arrow_back
En Ragasiya Kanavu Nee அத்தியாயம் 06
En Ragasiya Kanavu Nee chevron_right பகுதி 6 / 7

அத்தியாயம் 06

visibility 185
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 06

அன்று வெள்ளிக்கிழமை. சுமித்ரா தலைக்குக் குளித்திருந்தாள். எப்போதும் வீட்டில் அம்மா தலைக்கு ஊற்றுவதென்றால் வெந்நீர் வைத்துக் கொடுப்பார். தலவாக்கலை இவர்கள் ஊரைவிட இன்னும் குளிராக இருந்தது.‌ ஆனாலும் பெண் குளிர்நீரைத் தலைக்கு ஊற்றியிருந்தாள்.

கூந்தலைத் தளர்வாகப் பின்னியவள் புடவையை உடுத்திக் கொண்டாள். இன்றோடு இங்கு வந்து ஆறு நாட்கள் ஆகின்றன. தினமும் குடும்பத்தாரோடு பேசுவாள். ஊர், வீடு, வேலை எல்லாம் ஓரளவிற்குப் பழகிப் போயிருந்தது. வந்ததும் வராததுமாக மாதிரிகள் சேகரிக்கும் வேலையைத்தான் இவளிடம் கொடுத்திருந்தார்கள். கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் இயற்கை செழித்திருக்கும் அந்தப் பிரதேசத்தில் வேலை பார்ப்பதை அவள் இரசித்தாள்.

“என்ன சுமி? வேலைக்குக் கிளம்பியாச்சா?” வீட்டைப் பூட்டும்போதே அம்பிகாவின் குரல் கேட்டது.

“ஆமாக்கா.”

“எப்பவும் போல ஹோட்டல்லதான் டீயா?”

“ஆமாக்கா.” அப்பா ஊருக்குப் போன பிறகு இரண்டு நாட்கள் அம்பிகாதான் இவளைக் கவனித்துக் கொண்டார். காலையில் தேநீர் கொடுத்து பிற்பாடு அவள் வேலையிலிருந்து வந்ததும் இரவு உணவும் கொடுத்தார். அதற்குமேல் அந்த உதவியை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.

“சம்பளம் வாங்கினதும் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிக்கோ பொண்ணே.”

“சரிக்கா.” என்றவள் ஒரு புன்னகையோடு அம்பிகாவைக் கடந்துவிட்டாள்.

“ஏங்க? இந்த சுமி ஆஃபீஸ்லயும் இப்பிடித்தானா? யார்கூடவாவது பேசுவாளா, இல்லை எங்கிட்டப் பேசுறது போல ஆமாக்கா, இல்லைக்கா போலத்தானா?” மனைவியின் பேச்சில் இப்போது முருகேசன் சிரித்தார்.

“நீங்க ஏங்க சிரிக்கிறீங்க? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க.”

“தேவை வந்தா பேசுவாங்க, இல்லைன்னா எப்பவும் அமைதிதான்.”

“நல்ல பொண்ணு போங்க!” என்றவர் குழந்தையைக் கவனிக்கப் போய்விட்டார். ஹோட்டலுக்கு வந்த சுமித்ரா தேநீர் அருந்திவிட்டுக் காலை ஆகாரமும் வாங்கிக் கொண்டாள். அங்கேயே எல்லாம் கிடைப்பதால் வசதியாக இருந்தது.

“வேலையெல்லாம் எப்பிடிம்மா போகுது? அப்பா சவுக்கியமா இருக்காங்களா?” இது ஹோட்டல் முதலாளி.

“நல்லா இருக்காங்க அங்கிள்.” என்றவள் இப்போதும் ஓர் புன்னகையோடு நகர்ந்துவிட்டாள். இங்கிருந்து அவர்கள் ஃபேக்டரி அத்தனைத் தொலைவில் இல்லை. நான்கைந்து பஸ் ஸ்டாப்கள்தான். எதற்காக வீண் செலவு என்று அந்தத் தூரத்தைப் பெண் எப்போதும் நடந்தே கடப்பாள். வெண்பஞ்சு மேகங்கள் தழுவும் மலை முகடுகளைப் பார்த்தபடி நடப்பது அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டம். இங்கு பல நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றனவாம். இவளோடு வேலை செய்யும் பெண் சொல்லியிருந்தாள். அம்மா, அப்பா வரும்போது சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். சுமதிக்கு இதுபோல இடங்களுக்கு எல்லாம் பிக்னிக் போகவேண்டும் என்று நிரம்பவும் ஆசை. படிப்பு அதிகம் இருந்ததால் எதையும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

சம்பளம் வாங்கியதும் அவளை எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது அந்த ப்ளாக் ஆடி அவளருகே சர்ரென்று வந்து நின்றது. சுமித்ரா திடுக்கிட்டுப் போனாள். உள்ளே இருந்தது வேறு யாருமல்ல. சாட்சாத் மாதவனேதான்! ஒதுங்கி நின்றிருந்தவளின் பக்கக் கதவைத் திறந்துவிட்டவன்,

“உள்ள ஏறு சுமித்ரா.” என்றான் அதிகாரமாக. அவன் சொன்னது என்னவென்று அவளுக்கு விளங்கவில்லை.

“சார்… எனக்கு ஆஃபீஸ் இருக்கு.” அவளுக்குப் படபடத்தது. அவனைப் பார்த்தது சந்தோஷமாகவும் இருந்தது.

“அது எனக்கும் தெரியும், ரோட்டுல நின்னு தர்க்கம் பண்ணாம முதல்ல உள்ள ஏறு.” அதற்குமேல் எதுவும் பேசாமல் அவள் உள்ளே ஏறி உட்கார்ந்தாள். எதற்காக இவன் இப்போது இங்கே வந்திருக்கிறான் என்ற கேள்வி வண்டுபோல் உள்ளே குடைந்தது. ஒருவேளை முரளி சாரைப் பார்க்க வந்திருப்பானா?

“என்ன சார் திடீர்னு இந்தப் பக்கம்?” அவசரமாக தன்னைச் சுதாரித்தவள் அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்.

“உன்னைப் பார்க்கத்தான் சுமித்ரா.” அந்தப் பதிலில் அவள் மீண்டும் திடுக்கிட்டுப் போனாள்.

“உன்னோட குவார்ட்டஸுக்கு வர்றது முறையில்லை, ஆஃபீஸுக்கு வந்தா அங்க முரளி மாமா இருப்பாரு, இப்போதைக்கு அதையும் நான் விரும்பலை, அதாலதான் இங்க வெச்சுப் பேசுறேன்.”

“என்னாச்சு சார்? ஏதாவது ப்ராப்ளமா? வேலையில நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா?” அவளின் கேள்விகளை உள்வாங்கியவன் மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தான். என்னை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா, இல்லை புரிந்துகொள்ள மறுக்கிறாயா என்று கேள்வி கேட்டது அந்தப் பார்வை.

“வீட்டுல கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சிருக்காங்க.” இப்போது அவள் கரங்கள் வெளிப்படையாகவே நடுங்க மடியிலிருந்த கைப்பையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“வர்ஷா எனக்கு நல்ல மேட்ச்சுன்னு எல்லாரும் அபிப்பிராயப்படுறாங்க.” எதற்காக இவன் இத்தனைத் தூரம் கிளம்பிவந்து அவள் இதயத்தைக் கூரிய கத்தியால் திருகுகிறான்?!

“ஆனா எனக்கு… வர்ஷாவைவிட சுமித்ரா கரெக்டா இருக்கும்னு தோணுது.” அவன் வெளிப்படையாகவே பேச உலகத்து ஆச்சரியத்தை எல்லாம் கண்களில் தேக்கி அவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண். அந்தக் கண்களின் வீச்சில், பளபளப்பில் மாதவன் வீழ்ந்து போனான். உலகம் மறந்து அவளையே பார்த்திருந்தான். ஆனால் அவள் தன்னை மறந்து ஆச்சரியப்பட்டது சில நொடிகள்தான். சட்டென்று நடப்பைப் புரிந்து கொண்டவள் காரின் கதவில் கை வைத்தாள். அவசரமாக அவளின் வலது கரத்தை அவன் இடக்கரம் பற்றிக்கொண்டது.

“சார்! இது ரொம்பத் தப்பு.” இப்போதும் தான் அவளைத் தீண்டியதைத்தான் பெண் தவறென்று சொல்கிறாள் என்று நினைத்தவன் சட்டென்று அவள் கரத்தை விடுவித்தான்.

“சாரி சுமித்ரா, ரியலி சாரி. அந்த ப்ளாக் ஆடிக்குள் சில நொடிகள் மொனம் குடிகொண்டிருந்தது.

“எனக்கு… எனக்கு ஆஃபீஸுக்கு லேட்டாகுது…”

“தெரியும், இன்னும் எட்டு மணிகூட ஆகலை, எட்டு முப்பதுக்கு நீ அங்க இருந்தா போதும்.”

“இல்லை… இன்னைக்கு எனக்கு…”

“சுமித்ரா!” அவன் போட்ட அதட்டலில் பெண் வாயை மூடிக்கொண்டாள்.

“நாம ரெண்டு பேரும் பேசணும்னுதான் காலங்காத்தாலயே கிளம்பி வந்திருக்கேன், நீ ஓடுறதுலயே குறியா இருக்கே.”

“இது… இது சரியா வராது சார்.”

“ஏன்?”

“உங்க உயரம் வேற, நான் ஏணி வெச்சா கூட எட்ட முடியாத உயரம், அந்தஸ்துன்னு ஒன்னு இருக்கு சார்.”

“ஆசை அந்தஸ்து பார்த்தெல்லாம் வராது பொண்ணே!”

“ஆசைப்படுற அளவுக்கு நமக்குள்ள எதுவும் நடக்கலையே! ரெண்டு தடவைப் பார்த்திருப்போம், அன்னைக்குக் கல்யாணத்துல வெச்சுப் பேசலைன்னா அதுவும் இல்லை.” மனதை இரும்பாக்கிக் கொண்டு பேசியது பெண். உண்மையும் அதுதானே!

“ஓ… அப்ப நமக்குள்ள எதுவுமே இல்லையில்லை? ஆரம்பத்துல நீ ஒதுங்கி ஒதுங்கிப் போனப்போ சுமதியோட அக்கா கொஞ்சம் திமிர் புடிச்ச பொண்ணா இருக்குமோன்னுதான் நானும் நினைச்சேன், ஆனா போகப்போக அப்பிடியில்லை, சுமித்ரா என்னை வேணும்னுதான் தள்ளி வெக்கிறான்னு எனக்குத் தோணிச்சு, வர்ஷாவோட ஃபோட்டோவைக் காட்டி சுமதிக்கிட்ட பொண்ணை உனக்குப் புடிச்சிருக்கான்னு கேட்டேன், அதுக்கு அவ என்ன பதில் சொன்னா தெரியுமா?”

“…” இப்போது சுமித்ரா வாயடைத்துப் போனாள். அன்றைக்கு இதே கேள்வியை அவன் தன்னிடம் கேட்டபோது அழைப்பைத் துண்டித்தது அவள்தானே!

“ரொம்ப சந்தோஷப்பட்டா, பொண்ணு சூப்பரா இருக்கு, உங்களுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு சொன்னா, உன்னை மாதிரி ஃபோனை பட்டுன்னு கட் பண்ணலை, இப்பவும் நமக்குள்ள எதுவுமே நடக்கலைன்னு சொல்லப்போறியா? இல்லை…‌ உனக்கு என்னைப் புடிக்கலைன்னு சொல்லப் போறியா?” சுமித்ரா இப்போது தலையைக் குனிந்து கொண்டாள். விழிகளிலிருந்து இரு கண்ணீர் துளிகள் அவள் கரங்களில் வீழ்ந்து தெறித்தன.

“எதுக்கு இப்போ அழுறே?” அவன் கேட்கவும் கண்களை அழுந்தத் துடைத்தவள் முகத்தை வெளிப்புறமாகத் திருப்பிக் கொண்டாள். இதற்குமேல் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?

“ஏன் சுமி? உனக்கு என்னைப் புடிக்கலையா?”

“இது நடக்காது சார், அதை நீங்க முதல்ல புரிஞ்சுக்கோங்க.”

“ஏன் நடக்காது? அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படுறே? அது என்னோட பிரச்சினை, உனக்கு என்னைப் புடிச்சிருக்கா? அதுக்கு மட்டும் நீ இப்போ பதில் சொன்னா போதும்.”

“பதில் சொல்லிட்டு என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? நீங்க அந்த வர்ஷாவைக் கல்யாணம் பண்ணுறதைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கச் சொல்றீங்களா?” வார்த்தைகள் தவறாக வந்து வீழ மாதவனின் கண்களில் இப்போது கோபம் தெரிந்தது. அந்தக் கோபத்தைப் பார்த்துப் பெண் பயந்து போனாள்.‌ எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தவன் பெண்ணின் ஆஃபீஸை நெருங்கும் முன்பாக நிறுத்தினான்.

“நான் இன்னைக்கு ஊருக்குப் போகமாட்டேன், இங்கதான் இருப்பேன், ஆஃபீஸ் முடிஞ்சதும் மீட் பண்ணலாம்.” குரல் கடினமாக வந்தது.

“ஆஃபீஸ் முடிஞ்சா என்னால எங்கேயும் வர முடியாது, கொஞ்சம் லேட் பண்ணினாலே பக்கத்து வீட்டு அக்கா கால் பண்ணுவாங்க.”

“அப்ப ஆஃபீஸ்ல ஏதாவது வேலை இருக்குன்னு சொல்லிட்டு வா.”

“அவங்க வீட்டுக்காரரும் இங்கதான் வொர்க் பண்ணுறாங்க, பொய் சொல்ல முடியாது.”

“அப்ப என்னதான் பண்ணுறது சுமித்ரா? வந்த முதல் வாரமே லீவு போட்டா நல்லா இருக்காது, இல்லைன்னா முரளி மாமாக்கிட்ட நான் பேசவா?”

“ஐயையோ! அதெல்லாம் வேணாம், நான் ஆஃபீஸ் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிட்டு… ஏதாவது சொல்லிட்டு…” அம்பிகாவிடம் என்ன சொல்வது? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியே எல்லோரையும் சமாளித்துவிட்டுக் கிளம்பி வந்தாலும் இவனிடம் என்ன பேசுவது? பேசுவதற்கு என்ன இருக்கிறது?! மனம் நிறைய ஆசை இருந்தாலும் நிறைவேறாத கனவு என்று தெரிந்துகொண்டு எதற்காக அதன் பின்னே ஓட வேண்டும்?!

“எனக்காக ஒரு பொய் சொல்றது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா சுமி?” அவள் கண்களைப் பார்த்து அவன் கேட்டபோது மீண்டும் பெண்ணின் கண்கள் துளிர்த்தன.

“என்னோட நம்பர் உங்கிட்ட இருக்கு, நான் ஊருக்குப் போகப்போறதில்லை, உனக்குப் புடிச்சிருந்தா எனக்குக் கால் பண்ணு, புடிக்கலைன்னா உன்னை நீ சிரமப்படுத்திக்க வேணாம், நான் புரிஞ்சுக்குவேன், இப்போ போ, உனக்கு டைம் ஆச்சு.” குரலில் ஓர் இயந்திரத்தனம். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைத் தூரத்திலிருந்து இன்னும் இரண்டு கண்களும் கவனித்தன!

அதற்கு மேல் அங்கு நிற்காமல் அந்த ப்ளாக் ஆடி கிளம்பிப் போய்விட்டது. அன்றைய காலைப்பொழுது சுமித்ராவைச் சுருட்டிப் போட்டுவிட்டது. சுனாமியில் அகப்பட்ட சருகு போல ஆகிப்போனாள். சற்றுமுன் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தபோது கனவு போல இருந்தது. நிஜமாகவே வந்தது மாதவன்தானா?! அவள் கனவேதும் காணவில்லையே!

ஆஃபீஸ் டாய்லெட்டுக்குள் சென்றவள் நன்றாக ஒரு மூச்சு அழுதாள். அவளைத் தேடி வந்திருக்கும் அதிர்ஷ்டத்தை நினைத்து அழுதாள்! அதை ஏற்க முடியாத அவள் துரதிருஷ்டத்தை நினைத்தும் அழுதாள்! எல்லா கவலைகளையும் கண்ணீரில் கரைத்துவிட்டு அவள் வெளியே வந்தபோது முகம் வீங்கிப் போயிருந்தது.

“என்னாச்சு சுமித்ரா? உடம்புக்கு முடியலையா என்ன?” ஆஃபீஸில் வேலை பார்க்கும் ரோஸி கேட்டபோது சிரித்து சமாளித்தாள் பெண். நெஞ்சின் மேலே பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போலவிருந்தது. எதற்காக அவன் இப்போது இங்கே வரவேண்டும்?! அவன் வராமல் போயிருந்தால் ஆசைப்பட்ட மனதோடு அவள் காலம் தள்ளியிருப்பாள். அவளுக்கு ஆசைப்பட மட்டுமே தகுதி இருக்கிறது என்று அவளை அவளே சமாதானம் செய்திருப்பாள். ஆனால் இப்போது அப்படியல்லவே!

“சுமித்ரா, வேலையெல்லாம் எப்பிடிப் போகுது?” சட்டென்று சிந்தனைக் கலைந்தவள் எழுந்து நின்றுவிட்டாள்.‌ ஏனென்றால் அவளெதிரே நின்றிருந்தது முரளி மனோகர். உயர் அதிகாரியே இப்படி வந்து விசாரிக்கவும் அங்கிருந்த அத்தனைப் பேரும் எழுந்து நின்றுவிட்டார்கள்.

“எல்லாரும் உட்காருங்க, என்ன சுமித்ரா? உடம்புக்கு முடியலையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை சார், நான் நல்லாத்தான் இருக்கேன், வேலையெல்லாம் நல்லா போகுது.”

“வெரிகுட்.” என்றவர் அவளை ஒரு கூரிய பார்வைப் பார்த்துவிட்டுப் போய்விட்டார். அந்தப் பார்வையில் அவள் முதுகுத்தண்டு சில்லிட்டது. அன்றைக்கு முழுவதும் அவளுக்கு வேலை எதுவும் ஓடவில்லை. வெள்ளிக்கிழமை என்பதால் அன்று அதிக வேலையும் இருக்கவில்லை. லேப் ரிப்போர்ட் தயாரிப்பதற்கு முருகேசன் சொல்லிக் கொடுக்க அதைக் கற்றுக்கொண்டாள். ஆனால் மனது மாதவனையே வட்டமிட்டது.

“உடம்புக்கு முடியலைன்னா விட்டுருங்க சுமித்ரா, இன்னைக்கே எல்லாத்தையும் கத்துக்கணும்னு அவசரமில்லை.”

“இந்தக் குளிர்ல காலங்காத்தால யாராவது பச்சைத் தண்ணியைத் தலைக்கு ஊத்துவாங்களா முருகேசன் சார்? இந்தப் பொண்ணு அதையும் பண்ணிட்டுக் குளிர்ல வேற நடந்து வந்திருக்கு, அப்ப உடம்புக்கு முடியாமத்தானே போகும்?” இது ரோஸி. எல்லாவற்றையும் சமாளித்துவிட்டு இவள் வீடு வந்தபோது மணி நான்கு. சற்றுநேரம் எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்தக் கட்டிலில் அமர்ந்துவிட்டாள். இப்போது அவள் அவசியம் வெளியே சென்று மாதவனைச் சந்திக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இவள் அவனை அழைக்கவில்லை என்றால் இவள் மனதைப் புரிந்துகொண்டு அவன் கிளம்பி ஊருக்குப் போய்விடுவான். ஆனால் அதன்பிறகு?!

கிட்டவே கிட்டாது என அவள் நினைத்திருந்த கனவு இப்போது கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கிறது. கானல் நீரென்று அவள் நினைத்திருந்த ஒன்று இன்று நன்னீர் ஊற்றாய் அவள் தாகம் தணிக்க வந்திருக்கிறது. இப்போது சுமித்ரா என்ன முடிவெடுப்பாள்?!

“அம்பிகாக்கா, இங்கப் பக்கத்துல இருக்கிற ஃபார்மசிக்குக் கொஞ்சம் போயிட்டு வந்தர்றேன்.”

“என்னாச்சு சுமி? உடம்புக்கு முடியலையா என்ன?”

“அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா, காலையில தலைக்கு ஊத்தினது ஒத்துக்கலைப் போலிருக்கு, சளி புடிச்சிருச்சு, இப்பிடியே விட்டா காய்ச்சல் வந்திடும்.”

“அதுவும் சரிதான், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா இவரு வந்திடுவாரு, கூடக் கூட்டிக்கிட்டுப் போம்மா.”

“இல்லைக்கா, என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தியும் இந்த ஊருக்குக் குடும்பத்தோட வந்திருக்காளாம், என்னைப் பார்க்கணும்னு சொன்னா, அப்பிடியே அவளையும் பார்த்துட்டு வரலாம்னு பார்க்கிறேன்.”

“சரிம்மா, பத்திரமா போயிட்டு வா, ரொம்ப லேட் பண்ணிட வேணாம்.”

“சரிக்கா, வீட்டுல இருந்து யாராவது கூப்பிட்டா எனக்கு உடம்புக்கு முடியலைன்னு எதுவும் சொல்லிடாதீங்க, ஃப்ரெண்ட்டைப் பார்க்கப் போறேன்னு மட்டும் சொல்லுங்க, பதறிப் போயிடுவாங்க.”

“சரிம்மா.” சுமித்ரா வீட்டைவிட்டு வெளியே வந்தபோது மணி ஐந்து. அவளுக்கு ஆஃபீஸ் முடிந்திருக்கும் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவளை அழைக்கவில்லை. அவளாகவே விருப்பமிருந்தால் அழைக்கட்டும் என்று காத்திருக்கிறான்.

இப்படியே இங்கு நின்றிருப்பது பிசகு. எந்த நேரமும் முருகேசன் இந்த வழியாக ஆஃபீஸிருந்து வீட்டிற்கு வரலாம். அப்படி வந்தால் அவரிடம் வேறு பொய் சொல்லவேண்டும். ஆஃபீஸுக்கு எதிர்த்திசையில் நடந்தவள் அலைபேசியை எடுத்து அவனை அழைத்தாள். கைகள் கிடுகிடுவென நடுங்கின.

“சொல்லு சுமித்ரா.” இவளது அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தான் போலும். சட்டென்று அழைப்பை ஏற்றுவிட்டான்.

“நான்…”

“எங்க இருக்கே?”

“வீட்டுக்குப் பக்கத்துலதான், எனக்கு இங்க எந்த இடமும் தெரியாது.”

“நானும் பக்கத்துலதான் இருக்கேன், உன்னோட லொக்கேஷனை எனக்கு அனுப்பு.”

“ம்…” அவள் அனுப்பிய இரண்டாவது நிமிடம் அந்த ப்ளாக் ஆடி அவள் முன்பாக வந்து நின்றது. இப்போதும் அவளுக்காக அவன் கார் கதவைத் திறந்துவிட பெண் ஏறிக்கொண்டாள்.

காலையில் பார்த்த அதே சாம்பல் நிற காட்டன் புடவை. மெரூன் கலரில் பார்டர். அதே நிறத்தில் ப்ளவுஸ். கூந்தல் கலைந்திருந்தது. ஒரு கையில் தங்க நிற கைக்கடிகாரம். மற்றைய கரத்தில் இரு மெல்லிய தங்க வளையல்கள். கழுத்தில் மெல்லியதாக ஓர் தங்கச் சங்கிலி.

“வேலை கஷ்டமா இருக்கா என்ன?” அவன் குரல் இளகியிருந்தது.

“இல்லையில்லை, ஃபீல்ட் வொர்க்தான், ஆனாலும் கஷ்டம் கிடையாது.”

“அப்ப ஏன் முகம் ஒருமாதிரியா இருக்கு? நாந்தான் கஷ்டப்படுத்துறேனா?”

“அப்பிடியில்லை… காலையில தலைக்கு ஊத்தினது ஒத்துக்கலைப் போல, அதான்…” அவள் சொல்லவும் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். அவள் பதற்றத்தை அவன் கண்டுகொள்ளவில்லை.

“டாக்டர்கிட்டப் போகலாமா?”

“தேவையில்லை, இதுக்கெல்லாமா டாக்டர்? ஃபார்மசியில ரெண்டு மாத்திரை வாங்கிப் போட்டா சரியாகிடும்.” என்று அவள் மாத்திரையின் பெயரையும் சொல்ல இப்போது அவன் சிரித்தான்.

“டாக்டரோட அக்கா இல்லையா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.” என்றவன் வழியில் தெரிந்த மருந்தகம் ஒன்றில் காரை நிறுத்தி அவள் சொன்ன மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்தான். அவள் அருந்தி முடிக்கும்வரை காத்திருந்தவன்,

“பக்கத்துவீட்டு அக்காக்கிட்ட என்ன பொய் சொல்லிட்டு வந்திருக்கீங்க?” என்றான்.

“ஃபார்மசிக்குப் போகணும்னு சொன்னேன், அப்பிடியே… ஃப்ரெண்ட்டைப் பார்க்கணும்னு…”

“ம்… எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போகணும்?”

“ஏழு மணிக்கு முன்னாடி போயிடணும்.” மாதவன் தன் மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். ஏற்கனவே மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. இதில் இந்தப் பெண் வேறு ஏழு மணிக்குப் போகவேண்டும் என்று சொல்கிறதே!

கார் இப்போது மீண்டும் வேகமெடுத்தது. எங்கே போகிறோம் என்று அவள் கேட்கவுமில்லை, அவனும் சொல்லவுமில்லை. அந்த அமைதியான பயணத்தை இருவரும் இரசிப்பவர்கள் போல அமர்ந்திருந்தார்கள். கார் ஐந்து நிமிடங்கள் பயணம் செய்து ஓர் காட்டுப் பாதையில் போய் நின்றது. பக்கத்தில் எங்கேயோ நீர்நிலை ஒன்று இருக்க வேண்டும். நீரின் சத்தம் காதுகளில் வந்து மோதியது. சில நிமிடங்கள் அந்த இயற்கையின் இசையை இரசித்தவன் இப்போது கார் கண்ணாடிகளை மூடினான். காருக்குள் இப்போது அழகான அமைதி!

“சொல்லு சுமி, காலையில பதில் சொல்லுன்னு கேட்டதுக்கு என்னவோ சொன்னியே? அது என்னன்னு இப்ப சொல்லு.”

“…”

“எனக்குப் பதில் சொல்லிட்டு எதுக்காக நீ அப்புறம் அழணும்? அப்பிடீன்னா என்ன அர்த்தம்? நான் உனக்கு ஆசை காட்டிட்டு வீட்டுல பார்க்கிற பொண்ணைக் கட்டிக்குவேன்னா?”

“இல்லை, அப்பிடியில்லை…”

“அப்பிடியில்லைன்னா உன்னோட பேச்சுக்கு என்ன அர்த்தம்?”

“இது… இது நடக்காது, அப்பிடியிருக்கும் போது…”

“நடக்காதுன்னு நீயா முடிவெடுத்தா எப்பிடி?”

“உங்க வீடு இதை ஏத்துக்காது, உங்கம்மா ரொம்ப நல்லவங்க, ஆனா அவங்களுக்குமே நாங்கெல்லாம் கூலியாளுங்கதான்.”

“சுமித்ரா இது ரொம்பப் பெரிய வார்த்தை.”

“ஆனாலும் உண்மை அதுதான், உங்கக் குடும்பத்துல இருக்கிற எல்லாருக்குமே எங்க மேல நிறைய பாசம் உண்டு, ஆனா அது வீட்டுக்கு வெளியே இருக்கும் வரைதான், பெரிய வீட்டுக்குள்ள எங்களால வர முடியாது, நாங்க வரவும் கூடாது.”

“அப்பிடி இங்க யாரும் சட்டம் போடலை.”

“இது எழுதப்படாத சட்டம், அதை மீற நினைச்சா வீணான மனஸ்தாபங்கள் வரும், என்னை இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுப் படிக்க வெச்ச அப்பாக்கு நான் தேடிக் குடுக்கிற மிகப்பெரிய அவமானமா இருக்கும்.”

“அப்போ என்னைப்பத்தி நீ யோசிக்கவே மாட்டியா? உனக்கு எம்மேல எதுவுமே இல்லையா? பெரிய வீடு, உங்கப்பா, குடும்ப கவுரவம் இதெல்லாம்தான் உன்னோட கண்ணுக்குத் தெரியுதா? நான் தெரியலையா? என்னோட ஆசை உனக்குப் புரியலையா?” அவன் ஒவ்வொன்றாகப் பட்டியல் போட அவள் வெடித்து அழுதாள்.

“வேணாம் சார்… விட்டுருங்க…”

“முதல்ல இந்த சார், மோரை நிறுத்து, அதுக்கு முன்னாடி எதுக்கெடுத்தாலும் இப்பிடி அழுறதை நிறுத்து.” அவன் சொல்லி முடிக்கவும் ஃபோன் சிணுங்கவும் சரியாக இருந்தது. அழைப்பது யாரென்று பார்த்தவன் உச்சுக்கொட்டினான்.

“இந்த மனுஷன் இப்ப எதுக்காகக் கூப்பிடுறாரு?”

“யாரு?”

“முரளி மாமா.” அவன் பதிலில் இவள் திடுக்கிட்டுப் போனாள்.

“ஹலோ, சொல்லுங்க மாமா.” மாதவன் அழைப்பை ஏற்றிருந்தான்.

“மாதவா, எங்க இருக்கே?” அவர் பேசுவது இவளுக்கும் கேட்டது. என்ன பதில் சொல்லப் போகிறானோ என்று இவள் பயந்துபோய் அமர்ந்த்திருக்க கண்களை ஒரு முறை அழுந்த மூடியவன்,

“தலவாக்கலைலதான்.” என்றான் உண்மை விளம்பியாக. பெண்ணுக்குள் இன்னும் பயம் கூடியது.

“தனியா இருக்கியா என்ன?” இப்போதும் அவர் கேள்விக்கு இவன் உண்மையான பதில் சொல்ல ஆயத்தமானால் அவள் நிலைமை கவலைக்கிடமாகிவிடும் என்பதால் அவன் கரத்தை அவசரமாகப் பற்றினாள். சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“இல்லை மாமா, எங்கூட சுமித்ரா இருக்கா.” என்றான் அவள் கண்களையே பார்த்தபடி. சுமித்ராவிற்கு உலகமே தலைகீழாகச் சுழன்றது.

“ஓ… என்ன மாதவா திடீர்னு இந்தப் பக்கம்? ஏதாவது வேலையா வந்தியா?”

“இல்லை மாமா, சுமித்ராவைப் பார்க்கத்தான் வந்தேன்.” இவளைப் பார்த்தபடியே அவன் முரளி மனோகருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நடுங்கும் உதடுகளைப் பற்களால் அழுந்தக் கடித்திருந்தாள் பெண்.

“மாதவா… இது சரியா வருமா?”

“எனக்குப் புடிச்சிருக்கு மாமா.”

“வீட்டுல தெரியுமா?”

“இல்லை மாமா, ஆனா நாளைக்கே சொல்லிடுவேன்.”

“வேற பொண்ணு பார்த்திருக்கிறதா அப்பா அன்னைக்குப் பேசும்போது சொன்னாரே?”

“அது சரியா வராது மாமா, எனக்கு சுமியைத்தான் புடிச்சிருக்கு.” அவன் திட்டவட்டமாக அறிவிக்க அதற்குமேல் முரளி மனோகர் விவாதிக்கவில்லை.‌

“சரி, முடிஞ்சா ஊருக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு ஒருதடவை வந்துட்டுப் போ.”

“சரி மாமா.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான். அவனைக் குற்றம் சுமத்தும் பார்வை அவள் பார்க்க,

“இப்பவாவது என்னை நம்புறியா?” என்றான் சாதாரணமாக.

“இது எவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும்னு புரிஞ்சுதான் பேசினீங்களா?”

“முரளி மாமா ரொம்ப டீசன்ட்டான ஆளு, நான் சொல்லாத வரைக்கும் இந்த விஷயத்தை அவரா எங்க வீட்டுல சொல்லமாட்டாரு.”

“ஆனா நான் திங்கட்கிழமை அதே ஆஃபீஸுக்குத்தானே போகணும்.”

“ஆஃபீஸ் வேற, குடும்பம் வேற சுமித்ரா.”

“உங்க முரளி மாமா இன்னைக்கு எங்கிட்டப் பேசினாங்க, வேலை எப்பிடிப் போகுதுன்னு கேட்டாங்க.”

“ஓ… மனுஷன் அப்ப ஏற்கனவே மோப்பம் புடிச்சுட்டாரு, நான் உண்மையைச் சொல்றேனான்னு பார்க்கத்தான் இப்ப கால் பண்ணியிருக்காரு.”

“எப்பிடி?”

“என்னோட காரை அவருக்கு நல்லாவே தெரியும், இன்னைக்கு எங்கேயாவது காரைப் பார்த்திருப்பாரு, அதோட இப்பிடி அழுமூஞ்சியா ஆஃபீஸ்ல இருந்தா அவருக்குச் சந்தேகம் வராதா? என்னன்னுப் புரியாதா என்ன?” இப்போது சுமித்ராவிற்கு இன்னும் தலை சுற்றியது. அவன் பார்வை இப்போது அவளை மெல்லிய இறகு போல வருடியது. எந்த ஒப்பனையும் இல்லாமல், சாதாரண புடவையில், நலுங்கிய தோற்றத்திலும் பார்க்க அழகாக இருந்தாள்.

“அவங்க திங்கட்கிழ…” ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அவன் பார்வைப் பார்த்துச் சட்டென்று நிறுத்தினாள். என்ன பார்வை இது?!

“நீ எப்ப எனக்குள்ள வந்தே சுமி?” அவன் இரசனையாகக் கேட்கவும் இவளுக்குத் திக்கென்றது. இங்கு நடக்கும் பிரச்சனை என்ன? இவன் கேட்கும் கேள்வி என்ன?!

“இந்தக் கேள்வியைக் கொஞ்ச நாளாவே எனக்குள்ள நானே கேட்டுக்கிறேன், எனக்குப் பதில் தெரியலை, வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்க, எனக்கு என்ன குறை? நீயே சொல்லு, ஆனா நீ என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறே…”

“அப்பிடியெல்லாம் இல்லை…”

“உனக்கும் என்னை ரொம்பப் புடிக்கும், அதை நீயா ஒத்துக்கலைன்னாலும் உன்னோட கண்ணும் செய்கைகளும் அதைக் காட்டிக் குடுத்திடும்.” இப்போது பெண் தலையைக் குனிந்து கொண்டாள். முகம் இலேசாகச் சிவந்து போனது.

“வேலை மெனக்கெட்டு காரை எடுத்துக்கிட்டு காலங்காத்தால வந்தாலும் நீ என்னைவிட்டுத் தூரப் போறதுலதான் குறியா இருக்கே, ஆனாலும் எம் மனசு உம் பின்னாடிதான் வருது சுமித்ரா.” சொன்னவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண். அவளையே பார்த்தபடி இருந்தவனின் முகத்தில் புன்னகைத் தவழ்ந்தது. அத்தனை வசீகரம் அந்த முகத்தில்! இவனை மறுப்பது முட்டாள்தனம். அறிவீனத்தின் உச்சக்கட்டம்!

“ஏனப்பிடி?” கேட்டவளின் கண்களில் மீண்டும் ஈரம். அவன் உதட்டைப் பிதுக்கினான்.

“எனக்கு இதுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு?” கன்னத்தில் கண்ணீர் வழிய அவள் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. காட்டுப் பறவை ஒன்று தன் இணையைத் தேடி எழுப்பிய ஒலி இன்னிசையாக அவர்கள் காதில் வீழ்ந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 07

அத்தியாயம் 07அந்த ப்ளாக் ஆடிக்குள் இப்போது அசாத்திய அமைதி நிலவியது. இரண்டு பேரும் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். இருவருக்குள்ளும் ஆசைகளும் கனவுகளும் இருந்தன. ஆனால்... மாதவன் அதை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தான். பெண்ணின் நிலை அப்படியல்ல! அவள் சூழ்நிலைக் கைதி!"ஏதாவது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →