அத்தியாயம் 3
அன்று முழுவதும் ரங்கராஜின் மனதிற்குள் அத்தனை நிம்மதி இருக்கவில்லை. உண்மையைச் சொன்னால் அத்தை குடும்பத்தின் மேல் கோபம் கூட வந்தது. பல இக்கட்டான நேரங்களில் இவர்களுக்கு அவர்கள் உதவி செய்திருப்பதை அவனும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குப் பிரதி உபகாரமாக அவனையே கேட்பது எந்த வகையில் நியாயம்?
“தம்பி, டீ குடிங்க.” அவனுக்கு முன்னால் ஆவி பறக்கும் சூடான பானத்தைக் கொண்டுவந்து வைத்தார் கந்தசாமி அண்ணன். காலையிலிருந்து அவனைப் பார்த்தபடிதான் இருக்கிறார். அவன் முகம் அத்தனை நல்லதாக இல்லை.
“வீட்டுல ஏதாவது பிரச்சினையா தம்பி?” டீயை குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவர் அதற்கு மேல் பேசத் தயங்கவில்லை. ரங்கராஜும் என்ன நினைத்தானோ?! தன் மனதிலிருக்கும் பாரத்தை யாரிடமாவது இறக்கி வைக்கலாம் என்று முடிவெடுத்தான்.
“அத்தையும் மாமாவும் இன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தாங்கண்ணே.”
“ம்… என்னவாம்?”
“கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க.”
“உங்கக் கல்யாணமா? அர்ச்சனா கூடவா?”
“ம்…” பெரியவரின் கேள்வியில் இவன் ஆச்சரியப்படவில்லை. இந்த விஷயம்தான் ஊரறிந்த இரகசியமாகிவிட்டதே!
“அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க தம்பி?”
“பணம் குடுத்து உதவி இருக்காங்க, அதை நானும் மறுக்கலை, அதுக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை எங்கிட்ட இருந்து எப்பிடி அவங்க எதிர்பார்க்க முடியும்?”
“அவங்க மட்டுமில்லை, இதுக்கு உங்க வீடும் முழு ஆதரவு தெரிவிக்குது.”
“அதான் எனக்கு இன்னும் கோபம் வருதுண்ணே.” முகம் இறுகச் சொல்பவனிடம் எப்படிப் பேசுவது என்று பெரியவருக்கு விளங்கவில்லை. இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா என்று அபத்தமாகக் கேட்கவும் முடியவில்லை.
“தம்பி, கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, உங்க மனசுல வேற யாராவது இருக்காங்களா?” அவசரமாக ஓர் நொடி கந்தசாமியை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். ஆனால் பதில் சொல்லவில்லை.
“இது உங்க வாழ்க்கை தம்பி, விளையாடுற விஷயமில்லை, பணத்தைத் திருப்பிக் குடுத்துடலாம், ஆனா வாழ்க்கையைத் திருப்பி வாங்க முடியாது, நீங்க இப்போ ரொம்ப நிதானமா முடிவெடுக்க வேண்டிய நேரம், அப்பாக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது, மனசுக்குப் புடிச்சிருக்கணும்.”
“அப்பாவைத் தவிர என்னோட விருப்பத்துக்கு யாரும் மறுப்புச் சொல்லமாட்டாங்க.”
“அது எனக்கும் தெரியும், உங்க மனசுல என்ன இருக்கு?” சற்றே அழுத்திக் கேட்டார் பெரியவர். அவருக்கு ரங்கராஜ் நன்றாக வாழ வேண்டும். அவ்வளவுதான்.
“இவ்வளவு நாளும் இப்பிடியொரு எண்ணம் மனசுல இருக்கிறது எனக்கே தெரியாதுண்ணே… ஆனா… இப்போ கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதும்…”
“உங்க மாமா பொண்ணு வந்தனாவா தம்பி?” உடைத்துக் கேட்டார் கந்தசாமி. இவன் திடுக்கிட்டுப் போனான். அவனுக்கே தெரியாத அவனின் உள்ளத்து ஆசை இது. எப்படி இவருக்குத் தெரிந்தது?!
“நானும் உங்க வயசைத் தாண்டித்தான் வந்திருக்கேன், உங்களோட ஆசைகள், விருப்பு வெறுப்புகள் எனக்கும் கொஞ்சம் புரியும் தம்பி.” சட்டென ரங்கராஜின் கண்கள் ஈரமாயின. ஒரு புன்னகையோடு அவன் கரத்தைத் தட்டிக்கொடுத்தார் பெரியவர்.
“என்னை நீங்க புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு எங்கப்பா புரிஞ்சுக்கலையே!”
“உங்களுக்கு நல்லது பண்ணுறதா அவரு நினைக்கிறாரு, அவரையும் தப்புச் சொல்ல முடியாதுப்பா, ஆனா…”
“சொல்லுங்கண்ணே.”
“இது அவ்வளவு சுலபமான காரியமில்லை, உங்க மாமா வீடு இதுக்கு ஒத்துக்காது.”
“எனக்கும் அது தெரியும், அதுவுமில்லாம எங்கப்பா இதை எதிர்ப்பாங்க, குடும்பத்துக்குள்ள பெரிய விரிசல் வரும்.”
“அப்ப என்ன தம்பி செய்யப் போறீங்க?”
“தெரியலை, ஆனா ஏதாவது செய்யணும்.”
“அம்மாக்கிட்டப் பேசுங்க தம்பி.”
“இல்லைண்ணே, அம்மா பயந்திடுவாங்க, அப்பாக்கிட்ட உளறிடுவாங்க, பெரிய பிரச்சினை ஆகிடும், தடாலடியா ஏதாவது செஞ்சாத்தான் சரிவரும்.”
“தப்பா எந்த முடிவுக்கும் போயிராதீங்க!”
“இல்லைண்ணே, நான் யோசிச்சுத்தான் முடிவெடுப்பேன்.” என்றவன் அப்போதே பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான். கைகள் இயல்பாக அவனை மாமா வீட்டிற்கு அழைத்து வந்திருந்தன. ஏனோ அந்த நொடி அவன் ஆசைப்பட்ட முகத்தைப் பார்க்க வேண்டும் போல உணர்ந்தான். இந்த எண்ணம் எப்போது அவனுக்குள் முளைவிட்டது என்று அவனேக்கே புரியவில்லை.
“வாப்பா ரங்கா.” மாமாதான் வந்து வரவேற்றார். கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தான் மருமகன்.
“மாமி எங்க மாமா?”
“எல்லாரும் உள்ளதான் இருக்காங்க.” இவர்கள் இருவரும் உள்ளே வர அங்கே புன்னகையோடு வரவேற்றார் ரேவதி.
“உங்க ரெண்டு பேருக்கிட்டயும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசத்தான் நான் இப்போ வந்தேன்.”
“சொல்லுப்பா.”
“எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் மாமா, என்ஜினியருக்குப் படிக்கிறான், ஆனா இன்னும் படிப்பு முடியலை, நல்ல குடும்பந்தான்.” இவன் விளக்கிச் சொல்லவும்,
“அடடே! நமக்கு நல்லாத் தெரிஞ்சவங்கதான் ரங்கா.” என்றார் தங்கவேல் ஆர்ப்பாட்டமாக. வந்தனாவிற்கு ஏதாவது நல்ல வரன் வந்திருக்குமோ என்பது அவரது யூகம்.
“படிப்பை முடிச்சுட்டு நல்லதா ஒரு வேலையைத் தேடிக்கிட்டுக் கல்யாணம் பண்ணணும்னு நினைக்கிறான், அவனுக்கு நம்ம வீட்டுல பொண்ணு எடுக்கணும்னு ஆசை.”
“ஓ… நல்ல விஷயந்தான், என்ஜினியர் மாப்பிள்ளை எடுக்கிற அளவுக்கு நமக்கிட்ட வசதி இல்லைதான், ஆனா அவங்களா கேட்டு வரும்போது நம்ம நிலைமைத் தெரிஞ்சுதானே வருவாங்க.”
“கண்டிப்பா மாமா.”
“நான் எதுக்கும் வந்தனாக்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு…”
“இல்லை மாமா, அவங்க கேட்கிறது மீராவை.” மாமாவை முந்திக்கொண்டான் மருமகன்.
“என்னது?! மீராவா?!” தங்கவேல், ரேவதி இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“அதெப்பிடி ரங்கா, பெரியவ இருக்கும் போது சின்னவளுக்கா? அது நடக்காதுப்பா.”
“மாமா, அவங்க இப்போ கல்யாணம் பண்ணக் கேட்கலை, அதுக்கு எப்பிடியும் இன்னும் நாலைஞ்சு வருஷம் போகும், அதுக்குள்ள நீங்க வந்தனா கல்யாணத்தை முடிச்சிரலாம்.” இப்போது அங்கே ஒரு கனத்த அமைதி நிலவியது.
“ரொம்ப யோசிக்காதீங்க மாமா, நல்ல விஷயம் வீடு தேடி வரும்போது எதுக்கு வேணாம்னு சொல்றீங்க? நான் பையனைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன், எந்தக் குறையும் சொல்றதுக்கில்லை, ஆசைப்பட்டுக் கேட்கிறாங்க, அங்க போய் நம்ம பொண்ணு நல்லாத்தான் இருப்பா.”
“அதெல்லாம் சரிதான் ரங்கா, ஆனா வந்தனா இருக்கும்போது…”
“வந்தனாவைப் பத்தி நீங்க எதுக்குக் கவலைப்படுறீங்க, அவளை நான் பார்த்துக்கிறேன்.”
“அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு, என்னோட பொண்ணுங்களை நீ நல்லா பார்த்துக்குவேன்னு எனக்குத் தெரியும்.” மருமகனின் உள்மனதை அறியாத மாமா வெள்ளந்தியாகப் பதில் சொன்னார்.
“உங்க முடிவு என்ன மாமா?”
“இதுல நான் தனியா முடிவெடுக்க எதுவுமில்லை ரங்கா, உனக்கு எங்க வீட்டு நிலைமை என்னன்னு தெரியும், எனக்கு இதையெல்லாம் எடுத்துப்பண்ண உன்னைவிட்டா வேற யாரும் இல்லை, உனக்குச் சரின்னு படுறதைப் பண்ணு, நான் என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு, அதன்படி செய்றேன்.”
“நாம சரின்னு சொல்லலாம் மாமா.” என்றவன் ரேவதியின் முகத்தைப் பார்த்தான். அவர் முகத்திலும் ஆமோதிப்பே தெரிந்தது.
“நான் பையன்கிட்ட நம்ம சம்மதத்தைச் சொல்றேன், அதுக்கப்புறம் அவங்க முறையா நம்ம வீட்டுக்கு வந்து பேசட்டும்.”
“ரொம்ப நல்லதுப்பா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கையில் ட்ரேயோடு வந்தாள் வந்தனா. வீட்டில் இன்னும் யாரும் மாலைத் தேநீர் அருந்தவில்லைப் போலும். கூடவே வடையும் இருந்தது.
“அதுசரி, உங்கத்தை மீனாட்சி உங்க வீட்டுக்கு வந்தாங்களாமே? உன்னோட கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்களாம்?” இவனுக்காக ட்ரேயை நீட்டிய வந்தனாவின் கை திடுமென நடுங்கியது. சட்டென அவளது முகத்தை அண்ணார்ந்து பார்த்தான் ரங்கராஜ். இமைகளைச் சிமிட்டியவள் இவன் கண்களைத் தவிர்த்தாள். ட்ரே இலேசாக ஆடியது.
பெற்றவர்களுக்கு முதுகு காட்டி நின்றிருந்ததினால் மகளது தடுமாற்றத்தை அவர்கள் கவனிக்கவில்லை. ஆனால் இவன் நடுங்கிய ட்ரேயை சட்டென்று பிடித்தான். ட்ரேயை பிடித்த அவசரத்தில் இவன் கரம் அவள் விரலொன்றைத் தீண்டியிருந்தது. விரலை விலக்கியவளின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம். அந்தக் கண்ணீர் இவனுக்குச் சொல்லும் சேதி என்ன?!
“எடுத்துக்கோங்க தம்பி.” இது ரேவதி. எல்லோருக்கும் பரிமாறிவிட்டுப் பெண் உள்ளே போய்விட்டது.
“கல்யாணத்தை எதுக்கு இவ்வளவு அவசரமா வெக்கப் போறாங்க? இப்பதானே மூத்த பொண்ணோட கல்யாணம் முடிஞ்சிருக்கு? அடுத்ததை நிறுத்தி நிதானமா பண்ணலாமில்லை?”
“அவங்களுக்கு என்ன அவசரமோ எனக்குத் தெரியலை மாமா, திடீர்னு வந்து நின்னாங்க.” அந்த நொடி ரங்கராஜ் ஓர் தவறு செய்தான். அந்தக் கல்யாணப் பேச்சில் அவனது விருப்பமின்மையை அவன் பிரஸ்தாபிக்கத் தவறியிருந்தான். அந்தப் பேச்சே அவனுக்கு வெறுப்பை மூட்டியிருக்க என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியிருந்தான். இங்கு நடக்கும் அனைத்தையும் உள்ளே இருந்தபடி கேட்டுக்கொண்டிருந்த பெண்ணை அது காயப்படுத்தும் என அவன் சிந்திக்கவில்லை. கண்கள் கண்ணீரில் கரைய நின்றிருந்தாள் வந்தனா.
அன்று இரவு மீண்டும் அந்தப் பேச்சை ஆரம்பித்துவிட்டார் மாணிக்கம். மகனின் தயக்கம் இப்போது அவரையும் யோசிக்க வைத்தது. கண்ணை மூடிக்கொண்டு இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதம் சொல்வதை விட்டுட்டு எதற்காக இவன் காலதாமதம் செய்கிறான் என்று அவருக்கு விளங்கவில்லை. வீட்டிற்கு வரும் சீதேவியை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?!
“நீ என்ன முடிவு பண்ணியிருக்கே ரங்கா?” சாப்பாட்டு மேசையில் ஆரம்பமானது கேள்வி.
“ஏங்க, முதல்ல சாப்பிடுங்க, அப்புறமா பேசிக்கலாம்.” சொன்ன மனைவியை முறைத்தவர் மகனிடம் திரும்பினார். அவன் நிதானமாகத் தோசையைச் சட்னியில் நனைத்து விழுங்கிக் கொண்டிருந்தான். அந்த நிதானமே இவரது இரத்த அழுத்தத்தை அதிகரித்தது.
“அர்ச்சனா இந்த வீட்டுக்கும் எனக்கும் பொருத்தமா இருப்பாள்னு நீங்க நினைக்கிறீங்களாப்பா?”
“ஏன் பொருத்தமா இருக்கமாட்டா?”
“அவ்வளவு வசதியா வாழ்ந்த பொண்ணு, நம்ம வீட்டுல வந்து சுகப்படமாட்டா.”
“அவ எதுக்கு இங்க வரப்போறா? நீதானே அவங்க வீட்டுக்குப் போகப்போறே.” இவர்கள் வட்டத்தில் மாப்பிள்ளைதான் திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டில் போய் வாழ்வார்கள் என்பதால் மாணிக்கத்திற்கு அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
“எங்க இருந்தாலும் அந்தப் பொண்ணோட வாழப்போறது நான், என்னால அவங்க எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகுடுக்க முடியும்னு தோணலைப்பா.”
“அப்போ? இதுக்கு என்ன முடிவு? நீ உன்னோட மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?!”
“நீங்களே அத்தைக்கிட்டச் சொல்லிடுங்க, இந்தக் கல்யாணப் பேச்சை இத்தோட நிறுத்திடுங்க.” மகன் சொல்லி முடித்திருக்கவில்லை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை உதறித் தள்ளிய மாணிக்கம் கோபத்தின் உச்சிக்குப் போயிருந்தார்.
“உனக்கென்ன அறிவு கெட்டுப் போச்சா? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா? எவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தைத் தள்ளி உதைக்கிறேன்னு உனக்குப் புரியுதா இல்லையா?!”
“என்ன தம்பி இதெல்லாம்? அத்தை, மாமா மனசுல இப்பிடியொரு ஆசை இருக்குன்னு நமக்குத் தெரிஞ்சதுதானே? இப்பப் போயி இப்பிடிச் சொன்னா எப்பிடிப்பா?” சுலக்சனா அழவே ஆரம்பித்துவிட்டார். ஆனால் மகன் பதில் சொல்லவில்லை. ஆரம்பத்தில் தவறாகத் தெரியாத ஒன்று இப்போது தெரிகிறது என்று அவனால் விளக்க முடியவில்லை. இத்தனை நாளும் மனதுக்குள் வராத உன் அண்ணன் பெண் இப்போது என்னை இலேசாக அசைத்துப் பார்க்கிறாள் என்று அம்மாவிடம் சொல்ல முடியவில்லை. அவன் மனதை யாரும் புரிந்து கொள்ளவும் போவதில்லை.
“உங்கத்தையும் மாமாவும் நமக்கு என்னெல்லாம் பண்ணி இருக்காங்கன்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?”
“அப்பா, அது வேற இது வேறப்பா, அவங்க கடனைத் திருப்பிக் குடுக்கிறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்.”
“மண்ணாங்கட்டி! இத்தனை வருஷமா ஒரு சதம் நாம திருப்பிக் குடுக்கலை, அவங்களும் வாயைத் தொறந்து நமக்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்கலை, எதனாலென்னு நினைச்சே?”
“அது உங்க தப்புப்பா, அம்மாவோட நிலத்தை வித்து ஹோட்டல் வேலையை ஆரம்பிக்கலாம்னு அம்மா சொன்னப்போ நீங்க கேட்கலை, திவ்யா கல்யாணத்தப்பவும் தேவையில்லாத செலவுகளை இழுத்து விட்டுக்கிட்டது நீங்க, நான் அவங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிற ஒரே இடம் உங்க ஆப்பரேஷனுக்கு என்ன பண்ணுறதுன்னு நாம திக்குத் தெரியாம நின்னப்போ அவங்க பண்ணின உதவிக்கு மட்டுந்தான்.”
“ஓ! எப்ப இருந்துடா நீ இவ்வளவு சுயநலவாதியா மாறினே?”
“இது என்னோட வாழ்க்கைப்பா, அதை எனக்குப் புடிச்ச மாதிரித்தானே என்னால வாழ முடியும், நீங்க பட்ட கடனை நான் அடைக்கிறேன், அந்தக் கடமையை நான் மறக்கலை, மறுக்கலை, அதுக்காக நீங்க சொல்ற பொண்ணைத்தான் நான் கட்டிக்கணும்னு சொல்றது நியாயமில்லைப்பா.”
“உங்க அத்தையோட முகத்தைப் பார்த்து இதை எப்பிடி நான் சொல்லுவேன்?” மாணிக்கத்தின் குரல் நடுங்கியது.
“ஆரம்பத்துல இருந்தே இந்தப் பேச்சை நான் ஆமோதிக்கலை, அது அத்தைக்கும் மாமாக்கும் தெரிஞ்சிருக்கு, இல்லைன்னா ஆர்த்தி கல்யாணம் முடிஞ்ச கையோட எதுக்கு இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறாங்க?”
“…” அதன்பின் யாரும் எதுவும் பேசவில்லை. பக்கத்தில் கிடந்த எதையோ எடுத்து வீசிய மாணிக்கம் வெளியே போய்விட்டார். சுலக்சனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஷக்திக்கும் அண்ணாவின் பேச்சு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும் அவசர அவசரமாகத் தன் அறைக்குள் சென்றவள் உடனேயே திவ்யாக்கு அழைத்து நடந்து முடிந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்திருந்தாள்.
நிதானமாகக் கையைக் கழுவியவன் வீட்டின் பிற்முற்றத்து மாமரத்தின் கீழ் வந்து நின்று கொண்டான். மனம் அடங்க மறுக்கும் போதெல்லாம் அங்கே வருவது அவனது வழக்கம். நிலா வானில் காய்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நிலத்தில் வீழ்ந்து கிடந்த காய்ந்த மாமரச் சருகுகள் இவன் பாதம்பட்டுச் சத்தம் போட்டன.
“தம்பி…” அம்மாவின் கண்ணீர் குரலில் இவன் திரும்பிப் பார்த்தான்.
“என்ன தம்பி இப்பிடிச் சட்டுன்னு முடிவெடுத்துட்டே? உன்னோட மனசுல வேற யாராவது இருக்காங்களா? யாரையாவது உனக்குப் புடிச்சிருக்கா? அதாலதான் அர்ச்சனாவை வேணாம்னு சொல்றியா?”
“உங்களுக்கு அர்ச்சனாவைப் புடிச்சிருக்காம்மா?”
“தங்கமான பொண்ணுதானே தம்பி?”
“நல்ல பொண்ணுதாம்மா, நானும் இல்லேங்கலை, ஆனா அவளைப் பார்த்தா எனக்கு ஆசை வரணுமில்லைம்மா, கண்ணை மூடினா நான் அந்தப் பொண்ணோட வாழப்போற வாழ்க்கையைப் பத்திக் கனவு வரணுமில்லைம்மா? எனக்கு அப்பிடி எதுவுமே தோணலைம்மா.”
“கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் போகும் தம்பி.” இதற்கு மேல் ஓர் அம்மாவிடம் மகனால் எப்படித் தன் மனதைத் திறந்து காட்டமுடியும்?
“அவங்க நமக்கு நிறையப் பண்ணியிருக்காங்க தம்பி.”
“அதையெல்லாம் எப்பிடியாவது நான் திரும்பக் குடுத்திருவேன்மா, என்னோட வாழ்நாள் முழுசுக்கும் அத்தைக்கும் மாமாக்கும் நான் நன்றிக்கடனோட இருப்பேன், அதுக்கு ஈடா என்னோட வாழ்க்கையைக் கேட்காதீங்கம்மா.” இப்போது சுலக்சனா தேம்பி அழுதார்.
இந்தக் குடும்பத்திற்கு மீனாட்சி செய்திருக்கிறார் என்றால் அந்தக் கடனை அடைக்கும் போது மூன்று பிள்ளைகளும்தானே பங்கு பெறவேண்டும். ஆண்பிள்ளைக்கு மட்டும் குடைச்சல் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? எல்லாவற்றிற்கும் மேலாக கணவன் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவர் தங்கையிடம் பட்ட கடனை ரங்காவின் தலையில் மாத்திரம் வைப்பது சரியா? இப்படி எத்தனையோ கேள்விகள் அரிக்கவும் உள்ளே போய்விட்டார். ரங்கராஜும் அம்மாவைச் சமாதானம் செய்யவில்லை. எல்லோரும் யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டான்.
வானில் தெரிந்த நிலா அவளை அந்த நொடி அவனுக்கு நியாபகப்படுத்தியது. இன்றைக்கு எதற்காக அவள் கைகள் நடுங்கின? கண்களில் நீர் துளிர்த்தது? என்னுடைய கல்யாணப் பேச்சு அவளைக் காயப்படுத்துகிறதா? அல்லது தான் இருக்கும்போதே தங்கைக்குக் கல்யாணம் பேசுவது அவளை வாட்டியிருக்குமா? இன்றைய நாளை மீண்டும் மீட்டிப் பார்த்தான் இளவல். சரியாக அவள் வந்த போதுதான் மாமா இவனது கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். அப்போதுதான் அவள் உடைந்தாள். அப்படியென்றால் அவளுக்கும் என்மேல் அபிப்பிராயம் இருக்கிறதா?!
மனதுக்குள் கோடி பட்டாம்பூச்சிகள் பறப்பது போலிருந்தது. வாய்விட்டுப் பாடவேண்டும் போல தோன்றியது. அந்த நிலவை எட்டிப் பிடித்துவிட்டால் என்னவென்று தோன்றியது. ஒற்றைக் காலை மடித்து மாமரத்தில் சாய்ந்து கொண்டான் ரங்கராஜ். இன்றைய நாளின் மகிழ்வை அனுபவிக்க முடியாமல் அப்பா மீண்டும் அந்தப் பேச்சை ஆரம்பித்தது இவனுக்கு வருத்தமாக இருந்தது.
அவனது ஆசையை எப்படி நடத்திக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை. கந்தசாமி அண்ணன் அவனைப் புரிந்துகொண்ட அளவிற்குக் கூட அவன் வீட்டிலிருப்பவர்கள் அவனைப் புரிந்துகொள்ளவில்லையே! தன் தங்கை வீட்டை நிராகரித்துவிட்டு தங்கவேலின் வீட்டை இவன் தெரிவு செய்திருப்பது தெரிந்தால் அப்பா சுனாமியாக மாறிவிடுவார். முதலில் இவன் ஆசைக்கு மாமாவே சம்மதிக்கமாட்டார். ஆனால் மாமா மகள் என்ன சொல்லுவாள்? இந்த அத்தானை ஏற்றுக் கொள்வாளா? சரியாக அந்நேரம் அவன் அலைபேசி அழைத்தது.
“ஹலோ.”
“நான் திவ்யா பேசுறேன் ரங்கா.”
“சொல்லு.” வயதில் பெரியவள் என்றாலும் அக்காவைப் பெயர் சொல்லித்தான் இவன் அழைப்பான்.
“இப்பதான் ஷக்தி கால் பண்ணியிருந்தா, என்னடா ஆச்சு உனக்கு? ஏன் திடீர்னு இப்பிடியெல்லாம் பேசுறே?”
“ஏன்? நான் பேசினதுல அப்பிடியென்ன தப்பு இருக்கு?”
“இவ்வளவு நாளும் உனக்கு அத்தை வீட்டுலதானே பொண்ணு எடுக்கிறதா பேச்சு இருந்தது?”
“அப்பிடி யாரு சொன்னா?”
“வாய்விட்டுச் சொல்லலையே தவிர அதானே அவங்க எண்ணம்?”
“அவங்க எண்ணம் சரி, என்னோட எண்ணத்தை யாராவது யோசிச்சுப் பார்த்தீங்களா? முதல்ல ஆர்த்தின்னீங்க, அவ வேற யாரையோ காதலிச்சுக்கிட்டு வந்தா, இப்போ அர்ச்சனாங்கிறீங்க, ஒருவேளை அர்ச்சனாவும் வேற யாரையாவது காதலிச்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”
“ரங்கா, உன்னோட மனசுக்கு ஆர்த்தியைப் புடிச்சிருந்ததா?”
“ஒரு மண்ணுமில்லை, அத்தையோட பொண்ணுங்க அவங்க மனசுக்குப் புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கிறாங்க, அப்ப எனக்கு மனசுன்னு ஒன்னு இல்லையா?”
“…”
“அத்தையும் மாமாவும் கடன் குடுத்திருக்காங்க குடுத்திருக்காங்கன்னு ஆளாளுக்குப் கூப்பாடு போடுறீங்களே, ஏன்? அந்தக் கடனை அடைக்கிற பொறுப்பு உனக்கும் ஷக்திக்கும் இல்லையா? கடன்ல ஒரு பங்கு உன்னோட கல்யாணத்துக்கு வாங்கினதுதானே? அந்தக் கடனையும் நாந்தானே பொறுப்பெடுத்திருக்கேன், அதுக்காகவாவது இப்போ எங்கூட நீ நிற்கக் கூடாதா திவ்யா? இல்லை நீயும் அப்பா மாதிரித்தான் பேசப்போறியா?”
“அப்பிடியில்லை ரங்கா, சாரிடா.” தம்பியின் பேச்சிலிருந்த நியாயம் பெரியவளை வாயடைக்க வைத்திருந்தது.
“இது என்னோட கல்யாணம் திவ்யா, அது எனக்குப் புடிச்ச மாதிரி, எனக்குப் புடிச்சவளோடதான் நடக்கும், அதுல எந்த மாற்றமும் இல்லை, அதை யாரு தடுத்தாலும் சரி, உன்னால முடிஞ்சா எனக்கு சப்போர்ட் பண்ணு, இல்லைன்னா ஒதுங்கி நில்லு.”
“ஏன்டா இப்பிடிப் பேசுறே? நான் எப்பவும் உன்னோட பக்கந்தான், அப்பாக்கிட்ட நானும் பேசுறேன்.” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அம்மாவும் இரு பெண்களும் மறுநாள் ஒன்றுகூடி வீட்டில் நடந்ததை, தங்களோடு ரங்கராஜ் பேசியதை அலசி ஆராயத் தவறவில்லை.
“அர்ச்சனா நல்ல பொண்ணுதான், அதுக்காக அண்ணாக்குப் புடிக்காததை எப்பிடிப் பண்ணுறது? ஆனா அண்ணா மேலயும் தப்பு இருக்கு, இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமில்லை? அவங்க வீணா மனசுல ஆசையை வளர்த்திருக்க மாட்டாங்கல்லை?” இது ஷக்தி.
“யாரு ஆசையை வளர்த்துக்கிட்டாங்க? ஆர்த்தியா அர்ச்சனாவா? இல்லை அத்தை மாமாவா? எனக்கென்னவோ ரங்கா சொல்றது சரின்னுதான் படுது, அப்போ அவனுக்குன்னு ஒரு மனசில்லையா?” இரு பெண்களும் பேசுவதைப் பார்த்தபடி இருந்தார் சுலக்சனா. இதற்கு என்ன முடிவு என்று அவருக்குத் தெரியவில்லை.
அடுத்தநாள் மாலை ஐந்து மணிக்கு மேல் பல்கலைக்கழக வீதி வழியாகத் தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் ரங்கராஜ். அவர்கள் ஊரிலிருந்து பல்கலைக்கழகம் அரைமணி நேர பிரயாணத்தில் இருந்ததால் வந்தனா ஒவ்வொரு நாளும் பஸ்ஸில்தான் பிரயாணம் செய்வாள். மனம் அவசரமாக இறைவனிடம் விண்ணப்பம் ஒன்றை வைத்தது. அவன் ஆசையை நிறைவேற்றுவது போல பஸ் ஸ்டாப்பில் பெண் நின்றுகொண்டிருந்தது.
அடர் நீல நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். கூந்தலை ஒற்றைப் பின்னலாக்கி இருந்தாள். கண்களுக்கு எப்போதும் மை பூசுவது அவள் வழக்கம். இவன் பைக்கைக் கண்டதும் அவள் உடலில் ஓர் பரபரப்புத் தொற்றிக் கொள்வதை இவனால் கவனிக்க முடிந்தது. உள்ளுக்குள் உவகைப் பொங்க பஸ் ஸ்டாப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி பைக்கை நிறுத்தினான். கூடவே நின்றிருந்த பெண்களிடம் சொல்லிவிட்டு இவள் வர அவர்களின் கேலி இவனுக்கும் கேட்டது.
“வீட்டுக்குப் போறியா?” இவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட நண்பிகள் அனைவரும் ஏறினார்கள்.
“வந்தனா! நீ எங்கக்கூட வர்றியா இல்லை உங்கத்தான் கூட போறியா?” இப்போது கொல்லென்ற சிரிப்பு.
“நான்… கிளம்புறேன் அத்தான்…”
“தேவையில்லை, நீ எங்கூட வா, நான் ட்ராப் பண்ணுறேன்.”
“இல்லை, அது சரியா வராது.”
“எது சரியா வராது?” இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே பஸ் புறப்பட்டுவிட்டது.
“ஐயையோ! பஸ் போயிருச்சு!”
“அதான் நான் ட்ராப் பண்ணுறேன்னு சொல்றேனில்லை, எதுக்கு வொர்ரி பண்ணுறே?”
“இந்த பஸ்ஸை மிஸ் பண்ணினா டைமுக்கு வீட்டுக்குப் போக முடியாது, வீட்டுல அம்மா தேடுவாங்க.” அவள் சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கவும் அலைபேசியை எடுத்து தங்கவேலை அழைத்தான்.
“மாமா, யூனிவர்ஸிட்டி பக்கமா வந்தேன், பஸ் ஸ்டாப்பில வந்தனா நிற்கிறா, நானே கூட்டிட்டு வரட்டுமா?” அந்தப் புறம் தங்கவேல் சம்மதம் சொல்லியிருப்பார் போலும். அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் இவளையே பார்த்தான்.
“வேணாம், நான் அடுத்த பஸ்ஸுல போய்கிறேன்.” தன்னைவிட்டு ஒதுங்கி நின்றவளைப் பார்த்தபோது கோபம் வந்தது ரங்கராஜிற்கு.
“எங்கூட வர்றதுல உனக்கென்ன பிரச்சினை?”
“நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்தா யாராவது தப்பா நினைச்சுக்குவாங்க.”
“யாரு என்ன நினைச்சா நமக்கென்ன?”
“அப்பிடி என்னால நினைக்க முடியாது, உங்க அத்தை வீடு இதையெல்லாம் விரும்பாது.”
“அத்தையா? இதுக்கும் அத்தைக்கும் என்ன சம்பந்தம்?” அவன் குரலில் சுருதி ஏறியது.
“உங்க கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சிருக்கிற நேரம் இதெல்லாம் தேவையில்லாத சந்தேகங்களை உண்டு பண்ணும்.”
“தேவையில்லாத சந்தேகமில்லை, தேவையான சந்தேகந்தான்.”
“அப்பிடீன்னா?!” அவன் பேச்சு அவளுக்குப் புரியவில்லை.
“இப்பிடியே இங்க நின்னு என்னால வாக்குவாதம் பண்ண முடியாது, முதல்ல நீ ஏறு.” அவன் பேச்சை அலட்சியம் செய்து மறுப்பாகத் தலையை அசைத்தவள் அடுத்ததாக வந்த பஸ்ஸில் போய் ஏறிக்கொண்டாள். ரங்கராஜிற்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது. அவரவர் உலகத்தில் இருந்த இருவரும் தூரத்தில் நின்றிருந்த திவ்யாவைக் கவனிக்கவில்லை. திவ்யாவின் பார்வை இவர்களை வெறித்தது.






வாரி வழங்கிய பணத்துக்கு
வட்டியாக
வீட்டோட மாப்பிள்ளையா….
வந்தனா விருப்பம்
புரிந்தும்
விலகும் பெண்ணை வழிக்கு கொண்டு வரும் வழி தெரியவில்லையே….
பணத்துக்காக மகனை வீட்டோட மப்பிள்ளையாக விக்க ரெடி அப்பாக்காரர்.
Enda,solratha theliva patunu odachi solavendiyathu thane
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Nice
அருமையான பதிவு