arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 08
Anbe… Azhage! chevron_right பகுதி 8 / 21

அத்தியாயம் 08

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் 08

அந்த வார இறுதியில் ஊருக்கு வந்திருந்தான் இஷான். ஒருநாள் கூட விடுமுறை எடுக்க முடியாது என்று சொன்ன மகன் வீட்டிற்கு வந்ததில் சல்மாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. மஹிராவும் அவள் கணவரும் அனேகமாக வீடு தங்குவதில்லை. புதுமண தம்பதிகளுக்கு இன்பமாகச் சுற்றிப்பார்க்க ஆயிரம் இடங்கள் இருந்தன. அத்தோடு வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். இப்போதும் ஏதோ ஒரு வேலையாக கொழும்பு சென்றிருந்தார்கள்.

“அப்பா…‌ மஹி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சு, இனி சின்னவளுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கலாம்.” திடீரென்று பேச்சை ஆரம்பித்தான் மகன். அப்போது எல்லோரும் இரவு உணவை உண்டு கொண்டிருந்தார்கள். ஆல்யாவும் அங்குதான் அமர்ந்திருந்தாள்.

“என்ன இஷான் இப்போ அவசரம்?” இது கரீம். மகளுக்குத் திருமணம் செய்வதில் அவருக்குப் பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மகளின் வயது அவரை யோசிக்க வைத்தது. 

“இல்லைப்பா, இருபத்தி ரெண்டு ஆச்சு, இப்பவே பார்க்க ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும், மூத்தவளுக்கு டாக்டர் மாப்பிள்ளை எடுத்துட்டு இளையவளுக்கு எடுக்கலைன்னா நல்லா இருக்காது, அதால…”

“அண்ணா!” இதுவரை அமைதியாக இருந்தப் பெண் இப்போது வாய் திறந்தது.

“எதுக்கு இப்போ இந்தத் தேவையில்லாத பேச்சு?”

“எது தேவையில்லாத பேச்சு?!” இஷானும் குரலை உயர்த்தினான். சல்மா அமைதியாகக் கணவரை ஒரு பார்வைப் பார்த்தார். வாய்திறந்து எதுவும் பேசவில்லை.

“இப்போ கல்யாணம் பண்ணி வைங்கன்னு உங்கக்கிட்ட நான் கேட்டேனா?”

“இங்க எல்லாம் நீ கேட்டுத்தான் நடக்குதா?”

“நான் யூனியை முடிக்கணும், மேல மாஸ்டர்ஸ் பண்ணணும்.”

“கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு என்ன வேணா படி, அப்பா, எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான், டாக்டர்தான், பேராதெனி யுனிவர்சிட்டி, ஃபைனல் இயர் பண்ணுறான்…”

“உங்களுக்கு நான் பேசுறது புரியுதா இல்லையா?” இப்போதும் தன்னைப் பேச விடாமல் இடைமறித்த தங்கையை உக்கிரமாகப் பார்த்தான் அண்ணன்.

“குறுக்கக் குறுக்கப் பேசினா பல்லைத் தட்டிருவேன் ராஸ்கல்! நான் பார்க்கிற மாப்பிள்ளையைக் கட்டிக்காம வேற யாரைக் கட்டிக்கப் போறே? அந்தக் கரண்டி புடிக்கிறவனையா?” வார்த்தைகள் வீரியமாக வந்து வீழ்ந்தன.

“கரண்டி புடிக்கிறவன்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமாப் போச்சோ! இதே கரண்டி புடிக்கிறவனைத்தானே உங்க மூத்த தங்கச்சிக்குப் பார்த்தீங்க? அப்போ எங்க போச்சு இந்தப் புத்தி?” கோபத்தில் மூக்குச் சிவக்கத் தர்க்கம் பண்ணிய தங்கையை இஷான் முறைத்தான். அவனும் அப்படிப் பேசவேண்டும் என்று நினைக்கவில்லை. அமரை தன் மூத்த தங்கைக்கு அப்பா உறுதி செய்தபோது மனப்பூர்வமாகச் சம்மதித்தவன்தான். ஆனால் இப்போது அதே அமரை இளைய தங்கைக்கு அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் வயது வித்தியாசம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.

“இஷான், என்னப் பேச்சுப்பா இது? உங்கப்பாவும் காய்கறி வியாபாரம் பண்ணுறவன்தான், அப்போ நாளைக்கு என்னையும் இப்பிடித்தான் பேசுவியா?”

“சாரிப்பா, என்னால சில விஷயங்களை ஏத்துக்க முடியலை, எல்லாம் நம்ம கையை மீறிப் போகுதுப்பா.”

“என்னாச்சு? ஏன் இப்பிடிப் பேசுறே?”

“அப்பா… எங்கிட்ட எதுவும் கேட்க வேணாம், சீக்கிரமா ஆல்யாக்கு ஒரு மாப்பிள்ளைப் பாருங்க, அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”

“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.” உறுதியாகச் சொன்னது பெண்.

“ஏம்மா? அண்ணா நல்லதுதானே சொல்றான், அவன் சொல்றதை நீ கேட்டா என்ன?” கரீமிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இல்லையென்றால் இஷான் இப்படியெல்லாம் பேசும் ஆள் கிடையாது. அதுவும் அமரைப் பற்றி!

“அப்பா… நான் உங்கக்கிட்ட இதைப்பத்தி ஏற்கனவே பேசிட்டேன், நான் அமர் மச்சானைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”

“அதுக்கு உன்னை நான் கொன்னு போடுவேன்! நீங்க ரெண்டு பேரும் அடிக்கிற கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா? உன்னைச் சொல்லிக் குத்தமில்லை, அந்த நாயை நாலு சாத்தினா எல்லாம் சரியா வரும்!”

“இஷான்! மரியாதையா பேசு, என்ன ஆச்சு? ஏன் இப்பிடியெல்லாம் பேசுறே?” இது சல்மா. 

“உங்களுக்கு எதுவும் தெரியாதும்மா, ரெண்டு பேரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல ஷெயார் பண்ணுற அளவுக்கு வந்தாச்சு, ஊர்ல இருக்கிற அத்தனைப் பயலுக்கும் இது இப்போ தெரியும்.” மகன் கர்ஜிக்கவும் மகளை உக்கிரமாகப் பார்த்தார் அம்மா.

“பொய்! அப்பிடி எதுவுமே நடக்கலை, யூனிக்கு அவங்க வேலை விஷயமாத்தான் அமர் மச்சான் வந்தாங்க.”

“நீ போன ட்ரிப்ல அவனுக்கு என்ன வேலை? அவனும் ப்ராஜெக்ட் பண்ண வந்தானா?” இந்தக் கேள்விக்கு ஆல்யாவிற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. வீட்டின் வரைபடத்தைத் தன்னிடம் காட்டத்தான் வந்தார் என்று எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் அது இன்னும் தவறாகிப் போய்விடுமே! பெண் தலையைக் குனிந்து கொண்டது.

“அப்பா, டாக்டர் மாப்பிள்ளைப் பார்க்கிறது ஒன்னும் சின்ன விஷயமில்லை, இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும்.”

“நான் அமர் மச்சானைத் தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்.” தங்கை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்லவும் அண்ணனின் கோபம் கட்டுக்கடங்காமல் தெறித்தது.

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ அதையே திருப்பித் திருப்பிச் சொல்றே!” என்றவன் தங்கையின் அருகில் வந்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். பக்கத்தில் இருந்த சோஃபாவில் பெண் சுருண்டு விழுந்தது.

“இஷான்!” சல்மா போட்ட சத்தத்தில்தான் பெரியவன் நிதானத்திற்கு வந்தான். இல்லையென்றால் அவனுக்கிருந்த கோபத்திற்கு ஆல்யாவைக் கொன்று புதைத்திருப்பான்.

“இந்த வீட்டுல எதுவுமே சரியில்லை, நீங்க அம்மான்னு எதுக்கு இங்க இருக்கீங்க?” இப்போது மகனின் கோபம் அம்மா மேல் பாய்ந்தது. மகளின் மேல் சல்மாவிற்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அவளது வயது அப்படி. ஆனால் அமர் மேல் அவருக்கு நல்லெண்ணம் நிறையவே இருந்தது. அன்றைக்கு மகளைக் கடைக்கு அழைத்துக் கொண்டு போவதற்குத் தன்னிடம் அனுமதி கேட்கும் நாகரிகம் அமருக்கு உண்டு என்பது வரை அவருக்குத் தெரியும்.

கடைக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனவர்கள் அன்று எதுவும் வாங்காமல் திரும்பி வந்தது அவருக்கு எதுவோ சரியில்லை என்று சொன்னது. அதுமட்டுமின்றி மகளது அழுத விழிகள் அவருக்கு இன்னும் பல கதைகள் சொல்லியிருந்தன. தன் மகள் எதற்கோ அடம்பிடிக்க அமர் அதை மறுக்கிறான் என்று அவர் புரிந்து கொண்டார்.‌ அவர்களே தங்களுக்குள் ஒரு நல்ல முடிவிற்கு வரட்டும் என்று காத்திருந்தார். ஆனால் இனி காலதாமதம் செய்வது தவறு என்று தோன்றியது.

“அமைதியா இரு இஷான், எதுக்கு இப்பிடி எல்லாத்துக்கும் கை நீட்டுற? நாளைக்கு உனக்குன்னு ஒருத்தி வந்தாலும் இப்பிடித்தான் கை நீட்டுவியா? அப்பிடி ஏதாவது நடந்துச்சு, அம்மா பொல்லாதவள் ஆகிடுவேன் பார்த்துக்கோ.”

“அம்மா, இவ சரியில்லைம்மா.”

“என்னப்பா சரியில்லை?” இது கரீம். இந்த விஷயத்தை எப்படி எடுத்து நடத்துவது என்று அவருக்குப் புரியவில்லை.‌

“இவ அந்தப் பயலோட சுத்தித் திரியுறாப்பா.” 

“இல்லை இஷான், அன்னைக்குச் சின்னவளோட பர்த்டே, அதுக்கு ஏதாவது வாங்கிக் குடுக்கக் கூட்டிட்டுப் போறேன் மாமின்னு எங்கிட்டக் கேட்டுட்டுத்தான் போனாங்க.” சல்மா விளக்கம் சொன்னார்.

“யூனி ஃபங்ஷன்ல ரெண்டு பேரும் ஒன்னா நின்னு ஃபோட்டோ எடுத்துப் போட்டிருக்காங்க, அது கூடப் பரவாயில்லை, ஹம்பாந்தோட்டைக்கு இவ ப்ராஜெக்ட் பண்ணப் போனா அவனும் அங்க போய் நிற்கிறான், எதுக்கு? அங்கேயும் போய் ஃபோட்டோ எடுத்துப் போடுறாங்க, பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இவளுக்குத்தான் புத்தி இல்லைன்னா அவனுக்கு என்னாச்சு? இவளுக்குப் புத்தி சொல்றதை விட்டுட்டு வந்தவரை லாபம்னு ஆடிப் பார்க்கிறானா?” அப்போது சரியாக அவர்களின் காலிங் பெல் அடிக்கவும் கரீம் எழுந்து போனார். வாசலில் நின்றிருந்த அமரைப் பார்த்தபோது அவருக்குப் பக்கென்றது. 

‘இந்தப் பையன் எப்போது வந்தான்? உள்ளே பேசியது எதுவும் இவன் காதில் விழுந்திருக்குமா?!’ ஆனால் இல்லை என்பது போல புன்னகைத்தபடி நின்றிருந்தான் அமர். 

“இந்நேரம் நீங்க வீட்டுல இருப்பீங்கன்னு தெரிஞ்சுதான் வந்தேன் மாமா.”

“உள்ள வாப்பா.” இளையவனை உள்ளே அழைத்து வந்தார் கரீம். வீட்டினர் அனைவரும் ஒரு நொடி திகைத்துப் போனார்கள். அமரைப் பார்த்ததும் ஆல்யாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. ஆனால் அதைக் கவனிக்கும் நிலையில் அமர் இல்லை.

“ஹேய் இஷான்! நீயும் இங்கதான் இருக்கியா? ஊருக்கு வர்றதைச் சொல்லவே இல்லை, நல்லதாப் போச்சு, வீட்டோட மேப் வந்திடுச்சு மாமா, அதை உங்க எல்லார்கிட்டயும் காட்டிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்.” எந்தக் குழப்பமும் இல்லாமல் நிதானமாக வந்தது அமரின் பேச்சு.

“நல்லதுப்பா, எப்போ வேலையை ஆரம்பிக்கப் போறே?” படத்தை வாங்கிப் பார்த்த கரீம் பேச்சை மாற்றினார்.

“அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் மாமா.” 

“நல்லது நல்லது, சீக்கிரமா ஆரம்பிக்கிறதும் நல்லதுதான்.”

“ரெஹானும் அதைத்தான் சொல்றான், டேய், நீயும் மேப்பைப் பாரேன்டா.” நண்பனை அழைத்தான் அமர்.‌ ஆனால் இஷான் சட்டென்று அவன்‌ சொன்னதைச் செய்யவில்லை. அப்போதுதான் அமர் அதைக் கவனித்தான். அங்கிருந்த ஒருவருடைய முகமும் நன்றாக இல்லை.

“மாமா, ஏதாவது பிரச்சினையா? நான்‌ தப்பான நேரத்துல வந்துட்டேனா?” என்றவன் ஆல்யாவின் முகத்தைப் பார்த்தான். சோஃபாவில் அவள் அமர்ந்திருந்த விதம் அத்தனை நல்லதாக இருக்கவில்லை. தனது கேள்விக்கும் கரீம் மாமா பதில் சொல்லாதது அவனுக்கு என்னவோ போல இருந்தது. இஷானும் இப்போது கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொள்ள எதுவோ சரியில்லை என்பது அவனுக்கு உறுதியானது.

“என்னாச்சு ஆல்யா? ஏய்! என்ன இது?!” என்றவன் அவளருகில் செல்ல எத்தனிக்க அவனுக்கு முன்னால் வந்து தடுத்தான் இஷான்.

“டேய்! என்னடா பண்ணி வெச்சிருக்கே? திரும்பவும் அவளை அடிச்சியா?” அமருக்கு இப்போது கோபம் வந்தது.

“என்னோட தங்கச்சியை நான்‌ அடிச்சேன், உனக்கேன் வலிக்குது?”

“கிழிச்சே! நீ பண்ணின வேலைக்கு உனக்குப் பெருமை வேறையா? டேய்! அன்னைக்கே உங்கிட்டச் சொன்னேன்ல? அவ சின்னப் பொண்ணு, தப்புப் பண்ணினா எடுத்துச் சொல்லு, புரிஞ்சுக்குவான்னு.”

“இவ புரிஞ்சுக்குவாளா? இல்லை இவளே புரிஞ்சுக்கிட்டாலும் நீ விலகிடுவியா?” கேள்வி கோணலாக வரவும் அமர் எதுவும் பேசாமல் நின்றிருந்தப் பெரியவர்களைப் பார்த்தான்.

“மாமா, இவன் என்னப் பேசுறான்?” இப்போது கரீம் பெருமூச்சு விட்டார். யார் பக்கம் பேசுவதென்று அவருக்கு விளங்கவில்லை. ஒன்று அவர் பெற்றது, இன்னொன்று அவர் பார்வையில் வளர்ந்தது. இருவருமே அவருக்கு முக்கியம்.

“அமர், உட்காருப்பா… உங்கிட்ட நான்‌ கொஞ்சம் பேசணும்.” கரீம் வெகு நிதானமாகப் பேசினார். சூழ்நிலை சரியில்லை என்று புரிந்த அமரும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். இவன் வந்தால் ஏதாவது குடிக்க எடுத்து வருகிறேன் என்று உள்ளே போகும் மாமி கூட அன்றைக்கு அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றிருந்தார்.

“சொல்லுங்க மாமா? எங்கிட்ட என்னப் பேசணும் நீங்க?”

“அமர், சின்னவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கலாம்னு இஷான் சொல்றான்.”

“ஓ…” என்றவன் ஆல்யாவின் முகத்தைப் பார்த்தான். ஒரு கன்னம் வீங்கிப் போயிருந்தது. தனக்காக இந்தப் பெண் இரண்டாம் முறையாக அடி வாங்கியிருக்கிறாள் என்ற உண்மை அவனைச் சுட்டது.

“ஆல்யா என்ன சொல்றா மாமா?”

“அதானே! உனக்குத்தான் அந்தப் பைத்தியம் என்ன சொல்லும்னு நல்லாத் தெரியுமே! நல்லாத்தான் காய் நகர்த்துறடா மச்சான்!” மீண்டும் மீண்டும் இஷான் தப்பாகவே பேசவும் அமருக்குச் சலிப்பு வந்தது. 

“நீ இப்போ என்ன சொல்ல வர்றே இஷான்?”

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோ ரொம்ப நல்லா இருக்குடா, பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு.” பல்லைக் கடித்தபடி சொன்னான் இஷான். இப்போது அமருக்கு வெளிப்படையாகப் பேசும் நேரம் வந்துவிட்டது என்று புரிந்தது. ஆனால் அவன் பேசப்போகும் பேச்சு பெண்ணைக் காயப்படுத்தலாம். அதனால் நிதானித்தான். 

“தம்பி, எது மனசுல இருந்தாலும் வெளிப்படையாப் பேசுங்க, எந்த மறைவும் தேவையில்லைப்பா.” இது சல்மா. இஷானைத் தவிர பெரியவர்கள் இருவரும் நிதானமாகவே இருப்பதை அமர் கவனித்தான். பேச வேண்டும். யாருக்கும் வலிக்காத வகையில் பேச வேண்டும். ஆனால் இதுவரைத் தனது மனதில் தெளிவான ஒரு முடிவு இல்லாத விஷயத்தைப் பற்றி எப்படி அவனால் இவர்களிடம் பேச முடியும்?!

“மாமி… ஆல்யா சின்னப் பொண்ணு…”

“தெரியுதில்லை, எந்திரி, எந்திருச்சு வெளியே போ!” இஷான்‌ குதித்தான். முதல் முறையாக இஷானின் வார்த்தைகள் அமரை மிகவும் கோபப்படுத்தியது.

“இஷான்! உம் பேச்சு ரொம்பத் தப்பாவே வந்து விழுது, நீ என்னை ஒரு குற்றவாளியைப் பார்க்கிற மாதிரியே பார்க்கிறே!”

“இல்லைன்னா நீ எல்லாத்தையும் சரியாத்தான் பண்ணுறியா?”

“நான் இப்போ என்னத் தப்புப் பண்ணிட்டேன்னு நீ இந்தக் குதி குதிக்கிறே?”

“நீ தப்புப் பண்ணலை? இவளோட சேர்ந்து ஊர் சுத்தலை? ஃபோட்டோ எடுக்கலை?”

“ஏன்டா? நம்ம ஆல்யாவோட நின்னு நான் ஒரு ஃபோட்டோ எடுத்தது தப்பா? அது உனக்குக் குத்தமாத் தெரியுதா?” 

“உன்னோட மனசுல எந்தத் தப்பான எண்ணமும் இல்லைன்னா அவளுக்கு மாப்பிள்ளைப் பாருங்கன்னு தெளிவாச் சொல்லேன், எதுக்கு மென்னு முழுங்கிறே?” இப்போது அமர் பெண்ணைப் பார்த்தான். வீங்கியிருந்த அவள் கன்னங்களில் கண்ணீர் கரகரவென இறங்கியது. என்னை எங்கேயும் விட்டுக்கொடுத்து விடாதே என்ற மன்றாடலை அந்தக் கண்களில் பார்த்த போது அமருக்கு வார்த்தைகள் வரவில்லை. அமர் தங்கள் மகளைப் பார்த்ததையும், அவள் கண்கள் அவனிடம் மன்றாடியதையும் பெற்றவர்கள் கவனித்தார்கள்.

“இஷான், நீ அமரை மட்டுந்தான் கேள்வி கேட்கிறே? உன்னோட தங்கச்சியை நீ எதுவும் கேட்கமாட்டியா?” இது சல்மா. அமரிடமிருந்து பேச்சைத் தன்‌ மகளின் பக்கம் திசை மாற்றினார்.

“அந்தப் பைத்தியம் என்ன சொல்லும்னுதான் நமக்கு நல்லாத் தெரியுமேம்மா.”

“அப்போ அமரை மட்டும் நீ ஏன் குத்தம் சொல்றே?”

“நீங்க இப்போ என்ன சொல்ல வர்றீங்க?” இஷான் தன்‌ தாய் மேல் பாய்ந்தான். தன்னை ஆதரிக்காது அமரை அவர் தாங்குவது போல இருந்தது அவனுக்கு.

“கொஞ்சம் நிதானமாப் பேசு இஷான்.” 

“இதுல நான் நிதானமாப் பேச எதுவுமில்லை, கூடிய சீக்கிரமே ஆல்யாக்கு நாம மாப்பிள்ளைப் பார்க்கிறோம், அவ்வளவுதான்.” திட்டவட்டமாகச் சொன்னான் அண்ணன்.

“அது நடக்காது!” அடி வாங்கிய பின்பும் தங்கை உறுதியாகவே தன் கருத்தைச் சொன்னாள். 

“அடி பின்னிருவேன்!” என்றவன் தங்கையின் அருகில் வரவும் சட்டென்று அவனது கரத்தைப் பிடித்துத் தடுத்தான் அமர். அந்தச் செய்கை இஷானை கோபத்தின் உச்சத்திற்குக் கொண்டு போனது. 

“இது எல்லாத்துக்கும் காரணம் நீதான் அமர்!” என்றவன் அமரின் ஷர்ட்டைக் கொத்தாகப் பிடித்தான். 

“இஷான்! நான் சொல்றதைப் பொறுமையாக் கேளு.” அமர் பேசிக் கொண்டிருக்கும் போதே இஷானின் முஷ்டி அமரின் கன்னத்தில் இறங்கியது. 

“இஷான்!” பெரியவர்கள் இருவரும் தங்கள் மகனை ஓடி வந்து பிடிக்க அதற்குள்ளாக இன்னொரு அடி அமரின் கன்னத்தில் இறங்கியது. அதோடு அமர் நிலத்தில் சரிந்து வீழ அவனிடம் ஓடிவந்தாள் இளையவள். 

“ஐயோ அமர் மச்சான்!” அவள் கதறலில் தன் உதட்டைத் தடவிப் பார்த்தான் அமர். இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

“ஐயோ ரத்தம்!” வீழ்ந்தவனின் அருகில் குனிந்து அவன் உதட்டில் வழிந்த இரத்தத்தைத் தன் தாவணியால் துடைத்தாள் பெண். தன்னைப் பிடித்திருந்த அம்மாவையும் அப்பாவையும் அப்புறப்படுத்திவிட்டுத் தன் தங்கையிடம் வர இஷானுக்குச் சில நொடிகளே தேவைப்பட்டன. அவளருகில் வந்தவன் அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து அவளைத் தூக்கி நிறுத்தினான். அதற்கு மேல் அமரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. எழுந்து நின்றவன்,

“உனக்கு இதுக்கு மேல மரியாதை இல்லை இஷான், கைய எடு!” என்றான் கட்டளைப் போல.

“எடுக்கலைன்னா என்னப் பண்ணுவே? அவ என்னோட தங்கச்சிடா!”

“அந்த நினைப்பு இருந்திருந்தா நீ இப்பிடியெல்லாம் நடந்துக்கமாட்டே, மரியாதையாக் கைய எடு, இதுக்கு மேல ஒரு அடி அவ மேல பட்டுச்சு! அமர் யாருன்னு நீ பார்ப்பே.” 

“என்னடா பண்ண முடியும் உன்னால?” இப்போதும் எகிறினான் இஷான். 

“இஷான்! அமர் சொல்றதைக் கேளு!” இப்போது கரீமும், அமரின் பக்கம் சேர்ந்து கொள்ள இஷானின் பிடி தளர்ந்தது. இஷானின் பிடியிலிருந்த ஆல்யாவைத் தனக்குப் பின்னால் இழுத்து நிறுத்தினான் அமர். உள்ளுக்குள் கொதித்தது. அவன் மனதில் எந்தக் கல்மிஷமும் இருக்கவில்லை. ஆல்யா தனக்கான இணைதானா என்ற குழப்பம் இன்றுவரை அவனுக்கு இருந்தது. ஒரு அண்ணனாகத் தன்னிடம் இஷான் நிதானமாக நடந்திருந்தால் எல்லாவற்றையும் இவன் அவனிடம் விளக்கிச் சொல்லியிருப்பான். ஆனால் மூர்க்கத்தனமாக நடந்த இஷான் எல்லாவற்றையும் குழப்பிவிட்டிருந்தான். 

“மனுஷன்னா ஒரு நிதானம் வேணும், வீட்டுல ரெண்டு பொண்ணுங்களை வெச்சிருக்கிற நீ இப்பிடித்தான் நடந்துக்குவியா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ! இந்த அமர் உன் தங்கச்சியைத்தான் கட்டுவான், உன்னால முடிஞ்சதை நீ பண்ணிக்கோ.” என்றான் திமிராக.

“டேய்!” இஷான் உறுமும் போது ஆல்யாவைத் திரும்பிப் பார்த்தவன்,

“நீ உள்ள போ.” என்றான். இப்போது தங்கள் மகனை வற்புறுத்தி சோஃபாவில் அமர வைத்திருந்தார்கள் பெற்றவர்கள்.

“ரத்தம் வருது…”

“பரவாயில்லை, நீ உள்ள போ.” என்றான் மீண்டும். அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவனைத் திரும்பிப் பார்த்தபடி தனது அறைக்குள் போய்விட்டாள் இளையவள். அவள் உள்ளே போகும்வரை காத்திருந்தவன்,

“ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை உன் தங்கச்சிக்கிட்டச் சொன்னாப் போதும், என்ன, ஏதுன்னு கேட்காம இந்த நிமிஷம் எங்கூட வருவா, மாமா, மாமியோட முகத்துக்காகப் பார்க்கிறேன் இஷான்!” என்றான் கோபமாக. 

“சாரி மாமா, உங்கப் பையன் ரொம்பத் தப்பா நடந்துக்கிறான், ஒரு வார்த்தை எங்கிட்டக் கேட்டிருக்கலாம், என்ன நடந்ததுன்னு நான் சொல்லியிருப்பேன், அதை விட்டுட்டு…” 

“விடு அமர்.” அதற்கு மேல் அங்கு நிற்காமல் அமர் கிளம்பிவிட்டான்.

“ரத்தம் வருதுப்பா.” மாமி சொன்னதையும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அந்த ப்ளாக் ஆடி கிளம்பிவிட்டது. 

அடுத்தநாள் காலை ஒன்பது மணிபோல அமரின் வீட்டிற்கு வந்தார்கள் கரீமும் அவரது மனைவியும். அமரின் கார் வாசலில் நிற்பதைப் பார்த்தே அவன் இன்னும் கிளம்பி வெளியே போகவில்லை என்று புரிந்து கொண்டார்கள். அவன் வீட்டிலிருக்கும் போது வந்தால்தான் சரியாக இருக்கும் என்று காலையிலேயே கிளம்பியிருந்தார்கள்.

“வாங்க.” வந்தவர்களை இன்பம்தான் வரவேற்றார். ஆனால் குரலில் அத்தனை உற்சாகம் தெரியவில்லை. அமரும் ஹாலில் கிடந்த சோஃபாவில் படுத்துக் கிடந்தவன் இவர்களைக் காணவும் எழுந்து உட்கார்ந்தான்.

“வாங்க மாமா, வாங்க மாமி.” இளையவனின் இடது பக்கக் கன்னம் வீங்கியிருந்தது. 

“அமர்! என்னப்பா இது?!” இவன் முகத்தைப் பார்த்ததும் கரீம் திடுக்கிட்டுப் போனார். 

“கேட்கிறதுக்கு நாதியில்லாத பசங்கதானே, அதான் எல்லாரும் ஆடிப்பார்க்கிறாங்க.” இது இன்பம். கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னார்.

“அம்மா… இஷான் பண்ணின தப்புக்கு எதுக்கு மாமா, மாமியைக் குத்தம் சொல்றீங்க?”

“இல்லை தம்பி, இன்பம் சொல்றதுல என்ன தப்பிருக்கு? எங்கப் புள்ளை நேத்து நடந்துக்கிட்டது எவ்வளவு பெரிய தப்பு?” இது சல்மா. இயலாமையோடு பதில் சொன்னார். 

“ஆசைப்பட்டது உங்கப் பொண்ணு சல்மா, நீங்க கண்டிக்கிறதா இருந்தா ஆல்யாவைத்தான் கண்டிக்கணும், அதை விட்டுட்டு ரத்தம் வர்ற அளவுக்கு… அப்பிடியென்னக் கோபம் சல்மா உங்கப் பையனுக்கு?” இப்போது இன்பம் அழுதுவிட்டார். அமரின் இந்த நிலைமைக்கு அவரும் ஒரு காரணம்தானே?

“இது சரியா வருமா? ஆல்யா ரொம்பச் சின்னப்பொண்ணு, மாமா, மாமி இதுக்கு ஒத்துக்குவாங்களா? இஷான் சரின்னு சொல்லுவானான்னு எத்தனையோ குழப்பம் அமருக்கு இருந்துச்சு, இது எதையும் புரிஞ்சுக்காம…”

“தப்புதான் இன்பம்.”

“வேற ஒரு பொண்ணைப் பார்க்க எவ்வளவு நேரம் ஆகும் சல்மா? அதுக்கப்புறமா உங்கப் பொண்ணோட நிலைமை என்ன? அது வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொன்னா நீங்க என்னப் பண்ணுவீங்க? இதையெல்லாம் யோசிக்காம இப்பிடித்தான் நடந்துக்கிறதா? ரெஹான் கேள்விப்பட்டா எவ்வளவு வருத்தப்படுவான்?” இவர்கள் பேசிக்கொண்டிருக்க கரீம் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். அவரின் மௌனம் இளையவனை யோசிக்க வைத்தது.

“மாமா… உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாது, அது எதுவா இருந்தாலும் அதை எங்கிட்ட நீங்கத் தாரளமாச் சொல்லலாம், ஆல்யா உங்கப் பொண்ணு, அவளோட வாழ்க்கையைப் பத்தின எல்லா முடிவுகளையும் நீங்கதான் எடுக்கணும், நேத்து இஷான் பண்ணின வேலையால ஏதோ ஆத்திரத்துல நான் அப்பிடியெல்லாம் பேசிட்டேன், ஒருவேளை ஆல்யாக்கு நான் பொருத்தமில்லைன்னு நீங்க…”

“சேச்சே! இதென்னப் பேச்சு அமர்? நானோ இல்லை உன்னோட மாமியோ என்னைக்குமே அப்பிடி நினைச்சதில்லை, நாங்க யோசிச்ச ஒரேயொரு விஷயம் உங்க வயசு வித்தியாசந்தான், மத்தப்படி உனக்கென்னக் குறை?” இளையவனை முந்திக்கொண்டு பதில் சொன்னார் கரீம்.

“இல்லை… உங்க மூத்த மருமகன் டாக்டர்…”

“என்னைய்யா டாக்டர், என்ஜினியர்? நானுந்தான் காய்கறி வியாபாரம் பண்ணுறவன், ஏன்? உங்க மாமி என்னோட சந்தோஷமா வாழலையா? தொழில் பண்ணுறது வயிறு வாடாம இருக்கப்பா, ஒரு பொண்ணு சந்தோஷமா வாழ வேற விஷயங்கள் வேணும் அமர்.”

“இந்தக் கல்யாணத்துக்கு உங்கப் பையனோட முழு எதிர்ப்பும் இருக்கும்.” 

“நான் யோசிக்குற ஒரே விஷயம் அது மட்டுந்தான், மத்தப்படி நான் எதைப்பத்தியும் சிந்திக்கலை, ஆனா… பையனை யோசிச்சுப் பொண்ணு வாழ்க்கைய என்னால நாசம் பண்ண முடியாது அமர்.” கரீம் சொல்லி முடிக்கவும் அமர் இப்போது சல்மாவைப் பார்த்தான். 

“உங்கப் பொண்ணை நான் நல்லாப் பார்த்துக்க மாட்டேன்னு ஒரு துளி சந்தேகம் உங்களுக்கு இருந்தாலும் அதை நீங்க வெளிப்படையா எங்கிட்டச் சொல்லிடுங்க மாமி, நான் வருத்தப்பட மாட்டேன்.” 

“வயசு வித்தியாசம் ஜாஸ்தியா இருக்கேன்னு நான் யோசிச்சப்பக் கூட அதெல்லாம் ஒன்னுமேயில்லைன்னு சொன்னவ உங்க மாமி.” சல்மாவிடம் கேட்ட கேள்விக்கு கரீம் பதில் சொன்னார். சல்மா இப்போதும் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் ஒரு நிறைவு தெரிந்தது. 

“மாமா, வீட்டோட மேப்பை நீங்க சரியா நேத்துப் பார்த்தீங்களான்னு எனக்குத் தெரியாது, ரெண்டு மாடிக்கு ப்ளான் போட்டிருக்கேன், கட்டி முடிக்கக் குறைஞ்சது நாலு மாசமாவது தேவைன்னு என்ஜினியர் சொல்றாரு, முதல்ல கீழ் தளத்தை மட்டும் முடிக்கலாம், அதுக்கு எப்பிடியாவது ரெண்டு மாசம் தேவைப்படும், வீட்டை முடிச்சுட்டுக் கல்யாணத்தை வெச்சுக்கலாம்.” திட்டவட்டமாகச் சொன்னான் அமர்.

“சரிப்பா.” அந்த வார்த்தையைத் தவிர கரீம் வேறெதுவும் சொல்லவில்லை.

“அன்னைக்கு… வீட்டோட மேப் வந்திருந்துச்சு, அதைக் காட்டத்தான் ஹம்பாந்தோட்டைக்குப் போனேன், வேற எந்தத் தப்பான எண்ணமும் எங்கிட்ட இல்லை மாமா.”

“அப்பிடி நாங்க சொல்லலையே அமர்.” 

“இல்லை மாமா, யூனில ஃபோட்டோ எடுத்தது, இஷான் பார்த்த மத்த ஃபோட்டோஸ் எல்லாமே தற்செயலா நடந்தது, ஆல்யா என்னோட சொந்தக்காரப் பொண்ணுன்னு நாலு பசங்களுக்குத் தெரியுறது அவளுக்குப் பாதுகாப்புன்னு நான் நினைச்சனே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை, அப்பிடியே உங்கப் பொண்ணு மேல எனக்கு ஆசை இருந்திருந்தா நான் ஏன் மஹியை நீங்க சொன்னப்போ சம்மதிக்கணும்? நான் நேரடியாவே எனக்கு ஆல்யாவைப் புடிச்சிருக்குன்னு சொல்லியிருப்பேனே?”

“எனக்குப் புரியுதுப்பா.”

“இப்ப வரைக்கும் அவ சின்னப் பொண்ணு, கூட வளர்ந்தவ எங்கிற எண்ணந்தான் மனசு நிறைய இருக்கு, ஆனாலும்… அவ அழுறப்போ என்னாலத் தாங்க முடியலை மாமா, எப்பவுமே இஷானோட சண்டைப் போட்டுக்கிட்டு அவ எங்கிட்டத்தானே புகார் சொல்லிக்கிட்டு வருவா, அன்னைல இருந்து இன்னை வரைக்கும் அவளோட கண்ணீரைப் பார்க்கிற சக்தி எனக்கில்லை.” இப்போது சல்மாவின் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகைப் பூத்தது. ஒரு பெண்ணை சந்தோஷமாக வைத்திருக்க இதைவிட என்ன தகுதி வேண்டும்? ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீர் வரப் பொறுக்காதவன்தானே உண்மையான ஆண்மகன்?!

“தம்பி… அவ மஹி மாதிரிக் கிடையாது, கொஞ்சம் பொறுமைக் கம்மி, வீட்டுல சின்னப் பொண்ணுங்கிறதால ஒரு வேலை பண்ணத் தெரியாது, பொறுப்பில்லாம நடந்துக்குவா, ஆனா எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்குவா.” இது சல்மா. தன் மகளின் குறைகளைப் பட்டியல் போட்டார். இப்போது அமர் தன் தாயைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“அது உங்க வீட்டுல சல்மா, அன்னைக்கு இங்க வந்திருந்தப்போ எவ்வளவு பொறுமையா, பொறுப்பா நடந்துக்கிட்டா உங்கச் சின்னப்பொண்ணு, இந்த வீட்டுக்கு வந்து அவ எதுக்கு வேலை பண்ணணும்? அப்ப எதுக்கு நான் இங்க வெட்டியா உட்கார்ந்து கிடக்கேன்? அதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா?”

“அப்பிடியில்லை இன்பம், வீட்டுப் பொம்பளைன்னா ஒரு பொறுப்பு இருக்கில்லை? ஆனா அவ எல்லாத்தையும் சுலபமாக் கத்துக்குவா.”

“இங்க வந்து அவ படிக்கிற வேலையைப் பார்க்கட்டும் மாமி.” அமர் சொல்ல எழுந்து வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார் கரீம்.

“அமர்… நீ எங்க வீட்டுக்கு வரணும்னு நானும், சல்மாவும் ரொம்ப ஆசைப்பட்டோம், நீ எங்க மூத்த மருமகனா வந்தா அது எங்களுக்கு இன்னும் பலம்னு நினைச்சோம், ஆனா ஆண்டவன் இளையவ மூலமாத்தான் அது நடக்கணும்னு நாடியிருக்கான், எப்பிடி இருந்தாலும் நீ எங்க வீட்டுக்கு வர்றது எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம், ஆனா… இஷான் இப்பிடியெல்லாம் நடந்துக்குவான்னு நாங்க கனவுலயும் நினைக்கலை, வயசு வித்தியாசம் எங்கிற யோசனை ஆரம்பத்துல எனக்குமே இருந்துச்சு, ஆனா அதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு உங்க மாமி சொன்னப்போ என்னால அதைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது, அதே மாதிரி இஷானும் எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்குவான்னு நான் நினைச்சேன், ஆனா இப்பிடி நடந்துக்குவான்னு எதிர்பார்க்கலை, அவன் ஏதாவது தப்பா நடந்தாலும் நீ…”

“மாமா, என்னப் பேசுறீங்க நீங்க? இதையெல்லாம் நீங்க எனக்குச் சொல்லணுமா? நான் எப்பவும் உங்க அமர் மாமா, நீங்கப் பார்க்க வளர்ந்தப் பையன் நான், நீங்க எனக்கு அப்பா மாதிரி.” கரீமை இடைமறித்து அமர் பேச அவனை அப்படியே கட்டியணைத்த கரீம் குலுங்கி அழுதுவிட்டார். அவர் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தான் இளையவன்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 09

அத்தியாயம் 09ஆல்யாவின் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. மனது சந்தோஷமாக உணர்ந்தாலும் இந்த வார இறுதியைப் போல இரண்டு நாட்கள் இனி தன் வாழ்நாளில் வரக்கூடாது என்று அந்தப் பெண் மனம் இறைவனைப் பிரார்த்தனை செய்தது. விடுமுறையே இல்லை என்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்