உங்க தம்பி என்னப் பண்ணுறாரோ?”

“அவன் என்ன வேணா பண்ணட்டும், நீ ஒன்னும் பண்ணலைல்லை?” அவன் அதிலேயே குறியாக இருக்க அவளுக்குக் கோபம் எட்டிப் பார்த்தது.

“ஏன்? எல்லாரும் பண்ணலாம்னா நான் பண்ணினா என்ன?” கேட்டவளை அவன் பார்வை முறைத்தது. அதற்குள்ளாக ஷிவா இவர்கள் அருகில் வந்திருந்தான். இன்னும் சில மாணவர்களும் அமரைக் காண வந்திருந்தார்கள். 

“நீங்க வருவீங்கன்னு ஆல்யா சொல்லவே இல்லை சார்.”

“இல்லை ஷிவா, ஆல்யாக்கே அது தெரியாது, முக்கியமான ஒரு வேலை இருந்துச்சு, அதான் அவசரமா வந்தேன்.” அவன் சொல்லி முடித்த போது இளவட்டங்களின் ஆர்ப்பரிப்பு பயங்கரமாக இருந்தது. அவர்கள் போட்ட சத்தத்தில் அமருக்கு முகம் சிவந்து போனது. ஆல்யா முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள்.

“ஹேய்! உண்மையாவே முக்கியமான விஷயம்பா.”

“நம்பிட்டோம் சார்!” ஷிவாவின் கேலி எல்லைத் தாண்டியது. அமரும் அதைத் தடுக்கவில்லை. இவர்கள் மனதில் இப்படியொரு எண்ணம் இருப்பதுவும் நல்லதுதான். அது ஆல்யாவிற்குப் பாதுகாப்பு என்று நினைத்தான். ப்ராஜெக்ட் வேலை முடிவடைந்திருந்ததால் அந்த மாலைப்பொழுதை இளையவர்கள் இன்பமாகக் கழித்தார்கள். கேம்ப் ஃபையருக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். ஆர்டர் பண்ணியிருந்த உணவும் வந்துவிட அந்த இடமே அமர்க்களப்பட்டது. கிட்டார், மிருதங்கம் என பல வாத்தியங்கள் முழங்க ஆரம்பித்தன. இளையவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கிவிட்டுக் கூட வந்த விரிவுரையாளர்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.

“நைட்டுக்கு நீங்க எங்க தங்கப் போறீங்க?” இது ஆல்யா.

“ஆல்ரெடி ரூம் புக் பண்ணியிருக்கேம்மா, உங்களுக்கு இங்க எப்பிடி? எல்லாம் வசதியா இருக்கா?”

“தனி ரூமெல்லாம் இல்லை, ரெண்டு மூனு பேருன்னு ஒரு ரூம்ல இருக்கோம்.”

“வசதியா இல்லைன்னா சொல்லு, நான் உனக்கொரு ரூம் புக் பண்ணுறேன்.”

“இல்லையில்லை, நான் மட்டும் தனியா வந்தா அது நல்லா இருக்காது, அதோட… இப்பிடி ஃப்ரெண்ட்ஸ் கூட இன்னொரு சான்ஸ் கிடைக்காது.”

“ம்..‌. அதுவும் சரிதான், நீ நல்லா என்ஜாய் பண்ணு, நமக்குத்தான் இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கலை.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மீண்டும் ஷிவா அங்கே வந்துவிட்டான்.

“அமர் சார், நீங்களும் வாங்க, நாம எல்லாரும் சாப்பிடலாம், அதுக்கப்புறமா…” என்றவன் இவனைப் பார்த்துக் கண்ணடிக்க அமருக்கு பக்கென்றது. கலவரமாக அவன் ஆல்யாவின் முகத்தைப் பார்க்க அவள் முகம் கோபத்தைக் காட்டியது.

“என்ன சீனியர்? ரொம்ப ஓவராத்தான் இருக்கு! ஷாலினியைக் கூப்பிடவா?” ஷாலினிதான் அவனது வருங்காலம்.

“ஐயையோ! ஏம்மா நீ வேற! இதெல்லாம் பசங்களுக்குள்ள சகஜம்!” அவன் அசடு வழிந்தான். எங்கிருந்தோ இரண்டு பாட்டில்களை வாங்கி வைத்திருந்தார்கள்.

“எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை ஷிவா, நீங்க என்ஜாய் பண்ணுங்க, ஆனாலும்… பொண்ணுங்க இருக்காங்க, இது இப்போ தேவையா?” 

“என்ன அமர் சார்! நீங்களும் ஆல்யா மாதிரிப் பேசுறீங்க? சரிசரி, வாங்க சாப்பிடலாம்.” தனது ரூமிற்குக் கிளம்பிய அமரையும் அவர்கள் விடவில்லை. அங்கேயே உண்ண வைத்தார்கள். பாட்டுப் பாடினார்கள், டான்ஸ் ஆடினார்கள். அமருக்கும் இந்த அனுபவம் மிகவும் புதுமையாக இருந்தது. இறுதியில் எல்லோருமாக நின்று ஃபோட்டோ எடுத்தார்கள். இந்த ஃபோட்டோவும் தனக்கு எதிரியாகப் போவது தெரியாமல் அமரும் அவளுக்குப் பக்கத்தில் புன்னகைத்தபடி நின்றான்.

“நான் கிளம்புறேன் ஆல்யா, ஏதாவது அவசரம்னா கூப்பிடு.”

“ம்…” புன்னகைத்தபடி தலையை ஆட்டியவள் அவன் கார் வரை வந்தாள். முன்பொரு சமயம் இஷானோடு இவள் பேசும் போது அமரின் ப்ளாக் ஆடி பற்றிய பேச்சு வந்தது.

“அண்ணா, நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அமர் மச்சானோடது மாதிரி ஒரு ப்ளாக் ஆடி வாங்கணும், எனக்கு அது ரொம்பப் புடிச்சிருக்கு.” 

“பொல்லாத ஆடி! யார் கேட்டாலும் குடுக்கமாட்டான் அந்தக் கஞ்சப் பிசினாரி.”

“யாரு? அமர் மச்சானா?! நீங்க கேட்டும் குடுக்கலையா?!”

“ம்ஹூம், அதுல அப்பிடி என்னதான் இருக்கோ? அந்தக் காரை மட்டும் யாரையும் தொட விடமாட்டான்.” இஷான் அன்று சொன்னது நியாபகம் வரவும் அந்தக் காரைத் தடவிக் கொடுத்தாள் பெண். அமரின் ரியாக்ஷன் எப்படி இருக்கின்றது என்று அவளுக்கு அறியவேண்டும் போல இருந்தது.

“இந்தக் காரை உங்களுக்கு ரொம்பப் புடிக்குமா?” அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள். காரை சற்று அப்பால் நிறுத்தியிருந்தான் அமர். இளையவர்களின் அட்டகாசம் சற்றுத் தள்ளிக் கேட்டது. வானில் நிலா காய்ந்து கொண்டிருக்க, இயற்கையோடு இணைந்து நடப்பது அத்தனை இன்பமாக இருந்தது.

“ஏன் கேட்கிறே?”

“எனக்கும் ரொம்பப் புடிக்கும், நானும் ஒன்னு இதுமாதிரி வாங்கணும்.”

“வெரிகுட், கண்டிப்பா வாங்கு.”

“எனக்கொரு ஆசை…” அவள் என்னவென்று சொல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தபடி இழுத்தாள். நடந்தபடி பேசிக்கொண்டிருந்த இளவல் சட்டென நடையை நிறுத்திவிட்டுப் பெண்ணைப் பார்த்தான். காருக்கு அந்தப்புறமாக அவன் நிற்க, இந்தப்புறமாக இவள் நின்றிருந்தாள்.

“என்ன ஆசை?”

“இல்லை… ஒரு தடவை உங்க ப்ளாக் ஆடியை… ஓட்டிப் பார்க்கணும்.” அவள் சொன்னதுதான் தாமதம். தனது கையிலிருந்த கீயை அவள் புறமாகச் சட்டென்று தூக்கிப் போட்டான் அமர். ஆல்யா இதை எதிர்பார்க்கவில்லை. இத்தனை சுலபத்தில் தன் காரை அவளிடம் தூக்கி அவன் கொடுப்பான் என்று அவள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை. தன் அண்ணனுக்கே கிடைக்காத வாய்ப்பு!

“நான்…” என்னப் பேசுவது என்று தெரியாமல் பெண் தடுமாறியது.

“அதான் ஓட்டிப் பார்க்க ஆசைன்னு சொல்லிட்டேல்லை? அதுக்கப்புறம் எதுக்குத் தயக்கம்?” கரீமின் பெண்கள் இருவரும் முறையாகக் காரோட்டப் பயின்று லைசென்ஸும் வைத்திருக்கிறார்கள். ஊருக்குள் அது பேசுபொருளாக ஆகிவிடும் என்பதால் அவர்களைக் காரோட்ட தந்தை அவ்வளவாக அனுமதிப்பதில்லை.

“காரோட்டி ரொம்ப நாளாகிடுச்சு…”

“அதான் நான் பக்கத்துல இருக்கேனில்லை? நீ ஓட்டு.” அவன் கொடுத்த தைரியத்தில் உள்ளே ஏறி உட்கார்ந்தாள் பெண். நான்கு சக்கர வாகனம் அவளுக்குப் புதியதல்ல. அவள் பிறந்தது முதல் அவர்கள் வீட்டில் கார் இருக்கிறது. ஆனால்… இந்த ப்ளாக் ஆடி அவளை எவ்வளவு தூரம் பரவசப்படுத்துகிறது என்று வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அந்த ஸ்டியரிங் வீலைத் தொடும்போதும், அந்த சீட்டில் அமரும்போதும் அவளது கற்பனை எல்லை கடந்து விரிந்தது. இப்போதும் அவனை அவள் திரும்பிப் பார்த்தாள்.

“ம்…” என்றான் ஒரு தலையசைப்போடு. அவனைப் பொறுத்தவரை அவள் ஆசைப்பட்டுக் கேட்ட விஷயம். அது நடக்க வேண்டும். சிறுபிள்ளையாக இருக்கும் போது,

“ஏன் இந்தக் கணக்கு உனக்குச் சரியா வரமாட்டேங்குது? நான் எழுதுறதைச் சரியா கவனி.” என்று குரலை உயர்த்தி அவளை மிரட்டியது போலவே இப்போதும் செய்தான். அந்த ப்ளாக் ஆடி பல கனவுகளைச் சுமந்த ஒருத்தியால் இயக்கப்பட்டது. அந்தக் கனவுகள் அனைத்தையும் நனவாக்க முடிந்த ஒருவன் அவளருகிலேயே உட்கார்ந்திருந்தான். பயத்தோடு அவள் ஆரம்பித்த அந்தப் பயணம் சில நொடிகளிலேயே அவளுக்குச் சுலபமாகிப் போனது. அவள் வேகம் கூட்டும் போதெல்லாம் அவன் முகத்தில் ஒரு சிரிப்பு மாத்திரமே தோன்றியது. தன் குழந்தை நடை பழகிய பிற்பாடு மெல்ல மெல்ல ஓட ஆரம்பிக்கும் போது ஒரு தாய் அடையும் புளகாங்கிதம் அது!

அரை வட்டமடித்துக் காரைத் திருப்பியவள் மீண்டும் அவர்கள் இருந்த இடத்திற்கே அதை ஓட்டி வந்தாள். நேரம் இரவு ஒன்பது மணி. அந்த இடம் அமைதியைத் தத்தெடுத்திருந்தது. தூரத்தில் அவளது சகபாடிகளின் கும்மாளச் சத்தம் கேட்டபடி இருந்தது. காரை விட்டு இறங்கியவள் அதன் சாவியை அவனிடம் கொடுத்தாள்.

“தான்க்ஸ்.” அவள் முகம் முழுவதும் புன்னகையைக் கரைத்துப் பூசியது போல இருந்தது. 

“டெஸ்ட் ட்ரைவ் பண்ணியாச்சா? எப்போ அம்மிணி ப்ளாக் ஆடி வாங்கப் போறீங்க?” அவன் கேலியை அவளும் இரசித்துச் சிரித்தாள்.

“கண்டிப்பா வாங்குவேன், வட்டியோட சம்பந்தப்பட்ட விஷயம்னு ஃபைனான்ஸுக்குப் போக அப்பா விடமாட்டாங்க, எப்பிடியாவது அவங்களைத் தாஜா பண்ணி முதல்ல காரை வாங்கிடணும், அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சு அப்பாக்கு அந்தக் காசைத் திருப்பிக் குடுத்திரணும்.” (முஸ்லிம்களுக்கு வட்டி தடை செய்யப்பட்ட விஷயம்.)

“ஏன்? அந்தக் காசை நாம நம்பாரிச்சு வாங்க வேண்டியது?” 

“அதுக்குள்ள எனக்குத் தலை நரைச்சுப் போகுமே?” அவள் சொன்ன விதத்தில் அவன் சிரித்தான். காரிருளில், நிலவொளியில், மின்னல் போல ஒரு சிரிப்பு!

“உங்க காரை இதுவரைக்கும் நீங்க யாருக்கும் குடுத்ததில்லைன்னு எனக்குத் தெரியும், என்னை நம்பிக் குடுத்ததுக்கு ரொம்ப தான்க்ஸ்.” அந்தக் குரலின் நெகிழ்வு அமருக்கு வேறு செய்தி சொன்னது.

“ஆல்யா…” எதையோ பேச ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தினான். ஆனால் அவள் அவனுக்காகக் காத்திருந்தாள்.

“மஹியும், நீயும் எனக்கு ஒன்னில்லை, நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான், அந்த நெக்லஸ் வாங்கும் போதுகூட கரீம் மாமாவோட பொண்ணுக்காக நான் வாங்கலை, உனக்காகத்தான் வாங்கினேன், இப்பவும்…‌ இப்பவும் யாருக்கும் குடுக்காத என்னோட ப்ளாக் ஆடியை உங்கைல குடுத்தேன்னா…‌ நீ எனக்கு ரொம்ப முக்கியம்னுதான் அர்த்தம், வீட்டோட மேப் வந்தப்போ கூட அதை ரெஹானுக்கிட்டக் காட்டுற மாதிரி உங்கிட்டயும் காட்டணும்னு தோணிச்சு, ஏன்னா நீ எனக்கு ரொம்ப முக்கியம், உன்னோட அபிப்பிராயம் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.” அவன் இத்தனைக் கோர்வையாகப் பேசவும் விழி விரித்து அவனைப் பார்த்திருந்தது பெண்.

“ஆனா…‌ ஆனா இதெல்லாம் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வாழப் போதுமான்னு எனக்குத் தெரியலை, காலம் எல்லாத்தையும் மாத்திரும், ஒரு நல்ல பொண்ணைத் தவறவிட்டுராதீங்க தம்பின்னு அம்மாவும் சொல்றாங்க, அதுவும் சரின்னு எனக்கு நல்லாவே புரியுது… நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியுதா?” அவன் பேசி முடிக்கட்டும் என்று இதுவரை சற்று அப்பால் நின்றிருந்தவள் இப்போது அவனருகில் வந்தாள். அமர் ஓரடி பின்னால் போனான். 

“இதுவரைக்கும் நீங்க சொன்னது உங்க மனசு, ஆனா என்னோட மனசு என்ன தெரியுமா? எனக்குக் கல்யாணம்னு ஒன்னு ஆனா அது உங்கக்கூட மட்டுந்தான், நீங்க இல்லைன்னா என்னோட வாழ்க்கையில இனி வேற யாரும் இல்லை.” 

“முட்டாள்தனமாப் பேசாதே!” அவன் குரலில் கோபமிருந்தது. 

“உங்களுக்கு நான் பேசுறது முட்டாள்தனமா இருக்கலாம், சின்னப்புள்ளைத்தனமா இருக்கலாம், ஆனா இது என்னோட வாழ்க்கை, என்ஜினியரிங் பண்ணணும்னு ஆசை இருந்துச்சு, ஆனா வீட்டுல எல்லாரும் சயின்ஸ்தான் பண்ணினாங்க, நீயும் பண்ணணும்னு சொன்னப்போ நான் கேட்டுக்கிட்டேன், ஆனா இது மேத்ஸும், சயின்ஸும் இல்லை, இப்போ யாரு சொல்ற பேச்சையும் நான் கேட்கப் போறதும் இல்லை, அதுக்காக உங்களை நான் வற்புறுத்துறதா நீங்க நினைக்காதீங்க, இது என்னோட ஆசை, அவ்வளவுதான்.” சொல்லிவிட்டு வலியோடு புன்னகைத்தவளைப் பார்த்தபோது அமருக்கும் வலித்தது.

“உங்க வீடு இதுக்கு ஒத்துக்காதும்மா.” அவன் தன்மையாக எடுத்துச் சொன்னான்.

“எனக்கு இப்போ முக்கியம் உங்க பதில்தான், அம்மாக்கும் அப்பாக்கும் உங்களை ரொம்பப் புடிக்கும், ஆனா… ஆனா, உங்களுக்கு என்னைப் புடிக்…” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் கண்ணீர் அவள் குரலை அடைத்தது. உலகத்துத் துன்பத்தையெல்லாம் அந்தக் கண்களில் தேக்கி அவனை ஒரு பார்வைப் பார்த்தவள் விலகிப் போய்விட்டாள். அமர் விக்கித்துப் போனான்.‌ அவள் கண்ணீர் அவனைச் சுக்குநூறாக்கியது. அவனைச் சந்திக்கும் தருணங்களில் எல்லாம் இந்தச் சின்னப் பெண் அதிகம் அழுகிறாள் என்ற உண்மை அவனை வாட்டி வதைத்தது. 

ஆசைகளையும் கனவுகளையும் சுமந்தபடி தன்னை அவள் பார்க்க வர, அவளுக்குத் தான்‌ கொடுப்பதெல்லாம் கண்ணீர் பரிசு மாத்திரமே என்று நினைத்த போது அவனுக்கு வேதனையாக இருந்தது.‌ இவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்றால் அவளை அவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அது சாத்தியமா?! ஆனால் காலம் அதையும் சாத்தியமாக்கும் என்று அமருக்கு அந்த நொடி தெரியவில்லை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 08

அத்தியாயம் 08அந்த வார இறுதியில் ஊருக்கு வந்திருந்தான் இஷான். ஒருநாள் கூட விடுமுறை எடுக்க முடியாது என்று சொன்ன மகன் வீட்டிற்கு வந்ததில் சல்மாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. மஹிராவும் அவள் கணவரும் அனேகமாக வீடு தங்குவதில்லை. புதுமண தம்பதிகளுக்கு இன்பமாகச் சுற்றிப்பார்க்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்