அத்தியாயம் 09
அத்தியாயம் 09
ஆல்யாவின் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. மனது சந்தோஷமாக உணர்ந்தாலும் இந்த வார இறுதியைப் போல இரண்டு நாட்கள் இனி தன் வாழ்நாளில் வரக்கூடாது என்று அந்தப் பெண் மனம் இறைவனைப் பிரார்த்தனை செய்தது. விடுமுறையே இல்லை என்று சொன்ன அண்ணன் வீடு வந்த போதே அவள் சுதாரித்திருக்க வேண்டும். இவ்வளவு சீக்கிரமாக இத்தனைப் பெரிய பிரச்சனையை அண்ணன் கொண்டு வருவான் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் கலகம் பிறந்தால்தானே வழி பிறக்கும்!
அமரின் ஆஃபீஸை நோக்கித்தான் போய்க்கொண்டிருந்தாள் பெண். அன்று திங்கட்கிழமை. நேரம் அப்போது மாலை மூன்று மணி. யூனியில் இன்று முக்கியமான ஒரு பரீட்சை இருந்ததால் எதைப்பற்றியும் யோசிக்காமல் முதலில் அதை நிறைவு செய்தாள். அமர் இப்போது எங்கே இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியாது. ஏதோவொரு தைரியத்தில் அவனது ஆஃபீஸ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள்.
“வாங்கம்மா.” அமரிடம் வேலை பார்க்கும் ஒரு மனிதர் இவளை வரவேற்றார். வெளியே இளையவளின் உள்ளம் கவர்ந்த ப்ளாக் ஆடி நின்ற போதே புரிந்து போனது, உள்ளம் கவர்ந்தவனும் உள்ளேதான் இருக்கிறான் என்று.
“அமர் மச்சான் பிஸியா இருக்காங்களா?”
“தெரியலைம்மா, பார்த்துச் சொல்லட்டுமா?”
“ம்…” இவள் தலையை ஆட்டிவிட்டு வரவேற்பில் கிடந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். அன்றைக்கு இவளும், மஹியும் வந்த போது இது போலத்தான் இந்த சோஃபாவில் இவள் அமர்ந்திருந்தாள். அன்றைய நாள் மீண்டும் அவள் மனக்கண்ணில் வந்து போனது. அன்று மஹிராவின் கணவனாக அவனைக் கற்பனைப் பண்ண முடியாமல் அவள் தவித்த தவிப்பு அவளுக்கும் அந்த ஆண்டவனுக்கும் மட்டும்தான் தெரியும்.
“ஆல்யா!” சட்டென அவன் குரல் கேட்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் பெண். ஏதேதோ சிந்தனையில் இருந்தவள் அவன் தன் அறையை விட்டு வெளியே வந்ததைக் கவனிக்கவில்லை.
“உள்ள வா.” அவன் அழைக்கவும் தயங்கியபடி எழுந்து அவனைத் தொடர்ந்து உள்ளே போனாள்.
“வீட்டுக்குப் போகலை?”
“இல்லை… உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு…”
“உட்காரு.”
“இல்லை, நான் இங்க வர்றேன்னு அம்மாக்கிட்டச் சொல்லிட்டு வரலை.”
“நான் சொல்லவா இப்போ?”
“வேணாம்.”
“ஏன்?” அவன் கேள்விகள் படபடவென வந்தன. ஆனால் பெண் பதில் சொல்லவில்லை.
“இஷான் எங்க?”
“நேத்தே கிளம்பிப் போயிட்டாங்க.”
“உங்கூட சண்டைப் போட்டானா அதுக்கப்புறம்?”
“இல்லை, யார் கூடவும் பேசலை, யார்கிட்டவும் போறேன்னும் சொல்லலை, அம்மா வருத்தப்பட்டாங்க, ஆனா அப்பாதான் விட்டுப் புடிக்கலாம்னு சொன்னாங்க.”
“ம்… நேத்தே உங்கண்ணன் கிளம்பிப் போயிட்டான், ஆனா இங்க வர உனக்கு இப்பதான் வழி தெரிஞ்சுதா?” அந்தக் கேள்வியில் அவனை விழி விரித்துப் பார்த்தது பெண்.
‘இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் இவன் என்னை இங்கே எதிர்பார்த்தானா?!’
“இன்னைக்கு… இன்னைக்கு ஒரு எக்ஸாம் இருந்துச்சு, அதுக்கு ஆயத்தம் பண்ண வேண்டியிருந்துச்சு… அதான்…”
“சாரி.” அவன் சட்டென்று இறங்கி வந்தான்.
“நான் கிளம்புறேன்.”
“உங்கூட நான் கொஞ்சம் பேசணும் ஆல்யா, உட்காரு, பொறுமையாப் போகலாம், நான் உங்கம்மாக்கு ஃபோனைப் போட்டுச் சொல்றேன்.” என்றவன் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே போனான். அவன் யாரோடு, என்ன பேசினானோ? சற்று நேரத்தில் கரீம் அவளை அழைத்தார்.
“அப்பா, சொல்லுங்கப்பா.”
“ஆல்யா, அமர் உங்கூடப் பேசணுமாம், அவனே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து விடுறேன்னு சொன்னான், நான் அம்மாக்கிட்ட நீ அமர்கூடத்தான் இருக்கேன்னு சொல்லிடுறேன்.”
“சரிப்பா.” அவள் பேசி முடித்தபோது கையில் இரு கிண்ணங்களோடு உள்ளே வந்தான் அமர். அவளிடம் அவன் நீட்டிய கிண்ணத்தில் சர்க்கரைப் பொங்கல் இருந்தது. நெய் வடிய, முந்திரிப் பருப்போடு இருந்த இனிப்பு அவள் வாயில் எச்சிலை ஊற வைத்தது.
ஆல்யாவிற்குப் பொங்கல் என்றால் அத்தனைப் பிரியம். அதிலும் இப்படி சர்க்கரைப் பொங்கல் என்றால் உயிரையே விடுவாள். ஆனால் அவள் வீட்டில் அந்தப் பதார்த்தம் செய்ய மாட்டார்கள். அவளது நண்பிகள் வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை, பூஜை என்றால் இவளுக்குக் கட்டாயம் ஒரு பாக்ஸில் பொங்கல் வந்துவிடும். அவளுக்குப் பொங்கல் பிடிக்கும் என்று அமருக்கும் தெரியும்.
“இன்னைக்கு எடுத்த ஆர்டர் மெனுல பொங்கலும் இருந்துச்சு, நீ வரலைன்னா நானே உங்க வீட்டுக்கு வந்து குடுக்கணும்னுதான் நினைச்சிருந்தேன், சாப்பிடு.” பொங்கலைப் பார்த்ததும் அவளுக்கு முகம் மலர்ந்து போனது.
“நீங்க…” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவள் அவன் பொங்கலை எடுத்து வாயில் வைக்கும் போதுதான் அதை கவனித்தாள். கடைவாய் இலேசாகச் சிவந்திருந்தது. வாயைத் திறக்க முடியாமல் அவன் சிரமப்படுவது நன்றாக ஊன்றிக் கவனிக்கும் போது தெரிந்தது. அன்றைக்கு அவள் அண்ணன் இரத்தம் வரும் அளவிற்குத் தாக்கினானே! அன்றைய நாளை நினைத்த மாத்திரத்தில் அவளது கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.
“ஏய்! என்னாச்சு? எதுக்கு இப்போ அழுறே?” அவன் பதறவும் தலையைக் குனிந்து கொண்டவள் விசும்பினாள்.
“என்னம்மா ஆச்சு? எதுக்காக இந்த அழுகை?”
“அன்னைக்கு… அன்னைக்கு… அண்ணா…” அதற்கு மேல் அவளுக்குப் பேச்சு வரவில்லை. அமர் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தான்.
“ஆல்யா… நாம ரெண்டு பேரும் பார்த்துக்கிற எல்லா சமயத்துலயும் நீ அழுறே, எனக்கு அது புடிக்கலை, என்னாலதான் நீ அழுறியோங்கிற எண்ணம் என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துது.” இப்போது அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டது பெண்.
“சாப்பிடு.” அவன் சொல்லவும் தலையை ஆட்டியவள் ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் வைத்தாள்.
“நல்லாருக்கா?”
“ம்… நீங்கப் பண்ணினீங்களா?”
“இல்லை, அதுக்குன்னு ஸ்பெஷலா ஒரு மாஸ்டர் வெச்சிருக்கேன்.”
“ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு ஆளா?”
“அப்பிடீன்னு இல்லை, ஆனா கிட்டத்தட்ட அப்பிடித்தான்.” அவன் பதிலில் அவள் புன்னகைக்க அவனும் சிரித்தான். அவள் உண்டு முடிக்கும் வரை பொறுத்திருந்தவன்,
“அன்னைக்கு உங்கம்மாவும் அப்பாவும் எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, அது உனக்குத் தெரியுமா?” என்றான். அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
“ம்… உங்கண்ணா நடந்துக்கிட்டது தப்புன்னு சொன்னாங்க, அதை நான் கண்டுக்கலை, கல்யாணத்துக்கு முன்னாடி வீட்டைக் கட்டி முடிச்சிரலாம்னு சொன்னேன்.”
“யாரோட கல்யாணம்?” என்றாள் பெண் இன்னும் ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் வைத்தபடி.
“நம்மக் கல்யாணந்தான்.” அவன் சொல்லி முடிக்க அவளுக்குப் பொங்கல் தொண்டையில் சிக்கியது. நான்கைந்து முறை இருமியவள் தன் தலையில் தானே தட்டிக்கொண்டு அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அந்த இரவிற்குப் பிறகு சாப்பிட மாத்திரமே ஆல்யா தனது அறையை விட்டு வெளியே வந்தாள். வீட்டில் நடந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது. இஷான் கொழும்பிற்குப் போனது கூட அம்மா சொல்லித்தான் அவளுக்குத் தெரியும்.
“அண்ணா இதுக்கு ஒத்துக்க மாட்டானே?!”
“அப்போ உங்கண்ணா பார்க்கிற மாப்பிள்ளையைக் கட்டிக்கிறியா?”
“ஐயையோ! ம்ஹூம்.” அவள் அவசரமாக மறுத்தாள்.
“ம்… ஆல்யா, கல்யாணத்துக்கு அப்புறம் என்னால உங்க வீட்டுல வந்து இருக்க முடியாது, நீதான் நம்ம வீட்டுக்கு வரவேண்டி இருக்கும்.” அவள் அதற்கும் தலையை ஆட்டினாள். அவன் சம்மதம் சொன்னதையே அவளால் இன்னும் நம்ப முடியவில்லை!
“படிப்பை விட்டு உன்னோட கவனம் எங்கேயும் போகக்கூடாது, நல்லாப் படிச்ச புள்ளையைக் கல்யாணம் பண்ணி இவன் எல்லாத்தையும் கெடுத்துட்டான்னு என்னைப் பார்த்து யாரும் சொல்லிரக்கூடாது, புரியுதா?”
“ம்…” இப்போதும் அவள் தலை ஆடியது, சம்மதமாக.
“எங்க வீட்டுலயே இப்போ சின்னப்பொண்ணு நீதான், ஆனா எங்க வீட்டோட மூத்த மருமகள் நீ, நாளைக்கு ரெஹானுக்குக் கல்யாணம் ஆச்சுன்னா நம்ம வீட்டுக்கு இன்னொரு பொண்ணு வருவா, எல்லாரையும் நீ அனுசரிச்சுப் போகணும், எங்கம்மா இல்லையேங்கிற குறை இனி அந்த வீட்டுல தெரியக்கூடாது.”
“ம்…” அவளுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது.
“நேரங்காலம் பார்க்காம நான் தொழில் பண்ணுறவன், உங்க வீடு மாதிரி எல்லாத்துக்கும் என்னை நீ எதிர்பார்க்கக் கூடாது, உன்னோட வேலைகளை நீயே செஞ்சு பழகணும்.”
“எங்கூடப் பேசவாவது உங்களுக்கு நேரம் இருக்குமா?” அவள் துடுக்குத்தனம் தலைகாட்ட அவன் முறைத்தான்.
“இப்பதான் பொறுப்பா நடந்துக்கணும்னு உங்கிட்டச் சொன்னதா எனக்கு ஞாபகம்.”
“சாரி.” அவள் சொல்லும் போதே அங்கிருந்த ட்ராயரைத் திறந்தவன் அதிலிருந்து எதையோ எடுத்து மேசை மீது வைத்தான். அந்தச் சிவப்பு நிற வெல்வெட் பெட்டி!
“அம்மிணி வருவீங்கன்னு ரெண்டு நாளா இது இங்கதான் இருக்கு, இப்பவாவது இதை வாங்கிக்குவீங்களா?” தன் முன்பாக இருந்த பெட்டியைப் பெண் இலேசாக வருடியது. அவள் முக பாவனைகளையே கவனித்தபடி இருந்தான் அமர்.
“இனி என்னோட வாழ்க்கை முழுசுக்கும் நீதான்னு சொல்லிப் பாருங்க, அந்த நகைக்கடையையே மொத்தமா வாங்கிக் குடுங்கன்னு கேட்பா.” அன்றைக்கு அம்மா சொன்னது இப்போதும் அவன் காதில் எதிரொலித்தது. கண்களில் ஒரு அலட்சியத்தைத் தேக்கி அன்றைக்கு அவள் பார்த்த பார்வைக்கும் இன்றைக்கு அவள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருந்தது. நகைப் பெட்டியைத் திறந்தவள் அப்போதுதான் அதிலிருந்த நெக்லஸை சரியாகக் கவனித்தாள். கழுத்தோடு சேர்ந்தாற் போல அழகான வெண் கற்கள் பதித்த நகை. நடுவே ஓவல் வடிவில் பெரிய வெண் முத்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
தன் சுட்டு விரலால் அந்த வெள்ளைக் கற்களைத் தடவிப் பார்த்தது பெண். அவளுக்குத் தங்க நகைகள் புதிதல்ல. தன் இரு பெண்களுக்கும் சல்மா பல மோஸ்தர்களில் பல நகைகளை வாங்கிக் குவித்திருந்தார். அவர் எத்தனைக் கோடி கொடுத்து எவ்வளவு அருமையான வைரத்தை வாங்கிக் கொடுத்தாலும் இந்த ஐந்து லட்சம் பெறுமானமுள்ள நெக்லஸுக்கு ஈடாகுமா? அதை வாங்கிக் கொடுத்தவன் அத்தனை சுலபமான பேர்வழியா?! இப்போது பெண் அவனை நிமிர்ந்து பார்க்க அவனது ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது. புன்னகையை விழுங்கிக் கொண்டு அவள் கிளம்ப ஆயத்தமானாள்.
“இரு, நான் கொண்டு போய் விடுறேன்.”
“இல்லையில்லை, வேணாம்.” அவள் அவசரமாகத் தடுத்தாள். அவன் ‘ஏன்’ என்பது போல பார்த்தான்.
“அண்ணா ஏற்கனவே கோபமா போயிருக்கான், இப்ப இதை வேற யாராவது பார்த்துட்டு அவங்கிட்டச் சொன்னா இன்னும் கோபப்படுவான்.”
“நாளைக்குக் கல்யாணத்துக்கு அப்புறமும் அண்ணாக்குக் கோபம் வரும்னு எங்க வீட்டுக்கு வர முடியாதுன்னு சொல்லுவியா?”
“நீங்க இப்போ விதண்டாவாதம் பண்ணுறீங்க.”
“நான் உள்ளதைச் சொல்றேன், உங்கப்பாக்கிட்ட நான் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றதா சொல்லிட்டேன்.”
“அப்பாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன், வீட்டுல இந்த நகையைக் காட்டட்டுமா?”
“அது உன்னோட இஷ்டம்.” அவன் பட்டும் படாமல் பதில் சொன்னான். இதுவரை இருந்த இலகு நிலை அண்ணாவின் பேச்சை எடுத்ததும் தொலைந்தது போல உணர்ந்தாள் பெண்.
“அண்ணா சரின்னு நான் சொல்லலை, அன்னைக்கு நீங்க வர்றதுக்கு முன்னாடியும் அண்ணா ரொம்பத் தப்பாத்தான் பேசிச்சு, அதுக்கப்புறமும் உங்கக்கிட்டக் கை நீட்டினது பெரிய தப்பு, அதுக்காக என்னோட அண்ணனை நான் விட்டுக்குடுக்க முடியுமா? தப்பே பண்ணினாலும் அவன் என்னோட அண்ணனில்லையா?” தன்னிடம் கெஞ்சிய பெண்ணை அமர் வியப்பாகப் பார்த்தான். தான் குழந்தை என்று நினைத்திருக்கும் பெண்ணிற்குள் இத்தனை முதிர்ச்சி இருக்கிறதா?! அவன் முகத்தில் கீற்றாக ஒரு புன்னகைத் தோன்றவும் அதையே தன் முகத்திலும் பிரதிபலித்தவள் கதவை நோக்கி நடந்தாள்.
“ஆல்யா, உங்கிட்ட ஒன்னு கேட்க மறந்துட்டேன்.” என்றான் அவசரமாக. கதவை நெருங்கியவள் அங்கு நின்றபடியே திரும்பிப் பார்த்தாள்.
“மஹரா உனக்கு என்ன வேணும்?” (மஹர் என்பது இஸ்லாமியத் திருமணங்களில் ஆண், பெண்ணிற்குக் கொடுக்கும் சீதனம். பெண் தனக்கு எவ்வளவு பெரிய தொகை வேண்டுமானாலும் அதை மணமகனிடம் கேட்டுப் பெறலாம்.)
“என்ன கேட்டாலும் குடுப்பீங்களா?” அவள் முகத்தில் குறும்பு கூத்தாடியது.
“அப்பிடி என்னத்தைக் கேட்டிரப்போறே?!”
“கேட்டதுக்கு அப்புறம் பின்வாங்கக் கூடாது.” சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். அவனுக்கும் ஆர்வம் தாங்கவில்லை.
“என்னையே உனக்குக் குடுக்கப் போறேனே, இன்னும் என்னத்தைக் குடுக்க, அப்படீன்னு நான் இப்போ டயலாக் பேசணுமா?”
“ஏன்? பேசித்தான் பாருங்களேன், ஹீரோ கணக்காத்தானே இருக்கீங்க!” அவளோடு வாய்க்கு வாய் வார்த்தையாடுவது சுவாரசியமாக இருக்கத் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் அமர். முகத்தில் புன்னகை.
“சரி கேளு, என்ன வேணும்.”
“வாசல்ல இருக்கிற உங்களோட கேர்ள் ஃப்ரெண்ட்.”
“என்னது?! வாசல்ல கேர்ள் ஃப்ரெண்ட்டா?!” என்றவன் கண்ணாடித் தடுப்பு மூலமாக வரவேற்பைப் பார்த்தான்.
“ஆமா! உங்க மூஞ்சிக்கு நானொருத்தி மாட்டினதே பெரிய விஷயம்! இதுல இன்னொன்னு கேட்குதாக்கும்! நான் உங்க ப்ளாக் ஆடியைச் சொன்னேன்.” தன் முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு சொன்ன பிற்பாடுதான் அவள் பேச்சின் அர்த்தம் புரிந்தவன் வாய்விட்டுச் சிரித்தான்.
“ஏய்!”
“இல்லையா பின்னே! அந்தக் காரைத் தடவுறீங்க, கொஞ்சுறீங்க!”
“பார்றா! அப்போ இனி காரைக் கொஞ்சாம உன்னைக் கொஞ்சுறேன்.” அவன் பேச்சுவாக்கில் சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் ஆசைகள் பலவற்றைச் சுமந்திருந்த பெண் அந்த வார்த்தைகளின் கனத்தைத் தாங்க முடியாமல் சட்டென்று வெளியேறினாள். பேசிய பிறகுதான் வார்த்தைகள் கோடு தாண்டிப் போனதை உணர்ந்தவனும் மௌனித்துவிட்டான். தான் நினைத்தது போல இவளோடான வாழ்க்கை அத்தனைக் கடினமாக இருக்காது என்று அவன் உள்மனது சொன்னது.
***
அந்த வாரம் மஹிராவும் அவள் கணவரும் கரீமின் வீட்டில்தான் தங்கினார்கள். வெளிநாடு செல்வதற்கான வேலைகள் அனைத்தும் ஆயத்தமாகியிருந்தன. வீட்டிற்கு வந்ததும் வராததுமாகத் தங்கையை அவளுடைய அறையில் சந்தித்தவள்,
“ஆல்யா, நீ எடுத்திருக்கிறது ரொம்பத் தப்பான முடிவு.” என்றாள் பதட்டமாக.
“ஏன்? அப்பிடி என்ன தப்பான முடிவை நான் எடுத்துட்டேன்?” அவளுக்குப் பெரியவள் சொல்வது புரியவில்லை. இதே அமரை அப்பா திருமணம் செய்துகொள் என்று சொன்ன போது சம்மதித்தவள்தானே இவள்?
“உன்னோட வயசென்ன? அமரோட வயசென்ன?”
“அக்கா, நீயும் தேஞ்ச ரெக்கார்டு மாதிரி இதையேதான் சொல்லப் போறியா? அண்ணாக்குத்தான் புரியலைன்னா உனக்கும் புரியலையா? எனக்கு அமர் மச்சானைப் புடிச்சிருக்கு.” அந்த வெளிப்படையான பேச்சைப் பெரியவள் எதிர்பார்க்கவில்லைப் போலும். அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.
“இதை இப்பதானே நீ சொல்றே? முதல்ல ஏன் சொல்லலை?”
“அப்போ உனக்கு அமர் மச்சானை அப்பா முடிவு பண்ணியிருந்தாங்க, அதால நான் எதுவும் பேசலை, ஆனா இப்பதான் நிலைமை மாறிடுச்சே, நீதான் அவங்களை வேணாம்னு சொல்லிட்டியே!”
“நான் வேணாம்னு சொன்ன காரணம் உனக்கும் பொருந்தும்தானே?”
“அப்பிடி யாரு சொன்னா? நீ படிப்பு படிப்புன்னு பறக்கிறே, நான் அப்பிடியில்லைக்கா, கல்யாணம் முடிஞ்சதும் அமர் மச்சான் படிக்க வேணாம்னு சொன்னா சந்தோஷமா குடும்பம் நடத்தத் தொடங்கிடுவேன்.”
“பைத்தியமா நீ? உன்னோட சொந்தக் கால்ல நிற்க உனக்குப் படிப்பு ரொம்ப முக்கியம்.”
“எதுக்கு? புருஷன் சம்பாதிச்சுப் போட்டா அழகா காலை ஆட்டிக்கிட்டுக் குடும்பம் நடத்தாம, எதுக்குச் சொந்தக்கால், பந்தக்கால்லுன்னுக்கிட்டு?”
“ஏய்! நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசுறேன், நீ கேலி பண்ணுறே?”
“அக்கா, உன்னோட பாதை வேற, என்னோட பாதை வேற, நான் உன்னோட வழிக்கு வரலை, அதே மாதிரி நீயும் என்னோட வழிக்கு வராதே.”
“இஷானுக்கு இந்தக் கல்யாணத்துல கொஞ்சமும் விருப்பமில்லை.”
“போகப்போக அண்ணா புரிஞ்சுக்குவாங்க, அந்த நம்பிக்கை எனக்கிருக்கு.”
“இந்த வீட்டோட மூத்த மாப்பிள்ளை ஒரு டாக்டர், நீ அமரைக் கல்யாணம் பண்ணினா உன்னைப் பத்திப் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?”
“மத்தவங்க நினைக்கிறதுக்கெல்லாம் நாம கல்யாணம் பண்ண முடியுமாக்கா? நமக்குப் புடிச்சிருக்கணும், அமர் மச்சானை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு, அவ்வளவுதான், இதுக்கு மேல பேச ஒன்னுமில்லை.” அத்தோடு அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஆல்யா. அவளுக்கு அவளது அக்காவைப் பற்றி நன்றாகத் தெரியும். அமரை அவள்தான் வேண்டாம் என்று சொன்னாள். அவளுக்குக் கிடைக்காத அமர் தன் தங்கைக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கிறாள்.
இது மனிதர்களின் ஒருவகையான மனநிலை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு அவளுக்குத் தெளிவிருந்தது. தான் வேண்டாம் என்று சொன்ன பொருள்தான். ஆனாலும் அதன் அருமையும் பெறுமதியும் என்னவென்று மஹிராவிற்குத் தெரிந்திருந்தது. தனக்குக் கிடைக்காத அந்தப் பொருள் தன் தங்கைக்குக் கிடைப்பதா என்ற குறுகிய எண்ணம் இது.
அமர் இந்த வீட்டில் வந்து இருக்க முடியாது என்று சொன்னதன் காரணமும் இதுதான் என்பதை அவள் அறிவாள். மஹிரா நாட்டில் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் அவர்களின் வரவு இங்கே அடிக்கடி இருக்கும். அதை அவன் அத்தனை தூரம் விரும்பவில்லை. அமர் மட்டுமல்ல, ஆல்யாவும் அதை விரும்பவில்லை.
அமரின் வீட்டு வேலைகள் அவசர கதியில் ஆரம்பித்திருந்தன. அவர்கள் குடியிருந்த பழைய வீட்டை அப்படியே வைத்துவிட்டுப் பின்னால் இருந்த நிலத்தில் அடித்தளம் போட்டிருந்தார்கள். இன்பத்திற்கு வீட்டு வேலைகளைப் பார்வையிடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. அமருக்கு வெளி வேலைகளுக்கு அலைவதற்கே நேரம் போதவில்லை. அப்படியிருக்க அவனால் எப்படி இங்கே மேற்பார்வைப் பார்க்க முடியும்? அந்தந்த வேலைகளுக்குப் பொறுப்பாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் இன்பத்தின் கவனம் வீட்டின் மேல்தான் இருந்தது. தன் மூத்த மகன் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சதம் கூட வீணாகப் போய்விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.
அன்றைக்கு ரெஹான் தன் அம்மாவை அழைத்திருந்தான். தினமும் இரவு ஒன்பது மணிக்கு அம்மாவை அழைத்துப் பேசிவிடுவான் மகன். இலங்கையில் இரவு வேளை என்றால் இங்கிலாந்தில் மாலை வேளை. அம்மா, மகன் இருவருக்குமே அந்த நேரம் மிகவும் வசதியாக இருக்கும்.
“ரெஹான், எப்போ கிளம்புறீங்க நீங்க?” எடுத்த எடுப்பிலேயே கேட்டார் அம்மா. அமரின் பெற்றோர் இருவரும் இல்லாமல் போன போது அதிகம் பாதிக்கப்பட்டது ரெஹான்தான். அமர் கொஞ்சம் பெரிய பையன் என்பதால் சோகத்தைத் தாங்கிக் கொண்டான். ஆனால் ரெஹான் அந்தக் காலகட்டத்தில் மிகவும் நொடிந்து போனான். அப்போது தோள் தாங்கிக்கொண்ட இந்தத் தாயின் அன்பை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். உண்மையைச் சொன்னால் அமரை விட ரெஹான்தான் இன்பத்தோடு அதிக ஐக்கியம்.
“கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி கிளம்பினாத்தான் கல்யாணத்துக்கு அப்புறமா ஒரு ரெண்டு வாரமாவது என்னால அங்க நிற்க முடியும்மா.”
“என்ன தம்பி நீங்க! இப்பிடித்தான் ரெண்டு வாரம், மூனு வாரம்னு வருவீங்களா? அம்மாக்கூட கொஞ்ச நாள் வந்து தங்கக் கூடாதா ரெஹான்?”
“அம்மா…”
“சரிப்பா, எனக்குப் புரியுது, உங்கண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டு, செலவு பண்ணி உங்களைப் படிக்க வெக்கிறாங்க, அதை விட்டுட்டு இங்க வந்து மாசக் கணக்குல உட்கார முடியுமா?” அம்மா தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார்.
“என்னால முடிஞ்ச அளவு அண்ணாவோட காசைப் பத்திரப் படுத்துறேம்மா, பார்ட் டைம் வேலைக்கும் போறேன்.”
“ஆமா ராஜா, அண்ணா பணம் அனுப்புறாங்களேன்னு நீங்க விளையாட்டுப் புள்ளையா இருந்துரக் கூடாது, பொறுப்பா இருக்கணும்டா கண்ணா, அமர் இங்க ஓய்வில்லாம வேலை பார்க்குது, எனக்கு அதைப் பார்க்கிறதே ரொம்பக் கஷ்டமா இருக்கு, சீக்கிரமாப் படிப்பை முடிச்சுட்டு ஒரு நல்ல வேலையில உட்கார்ந்து அண்ணாக்கு உதவியா இருக்கணும் தம்பி.”
“ஏம்மா? அந்தச் சின்னப் பொண்ணு என்னப் பண்ணுறா?” ஆல்யாவைத்தான் கேட்டான் ரெஹான். அவனுக்கும் அவளுக்கும் இடையில் மூன்று வருடங்கள்தான் வித்தியாசம் என்பதால் எப்போதும் அவளிடம் சேட்டைகள் செய்வான் இளையவன்.
“சின்னப் பொண்ணா இருந்ததெல்லாம் அந்தக் காலம், இப்ப ரொம்பப் பொறுப்பா இருக்கா, அன்னைக்கு உங்கண்ணனைப் பார்க்கப் போயிருக்கா, அமரும் வா வீட்டுல கொண்டு போய் விடுறேன்னு சொல்லியிருக்கு, அதுக்கு வேணாம்னு சொல்லியிருக்கா, அவளோட அண்ணனுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாராம்.”
“அடேங்கப்பா! அவ்வளவு பாசமா அண்ணன் மேல?”
“இதே கேள்வியைத்தான் தம்பியும் கேட்டாங்களாம், தப்பே பண்ணியிருந்தாலும் அவங்க என்னோட அண்ணன்னு பதில் சொன்னாளாம், தம்பி வீட்டுக்கு வந்ததும் சொல்லிச் சிரிச்சாங்க.” சொல்லிவிட்டு இன்பம் சிரிக்க, அங்கே ரெஹானும் சிரித்தான்.
“அம்மா, அண்ணா சந்தோஷமா இருக்கானில்லை?”
“அமர் எப்பதான் தன்னோட சந்தோஷத்தைத் துக்கத்தைன்னு வெளியே காட்டியிருக்கு! ஆனா எனக்கு ஆல்யா மேல நம்பிக்கை இருக்கு, நீங்க அவளைப் பார்த்து ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்குமில்லைத் தம்பி? இப்போ பார்த்தா ஆச்சரியப்படுவீங்க, இது நம்ம ஆல்யாவான்னு! அமர் மேல உயிரையே வெச்சிருக்கா, உங்கண்ணாவை அவ ஒரு வழி பண்ணிடுவா.”
“அண்ணா சந்தோஷமா இருக்கணும்மா, அவன் யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும், எனக்கு அதைப்பத்தி எந்தக் கவலையும் இல்லை, ஆனா அவனோட சந்தோஷம் ரொம்ப முக்கியம், ஆரம்பத்துல இந்த விஷயத்தைப் பத்தி நீங்க சொன்னப்போ எனக்கு நம்பிக்கை இருக்கலை, அண்ணா சம்மதிக்க மாட்டான்னுதான் நினைச்சேன், ஆனா எனக்கே ஆச்சரியமாத்தான் இருந்துச்சு.”
“இப்பவும் கல்யாணம் ஆனதும் உங்கண்ணா அந்தப் பொண்ணோட சேர்ந்து குடும்பம் நடத்திருவார்னு நான் நினைக்கலை ரெஹான்.”
“என்னம்மா சொல்றீங்க?!”
“ஆனா அமர்ல நிறைய மாற்றங்கள் தெரியுது, வீட்டுக்கு வந்தாலே இப்போ ஆல்யா பேச்சுத்தான், உங்கண்ணா சும்மா இருந்தாலும் நான் எதையாவது அவளைப் பத்தி ஆரம்பிச்சு விட்டுருவேன், அதுக்கப்புறம் உங்கண்ணா தன்னால எல்லாத்தையும் கொட்டுவாரு, சமயத்துக்கு இவ்வளவு பேசுறது நம்ம அமரான்னு எனக்கு இருக்கும் தம்பி!” அம்மாவின் ஆச்சரியத்தில் ரெஹான் அங்கு விழுந்து விழுந்து சிரித்தான்.
“இந்தக் கூத்தையெல்லாம் பார்க்க நான் சீக்கிரமாவே வரணும் போல இருக்கு.”
“வாங்கத் தம்பி, உங்களைப் பார்க்க எனக்கு எவ்வளவு ஆசையா இருக்கு! ஏர்போர்ட்டுக்கு அண்ணா வரும்போது நானும் கூட வரட்டுமாப்பா?”
“இல்லைம்மா, இந்த முறை அண்ணாவையும் வர வேணாம்னு சொல்லுங்க.”
“ஏன் ரெஹான்?!”
“பிரச்சினைன்னு ஒன்னு வந்திடுச்சு, அதுக்காக இஷான் மச்சானை இப்பிடியே விட்டுர முடியுமா? மாமாவையும் மாமியையும் யோசிச்சுப் பாருங்க, அண்ணா அவங்க வீட்டுக்கு வர்றதை அவங்க ஆதரிக்கலாம், அதுக்காக அவங்கப் பையனை அவங்களால விட்டுக்குடுக்க முடியுமா?”
“நாம எந்தத் தப்பும் பண்ணலையே தம்பி?”
“நாம தப்புப் பண்ணலைத்தாம்மா, அதுக்காக அப்பிடியே இருந்திர முடியுமா? அண்ணா தன்னோட கல்யாணத்துக்கு வரலைன்னா ஆல்யா எவ்வளவு வருத்தப்படுவா? அவளால நம்ம வீட்டுல வந்து நிம்மதியா வாழ முடியுமா?”
“அதுவும் சரிதான், இப்போ என்னப் பண்ணலாம்னு சொல்றீங்க?”
“நான் ஏர்போர்ட்ல இருந்து நேரா இஷான் மச்சானைப் போய் பார்க்கிறேன், பேசிப் பார்க்கலாம்மா.”
“உங்கக்கிட்டயும் மல்லுக்கு நின்னா என்னப் பண்ணுறது?”
“அப்பிடி நடந்துக்க மாட்டார்னு நினைக்கிறேன், வீட்டுல நம்ம பேச்சை யாரும் கேட்கலையேங்கிற வருத்தம் அவருக்கு ஆரம்பத்துல இருந்திருக்கும், அதுக்காக தங்கச்சியோட கல்யாணத்துக்கு வராம இருப்பாரா என்ன? நான் போய் கூப்பிட்டுப் பார்க்கிறேம்மா, அண்ணா வந்தா சரியா இருக்காது, நான் தனியாத்தான் போகணும்.”
“அதுவும் சரிதான், இவ்வளவு நாளும் எவ்வளவு ஒத்துமையா இருந்த பையன், இப்போ ஏன் இப்பிடித் திடீர்னு மாறிப்போச்சுன்னு எனக்குப் புரியலை, வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைக்கு யாராவது கை நீட்டுவாங்களா?!”
“அவருக்கு என்ன கோவமோ? வீட்டு வேலை எப்பிடிம்மா போகுது?”
“நல்லாப் போகுது ரெஹான், கல்யாணத்துக்கு முன்னாடி வீட்டை முடிச்சிரணுமாம், ஆல்யாக்கு இங்க வசதி போதலையாம், உங்கண்ணா நேத்து இன்ஜினியர்கிட்டச் சொல்றாரு!”
“வெவரந்தான், இவர் அவளோட குடும்பம் நடத்த மாட்டாரா? அதையும் பார்த்துடலாம், சரிம்மா, நான் நாளைக்குக் கூப்பிடுறேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான். அம்மாவிடம் பேசி முடித்த போது அவனை இன்னொரு அழைப்பு அழைத்தது. அந்த எண்ணைப் பார்த்ததும் ரெஹானின் முகத்தில் அத்தனை மலர்ச்சி!
“ஹாய் டார்லிங்.” குழைந்து வந்தது ரெஹானின் குரல்.
“ரெஹான்…” அந்தப் பெயரை உச்சரித்த விதத்திலேயே அது ஒரு ஆங்கிலக் குயில் என்று புரிகிறது.
“சொல்லும்மா, வீட்டுக்கு வந்துட்டியா?” தூய ஆங்கிலத்தில் தொடர்ந்தது பேச்சு.
“ம்… வந்துட்டேன்.”
“அனேகமா இன்னும் ரெண்டு வாரத்துல நான் கிளம்புற மாதிரி இருக்கும், இப்பவே அம்மா எப்போ வர்றேன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.”
“எவ்வளவு காலம் அங்க இருப்பீங்க?”
“குறைஞ்சது ரெண்டு வாரமாவது இருக்கணும், ஆனாலும் அம்மா விடுவாங்களான்னு எனக்குத் தெரியலை.”
“அப்போ மூனு வாரம் ஆகுமா?” அந்தக் குரலில் கவலைத் தெரிந்தது.
“எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வந்திருவேன்.” ரெஹானும் இப்போது கொஞ்ச ஆரம்பித்திருந்தான்.




