arrow_back
KAADHAL PESA VAA KANNE அத்தியாயம் 5
KAADHAL PESA VAA KANNE chevron_right பகுதி 5 / 13

அத்தியாயம் 5

visibility 483
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (22 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 05

கந்தசாமி அண்ணனின் வீட்டின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினான் ரங்கராஜ். அவனது உடமைகளை ஒரு லெதர் பையில் போட்டு எடுத்து வந்திருந்தான். இன்றைய நிகழ்வுகள் வருத்தத்தைக் கொடுத்திருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். அவன் முன்னால் இருந்த பெரும் பிரச்சனைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. ஆனால் வந்தனாவை அத்தனை சுலபத்தில் தன்னால் சமாளிக்க முடியும் என்று அவன் நினைக்கவில்லை.

“வாங்க தம்பி.” இவனது பைக் சத்தம் கேட்டு வெளியே வந்தார் கந்தசாமி.

“வந்தனா எங்கண்ணே?”

“உள்ளதான் இருக்காங்க, ஒரே அழுகை, சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டந்தான் தம்பி.”

“ம்… எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு, அப்பா பேச்சை மீறாத பொண்ணு, வருத்தமாத்தானே இருக்கும்.”

“நீங்க பேசுங்க, சமாதானம் பண்ணுங்க.” உள்ளே இவனை அழைத்து வந்தவர் அந்த ரூமை காட்டினார். இவ்வளவு நேரமும் புஷ்பாவுடன் பேசிக்கொண்டிருந்தவள் இப்போதுதான் கட்டிலில் தலை சாய்த்திருந்தாள். இவன் கதவைத் திறக்கவும் பட்டென்று எழுந்துவிட்டாள்.

“அத்தான்! என்னத்தான் இதெல்லாம்? என்ன நடக்குது இங்க? எனக்கு வீட்டுக்குப் போகணும், போய் அப்பாக்கிட்ட சாரி சொல்லணும், என்னைக் கூட்டிட்டுப் போங்கத்தான், என்னால முடியலை, அப்பா என்னைத் தப்பா நினைக்கப் போறாங்க.”

“உங்கப்பா உன்னைத் தப்பா நினைப்பாங்களா?” இன்றைக்குத்தான் அவனோடு இவ்வளவு நீளமாக அவள் பேசியிருக்கிறாள். அவர்கள் பார்த்து, பேசிக்கொண்ட தருணங்கள் மிகவும் சொற்பம். அப்படியிருந்தும் இந்தப் பெண் அவன் மனதுக்குள் புகுந்திருக்கிறாளே!

“இல்லை, சத்தியமா இல்லை, ஆனாலும் அப்பா சொன்னதை இன்னைக்கு நான் கேட்கலை, அது அவங்களுக்குக் கோபத்தை உண்டு பண்ணியிருக்கும்.”

“அப்பா சொன்னதை நீ ஏன் கேட்கலை வந்தனா?” இளையவர்கள் பேசுவது அனைத்தும் வெளியே இருந்த வயதான தம்பதிகளுக்கும் கேட்டது. ரங்கராஜ் மிகவும் நல்ல பையன் என்பது அவர்களுக்குத் தெரிந்ததால் அமைதியாக இருந்தார்கள். 

“சொல்லு வந்தனா? ஏன் இன்னைக்கு அப்பா சொன்னதை நீ கேட்கலை?”

“அது…” 

“இன்னொரு பொண்ணை நான் கட்டிக்கிறதுல உனக்குச் சம்மதமில்லை, அப்பிடித்தானே?”

“அத்தான்…”

“அப்போ எனக்கும் அப்பிடித்தானே இருக்கும்? உன்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை எங்கப்பா கட்டிக்கச் சொல்றாரு, என்னால மட்டும் எங்கப்பா பேச்சை எப்பிடிப் பொண்ணே கேட்க முடியும்?”

“உங்களுக்கு அத்தனையும் பண்ணின அத்தை வீட்டோட ஆசை அது, அதை நீங்க நிறைவேத்தணும்னு உங்கப்பா சொல்றாரே!”

“அத்தனையும்னா? பணம் குடுத்திருக்காங்க, அந்தப் பணத்தைத் திருப்பிக் குடுக்க நான் எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன், காலம் முழுக்க அவங்க காலடியில நான் கிடப்பேன், அதுக்காகக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”

“இந்தப் பஞ்சாயத்துக்கு நியாயம் சொல்ல எனக்குத் தெரியாதுங்க.”

“நியாயத்தை நான் சொல்றேன், நீ எங்கூட நில்லு எனக்கு அது போதும், இன்னைக்கு அத்தனைப் பேரு முன்னாடியும் அர்ச்சனாவை நான் கட்டிக்கிறதுல உனக்குச் சம்மதம்னு சொல்றே! எப்பிடி உன்னால அப்பிடியொரு வார்த்தையைச் சொல்ல முடிஞ்சுது?”

“என்னால வேற என்ன சொல்ல முடியும்? எங்கிட்டப் பணம் இருந்தா உங்கக்கிட்டக் குடுத்து உங்க கடனை அடைங்க அத்தான்னு சொல்லலாம், அந்தக் கடனை அடைச்சுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க அத்தான்னு உரிமையா கேட்கலாம், எங்கிட்ட அதுக்குச் சக்தி இல்லையே!” கண்ணீரோடு இவள் சொல்ல வெளியே இருந்த கந்தசாமி தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். இருவரது முகத்திலும் கவலை அப்பியிருந்தது. 

“பணத்தை நான் புரட்டுறேன், நீ கவலைப்படாதே, நான் உங்கிட்டக் கேட்கிறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான், எங்கூட நில்லு, ப்ளீஸ், நீயும் என்னை விட்டுக் குடுத்திடாதே.” 

“எனக்கு அப்பாவை ஒருதடவைப் பார்க்கணும், ப்ளீஸ்.” அவளின் கண்ணீரை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

“சரி, கூட்டிட்டுப் போறேன், உங்கப்பாவைப் பார்த்துட்டு எங்கூட நீ திரும்ப வரணும், நான் சொல்றபடி கேட்கணும், புரியுதா?”

“ம்…” தலையை ஆட்டியது பெண்.‌ அவன் எண்ணம் என்னவென்று அவளுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தனக்கு இல்லையென்று நினைத்திருந்த அத்தான் தன்னருகே இருப்பது நிம்மதியாக இருந்தது. அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை மலைபோல இருந்தது. அவளுக்கு அப்பாவிடம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்.

“வெளியே வா வந்தனா.” என்றவன் ரூமைவிட்டு வெளியே வந்தான். 

“உட்காருங்க தம்பி, நீயும் உட்காரும்மா.” இருவரும் அமர்ந்தார்கள்.

“தம்பி டீ.” புஷ்பா நீட்டியதை வாங்கிக் கொண்டான்.

“என்ன தம்பி முடிவெடுத்திருக்கீங்க?”

“ரெண்டு நாள் இங்க தங்குறதுக்கு எங்களுக்கு பர்மிஷன் குடுங்கண்ணே, அதுக்குள்ள நான் வேற வீடு பார்த்திடுறேன்.”

“என்ன தம்பி பேச்சு இது? ரெண்டு நாளில்லை, ரெண்டு மாசம் வேணும்னாலும் நீங்க இங்க தாராளமா தங்கலாம், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”

“எனக்கு அது போதும்ணே.”

“வந்தனா, நீ என்ன சொல்றேம்மா?” பெரியவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விசும்ப ஆரம்பித்தது பெண். புஷ்பா அவளது கரத்தைப் பற்றிக் கொண்டார். ரங்கராஜின் முகம் அவள் அழுகையைப் பார்த்து இலேசாகச் சினந்தது. கந்தசாமி இவனைப் பார்வையாலேயே சமாதானம் செய்தார்.

“இங்கப்பாரும்மா, தம்பிக்கு நடக்க இருந்த கல்யாணத்தைத் தம்பி நிறுத்தியிருக்கு, எனக்கு அர்ச்சனாவைப் புடிக்கலைன்னு ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தாப் போதும், அந்தக் கல்யாணம் தன்னால நின்னிருக்கும், ஆனா அந்த இடத்துல தம்பி எதுக்கு உங்க பெயரை எடுத்தாங்கன்னு நீங்க விளங்கிக்கணும், சபையில உங்க பெயரைச் சொல்லலைன்னா உங்க மனசோடயே உங்க ஆசை மறைஞ்சு போயிருக்கும்மா.”

“…” வந்தனாவின் விசும்பல் இப்போது நின்றுபோனது. அந்தப் பெரியவர் சொல்வது உண்மைதானே. அத்தானைக் காதலிக்கத் தெரிந்த மனதிற்கு அதை அத்தானிடம் சொல்லவும் தைரியம் இருக்கவில்லை. தன் அப்பாவிடம் சொல்லவும் தைரியம் இருக்கவில்லை. உள்ளுக்குள்தானே அவள் ஆசை புதைந்து போயிருக்கும்!

“மாணிக்கம் ஐயாவையும் உங்கப்பாவையும் சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம்மா, அதுலயும் உங்கப்பா இந்த ஆசைக்கு எப்பவுமே சம்மதிக்கமாட்டாங்க, அவங்களோட தங்கச்சி வாழ்க்கையையும் அவங்க பார்க்கணுமில்லை?” 

“இப்பவும் அவங்க தங்கச்சியோட உறவு அவங்களுக்கு இல்லைன்னுதானே ஆகப்போகுது.”

“இந்தக் கோபமெல்லாம் எத்தனை நாளைக்கும்மா, நாளைக்குக் கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போகும், நீரடிச்சு நீர் விலகுமா?” வந்தனாவின் மனதிலிருந்த காதலை அவள் கண்களே காட்டிக் கொடுத்தது. காதல் இருக்கும் பெண் மனதைக் கரைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. தன் அத்தானை விட்டுக்கொடுக்க அவளும் தயாராக இல்லை.

“நாங்க ரெண்டு பேரும் வந்தனா வீடு வரைக்கும் போய்ட்டு வர்றோம்ணே.” 

“தம்பி, விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம், கவனம்.” கந்தசாமி எச்சரித்துத்தான் அனுப்பினார். அவர் சொன்னது போலவே இவர்களைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டார் தங்கவேல். ரேவதி கண்கலங்க நின்றிருந்தார். மீரா ஓடிவந்து அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“மாமா…”

“பேசாத ரங்கா! உம்மேல நான் ரொம்ப மரியாதை வெச்சிருந்தேன், அத்தனையையும் நாசம் பண்ணிட்டே!” குரலை உயர்த்தாமலே தன் வெறுப்பைக் காட்டினார் பெரியவர்.

“அப்பிடியென்ன தப்பு மாமா நான் பண்ணிட்டேன்? உங்க பொண்ணு மேல ஆசைப்பட்டேன், ஏன்? எனக்கு அந்த உரிமை இல்லையா?”

“அந்தத் தகுதி எனக்கு இல்லையேப்பா!” இப்போது மனிதரின் குரல் தழுதழுத்தது.

“எல்லாத்தையும் பணத்தை வெச்சு நிர்ணயம் பண்ணாதீங்க மாமா, நீங்க இவ்வளவு காலமும் நம்பிக்கை வெச்சிருந்த ரங்கா ஒரு வார்த்தை உங்கப் பொண்ணைப் புடிச்சிருக்குன்னு சொன்னதும் அந்த நம்பிக்கைக் காணாம போயிடுமா? அது எப்பிடி மாமா?”

“ரங்கா, நான் இந்த சமூகத்துக்குக் கட்டுப்பட்டு வாழுறவன், உன்னோட வயசுக்கு இந்தப் போராட்ட குணமெல்லாம் இருக்கலாம், ஆனா ரெண்டு பொண்ணுங்களோட தகப்பனா என்னால அதெல்லாம் பண்ண முடியாதுப்பா, உங்கப்பா எங்களை நோகடிப்பாரு, என்னோட தங்கச்சி அவரோட வாழணும், நான் எல்லாத்தையும் யோசிக்கணும்பா.”

“இந்த சமூகத்துக்குப் பயந்து என்னால என்னோட ஆசைகளை விட்டுக்குடுக்க முடியாது, வந்தனாக்கு என்னைப் புடிக்கலைன்னா அது வேற விஷயம், ஆனா அவளுக்கும் என்னைப் புடிச்சிருக்கு மாமா.” 

“அப்பா…” அவரின் பார்வையைத் தாங்க முடியாமல் அவர் காலடியிலேயே அமர்ந்தாள். கண்களில் கண்ணீர் வழிந்தது.

“என்னை மன்னிச்சிடுங்கப்பா, ப்ளீஸ்ப்பா, என்னை மன்னிச்சிடுங்க, அப்போ என்ன பண்ணுறதுன்னு எனக்குப் புரியலை.” கதறிய மகளை அவர் சமாதானம் செய்யவில்லை.

“காலம் முழுக்க இந்த வடுவை நீ சுமக்க வேண்டியிருக்கும் வந்தனா, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடல்லை, ரங்கா உனக்கு வேணாம்னு நீ நினைச்சா இங்கேயே இருந்துடலாம், நாளைக்கே நான் உனக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிக்கிறேன்.” இப்போது அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“மாமி, நீங்க சொல்லுங்க, உங்க மகளுக்கு நான் பொருத்தமான மாப்பிள்ளை இல்லையா?” இவன் வலியோடு கேட்கவும் ரேவதி வாய்பொத்தி அழுதார்.

“மீரா, நீ சொல்லு, உங்கக்காக்கு நான் பொருத்தமில்லையா?”

“ஏன் அத்தான் அப்பிடிச் சொல்றீங்க? எங்கப்பா வலை போட்டுத் தேடினாலும் உங்களை மாதிரி ஒரு மாப்பிள்ளையை அக்காக்குப் பார்க்க முடியாது, அது அப்பாக்கும் தெரியும், ஆனாலும் குடும்பங்கள் பிரிஞ்சிடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.” தெளிவாகப் பேசியது சின்னப் பெண். 

“அட்லீஸ்ட் நீயாவது என்னைப் புரிஞ்சுக்கிட்டயே.”

“இந்த வீட்டுல மட்டுமில்லை, உங்க வீட்டுலயும் இது எல்லாருக்கும் புரியுது, ஆனா எல்லாரும் உங்கப்பாவைப் பார்த்துப் பயப்பிடுறாங்க, அர்ச்சனாவை விட வந்தனா அவங்களுக்கு மருமகளா வர்றதைத்தானே உங்கம்மாவும் விரும்புவாங்க.” தன் இளைய பெண்ணுக்கு ஏது இத்தனை முதிர்ச்சி என்பது போல வியந்து போய் பார்த்தார் தங்கவேல். 

அதற்கு மேலும் அங்கே தாமதிக்காமல் வந்தனாவின் கரத்தைப் பிடித்துத் தன்னோடு அழைத்துக் கொண்டு பைக்கை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்துவிட்டான் ரங்கராஜ். மீரா பேசியது அவன் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. ஒரு பையில் இவள் ஆடைகளைத் திணித்து அவசரமாக வெளியே வந்தாள் மீரா. கூடவே ரேவதியும் வந்தார்.

“இதெல்லாம் எதுக்கு மீரா? உங்கக்காக்கு எல்லாம் செய்றதுக்கு எனக்குத் தெம்பிருக்கு.”

“அதுக்கில்லை அத்தான், இந்த நேரத்துல போய் உங்களால துணிமணி வாங்க முடியுமா? கல்யாணத்துக்கு வாங்கும்போது கூப்பிடுங்க, நானும் வர்றேன்.” என்றவள் கண்ணடித்துச் சிரித்தாள். ரங்கராஜின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“ரங்கா… தம்பி…” ரேவதி தடுமாறினார். வந்தனாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டார்.

“உங்க பொண்ணை நான் நல்லா பார்த்துக்குவேன் மாமி, நீங்க கவலைப்படாதீங்க, அவளை சந்தோஷமா வெச்சுக்க வேண்டியது என்னோட பொறுப்பு.” ரேவதி கண்ணீரோடு தலையை ஆட்டினார்.

“எப்போ அத்தான்? எப்பிடி அத்தான்?” 

“என்ன எப்போ?”

“எங்க முகத்தையே பார்க்காத அத்தான், எங்களோட பேசாத அத்தான், அந்த அத்தானோட மனசுக்குள்ள எங்கக்கா எப்பிடி வந்தா? எப்போ வந்தா?”

“என்னைப் பார்க்காத, என்னோட பேசாத உங்கக்கா மனசுக்குள்ள நான் எப்பிடி வந்தேன்? எப்போ வந்தேன்?”

“அதானே?!” 

“நாங்க கிளம்புறோம் மாமி.” என்றவன் மீராவின் தலையில் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

“நீ இதை யோசிச்சுக்கிட்டு இருக்காம படிக்கிற வழியைப் பாரு.” அத்தோடு பைக் போய்விட்டது. அம்மாவின் கண்களில் கண்ணீர் வழியவும் அதைத் துடைத்துவிட்டாள் சின்னப்பெண்.

“நம்ம வீட்டுல இருந்ததை விட அக்கா, அத்தானோட சந்தோஷமா இருப்பா, நீங்க கவலைப்படாதீங்கம்மா, ஆனாலும் இத்தனை நாள் அவ மனசுக்குள்ள இப்பிடியொரு ஆசை இருக்குன்னு நமக்குத் தெரியலையேம்மா!” எல்லோருடைய வியப்பும் அதுவாகத்தான் இருந்தது. 

மூத்த மகள் இல்லாத வீடு வெறிச்சென்று இருந்தது தங்கவேலிற்கு. மனது வலித்தது. சுலக்சனாவிற்குத்தான் முதலில் திருமணம் செய்து வைத்தார் தங்கவேல். அப்போதே அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டார். ஒரே ஒரு தங்கை. தன் தகுதிக்கு மீறி மாணிக்கத்தை மாப்பிள்ளையாக எடுத்தார். அதன்பிறகுதான் இவர் திருமணம் செய்து கொண்டார்.

ரங்கராஜ் பிறந்தபோது வீட்டின் முதல் ஆண்பிள்ளை என்று எல்லோரும் கொண்டாடினார்கள். தங்கவேலும் மிகவும் மகிழ்ந்தார். அவருக்குப் பிறந்தது இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால் வீட்டில் ஆண்பிள்ளை இல்லை என்ற குறையைத் தீர்த்தது அவன்தான். 

மீனாட்சி வீட்டு சம்பந்தம் இல்லாமல் இதே ரங்கராஜ் தன் மகள் மேல் பிரியமிருப்பதைச் சொல்லியிருந்தால் மனிதர் குதித்திருப்பார். ஆசையாசையாகத் தன் மகளை அவனுக்குக் கட்டிக் கொடுத்திருப்பார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே. இன்றைக்கு மூன்று குடும்பங்களும் தன் மகளால் பிரிந்து நிற்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.‌ அவர்கள் ஆசைக்குத் துணைபோக இயலவில்லை. காலம் முழுக்கத் தன் மகள் கெட்ட பெயரைச் சுமக்கப் போகிறாளே என்ற வருத்தம் அவரைத் தாக்கியது.

“அப்பா, சாப்பிடலாம் வாங்க.” 

“எனக்கு வேணாம் மீரா, நீங்க சாப்பிடுங்க.”

“அம்மாவும் இதைத்தான் சொல்றாங்க, நீங்க எந்திரிச்சு வாங்கப்பா.” என்றவள் அப்பாவின் கைப்பிடித்து டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள். ரேவதியையும் அதுபோல வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அமர வைத்தாள்.

“ரெண்டு பேரும் சாப்பிடுங்க.” அவளே உணவையும் பரிமாறினாள். உண்ண வேண்டுமே என்பதற்காக மூவரும் உண்டார்கள்.

“அப்பா… அக்கா மேல கோபமா இருக்கீங்களா?”

“இது கோபம் இல்லைம்மா, எம் பொண்ணுக்குத் தீராத பழி வந்துரப் போகுதேன்னு நான் பயப்பிடுறேன்.”

“ஒரே ரூம்ல இத்தனை வருஷமா அக்காவோட இருக்கேன், அவ மனசுல இப்பிடியொரு ஆசை இருக்குன்னு எனக்கே தெரியலைப்பா, சில நேரம் அத்தானைப் பத்தி நான் ஏதாவது கேலியா பேசினாலும் அக்கா பேசமாட்டா, அர்ச்சனாவோட கல்யாணப் பேச்சு இருந்ததால இவ மனசை மறைச்சு வெச்சிருக்காப்பா, அக்கா பாவம்பா.”

“…”

“அத்தானுக்கு இப்பிடியொரு எண்ணம் வரலைன்னா கடைசி வரைக்கும் அக்கா மனசுல இப்பிடியொரு ஆசை இருக்குன்னு நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும், அவ உங்களையெல்லாம் யோசிச்சுட்டு எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வெச்சிருந்திருப்பா.” மீரா கண்கலங்கச் சொல்லவும் ரேவதி அழுதுவிட்டார். 

“எம் பொண்ணு பொறுப்பில்லாதவ கிடையாது.” என்றார் கேவியபடி. 

“நீங்க ஆயிரந்தான் சொன்னாலும் இதை மாணிக்கம் சும்மா விடப்போறதில்லை, வந்தனாவைக் கரிச்சுக் கொட்டத்தான் போறாரு, வந்தனாக்கு இதால எவ்வளவு கெட்ட பெயர் வரும், இந்தக் கதையெல்லாம் கேட்கிறதுக்கா நான் எம் புள்ளையைக் கஷ்டப்பட்டு வளர்த்தேன்?” தங்கவேலின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

“விடுங்கப்பா, அவர் என்ன வேணும்னாலும் பேசட்டும், அதை அத்தான் பார்த்துக்குவாரு, நீங்க கவலைப்படாதீங்க.” மனதில் பாரத்தோடுதான் அன்றைய இரவை மூவரும் கடந்தார்கள்.

ரங்கராஜின் பைக் கந்தாசாமியின் வீட்டின் முன்பாக வந்து நின்றது. கையில் பையோடு இறங்கினாள் வந்தனா. மனது நிறைய பாரம் இருந்தாலும் வீட்டிற்குப் போய் வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இவளை அங்கு யாரும் தவறாக நினைக்கவில்லை என்ற எண்ணம் மனதிற்குத் தெம்பைத் தந்தது. 

“என்ன யோசனை?” அவன் இவளைக் கவனித்திருப்பான் போலும். 

“இவங்க வீட்டுல இப்பிடி வந்து தங்கிறது… அவங்களுக்குச் சிரமமா இருக்காதா?”

“அவசரத்துக்கு எனக்கு வேற இடம் தெரியலை, நான் மட்டும்னா ஹோட்டலுக்குப் போயிடுவேன், உன்னை அங்க கூட்டிட்டுப் போக முடியாது, தெரிஞ்சவங்கதானே, கந்தசாமி அண்ணனோட வொய்ஃபும் ரொம்ப நல்ல மாதிரி, ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அதுக்குள்ள நான் வேற ஏற்பாடு பண்ணிடுறேன்.” அவள் தலையை ஆட்டினாள். 

“உனக்கு எம்மேல நம்பிக்கை இருக்கில்லை வந்தனா?” இது என்ன கேள்வி என்பது போல அவனைப் பார்த்தாள் பெண்.

“சொல்லு, உனக்கு எம்மேல நம்பிக்கை இருக்கில்லை? நான் எல்லாத்தையும் சரியா பண்ணுவேன்னு உனக்குத் தெரியுமில்லை?”

“ம்…” என்றவளைப் பார்த்துப் புன்னகைக்தவன் அவளோடு உள்ளே வந்தான். புஷ்பா இரவு உணவைத் தயார் பண்ணி வைத்திருந்தார். வந்தனாவிற்கு ஒரு அறையை ஒதுக்கி இருந்தார்கள்.

“நான் ஹால்ல தூங்கிறேண்ணே.” என்றவனுக்கு ஒரு மெத்தையைக் கொண்டுவந்து போட்டார் கந்தசாமி. அந்த வீடு விசாலமாக இருந்தாலும் இரண்டு படுக்கையறைகள் மாத்திரமே இருந்தன. 

“வந்தனா.” தூங்குவதற்கு முன்பாகப் பெண்ணை அழைத்தான். இரவு ஆடைக்கு மாறியிருந்தவள் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். கந்தசாமியும் மனைவியும் விளக்குகளை அணைத்துவிட்டு ஏற்கனவே தூங்கப் போயிருந்தார்கள்.‌ வீடு நிசப்தமாக இருந்தது. 

“இங்க வா.” இவன் அழைக்கவும் வெளியே வந்தாள் பெண். இந்த உடையில் பெண்ணைப் பார்ப்பது இதுதான் முதல்முறை என்பதால் அவன் கண்கள் அவளை ஆவலோடு வருடின.

“சொல்லுங்க.” அதற்கு மேல் அந்த ரசனையான பார்வையை அவளால் தாங்க முடியவில்லை. ரங்கராஜ் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். 

“இன்னைக்கு நடந்த விஷயங்கள் எல்லாமே எதிர்பாராம நடந்தது, பிரச்சினை வரும்னு தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிரமா வரும்னு நான்‌ எதிர்பார்க்கலை, முதல்ல உங்கிட்டப் பேசணும்னு நினைச்சேன், உம்மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெளிவா தெரியணும், அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்போ உங்கப்பா என்னோட கல்யாணப் பேச்சை எடுத்தாரு, அப்போ நீ கண் கலங்கினதை நான் பார்த்தேன், ஆனா அதை மட்டும் வெச்சு என்னால முடிவெடுக்க முடியாதுன்னுதான் யூனிக்கு வந்தேன், அப்பவும் நீ எங்கூட வரலை, உன்னோட பேசுறதுக்கான சந்தர்ப்பத்தைக் குடுக்கலை.”

“இது…‌ நடக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும்…”

“அப்பிடி நீயா முடிவெடுக்கலாமா? அப்ப நான் எதுக்கு இருக்கேன்?”

“…”

“உங்கிட்டப் பேசிட்டு உங்கப்பாக்கிட்டப் பேசலாம்னு நினைச்சேன், இதெல்லாத்தையும் பண்ணிட்டு நமச்சிவாயம் மாமாகிட்ட விஷயத்தைப் பக்குவமாச் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன், ஆனா அந்த மனுஷன் எல்லாத்தையும் இன்னைக்கே போட்டு உடைச்சுட்டாரு, எனக்கு வேற வழி இருக்கலை, ஆளாளுக்கு அதையே பேசுறாங்க, அந்தப் பேச்சு வந்தாலே நீ அழுறே, எம்மனசுல என்ன இருக்குன்னு உங்கிட்டச் சொல்லவும் முடியலை, நான் வேற என்னதான் பண்ணுறதுன்னு சொல்லு?” 

“சாரி.”

“நீ சாரி சொல்லணும்னு நான் இதையெல்லாம் சொல்லலை, என்னோட மனசை நீ புரிஞ்சுக்கணும், நீயும் நானும் பார்த்திருக்கோம், அதிகம் பேசினது கூட இல்லை, உன்னை நானும் என்னை நீயும் புரிஞ்சுக்கிட்டது, அறிஞ்சுக்கிட்டது ரொம்ப சொற்பம்.” இப்போது மாத்திரம் அவள் இதழ்களில் சின்னதாக ஒரு புன்னகை வந்தது. அதைப் பார்த்ததும் இவனுக்கும் மகிழ்ச்சியாகிப் போனது.

“இன்னைக்கு நடந்த நிகழ்ச்சிகள் உனக்கு வருத்தத்தைக் குடுக்கலாம், ஆனா எனக்கு அப்பிடி எதுவுமே இல்லை, நீ எம் பக்கத்துல இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, இந்தப் பிரச்சினைக்கு இன்னைக்கே ஒரு முடிவு வந்தது எனக்கு நிம்மதியா இருக்கு.” வந்தனாவின் கண்கள் அவனை வியப்போடு பார்க்கத் தோளைக் குலுக்கினான்.

“என்னோட மனசை உங்கிட்ட நான் சொல்றேன், உங்கிட்ட எதையும் மறைக்கணும்னு எனக்குத் தோணலை.”

“உங்க வீட்டுல…” 

“எங்கப்பாவைத் தவிர அங்க யாரும் எனக்கெதிரா பேசப்போறதில்லை, உங்க வீட்டுல நமக்கெதிரா யாரும் நிற்கமாட்டாங்க, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் வந்தனா.”

“என்ன? கல்யாணமா?!” 

“வேற என்ன பண்ணலாம்னு நீ நினைக்கிறே? உன்னை இனி தனியா விட என்னால முடியாது, எங்கப்பா நாலு வார்த்தைக் காரமா பேசிட்டா உங்கப்பா உனக்கு உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடுவாரு, அவரு ரெண்டு சொட்டுக் கண்ணீர்விட்டா நீயும் அவர் பேச்சுக்குத் தலையை ஆட்டிடுவ, நான் யாரையும் நம்பத் தயாரில்லை வந்தனா.”

“அதுக்காக? யாருமே இல்லாம எப்பிடி? எனக்கு யூனி இருக்கு.”

“கல்யாணம் பண்ணினா யூனிக்குப் போக முடியாதா? நம்ம கல்யாணத்துக்குக் கண்டிப்பா உங்கப்பா வருவாரு, இப்போதைக்குப் பெருசா பண்ண முடியாது, அதுல உனக்கு ஏதாவது வருத்தமா?”

“அத்தான்…” அந்த வார்த்தையை அவள் சொல்லும்போது அப்படியொரு பரவசம் உண்டானது அவனுக்குள். கலங்கி நின்றவளின் ஒற்றைக் கரத்தைப் பிடித்தான். 

“எம்மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்லை வந்தனா, நான் எல்லாத்தையும் யோசிச்சுத்தான் பண்ணுறேன், நம்ம கல்யாணம் இப்பிடி நடக்கப்போறது எனக்கும் வருத்தந்தான், ஆனா எனக்கு வேற வழி தெரியலைம்மா, எங்கூட இந்த சமயத்துல நீ எனக்குத் துணையா நிற்கணும்னு நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன், ப்ளீஸ், புரிஞ்சுக்க முயற்சி செய்.” இப்போது அவள் கண்களில் நீர் நிறைந்தது. 

“கஷ்டமா இருக்கு.” என்றாள்.

“எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு, ஆனா என்ன பண்ண முடியும் சொல்லு, நாம ரெண்டு பேரும் ஒன்னு சேரணும்னா இதான் வழி, அந்த வழியைத் தொலைச்சுட்டு உன்னை இழக்கிறதை விட இது எவ்வளவோ பெட்டர்.” 

“…” 

“நீ போய் தூங்கு, காலையில யூனிக்கு எப்பவும் போல போகலாம், அங்க யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேணாம், இப்போதைக்கு எல்லாம் நமக்குள்ள இருந்தா போதும்.”

“ம்… மீராக்கு நான் கால் பண்ணுறேன், புக்ஸ் எல்லாம் வேணும்.”

“நான் ஏற்கனவே கால் பண்ணிட்டேன், காலையில உனக்குத் தேவையானது எல்லாத்தையும் அவ கொண்டுவந்து குடுப்பா, சரியா.”

“ம்…” 

“எதைப்பத்தியும் கவலைப்படாம தூங்கு, எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்.” அவன்‌ தனக்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறான். அம்மா, அப்பா, மீரா என யாரும் அவளோடு இப்போது இல்லை. கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டாகிவிட்டது. ஆனாலும் இவனுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் அவனை ஆழ்ந்து பார்த்துவிட்டு அறைக்குள் போய்விட்டாள். தூக்கம் அத்தனைச் சுலபத்தில் வரவில்லை என்றாலும் மனதின் பாரம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.

அடுத்தநாள் காலையிலேயே மீரா வந்துவிட்டாள். இவளது புத்தகங்கள், தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தாள். வந்தனாவும் காலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகிவிட்டாள். புஷ்பாவிற்கும் ஒன்றிரண்டு உதவிகளைச் செய்தாள்.

“அக்கா, அம்மா இதை உங்கிட்டக் குடுக்கச் சொன்னாங்க.” வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீட்டினாள் தங்கை.

“எனக்கெதுக்கு இது?” 

“அவசரத்துக்குத் தேவைப்படும்னு சொன்னாங்க, நகைகளை இப்ப கொண்டு போக வேணாம், அப்புறமா குடுக்கலாம்னு சொன்னாங்க.”

“அதெல்லாம் எதுக்கு மீரா?”

“அக்கா, உனக்கு ஒன்னும் தெரியாது, நீ சும்மா இரு, அத்தான் சொல்றபடி கேளு.” ஏற்கனவே இன்று காலை தன் மச்சினியிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டான் ரங்கராஜ். வந்தனாவை விட அவள் தங்கை படு உஷார் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.‌ 

“எப்பிடி நடக்க வேண்டிய கல்யாணம், இப்பிடி நடக்கப்போகுதேன்னு நினைக்கும் போது கவலையா இருக்கு அத்தான்.” என்று வருத்தப்பட்டாலும் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.‌ 

“கல்யாணத்துக்கு எங்களுக்கும் அழைப்பு உண்டா அத்தான்?” 

“கண்டிப்பா நான் எல்லாரையும் கூப்பிடுவேன், வர இஷ்டப்படுறவங்க வரலாம், ஆனா உங்கப்பா கண்டிப்பா வரணும், எங்கக் கல்யாணத்துக்கு அவர்தான் சாட்சிக் கையெழுத்துப் போடணும், இது என்னோட தாழ்மையான உத்தரவுன்னு அவர்கிட்டப் போய் சொல்லு.”

“ஆனாலும் இத்தனை அராஜகம் ஆகாது அத்தான்.” என்று சிரித்தபடி போய்விட்டாள் இளையவள். 

“யூனிக்கு நானே ட்ராப் பண்ணட்டுமா வந்தனா?”

“வேணாம் அத்தான், பஸ் ஸ்டாப்ல கொண்டு போய் விடுங்க.” இவ்வளவு தூரம் அவள் அனுமதித்ததே பெரிது என்பது போல அவளை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப் வரை வந்தான். உரிய பேருந்தில் அவள் ஏறிய பிறகு ரங்கராஜின் பைக் ராஜ் பவன் முன்பாக வந்து நின்றது. 

காலையிலேயே இவன் வருவதற்கு முன்பாக ஹோட்டலைத் திறந்து சமையலறையில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஹோட்டலுக்குத் தேவையான பொருட்கள் இன்னொரு பக்கம் லாரியில் வந்திறங்கியது. ரங்கராஜ் மும்முரமாக வேலைகளைப் பார்க்க ஆரம்பித்த போது மாணிக்கம் வந்து சேர்ந்தார். அப்பாவைப் பார்த்து இவன் இலேசாக அதிர்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.‌ 

நேற்று வீட்டில் நடந்த பிரச்சனைகள் எதுவும் கடையில் இருப்பவர்களுக்குத் தெரியாது என்பதால் எல்லாம் வழமைப் போல நடந்து கொண்டிருந்தன. காலைநேரப் பரபரப்பு ஆரம்பிக்கவும் ரங்கராஜ் போய் கல்லாவில் அமர்ந்து கொண்டான்.‌ வந்த அப்பாவை வாவென்று சொல்லவுமில்லை, எதுவும் பேசவுமில்லை. ஹோட்டலை ஒரு ரவுண்டு சுத்திப் பார்த்தவர் மேல் மாடிக்குச் சென்று அங்கிருந்த மேசை ஒன்றில் அமர்ந்து கொண்டார்.

நோய் நொடி என்று வந்த பிற்பாடு ஹோட்டலைத் தூக்கி மகன் கையில் கொடுத்துவிட்டார். முக்கியமான முடிவுகள் எடுப்பது என்றால் மட்டும்தான் ரங்கராஜ் இவரிடம் ஆலோசனைக் கேட்பான். ஆப்பரேஷன் செய்வதற்கு முன்பாக ஹோட்டலை மகன் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார். அப்போதே சுலக்சனாவும் அவர் பெயரிலிருந்த நிலங்களை மகன் பெயருக்கு மாற்றிவிட்டார். மகன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கைப் பலமாக இருந்தது. 

இப்போதும் நம்பிக்கைக் கெட்டுவிடவில்லை.‌ ஆனால் இதுநாள்வரை தங்கள் கைக்குள் இருந்த மகன், தாங்கள் சொல்வதைக் கேட்டு நடந்த மகன் இப்போது தன் இஷ்டத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்திருப்பது அவருக்கு அதிருப்தியை வர வைத்திருந்தது. ஹோட்டலில் வேலை செய்பவர்கள் உபசரிக்கவும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தவர் கந்தசாமி வரவும் கீழே இறங்கி வந்தார்.

“கந்தசாமி.”

“சொல்லுங்க ஐயா.” 

“ஹோட்டல் நிலவரம் என்ன?” கேள்வி புதிதாக இருக்கவும் ரங்கராஜைப் பார்த்தார் கந்தசாமி. மகனிடம் நேரடியாகக் கேட்க விருப்பமில்லாமல் தன்னிடம் மனிதர் கேட்கிறார் என்று புரிந்து போனது.

“தம்பி, அப்பா கேட்கிறாங்க.” வாடிக்கையாளர்கள் அதிகம் இல்லாததால் மகனும் பதில் சொல்லத் தயங்கவில்லை.

“ஹோட்டல் எப்பவும் போல நடக்கும் கந்தசாமிண்ணே, பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறவன் நானில்லை, ஒவ்வொரு மாசமும் அவங்க அக்கௌன்ட்டுக்குப் பணம் போடுவேன், அவங்க வரவு செலவுகளை இனி அவங்களே பார்த்துக்கட்டும், எனக்கொரு தங்கை இருக்கா, அவளுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுக்கணும், அதையும் ஒரு அண்ணனா நான் செய்வேன், அத்தை வீட்டுக்குக் குடுக்க வேண்டிய பணத்துல பாதியை ரெடி பண்ணிட்டேன், மீதியையும் கூடிய சீக்கிரம் ரெடி பண்ணிடுவேன், அவங்க யாரும் எதைப்பத்தியும் கவலைப்படத் தேவையில்லை.”

“இதுதான் அவரோட கடைசி முடிவா?” 

“என்னோட முடிவுல எந்த மாற்றமுமில்லை கந்தசாமிண்ணே, பெத்த மகனை விட தங்கச்சியோட உறவு பெருசுன்னு நினைக்கிற யாரும் எனக்கும் தேவையில்லை.” கறாராக மகன் சொல்ல அவனை உறுத்து விழித்தவர் கோபமாக வெளியேறிவிட்டார். ரங்கராஜ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மீதி வேலையைத் தொடர்ந்தான். 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 6

அத்தியாயம் 06 நேரம் காலை ஒன்பது முப்பது, திருமண பதிவாளர் அலுவலகம்.  இன்றைக்கு வந்தனா புடவைக் கட்டியிருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ.‌ அம்மா அனுப்பியிருந்த நகைகளை மீரா கொண்டுவந்து கொடுக்கவும் அவற்றையும் அணிந்திருந்தாள். ரங்கராஜ் வேஷ்டி சட்டையில் ஜம்மென்று ஆயத்தமாகி வந்திருந்தான்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 4 கருத்துகள் உள்ளன

  1. விரும்பிய பெண்ணை
    விட்டுக் கொடுக்காமல்
    வீட்டை விட்டு வந்து விடாப்பிடியாக வந்தனாவை பிடித்து கொண்டான்….
    வாழ்த்துக்கள் ரங்கா…. 💐

  2. மகன் மேல நமபிக்கை இல்லை மாணிக்கத்துக்கு,
    மீரா தெளிவா இருக்கா ,ரொமப புத்தி சாலி தான்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்