arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 16
Anbe… Azhage! chevron_right பகுதி 16 / 21

அத்தியாயம் 16

visibility 4
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 16

அன்று புதன்கிழமை. அதிகாலையிலேயே ஆல்யாவும் அமரும் எழுந்து ஆயத்தமானார்கள். சரியாக ஏழு மணிக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து பஸ் புறப்பட வேண்டும் என்று ஷிவா எல்லோரிடமும் கண்டிப்பாகச் சொல்லியிருந்தான். அதனால் தாமதமாகப் போக இயலாது. இன்பத்திற்கு இளையவர்கள் இருவரும் இப்படிக் கிளம்பிப் போவதில் அவ்வளவு மகிழ்ச்சி. 

திருமணம் ஆகியிருந்தாலும் அவர்கள் இன்னும் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவில்லை என்று அவர் புரிந்து கொண்டார். சிரித்தார்கள், கதை பேசினார்கள், கேலி பண்ணிக் கொண்டார்கள். எல்லாம் செவ்வனே நடந்தாலும் அதில் ஒரு அன்னியோன்யம் இருக்காது. அந்த விலகலைப் பெரியவர் கவனித்திருந்தார். இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதில் தான் கருத்துச் சொல்லவோ, அறிவுரை வழங்கவோ எதுவுமில்லை என்பதால் அமைதியாக இருந்தார்.

அந்த ப்ளாக் ஆடி சரியாக ஆறு நாற்பத்தைந்திற்குப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது. மூன்று நாட்களுக்கு இருவருக்கும் தேவையான ஆடைகளை ஒரு சூட்கேஸில் எடுத்திருந்தார்கள். காரை பார்க்கிங்கில் நிறுத்தியவன் இறங்கிக் கொண்டான். பெரிய பஸ் ஒன்றை ஏற்பாடு பண்ணியிருந்தான் ஷிவா.

“அண்ணா வாங்க, என்ன அண்ணியாரே! இன்னும் தூக்கம் கலையலையா?” வேண்டுமென்றே இவளைக் கேலி பண்ணினான் ஷிவா. ஏற்கனவே இதுபோல ஒரு உல்லாசப் பயணம் போக வேண்டும் என்று அவனது பேட்ச் மாணவர்களுக்கு எண்ணம் இருந்தது. ஆனால் இவ்வளவு அவசரமாக அதை ஏற்பாடு பண்ணியதன் காரணம் ஆல்யா! அன்று அவள் சலிப்பாகச் சொன்ன பதில் அவனையும், ஷாலினியையும் சிந்திக்க வைத்திருந்தது.

“என்ன ஷிவா இந்தப் பொண்ணு இப்பிடி பதில் சொல்லுது?!”

“அதான் எனக்கும் புரியலை ஷாலு, கல்யாணமாகி ஆறு மாசமாச்சு, படிப்பு முடியட்டும்னு எதுக்கு இந்த மனுஷன் இப்பிடிக் கையைக் கட்டிக்கிட்டு நிற்கிறாரு?”

“ஆல்யா முகத்துல பழைய கலகலப்பு இல்லை, நீ கவனிச்சியா?”

“ம்… ஏதாவது பண்ணணும் ஷாலு.”

“ட்ரிப் ஐடியா இருக்கில்லை? அதை ஏற்பாடு பண்ணலாமா?”

“பண்ணினாலும் அந்த மனுஷன் வருவாரா? கொஞ்சம் பிஸியான ஆளேம்மா?”

“மண்ணாங்கட்டி! பொண்டாட்டியை விட அப்பிடி என்ன பிஸி அவருக்கு வேண்டிக்கிடக்கு? நீ ஃபோர்ஸ் பண்ணிக் கூப்பிடு ஷிவா, அவர் கண்டிப்பா வருவாரு.” இப்படித்தான் ஆரம்பித்தது இந்தப் பயணம். இவர்கள் இருவரையும் ஒரு வழி பண்ணுவது என்று முடிவெடுத்திருந்தான் சீனியர்.

“உங்கண்ணிக்கு இந்த ட்ரிப்ல அவ்வளவு இஷ்டமில்லை ஷிவா, ஏதோ நான் கூப்பிட்டேன்னு வந்திருக்காங்க.” இது அமர். அவனும் அவளைக் கலாய்த்தான். இப்போது ஷிவா நெற்றிக் கண்ணைத் திறந்தான்.

“ஐயையோ! அப்பிடியெல்லாம் எதுவுமில்லை சீனியர், இவங்கப் பொய் சொல்றாங்க.”

“எங்கண்ணா எதுக்கு எங்கிட்டப் பொய் சொல்லணும்? ஜுனியர்னு அப்பவே நல்லா ராக்கிங் பண்ணியிருந்தா பயம் வந்திருக்கும், இந்த மூஞ்சிக்கு ராக்கிங் ஒரு கேடான்னு விட்டது தப்பாப் போச்சுன்னு இப்போ நல்லாப் புரியுது, உன்னை நான் அப்புறமா கவனிச்சுக்கிறேன்.” என்று மிரட்டியவன் மற்ற வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டான்.

“எதுக்கு இப்போ இந்த நாரதர் வேலை? இன்னைக்கு நான் சம்பல்தான்.” அவள் சோகமாகச் சொல்ல அவன் புன்னகைத்தான். பயணத்திற்கு ஏற்றாற் போல அடர் நீலத்தில் டெனிமும், அதே நிறத்தில் அரைக்கை டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். இப்படிக் கள்ளத்தனமாகச் சிரிக்கும் போது பார்க்க அத்தனைக் கம்பீரமாக இருந்தான். 

சரியாக ஏழு மணிக்கு அந்த பஸ் தயாராகிவிட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பேர் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டார்கள். ஆல்யா ஏனோ அத்தனை உற்சாகமாக உணரவில்லை. அதற்கு எதிர்மாற்றமாக அமர் மிகவும் கலகலப்பாக காணப்பட்டான். இவர்கள் இருவரையும் அருகருகே அமர வைத்திருந்தான் ஷிவா. ஜன்னலோரமாக அவள் அமர்ந்திருக்க இவன் உள்ளே அமர்ந்திருந்தான். 

“அண்ணா, எல்லாம் வசதியா இருக்கில்லை?”

“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, நீ மத்தவங்களைக் கவனிப்பா.” அதன்பிறகு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். விரிவுரையாளர் ஒருவர் எழுந்து ஷிவாவேடு டான்ஸ் ஆட அமர் மலைத்துப் போனான்.

“என்னம்மா இது? இப்பிடிக் கூத்தடிக்கிறாங்க?!”

“இந்த சீனியர் அப்பிடித்தான், எல்லாரையும் இழுத்து விட்டுருவாரு, அங்க உட்கார்ந்திருக்காங்கல்லை? அவங்கதான் வரதன் சார், நல்லாப் பாடுவாங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க ஆரம்பிப்பாங்கப் பாருங்க.” இவள் சொல்லவும் அவன் ஆச்சரியம் இன்னும் அதிகமானது. 

சரியாகப் பத்து மணிபோல மஹியங்கனைக்கு அருகாமையில் இருக்கும் ஓர் ஆற்றிற்கு அருகே பஸ்ஸை நிறுத்தினார்கள். அந்த இடத்தின் பெயர் ஹசலக. காலை உணவை அங்கே உண்ணுவதாக ஏற்பாடாகியிருந்தது. பாறைகளுக்கு நடுவே நீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நீர் ஓடும் சத்தம் இன்ப ராகம் போல எல்லோர் செவிகளையும் நிறைத்தது. பெண்கள் அனைவரும் தண்ணீரைக் காணவும் எதைப்பற்றியும் யோசிக்காமல் இறங்கிவிட்டார்கள். அத்தனை ஆழம் இருக்கவில்லை. வெள்ளை நுரைபோல வழுவழுப்பான பாறைகளைத் தழுவிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது நீர். சுற்றிவர அடர்ந்த மரங்கள் இருக்க அந்த இடமே அத்தனைப் பரவசத்தைக் கொடுத்தது.

“ட்ரெஸ்ஸை நனைச்சிடாதே ஆல்யா.” இவளும் நீரில் இறங்க ஆயத்தமானாள்.

“கவனம், வழுக்கிடப் போகுது.” ஆயிரம் கவனம் சொன்னவனிடம் ஒரு பாக்ஸைக் கொண்டு வந்து நீட்டினான் ஷிவா. நூடுல்ஸ் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். 

“என்னண்ணா, அண்ணியாரை ரொம்பப் பத்திரம் பண்ணுறீங்க? அங்கப் பாருங்க நம்ம ஆளை!” ஷிவா கைகாட்டிய திசையில் திரும்பிய அமர் திடுக்கிட்டுப் போனான். இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தாள் ஷாலினி.

“ஐயையோ! என்னடா ஷிவா இது? வழுக்கிடப் போகுது!” தண்ணீர் சதா ஓடுவதால் அந்தப் பாறைகள் அனைத்தும் வழுவழுப்பாக இருந்தன. சரியான கவனம் எடுக்காவிட்டால் வீழ்வது நிச்சயம். காலை மாத்திரம் நனைத்துக் கொண்டிருந்த மனைவியிடம் வந்தான் அமர்.

“சாப்பிடலாம் ஆல்யா.” பாக்ஸில் வெஜிடபிள் நூடுல்ஸ் இருந்தது. ஆனால் ஒரு கரண்டி மாத்திரமே இருக்க அமர், ஷிவா இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான். இவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன் ஒரு நமுட்டுச் சிரிப்போடு அப்பால் போய்விட்டான். 

“என்ன இந்த லூசு சீனியர் ஒரு ஸ்பூன் குடித்திருக்காரு? ரெண்டு பேர் இப்போ எப்பிடிச் சாப்பிடுறதாம்?”

“பரவாயில்லை, நீ சாப்பிடு.”

“எனக்குப் பசிக்கலைங்க, நீங்க சாப்பிடுங்க.” சொன்னவளின் வாயில் ஒரு ஸ்பூனை அள்ளி வைத்தான் கணவன். அத்தனைப் பேருக்கு நடுவே அவன் அப்படிச் செய்யவும் பெண்ணுக்கு ஒருமாதிரியாகிப் போனது. 

“யாரும் உன்னைப் பார்க்கலை, நீ சாப்பிடு.” என்றவன் அவளோடு சேர்ந்து தானும் உண்ண ஆரம்பித்திருந்தான். காலை ஆகாரத்தையும் மறந்துவிட்டு அத்தனைப் பேரும் நீரில் கொட்டமடித்தார்கள். ஆல்யாவிற்கும் கண்ணாடி போல ஓடிக்கொண்டிருந்த நீரில் நடக்க ஆசையாக இருந்தது. ஆங்காங்கே சின்னச் சின்னக் கற்கள் இருந்தன. அவற்றின் மேல் கால் வைத்து நடக்க முடியும்.

“வேணாம், நீ வழுக்கி விழுந்திடுவே.” அவள் எண்ணம் புரிந்து அவன் பதில் சொன்னான்.

“அப்ப நீங்களும் வாங்க, எல்லாருந்தானே கால் நனைக்கிறாங்க.” அவள் கெஞ்சவும் அவனால் மறுக்க முடியவில்லை. அவள் கைபற்றி அழைத்துச் சென்றான். நீர் சில்லென்று இருந்தது. வெற்றுப் பாதங்களில் குளிர்நீர் படும்போது அப்படியொரு இன்பம்! புன்னகைத்தபடி ஆல்யா அந்தக் கற்களின் மேல் நடந்தாள். எவ்வளவு கவனமாக நடந்தபோதும் கால் வழுக்கத்தான் செய்தது. இதுவரை நேரமும் மனைவியின் கையைப் பற்றியிருந்தவன் அவள் இலேசாகத் தடுமாறவும் இப்போது அருகில் வந்து இடையைப் பற்றிக்கொண்டான். பெண் விதிர்விதிர்த்துப் போனாள். 

அருகில் வருவான், கன்னம் தொடுவான், தலையை வருடுவான். ஏன்? ஒருமுறை அவளாகவே அவன் கரத்தைப் பற்றியிருக்கிறாள். ஆனால் இதுபோல ஒருநாளும் நடந்து கொண்டதில்லையே! அதுவும் இத்தனைப் பேர் முன்னிலையில்! பெண் மெதுவாக அவனிடமிருந்து விலகியது. 

“என்னாச்சு? நீதானே தண்ணியில நடக்கணும்னு சொன்னே?”

“இல்லை… போதும்.” குனிந்தபடி சொன்னவள் அப்பால் வந்துவிட்டாள். அதற்கு மேலும் அங்கே நிற்க ஒருமாதிரியாக இருக்கவும் பஸ்ஸிற்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.

“என்ன அண்ணி? நீங்க உங்க ஆளோட ஜலக்கிரீடை நடத்தலை?” ஷாலினி முழுதாக நனைந்திருக்க அவள் உடை மாற்றுவதற்காக இருவரும் பஸ்ஸிற்கு வந்திருந்தார்கள். அப்போது ஆல்யாவைத் தவிர வேறு யாரும் உள்ளே இருக்கவில்லை. 

“உங்களுக்கு வேற வேலை இல்லையா சீனியர்?”

“இங்கப்பாரு ஆல்யா, என்ஜாய் பண்ணத்தான் எல்லாரும் வந்திருக்கோம், நீ என்ன மூட்ல இருக்கேன்னு எனக்குத் தெரியாது, ஆனா அண்ணா செம மூட்ல இருக்காரு, அதை ஸ்பாயில் பண்ணிடாதே.” ஷிவா காறாராகச் சொல்லவும் ஆல்யாவிற்கும் ‘இருக்குமோ?!’ என்றிருந்தது. இந்த ஆறு மாதகால வாழ்க்கையில் அவன் இதுபோல ஒருநாளும் கோடு தாண்டியதில்லையே! 

இலங்கையின் கிழக்குப் பகுதியிலிருந்து மத்திய மலைநாட்டிற்குச் செல்லும் மலைப்பாதையை அண்மித்திருந்தது வாகனம். பதினெட்டு கொண்டை ஊசி (ஹேர்பின்) வளைவுகளைக் கொண்டிருந்தது அந்தப் பாதை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட பாதை. இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் வாசனைத் திரவியங்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டது. ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது கிடுகிடு பள்ளத்தாக்கு மாத்திரமே தெரிந்தது. எத்தனை ஆபத்து இருந்தாலும் அங்கே அழகும் இருக்கும் என்பது போல அந்தப் பள்ளத்தாக்குகளில் ஆங்காங்கே பொங்கிப் பெருகும் நீர்வீழ்ச்சிகள்!

“ஹேய் ஆல்யா! என்ன அங்க நிற்கிறே? உள்ள வா.” மரத்தின் மேல் நின்ற குரங்கொன்றைப் பார்த்துப் பேசினான் ஷிவா. கையிலிருந்த டிஷ்யூவைச் சுருட்டி அவன் மேல் விட்டெறிந்தாள் பெண்.

“அவன் பக்கத்துலயே ஒரு வானரம் இருக்கு, அதை விட்டுட்டு இவன் எம் பொண்டாட்டியைக் கலாய்க்கிறானாம்.” மனைவியின் பக்கமாகக் குனிந்து அமர் சொல்லவும் ஆல்யா பொங்கிச் சிரித்தாள்.

“அண்ணா! சேம் சைட் கோல் போடுறீங்களா?” இப்போது ஷிவா சிணுங்கினான். 

சரியாக மூன்று மணிக்கு ஹுன்னஸ்கிரிய வந்து சேர்ந்தார்கள். மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இந்த ஹுன்னஸ்கிரிய. இங்கு பெரும்பாலும் தமிழர்களே வசிக்கிறார்கள். மழை வீழ்ச்சியை அதிகமாகக் கொண்ட இந்த இடத்தின் சராசரி வெப்பநிலை இருபத்தியிரண்டு செல்சியஸ். கடல்மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்தில் உள்ளது. 

இவர்கள் வந்தபோது காலநிலை மிகவும் அருமையாக இருந்தது. எப்போதும் குளுகுளுவென இருக்கும் இடம் அன்றைக்குப் பனிமூட்டத்தோடு காணப்பட்டது. சுற்றிவர இருந்த மலைகளைப் பார்க்க முடியாதபடி வெள்ளைப் புகைபோல எங்கும் ஒரே பனி. குளிர் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. மதிய உணவிற்காக பஸ் நின்ற இடத்தில் இருந்த அனைத்துக் கடைகளிலும் அந்த மதிய வேளையில் பல்புகள் எரிந்த வண்ணம் இருந்தன.

“வாவ்!” அந்த இயற்கை அழகில் அத்தனைப் பேரும் மனதைப் பறிகொடுத்தார்கள். உல்லாசப் பயணம் மேற்கொள்பவர்கள் எப்போதும் இந்தப் பாதையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மலைகள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள், ஆங்காங்கே வழிந்தோடும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அன்னை எத்தனை அழகை இந்தச் சின்னஞ்சிறு தீவிற்கு வஞ்சனையின்றி வழங்கியிருக்கிறாள் என்று கண்ணாறக் காண முடியும். 

பெரிய ஹோட்டல் ஒன்றின் முன்பாகத்தான் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பாதிப்பேர் இப்போதே தங்கள் ஸ்வெட்டர்களை எடுத்து அணிந்து கொண்டார்கள். ஆல்யா தான் அணிந்திருந்த துப்பட்டாவை நன்றாக இறுக்கிக் கொண்டாள்.

“குளிருதா?”

“லைட்டா.” என்றவளை ஒரு புன்னகையோடு தன்னருகே அழைத்துக் கொண்டான். எல்லோரும் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டார்கள். 

“எனக்கு டீ மட்டும் போதும்.” இது ஆல்யா.

“ஏன்?”

“பயணம் பண்ணும் போது நான் இப்பிடி ஹோட்டல்ல சாப்பிடமாட்டேன்.”

“வெறும் டீ போதாது, ஏதாவது சாப்பிடு.” என்றவன் பரோட்டா ஆர்டர் பண்ணினான். அப்போதுதான் பறித்த காய்கறிகள் அங்கே கடைபரப்பப் பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி, இரசித்தபடி தொடர்ந்தது பயணம். ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி வந்ததால் இவர்கள் பண்டாரவெல வந்து சேர்ந்த போது நேரம் மாலை ஆறு. 

குளிர் இங்கே இன்னும் அதிகமாக இருந்தது. ஆட்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஒரு பெரிய ரிசார்ட்டையே வளைத்துப் பிடித்திருந்தான் ஷிவா. நல்ல வசதியான இடமாக இருந்தது. பென்னம்பெரிய மலையொன்றிற்கு அருகே இருந்தது அந்த ரிசார்ட். ஆல்யாவிற்கும் அமருக்கும் தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளேயே சுடுநீர் வசதியுடன் கூடிய குளியலறையும் இருந்தது.

“பரவாயில்லை, பயல் நல்லாத்தான் எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணியிருக்கான்.”

“சீனியர் அதுல கெட்டி, யூனில எந்த ஃபங்ஷன் நடந்தாலும் பொறுப்பை அவர்கிட்ட ஒப்படைச்சிருவாங்க, ஒரு குறையும் வராம எல்லாத்தையும் பக்காவா பண்ணி முடிப்பாரு.”

“மூனு நாள் வேஸ்ட்டாகிடுமோன்னு கவலப்பட்டேன், ஆனா அப்பிடியில்லை, நல்லா என்ஜாய் பண்ணலாம் போலதான் இருக்கு, ஒருவேளை நம்ம லைஃப்ல இது மறக்கமுடியாத ட்ரிப்பா இருக்குமோ!” அவன் ஒரு தினுசாகச் சொல்லவும் உடைகளை எடுப்பவள் போல திரும்பிக் கொண்டாள் பெண். அமருக்குச் சிரிப்பு வந்தது.

“போய் குளிச்சிட்டு வா ஆல்யா.”

“என்னது? இந்தக் குளிர்லயா?!”

“என்ன அப்பிடிக் குளிர்? பாத்ரூம்ல ஹாட் வாட்டர் வருது, நீ போய் ஒரு வாஷ் எடுத்துட்டு வா, இனி அடிக்கடி இதுமாதிரி இடங்களுக்கு நாம வரணும், ரெஹான் அடுத்த வாட்டி வரும்போது நாம ஃபேமிலியா இங்க வரணும், அம்மாவையும் கூட்டிட்டு வரணும், வருஷத்துல ஒருவாட்டி இப்பிடி வந்து நல்லா என்ஜாய் பண்ணிட்டுப் போகணும்.” என்றவன் அவளைக் கைப்பிடியாக குளியலறைக்கு அழைத்துச் சென்றான்.

“வாஷ் எடுத்துட்டு ஃப்ரெஷ்ஷா வா, நாம வெளியே போகலாம்.” அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. சல்வாருக்கு மேலாக ஆல்யா ஒரு நீளமான கார்டிகன் அணிந்து கொண்டாள். அமரும் ஒரு ஷர்ட் அணிந்து அதற்கு மேலாக ஜம்பர் அணிந்திருந்தான்.

“ஷாப்பிங் போகலாமா?” பேசியபடி இருவரும் வெளியே வந்தபோது அங்கே ஏற்பாடு பலமாக இருந்தது. பயணம் செய்துவந்த களைப்பில் எல்லோரும் கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பார்கள் என்றுதான் அமர் நினைத்திருந்தான். ஆனால் இரவுக் களியாட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் அங்கே நடந்து கொண்டிருந்தன. 

“அண்ணா வாங்க, தங்கள் சேவை எங்களுக்குத் தேவை.” மிகவும் பவ்வியமாகச் சொன்னான் ஷிவா.‌

“என்ன ஐடியா ஷிவா?”

“கேம்ப் ஃபையர் அன்ட் பார்பிக்யூ.” 

“வெஜிடேரியன் யாராவது இருக்காங்களா?”

“அந்தக் கவலையே நமக்கு வேணாம், எல்லாம் நல்லா திங்கிற கூட்டந்தான்.” அவன் பேச்சில் அமர் சிரித்தான். அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலேயே சார்கோல் பார்பிக்யூ வாடகைக்குக் கிடைத்தது. நடப்பன, பறப்பன என அனைத்தையும் வாங்க ஏற்கனவே தனது நண்பர்களைக் கடைக்கு அனுப்பியிருந்தான் ஷிவா.

“எங்க இருந்து இதெல்லாம் கண்டுபுடிச்சே ஷிவா?”

“இங்க இதெல்லாம் வாடகைக்குக் கிடைக்குதுங்கிறதாலதான் இந்த ரிசார்ட்டை புக் பண்ணினேன்ணா, இங்க வந்து இதெல்லாம் தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லை.”

“நீ பேசாம என்னோட பிஸினஸ்ல வந்து சேர்ந்துடு, இவென்ட் மேனேஜ்மென்ட் உனக்கு நல்லா வருது.”

“வாவ்! சூப்பர்ணா! கண்டிப்பா வர்றேன், என்ன அண்ணியாரே! உங்க பிஸினஸ்ல என்னைச் சேர்த்துக்குவீங்களா?” அவன் கேலிக்குப் பதில் சொல்லாமல் பெண்கள் நின்றிருந்த பகுதிக்குப் போய்விட்டாள் பெண்.

“ஆல்யாக்கு என்னாச்சு? ஏன் டல்லாவே இருக்கா?”

“இந்த ட்ரிப் வேணாம்னு சொன்னா, நாந்தான் ஃபோர்ஸ் பண்ணிக் கூட்டிட்டு வந்தேன்.”

“ஏன்?!” இப்போது ஷிவா உண்மையாகவே திகைத்துப் போனான். ஆனால் அமர் பதில் சொல்லவில்லை.

“சொல்லுங்கண்ணா, ஏதாவது பிரச்சினையா? என்னை உண்மையாவே உங்கத் தம்பியா நினைச்சா எங்கிட்டச் சொல்லுங்க, கொஞ்ச நாளா நாங்களும் கவனிக்கிறோம், அவகிட்டப் பழைய கலகலப்பு இல்லை, ஒருமாதிரி அமைதியாவே இருக்கா, யூனியிலயும் யார்கூடவும் முன்ன மாதிரி பேசுறதில்லை, படிக்கவே பொறந்த மாதிரி எப்பப் பார்த்தாலும் புத்தகத்தையே கட்டிக்கிட்டு அழுறா.”

“படிப்புல கவனமா இருன்னு நாந்தான் சொன்னேன்.”

“அதுக்காக? சிரிப்புக்குமா பஞ்சம்? வீட்டுலயும் இப்பிடித்தானா?” ஷிவாவிற்கு எல்லாம் தெரியும் என்றாலும் அது அமர் வாயிலிருந்து வரட்டும் என்று நினைத்தான். ஆனால் பெரியவன் இப்போது புன்னகைத்தான்.

“எப்பிடி இவளோட குடும்பம் நடத்துறீங்க? பேசாம அவ வீட்டுக்கு அனுப்பிடுங்க.”

“அவ கோபமே அதானே!” என்றான் யாருக்கும் கேட்காத வகையில்.

“எது? அவ அம்மா வீட்டுக்குப் போறதா?”

“அவளோட நான் குடும்பம் நடத்தலைங்கிறது.”

“ஏன்ணா? ஏதாவது பிரச்சினையா? நான் அதிகப்பிரசங்கித்தனமா பேசுறேனா?”

“அதெல்லாம் இல்லைடா, எங்கக் கல்யாணத்துல அவளோட அண்ணனுக்கு இஷ்டமில்லை, அண்ணன் மட்டுமில்லை, அக்காவுக்குந்தான், ஆரம்பத்துல இவ அக்காவைத்தான் பேசினாங்க, ஆனா அது சரியா வரலை, அது உனக்குத் தெரியுமா?”

“இல்லைண்ணா! ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு உங்கமேல ரொம்ப லவ், அது எங்க எல்லாருக்கும் தெரியும்.”

“பெரிய பிரச்சினை ஆகிப்போச்சு, என்னால என்னப் பண்ணமுடியும் சொல்லு? அக்கா கல்யாணத்தை நிறுத்துறா, திடீர்னு தங்கச்சி உங்களைத்தான் கட்டிக்குவேன்னு அடம்புடிக்கிறா, அண்ணங்காரன் என்னடான்னா என்னை அடிக்க வர்றான், நான் என்னதான் பண்ணுறது?”

“நியாயந்தான், எல்லாத்தையும் ஜீரணிக்கக் கொஞ்சம் டைம் வேணுமில்லை!”

“எனக்கு அதுகூட இருக்கலை, உனக்கு வேற மாப்பிள்ளைப் பார்க்கப் போறேன்னு அந்த முட்டாள் நிற்கிறான், மாமாவும் மாமியும் மட்டுந்தான் இவளுக்கு சப்போர்ட்.”

“ஓ… அதால கல்யாணத்தை முடிச்சுட்டீங்க.”

“ம்… படிப்பை முடி, மீதியை அப்புறமா பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்.” 

“அப்பவும் நீங்க அவளை வேணாம்னு சொல்லலை?” இப்போது ஷிவா கண்ணடித்தான். அமரின் சிரிப்பு விரிந்தது.

“வழியுது, துடைச்சுக்கோங்க! அதுல இருந்தே உங்க மனசு என்னன்னு உங்களுக்குப் புரியலையா?”

“அப்பிடியில்லைடா, அவளைப் புடிக்குது, அது எனக்கும் தெரியும், இதை உன்னால புரிஞ்சுக்க முடியாது ஷிவா, அவ… சின்ன வயசுல இருந்தே நான் தூக்கி வளர்த்தப் பொண்ணுடா, எங்கூடவே திரியுவா, எங்க வீட்டுலயும் பொண்ணுங்க இல்லையா, இவன்னா செல்லம், என்னால சட்டுன்னு அவளை அப்பிடியெல்லாம் நினைக்க முடியலை.”

“ம்… புரியுது.”

“அவ அண்ணனோட எப்பப்பாரு சண்டைப் போட்டுக்கிட்டு எங்கிட்டத்தான் வருவா, எனக்கு எப்பவுமே அவ ஒரு குழந்தை மாதிரி.”

“நீங்க வேற, யூனில அவ பின்னாடி ஒரு க்ரூப் அலையுது, அவ உங்கப் பின்னாடி அலையுறா, இதுல நீங்க அவளைக் குழந்தைன்னு சொல்றீங்க, அவ கோபப்படுறதுல எந்தத் தப்புமில்லை.” தீர்ப்புச் சொல்லிவிட்டு முறைத்தபடி ஷிவா போக இப்போதும் அமர் சிரித்தான். இளவட்டங்களின் நியாயங்கள் அவனுக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தன. 

அதன்பிறகு அந்த இடம் அப்படியே மாறிப்போனது. வாங்கி வந்திருந்த பதார்த்தங்களை மாரினேட் பண்ணி ஒரு மணிநேரம் ஊற வைத்தார்கள். அப்போதுதான் நன்றாக சுவை ஊறியிருக்கும். அதுவரை நெருப்பு மூட்டி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், என ஆரம்பித்துவிட்டார்கள். மூட்டியிருந்த நெருப்பைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொள்ள அந்த நெருப்பிலேயே மக்காச்சோளத்தைச் சுட்டார்கள். சிலர் மாஷ்மலோவை நீளமான கம்பியில் குத்தி அதைச் சுட்டார்கள். ஒரு ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ‘பனி விழும் இரவு, நனைந்தது நிலவு’ பாட்டிற்கு டான்ஸ் ஆடினார்கள். அந்த இடமே இளமையைத் தத்தெடுத்திருந்தது.

தனக்குப் பக்கத்தில் அசைவு தெரியவும் திரும்பிப் பார்த்தாள் ஆல்யா. வேறு யார்? அவள் கணவன்தான் அமர்ந்து கொண்டிருந்தான். எல்லோரும் நிலத்தில்தான் அமர்ந்திருந்தார்கள். அவளிடம் சோளம் ஒன்றை நீட்டினான் அமர். 

“ம்ஹூம், எனக்கு வேணாம், நீங்க சாப்பிடுங்க.”

“ரொம்ப நல்லா இருக்கு, சாப்பிட்டுப் பாரு.” அவன் வற்புறுத்தவும் இலேசாக ஒரு கடி கடித்தது பெண். அவள் எதிர்பார்த்ததை விட சுவை நன்றாக இருந்தது.

“இங்கேயே விளையும் போல இருக்கு, இப்பதான் பறிச்சிருக்காங்க, அதான் இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு.” 

“ஹேய் அண்ணி! நீயும், அண்ணாவும் வந்து ஒரு டான்ஸ் ஆடுங்க.” இவர்கள் பேச்சைக் குலைத்தது ஷிவாவின் குரல். பக்கத்தில் கிடந்த கல்லொன்றை எடுத்து அவனைக் குறிபார்த்து எறிந்தாள் பெண். முகத்தில் கோபம் தெரிந்தது.

“எதுக்கு இவ்வளவு கோபம்? அவன் விளையாட்டுக்குத்தானே சொல்றான்.” அவன் பேச்சையும் புறக்கணித்தவள் எழுந்து உள்ளே போக எத்தனித்தாள். அமருக்கு இன்றைக்கு ஏனோ அவள் செய்கையில் கோபம் வந்தது. யாரையும் கவராத வண்ணம் அவனும் எழுந்து அவள் பின்னோடு போனவன் ஆட்கள் அரவம் இல்லாத இடத்தில் கைபிடித்து அவளை நிறுத்தினான்.

“விடுங்க என்னை? உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா விளையாட்டா இருக்கா?” கேட்டவளின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் நிறைந்தது.

“என்ன ஆல்யா இது? எதுக்கு இப்போ இப்பிடி பிஹேவ் பண்ணுறே?” அவன் குரல் இறங்கிப் போனது. அவள் கண்ணீர் அவனைக் கரைத்திருந்தது.

“ஆமா, எல்லாரும் எல்லா கேலியும் பண்ணுவீங்க, அதுக்கப்புறம் நீங்க சாமியார் மாதிரி…” எதையோ பேச ஆரம்பித்தவள் முழுதாக முடிக்காமல் உச்சுக் கொட்டிவிட்டு ரூமிற்குப் போகத் திரும்பினாள். யாரும் அவர்களைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் அவளை அங்கிருந்த மரங்கள் அடர்ந்த பகுதிக்கு இழுத்து வந்திருந்தான். அவள் பேச நினைத்தது, தற்போது அவள் மனதிலோடும் எண்ணம் என அனைத்தும் அவனுக்குப் புரிந்தது. 

“விட்டா சாமியார்னு சீல் பண்ணிடுவியா? யூனியிலயும் வயலின் வாசிக்கிறியாம், என்னாச்சு?” அந்த மரங்களை அடுத்தப் பகுதியில் பள்ளத்தாக்குப் போல இருந்தது. வானிலே நிலா இவர்களுக்காகவே காய்ந்து கொண்டிருந்தது.

“அந்த லூசு சீனியர் அப்பிடிச் சொல்லிச்சா உங்கக்கிட்ட?” அவள் கோபம் இன்னும் தணியவில்லை.

“யாரு சொன்னா என்ன? உண்மை அதானே?” பேசியபடியே அவன் உதடுகள் அவள் கன்னத்தில் புதைந்தன. ஆல்யாவின் மூச்சு ஒரு நொடி நின்றது. திடுக்கிட்டவள் அவனிடமிருந்து விலக முயன்றாள். 

“ஏன்? இந்த சாமியார் தொட்டா புடிக்கலையா?” அவள் கன்னத்திலேயே அவன் உதடுகள் அசைந்தன. அவளுக்குள் ஓர் பேரிரைச்சல் இப்போது தோன்ற முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவனை அண்ணார்ந்து பார்க்கத் தைரியம் இருக்கவில்லை. அவள் திரும்பிய புறமாகத் தன் முகத்தை நகர்த்தியவன் அவள் காது மடலை உரசினான். 

“அந்தப் பச்சைப் புடவையை இப்போ கட்டிக்கிட்டு வந்திருக்கலாமே, ரொம்ப வசதியா இருந்திருக்கும்!” அவன் வலது கை அவள் இடை தழுவியது. முழுதாக அவன் ஆக்கிரமிப்பில் அந்த நொடி இருந்தது பெண். அங்கே இங்கேயென்று அவளால் நகர முடியாது. காது மடலை உரசிய உதடுகள் அவள் கழுத்து வளைவில் புதைந்தன. மெல்லியலாளின் மேனியிலோடிய சிலிர்ப்பை அவனும் உணர்ந்தான். 

“யாராவது… வரப்போறாங்க.”

“வரட்டுமே! இந்த ட்ரிப் வந்ததே இதுக்குத்தானே!” அவன் உல்லாசமாகச் சொல்லிவிட்டுக் கழுத்திலிருந்து உதடுகளுக்கு இடம் மாறப்போனான். அந்நேரம் பார்த்து யாரோ பேசும் குரல் கேட்கவும் அவள் சட்டென்று விலகினாள். 

“ஆல்யா!”

“யாரோ வர்றாங்க!” என்றவள் பயந்துபோய் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அமருக்குக் கோபம் வந்தது. ஆனாலும் உண்மையாகவே அங்கே இருவர் வருவது தெரியவும் அவள் பின்னோடு போய்விட்டான்.

“அண்ணா, ஆரம்பிச்சுடலாமா?” ஷிவா கேட்கவும் தலையை ஆட்டியவன் அதன்பிறகு பார்பிக்யூவில் மும்முரமாகிவிட்டான். போட்டிருந்த ஜம்பரைக் கழட்டி அவள் கையில் கொடுத்தவன் நெருப்பிற்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான்.

“அவளையும் கூப்பிடுங்கண்ணா, ஒதுங்கி ஒதுங்கி இருக்கா.”

“வேணாம் ஷிவா, இப்போ அம்மிணியை விட்டுரு, யாரு கூப்பிட்டாலும் அவ வரமாட்டா.” சிரிப்போடு சொன்னவனைப் பார்த்த ஷிவாவும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. எல்லோரும் உண்ண ஆரம்பித்திருந்தார்கள். சூழ்நிலை மிகவும் கலகலப்பாக மாறிக்கொண்டிருந்தது. தன்னைத் தவிர்க்கும் மனைவியை ஒரு புன்னகையோடு இரசித்திருந்தான் கணவன். 

“இவ எங்கண்ணா ஆளையே காணோம்? இன்னைக்குன்னு பார்த்து இவளுக்குப் பேச இவ்வளவு விஷயம் இருக்கா?!” நண்பிகளோடு மும்முரமாக ஏதோ பேசுவது போல கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தாள். 

“உங்கண்ணிக்கு இன்னைக்கு பிரியாணி கேட்குதோ என்னவோ!” அவன் சொல்லவும் பெருங்குரலில் சிரித்த ஷிவா அதை அப்படியே அவளிடம் போய் சொன்னான். அங்கிருந்த படியே இவனை முறைத்தாள் பெண். அவளுக்கும் தனக்குமாக உணவைப் பரிமாறிக் கொண்டவன் அவளிடம் வந்தான். 

“சாப்பிடலாம்மா, பசிக்குது.” இதற்கு மேலும் பாவனைப் பண்ண முடியாமல் அவனோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். உணவு உள்ளே இறங்குவேனா என்று அடம்பிடித்தது. 

“கண்டதையும் யோசிக்காம சாப்பிடு!” அவன் அதட்டவும் இன்னும் கொஞ்சம் உண்டவள் அதற்கு மேல் எழுந்து கொண்டாள். 

“எனக்குப் போதும்.” அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் போய்விட்டாள். எல்லாம் முடிந்த பிற்பாடு அந்த இடத்தைச் சுத்தம் செய்ய உதவிவிட்டு இவன் அறைக்குள் வந்த போது அவள் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் தூங்கவில்லை என்பது பார்த்தபோதே தெரிந்தது. இத்தனை நேரமும் அடுப்பிற்குப் பக்கத்தில் நின்றிருந்தது உடையெங்கும் புகை வாசனையை உண்டு பண்ணியிருக்க நேராகக் குளியலறைக்குள் சென்றவன் நன்றாகக் குளித்தான். 

அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தபோதும் கண்களை மூடியபடி அப்படியே படுத்துக்கிடந்தாள் பெண். அவன் பக்கமாக வந்து படுத்தவன் அவளை அப்படியே அள்ளிக் கொண்டான்.

“தூங்குற மாதிரி நடிப்பு!” என்றபடி அவளைப் பார்த்தவன் அந்தக் கண்களுக்குள் சிக்கிக் கொண்டான். மருண்ட அவள் விழிகள் இரண்டும் அவனை அசையவிடாமல் கட்டிப் போட்டிருந்தன. சில நொடிகள் அந்த விழிகளையே பார்த்திருந்தான் அமர். ஏதோ ஒரு சுழல் அவனைச் சுருட்டிக் கொள்வது போல இருந்தது. இந்தப் பெண் தனக்குள் மிகவும் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறாள் என்று அந்த நொடி புரிந்தது. தனக்குள் இவள் வேரூன்றி விருட்சம் போல வளர்ந்திருக்கிறாள் என்று தெரிந்தது. அவன் கனம் தாங்க முடியாமல் அவள் இலேசாக அசைந்தாள். 

“காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.” அவன் பாடல் வரி சொன்னான். முகத்தைத் திருப்பி அவள் புன்னகைத்தாள். உண்மையிலேயே அவன் கனத்தை அவளால் தாங்க முடியவில்லை. திரும்பியிருந்த முகத்தைத் தனக்காகத் திருப்பியவன் அந்த இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான். ஒருசில நொடிகள் மாத்திரம் அந்த நான்கு இதழ்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்தன. அதற்கு மேல் அவள் கன்னத்தில் புதைந்து கொண்டவன்,

“எது நடக்கிறதா இருந்தாலும் அது நம்ம வீட்டுலதான் ஆல்யா.” என்றான் போதையாக. முயன்று தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளை அணைத்தபடியே உறங்கினான். அவளும் ஒரு புன்சிரிப்போடு உறங்கிப் போனாள். 

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 17

அத்தியாயம் 17அடுத்தநாள் காலை கண்விழித்த போது ஆல்யா இன்னும் அவன் அணைப்பில்தான் இருந்தாள். முகம் முழுவதும் புன்னகை மலர அந்த அணைப்பை ஒருசில நிமிடங்கள் அனுபவித்தவள் மெதுவாக விலகினாள். காலைநேர தொழுகைக்கான நேரம் கடந்திருந்தது. அவள் விலகலை இரசிக்காதவன் போல அவன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்