arrow_back
Anbe… Azhage! அத்தியாயம் 19
Anbe… Azhage! chevron_right பகுதி 19 / 21

அத்தியாயம் 19

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 19       

நேரம் இரவு பத்து முப்பது.‌ அந்த கார் அமரின் வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது. ஆல்யா வாசல்வரை ஆவலாக வந்து நின்றாள். அவளைத் தவிர வேறு யாரும் வீட்டு வாசலுக்கு வரவில்லை. வெளியே வரவில்லையே தவிர இன்பத்தின் மனம் முழுவதும் வீட்டு வாசலிலேயேதான் இருந்தது. சமையலறை ஜன்னலின் வழியாக காரை பார்த்தபடிதான் நின்றிருந்தார்.

அத்தனைப் பேரின் முன்பும் இளைய மகனை விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும் தன்னிடம் அவன் இந்த விஷயத்தை மறைத்துவிட்டானே என்ற ஆதங்கம் அவருக்கு நிறையவே இருந்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு சமையலறையிலேயே நின்றிருந்தார். எப்போது இளைய மகன் வீட்டிற்கு வந்தாலும் ஆர்ப்பாட்டம் பண்ணும் அம்மா அன்றைக்கு அமைதியைக் கடைப்பிடித்திருந்தார்.

முதலில் காரிலிருந்து ரெஹான்தான் இறங்கினான். ஆல்யாவின் கண்கள் ரெஹானைத் தாண்டி அடுத்ததாக இறங்கவிருக்கும் நபரின் மேலேயே தனது கவனத்தைக் குவித்திருந்தது. ரெஹான் தனது கையை நீட்டவும் அதைப் பற்றியபடி இறங்கியவரைப் பார்த்த போது ஆல்யா திடுக்கிட்டுப் போனாள் என்றால் இன்பத்தின் முகமும் அதிர்ச்சியைக் காட்டியது. யாராவது ஒரு நவநாகரீக பெண்ணை இவர்கள் எதிர்பார்த்திருக்க முழுதாக ‘ஹபாயா’ (புர்கா) அணிந்திருந்த ஒரு பெண் இறங்கியது.

“ஹலோ மதினி!” ரெஹான் சத்தமாக அழைத்தான். அவன் கண்கள் ஆல்யாவைத் தாண்டித் தன் அம்மாவைத் தேடின. 

“வாங்க ரெஹான் மச்சான்.” தனது திகைப்பை மறைத்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்றது பெண். 

“அம்மா எங்க?” சன்னக் குரலில் கேட்டான் இளையவன். உள்ளே கண்களால் ஜாடை காட்டினாள் பெண்.

“அண்ணா?” இப்போது கேள்வி சத்தமில்லாமல் வந்தது. உர்ரென்று முகத்தை வைத்து அமர் கோபமாக இருப்பதாகத் தகவல் வழங்கியது பெண். உதட்டைக் கடித்துக் கொண்டவன் அவளிடம் அந்தப் பெண்ணை அழைத்து வந்தான். 

“இவங்க ஹானி.” ரெஹான் அறிமுகம் செய்து வைத்தான்.‌

“ஹலோ.” இவள் சொல்ல அந்தப் பெண் இவளைப் பார்த்து ஸலாம் சொன்னது. ஆச்சரியப்பட்டவள் தானும் பதிலுக்கு ஸலாம் சொன்னாள். பால் போன்ற பளீரென்ற நிறம். தான் ஒரு வெள்ளைக்காரப் பெண் என்று சொல்லாமல் சொன்னது அந்த நிறம். ரெஹானும் பார்க்க நல்ல பளிச்சென்றுதான் இருப்பான். இருந்தாலும் இந்தப் பெண்ணின் அருகில் நிற்கும் போது வித்தியாசம் தெரிந்தது. ரெஹானின் கழுத்துவரை இருந்தாள். சாந்தமான முகம். அந்த ரோஜா வண்ண இதழ்களில் வாடாமல் ஒரு புன்னகை சதா தவழ்ந்தது.

“உள்ள வாங்க.” வீட்டுப் பெண்ணாக வந்தவளை உள்ளே அழைத்து வந்தாள் ஆல்யா.

“ரெஹான் மச்சான், இவங்களுக்குத் தமிழ் புரியுமா?”

“அதெல்லாம் நல்லா புரியும், பேச வராது, ஆனா அதையும் கூடிய சீக்கிரம் கத்துக்குவா, இப்ப ஒன்னு ரெண்டு வார்த்தைகள் வரும்.” அவன் விளக்கம் சொல்லவும் ஆல்யாவிற்கு அத்தனை ஆச்சரியம்.‌ ஹானியும் இவர்கள் பேச்சை ஆமோதிப்பது போல புன்னகைத்தாள்.

“அம்மா எங்க ஆல்யா? அவங்க ரூம்லயா?” 

“இல்லை, கிச்சன்ல.” இவள் சொல்லவும் ஹானியையும் அழைத்துக் கொண்டு சமையலறை வந்தான் இளையவன். இன்பம் இவர்களுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தார். காதலியின் கரத்தை விட்டவன் தனது அம்மாவைப் பின்னோடிருந்து அணைத்துக் கொண்டான்.

“அம்மா…” அவ்வளவுதான்! இன்பம் இப்போது வெடித்து அழுதார். இதை எதிர்பார்த்திராத அந்தப் புதுப்பெண் ஆல்யாவைத் திகைத்துப் போய் பார்த்தது. ஆனால் ரெஹானும் ஆல்யாவும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

“என்னம்மா இது? எதுக்கு இப்போ இந்த அழுகை? நீங்க நினைக்கிற மாதிரி நான் எந்தத் தப்பும் பண்ணலைம்மா.”

“தப்புன்னு இப்பகூட நான் சொல்லலையே தம்பி, அப்பிடியே தப்புப் பண்ணியிருந்தாலும் அதை இந்த அம்மாக்கிட்டச் சொல்லியிருக்கலாமே, என்னதான் இருந்தாலும் நான் உங்களை வளர்த்தவதானே, பெத்தவ இல்லையே!” அந்த வார்த்தைகளை இன்பம் சொல்லி முடித்த போது ரெஹான் அவரைத் தன் புறமாகத் திருப்பி இறுக அணைத்திருந்தான்.

“பெத்தவ முகங்கூட எனக்கு ஞாபகமில்லை, ஃபோட்டோ மட்டுந்தான் தெரியும், என்னைப் பெத்தது, வளர்த்தது எல்லாமே நீங்கதான், இன்னொரு தடவை இப்பிடி பேசினீங்கன்னா இந்த வீட்டுக்கே நான் வரமாட்டேன்.” இப்போது ரெஹானும் சத்தமாகச் சொன்னான்.‌ 

“ஐயையோ! தம்பி என்ன வார்த்தைச் சொல்லுறீங்க?!” என்ற அம்மா மகனின் வாயை மூடினார்.

“சொல்லக் கூடாதுன்னு இல்லைம்மா, சொல்றதை விட ஹானியை உங்கக்கிட்டக் கூட்டிக்கிட்டு வந்து காட்டினா நல்லா இருக்கும்னு தோணிச்சு, மத்தப்படி உங்கக்கிட்ட மறைக்கிற எண்ணம் எனக்கில்லைம்மா, என்னோட அம்மாக்கிட்டச் சொல்லாம வேற யாருக்கிட்ட இதையெல்லாம் நான் சொல்லப் போறேன்?” அந்தப் பெண்ணின் பேச்சு வந்ததும் இன்பம் இப்போது எட்டிப் பார்த்தார். பெரியவரைப் பார்த்து ஸலாம் சொன்னது பெண். இன்பம் இலேசாக திகைத்து மகனைப் பார்த்தார்.

“என்னோட அம்மா எப்பிடி இருப்பாங்கன்னு பார்க்க இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கா.” அந்த வார்த்தைகள் பெரியவரை இலேசாக உலுக்கியது. 

“அப்போ என்னைப் பார்க்க வரலையா?” இது ஆல்யா. அந்தப் பெண் இப்போது சிரித்தாள். நீலநிற கண்களும் சேர்ந்து சிரித்தன. 

“உன்னையுந்தான் மதினி, ஆனா அம்மாதான் ஃபர்ஸ்ட்.” என்று அவன் சொல்ல இவள் சிணுங்கினாள். அம்மாவின் அருகில் வர சங்கடப்பட்டுக் கொண்டு ஹானி தள்ளியே நிற்கவும் அவளை அருகில் அழைத்தான் ரெஹான். ஓடி வந்தவள் இன்பத்தைக் கட்டிக் கொண்டாள். இப்படியொரு செய்கையை மற்றைய இரு பெண்களும் எதிர்பார்க்கவில்லை.

“ரெஹான் உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்கார், உங்களை, அவங்க அண்ணாவை, இந்த ஊரைன்னு நிறைய பேசுவார், உங்களையெல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு, அதான் கிளம்பி வந்தேன்.” தூய ஆங்கிலத்தில் அந்தப் பெண் பேசவும் இன்பம் மகனைப் பார்த்தார். மகன் இப்போது அதை அம்மாவிற்குத் தமிழில் மொழி பெயர்த்தான். அந்த ஆங்கிலம் ஆல்யாவிற்கு ஆங்காங்கே புரியவில்லை. 

“இவங்க இங்கிலீஷ் புரியுறதுக்குள்ள நமக்கு விடிஞ்சிரும் போலயே!” சத்தமாகவே சொன்னாள் பெண். 

“ரெண்டு நாள் பேசினா எல்லாம் புரியும், பசிக்குதும்மா.” இது ரெஹான்.‌ அவசர அவசரமாக அவர்களுக்காக ஆயத்தம் பண்ணியதைச் சாப்பாட்டு மேசையில் வைத்தார் அம்மா.

“ம்… எல்லாம் ரெடியாத்தான் இருந்திருக்கு.” ரெஹான் கண்ணடிக்க இளைய பெண்கள் இருவரும் சிரித்தார்கள். ஃபோர்க், ஸ்பூனை மறுத்துவிட்டு அழகாக கையால் இடியாப்பத்தையும் கறியையும் பிசைந்து உண்ணும் அந்தப் பெண்ணை ஆச்சரியமாக பார்த்தாள் ஆல்யா.

“அவ அப்பிடித்தான் ஆல்யா, நம்ம கல்ச்சர் மேல அவ்வளவு ஒரு பிடிப்பு, ஏஷியன்ஸ்னா நிறைய புடிக்கும்.”

“அப்பிடியா!” என்று ஆச்சரியப்பட்டவள் அவர்கள் உண்டு முடிக்கட்டும் என்று தங்கள் அறைக்கு வந்தாள். முகம் முழுவதும் மகிழ்ச்சி வழிந்தது. அமர் தன் அறையில் இருந்துகொண்டு அனைத்தையும் அமைதியாக கவனித்திருந்தான். கார் வந்து நின்றபோது ஜன்னல் வழியாக அந்தப் பெண்ணைப் பார்த்திருந்தான். மனது திருப்தியாக உணர்ந்தது. தனது கணனியின் முன்பாக அமர்ந்திருந்தவனிடம் ஆர்ப்பாட்டமாக வந்தாள் மனைவி.

“அமர் மச்சான்! ஐயோ! நான் அப்பவே சொல்லலை? எதுவும் தப்பா இருக்காதுன்னு, அவங்க எவ்வளவு ஸ்வீட்டா இருக்காங்க தெரியுமா? நான் ஹலோ சொல்றேன், அவங்க எனக்கு ஸலாம் சொல்றாங்க! நான் மிரண்டு போயிட்டேன்!” ஆர்ப்பரித்த மனைவியை அமைதியாகப் பார்த்தான் அமர். 

“அடேயப்பா! என்ன அழகு! சும்மா கறந்து வெச்ச பால் மாதிரி இருக்காங்க, கண்ணு ரெண்டும் ப்ளூ கலர்ல இருக்கு! அவங்க முடி என்ன கலர்ல இருக்கும்? இந்த வெள்ளைக்காரங்களுக்கு இருக்கிற மாதிரி கோல்ட் கலர்ல இருக்குமா? அதுக்கு வேற என்னமோ ஒரு பெயர் சொல்லுவாங்கல்லை? ப்லொன்ட் கலர், அப்பிடி இருக்குமோ?!” தான் மட்டுமே பேசிக்கொண்டிருக்க அமர் எதுவும் பேசாததை உணர்ந்தவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“ஏன் எதுவும் பேசமாட்டேங்கிறீங்க?”

“நீதான் எனக்குப் பேச டைமே குடுக்கலையே!”

“ஓ… ஏன் அமர் மச்சான்? உங்களுக்கு சந்தோஷமா இல்லையா? நீங்கக் கவலைப்பட்ட மாதிரி எதுவும் நடக்கலையே, வெளியே வந்து அவங்களோட ரெண்டு வார்த்தைப் பேசலாமில்லை? அவங்க நாளைக்கு உங்கத் தம்பியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கல்லை.”

“ஓ… இனித்தான் பண்ணிக்கப் போறாங்களா? நான் ஏற்கனவே பண்ணிட்டாங்கன்னு நினைச்சேன்.” அந்த வில்லங்கமான பேச்சை அவள் இரசிக்கவில்லை. கோபப்பட்டவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் வெளியே போய்விட்டாள். ஆல்யாவைக் காணவும் ரெஹான் ஆர்வமாக அவளிடம் வந்தான். அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.

“என்ன சொல்றான்?”

“நீங்க போய் பேசுங்க மச்சான், அவங்களுக்கு நீங்க எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்குப் பண்ணுறீங்கன்னு கோபம் இருக்கும் போல, மாமி அதை அழுது தீர்த்துக்கிட்டாங்க, உங்கண்ணா அமைதியா அந்தக் கோபத்தைக் காட்டுறாங்க.” ஆல்யா சொன்னதும் சட்டென்று அண்ணனின் அறைக்குப் போனான் தம்பி. கதவை இருமுறைத் தட்டிவிட்டு அவன் பாட்டுக்கு உள்ளே போனான். வருவது தம்பிதான் என்று தெரிந்த போதும் அமர் கணனியின் திரையிலிருந்து கண்ணைத் திருப்பவில்லை.

“அண்ணா… நீங்க எம்மேல கோபமா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்… யாருக்கிட்டயும் எதையும் மறைக்கணும்னு நினைக்கலை, இந்த விஷயத்தை விளக்கமா சொன்னா உங்களாலயும் அம்மாவாலயும் புரிஞ்சுக்க முடியாது, அதைவிட ஹானியை இங்கக் கூட்டிட்டு வர்றதுதான் சரின்னு எனக்குத் தோணிச்சு, நீங்க என்னோட இடத்துல இருந்தும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும்.”

“என்னால புரிஞ்சுக்க முடியாதுன்னு நீயா எப்பிடி முடிவெடுக்கலாம்?” இதற்கு ரெஹானிடம் பதிலில்லை.‌ சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தான். 

“சாரிண்ணா, தப்புத்தான்…”

“அதான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கல்லை, இனி உங்க வாழ்க்கையைப் பத்தி நீங்கதானே முடிவெடுக்கணும்.”

“சத்தியமா நான் அப்பிடி நினைக்கலைண்ணா, நீங்க யாரும் சரியா எதையும் புரிஞ்சுக்காம தப்பான முடிவுக்கு வந்திரக்கூடாது, ஹானி எனக்கு எவ்வளவு முக்கியமோ அதேயளவு நீங்களும் முக்கியம், நீங்க யாரும் அந்தப் பொண்ணைத் தப்பா நினைக்கிறதை என்னால தாங்கிக்க முடியாது.” அண்ணனும் தம்பியும் இங்கே வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்கும் போது ஆல்யா அந்தப் பெண்ணை அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். 

அமருக்கும் ஆல்யாவிற்கும் இந்தப்புறம் இரு அறைகள் இருப்பது போல ஹாலுக்கு அந்தப் புறமாகவும் இரண்டு அறைகள் இருந்தன. அதை இன்பமும் ரெஹானும் உபயோகத்தில் வைத்திருந்தார்கள். ரெஹானின் அறைக்கு ஹானியை அழைத்து வந்தாள் ஆல்யா. 

“மாமி, அப்ப ரெஹான் மச்சான் எங்கத் தங்குவாங்க?”

“மேல இருக்கிற ரூம்ல எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கேம்மா.” இந்த இடைப்பட்ட ஆறுமாத காலப்பகுதியில் மாடிப்பகுதியையும் முடித்திருந்தான் அமர். வீடு இப்போது பூரணமாக முடிந்திருந்தது. இளைய பெண்கள் இருவருக்கும் பேச நிறைய கதைகள் இருந்தன. இன்பம் அவர்கள் இருவரும் பேசும் அழகைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். தன் இரு மருமகள்களையும் பார்த்துவிட்ட திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

“நீங்க இன்னும் தூங்கலையாம்மா?” கேட்டபடி வந்தான் ரெஹான். முகம் வாடிப்போய் கிடந்தது. அண்ணனுக்கும் அவனுக்கும் நடந்த பேச்சுவார்த்தை நல்லவிதமாக முடியவில்லை என்று பெண்கள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

“தம்பி, அண்ணா என்ன சொல்றாங்க?” பதட்டமாக வந்தது இன்பத்தின் குரல். என்னதான் ரெஹான் மேல் அவருக்குப் பாசம் அதிகம் என்றாலும் அமரைத் தாண்டி அவரால் எதுவும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். சோர்ந்து போய் அமர்ந்தவனின் கரத்தை மெதுவாகத் தட்டிக் கொடுத்தாள் ஹானி.

‘இவை எல்லாவற்றையும் எதிர்பார்த்துத்தானே இங்கே வந்தோம்.’ என்ற சேதி அவள் கண்களில் தெரிந்தது. ஆல்யா இப்போது சங்கடமாக உணர்ந்தாள். ஏன் தன் கணவன் இப்படிக் கோபம் கொள்கிறான் என்று அவளுக்கு விளங்கவில்லை. அவன் ஒரு சில விஷயங்களை நினைத்துப் பயந்தான். அவன் பயந்தது போல எதுவுமே நடக்கவில்லையே! அப்படியிருக்கும் போது ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?!

“நான் போய் தூங்கிறேன்.” என்று பொதுவாகச் சொன்னவள் எழுந்து கொண்டாள்.

“ஆல்யா…” இது ரெஹான். வெளியே நடந்த பெண் நின்று திரும்பிப் பார்த்தது. 

“அவன் என்னோட அண்ணா, என்னைக் கோபிக்கிறதுக்கு, தண்டிக்கிறதுக்கு அவனுக்கு முழு உரிமை இருக்கு, அவன் எனக்கு அண்ணா மட்டுமில்லை, அப்பா மாதிரி, அவன் என்னப் பண்ணினாலும் அதை நான் தாங்கிக்குவேன், எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ வராதே.”

“காரணமே இல்லாம அவங்க கோபப்படுவாங்க, அதை நான் பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்கணுமா?”

“அவனுக்கு அவனோட காரணம், அதான் நான் சொல்றேனில்லை, எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ வராதே, ப்ளீஸ்.” ஆல்யாவின் முகம் தெளியாததைக் கண்ட ஹானி எழுந்து அவளருகில் வந்து அவள் கரத்தைப் பற்றிக் கொண்டாள். அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கவும் இவளுக்கு வருத்தமாக இருந்தது. உயிர்ப்பே இல்லாமல் சிரித்தாள். 

“எல்லாம் சரியாகிப் போகும், நீ வருத்தப்படாதே.” அழகான ஆங்கிலத்தில் சொன்னவளின் கரத்தைத் தானும் அழுத்தியவள் தங்கள் அறைக்கு வந்தாள். அமர் இப்போதும் அந்தக் கணனியின் முன்பாகத்தான் அமர்ந்திருந்தான். தன்னை அலட்சியம் செய்துவிட்டுப் போகும் மனைவியை அவன் கண்கள் திரும்பிப் பார்த்தன.

“ஆல்யா…” அவன் அழைப்பையும் அவள் கண்டுகொள்ளவில்லை. மௌனமாக தனது அறைக்கு வந்துவிட்டாள். 

“நான் கூப்பிடுறேன், நீ திரும்பியும் பார்க்காம வர்றே?” அந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை. அலமாரியைத் திறந்தவள் அதிலிருந்து இரவு ஆடை ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போகத் திரும்பினாள்.

“இன்னைக்குப் புடவை உடுத்தலை?” அவளை நிறுத்தியது அவன் கரம். தலையைக் குனிந்து கொண்டது பெண். 

“அப்பிடியென்ன கோபம் எம்மேல? பேசக்கூட மாட்டியா?”

“உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் ரெஹான் மச்சான் மேல? நீங்க ஏன் இப்பிடி நடந்துக்கிறீங்க?” தன்மீது போர் தொடுக்கக் காத்திருக்கும் மனைவியை அமைதியாக ஒரு பார்வைப் பார்த்தான் கணவன். 

“அந்தப் பொண்ணை மறுக்கிறதுக்கு நீங்க ஒருசில காரணங்கள் சொன்னீங்க, அதுல நியாயம் இருந்துச்சு, ஆனா அதெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் நீங்க இப்பிடி நடந்துக்கிறீங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம்? அந்தப் பொண்ணைப் பார்க்கிறதுக்கே எனக்குச் சங்கடமா இருக்கு, வீட்டுக்கு வந்த பொண்ணு, நமக்குப் புடிக்குதோ இல்லையோ, வான்னு ஒரு வார்த்தை சொன்னா என்ன?” அமர் ஒரு பெருமூச்சோடு தன் கழுத்தைத் தடவிக்கொண்டான். 

“அது ஒரு கிறிஸ்டியன் பொண்ணா இருந்தா என்னப் பண்ணுறதுன்னு கேட்டீங்க, ஏன்? ஒரு வேதக்காரப் பொண்ணை ஒரு முஸ்லிம் பையன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இஸ்லாத்துல அனுமதி இருக்கு, நீங்க நடைமுறைச் சிக்கல்களை யோசிச்சீங்க, அதுல கூட ஒரு நியாயம் இருந்துச்சு, ஆனா இப்போ அந்தக் காரணம் கூட இல்லையே! உங்கம்மாக்கு எந்தக் குறையும் தெரியலை, அந்தப் பொண்ணை ஆசையா ஏத்துக்கிட்டாங்க, அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு பாசமா இருக்காங்கத் தெரியுமா? உங்கத் தம்பி முகம் வாடின உடனே அவங்க ஓடி வந்து ஆறுதல் சொல்லுறாங்க.”

“ரெஹானுக்கு எந்த ரூமை அம்மா குடுத்திருக்காங்க?” அவன் வேறு பேசினான்.

“மாடியில.”

“நீங்க எங்கத் தூங்கப் போறீங்க?” 

“என்னோட ரூம்ல.” கோபமாகச் சொன்னவள் குளியலறைக்குள் போய்விட்டாள்.‌ அவள் திரும்ப வந்தபோது விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. அவள் கட்டிலில் அவன் படுத்திருந்தான். எதுவும் பேசாமல் அவனுக்கு முதுகு காட்டியபடி அவளும் படுத்துக் கொண்டாள். சற்று நேரம் எதுவும் பேசாதவன் இப்போது அவளருகில் வந்தான். நெற்றியில் கலைந்திருந்த அவள் கூந்தலை அவன் விரல்கள் ஒதுக்கியது.

“அவனுக்குப் பன்னிரண்டு வயசிருக்கும், அம்மா போய்ட்டாங்க, பதினேழு வயசுல அப்பா, எனக்கு அவன் தம்பி மட்டுமில்லை, என்னோட உலகமே அப்ப அவந்தான்.” மனைவியின் தலையை வருடியபடி அவன் பேசிக்கொண்டிருந்தான்.‌ ஆல்யாவும் கணவனின் பேச்சை இமைக்காமல் கேட்டிருந்தாள்.

“இது அவனோட வாழ்க்கை, நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி, அவனுக்குப் புடிச்ச மாதிரி, ஊர்ல ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வெக்கணும்னு நினைச்சேன், எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டுந்தான், அவன் எங்கூடவே இருக்கணும்னு நினைச்சேன், அம்மா அப்பாதான் இல்லை, அவனாவது எங்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனா…” அமர் நிறுத்தவும் சட்டென்று அவன் புறமாகத் திரும்பியது பெண்.

“அவனோட வயசு, ஆசை… இதெல்லாம் பண்ணுறான், இது சரியா வருமா? காதலுக்காக மதம் மாறுறது சரியா? இது எத்தனை நாளைக்குத் தாக்குப்புடிக்கும்? நாளைக்கே அந்தப் பொண்ணு இவனைத் தூக்கிப் போட்டுட்டுப் போனா இவன் தாங்குவானா?” 

“ஏன் நீங்க இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க?!” இப்போது அவளையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“பயமா இருக்கும்மா, அவனுக்கு எல்லாம் நல்லதா நடக்கணும்னு மனசு கிடந்து அடிச்சுக்குது, எந்தத் தப்பும் நடந்துரக் கூடாதுன்னு மனசு கவலைப்படுது.”

“நீங்க எல்லாத்தையும் வித்தியாசமா பார்க்கிறீங்க, அவங்க சந்தோஷமா இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு அன்னியோன்யமா இருக்காங்க.” அமர் பதில் சொல்லாமல் எதையோ சிந்திப்பவன் போல படுத்திருந்தான். கணவனின் மனம் பெண்ணுக்கு அந்த நொடி பிடிபட்டது. ரெஹான் செய்த செயல் இவனைக் கோபப்படுத்தவில்லை. இது எத்தனைத் தூரம் சாத்தியப்படும் என்று வருந்துகிறான்.

“எல்லா பாரத்தையும் ஆண்டவன் மேல போட்டிருங்க மச்சான், நமக்குப் புடிக்குதோ இல்லையோ அவங்க அவங்களுக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க, கொஞ்ச தூரம் பயணம் பண்ணிட்டாங்க, இனி திரும்பப் போன்னு நம்மால சொல்ல முடியாது, சொன்னாலும் அவங்க கேட்கவும் மாட்டாங்க, அவங்க நல்லா இருப்பாங்க மச்சான், நீங்கப் பயப்பிடுற மாதிரி எதுவும் நடக்காது, அவங்க சந்தோஷமா புள்ளைக் குட்டின்னு வாழ்றதை நீங்களும் பார்ப்பீங்க.” அவள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்திருந்தாள். கண்களில் கனவு மின்னப் பேசிக்கொண்டிருந்தது பெண்.

“நாளைக்கு அவங்களுக்கொரு கொழந்தைப் பொறந்தா எப்பிடியிருக்கும்? ரெஹான் மச்சான் மாதிரி, ஆனா ஹானியோட கலர்ல, அவங்களோட அதே ப்ளூ ஐஸோட, அம்மாடியோவ்! நம்ம ஃபேமிலியில அப்பிடியொரு பேபி!” கவலைகளை மறந்துவிட்டு ஆல்யா பொங்கிச் சிரித்தாள்.

“நமக்கொன்னு பொறந்தா எப்பிடியிருக்கும்?” அவன் சட்டென்று கேட்கவும் அவள் சிரிப்பு நின்றது. அவளையே பார்த்திருந்தவன் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“அதான் கேட்கிறேனில்லை? மத்தவங்களுக்குன்னா கற்பனை இறக்கை இல்லாம பறக்குது, உனக்கும் எனக்கும் ஒன்னு பொறந்தா அது எப்பிடியிருக்கும்? உன்னை மாதிரியா? இந்த முட்டைக் கண்ணோட பொறக்குமா? லூசு மாதிரி அதுவும் அமர் மச்சான், அமர் மச்சான்னு எம் பின்னாடி திரியுமா?” இப்போதும் அவள் பதில் சொல்லாமல் கீழுதட்டைக் கடித்துக் கொண்டாள். பேச்சு நின்று போயிருந்தது. 

“புருஷன் ஆசையா இருப்பானேன்னு புடவைக் கட்டிக்கிட்டு வராம ஊர் பஞ்சாயத்து எல்லாத்தையும் தலையில அள்ளிப் போட்டுக்குவியா?” அவன் அணைப்பு இறுகியது. மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் வடிந்து போக இளையவன் இப்போது வேறாகிப் போயிருந்தான். யௌவனம் செழித்திருக்கும் அந்தப் பருவ மங்கை மாத்திரம்தான் அந்த நொடி அவன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாள். இன்று காலையில் அவன் அறையில் நடந்த நாடகம் ஒன்று இப்போது அவளது அறையில் நடக்க ஆரம்பித்தது.

***

அடுத்தநாள் காலை அமர் எழுந்து ஆயத்தமாகி வெளியே வந்தான்.‌ ஆல்யா இன்னும் தூக்கத்தில் இருந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் வந்து ஹால் சோஃபாவில் அமர்ந்து கொண்டான். இவன் தலையைக் காணவும் இன்பம் கையில் டீயோடு அவசரமாக வந்தார். இவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாற் போல இருந்தது தோற்றம். டீயை வாங்கியவன் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“காய்கறி மார்க்கெட்ல ஒரு வேலை இருக்கும்மா, ஆல்யா இன்னும் தூங்குறா.” அவர் கேட்காமலேயே தகவல் சொன்னான் மகன். அம்மாவும் தலையை ஆட்டிக்கொண்டார்.

“தம்பி… ரெஹான்…” அதற்கு மேல் பேச இன்பத்திற்குத் தைரியம் இருக்கவில்லை. 

“எல்லாம் நல்லபடியா நடந்தா சந்தோஷந்தான்.” என்றவன் டீயை குடித்து முடித்துவிட்டு எழுந்து போய்விட்டான். அவன் போய் சிறிது நேரத்திலேயே ரெஹான், ஹானி, ஆல்யா என அனைவரும் சாப்பாட்டு மேசையில் கூடிவிட்டார்கள். நேற்றிரவு தங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் சொல்லிவிட்டாள் பெண். இவளது தமிழ் புரியாத சில இடங்களை ஹானிக்கு விளக்கிச் சொன்னான் ரெஹான். 

“அவங்கிட்டச் சண்டைப் போடாதேன்னு உங்கிட்டச் சொன்னேனா இல்லையா?”

“சண்டைப் போடாம? உங்கண்ணாவைக் கொஞ்சச் சொல்றீங்களா?” 

“நீதானே பொண்ணே அவனைக் கொஞ்சணும்!” இதைச் சொல்லிவிட்டு ரெஹான் அவள் கையால் அடி வாங்கினான்.

“பாரு ஹானி, உன்னை வெச்சுக்கிட்டே இவ என்னை அடிக்கிறா!” 

“எல்லா விஷயத்தையும் இப்பிடித்தான் யோசிக்கிறாங்க மச்சான், எங்கக் கல்யாணத்தப்பவும் இப்பிடித்தானே, உனக்கும் எனக்கும் இவ்வளவு வயசு வித்தியாசம் இருக்குன்னு என்னென்னமோ ஒன்னுமில்லாத காரணத்தை எல்லாம் சொன்னாங்க, இப்பவும் அப்பிடித்தான்.” ஆல்யா குறைப்பட்டாள்.

“அமர் இந்த வீட்டோட மூத்த புள்ளைம்மா, அவங்க அப்பிடித்தான் யோசிப்பாங்க, அதை நாமளும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும், நானும் தம்பிக்கிட்டப் பேசினேன், எல்லாம் சரியா நடந்தா சந்தோஷந்தான்னு சொன்னாங்க, அவங்க பயத்துலயும் நியாயம் இருக்கில்லை, அந்தப் பயம் தேவையில்லைன்னு இவங்கதான் நிரூபிக்கணும்.” இது இன்பம். ஹானியின் தலையைத் தடவிக் கொடுத்தபடி சொன்னார். 

சற்று நேரத்தில் கரீமும் சல்மாவும் வந்துவிட்டார்கள். ரெஹானையும் ஹானியையும் உட்கார வைத்து கரீம் நிறைய விஷயங்களைப் பேசினார். இந்தக் குடும்பம், அதற்காக அமர் செய்த தியாகங்கள், இன்றைய அவனது மனநிலை, ஊரின் கட்டுப்பாடுகள், பின்விளைவுகள் என பலதும் அலசி ஆராயப்பட்டன.

“இப்ப என்ன முடிவுல நீ இருக்கே ரெஹான்? எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே?”

“படிப்பு முடிஞ்சிருச்சு மாமா, சும்மா ஒரு ரெஸ்டாரன்ட்லதான் இப்போ வேலை பார்க்கிறேன், முதல்ல நான் ஒரு நல்ல வேலை தேடி எடுக்கணும், குறைஞ்சது ஒரு வருஷமாவது சம்பாரிக்கணும், அதுக்கப்புறந்தான் கல்யாணம்.”

“இவங்க வீட்டுல அதுக்கு ஒத்துக்குவாங்களா?”

“அவங்களால எந்தப் பிரச்சினையும் வராது மாமா, எனக்கு அண்ணாதான் முக்கியம், அவன் எல்லாத்துக்கும் மனப்பூர்வமா சம்மதிக்கணும்.”

“கல்யாணம் எங்கப் பண்ணுறதா ஐடியா?”

“இதென்ன மாமா கேள்வி? நம்ம ஊர்லதான் கல்யாணம்.”

“ஓ… சந்தோஷம், நீங்கெல்லாம் நல்லா இருந்தா அதுவே எங்களுக்குப் போதும், மஹி எப்பிடி இருக்கா?”

“நல்லா இருக்காங்க, மஹி புருஷன் ரொம்ப நல்ல மாதிரி, அவ பேசினதை விட அவர்தான் நல்லாப் பேசுறாரு.” மஹிரா இங்கிலாந்து போன பிற்பாடு ரெஹான் அவளை ஒரு முறை போய் பார்த்திருந்தான். இவன் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு மணிநேரப் பிரயாணத்தில் அவர்கள் இருப்பதால் அடிக்கடி இவனால் போய் பார்க்க முடியவில்லை.

“மஹியை உனக்குத் தெரியுந்தானேப்பா.” ஆண்கள் பேசிக்கொண்டிருக்க சல்மா மகளின் அறைக்கு வந்தார். 

“பொண்ணு நல்ல மாதிரித்தான் தெரியுதில்லை ஆல்யா?” மகளின் அறை, அடுத்தாற் போலவிருந்த மருமகனது அறை, இரண்டிற்கும் நடுவிலிருந்த கதவு, எதையும் அம்மாவின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. 

“ரொம்ப நல்ல மாதிரிம்மா, ரெஹான் மச்சான் மேல அவ்வளவு பாசமா இருக்காங்க, எங்கூட எல்லாத்தையும் அவ்வளவு வெளிப்படையா பேசுறாங்க.”

“ம்…” தன்னிடம் பேசியபடி இயல்பாக கணவனின் அறைக்குள் போய்வந்த மகளை ஒரு திருப்தியோடு பார்த்திருந்தார் சல்மா. 

“இவங்க அம்மா அப்பா ஃப்ரான்ஸ் நாட்டுக்காரங்களாம், ஆனா ஹானி பொறந்தது வளர்ந்தது எல்லாம் லண்டன்தானாம், சின்ன வயசுல இருந்தே நிறைய முஸ்லிம் ஃப்ரெண்ட்ஸ் உண்டாம், கட்டிக்கிட்டா ஒரு முஸ்லிம் பையனைத்தான் கட்டிக்கணும்னு ஆசையாம், அவங்க வீட்டுல இதுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லலையாம்!”

“ஆச்சரியமாத்தான் இருக்கு, உங்கிட்ட நல்லா நடந்துக்கிறால்லை?” ஒரு அம்மாவாக சல்மாவிற்கு அவர் கவலை.‌ ஆல்யா இப்போது சிரித்தாள்.

“மஹி கூட எங்கிட்ட இந்தளவு பேசினதில்லைம்மா, ரொம்ப நல்ல பொண்ணும்மா, கல்யாணத்தப்ப ரெஹான் மச்சான் கொண்டுவந்தது எல்லாம் இவங்க வாங்கிக் குடுத்ததுதானாம்.”

“ஓ… அமர் என்ன சொல்றான்?”

“அவங்கதான் ஓவரா கவலைப்படுறாங்க, இல்லாததையும் நினைச்சு வருத்திக்கிறாங்க.”

“அதையும் இதையும் பேசி நீ அமரோட மனஸ்தாபம் பட்டுக்காதே, நீ சந்தோஷமா இருக்கிற வழியைப் பாரு.”

“ம்…” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஆல்யாவின் அலைபேசி அழைத்தது. அமர்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்க மச்சான்.”

“ஆல்யா, எனக்கு வேலை கொஞ்சம் இருக்கு, எனக்காகக் காத்திருக்காம நீ சாப்பிடு, எத்தனை மணிக்கு வர முடியும்னு தெரியலை.”

“நீங்க சாப்பிட்டீங்களா?”

“இன்னும் இல்லை.”

“முதல்ல சாப்பிடுங்க, அதுக்கப்புறமா வேலையைப் பார்க்கலாம்.” இவள் சொல்லி முடிக்கவும் அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

“யாரு? அமரா?”

“ம்…”

“அப்ப நாங்க கிளம்புறோம்மா.” கரீமும் சல்மாவும் கிளம்பிவிட்டார்கள். அன்று மதிய உணவிற்கும் அமர் வீட்டுக்கு வரவில்லை. ஆல்யா அவனது அலைபேசிக்கு அழைக்க அது அணைக்கப்பட்டிருந்தது. முக்கியமான நபர்கள் யாரோடாவது பேச்சுவார்த்தை இருந்தால் அவன் இப்படிச் செய்வது வழமைதான். இருந்தாலும் மனது கேட்காமல் ஆஃபீஸ் தொலைபேசிக்கு அழைத்தாள். அங்கு வேலை செய்யும் ஒரு வயதானவர் அழைப்பை ஏற்றார். இவள் அமரைப் பற்றிக் கேட்கவும்,

“தம்பி முக்கியமான ஆளுங்களோட பேசிக்கிட்டு இருக்காங்கம்மா, இன்னும் மதியச் சாப்பாடு கூட சாப்பிடல்லை.” என்றார். நேரம் அப்போது நான்கு மணி.

ஆல்யாவிற்கு இலேசாகக் கோபம் வந்தது. அப்படி எத்தனைப் பெண்பிள்ளைகள் வீட்டில் வரிசைக்கட்டி நிற்பதால் இவன் இப்படிப் பாய்ந்து பாய்ந்து சம்பாதிக்கிறான்?!

மணி ஐந்தைக் கடந்த பிற்பாடு அவளால் வீட்டில் இருக்க முடியவில்லை. ரெஹானும் ஹானியும் டீவியில் என்னவோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடையை மாற்றிக்கொண்டு இன்பத்திடம் வந்தாள் பெண். அன்று முழுவதும் அவள் அலைப்புறுதலைப் பார்த்திருந்த பெண்மணி புன்னகைத்தார்.

“என்னம்மா? எங்கக் கிளம்பிட்டே?”

“மாமி… நான் அவங்க ஆஃபீஸ் வரைக்கும் போய் வர்றேன்.” 

“புதிய ஆர்டர்கள் சேர்ந்தாப்போல வந்தா தம்பி இப்பிடித்தாம்மா, வீட்டுக்கு வர தாமதமாகும்.”

“எனக்கு… நான் கொஞ்சம் போயிட்டு வர்றேனே.”

“சரிம்மா, ரெஹானைக் கூட்டிட்டுப் போறியா?”

“வேணாம், வரும்போது அவங்கக் கூடவே வந்திருவேன்.” என்றவள் அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து அமரின் ஆஃபீஸுக்கு வந்தாள். உண்மையிலேயே அவனுக்கு வேலைப் பளுவா? இல்லாவிட்டால் அவன் வீட்டைத் தவிர்க்கிறானா? திடுதிடுப்பென்று இவள் உள்ளே நுழைய அப்போதுதான் இரண்டொரு நபர்களோடு அவன் வெளியே வந்துகொண்டிருந்தான். 

“ஆல்யா?!” அவளை அங்கு அப்போது எதிர்பார்க்காமல் அவன் திகைத்துப் போனான்.

“வேலையை முடிச்சிட்டு வாங்க.” என்றவள் ஒரு புன்னகையோடு உள்ளே போய்விட்டாள். கூட இருந்தவர்களை அனுப்பிவிட்டு அமரும் அவசரமாக உள்ளே வந்தான்.

“என்னாச்சு ஆல்யா? ஏதாவது ப்ராப்ளமா?”

“அதை நாந்தான் கேட்கணும், நீங்க ஏன் வீட்டுக்கு வரலை?”

“அதான் காலையிலேயே ஃபோன் பண்ணிச் சொன்னேனே, வேலை இருக்குன்னு!”

“அதுக்காக இப்பிடியா? ஃபோனை வேற ஆஃப் பண்ணி வெச்சிருக்கீங்க, சாப்பிடவுமில்லையாமே?” அவள் பதட்டத்தைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

“இதெல்லாம் யாரு உனக்குச் சொன்னது?” என்றான். அவனருகில் வந்தவள் அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

“உண்மையாவே வேலை இருந்துச்சா? இல்லை… வீட்டுக்கு வரப்பிடிக்கலையா?”

“நான் உங்கிட்டப் பொய் சொல்லுவேனா? உண்மையாவே நிறைய வேலை இருந்துச்சு, நேத்து நம்ம வீட்டுல நடந்த கூத்துல நான் அதையெல்லாத்தையும் மறந்துட்டேன்.” 

“சரி, இப்பவாவது சாப்பிடுங்களேன்.”

“இதுக்கு மேல சாப்பிட முடியாதும்மா, டீ கொண்டு வரச்சொல்றேன்.” என்றவன் கிச்சனுக்குப் போய் சொல்லிவிட்டு வந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் டீயும், சமோசாவும் வந்தது. சாப்பிட்டபடி அம்மாவை அழைத்தவன்,

“அம்மா, ஆல்யாவும் நானும் வீட்டுக்கு வர லேட்டாகும், நீங்க எங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்க வேணாம், சாப்பிடுங்க, ரெஹான்கிட்டயும் சொல்லுங்க.” என்றான் எப்போதும் போல. அந்த ஒரு வார்த்தையில் மனைவியின் முகம் மலர்ந்து போனது.

“சரிப்பா.” என்ற இன்பத்தின் குரலிலும் மகிழ்ச்சி தெரிந்தது. டீயைக் குடித்தபடியே கம்பியூட்டரில் இன்னும் ஏதோ கணக்கு வழக்குகள் பார்த்தான். மெதுவாக எழுந்தவள் அவன் ஆஃபீஸை சுற்றிப் பார்த்தாள். அங்கே இன்னும் இரண்டு அறைகள் இருந்தன. அங்கேயும் சிலர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவளைப் பார்த்ததும் புன்னகைத்தார்கள். இவளும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு கிச்சனுக்கு வந்தாள்.

“வாங்கம்மா.” அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நின்று ஏதோ அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தார்.

“இன்னும் வேலை முடியலையா ஐயா?”

“வேலை முடிஞ்சிடுச்சும்மா, உங்களுக்குச் சக்கரைப் பொங்கல் புடிக்குமாமே? பண்ணிக் குடுத்துட்டுப் போறீங்களா ஐயான்னு தம்பி கேட்டுச்சு, தம்பி கேட்டு மறுக்க முடியுமா? அதுவும் உங்களுக்காகத் தம்பி கேட்கும்போது?” அந்த முதியவரின் பேச்சில் முகம் சிவந்து போக இவள் தலையைக் குனிந்து கொண்டாள். 

“லேட்டானா வீட்டுல தேடமாட்டாங்களா?”

“ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேம்மா, தம்பியைப் பார்க்க ஆளுங்க அதிகமா வரும்போது இப்பிடி நடக்கிறதுதான், இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடியாகிடும்மா.”

“அது பரவாயில்லை, நான் வந்து உங்களைச் சிரமப்படுத்திட்டேன்.” என்றவள் அவரருகில் சென்று செய்முறையைக் கவனித்தாள். அந்த மனிதரும் பதார்த்தத்தின் பக்குவத்தைச் சொல்லிக் கொடுத்தார். தனது அலைபேசியில் அனைத்தையும் குறித்துக் கொண்டது பெண்.

“சமைப்பீங்களாம்மா?” அந்தக் கேள்வியில் அவள் திருதிருவென விழித்தாள். அந்தப் பெரியவர் சிரித்தார்.

“ஆனா தம்பி நல்லா சமைக்கும்.”

“ம்… தெரியும், ஒருநாள் பிரியாணி பண்ணிக் குடுத்தாங்க.”

“அப்ப தம்பி நல்ல புருஷந்தான், பொண்டாட்டிக்குச் சமைச்சுப் போட்டிருக்காரே!” பேசியபடியே பொங்கல் தயாராகியிருந்தது. இரு கிண்ணங்களில் இவள் எடுத்துக்கொண்டு வரும்போதும் அவன் கணனியில்தான் மூழ்கியிருந்தான். ஒவ்வொருவராக அவனிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள். 

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?”

“ம்ஹூம், நீ சாப்பிடு.” என்றான். தான் உண்டவள் அவனுக்கும் ஊட்டிவிட்டாள். எல்லா வேலைகளையும் அவன் முடித்தபோது நேரம் இரவு எட்டு மணி. 

“போகலாம் ஆல்யா.” என்றவன் கம்பியூட்டரை அணைத்துவிட்டு எழுந்தான். எல்லா அறைகளையும் ஒருமுறை பார்வையிட்டுவிட்டு வெளியே வந்தவன்‌ விளக்குகளை அணைத்துவிட்டுக் கதவைப் பூட்டினான். அமரின் வேலைப்பளு அப்போதுதான் புரிந்தது மனைவிக்கு. இவை எதுவும் தெரியாமல் அவள் அவளது படிப்பு, யுனிவர்சிட்டி என்று இருந்திருக்கிறாள். 

“டிகிரி முடிச்சதும் நானும் உங்கக்கூட இங்க வரட்டுமா?” இருவரும் காரில் ஏறியிருந்தார்கள்.

“எதுக்கு? என்னத் திடீர்னு?” அந்த ப்ளாக் ஆடி கடற்கரையை நோக்கிப் போனது. 

“இல்லை… இங்க வந்துட்டா உங்கக்கூட இருந்த மாதிரி இருக்கும்.” அவளை இப்போது அவன் திரும்பிப் பார்த்துவிட்டுப் பார்வையைப் பாதையில் பதித்தான். அவனோடு இருக்கும் நேரங்கள் அவளுக்கு ரம்மியமாக இருந்தன.

நீலக்கடல் அந்த இரவு வேளையில் வெண் நுரையைக் கரைக்கு அனுப்பிய வண்ணம் இருந்தது. வானில் முழு நிலா இல்லை. பௌர்ணமிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்ததால் நிலா சற்றுக் கோணலாக இருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து காரை நிறுத்தினான் அமர். உப்பு வாடை நாசியைத் தொட்டது. இலேசான ஈரப்பதன் காற்றைக் குளுமையாக்கியிருந்தது. 

“பசிக்குதா?”

“ம்ஹூம், பொங்கல் நிறைய சாப்பிட்டுட்டேன்.” 

“மாமா, மாமி இன்னைக்கு வந்தாங்களா? வீட்டுல இன்…” அவனை மேலே பேசவிடாமல் அவன் வாய் பொத்தினாள் மனைவி.

“இப்ப நம்மளைப் பத்தி மட்டும் பேசலாம்.” மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான் அமர். நேற்று முழுவதும் வீட்டு மனிதர்களுக்காக அவ்வளவு பேசிய பெண் இன்றைக்கு இப்படிச் சொல்கிறதே?! ஆல்யா அவன் இடது தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். 

“என்னாச்சு?” அமரின் குரலும் ஆழ்ந்து ஒலித்தது. அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. வீட்டில் நடந்த குழப்பத்தால் குதூகலமாக ஆரம்பித்த அவர்கள் உறவில் எதுவோ குறைவது போல அவள் உணர்ந்தாள். தன் கணவன் தன்னைவிட்டுக் கொஞ்சம் அப்பால் போனது போல இருந்தது அவளுக்கு. 

அவள் உச்சியில் அவன் முத்தம் வைக்க அதற்காகவே காத்திருந்தவள் போல அண்ணார்ந்து அந்தக் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள். இதுவரைத் தன் கண்ணாடி கதவுகளைக் கடல் காற்றிற்காக திறந்து வைத்திருந்த அந்தக் கறுப்பு இயந்திரம் தங்கள் எஜமானியின் காதல் நாடகத்தைப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டது. 

“ஆலி…” இன்று முழுவதும் மனைவியைப் பார்க்காமல் இருந்தது அவனையும் பாதித்திருக்கும் போலும். மனைவியின் இணக்கம் அவனுக்குள் இன்பத்தை விளைவித்தது. சுற்றும் முற்றும் ஒரு பார்வைப் பார்த்தவன் பெண்ணைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான். ஏகாந்தம், இளமை, காதோரம் கேட்ட அலைகளின் இன்னிசை என அனைத்தும் அந்த இரு உள்ளங்களுக்குள்ளும் மோகத்தீயை மூட்டிவிட்டன. முதல்முதலாக கணவனின் முகமெங்கும் முத்தம் விதைத்தது பெண். அவள் செய்கையில் அமர் வியந்து போனான். 

அவன் நெருங்கும் தருணங்களில் வெட்கம் காட்டும் பெண்மை! ஆசை இருந்தாலும் தள்ளித்தள்ளிப் போகும் நாணம்! அவையெல்லாம் இன்று என்னவானது?! மனைவியின் முகம் பற்றியவன் அந்த விழிகளை வியப்போடு பார்த்தான். அவன் ஒற்றைப் புருவம் ஏறியிறங்கி அவளிடம் கேள்வி கேட்டது. அப்போதுதான் தனது செய்கையை உணர்ந்தவள் விக்கித்துப் போய் அவன் மார்பையே சரணடைந்தாள். கூச்சமும் வெட்கமும் அவளுக்குத்தானே? அவனுக்கென்ன வந்தது? காதலில் திளைத்துக் கிடந்த மனைவியிடம் காரியம் சாதித்துக் கொண்டான் கணவன்! அந்தக் கறுப்பு இயந்திரம் கொஞ்ச நேரம் கண் மூடிக்கொண்டது! 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 20

அத்தியாயம் 20அடுத்தநாள் காலை அழகாக விடிந்திருந்தது.‌ அமருக்கு இன்றைக்கும் வேலைகள் அதிகம் இருந்தன. ஆனாலும் மனைவி தன்னை அதிகம் தேடுகிறாள் என்பதால் நிதானமாக ஆயத்தமானான். நேற்றைய இரவு இருவருக்குமே தித்திப்பாக அமைந்திருந்தது. அவர்கள் வீடு வந்தபோது நள்ளிரவாகியிருந்தது.        …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்