arrow_back
KAADHAL PESA VAA KANNE அத்தியாயம் 11
KAADHAL PESA VAA KANNE chevron_right பகுதி 11 / 13

அத்தியாயம் 11

visibility 417
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (13 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 11

தனது அறைக்குள் நுழைந்த ரங்கராஜ் ஒரு நிமிடம் உணர்ச்சிகளின் பிடியில் ஆட்பட்டு அப்படியே நின்றுவிட்டான். கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு இன்று அவனது அறைக்குள் வருகிறான். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல அங்கே அவன் மனைவி இருந்தது இன்னும் கிளர்ச்சியாக இருந்தது.

“வா ரங்கா.” திவ்யா தம்பியை வரவேற்றாள். ஷக்தியும் அங்கேதான் இருந்தாள். வந்தனாவைச் சமாதானம் பண்ணியபடி பெண்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். இவனும் போய் கட்டிலில் மனைவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

“எதுக்கு அப்பா கூட சண்டைப் போடுறே? அதான் அம்மா இங்கயே இருங்கன்னு சொல்றாங்கல்லை?”

“என்ன திவ்யா பேசுறே? அம்மாவா இப்போ பிரச்சினை? இல்லையே, வீட்டைவிட்டு வெளியே போன்னு சொன்னது அப்பா, அவரை என்ன பண்ணச் சொல்றே?”

“அது ஏதோ ஒரு கோபத்துல சொன்னது, அதையே புடிச்சுக்கிட்டுத் தொங்குவியா நீ?” 

“நீ புரிஞ்சுதான் பேசுறியா? அத்தனை பேரு முன்னாடி எதைப்பத்தியும் யோசிக்காம கை நீட்டியிருக்காரு, எனக்கே அவ்வளவுதான் மரியாதைன்னா வந்தனாவை யோசிச்சுப் பார்த்தியா?” 

“வந்தனாவை அப்பிடி என்ன பண்ணிடப் போறாரு அப்பா? கொஞ்சம் கோபத்தைக் காட்டுவாரு, அதைப் பொறுத்துக்கு உன்னால முடியாதா? நீயாவது சொல்லேன் வந்தனா!”

“அவளை இதுக்குள்ள இழுக்காத திவ்யா, என்னாலதான் இன்னைக்கு அவ குடும்பமே அவளுக்கு இல்லைன்னு ஆகிப்போச்சு, இன்னுமின்னும் அவளைக் கஷ்டப்படுத்த நான் தயாரில்லை.”

“அண்ணா ப்ளீஸ், நீங்க இல்லாம வீடு நல்லாவே இல்லை, இப்போ அண்ணியும் இங்க இருந்தா ஜாலியா இருக்கும், ப்ளீஸ்ணா, எதையும் மனசுல வெச்சுக்காம இங்கேயே இருந்திருங்கண்ணா.” ஷக்தியும் அண்ணனின் கையைப் பிடித்துக் கெஞ்சினாள். 

“அம்மாவை யோசிச்சுப் பாரு, நீ இங்க இல்லாம அவங்க ரொம்ப வருத்தப்படுறாங்க, வீடு வீடாவே இல்லை, கோபத்தைத் தூக்கித் தூர வெச்சுட்டு எங்களையெல்லாம் யோசிச்சுப் பாரு, அப்பாவோட கோபம் எத்தனை நாளைக்கு? கொழந்தை ஒன்னு வரப்போகுதுன்னு தெரிஞ்ச உடனேயே இறங்கிட்டாரு, இன்னும் காலம் போகப்போக எல்லாம் சரியாப் போயிடும், இடைவெளியைப் பெருசாக்காதே, சில விஷயங்களை மறந்திடு, ரெண்டு பேரும் நல்லா யோசிச்சு முடிவெடுங்க, இது ஒரு நல்ல சந்தர்ப்பம்னுதான் எனக்குத் தோணுது, அதை சரியா பயன்படுத்திக்கோங்க.” அத்தோடு சகோதரிகள் இருவரும் வெளியே போய்விட்டார்கள். 

ரங்கராஜ் இப்போது மனைவியைப் பார்த்தான். நடந்து முடிந்த நிகழ்வுகளால் பாதிப்புற்றவள் போல அமர்ந்திருந்தாள். கணவனும் மனைவியும் மகிழவேண்டிய தருணம். என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள்.

“வந்தனா…”

“நாம இங்கயே இருக்கலாம் அத்தான்.” சட்டென அவள் சொல்லவும் இவன் திகைத்துப் போனான்.

“என்னம்மா சொல்றே? புரிஞ்சுதான் பேசுறியா?”

“எனக்கு எல்லாம் புரியுது அத்தான், நான் அவசரப்பட்டோ உணர்ச்சிவசப்பட்டோ இதைச் சொல்லலை, நான் சொல்றதைக் கேளுங்க அத்தான்.”

“என்னால உன்னைத் தனியா பார்த்துக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தவளின் கண்களில் நீர் நிறைந்து. இல்லை என்பதுபோல தலையை இடம் வலமாக ஆட்டியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“உங்களை விட என்னை யாராலயும் நல்லா பார்த்துக்க முடியாது அத்தான்?”

“அப்புறம் என்னடா?” என்றவன் அவள் தலையை வருடிக் கொடுத்தான். தலையை வருடிய கை இப்போது அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது.

“வாய்ப்பே இல்லை ராஜான்னு அன்னைக்கு யாரோ சொன்னாங்க.”

“யாரும் அப்பிடிச் சொல்லலை, அத்தானோட ஆட்டத்தை இனித்தான் பார்க்கப் போறேன்னு சொன்னப்பவே புரிஞ்சு போச்சு, இது இங்கதான் வந்து முடியப் போகுதுன்னு.”

“அப்பிடியா? ஆனா நான் ஆசைப்பட்ட என்னோட மாமன் பொண்ணு என்னோட ரூமுக்கு வர்றதுக்கு இன்னொரு ஆளோட ஹெல்ப் தேவைப்பட்டிருக்கு.” என்றவன் குனிந்து அவள் வயிற்றில் முத்தம் வைத்தான். அப்படியே அவள் மடியில் அவன் தலைசாய்த்துக் கொள்ள தலையை வருடிக்கொடுத்தாள் பெண். உண்மைதானே! ரங்கராஜின் அறைக்கு வந்தனா வருவதற்கு அவர்கள் வாரிசு வரவேண்டி இருந்திருக்கிறது.

“இந்த வீட்டுல நீயும் நானும் உரிமையோட இருக்கிறது எனக்கும் புடிச்சிருக்கும்மா, ஆனா நிறைய கஷ்டங்களைத் தாங்கணும், உன்னை அப்பா ஏதாவது சொன்னா என்னால தாங்க முடியாது, உன்னோட வீட்டாளுங்களை யோசிச்சுப் பார்த்தியா? அவங்களால இங்க வர முடியுமா?”

“எல்லாத்தையும் போட்டு ரொம்ப யோசிக்காதீங்க அத்தான், அதது நடக்கிறபடி நடக்கட்டும், ஆண்டவன் மேல பாரத்தைப் போடுங்க.”

“என்ன திடீர்னு இப்பிடியொரு முடிவு?”

“இப்பிடியெல்லாம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை, ஆனா உங்கக்கா சொல்லும் போது எதுக்கு வந்திருக்கிற சான்ஸை மிஸ் பண்ணணும்னு தோணுது, அத்தை வேற ரொம்ப வருத்தப்படுறாங்க, நமக்கும் நாலு பேர் வேணுமில்லை அத்தான்? கோபப்பட்டாலும் அவங்க உங்க அப்பா, விட்டுக் குடுக்கலாமே!” 

“தெரியலை வந்தனா, நாம இப்போ எடுத்திருக்கிறது சரியான முடிவான்னு எனக்குத் தெரியலை, குழப்பமா இருக்கு, ஆனா நீ சொல்றதும் சரின்னு தோணுது.”

“அப்ப ஏன் கவலைப்படுறீங்க?”

“நான் என்னைப்பத்திக் கவலைப்படலை, அப்பா என்ன சொன்னாலும் நான் தாங்கிப்பேன், ஆனா நீ? உன்னால முடியாது, அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்.”

“அப்பிடியெல்லாம் எதுவும் நடக்காது அத்தான்.” 

“நடக்கலைன்னா எனக்கும் சந்தோஷந்தான், உங்க வீட்டுக்கு கால் பண்ணினியா?”

“இன்னும் இல்லைத்தான்.” 

“கால் பண்ணி பேசு, ஈவ்னிங் அங்க போகலாம், இப்ப நான் கிளம்பட்டுமா? நீ இங்க தனியா சமாளிச்சிடுவியா?”

“என்னமோ என்னைக் காட்டுக்குள்ள விட்டுட்டுப் போற மாதிரிப் பேசுறீங்க! ஷக்தி இருக்கா, உங்கக்காவும் அம்மாவும் இருக்காங்க, அப்புறம் என்ன?” அவள் என்னதான் சமாதானம் சொன்னாலும் ரங்கராஜின் மனது கவலைப்பட்டது. மனமேயில்லாமல்தான் வெளியே வந்தான். 

“அம்மா…” சமையலறையில் மும்முரமாக நின்றிருந்த சுலக்சனா திரும்பிப் பார்த்தார். மகனுக்கும் மருமகளுக்கும் தனிமைக் கொடுத்துவிட்டு வீட்டுப் பெண்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

“சொல்லு ரங்கா.” மகன் என்ன முடிவெடுத்திருப்பானோ என்ற பதட்டம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. 

“வந்தனா இங்க இருக்கட்டும், நான் ஹோட்டலுக்குப் போயிட்டு வர்றேன்.”

“சரிப்பா, நைட்டுக்கும் இங்க தங்குவீங்கல்லை?” அம்மாவின் ஆர்வத்தைப் பார்த்த போது இவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

“அம்மா… எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலைம்மா, அப்பா எந்நேரம் என்ன பேசுவாருன்னு நமக்குத் தெரியாது, வந்தனாவை யாரு காயப்படுத்தினாலும் என்னால தாங்க முடியாது, அதுவும் இந்த மாதிரி நேரத்துல…”

“இல்லைப்பா, இல்லையில்லை, அப்பிடி எதுவும் நடக்காது.”

“அப்பாவை நம்ப முடியாதும்மா, நாளைக்கே அவரோட தங்கச்சியும் பொண்ணும் வந்தா வந்தனாவை ஏதாவது பேசிடுவாரு, என்னையே கைநீட்டி அடிச்சவருக்கு எம் பொண்டாட்டி எந்த மூலைக்கு?”

“அதான் நான் இங்க இருக்கேன்ல? அப்பிடி ஏதாவது நடந்தா உங்கூட நானும் உன் வீட்டுக்கு வந்திடுறேன், என்னோட மருமகளுக்கு மரியாதை இல்லாத இந்த வீட்டுல அதுக்கப்புறம் எனக்கு என்ன வேலை?” மகன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்று அம்மா உள்ள சமாதானம் எல்லாம் சொல்லி அனுப்பினார். 

ஆண்கள் இருவரும் வெளியே போனதும் இளைய பெண்கள் மூவரும் கூடிவிட்டார்கள். ஏற்கனவே வந்துபோன அத்தையின் வீடுதான் என்றாலும் இப்போது ரங்கராஜின் மனைவியாக, அந்த வீட்டின் வாரிசைச் சுமக்கும் மருமகளாக இருப்பது வந்தனாவைப் பரவசப்படுத்தியது. சுலக்சனா மும்முரமாகச் சமையலில் இறங்கிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு மகனும் மருமகளும் முதல்முறையாக வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது முதன்மையான எண்ணமாக இருந்தது.

வந்தனா தனது வீட்டிற்கு அழைத்துத் தகவல் சொன்னாள். ரேவதி ஹோவென்று அழ ஆரம்பித்துவிட்டார். திருமணத்திற்கு அவர்கள் சென்றிருந்தாலும் இதுவரை மகள் வீட்டிற்கு அவர்கள் போனதில்லை. மகளும் மருமகனும்தான் வந்து இவர்களைப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். மாணிக்கம் சம்மதிக்காதவரை அவர்களால் இவர்களோடு ஒட்டி உறவாட முடியவில்லை. 

“இப்ப எங்களால என்னதான் பண்ண முடியும் வந்தனா? உன்னை வந்து பார்க்கக்கூட முடியலையே!” மகளிடம் ஒப்பாரி வைத்தவரை சமாதானம் செய்தாள் திவ்யா. 

“மாமி, எதுக்கு இப்போ அழுறீங்க? எவ்வளவு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு, உங்க பெண்ணோட சந்தோஷமாப் பேசாம எதுக்கு அழணும்?”

“இவ்வளவு சந்தோஷமான விஷயம் நடந்தும் ஒரு எட்டு அவளை வந்து எங்களால பார்க்க முடியலையே திவ்யா?”

“ரங்கா இப்ப ஹோட்டலுக்குப் போயிருக்கான் மாமி, சாயங்காலம் வந்ததும் வந்தனாவை அங்க கூட்டிட்டு வருவான், நீங்க எதுக்கும் கவலைப்படாம சந்தோஷமா இருங்க.”

“அம்மாடி திவ்யா, உங்கப்பா…”

“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை, நாங்கெல்லாம் இங்க எதுக்கு இருக்கோம்? உங்க பொண்ணைப் பார்த்துக்க மாட்டமா? நீங்க கவலைப்படாதீங்க மாமி.” நிறையச் சமாதானங்கள் சொன்ன போதும் மாணிக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எல்லோருக்கும் படபடப்பாகத்தான் இருந்தது. 

ஹோட்டலுக்குப் போயிருந்த ரங்கராஜின் நிலைமையும் சொல்லில் வடிக்க இயலாததாக இருந்தது. அவசரமாக அழைப்பு வந்த போதே அவன் கொஞ்சம் அனுமானித்திருந்தான். ஆனால் மனைவி அவர்கள் வீட்டில் இருந்தது பெரும் ஆச்சரியமாகிப் போனது. நமச்சிவாயம் மாமாதான் அங்கே அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்!

“வாழ்த்துகள் தம்பி!” கந்தசாமி அண்ணன் ஆர்ப்பாட்டமாக வரவும் இவனுக்கு முகம் சிவந்து போனது. 

“நன்றிண்ணே, யாரு சொன்னாங்க?”

“அப்பாவோட இப்பதான் பேசினேன், அவசரமா கால் வந்து நீங்க புறப்பட்டதும் கொஞ்சம் படபடப்பாகிடுச்சு, ஆனா இதை நான் எதிர்பார்க்கலை.”

“ம்… அப்பா வேற ஏதாவது சொன்னாங்களா?”

“இல்லையே தம்பி.” என்றவரிடம் வீட்டு நிலவரத்தைச் சொன்னான் இளையவன். அமைதியாகக் கேட்டபடி இருந்தார் பெரியவர். 

“தம்பி, அம்மா சொல்றது நியாயந்தான், இந்த நேரத்துல நீங்க தனியா இருக்கிறது நல்லதில்லை, உங்கப்பா சம்மதிக்காத வரை தங்கவேலும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கமாட்டாரு, அப்ப உங்களுக்கு யாருதான் துணை?”

“அது எனக்கும் புரியுதுண்ணே, ஆனா அப்பா ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியாது, என்னை என்ன வேணும்னாலும் சொல்லட்டும், ஆனா வந்தனாவை யாரும் நோகடிச்சிரக் கூடாது.”

“இல்லை தம்பி, என்னதான் கோபம் இருந்தாலும் இந்த நேரத்துல உங்க சம்சாரத்தை யாரும் ஒரு வார்த்தைச் சொல்ல மாட்டாங்க, என்னதான் இருந்தாலும் வரப்போறது அவரோட பேரப்புள்ளை, அந்த ஆசை அவரோட மனசுலயும் இருக்குமில்லை?”

“இப்பவும் சத்தம் போட்டு எங்கூட சண்டைக்கு வர்றாரு, அந்தப் பொண்ணு அதைக் கேட்டுக்கிட்டு இருக்குதில்லை, வலிக்குமில்லைண்ணே?”

“சரிதான், அம்மாக்கிட்டப் பேசுங்க, திட்டுறதா இருந்தா எங்கிட்டத் தனியா திட்டச் சொல்லுங்க, என் சம்சாரம் முன்னாடி திட்டவேணாம்னு சொல்லுங்கன்னு சொல்லச் சொல்லுங்க.” எல்லோரும் பலவிதமாகச் சமாதானம் சொன்ன போதும் ரங்கராஜிற்கு என்னவோ போல்தான் இருந்தது. 

சரி, விட்டுப் பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். இந்த நிலைமையில் அவனுக்கு அம்மாவின் துணை தேவைதான். ஹோட்டலை விட்டுவிட்டு மனைவிக்குத் துணையாக அவனால் வீட்டிலேயே இருக்க முடியாது. ரேவதி மாமியும் அவர்கள் வீட்டிற்கு வரப்போவதில்லை. மீராவை வேண்டுமானால் அக்காவோடு கொஞ்சநாள் வந்து இருந்து கொள் என்று சொல்லலாம். 

இவன் நினைத்ததற்கு எதிர்மாறாக இருந்தது அன்றைய பகல் பொழுது. சாப்பாட்டு வேளைக்கு ரங்கராஜ் வீட்டிற்கு வந்திருந்தான். ஹோட்டலில் சாப்பிட்டிருக்கலாம். ஆனாலும் மனம் மனைவியைத் தேடியது. இவன் வீட்டிற்கு வந்தபோது மாணிக்கமும் இருந்தார். 

“வாங்க, எல்லாரும் சாப்பிடலாம்.” சுலக்சனா சத்தமாக அழைத்தார். தகவல் கிடைத்து வீட்டுக்கு வந்த திவ்யாவும் அங்கேதான் இருந்தாள். சுலக்சனா மகளைப் போக அனுமதிக்கவில்லை. 

“உங்கப்பா எந்நேரம் எந்த ஏழரையைக் கூட்டுவாருன்னு எனக்குத் தெரியாது திவ்யா, நீ இங்கேயே நில்லு, உங்க வீட்டுக்காரருக்கு ஃபோன் பண்ணி நிலைமையைச் சொல்லு, அவர் புரிஞ்சுக்குவாரு.”

“சரிம்மா.” அம்மா சொல்வது சரி என்றுதான் பட்டது மகளுக்கும். எல்லோரும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாலும் வந்தனா வரவில்லை. அவளுக்கு மாணிக்கத்தின் முன்பாக வரவே பயமாயிருந்தது.

“வந்தனா, நீயும் வாம்மா.” எதுவும் நடக்காதது போல அழைத்தார் சுலக்சனா.

“அத்தை… நான் அப்புறம் சாப்பிடுறேன்.”

“அட, எல்லாரோடையும் உட்கார்ந்து சாப்பிடாம நீ எதுக்குத் தனியா சாப்பிடப் போறே?” வந்தனா இப்போது கணவனைப் பார்த்தாள். வா என்று அவனும் கண்களாலே அழைக்கவும் மெதுவாக வந்து அமர்ந்தாள்.

“சாப்பிடும்மா.” சுலக்சனா எல்லோருக்கும் பரிமாறினார். ஒரு விருந்தே தயாராகி இருந்தது. மகன் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் அம்மா தன் கை வண்ணத்தைக் காட்டியிருக்கிறார் என்று புரிந்தாலும் யாரும் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. மாணிக்கமும் அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தார். எல்லோருக்கும் பாதி சாப்பாடு தீர்ந்து போயிருக்கும். அதுவரை அமைதியாக உண்டு கொண்டிருந்த வந்தனா சட்டென்று எழுந்து ஓடினாள்.

“ஐயையோ! என்னாச்சும்மா?!”

“வந்தனா!” எல்லோரும் பதறிக்கொண்டு அவள் பின்னால் ஓடினார்கள். அதுவரை உண்டது எல்லாம் வெளியே வந்திருந்தது. மனைவியின் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ரங்கராஜ். தண்ணீரோடு ஓடிவந்தாள் திவ்யா.

“என்னம்மா ஆச்சு அண்ணிக்கு?”

“உண்டானா இதெல்லாம் சகஜந்தான்.” திவ்யா உண்டாகியிருந்த போது இதுபோன்ற தொல்லைகள் அவளுக்கு இருக்கவில்லை. அதனால் ஷக்திக்கு அண்ணி வாந்தி எடுக்கவும் அதிசயமாக இருந்தது. 

“முகத்தைக் கழுவிவிடு ரங்கா, இதுக்கு மேல சாப்பிட வேணாம், ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கட்டும்.” அம்மா சொன்னபடி மனைவியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தவனுக்குக் கவலையாக இருந்தது.

“நீங்க போய் சாப்பிடுங்க அத்தான், எனக்கு இப்போ ஓகே.” 

“பரவாயில்லைம்மா, நான் உங்கூடக் கொஞ்ச நேரம் இருக்கேன், நீ தூங்கு.” என்றவன் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.

“ஷக்தி!” வெளியே மாணிக்கத்தின் குரல் கேட்டது. உள்ளே இருந்த இவர்களுக்கும் மாணிக்கம் பேசுவது தெளிவாகக் கேட்டது.

“என்னப்பா?”

“உங்க மாமிக்கு ஃபோனைப் போட்டு இங்க வரச்சொல்லு, என்னதான் உங்கம்மா நல்லா பார்த்துக்கிட்டாலும் இப்போ உங்கண்ணிக்கு அவங்க அம்மா கூட இருக்கிற மாதிரி இருக்காதில்லை? நான் மீனாட்சி அத்தையோட வீட்டுக்குப் போறேன், வர ராத்திரியாகும்.” என்றவர் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்த அத்தனைப் பேருக்கும் மகிழ்ச்சியாகிப் போனது. 

“அண்ணா, அப்பா சொன்னது கேட்டுச்சா?” ஷக்திதான் இவர்கள் அறைக்கு ஓடிவந்தாள். 

“அதானே! நம்ம அப்பாவா இது? என்னடா ரங்கா நடக்குது?” திவ்யா அறைக்குள் வர கூடவே சுலக்சனாவும் வந்தார். அவர் முகம் முழுவதும் சிரிப்பு. 

“உங்கப்பா ஒன்னும் அவ்வளவு மோசமானவர் இல்லை, நீ மாமிக்கு ஃபோனைப் போட்டு வரச்சொல்லு திவ்யா, உங்கப்பா இருக்கும்போது வரமுடியாதுன்னு சங்கடப்பட்டுக்கிட்டு இருப்பாங்க.”

“அடேயப்பா! உங்க புருஷன் அவ்வளவு நல்லவரோ?”

“தன்னோட பேச்சைக் கேட்கலைன்னு மகன் மேல கோபம் இருந்தாலும் வீட்டைவிட்டு ரங்கா போவான்னு அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார், அதுவே அவருக்குப் பெரிய அடி, இப்போ இந்த வீட்டுக்கு இன்னொரு வாரிசு வரப்போகுதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் கோபத்தைத் தூக்கிப் புடிக்க அவருக்கென்ன பைத்தியமா? அதான் இறங்கி வர்றாரு.”

“நீங்க சொன்னா சரிதான்.” என்ற இளையவள் ரேவதியை அழைத்து விஷயத்தைச் சொல்லவும் அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வந்துவிட்டார்கள். ஆஃபீஸுக்குச் சென்றிருந்த தங்கவேலும் உடனேயே வந்துவிட்டார். வீடே கலகலவென்று ஆகிப்போனது. 

“சுலோ, நாங்க வந்தனாவை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா?” ரேவதி கேட்கவும் சுலக்சனாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

“ஆமாம்மா, உங்கண்ணி சொல்றதுதான் கரெக்ட், வந்தனாவை நாங்க கூட்டிட்டுப் போறோம்.” பெண்ணின் தலையைத் தடவிய தங்கவேலும் அதையே சொன்னார். மருமகன் மீதும் மகள் மீதும் இருந்த கோபம் காணாமல் போயிருந்தது.

“என்னண்ணா பேசுறீங்க? வெண்ணெய் திரண்டு வரும்போது சட்டியை உடைச்ச கதையா இருக்கு, அவர் இப்பதான் கொஞ்சம் மனசு மாறியிருக்காரு, மருமகள் உண்டாகி இருக்குன்னு தெரிஞ்சதும் அவரோட கோபம் குறைஞ்சிடுச்சு, உங்க பொண்ணு வாந்தி எடுத்ததும் உங்களையெல்லாம் கூப்பிடச் சொன்னதே அவர்தான், இப்பிடி ஒவ்வொன்னா நல்லது நடக்கும் போது வந்தனாவை உங்களோட நீங்க கூட்டிட்டுப் போனா எப்பிடிண்ணா? இந்த வீட்டுக்கு இன்னொரு வாரிசு வர்றப்போ எல்லாம் நல்லதா நடக்குது, அதைக் கெடுத்துராதீங்கண்ணா.” 

“நீ சொல்றதும் சரிதாம்மா, மாப்பிள்ளை மனசு மாறணும்னு நான் தினமும் ஆண்டவனை வேண்டுறேன், என்னோட வேண்டுதல் வீண் போகலை, அந்த ஆண்டவன் எப்பவும் நம்மளைக் கை விடமாட்டான்.” 

“அண்ணி, நீங்க என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க, வந்தனாவை எம் பொண்ணு மாதிரி நான் பார்த்துக்குவேன்.”

“ஐயையோ! எனக்கு உன்னைத் தெரியாதா சுலோ? நான் அந்த அர்த்தத்துல சொல்லலை, பெத்த மனசு கேட்கலை…”

“புரியுது அண்ணி, டெய்லி நீங்க இங்க வந்து வந்தனாவைப் பாருங்க, உங்களை இனி யாரு என்ன சொல்லப் போறா?” ரங்கராஜ் ஸ்வீட் வாங்கிவர அன்றைய மாலைப்பொழுது தித்திப்பாகக் கழிந்தது. 

“வந்தனா…” அன்றைக்கு இரவும் அங்கேயே தங்கினார்கள் இருவரும். தன் அத்தையின் வீட்டில், அத்தானின் அறையில் தங்குவது வந்தனாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடம்பு சோர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் உவகைப் பொங்கியது.

“என்னத்தான்?”

“என்னம்மா நடக்குது இங்கே?” அவன் கேட்ட கேள்வியில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. 

“எனக்கும் ஒன்னும் புரியலை அத்தான், நேத்து வரைக்கும் நம்ம ரெண்டு பேரையும் விரோதி மாதிரிப் பார்த்தவங்க இன்னைக்கு என்னடான்னா அப்பிடியே தலைகீழா மாறிட்டாங்க!”

“ஹா… ஹா… இது மாயமில்லை, மந்திரமில்லைன்னு எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கிறேன் பொண்ணே!” என்றவன் குலுங்கிச் சிரித்தான்.

“எங்கப்பாவைப் பார்த்தீங்களா? இவ்வளவு நாளும் எங்க வீட்டுக்குப் போனா நாந்தான் போய் பேசுவேன், சரி போனாப் போகுதுன்னு பதில் சொல்லுவாரு, இன்னைக்கு என்னடான்னா நாங்க வந்தனாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம்னு சொல்லுறாரு!”

“ம்… எங்க வீட்டு ஜமீன்தாரைப் பார்த்தியா? உங்கண்ணிக்கு இப்போ அம்மா பக்கத்துல இருக்கிற மாதிரி வருமான்னு ஷக்திக்கிட்டக் கேட்கிறாரு, அட ஆண்டவா! நீங்க எல்லாரும் எப்ப இருந்து சாமி இவ்வளவு நல்லவங்களா மாறினீங்க?” கணவன் வெடிச்சிரிப்பு சிரிக்கவும் வந்தனாவும் அவன் மார்பில் சாய்ந்தபடி சிரித்தாள். 

அடுத்தநாள் காலையிலேயே வந்தனா விழித்துவிட்டாள். ஒருநாளைக்குள் தலைகீழாக மாறிப்போன அவள் உலகத்தை நினைத்த போது மகிழ்ச்சி பொங்கியது. இத்தனை சீக்கிரமாக அத்தை வீட்டுக்கு அவர்கள் வருவார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எது நடந்தாலும் அதில் நம் கண்ணுக்குத் தெரியாத நன்மை இருக்கிறது என்று நினைத்தபடி எழுந்து காலைக்கடன்களை முடித்தாள். 

ரங்கராஜ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் வீடு என்றால் இந்நேரம் மளமளவென கீழே போய் ஒரு டீ போட்டுக் குடித்துவிட்டு காலை ஆகாரத்தைச் செய்ய ஆரம்பித்துவிடுவாள். பல்கலைக்கழகம் செல்லும் வரை வெறும் சாண்ட்விச்தான்.‌ அதற்கு மேல் செய்ய நேரம் இருப்பதில்லை. விடுமுறை ஆரம்பித்த பிற்பாடு பிட்டு, இடியாப்பம் என்று வித்தியாசமாக ஏதாவது செய்ய ஆரம்பித்திருந்தாள்.‌ இங்கே இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.

“சுலோ, இங்க வா.” இவள் அவர்கள் அறையை விட்டு வெளியே வந்ததும் அழைத்தார் மாணிக்கம். சோஃபாவில் அமர்ந்தபடி பத்திரிகைப் படித்துக் கொண்டிருந்தார் மனிதர். 

“என்னங்க?” என்று வந்த சுலக்சனா அப்போதுதான் மருமகளைக் கண்டார்.

“வாம்மா வந்தனா, இப்போ எப்பிடியிருக்கு?”

“பரவாயில்லை அத்தை.”

“நல்லா தூக்கம் போச்சுதா? முகம் தெளிவா இருக்கு, ஏதாவது குடிக்கிறியாம்மா?”

“நான் டீ போடுறேன் அத்தை, நீங்க உட்காருங்க.” என்றவள் கிச்சனை நோக்கி நகர மாணிக்கத்தின் கண்டனப் பார்வை மனைவியை நோக்கித் திரும்பியது. கணவரின் முகத்தைப் பார்த்த சுலக்சனாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஏனென்றால் நேற்றிரவு தங்கையின் வீட்டிலிருந்து வந்த மனிதர் முதலில் பேசியது வந்தனாவைப் பற்றித்தான்.

“ஏன் சுலோ? திரும்பவும் வாந்தி வந்துதா என்ன?”

“இல்லைங்க, நான் கனமான சாப்பாடு எதுவும் குடுக்கலை, கஞ்சிதான் பண்ணிக் குடுத்தேன்.”

“அது போதுமா என்ன?”

“போதாதுதான், என்ன பண்ணுறது? கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழக்கணும், இல்லைன்னா கஷ்டப்பட்டுச் சாப்பிடுறது எல்லாம் வெளியே வந்திடுமே.”

“அதுவும் சரிதான், நம்ம திவ்யாக்கு இப்பிடி இருக்கலையேம்மா?”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, பாவம் வந்தனா, அப்பிடியே சோர்ந்து போயிட்டா, பார்க்கவே கவலையா இருந்துச்சு.” வேண்டுமென்றே மருமகளைப்பற்றிச் சொன்னார். கணவரின் முகத்தில் தெரிந்த வருத்தம் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

“நீ எதுக்கும்மா டீ போடப்போறே? நான்‌ எதுக்கு இருக்கேன்?” என்றவர் இளையவளைக் காற்றாட பின்வாசலில் உட்கார வைத்தார்.

“அடிக்கடி கிச்சனுக்கு வரக்கூடாது, சாப்பாட்டு வாடை அடிச்சாலும் சாப்பிட முடியாது, அத்தை எல்லாத்தையும் பண்ணிக் குடுப்பேன், உன்னோட வேலை ஒழுங்காச் சாப்பிட்டு உடம்பைத் தேத்துறதுதான், நேத்து ராத்திரி உங்க மாமா உன்னைப்பத்தி விசாரிச்சாரு.” கடைசி வரியைப் பெரியவர் இரகசியம் போலச் சொல்லவும் இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீ திரும்பவும் வாந்தி எடுத்தியான்னு கேட்டாரு, எனக்கே ஆச்சரியமாப் போச்சு, தங்கச்சி வீட்டுக்குப் போனவரு என்ன மூட்ல திரும்பி வர்றாரோன்னு நான்‌ பயப்பிட்டேன், ஆனா மனுஷன் இப்பிடிக் கேட்கிறாரு!” அத்தையும் மருமகளும் பேசிச் சிரித்துக் கொண்டார்கள்.

சற்று நேரத்தில் அனைவரும் எழுந்துவிட வீடே கலகலப்பானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மூன்று பிள்ளைகளும் வீட்டிலிருப்பது சுலக்சனாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஓடியோடி சமையல் செய்தார். மாணிக்கத்திற்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் போலும். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் சோஃபாவிலேயே அமர்ந்திருந்தார். 

“அம்மா…”

“சொல்லு ரங்கா.”

“வந்தனாக்கு ட்ரெஸ் ஒன்னும் இங்க இல்லையே, நான் மதியம் வரும்போது எடுத்துக்கிட்டு வர்றேன்.”

“ம்…” அம்மா சந்தோஷமாகத் தலையை ஆட்டும்போது மகனின் அலைபேசி சிணுங்கியது. அழைத்தவர் யாரெனப் பார்த்தவனின் முகம் மலர்ந்து விகசித்தது.

“யாருப்பா?”

“ஜெகதீஷ்மா.”

“யாரு? நமக்குப் பணம் குடுத்த அந்தத் தம்பியா?” ஆம் என்று தலையை ஆட்டியவன் அழைப்பை ஏற்றான்.

“சொல்லுடா ஜெகா, என்ன இந்த நேரத்துல?” மகன் பேச ஆரம்பிக்கவும் அவனையே பார்த்திருந்தார் அம்மா.

“நான் இப்போ அம்மா வீட்டுல இருக்கேன்டா, லொகேஷன் அனுப்புறேன், இங்க வா, கண்டிப்பா வா.” மகன் பேசியதிலிருந்து அந்த நண்பன் தங்கள் வீட்டுக்கு வரப்பேகிறான் என்று தெரிந்து போனது சுலக்சனாவிற்கு. உடனேயே கணவரிடம் போனவர் அவரைச் சில பொருட்கள் வாங்க வெளியே அனுப்பி வைத்தார்.

“அம்மா, ஜெகா இங்க வர்றானாம்.”

“சரிப்பா, நான் ஏற்கனவே இடியாப்பம் பண்ணுறேன், அப்பாவை ஆப்பம் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கேன், வேறேதாவது வேணுமா ரங்கா?”

“இல்லைம்மா, இது போதும்.” என்றவன்,

“ஷக்தீ.” என்று தங்கையை அழைத்தான். அவள் அப்போதுதான் குளித்து முடித்திருந்தாள்.

“என்னண்ணா?”

“ஹாலைக் கொஞ்சம் க்ளீன் பண்ணிவிடு, என்னோட ஃப்ரெண்ட் வர்றான்.”

“சரிண்ணா.” பெண்பிள்ளைகள் இருவரும் அவசர அவசரமாக வீட்டை ஒழுங்குபண்ண வந்தனாவும் முகம் திருத்திக்கொண்டு வந்தாள். 

“எவ்வளவு பெரிய உதவியை அந்தத் தம்பி நமக்காகச் செஞ்சிருக்கு.” சுலக்சனா உணர்ச்சி பொங்கச் சொல்லும் போதே அந்த ப்ளாக் ஆடி அவர்கள் வீட்டின் முன்பாக வந்து நின்றது. வாட்டசாட்டமாக இருந்தான் ஜெகதீஷ். கொஞ்சம் கறுப்பாக இருந்தான். ஆனால் களையான முகம்.

“ஜெகா! வாடா, வா வா.”

“நீ இங்க இருக்கேன்னு எனக்குத் தெரியாது மச்சான், நீ அன்னைக்குத்தான் குடுத்த அட்ரெஸுக்கு நான் போனேன், என்ன? உங்கப்பா சமாதானம் ஆகிட்டாரா?” என்றபடி நண்பனின் வயிற்றில் குத்தினான் ஜெகதீஷ். இவர்கள் வீட்டுக் கலவரத்தையும் தங்களுக்கு எப்படித் திருமணம் ஆனது என்பதையும் ஏற்கனவே நண்பனிடம் சொல்லியிருந்தான் ரங்கராஜ்.

“சமாதானம் ஆகிட்டாரா இல்லையான்னு எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது ஜெகா, ஆனா அம்மா பாவம்.” என்றவன் நேற்று நடந்த சந்தோஷமான நிகழ்வை நண்பனிடம் பகிர்ந்து கொண்டான்.

“டேய் ராஸ்கல்! அதுக்குள்ளேவா?!” இரண்டு பேரும் இப்போது சத்தமாகச் சிரித்தார்கள். 

“உன்னை இந்த வீட்டுக்குள்ள உங்கப்பா அனுமதிச்ச ரகசியம் இதுதானா? நடத்து நடத்து!” வாசலில் நின்படியே சுற்றுப்புறம் மறந்து சிரித்தார்கள் நண்பர்கள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 12

அத்தியாயம் 12 தன் நண்பனோடு சிரித்தபடி உள்ளே வந்தான் ரங்கராஜ். அத்தனை பிஸியாக இருப்பவன் தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்ததில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வெளியே போயிருந்த மாணிக்கமும் வீடு வந்துவிட வீட்டிலிருந்த அனைவரையும் நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 4 கருத்துகள் உள்ளன

  1. மாணிக்கம் மனசு கறையுது
    காயங்கள் எல்லாம்
    மறையுது
    மாயங்கள் இங்கே நடக்குது…..

உங்கள் கருத்தைப் பகிருங்கள்