அத்தியாயம் 4
அன்றைக்கு திவ்யாவின் மகளின் பிறந்தநாள். வீட்டளவில் கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள். கொண்டாட்டம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. நெருங்கிய சொந்தங்கள், நட்புக்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைப்பார்கள். இதுபோன்ற சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவதை மாணிக்கம் விரும்புவதில்லை.
மதிய விருந்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. மாணிக்கத்தின் வீட்டில்தான் அன்றைய விழா. ஒவ்வொரு குடும்பமாக வந்த வண்ணம் இருந்தார்கள். திவ்யா அவள் கணவன் குடும்பத்தோடு காலையிலேயே வந்துவிட்டாள். சுலக்சனாவிற்கு சம்பந்தி வீட்டுக்காரரைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.
தங்கவேல் குடும்பம் அப்போதுதான் வந்திருந்தார்கள். குழந்தைக்கென வாங்கிய பரிசுப் பொருளை மீரா கொடுக்க குட்டிப் பெண் அதை ஆசையாக வாங்கிக் கொண்டது. குழந்தையை அழகாக அலங்காரம் பண்ணியிருந்தாள் ஷக்தி. ஷக்தியும் மீராவும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் அவர்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
“அத்தைக்கிட்ட வர்றீங்களா செல்லம்.” வந்தனா குழந்தையை ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். எந்தச் சிணுங்கலும் இல்லாமல் குழந்தையும் இவளோடு ஒட்டிக் கொண்டது.
“படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது வந்தனா?” இது திவ்யா. அன்றைக்கு ரங்கராஜையும் வந்தனாவையும் ஒன்றாகப் பார்த்ததிலிருந்து திவ்யாவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. தான் பார்த்ததைத் தன் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டாள். இருவருக்குள்ளும் ஏதாவது உறவு இருந்திருந்தால் அன்றைக்கு ஏன் வந்தனா பஸ்ஸில் ஏறிப் போகவேண்டும்?! ஒருவேளை சண்டைப் போட்டிருப்பார்களோ!
“நல்லா போகுது, படிப்பு முடிஞ்ச கையோட வேலையும் கிடைச்சா நல்லாருக்கும் திவ்யா.”
“வேலை பார்க்கப்போறியா? மாமா உனக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறதா அம்மா சொன்னாங்களே?” ஆழம் பார்த்தாள் பெரியவள்.
“ஆமா! இப்ப அது ஒன்னுதான் எனக்குக் குறை, முதல்ல ஒழுங்கா ஒரு வேலைக்குப் போய் சம்பாதிக்கணும், பாவம் அப்பா, அவரோட சுமையை நான் குறைக்கணும்.”
“அப்பா பார்க்கிற மாப்பிள்ளையை வேணாம்னு சொல்லத்தான் வேலைன்னு பொய் சொல்றியா? நீ வேற யாரையாவது பார்த்து வெச்சிருக்கியா வந்தனா?” கண்களைச் சிமிட்டியபடி கேட்டாள் திவ்யா.
“நீ வேற ஏன் திவ்யா காமெடி பண்ணிக்கிட்டு, எங்க வீடு இருக்கிற நிலைமைக்கு இந்த லவ்வெல்லாம் நமக்கு செட்டே ஆகாது, எனக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை.” பட்டென்று சொல்லிவிட்டுக் குழந்தையிடம் பேச ஆரம்பித்துவிட்டவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் திவ்யா.
‘இவள் பேசுவதைப் பார்த்தால் எந்தத் தப்பான எண்ணமும் இவள் மனதில் இருப்பது போலத் தெரியவில்லையே! அன்றைக்கு இருவரும் எதேச்சையாகச் சந்தித்துக் கொண்டார்களா? ஆனால் ரங்காவின் முகத்தில் கோபம் தெரிந்ததே! எதற்காக வந்தனாவை அவன் கோபிக்க வேண்டும்?!’
“திவ்யா, கேக் வந்திருக்கு, வந்து எல்லாம் சரியா இருக்கான்னு பாரு.” என்றபடி வந்த ரங்கராஜ் அப்போதுதான் திவ்யாவோடு இருந்த வந்தனாவைக் கவனித்தான். இவளைக் கண்ட மாத்திரத்தில் அவன் முகத்தில் கோபம் முளைத்தது. ஆனால் அவன் முகத்தையே பார்க்காமல் குழந்தையோடு மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டாள் வந்தனா. இவர்களின் நாடகத்தை ஓர் சுவாரஸ்யத்தோடு பார்த்தாள் திவ்யா.
“நீ எப்போ வந்தே?” ஒற்றைப் புருவம் ஏறியிறங்கக் கேள்வி கேட்ட தம்பியையே பார்த்தாள் பெரியவள். இப்படி அவனது புருவம் ஏறியிறங்கினால் அவன் அதீத கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தம்.
“இப்பதான், கொஞ்ச நேரம் முன்னாடி.” இப்போதும் வந்தனா அவன் முகம் பார்க்கவில்லை.
“ஏன்? அதை என்னோட முகத்தைப் பார்த்துச் சொல்லமாட்டியா?”
“ரங்கா! என்னாச்சு உனக்கு? எதுக்கு அவளை இப்போ அதட்டுறே?”
“ம்ப்ச்… அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ முதல்ல வந்து கேக்கைப் பாரு.” என்றவன் ஒரு சலிப்போடு வெளியே போய்விட்டான்.
“என்னாச்சு வந்தனா? ஏன் ரங்கா உன்னைக் கோபிக்கிறான்?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை திவ்யா, அவங்க என்னைக்கு எங்கக்கூட எல்லாம் சாதாரணமாப் பேசியிருக்காங்க?” இவர்கள் பேசும் பாஷை என்னவென்று திவ்யாவிற்குப் புரியவில்லை. சந்தேகமாகப் பார்த்துவிட்டு வெளியே போய்விட்டாள்.
அதன்பிறகு மீனாட்சியின் குடும்பம் வந்துவிட்டது. ஆர்த்தி கூட தனது கணவரோடு வந்திருந்தாள். நண்பர்கள் ஒரு சிலரும் வந்திருக்க மதிய உணவைப் பரிமாறினார்கள். அர்ச்சனா தங்கத்தில் குழந்தைக்கு ஒரு பிரேஸ்லெட் அணிவித்தாள். கந்தசாமி அண்ணனும் வந்திருந்தார். விருந்துண்டு முடித்த கையோடு நண்பர்கள் சென்றுவிட குடும்பத்தினர் மாத்திரம் இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து கேக் வெட்டுவதாக ஏற்பாடாகியிருந்தது.
“கந்தசாமி, ஹோட்டல் எப்பிடிப் போகுது?” நமச்சிவாயம் பேச்சை ஆரம்பித்தார்.
“நல்லா போகுது, தம்பி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணுறாரு, இனி ராஜ் பவனுக்கு ஏறுமுகந்தான்.”
“ரொம்ப சந்தோஷம், அப்பிடியே உங்க தம்பியைக் கல்யாணமும் பண்ணிக்கச் சொல்லுங்க, வயசும் ஏறுதில்லை?” இந்தப் பேச்சை நமச்சிவாயம் இப்போது பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
“கண்டிப்பா, தம்பியோட மனசுக்குப் புடிச்ச மாதிரி பொண்ணு அமைஞ்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவாங்க.” ரங்கராஜை விட்டுக்கொடுக்காமல் பேசினார் பெரியவர்.
“ஏன்? எங்க வீட்டுல இருக்கிற பொண்ணை உங்க தம்பி மனசுக்குப் புடிக்காதா?” விளையாட்டுப் போலத்தான் கேட்டார் நமச்சிவாயம். தான் கல்யாணப் பேச்சை ஆரம்பித்து இத்தனை நாட்கள் ஆகியும் மாணிக்கம் எந்தப் பதிலும் சொல்லாதது அவருக்கு வியப்பாக இருந்தது. இன்றைக்கு மெதுவாக நூல்விட்டுப் பார்க்கலாம் என்றுதான் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் சிரிப்பிருந்தது.
“மாமா, நான் வந்தனாவைக் கட்டிக்கலாம்னு இருக்கேன்.” கந்தசாமியிடம் கேட்ட கேள்விக்குச் சம்பந்தப்பட்டவனே பதில் சொல்லவும் அந்த இடம் நிசப்தமாகிப் போனது. அதுவரை சலசலவெனப் பேசிக்கொண்டிருந்த பெண்கள் வாயைக் கப்பென்று மூடிக்கொண்டார்கள். நமச்சிவாயத்தின் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போனது.
“ரங்கா! என்ன பேசுறே நீ?!” இது மாணிக்கம். அவர் போட்ட சத்தத்தில் வீடே அதிர்ந்தது.
“என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க மாமா, என்னோட மனசுல இருக்கிறதை நான் சொன்னேன்.”
“ரங்கா, நீ நிஜமாத்தான் சொல்றியா?” இது நமச்சிவாயம். அவர் குரல் மிகவும் நிதானமாக வந்தது.
“மாப்பிள்ளை, அவன் பைத்தியக்காரன் மாதிரி என்னமோ உளர்றான், அதை நீங்க பெருசா எடுத்துக்காதீங்க.”
“இல்லை மச்சான், அன்னைக்கு ரங்கா டைம் கேட்டப்பவே இப்பிடியொரு சந்தேகம் வந்துச்சு, அவனைப் பேசவிடுங்க.”
“அவனுக்கு என்ன தெரியும் மாப்பிள்ளை?”
“எல்லாமே தெரியும், நீ சொல்லுப்பா.”
“மாமா, சாரி, நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது.”
“இல்லை, ஆனா உன்னோட மனசுல இப்பிடியொரு எண்ணம் இருக்குன்னு நீ முன்னாடியே சொல்லியிருக்கலாமே?”
“எங்கிட்ட யாரும் எதுவும் கேட்கலையே!” இவர்கள் பேசிக்கொண்டிருக்க தங்கவேலின் குடும்பம் திகைத்துப்போய் அமர்ந்திருந்தது. இந்தத் திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. கந்தசாமியைத் தவிர.
“ரொம்ப நல்லா இருக்கு ரங்கா, எங்க எல்லாரோட மனசுலயும் இந்த எண்ணம் இருக்குன்னு உனக்குத் தெரியாதா? இவ்வளவு நாளும் எதுவும் பேசாம இப்ப வந்து எங்க தலையில குண்டைத் தூக்கிப் போடுறியே?” இது மீனாட்சி. தன் அண்ணன் மகனிடம் உரிமையாகக் கேட்டார்.
“நல்லா கேளு மீனாட்சி, அந்த முட்டாளுக்குப் புரியிற மாதிரி நல்லா கேளு, அவனுக்கு வர இருக்கிற நல்ல வாழ்க்கையை அவனே கெடுத்துக்கிறான்.”
“சாரி அத்தை, நான் யாருக்கும் வாக்குக் குடுக்கலை, யார் மனசுலயும் ஆசையை வளர்க்கலை.” ஆர்த்தி, அர்ச்சனா என்று மாத்தி மாத்திப் பேசுவது நீங்கள்தான் என்று சொல்ல அவன் வாய்வரை வார்த்தைகள் வந்தன. ஆனால் ஆர்த்தி அவள் கணவரோடு வந்திருப்பதால் அந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.
“கடைசியா உன்னோட முடிவு என்ன?”
“தங்கவேல் மாமாவோட பொண்ணு வந்தனாவை எனக்குப் புடிச்சிருக்கு, நான் அவளைத்தான் கட்டிக்கப் போறேன்.”
“அது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்காது.” என்ற மாணிக்கம் யாரும் எதிர்பாராத வகையில் மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.
“ஐயையோ!” சுலக்சனா கதற கந்தசாமி ஓடிவந்து மாணிக்கத்தைப் பிடித்துக் கொண்டார். இல்லாவிட்டால் இன்னும் பல அடிகள் ரங்கராஜிற்கு விழுந்திருக்கும். அத்தனைப் பேர் முன்பாகத் தந்தை தன்னை அடித்தது பெருத்த அவமானமாகிப் போனது இளையவனுக்கு. ஆனாலும் பொறுத்துக் கொண்டான்.
“அப்பா, என்ன இதெல்லாம்? என்ன பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுதான் பண்ணுறீங்களா?” இது திவ்யா. அவளுக்குமே அப்பாவின் செய்கை அதிகமாகத் தோன்றியது.
“இந்த முட்டாள் என்ன பேசுறான்னு கேட்டியா?”
“அவன் பேசுறது தப்புன்னா வார்த்தையால சொல்லுங்க, அதை விட்டுட்டு இத்தனைப் பேரு முன்னாடி கை நீட்டுவீங்களா?”
“அவன் எவ்வளவு தூரம் என்னை அவமானப்படுத்துறான்னு உனக்குப் புரியலையா?”
“இதுல என்ன அவமானம் இருக்கு? மாமா அவங்க மனசுல இருக்கிறதைக் கேட்டாங்க, அதுக்கு ரங்கா பதில் சொல்றான், இதுல உங்க மானம் எங்க வந்துச்சு?”
“நீ புரிஞ்சுதான் பேசுறியா திவ்யா?” தங்கையின் குடும்பம் தங்களுக்குச் செய்திருக்கும் பண உதவியை அங்கே பொதுவில் சொல்ல மாணிக்கம் விரும்பவில்லை. அவரின் அத்தனைக் கோபமும் இப்போது தங்கவேல் மேல் திரும்பியது.
“என்ன தங்கவேல் இதெல்லாம்? இதுக்கு நீங்களும் உடந்தையா?!” மீண்டும் கர்ஜித்தார் மாணிக்கம்.
“இல்லை மாப்பிள்ளை, இது எதுவும் எங்களுக்குத் தெரியாது, ரங்கா மனசுல இப்பிடியொரு விஷயம் இருக்கிறது இந்த நொடி வரை எங்களுக்குத் தெரியாது.” தங்கவேல் பதறினார்.
“உம்ம பொண்ணு இடம் கொடுக்காமத்தான் இவன் இவ்வளவு தைரியமா பேசுறானா?”
“அப்பிடி ஏதாவது நடந்திருந்தா எம் பொண்ணை இங்கயே நான் வெட்டிப் போடுறேன் மாப்பிள்ளை, எங்களுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.” தங்கவேலின் குரல் கலங்கியது. இங்கே என்ன நடக்கிறது என்று புரிவதற்கே அவருக்கு முதலில் நேரம் பிடித்தது. அவருக்குத் தன் தங்கை மகன் ரங்கராஜை மிகவும் பிடிக்கும். அவன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்லியிருந்தால் இவர் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் மீனாட்சி வீட்டிலிருந்து திருமணப் பேச்சு ஆரம்பித்த பிறகு மருமகன் இப்படிப் பேசுவதை அவர் விரும்பவில்லை.
“இதுக்கு மேல இந்த விஷயத்தைப் பத்திப் பேசுறதுல எந்த அர்த்தமும் இல்லை மச்சான், நாங்க கிளம்புறோம்.” என்றபடி எழுந்தார் நமச்சிவாயம்.
“மாப்பிள்ளை, நீங்க ஏன் கிளம்புறீங்க? இந்த வீட்டைவிட்டுக் கிளம்ப வேண்டியது அவன்! இதுக்கு மேலயும் இந்த வீட்டுல அவன் இருக்கக்கூடாது, என்னோட பேச்சை மதிக்காத யாருக்கும் இந்த வீட்டுல இனி இடமில்லை, வெளியே போடா!”
“என்னங்க! என்ன பேசுறீங்க நீங்க?!” சுலக்சனா ஓவென்று அழுதார்.
“உம் பையனுக்கு இனி இந்த வீட்டுல இடமில்லை சுலோ, உனக்கு உம் பையன்தான் முக்கியம்னா நீயும் உங்கண்ணன் வீட்டுக்குக் கிளம்பு.”
“மச்சான், வார்த்தையை விடாதீங்க, குடும்பத்துக்குள்ள எதுக்கு வீணான சலசலப்பு? நீங்க உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க.” நமச்சிவாயம் நிலைமையை சீராக்கவே முனைந்தார்.
“என்னங்க பேசுறீங்க நீங்க? எல்லாரும் திட்டம் போட்டுத்தான் வேலை பார்த்திருக்காங்களா? அர்ச்சனாக்கு ரங்காவைப் பேசுறதுன்னு ஏற்கனவே முடிவாச்சு, அப்பிடியிருக்கும் போது இது என்ன திடீர் திருப்பம்? இது யாரோட ப்ளான்?” மீனாட்சி கொஞ்சம் கோணலாகப் பேச ஆரம்பித்தார். அவரது எண்ணத்தில் தங்கவேல் குடும்பத்தின் மீது சந்தேக விதைகள் முளைத்தன.
“அத்தை! நீங்க பேசுறதா இருந்தா என்னைப் பேசுங்க, அதைவிட்டுட்டு யாரையும் மறைமுகமா சாடாதீங்க, மாமா குடும்பத்துக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.”
“ஏம்மா வந்தனா, இங்க வா.” என்ற மீனாட்சி இப்போது வந்தனாவிடம் போய் அவள் கைப்பிடித்து அழைத்து வந்திருந்தார். இவ்வளவு நேரமும் அங்கே நடப்பதை உணர முடியாமல் ஒருவித திகைப்பில் மிரண்டு போயிருந்த பெண் மீனாட்சியின் இழுப்பிற்கு இழுபட்டு வந்தாள்.
“வந்தனா, நீ சொல்லு, ரங்காவைக் கட்டிக்க உனக்குச் சம்மதமா?” அத்தனை சுலபத்தில் ரங்கராஜை விட்டுக்கொடுக்க மீனாட்சிக்கு மனம் வரவில்லை. ஒட்டுமொத்தக் குடும்பத்தின் முன்பாகவும் வைக்கப்பட்ட இந்தக் கேள்வியில் வந்தனாவிற்கு நடுங்கியது. உதடுகள் பசை போட்டு ஒட்டியதைப் போல ஒட்டிக் கொண்டன. நாக்கு வறண்டு தொண்டை உலர்ந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் ரங்கராஜைப் பார்த்தாள்.
‘என்ன சொல்லப் போகிறாய்? உன் மனதிலிருக்கும் ஆசையையும் என் மனதிலிருக்கும் ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ள ஓர் அருமையான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது, அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள், என்னை மறுத்துவிடாதே!’ அவன் கண்கள் அவளிடம் இறைஞ்சின.
“அத்தை, நீங்க கேள்வி கேட்கிறதா இருந்தா ரங்காவைத்தான் கேட்கணும், எதுக்கு வந்தனாவை இதுக்குள்ள இழுத்து விடுறீங்க?”
“நீ வாயை மூடு திவ்யா! நீ சொல்லும்மா, ரங்காவைக் கட்டிக்க உனக்குச் சம்மதமா?” மீனாட்சியின் கேள்வியில் இளையவளின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. அத்தானைப் பிடிக்கவில்லை என்று எப்படி அவளால் சொல்ல முடியும்?! மனம் நிறைய ஆசையை வைத்துக்கொண்டு எப்படிப் பொய் சொல்ல முடியும்?
“அத்தானுக்கு… அத்தானுக்கு அர்ச்சனான்னு ஏற்கனவே முடிவாகிடுச்சு…”
“அது உனக்குப் புரியுது, ஆனா ரங்காக்குப் புரியலையே?”
“அவங்க… அவங்க அர்ச்சனாவைக் கட்டிக்க எனக்குச் சம்மதம்.”
“இங்க யாரும் உன்னோட சம்மதத்தைக் கேட்கலை!” மாணிக்கத்தின் குரல் உயர்ந்தது. இவளின் பதிலைக் கேட்டு ரங்கராஜ் பற்களைக் கடித்தான்.
“ரங்காவைக் கட்டிக்கிற எண்ணம் உன்னோட மனசுல துளிகூட இல்லைன்னு நீ வெளிப்படையாச் சொல்லு, அப்பவாவது அவனுக்குப் புத்தி வருதான்னு பார்ப்போம்.” மீண்டும் மீனாட்சி தன் பிடியிலேயே நின்றார்.
“அத்தை! எதுக்கு அவளைத் தேவையில்லாம இதுக்குள்ள இழுக்கிறீங்க? அதான் நான் தெளிவா எல்லாத்தையும் சொல்றேனே!”
“எனக்கு இப்போ தேவை வந்தனாவோட பதில், உன்னோட பதில் இல்லை ரங்கா.”
“நான் என்ன சொல்றேனோ அதுதான் வந்தனாவோட பதிலும், நீங்க எதுவா இருந்தாலும் எங்கிட்டப் பேசுங்க.”
“என்ன இதெல்லாம்? எதுக்காக உங்கப் பொண்ணு இவ்வளவு தயங்கிறா? இந்த விஷயத்துக்கும் உங்க குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னா உங்கப் பொண்ணு உண்மையை உடைச்சுச் சொல்லலாமே? எதுக்கு இவ்வளவு தயக்கம்? அப்போ நெருப்பில்லாம புகை வரலை!” மீனாட்சி நேராக தங்கவேலைப் பார்த்துப் பேசவும் மனிதர் ஆடிப்போய்விட்டார்.
“வந்தனா…”
“அப்பா…” அந்த ஒரு வார்த்தையில் உடைந்த பெண் அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதது. என்னை எதுவும் சொல்லச் சொல்லாதே என்று வேண்டுவது போல இருந்தது அந்த அழுகை. அந்த அழுகை அங்கிருந்த அனைவரையும் ஆட்டம்காண வைத்ததென்றால் ரங்கராஜின் முகத்தில் ஒரு பொலிவை உண்டு பண்ணியது.
“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் இந்த வீட்டுல மாப்பிள்ளை எடுக்கணும்னு எங்களுக்கொன்னும் தலையெழுத்து இல்லை மச்சான், போதும், நாங்க கிளம்புறோம், மீனாட்சி, இதுக்கு மேல எதுவும் பேச வேணாம், கிளம்பு.” நமச்சிவாயம் முடிவு போல சொல்ல அவர்கள் கிளம்பினார்கள்.
“அர்ச்சனா…” அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்தபடி சுலக்சனா அழ மென்மையாகப் புன்னகைத்தவள் அவர் கையைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். கடைசியில் அவள் சந்தேகம் உறுதியாகிவிட்டது. அத்தானுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை என்பது அவளுக்கு இலேசாகப் புரிந்ததுதான். ஆனால் அவளிடத்தில் வந்தனாவை நிறுத்திப் பார்க்கக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அப்படி என்னிடம் இல்லாதது எது இவளிடம் இருக்கிறது என்ற ஆங்காரம் வந்தது. ஆனாலும் படித்த பெண் என்பதால் அமைதியாகிவிட்டாள். இருந்தாலும் மனதுக்குள் வலித்தது.
“இதுக்கு மேல உனக்கு இந்த வீட்டுல இடமில்லை, வெளியே போடா!” மாணிக்கம் உறுமினார்.
“என்னோட தங்கச்சி வீட்டுக்கு இல்லாத இடம் இந்த வீட்டுல இனி யாருக்கும் இல்லை, எல்லாரும் வெளியே போங்க!” வாசலைக் காட்டி அவர் கர்ஜிக்க தன் காலடியில் கிடந்த மகளை உதறிவிட்டு தங்கவேலும் வெளிநடப்புச் செய்தார்.
“என்னங்க? வந்தனா…” நடுங்கியபடி கேட்டார் ரேவதி.
“நம்ம மரியாதையை விட அவங்க ஆசைகள்தான் பெருசுன்னு நினைக்கிற யாரும் நமக்கு வேணாம் ரேவதி, மீராவைக் கூட்டிக்கிட்டு வா வீட்டுக்குப் போகலாம்.” இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
“மாமா! நீங்க தப்புப் பண்ணுறீங்க, ரங்கா பண்ணின காரியத்துக்கு நீங்க வந்தனாவைத் தண்டிக்கிறது நியாயமில்லை, அத்தனைப் பேரு முன்னாடியும் ரங்கா அவளைப் புடிக்குதுன்னு சொல்லும்போது அவ எப்பிடி மறுப்பா? அவளுக்கு ரங்காவைப் புடிக்கலைன்னாலும் அவனை விட்டுக்குடுக்கக் கூடாதுன்னுதானே நினைப்பா? நானா இருந்தாலும் அதைத்தானே மாமா செய்வேன்?”
“அது உனக்குப் புரியுது, ஆனா இங்க இருக்கிற யாரும் அப்பிடிச் சொல்லமாட்டாங்க திவ்யா, திட்டம் போட்டு உன்னோட தம்பியை நாங்க வளைச்சுப் புடிச்சிட்டதாத்தான் பேச்சு வரும்.” என்றவரின் பார்வை இப்போது மாணிக்கத்தைத் தொட்டு மீண்டது.
“சில இடங்கள்ல நமக்கு நமக்குன்னு வாழவும் தெரியணும்மா, மத்தவங்க கவுரவம் முக்கியந்தான், ஆனா அதைவிட முக்கியம் நம்மளோட மானம், மரியாதை.” என்றவர் வெளியே போய்விட்டார். இவ்வளவு நேரமும் நிலத்தில் வீழ்ந்து கிடந்த வந்தனாவை இப்போது திவ்யாதான் தூக்கிவிட்டாள். மாணிக்கத்தின் குடும்பத்தைத் தவிர அங்கே மீதமாக இருந்தது வந்தனாவும் கந்தசாமி அண்ணனும்தான். திவ்யா இப்போது அவரைத்தான் பார்த்தாள்.
“வந்தனா, வாங்கம்மா.” என்றவர் வந்தனாவின் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றார். போகும்போது ரங்கராஜை ஓர் பார்வைப் பார்த்தார். அவனும் ஆமோதிப்பாகத் தலையை அசைக்க வீதிக்கு வந்தவர் ரோட்டோடு போன ஒரு ஆட்டோவை நிறுத்தி அதிலேறிக் கொண்டார். அவர் வீட்டு முகவரியை ஆட்டோ ஓட்டுபவரிடம் சொல்ல,
“நாம எங்க ஐயா போறோம்?” என்றாள் பதட்டமாக.
“எங்க வீட்டுக்குத்தாம்மா, தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க, நீங்க கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லா நடக்கும், மனசை அமைதியா வெச்சுக்கோங்க, என்னை உங்க அப்பா மாதிரி நினைச்சுக்கோங்க.” இந்த மனிதரை அவளுக்கு நன்றாகத் தெரியும். ரங்கராஜின் வலது கை என்றுகூடச் சொல்லலாம். அவரைப் பார்த்து அவள் பயப்படவில்லை. ஆனால் அன்றைய எதிர்பாராத நிகழ்வுகளினால் மனம் பதறியது. அவள் வீட்டை நினைத்து உள்ளம் கலங்கியது.
அதற்குள்ளாக அவரது வீடு வந்திருக்க இருவரும் இறங்கினார்கள். ஆட்டோவை அனுப்பிவிட்டு உள்ளே இவளை அழைத்துச் சென்றவர் முற்றத்தில் கிடந்த நாற்காலியில் அமரச் செய்தார். வீட்டினுள் போனவர் என்ன சொன்னாரோ, இரண்டு நிமிடங்களில் இவள் அம்மாவை விட மூத்த பெண்மணி ஒருவர் வந்தார்.
“உள்ள வாம்மா.” என்று அழைத்துச் சென்றார்.
“எதுக்கும் வருத்தப்படக் கூடாது, அதான் நாங்கெல்லாம் இருக்கோமில்லை?”
“நான்… எங்க வீட்டுக்குப் போறேம்மா.”
“போகலாம், ரங்கா தம்பி வந்ததுக்கு அப்புறமா போகலாம்.” என்றவர் இவளை கிச்சனுக்கு அழைத்துச் சென்றார். சூடாக டீ தயாரித்துக் கொடுத்தார். கந்தசாமியின் இரு பிள்ளைகளும் வெளியூரில் தங்கிப் படிப்பதால் வீட்டில் கணவன், மனைவி இருவரும்தான். அப்போது நேரம் மாலை நான்கு மணி. இவளைத் தனியே விடமுடியாமல் கூடவே இருந்து பேச்சுக் கொடுத்தார் கந்தசாமியின் மனைவி. அவர் பெயர் புஷ்பா.
அதேவேளை ரங்கராஜின் வீடு என்றுமில்லாத அமைதியில் காட்சியளித்தது. அதுவரை நேரமும் அங்கிருந்த அனைவரையும் தன் வார்த்தைகளால் பந்தாடிய மாணிக்கம் அப்போதுதான் வெளியே போயிருந்தார். அதுவும் சும்மா போகவில்லை. தான் மீண்டும் வீட்டுக்கு வரும்போது அவர் மகன் வீட்டில் இருக்கக் கூடாது என்று கட்டளைப் போட்டுவிட்டுப் போயிருந்தார்.
“ரங்கா! என்னப்பா இதெல்லாம்? உம்மனசுல இப்பிடியொரு எண்ணம் இருக்குன்னு எங்க யாருக்கும் தெரியாதே?” சுலக்சனா மீண்டும் அழ ஆரம்பித்தார்.
“அம்மா! நீங்க கொஞ்ச நேரம் வாயை மூடுறீங்களா? எப்பப் பார்த்தாலும் நொய் நொய்னு அழுதுக்கிட்டு, ரங்கா! நீ எங்கிட்ட உண்மையைச் சொல்லு, உனக்கு உண்மையாவே வந்தனாவைப் புடிச்சிருக்கா? இல்லைன்னா அர்ச்சனாவோட நடக்க இருக்கிற கல்யாணத்துல இருந்து தப்பிக்க இப்பிடிப் பேசுறியா?”
“என்ன திவ்யா பேசுறே? அர்ச்சனாவோட நடக்க இருக்கிற கல்யாணத்தை நிறுத்துற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லைன்னு நினைக்கிறியா? இது என்னோட வாழ்க்கை, அதுல நான் விளையாடுவேனா?”
“அப்போ எதுக்கு அன்னைக்கு வந்தனா உங்கூட வராம பஸ்ஸுல ஏறிப்போனா?”
“எப்போ? நீ என்ன பார்த்தே?” ரங்கராஜ் இலேசாக அதிர்ந்தாலும் உண்மையை மறைக்க நினைக்கவில்லை.
“அன்னைக்கு நான் உங்க ரெண்டு பேரையும் யூனி முன்னாடி பார்த்தேன், அன்னைக்கு என்னாச்சு?”
“வா உன்னை நானே வீட்டுல ட்ராப் பண்ணுறேன்னு சொன்னேன், அவ மாட்டேன்னு சொன்னா.”
“அதான் ஏன்? அவளுக்கு உம்மேல ஆசை இருந்திருந்தா நீ கூப்பிட்டதும் வந்திருப்பால்லை? உன்னை மட்டும் இந்த இடத்துல யோசிக்க முடியாது, நாங்க வந்தனாவைப் பத்தியும் யோசிக்கணும்.”
“அவளுக்கும் ஆசை மண்ணாங்கட்டி இருக்கு, ஆனா ஒத்துக்கமாட்டேங்கிறா, கேட்டா உங்கத்தை வீட்டுல உங்களுக்குக் கல்யாணம் முடிவாகிருக்குன்னு வசனம் பேசுறா, லூசுப் பொண்ணு!” ஆத்திரத்தில் வார்த்தைகளைத் துப்பினான் இளையவன்.
“அவ சொல்றதும் நியாயந்தானே தம்பி? இப்போ குடும்பத்துக்குள்ள எவ்வளவு சிக்கல், எவ்வளவு மனஸ்தாபம்! உங்கத்தையோட குடும்பமும் உங்கப்பாவும் தேவையில்லாம எங்கண்ணனை இனி எதிரி மாதிரிப் பார்ப்பாங்க.”
“அப்போ உங்களுக்கு அதான் முக்கியா போச்சில்லைம்மா? என்னோட மனசைப் பத்தி நீங்க கவலைப்படலை, இங்க இருக்கிற மத்தவங்க எதிர்த்தாலும் உங்க அண்ணன் பொண்ணைக் கட்டிக்கப் போறேன்னு நான் சொன்னா நீங்கதானேம்மா அதிகமா சந்தோஷப்படணும்?”
“அந்த சந்தோஷம் மனசு பூரா இருக்கு, ஆனா அதை நீ ஆரம்பத்துலயே சொல்லியிருக்கலாமேப்பா, சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சினையும் வந்திருக்காதே, இப்போ குடும்பங்களுக்குள்ள விரிசல் வந்திடுச்சே, உன்னையே உங்கப்பா தள்ளி வெச்சுட்டாரே!” சுலக்சனா திரும்பவும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.
“யாரு என்ன சொன்னாலும் வந்தனாவை நான் கட்டிக்கிறதுல எந்த மாற்றமும் இல்லை.”
“இப்போ என்னண்ணா பண்ணப்போறீங்க? பாவம் வந்தனா, மாமா இனி அவளை வீட்டுல சேர்த்துக்குவாங்கன்னு நான் நினைக்கலை, வேணும்னா மீராக்கு கால் பண்ணி அங்க என்ன நிலவரம்னு கேட்கவா?”
“இப்ப வேணாம் ஷக்தி, நைட்டுக்குக் கூப்பிட்டுக் கேளு, கேட்டுட்டு அதுக்கப்புறமா எனக்குச் சொல்லு.”
“கந்தசாமி அண்ணனோட வீட்டுல எத்தனை நாளைக்கு உங்களால இருக்க முடியும் ரங்கா? என்ன முடிவு பண்ணியிருக்கே? என்ன செய்யப்போறே?”
“பிரச்சினை வரும்னு தெரியும் திவ்யா, ஆனா இவ்வளவு சீக்கிரமா வரும்னு எதிர்பார்க்கலை, இன்னைக்கு நமச்சிவாயம் மாமா இந்தப் பேச்சை எடுக்காம இருந்திருக்கலாம், யோசிக்க டைம் குடுங்கன்னு கேட்டதுக்குப் பிறகும் இவ்வளவு அவசரமா எதுக்கு அதைப்பத்திப் பேசணும்?” என்றான் சலித்தபடி.
“நடந்தது நடந்து போச்சு, அடுத்தது என்னன்னு பாரு ரங்கா, பாவம் தங்கவேல் மாமா, அவரோட தலை இதுல உருளுரது ரொம்ப அநியாயம், அந்த மனுஷன் யாரோட வம்புக்கும் போனதில்லையே!”
“எங்கண்ணா யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைச்சதில்லையே.” மீண்டும் கண்ணீர் வடித்த அம்மாவை எரிச்சலாகப் பார்த்தான் மகன்.
“இப்ப நாங்களும் உங்க அண்ணனுக்கு எந்தக் கெடுதலும் நினைக்கலை, அவரோட பொண்ணைக் கட்டி நல்லாத்தான் வாழவெக்கப் போறோம், நீங்க அழுறதை முதல்ல நிறுத்துங்க, எனக்கு எரிச்சலா இருக்கு.” என்றவன் தனது அறைக்குள் போய் தேவலயான உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். முட்டிக்கொண்டு வந்த அழுகையை விழுங்கி அடக்கிக் கொண்டார் சுலக்சனா. அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?!






அத்தை பேச்சு அப்பாவின் கோவம்
அவனின் விருப்பம்
அக்காளின் தெளிவு
அம்மாவின் ஆதங்கம்…..
ஆனால் வந்தனாவின் அழுகை…..
வந்தனா அப்பா அப்படி மகளை விட்டு போனது தப்பு.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Nice
அருமையான பதிவு