அத்தியாயம் 13
அத்தியாயம் 13
அடுத்தநாள் காலை ஆல்யா நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஆனால் அவள் அறைக்குள் யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிவாசலில் ‘பாங்கு’ சொல்லும் சத்தம் கேட்டது. இலேசாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். அமர்தான் எழுந்து பள்ளிவாசலுக்குப் போவதற்கு ஆயத்தமாகிக் கெண்டிருந்தான். கரீமும் தவறாமல் காலைத் தொழுகைக்குப் பள்ளிவாசலுக்குப் போய்விடுவார்.
“ஆல்யா, எந்திரி… பாங்கு சொல்லிட்டாங்க.” என்றவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே போய்விட்டான். கண்களைக் கசக்கியபடி எழுந்தவள் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தொழுகையை நிறைவேற்றினாள்.
“ஆல்யா, வந்து டீ குடி.” சல்மா கிச்சனில் இருந்தபடி குரல் கொடுத்தார். இவர்கள் வீட்டில் எப்போதும் காலையிலேயே எல்லோரும் எழுந்துவிடுவார்கள். அதன்பிறகு அவரவர் வேலைகளுக்கு நேரம் சரியாக இருக்கும். யூனிக்குப் போகும் வேலை இல்லை என்பதால் தொழுகையை முடித்தவள் அப்படியே வந்து சோஃபாவில் படுத்துக் கொண்டாள். பெண் இலேசாகக் கண்ணயர்ந்த நேரம்,
“ஆலி… ஆலிம்மா…” கரீமின் குரல் மகளைச் செல்லமாக அழைத்தது.
“என்னப்பா…” என்றாள் மகள் கண்களைத் திறவாமலே.
“அப்பா உனக்கு ஆப்பம் வாங்கிட்டு வந்திருக்கேன், எந்திரிம்மா, சூடா சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும்.”
“ம்…” இப்போதும் கண்களைத் திறக்காமலேயே பெண் பதில் சொன்னது.
“பொண்ணு ரெண்டு நாள் வீட்டுல இல்லைன்னா இவங்க பண்ணுற அலப்பறையைத் தாங்க முடியாது, தொழுதுட்டு வரும்போது ஆப்பம் வாங்கிட்டு வர்றதென்ன, ஆலிம்மா ஆலிம்மான்னு கொஞ்சுறதென்ன…” சல்மாவின் குரல் ஒலிக்கவும் ஆல்யா மெதுவாகக் கண்களைத் திறந்தாள். அம்மா யாருக்கு இத்தனை விளக்கம் கொடுக்கிறார் என்று அவளுக்குப் புரியவில்லை. அவளுக்கு எதிரே கிடந்த சோஃபாவில் அமர்ந்தபடி இவளையே பார்த்திருந்தான் அமர். முகத்தில் ஒரு கேலிப்புன்னகை.
“எடுத்துக்கோப்பா.” சல்மா மருமகனுக்கும் கணவருக்கும் டீ பரிமாறிக் கொண்டிருந்தார்.
“டீ குடிக்காம அப்பிடி என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு?!” அம்மா ஒரு அதட்டல் போடவும் சட்டென்று எழுந்து உட்கார்ந்தது பெண்.
“ஏன் இப்போ அவளைத் திட்டுறே சல்மா? கொஞ்ச நேரம் தூங்கினா என்னவாம்?” இது கரீம்.
“நீ சாப்பிடு ஆலிம்மா, ஆப்பம் சூடா இருக்குடா.” தேங்காய்ப்பால், சீனி சேர்த்த அந்த உணவுப் பதார்த்தத்தை அவளுக்கு மிகவும் பிடிக்கும். இலேசாகப் பசியும் தோன்ற காஃபி டேபிளில் இருந்த ஆப்பத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தாள். சல்மா கொண்டு வந்து கொடுத்த டீயை வாங்கியவள் ரூமிற்கு வந்துவிட்டாள். அதற்குமேல் அங்கே உட்கார்ந்திருக்க ஒரு மாதிரியாக இருந்தது.
“இந்த அப்பாக்கு வேற வேலையில்லை, இப்ப எதுக்கு அந்த மனுஷன் முன்னாடி ஆலிம்மா ஆலிம்மான்னு ஏலம் போடணும்!” வாய்க்குள் முணுமுணுத்தவள் கையிலிருந்த பதார்த்தங்களை அப்படியே வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அமர் அறைக்குள் வருவது தெரிந்தது. கண்களைத் திறக்காமல் அப்படியே படுத்திருந்தாள்.
“ஆலிம்மா…” வேண்டுமென்றே அவன் கரீம் போல அழைத்தபடி இவள் பக்கத்தில் உட்காரவும் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழும்பினாள் பெண்.
“மாமாவோட செல்லப் பொண்ணுன்னு தெரியும், ஆனா இங்க அம்மிணிக்குச் செல்லம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கே!”
“அதெல்லாம் இல்லை.” பெண் நெளிந்தாள்.
“அம்மா கிச்சன்ல வேலையா இருக்காங்க, போய் ஹெல்ப் பண்ணாம சோஃபாவுல ஒரு குட்டித் தூக்கம்?”
“அது… வீட்டுல எப்பவும் அம்மாதான் டீ போடுவாங்க, இல்லைன்னா மஹி இருந்தா அவ போடுவா.”
“டீ போட தெரியுமா?”
“போடுவேன், ஆனா அம்மா மாதிரி வராது.”
“சமையல்?” அந்தக் கேள்விக்குப் பெண் உதட்டைப் பிதுக்கியது. அமருக்குச் சிரிப்பு வந்தாலும் அதை அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. கொஞ்சம் கண்டிப்பான குரலிலேயே பேசினான்.
“இந்த வீட்டுல நீ சின்னப் பொண்ணு ஆல்யா, இங்க நீ எப்பிடி வேணும்னாலும் இருக்கலாம், ஆனா நம்ம வீட்டுல அப்பிடியில்லை, அங்க நீ மூத்த மருமகள், உனக்குன்னு நிறையப் பொறுப்புகள் இருக்கு, அதைப் புரிஞ்சு நீ நடந்துக்கணும்.”
“ம்…” சமர்த்துப் பெண்ணாகத் தலையை ஆட்டியது பெண். கூந்தல் கலைந்து கிடந்தது. நேற்று இரவு அணிந்த அதே இரவு ஆடையில் இருந்தாள். ஒப்பனை எதுவுமில்லாத பால் போன்ற முகம். கண் இமைகள் இரண்டும் விசிறி போல அசைந்து கொண்டிருந்தன. அவள் உண்ட ஆப்பத்தின் இனிப்புத் துகள் ஒன்று இதழோரம் ஒட்டியிருக்கவும் அதைக் கைநீட்டித் துடைத்துவிட்டான் அமர்.
“அதுக்கப்புறம் ரெஹான் உங்கிட்ட எதுவும் பேசினானா?”
“இல்லை, நீங்களும் எதுவும் பேசப்போறதில்லையா?”
“இல்லை ஆல்யா, அந்த விஷயம் சம்பந்தமா நான் அவங்கிட்டப் பேசுறது மரியாதை இல்லை, அவனுக்கு எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லட்டும், ஒருவேளை சொல்லுற அளவுக்கு விஷயம் முக்கியமானதில்லையோ என்னமோ!”
“ஐயையோ! எப்பிடி முக்கியமான விஷயமில்லாமப் போகும்?! அவ்வளவு நெருக்கமா பேசிக்கிறாங்க!”
“அப்பிடி என்ன நெருக்கமா பேசிக்கிட்டாங்க?” இப்போது வேண்டுமென்றே கேட்டான் இளவல். அன்றைக்கும் இதைப்பற்றி அவளிடம் கேட்ட போது அவள் முகம் சிவந்து போனதே! இப்போதும் அதே போல சிவந்து போனவளைப் பார்த்த போது அவனுக்கு ஆசையாக இருந்தது. ஒற்றை விரலால் அவள் கன்னம் தடவினான்.
“நான் இப்போ கிளம்பணும்மா, மதியம் இங்க சாப்பிட்டுட்டு அப்பிடியே வீட்டுக்குக் போற மாதிரி இருக்கும், அதுக்கு ஏத்த மாதிரி ப்ளான் பண்ணிக்கோ.” அவள் தலையை ஆட்டவும் எழுந்து டவலோடு குளியலறைக்குள் போய்விட்டான். புன்னகை முகத்தில் உறைய அமர்ந்திருந்தது பெண்.
***
ரெஹான் இலங்கை வந்து இரண்டு வாரங்கள் நிறைவு பெற்றிருந்தன. இன்னும் இரண்டொரு நாட்களில் அவன் லண்டன் கிளம்ப வேண்டும். இப்போதிருந்தே தனது உடமைகளை ஆயத்தம் பண்ண ஆரம்பித்திருந்தான். இன்பம் சதா கண்ணீரைத் துடைத்தபடியே நடமாடிக் கொண்டிருந்தார். ஆல்யாவிற்கும் கவலையாக இருந்தது. வீட்டில் இருக்கும் ஒரு நபர் சட்டென்று இல்லாமல் போனால் அது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.
அவர்கள் வீட்டிலும் மஹிரா வெளிநாடு போனபோது இப்படித்தான் இருந்தது. இத்தனைக்கும் அவள் அக்காள் அதிகம் யாரோடும் ஒட்டாத பேர்வழி. அதற்கே அவர்கள் வீட்டில் அனைவரும் தவித்துப் போவார்கள். இங்கே ரெஹான் அப்படியல்லவே! கலகல பேர்வழி. அவன் வீட்டில் இருந்தால் கேட்கவும் வேண்டாம். ஒன்று ஆல்யாவோடு வம்பு வளர்ப்பான். இல்லையென்றால் இன்பத்தைச் சீண்டுவான். அவன் அமைதியாகப் பேசும் ஒரேயொரு நபர் அமர் மட்டும்தான்.
“இப்போ எதுக்கு எங்கம்மா மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டுத் திரியுறாங்களாம்?” இன்பத்தைத் தோளோடு அணைத்தபடி அவன் செல்லம் கொஞ்ச அந்த அம்மாள் உடைந்து அழுதுவிட்டார். ஆல்யாவிற்கும் கவலையாகிப் போனது.
“என்னம்மா நீங்க! எதுக்கு இப்போ சின்னக் குழந்தை மாதிரி அழுறீங்க? படிப்பு முடிய இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு, அதை முடிச்சுட்டு உங்கக்கிட்ட ஓடி வந்திருவேன்.” என்றான் அம்மாவைச் சமாதானப்படுத்துவது போல.
“மாமி, ரெஹான் மச்சானுக்கும் சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சிடுங்க, அப்ப உங்களைவிட்டு எங்கேயும் போக மாட்டாங்க.”
“அடியேய்! எங்கம்மாவை இப்போ எதுக்கு நீ வீணா உசுப்பி விடுற? இருபத்தி அஞ்சு வயசுல யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா?”
“ஏன் தம்பி? பண்ணினா என்ன? அம்மா உங்களுக்காக ஒரு பொண்ணைப் பார்த்தா நீங்கக் கட்டிக்க மாட்டீங்களா?” கண்களைத் துடைத்தபடி கேட்டார் இன்பம்.
“தாராளமா கட்டிக்குவேம்மா, அதுக்கு முன்னாடி உங்க மகன் நல்லதா ஒரு வேலையில உட்கார வேணாமா? அதுக்கப்புறந்தானே கல்யாணம் பண்ணிக்கணும்?”
“எல்லா வேலையையும் சீக்கிரமா முடிச்சுட்டு வந்திருங்க ரெஹான், அம்மா இன்னும் எவ்வளவு காலம் உயிரோட இருப்பேன்னு தெரியாது, உங்கக் கூட எல்லாம் நான் திரும்பவும் ஒன்னா கொஞ்ச காலம் வாழணும்.” சொன்ன அம்மாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் மகன்.
“அடேயப்பா! அப்பிடியென்ன வயசாகிப் போச்சு எங்கம்மாக்கு? இந்தா நிற்கிறவ பெத்துப் போடுறதை அப்போ யாரு வளர்க்கிறதாம்? இவளைப் பார்த்தா ஒழுங்கா புள்ளை வளர்க்கிறவ மாதிரியா தெரியுது?”
“ஏன்? நீங்க மட்டும் என்ன பண்ணப் போறீங்களாம்? இப்பிடியே இருந்துரப் போறீங்களா? நாளைக்கு நீங்களும் கல்யாணம் பண்ணிப் பெத்துக்கத்தானே வேணும்.”
“யாரு இல்லைன்னா, முதல்ல நீ அதுக்கு வழியைப் பண்ணு, எங்கம்மாக்கு ரொம்ப போரடிக்குதாம்.” இலகுவாகப் பேச்சைத் திசை திருப்பியிருந்தான் ரெஹான்.
“தம்பி சொல்றதுதான் சரி, முதல்ல நீ அதுக்கு வழியைப் பண்ணு ஆல்யா.” என்றவர் ஏதோ வேலையாக அப்பால் போய்விட்டார்.
“என்ன மச்சான், பேச்சைக் கெட்டிக்காரத்தனமா மாத்திட்டதா நினைப்பா?”
“ஆல்யா, இப்போதைக்கு அம்மாக்கிட்ட எதையும் உளறி வெக்காதே.”
“எவ்வளவு பாசமா இருக்காங்க, எதுக்கு அவங்கக்கிட்ட மறைக்கிறீங்க? உங்களுக்கே கஷ்டமா இல்லையா?”
“ஏய்! என்னப் பேசுறே நீ?! எவ்வளவு செலவு பண்ணி எங்கண்ணா என்னைப் படிக்க வெக்கிறான் தெரியுமா? படிப்பை இன்னும் முடிக்காம நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு போய் நிற்க முடியுமா?”
“இது காதலிக்க ஆரம்பிக்கும் போது புரியலையா?”
“போடீ! உனக்கு அதெல்லாம் எங்கப் புரியப் போகுது! இவ மட்டும் பெரிய யோக்கியம் மாதிரி பேசுறா!”
“இப்ப என்னதான் பண்ணப் போறீங்க நீங்க?”
“அண்ணா உங்கிட்ட ஏதாவது பேசினானா?”
“உங்களுக்கு எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லட்டும்னு சொன்னாங்க.” அந்தப் பதிலில் ரெஹானின் முகம் விம்மியது.
“இதான் எங்கண்ணன்! என்னை எவ்வளவு தூரம் புரிஞ்சு வெச்சிருக்கான் பார்த்தியா?”
“ஆனா அந்த அண்ணனுக்கு நீங்க நியாயம் செய்யுறீங்களா?”
“இங்க யாரும் யாருக்கும் அநியாயம் பண்ணலை, அம்மிணி கொஞ்ச நாளைக்கு வாயை மூடிக்கிட்டு எங்கண்ணா கூட ஒழுங்கா குடும்பம் நடத்துற வழியைப் பாருங்க.” சொன்னவனை முறைத்துவிட்டுத் தனது அறைக்கு வந்துவிட்டாள் ஆல்யா.
அன்றைக்கு ரெஹான் லண்டன் புறப்படுகிறான். ஏர்போர்ட்டிற்கு அந்த ப்ளாக் ஆடி போய்க் கொண்டிருந்தது. எவ்வளவு அழைத்தும் இவர்களோடு வர இன்பம் சம்மதிக்கவில்லை. கண்ணீர் மல்க இளைய மகனை முத்தமிடட்டவர் அவனுக்கு விடை கொடுத்தார். மகன்கள் இருவருக்கும் அம்மாவைப் பற்றித் தெரியும் என்பதால் அமைதியாக இருந்துவிட்டார்கள்.
“நீங்களும் எங்கக்கூட வாங்களேன் மாமி.”
“இல்லைம்மா, நீங்கப் போயிட்டு வாங்க.” அதற்கு மேல் இன்பத்தை யாராலும் வற்புறுத்தவும் முடியவில்லை. விமான நிலையத்தில் செய்யவேண்டிய கடமைகளை முடித்துக்கொண்டு ரெஹான் உள்ளே செல்ல ஆயத்தமானான். அமர் எதுவும் பேசாமல் தம்பியைப் பார்த்துப் புன்னகைத்தான். அண்ணாவையும், ஆல்யாவையும் பார்த்துப் புன்னகைத்தவன் அப்பால் செல்ல எத்தனிக்கும் போது,
“ரெஹான் மச்சான்.” என்றழைத்தவள் அவனிடம் வந்தாள். அமர் சற்று அப்பால் நின்றதால் இவர்கள் பேசிக்கொண்ட எதுவும் அவனுக்குக் கேட்கவில்லை.
“கடைசிவரைக்கும் அவங்க யாருன்னு நீங்க சொல்லவே இல்லையே!”
“ஏய்! அண்ணா நிற்கிறான், நீ என்னப் பேசுறே?!” திணறினான் இளையவன்.
“பரவாயில்லை, எங்கிட்டச் சொல்லுங்க, அவங்கதான் நீங்கக் கட்டிக்கப்போற பொண்ணா?”
“ஆல்யா இதைப்பத்தி நாம அப்புறமா பேசலாம்.”
“அவங்களைத்தான் நீங்கக் கட்டிக்கப் போறீங்களா, இல்லை சும்மா ஃப்ரெண்ட்ஸா?” இதற்கு மேல் தான் எதுவும் பேசாமல் இவள் விடப்போவதில்லை என்று புரிந்து போக ரெஹான் வாயைத் திறந்தான்.
“அவ இல்லைன்னா வேற யாருமே இல்லை.”
“ஓ! அவங்க எப்பிடி? அவங்களும் உங்கள மாதிரி உறுதியா இருக்காங்களா?”
“உனக்கு நான் கொண்டு வந்த கிஃப்ட்ஸ் எல்லாம் அவ வாங்கிக் குடுத்ததுதான், எம்மேல மட்டுமில்லை, என்னோட குடும்பத்து மேலயும் அவ பைத்தியமா இருக்கா?”
“கேட்கிறேன்னு நீங்கத் தப்பா எடுத்துக்கக் கூடாது, முஸ்லீம் பொண்ணா?” அந்தக் கேள்விக்குப் புன்னகைத்தவன் ஆமென்று தலையாட்டினான்.
“ஆனா பார்க்கிறதுக்கு அங்க பொறந்து வளர்ந்தவங்க மாதிரி இருக்காங்களே?”
“உம் புருஷன் உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கான், நீ கிளம்புற வழியைப் பாரு.” என்றவன் தனது கையிலிருந்த பாஸ்போர்ட்டால் அவள் தலையில் ஒரு அடி வைத்தான். மீண்டும் இருவரையும் பார்த்துச் சிரித்த ரெஹான் போய்விட்டான். கணவனும் மனைவியும் கார் பார்க்கிங்கிற்கு வந்தார்கள். ஊரிலிருந்து ஏர்போர்ட்டிற்கு வந்தது அத்தனைக் களைப்பாக இருந்தது.
“என்ன சொல்றாரு உங்கக் கொழுந்தனாரு?” ரெஹானும் கூட வந்ததால் இதுவரை நேரமும் பின்சீட்டில் அமர்ந்திருந்தவள் இப்போது அமருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
“கல்லுல இருந்து நாருரிக்கிற கணக்கா இருக்கு! வாய்ல இருந்து ஒரு வார்த்தை வர மாட்டேங்குது, அவங்கண்ணா அவரை நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்களாம், எதை, எப்போ அவருக்கிட்டச் சொல்லணும்னு இவருக்குத் தெரியுமாம், மறைக்கிற நோக்கம் எதுவும் உங்க தம்பிக்கு இல்லையாம்!” இரு கைகளையும் விரித்து அவள் அபிநயத்தோடு சொன்னாள்.
“அப்ப என்னமோ இருக்கு?” அவன் குரல் ஆழ்ந்து ஒலிக்கவும் அவள் ஆமென்பது போல தலையை ஆட்டினாள். சீட்டில் வாகாக இப்போது பெண் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டது.
“டயர்டா இருக்கா?”
“ம்… டீ ஒன்னு குடிச்சா நல்லா இருக்குமில்லை?” என்று கேட்கவும் அவளது சீட் பெல்ட்டை அவளுக்கு அணிவித்தவன் காரை ஸ்டார்ட் செய்தான். பத்து நிமிட ஓட்டத்தில் ஓர் உயர்தர ஹோட்டல் முன்பாக காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி உள்ளே போனார்கள். காலையில் ஊரிலிருந்து ஆரம்பித்த பயணம். மதியம் இரண்டு மணிக்கு ஏர்போர்ட் வந்துவிட்டார்கள். இப்போது நேரம் மாலை ஐந்து மணி. எதற்கும் இருக்கட்டும் என்று ஆல்யா இரண்டு செட் ஆடைகள் எடுத்துக்கொண்டுதான் வந்திருந்தாள்.
“இன்னைக்கே ஊருக்குப் போறோமா?”
“தொடர்ந்து ட்ராவல் பண்ணுறது டயர்டா இருக்கா என்ன?”
“லைட்டா…” அவள் பதிலில் அவன் சிரித்தான். சூடாக சமோசாவும் டீயும் உள்ளே இறங்கியது. அவள் அருகாமை அமருக்கு இதமாக இருந்தது. காலையிலிருந்து அவனோடுதான் அவளும் இருக்கிறாள். ஆனாலும் ஏனோ அவளைவிட்டுத் தள்ளி இருப்பது போலவே உணர்ந்தான் இளவல். ரெஹானும் கூட வந்ததால் பெண் பின்சீட்டில்தான் அமர்ந்திருந்தாள். தம்பி கூடவே இருந்ததாலோ என்னவோ, இவனால் அவளோடு அதிகம் பேச முடியவில்லை.
இயல்பாக இப்போது அவனது கை நீண்டு அவளது உதட்டோரம் ஒட்டிக்கொண்டிருந்த உணவுத் துகளைத் துடைத்துவிட்டது. இப்போதெல்லாம் அவளைத் தொட்டுப் பேச ஆரம்பித்திருந்தான். அவளும் அதை உணர்ந்திருந்தாலும் மறுப்பேதும் சொல்லவில்லை. மௌனமாக அந்தத் தொடுதலை அனுபவித்துக் கொண்டாள்.
“அடுத்த வாரம் யூனிக்குப் போகணுமில்லை?”
“ம்… இன்னும் ரெண்டு வாரத்துல பரீட்சை ஆரம்பிக்குது, அடுத்த வாரத்துல இருந்து படிக்க உட்காரணும்.”
“அடடா! அப்போ இனி அம்மிணியைப் புடிக்க முடியாதுன்னு சொல்லுங்க.” சொன்ன அமர் என்ன நினைத்தானோ! அன்றைக்கே ஊருக்குக் கிளம்பும் எண்ணத்தில் இருந்தவன் அதை அவசரமாக இரத்து செய்தான்.
“ஒரு கால் பண்ணிட்டு வந்தர்றேன் ஆல்யா, நீ சாப்பிடு.” என்றவன் தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டான். சற்று நேரத்தில் அவன் திரும்பி வந்ததும் மீண்டும் அந்த ப்ளாக் ஆடி தனது பயணத்தைத் தொடர்ந்தது. ஆல்யா சிறிது நேரம்தான் கண்ணயர்ந்திருப்பாள். கார் ஓரிடத்தில் நிற்கவும் அமர் இவள் கன்னத்தில் இலேசாகத் தட்டினான்.
“ஆல்யா…” நேரம் ஆறு முப்பது. சுற்றிவர இருள் பரவியிருந்தது. கண்களைத் திறந்து பார்த்த போது ஏதோ ஒரு ரிசார்ட்டின் முன்பாக கார் நின்றிருந்தது.
“எங்க வந்திருக்கோம்?” என்றவளுக்குப் பதில் சொல்லாமல் அவள் பக்கக் கதவைத் திறந்துவிட்டான் கணவன். பெண் இறங்கியதும் அவர்களது உடமைகளை எடுத்துக்கொண்டு இருவரும் உள்ளே போனார்கள். ரிசப்ஷனில் போய் கீயை வாங்கிக் கொண்டு வந்தவன் உள்ளே நடக்க இவளும் பின்தொடர்ந்தாள். அந்த இடம் பார்க்க அற்புதமாக இருந்தது.
“இது எந்த இடம்?” அவள் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. ஒரு அறையின் கதவைத் திறந்தான் அமர். உள்ளே இரண்டு பேர் தங்கும் அனைத்து வசதிகளும் இருந்தன. மாலை நேரச் சூரியன் தனது பணியை முடித்துக் கொள்வது அந்த மேற்குக் கடற்கரையோரம் துல்லியமாகத் தெரிந்தது.
“வாவ்!” ஜன்னலோரம் ஓடிப்போய் அந்த இயற்கையின் அழகை இரசித்தாள் பெண். தங்கத் தகடொன்று வானிலிருந்து அப்படியே இறங்கிக் கடலுக்குள் புதைந்து கொண்டிருந்தது. சூரியனின் தங்க நிறம் கடலைத் தங்கப் பாளமாக மாற்றியிருந்தது. இருமருங்கிலும் சவுக்கு மரங்கள் செறிந்து காணப்பட்டன.
“அவசரத்துக்கு இந்த ரூம்தான் கிடைச்சுது.” அவன் பேச்சை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவள் கவனம் முழுவதும் இயற்கையோடு கலந்திருந்தது. கரீம் தனது பிள்ளைகளை அவ்வப்போது இப்படியெல்லாம் அழைத்துப் போவதுண்டு. ஆனாலும் இந்த பீச் ரிசார்ட் ஆல்யாவை மிகவும் சந்தோஷப்படுத்தியது. வெளிநாட்டுக்காரர்கள் பலரின் சஞ்சாரம் அங்கே தென்பட்டது.
“ரொம்ப அழகா இருக்கு இந்த இடம்!”
“குளிச்சுட்டு வா, டயர்டா இருக்கில்லை.” சூர்ய அஸ்தமனத்தை இரசித்த மகிழ்ச்சியோடு பெண் குளிக்கப் போனது. குளியலறை வசதியோடு கூடிய இரட்டைப் படுக்கையறை. ஆனால் படுக்கை ஒன்றாகவே இருந்தது. பெண் என்ன நினைப்பாளோ என்று அமருக்கு ஒருமாதிரியாக இருந்தது. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவசரத்திற்கு இந்த அறைதான் கிடைத்திருந்தது.
இரண்டு மூன்று அறைகள் ஒன்று சேர்ந்தாற் போல சின்னச்சின்னக் கட்டடங்கள்.
அதற்கு அடுத்தாற் போல சவுக்கு மரத்தோப்பு. கரையோரமாகவும் ஆங்காங்கே சவுக்கு மரங்களுக்கிடையேயும் மஞ்சள் விளக்கொளிகள் எரிந்த வண்ணம் இருந்தன. சீரான இடைவெளியில் கூடாரங்கள் போல கடைகள் தென்பட்டன.
வெளிநாட்டவர்களைக் கவரும் விதமாக இலங்கையின் பிரபல்யமான பல பொருட்கள் அந்தக் கடைகளில் காணப்பட்டன.
கால் நனைத்தபடி அந்த அலைகளின் ஓரமாக அவள் நடந்து கொண்டிருந்தாள். இதுவரை நேரமும் உடலில் ஒட்டியிருந்த சோர்வு எங்கோ காணாமல் போயிருந்தது. இருள் படர்ந்திருந்த போதும் மக்கள் நடமாட்டம் இருந்ததால் பயம் தோன்றவில்லை. அனைத்தையும் மறந்தபடி, உப்புக் காற்றைச் சுவாசித்தபடி நடந்துகொண்டிருந்தாள். கூடவே அவன். தரையில் கால் பதித்திருந்தாலும் வானில் பறப்பது போலவிருந்தது அவளுக்கு. இது எத்தனை நாள் கனவு! அவனோடு தனிமையில் நடப்பது! அதுவும் இப்படிக் கடற்கரையோரமாக… அலைகளில் கால் நனைத்தபடி!
“ஏதாவது வாங்கிக்கிறியா ஆல்யா?” அங்கிருந்த கடைகளைச் சுட்டிக்காட்டிக் கேட்டான் அவன். அனைத்தும் சுற்றுலா பயணிகளுக்கான பொருட்கள். நிச்சயம் பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும்.
“வேணாம் மச்சான், இப்பிடி நடக்கிறதே ரொம்ப சுகமாத்தான் இருக்கு.” அவள் அனுபவித்துச் சொல்லவும் அவனும் வற்புறுத்தவில்லை.
“உங்கப்பாக்கு இன்னைக்கு நித்திரையே வராது, சின்னப்பொண்ணைப் பார்த்து நாலஞ்சு நாள் ஆச்சில்லை? ஆலிம்மா ஆலிம்மான்னு உங்கம்மாக்கிட்டப் புலம்ப ஆரம்பிச்சிருப்பாரு.” அவன் வேண்டுமென்றே அவளைக் கேலி செய்தான். முகத்தில் வெட்கம் தெரிந்தாலும் சின்னதாக ஒரு சோகமும் தெரிந்தது.
“அம்மா அப்பாவை மிஸ் பண்ணுறியா?”
“அப்பிடியெல்லாம் இல்லை, வீட்டுல இருக்கும் போது ஒன்னும் தெரியுறதில்லை, சமயங்கள்ல யார் கூடவும் பேசக்கூட டைம் கிடைக்காது, ஆனா இப்போ ஒருமாதிரியா இருக்கு, அப்பா எதையும் வெளியே காட்டிக்கமாட்டாங்க, ஆனா என்னைத் தேடுவாங்க.” அவள் வார்த்தைகள் உண்மை என்பதை அன்று அவனும் உணர்ந்திருந்தான். இந்த ஒரு வாரமாகத்தான் அவள் அருகாமை அவனுக்குக் கிடைத்திருக்கிறது. இன்றைக்கு ஒருநாள் அவனருகில் அவள் இல்லை என்றபோது அவனும் வெறுமையாகத்தானே உணர்ந்தான். தனக்கே இப்படியென்றால் இத்தனைக் காலம் பெற்று வளர்த்தவர்களுக்கு எப்படி இருக்கும்?!
“எக்ஸாமுக்குப் படிக்கும் போது உங்க வீட்டுல போயிருந்து படி, அப்போ அவங்களுக்கும் உங்கூட இருந்த மாதிரி இருக்கும்.” பெண்ணின் முகம் இப்போது வாடிப் போனது. தலையை மட்டும் ஆட்டினாள்.
“நான் அப்பப்ப உன்னை வந்து பார்க்கிறேன்.”
“ம்…” அவள் சமாதானம் அடையவில்லை என்று பார்த்த போதே புரிந்தது. ஆனாலும் அமர் வெளிப்படையாக எதையும் பேசவில்லை. இப்போதெல்லாம் அவன் மனது அவளை அடிக்கடி நாடுகிறது. அவள் அருகாமையை இரசிக்கிறது. அவளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறது. எந்த இடத்திலும் அவளுக்காக யோசித்து, அவளைப் பாதுகாப்பது சுகமாக இருக்கிறது. இந்த உணர்வுகளெல்லாம் அவனுக்குச் சுமையாக இல்லாமல் சுகமாக வேறு இருக்கிறது!
இப்போது கூட அவளோடு இப்படி நடக்கும் போது அவள் கரத்தைப் பற்றிக் கொள்ளலாம் போல தோன்றுகிறது. அவளோடு உரசியபடி இந்த அலைகளில் நடந்து போனால் நன்றாக இருக்கும் என்று மனது சொல்கிறது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் கணவன். இன்னும் இரண்டு வாரங்களில் அவளுக்குப் பரீட்சை இருக்கிறது. அதற்கு அவள் தயார் பண்ண வேண்டும். தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டால் அவளது கவனம் சிதறிப் போகும். ஏற்கனவே சின்னப்பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான் என்று அவனைக் குற்றவாளி ஆக்கியிருக்கிறான் அவள் அண்ணன். இப்போது அவள் படிப்பு நாசமானால் அதற்கும் இவன்தான் பதில் சொல்லியாக வேண்டும்.
“லேட்டாச்சு, ரூமுக்குப் போகலாம்.” அந்த இதமான சூழல் அவன் மனதை இலகுவாக்கவும் அதைத் தவிர்க்க நினைத்தான் அமர். மனம் கொஞ்சம் அலை பாய்வது போல தெரிந்தது. இதற்கு மேலும் இந்தப் பெண்ணோடு தனித்திருப்பது அத்தனை உசிதம் என்று தோன்றவில்லை. இவள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மாற்றுகிறாள். தனக்குள் ஏதோ இரசாயன மாற்றங்களை உருவாக்குகிறாள். தான் இதுவரை உணராத உணர்வொன்றை உணரச் செய்கிறாள். அமரின் நெகிழ்ந்த உள்ளம் இலேசாகத் தடுமாறியது. தடம் மாறத் தவித்தது!
அறைக்கே உணவு வந்துவிட இருவரும் உண்டார்கள். அவள் இரவு ஆடைக்கு மாறியிருந்தாலும் துப்பட்டா ஒன்றைத் தோள்களில் போட்டிருந்தாள். தான் இங்கே இருந்தால் அவளால் இயல்பாக இருக்க முடியாது என்று அவன் புரிந்து கொண்டான்.
“நீ தூங்கு ஆல்யா, நான் ஒரு ஃபோன் பேசிட்டு வர்றேன்.” என்றவன் பால்கனிக்குப் போய்விட்டான். நிலைமையைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தது. இந்த இராத்தங்கல் இப்போது அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்பதை இளவல் கொஞ்சம் காலதாமதமாக உணர்ந்து கொண்டான். இப்படி வரவேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை. ஒரே நாளில் மீண்டும் அவ்வளவு தூரம் பயணப்பட அவள் சிரமப்படுகிறாள் என்றுதான் இந்த ஏற்பாட்டில் இறங்கினான். ஆனால் இந்தத் தனிமை அவனைத் தடம்புரள செய்கிறது.
உள்ளே அவள் அரவம் எதுவும் கேட்காமல் போகவே மெதுவாக எட்டிப் பார்த்தான். கட்டிலில் மங்கை படுத்திருப்பது தெரிந்தது. உள்ளே வந்தவன் பல்துலக்கிய பின்பு தானும் வந்து கட்டிலில் சாய்ந்தான். இவன் புறமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள். இப்போதும் அவள் தோள்களில் துப்பட்டா!
‘அப்படி என்ன ஒதுக்கம் என்னிடம்?’ என்று மனதுக்குள் குறைப்பட்டவன் அவளைத் தொல்லை செய்யாமல் அந்தத் துப்பட்டாவை மெதுவாக அகற்றினான். அன்றைய அலைச்சல் அவளை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள் பெண். அவள் தலையை மெதுவாக கோதிக் கொடுத்தவன் முகத்தில் புன்னகை. ஒரு காலத்தில் தன் மடிமேல் உட்கார்ந்து தன்னோடு மல்லுக்கு நின்ற சின்னப்பெண். அமர் மச்சான், அமர் மச்சான் என்று அவன் பின்னோடு அலைந்த குட்டிப்பெண். இன்றைக்கு அவனது எல்லாமுமாக ஆகியிருக்கும் மனைவி!
இந்தச் சின்னப் பெண்தான் தங்களின் மூத்த மருமகள் என்பதை அவன் அம்மாவும் அப்பாவும் உணர்ந்திருப்பார்களா? கரீமின் இளைய மகள்தான் தங்கள் அமருக்கு மனைவியாகப் போகிறாள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமா? இன்றைக்கு அவர்கள் இருவரும் உயிரோடு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்?! முகத்தில் புன்னகை ஒன்று தோன்ற அவள் கன்னத்தை மிருதுவாக வருடினான். அவளிடம் இப்போது இலேசான அசைவு தெரிந்தது. கையை அகற்றிக் கொண்டான்.
தனக்காக இஷானிடம் அவள் பட்ட அடிகள் அப்போது நினைவிற்கு வர அவன் உள்ளம் பாகாய் உருகியது. என்மேல் எத்தனைப் பாசம் இருந்திருந்தால் அதையெல்லாம் தாங்கியிருப்பாள்! தன் உடன்பிறப்புகளை மீறிக்கொண்டு தன்னிடம் வருமளவிற்கு அப்படி என்ன இருக்கிறது என்னிடம்?! எதற்காக இந்தப் பேதைப் பெண் இத்தனை அன்பை என்மீது வைத்திருக்கிறது?! எதுவும் புரியவில்லை. ஆனால் அவள் அருகாமை அவனைப் பரவசப்படுத்துகிறது, அமைதிப்படுத்துகிறது. அந்த நொடி ஏனோ அமர் மனதில் அம்மாவின் நியாபகம் வந்தது.
அவளைத் திரும்பிப் பார்த்தான். குழந்தைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் நெற்றி மீது ஒரு முத்தம் வைக்க உள்ளம் ஆசைப்பட்டது. ஆனாலும் அதைச் செய்யாமல் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான். அத்தனை சுலபத்தில் அவனுக்கு நித்திரை வந்துவிடவில்லை. கண்விழித்துப் படுத்திருந்தான்!




