அத்தியாயம் 9
அத்தியாயம் 09
ரங்கராஜும் வந்தனாவும் கடைக்கு வந்திருந்தார்கள். பரீட்சைகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்தன. அடுத்தவாரம் பிரியாவிடை விழா இருந்தது. அதற்குப் பெண்கள் எல்லாரும் புடவை உடுத்துவதெனத் தீர்மானம் பண்ணியிருந்தார்கள்.
“வந்தனா, உனக்குப் புதுசா சாரி வாங்கலாம்.” என்று அவன்தான் கடைக்கு அழைத்து வந்திருந்தான். இருவருமாகச் சேர்ந்து அழகானதொரு புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
“வந்தனா, இதைப்பாரு.” புடவைப் பிரிவிற்குச் சற்று அப்பால் முழு நீளத்தில் கவுன் வைத்திருந்தார்கள். அதிலொன்றைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தான்.
“இது உனக்கு நல்லா இருக்கும், இதையும் எடுத்துக்கோ.” அவன் சொல்லவும் சரியென்றவள் அவள் எப்போதும் எடுக்கும் மீடியம் சைஸை தேர்வு செய்தாள்.
“ம்ஹூம், ஸ்மால்தான் சரியா இருக்கும் வந்தனா.”
“நான் எப்பவும் மீடியம்தான் எடுப்பேங்க.” உடம்போடு ஒட்டியது போல எப்போதும் ஆடைகளைத் தெரிவு செய்யமாட்டாள்.
“ஃபிட் ஆன் பண்ணிப்பாரு.” தலையை ஆட்டியவள் ஆடையோடு உள்ளே போய்விட்டாள். அவன் சொன்னது சரியாகத்தான் இருந்தது. அவன் சொன்ன அளவுதான் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. வந்தனாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. அத்தானின் கண்கள் மிகவும் துல்லியமாகத்தான் வேலை செய்கின்றன என எண்ணியபடி வெளியே வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.
வெளியே காத்திருந்த கணவனோடு அர்ச்சனா நின்றிருந்தாள். இருவரும் மிகவும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது. அர்ச்சனா மிகவும் உரிமையோடு நின்று பேசிக்கொண்டிருந்தது இவளை இலேசாகப் பாதித்தது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்திருந்த ஆடையோடு அப்படியே நின்றிருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். அவர்கள் பேசி முடிப்பது போல இவளுக்குத் தோன்றவில்லை. எத்தனை நேரம்தான் இவளும் இப்படியே நிற்பது? ஒருகட்டத்தில் சலிப்புத் தோன்றவே அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தாள். அப்போதுதான் ரங்கராஜ் மனைவியைத் திரும்பிப் பார்த்தவன்,
“வா வந்தனா.” என்றான். அர்ச்சனாவும் இவள் புறம் திரும்பியவள் கடமைக்காக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு,
“நான் கிளம்புறேன் அத்தான்.” என்று போய்விட்டாள். வந்தனாவிற்கு ஒருமாதிரியாகிப் போனது. என்ன இந்தப் பெண் இப்படி நடந்து கொள்கிறது?! தன்னிடம் ஒரு வார்த்தைப் பேச அவளால் முடியாதா?
“நான் சொன்ன சைஸ் கரெக்டா இருக்கில்லை?”
“ம்…” கணவனுக்குப் பதில் சொன்னாலும் இவள் பார்வைத் தங்களைவிட்டுப் போன பெண்ணையே தொடர்ந்தது. வாங்கிய பொருட்களுக்குரிய பணத்தைச் செலுத்திவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். அர்ச்சனாவைப் பற்றி ரங்கராஜும் இவளிடம் பேசாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
“வேற ஏதாச்சும் வாங்கணுமா வந்தனா?”
“இல்லைங்க.” என்றவள் பைக்கில் ஏறி அமரந்து கொண்டாள். இது போலான இருவருக்குமான தனிப்பட்ட பிரயாணங்களை அவள் மிகவும் ரசிப்பாள். சொல்லப்போனால் ஒரு காலத்தில் இதற்காக அவள் ஏங்கியிருக்கிறாள். ஆனால் இன்றைக்கு மனம் அதில் லயிக்க மறந்தது.
ஏன் அர்ச்சனா இன்றைக்கு அப்படி நடந்து கொண்டாள்? ரங்கராஜ் அவளுக்குத்தான் என்று இரு குடும்பமும் முடிவு செய்திருந்தது உண்மைதான். அவன் அவளை மறுத்தது நிச்சயமாக அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அந்த வருத்தத்தை எதற்காக அந்தப் பெண் என்னிடம் காட்டுகிறாள்?! அவளை மறுத்த அத்தானோடு பேச முடிகிறது, என்னோடு பேச முடியவில்லையா? பேச வேண்டாம், ஒரு புன்னகைக்குக் கூடவா பஞ்சம்?!
அந்தப் பெண்ணையாவது இவள் கருத்தில் கொள்ளாமல் விடலாம். இவனுக்கு என்னவானது? தன் அத்தைப் பெண்ணைப் பற்றி எதுவும் பேசவில்லையே! ஒரு வார்த்தை அந்தப் பெண்ணை இவளோடு பேச வைத்திருக்கலாமே? அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே இவள் அமைதியாக ஒதுங்கி நின்றிருந்தாள். ஒருவேளை அப்படி நாகரிகமாக நடந்து கொள்ளாமல் இடையில் புகுந்திருக்க வேண்டுமோ?
கற்பனைக் குதிரை எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தது. பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவனின் முகமும் யோசனையிலேயே இருந்தது. கணவன் தன்னைவிட்டுத் தொலைதூரம் போனது போல உணர்ந்தாள் பெண். எப்போதும் பைக்கில் ஏறினால் கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் அமர்வாள்.
“கவனம்! விழுந்திடப்போறே.” என்று கேலி பண்ணுவான். தோளைப் பிடித்துக்கொள் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டாள். ஆனால் இன்றைக்கு அந்த நொடி அவனைத் தொடவேண்டும் போல தோன்றியது. அவன் தோளில் வலது கரத்தை வைத்தாள். சட்டென்று அவன் அவளைப் பார்ப்பது பக்கக் கண்ணாடியில் தெரிந்தது. அவளுக்கு அது போதவில்லை. தோளில் இருந்த கை இப்போது அவன் இடுப்பைச் சுற்றி வயிற்றைப் பிடித்தது. பைக் கொஞ்சம் தடுமாற ஓரமாக நிறுத்தினான் ரங்கராஜ்.
“வந்தனா! என்னாச்சு?”
“என்னத்தான்?” அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்தாலும் தெரியாதது போல கேட்டாள்.
“நீ இப்பிடிப் புடிச்சா நான் எப்பிடி பைக்கை ஓட்டுறது?”
“எப்பவும் நீங்கதானே என்னைப் புடிச்சுக்கோன்னு சொல்லுவீங்க?”
“புடிக்கச் சொன்னேன்தான், அதுக்காக? இது ரோட்டு, அது புரியுதா உனக்கு?”
“எம் புருஷனை நான் எங்க வெச்சு எப்பிடிப் புடிச்சாத்தான் என்ன?” அந்தக் கேள்வியில் அவன் திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தான்.
“உனக்கு என்னாச்சு?”
“எனக்கு ஒன்னும் ஆகலை, உங்களுக்குத்தான் உங்க அத்தைப் பொண்ணைப் பார்த்ததும் என்னவோ ஆகிப்போச்சு.” அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“இப்போ எதுக்கு அழுறே? அப்பிடி என்ன ஆகிப்போச்சுன்னு அர்ச்சனாவை இழுக்கிறே?”
“ஒன்னுமில்லை, நாம வீட்டுக்குப் போகலாம்.” என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தான் அழுவதைக் கண்டால் இன்னும் ஏதாவது சொல்வானோ என்று எண்ணி முகத்தை அவன் காணாமல் மறைத்துக் கொண்டாள்.
வீட்டிற்கு வந்த பின்பும் வந்தனா கணவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இன்றைக்கு நடந்த நிகழ்வு அவளுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்திருந்தது. சாதாரணமாக அந்தப் பெண் ரங்கராஜுடன் பேசியதை இவளால் தாங்க முடியவில்லை. ஒருவேளை கணவன் இவளிடம் சமாதானமாகப் பேசியிருந்தால் இவளும் கவலைப்படாமல் போயிருப்பாளோ என்னவோ. வீட்டிற்கு வரும் வழியில் அவன் முகத்தில் அடித்தாற் போல பேசியது இன்னும் வேதனையாக இருந்தது.
கல்யாணமான இத்தனை நாட்களில் கணவன் அவளைக் கடிந்து பேசியதில்லை. அன்றைக்கு ஒருநாள் மீனாட்சி அத்தையின் வீட்டுப் பேச்சு வந்தபோதும் கோபமாகப் போனானே தவிர இவளைப் பேச்சால் காயப்படுத்தவில்லை. அவள் சொன்ன ஒரேயொரு வார்த்தைக்காகக் கடனே வாங்காதவன் நண்பனிடம் கை நீட்டிப் பணம் வாங்கியிருந்தான். அப்படிப்பட்டவன் இன்றைக்கு இப்படிப் பேசியது அவளை மிகவும் வருத்தியது. தன்னை ஒதுக்கி வைத்தாற் போல உணர்ந்தாள்.
“வந்தனா, டீ போடு.” ஹாலில் இருந்தபடி அவன் குரல் கொடுக்கவும் டீ தயாரித்தவள் அதைக் கொண்டுபோய் காஃபி டேபிளில் வைத்தாள். எப்போதும் கையில் கொடுப்பவள் இன்றைக்கு இப்படிச் செய்யவும் ரங்கராஜின் பார்வை உயர்ந்தது. அவன் பார்வையைத் தவிர்த்தாள் பெண்.
“வந்தனா, உட்காரு!” அதட்டலாக வந்தது குரல். அவனைப் பாராமலேயே அங்கிருந்த இன்னொரு சோஃபாவில் அமர்ந்தாள்.
“என்னாச்சு உனக்கு? அர்ச்சனாவோட நான் பேசுறதுல உனக்கு என்ன பிரச்சினை?”
“அதே அர்ச்சனாக்கு என்னோட பேசுறதுல என்னத்தான் பிரச்சினை?” சட்டென்று அவள் கேட்ட விதத்தில் இவன் திகைத்துப் போனான். மனைவி இப்படியெல்லாம் தன்னிடம் பேசுபவள் கிடையாது. அப்படியே ஏதாவது தவறாகப் பேசிவிட்டாலும் அவனிடம் பல முறை மன்னிப்புக் கேட்பாள், வருந்துவாள்.
“அவங்க உங்க அத்தைப் பொண்ணுதான், நான் இல்லேங்கலை, ஆனா நான் இப்போ உங்கப் பொண்டாட்டி, அவங்க உயரத்துக்கு நான் இல்லேன்னாலும் உங்க பொண்டாட்டிக்குரிய மரியாதையை அவங்க தந்துதான் ஆகணும்.”
“அதான் தெரியுதில்லை நீதான் என்னோட பொண்டாட்டின்னு? அப்போ எதுக்கு ஒதுங்கி நின்னே? வந்து பேச வேண்டியதுதானே?”
“அது ஒரு மரியாதைக்கு ஒதுங்கி நின்னேன், என்னவோ என்னைப் பார்க்காத மாதிரி அவங்க பாட்டுக்குப் போறாங்க, என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க அவங்க மனசுல?”
“அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு எப்பிடித் தெரியும்?”
“அவங்க மனசுல என்ன வேணா இருந்துட்டுப் போகட்டும், ஆனா நீங்க இல்லாம இருந்தா சரி!” இதுவரை இத்தனை சத்தமாக வந்தனா பேசி ரங்கராஜ் கேட்டதில்லை. அதிலேயே அவன் திடுக்கிட்டு அமர்ந்திருந்தான் என்றால் அவள் பேசிய வார்த்தைகள் அவனை இன்னும் வியப்பிற்கு உள்ளாக்கி இருந்தன.
“நான் நடு ரோட்டுல உங்களைத் தொட்டா உங்களுக்கு வலிக்குதோ? ஏன்? இத்தனை நாளும் வலிக்காதது இன்னைக்கு வலிக்குது? அவங்களைப் பார்த்ததும் வலிக்குது?” மாடிப் படிகளில் ஏறியவள் அங்கேயே நின்றபடி மீண்டும் சத்தமாகக் கேட்கவும் மனைவியை விசித்திரமாகப் பார்த்தான் ரங்கராஜ்.
‘இவளுக்கு இன்றைக்கு என்னவானது? நான் அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டேன்?!’ கத்தி முடித்தவள் தடதடவென படிகளில் ஏறி மேலே போய்விட்டாள். சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் இளையவன். மனைவியின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று அவனுக்குப் புதிதாக இருந்தன. வந்தனா இப்படி என்றைக்கும் நடந்ததில்லை. இவள் மனதில் இப்போது என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது?!
சற்று நேரம் அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டு மனைவியின் நடவடிக்கைகளை மீட்டிப் பார்த்தான். அர்ச்சனாவைப் பார்க்கும் வரை நன்றாகத்தானே இருந்தாள். அதன்பிறகு என்னவானது இவளுக்கு? திருமணப் பேச்சு இருந்தாலும் நான் காதலித்தது இவளைத்தானே! அது இவளுக்கும் தெரியும். அப்படியிருந்தும் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாள்?!
இன்றுவரை அவளாக அவனைத் தொட்டதில்லை. தித்திக்கும் இரவுகளில் கூட ஓர் முத்தத்திற்கும் அவளிடம் கெஞ்ச வேண்டும். அப்படியானவள் இன்றைக்கு நடுவீதியில் அவனை அணைத்த போதே அவனுக்குப் புரிந்திருக்க வேண்டுமோ? கை பொம்மையைக் களவு கொடுத்த பிள்ளை போல எதற்காக இவள் கிடந்து இந்தப்பாடு படுகிறாள்?!
நிதானமாகச் சிந்தித்த போது இவள் செய்கைகள் கோபத்தை உண்டு பண்ணுவதற்குப் பதிலாக சிரிப்பை வரவைத்தது. சாதாரணமாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுப் போயிருந்தாள் அர்ச்சனா. நின்று வந்தனாவிடமும் அவள் பேசியிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய அவளுக்கு மனது வரவில்லைப் போலும். என்னதான் இருந்தாலும் தனக்கென்று முடிவாகியிருந்த அத்தானை இந்தப் பெண் தட்டிக்கொண்டு போய்விட்டாள் என்ற நினைப்பு அர்ச்சனாவிற்கு இருக்கும்தானே! அதனால்தான் வந்தனாவிடம் பேசவில்லை என்று இவன் நினைத்துக் கொண்டான். ஆனால் இவள் அதற்கு என்னவெல்லாம் பேசுகிறாள்?!
அர்ச்சனாவின் மனதில் இன்னும் நான் இருப்பதாக நினைக்கிறாளா?
அர்ச்சனாவைக் கண்டவுடன் இவள் தொடுவது எனக்குப் பிடிக்கவில்லையாமா?! பக்கென்று சிரிப்பு வரவும் மாடிக்குப் போனான். அவளறையில் நின்றபடி என்னமோ செய்து கொண்டிருந்தாள். உள்ளே போனவன் அவளைத் தடாலடியாகத் தன் புறம் திருப்பினான்.
“அத்தான்!” அதிர்ந்து போனவள் அவன் மார்பிலேயே முட்டி நின்றாள்.
“நீ தொட்டா எனக்கு வலிக்குமா? எங்க இப்ப தொடு என்னை.” என்றவன் வலுக்கட்டாயமாக அவள் கரத்தை எடுத்து அவன் இடுப்பில் வைத்தான்.
“விடுங்கத்தான்!” கையை உதறினாள் பெண்.
“எதுக்குடீ விடணும், அவளைப் பார்த்த உடனேயே எனக்கு நீ தொட்டா வலிக்குதா? நான் அப்பிடிச் சொல்லவே இல்லையே! அவளைப் பார்த்துட்டுத்தானே இப்ப வந்திருக்கேன், இன்னைக்கு முழுக்க என்னை நீ தொடணும், எனக்கு எங்க வலிக்குதுன்னு பார்ப்போம்.” என்றவன் அவளை அள்ளிக்கொண்டு அவனறைக்குச் சென்றான். கோபத்தில் இருந்த பெண் திமிறிப் பார்த்தாள். அவனிடம் அவள் சாகசம் பலிக்கவில்லை.
“என்னை இப்போ நீ தொடணும்! இல்லைன்னா நடக்கிறதே வேற!” என்றவன் செய்ய ஆரம்பித்த லீலையில் இவள் கையை இழுத்துக் கொண்டாள்.
“வாய் மட்டும் அவ்வளவு பேசுது, நடுரோட்டுல யாராவது பார்த்துருவாங்கன்னு சொன்னா உனக்கு அவ்வளவு கோபம் வருது, எம் புருஷனை எப்பிடி வேணும்னாலும் தொடுவேன்னு சொன்னே! இப்ப தொடேன்டீ! யாரு வேணாம்னா!” அவள் சொன்னதையே சொல்லிச் சொல்லி அவளை ஒருவழி பண்ணிக்கொண்டிருந்தான் கணவன். வந்தனாக்கு வார்த்தைகள் வரவில்லை. அவள் பேசிய வார்த்தைகள்தானே. எதை மறுக்க முடியும்?
“அத்தான் ப்ளீஸ்…” அவள் எவ்வளவு கெஞ்சியும் அவன் விடவில்லை.
“நைட்டுக்கு இன்னும் டின்னர் பண்ணலை அத்தான்.”
“ஃப்ரிட்ஜில மாவு இருக்கு, தோசை ஊத்திக்கலாம்.” என்றவன் அவளுக்குள் கரைய ஆரம்பித்திருந்தான்.
“மணி இப்பதான் ஏழு.”
“இருக்கட்டுமே… ஏன்? ஏதாவது நல்ல நேரம் பார்க்கப் போறியா? எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரந்தான்.” என்றவன் இதுவரைத் தாண்டாத எல்லைகளைத் தாண்டத் தொடங்கியபோது,
“அத்தான்!” என்றாள் வந்தனா மிரண்டு போய்.
“அத்தான்தான்! உன்னோட அத்தான்தான், அத்தானோட ஆட்டத்தை நீ இன்னும் முழுசா பார்க்கலைல்லை? இன்னைக்குப் பாரு, அத்தான் மனசுல நீ எவ்வளவு தூரம் ஆழமா இருக்கேன்னு இன்னைக்குப் பாரு!” என்றவன் அன்றைக்கு ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்தான். வந்தனா ஓய்ந்து போனாள். இடைவிடாது இனிக்க இனிக்க அவன் கொடுத்த இதழ் முத்தத்தில் அவள் இதழ்கள் வலித்தன! சேர்த்தணைத்த உடல் சோர்ந்து போனது.
“வந்தனா…” அழைத்த பின்புதான் அவளின் சோர்ந்த தோற்றம் அவன் கண்ணில் பட்டது. மனது நிறைந்து போயிருந்தது. மனதிலும் உடலிலும் அப்படியொரு பரவசம்! கொஞ்சம் அதிகமாகத்தான் அவளை வருத்திவிட்டோமோ என்று நினைத்தவன் அவள் நெற்றியில் கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான். உண்மையிலேயே அவனுக்கு அப்போது பசித்தது. ஆனாலும் அவளைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் தானே எழுந்து கிச்சனுக்குப் போனான்.
வந்தனா அமைதியாகக் கட்டிலில் கிடந்தாள். அவன் அழைத்தது, எழுந்து வெளியே போனது எல்லாம் தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் அசையாமல் படுத்திருந்தாள். இன்றைக்கு அவள் பார்த்த ரங்கராஜ் முற்றிலும் வேறாக இருந்தான். அன்றைக்கு அவன் சொன்னதைப் போல படிக்கும் பெண் என்பதால்தான் இத்தனை நாளும் அவன் ஆசைகளுக்குக் கடிவாளம் போட்டு வைத்திருந்தானா?
கீழே கிச்சனில் அவன் எதையோ உருட்டும் சத்தம் கேட்டது. என்ன செய்கிறான்? ஆடையைத் தேடி எடுத்தவள் தன்னைச் சீர்பண்ணிக் கொண்டாள். எழுந்து வெளியே போகலாம் என்று அவள் நினைத்த போது அவன் உள்ளே வந்து கொண்டிருந்தான். கையில் ப்ளேட் இருக்க ஆவி பறந்து கொண்டிருந்தது.
“எந்திரி வந்தனா.” என்றவன் அவளருகில் வந்து உட்கார்ந்தான். நான்கைந்து தோசைகள் தட்டிலிருந்தன.
“அது பழைய சட்னி, நான் புதுசா ஏதாவது பண்ணுறேன்.” ஃப்ரிட்ஜில் இருந்ததை எடுத்து வந்திருந்தான்.
“பரவாயில்லை, இதை இப்போ சாப்பிடலாம், எனக்குப் பசிக்குது.” என்றவன் தானும் உண்டு அவளையும் உண்ண வைத்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல் உண்டவன் மீண்டும் கீழே சென்று கை கழுவிக்கொண்டு வந்தான். வந்தனா இப்போது அவனுக்கு முதுகுகாட்டிச் சாய்ந்திருந்தாள். ஒரு புன்னகையோடு அவளருகில் படுத்தவன் அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.
“கோபமா?” அவன் குரலில் அத்தனை நகைப்பு இருந்தது.
“அர்ச்சனா கூட நான் பேசினா உனக்கு இவ்வளவு கோபம் வருமா? சண்டையெல்லாம் போடுறே? என்னை மிரட்டுறே? எனக்கு அவளைப் புடிச்சிருக்கா? அவளைப் புடிச்சிருந்தா உன்னை ஏன்டீ கட்டுறேன்?” பெண்ணின் இடையை இவன் கரம் வளைத்து இறுக்கியது.
“ஸ்…” அவளுக்கு வலித்தது.
“இது உனக்குத் தேவையா? தேவையில்லாம என்னை உசுப்பேத்திவிட்டு வலியைத் தேடிக்கிறே.” என்றவன் அவள் முகம் பார்க்க வசதியாகப் படுத்துக்கொண்டான். வந்தனா அவன் கண்களைத் தவிர்த்தாள். சற்றுமுன் நடந்த நிகழ்வுகளில் வெட்கம் வந்தது. ரங்கராஜின் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிந்தன.
“அதான் உன்னோட படிப்பு கிடிப்பு எல்லாம் முடிஞ்சு போச்சில்லை, ஜாலியா ஷாப்பிங் முடிச்சுட்டு இன்னைக்கு நைட் உங்கூட ஒரு ஆட்டம் போடணும்னு ஏற்கனவே நான் ப்ளான் பண்ணிட்டேன்.”
“அதுக்காக இப்பிடியா?”
“ஹேய்! இன்னும் எத்தனை நாளைக்கு அம்மிணியை இப்பிடியே நோகாம வெச்சிருந்து நான் வேடிக்கைப் பார்க்கிறது? படிக்கிற பொண்ணைத் தொல்லைப்பண்ணக் கூடாதுன்னுதான் இத்தனை நாளும் அமைதியா இருந்தது, இதுக்கு மேல முடியாதுடீ.” என்றவன் அவள் இதழ்களை உரச ஆரம்பித்தான்.
“வேணாம் அத்தான், வலிக்குது.”
“சாரிடா.” என்றவனின் குரல் கனிந்து போனது.
“ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேனா? நாளைக்கு உனக்கு யூனி இல்லையில்லை? நல்லா தூங்கி ரெஸ்ட் எடு, நான் அம்மாக்கு கால் பண்ணி மதியத்துக்குச் சாப்பாடு அனுப்பச் சொல்றேன், நீ எந்த வேலையும் பண்ணவேணாம்.” என்றவன் அவள் தலையை, தோளை வருடித் தூங்க வைத்தான். சுகமாகக் கண்மூடிக் கொண்டது பெண்.
அடுத்தநாள் காலை அவள் எழுவதற்கு முன்பாக எழுந்தவன் அவள் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து முடித்திருந்தான். இவள் குளித்துவிட்டு வரும்போது டீயும் சாண்ட்விச்சும் மேசையில் தயாராக இருந்தன. அவனும் ஹோட்டலுக்குக் கிளம்ப ஆயத்தமாகியிருந்தான்.
“எதுக்கு அத்தான் இதெல்லாம் நீங்க பண்ணியிருக்கீங்க?”
“பரவாயில்லை, இன்னைக்கு ஒருநாள்தானே, அம்மாக்கு கால் பண்ணிட்டேன், மதியத்துக்கு வருவாங்க.”
“அதெல்லாம் எதுக்கு? நானே சிம்பிளா ஏதாவது பண்ணியிருப்பேன்ல.”
“பரவாயில்லை.” என்றவன் அவளருகில் வந்து அந்த இதழ்களில் மென்மையாக முத்தம் வைத்தான். ஆசையாக அவள் முகத்தை வருடிக் கொடுத்தான். விலக மனமில்லாதவன் போல மீண்டும் அவன் இதழ்கள் கன்னத்தில் புதைந்தன.
“தேங்க்ஸ் வந்தனா… எல்லாத்துக்கும், எனக்குச் சொல்லத் தெரியலைடி…” உள்ளத்து உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டுவரத் தெரியாமல் அவன் தடுமாறினான். பெண்ணின் முகம் சிவந்து போனது.
“உன்னோட பரீட்சை எல்லாம் முடிஞ்சுதானேங்கிற தைரியத்துல… ஆனாலும் கொஞ்சம் ஓவராத்தான் நடந்துக்கிட்டேன்ல?” அவள் கன்னங்களை அவன் கரங்கள் ஆசையாகத் தடவிக் கொடுத்தன. மீண்டுமொரு முறை அவள் இதழ்களில் இதழ்களை ஒற்றி எடுத்தவன்,
“சாப்பிட்டுட்டுத் தூங்கணும் என்ன?” என்றான் காதலாக.
“அத்தைக்கிட்ட என்ன சொல்லியிருக்கீங்க?”
“வந்தனாக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியலை, அவளால சமைக்க முடியாது, நீங்க லன்ச் கொண்டு வாங்கன்னு சொன்னேன்.”
“உடம்புக்கு என்னன்னு கேட்டா என்ன சொல்றது?”
“உங்கப் பையன் என்னைப் பாடாப் படுத்துறான்னு சொல்லு.”
“ஐயோ அத்தான்!” அவள் வெட்கப்பட வாய்விட்டுச் சிரித்தவன் ஹோட்டலுக்குக் கிளம்பிவிட்டான். மதியத்துக்கு மேல் சுலக்சனா வந்துவிட்டார். அப்போதுதான் வந்தனா நன்றாகத் தூங்கி எழும்பியிருந்தாள். முகம் தெளிவாக இருந்தது.
“இப்போ எப்பிடியிருக்கு வந்தனா? காய்ச்சல் குறைஞ்சிருக்கா? என்ன திடீர்னு? மழை கூட பெய்யலையே?” என்றவர் அவள் கழுத்தை, நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.
“சூடு இல்லை, மாத்திரைப் போட்டியா?” கேள்வி மேல் கேள்வியாக அத்தை கேட்கவும் இவள் திணறிப் போனாள். பதில் சொல்லாமல் நின்றிருந்த மருமகளைத் திரும்பிப் பார்த்தவருக்கு என்ன புரிந்ததோ அதற்கு மேல் அவளைக் குடையவில்லை. கொண்டு வந்திருந்த சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்தார்.
“அத்தான் உங்களை வீணா சிரமப்படுத்திட்டாங்க, நான் ஏதாவது எங்களுக்கு சிம்பிளா பண்ணியிருப்பேன் அத்தை.”
“ஏன்டா? அத்தைக்கு அப்பிடியென்ன கஷ்டம்? இன்னைக்கு எங்களுக்குச் சமைக்கும் போது கொஞ்சம் அதிகமா பண்ணி உங்களுக்குக் கொண்டு வந்திருக்கேன், அவ்வளவுதானே?” என்றவர் அவள் தலை முடியை வருடிக்கொடுத்தார். கலைந்திருந்த ஒன்றிரண்டு மயிர் கற்றைகளைக் காதோடு ஒதுக்கிவிட்டார்.
“வந்தனா, நீயும் ரங்காவும் சந்தோஷமா இருக்கீங்கல்லை?” அந்தக் கேள்வியில் அவள் முகம் சூடாகிப் போனது. நேற்றைய இரவு நினைவில் வரவும் சிவந்து போனாள். சுலக்சனா வாழ்ந்து பார்த்தவர். மூன்று குழந்தைகளின் தாய். அண்ணன் மகளின் முகத்தைப் பார்த்தே அவரால் விளங்கிக்கொள்ள முடிந்தது. வாஞ்சையோடு இளையவளின் முகத்தை வருடிக்கொடுத்தார்.
“சாப்பிடு கண்ணா, நீயும் ரங்காவும் சந்தோஷமா இருக்கணும், நீ எனக்கு அண்ணன் பொண்ணு மட்டுமில்லை, என் ரங்காவோட பொண்டாட்டி, எம் புள்ளை அவனோட பொண்டாட்டின்னு யாரைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாலும் நான் உள்ளங்கைல வெச்சுத் தாங்கியிருப்பேன், அதுவே எங்கண்ணன் பொண்ணுங்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சுத் தெரியுமா?!” அவர் முகம் பூரித்தது.
“எம் புள்ளையையும் மருமகளையும் அப்பிடிப் பார்த்துக்கணும்னு நான் எவ்வளவு கனவு கண்டேன், ஆனா அதெல்லாம் கானல் நீராப்போச்சு.” என்றவர் கண்கலங்கினார். வந்தனா வாயடைத்துப் போனாள்.
“அந்த மனுஷனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அத்தனைப் பேரு முன்னாடியும் எம் புள்ளையைக் கைநீட்டி அடிப்பாரு! எம் புள்ளை அவ்வளவு கேவலமாப் போயிட்டானா அவருக்கு? எங்கக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கான் அவன், அப்பன் கொஞ்சம் வசதியா இருந்தா இப்பத்தையப் பசங்க என்ன ஆட்டம் போடுறானுங்க, எம் புள்ளை அப்பிடியா? நீ பார்த்தப் பொண்ணு வேணாம், எம் மனசுக்கு வேறொருத்தியைப் புடிச்சிருக்கு, கட்டிக்குடுன்னு கேட்டான், இது தப்பா?” பொங்கிவிட்டார் பெரியவர். இத்தனை நாளும் அடக்கி அடக்கி வைத்திருந்தது இன்றைக்கு ஆழிப்பேரலைப் போல பொங்கிவிட்டது.
உண்மையைச் சொன்னால் சுலக்சனாவின் மனதில் அது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. எல்லா அம்மாக்களையும் போல ஆண்பிள்ளை மேல் அவருக்குப் பாசம் அதிகமாக இருந்தது. மூத்த பெண் திவ்யாவிற்குத் திருமணம் நடந்த போதும் மருமகனைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார். ஆனாலும் மகனுக்கு வரப்போகும் மருமகளைப் பற்றி அவருக்கு நிறையக் கனவுகள் இருந்தன.
அர்ச்சனாவை மருமகளாகக் கணவன் தெரிவு செய்தபோதும் அவருக்கு மகிழ்ச்சிதான். தன் நாத்தனாரின் மகள் என்பதையும் தாண்டி தன் மகனுக்கு எல்லா விதத்திலும் அவள் பொருத்தமாக இருப்பாளா என்றுதான் மனது அவசரமாகக் கணக்குப் போட்டது. அந்தப் பெண்ணை ரங்கா அருகில் நிறுத்திப் பொருத்தம் பார்த்தது. அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை வரை மனம் கற்பனை செய்தது! கனவு கண்டது!
ஆனால் மகனது திருமணம் இப்படி நடந்தது, அதன்பிறகும் அவர்களோடு ஒன்றாக இருக்க முடியாமல் போனது என அவர் மனம் வாடிவிட்டது. அதனால்தான் கணவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று இங்கு வர ஆரம்பித்திருந்தார். மனைவியின் மனதை ஓரளவு மாணிக்கமும் புரிந்து வைத்திருந்ததால்தானோ என்னவோ அவரும் ஒன்றும் மறுப்புச் சொல்லவில்லை. அமைதியாகவே மனைவியின் நடவடிக்கைகளைப் பார்த்திருந்தார்.
“அத்தை…”
“என்னடா கண்ணா?”
“நேத்து நானும் அத்தானும் கடைக்குப் போயிருந்தோம்.”
“ம்…”
“பரீட்சை எல்லாம் முடிஞ்சிருச்சு, ஃபங்ஷன் ஒன்னு பண்ணலாம்னு யூனில முடிவெடுத்திருக்காங்க.”
“அப்பிடியா?”
“ம்… எல்லாரும் சாரி கட்டிக்கிட்டு வரணும்னு சொன்னாங்க, அத்தான்தான் பழசை எதுக்குக் கட்டப்போறே, புதுசா வாங்கலாம்னு கூட்டிட்டுப் போனாங்க.” என்றவள் நேற்று வாங்கி வந்ததை அத்தையிடம் காட்டினாள்.
“ரொம்ப அழகா இருக்கு, உன்னோட நிறத்துக்கு இந்தப் புடவை எடுப்பா இருக்கும்.”
“கடைக்கு நேத்து… அர்ச்சனாவும் வந்திருந்தா.” புடவையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பெரியவர் சட்டென்று இவள் முகத்தைப் பார்த்தார்.
“ஏதாவது வாங்க வந்திருப்பாளா இருக்கும்.”
“அது தெரியலை, ஆனா என்னைக் கண்டுக்கவே இல்லை.” என்றவள் நேற்று நடந்ததைச் சொன்னாள்.
“என்னாச்சு அவளுக்கு? அவ அப்பிடியான பொண்ணு இல்லைடா, ரொம்ப நல்ல மாதிரி.”
“ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு அத்தை, அப்ப அவ மனசுல அத்தானோட நினைப்பு இன்னும் இருக்குன்னுதானே அர்த்தம்?” இவள் கேட்ட தினுசில் சுலக்சனாவிற்குச் சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டார். அவளும் பெண்தானே? அத்தனைச் சுலபத்தில் அழித்து அழித்து எழுத முடியுமா? கொஞ்சம் காலம் தேவைப்படும்! பெரியவரால் அர்ச்சனாவின் மனதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“அதால நீங்க ரெண்டு பேரும் சண்டைப் போட்டீங்களா?”
“சண்டைப் போடலை, சும்மா பேசிக்கிட்டோம்…” இவள் இழுத்த இழுப்பிலேயே பெரியவருக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து போனது. மகனுக்கு அழைத்தார்.
“ரங்கா, சாப்பிட வர்றியாப்பா?”
“வந்தனா சாப்பிட்டாளாம்மா?”
“ம்… ஆச்சு, நீயும் வந்து கொஞ்சம் அம்மா கையால சாப்பிட்டுட்டுப் போவேன்பா.”
“சரிம்மா.” என்றவன் உடனே புறப்பட்டான். அவனுக்கும் மனைவியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. கூடவே அம்மாவும் இருக்கிறார். மனது உற்சாகமாக உணர்ந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் மகன் வீட்டிலிருந்தான்.
“கையைக் கழுவிட்டு வா, சாப்பிடலாம்.”
“நீங்களும் சாப்பிடுங்க அத்தை, நான் பரிமார்றேன்.”
“நாங்க போட்டுச் சாப்பிட்டுக்குவோம், நீ ரெஸ்ட் எடு.” சட்டென்று கணவன் சொல்லவும் இவளுக்கு வெட்கமாகிப் போனது. எதற்கு அத்தையின் முன்பாக ரெஸ்ட் எடு, ரெஸ்ட் எடு என்று ஏலம் போடுகிறான்? அப்படி என்ன நடந்துவிட்டது என்று ரெஸ்ட் எடுக்கச் சொல்கிறான்?!
“எனக்கு ஒன்னுமில்லை அத்தான், நான் நல்லாத்தான் இருக்கேன்.” சுலக்சனா கிச்சனுக்குப் போகவும் இவள் மெதுவாகச் சொன்னாள்.
“சொன்னா கேட்கவே மாட்டியா? நல்லாத்தான் இருக்கேன்னா இன்னைக்கு நைட்டும் ஓகேவா?” அவன் கண்சிமிட்டிச் சிரிக்கவும் கிச்சனை நோக்கித் திரும்பியவள் அவனைப் பார்த்து முறைத்தாள். இவர்கள் கிசுகிசுப்பு சுலக்சனாவிற்கும் கேட்டது.
“புடவை ரொம்ப நல்லாருக்கு ரங்கா.” சத்தமாகச் சொன்னபடி ஹாலுக்கு வந்தார்.
“அர்ச்சனா நேத்து கடைக்கு வந்திருந்தாளாம்? உங்கூடப் பேசினாளா?”
“ம்… சும்மா பேசினா, எனக்கு ஒருமாதிரியா போச்சும்மா, தப்புப் பண்ணின மாதிரி இருந்துச்சு, உன்னைக் காயப்படுத்தணுங்கிறது என்னோட நோக்கமில்லை, எதையும் மனசுல வெச்சுக்காதேன்னு சொன்னேன், சாரி சொன்னேன்.” மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியாததை அம்மாவிடம் இலகுவாகப் பகிர்ந்து கொண்டான் மகன்.
“அதை விடு ரங்கா, அவங்க அர்ச்சனாக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.”
“நல்லதும்மா, சீக்கிரமா அந்தக் கல்யாணம் முடியணும், இல்லைன்னா என்னால நிம்மதியா இருக்க முடியாது.” இந்தப் பேச்சு வந்தனாவிற்குப் பிடிக்கவில்லை என்பதை அவள் முகம் காட்டவும் சுலக்சனா பேச்சை மாற்றினார்.
“அந்தக் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமாவது உங்கப்பா மனசு மாறுவாராப்பா? இன்னும் எத்தனை நாளைக்கு எம் புள்ளைய நான் பிரிஞ்சு வாழுறது? எனக்கென்ன பத்துப் புள்ளைங்களா இருக்கு? திவ்யா அவ புருஷன் வீட்டுக்குப் போயிட்டா, நீயும் இப்பிடி வந்து உட்கார்ந்தா நான் என்னதான் பண்ணுறது?”
“அம்மா…”
“எனக்கும் ஆசை இருக்குமில்லை ரங்கா, மகன், மருமகள், பேரப்பிள்ளைங்கன்னு வாழ எனக்குக் குடுப்பினை இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு ஆளுக்கு ஒரு பக்கமா நாம இருக்கிறது?” பெரியவரின் கண்களில் கண்ணீர் வழிய இளையவர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். இப்படியொரு ஆதங்கம் அம்மாவின் மனதில் இருக்கும் என்று மகனும் நினைக்கவில்லை.
“காசு, பணம் இல்லாதவன் கூட புள்ளை, பேரப்புள்ளைன்னு ஒன்னா சந்தோஷமா குடும்பமா வாழுறாங்க, எனக்கு மட்டும் ஏன் இப்பிடி? நாளைக்கு உங்களுக்கு ஒரு குழந்தைப் பொறந்தாலும் நான் இப்பிடித்தான் வந்து பார்க்கணுமா? ஓடி ஒளிஞ்சு உங்கப்பாக்குப் பயந்துதான் உம் புள்ளையை நான் பார்க்கணுமா ரங்கா?” அம்மாவின் கண்ணீர் மகனை அசைத்துப் பார்த்தது. வந்தனா தன் அத்தையின் அருகே வந்தமர்ந்தவள் அவர் கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள். மனவேதனையில் அழுபவர்க்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று இருவருக்கும் விளங்கவில்லை.






காதலை சொல்லிக் கொள்ள வில்லை
கல்யாணத்திற்கு பிறகு காதலை அள்ளிக் கொண்டாடிட…
ஊடலும் காதலே கூடலும் காதலே…..
அழகான பதிவு❤️
Nice
அருமையான பதிவு