arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 12
Anbe… Azhage! chevron_right பகுதி 12 / 21

அத்தியாயம் 12

visibility 4
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அத்தியாயம் 12

அடுத்தநாள் காலை கண்விழித்ததும் ஆல்யா முதலில் செய்த வேலை அமரின் ரூமை எட்டிப் பார்த்ததுதான். ஏனென்றால் அவள் இப்போது பாத்ரூம் போகவேண்டும். எப்போதெல்லாம் அவள் அதற்கு ஆயத்தமாகி துப்பட்டாவைக் கழட்டுகிறாளோ அப்போது சரியாக அவன் அந்த ரூமிற்குள் ஆஜராகிறான். இன்னொரு முறை அவன் முன் அப்படி நிற்க அவள் தயாரில்லை.

அமரை அவனது அறையில் காணவில்லை. இந்தக் காலை வேளையில் எங்கே போயிருப்பான் என்று அவளுக்குத் தெரியாது. நேரத்தைப் பார்த்தாள். அப்போதுதான் மணி ஆறு. காலைத் தொழுகையை அவள் இன்னும் முடிக்கவில்லை. சூரிய உதயத்திற்கு முன்பு முடிக்கவேண்டிய கடமை. இதுவே அவர்களது வீடு என்றால் சல்மா வெளுத்து வாங்கிவிடுவார். இங்கே புது இடம், புதுப்பெண் என்பதால் அந்தக் கெடுபிடிகள் எதுவும் இருக்கவில்லை.

கப்போர்டைத் திறந்தவள் அதிலிருந்தப் புடவையை எடுத்தாள். நேற்று இரவு இன்பம் இவளிடம் அந்தக் கோரிக்கையை வைத்திருந்தார். இவள் இங்கு வந்ததிலிருந்து புடவை உடுத்தவில்லையாம்.

“விருந்தாளிங்க வரும்போது புடவைக் கட்டிக்கோடா ராஜாத்தி, உனக்கு அது ரொம்ப அழகா இருக்கு.” இவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சியிருந்தார் பெரியவர். இப்போது அது நினைவு வரவும் புன்னகைத்தவள் அந்தக் காஞ்சீபுரம் சில்க்கை எடுத்தாள். ஆவகாடோ பச்சை நிறத்தில் இருந்தது புடவை. பார்டரும் முந்தானையும் பெரிதாக, அடர் பின்க் நிறத்தில் எடுப்பாக இருந்தது. ப்ளவுஸும் அதே பின்க் நிறம். 

குளியலை முடித்துவிட்டுத் தொழுகையை நிறைவேற்றியவள் புடவையைக் கட்டிக் கொண்டாள். கண்ணாடியில் பார்த்த போது அந்தப் புடவை அவளுக்கு அழகாகத்தான் இருந்தது. கண்ணுக்கு மாத்திரம் இலேசாக மையிட்டவள் கூந்தலைப் பின்னல் போட்டு எப்போதும் போல இடது தோளில் போட்டுக் கொண்டாள். ஆல்யா ரெடி. அவளது ரூமிலிருந்து வரும்போது அவனறையில் நடமாட்டம் தெரிந்தது.

“குட்மார்னிங் ஆல்யா.” இவள் அரவம் கேட்டுத் திரும்பியவன் அப்படியே அசையாமல் நின்றுவிட்டான். 

“குட்மார்னிங்.” ஒரு புன்னகையோடு சொன்னவள் வெளியே போக எத்தனித்தாள்.

“ஏய் நில்லு!” அவன் வார்த்தைகளில் சட்டென்று நின்றவள் அவனை ‘என்ன?’ என்பது போல பார்த்தாள். 

“எங்க போறே நீ?!”

“கிச்சனுக்கு மச்சான், நான் இன்னும் டீ குடிக்கலை, நீங்கக் குடிச்சிட்டீங்களா?”

“அதெல்லாம் ஆச்சு.” அவன் சொல்லவும் தலையை ஆட்டிவிட்டு அவள் நகரப்போனாள்.

“ஆல்யா…” அவன் மீண்டும் அழைத்தான். 

“என்ன இன்னைக்கு அதிசயமா புடவை?”

“அதுவா… மாமிதான் கட்டிக்கச் சொன்னாங்க, எனக்கு சல்வாரை விட புடவை ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க, நல்லாருக்கா?” 

“நல்லாருக்கு.” அவன் கவலையும் அதுவாகத்தான் இருந்தது.‌ புடவையில் அவள் அழகாக இருக்கிறாள் என்று சொல்வதை விட அம்சமாக இருக்கிறாள் என்று சொன்னால் மிகவும் பொருந்தும். ஆனால் அதை அவளிடம் எப்படிச் சொல்வது?

“காலையிலேயே எங்கப் போனீங்க மச்சான்?” அவள் கேள்விக்குப் புன்னகைத்தவன் அங்கிருந்த எதையோ எடுத்து அவள் கையில் நீட்டினான். ஆல்யாவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்து போயின. கற்றை ரோஜா மலர்கள். அடர் சிவப்பு நிறத்தில் இருந்தது. வெள்ளைப் பேப்பரில் சுற்றப்பட்டிருந்தது. இப்போதுதான் பறித்த மலர் என்பது போல மலரிதழ்களில் நீர்த்துளிகள் காணப்பட்டன.

“என்ன… இது…” அவள் திக்கித் தடுமாற அவன் புன்னகை விரிந்தது. அவர்கள் பகுதியில் இதுபோன்ற உயர்ரக ரோஜாக்கள் கிடைப்பது அரிது. அப்படியே வாங்குவதென்றாலும் கண்டி, நுவரெலியா பகுதிகளிலிருந்துதான் தருவிக்க வேண்டும்.

“நுவரெலியால இருந்து நேத்து நைட் ஒரு காய்கறி லாரி வந்துச்சு, அவங்கக்கிட்டச் சொன்னேன், இதை எடுக்கத்தான் இப்போ போனேன்.” அவன் இலகுவாக விளக்கம் சொன்னான்.

“எதுக்கு இதெல்லாம்?”

“அதான் அம்மிணி அவ்வளவு ஆசையா நேத்து ஒரு ரோஜாவைத் தலையில வெச்சிருந்தீங்களே!” தான் சொல்லும் இந்தப் பதில் பெண்ணை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அமருக்குப் புரியவில்லை. அவள் கண்கள் சட்டென்று கலங்கின.

“ஏய்! என்ன நீ எல்லாத்துக்கும் கண்ணு கலங்குற?” மூக்கை உறுஞ்சியவள் அந்த வெள்ளைக் காகிதத்தை அகற்றினாள். குண்டு குண்டாகப் பாதி மலர்ந்த ரோஜாக்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன. ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல அந்த மலர்களால் அவள் மலர் முகத்தைத் தடவினாள் பெண்.

“எவ்வளவு மென்மையா இருக்கு!” அவள் அனுபவித்துச் சொன்ன விதத்தில் அவள் வார்த்தைகளும் அத்தனை மிருதுவாக வந்தன. அமர் புன்னகைத்தான். 

“நீங்களும் தொட்டுப் பாருங்க மச்சான்.” என்றவள் அவனருகில் சென்று மலர்களால் அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள். அமர் கண்களை மூடிக்கொண்டான்.

“நான் சொல்லலை!” அவள் குதூகலித்தாள். ஆனால் அவன் உண்மையாக உணர்ந்தது மலர்களை அல்ல, மங்கையை!

“தலையில வெச்சுக்கலை?”

“ம்ஹூம், இதைப்போய் யாராவது தலையில வெச்சுக்குவாங்களா? இலைகள் கொஞ்சத்தை கட் பண்ணிட்டு அழகா வாஸ்ல வெக்கணும், என்னோட ஸ்டடி டேபிள்ல அந்த வாஸை வெச்சுட்டு ஒரு கதைப் புத்தகத்தோட உட்காரந்தா…” அவள் கண்களை மூடி இரசித்துச் சொல்லவும் அமர் பக்கென்று சிரித்தான். 

“முதல்ல இதை மாமிக்கிட்டக் காட்டிட்டு வர்றேன், உங்க வீட்டுல வாஸ் இருக்கா…”

“நம்ம வீட்டுல.” அவன் சட்டென்று அவள் பேச்சைத் திருத்தினான்.

“நம்ம வீட்டுல வாஸ் இருக்கான்னு தெரியலை, மாமிக்கிட்டக் கேட்கணும், இல்லைன்னா அந்த லண்டன் ஆஃபீஸரை கடைக்கு அனுப்பணும்.” திட்டங்கள் தீட்டியபடி அவள் வெளியே போக அமருக்கு சந்தோஷமாக இருந்தது.‌ நேற்று இரவு அவள் தலையில் காய்ந்த ரோஜாவைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு இந்த எண்ணமே வந்தது. காய்கறி லாரிகள் இப்படி நுவரெலியாவிலிருந்து அடிக்கடி வருவது வழக்கம் என்பதால் உடனடியாக நேற்றிரவே அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தான். இன்றைக்குக் காலையில் பூக்கள் வந்துவிட்டன. அதை எடுக்கத்தான் இத்தனை அவசரமாகக் கிளம்பிப் போயிருந்தான்.

“மாமி, இதைப் பார்த்தீங்களா?” கிச்சனில் வந்து நின்ற பெண்ணைத் திரும்பிப் பார்த்தார் இன்பம்.

“என்னடா ராஜாத்தி இது? இவ்வளவு பூ?! யாரு குடுத்தா?”

“அமர் மச்சான், இப்பதான் கொண்டு வந்து குடுத்தாங்க.”

“ஓ…” மூத்த மகன் அதிகாலை வேளையில் வெளியே போன இரகசியம் இதுதானா?! 

“நீங்க வாங்கிக் கேட்டீங்களா தம்பிக்கிட்ட?” இலேசாக நூல்விட்டுப் பார்த்தார் பெரியவர்.

“அதெல்லாம் இல்லை மாமி, நேத்து நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கிற செடியில நிறையப் பூ பூத்திருந்துச்சு, அதுல ஒன்னைப் பறிச்சுத் தலையில வெச்சுக்கிட்டேன், அதை மச்சான் பார்த்தாங்க, எங்கிட்டக் கூட சொல்லலை, காலையில இதைக் கொண்டுவந்து நீட்டுறாங்க, நான் அப்பிடியே அசந்து போயிட்டேன்.” பெண் பிலாக்கணம் விரிக்க இன்பத்திற்குச் சிரிப்பு வந்தது. தன் மூத்த மகன் இந்தப் பெண்ணிடம் கவிழ்ந்து போனான் என்று நன்றாகவே புரிந்தது.

“அம்மா… டீ.” கண்களை ஒழுங்காகத் திறக்காமல் டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான் ரெஹான். அவன் அங்கே உட்காருவதற்கும் அமர் அவனது அறையிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“லண்டன் சாருக்கு இன்னைக்கு வேளையோட விடிஞ்சிருக்கு!” அப்போதுதான் அங்கே ஆல்யா நிற்பதைக் கவனித்தவன் விழிகளை விரித்து அவளை நன்றாக உற்றுப் பார்த்தான். அடுத்த நொடி அவன் விசிலடிக்கவும் பெண் அவனை முறைத்தது.

“ஆல்யா மேடம்! என்ன இன்னைக்குப் புடவை எல்லாம் கட்டிக்கிட்டுப் பெரிய மனுஷி மாதிரி இருக்கீங்க? அது என்ன கைல? இது யாரு குடுத்தா?”

“யாரு குடுத்தா உங்களுக்கென்ன? முதல்ல இதை வெக்க எனக்கு ஒரு வாஸ் வேணும்.” 

“என்ன ரெஹான்? இன்னைக்குச் சீக்கிரமா எந்திருச்சுட்டே போல?” அமரின் குரலில் இதுவரை நாற்காலியில் ஏனோதானோவென்று சாய்ந்திருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இன்னைக்கு மீட் பண்ணலாம்னு சொல்லியிருக்காங்கண்ணா, அதான்…”

“ம்… ஆல்யா, நீ வா எங்கூட.” என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டான் அமர்.‌ இப்போது இன்பம் அவசரமாக இளைய மகனிடம் வந்தார். 

“தம்பி, உங்கண்ணா ஆல்யாக்கிட்ட அவுட்!” என்றார் சிரித்தபடி.

“சமயத்துக்கு நீங்க எனக்கு அம்மாவா, இல்லை ஃப்ரெண்டான்னே தெரிய மாட்டேங்குதும்மா.”

“சும்மா என்னைக் கேலி பண்ணாதீங்க ரெஹான், பொண்ணு கைல இவ்வளவு பூ எங்க இருந்து வந்துச்சு?”

“எங்கிருந்து வந்துச்சு?!” இன்பம் பூக்கள் வந்து சேர்ந்த கதையைக் கூறவும் இளையவன் மலைத்துப் போனான்.

“ஆத்தீ! ஐயா கவுந்துருவார்னு எனக்குத் தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரமா அது நடக்கும்னு நான் எதிர்பார்கலையே மீனாட்சி, நான் எதிர்பார்க்கலையே மீனாட்சி!” நடிகர் திலகம் போல அவன் பாவனை பண்ணிச் சொல்லவும் இன்பம் விழுந்து விழுந்து சிரித்தார்.

“இப்போ அம்மிணி உள்ளே போகுதில்லை? இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தப் புடவையை மாத்திக்கிட்டு வேற ட்ரெஸ்ல வரும் பாருங்க.” 

“ஏம்மா? அது அவளுக்கு நல்லாத்தானே இருக்கு? அதையேன் மாத்தணும்?”

“பிரச்சினையே இப்போ அதானே!”

“அட ஆண்டவா! நான் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கா?!” வாயைப் பிளந்தான் இளையவன்.

“ஆமாங்கிறேன்!” இன்பம் சரியாகத்தான் சொல்கிறார் என்பது போல சிறிது நேரத்தில் ஒரு சல்வாரில் கிச்சனுக்கு வந்தது பெண். 

அன்று முழுவதும் அமருக்கு வேலைகள் சரியாக இருந்தன. முதலில் அவனது விசேஷ வீட்டைக் கவனித்துவிட்டு அதன் பிற்பாடு கரீம் ஏற்பாடு பண்ணியிருந்த விருந்திற்கும் போய் தலையைக் காட்டிவிட்டு வந்திருந்தான். அது ஆண்களுக்கான விருந்து என்பதால் ஆல்யா வீட்டில்தான் இருந்தாள். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அவன் வீடு வந்த போது மணி நான்கைத் தாண்டியிருந்தது. கொஞ்சம் களைப்பாக இருக்கவும் கட்டிலில் சாய்ந்திருந்தான். 

“ஆல்யா.” அவன் அழைக்கவும் இன்பத்தோடு பேசியபடி இருந்த பெண் உள்ளே வந்தது. அதுவரைப் படுத்துக் கிடந்தவன் இப்போது அவளோடு பேச வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“என்னாச்சு? டயர்டா இருக்கா?” அந்த இதமான கேள்வி அவனை மகிழ்வித்தது.

“இன்னைக்கு உங்கப்பா நம்ம ரெண்டு பேரையும் உங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க, போலாமா?”

“…” அவள் பதில் சொல்லாமல் மௌனமாக நின்றிருந்தாள். அவள் மௌனத்தின் காரணத்தை அவன் அறிவான்தானே!

“உங்கண்ணா கிளம்பிப் போயிட்டானாம், உங்கக்காவும் இப்போ இங்க இல்லைப் போல, நானும் மாமியும் தனியாத்தான் உட்காரந்திருக்கோம் அமர்னு சொன்னாரு, அதான்…” 

“ம்…” அவன் சொல்லி முடித்திருக்கவில்லை, அதற்குள்ளாக அவள் தலை அவசரமாகச் சம்மதம் சொன்னது. அவன் முகத்தில் சட்டென்று ஒரு புன்னகை அரும்பியது.

“ஒரு டீ போட்டுக் குடுக்கிறியா?” அவன் கேட்கவும் அவசரமாக வெளியே வந்தவள் சோஃபாவில் சாய்ந்து கிடந்த ரெஹானை கடந்து போனாள். போகும்போதான் அவன் கையிலிருந்த ஃபோனை கவனித்தாள். யாரோ ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். யாருடைய நடமாட்டமும் தெரியாததால் அந்தப் புகைப்படத்தைத் தைரியமாகத் தனது அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தான். சத்தம் செய்யாமல் அவன் பின்பக்கமாகப் போய் நின்று பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள். ஏனென்றால் புகைப்படத்தில் ரெஹானோடு இருந்தது ஒரு வெள்ளைக்காரப் பெண். 

“ஏய்! என்னப் பண்ணுற நீ?!” இப்போது ரெஹான் பெருங்குரலில் கத்தினான். ஏனென்றால் அவன் கரத்திலிருந்த ஃபோனை சொல்லாமல் கொள்ளாமல் கைப்பற்றியிருந்தது பெண். 

“ரெஹான் மச்சான்! அங்கேயே நில்லுங்க! கிட்ட வந்தீங்க, அவ்வளவுதான்!” ஒரு சோஃபாவிற்குப் பின்னால் நின்றபடி மிரட்டினாள் பெண்.

“இப்போ நீ அதைக் குடுக்கலை, உன்னை என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” ரெஹானுக்கு உயிர் போவது போல இருந்தது. இது அவனது இரகசியம்!

“என்னப் பண்ணுவீங்க?! ரொம்பப் பேசினா உங்க ரகசியத்தை அமர் மச்சான்கிட்டக் காட்டுவேன்! காட்டட்டுமா?!” அவள் மிரட்டலில் அவன் திணறிப் போனான்.

“ஆல்யா! என்னாச்சு?” இவர்கள் சத்தம் அதிகமாக இருக்கவும் உள்ளே இருந்தே குரல் கொடுத்தான் பெரியவன்.

“ஒன்னுமில்லைண்ணா.” அவள் பதில் சொல்வதற்கு முன்பாக வந்தது ரெஹானின் குரல்.

“இங்கப்பாரு ஆல்யா, மரியாதையா என்னோட ஃபோனைக் குடுத்திரு! இல்லைன்னா நடக்கிறதே வேற!” ஒருவேளை ரெஹான் இதமாகக் கேட்டிருந்தால் அவள் அவனது அலைபேசியைக் கொடுத்திருப்பாளோ என்னமோ! அவன் மிரட்டல் அவளைச் சீண்டிவிட்டது. 

“ஓ! அப்பிடியா? இன்னைக்கு இருக்கு உங்களுக்கு.” என்றவள் அலைபேசியோடு அமரின் அறைக்குள் ஓடினாள்.

“ஏய்!” அவளை, அவன் பாய்ந்து பிடிப்பதற்கு முன்பாக அறைக்குள் நுழைந்தவள் அமரின் கட்டிலுக்கு அந்தப்புறமாகப் போய் நின்று கொண்டாள். சாதாரண நாள் என்றால் ரெஹான் தன் அண்ணனின் அறைக்குள் போயிருக்க மாட்டான். ஆனால் இப்போது அவனது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

“அண்ணா, என்னோட ஃபோனைக் குடுக்கச் சொல்லுங்க.” கோரிக்கை வைத்த தம்பியையும் மனைவியையும் ஆச்சரியமாகப் பார்த்தான் பெரியவன்.

“என்னாச்சு?”

“இந்தக் குட்டிப் பிசாசு என்னோட ஃபோனைப் பறிச்சுக்கிட்டு வந்திடுச்சு!” ரெஹான் பல்லைக் கடித்தான்.

“ஆஹாஹா! உங்க ஃபோன்ல ஒன்னுமில்லைன்னா எதுக்கு நீங்க இந்தப் பாடுபடுறீங்க? அப்பிடி என்னத்தை உங்கண்ணாக்கிட்ட நாங்க காட்டிரப் போறோம்?”

“ஆல்யா, வேணாம்! விளையாடாதே, ஃபோனைக் குடு.” எங்கே அவள் அண்ணனிடம் காட்டிவிடுவாளோ என்ற பயத்தில் இருந்தான் ரெஹான். அவன் எப்படியாவது தன்னிடமிருந்து அலைபேசியைப் பறிப்பதிலேயே குறியாக இருப்பதை உணர்ந்த பெண் அமருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், மிகவும் நெருக்கமாக. 

“குடுக்க மாட்டேன்!” அவள் கை இப்போது அமரின் முதுகுப் பக்கமாக இருந்தது.

“அப்பிடி என்னதான் இருக்கு அந்த ஃபோன்ல?” இது அமர்.

“அது ஒன்னுமில்லைண்ணா, என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஃபோட்டோ.” ரெஹான் சமாளித்த உடனேயே அமருக்குப் புரிந்து போனது. அது நண்பர்கள் புகைப்படம் அல்ல, நண்பியின் புகைப்படம் என்று. இப்போது அவன் மனைவியைத் திரும்பிப் பார்க்க அவள் கண்களும் அவனது ஊர்ஜிதம் சரியென்றது.

“ஃபோனைக் குடு ஆல்யா.” அமர் கேட்டதும் ரெஹானின் உள்ளம் ஒரு நொடி திடுக்கிட்டது. எதையும் மறைக்கும் எண்ணம் அவனுக்கில்லை. ஆனால் இது அதற்கான நேரமில்லை என்றுதான் நினைத்தான். அலைபேசியை மனைவியிடமிருந்து வாங்கியவன் அதைப் பார்க்காமலேயே தம்பியிடம் நீட்டினான். ரெஹானுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எதுவும் பேசாமல் வெளியே போய்விட்டான்.

“என்ன மச்சான் நீங்க?! எதுக்கு இப்போ ஃபோனை வாங்கிக் குடுத்தீங்க?” செல்லமாகச் சிணுங்கிய மனைவி அவனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தாள். அதை அவள் உணராவிட்டாலும் அவன் உணர்ந்தான்.

“என்ன இருந்துச்சு அதுல?”

“ஒரு பொண்ணும் ரெஹான் மச்சானும் இருந்தாங்க.”

“ம், பொண்ணு வெள்ளைக்காரப் பொண்ணா?”

“ஆமா, ஆனா… முஸ்லிம் பொண்ணு.” அவள் பதிலில் அவளை ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தான் கணவன்.

“எப்பிடி?!”

“அது தெரியலை, ஆனா அழகா ஹிஜாப் (முக்காடு) போட்டுக்கிட்டு இருந்தாங்க, அதுக்குத்தான் ஃபோனை நான் பறிச்சுக்கிட்டு வந்தேன் உங்கக்கிட்டக் காட்ட, நீங்கப் பார்க்காமலேயே திரும்பக் குடுத்துட்டீங்க.” அவன் மேல் இன்னும் கொஞ்சம் சாய்ந்து கொண்டு குறைப்பட்டாள் பெண். அப்போதுதான் தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள் சட்டென்று விலகி எழுந்தாள்.

“சாரி.” சொல்லிவிட்டு நகரப் போனவளின் கரத்தைப் பிடித்தான் அமர்.

“ரெஹான்கிட்ட எதுவும் இதைப்பத்திப் பேச வேணாம்.”

“அவர் மட்டும் என்னைக் கேலி பண்ணலாமா? அப்போ நானும் பண்ணுவேந்தானே!”

“உங்கிட்ட நான்‌ டீ கேட்டதா ஞாபகம்.” ஒரு புன்னகையோடு அவன்‌ சொல்லவும் சிணுங்கிய படி அறையைவிட்டு வெளியேறினாள் பெண். அன்றைக்கு மாலையே இருவரும் கரீமின் வீட்டிற்குக் கிளம்பினார்கள். ஏற்கனவே இன்பம்,

“தம்பி, சாப்பாட்டு நேரத்துக்குக் கிளம்பாம கொஞ்சம் வேளையோட போங்க, பாவம் சல்மா, ரெண்டு நாள் சின்னப் பொண்ணு வீட்டுல இல்லாம கஷ்டப்பட்டிருப்பா.” என்றிருந்தார் சிரித்தபடி. 

“அதுவும் இந்த வாண்டுதான் எப்பவும் மாமி கூடவே இருந்திருக்கா இல்லைம்மா? மஹியாவது வெளிநாடு, அங்க இங்கன்னு அப்பப்ப போய் வந்திருக்கா.” இது ரெஹான்.

“ஆமா ரெஹான், எனக்குத் தெரிஞ்சு சல்மா ரெண்டு நாளைக்கு இவங்களை அங்க இருந்து நகர விடமாட்டா.” 

“ரெண்டு நாளெல்லாம் முடியாதும்மா, இன்னைக்கு ஒருநாள் வேணும்னா தங்கலாம்.” இது அமர். அவன் பதிலில் ஆல்யாவின் முகம் சுருங்கிப் போனது.

“அதெல்லாம் தம்பி அப்பிடித்தான் சொல்லும், அங்க போனதும் தம்பியோட மனசை நீதான்டி ராஜாத்தி மாத்தணும்.” மருமகளின் காதோரமாக இரகசியம் பேசி அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார் இன்பம்.

“இப்பிடிக் கொஞ்சிக் கொஞ்சியே அவளைக் கெடுத்து வெச்சிருக்கீங்க நீங்க!” ரெஹான் குறைப்படவும் அவனைப் பார்த்து அழகு காட்டியவள் அந்த ப்ளாக் ஆடியில் போய் ஏறிக்கொண்டாள். கரீமின் வீட்டில் இவர்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. 

“வாப்பா அமர், வாம்மா.” கரீமின் முகம் முழுவதும் புன்னகை. சல்மாவும் வாசலுக்கே வந்துவிட்டார்.

“வாங்க வாங்க.” என்றவர் மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டார். முகத்தில் மகளைப் பிரிந்த வாட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஆல்யா உங்க வீட்டுல ரெண்டு நாள்தானே இருக்கலை, அதுக்குள்ள என்ன மாமா, மாமி இப்பிடி ஆகிட்டாங்க?”

“அதையேன் கேட்கிற அமர்? உங்க மாமி மட்டுமில்லை, நானுந்தான் ஒரு மாதிரியா ஆகிப்போனேன், எங்கக்கூடவே இருந்துட்டாளா, அதால சின்னவ இல்லாம வீடே வெறிச்சுன்னு ஆகிப்போச்சு, நல்லாவே இல்லைப்பா.” கரீமும் சிரித்தபடி சொல்ல அமருக்குக் கவலையாக இருந்தது.

“யூனி போக ஆரம்பிச்சுட்டா இங்க அடிக்கடி வருவா மாமா, இப்ப வீட்டுலயும் அடிக்கடி விருந்தாளிங்க வர்றதால எங்கேயும் அசைய முடியலை.”

“அதெல்லாம் இருக்கிறதுதான்.” பெண்ணைப் பெற்றவர்கள் தங்களைச் சமாதானம் செய்து கொண்டார்கள்.

“ஆனா ரெண்டு பேரும் இன்னைக்கு இங்கதான் தங்கணும், கால்ல சக்கரத்தைக் கட்டின மாதிரி ஓடக்கூடாது அமர்.” தாங்கள் பார்க்க வளர்ந்த பிள்ளை என்பதால் அந்த வீடு இப்போதும் அமரை, அமராகத்தான் பார்த்தது. மாப்பிள்ளை என்ற பதத்திற்கு அங்கு இடமிருக்கவில்லை.

“சரி மாமி.” அதன்பிறகு இரவு விருந்து அமர்க்களப்பட்டது. கடையிலிருந்து நிறைய இனிப்புப் பண்டங்களை வாங்கி வந்திருந்தார் கரீம். அம்மாவும் மகளும் சமையல்கட்டில் ஏதோ வேலையாக இருக்க அமரும் கரீமும் தங்கள் வியாபாரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அங்க வீட்டுல எல்லாரும் எப்பிடி ஆல்யா? உங்கிட்ட நல்லா நடந்துக்கிறாங்களா?” பேச்சை ஆரம்பித்தார் சல்மா.

“ம்… எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரி, இந்த ரெஹான் மச்சானோட தொல்லைதான் தாங்க முடியலை, எப்பப் பார்த்தாலும் என்னை ஏதாவது கேலி பண்ணிட்டே இருக்காங்க.” மகள் குறைப்படவும் சல்மா புன்னகைத்தார்.

“ரெஹான் எப்பவும் அப்பிடித்தான், சின்னவனா இருக்கும் போதும் உன்னைச் சீண்டி அழ வெச்சுக்கிட்டே இருப்பான், இன்பம் என்ன சொல்றா?”

“ராஜாத்தி எங்கிற வார்த்தையைத் தவிர அவங்க வாய்ல இருந்து வேற வார்த்தை வராது, இன்னைக்கும் ஆசையா என்னைப் புடவைக் கட்டிக்கச் சொன்னாங்க.” என்ற மகளின் முகம் சட்டென்று வாடிப் போகவும் சல்மா திகைத்தார்.

“என்னாச்சு? இன்பம் ஏதாவது சொன்னாளா? அவ அப்பிடியெல்லாம் பேசுற ஆள் கிடையாதே?!”

“மாமி எதுவும் சொல்லலை, இந்த அமர் மச்சாந்தான்…”

“அமர் என்ன சொல்லிச்சு?” சல்வார் துப்பட்டாவைத் திருகியபடி அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தது பெண். இன்று காலை அவள் கரங்களில் ரோஜா மலர்கள் வந்த கதையையும் அவள் விட்டுவைக்கவில்லை.

“எப்பவும் கேலி பண்ணுற ரெஹான் மச்சான் கூட இந்தப் புடவை உனக்கு நல்லா இருக்குன்னு சொன்னாங்க, ஆனா இவங்களுக்குப் புடிக்கலைப் போல, சேலையை மாத்துன்னு சொன்னாங்க.”

“அமரும் புடிக்கலைன்னு சொல்லலையேம்மா!”

“மாத்துன்னு சொன்னா என்ன அர்த்தம்? புடிக்கலைன்னுதானே அர்த்தம்?”

“இல்லையே, ரொம்பப் புடிச்சிருக்குன்னும் அர்த்தம் எடுத்துக்கலாம்.”

“சும்மா போங்கம்மா, உங்களுக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது.” அங்கலாய்த்த மகளின் தலையில் சின்னதாக ஒரு அடி வைத்தார் அம்மா.

“முட்டாள், ஊர்ல போற வர்றவங்க எல்லாம் தன் பொண்டாட்டியை அழகா இருக்கான்னு சொன்னா எந்தப் புருஷனுக்குப் புடிக்கும்?”

“வீட்டுல மாமியும் ரெஹான் மச்சானும் மட்டுந்தான் இருந்தாங்க, அப்போ வேற யாரும் இருக்கலை.”

“அதைக் கூட அந்த மனுஷன் அப்போ விரும்பலைன்னு அர்த்தம், நீ இதைக் கூடப் புரிஞ்சுக்க மாட்டியா?” ஆல்யாவின் கண்களில் இப்போது பல்ப் எரிந்தது.

“நீ ஏதாவது சட்டுன்னு சொல்லிட்டியா?”

“ம்ஹூம்… எனக்கு ரொம்பக் கஷ்டமா போச்சு, அதால ஒன்னும் பேசாம சேலையை மாத்திட்டேன்.”

“இன்னொரு நாளைக்கு நீயும் அமரும் தனியா இருக்கும் போது அந்தச் சேலையைக் கட்டு, தம்பி ஒன்னும் சொல்லாது.”

“ஆல்யா!” கரீம் அழைப்பது கேட்கவும் பெண் அவசரமாக ஹாலுக்கு வந்தது.

“என்னப்பா?”

“அமருக்குத் தூக்கம் வருதும்மா, எத்தனை நேரந்தான் அம்மாவும் பொண்ணும் பேசிக்கிட்டு இருப்பீங்க? நாளைக்கு மீதியைப் பேசிக்கலாம், முதல்ல தம்பிக்கு ரூமைக் காட்டு.” இவர்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்த போது கரீம் வாழ்ந்த வீடு இதுவல்ல. அது அவர்கள் பழைய வீடு. பிற்பாடுதான் இந்த வீட்டை ஊருக்கு நடுவில் நிலம் வாங்கிப் பெரிதாகக் கட்டினார் மனிதர். ஹாலைத் தாண்டி இந்த வீட்டை அமருக்குத் தெரியாது.

“வாங்க மச்சான்.” தனது அறைக்கு அவனை அழைத்துச் சென்றது பெண். எப்போதும் இருக்கும் அவளது அறைதான். இவர்கள் வருவார்கள் என்று சில மாற்றங்களைச் செய்திருந்தார் சல்மா. அவள் உட்கார்ந்து படிக்கும் மேஜையைக் காணவில்லை. அதற்குப் பதிலாக இவளது பழைய கட்டில் மாற்றப்பட்டு இப்போது புதிதாக ஒரு கட்டில் போடப்பட்டிருந்தது. அவர்கள் வீடு போல இங்கே தனித்தனி அறைகள் கிடையாது!

“நீங்க பெட்ல தூங்குங்க, நான் கீழ தூங்குறேன்.”

“ஏன்? இவ்வளவு பெரிய பெட் உனக்கும் எனக்கும் போதாதா?” இதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை.

“இதான் உன்னோட ரூமா?”

“ம்…” அவள் தலையை மட்டும் ஆட்டினாள். ஒரு புத்தக அலமாரி இருந்தது. அதிலிருந்த புத்தகங்களை அவன் நிதானமாகப் பார்வையிட்டான். அது அவளது சேகரிப்பு. எல்லா வகையான புத்தகங்களும் இருந்தன. அடுத்தாற் போல அலமாரி. அதை அவன் திறக்கப் போகவும் சட்டென்று ஓடி வந்து அதன் கதவில் கை வைத்தாள் பெண். அமர் திகைப்போடு அவளைப் பார்த்தான்.

“அதைத் திறக்க வேணாம்.” அவள் சொல்லவும் அவள் கரத்தைக் கதவிலிருந்து விலக்கினான். இப்போது பெண் முழுதாக அந்தக் கதவின் முன்பாக வந்து நின்றது.

“நாந்தான் அதைத் திறக்காதீங்கன்னு சொல்றேனில்லை?” அவன் சுவாரஸ்யம் இப்போது அதிகரித்தது. அப்படி எதை உள்ளே வைத்திருக்கிறாள்?! தனக்கு முன்னால் நின்றிருந்தவளின் கையைப் பிடித்து அவளை மெதுவாக அப்பால் நகர்த்தியவன் அந்தக் கதவைத் திறந்தான். உள்ளே எதுவும் வித்தியாசமாக இருக்கவில்லை. அவள் ஆடைகளைத் தவிர. ஆனால் அலமாரியின் கதவு முழுவதும் அமரின் படங்கள். பல்கலைக்கழகத்தில், அம்பாந்தோட்டையில் என எடுத்த பல படங்கள் அங்கே ஒட்டப்பட்டிருந்தன. மற்றைய கதவையும் திறந்தான். ப்ளாக் ஆடி மேல் சாய்ந்து நிற்கும் அமர் பெரிதாக மாட்டப்பட்டிருந்தான். எப்போது, எங்கே எடுத்தாள் என்று தெரியவில்லை. எல்லோருமாக நின்று எடுத்த புகைப்படத்தில் மற்றைய அனைவரையும் தவிர்த்துவிட்டு அவனும் அவளும் மாத்திரம் இருப்பதுபோல செய்திருந்தாள். 

“அதான் திறக்காதீங்க திறக்காதீங்கன்னு அவ்வளவு சொல்றேனில்லை? அதுக்கப்புறமும் திறந்தா என்ன அர்த்தம்? உங்க மனசுல எந்த எண்ணமுமில்லை, ஆனா நாங்க மட்டும் உங்கப் பின்னால விழுந்து விழுந்து அலைஞ்சோம்னு உங்களுக்குத் திரும்பத் திரும்பத் தெரியணுமா?” என்று சத்தமாகச் சொன்னவள் பட்டென்று அந்த அறையின் விளக்கை அணைத்தாள். தான் என்ன செய்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் மேல் தனக்கிருக்கும் காதல் திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுவது அவளுக்கு வெட்கத்தை உருவாக்கியது. கோபமாகப் போனவள் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டாள். நிதானமாக வந்தவன் அறையின் விளக்கை மீண்டும் போட்டான்.

“இப்பிடியே தூங்கப் போறியா?”

“நான் என்னமோ பண்ணிக்கிறேன், உங்க ட்ரெஸ் எல்லாம் அந்த கப்போர்ட்ல இருக்கு.” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள். கிச்சனில் நிற்கும் போது அமருக்காக அப்பா ஒரு புது அலமாரி வாங்கியிருப்பதாக அவளிடம் சொல்லியிருந்தார் சல்மா. உள்ளுக்குள் அவமானமாக உணர்ந்த பெண் அதை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் அவன் மேல் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். 

“ஆல்யா, முதல்ல எந்திருச்சு ட்ரெஸ்ஸை மாத்து.” அவன் சொல்லவும் அவனுக்கு முதுகுகாட்டித் திரும்பிப் படுத்தது பெண். அமருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. முதன்முதலாக அவளது அறைக்கு வந்திருக்கிறான். அவர்கள் இருவருக்குமான முதல் தனிமை! அவர்கள் வீட்டிலும் இருவரும் ஒன்றாக இருந்திருந்தாலும் அங்கே வெவ்வேறு அறைகள். ஆனால் இப்போது நிலைமை வேறு. அவளோடான தனிமை, அவளது அந்தரங்கங்கள் என அனைத்தும் அவனை இலேசாக அசைத்துப் பார்த்திருந்தன. அதை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அவன் தடுமாறிக் கொண்டிருக்கும்போது இந்தச் சின்னப்பெண் அவனை இன்னும் கொஞ்சம் ஆட்டிவைத்தது.

அவள் இப்போதைக்கு எழுந்து வரப்போவதில்லை என்று புரிந்தவன் மீண்டும் அவளது அலமாரிக்கு வந்தான். பெண்களின் ஆடை பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. கையில் அகப்பட்ட ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் அவளிடம் வந்தான்.

“இந்தா, இதைப் போய் மாத்திக்கிட்டு வந்து தூங்கு.” அவன் தன்னை விடப்போவதில்லை என்று புரியவும் எழுந்தவள் அவன் கையிலிருந்ததை வாங்கிக் கொண்டாள். விலையுயர்ந்த சுடிதார் ஒன்றை எடுத்து வந்திருந்தான். தலையில் அடித்துக் கொண்டவள் அதை உரிய இடத்தில் வைத்துவிட்டு இரவு ஆடை ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

“தயவு செஞ்சு என்னோட திங்ஸ் எதையும் தொடாதீங்க.” என்றவள் குளியறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள். அந்த அலமாரிக்குள் இன்னும் பல இரகசியங்கள் மறைந்திருக்கும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் அதை ஆராயச் சரியான நேரம் இதுவல்ல என்று புரிந்தது. அவள் காட்டிய இன்னொரு அலமாரியிலிருந்து தனக்காக ஒரு லுங்கியையும் டீ ஷர்ட்டையும் எடுத்ததவன் அவள் வெளியே வந்ததும் தன் உடையை மாற்றிக் கொண்டான். 

அறைக்குள் ஏசியின் மெல்லிய ஒலி மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தது. பெரிய டவல் ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தவள் அதை அகற்றச் சங்கடப்பட்டுக் கொண்டு அப்படியே கட்டிலில் சரிந்திருந்தாள். அமருக்கும் அவள் நிலைமைப் புரிந்தது. தனக்கு முன்னால் இப்படி ஆடைகள் அணிவது, துப்பட்டா இல்லாமல் இருப்பது எல்லாம் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போகிறாள்?! விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தவன் அவள் தோளில் கிடந்த டவலை அகற்றினான். சூழ்ந்திருந்த இருள் அவளை ஆசுவாசப் படுத்தியிருந்தது. அந்தச் செய்கையை அனுமதித்தவளின் விழியிலிருந்து ஒற்றைக் கோடாகக் கண்ணீர் இறங்கியது.

“ஆல்யா…” என்றான் அவன் மென்மையாக. இப்போது அவள் இலேசாக விசும்ப ஆரம்பிக்கவும் அவள் புறமாக நகர்ந்தவன் அந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“எதுக்கு இப்போ அழுறே?”

“உங்களுக்கு என்னைப் புடிக்காது மச்சான்.” அவள் குற்றச்சாட்டு பலமாக இருந்தது.

“புடிக்காமத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?”

“நம்மளை விட்டா இந்தப் பொண்ணுக்கு வேற நாதியில்லைன்னு பாவப்பட்டுக் கட்டியிருக்கீங்க.”

“அப்பிடி உனக்கு யாரு சொன்னா?”

“நீங்க சொல்லலைன்னாலும் எனக்கு அது புரியும்.” அவள் மீண்டும் மூக்கை உறுஞ்சினாள்.

“இங்கப்பாரு ஆல்யா, உன்னை மாதிரி நான் இல்லை, அதை நான் ஒத்துக்கிறேன், அதுக்காகப் பாசம் இல்லாம இல்லை.”

“பாசம் இருக்கு, ஆனா லவ் இல்லை.”

“ரெண்டும் ஒன்னுதானேம்மா?” 

“இல்லை, எங்கப்பாம்மா மேல எனக்கிருக்கிறது பாசம், அவங்களை விட்டுட்டு உங்கப் பின்னால சட்டுன்னு வர முடிஞ்சுது, ஆனா உங்களை விட்டு இனி என்னால எங்கேயும் போக முடியாது.” அந்த வார்த்தைகள் அவனைக் கட்டிப் போட்டிருக்க வேண்டும்.

“இப்ப நான் என்ன செய்யணும்?” 

“தெரியாது.” 

“நமக்குள்ள எது நடந்தாலும் அது இயல்பா நடக்கணுமில்லைம்மா?” ஒரு குழந்தையிடம் பேசுவது போல அவன் பேசிக் கொண்டிருந்தான். அந்த அரையிருளிலும் அவள் தலையாட்டுவது அவனுக்குத் தெரிந்தது.

“நாதியில்லாம இருக்கேன்னு இங்க யாரும் பாவப்பட்டு உன்னைக் கட்டிக்கலை, அப்பிடி யாரும் யாரையும் கட்டிக்கவும் முடியாது, அதை முதல்ல புரிஞ்சுக்கோ, புடிக்காத பொண்ணுக்காகத்தான் நுவரெலியாவுல இருந்து பூ வரவழைப்பாங்களா? அதுவும் ராத்திரியோட ராத்திரியா!”

“ஆனா நான் புடவைக் கட்டினப்போ உங்களுக்குப் புடிக்கலையே! மாமி, ரெஹான் மச்சான் எல்லாரும் நல்லாருக்குன்னுதானே சொன்னாங்க, ஆனா நீங்க சொல்லலையே!”

“நல்லாருக்குன்னு சொல்லலேன்னா புடிக்கலைன்னு அர்த்தமா?”

“அப்ப என்னன்னு எடுத்துக்கிறது? உங்க மனசுல என்ன இருக்குன்னு நான் என்ன புகுந்தா பார்க்க முடியும்? நீங்கதானே வாயைத் திறந்து சொல்லணும்?” 

“சரிடீ! அந்தப் புடவையில இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருந்தே, ரெஹான் உன்னைப் பார்த்து விசிலடிச்சதும் நான் கடுப்பாகிட்டேன், எம் பொண்டாட்டியைப் பார்த்து இவன்‌ எதுக்கு விசிலடிக்கணும்னு எரிச்சல் வந்தது, போதுமா?” அவன் படபடவென பொரியவும் பெண் திகைத்துப் போனாள். இப்படியெல்லாம் அமர் பேசுவானா?! அதுவும் தன்னிடம்?! பக்கென்று சிரித்தவள் அவனுக்கு முதுகுகாட்டிப் படுத்துக் கொண்டாள். அமருக்கும் என்ன தோன்றியதோ! ஒரு புன்னகையோடு திரும்பிப் படுத்துக்கொண்டான்.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 13

அத்தியாயம் 13அடுத்தநாள் காலை ஆல்யா நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஆனால் அவள் அறைக்குள் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிவாசலில் 'பாங்கு' சொல்லும் சத்தம் கேட்டது. இலேசாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். அமர்தான் எழுந்து பள்ளிவாசலுக்குப் போவதற்கு ஆயத்தமாகிக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்