அத்தியாயம் 10
அத்தியாயம் 10
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினான் ரெஹான். வெயில் மண்டையைப் பிளந்தது. ஒரு டாக்ஸியை புக் பண்ணிக்கொண்டு அதிலேறி அமர்ந்தவன் முதலில் அம்மாவை அழைத்துப் பேசினான்.
“வந்துட்டீங்களா ராஜா!” இன்பத்தின் குரலில் அவ்வளவு பரவசம்.
“அண்ணா எங்கம்மா?”
“இன்னைக்கு ஒரு கல்யாணம் இருக்குன்னு காலையிலேயே கிளம்பிப் போயிட்டாங்க.”
“நல்லது, நான் இஷான் மச்சானைப் பார்க்கப் போறேன்னு இப்போதைக்கு அண்ணாக்கிட்டச் சொல்ல வேணாம்.”
“சரிப்பா, அந்தத் தம்பி உங்கக்கிட்டயும் மரியாதை இல்லாம நடந்துச்சுன்னா நீங்க ரொம்ப இறங்கிப் போக வேணாம், போசாம வீட்டுக்கு வந்திருங்க.”
“சரிம்மா.” என்றவன் டாக்ஸியை இஷானின் இருப்பிடம் நோக்கி ஓட்டச் சொன்னான். விமான நிலையத்திலிருந்து இஷான் இருக்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அப்போது நேரம் மதியம் இரண்டு மணி என்பதால் அத்தனை வாகன நெரிசல் இருக்கவில்லை. லண்டனில் நேரம் காலை ஒன்பது முப்பது. அவசரமாக அவன் ஆங்கிலக் குயிலுக்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான்.
அவள் இப்போது வேலையில் இருப்பாள். அதனால் பேச முடியாது. நேற்று வேலை முடிந்த கையோடு தனக்காக ஹீத்ரோ ஏர்போர்ட் வரை வந்தவள் கையில் பெரிதாக ஒரு பரிசுப் பொருளைக் கொண்டு வந்திருந்தாள். ஆல்யாவிற்கு அவளது கல்யாணப் பரிசாம்.
“இதை யாரு குடுத்தான்னு கேட்டா நான் என்னப் பதில் சொல்றது?” இவன் புன்னகையோடு கேட்க அதற்கும் அவளிடம் பதிலிருந்தது.
“நீங்க உங்கண்ணா வொய்ஃபுக்குக் குடுக்கிறீங்க, அவ்வளவுதான்.” இலகுவாக வழி சொல்லிக் கொடுத்தாள் பெண்.
“மூனு வாரம் பார்க்காம இருக்கப் போறேன், கொஞ்சம் கவனிக்கலாமில்லை…” அவன் சரசத்தைப் பார்த்துச் சிரித்தவள்,
“ரெஹான்…” என்று அவனை எச்சரித்தாள். வெள்ளைக்காரி என்றுதான் பெயர். ஆனால் அவள் கெடுபிடிகளை இவனால் தாங்க முடியாது.
அந்த வீட்டின் முன்பாக டாக்ஸியை நிறுத்திவிட்டு இறங்கினான் ரெஹான். அப்போதுதான் நேரம் மூன்று முப்பது. இஷான் வேலையிலிருந்து எத்தனை மணிக்கு வீடு வருவான் என்று தெரியவில்லை. நான்கு பேர் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். வீட்டிலிருக்கும் மற்றைய மூன்று பேரையும் இவனுக்குத் தெரியும் என்பதால் அழைப்பு மணியை அடித்தான். வீட்டில் யாரும் இல்லைப் போலும். எந்தப் பதிலும் இருக்கவில்லை. அங்கிருந்தப் படியொன்றில் அமர்ந்தவன் ஃபோனை எடுத்து அதை நோண்ட ஆரம்பித்தான். சரியாக ஐந்து மணிக்கு யாரோ வெளி கேட்டைத் திறந்து கொண்டு வருவது தெரிந்தது.
“ஹேய் ரெஹான்! எப்போ வந்தே?!” உள்ளே வந்தது இஷான்தான். இப்படியொரு வரவேற்பை ரெஹான் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் பார்த்ததும் கோபப்படுவான் என்றுதான் நினைத்திருந்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மச்சான்.”
“ஒரு கால் பண்ணமாட்டியா? சீக்கிரமாவே வீட்டுக்கு வந்திருப்பேனே.” என்றவன் கதவைத் திறந்து இவனை உள்ளே அழைத்துச் சென்றான்.
“எதுக்கு மச்சான் உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு? அங்க உட்கார்ந்து ஃபோனை பார்த்துக்கிட்டு இருந்தேன்.”
“ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்கதான் வர்றியா?!”
“ஆமா மச்சான்.”
“குளிக்கிறியா? டயர்டா இருக்குமே?”
“இல்லை மச்சான், நைட்டு பஸ்ஸைப் புடிச்சு ஊருக்குப் போகணும்.”
“டிக்கெட் ஏதாவது புக் பண்ணியிருக்கியா?”
“இல்லை, உங்கக்கிட்டக் கேட்டுட்டு புக் பண்ணலாம்னு இருந்தேன்.”
“சும்மா இரு, நைட்டுக்கு என்னோட இருந்துட்டு நாளைக்குப் போகலாம்.”
“சரி மச்சான்.” சட்டென்று இவன் சம்மதம் சொல்லிவிட்டான். கொழும்பிற்கு ஏதாவது வேலையாக வந்தால் இப்படி இவர்கள் இஷானோடு தங்குவது வழக்கம்தான் என்பதால் ரெஹானுக்கு எதுவும் கஷ்டமாக இருக்கவில்லை. தனது உடமைகளை பெரியவனின் அறையில் கொண்டு போய் வைத்தான்.
“என்ன சாப்பிடுறே?”
“நைட்டுக்கு வெளியே போகலாம் மச்சான், கொத்து ரொட்டி சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!” இளையவன் ஏக்கமாகச் சொல்லவும் பெரியவன் சிரித்தான்.
“சரிடா, அப்ப டீ போடுறேன், ஆமா… எப்ப உன்னோட படிப்பு முடியுது? என்ன ஐடியால இருக்கே?”
“இந்த வருஷம் படிப்பு முடிஞ்சிரும், அங்கயே ஏதாவது வேலை கிடைச்சா நல்லதுன்னு தோணுது மச்சான்.” இஷான் டீ போட இவனும் சமையலறைக்குள் போய் நின்று கொண்டான்.
“வீசா பிரச்சினை ஒன்னும் வராதா?”
“வேலை கிடைச்சிருச்சுன்னா வீசாவை மாத்திரலாம், ஒன்னும் பிரச்சினை வராது, வேலை கிடைக்கிறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு மச்சான்.”
“அப்புறம் என்னடா? அங்கயே இரு, நாடு இருக்கிற நிலைமைக்கு இங்க வந்து என்னப் பண்ணப் போறே? ஏதாவது சான்ஸ் இருந்தா என்னையும் அங்க எடு.”
“நிஜமாத்தான் சொல்றீங்களா? உங்களுக்கு இங்க நல்ல பாக்கேஜ்தானே மச்சான்?”
“நல்ல காசுதான் குடுக்கிறான், ஆனா நேரங்காலம் பார்க்காத வேலை, சில நேரங்கள்ல புழிஞ்சு எடுத்துருவானுங்க, ஆனா அங்க அப்பிடியில்லையில்லை?”
“அது சரிதான்.” இஷானுக்கு நல்ல தகுதிகளோடு அனுபவமும் இருந்தது. அவன் வெளிநாடு போவதொன்றும் அவ்வளவு சிரமமில்லை.
“அன்னைக்கு ஒரு ஃப்ரெண்ட் கனடா வாறியான்னு கேட்டான், நம்மால அவ்வளவு குளிரைத் தாங்க முடியாதுடா.”
“ம்…” இவ்வளவு பேச்சு இயல்பாக ஓடிய போதும் தங்கையைப் பற்றியோ அவள் திருமணத்தைப் பற்றியோ இஷான் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. அமரைப் பற்றியும் எந்தக் குறையும் கூறவில்லை. பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று இளையவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை, அந்தப் பேச்சை எடுத்தால் இவன் கோபப்படுவானோ? இப்போது இருக்கும் இந்த இயல்புநிலை தொலைந்து போகுமோ?
“அப்புறம்… கல்யாண வேலையெல்லாம் எப்பிடிப் போகுதாம்?” பெரியவனே பேச்சை ஆரம்பிக்கவும் ரெஹான் திகைத்துப் போனான். ஆனாலும் கிடைத்த வாய்ப்பை அவன் தவறவிடவில்லை.
“என்ன மச்சான் மூனாவது மனுஷன் மாதிரி கேட்கிறீங்க? இது உங்க வீட்டுக் கல்யாணம், நம்ம ஆல்யாவோட கல்யாணம்!” மறந்தும் அமரின் பெயரை எங்கேயும் உச்சரிக்கவில்லை அவன். அந்த வார்த்தைகள் இஷானை அசைத்துப் பார்த்திருக்கும் போலும். கசப்பாகச் சிரித்தான்.
“நாம சொல்றதை யாருடா கேட்கிறாங்க? சின்னதுக்குத்தான் புத்தியில்லைன்னு பார்த்தா பெத்தவங்களுக்கும் புரிய மாட்டேங்குது.” தான் குறை சொல்வது அவன் அண்ணனை என்று புரிந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம் பெரியவனைப் பேச வைத்தது.
“அண்ணா மேல கோபமா இருக்கீங்களா மச்சான்?”
“கோபம் வராதாடா? அவதான் சின்னவ, ஏதோ புரியாம பண்ணுறா, இவன் எடுத்துச் சொல்ல வேணாம்? நீ இப்போ தப்புப் பண்ணினா நானும் உங்கூட சேர்ந்து நிற்கிறதா? நாந்தானே உனக்குப் புத்தி சொல்லணும்?”
“அண்ணா நிறையப் பேசி இருப்பாங்கப் போல, ஆனா ஆல்யா ஒரு பிடியில நின்னுடுச்சாம், ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு இப்பிடி ஒரு எண்ணம் இருந்திருக்கு, மஹிக்குப் பேசவும் அமைதியா இருந்திருக்கா.”
“கொஞ்சம் தள்ளி இருந்திருக்கலாம், அவ போற இடத்துல எல்லாம் போய் நின்னா எப்பிடி?” இதற்கு ரெஹான் பதில் சொல்லவில்லை. இதே கேள்வி அவனுக்கும் இருந்தது. அவள்தானே ஆசைப்பட்டாள்? அமர் எதற்காக அவளைப் பார்க்க வேண்டும்? அந்தச் சந்திப்புகளை அவன் தவிர்த்திருக்கலாம்!
“விட்டுத்தள்ளு, என்னமோ பண்ணட்டும்.”
“அப்பிடிச் சொல்லாதீங்க மச்சான், நீங்க இல்லாம அங்க யாருமே நல்லா இல்லைன்னு அம்மா சொல்லி வருத்தப்பட்டாங்க, ஆல்யா கூட அன்னைக்கு அம்மாக்கிட்ட என்னமோ சொல்லி அழுதாளாம், கல்யாணத்துக்கு வாங்க மச்சான், ப்ளீஸ்.”
“வேணாம் ரெஹான், நாம எதுக்கு அங்க வேண்டாத விருந்தாளி!”
“மச்சான், நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது, வயசு வித்தியாசம் தவிர எங்கண்ணா மேல உங்களுக்கு வேற ஏதாவது குறை இருக்கா? அண்ணாவைப் பத்தி யாராவது ஏதாவது தப்பா சொன்னாங்களா?”
“ஏன்டா உம் புத்தி இப்பிடியெல்லாம் போகுது?!”
“இல்லை… மஹிக்கு அண்ணாவைப் பேசினப்போ நீங்க எதுவுமே சொல்லலை, ஆனா இப்போ…”
“டேய்! அவ வயசென்ன, உங்கண்ணாவோட வயசென்னடா? எப்பிர்றா அவன் அவளைக் கட்டிக்க முடியும்?” இந்தக் கேள்வியில் அத்தனை நியாயம் இல்லை என்று ரெஹானுக்குத் தோன்றியது. ஆனால் அதை எதிரில் இருப்பவனிடம் சொல்ல முடியாது. சொன்னாலும் கோபப்படுவான்.
“அது சரிதான், நாம என்ன மச்சான் பண்ண முடியும்? கட்டிக்கப் போற ரெண்டு பேருக்கும் அது ஒரு பிரச்சினையா தெரியலையே!”
“வீட்டு வேலை என்னாச்சு?”
“மேல கட்டுறதுக்கு டைம் போதாதாம், அதால கீழ மட்டும் முடிச்சிருக்காங்க, பெயிண்ட் வேலை நடக்குது போல.”
“ம்…”
“நீங்க எப்ப மச்சான் ஊருக்குக் கிளம்புறீங்க?”
“பார்க்கலாம்டா.” அசிரத்தையான பதில்தான். தாமதித்தாலும் கல்யாணத்திற்குப் போகும் எண்ணம் அவனுக்கு இருப்பதை இவன் புரிந்து கொண்டான்.
“நீங்க இல்லாம எப்பிடி மச்சான்? அது நல்லாவே இருக்காது, எங்க வீட்டு முதல் கல்யாணம், அதுல நீங்க இல்லாம இருக்கக் கூடாது, ஆல்யாக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும், அண்ணா வரலையேன்னு, ப்ளீஸ் மச்சான்.” கொஞ்சம் நயமாகவே எடுத்துச் சொன்னான் இளையவன்.
***
ரெஹான் அடுத்த நாள் ஊருக்கு வந்துவிட்டான். இளைய மகன் வீட்டுக்கு வந்துவிட்ட சந்தோஷத்தில் வீட்டை இரண்டு பண்ணிக் கொண்டிருந்தார் இன்பம். அமருக்கும் சந்தோஷம்தான் என்றாலும் பெரிதாக எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல ஒரு புன்னகையோடு அமர்ந்துவிட்டான்.
“அடேயப்பா! எம் புள்ளையைப் பார்க்க இத்தனை நாள் நான் காத்துக்கிடக்க வேண்டியிருக்கு! ஆனாலும் இளைச்சுப் போயிட்டீங்க ராஜா.”
“அம்மா, இங்க இருந்து போனதை விட இப்போ ரெண்டு கிலோ வெயிட் கூடியிருக்கேன், நீங்க என்னடான்னா இப்பிடிச் சொல்றீங்க?!”
“வெயிட்டும் கூடலை, ஒன்னும் கூடலை, கன்னத்துல சதையே இல்லாத மாதிரி இருக்கு.” அம்மாவின் கவலையில் ரெஹான் சிரித்தான். புதிய வீட்டைப் போய் பார்த்துவிட்டு வந்தான்.
“வீடு எப்பிடி இருக்கு ரெஹான்?” இது அமர். இன்று வெளி வேலைகளைச் சீக்கிரம் முடித்துவிட்டு வீடு வந்துவிட்டான். நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பியோடு நேரம் செலவழிக்க வேண்டும் போல இருந்தது.
“சூப்பரா இருக்குண்ணா, அந்தப் பொடுசு என்ன சொல்லுது? வீடு புடிச்சிருக்காமா?”
“யாரு? ஆல்யாவா?” அதைக் கேட்கும் போதே அமரின் முகத்தில் ஒரு புன்னகைத் தோன்ற அம்மாவைப் பார்த்துக் கண் சிமிட்டினான் இளையவன். இன்பமும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
“வீடு கட்டினதுக்கு அப்புறமா அவ இங்க வரலைடா, கொழும்புல இருக்கிற பெரிய மனுஷனுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாராம், அதால அவளைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு.”
“ஓ… வரும்போது நான் இஷான் மச்சானைப் போய் பார்த்தேண்ணா.” இப்போதுதான் அண்ணனிடம் விஷயத்தைச் சொன்னான் தம்பி. அமரின் முகத்தில் இலேசான அதிர்ச்சி தெரிந்தது.
“என்ன சொல்றான்? ஏதாவது தப்பா நடந்துக்கிட்டானா?”
“அதெல்லாம் இல்லை, கொஞ்சம் வருத்தப்பட்டாரு, ஆனா கண்டிப்பா கல்யாணத்துக்கு வருவாரு.”
“என்னமோ பண்ணட்டும்! ஒழுங்கா பேசினாத்தான் பதில் சொல்ல முடியும், எதுவுமே பேசாம கை நீட்டுறவங்கிட்ட என்னத்தைப் பேச முடியும்?”
“நான் இன்னைக்கு ஆல்யாவைப் பார்க்கப் போகணும், நீங்க வர்றீங்களாண்ணா?”
“இல்லைடா, அம்மாவைக் கூட்டிட்டுப் போ.”
“ஐயோ! என்னால வர முடியாது ரெஹான், பலகாரம் செய்ய ஆளுங்க வருவாங்க, நீங்க போயிட்டு வாங்க தம்பி.” எல்லோரும் பிஸியாக இருக்கவும் இளையவன் தனியாகப் போவதென்று முடிவெடுத்தான். ஆல்யாவைப் பார்க்க வேண்டும். தன்னிடம் இருக்கும் பரிசுப் பொதியை அவளிடம் கொடுக்க வேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் கரீமின் வீட்டிற்கு வந்திருந்தான் இளையவன்.
“வாங்க தம்பி, வாங்க வாங்க.” சல்மாதான் வரவேற்றார்.
“ரெஹான்! வாப்பா, என்னப்பா? வெள்ளைக்கார தொரை மாதிரி செவசெவேன்னு இருக்கே?” கரீமும் அப்போது வீட்டில்தான் இருந்தார். கையில் கல்யாண அழைப்பிதழ்கள் இருந்தது. மனிதர் கல்யாண வேலையில் மும்முரமாக இருக்கிறார் போலும்.
“மாமா, ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க மாமா, எனக்கு வீட்டுல ஒரு வேலையும் இல்லை, சும்மாதான் இருக்கேன்.” இஷானும் இல்லாத நேரத்தில் மாமாவிற்கு உதவிக்கரம் நீட்டினான்.
“இந்த இஷானைப் பார்த்தியாப்பா? மத்த வேலைகளை ஆளுங்களைப் போட்டுப் பார்த்துக்கலாம், ஆனா கல்யாணத்துக்குக் கூப்பிடும் போது நாமதானே நேர்ல போய் கூப்பிடணும்? நான் ஒரு வேலையைப் பார்த்தா அவனொரு வேலையைப் பார்க்கலாமில்லை? இப்பிடி ஒன்னுலயும் ஒட்டாம இருந்தா எப்பிடி?”
“மச்சானைப் போய் பார்த்தேன் மாமா.”
“ஏதாவது தப்பா நடந்துக்கிட்டானா ரெஹான்?” இவன் முடிக்கும் முன்பாகப் பாய்ந்து கொண்டு கேட்டார் சல்மா.
“இல்லை மாமி, நல்லாத்தான் பேசினாங்க, நேத்து நைட் அவங்க ரூம்லதான் தங்கினேன், மனசுல வருத்தம் இருக்கும் போல, ஆனாலும் கல்யாணத்துக்குக் கட்டாயம் வருவாங்க, எங்கூட வாங்க மச்சான்னு கூப்பிட்டேன், நீ போ, நான் வர்றேன்னு சொல்லிட்டாங்க.”
“அவன் கல்யாணத்துக்கு வந்தாலே போதும் தம்பி, என்னப் பண்ணுறோம்னு தெரியாம பண்ணுறான்.”
“ரெஹான் மச்சான்!” அப்போதுதான் இவன் சத்தம் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்தாள் ஆல்யா.
“வாங்க மதினி! எப்பிடி இருக்கீங்க?” எப்போதும் அவளை ஒருமையிலேயே அழைப்பவன் இன்றைக்கு மரியாதையாக அழைக்கவும் பெண் வெட்கப்பட்டது. கரீமும் சல்மாவும் புன்னகைத்தார்கள்.
“அடடே! எங்க மதினிக்கு வெட்கமெல்லாம் வருதுடா!” ரெஹான் பெருங்குரலில் சொல்லவும் சோஃபாவில் கிடந்த குஷனை எடுத்து அவனுக்கு இரண்டு அடிகள் வைத்தாள்.
“அது! இது வேணும்னா எங்க மதினிக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு!” அவன் மீண்டும் கேலி செய்தான்.
“ஆமா, அது என்ன கைல? மதினி, மதினின்னு சொன்னா போதாது, மதினிக்கு லண்டன்ல இருந்து என்ன கொண்டு வந்திருக்கீங்க?”
“நீ அதுலயே குறியா இரு!” என்றவன் கையில் இருந்த பையை நீட்டினான். உள்ளே என்ன இருக்கிறது என்றுகூட அவனுக்குத் தெரியாது. வாங்கிக் கொடுத்தவள் அதைச் சொல்லவுமில்லை. ஆல்யா மளமளவென எல்லாவற்றையும் பிரித்தாள்.
“மச்சான்! மைக்கல் கோர்ஸா? ஓ மை காட்!” பெண் வாயைப் பிளந்தாள். அழகானதொரு ஹேன்ட் பாக் இருந்தது. எதற்காக இந்தப் பெண் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை வாங்கியிருக்கிறாள் என்று உள்ளுக்குள் நினைத்தான் ரெஹான். ஹேன்ட் பாக் மாத்திரமல்ல, பர்ஃபியூம், கைக்கடிகாரம் என இன்னும் பல பொருட்களும் இருந்தன. அர்மானி வாட்ச் படு எடுப்பாக இருந்தது.
“எதுக்கு மச்சான் இவ்வளவு காஸ்ட்லியா வாங்கியிருக்கீங்க?” அவன் நினைத்ததையே பெண்ணும் கேட்டாள்.
“யாருக்கு வாங்கியிருக்கேன்? என்னோட மதினிக்குத்தானே?” இவன் பதிலில் பெண் இன்னும் கொஞ்சம் வெட்கப்பட்டது.
“குடிக்க ஏதாவது குடுத்தா நல்லா இருக்கும்.” அவன் மேலும் மேலும் அவளை வம்பிழுத்தான்.
“குடிக்க ஏதாவதா? இன்னைக்கு எங்க வீட்டுலதான் நீங்க சாப்பிடணும்.”
“இல்லை ஆல்யா, ரொம்ப நாளைக்கு அப்புறமா வீட்டுக்கு வந்திருக்கேன், அம்மா எனக்காக என்னெல்லாமோ சமைச்சு வெச்சிருக்காங்க, நாட்டுல இருக்கிற கொஞ்ச நாளையும் நான் அவங்கக்கூட செலவழிக்கணும்னு நினைக்கிறேன்.” பெரியவர்கள் இருவரும் அப்போது ஏதோ வேலையாக அப்பால் போகவும் இளையவளைக் கண்ணால் அருகில் அழைத்தான் ரெஹான்.
“என்ன சொல்றான் எங்கண்ணா? கிஃப்ட் எல்லாம் வாங்கிக் குடுத்தானாம்! அம்மா சொன்னதும் எனக்கு ஆச்சரியம் தாங்கலை, அம்மிணி சொன்னதும் மஹி கல்யாணத்தப்போ வேற ட்ரெஸ்ஸெல்லாம் போட்டானாம்! என்னங்கடீ நடக்குது இங்க?!”
“எனக்கும் ஆச்சரியம் தாங்கலை மச்சான், முதல்ல சம்மதமே சொல்லமாட்டாங்கன்னு நினைச்சேன், எங்கண்ணா ரெண்டு அடி போட்டதும் முடியாதுன்னு சொல்லுவாங்கன்னு நான் பயந்தா இவங்க அப்பிடியே தலைகீழா பதில் சொல்லிட்டுப் போறாங்க!”
“அனேகமா ஐயாக்கு உம்மேல ஏதோ லவ்வு வந்திருக்கும் போல!”
“யாரு? உங்கண்ணாக்கா?! அன்னைக்கு ஆஃபீஸ்ல போய் பார்க்கிறேன், படிப்பை விட்டு உன்னோட கவனம் வேற எங்கேயும் போகக்கூடாதுன்னு அட்வைஸ், இதுல அவருக்கு எம்மேல லவ்வு வந்துட்டாலும்!”
“அப்பிடியா சொன்னான்?! ஆனா வீட்டுல உம்பேச்சை எடுத்ததும் ஐயாவோட முகத்துல பல்ப் எரியுதே!”
“நம்புற மாதிரி ஏதாவது சொல்லுங்க.”
“அவன் பேச்சை விடு, ஊமைக்கொட்டான் மாதிரி அவன் பின்னாடி மச்சான், மச்சான்னு திரிஞ்சுட்டு உனக்கெப்பிடி எங்கண்ணா மேல இப்பிடியொரு எண்ணம் வந்துச்சு?! ஏன்டீ! மஹி கல்யாணப் பேச்சு வந்தப்பவும் நீ எதுவுமே சொல்லலையே! எங்கிட்டயாவது மனசுல என்ன இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?” இப்போது மட்டும் அவள் முகம் சோகத்தில் சுருங்கிப் போனது. எதையோ சொல்லத் தவிப்பவள் போல சில நொடிகளைச் செலவழித்தாள்.
“ரெஹான் மச்சான், அந்த நாட்களை என்னால நினைச்சும் பார்க்க முடியலை, அமர் மச்சானைப் பத்தின ஒரு எண்ணம் எனக்குள்ள இருக்குன்னு அப்ப எனக்கே தெரியாது, மச்சானைப் புடிக்கும், அவ்வளவுதான், அதுக்கு மேல எதையும் யோசிக்கலை, ஆனா வீட்டுல மஹி கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதும் மனசுக்குள்ள பிசைய ஆரம்பிச்சிடுச்சு, நமக்குச் சொந்தமானதை யாரோ தட்டிப் பறிச்சுக்கிட்டுப் போற மாதிரி வலிக்கத் தொடங்கிருச்சு, சொல்லவும் முடியலை, மெல்லவும் முடியலை.” என்றவள் கண்ணீர் வடிக்கவும் ரெஹான் உருகிப் போனான். அவனுக்குக் காதல் என்னவென்று தெரியும். அது கொடுக்கும் வலியும் புரியும்.
“சரி விடு, அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு போச்சே, ஒருவேளை… எங்கண்ணா சம்மதிக்கலைன்னா நீ என்னப் பண்ணியிருப்பே?”
“இதை உங்கண்ணாக்கிட்டயே நான் தெளிவாச் சொல்லிட்டேன், அவங்க இல்லைன்னா வேற யாரும் இல்லைன்னு சொல்லிட்டேன், அவங்க தயங்கின ஒரே விஷயம் வயசு வித்தியாசந்தானே, அது ஒரு மேட்டரா மச்சான்?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை, எங்கண்ணாக்கும் உங்கண்ணாக்கும் வேற வேலையில்லை.”
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்லுல நாருரிச்சிருக்கேன், இதுல எங்கண்ணா வந்து குட்டையைக் குழப்பினா எனக்கு எவ்வளவு ஆத்திரம் வரும் சொல்லுங்க?”
“ம்… எல்லாம் சொன்னாரு, உனக்கும் புத்தியில்லையாம், அமருக்கும் புத்தியில்லையாம், ஆனா போகப்போகப் புரிஞ்சுக்குவாரு.”
“கல்யாணதுக்கு வருவாராமா, மாட்டாராமா?”
“வருவாரு, வராம எங்கப் போகப்போறாரு?” இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே இஷான் தனது அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தான்.
***
அன்று அமர், ஆல்யாவின் திருமண நாள். அழகாக விடிந்த காலைப் பொழுதில் முழங்கை வரை மருதாணி இட்டுக் கொண்டிருந்தாள் மணப்பெண். கல்யாணத்திற்கு முன்பாகச் செய்ய வேண்டிய பல சடங்குகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் அமர் வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
“தேவையில்லாத பழைய சம்பிரதாயங்கள் வேணாம் மாமா, எனக்கு அதுல இஷ்டமும் இல்லை.” கரீமிடம் உறுதியாக மறுத்துவிட்டான். திருமண நாளுக்கு முதல் நாள் பெண்ணின் சகோதரிகள் மாப்பிள்ளை வீடு சென்று மணமகனுக்கு மருதாணி போடும் பழக்கம் இவர்கள் பக்கத்தில் உண்டு. முன்பெல்லாம் நிஜமாகவே மாப்பிள்ளைக்கு மருதாணி வைத்து விடுவார்களாம். பிற்பாடு அந்த மரபு மாறி மாப்பிள்ளைக்கு பர்ஃபியூம் அடித்து விடுவார்கள். அமர் இந்த வில்லங்கங்கள் எதிலும் மாட்டிக் கொள்ளவில்லை.
மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு (அஸ்ர் தொழுகை) பள்ளிவாசலில் நிக்காஹ் வைத்திருந்தார்கள். அதன்பிறகு மாலையில் வரவேற்பு, பிற்பாடு இரவு விருந்து. ரெஹான் லண்டனிலிருந்து வரும்போதே தன் அண்ணாவுக்குத் தனது திருமணப் பரிசாக நல்ல கருநீலத்தில் ஒரு சூட் கொண்டு வந்திருந்தான். அண்ணா அதைத்தான் உடுத்த வேண்டும் என்று அவன் வற்புறுத்தவும் அமர் அதையே நிக்காஹ்விற்கு உடுத்தினான்.
பள்ளிவாசலில் ஆண்கள் கூடியிருந்தார்கள். கரீமின் நண்பர்கள், அமரின் நண்பர்கள் என பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. கூட்டத்தின் முன்பாக காதி (விவாக பதிவாளர்) அமர்ந்திருந்தார். அவரின் எதிரே அமர், கரீம், மற்றும் குடும்பத்தார் அமர்ந்திருந்தார்கள். இஷான் திருமணத்திற்கு வந்திருந்தாலும் பெரிதாக எந்த வேலையிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. தங்கையின் திருமணம். ஒரு தமையனாக அதில் கலந்து கொண்டான். அவ்வளவுதான். அதற்கு மேல் வீட்டினரும் அவனை எதற்கும் எதிர்பார்க்கவில்லை. அவன் மனதைப் புரிந்தவர்கள் போல நடந்து கொண்டார்கள்.
“பொண்ணுக்கு மஹரா என்ன குடுக்கிறீங்கத் தம்பி?” இன்னாருடைய மகளை, இன்னாருக்குத் திருமணம் செய்யப்படுகிறது என்ற முக்கிய விடயங்கள் படிக்கப்பட்ட பின்னால் காதியாக அமர்ந்திருந்தவர் அமரிடம் கேட்டார். அமர் சொன்ன பதிலில் அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஏனென்றால் அவன் மஹராகச் சொன்ன ப்ளாக் ஆடியின் விலை இலங்கை ரூபாக்களில் ஒன்றரைக் கோடி பெறும்.
“அமர்! என்னப்பா இது?!” இது கரீம். ரெஹானுக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. இஷான் மாத்திரம் ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவனது சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது. இது காதல் திருமணமல்லாது வேறு என்ன? காதல் இல்லாமலா ஒருவன் இத்தனைப் பெரிய விஷயத்தைச் செய்வான்.
“என்னாச்சு மாமா? ஆல்யாக்கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டேன், அவதான் சொன்னா.”
“அவ சின்னப் பொண்ணு, அவளுக்கு என்னப்பா தெரியும்? சின்னப்புள்ளைத் தனமா ஏதோ கேட்டிருக்கா.”
“உங்கப் பொண்ணு கேட்டதை நான் குடுக்கணும், அதைக் குடுக்கத் துப்பில்லைன்னா நான் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்?” அந்தப் பதிலில் திருப்தியுற்ற காதி தன் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். இன்ன தொகை மஹராகக் கொடுக்கப்பட்டு இந்தத் திருமணம் முறைப்படி நடப்பதை அவர் உறுதி செய்தார். மணமகனும் பெண்ணின் தந்தையும் கையொப்பமிட சாட்சிகளும் கையொப்பமிட்டார்கள்.
அன்று மாலை அந்த மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லாப் பொறுப்புகளையும் ரெஹான் தன் வசம் எடுத்திருக்க அன்றைக்கு விழா நாயகனாக அமர் மணப்பெண்ணுக்கு அருகே நின்றிருந்தான். இடையிலிருந்து கடல் நுரையெனத் திரண்டிருந்த வெண்ணிற கவுன் அணிந்திருந்தாள் பெண். அவள் நின்றிருந்த இடம் முழுவதையும் அவள் ஆடையே நிரப்பியிருந்தது. கையில் கருஞ்சிவப்பு நிற ரோஜா மலர்கள். அருகே நின்றிருந்த அமரின் கருநிற சூட்டிலும் அவள் கையிலிருந்த அதே நிற ஒற்றை ரோஜா!
“ஆண்டவா! எங்கண்ணே பட்டுரும் போல இருக்கே!” இன்பத்திற்கு இலேசாக உடம்பெல்லாம் நடுங்கியது. உண்மையிலேயே அந்த இணை பார்க்க அத்தனை அழகாக, கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. குழந்தைத்தனம் எதுவும் இல்லாமல் ஆல்யா பெரிய பெண்போல, அமருக்குப் பொருத்தமாக அவனருகில் நின்றிருந்தாள். கண்களால் மகன் தன்னை அழைக்கவும் அவசரமாக மணமேடைக்கு வந்தார் இன்பம்.
“என்ன தம்பி?”
“ஆல்யா என்ன உடுத்தப் போறான்னு உங்களைப் போய் பார்க்கச் சொன்னேனா இல்லையா? பாருங்க, அவ முடி அத்தனையும் வெளிய தெரியுது.” அமர் இளையவளுக்குத் தெரியாமல் குறைப்பட இன்பத்திற்கு ‘ஐயோ’ என்றிருந்தது. என்ன இந்தப் பையன் இப்படிப் பேசுகிறான் என்று தலையில் அடித்துக் கொண்டவர் மெதுவாக அங்கிருந்து நழுவிவிட்டார்.
“என்னம்மா ஆச்சு?” அண்ணா, அம்மாவை அழைத்து எதையோ முணுமுணுத்ததைத் தம்பி கவனித்திருந்தான்.
“அவனவன் கல்யாணத்துக்கு முன்னாடி ஃபோட்டோ ஷுட் அது இதுன்னு என்னெல்லாமோ பண்ணுறான், உங்கண்ணா ஆல்யாவோட ட்ரெஸ்ஸை குறை சொல்றாரு.” ரெஹான் இதை எதிர்பார்த்திருந்தான். ஆல்யாவின் ஆடை வெகு பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கவுன் என்றாலும் எங்கெல்லாம் மறைக்க வேண்டுமோ அங்கெல்லாம் மிகவும் அழகான முறையில் பிறரைக் கவராத வகையில் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. தலைக்கு வேல் (veil) அணிந்திருந்தாள். ஆனால் அதுவும் அழகான மெல்லிய லேஸ் துணி என்பதால் அவளது சிகையலங்காரம் அத்தனை அழகாகத் தெரிந்தது. டியாராவும் அணிந்திருந்தாள். பெண்ணைப் பார்ப்பவர்கள் அவள் அழகிதான் என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.
“அண்ணா சொல்றதுல ஏதாவது தப்பிருக்கா?” முகம் முழுவதும் புன்னகையோடு இளைய மகன் கேட்க இன்பம் நெளிந்தார். ரெஹானுக்குச் சிரிப்பு வந்தது. அவனது அண்ணாவின் திருமணத்திலாவது இந்தளவு கேளிக்கைகளுக்கு இடம் இருக்கிறது. ஆனால் அவனது திருமணம்?! அகிலத்தாருக்கெல்லாம் வழிகாட்டியாக வந்த நபிகளாரின் வீட்டுத் திருமணம் போலத்தான் அவனது திருமணம் நடக்கவிருக்கிறது என்று சொன்னால் அம்மாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?!
“இன்னைக்கு ஒரு நாள்தானேப்பா!” மகனிடம் சமாதானம் சொன்னார் அம்மா.
“தப்பும்மா, இந்த ஒருநாளைக்காக மாமா காசைத் தண்ணி மாதிரி செலவு பண்ணியிருக்காரு, இதே பணத்தை நாலு இல்லாதவங்களுக்குக் குடுத்திருக்கலாம், கல்யாணத்தை சிம்பிளா பண்ணியிருக்கலாம்.” இதற்கு இவன் அண்ணாவே பரவாயில்லை என்பது போல ஒரு பார்வைப் பார்த்துவிட்டு இன்பம் அப்பால் போய்விட்டார். ரெஹான் சிரித்துவிட்டான்.
மஹிராவும் இஷானும் அந்தக் கல்யாணத்தில் பட்டும் படாமலும் நடந்து கொண்டார்கள். மணமேடைக்குச் சென்று மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். தங்கள் இரு மக்களும் யாரோ போல இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வது பெற்றோருக்கு வருத்தமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆல்யாவும் அதை உணர்ந்திருந்தாள். அண்ணாவைக் கூட அவள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் மஹிராவின் திருமணத்தின் போது இவள் எத்தனைத் தூரம் அவளோடு கூட இருந்திருக்கிறாள்! ஆடை வடிவமைப்பிலிருந்து ஒவ்வொன்றைத் தெரிவு செய்யும் போதும் இவள் கூட அலைந்திருக்கிறாள். ஆனால் தமக்கை தன் தங்கைக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
“என்னாச்சு?” அமரின் கேள்வி அவளைத் திடுக்கிட வைத்தது. தன்னை அவன் கவனிக்கிறானா?! ஒற்றைப் புருவம் உயர்த்தி இப்போதும் அவன் என்னவென்று கேட்க அவள் புன்னகைத்தாள்.
“ஒன்னுமில்லை.” அவள் புன்னகைத்து மழுப்பினாலும் அவன் அதை நம்பவில்லை என்று அவன் பார்வையே சொன்னது. நிக்காஹ்வின் போது பெண்ணின் தந்தை மணமகனுக்கு ஏதாவது பரிசளிப்பது அவர்கள் வழக்கம். தங்கம் ஆண்களுக்குத் தடுக்கப்பட்ட ஒன்று என்பதால் எல்லோரும் வெள்ளியாலான மோதிரம் அணிவிப்பார்கள்.
“வேணாம்பா, நாம வாட்ச் வாங்கலாம், அது இன்னும் நல்லா இருக்கும்.” ஆல்யா சொன்ன யோசனை சரியாகப் படவே கரீம் விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை இளைய மருமகனுக்கு வாங்கியிருந்தார். இப்போது அந்தக் கைக்கடிகாரத்தை அவன் கையில் பார்க்கவும்,
“டிசைன் புடிச்சிருக்கா?” என்றாள் பெண்.
“நீங்கதான் செலெக்ட் பண்ணினீங்களோ? நல்லாருக்கு.” அவன் வார்த்தைகள் மட்டுமல்ல, அவனருகில் இப்படி நிற்பது கூட அவளைப் பேரின்பப்படுத்தியது. அவளது எத்தனை நாள் கனவிது! கருகிப் போய்விடுமோ என்று அவள் பயந்த அவளது கனவு இன்று பூத்துக் குலுங்குகிறது. ஆல்யா சந்தோஷத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் கனவுகள் அனைத்தையும் நனவாக்கித் தந்தவன் மேல் காதல் பொங்கிப் பிரவாகித்தது.
“ஹாய் சார்.” ஷிவா இவளது பல்கலைக்கழக நண்பர்களோடு மேடையேறிக் கொண்டிருந்தான். அதன்பிறகு அந்த இடமே கலகலவென மாறிப்போனது.
“ஆஹா! நம்ம பொண்ணு இத்தனை அழகா என்ன? இது இத்தனை நாளும் தெரியாமப் போச்சே!” ஷிவாவின் வார்த்தைகள் அமரை இலேசாகக் கோபப்படுத்தின. ஆனாலும் ஒரு சகோதர வாஞ்சையோடுதான் அவன் சொல்கிறான் என்பதால் அமர் அமைதியாகப் புன்னகைத்தான்.
எல்லோருமாகச் சேர்ந்து தங்கள் நண்பிக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக வாங்கி வந்திருந்தார்கள். அதை அமர் கையில் கொடுத்து ஆல்யாவிற்குப் போடவும் செய்தார்கள். அவள் கரம்பிடித்து விரலில் மோதிரத்தை அணிவித்த பிறகும் சில நொடிகள் தன் கட்டை விரலால் அவள் விரல்களை அவன் தடவிக் கொடுத்ததை அமர் உணரவில்லை. ஆனால் பெண் முழுதாகச் சிலிர்த்தது!




