arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 15
Anbe… Azhage! chevron_right பகுதி 15 / 21

அத்தியாயம் 15

visibility 5
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 15

இருவருக்குமே அந்த அணைப்பு இதமாக, வேண்டியதாக இருந்திருக்கும் போலும். அப்படியே அசையாமல் நின்றிருந்தார்கள். அவன் கட்டை விரலொன்று அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டது. 

“மாமா எப்பிடி இருக்காங்க?”

“ம்… நல்லா இருக்காங்க, அண்ணா கிளம்பிப் போயிட்டான், மஹியும் அவளோட வீட்டுக்காரரும் அப்பப்பதான் எங்க வீட்டுக்கு வந்து போறாங்க.” அவள் விளக்கத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. எங்கள் வீட்டுக்கு இப்போது நீ எந்தத் தடையும் இல்லாமல் வரலாம் என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது.

“எக்ஸாம் என்னாச்சு?”

“நான் நல்லாவே பண்ணலை, இந்தத் தடவை நான் ஃபெயில்தான்.” அவள் பதிலில் அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவன்,

“ஏய்! என்ன ஆல்யா சொல்றே?!” என்றான் ஆச்சரியமாக.

“நான் ஒன்னுமே படிக்கலை, எல்லா பேப்பர்லயும் முட்டைதான் வாங்கப் போறேன்.” என்றாள் குழந்தைப் போல.

“முட்டை வாங்கப் போறியா? இதுக்குத்தான் நான் உன்னை உங்கம்மா வீட்டுக்கு அனுப்பினேனா? விளையாடுறியா நீ?” அவனுக்கு இப்போது கோபம் வந்தது.

“உங்களை யாரு என்னை எங்கம்மா வீட்டுக்கு அனுப்பச் சொன்னது? நான் இங்க இருந்து எல்லாத்தையும் ஒழுங்கா படிச்சிருப்பேன்.” அவளும் கோபமாகச் சொன்னவள் அங்கிருந்த சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டாள்.

“நீ ஒழுங்கா படிக்காம பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தா எப்பிடி எக்ஸாம் பாஸ் பண்ண முடியும்? எனக்குக் கெட்ட பெயர் வாங்கிக் குடுக்கிற முடிவுல இருக்கியா?” சோஃபாவில் இருந்தவளின் முகம் நாலு முளத்தில் நீண்டிருந்தது. தன்னை விட்டு இத்தனை நாள் அவன் பிரிந்திருந்த கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. அமருக்கு அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

“நாளைக்கு எக்ஸாம் இருக்கில்லை?”

“ஆமா, ப்ராக்டிகல் இருக்கு.” என்றாள் ஒரு தினுசாக.

“அதையாவது ஒழுங்காப் பண்ணுவியா?” அவன் கேள்வி அவளுக்குக் கோபத்தை உண்டு பண்ணியிருக்கும் போலும். கோபமாக எழுந்தவள் அவனை முறைத்துவிட்டு, தட்தட்டென்று ஒலி எழுப்பியபடி அவளது அறைக்கு நடந்து போனாள். குழந்தைத்தனமான அவள் செய்கைகள் அவனுக்கு மீண்டும் மீண்டும் சிரிப்பையே உண்டாக்கியது. 

“இங்கதான் வர்றேன்னு உங்க வீட்டுல சொல்லிட்டாவது வந்தியா?” எதற்கும் பதிலில்லை. அவள் இஷ்டத்திற்கு ரூமிற்குச் சென்றவள் அமைதியாக இருந்தாள். தனக்காக அவன் போட்டிருந்த டீ ஆறிப்போயிருந்தது. திடுதிடுப்பென்று இவள் வந்ததில் அவன் அதைக் குடிக்க மறந்து போயிருந்தான். பரீட்சையை ஒழுங்காகப் பண்ணவில்லை என்று அவள் சொன்னது கோபத்தை உண்டு பண்ணியிருந்தாலும் அவள் வந்துவிட்டாள் என்பது மனதுக்கு இதமாக இருந்தது. 

மீண்டும் கிச்சனுக்குள் போனவன் இரண்டு பேருக்குமாகச் சேர்த்து டீ தயாரித்தான். அவளிடம் பேச வேண்டும். சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவது நல்லது என்று தோன்றியது. தான் ஒன்று நினைத்து அவளை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டுப் போனால் அதற்கு அவள் வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்கிறாள். இதில் அவள் அக்காளின் கணவரோடு அவனை ஒப்பிட்டு வேறு பேசுகிறாள்.

“மாமி எங்க?” கையில் இரண்டு டீயோடு இவன் அறைக்குள் வந்தான்.

“பரவாயில்லையே, இப்பவாவது மாமியோட ஞாபகம் வந்துச்சே!”

“எங்கப் போயிருக்காங்கன்னு சொல்லுங்க, ஏதாவது கல்யாண வீட்டுக்குப் போயிருக்காங்களா?”

“ஆமா, ஆனா இன்னைக்கு வரமாட்டாங்க, இன்னும் ஒரு வாரம் தங்கிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கேன்.” இவன் டீயை நீட்டவும் வாங்கி அருந்த ஆரம்பித்தாள். அவள் கட்டிலில் அமர்ந்திருக்க அமரும் சற்றுத் தள்ளி உட்கார்ந்தான். இந்த அறைக்குள் பலமுறை வந்திருந்தாலும் அவள் கட்டிலில் அவன் இதுவரை அமர்ந்ததில்லை.

“ரெஹான் மச்சான் பேசினாங்களா?”

“ம்…”

“நீங்க பாஸ்போர்ட் எடுத்துட்டீங்களா?”

“ம்…” அவள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னபடி பானத்தை அருந்தி முடித்தான் அமர். அவள் அருந்தி முடிக்கும் வரை அமைதியாக அங்கேயே அமர்ந்திருந்தான்.

“எம்மேல கோபமா இருக்கீங்களா?” இப்போது தயங்கியபடி வந்தது கேள்வி. அவள் கையிலிருந்த கப்பை வாங்கி அப்பால் வைத்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன… மச்சான்?”

“ஆல்யா… நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியாச்சு, உன்னைப் போல எம் மனசுல ஆழமான காதல் இல்லாம இருக்கலாம், அதுக்காக உன்னை எனக்குப் புடிக்காதுன்னு நீ எப்பிடி முடிவு பண்ணலாம்?”

“இல்லை… நீங்க ஒரு கால் கூட பண்ணலை…”

“கால் பண்ணலைன்னா உன்னைப் புடிக்கலைன்னு அர்த்தமா? உன்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னுதான் கூப்பிடலை.”

“நீங்க கால் பண்ணாததாலதான் நான் டிஸ்டர்ப் ஆனேன்.”

“பதுளை வரைக்கும் போய் ஒரு கல்யாண வீடு பண்ணணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது, ஆனா நான் இங்க இருந்தா உன்னைத் தொல்லைப் பண்ணுவேனோன்னு எனக்குப் பயமா இருந்துச்சு, அதான் கிளம்பிப் போனேன்.” இப்போது அவள் கண்கள் ஆச்சரியத்தைக் காட்டின. 

“எதுக்கு நீ இவ்வளவு ஆச்சரியப்படுறே?”

“உங்களுக்கு… உங்களுக்கு என்னைப் புடிக்குமா?”

“என்னக் கேள்வின்னு இதை நீ திரும்பத் திரும்பக் கேட்கிறே? உன்னைப் புடிக்காமத்தான் கல்யாணம் பண்ணினாங்களா?”

“இல்லை… அது…”

“ஆளுக்கொரு ரூம்ல இருக்கிறதால உன்னைப் புடிக்கலைன்னு அர்த்தமில்லைம்மா.” இதை அவன் சொல்லும் போது அவளுக்கு வெட்கம் வந்திருக்கும் போலும். தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். அவள் முன்னெற்றி மயிரை அவன் இப்போது இலேசாகக் கலைத்துவிட்டான். 

“உங்கண்ணா பண்ணின கெடுபிடியாலதான் நம்மக் கல்யாணம் இவ்வளவு அவசரமா நடந்துச்சு, இல்லைன்னா நீ டிகிரி முடிச்சதுக்கு அப்புறமாத்தான் நான் கல்யாண ஏற்பாட்டைப் பண்ணியிருப்பேன், புரியுதா?”

“ம்…”

“உன்னை விட்டு நான் தள்ளி நிற்கிறேன்னா அதுக்குக் காரணம் இருக்கு, உன்னோட படிப்பு எந்த வகையிலயும் பாதிச்சிரக் கூடாது, உன்னோட கவனம் படிப்பைத் தாண்டி எங்கேயும் போயிரக்கூடாது, அதை நீ புரிஞ்சுக்கணும், அதைவிட்டுட்டு உன்னை எனக்குப் புடிக்கலை, அதாலதான் தள்ளி நிற்கிறேன்னு பைத்தியக்காரத்தனமா யோசிக்கக் கூடாது, நீயே என்னைப் புரிஞ்சுக்கலைன்னா நான் என்னதான் பண்ணுறது?”

“சாரி… நான்…” 

“இதுல மஹி புருஷன் நாலு தடவை கால் பண்ணுறாரு, பத்துத் தடவைப் பேசுறாருன்னு கணக்கு வேற சொல்றே, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு உனக்குப் புரியுதா, இல்லையா?”

“சாரி மச்சான், சாரி, நான் ஏதோ புரியாமப் பேசிட்டேன்.” சற்று அப்பால் அமர்ந்திருந்தவள் இப்போது அவனுக்கு அருகில் வந்திருந்தாள். அவளை மெதுவாகத் தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“நீ இன்னும் சின்னக் குழந்தை இல்லைடா, புரிஞ்சுக்கணும், நான் ஏதாவது பண்ணினா அதுல காரணம் இருக்கும்னு விளங்கிக்கணும், கோபத்துல வாய்க்கு வந்ததைப் பேசிடக்கூடாது.”

“இல்லை, இனிமேல் அதுமாதிரி பேசமாட்டேன், சாரி.” 

“ரெஹானும் கிளம்பிட்டான், நீயும் இல்லைன்னதும் ஒருமாதிரியா இருந்துச்சு, அதான் வெளியூருக்குப் போயிட்டேன், சும்மா இங்க உட்கார்ந்திருக்கிறதுக்கு வேலையை முடிச்ச மாதிரி இருக்குமில்லை?” அவள் கன்னத்தைத் தடவியபடி அவன் பேசிக்கொண்டிருந்தான்.

“மாமிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லு, இங்க இருக்கப்போறியா? இல்லை, உங்க வீட்டுக்குப் போகப்போறியா?”

“நான் இங்கேயே இருக்கேன்.”

“ம்… ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா, சாப்பிடலாம், மத்தியான சாப்பாடுதான் இருக்கு, சூடு பண்ணிச் சாப்பிடலாம்.”

“நான் பண்ணுறேன்.”

“வேணாம், நீ நாளைய எக்ஸாமுக்கு ரெடி பண்ணு, இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு, அதை நல்லபடியா முடி ஆல்யா.” என்றவன் தாங்கள் அருந்திய கோப்பைகளை எடுத்துக் கொண்டு கிச்சனுக்குப் போய்விட்டான். பெண்ணுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. இத்தனை வெளிப்படையாக அமர் தன்னிடம் பேசுவான் என்றே அவள் முதலில் நினைக்கவில்லை. இதில் இருமுறை அணைப்பு! உச்சந்தலையில் முத்தம் வேறு! ஆல்யாவிற்கு ஹோவென்று கத்தலாம் போல இருந்தது. 

குளியலறைக்குள் போனவள் உடம்பு கழுவிவிட்டு உடையை மாற்றிக் கொண்டாள். அம்மாவை அழைத்துத் தகவல் சொல்லிவிட்டுச் சமையல் அறைக்குள் சென்ற போது அவன் உணவை ஆயத்தம் செய்திருந்தான். இன்பத்தை அழைத்து இருவரும் பேசினார்கள். இவள் வீடு வந்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. 

“நாளைக்குக் காலைல எத்தனை மணிக்கு நீ யூனி போகணும் ஆல்யா?”

“எட்டு மணிக்கு.”

“பஸ்ல போக வேணாம், நான் கூட்டிட்டுப் போறேன்.” சம்மதமாகத் தலையை ஆட்டியவள் அதன் பிறகு தனது ரூமிற்குப் போய் படிப்பில் கவனமாகிவிட்டாள். அமரும் தன் வேலைகளை முடித்துக்கொண்டு தூங்கிவிட்டான். 

அடுத்தநாள் காலை அவன்தான் அவளைப் பல்கலைக்கழகம் அழைத்துச் சென்றான். எத்தனை மணிக்குப் பரீட்சை முடியும் என்று தெரியாததால் தான் பஸ்ஸில் வருவதாகக் கூறிச் சென்றிருந்தாள். ஒரு மணி போல அனைத்தும் நிறைவு பெற்றிருக்கப் பெண் பஸ்ஸைப் பிடித்து வீடு வந்திருந்தது. அப்பாவைப் போய் பார்க்க வேண்டும். ஆனால் அதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் நேராக வீடு வந்தாள். இன்பமும் வீட்டிலில்லை. அவன் தனியாக என்ன செய்வானோ என்ற எண்ணம் மனதைக் குடைந்தது.

பஸ்ஸில் வரும் போதெல்லாம் நேற்றைய நாள்தான் அவள் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தது. தான் ஊர் வந்துவிட்டதை அவன் தன்னிடம் சொல்லவில்லையே என்கின்ற ஆதங்கம் மேலிட அவனோடு ஒரு சண்டைக்கு ஆயத்தமாகத்தான் வந்திருந்தாள் பெண். ஆனால் அவன் நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டான்.

அவன் அணைப்பு அவள் எதிர்பாராதது. இத்தனை அனுசரணையான பேச்சையும் அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றையும் அசை போட்டபடி வீடு வந்த போது பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது. நேராகச் சமையலறைக்கு வந்தாள் பெண். லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு மும்முரமாக சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் கணவன்.

“வந்துட்டியா ஆல்யா? பசிக்குதா? இன்னும் சமையல் முடியலை, போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா.” என்றான் இவளைக் காணவும். 

“எக்ஸாம் பத்தி ஒன்னும் கேட்கலை?”

“அதெல்லாம் நீ நல்லாத்தான் பண்ணியிருப்பே, ஃபெயில் பண்ணுவேன், முட்டை வாங்குவேன்னு சொன்னதெல்லாம் எம்மேல உள்ள கோபத்துல, நீ படிப்புல கெட்டின்னு எனக்குத் தெரியும்.” என்றான் இஞ்சி, பூண்டைத் தட்டியபடி. 

“ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?”

“கண்டிப்பா, அதுக்குத்தான் ட்ரெஸ்ஸை சேஞ்ச் பண்ணச் சொன்னேன், சமைக்கும் போது க்ளீனா இருக்கணும்.” தலையை ஆட்டிக் கொண்டவள் தனது ரூமிற்கு வந்தாள். அலமாரியைத் திறக்கும் போது அன்றைக்கு அவள் கட்டிய பச்சை நிறப் புடவை கண்ணில் பட்டது. வீட்டில் யாரும் இல்லாத போது இதைக் கட்டிக் கொண்டால் அமர் ஒன்றும் சொல்லமாட்டான் என்று அம்மா சொன்னது நினைவு வந்தது. புடவையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போனவள் நன்றாகக் குளித்துவிட்டு அதை உடுத்திக் கொண்டாள். பரீட்சைகள் எல்லாம் நிறைவு பெற்றது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. 

“அந்த ட்ரெஸ்ஸை சேஞ்ச் பண்ண இவ்வளவு…” பேசியபடி திரும்பியவன் அப்படியே ஒரு நிமிடம் நின்றுவிட்டான். நகைகள் எதுவும் அணியாமல் கூந்தலை ஒற்றைப் பின்னலாக்கி அதை இடது தோளில் போட்டிருந்தாள். எந்த ஒப்பனைகளும் அற்ற நிர்மலமான முகம். 

“நான் என்னப் பண்ணிக் குடுக்கட்டும்?” அவன் பார்வை மாற்றத்தைக் கண்டு கொள்ளாதவள் போல வந்து நின்றாள் பெண். 

“ஏய்! இவ்வளவு காஸ்ட்லியான புடவையைக் கட்டிக்கிட்டு யாராவது கிச்சனுக்கு வருவாங்களா?”

“அப்ப இதையெல்லாம் என்னதான் பண்ணுறது? இது மாதிரி பத்துப் புடவை கப்போர்ட்ல இருக்கு, வெளியே உடுத்த வேணாங்கிறீங்க, வீட்டுல ஆளுங்க இருந்தாலும் கட்ட முடியலை, இப்போ இங்க நீங்க மட்டுந்தானே இருக்கீங்க? இப்பவும் கட்ட வேணாம்னா எப்பிடி?”

“நீ எதுக்குப் புடவை வாங்கினே?”

“நான் எங்க வாங்கினேன்? இதெல்லாம் எங்கம்மா வாங்கினது, கல்யாணம் ஆனா புதுப்பொண்ணு நாலு இடத்துக்குப் போகணும், அப்ப புடவைதான் கட்டணும்னு சொன்னாங்க.” நீதான் என்னைப் புடவைக் கட்டவே விடவில்லையே என்ற குற்றச்சாட்டு அவள் குரலில் இருந்தது. அமர் எதுவும் சொல்லாமல் சமையலில் கவனமாகிவிட்டான்.

“இங்க நின்னா புடவையில மட்டனும் சிக்கனுந்தான் மணக்கும், நீ ஹால்ல போய் உட்காரு.” அவளை அங்கிருந்து அகற்றுவதிலேயே அவன் குறியாக இருந்தான். கிச்சனை விட்டு வெளியே வந்தவள் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டாள். தன்னை அவன் தவிர்ப்பது தெட்டத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இப்போது கோபம் வரவில்லை. இலேசாக சிரிப்பு வந்தது. கொஞ்சம் பெருமையாக வேறு இருந்தது. சற்று நேரத்தில் சாப்பாடு தயாராகிவிட எல்லாவற்றையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தான் கணவன். 

“வாசனை சும்மா அள்ளுது!” சப்புக்கொட்டியபடி அவள் சாப்பிட ஆரம்பித்தபோது அலைபேசி சிணுங்கியது. 

“இந்த மனுஷன் எதுக்கு இந்நேரம் கூப்பிடுறாரு?”

“யாரு?” அவளுக்கும் அவனே பரிமாறினான்.

“சீனியர்.”

“யாரு? ஷிவாவா?” ஆமென்று தலையை ஆட்டியவள்,

“சொல்லுங்க சீனியர்.” என்றாள்.

“என்னம்மா பண்ணுறே ஆல்யா? சாப்பிடுறியா?”

“ஆமா சீனியர், பிரியாணி, வாசனை மூக்கைத் துளைக்குது.” என்றாள் இரசனையாக. அமருக்குச் சிரிப்பு வந்தது. சமையல் சுத்தமாக வராது. ஆனால் நன்றாக அனுபவித்துச் சாப்பிடத் தெரிகிறது.

“யாரோட சமையல்? வீட்டுக்காரர் வகைவகையா சமைச்சுப் போடுறாரா?”

“எப்பிடி சீனியர்?! பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க?!”

“எங்களுக்குத் தெரியாதா? பாவம் அந்த மனுஷன்! ஹனிமூன் போற டைம்ல இந்தப் பாவிப் பசங்க எக்ஸாமை வெச்சா அவரும் என்னதான் பண்ணுவாரு? அதான் இன்னைக்கு எல்லாம் முடிஞ்சுதில்லை? இனி பொண்டாட்டியை உள்ளங்கைல வெச்சுத் தாங்குவாரு!” ஷிவாவின் பேச்சில் பெண்ணுக்குப் பிரியாணி தொண்டையில் சிக்கியது. வீடு அமைதியாக இருந்ததால் ஷிவா பேசியது அமருக்கும் கேட்டது. மனைவி மலங்க விழிப்பதைப் பார்த்தவன்,

“ஆல்யா, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ.” என்றபடி அவள் காதிலிருந்த அலைபேசியை வாங்கிக் கொண்டான். பேசுவதற்கு வசதியாக அவன் எழுந்து அப்பால் போக,

“ஆமா! அப்பிடியே பொண்டாட்டியை உள்ளங்கைல இவரு வெச்சுத் தாங்கிட்டாலும்! அப்போ யூனில எல்லாரும் இந்த எண்ணத்துலதான் இருக்காங்களா? இங்க என்னமோ ஒரு பெரிய காதல் நாடகமே நடக்கிற மாதிரித்தான் கற்பனைப் பண்ணிட்டு இருக்காங்களா? இவ்வளவு காசு குடுத்து வாங்கின புடவையை உடுத்திக்கிட்டுப் பக்கத்துல போய் நிற்க முடியலை, இதுல இந்தப் பயலுகளுக்குக் கற்பனை காத்துல பறக்குது!” என்றாள் முணுமுணுத்தபடி.

“ஏதாவது சொன்னியா?” அவன் குரல் சட்டென்று கேட்கவும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குப் பின்னால் அவன் நின்றிருந்தான்.

“சீனியர்… ஃபோன்…”

“பேசி முடிச்சுட்டேன்.”

“எனக்கும் சேர்த்து நீங்கப் பேசினீங்களா?” சட்டென்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டது பெண்.

“சாப்பிடும் போது எதுக்குத் தேவையில்லாத பேச்சு, நீ சாப்பிடு.” என்றவன் அலைபேசியை மேசை மேல் வைத்தான். 

‘ஆமா! இருபத்தெட்டு வயசுலேயே இவரு கிழவன் ஆகிட்டாரு! முற்றும் துறந்த இந்த முனிவருக்குக் கல்யாணந்தான் ஒரு கேடு!’ உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்தவள் நல்ல பிள்ளை போல சாப்பாட்டை முடித்தாள்.

***

ஆறு மாதங்கள் கடந்து போயிருந்தன. ஆல்யா பல்கலைக்கழகத்தில் தனது இறுதி செமஸ்டரில் இருந்தாள். பரீட்சைகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்தன. லேப், ப்ராக்டிகல், கோர்ஸ் வொர்க் என கொசுறுகள் மாத்திரமே மீதமிருந்தன. சீனியர்கள் அனைவரும் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்திற்காக இங்கு வந்தபடிதான் இருந்தார்கள்.

“ஹேய் ஆல்யா.” என்றபடி வந்தான் ஷிவா. கூடவே ஷாலினி. இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. சும்மாவே இரண்டு பேரையும் கேட்க வேண்டாம். இப்போது பெற்றோர்களின் அனுமதியோடு நிச்சயதார்த்தம் வேறு நடந்திருந்தது. ஒட்டுமொத்த யூனியையும் தங்கள் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆல்யாவும் போயிருந்தாள்.

“வாங்க சீனியர், செம ஜாலிதான் போல.”

“எங்க ஜாலி இருக்கட்டும், என்ன அம்மிணியோட வாய்ஸ் டல்லடிக்குது?” 

“ஒன்னுமில்லையே சீனியர், நான் எப்பவும் போலதான் இருக்கேன்.”

“என்ன சொல்றாரு உங்க வீட்டுக்காரரு? இப்பவும் பிரியாணி ஆக்கிப் போடுறாரா?”

“ஆமா, அவர் ஆக்கிப் போட்டுட்டாலும்!” தன்னையறியாமல் சலித்துக் கொண்டவள் சட்டென்று வாயை மூடிக்கொண்டாள். ஆனால் அவள் பேசியது ஷிவாவின் காதில் விழுந்திருந்தது.

“ஏய்! என்னாச்சு? எதையாவது மனசுல போட்டு வருத்திக்கிறியா நீ? நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு, என்ன சொல்றாரு அந்த மனுஷன்?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை சீனியர்.”

“ஆல்யா!” இப்போது அதட்டலாக வந்தது ஷாலினியின் குரல்.

“அதான் ஷிவா கேட்கிறானில்லை? என்னப் பிரச்சினை? உங்களுக்குள்ள ஏதாவது ப்ராப்ளமா?”

“ஐயையோ! அதெல்லாம் ஒன்னுமில்லை சீனியர், படிப்பு முடியணும்னு அவங்க சொல்லிட்டாங்க.”

“படிப்பு அது பாட்டுக்கு, ஏன்? நாங்கெல்லாம் இப்போ படிக்கலையா?” அந்தக் கேள்விக்குப் புன்னகையை பதிலாகத் தந்தவள் அத்தோடு கிளம்பிவிட்டாள். அமருக்கும் அவளுக்குமான வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. அதே புள்ளியிலேயே இருவரும் நின்றிருந்தார்கள். ஓர் எட்டு முன்னே எடுத்து வைக்க அவள் தயார்தான். ஆனால் அங்கேதான் நின்றிருப்பேன் என்று அடம்பிடிப்பவனை என்ன சொல்வது?!

இந்த இடைப்பட்ட காலத்தில் மஹிராவும் அவள் கணவரும் இங்கிலாந்து போயிருந்தார்கள். மஹிராவின் படிப்பு அங்கே தொடர அவள் கணவர் ஹாஸ்பிடல் ஒன்றில் வேலை பார்க்க ஆரம்பித்திருந்தார். கரீமின் கால் நன்றாகக் குணமாகியிருந்தது. வாரத்தில் ஒரு நாள் எப்படியாவது ஆல்யா தன் வீட்டில் போய் தங்குவாள். அமர் ஊரில் இருந்தால் கட்டாயம் அவளோடு வருவான். இல்லாவிட்டால் இவள் தனியாகச் சென்று அப்பா, அம்மாவோடு தங்கிவிட்டு வருவாள். 

அன்றைக்கு வேலையில் மும்முரமாக இருந்த அமரை அழைத்தான் ஷிவா. அவர்களுக்குள் எப்போதும் ஒரு பாசமான நட்பு தொடரத்தான் செய்தது. அவனது நிச்சயதார்த்தத்திற்கும் தன்னால் போக முடியாததால் இப்போது வந்த அழைப்பைச் சட்டென்று ஏற்றான்.

“சொல்லு ஷிவா.”

“அண்ணா பிஸியா இருக்கீங்களா?”

“கொஞ்சம் பிஸிதான், பரவாயில்லை, நீ சொல்லு.”

“அண்ணா, ட்ரிப் ஒன்னு ஆர்கனைஸ் பண்ணுறோம், கண்டிப்பா எல்லாரும் வரணும்.”

“இதுல என்ன இருக்கு? ஆல்யாக்கு ஓகேன்னா கூட்டிட்டுப் போங்க.”

“ஆல்யா மட்டுமில்லை, நீங்களும் வரணும்.”

“நான் எதுக்கு ஷிவா?”

“நிறைய பேர் ஃபேமிலியா வர்றாங்க, நீங்களும் வந்தா நல்லா இருக்கும்ணா, எத்தனைத் தடவை எனக்கு யூனி லைஃப் எல்லாம் குடுத்து வெக்கலைன்னு சொல்லியிருக்கீங்க, இப்ப எங்கக்கூட வந்து என்ஜாய் பண்ணுங்கண்ணா.” அவன் சொன்ன விதத்தில் அமருக்கும் ஆசை வந்தது. ஆனால் வேலை இருக்கிறதே!

“வேலை யாருக்குத்தான் இல்லை? எப்பவும் அது இருந்துக்கிட்டுத்தான் இருக்கும், அதை யார்கிட்டவாவது ஒப்படைச்சுட்டு வாங்க.” உரிமையாக அழைத்தவனை மறுக்கவும் முடியவில்லை.

“எப்பன்னு ஏதாவது ஐடியா இருக்கா? எத்தனை நாள்? எங்கப் போறதா ப்ளான் பண்ணியிருக்கீங்க?” 

“அடுத்த புதன்கிழமை, பண்டாரவெல போகலாம்னு ஐடியா பண்ணுறோம், ரெண்டு நாள் போதாதில்லைண்ணா?”

“ஆறு மாசம் முன்னாடி ஒரு கல்யாண வீட்டுக்கு பதுளை வரை போயிருந்தேன் ஷிவா, சூப்பரா இருந்துச்சு, ரெண்டு நாள் போதாதுதான், ஆனா உங்க யூனில என்ன சொல்லுவாங்க?”

“லெக்சரர்மார் அஞ்சு பேர் கூட வர்றாங்க, அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் வராது, பக்காவா ரெடி பண்ணிடலாம், நீங்க ஒன்னுக்கும் கவலைப்படாதீங்க, ஆல்யாவும் நீங்களும் கண்டிப்பா வர்றீங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான். அன்றைக்கு இரவே அதைப்பற்றி மனைவியிடம் பேசினான் அமர்.

“ஆல்யா, இன்னைக்கு ஷிவா கால் பண்ணியிருந்தான்.” மிகவும் கவனமாக எதையோ எழுதிக் கொண்டிருந்த பெண் இவன் உள்ளே வரவும் அருகிலிருந்த துப்பட்டாவை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டது.

“ட்ரிப் பத்தி ஏதாவது பேசினாரா? அதெல்லாம் வேணாங்க.” எந்த ஆலோசனையும் இன்றி அவள் மறுத்தாள்.

“ஏன்? ஏனப்பிடிச் சொல்றே?”

“இன்னைக்கு யூனியை சீனியர் ரெண்டு பண்ணிட்டாரு, ஏற்பாடெல்லாம் பலமா இருக்கும் போலருக்கு, பெரிய தலைங்கெல்லாம் வருதாம், சும்மாவே அந்த மனுஷன் ஆடுவாரு, இதுல நிச்சயதார்த்தம் வேற முடிஞ்சிருக்கு, வேணாம் மச்சான்.” மீண்டும் அவள் மறுத்தாள்.

“அவங்களுக்கு நிச்சயமானா நமக்கென்ன? ஷிவா அவ்வளவு சொல்லும் போது என்னால மறுக்க முடியலை.”

“அப்புறம் உங்க இஷ்டம்.” அவள் தோளைக் குலுக்கிவிட்டுத் தன் வேலையில் கவனமானாள். மனைவியின் பதில் அமருக்கும் விசித்திரமாகத்தான் இருந்தது. இந்தப் பயணத்தை அவள் ஆவலோடு எதிர்பார்ப்பாள் என்று அவன் நினைத்திருக்க என்ன இந்தப் பெண் இப்படிப் பேசுகிறது?! 

பிரம்மச்சரியம் காக்கும் இவனால் அந்த இளவட்டங்களோடு நின்று பிடிக்க முடியாது. அது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் வில்லங்கத்தை இழுத்து மடியில் போட்டுக் கொள்பவனை என்னவென்று சொல்வது?! என்னவோ செய்து கொள்ளட்டும் என்று ஆல்யா அமைதியாகிவிட்டாள். ஆனால் இதற்கு மேல் அவனுக்குப் பிரம்மச்சரியம் காக்கும் எண்ணம் இல்லை என்பதைப் பெண் அறிவாளா?! 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 16

அத்தியாயம் 16அன்று புதன்கிழமை. அதிகாலையிலேயே ஆல்யாவும் அமரும் எழுந்து ஆயத்தமானார்கள். சரியாக ஏழு மணிக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து பஸ் புறப்பட வேண்டும் என்று ஷிவா எல்லோரிடமும் கண்டிப்பாகச் சொல்லியிருந்தான். அதனால் தாமதமாகப் போக இயலாது. இன்பத்திற்கு இளையவர்கள் இருவரும் இப்படிக் கிளம்பிப் போவதில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்