அத்தியாயம் 10
அத்தியாயம் 10
ரங்கராஜ் அன்று தங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அன்றைக்கு அம்மா வந்து போன பிற்பாடு மனம் கனத்துப் போனது. அப்பாவின் மேலிருந்த கோபத்தின் காரணமாக வீட்டிற்குப் போவதைத் தவிர்த்திருந்தான். ஆனால் அது அம்மாவை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று அவன் யோசிக்கவில்லை.
இன்றைக்கு வந்தனாவிற்குப் பல்கலைக்கழகத்தில் பிரியாவிடை விழா இருந்தது. அன்றைக்கு இவர்கள் இருவரும் போய் வாங்கிவந்த புடவையை உடுத்திக்கொண்டு கிளம்பியிருந்தாள். அவளை ட்ராப் பண்ணிவிட்டு அம்மாவைப் பார்க்க வந்திருந்தான்.
“வந்தனா, உன்னை ட்ராப் பண்ணிட்டு அப்பிடியே வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்துட்டுத்தான் ஹோட்டல் போவேன்.”
“சரி அத்தான், நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் அத்தையைப் போய் பாருங்க, அவங்க ரொம்ப வருத்தப்படுறாங்க.”
“அம்மா அன்னைக்கு என்னமோ சொன்னாங்களே பொண்ணே?”
“என்ன சொன்னாங்க?”
“நாளைக்கு நமக்குக் கொழந்தைப் பொறந்தான்னு ஏதோ சொன்னாங்களே, வாய்ப்பிருக்கா?” வேண்டுமென்றே அவளைக் காலையில் வம்பிழுத்தான். அவன் கையில் ஓர் அடி போட்டவள் அப்பால் போக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“வாய்ப்பே இல்லை ராஜான்னு சொல்லப் போறியா?” தன் மார்புக்குள் முகம் மறைத்துக் கொண்டவளைக் கேலி செய்தான். இப்போதெல்லாம் இரவுகள் நீளமாகிக் கொண்டு போகின்றன. வந்தனாவிற்கும் விடுமுறை என்பதால் நினைத்த நேரம் உறங்கி நினைத்த நேரம் எழுந்தார்கள். அவன் கேட்ட கேள்விக்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் அதை என்னவென்று அவனிடம் அவள் சொல்ல?! பரீட்சை எழுதுபவனுக்குத் தெரியாதா அவன் பாஸா, ஃபெயிலா என்று?!
நல்லதொரு மனநிலையில் வீட்டை வந்தடைந்தவனை வரவேற்றது வாசலில் நின்றிருந்த மீனாட்சி அத்தையின் வீட்டுக் கார். யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் எனக்கென்ன என்று பைக்கை நிறுத்தியவன் உள்ளே போனான். மீனாட்சிதான் சோஃபாவில் உட்கார்ந்திருந்தார். கூடவே மாணிக்கமும் தங்கையின் முகத்தைப் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
“எங்க எல்லாருக்கும் விருப்பந்தான் அண்ணா, நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க.”
“எனக்கும் சம்மதந்தான் மீனாட்சி, நீங்க மேல ஆகவேண்டியதைப் பாருங்க.” மாணிக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவன் உள்ளே நுழைந்தான்.
“வாப்பா பெரிய மனுஷா! எப்பிடி இருக்கே?” கேலியாக வந்தது அத்தையின் குரல். அத்தை தன்மேல் கோபத்தோடு இருக்கிறார் என்பதைத்தான் ஏற்கனவே நமச்சிவாயம் சொல்லிவிட்டாரே. ஆனாலும் அன்றைக்குக் கடையில் பார்த்துப் பேசிய அர்ச்சனா நிதானமாக இருந்ததால் இவன் பெரிதாகக் கவலைப்படவில்லை.
“நல்லா இருக்கேன் அத்தை, நீங்க எப்பிடி இருக்கீங்க?”
“எங்களுக்கென்ன? நாங்க நல்லாத்தான் இருக்கோம், பணத்தைத் திருப்பிக் குடுக்கிற அளவுக்குப் பெரிய மனுஷன் ஆகிட்டே போல!” அது கேலியா, கிண்டலா என்று இவனுக்கு விளங்கவில்லை. பெரியவரின் மனதிலிருக்கும் கோபத்திற்கு மருந்து போடவேண்டிய கடமைத் தனக்கு இருப்பதை உணர்ந்தவன் அத்தையின் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
“எப்ப இருந்தாலும் குடுக்க வேண்டிய பணந்தானே அத்தை? அதை இவ்வளவு தாமதப்படுத்தினது எங்களோட சுயநலம்.”
“நாங்க யாரும் அப்பிடி உங்களைப் பிரிச்சுப் பார்க்கலைப்பா.” என்றவரின் கண்களில் நீர் திரண்டது. கையில் டீயோடு வந்த சுலக்சனா எதுவும் பேசவில்லை. ஏற்கனவே தன் மகன் தங்களைவிட்டுப் பிரிந்திருக்கிறான் என்ற கோபம் இப்போதெல்லாம் அவருக்குள் முளைவிடத் தொடங்கியிருந்தது.
“எடுத்துக்கோ மீனாட்சி.”
“உங்கப் பையனை நீங்க என்னன்னு ஒரு வார்த்தைக் கேட்க மாட்டீங்களா அண்ணி?”
“நான் யாரைன்னு பார்ப்பேன், அர்ச்சனா எப்பிடி எங்க வீட்டுப் பொண்ணோ அதே மாதிரிதான் வந்தனாவும், எனக்கு ரெண்டு பேருமே ஒன்னுதான், தப்பே பண்ணியிருந்தாலும் ரங்கா எம் புள்ளை, அவனைக் கண்டிக்க முடியும், ஆனா தள்ளி வெக்க என்னால முடியாது.” என்றவர் கணவரையும் ஒரு பார்வைப் பார்த்தார்.
மனைவியின் வார்த்தைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்பது போல மாணிக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இப்போதெல்லாம் மகன் வீட்டிற்கு வந்தால் வெளிநடப்புச் செய்பவர் இன்றைக்கு எழுந்து போகவில்லை. ஒருவேளை மீனாட்சி வந்திருப்பதுதான் காரணமோ என்று சுலக்சனா நினைத்துக் கொண்டார்.
சுலக்சனா மேல் யாரும் கோபப்படவில்லை. நாத்தனாரின் மகள் என்றாலும் மகனுக்கு அவர்கள் அர்ச்சனாவைப் பேசியபோது ஆதரித்தவர் அவர். இங்கே தவறு முழுவதும் ரங்கராஜின் மேல். அவன் அர்ச்சனாவை மறுத்ததற்கு சுலக்சனாவைக் கோபிப்பது நியாயமில்லை என்று புரிந்து கொண்டார்கள்.
“உங்க வீட்டுல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா?” பிடிக்கவில்லை என்றாலும் மருமகன் மேல் அக்கறை இருந்ததால் கேட்டார் மீனாட்சி. அன்று அவர்கள் இருவரையும் கடையில் பாரத்ததாக மகள் வந்து சொல்லியிருந்தாள்.
“அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங்கம்மா, ஏதோ புடவை வாங்க வந்திருப்பாங்க போல.” ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் ரங்கராஜ் மேல் அப்படியொன்றும் அமரக் காதல் இல்லை என்பதால் அர்ச்சனா அந்த நிராகரிப்பிலிருந்து தன்னைச் சுலபமாக மீட்டுக் கொண்டாள். இவன்தான் உனக்கு என்று வீட்டில் சொன்ன அத்தானை அவளுக்கும் பிடித்திருந்தது. அவ்வளவுதான். அவன் தன்னை நிராகரித்து வந்தனாவைத் தெரிவு செய்தது வருத்தமாக இருந்தாலும் அதையே நினைத்துத் தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளும் அளவிற்கு அர்ச்சனா முட்டாள் அல்ல!
“நீங்க சீக்கிரமா அப்பாக்கிட்ட மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லுங்கம்மா.” அர்ச்சனாவின் முடிவு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது. மளமளவென மாப்பிள்ளைப் பார்க்கும் படலம் ஆரம்பித்துவிட்டது. இப்போதும் அது சம்பந்தமாகத்தான் பேச வந்திருந்தார் மீனாட்சி.
“நானும் வந்தனாவும் நல்லா இருக்கோம் அத்தை, அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்போ நீங்க இல்லை, ஆனா அர்ச்சனாவைக் கடையில பார்த்தேன்.”
“ம்… சொன்னா சொன்னா.”
“அத்தை… எம்மேல கோபமா இருக்கீங்களா?” ரங்கராஜ் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான்.
“நான் எதுக்குப்பா உம்மேல கோபப்படப் போறேன்? எனக்கு அந்த உரிமை இருக்கா என்ன?” மூக்கை உறிஞ்சினார் மீனாட்சி. சுலக்சனாவும் மாணிக்கமும் அங்கேதான் இருந்தார்கள். யாரும் எதுவும் பேசவில்லை.
“ஏன் அத்தை இப்பிடியெல்லாம் பேசுறீங்க?” அத்தையின் பேச்சு இவனுக்கும் வருத்தத்தைக் கொடுத்தது.
“உங்க தங்கவேல் மாமாக்கு இருக்கிற உரிமை இனி எனக்கில்லையே ரங்கா.”
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லை, நீங்க எப்பவும் என்னோட அத்தைதான், நான் பண்ணினது தப்புத்தான், எம்மனசுல என்ன இருக்குன்னு நான் உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும், உங்களுக்கு எப்பிடி விளக்குறதுன்னு எனக்குத் தெரியலை, எம்மனசுல என்ன இருக்குன்னு அப்ப எனக்கே தெரியலை அத்தை, அர்ச்சனாவை நான் கல்யாணம் பண்ணியிருந்தா அவ வாழ்க்கையும் நாசமாயிருக்கும், என்னைப் புரிஞ்சுக்கோங்க.”
“கல்யாணம் ஆகியிருந்தா எல்லாம் சரியாகியிருக்கும், ஆனா உனக்கு என்னைவிட உன்னோட மாமன் வீடு பெருசாப் போச்சு.” இந்த வார்த்தைகளில் சுலக்சனாவின் முகம் வாடினாலும் அமைதியாக நின்றிருந்தார். மாணிக்கம் மாத்திரம் மகனை ஒருமுறைக் கூர்ந்து பார்த்தார்.
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை அத்தை, அர்ச்சனாக்கு நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க, உங்க வசதிக்கு ஏத்தமாதிரி பாருங்க, ஆர்த்தி கல்யாணத்தை எப்பிடிப் பண்ணினோமோ அதேமாதிரி அர்ச்சனா கல்யாணத்தையும் ஜமாய்ச்சிடலாம்.”
“நல்லா பேசக் கத்துக்கிட்ட ரங்கா, இப்பவும் ஒரு வரன் வந்திருக்கு.” என்றவர் கண்களைத் துடைத்துக் கொண்டு விவரம் சொன்னார். வெளியூர் மாப்பிள்ளை. ஆனால் பையன் என்ஜினியர். நல்ல வளமான குடும்பம்.
“அர்ச்சனாக்குப் புடிச்சிருந்தா முடிச்சிடலாமே அத்தை.”
“உங்க மாமாவும் அதைத்தான் சொல்றாங்க, நான் உங்கப்பாக்கு விஷயத்தைச் சொல்லத்தான் வந்தேன்.” இன்னும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு மீனாட்சி கிளம்பிவிட்டார். மாணிக்கமும் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே போய்விட்டார்.
“அண்ணா! என்ன மாயம் பண்ணினீங்க? அத்தை அப்பிடியே சமாதானம் ஆகிட்டாங்க! அன்னைக்கு வந்தப்போ ஓன்னு அப்பாக்கிட்ட ஒப்பாரி வெச்சாங்க, இன்னைக்கு என்னடான்னா உங்களைக் கண்டதும் தலைகீழா மாறிட்டாங்க!”
“ஆமா ஷக்தி, ரங்காவைப் பார்த்ததும் எங்க மீனாட்சி திரும்ப ஆரம்பிச்சிடுவாளோன்னு நான் பயப்பிட்டேன், உங்கப்பா வேற இருந்தாரா? எனக்குப் படபடன்னு ஆகிடுச்சு, நல்லவேளை எதுவும் தப்பா ஆகிடல்லை.” சுலக்சனா நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார்.
“இப்பவும் அர்ச்சனா கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லலைன்னா அத்தை இவ்வளவு சீக்கிரமா சமாதானம் ஆகியிருக்கமாட்டாங்கம்மா.”
“அதைச் சொல்லு, ஆனா உங்கப்பா அமைதியா இருந்துட்டாரே? எனக்கு அதுதான் ஆச்சரியமா இருந்துச்சு!” ஆசுவாசமாக உணர்ந்தார்கள் எல்லோரும்.
***
ஒருமாதம் கடந்திருந்தது. அர்ச்சனாவின் கல்யாண வேலைகள் ஜரூராக ஆரம்பித்திருந்தன. மீனாட்சியின் வீடு கல்யாண வேலைகளில் தங்களை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டது. மாணிக்கமும் தங்கை வீட்டிலேயே பெரும்பாலும் நேரம் செலவழித்தார். தன் மகன் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம் என்ற குற்றவுணர்ச்சி அவரை வெகுவாகத் தாக்கியது.
“அப்பா, லிஸ்ட்டைக் கடைல குடுத்துட்டு நாம ஜவுளி வேலையைப் பார்க்கலாம், அவங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு நம்மளைக் கூப்பிடட்டும்.”
“சரிம்மா.” நமச்சிவாயம் தன் மூத்த மகள் ஆர்த்தியோடும் அவள் கணவரோடும் கடைத் தெருவிற்கு வந்திருந்தார். வீட்டில் சில திருத்த வேலைகள் நடப்பதால் மீனாட்சியும் அர்ச்சனாவும் வீட்டிலேயே இருந்தார்கள். வேலைகளைப் பங்குபோட்டுச் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். அப்போதும் முடிக்க வேண்டிய காரியங்கள் தலைக்கு மேல் இருந்தன.
“என்னப்பா அங்க?” ஏதோ சலசலப்புக் கேட்கவும் இவர்கள் எட்டிப் பார்த்தார்கள்.
“ஏம்மா, அது ரங்காவோட சம்சாரமில்லை?” நமச்சிவாயம் கேட்கவும்தான் ஊன்றிக் கவனித்தாள் ஆர்த்தி. அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் வந்தனா அமர்ந்திருந்தாள். மிகவும் களைப்பாக இருப்பது போல சாய்ந்திருந்தாள்.
“வாங்கப்பா, என்னன்னு பார்க்கலாம்.” இவர்கள் அங்கே விரைந்து சென்றார்கள். அது வந்தனாவேதான்.
“வந்தனா, என்னாச்சு?” ஆர்த்தி படபடத்தாள்.
“இங்கதான் எப்பவும் ஷாப்பிங் பண்ணுவாங்க, இன்னைக்கு என்னமோ தெரியலை, கொஞ்சம் மயக்கமா இருக்குன்னு பெஞ்ச்ல உட்கார்ந்துட்டாங்க.” அங்கு வேலை செய்யும் பெண் தகவல் சொன்னாள்.
“ஓ… என்னாச்சு? ஏதாவது குடிக்க வாங்கிட்டு வா ஆர்த்தி.” இது ஆர்த்தியின் கணவர். அவர் ஒரு டாக்டர் என்பதால் சட்டென்று நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டார். உடனேயே தண்ணீர் கொண்டு வந்து பருக வைத்தார்கள்.
“என்னாச்சு மாப்பிள்ளை?”
“டயர்டா இருக்காங்க மாமா.” என்று நமச்சிவாயத்திற்குப் பதில் சொன்ன மருமகன் ஆர்த்தியிடம் ஏதோ சொன்னார்.
“வந்தனா, டேட் கவனிச்சியா? ஏதாவது விசேஷமா?” கணவரின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்த்தி கேட்க நமச்சிவாயத்தின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
“ஆர்த்தி, அந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வாம்மா.” அப்பா சொல்லவும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் மகள்.
“மாப்பிள்ளை, அவங்களைக் கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு மிச்ச வேலையை நாம பார்க்கலாம்.”
“சரி மாமா.” அவர்கள் முடிவெடுத்த போதும் வந்தனா அதற்குச் சம்மதிக்கவில்லை.
“இல்லை பரவாயில்லை, நான் வீட்டுக்குப் போயிடுவேன்.” அவள் சொன்னதை நமச்சிவாயம் காதில் வாங்கவில்லை. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு நேராக மாணிக்கத்தின் வீட்டிற்குப் போனார். ஆர்த்திக்கும் அவள் கணவரிற்கும் நமச்சிவாயத்தின் செய்கை ஆச்சரியத்தைத் கொடுத்தது. நடப்பதை உணர்ந்து கொள்ளும் நிலையில் வந்தனா இல்லை. உடம்பின் சோர்வு ஒருபுறம் என்றால் ஆர்த்தி கேட்ட கேள்வி அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது.
“இறங்கு வந்தனா.” ஆர்த்தி சொன்ன பிறகுதான் சுற்றுப்புறத்தை உணர்ந்தவள் மலைத்துப் போனாள். சுலக்சனா அத்தையின் வீட்டிற்கு முன்பாக நின்றிருந்தது கார்.
“நான்… இங்க…” வந்தனா தடுமாறினாள்.
“ஆர்த்தி, உங்க மாமியைக் கூப்பிடு.” நமச்சிவாயம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுலக்சனா வெளியே வந்துவிட்டார். வந்தவர் வாசலில் நின்றிருந்த வந்தனாவைப் பார்த்ததும் திகைத்துப் போனார்.
“உள்ள வாங்க, வந்தனா…”
“அவங்களுக்கு உடம்புக்கு முடியலை, கொஞ்சம் என்னன்னு பாருங்க.” என்று நமச்சிவாயம் சொல்லவும் ஆர்த்தி, சுலக்சனாவின் காதோடு தன் கணவர் சொன்னதைச் சொன்னாள்.
“என்ன ஆர்த்தி சொல்றே?!”
“தெரியலை மாமி, நீங்க அத்தானைக் கூப்பிட்டு டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போய் செக் பண்ணுங்க, நாங்க கிளம்புறோம்.”
“உள்ள வாங்க எல்லாரும்.”
“இல்லை மாமி, நாங்க வேற வேலையா கடைக்கு வந்தோம், அப்பதான் வந்தனாவைப் பார்த்தோம், அப்பாதான் இங்க கூட்டிட்டுப் போகலாம்னு சொன்னாங்க, நீங்க என்னன்னு பாருங்க.” என்றுவிட்டு அவர்கள் கிளம்ப சுலக்சனாவிற்குக் காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை.
“உள்ள வா வந்தனா.”
“அத்தை… மாமா…”
“அட நீ வேற! உள்ள வாம்மா, எனக்கு இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியலையே ஆண்டவா!” என்றவர் உடனேயே மகனை அலைபேசியில் அழைத்தார். அப்போதுதான் பின்வாசலிலிருந்து வந்த மாணிக்கம் இளையவளைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டார். அவர் வந்ததைப் பெண்கள் இருவரும் கவனிக்கவில்லை.
“ரங்கா! எங்க இருக்கே நீ? இப்பிடித்தான் வந்தனாவைத் தனியா கடைக்கு அனுப்புவியா? நீ உடனே கிளம்பி நம்ம வீட்டுக்கு வா.” அடுத்த முனையில் மகன் என்ன சொன்னானோ,
“மயக்கம் போட்டுட்டாப் போல, நீ சீக்கிரமா வா ரங்கா, ஆர்த்தி வேற என்னெல்லாமோ சொல்றா, எனக்கு என்னப் பண்ணுறதுன்னே தெரியலை.” என்று பேச்சை முடித்தவர் மருமகளிடம் வந்தார்.
“அம்மாடி, உனக்கு என்னடா பண்ணுது? ஆர்த்தி சொன்ன மாதிரி டேட் கவனிச்சியா? தள்ளிப் போகுதா?”
“அத்தை… அது…” அவளுக்கும் அந்த சந்தேகம் இருந்ததால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
“என்னாச்சு சுலோ?” நீண்ட நாட்களுக்குப் பிறகு மனைவியை அழைத்தார் மாணிக்கம். அப்போதுதான் அவரைக் கவனித்த வந்தனா திடுக்கிட்டுப் போய் எழுந்துவிட்டாள்.
“என்னங்க!” அனைத்துக் கோப தாபங்களையும் மறந்த சுலக்சனா கணவரிடம் ஓடிப்போய் அனைத்தையும் சொல்லி முடித்தார். கணவரோடு இருந்த மனஸ்தாபம், அவரோடு சில வாரங்கள் அவர் பேசாமல் இருந்தது என அனைத்தும் மறந்து போனது.
“ஓ…” மாணிக்கமும் எதுவும் சொல்லவில்லை. மனைவி சொன்ன விஷயத்தில் கொஞ்சம் திகைத்தாற் போல நின்றிருந்தார்.
“அம்மா.” என்றபடி உள்ளே வந்த ஷக்தி அங்கே அமர்ந்திருந்த வந்தனாவைப் பார்த்துத் திகைத்துப் போனாள். சற்று அப்பால் நின்றிருந்த அப்பாவைப் பார்த்ததும் அவளுக்கு வேர்த்தது. டியூஷனுக்குப் போய் அப்போதுதான் வீடு திரும்பிய பெண்ணுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
“ஷக்தி, அண்ணியை உன்னோட ரூமுக்குக் கூட்டிட்டுப் போ, இன்னும் கொஞ்ச நேரத்துல அண்ணா வந்திடுவான்.”
“இல்லை அத்தை, நான் வீட்டுக்குப் போறேன்.” இங்கே இன்னும் அவள் இருந்து ரங்கராஜும் வந்துவிட்டால் பெரும் பிரச்சனை ஆகிவிடுமோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது.
“என்ன விளையாடுறியா வந்தனா? இந்த நிலைமைல உன்னை நான் வீட்டுக்கு அனுப்புவேனா? அதுவும் தனியா?”
“நான்… ஷக்தியோட போறேன், நீங்க ஒரு ஆட்டோ புடிச்சுக் குடுங்கத்தை.” அவளுக்கு அங்கு நிற்பதற்கே பயமாக இருந்தது. மாணிக்கம் எந்த நேரம் என்ன சொல்வாரோ என்று பயப்பட்டாள். ரங்கராஜ் வேறு வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அவளுக்குத் தோன்றியது.
“ஷக்தி, உங்கண்ணியை உள்ள கூட்டிக்கிட்டுப் போ.” சொன்னது வேறு யாருமல்ல, மாணிக்கம்தான். அங்கிருந்த பெண்கள் மூவருக்குமே அவரின் பேச்சு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனாலும் சுலக்சனா அத்தனை ஆச்சரியப்படவில்லை.
“உள்ள வாங்கண்ணி.” இதுதான் சந்தர்ப்பம் என்று ஷக்தி அவசர அவசரமாக வந்தனாவை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டாள். எப்போதும் போல இப்போதும் திவ்யாவிற்குத் தகவல் பறந்தது. சரியாக அந்நேரம் மாணிக்கத்தின் அலைபேசி அலறியது. நமச்சிவாயம்தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்க மாப்பிள்ளை.”
“மச்சான், நான் இப்ப பேசுறது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது, ஆனா எம் மனசுல படுறதைச் சொல்றேன், நீங்க கொஞ்சம் அமைதியா கேட்கணும்.”
“ஐயையோ! என்ன மாப்பிள்ளை நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு இல்லாத உரிமையா?”
“அந்த நம்பிக்கைலதான் நான் பேசுறேன், ரங்கா செஞ்சது தப்பா இருக்கலாம், உங்களைக் காயப்படுத்தி இருக்கலாம், ஆனா இது கோபத்தைக் காட்டுற நேரமில்லை மச்சான்.”
“ம்…” மாணிக்கத்தின் குரல் இறுகிப் போனது.
“நம்ம மேலயும் தப்பு இருக்கு, அர்ச்சனாக்கிட்டச் சம்மதம் கேட்ட நாங்க அதை ரங்காக்கிட்டயும் கேட்டிருக்கணும், அப்பிடிக் கேட்டிருந்தா எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது.”
“…”
“அன்னைக்கு அந்தப் பேச்சை நான் எடுக்காம இருந்திருந்தா ஒருவேளை உங்களையெல்லாம் ரங்கா சமாதானம் பண்ணி எல்லாத்தையும் நல்ல விதமாப் பண்ணியிருக்கலாம், நடுவுல நாந்தான் அவசரப்பட்டுட்டேன், அந்தக் குற்றவுணர்ச்சி எனக்கு இன்னமும் இருக்கு மச்சான்.”
“என்ன மாப்பிள்ளை நீங்க போய் இப்பிடியெல்லாம் பேசிக்கிட்டு.”
“இல்லை மச்சான், இதால நீங்க இழந்தது அதிகம், உங்களுக்கு இருக்கிறது ஒரே பையன், அவனோட கல்யாணத்தை உங்களால பார்க்க முடியாம போச்சு, ரங்காவுக்கும் அவனோட கல்யாணத்தைப் பத்தி நிறையக் கனவுகள் இருந்திருக்கும், அதையெல்லாம் நான் கெடுத்துவிட்ட மாதிரி எனக்குக் கஷ்டமா இருக்கு.”
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லை மாப்பிள்ளை, நீங்க வருத்தப்படாதீங்க.”
“நான் வருத்தப்படக் கூடாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா இனியும் ரங்காவையும் அவனோட மனைவியையும் தள்ளி வெக்காதீங்க, நடந்தது நடந்து போச்சுன்னு அவங்களை மன்னிச்சிருங்க மச்சான், உங்க மருமகள் வேற இப்போ மாசமா இருக்கும் போல, இந்த நேரம் கோபத்தைக் காட்டி நாம என்னத்தைக் காணப்போறோம் சொல்லுங்க?” மாணிக்கம் இங்கே பெருமூச்சு விட்டார்.
“கோபத்தை விட்டுருங்க மச்சான், ஆயிரந்தான் இருந்தாலும் அவங்க நம்ம பசங்க, நீரடிச்சு நீர் விலகாது, எம் மனசுக்குப் பட்டதை நான் சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்.” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார். சரியாக அந்நேரம் ரங்கராஜ் வீட்டினுள் நுழைந்தான்.
“அம்மா!”
“ரங்கா! வா வா!”
“என்னாச்சு? வந்தனா எங்க?!” ரங்கராஜ் வந்துசேர அவன் பின்னோடு திவ்யாவும் வந்துவிட்டாள். கொஞ்ச நேரத்திலேயே வீடு பரபரப்பாக மாறிப்போனது.
“ஒன்னுமில்லை ரங்கா, வந்தனாவை டாக்டர்கிட்டக் கூட்டிக்கிட்டுப் போகலாம்.” என்ற பெண்கள் அதன்பிறகு நிலைமையைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். ரங்கராஜிற்குக் கண்களைக் கட்டிக் காட்டில் விட்டால் போல இருந்தது. வந்தனாவிற்கு உடம்பிற்கு முடியவில்லை என்ற நினைவே அவனைக் கவலைக்குள்ளாக்கப் போதுமானதாக இருந்தது.
தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த லேடி டாக்டரிடம் மருமகளை அழைத்துச் சென்றார் சுலக்சனா. கூடவே திவ்யா. அம்மாவும் அக்காவும் கூட சென்றிருந்ததால் ரங்கராஜ் வாசலிலேயே நின்று கொண்டான். படபடப்பாக இருந்தது. பரீட்சைகள் அனைத்தும் முடிந்து பிரியாவிடை நிகழ்வுகளும் சிறப்பாக நடந்திருந்ததால் வந்தனா இப்போதெல்லாம் வீட்டில்தான் இருக்கிறாள். சும்மா இருப்பதற்குச் சோம்பலாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வெளி வேலைகள் சிலவற்றை அவள்தான் பார்க்கிறாள்.
பல்கலைக்கழகத்திற்குத் தினமும் போய்வந்த பெண்ணுக்கு வீட்டில் சும்மா இருப்பது கஷ்டம்தானே என்று அவனும் சம்மதித்திருந்தான். இன்றைக்குக் கடைக்குப் போய் இந்த வாரத்திற்கான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வருவதாகச் சொல்லவும் ரங்கராஜும் பணம் கொடுத்துவிட்டு அப்போதுதான் ஹோட்டலுக்குப் போயிருந்தான். வந்த கொஞ்ச நேரத்திலேயே அம்மா அழைத்து இப்படிச் சொல்லவும் பதறிக்கொண்டு ஓடிவந்தான்.
“என்னாச்சும்மா?” டாக்டரைப் பார்த்துவிட்டு வந்த அம்மாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. திவ்யாவும் தம்பியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“கன்கிராட்ஸ்டா ரங்கா! ரொம்ப சந்தோஷமா இருக்கு!”
“திவ்யா, டாக்டர் என்ன சொன்னாங்க?” இவனுக்கு இன்னும் பதட்டம் குறையவில்லை.
“ம்… சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னாங்க, டேய்! வந்தனா உண்டாகி இருக்கா, நீ அப்பா ஆகப்போறேடா!” மகள் சொன்ன தினுசில் சுலக்சனா வாய்விட்டுச் சிரித்தார்.
“யாரும்மா இவன்? இவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லுறோம், இன்னும் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிற்கிறான்!” உண்மையிலேயே ரங்கராஜ் அப்படித்தான் விழித்துக்கொண்டு நின்றான். மனைவி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள் என்று தெரிந்ததும் அவனுக்கும் ஓரளவு விஷயம் புரிந்துதான் இருந்தது. இந்த மாதம் அவளது தேதி தள்ளிப் போவதை அவனும் கவனித்திருந்தான். ஆனாலும் ஏதோவொரு பதட்டம் அவனைத் தொற்றிக்கொண்டது.
“என்னப்பா ரங்கா? ஏன் பதட்டமா இருக்கே?” கனிவோடு கேட்ட அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“தெரியலைம்மா, என்னமோ ஒரு பதட்டம்.” என்றவன் வந்தனாவைப் பார்த்தும் சிரித்தான். அந்தச் சிரிப்பு அத்தனை அழகாக இருந்தது.
“வாங்க, வீட்டுக்குப் போகலாம்.” சுலக்சனா சொல்லவும் சட்டென்று வந்தனா கணவனைப் பார்த்தாள். அமைதியாக இரு என்பதுபோல சமிக்ஞை செய்தவன் எல்லோரோடும் வீட்டிற்கு வந்தான். வந்ததும் வராததுமாக விஷயம் பகிரப்பட ஷக்தி குதிக்கத் தொடங்கிவிட்டாள். ஏற்கனவே திவ்யாவின் மகள் இருக்கிறாள். இப்போது இன்னுமொரு புதுவரவு என்றதும் அவளுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
“அண்ணாக்குப் பையன்தான் பொறக்கணும், அப்பதான் நல்லா இருக்குமில்லைம்மா?”
“ஆமா ஷக்தி, ஏற்கனவே நம்ம வீட்டுல ஒரு குட்டிப் பாப்பா இருக்கு, இப்ப இன்னொன்னும் வந்தா சூப்பரா இருக்கும், வீடே கலகலன்னு இருக்கும்.”
“நம்ம வீடு நர்சரி மாதிரி இருக்கப் போகுது ஷக்தி.” அம்மாவும் பெண் பிள்ளைகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். மாணிக்கம் சோஃபாவில்தான் அமர்ந்திருந்தார். முகத்தில் சந்தோஷத்தின் சாயல் தெரிந்தது. என்னதான் மகன் மேல் கோபம் இருந்தாலும் இப்போது அவனுக்கொரு குழந்தை வரப்போகிறது என்று தெரிந்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது.
“அம்மா, நாங்க கிளம்புறோம்.”
“எங்கப்பா?” இப்போது வீடே நிசப்தமாகிப் போனது. ரங்கராஜ் அம்மாவைக் கூர்மையாகப் பார்த்தான். இது என்ன கேள்வியென்று நீ என்னைக் கேட்கிறாய் என்பது போல இருந்தது அவன் பார்வை.
“வேற எங்கம்மா நான் போவேன்? எங்க வீட்டுக்குத்தான்.”
“அப்ப இது யாரோட வீடு?” கண்கள் கலங்க அம்மா கேட்கவும் ரங்கராஜ் பெருமூச்சு விட்டான்.
“அம்மா… வேணாம், மனசு சந்தோஷமா இருக்கு, இப்ப இந்த வீட்டுல இன்னொரு பிரச்சினையை உண்டுபண்ணி அந்த சந்தோஷத்தை நான் கெடுத்துக்க விரும்பலை.”
“எப்பவுமே உனக்கு உன்னோட சந்தோஷம் மட்டுந்தான் முக்கியமில்லை?!” மாணிக்கம் குரலை உயர்த்திக் கேட்கவும் அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள். அப்படி அவர் நேரடியாக மகனிடம் பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
“உங்களுக்கு அப்பிடி என்ன குறை வெச்சுட்டு என்னோட சந்தோஷத்துக்குப் பின்னால நான் போயிட்டேன்பா?” மகனும் விடவில்லை. அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்டான்.
“நான் சொன்னதை நீ கேட்கலையே!”
“ஆமா, எனக்குப் புடிக்காத ஒரு விஷயத்தை நீங்க பண்ணச் சொன்னீங்க, ஹோட்டல் விஷயமா இருந்தா எனக்கு அதைப்பத்திப் கவலையில்லை, எனக்குப் புடிக்காட்டியும் அப்பாக்குப் புடிச்சிருக்கேன்னு பண்ணலாம், ஆனா இது என்னோட வாழ்க்கைப்பா, எனக்குப் புடிச்சதைத்தான் என்னால பண்ண முடியும், உங்களுக்கு உங்களோட தங்கச்சி பொண்ணுதான் கண்ணுக்குத் தெரிஞ்சா, நீங்க என்னைப்பத்தி யோசிக்கலை, அந்த இடத்துல என்னால வேற என்ன பண்ணமுடியும்?”
“எனக்கு அர்ச்சனா வேற, நீ வேற இல்லை.” இந்தப் பேச்சுக்கள் அனைத்தும் வந்தனாவின் முன்பாகவே நடந்தன.
“உங்களுக்கு என்னைவிட அர்ச்சனாதான் முக்கியமா போயிட்டாப்பா, மீனாட்சி அத்தையோட வீடு முக்கியந்தான், அதுக்காக ஏம்பா என்னை விட்டுக்குடுக்கிறீங்க? என்னைவிட உங்களுக்கு அவங்கதான் முக்கியமா? அன்னைக்கு என்ன ஏதுன்னு கேட்காம கை நீட்டுறீங்க, வீட்டைவிட்டு வெளியே போன்னு சொல்றீங்க! எப்பிடிப்பா உங்களால அப்பிடிச் சொல்ல முடிஞ்சுது?”
“ரங்கா… போதும் நிறுத்து.” தம்பியை அடக்கிய திவ்யா கண்களால் வந்தனாவைக் காட்டினாள். கண்களில் நீர் திரள நின்றிருந்தது பெண். ரங்கராஜ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“வந்தனா, நீ வா எங்கூட.” என்ற திவ்யா அவளைத் தம்பியின் அறைக்கு அழைத்துச் சென்றாள். கூடவே அவளோடு ஷக்தியும் போனாள்.
“தம்பி… நடந்ததை மறந்திடு, கஷ்டந்தான், நான் இல்லேங்கலை, ஆனா எதையும் மனசுல வெச்சுக்கிட்டு எங்களுக்குக் கிடைக்க இருக்கிற சந்தோஷத்தை மறுத்துடாதப்பா.”
“எப்பிடிம்மா? என்னையே மதிக்காத இந்த வீட்டுல வந்தனாக்கு என்ன மரியாதை இருக்கப் போகுது? அந்தப் பொண்ணு என்னை நம்பி வந்திருக்கா, அப்பா சம்மதிக்கலை எங்கிற ஒரே காரணத்துக்காக உங்கண்ணன் எங்களை நிமிர்ந்தும் பார்க்க மாட்டேங்கிறாரு, இந்த நிலைமையில நானாவது அவளைத் தாங்க வேணாமா?”
“நான் தாங்கிறேன்டா, உம் பொண்டாட்டியை யாரு தாங்காட்டியும் நான் தாங்கிறேன், உன்னோட கல்யாணத்தைத்தான் எங்களால பார்க்க முடியலை, உனக்குன்னு ஒருத்தி வந்தா அவளைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கணும்னு எவ்வளவோ ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கலை, இப்பவாவது எல்லாத்தையும் மறந்துட்டு எங்கூட இருடா ராஜா, அம்மா சொல்றதைக் கேளுடா தங்கம்.” இதற்கு மேல் அந்த மகனால் என்ன சொல்ல முடியும்?!
அப்பாவைப் பார்த்தான் மகன். தலையைக் குனிந்தபடி அப்படியே அமர்ந்திருந்தார். எதுவும் பேசாமல் தனது அறைக்கு வந்தான் ரங்கராஜ். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அம்மாவின் அழுகை அவனுக்குக் கவலையைக் கொடுத்தது!






புது உறவு பிரிந்தவர்களை புதுபிக்கட்டும்… 🤩🤩🤩
அழகான பதிவு❤️
Very nice.
அருமையான பதிவு