arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 18
Anbe… Azhage! chevron_right பகுதி 18 / 21

அத்தியாயம் 18

visibility 4
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 18

விடிந்து வெகுநேரம் ஆகியிருந்தது. ஆல்யா படுக்கையில் இலேசாக புரண்டாள். கண்களைத் திறந்தபோது அருகில் அவனில்லை. பக்கத்தில் அவனில்லை என்றதும் கண்களை நன்றாகத் திறந்தது பெண். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகைத் தோன்றினாலும் வெட்கம் மேலிட அருகில் இருந்த அவன் தலையணையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். 

நேற்றைய இரவை நினைத்த போது முகம் சூடாகிப் போனது. கணவனின் முகத்தை இனி எப்படிப் பார்ப்பது? அவனை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்குத்தானே அவன் வேலைகள் இருந்தன. உதட்டைக் கடித்தபடி எழுந்தவள் அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் கிடந்த டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள். அவசர அவசரமாக அவன் வருவதற்கு முன்பாக கையில் அகப்பட்ட ஆடையை கப்போர்ட்டிலிருந்து எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போய்விட்டாள். 

குளித்து முடித்துவிட்டு வந்தவள் முதலில் தொழுகையை நிறைவேற்றினாள். இந்நேரத்துக்குத் தான் தொழுவதைப் பார்த்தால் அம்மா பின்னிவிடுவார்கள். தோன்றிய புன்னகையை மறைத்துக் கொண்டு தலையை நன்கு துவட்டினாள். அணிந்திருந்த நைட்டியின் முதுகுப்புறம் முழுதாக நனைந்திருந்தது. வயிறு பசிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் இந்த ஆடையோடு வெளியே போக முடியாதே!

அவன் எங்கே?! அடுத்ததாக இருந்த அவன் அறையை எட்டிப் பார்த்தது பெண். அங்கே அவனில்லை. மெதுவாக வெளியே தலையை நீட்டிப் பார்த்தாள்.

சமையலறையில் இன்பத்தின் அரவத்தையும் காணவில்லை. வெளியே இருக்கும் குளியலறையில் சத்தம் கேட்டது. மாமி குளிக்கிறார் என்று புரிந்து கொண்டவள் தைரியமாக சமையலறைக்குள் வந்தாள். கெட்டிலில் நீரைப் போட்டுவிட்டு அது கொதிக்கும் வரைத் தலையை நன்கு உலர்த்தினாள். கூந்தலைப் பின்னல் போடாமல் அப்படியே விரித்துவிட்டவள் டவலை அங்கிருந்த நாற்காலியில் போட்டுவிட்டு மும்முரமாக டீ தயாரித்தாள். 

கெட்டிலில் நீர் கொதித்துக் கொண்டிருந்த சத்தத்தில் அமர் வீட்டினுள் வந்ததை இவள் கவனிக்கவில்லை. வெறும் டீயாக இல்லாமல் ஏதாவது சாப்பிட இருந்தால் நன்றாக இருக்கும் என்று வெறும் வயிறு அறிவுறுத்தியது. ஃப்ரிட்ஜை திறந்து பார்க்க அங்கே கேக் இருந்தது. அதை எடுத்து ஒரு துண்டை வெட்டியவள் அதை சாஸரில் வைத்தாள். சாக்லேட் கேக்கில் ஐஸிங் மின்னியது. பசித்த வயிற்றுக்கு அது அமிர்தமாக இருக்க ஒரு கடி கடித்தவள் விரலில் ஒட்டியிருந்ததை உதடருகே கொண்டு போகும் போது அவள் கரம் அவன் பிடியில் இருந்தது. 

திடுக்கிட்டுத் திரும்பியவளின் விரலில் இருந்த ஐஸிங்கை படு இயல்பாக அவன் வாயில் வைத்துச் சுவைத்தான். கையை அவள் இழுத்துக்கொள்ள சாஸரில் இருந்த கேக்கை எடுத்து அவள் வாயில் வைத்தான். அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாலும் வாயருகே வந்த கேக்கைக் கடித்தாள் ஆல்யா. ஆனால் அதையும் அவன் விட்டு வைக்கவில்லை. அவள் கடித்த கேக்கில் பாதியை அவன்தான் உண்டிருந்தான். மிரண்டு விழித்தவள் அவனைத் தள்ளிவிட்டிருந்தாள். அவசரமாக அவள் கண்கள் கிச்சன் வாசலைப் பார்த்தது.

“உங்க மாமி இன்னும் குளிக்கிறாங்க.” அதற்கும் அவன் பதில் சொன்னான். இப்போது அந்த கேக்கை எடுத்துத் தான் கடித்தவன்,

“டீயைக் குடிச்சிட்டுச் சீக்கிரமா ரூமுக்கு வா.” என்றான். போகும் முன்பாக அவள் கழுத்து வளைவில் செல்லமாக கடித்துவிட்டும் போனான். ஆல்யா அவன் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தெரியாமல் திண்டாடினாள். இரண்டு நிமிடங்கள் கூட கடந்திருக்காது.

“ஆல்யா…” அவன் ரூமிலிருந்து அழைப்பது கேட்டது. அவசர அவசரமாக டீயைக் குடித்தவள் மீதி கேக்கை அப்படியே வைத்துவிட்டு நாற்காலியில் போட்ட டவலோடு உள்ளே வந்தாள்.

“அந்த டீயைக் குடிக்க இவ்வளவு நேரமா?” அவன் அறையில்தான் நின்றிருந்தான். எதுவும் பேசாமல் அவள் நகரப் போக கரம்பிடித்து அவளை நிறுத்தியவன் அவள் தோளிலிருந்த டவலைத் தூக்கித் தூர போட்டான். அவளைத் தன்னருகே இழுத்தவன் எதுவும் பேசாமல் அந்த இதழ்களைத் தனதாக்கினான். பெண் அசையாமல் அப்படியே நின்றிருந்தது. 

அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவன் செய்கைகளை அவள் இரசிக்கத்தான் செய்தாள். தன்மேல் அவனுக்குக் காதல் இருக்கிறதா என்ற அவள் சந்தேகத்திற்கு அவன் செய்கைகள் மூலம் விடை பகர்ந்து கொண்டிருந்தான். அந்த மென்மையான முத்தப் போரை இன்னும் எத்தனை நேரத்திற்கு அவன் தொடரப் போகிறான்?! 

“ஆலி…” அவன் போதைக் குரல் அவள் கூந்தல் காட்டின் வாசம் பிடித்தது. 

“இன்னைக்கு மத்தியானம் ஒரு கல்யாண வீடு இருக்கு…” அவன் பேச்சில் அவள் நிதானித்தாள். நேரம் ஒன்பதைத் தாண்டியிருந்தது. அந்த வேலையைக் கவனிக்காமல் இவன் இங்கே என்னப் பண்ணிக் கொண்டிருக்கிறான்?!

“ஒரு வேலை ஓடமாட்டேங்குது, என்னால அங்க இருக்க முடியலை…” அவன் அடுத்த கட்டத்திற்குத் தாவ எத்தனித்தான். ஆல்யா மெதுவாக விலகினாள். தலை கலைந்து, கண்களில் மயக்கத்தோடு நின்றிருந்தவனைப் பார்த்த போது அவளுக்கு என்னவோ செய்தது.

“வேணும்னா… இன்னைக்கு நைட் இன்னொரு புடவை உடுத்தவா?” 

“ஏன்? அதை இப்ப உடுத்த மாட்டியா?” கண்சிமிட்டினான் கணவன்.

“வேலை இருக்குன்னு சொன்னீங்க…” அவன் கவனத்தை வேலையின் பக்கம் திருப்ப முயன்றாள். ஆனால் அவன் பிடியிலேயே உடும்பாக நின்றிருந்தான் அமர். அறையின் கதவைத் தாழிட்டவன் அடுத்து வந்த அரைமணி நேரத்தை மனைவியோடுதான் செலவழித்தான். 

“பத்து மணியாகப் போகுது.” தனக்கு முதுகு காட்டியபடி சொன்னவளோடு ஒன்றியவன்,

“எதுக்கு இப்போ என்னை விரட்டுறே? போகவே மனசில்லை.” என்றவன் எழுந்து குளித்துவிட்டு ஆயத்தமானான். அறையைவிட்டுப் போகும் முன்பாகவும் மனைவியை இறுக்கி அணைத்துவிட்டுத்தான் போனான். ஆல்யாவிற்கு உலகமே வண்ண மயமாகத் தோன்றியது. அமரின் இந்த முகத்தை அவள் இவ்வளவு சீக்கிரத்தில் எதிர்பார்க்கவில்லை. அவள் ஃபோன் சிணுங்கும் சத்தம் கேட்டது. எழுந்து அவள் அறைக்குப் போவதற்குச் சோம்பல் பட்டவள் இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே அவன் கட்டிலில் படுத்துக் கிடந்தாள். 

ஒரு பத்து நிமிடங்கள் போன பிற்பாடு மீண்டும் ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டது. இவள் எழுந்து போவதற்கு முன்பாக அது அணைந்து போகவும் பிற்பாடு யாரென்று பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் குளிக்கச் சென்றுவிட்டாள். ரெஹான்தான் அழைத்திருந்தான்.

“சொல்லுங்க ரெஹான் மச்சான்.”

“அந்த ஃபோனை எடுக்க இவ்வளவு நேரமா மதினி? எங்க மதினிக்கு இன்னும் விடியலையோ?” குறும்பாக அவன் கேட்டிருக்க இவள் முகம் இங்கே சிவந்து போனது.

“அதெல்லாம் ஒன்னுமில்லை, நீங்க சொல்லுங்க மச்சான், எப்பிடியிருக்காங்க உங்க அம்மிணி?”

“ஏய் பொண்ணே! பார்த்துப் பேசு, அண்ணா வீட்டுல இருக்கானா?”

“இல்லையில்லை, அவங்க இருந்தா நான் இப்பிடிப் பேசுவேனா?”

“ம்… ஆல்யா, நான் ஊருக்கு வரலாம்னு ப்ளான் பண்ணுறேன்…”

“வாங்க மச்சான், அதான் படிப்பு வேலையெல்லாம் முடிஞ்சிருச்சில்லை, நீங்கதான் வேலையை விட முடியாதுன்னு அங்கேயே உட்கார்ந்திருக்கீங்க, உங்க பொய்யை ஊர் நம்பும், நான் நம்புவேனா? நீங்க ஏன் வராம இருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா?”

“ஏய் வாயாடி! எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதே.”

“ஆமா, நீங்க புதுசா எங்களுக்குக் கத்துக்குடுக்கப் போறீங்களாக்கும்!” அவள் நொடித்துக் கொள்ள அவன் அங்கே சிரித்தான்.

“ஆல்யா…” ரெஹானின் குரல் வெகுவாகத் தயங்கி வந்தது.

“சொல்லுங்க மச்சான், எப்ப டிக்கெட் போடுறதா ஐடியா? மாமிக்குத் தெரிஞ்சா அவ்வளவு சந்தோஷப்படுவாங்க.”

“இங்கப்பாரு, இப்போதைக்கு அம்மாக்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்… நான்…” அவன் இப்போதும் எதையோ சொல்லத் தயங்க அவள் நெற்றி சுருங்கியது.

“என்னாச்சு மச்சான்? ஏன் தயங்கித் தயங்கிப் பேசுறீங்க? ஏதாவது ப்ராப்ளமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை, நான் இப்ப எங்க இருக்கேன் சொல்லு?”

“எங்க இருக்கீங்களா?! என்ன மச்சான், சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டீங்களா?” அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் அந்தக் கேள்விக்கு அவன் பெருங்குரலில் சிரிக்கவும் இவளுக்குக் குளிரெடுத்தது.

“ரெஹான் மச்சான்! உண்மையாத்தான் சொல்றீங்களா?! எங்க இருக்கீங்க நீங்க இப்போ?!”

“ஏர்போர்ட்ல இருக்கேம்மா.”

“ஹீத்ரோவா?”

“இல்லை, கொழும்பு.”

“ஓ…” அவள் திகைத்துப் போனாள்.

“நான் இன்னொரு விஷயமும் சொல்லவா?”

“என்ன?” இப்போது என்ன இடி வரப்போகிறதோ!

“நான் தனியா வரலை, எங்கூட ஹானியும் வந்திருக்கா.” இப்போது ஆல்யா மூச்சுக்கு இலேசாகத் தடுமாறினாள். அந்த ஹானி யாரென்று அவளுக்குச் சொல்லத் தேவையில்லை. சொல்லாமலேயே புரிந்தது.

“ஆல்யா! லைன்ல இருக்கியா? உங்களையெல்லாம் பார்க்கணும்னு ஆசைப்பட்டா, என்னால மறுக்க முடியலை, அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்.”

“சரி மச்சான்.” இதற்கு மேல் அவளால் என்ன சொல்ல முடியும்? பரீட்சைகள் முடிந்த பிற்பாடும் லண்டனை விட்டு நகராத ரெஹான் இன்றைக்கு நாட்டிற்கு வந்திருப்பதன் இரகசியம் புரிந்தது இவளுக்கு.

“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம், அனேகமா வீட்டுக்கு வந்து சேர நைட் ஆகிடும்.” அவன் மாத்திரமே பேசிக்கொண்டிருந்தான். ஆல்யாவால் எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை.‌ அவன் பேசுவதற்குத் தலையாட்டிக் கொண்டிருந்தாள். மனதில் பாரத்தை ஏற்றி வைத்தாற் போல இருந்தது. யாரிடம், எதை, எப்போது சொல்வது என்று எதுவும் விளங்கவில்லை. ரெஹான் அவசரப்படுகிறானோ என எண்ணத் தோன்றியது.

“ஆல்யா! ஆல்யாம்மா!” வெளியே இன்பத்தின் குரல் கேட்டது. அலைபேசியைக் கட்டிலில் போட்டுவிட்டு அவசரமாக உடையை மாற்றியவள் வெளியே வந்தாள். 

“இவ்வளவு நேரமாச்சு, என்னம்மா பண்ணுறே? ஒன்னுமே சாப்பிடலையே?”

“இல்லை மாமி, நீங்கக் குளிக்கும் போது நான் வந்து டீ போட்டேன், கேக்கும் சாப்பிட்டேன்.”

“அது போதாது, இடியாப்பம் இருக்கு, வந்து சாப்பிடும்மா.” என்றவர் இளையவளின் அருகே வந்தார்.

“என்னாச்சும்மா? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை மாமி…” அவள் தடுமாறினாள்.

“ரெண்டு பேரும் சண்டைப் போட்டீங்களா?”

“ஐயையோ! அதெல்லாம் ஒன்னுமில்லை மாமி.” அமரின் பேச்சு வந்ததும் இவள் முகம் அழகாக வெட்கப்பட்டது. மருமகளின் முகத்தைப் பரிவோடு தடவிக் கொடுத்தார் இன்பம்.

“மாமி… இன்னைக்கு ஒரு கல்யாண வீடு இருக்குன்னு அவங்க சொன்னாங்க, வீட்டுக்கு வர எத்தனை மணியாகும்?”

“வந்திருவாங்கம்மா, சில நேரம் எல்லா வேலைகளையும் முடிச்சுக் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துட்டு வரும்போது நாலு மணிக்கு மேல ஆகிடும்.”

“ஓ…” அம்மா சொன்னது போல மகன் வீடு வந்த போது நேரம் மாலை ஐந்து மணி. மாலைநேர தொழுகையையும் பள்ளிவாசலில் முடித்துவிட்டுத்தான் வீடு வந்திருந்தான். கிச்சனில் நின்றிருந்த பெண் அவன் வந்ததும் வராததுமாக அவனோடு பின்னால் வந்து அவன் ரூம் கதவைச் சாத்தியது.

“ஆல்யா…” ஆவலாகத் திரும்பியவன் மனைவியின் முகத்தைப் பார்த்ததும் சட்டென்று நின்றுவிட்டான்.

“என்னாச்சு? மாமாக்கு ஒன்னுமில்லையே?”

“இல்லையில்லை… நான்…” பதட்டமாக இருந்தவளை முதலில் கட்டிலில் அமர வைத்தான் கணவன்.

“என்னடா?” அத்தனைப் பரிவு அந்தக் குரலில்.

“நான் ஒன்னு சொல்லுவேன், நீங்க கோபப்படக் கூடாது.”

“நான் கோபப்படுற மாதிரி நீ என்ன சொல்லப் போறே? எக்ஸாம்ல நல்ல மார்க் வரலையா?”

“அமர் மச்சான்…” அவள் மேலே பேசாமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

“என்ன விஷயம்னு சொல்லேம்மா.” அவன் சிரித்தான். அப்படி எதைச் சொல்ல இவளுக்கு இத்தனைத் தயக்கம்?!

“ரெஹான் மச்சான்… கொழும்புக்கு வந்திருக்காங்க.” அவள் பதிலில் பெரியவனின் புருவம் நெளிந்தது. இதைச் சொல்ல இவள் இவ்வளவு சங்கடப்படத் தேவையில்லையே! அப்படியென்றால்… விஷயம் வேறு!

“ம்… மேல சொல்லு.” அவன் குரல் கடினமாக வந்தது.

“கூட… இவங்கக் கூட அந்தப் பொண்ணும் வந்திருக்காம்.” இவள் சொல்லி முடிக்கவும் சட்டென்று எழுந்துகொள்ளப் போனவனைப் பிடித்து மீண்டும் கட்டிலில் இருத்தியது பெண்.

“கோபப்படாதீங்க! ப்ளீஸ்…” கெஞ்சினாள் மனைவி.

“என்னப் பேசுறே நீ! இவன் என்னக் காரியம் பண்ணியிருக்கான்?!”

“ஐயோ! சத்தமா பேசாதீங்க, மாமி காதுல விழுந்திரப் போகுது.”

“இதுக்கு மேல மறைச்சு என்ன பண்ணப் போறே? எப்பிடியும் இனி எல்லாருக்கும் சொல்லத்தானே வேணும்!”

“அதைக் கொஞ்சம் இதமா சொல்லலாம், இப்பிடித் திடீர்னு சொன்னா அவங்களுக்கு ஏதாவது ஆகிடப்போகுது.” அவள் பயத்தில் அவன் சற்றே நிதானித்தான். 

“உங்கிட்ட எப்பப் பேசினான்?”

“நீங்க போனதுக்கு அப்புறமா, இன்னைக்கு நைட் வீட்டுக்கு வந்திருவேன்னு சொன்னாங்க.”

“ஒரு ஃபோனைப் போட்டு அதை எங்கிட்ட நீ சொல்ல மாட்டியா?” அவன் மீண்டும் சத்தம் போட்டான்.

“வேலை இருக்குன்னு சொன்னீங்க, இதைச் சொன்னா உங்களால நிம்மதியா வேலை பார்க்க முடியாது.” அவள் குரல் தணிவாக வந்தது. நிலைமையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அமர் அப்படியே தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான். 

“இவன் என்னப் பண்ணுறான்னு தெரிஞ்சுதான் பண்ணுறானா? யாருக்கிட்டவும் முறையா எதுவும் பேசலை, என்ன நடக்குதுன்னு சொல்லலை, இப்பத் திடீர்னு இப்பிடியொரு பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா என்ன செய்யுறது? ஊர்ல கேட்கிறவங்களுக்கு யாரு பதில் சொல்றது?”

“மனசுக்குப் புடிச்சிருக்குன்னு சொல்றாங்க…”

“மனசுக்குப் புடிச்சா எல்லாம் சரியா? இவன் ரெண்டு வாரத்துல கிளம்பி லண்டனுக்குப் போயிடுவான், நாங்கல்லை இங்கக் குப்பைக் கொட்டணும்!” 

“அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரியாம்…”

“நீ என்ன அவனுக்குப் பக்க வாத்தியமா? அவன் செய்யுறது எல்லாம் சரின்னு சொல்லுவியா?” காட்டமாகக் கேட்ட கணவனுக்குப் பதில் சொல்லாமல் குனிந்து தனது விரல் நகத்தை ஆராய்ந்தது பெண். அப்போதுதான் தன் தம்பி செய்த தவறுக்குத் தான் அவளைத் திட்டுவது புரியவும் சட்டென்று அடங்கிப் போனான் அமர்.

“சாரிம்மா…”

“பரவாயில்லை… அவங்க முடிவெடுத்துட்டாங்க, இனி அதுல இருந்து அவங்க மாறப்போறதில்லை, அப்பிடியிருக்கும் போது இப்பிடி வீணா ஆத்திரப்படுறதுல அர்த்தமில்லை.” கட்டிலில் அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து அங்கும் இங்குமாக நடந்தான்.

“கல்யாணத்தை நீங்களா நடத்தி வெச்சா சந்தோஷம், இல்லைன்னா அவங்க வழியை அவங்கப் பார்த்துட்டுப் போகப்போறாங்க.”

“ஓ… அந்தளவுக்கு வந்திடுச்சா?”

“இல்லை… வெளிநாட்டுல எல்லாம் அப்பிடித்தானே! ரெஹான் மச்சானா இருக்கப் போக எல்லாத்தையும் உங்கக்கிட்டச் சொல்றாங்க, இதுவே அவங்க வாயைத் திறக்கலைன்னா உங்களுக்கு ஒன்னும் தெரியாதுதானே?” அமர் இதற்குப் பதில் சொல்லவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன்,

“நீ சீக்கிரமா ரெடியாகு, உங்க வீட்டுக்குப் போகணும், அம்மாவையும் ரெடியாக சொல்லு.” என்றுவிட்டுக் கட்டிலில் சாய்ந்தான். ஓய்ந்தாற் போல இருந்த அவன் தோற்றம் அவளை என்னவோ செய்தது. அவனருகில் வந்தவள் அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தாள்.

“சின்ன விஷயம், இதுக்குப் போய் எதுக்கு இவ்வளவு வருத்தப்படுறீங்க?”

“எது சின்ன விஷயம் ஆல்யா? ரெஹான் லவ் பண்ணுறது இப்போ என்னோட பிரச்சினை இல்லை, அவனோட மனசுக்குப் புடிச்ச பொண்ணைத்தான் அவன் கல்யாணம் பண்ணணும், அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனா அந்தப் பொண்ணு யாருன்னு கூட நமக்குத் தெரியாது, அன்னைக்கு என்னடான்னா அந்தப் பொண்ணு நம்ம ஊர் பொண்ணு மாதிரி இல்லைன்னு நீ சொல்றே, இதை நான் எப்பிடி எடுத்துக்கிறது? இவன் பாட்டுக்கு யாராவது வெள்ளைக்காரியைக் கூட்டிட்டு வந்தா நான் என்னப் பண்ணுவேன்? ஊருக்குள்ள தலை காட்ட முடியுமா?” 

“அந்தளவுக்கு உங்கத் தம்பி பொறுப்பில்லாதவங்களா?”

“காதல்னு வந்துட்டா அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா சொல்லு?” அவன் சொல்வது அவளுக்கு நியாயமாகத்தான் பட்டது.

“அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க, முதல்ல அவங்க வரட்டும், அந்தப் பொண்ணு இப்போ எதுக்காக இங்க வர்றான்னு நமக்குத் தெரியாது, அவங்க நினைச்சிருந்தா யாருக்கும் சொல்லாம அங்கேயே கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டுக் குடும்பம் நடத்தியிருக்கலாம், நம்மால ஒன்னும் பண்ண முடியாது, ஆனா அதைப் பண்ணாம இங்கக் கிளம்பி வர்றாங்கன்னா… என்னால எதையும் தப்பா யோசிக்க முடியலை, தப்பா எதுவும் நடக்காதுன்னு எனக்குத் தோணுது.” தனக்கு ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்த மனைவியை அப்போதுதான் ஊன்றிக் கவனித்தான் அமர். இவன் வருத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பல காரணங்களைத் தேடித்தேடிப் பேசிக்கொண்டிருந்தாள்.

அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தவன் அப்படியே அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான். அவன் செய்கையில் பெண் நெகிழ்ந்து போனது. மெதுவாய் அவன் தலையை அவள் வருடிக் கொடுக்க அவள் இடையில் தன் முகத்தை அழுத்தமாகப் பதித்துக் கொண்டான். என்றோ இழந்த அம்மாவின் மடி நியாபகம் வந்தது அமருக்கு. கண்கள் இலேசாக கலங்கிப் போனது.

அந்த ப்ளாக் ஆடி ஆல்யாவின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அமர் தன் அம்மாவிடம் எதுவும் இதுவரை சொல்லவில்லை.‌ ஆல்யாவையும் சொல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டான். மூவரும் கிளம்பி கரீம் மாமாவைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தார்கள். அவரிடம் இந்தப் பிரச்சனையைக் கலந்தாலோசிப்பது நல்லது என்று தோன்றியது அமருக்கு.

“வாங்க வாங்க, என்ன இன்பம்? இப்பதான் எங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?” சல்மா வந்து எல்லோரையும் வரவேற்றார். 

“எங்க சல்மா? வேலைக்கே நேரம் சரியா இருக்கு.”

“ஆமா ஆமா! ரெண்டு பச்சைக் குழந்தைகளை வீட்டுல வெச்சிருக்கீங்கப் பாருங்க, அதால உங்களால எங்கயும் நகர முடியாது.” சல்மாவின் கேலியில் இன்பம் சிரித்தார். கரீமும் அப்போது வீட்டில்தான் இருந்தார்.

“என்ன அமர்? ஏதாவது பிரச்சினையா?” கரீம் கேட்ட பிறகுதான் அம்மாக்கள் இருவரும் இளையவனைக் கவனித்தார்கள். 

“பிரச்சினையா இல்லையான்னே எனக்கு எதுவும் புரியலை மாமா… உங்கக்கிட்ட இந்த விஷயத்தைப் பத்திப் பேசணும், அதான் அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்தேன்.”

“தம்பி! என்னாச்சு?!” இன்பம் இலேசாக பதட்டமடைந்தார்.

“ஒன்னுமில்லை மாமி, ரெஹான் மச்சான் ஊருக்கு வர்றாங்களாம்.” ஆல்யாதான் விஷயத்தை ஆரம்பித்தாள்.

“அப்பிடியா?! இது எப்போ? எங்கிட்ட ரெஹான் எதுவுமே சொல்லலையே?!”

“மாமி…” என்று ஆரம்பித்த பெண் அங்கிருந்த பெரியவர்கள் மூவரிடமும் ரெஹான் பற்றி அவளுக்குத் தெரிந்தவற்றைச் சொன்னது. அங்கே சில நொடிகள் நிசப்தம் நிலவியது. மூவரது முகங்களும் வெவ்வேறு பாவங்கள் காட்டின. அமரும் எதுவும் பேசாமல் அவர்களுக்குச் சிந்திக்க அவகாசம் கொடுத்தான்.

“அமர், இப்ப என்ன பண்ணப் போறே?” இது கரீம்.

“தெரியலை மாமா, எங்கிட்ட எதுவும் அவன் இதுவரைக்கும் பேசலை, ஆல்யாக்கிட்ட மாத்திரந்தான் விஷயத்தைச் சொல்லியிருக்கான்.”

“இந்த விஷயத்துல ரெஹான் எந்தளவு உறுதியா இருக்கான்னு நமக்குத் தெரியாது, கொஞ்சம் பொறுமையா என்னன்னுப் பார்க்கலாம்.”

“அன்னைக்கு ஏர்போர்ட்ல வெச்சு ரெஹான் மச்சான் அவ்வளவு உறுதியா சொன்னாங்கப்பா, அவங்களைத்தான் அவங்க கட்டிக்கப் போறாங்களாம்.” ஆல்யா எடுத்துச் சொல்லவும் கரீம் தாடையைத் தடவிக் கொண்டார்.

“நீங்க என்னம்மா சொல்றீங்க? இந்த விஷயத்துல உங்க அபிப்பிராயம் என்ன?” இன்பத்திடம் கேட்டார் கரீம். இன்பம் இப்போது தன் மூத்த மகனைப் பார்த்தார். என்னதான் அம்மா என்று வாய் நிறைய அழைத்தாலும் அவர்களைப் பெற்றவர் அவரில்லையே!

“என்னை எதுக்கும்மா பார்க்கிறீங்க? உங்கப் பையன் பண்ணியிருக்கிற காரியத்தைப் பார்த்தீங்கல்லை? எங்கிட்டத்தான் சொல்லலை, உங்கக்கிட்டவாவது ஒரு வார்த்தைச் சொன்னானா?” அமர் கோபப்படவும் ஆல்யா அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள். 

“தம்பி, ரெஹான் சின்னப்புள்ளை, ஏதோ ஆசைப்பட்டுப் பண்ணுறாரு, நீங்க எதுவும் அவசரப்பட்டுத் தப்பான முடிவு எடுத்துராதீங்க.” 

“அம்மா உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியலை, உங்க சின்னப் பையன் ஆசைப்பட்டதை நான்‌ தப்புன்னு சொல்லலை, ஆனா அவன் ஆசைப்படுற பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏத்ததா இருக்கணுமில்லை? அவன் ஒரு வெள்ளைக்காரியைக் கூட்டிட்டு வந்து நின்னா நீங்க உங்க இளைய மருமகளோட நாளைக்கு என்ன பாஷையில பேசுவீங்க? ஒரு கிறிஸ்டியன் பொண்ணை உங்கப் பையன் கட்டிக்கிறதுல உங்களுக்குச் சம்மதமா?”

“தம்பி, எம் புள்ளை அப்பிடியெல்லாம் எந்தத் தப்பும் பண்ணமாட்டான், அவங்க முதல்ல வரட்டும், அதுக்கப்புறமா எந்த முடிவு எடுக்கிறதுன்னாலும் எடுக்கலாம்.” கண்ணீரோடு இன்பம் சொன்னார்.

“பையனோட அம்மாவே சொல்லும் போது உன்னாலயும் என்னாலயும் என்னப் பண்ண முடியும் அமர்? உங்கம்மா சொல்ற மாதிரி பொறுமையா இருந்து ரெஹான் என்னதான் சொல்றான்னு பார்க்கலாம்.” அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் எழுந்து ஆல்யாவின் அறைக்குள் போய்விட்டான் அமர். பெரிய மகன் எழுந்து போகவும் இன்பத்தின் விழிகளில் நீர் திரண்டு போனது. 

“இந்த இடத்துல அமரை நீங்கப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்கம்மா, ரெஹான் உங்க வீட்டோட சின்னப்புள்ளை, அவனுக்குப் பொறுப்புகள் கிடையாது, ஆனா பெரியவன் அப்பிடியில்லை, அந்தக் குடும்பம் எல்லாத்தையும் இழந்துட்டு நின்னப்ப அத்தனையையும் அள்ளித் தன்னோட தோள்ல போட்டுக்கிட்டவன், அவன் இந்த ஊரைப் பார்த்துப் பயப்பிடுறான், நாளைக்கு நாலு பேர் தன்னோட குடும்பத்தைப் பார்த்து நாலு கேள்வி கேட்டிரக் கூடாதுங்கிற கவலை அவனுக்கிருக்கு.” கரீம் இதமாக விளக்கிச் சொன்னார்.

“எனக்கு அதெல்லாம் புரியுதுங்க, ஆனா சின்னவன் எந்தத் தப்பும் பண்ணமாட்டான், அவன் நான் வளர்த்தப் புள்ளை.” இன்பம் அந்தப் பிடியிலேயே உறுதியாக இருக்கவும் கரீம் புன்னகைத்தார். அது தாய் மனது. தன் பிள்ளையைக் குறை சொல்லுமா? இல்லை குற்றம்தான் காணுமா?

அமர் எழுந்து உள்ளே போகவும் அவனைத் தொடர்ந்து ஆல்யாவும் எழுந்து போனாள். காலையில் அழகாகப் பூத்த மலரொன்று அன்று மாலையில் வாடிப்போனது போல இருந்தது. இவள் உள்ளே வரும்போது அவன் கட்டிலில் சாய்ந்திருந்தான். உள்ளே போகலாமா வேண்டாமா என்ற எண்ணம் தோன்றவும் கதவை மூடிவிட்டு அதன் மேலேயே சாய்ந்து நின்று கொண்டாள். அமரின் கரம் இப்போது அவளைப் பார்த்து நீண்டது. அவசரமாக அவனிடம் வந்தவள் அந்தக் கரத்தைப் பிடித்துக் கொண்டாள். தன்னருகே அமர்ந்தவளைத் தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டான்.

“மனசு பாரமா இருக்கு.”

“இல்லை, மாமி சொல்ற மாதிரி எதுவும் தப்பா இருக்காது, எங்கண்ணா என்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வெக்கிறான்னு எங்கிட்டயே எத்தனையோ தடவை ரெஹான் மச்சான் சொல்லியிருக்காங்க, உங்களைச் சங்கடப்படுத்துற மாதிரி அவங்க எதுவும் பண்ணமாட்டாங்க.” 

“கிறிஸ்டியன் பொண்ணா இருந்தா என்னம்மா பண்ணுறது?”

“ம்ஹூம், நீங்க இப்பிடி யோசிக்கும் போது உங்கத் தம்பியும் அதை யோசிச்சிருப்பாங்கல்லை?”

“அவனோட வயசு இதையெல்லாம் யோசிக்க விடாது, காதலுக்குக் கண்ணில்லை.”

“அதெல்லாம் இருக்கு, பழைய பஞ்சாங்கம் மாதிரி நீங்களும் பேசாதீங்க!” அவள் முறுக்கிக் கொள்ள அவன் சிரித்தான். நேற்றிரவு ஆரம்பித்த அவர்களின் இன்ப உலகம் இன்று நடந்த களேபரத்தில் அவனுக்கு மறந்து போனது. மனைவியின் இடையை அவன் கரம் இதமாக அழுத்தியது.

“புடவை கட்டலை?” அவன் குரலும் செயலும் இப்போது அப்படியே மாறிப்போனது. ஆல்யா அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். 

“நம்ம வீட்டுலதான் இருக்கா? இங்க இல்லையா?” 

“உஷ்! வெளியே எல்லாரும் இருக்காங்க.”

“அதுக்கு?” என்றவன் மஞ்சத்தில் அவளைக் கிடத்தி முகம் பார்த்தான்.‌ சூழ்நிலையைச் சில நொடிகள் மறந்து அவன் சிரித்தது அவளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

“கரீம் மாமாவோட சின்னப் பொண்ணுன்னுதான் நான் நினைச்சேன், ஆனா… பார்த்த வரைக்கும் சின்னப் பொண்ணு மாதிரி…” அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் அவன் வாயை மூடினாள் பெண். கண்கள் அவனைக் கோபமாகப் பார்த்தது.

“நான் உண்மையைத்தான் சொல்றேன்.”

“போதும் உங்க உண்மை.” என்றவள் அவனைவிட்டு விலகப் பார்த்தாள். ஆனால் அவளை இழுத்துப் பிடித்தவன்,

“எங்க ஓடுற?” என்றான். கண்களில் குறும்பு கூத்தாடியது.

“ஆமா, நேத்து ராத்திரி என்னைப் பெயரெல்லாம் சொல்லிக் கூப்பிடுறே!” எந்த வேளையில் அவள் உதடுகள் அவன் பெயரை உச்சரித்தன என்று நினைத்த போது பெண்ணின் முகம் சிவந்து போனது.

“நான் பெயரைச் சொல்லலை.” அவள் மறுத்தாள்.

“ஏய்! பொய் சொல்ற பார்த்தியா! நீ சொன்னே, எனக்கு நல்லாத் தெரியும், அதுவும் எப்பிடி…” என்று முழுதாக முடிக்காதவன் அவள் தன் பெயர் சொன்ன தருணத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றான். 

“என்னப் பண்ணுறீங்க?! வெளியே எல்லாரும் இருக்காங்க!” அவள் பயந்து போக விலகியவன் முகத்தில் ஏமாற்றம் இருந்தது.

“என்ன ஆல்யா…” என்று சிணுங்கியவன் அவள் முகத்தோடு மல்லுக்கு நின்றான். 

“ஆள் வளர்ந்தா மட்டும் பத்தாது, கொஞ்சம் கூட மாட ஒத்தாசையும் பண்ணணும்.” சன்னக் குரலில் அவன் சொன்ன விதத்தில் வந்த சிரிப்பை அவள் அடக்கிக் கொண்டாள். 

“என்னடீ சிரிப்பு?” அவள் கன்னத்தை இப்போது அவன் கடித்தான்.

“கூட மாட ஒத்தாசைப் பண்ணுறதுக்கு நீங்க என்ன சமையலா பண்ணப்போறீங்க?”

“தயிர் சாதத்துக்கு உன்னோட ஒத்தாசைத் தேவையில்லை, ஆனா பிரியாணிக்குக் கண்டிப்பா வேணும்.” என்றவனின் வாயில் அவள் ஒரு அடி வைத்தாள்.

“பேச்சைப் பாரு, பொறுக்கி மாதிரி!”

“இந்தப் பொறுக்கி வேணும்னுதானே நீ ஒத்தக் கால்ல நின்னே?”

“அடேயப்பா! ஊருக்குள்ள நல்லவன் மாதிரி என்ன வேஷம்? அத்தனையும் போக்கிரித்தனம்.”

“அப்ப உங்கிட்டயும் நல்லவன் வேஷம் போடணுமா?” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் புன்னகைத்தாள். அந்த நொடி அவள் இதழ் போதையை மட்டும் அவன் சுகித்தான். 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

அத்தியாயம் 19       நேரம் இரவு பத்து முப்பது.‌ அந்த கார் அமரின் வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது. ஆல்யா வாசல்வரை ஆவலாக வந்து நின்றாள். அவளைத் தவிர வேறு யாரும் வீட்டு வாசலுக்கு வரவில்லை. வெளியே வரவில்லையே தவிர இன்பத்தின் மனம் முழுவதும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்