அத்தியாயம் 11
அத்தியாயம் 11
கல்யாண கலாட்டா இனிதே நிறைவுபெற விருந்தினர்கள் அனைவரும் கலைந்து போயிருந்தார்கள். அமரின் கேட்டரிங் குழு தங்கள் முதலாளியின் கல்யாணத்தில் ஜமாய்த்திருந்தார்கள். அன்றைய கல்யாண விருந்து படு அமர்க்களமாக இருந்தது. விருந்துண்ட அனைவரும் திருப்தியாக வீடு சென்றது எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மணமகனாக மேடையில் நின்றிருந்தாலும் சாப்பாடு பரிமாறும் போது அமரின் கவனம் முழுவதும் பந்தியிலேயே இருந்தது. தன் திருமண பந்தியில் எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.
“இதுதானா? இதுதானா? எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா?” அந்த ப்ளாக் ஆடியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இது ரெஹானின் வேலை. மாப்பிள்ளையையும் பெண்ணையும் பின்னால் உட்கார வைத்து அவன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். மண்டபத்திலிருந்து கிளம்பி அமரின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். திருமணம் முடிந்ததும் பெண் வீடு செல்வதுதான் அவர்களது வழக்கம். ஆனால் அமர் அதை மாற்றியிருந்தான்.
“மாமா, கல்யாணம் முடிஞ்சதும் நானும் ஆல்யாவும் நேரா எங்க வீட்டுக்கே போயிடுறோம், ஏற்கனவே நிறைய லீவு எடுத்துட்டேன், இதுக்கு மேலயும் என்னால வீட்டுல தங்க முடியாது.”
“உன்னோட வசதிப்படி எப்பிடி வேணும்னாலும் செய் அமர், எங்களுக்கு அதுல எந்த ஆட்சேபனையும் இல்லை.”
“எப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்பெல்லாம் நான் ஆல்யாவை உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றேன் மாமா.”
“சரிப்பா.” கரீம் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அமர் அப்படியெல்லாம் பெரிதாக லீவு எதுவும் எடுத்திருக்கவில்லை. அவனுக்கு இப்போது கரீமின் வீட்டிற்குப் போவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரு காரணத்தைக் கண்டு பிடித்திருந்தான். பெரியவருக்கும் அது புரிந்திருக்கும் போலும். இவன் சொன்னதை ஏற்றுக் கொண்டார்.
திருமணத்தின் போது அமர், மஹிராவையும் இஷானையும் கவனித்திருந்தான். இருவருமே ஏனோ தானோவென்றுதான் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த மனநிலையில் இருப்பவர்களை இப்போது தவிர்ப்பதுதான் நல்லது என்று இவனுக்குத் தோன்றியது.
“இவன்தானா? இவன்தானா? மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா?” பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அமரின் வீட்டிற்கு அன்றே போகவேண்டும் என்று அம்மா சொன்னபோது ஆல்யா ‘அப்பாடா!’ என்றுதான் உணர்ந்தாள். அவளுக்குமே இப்போது தன் கூடப்பிறந்தவர்களோடு அமர் இருப்பதில் அத்தனை உடன்பாடில்லை.
“ஏன் ஆல்யா?” காரை ஓட்டியபடி பேச்சை ஆரம்பித்தான் ரெஹான்.
“என்ன மச்சான்?”
“இந்தக் கார் இப்போ யாரோடது?” அவன் கேட்ட கேள்வி அவளுக்குப் புரியவில்லை. தன்னருகில் அமர்ந்திருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“கார் யாரோடதுன்னா… அமர் மச்சானோடது, உங்களுக்கு ஒரு நாளைக்கு ட்ரைவர் வேலை பார்க்கக் குடுத்திருக்காங்க, அதுக்காக நீங்க பெருசா எந்தக் கற்பனையும் பண்ணிக்காதீங்க.” சொன்னவளை ஒரு தினுசாகத் திரும்பிப் பார்த்தான் ரெஹான்.
“இது எனக்குத் தேவைதான்.” தம்பி வாய்க்குள் முணுமுணுத்தது அண்ணனுக்கும் கேட்டது. அமர் சிரித்தான்.
“உனக்கு மஹரா எங்கண்ணா என்ன குடுத்தாங்க?” மீண்டும் கேள்வி கேட்டான் இளையவன்.
“தெரியாது, யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லலை மச்சான்.” என்றவள் இப்போது மீண்டும் அமரைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீ எங்கிட்ட என்ன கேட்டே?” இது அமர். இப்போது பெண் வெட்கத்துடன் சிரித்தது.
“நான் சும்மா விளையாட்டா கேட்டேன் மச்சான், அதுக்காக நீங்க இந்தக் காரை எனக்குத் தூக்கிக் குடுத்துருவீங்களா?”
“நீ விளையாட்டா கேட்டிருக்கலாம், ஆனா நான், நீ கேட்டதைத்தானே குடுக்க முடியும்!” அமரின் பேச்சு புரியாமல் திருதிருவென விழித்தாள் பெண்.
“நீங்க என்ன மச்சான் சொல்றீங்க?!”
“ஆங், சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொல்றாங்க.” ஆச்சரிய மிகுதியால் அவள் சாய்ந்து உட்கார ரெஹான் பதில் சொன்னான்.
“நிஜமாவா?! ரெஹான் மச்சான் சொல்றது நிஜமா? நான் கேட்டேன்னு…” அதற்கு மேல் பெண்ணுக்கு வார்த்தைகள் வரவில்லை. கண்களில் நீர் திரண்டு போனது.
“உஷ்…” அமர் அவளை அமைதிப்படுத்திய போதும் அவள் கண்ணீர் அடங்கவில்லை. இவள் அழுகிறாள் என்று தெரிந்ததும் ரெஹான் வேண்டுமென்று காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இவளைப் பார்த்தபடி திரும்பி அமர்ந்தான்.
“ஐயையோ! கல்யாணப் பொண்ணு நல்ல நாளும் அதுவுமா அழுறாங்களா?” என்றான் கேலி போல. அவளுக்கு இப்போது கோபம் வரவும் அவன் அமர்ந்திருந்த சீட்டில் அடித்தாள்.
“ஆல்யா!” இது அமர்.
“உங்க தம்பி இன்னொரு வார்த்தைப் பேசினா அடுத்த அடி அவங்களுக்குத்தான் விழும்.” என்றாள் தேம்பியபடி.
“ரெஹான், எதுக்கு இப்போ அவகிட்ட வம்பு பண்ணுறே? அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க, சீக்கிரமா போ.” அண்ணனின் அதட்டல் வேலை செய்தது. புன்னகைத்தபடி இளையவன் காரை ஓட்ட ஆல்யா கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவளால் இதை நம்பவே முடியவில்லை. அமருக்குத் தன்மேல் இத்தனைப் பாசம் இருக்கிறதா? தான் கேட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக அவன் அத்தனை நேசிக்கும் அவனது ப்ளாக் ஆடியைத் தனக்குக் கொடுத்துவிட்டானா?! நினைக்க நினைக்க அவளுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியது. கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க அவள் கையை உயர்த்திய போது அதை மெதுவாகப் பற்றினான் அமர். அதற்கு மேல் அவர்களால் அப்போது எதுவும் பேசிக்கொள்ள முடியவில்லை.
அந்த ப்ளாக் ஆடி வீடு வந்து சேர்ந்த போது அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள். விருந்தினர்கள் கலைந்து போயிருந்தாலும் குடும்பத்தினர் அமரின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சல்மாவும் அப்போது அங்குதான் இருந்தார். தங்கள் வீட்டிற்கு வரவேண்டிய மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்குப் போவது அவருக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் அமர் நினைத்த காரணங்களில் நியாயம் இருந்ததால் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பழைய வீடு இன்னும் அப்படியே இருந்தது. அதற்குப் பின்னால் புதிதாக அவர்கள் கட்டிய வீடு ஜம்மென்று நின்றிருந்தது. ஆல்யா இப்போதுதான் புதிய வீட்டைப் பார்க்கிறாள். அவள் கண்களில் மகிழ்ச்சியைக் காணவும் அமர் முகத்திலும் ஒரு பரவசம் தோன்றியது.
“என்ன மதினி? புது வீட்டைப் புடிச்சிருக்கா? நீங்க வர்றதுக்கு முன்னாடி ரெடியாகிடணும்னு எங்கண்ணா அவசர அவசரமா கட்டின வீடு, எப்பிடி இருக்கு?” இது ரெஹான்.
“நல்லா இருக்கு, ஆனா எனக்கு முதல்ல உங்கப் பழைய வீட்டுக்குத்தான் போகணும்.”
“எதுக்கு?” ரெஹானின் கேள்விக்குப் பதில் சொல்லாதவள் அவர்களது பழைய வீட்டிற்குள் போனாள். அந்த வீடும் ஆட்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்பதால் திறந்தே இருந்தது. உள்ளே வந்த ஆல்யா அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த அமரின் பெற்றோரின் படங்களுக்கு முன்பாக வந்து நின்றாள். அவள் பின்னோடு வந்த அமர் இதை எதிர்பார்க்கவில்லை. அந்தப் படங்களையே அமைதியாக சில நொடிகள் பார்த்திருந்தவள் புன்னகையோடு அமரிடம் திரும்பினாள்.
“அமர் மச்சான், உங்கம்மாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“ம்…” அவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.
“ஆனா எனக்கு அவங்க முகம் மறந்து போச்சு, உங்கப்பாவை நல்லா ஞாபகம் இருக்கு, இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும், எங்கம்மா உங்க வீட்டைப் பத்தி அடிக்கடி எங்க வீட்டுல பேசுவாங்க, உங்கப்பாக்கு உங்கம்மா மேல அவ்வளவு பாசமாம், அவங்களைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்புடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம், உங்கம்மா தவறினப்போ அவங்களை நினைச்சு வருத்தப்பட்டவங்களை விட உங்கப்பாவை நினைச்சுத்தான் நிறையப் பேர் கவலைப்பட்டாங்களாம், இந்த மனுஷன் எப்பிடி இந்த இழப்பைத் தாங்கிக்கப் போறார்னு.” தன் போக்கில் பேசியவள் படத்தில் இருந்த தன் மாமியாரின் முகத்தைத் தடவினாள்.
அமர் கொஞ்சம் ஸ்தம்பித்தாற் போல நின்றுவிட்டான். எப்போதும் அவனோடிருக்கும் அம்மா, அப்பாவின் நினைவுகள்தான். ஆனால் இன்றைக்கு ஆல்யா பழையவற்றை அவனுள் கிளறிவிட்டாற் போல இருந்தது. வலியைக் கொடுப்பதற்கு மாறாக அந்த நினைவுகள் அவனுக்குள் சுகத்தை விதைக்கவே அதைக் கொடுத்தவளைப் பார்த்தான். அவன் அம்மாவின் முகத்தையே இன்னும் பார்த்திருந்தாள்.
“இப்பிடியொரு அன்பு கிடைக்க உங்கம்மா குடுத்து வெச்சிருக்கணுமில்லை?” என்றவள்,
“இப்போ உங்க புது வீட்டைப் பார்க்கலாமா?” என்றாள். அதற்கு மேல் அமரும் எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு புது வீட்டிற்கு வந்தான்.
வரவேற்பறை நல்ல விசாலமாக இருந்தது. வரவேற்பறையின் இரண்டு பக்கத்திலும் அறைகள் தெரிந்தன. பின்னால் சமையல்கட்டு இருக்கும் போலும். இடப்பக்கமாக இருந்த அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அமர். அந்த அறை குளியலறையுடன் கூடியதாக இருந்தது. பெரிய கட்டில், அலமாரி என அனைத்தும் இருந்தன. குளியறையின் கதவு தவிர அங்கே இன்னொரு கதவும் இருந்தது. அதை அவன் திறக்கவும் ஆச்சரியமாகப் பார்த்தாள் பெண்.
“இது உன்னோட ரூம்.” அவன் சொல்லவும் அங்கே போனாள் பெண். அவனது அறையில் இருந்தது போல சகல வசதிகளும் அந்த அறையிலும் இருந்தன. கூடவே அவள் படிப்பதற்காக ஒரு மேஜை நாற்காலியும் போடப்பட்டிருந்தது.
“இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியலை, ஏதாவது வேணும்னா சொல்லு, வாங்கலாம்.” சொல்லிவிட்டு அவனது அறைக்குள் போய்விட்டான். ஆல்யா அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள். வெளியே பேச்சுக் குரல்கள் கேட்டன. ஆனால் யாரும் அவர்களை வந்து தொந்தரவு செய்யவில்லை. அமர் அடுத்த அறையில் நடமாடும் சத்தமும் கேட்கவில்லை. ஒருவேளை அவன் வெளியே போயிருக்கலாம்.
அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு முன்பாகப் போய் அமர்ந்தாள் பெண். அவளது பிம்பம் கண்ணாடியில் அத்தனை அழகாக இருந்தது. சொல்லப்போனால் அந்த நொடி பெண் கொஞ்சம் பெருமையாகவே உணர்ந்தாள். அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாகக் கழட்ட ஆரம்பித்த போதும் மனது அமரையே சுற்றி வலம் வந்தது. தான் கேட்ட ஒரே காரணத்துக்காக அவனது காரைத் தூக்கிக் கொடுக்கும் அளவிற்கு அவன் மனதில் அவள் இருக்கிறாள். ஆனால்… அதற்கு மேல் போக அவன் தற்போது நினைக்கவில்லை என்பதை அவனது நடவடிக்கைகள் காட்டிக் கொடுத்தன. ஆல்யா அதைத் தவறென்றும் நினைக்கவில்லை. அவன் படிப்புதான் பாதியிலேயே நின்று போனது. அவள் அப்படி இருக்கக் கூடாது என்று அவன் நினைப்பதையும் குறை சொல்ல முடியாது.
விலையுயர்ந்த ஆபரணங்கள் என்பதால் அவை அனைத்தையும் அங்கிருந்த அலமாரியில் பத்திரப்படுத்தியவள் பாத்ரூம் கதவைத் திறந்தாள். வெள்ளையும் கறுப்புமாக அந்த இடம் பளபளத்தது. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறான்.
அணிந்திருந்த ஆடையைக் களைந்துவிட்டு, அவசரமான ஒரு குளியலோடு இரவு ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். இதற்கு மேல் அவளது அறைக்குள் அவன் வருவான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அதுவரைக்கும் அவள் சந்தோஷப்பட வேண்டும். இதே அமரை அவள் அக்கா திருமணம் செய்திருந்தால் அவள் என்ன பாடுபட்டிருப்பாள்!
ஆனாலும் ஆசை வைத்த இளமனது ஏதேதோ கற்பனைகளில் இறங்கத்தான் செய்தது. விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் ஏறி அமர்ந்தவள் இலேசாகச் சாய்ந்து கொண்டாள். இன்றைக்கு அவன் அணிவித்த மோதிரம் அவள் விரலில் இருந்தபடி அவளைப் பார்த்தபடி கண்சிமிட்டியது. மோதிரத்தை அணிவித்த பிற்பாடு அவன் கட்டை விரல் அவள் விரல்களை வருடிக் கொடுத்ததே! அதை அவன் உணர்ந்து செய்தானா? இல்லை… அது இயல்பாக நடந்ததா?! கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் ஆல்யாவிற்குப் புரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அவள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அவள் ஆசைப்பட்டபடி அமருடனான அவள் திருமணம் இனிதே நிறைவுபெற்றிருக்கிறது. ஆனால் அந்த அமர் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் இருவருக்குமான இந்த வாழ்க்கை வட்டத்திற்குள் அவனை அவளால் இழுக்க முடியாது. அவனாக வரவேண்டும். அதுவரை அவள் பொறுத்திருக்க வேண்டும். அது ஒன்றும் அத்தனை சிரமமான காரியமும் இல்லை. ஏதேதோ எண்ணமிட்டபடி கண்ணயர்ந்தாள் பெண். சிறிது நேரத்தின் பின் இரு அறைகளுக்குமான இடைக்கதவில் சாய்ந்த படி அவன் அவளையே பார்த்திருந்ததை அவள் அறியவில்லை. சுகமான தூக்கத்தில் இருந்தாள் பெண்.
***
அடுத்தநாள் காலை அழகாக விடிந்திருந்தது. புதிய இடம் என்ற எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஆல்யா நன்றாகத் தூங்கியிருந்தாள். கல்யாண வீடு என்பதால் ஒன்றிரண்டு பேச்சுக் குரல்கள் இப்போதும் வெளியே கேட்டன. கட்டிலை விட்டெழுந்தவள் தனக்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போனாள். அந்த அறையில் இன்னொரு கதவும் இருந்தது. வீட்டின் சமையல்கட்டுப் பக்கமாக அது திறக்கும் என்பது இவளது எண்ணம். ஆனால் அந்தக் கதவைத் திறந்து கொண்டு இவளால் வெளியே போக முடியாது. அப்படியென்றால் அமர் வரும்வரைக்கும் இவள் காத்திருக்க வேண்டுமா?!
ஆனால் அவளை, அவன் அதிகம் சோதிக்கவில்லை. குளியலை முடித்துக்கொண்டு அவள் வெளியே வரும்போது அவனும் இவளது அறைக்குள் இடைக்கதவு வழியாக வந்து கொண்டிருந்தான். அந்த இடைக்கதவு எப்போதும் திறந்துதான் கிடக்கிறது என்பதை அவசரமாக அவள் மனது குறித்துக் கொண்டது. சல்வாரை மாத்திரம் குளியலறைக்குள் எடுத்துச் சென்றவள் துப்பட்டாவைக் கட்டிலில் போட்டுவிட்டுப் போயிருந்தாள். டவலால் தலையைத் துவட்டியபடி வந்த பெண் அப்போது அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவசர கதியில் துப்பட்டாவை எடுத்தவள் அதைத் தோள்களில் போட்டுக் கொண்டாள். அவனுக்கும் அவளது இந்தக் கோலம் புதிது. எப்போதும் அவளை முக்காட்டிலேயே பார்த்திருக்கிறான்!
“செல்லுங்க மச்சான்.” சட்டென்று பெண் நிலைமையைச் சீராக்கியது. அமரும் தன்னைச் சுதாரித்துக் கொண்டாலும் அவனது கண்கள் அவளை அளவெடுக்கத் தவறவில்லை.
“ஆல்யா, புது இடம், நல்லா தூக்கம் போச்சா?”
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை மச்சான், நல்லாத் தூங்கினேன்.” அவளது கண்களே அதற்குச் சாட்சி கூறவும் அமர் இலகுவாக உணர்ந்தான்.
“ரெடி ஆகிட்டியா?”
“ம்…”
“ரெண்டு மூனு நாளைக்கு அந்த டோரை யூஸ் பண்ணாதே, என்னோட ரூம் வழியா வெளியே போ என்ன?”
“சரி மச்சான்.” அவன் நோக்கம் அவளுக்கும் புரிந்தது.
“இன்னைக்கு நம்ம வீட்டுல எல்லாருக்கும் லன்ச், ஆளாளுக்கு ஒவ்வொன்னா உங்கிட்ட ஏதாவது கேட்பாங்க, எதையாவது உளறிடக்கூடாது.”
“ம்ஹூம்.”
“நான் என்னோட ரூம்ல வெயிட் பண்ணுறேன், நீ ரெடியாகிட்டு வா.” என்றவன் அப்பால் போய்விட்டான். ஆல்யா மளமளவென கூந்தலைப் பின்னி, நகைகள் சிலவற்றை அணிந்து கொண்டாள். முகத்திற்கு எப்போதும் போடும் க்ரீமைத் தடவிக்கொண்டவள் கண்களுக்கு இலேசாக மை இட்டுக் கொண்டாள். இவள் அவனது அறைக்கு வந்த போது காகிதங்கள் சிலவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
“நீ எப்போ யூனிக்குப் போகணும்?”
“அடுத்த வாரம் போனா போதும்.”
“நல்லது, ஆனா எனக்கு நாளைக்கு ஒரு கல்யாண வீடு இருக்கு, என்னால அப்பிடியெல்லாம் லீவு எடுக்க முடியாது.”
“எதுக்கு இப்போ லீவு? அதான் வீட்டுல மாமி, ரெஹான் மச்சான் எல்லாரும் இருப்பாங்கல்லை? அதோட எனக்கும் நோட்ஸ் எடுக்கிற வேலை இருக்கு மச்சான், லைப்ரரி புக்ஸ் கொண்டு வந்திருக்கேன்.”
“வெரி குட், டைம வேஸ்ட் பண்ணாம ஏதாவது பண்ணு, வெளியே போகலாமா?”
“ம்…” அவள் தலையை ஆட்டவும் இருவரும் வெளியே வந்தார்கள். இவர்களைக் கண்டதும் இன்பத்தின் முகம் மலர்ந்து போனது.
“வாம்மா, டீ குடிங்க தம்பி.” என்று வரவேற்றார். சாப்பாட்டு மேசையில் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
“ரெஹான் எங்கம்மா?”
“சின்னவரு இன்னும் தூங்குறாரு.”
“விருந்துக்கான எல்லா வேலையையும் இப்பவே ஆரம்பிக்கச் சொல்லிட்டேம்மா, இன்னும் கொஞ்ச நேரத்துல பழைய வீட்டுக்கு ஆளுங்க எல்லாரும் வந்திடுவாங்க, ரெஹானை அதை என்னன்னு பார்க்கச் சொல்லுங்க.”
“உங்களுக்கு ஏதாவது வெளி வேலை இருக்கா தம்பி?”
“நாளைக்கு ஒரு கல்யாண வீடு இருக்கு, அந்த வேலைகளைக் கொஞ்சம் கவனிக்கணும்.”
“அப்போ நீங்க சாப்பிடுங்க தம்பி.” வெளி வேலைகள் இருந்தால் காலை ஆகாரத்தை உண்டுவிட்டுத்தான் அமர் வெளியே போவான்.
“நீயும் சாப்பிடு ஆல்யா.”
“இல்லை, நான் இப்போ டீ குடிக்கிறேன், லேட்டா சாப்பிட்டுக்கிறேன்.” இடியாப்பமும் கோழிக்கறியும் இருந்தது. கூடவே தேங்காய் சம்பல். நல்ல காரசாரமாக இருந்தது.
“விருந்தாளிங்க வருவாங்க, நீங்க இல்லைன்னா நல்லா இருக்காது தம்பி.”
“புரியுதும்மா, சீக்கிரமா வந்திடுவேன்.” இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கரீமின் கார் உள்ளே நுழைந்தது. அம்மா, அப்பாவைக் கண்டதும் இளையவள் முகத்தில் புன்னகை. அவசரமாக எழுந்தவள் அவர்களை நோக்கிப் போனாள். இன்பமும் வாசலுக்குப் போய் வந்தவர்களை வரவேற்றார்.
“வாங்க வாங்க.”
“அமர், வெளியே கிளம்பிட்டியா?” கேட்டபடி வந்த கரீம் இவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
“ஒரு சின்ன வேலை இருக்கு மாமா, முடிச்சிட்டு வந்தர்றேன்.” என்றவன் அவருக்கும் ஒரு ப்ளேட்டை எடுத்து வைத்தான்.
“சாப்பிடுங்க மாமா.” அவன் சொன்னதும் எந்த பந்தாவும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தார் கரீம். ஆல்யா ஓடிவந்து அப்பாவிற்குப் பரிமாறினாள்.
“மாமி, நீங்களும் சாப்பிடுங்களேன்.”
“இல்லைப்பா, நீங்க சாப்பிடுங்க.” என்ற சல்மா சோஃபாவில் இன்பத்தோடு அமர்ந்து கொண்டார்.
“ரெஹான் எங்க? ஆளைக் காணோம்?”
“ஐயா தூங்கிறாரு, லண்டன் டைமுக்கு எந்திரிச்சு லண்டன் டைமுக்குத் தூங்குறாரு.” அமரின் பதிலில் எல்லோரும் சிரித்தார்கள்.
“அமர், கல்யாணத்துக்கு என்னால எல்லாரையும் கூப்பிட முடியலை, விடுபட்டுப் போனவங்களுக்கு நாளைக்கு ஒரு லன்ச் ஏற்பாடு பண்ணியிருக்கேன், நீ கொஞ்சம் ஃப்ரீயா இருந்துக்கோப்பா.”
“நாளைக்கு எனக்கொரு கல்யாண வீடு இருக்கு மாமா, அந்த வேலைகளை முடிச்சிட்டு நான் கண்டிப்பா வர்றேன்.” மூத்த மருமகன் போலல்லாது இளைய மருமகனிடம் தன்னால் இப்படி இலகுவாகப் பேச முடிவது கரீமிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
“வேற ஏதாவது ஐடியால இருக்கீங்களா? எங்கேயாவது போற மாதிரி?”
“இப்போதைக்கு இல்லை மாமா, ஆல்யாவால ரொம்ப நாள் லீவு எடுக்க முடியாது, அதோட ரெஹானும் வீட்டுல இருக்கான், அவன் கூட கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் பார்க்கலாம்.”
“அதுவும் சரிதான்.”
மதிய விருந்து மிகவும் சிறப்பாக இருந்தது. இது திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்து. பெண் வீட்டார்கள் அனைவரும் வந்திருந்தார்கள். மஹிரா தன் கணவனோடு சரியாக விருந்து நேரத்திற்கு வந்துவிட்டுப் போனாள். ஏதோ கடமைக்காக வந்தது போல இருந்தது. இஷான் அந்தக் கடமைக்காகக் கூட வரவில்லை.
“இஷான் மச்சான் வரலையா மாமா?” இது ரெஹான்.
“இல்லைப்பா, இன்னைக்கு நைட் அவன் கிளம்புறான் போல.” கரீம் சமாளிக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ரெஹான் கேட்ட கேள்வியைக் கூட அமர் கேட்கவில்லை. என்னை மதிப்பவர்களை மாத்திரம்தான் நானும் மதிப்பேன் என்பது போல அமைதியாக இருந்துவிட்டான்.
விருந்து முடிந்த பிற்பாடும் விருந்தினர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள். இன்பம் நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருந்தார். கல்யாண வேலைகளுக்கென இன்னும் இரண்டு பெண்களை அமர் ஏற்பாடு பண்ணியிருந்தான். அம்மாவால் வரும் விருந்தினர்களைத் தனியாகச் சமாளிக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். நாளைய விருந்துக்கான ஏற்பாடுகளையும் மேற்பார்வைப் பார்க்க வேண்டி இருந்ததால் அவனுமே கொஞ்சம் பிஸியாகத்தான் இருந்தான். விருந்தினர்கள் வருவார்கள் என்பதால் உயர்தர ஆடை அணிந்து, நகைகள் போட்டு என பெண்ணும் ஓய்ந்து போனாள். எப்போதடா இரவு வரும், இந்தப் பரபரப்பு ஓயும் என்றிருந்தது அவளுக்கும்.
“ஆல்யா.” அமர் அழைக்கவும் ஹாலில் உட்கார்ந்திருந்தவள் எழுந்து வந்தாள். அமர் அவனது அறையில் கம்பியூட்டரின் முன்பாக அமர்ந்து என்னவோ பண்ணிக் கொண்டிருந்தான்.
“ஒரு சின்ன ஹெல்ப்மா, கார்ல ஒரு ஃபைல மறந்து வெச்சுட்டு வந்துட்டேன், கொஞ்சம் எடுத்துட்டு வர்றியா?” கம்பியூட்டரைப் பார்த்தபடியே அவன் சொல்லவும் தலையை ஆட்டியவள் வெளியே வந்தாள். வீட்டிற்குள் நுழையும் போது இருந்த மேஜை மேல் ஒரு பெரிய சங்கு வைக்கப்பட்டிருந்தது. அதில்தான் அமர் அவனது காரின் சாவியை வைப்பதை அவள் கவனித்திருந்தாள். அதை எடுப்பதற்காக அவள் வந்தபோது அங்கே அது இல்லை!
“கார் கீ இங்க இல்லைன்னா வேற எங்க வெச்சிருக்காங்க? இல்லைன்னா வேற யாராவது எடுத்துட்டுப் போயிருக்காங்களா?!” தனக்குள் பேசியபடி கார் நின்றிருந்த இடத்தை எட்டிப் பார்த்தது பெண். உள்ளே ரெஹான் அமர்ந்திருப்பது தெரிந்தது.
“அதானே பார்த்தேன்! இல்லைன்னா நம்ம ஆளோட ப்ளாக் ஆடியில ஏர்ற தைரியம் யாருக்கு வரும்?” என்றபடி காரை நோக்கி நடந்தது பெண். ரெஹான் யாரோடோ அலைபேசியில் பேசுவது கேட்டது.
“ஆமா, ஐயா அரட்டை அடிக்க எங்க கார்தான் கிடைச்சுதாமா?” என்றவள் சட்டென்று நின்றாள். அதற்கு மேல் அவனிடம் போவது அநாகரிகம் என்று தோன்றியது. அவசர அவசரமாக அவள் திரும்பி நடந்த போதும் ரெஹான் பேசியவை சில அவள் காதிலும் விழுந்தன. ஆல்யா கொஞ்சம் திடுக்கிட்டாற் போல உணர்ந்தாள்.
“ஃபைல் எங்க ஆல்யா?!” வெறும் கையோடு வந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டான் அமர். ஆனால் அதற்கும் அவள் பதில் சொல்லாமல் எதையோ வெறித்தவள் போல நின்றிருந்தாள்.
“என்னாச்சு?” அமருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“கார்ல ரெஹான் மச்சான் இருக்காங்க.” என்றாள் அமைதியாக.
“ஐயோ, அவன் இருந்தா என்னம்மா? நீ போய் எடுத்துக்கிட்டு வரவேண்டியதுதானே!” என்றவன் தான் எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க அவன் கரம் பிடித்துத் தடுத்தாள் பெண்.
“இப்போ நீங்க அங்க போக வேணாம்.”
“ஏன்?!”
“அவங்க யார் கூடவோ ஃபோன்ல பேசுறாங்க.”
“பேசினா என்ன?” என்று ஆரம்பித்தவன் மனைவியைக் கூர்ந்து பார்த்தான்.
“ஃபோன்ல யார்கூட பேசுறான்?” நிதானமாக வந்தது கேள்வி.
“யாரோ… யாரோ ஒரு பொண்ணு வாய்ஸ் கேட்குது.”
“கூடப் படிக்கிறவங்களா இருக்கலாம்.” பெரியவன் சமாதானம் சொல்ல அவள் ‘இல்லை’ என்பது போல தலையசைத்தாள்.
“என்ன பேசிக்கிறாங்க?” அவன் கேட்ட மாத்திரத்தில் அவள் முகம் ஜிவ்வென்று சிவந்தது. அமருக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.
“சொல்லு ஆல்யா? ஏதாவது உனக்குத் தப்பா தோணுதா?”
“அந்தப் பொண்ணு பேசுறதைப் பார்த்தா… நம்ம ஊர் பொண்ணு மாதிரி தெரியலை.”
“வெள்ளைக்கார பொண்ணா?”
“அப்பிடித்தான் தெரியுது.”
“கூடப் படிக்கிறவங்களா, வேலை செய்றவங்களா இருக்க வாய்ப்பில்லையா?”
“அவங்கக்கிட்ட இப்பிடியெல்லாம் பேச முடியாது.”
“அப்பிடி என்னத்தைத்தான் பேசித் தெலைச்சான்னு சொல்லேன்!” அமருக்குத் தலை வெடித்தது.
“பேச்சு ரொம்ப நெருக்கமா இருந்துச்சு, ஹஸ்பன்ட் அன்ட் வொய்ஃப் பேசிக்கிற மாதிரி இருக்கு.” சொல்லிவிட்டு அவள் தனது அறைக்குள் போய்விட்டாள். அமர் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். இது ஏதடா புது குழப்பம் என்றிருந்தது.
கணவன், மனைவி பேசிக்கொள்வது போல இருக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? முதலில், ஒரு கணவனும் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொள்வார்கள் என்று இவளுக்கு எப்படித் தெரியும்?! உண்மையிலேயே ரெஹான் அப்படிப் பேசினானா? இல்லையென்றால் இப்படியெல்லாம் நீ என்னிடம் பேசுவதில்லை என்று இவள் சொல்லாமல் சொல்கிறாளா?! அதற்கு மேல் அவனுக்கு வேலை ஓடவில்லை.
“ஆல்யா…” ஏதோ சொல்வதற்காக அவளை அழைத்தபடி அவளறைக்கு வந்தவன் அப்படியே நின்றுவிட்டான். ஒரு வயதிற்குப் பிறகு அவளை முக்காடில்லாமல் அவன் பார்த்ததில்லை. இன்று காலை போல இப்போதும் தனது துப்பட்டாவைக் கழட்டிக் கட்டிலில் போட்டுவிட்டுப் பெண் குளியறைக்குள் போய்க்கொண்டிருந்தாள். இவன் திடுமென அழைக்கவும் அவசரமாக துப்பட்டாவை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள்.
“சாரி, நான் கதவைத் தட்டியிருக்கணும்.” அவன் குரல் மன்னிப்பை வேண்டியது. திறந்திருக்கும் கதவை எதற்குத் தட்டவேண்டும்?! ஆனால் இப்போதும் அந்த இடைக்கதவை அவன் மூட நினைக்கவில்லை என்பது அவள் மனதுக்கு இதமாக இருந்தது.
“அது பரவாயில்லை, நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே?”
“ஒன்னுமில்லை.” என்றவன் எதுவும் சொல்லாமலே அவனது அறைக்கு வந்துவிட்டான். ஜன்னலோரமாக போய் நின்ற இளவலின் மனதுக்குள் என்னவோ செய்தது. கரீம் மாமாவின் இரண்டு பெண்களும் அழகிகள்தான். அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இவளை அமர் இப்படியெல்லாம் பார்த்ததில்லை. முதுகு வரை இருந்த கூந்தலைப் பின்னல் போட்டு இடது தோளில் போட்டிருந்தாள். கூந்தலில் ஒரு ஒற்றைச் சிவப்பு ரோஜா இலேசாகக் காய்ந்து போய் தெரிந்தது. இன்றைக்குக் காலையில் அவள் அந்த ரோஜாவைக் கூந்தலில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வாடிப்போயிருக்க வாய்ப்பில்லை.
புதுமணப்பெண் என்றால் இத்தனை நகைகள் அணிய வேண்டுமா?! அவள் கழுத்து முழுவதும் நகைகள்தான் ஜொலித்தன. இரண்டொரு நொடிகள்தானே அவளைப் பார்த்திருப்போம், அதற்குள்ளாக என் கண்கள் அவளை இத்தனைத் தூரம் அளவெடுத்திருக்கின்றனவா?! அவனால் அவன் மனதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
அவளது வயதைக் காரணம் காட்டி அவளை வேண்டாம் என்று சொன்னது அவன்தான். ஆனால்… அவள் பின்னோடு அலைந்தது, உரிமையாக நகை வாங்கிக் கொடுத்தது என அனைத்தும் செய்ததும் அவன்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்தவன் போல திருமணத்தை முடித்துவிட்டு இன்றைக்கு அவளை இரசிப்பதும் அவன் கண்கள்தான்! அவள் தன்னைப்பற்றி என்ன நினைப்பாள்? இத்தனைக்கும் அவள் மனதில் காதல் இருக்கிறது. அதை அவள் எங்கேயும் மறைக்கவில்லை. வெளிப்படையாகவே அவனிடம் சொல்லியிருக்கிறாள். அவன் மனதில் அப்படி எதுவும் இல்லை என்று சொன்னதால் இன்று தள்ளியும் நிற்கிறாள். ஆனால் இப்போது அவன் செய்வது என்ன?!
அமருக்குத் தான் செய்வது என்னவென்று சுத்தமாகப் புரியவில்லை. அவன் மனதை இனங்கண்டுகொள்ள அவனுக்குத் தெரியவுமில்லை. ஒரு சின்னப்பெண் இத்தனைத் தெளிவாக இருக்கிறாள். ஆனால் அவன் குழம்பிப்போய் கிடக்கிறான். எதையாவது பேசி அவளுக்குத் தன்னைப் புரிய வைத்துவிட வேண்டும் என்று தோன்றவும் மீண்டும் அவளது அறைக்குப் போனான்.
“ஆல்யா…” அப்போதுதான் பெண் குளியலறையில் இருந்து வெளியே வந்திருந்தது. இரவு ஆடையில் இருந்தாள். அறையின் விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கைப் போட்டிருந்தாள். மங்கிய அந்த மஞ்சள் ஒளியில் காட்டு தேவதை போல நின்றிருந்தவளைப் பார்த்த போது இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. இயல்பாகவே அவன் கால்கள் அவனை அவளிடம் அழைத்துச் சென்றன.
வயலட் நிற சாட்டின் துணியில் தைக்கப்பட்டிருந்தது அந்த இரவு ஆடை. தன் தம்பியைப் பற்றித்தான் ஏதோ பேச வருகிறான் அமர் என்று நினைத்தவள் அவன் மயக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை. தன்னை நெருங்கி வந்த காலடிகளை ஒரு மிரட்சியோடு பார்த்தாள். அந்தப் பார்வை அவனைத் தேக்கியிருக்க வேண்டும். ஆனால் அங்கிருந்து அப்பால் போக முடியாதவன் போல ஓரடி இடைவெளியில் நின்றிருந்தான், தன் மனைவியிடம்!
ஏதோ பேச வாயெடுத்தவளும் அவன் கண்கள் பேசிய பாஷையைப் பார்த்துவிட்டு இமைக்க மறந்து நின்றிருந்தாள். அமருக்குப் பெண்கள் புதிது. அம்மாவோடு அத்தனைக் காலம் வாழவில்லை. இன்பமும் தாய் ஸ்தானத்தில் இருந்த பெண். அவனிடம் வேலை பார்ப்பவர்களில் பலர் வயதானவர்கள். ஒன்றிரண்டு இளம்பெண்கள் இருந்தாலும் முதலாளி என்கின்ற மரியாதையைத்தான் அவர்களிடம் பார்த்திருக்கிறான். இன்றைக்கு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அவனருகில் அழகே உருவாக ஓர் இளம்பெண்! அதுவும், அவனுக்கு அத்தனை உரிமைகளும் உடைய பெண்.
அவன் கண்கள் தன்னெதிரில் நின்றிருந்தவளை இரசித்துப் பார்த்தன. இன்று வரைக்கும் அவன் யாரையும் பார்க்காத பார்வை அது. உரிமையான பார்வை! அதில் இலேசாக ஆசையும் கலந்திருந்தது. ஆனால் அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அவளுக்கு அனுபவம் போதவில்லை. ஆச்சரிய மிகுதியால் அவனையே பார்த்திருந்தாள். இயல்பாக அவன் கை நீண்டு அவள் கூந்தலில் சிக்கியிருந்த அந்தக் காய்ந்த ரோஜாவை அகற்றியது.
“பூன்னா புடிக்குமோ?” இப்போது மட்டும் அவன் உதடுகள் போனால் போகிறது என்று இரண்டு வார்த்தைகளை உதிர்த்தன. அவன் தீண்டலில் சிலிர்த்து நின்றிருந்தவள் கேள்வியைக் கவனிக்கவில்லை. அவனும் பதிலை எதிர்பார்க்கவில்லைப் போலும். கன சிரத்தையாக அந்த மலரை அகற்றிவிட்டு அவள் மலர் கூந்தலையும் வருடிப் பார்த்தான். அதற்கு மேலும் அங்கே நிற்பது அத்தனை உசிதமில்லை என்று தோன்றவே ஒரு பெருமூச்சோடு விலகினான் இளவல்.
‘இந்தப் பெண்ணைவிட்டுக் கொஞ்சம் தள்ளி இருப்பதுதான் தனக்கு நன்மையோ?’ கொஞ்சம் வெறுமையாக உணர்ந்த போதும் மனது பூரிப்பதை ஒரு ஆச்சரியத்தோடு உணர்ந்தான் அமர்!




