arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 14
Anbe… Azhage! chevron_right பகுதி 14 / 21

அத்தியாயம் 14

visibility 5
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 14

அமரும் ஆல்யாவும் ஊருக்குத் திரும்பியிருந்தார்கள். வந்ததும் வராததுமாக அவர்கள் காதில் வந்து வீழ்ந்தது அந்தச் செய்தி. கரீமிற்கு ஆக்சிடென்ட் ஆகியிருந்தது. வீதியைக் கடக்கும் போது எங்கிருந்தோ வந்த முச்சக்கர வாகனம் ஒன்று மனிதரை இலேசாக உரசியிருந்தது. பெரிதாக அடிபட்டிருக்கவில்லை. ஆனாலும் மனிதர் நிலத்தில் சரிந்திருந்தார். அப்போது காலில் சின்னதாக ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தார்கள்.

செய்தி கேள்விப்பட்டதும் ஆல்யா பதறிப்போனாள். பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் கரீமிற்குச் சர்க்கரை வியாதி இருந்ததால் அவ்வளவு சுலபமாகவும் விட்டுவிட இயலவில்லை. அவர் வயதிற்குக் கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டிய நிலைமைதான். கணவன், மனைவி இருவரும் ஹாஸ்பிடல் வந்திருந்தார்கள். 

“பயப்பிட ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம் ஆல்யா, நீ ரொம்ப வொர்ரி பண்ணிக்காதே.” கணவன் எவ்வளவு ஆறுதல் சொல்லியும் அவள் முகம் தெளியவில்லை. இவர்கள் ஹாஸ்பிடல் வந்தபோது மஹிராவும் அங்குதான் இருந்தாள். கரீமின் மூத்த மகளும் மருமகனும் டாக்டர்கள் என்பதால் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். 

மஹிரா அங்கே இருந்ததால் அமருக்கு அதிக நேரம் இருக்கப் பிடிக்கவில்லை. ஏனோ அந்தப் பெண்ணின் நடத்தைகள் முற்றாக மாறிப்போயிருந்தன.‌ அவர்கள் இருவருக்குமிடையில் ஒருகாலத்தில் திருமணப் பேச்சு இருந்தது உண்மைதான். அதற்காக காணும் போது பேசக்கூட முடியாதா என்ன?! கரீமின் காலில் பெரிதாகக் கட்டுப் போடப்பட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு அனேகமாக ஹாஸ்பிடல் வாசம்தான் என்று அமர் புரிந்துகொண்டான். 

“ஆல்யா, மாமா கூடவே இரு, நான் அடிக்கடி வந்து பார்த்துக்கிறேன்.” என்றவன் கரீமிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். அன்று இரவு ரெஹானும் பத்திரமாக லண்டன் போய் சேர்ந்துவிட்டதாக தகவல் அனுப்பியிருந்தான். தம்பி பற்றி இப்போதைக்கு எதுவும் அம்மாவிடம் பேச வேண்டாம் என்று மூத்த மகன் முடிவெடுத்திருந்தான். எப்போதும் அவர்கள் வீட்டில் என்ன நடந்தாலும் அதில் கரீம் மாமாவிற்கு முக்கிய பங்குண்டு. ரெஹான் பற்றி அவரின் காதில் இலேசாகப் போட்டு வைக்கலாம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அவர் இருக்கும் நிலையில் அதுவும் சாத்தியமில்லை.

“தம்பியும் கிளம்பிப் போயிடுச்சு, இந்நேரம் பார்த்து மருமகளும் எதுக்குத் தம்பி அங்க இருக்கணும்? வீடே வெறிச்சுன்னு இருக்கு!” இன்பம் குறைப்பட்டார். அமருக்கும் அது புரிந்தாலும் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

“இந்த நேரத்துல ஆல்யா அவங்க வீட்டுல இருக்கிறதுதான் முறை, இங்க வந்தாலும் அவ மனசு நிம்மதியா இருக்காதும்மா.”

“அதுவும் சரிதான், பரீட்சை வேற வருதுன்னு சொன்னா.”

“உங்களைக் கூப்பிட்டுப் பேசினாளா?” ஆவலாக வந்தது அமரின் குரல். ஏனென்றால் இதுவரை அவனை மனைவி அழைத்திருக்கவில்லை.

“இல்லை தம்பி, நாந்தான் கூப்பிட்டுப் பேசினேன், நீயும் இல்லை, ரெஹானும் இல்லை, வீடே வெறிச்சோடிப் போச்சுன்னு சொன்னேன்.” புலம்பிவிட்டு அப்பால் போனார் இன்பம். அமரும் பெருமூச்சு விட்டுக்கொண்டான். இன்று காலையில்தான் அவளை ஹாஸ்பிடலில் கொண்டு போய் விட்டிருந்தான். முழுதாக ஒருநாள் கூட இன்னும் கடக்கவில்லை. அதற்குள்ளாக அவளை அவன் மனம் தேட ஆரம்பித்திருந்தது.

“நாளைக்கு நான் ஒரு நடை உங்க மாமாவைப் போய் பார்த்துட்டு வர்றேன், நீங்களும் வர்றீங்களா?” மீண்டும் இவனிடம் வந்து பேச்சுக் கொடுத்தார் அம்மா. அமருக்கு இரண்டு மனமாக இருந்தது. அவளைப் பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் அங்கு போனால் தவிர்க்க முடியாமல் பலரைப் பார்க்க நேரிடும்.

“இல்லைம்மா, நீங்க போய் பார்த்துட்டு வாங்க, இந்நேரம் இஷானும் வந்திருப்பான், எதுக்கு வீணான மனஸ்தாபங்கள்?”

“அதுக்காக நீங்க உங்க மாமா வீட்டுக்குப் போகாம இருக்க முடியுமா?”

“இஷான் மட்டுந்தான் பிரச்சினைன்னா பரவாயில்லை, இப்போ அந்த மஹி பொண்ணும் அவ்வளவு சினேகமா இல்லைம்மா.”

“என்ன தம்பி சொல்றீங்க?!”

“எனக்கும் எதுவும் புரியலைம்மா, அந்தப் பொண்ணுக்கு அப்பிடி நான் என்னப் பண்ணிட்டேன்? என்னைப் பார்க்கிறப்ப எல்லாம் யாரையோ பார்க்கிற மாதிரி போகுது, ஒரு சிரிப்புக்குப் பஞ்சமா?”

“கல்யாணம் வேணாம்னு அவதானே சொன்னா? ஏதோ நாம கல்யாணத்தை நிறுத்தின மாதிரி இது என்ன கூத்து?”

“இந்தப் பேச்சு ஆல்யா காதுக்குப் போக வேணாம்மா, அவ சங்கடப்படுவா.” இவன் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு அழைப்பு வரவும் அலைபேசியை எடுத்துக்கொண்டு அமர் வெளியே வந்துவிட்டான். மனம் கொஞ்சம் சோர்ந்தாற் போல இருந்தது. இங்கேயே இருந்தால் மனம் அவளைத் தேடுமோ?

“ஹலோ.” அழைப்பை ஏற்றான் இளவல். 

“அமர் தம்பி, நான் அருணாசலம் பேசுறேன்.”

“சொல்லுங்க ஐயா.” இவனோடு ஒன்றாகத் தொழில் பண்ணுபவர் இந்த அருணாசலம். அவ்வப்போது அவருக்கு ஆர்டர்கள் அதிகமானால் இவனிடம் உதவி கேட்பார். 

“இந்த வெள்ளிக்கிழமை உங்களுக்கு ஏதாவது ஆர்டர் இருக்காப்பா?”

“இருக்கு ஐயா, என்ன விஷயம்னு சொல்லுங்க?”

“ஒரு கல்யாணம் இருக்குப்பா, சொந்தக்காரங்க வீடு, முடியாதுன்னு சொல்ல முடியலை, அதான்…” 

“எங்க? எந்த ஊர்ல?”

“பிரச்சினையே அதானே! பக்கத்துலன்னா நானே சமாளிச்சிடுவேன், ஆனா விசேஷ வீடு ‘பதுளை’ யில இருக்கு.”

“ஓ…” என்று சற்று நேரம் யோசித்தவன் சட்டென்று முடிவெடுத்தான்.

“பரவாயில்லை ஐயா, நான் இந்த ஆர்டரை எடுத்துக்கிறேன், உங்க சொந்தக்காரங்களுக்கு நான்…”

“என்ன தம்பி இப்பிடிச் சொல்லிட்டீங்க! உங்க சமையலை யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா? அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, என்னென்ன ஐட்டம் பண்ணணும்னு உங்களுக்கு நான் சொல்லிடுறேன், தேவையான காய்கறி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடுறேன், கொஞ்சம் இதை நல்லபடியா முடிச்சுக் குடுத்திடுங்க தம்பி, ரொம்ப உபகாரமா இருக்கும்.”

“ஒன்னும் பிரச்சினை இல்லை ஐயா, நான் பண்ணிக் குடுக்கிறேன்.” எந்தத் தைரியத்தில் அமர் இதற்கு ஒத்துக்கொண்டான் என்று அவனுக்கே புரியவில்லை. இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோல விசேஷங்களைப் பண்ணுவது என்பது அத்தனை சுலபமல்ல. ஆள் பலம் அதிகம் இருந்தாலும் திட்டமிடலுக்கு அவனுக்குக் கால அவகாசம் தேவை. ஆனாலும் இப்போது எதையாவது தீவிரமாக செய்யவேண்டும் என்று தோன்றியதால் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்திருந்தான். 

“அம்மா, நாளைக்கு மதியத்துக்கு மேல நான் பதுளைக்குக் கிளம்ப வேண்டியிருக்கும்.” உள்ளே அம்மாவிற்குக் குரல் கொடுத்தவன் அதன்பிறகு இரண்டொரு அலைபேசி அழைப்புகளை மேற்கொண்டான்.‌ எல்லா வேலைகளைச் செய்த போதும் பின்னணி இசைபோல அவள் நினைவுகள்தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.‌ இவ்வளவு நேரம் ஆகியும் தன்னை அவள் அழைக்கவில்லையே என்ற ஆதங்கம் அவனைக் கொஞ்சம் வாட்டியது. தான் பேச வேண்டியவர்களோடு பேசி முடித்த பிற்பாடுதான் கவனித்தான். அவளது அழைப்பு ஒன்று அவனால் தவறவிடப்பட்டிருக்கிறது என்று.

“எவ்வளவு நேரந்தான் உங்களைக் கூப்பிடுறது! ஃபோன் பிஸியாவே இருக்கு.” இவன் அழைத்ததும் அவள் குரல் படபடவென பொரிந்தது.

“சாரிம்மா, கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்.” அவள் குரலைக் கேட்டதும் அமர் அப்படியே கரைந்து போனான். இயல்பாகவே அவன் குரல் குழைந்து வந்தது.

“இன்னைக்கு நீங்க இங்க வரவே இல்லையே! ரொம்ப வேலையா?”

“வேலைன்னு இல்லை… இஷான் வந்துட்டானா?”

“ம்… வந்துட்டாங்க, அண்ணாதான் ஹாஸ்பிடல்ல அப்பா கூட இருக்காங்க, நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன்.”

“ம்… வீட்டுல யாரு இருக்கா?”

“மஹியும் அவளோட வீட்டுக்காரரும் இங்கதான் இருக்காங்க, அம்மா ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு எவ்வளவோ சொன்னாங்க, ஆனா அண்ணா விடல்லை.”

“லேடீஸ் ஹாஸ்பிடல்ல எதுக்கு? அதான் அண்ணா வந்துட்டானில்லை? ஆலி… நாளைக்கு நான் பதுளை கிளம்புறேன்.” அவனையும் அறியாமல் அவன் உதடுகள் அவளைச் செல்லமாக அழைத்திருந்தன. 

“பதுளைக்கா? எதுக்கு? திரும்பி வர எத்தனை நாளாகும்?” 

“ஒரு ஃபங்ஷன் இருக்கு, தவிர்க்க முடியலை, ரொம்பத் தெரிஞ்சவங்க கேட்கிறாங்க.”

“அதுக்கு எதுக்கு இவ்வளவு தூரம் போகணும்?”

“அப்பிடியென்ன தூரம்? நாளைக்கு மத்தியானம் கிளம்பினா நைட் போய் சேர்ந்திடுவேன்.”

“கார் கொண்டுபோக வேணாம், நீங்க ட்ரைவ் பண்ணாதீங்க.”

“ஏம்மா?”

“வேணாம் வேணாம், எங்கப் பார்த்தாலும் மலைதான் இருக்கும், ப்ளீஸ், ரிஸ்க் எடுக்காதீங்க, கார்தான் வேணும்னா நீங்க ட்ரைவ் பண்ண வேணாம், ட்ரைவர் போட்டுக்கோங்க, அவங்களுக்கு அந்த மாதிரி இடங்கள்ல ஓட்டிப் பழக்கமிருக்கும்.” அவள் கவலையில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“சரிடா.” என்றான் எந்த மறுப்பும் சொல்லாமல். 

“எப்போ திரும்பி வருவீங்க?”

“சனிக்கிழமை.” அந்தப் பதிலில் ஆல்யாவின் முகம் வீழ்ந்து போனது. சனிக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. நான்கு நாட்கள் அவனைப் பார்க்க முடியாது என்பது அவளுக்கு வேதனையாக இருந்தது.

“இப்போ… வீட்டுக்கு வந்திருக்கலாம்…”

“இல்லை ஆல்யா, வீட்டுக்கு வந்தா மாமி விடமாட்டாங்க, அங்க நீ மட்டும் இருந்தா பரவாயில்லை, மஹி வேற இருக்கா, எனக்குக் கொஞ்சம் சங்கடமா இருக்கு.”

“அதுக்காக என்னைப் பார்க்காம நீங்கப் போவீங்களா?” அந்தக் குரல் அவனை என்னவோ செய்ய அடுத்த நொடி தனது ப்ளாக் ஆடியை ஸ்டார்ட் செய்திருந்தான் அமர். அவன் தன்னைப் பார்க்கத்தான் வருகிறான் என்று புரிந்து கொண்டவள் கடகடவென படிகளில் இறங்கிக் கீழே வந்தாள். வீட்டிற்குள் இப்போது அவன் வரமாட்டான் என்று தெரிந்ததால் காரை நிறுத்தும் இடத்திற்கே வந்திருந்தது பெண். சரியாக ஐந்து நிமிடங்களில் அந்த ப்ளாக் ஆடி கரீமின் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தது. காரை விட்டு அவன் இறங்குவதற்கு முன்பாக பெண் அவனை அடைந்திருந்தது. 

இன்று காலையில்தான் அவளை ஹாஸ்பிடலில் விட்டுவிட்டுப் போனோம் என்பது அவனுக்கு மறந்து போனது. ஏதோ நெடுநாட்கள் பிரிந்திருந்தவர்கள் போல இருவரும் உணர்ந்தார்கள். ஆல்யா தன்னை அறியாமலேயே தனது வலது கரத்தால் அவனது இடது கரத்தைப் பற்றிக் கொண்டாள். கண்களில் அத்தனை ஏக்கம்.

“என்ன திடீர்னு பதுளைக்குப் போறீங்க? எங்கிட்டச் சொல்லவே இல்லையே?”

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அந்த ஆர்டர் வந்துச்சு, மறுக்க முடியலை, ரொம்ப வேண்டப்பட்டவங்க.”

“பத்திரமா போயிட்டு வாங்க.”

“நான் போறது இருக்கட்டும், நீ ஒழுங்கா டைமுக்குச் சாப்பிட்டுட்டு படிக்கிற வேலையைப் பார்க்கணும், அப்பா இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திருவாங்க, அதைப்பத்தி யோசிச்சுட்டு இருக்கக் கூடாது, அப்பாவை மஹி பார்த்துக்குவா, நீ உன்னோட பரீட்சையை மட்டும் யோசி.” அவள் தலையை ஆட்டிக் கொண்டாள். 

“ஃபோன் பண்ண டைம் கிடைக்குமான்னு தெரியலை, திடீர்னு வந்த ஆர்டர், நிறைய வேலை இருக்கும், நேரம் கிடைக்கிறப்போ டெக்ஸ்ட் பண்ணுவேன், நீ அதைப்பத்தி எல்லாம் யோசிக்காம படிப்பைக் கவனி.” கொஞ்சம் கறாராகவே சொன்னவன் தனது கட்டை விரலால் அவளது கன்னத்தை வருடிக் கொடுத்தான்.

“நான் கிளம்புறேன் ஆல்யா.” அதற்கு மேல் அங்கே நிற்க அவனால் முடியவில்லை. அவள் பார்வை, பேச்சு, செய்கை என அனைத்தும் அவனை அவள்பால் வீழச் செய்தன. இன்னும் சிறிது நேரம் அங்கே நின்றால் தன்னை வெளிக்காட்டி விடுவோமோ என்று பயந்தவன் கிளம்பிவிட்டான். அவளை அப்படித் தன்னந்தனியே விட்டுச் செல்வது வருத்தமாக இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே அவளது பரீட்சை முட்டுக்கட்டையாக நின்றது. அந்த ப்ளாக் ஆடி கிளம்பிப் போய்விட்டது!

அடுத்து வந்த நான்கு நாட்களும் எப்படிக் கடந்தன என்று அமருக்குத் தெரியாது. வேலை தலைக்கு மேல் இருந்தது. அவன் ஆசைப்பட்டதும் அதுதான். நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டும். எதைப்பற்றியும் சிந்திக்கக் கூடாது. யாரைப் பற்றிய எண்ணமும் அவனைத் தொல்லை செய்யக்கூடாது. ஆனால் தன் மனது ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

அவன் ஒப்புக்கொண்ட கல்யாண வீடு இவர்கள் பகுதியைச் சார்ந்தது அல்ல என்பதால் மெனுவில் புதிய உணவுப் பதார்த்தங்கள் சேர்ந்திருந்தன. அவற்றிற்கெல்லாம் புதிதாக ஆட்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அவனுக்கு இப்போதிருந்த முக்கியமான பிரச்சனைக் கால அவகாசம் போதாது என்பதுதான்.

பகல் முழுவதும் புதிதாக வந்திருக்கும் சமையல்காரர்களோடு அவன் நேரம் செலவழிந்தது. கல்யாண வீட்டுக்காரர்கள் கேட்டிருந்த பதார்த்தங்களைத் தயாரித்து, ருசி பார்த்து, அதில் சில திருத்தங்கள் செய்து என நேரம் இறக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது. பந்தி பரிமாறுவதற்கும் புதிதாகச் சிலரை வேலைக்கமர்த்தி இருந்தான். அவர்களுக்கும் அவன் வேலை செய்யும் பாங்கை விபரிக்க வேண்டியிருந்தது. எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு ஹோட்டல் ரூமிற்கு வந்தால் உடம்பு ஓய்விற்காக ஏங்கும். சில நேரங்களில் இரவு உணவைக் கூட மறந்துவிட்டுத் தூங்கிவிடுவான். 

இந்த நான்கு நாட்களில் ஆல்யாவோடு இரண்டொரு முறைதான் உரையாடி இருப்பான். அதுவும் குறுஞ்செய்தி மூலமாகத்தான். அம்மாவோடு ஒருமுறை பேசியிருந்தான். கரீம் மாமா வீட்டுக்கு வந்துவிட்ட செய்தி கிடைத்தது. இஷான் இன்னும் ஊரில்தான் இருப்பதாக இன்பம் சொல்லியிருந்தார். ஆல்யாவும் பல்கலைக்கழகம் செல்லத் தொடங்கிவிட்டாளாம். அடுத்த வாரம் அவள் பரீட்சைகள் ஆரம்பிக்கின்றனவாம். எல்லா தகவல்களையும் அம்மா மூலமாக அறிந்து கொண்டான்.

“தம்பி, ரொம்ப நன்றி, இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன்.” அருணாசலம் ஐயா அன்று அவனை அழைத்திருந்தார். கல்யாண விருந்து அன்று மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றிருந்தது. அந்த சந்தோஷத்தோடு ஹோட்டல் ரூமிற்கு வந்திருந்தான் அமர். பதுளை நகரின் தட்ப வெப்பம் மிகவும் அருமையாக இருந்தது. மெல்லிய குளிருடன் கூடிய இளவெயில் மேனிக்கு மிகவும் இதமாக இருந்தது. கிழக்கிலங்கையின் வெயிலுக்குப் பழக்கப்பட்டிருந்தவனுக்கு அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருந்தது. 

“பக்கத்துலதான் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி இருக்கு தம்பி, போய் பாருங்க.” இன்றைக்கு சமையல் வேலைக்கு வந்திருந்த ஒரு முதியவர் சொல்லியிருந்தார். சும்மா இங்கே உட்கார்ந்திருப்பதற்கு அதைப் போய் பார்க்கலாம் என்று கிளம்பினான் அமர். கையில் கார் இல்லாதது மிகவும் சிரமமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் டாக்சி, ஆட்டோ என்று அலைய வேண்டியிருந்தது. அவள் அப்படிச் சொன்ன பிற்பாடு காரை கொண்டுவர இவனுக்கு மனம் வரவில்லை. 

அறுபத்தி நான்கு மீட்டர் உயரமான நீர்வீழ்ச்சி. நீர்தான் கொட்டுகிறதா? இல்லையென்றால் யாராவது மலைகளுக்கு நடுவே வெண்புகையை மூட்டியிருக்கிறார்களா? வித்தியாசம் காண இயலாதபடி நீர்த்திவலை சிதறிக்கொண்டிருந்தது. அமைதியாக அங்கிருந்த ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டான் இளவல். ஓய்ந்து உட்காரும் போது அவள் நினைவுகள் அவனை முழுதாக வியாபித்துக் கொண்டன. அழைத்துப் பேசலாமா என ஒரு மனம் அடித்துக் கொண்டது. ஆனாலும் வேண்டாம் என இன்னொரு மனம் இடித்துச் சொன்னது. 

அடுத்த வாரம் அவளுக்குப் பரீட்சை இருக்கிறது.‌ அதற்கு அவள் முழுதாகத் தயாராக வேண்டும். இப்படி அடிக்கடி அழைத்து அந்தப் பெண்ணைத் தான் தொந்தரவு செய்தால் அவளால் எப்படிப் படிப்பில் கவனம் செலுத்த முடியும்?! ஆனாலும் அவன் மனது அவளோடு பேசவேண்டும் என்று அடம்பிடிக்கும் போது அவனால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. நானா இப்படி மாறிப்போனேன் என்று அமருக்கு வியப்பாக இருந்தது!

அவளோடு தன் வாழ்க்கையை இனிதாக வாழவேண்டும் என்ற முடிவில்தான் கல்யாணம் செய்தான். அதற்கான நேரமும், கால அவகாசமும் அப்போது அவனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் நிலைமை இப்போது அப்படியில்லை.‌ கல்யாணமான பத்து நாட்களிலேயே அவன் மனம் என்ன இப்படி அவள் பின்னால் அலைகிறது?! 

எதேச்சையாகத் திரும்பியவனின் கண்களில் அந்த ஜோடி தட்டுப்பட்டது. பாறைகளுக்குப் பின்னால் நின்றிருந்த மரமொன்றில் சாய்ந்தபடி பொங்கி வழியும் இந்தப் பாலாறை இரசித்திருந்தார்கள். அந்தப் பெண் வழிந்தோடும் நீரைத் தொட்டுவிடும் ஆசையில் சற்றே நகர்ந்தாள். வழுவழுப்பான அந்த நிலத்தில் அவள் சரிந்து விழப்போக அந்த வாலிபன் சட்டென்று அவளைத் தாங்கியிருந்தான். சுற்றிவர இருந்த பச்சைக் காட்டிற்கும், அவர்கள் அணிந்திருந்த சிவப்பு ஆடைக்கும், ஏதோ மணிரத்னம் படம் பார்ப்பது போல இருந்தது அமருக்கு. 

பெண்ணைத் தாங்கிப் பிடித்தவன் அத்தோடு நிறுத்தவில்லை. அதற்கு மேலும் அவர்கள் இயற்கையோடு இணைந்து இன்புற்றிருக்க ஒரு புன்சிரிப்புடன் அமர் பார்வையைத் திருப்பிக் கொண்டான். தன்னைப் போல அவர்களுக்கும் புதிதாகத் திருமணம் ஆகியிருக்குமோ?! ஆனால் அவர்கள் சுகிக்கும் இன்பத்தை அவன் அனுபவிக்கவில்லையே! மனது என்ன எதிர்பார்க்கிறது என்று புரியாமல் அலைபேசியை எடுத்தவன் தன் மனைவியை அழைத்தான். முதல் ஓசையிலேயே அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஹலோ.” அவள் குரலில் அவ்வளவு படபடப்பு.

“ஆல்யா, என்னப் பண்ணுறே?”

“சும்மாதான்…‌ கோர்ஸ் வொர்க் இருந்தது, அதைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” அவள் பேசும்போது பின்னணியில் ஏதோ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

“படிக்கிறியா? இல்லை… பாட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கியா?”

“இல்லையில்லை, இவ்வளவு நேரமும் படிச்சேன், இப்பதான் சின்னதா ஒரு ப்ரேக் எடுக்கலாம்னு பாட்டைப் போட்டேன்.”

“டைமை வேஸ்ட் பண்ணாதே, என்னோட பாஸ்போர்ட் எக்ஸ்பயர்ட் ஆச்சுது, அதை ரொம்ப நாளா எடுக்கணும்னு நினைச்சிருந்தேன், இங்க வந்ததோட அப்பிடியே கொழும்புக்குப் போய் அந்த வேலையையும் முடிச்சுட்டு வரலாம்னு இருக்கேன்.”

“ஓ…‌ எப்போ திரும்பி வருவீங்க?”

“உனக்கு எப்ப எக்ஸாம் முடியுது?”

“அடுத்த வாரம்.”

“எனக்கும் வேலை முடிய எப்பிடியும் அடுத்த வாரம் ஆகும், வர்றதுக்கு முன்னாடி உனக்கு நான் கால் பண்ணுறேன்.” என்றவன் அதிகம் பேசாமல் அத்தோடு அழைப்பைத் துண்டித்துவிட்டான். அத்தோடு நிறுத்தாமல் அவன் விரல்கள் யூட்யூப்பை தட்டி அதில் அவள் கேட்ட பாடலைத் தேடியது. அக்னி நட்சத்திர பாடல். பிரபுவும் அமலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். சற்று முன்பு அவன் நேரடியாகப் பார்த்த அதே காட்சி அங்கே படமாக ஓடிக்கொண்டிருந்தது. 

“தூங்காத விழிகள் ரெண்டு… உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…” பாடலை முழுதாகப் பார்த்து முடித்தவன் அப்படியே கண்களை மூடி அமர்ந்து கொண்டான். அப்போதைய அவள் மனநிலையை அப்பட்டமாகப் பாடல் சொன்னது. பாடலின் வரிகளும் அதன் அர்த்தமும் அவன் ஆழ்மனதுக்குள் அப்படியே இறங்கின.

ஒருவாரம் ஓடிப்போயிருந்தது. தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அமர் ஊருக்கு வந்துவிட்டான். இதற்கு மேல் அவனால் வெளியூரில் தங்க முடியாது. தலைக்கு மேல் வேலை கிடந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக கார் இல்லாமல் அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. இன்பம் வீட்டிலில்லை. தூரத்து உறவினர் ஒருவர் வீட்டில் விசேஷமாம். அதற்காக இரண்டு நாட்கள் போய்வருவதாக நேற்று இவனிடம் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தார். 

“ரெண்டு நாள்ல அவசரப்பட்டெல்லாம் வரவேணாம், நல்லா ஒரு வாரம் நின்னு என்ஜாய் பண்ணிட்டு வாங்கம்மா, உங்க அக்கௌன்ட்ல பணம் போட்டிருக்கேன், தேவைப்படும்போது எடுத்துச் செலவழிங்க.” சொல்லித்தான் அனுப்பி வைத்திருந்தான் மூத்த மகன். அந்தப் பெண்மணிக்கும் இதுபோல வாய்ப்புகள் அமைவது அரிது. 

“ஆல்யாவோட பேசினீங்களா தம்பி?”

“அவளுக்குப் பரீட்சை நெருங்குதும்மா, நான் அடிக்கடி கூப்பிட்டுப் பேசினா அவளால படிக்க முடியாது.” மகனின் பதிலில் அம்மாவுக்கு அத்தனைத் திருப்தி ஏற்படவில்லை. ஆனாலும் இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் வாயை மூடிக்கொண்டார்.

“உங்க மாமாக்குக் கால் நல்லாக் குணமாகிட்டு வருது, இஷானும் கிளம்பிப் போயிட்டானாம், ஆல்யா மட்டும் இன்னும் அங்க இருக்கணும்னு எனக்குத் தோணலை.” அழைப்பைத் துண்டிப்பதற்கு முன்பாக இதைச் சொல்லிவிட்டுத்தான் வைத்தார் இன்பம். நீங்கள் இருவரும் இப்படி ஆளுக்கொரு புறமாக இருப்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். அமர் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகிவிட்டான். 

நாளைக்கு அவனுக்கொரு திருமண வீடு இருந்தது. அதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் செய்ய வேண்டும். எல்லா திட்டமிடலும் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இருந்தாலும் இவன் ஒருமுறை மேற்பார்வைப் பார்த்தால்தான் திருப்தியாக இருக்கும். காரை ஸ்டார்ட் செய்து பத்து நாட்களாகிவிட்டது. அதை வேறு பார்க்க வேண்டும். கொஞ்சம் தொலைதூரம் இன்றைக்குக் காரை ஓட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆல்யாவை அழைத்துப் பேசலாம் என்ற எண்ணத்தை இப்போதைக்குக் கைவிட்டான். இப்போது அவன் ஊருக்கு வந்திருப்பது தெரிந்தால் நிச்சயமாக அவர்கள் வீட்டிற்கு அழைப்பாள். இத்தனை வேலைகளை வைத்துக்கொண்டு அவனால் இப்போது அங்கே போகமுடியாது. தான் வந்திருப்பது தெரிந்தால் வீட்டிற்கு வர முயற்சி செய்வாள். அதுவும் இப்போதைக்கு வேண்டாம். வீட்டில் தனக்குத் தேவையான உணவைத் தயார் செய்து உண்டு அன்றைய பொழுதைக் கழித்தான் அமர். 

அடுத்தநாள் வேலை எல்லாம் முடிந்தபோது மாலை நான்கைத் தாண்டியிருந்தது. கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு அப்போதுதான் அமர் வீட்டிற்கு வந்திருப்பான். களைப்பாக இருக்கவும் ஒரு குளியலைப் போட்டுக்கொண்டு கிச்சனுக்கு வந்திருந்தான். அம்மா இருந்திருந்தால் இந்நேரம் சூடான டீ இவன் இருக்குமிடம் தேடி வந்திருக்கும். புன்னகைத்தபடி டீயைத் தயாரித்தவன் அதை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். புயல் போல உள்ளே நுழைந்தாள் அவன் மனைவி. 

கண்கள் இரண்டும் சிவந்து போய் கிடந்தன. கையில் சிலம்பு மாத்திரம் இல்லை.‌ மதுரையை எரித்த கண்ணகி போல ஒரு கோர தாண்டவத்திற்கு ஆயத்தமாக நின்றிருப்பது போலவிருந்தது அவள் தோற்றம். இப்போது அவளை அங்கே எதிர்பார்க்காத அமரும் ஒரு நொடி திகைத்துப் போனான். நீண்ட நாட்களுக்குப் பிறகான தரிசனம்!

“ஆல்யா!”

“ஓ… உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா? மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்.” எகத்தாளமான பதில். அவள் கோபம் அமருக்கும் புரிந்தது. ஆனால் அதற்கு விளக்கம் சொல்ல அவன் நினைக்கவில்லை.

“நேத்தே ஊருக்கு வந்தாச்சு, ஆனாலும் ஒரு ஃபோனைப் போட்டு நான் ஊருக்கு வந்துட்டேன்னு சொல்ல மனசில்லை!” அவள் பேச்சில் அனல் தெறித்தது.

“உனக்கு இந்த வாரம் எக்ஸாம் இருக்குன்னு எனக்குத் தெரியும், அதான் எதுவும் சொல்லலை.”

“பொய்! நீங்கப் பொய் சொல்றீங்க! உங்களுக்கு என்னைப் புடிக்கலை, அதான் அவாய்ட் பண்ணுறீங்க, உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும்.”

“ஏய்! முட்டாள் மாதிரி பேசாதே.”

“ஆமா, நான் முட்டாள்தான், நீங்கக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதும் உங்களுக்கு என்னைப் புடிக்கும்னு முட்டாள் மாதிரி நினைச்சுட்டேன், ஆனா இப்பதான் உண்மைப் புரியுது, உங்களுக்கு என்னைப் புடிக்கலை.”

“ஆல்யா! லூசு மாதிரி பேசாதே, நீயா எதையாவது கற்பனைப் பண்ணிக்கிட்டுப் பேசுவியா?” அவனுக்கு எரிச்சல் வந்தது.

“இதுல கற்பனைப் பண்ண என்ன இருக்கு? அதான் எல்லாம் தெளிவா தெரியுதே, ஹாஸ்பிடல் போனா நாலு தடவைக் கூப்பிட்டுப் பேசுறாரு மஹியோட புருஷன், அவங்க அம்மா வீட்டுக்குப் போனா பத்து கால் வருது, இங்க என்ன நடக்குது? அப்பாக்குக் கால் உடைஞ்சதுதான் தாமதம், இதான் நல்ல சான்ஸ்னு அம்மா வீட்டுல மெல்லத் தள்ளிவிட்டுட்டு ஊருக்குப் போய் பத்து நாளாச்சு! ஒரு ஃபோன் பண்ணி நாலு வார்த்தைப் பேச முடியலை.”

“பத்துத் தடவைப் பேசலைன்னா உன்னை மறந்துட்டாங்கன்னு அர்த்தமா?”

“வேற என்னன்னு எடுத்துக்கிறது? மனசுக்குப் புடிச்சுக் கட்டியிருந்தா இப்பிடியெல்லாம் நடந்துப்பீங்களா? இல்லையே! இது பாவம் பார்த்துக் கட்டிக்கிட்டதுதானே, இவளுக்கு நம்மளை விட்டா வேற போக்கிடம் இல்லைன்னுதானே…” அவள் மேலே மேலேயென்று பேசிக்கொண்டு போக அவளருகில் வந்த அமர் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். இப்படித் தடாலடியாக அவள் வந்து நிற்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. நாளைக்கும் அவளுக்குப் பரீட்சை உண்டு. அதை அவள் முடித்த பிற்பாடு அவளைப் போய் அழைத்து வரலாம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் இந்தப் பெண் வந்து நிற்கிறதே!

“நீயா எதையாவது கற்பனைப் பண்ணித் தப்புத் தப்பாப் பேசக்கூடாது.” கொஞ்சம் கடிந்து சொன்னவன் அவள் தோளை வருடிக் கொடுத்தான். ஆல்யா இப்போது இலேசாக விசும்ப ஆரம்பித்தாள். இத்தனை நாளும் அவனைப் பிரிந்திருந்த ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவதைப் போல இருந்தது. 

“அழாதே! எங்கூட இருக்கும் போது நீ அழக்கூடாதுன்னு உங்கிட்ட முன்னாடியே நான் சொல்லியிருக்கேன்.” அவளை மென்மையாக அணைத்திருந்தவன் உச்சந்தலையில் முத்தமிட்டான். பெண் நடப்பது எதையும் நம்பமுடியாமல் தடுமாறி நின்றிருந்தது. இத்தனை நாள் பிரிவு, அவனது புறக்கணிப்பு, எல்லாமுமாக அவளை ஏதேதோ கசப்பான கற்பனைகளில் ஆழ்த்தியிருந்தது. அவை எல்லாவற்றையும் யாரிடமும் சொல்லிப் புலம்பவும் முடியாத சூழ்நிலை பெண்ணுக்கு. வீட்டில் அப்பா இருந்த நிலை ஒரு புறம் என்றால், தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த பரீட்சை இன்னொரு புறம். அது போதாதென்று அவளது உடன்பிறப்புகள்.

“இதுக்குத்தான் அமர் மச்சான் வேணாம்னு உங்கிட்ட அப்பவே சொன்னேன், நீதான் கேட்கலை!” எங்கே அமர் மீது குற்றம் பிடிக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் மஹிராவின் வாய்க்கு அவல் போட இளையவள் தயாரில்லை. தனக்குள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டாள். நிம்மதியாக அழக்கூட அவளால் முடியவில்லை. எல்லா கோபமும் அமர் மேல்தான் பாய்ந்தது. பொங்கி வந்த பாலில் நீரைத் தெளித்தது போல சுனாமியாக வந்தவளைத் தணியச் செய்தது அவன் ஒற்றை அணைப்பு!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 15

அத்தியாயம் 15இருவருக்குமே அந்த அணைப்பு இதமாக, வேண்டியதாக இருந்திருக்கும் போலும். அப்படியே அசையாமல் நின்றிருந்தார்கள். அவன் கட்டை விரலொன்று அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டது. "மாமா எப்பிடி இருக்காங்க?""ம்... நல்லா இருக்காங்க, அண்ணா கிளம்பிப் போயிட்டான், மஹியும் அவளோட வீட்டுக்காரரும் அப்பப்பதான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்