arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 17
Anbe… Azhage! chevron_right பகுதி 17 / 21

அத்தியாயம் 17

visibility 4
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 17

அடுத்தநாள் காலை கண்விழித்த போது ஆல்யா இன்னும் அவன் அணைப்பில்தான் இருந்தாள். முகம் முழுவதும் புன்னகை மலர அந்த அணைப்பை ஒருசில நிமிடங்கள் அனுபவித்தவள் மெதுவாக விலகினாள். காலைநேர தொழுகைக்கான நேரம் கடந்திருந்தது. அவள் விலகலை இரசிக்காதவன் போல அவன் சிணுங்கினான்.

“இன்னும் தொழல்லை, நேரம் ஆறு மணி.” அவள் சொன்னதுதான் தாமதம், அவன் பிடி சட்டென்று இளகியது.

“ஆறு மணியாச்சா?!” வெளியே இன்னும் இருள் பிரியவில்லை.‌ சூரியன் வந்த சுவடும் தெரியவில்லை.

“ம்…” சொல்லிவிட்டு அவள் எழுந்து குளியலறைக்குள் போய்விட்டாள். அந்தக் காலை வேளையிலேயே ஷிவாவிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. சரியாக ஒன்பது மணிக்கு எல்லோரும் பஸ்ஸுக்கு வந்துவிட வேண்டும். அதற்கு முன்பாக காலை ஆகாரத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தான். அமருக்குச் சிரிப்பு வந்தது. இந்த இதமான குளிருக்கு இப்போது எல்லோரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். இதில் எப்போது எழுந்து இவர்கள் அனைவரும் ஆயத்தமாவது!

ஆனால் அவன் நினைத்ததற்கு எதிர்மாற்றமாக அனைவரும் சரியான நேரத்திற்கு பஸ்ஸை அடைந்திருந்தார்கள். கேன்டீனுக்கு வந்து சான்ட்விச்சும் டீயும் எடுத்துக் கொண்டான் அமர். உட்கார்ந்து சாப்பிட நேரம் போதவில்லை. கையோடு அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். 

முதலில் ‘லிப்டன் சீட்’ வந்திருந்தார்கள். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த சார். தாமஸ் லிப்டன் என்பவர் பிரிட்டிஷ் காலனித்துவம் இலங்கையில் இருந்தபோது இங்கு வந்து தேயிலை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்திருந்தார். அவரது உற்பத்தியைப் பார்த்து மகிழும் பொருட்டு அவர் உருவாக்கிய இடம்தான் இந்த லிப்டன் சீட். இங்கிருந்து பார்க்கும் போது கண்ணைக் கொள்ளை கொள்ளும் வகையில் சீராக பேணப்பட்ட தேயிலைத் தோட்டங்களைக் காணலாம். நிலமகள் அழகிய பச்சைப் பட்டாடை அணிந்திருப்பாள். இன்றைக்கும் இலங்கையில் இந்த லிப்டன் வகைத் தேயிலை மிகவும் பிரசித்தம். தரமானதும் கூட. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

அடுத்ததாக ஒன்பது வளைவுகளைக் கொண்ட பாலத்திற்கு (நைன் ஆர்ச் பிரிட்ஜ்) வந்திருந்தார்கள். சுற்றிவர இருந்த பச்சைக் காட்டிற்கு நடுவே, அத்தனை உயரத்தில், கரிய புகையைக் கக்கியபடி அந்த நீலநிற புகைவண்டி அவர்களைக் கடந்து செல்லும் போது அழகாகத்தான் இருந்தது. தன்னை அறியாமலேயே இந்த அழகுகளை எல்லாம் பார்க்கும் போது ஆல்யாவின் கரம் கணவனின் கரத்தைப் பற்றிக் கொண்டது. முகத்தில் புன்னகை வாடாமல் இருந்தது.

அடுத்ததாக சீதா பிராட்டியாரை இராவணன் சிறை வைத்ததாகச் சொல்லப்படும் அசோகவனத்திற்கு வந்திருந்தார்கள். அங்கே ஒரு கோயில் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிவர அதிகளவு அசோக மரங்கள் இருப்பதால் அந்த இடத்திற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதாம். அங்கிருந்த வெள்ளை மலர்கள் அனைத்தும் அனுமனின் சிவப்புக் கரங்கள் தீண்டியதால் சிவப்பாக மாறிப்போனதாம். அங்கு பரம்பரைப் பரம்பரையாக வசிக்கும் மக்கள் ஆயிரம் கதைகள் சொன்னார்கள். பக்கத்திலேயே அருவி ஒன்றும் ஓடிக்கொண்டிருந்தது. குளுகுளுவென இருந்த அந்த இடத்திற்குள் நுழையும் போது இராமன், சீதை, அனுமான் என எல்லோரோடும் வாழ்ந்தது போல ஒரு பிரமை ஏற்பட்டது. 

“என்னாச்சு?” ஆல்யா தடுமாறவும் அவளைப் பிடித்து நிறுத்தினான் கணவன்.

“என்னமோ எனக்கு இப்போ இங்க சீதை இருக்கிற மாதிரியே இருக்கு!” அவள் பதிலில் அவளை ஆச்சரியமாகப் பார்த்தவன், 

“ரொம்பக் கற்பனைப் பண்ணுவியோ? பேசாம கதை, கவிதைன்னு எழுத ஆரம்பி.” என்றான் குறும்பாக. தலையைக் குனிந்தபடி அவளும் சிரித்தாள்.‌ தான் நினைப்பதை எல்லாம் எதற்கு முட்டாள் மாதிரி அவனிடம் சொல்கிறோம் என்று தோன்றியது.‌ பகலுணவையும் முடித்துக் கொண்டார்கள்.

“லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், இப்ப நாம பார்க்கப் போறது…” ஷிவா ஆரம்பித்திருக்கவில்லை, அதற்குள்ளாக அவன் மேல் ஒரு கல் வந்து வீழ்ந்திருந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள்.

“சரி சரி… எனக்குப் புரியுது, நான் சட்டுன்னு விஷயத்துக்கு வர்றேன், நாம இப்ப பார்க்கப் போறது ‘லிட்டில் அடம்ஸ் பீக்’ எங்கிற இடம், இந்த இடத்தைப் பார்த்தா நீங்க எல்லாரும் மயங்கிப் போயிடுவீங்க, ஆனா…‌ அங்க போறதுக்கு முன்னாடியே நீங்க மயங்கினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.”

“டேய் மச்சான்! இன்னொரு கல்லு வேணுமா?” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது.

“உண்மையாத்தான் சொல்றேன்டா மச்சான், இந்த இடத்துக்குப் போறதுக்கு மலை ஏறணும், சாதாரண மலை இல்லை, ஆயிரத்தி நூத்தி நாப்பத்தியொரு மீட்டர் உயரம்!” ஷிவா உயரத்தை வேண்டுமென்று மிகைப்படுத்திச் சொல்கிறான் என்று எல்லோருக்கும் புரிந்தது.  ஒரு மணித்தியாலம் செலவு பண்ணினால் அந்த இடத்தை அடைய முடியும். கண்ணுக்கு விருந்து படைக்கும் பல எழில் கொஞ்சும் இயற்கை அழகுகள் அந்தப் பாதையில் உண்டு.

“அவ்வளவு தூரம் ஏறணுமா?!” 

“ஏன்? அம்மிணியை நான் தூக்கிட்டுப் போகட்டுமா?” அமர் கேட்கவும் அவள் முகம் சோர்ந்து போனது. 

“நீங்கப் போயிட்டு வாங்க, நான் இங்கயே இருக்கேன்.”

“அடி வாங்கப் போறே! மரியாதையா எங்கூட வா, இல்லைன்னா அவ்வளவுதான்!” என்று அவளை மிரட்டியவன் மலை ஏற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணினான். இருவரும் ஷூ அணிந்து கொண்டார்கள். இரண்டு பாட்டிலில் நீர் எடுத்தார்கள்.‌ வெப்பக் கதிர்கள் தாக்காமல் இருக்க க்ரீம் பூசிக்கொண்டார்கள். பழங்கள் சிலவற்றையும் எடுத்தார்கள்.

“அண்ணா, நீங்க ரெடி போல?”

“ஆமா ஷிவா, இன்னைக்கு என்ஜாய் பண்ணுறதுன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.”

“சீனியர், இங்க இதுக்கு முன்னாடி நீங்க வந்திருக்கீங்களா? மேல ஏர்றது கஷ்டமா இருக்குமா?”

“ஐயோ சோம்பேறி! சூப்பரா இருக்கும், நான் முன்னாடி வந்திருக்கேன், கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும், ஆனா இங்க இருக்கிற இயற்கை அழகைப் பார்க்கும்போது இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது எவ்வளவு நல்லதுன்னு புரியும், ஏம்மா? நீ சீகிரிய போனதில்லை?”

“போயிருக்கேன்.”

“அப்பிடித்தான் இதுவும்.” ஷிவா சொன்னது எத்தனை உண்மை என்பதைச் சிறிது நேரத்திலேயே அவர்கள் புரிந்து கொண்டார்கள். பாதை கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருந்தது. சில இடங்களில் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. மனித நடமாட்டம் ஏற்பட்ட பிற்பாடு இயற்கையாக உருவான பாதை. ஆங்காங்கே தேயிலைப் புதர்கள் இருந்தன. சில இடங்களில் சின்னச்சின்ன நீரோடைகள் தலை காட்டின. பாதி தூரம் கடக்கும் போதே ஆல்யா துவண்டு போனாள். 

“ஏய் ஆல்யா…” அவளை மெதுவாகத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் கணவன். தன்மேல் முழுதாகச் சாய்ந்து கொண்ட மனைவியை மீதித் தூரம் அவன் கைத்தாங்கலாக அணைத்துக் கொண்டு போனான் என்றுதான் சொல்லவேண்டும்.

“ஏறும்போது மட்டுந்தான் கஷ்டமா இருக்கும், இறங்கும் போது ஈஸிடா.” 

“ம்…” அவள் முகம் முழுதாகச் சிவந்து போனது. நெற்றிப் பொட்டிலிருந்து வியர்வை வழிந்தது. அவர்கள் இலக்கை அடைந்தபோது சுற்றிவர இருந்த அழகு வர்ணிக்க முடியாததாக இருந்தது.

“வாவ்!” தன்னை மறந்து மனைவியை இன்னும் இறுக்கிக் கொண்டான் அமர். தூரத்தே மெல்லிய கோடாய் பாதையும் அதில் வாகனங்கள் போவதும் தெரிந்தது. மாலை மயங்கும் வேளை என்பதால் வானமகள் பொன்னையும், குங்குமத்தையும் ஒன்றாகக் குழைத்துப் பூசியிருந்தாள். பக்கத்தில் இருந்த மலைகளும் அதைத் தழுவிச் சென்ற வெண்பஞ்சு மேகங்களும் கண்ணைப் பறித்தன. எதிரே தெரிந்த மலைகளுக்கு நடுவே ஒரு பெரிய நீர்வீழ்ச்சி கொட்டிக் கொண்டிருந்தது. 

தன் முகத்தில் சிலுசிலுவென காற்று வந்து மோதிய போது அத்தனைப் புத்துணர்ச்சியாக உணர்ந்தது பெண். உலகத்தின் உச்சியிலேயே நிற்பது போலவிருந்தது. அமரை இப்போது அவள் அண்ணார்ந்து பார்க்க மனைவியின் நெற்றியில் மிருதுவாக முத்தம் வைத்தான் கணவன். சிறிது நேரம் அங்கேயே செலவழித்தவர்கள் பின்பு ரிசார்ட்டுக்குத் திரும்பினார்கள். ஏறும்போது இருந்த சிரமம் இறங்கும் போது இருக்கவில்லை. வந்ததும் வராததுமாக கட்டிலில் அமர்ந்தது பெண்.

“கால் வலிக்குதா என்ன?” அவளருகே அமர்ந்தவன் அவள் காலைத் தூக்கித் தன் மடியில் வைத்தான்.

“ஐயையோ! என்னப் பண்ணுறீங்க?!”

“என்னாச்சு? கால் எப்பிடி இருக்குன்னு பார்க்கப் போறேன்.”

“அதுக்கு…” அவள் தயக்கத்தைச் சட்டைப் பண்ணாதவன் காலை ஆராய்ந்தான். பாதங்கள் இரண்டும் சிவந்து போயிருந்தன. ஓரிடத்தில் சின்னதாக கொப்புளம் வந்திருந்தது.

“அடடா! கால் சிவந்து போச்சு! ரொம்ப வலிக்குதா?”

“ஷூ போட்டு ரொம்ப நாளாச்சு, அதான் வலிக்குது.” என்றவள் காலைத் தடவிக்கொடுத்தாள். 

“போய் குளிச்சிட்டு வா, நான் டின்னரை இங்கேயே கொண்டு வர்றேன், உன்னால நடக்க முடியாது.” 

“ம்…” என்றவள் மெதுவாக எழுந்து தனக்கான ஆடைகளை எடுத்துக் கொண்டாள். இவள் பாத்ரூமிற்குள் செல்லவும் வெளியே போன அமர் உணவை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். 

“ஆல்யா, சீக்கிரமா வா, சாப்பாடு ஆறிடப் போகுது.”

“வர்றேன், என்னோட துப்பட்டா அங்க இருக்கா?” 

“துப்பட்டாவா? எதைச் சொல்றா இவ?” இவனுக்கு முதலில் விளங்கவில்லை. அதன்பிறகுதான் ஆடைகளை எடுத்த பெண் தனது துப்பட்டாவை எடுக்க மறந்து போயிருக்கிறது என்று புரிந்தது. 

“அதை அப்புறமா பார்த்துக்கலாம், முதல்ல நீ வெளியே வா.” என்றான் சிரிப்போடு. அவர்கள் வீட்டிலும் அப்படித்தான். அதுவரை நேரமும் சும்மா உட்கார்ந்து படிப்பவள் அவனைக் கண்டால் சட்டென்று துப்பட்டாவை எடுத்துத் தோளில் போட்டுக் கொள்வாள். அமருக்கு அவள் செய்கை ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல மெல்லிய கோபத்தை உண்டு பண்ணியது. 

பாத்ரூம் கதவு திறந்தது. பெரும் தயக்கத்திற்கு மத்தியில் அவள் தலை வெளியே தெரிந்தது. கட்டிலில் துப்பட்டா இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தவள் அது அங்கே இல்லை எனவும் கையிலிருந்த டவலைத் தோளின் மீது போட்டுக் கொண்டாள். 

“டவலைக் குடு, நானும் குளிச்சுட்டு வந்தர்றேன்.”

“மத்த டவல் எங்க?” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் தோளில் கிடந்ததை உருவியவன் அதைக் கட்டிலில் விட்டெறிந்தான். பழுப்பு நிற சாட்டின் நைட்டி அவன் கண்களை ஏமாற்றவில்லை. தனக்கு முதுகு காட்டியபடி நின்ற பெண்ணைப் பின்னோடு போய் அணைத்துக் கொண்டான் இளவல். அவன் மூச்சுக்காற்று இப்போது அவள் கழுத்து வளைவைச் சூடாக்கியது.

“அது என்ன எப்பப்பாரு ஒரு துப்பட்டா? நமக்கு நடுவுல எதுக்கு அது? அந்த மலை உச்சியில நிற்கும் போது இப்பிடிக் கட்டிப் புடிக்கணும் போல இருந்துச்சு.” அவன் குரல் வேறாக இருந்தது. ஆல்யாவுக்கு இந்த அமர் புதிதாகத் தெரிந்தான். இந்தப் பயணம் அவன் எதேச்சையாக வந்தது போல இப்போது அவளுக்குத் தோன்றவில்லை. இவன் திட்டம் போட்டுத்தான் எல்லாம் பண்ணியிருக்கிறான்.

“சாப்பாடு… ஆறிடப் போகுது…”

“ஆறட்டும்.” என்றவனின் கரம் அவள் இடை வளைத்தது. அடுத்து அவன் நகர்வு என்னவாக இருக்கும் என்று புரிந்தவள் மெதுவாக விலகினாள்.

“ஆலி… ஒரேயொரு தடவை…” செல்லமாகக் கொஞ்சிய குரல் அவள் இதழ்களில் புதைந்து போனது. நேற்றைக்குப் போல் அல்லாமல் இன்றைக்கு அந்த இதழொற்றல் சில நொடிகள் நீண்டது. மென்மைதான், ஆனாலும் சற்று அழுத்தம் கூடியிருந்தது. 

“உன்னைத்தான் கட்டிக்குவேன்னு ஒத்தக்கால்ல நின்னுட்டு இப்பிடித் தள்ளித்தள்ளிப் போனா என்ன அர்த்தம்?” அவள் விலகலால் எழுந்தது கேள்வி. ஆனால் விடை கிடைக்கவில்லை.

“இந்தக் கிழவனை ஏத்துக்க ஆறு மாசம் போதலையா?”

“கிழவன் பண்ணுற வேலையா இது?” 

“அப்ப என்னப் பண்ணணும்? சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கணுமா?”

“இத்தனை நாளும் அதானே பண்ணினீங்க?”

“சரிம்மா, தப்புத்தான், இவ்வளவு அழகான பொண்டாட்டியை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருந்தது தப்புத்தான், அதுக்காக இப்ப எதுவும் பண்ணக்கூடாதா?”

“என்னத் திடீர்னு? ஆல்யா மேல பாசம் பொங்குது? பண்டாரவெல காத்துப் பண்ணின மாயமா?”

“ஆல்யா, என்னைப் பாரு.” என்று அவள் முகத்தைத் தனக்காகத் திருப்பியவன் அவள் கண்களை ஊன்றிப் பார்த்தான். எப்போதும் தன்னைப் பற்றி அவளுக்குள் முளைக்கும் சந்தேகம்தான் இப்போதும் அவளைத் தன்னிடமிருந்து விலகச் செய்கிறது என்று அவனுக்குப் புரிந்தது. 

“எங்கண்ணுல உனக்கு எதுவும் தெரியலையா? என்னோட காதலை இப்பவும் நீ சந்தேகப்படுறியா?” 

“சந்தேகப்படலை, உங்களைப் பொறுத்தவரைக்கும் ஆல்யா எங்கிறது கரீம் மாமாவோட சின்னப் பொண்ணுதானே!”

“அப்போ சின்னப் பொண்ணில்லைன்னு நீயும் நிரூபிச்சுக் காட்டு.” என்றவன் மீண்டும் அவளது இதழ்களை நாடினான். பெண் இப்போது அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டது. 

“கல்யாணம் ஆன முதல் வாரமே உனக்குப் பக்கத்துல இருக்கப் பயந்துக்கிட்டு பதுளை வரைக்கும் ஓடி வந்தவன் நான், நீ என்னோட லவ்வை சந்தேகப்படுறியா? கரீம் மாமாவோட சின்னப் பொண்ணை எனக்கு எவ்வளவு புடிக்கும்னு உனக்கு நாளைக்கு நான் காட்டுறேன்.” என்றவன் வலுக்கட்டாயமாக அவளைத் தன்னருகே இழுத்து அவள் இதழில் முத்தம் வைத்துவிட்டுத்தான் விலகினான்.

அடுத்தநாள் எல்லோரும் மனமே இல்லாமல் ஊர் கிளம்பினார்கள்.‌ அந்தப் பகுதி முழுவதும் வண்ண வண்ணப் பூக்களுக்குப் பிரசித்தம் என்பதால் கண்ணில் கண்ட எல்லா கார்டனிலும் பஸ்ஸை நிறுத்தி நிறுத்தி வந்தார்கள். அத்தனைப் பெரிய ரோஜா பூக்களைப் பார்த்ததும் பெண்கள் எல்லோரும் மலர்ந்து போனார்கள். ஆனால் இது போல ஏற்கனவே ஒரு ரோஜா கொத்தை அவள் பார்த்திருந்ததால் எந்த அதிர்ச்சியும் இல்லாமல் பெண் பூக்களை வருடிக் கொடுத்தது.

“ஆல்யா, எந்திரி.” தன் முகத்தில் யாரோ மென்மையாகத் தட்டவும் கண்விழித்தாள் பெண். இன்னும் பஸ்ஸில்தான் இருந்தார்கள். சுற்றிவர இருள் சூழ்ந்திருந்தது. சொகுசாக அவன் மார்பை முழுதாக ஆக்கிரமித்தபடி சயனித்திருந்த பெண் பதட்டமாக விலகியது. சீட்டில் தலை வைத்துப் படுத்திருந்தவள் எப்போது அவன் மார்புக்குத் தாவியிருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

“எழுப்பியிருக்கலாமே!”

“நீ நல்லா தூங்கிட்டு இருந்தே, எதுக்குத் தொல்லைப் பண்ணணும்னுதான் எழுப்பலை.” பல்கலைக்கழக வளாகத்திற்குள் பஸ் வந்து நின்றது. எல்லோரும் அவர்களின் பொருட்களோடு இறங்க ஷிவாவிற்கு நன்றி சொல்லிவிட்டு இவர்களும் அந்த ப்ளாக் ஆடிக்கு வந்திருந்தார்கள்.

“வந்துட்டோம்னு மாமிக்கு ஃபோன் பண்ணிச் சொல்லுங்க.”

“ஏற்கனவே சொல்லிட்டேன்.” என்றவன் காரை ஸ்டார்ட் செய்தான். 

“ஏதாவது சாப்பிடுறியா?”

“ம்ஹூம், வீட்டுக்குப் போகலாம்.” அடுத்த அரைமணி நேரத்தில் கார் வீட்டிற்கு வந்திருந்தது.

“அடடே! ஆல்யா, வா வா, ட்ரிப் எப்பிடி இருந்துச்சு?”

“சூப்பர் மாமி! ரெஹான் மச்சான் வந்ததும் உங்களையும் கூட்டிக்கிட்டு அங்க திரும்பப் போகணும்னு அமர் மச்சான் சொன்னாங்க.” வந்ததும் வராததுமாக பேச்சை ஆரம்பித்திருந்தாள் பெண்.

“ஆமா, இப்ப எனக்கு அது ஒன்னுதான் குறை, நீங்க சின்னப் பிள்ளைங்க, நல்லா என்ஜாய் பண்ணுங்க.”

“ம்ஹூம், கண்டிப்பா அடுத்தத் தடவை நீங்களும் வரணும் மாமி, நேத்து மலைமேல ஏறினோம், அதுமட்டுந்தான் உங்களுக்கு செட் ஆகாது, மத்த இடமெல்லாம் அவ்வளவு அழகு, என்னோட காலைப் பாருங்க.” என்றவள் தனது காலில் வந்திருந்த கொப்புளத்தைக் குழந்தைப் போல இன்பத்திடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

“ஐயையோ! என்னம்மா இது?!”

“ஷூ போட்டு ரொம்ப நாளாச்சில்லை மாமி? அதான், நான் வரலை, நீங்கப் போங்கன்னு உங்கப் பையன்கிட்டச் சொன்னேன், அவங்கக் கேட்கலை.” பெண் மாமியாரிடம் புகார் படித்தாள்.

“உன்னை விட்டுட்டுத் தனியா மலையேறத்தான் நாம ட்ரிப் போனமா?” உள்ளே நுழைந்த படி பதில் சொன்னான் அமர்.

“தம்பி சொல்றதும் சரிதானேம்மா.”

“ஆமா, நீங்க உங்கப் பையனை விட்டுக் குடுப்பீங்களா? நான் குளிச்சிட்டு வர்றேன்.” 

“அம்மா, பசிக்குது.” இது அமர். அம்மாவிடம் சொல்லிவிட்டு மனைவியின் பின்னோடு அவள் ரூம்வரை வந்தான்.

“என்னப் பண்ணுறே?” அலமாரியில் எதையோ எடுத்துக் கொண்டிருந்தப் பெண் இவன் பேச்சில் திரும்பிப் பார்த்தது. 

“குளிச்சுட்டு வர்றேன்.”

“சாப்பிட்டுட்டுக் குளிக்கலாம்.” என்றவன் அவளைக் கொஞ்சம் அப்பால் நிறுத்திவிட்டு அந்த அலமாரியை ஆராய்ந்தான். பட்டுப்புடவைகள் ஓரிடத்தில் தொங்கவிடப் பட்டிருந்தன. சந்தன நிறப் புடவைக்கு அரக்கு நிறத்தில் பார்டர் வைக்கப்பட்டது இவன் கவனத்தைக் கவரவும் அதை எடுத்துப் பார்த்தான். 

“என்னப் பண்ணுறீங்க?!” அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“ம்… எம் பொண்டாட்டிக்குப் புடவை செலக்ட் பண்ணுறேன்.” என்றான் புடவையைப் பார்வையிட்டபடி.

“எதுக்கு? எங்கேயாவது போறோமா?” கேட்டவளை ஒரு தினுசாகப் பார்த்தவன்,

“சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறமா குளிச்சுட்டு இந்தப் புடவையைக் கட்டிக்கோ, அவ்வளவு காசு குடுத்து வாங்கின புடவையை எங்கயுமே கட்ட முடியலைன்னு அன்னைக்கு ரொம்ப வருத்தப்பட்டேயில்லை?” என்றவன் புடவையை அவள் கையில் கொடுத்துவிட்டு அவனது அறைக்குப் போனான். இப்போது விக்கித்து நின்றது பெண். இவனது மனதில் இப்போது என்னதான் ஓடுகிறது?!

“ஆல்யா! வாம்மா சாப்பிடலாம்.”

“இதோ வர்றேன் மாமி.” என்று குரல் கொடுத்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் வெளியே போனாள். அவனை அவனது அறையில் காணவில்லை. வெடிகுண்டு ஒன்றை இவள் தலையில் போட்டுவிட்டு எங்கே போய்விட்டான்?! அவன் நல்ல பிள்ளைப் போல அம்மா பரிமாற டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான். 

“நீயும் சீக்கிரமா சாப்பிடும்மா, தம்பிக்கு ஒரே டயர்டா இருக்காம், சாப்பிட்டுட்டுத் தூங்கப் போறாங்களாம்.” மகனின் எண்ணம் புரியாமல் அம்மா விளக்கம் வேறு சொன்னார். இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையை ஆட்டிக்கொண்டு மௌனமாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.

“ஆல்யா, நல்லாச் சாப்பிடு, பயணத்துல இவ ஒழுங்கா சாப்பிடலைம்மா.”

“அப்பிடியா? அதான் கொஞ்சம் மெலிஞ்சா மாதிரி தெரியுது, இன்னும் கொஞ்சம் போடும்மா.” என்ற இன்பம் இன்னும் இரண்டு இடியாப்பங்களை எடுத்து அவள் தட்டில் வைத்தார்.

“ஐயோ போதும் மாமி! என்னால இதுக்கு மேல சாப்பிட முடியாது.”

“அப்ப இந்த முட்டையைப் போட்டுக்கோ, உங்கம்மா உன்னைப் பார்த்தா என்ன நினைப்பாங்க? இந்த இன்பம் எம் புள்ளையைச் சரியா கவனிக்கலைன்னு வருத்தப்பட மாட்டாங்க? நான் அந்தளவுக்குக் கொடுமையான மாமியாரா? எதுக்கு எனக்குக் கெட்டப் பெயர் வாங்கிக் குடுக்கிறே?” கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னவர் பெண் உண்டு முடித்த பின்புதான் அவளை அங்கிருந்த நகர அனுமதித்தார். விட்டால் போதும் என்று நினைத்தவள் தனது அறைக்கு வந்துவிட்டாள். அவன் வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் ஃபோனைக் காதில் வைத்தபடி நிற்பது தெரிந்தது.

மனம் இலேசாக அடித்துக் கொண்டது. எத்தனையோ நாட்கள் இந்த ஒரு இரவிற்காக அவள் பல கனவுகள் கண்டதுண்டு. அவளுக்கும் அவனுக்குமான ஒரு உலகம்! அந்தக் கற்பனை இப்போதும் அவளுக்கு இனித்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அது அத்தனையும் கனவாகியே போனது. தொலைந்து போன அந்தக் கனவு இன்றைக்கு நான் நிஜமாகப் போகிறேன் என்று அடம்பிடிக்கிறது. ஆனால்… 

அதற்கு மேலும் அங்கே நிற்காமல் புடவையோடு குளியலறைக்குள் சென்றவள் உடம்பு கழுவிவிட்டுப் புடவையை உடுத்திக் கொண்டாள். அழகான பட்டுப்புடவை! அவளுக்குப் புடவைகள் என்றால் ஒரு பிடித்தம். இன்றைய பெண்கள் எல்லோரும் நவநாகரீக மோஸ்தர்களை விரும்பும் போது இவளுக்கு என்னவோ அந்தப் புடவையில் நாட்டம் அதிகம். சல்மாவிற்கும் அது தெரியும் என்பதால் நல்ல விலையுயர்ந்த புடவைகளை இளைய மகளுக்காக வாங்கியிருந்தார். 

எப்போதும் போல கூந்தலை ஒற்றைப் பின்னல் போட்டவள் அதை இடது தோளில் போட்டுக் கொண்டாள். கண்ணுக்கு மையிட்டுக் கொண்டாள். எப்போதும் இரவில் தூங்கும் போது முகத்திற்கு க்ரீம் பூசுவாள். அதையும் செய்து முடித்தவள் அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் தனது அலைபேசியை எடுத்து அதில் கவனத்தைச் செலுத்தினாள். நேரம் நகராமல் அடம் பிடித்தது. 

வாட்சப்பைத் திறந்தவளுக்கு அங்கேயொரு ஆச்சரியம் காத்திருந்தது. அமர் ஏதோ ஒரு பாடலின் லின்க்கை அவளுக்கு அனுப்பியிருந்தான். கண்கள் விரிய, உதட்டில் புன்னகை அரும்ப அதைத் தட்டியவள் ஒலித்த பாடலில் அப்படியே கிறங்கிப் போனாள்.

“ஏய்! மாண்புறு மங்கையே… நில்லாயோ… செம்மாதுளை வாய்மொழி சொல்லாயோ…”  சுஜாதாவும் ஶ்ரீநிவாசும் உருகிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பாடலை இதற்கு முன் அவள் கேட்டிருக்கிறாள். ஆனால் இத்தனை ஆழமாக அதன் வார்த்தைகளைக் கவனித்ததில்லை. பாடலின் ஆரம்ப வரியே அவளைச் சொக்க வைத்தது. அறை முழுவதையும் பாடல் வரிகள் நிரப்பியிருக்க ஜன்னலில் சாய்ந்து நட்சத்திர வானை வெறித்திருந்ததாள்.

இசையில் லயித்திருந்த பெண் பின்னால் வந்து நின்றவனையோ, தன்னையே சில நொடிகள் அவன் பார்த்திருந்ததையோ அறியவில்லை. இரு கைகள் தன்னை அணைக்கவும் திடுக்கிட்டுத் திரும்பப் போனாள். ஆனால் அதற்கு முன்பாக அவன் இதழ்கள் அவள் கழுத்தில் அவசரமாகப் புதைந்திருந்தன. கையிலிருந்த அலைபேசியை அவள் நழுவவிடவும் அதைச் சட்டென்று தாங்கியவன் பக்கத்திலிருந்த கட்டிலில் அதைப் போட்டான். பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. 

கடந்த இரண்டு இரவுகளும் பொறுமைக் காத்தவனுக்கு இன்றைக்கு அது மருந்திற்கும் இருக்கவில்லை. அவள் வெற்றிடையில் அவன் கரம் ஊர்வலம் வர அவனைப் பிடித்துத் தள்ளியவள் அப்பால் போக முயன்றாள். ஆனால் இப்போது அவள் புடவை முந்தானை அவனிடம் சிக்கியிருந்தது. ஆல்யாவின் அதிர்ச்சிக்கு இப்போது அளவிருக்கவில்லை. இடது  தோளில் தனது கரத்தை வைத்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“என் மாண்புறு மங்கைக்கு எதுக்கு இத்தனை அதிர்ச்சி?” அவன் கண்களில் மாத்திரமல்ல, குரலிலும் காதல் வழிந்தது.‌ ஆல்யாவிற்குத் தன் தாய்மொழி மறந்து போனது! அவள் சேலைத் தலைப்பைத் தன்னை நோக்கி இழுத்தான் இளவல்.

“ஐயையோ! புடவை கிழிஞ்சிடும்!”

“அப்போ பக்கத்துல வா.” அவன் பேரம் பேசவும் அவள் மறுப்பாகத் தலையை அசைத்தாள். அவனே இப்போது அவளருகில் வந்தான். 

“கண்கள் பார்த்தேன் கவியானேன், இன்னும் பார்த்தால் எங்கே போவேன்?” ஆண்குரல் மீண்டும் பாட அமரின் கண்கள் இப்போது கோடு தாண்டின. பெண்ணிற்குச் சர்வாங்கமும் நடுங்கியது. இது போல அவனை அவள் இதுவரைப் பார்த்தில்லையே!

“புடவையை… விடுங்க…” அவள் திணறினாள்.

“முடியாது.” திட்டவட்டமாக அறிவித்துவிட்டு அவளை ஆக்கிரமிப்பதிலேயே அவன் குறியாக இருந்தான்.

“உன்னாலே கம்பன் தாண்டுவேன்… உன் இதழ் மேலே எழுதுவேன்…” அதற்கு மேல் இளமைக் காலதாமதம் செய்யவில்லை.‌ இதுநாள் வரை அவன் காத்து வந்திருந்த கண்ணியமும், காதலும் கரையுடைத்தன. 

“அமர்…” முதன்முறையாக அவனைப் பெயர் சொல்லி அழைத்தது பெண்.‌ கசங்கிக் கொண்டிருந்த அவள் இதழ்கள் இவ்வளவு காலமும் அவள் கடைப்பிடித்த வரைமுறைகளை மறந்திருந்தன.

“ஓ… என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவியா நீ?!” யௌவனம் செழித்திருந்த அவள் வளைவுகளில் அவன் முத்தம் விதைக்க ஆரம்பிக்கவும் பெண் அத்தோடு அவனிடம் சரணடைந்திருந்தது. பாடல் வரிகளே மீண்டும் மீண்டும் ஒலித்து அந்த அறையை இன்பமயம் ஆக்கியிருக்க அவள் மறுப்புகள் எதையும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் கண்ணியம் தொலைத்த காதலன் ஆகியிருந்தான்! 

அதுவரை அந்த அறைக்குள் கொலு வீற்றிருந்த இளமை சற்றே ஓய்வெடுத்தது. தலையை மாத்திரம் திருப்பித் தனக்குப் பக்கத்தில் கிடந்தவளைப் பார்த்தான் அமர். ஆசையாசையாய் அவள் உடுத்தியிருந்த சந்தனப்பட்டு சங்கடப்பட்டு அப்பால் கிடந்தது. கேசம் கலைந்திருக்கக் களைத்திருந்தவளைப் பார்த்த போது இன்னுமொரு முறை கூடிப்பார்க்க இளமை இச்சை கொண்டது. புருவங்களுக்கு மேல் ஒன்றிரண்டாய் பூத்திருந்த அவள் வியர்வைத் துளிகளைத் தன் இதழ்களால் ஒற்றியெடுக்க ஆசை வந்தது.

“ஆலி…” இதுவரைத் திறந்து கிடந்த அவள் விழிகள் இப்போது மூடிக்கொண்டன. அவள் குரல் சிணுங்கவில்லை. ஆனால் முகத்தில் சிணுக்கம் தெரிந்தது. சரிந்து மீண்டும் அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான் இளவல்.

“இப்பவும் இந்த அமரோட காதல் மேல சந்தேகம் இருக்கா?” அவளுக்கே உரித்தான பிரத்தியேக வாசனை அவனைக் கிறங்கச் செய்தது. அவள் பதிலுக்காகக் காத்திருந்தவன் அது வராமல் போகவே அவள் முகம் பார்த்தான். ஆனால் பெண் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

“ஏய்! மாண்புறு மங்கையே!” என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க அவனை அப்படியே பிடித்துத் தள்ளியிருந்தது பெண். வாய்விட்டுச் சிரித்தவன் மீண்டும் அவள் இதழ்களுக்குள் சிக்க ஆரம்பித்திருந்தான்.

“போதும்…” அந்தக் கெஞ்சலை அவன் கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. போதும் என்ற வார்த்தைக்குக் காதல் அகராதியில் வேறு அர்த்தம் என்று புரிந்தவன் போல தன் முத்தப் போரை ஆரம்பித்திருந்தான். பதிலுக்குப் போரிட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நிராயுதபாணியாக நின்றது பெண்!

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

அத்தியாயம் 18விடிந்து வெகுநேரம் ஆகியிருந்தது. ஆல்யா படுக்கையில் இலேசாக புரண்டாள். கண்களைத் திறந்தபோது அருகில் அவனில்லை. பக்கத்தில் அவனில்லை என்றதும் கண்களை நன்றாகத் திறந்தது பெண். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகைத் தோன்றினாலும் வெட்கம் மேலிட அருகில் இருந்த அவன் தலையணையை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்