arrow_back
KAADHAL PESA VAA KANNE அத்தியாயம் 6
KAADHAL PESA VAA KANNE chevron_right பகுதி 6 / 13

அத்தியாயம் 6

visibility 473
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (23 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 06

நேரம் காலை ஒன்பது முப்பது, திருமண பதிவாளர் அலுவலகம். 

இன்றைக்கு வந்தனா புடவைக் கட்டியிருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ.‌ அம்மா அனுப்பியிருந்த நகைகளை மீரா கொண்டுவந்து கொடுக்கவும் அவற்றையும் அணிந்திருந்தாள். ரங்கராஜ் வேஷ்டி சட்டையில் ஜம்மென்று ஆயத்தமாகி வந்திருந்தான். அவனது நண்பர்கள் சிலரும் வந்திருந்தார்கள்.

கந்தசாமி அண்ணன் தனது மனைவி புஷ்பாவுடன் வந்திருந்தார். திவ்யா தன் கணவரோடு வந்திருக்க கூடவே ஷக்தியும் வந்திருந்தாள். இவர்களுக்கான நேரம் பத்து முப்பது. இன்னும் போதுமான நேரம் இருந்ததால் எல்லோரும் பேசியபடி நின்றிருந்தார்கள். மாணிக்கமும் சுலக்சனாவும் வரவில்லை. அவர்கள் வரமாட்டார்கள் என்று ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

“உங்கப்பா பண்ணுறது நியாயமில்லை திவ்யா, உங்கண்ணா அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டாங்க? அவரோட மனசுக்குப் புடிச்ச பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கக் கேட்கிறாங்க, அது ஒரு தப்பா?” திவ்யாவின் கணவன் பேச்சை ஆரம்பித்திருந்தான். 

“அப்பா எப்பவும் அப்பிடித்தாங்க, அத்தை வீடுன்னா கொஞ்சம் உசத்தி அவங்களுக்கு.” அத்தை வீட்டிடம் தாங்கள் பட்டிருக்கும் கடனைக் கணவனிடம் சொல்லவில்லை திவ்யா. 

“உங்கண்ணாவோட கல்யாணத்துக்கு நாம போறோம், உங்கப்பா போகலைன்னாலும் பரவாயில்லை, நாம போறோம்.” ரங்கராஜ் முறைப்படி எல்லோரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தான். அம்மா அப்பாவையும் விட்டுவிடவில்லை. வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையின் முன்பாக அன்று அப்பா அவனைக் கைநீட்டி அடித்தது அவனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தாலும் வீட்டிற்குப் போய் எல்லோரையும் அழைத்தான்.

“ரங்கா, என்னடா இதெல்லாம்?” அம்மா கண்ணீர்விட்டு அழுதபோதும் மாணிக்கம் அசையவில்லை. கல்லுப்போல அமர்ந்திருந்தார். 

“நான் எந்தத் தப்பும் பண்ணலைம்மா, எனக்குப் புடிச்ச பொண்ணைக் கட்டிக்கப் போறேன், உங்க பையனோட கல்யாணத்துக்கு வரப் புடிச்சிருந்தா வாங்க, இல்லைன்னா வீட்டுல இருந்தபடியே எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க.” என்றவன் கிளம்பிவிட்டான். சுலக்சனா அழுது கரைந்தது வருத்தமாக இருந்தாலும் அமைதியாக வந்துவிட்டான். 

தங்கவேல், ரேவதி தம்பதியினரையும் அவர்கள் வீடு சென்று அழைத்திருந்தான்.‌ தங்கவேல் கையொப்பம் இடாமல் அவர்கள் திருமணம் நடக்காது என்ற தகவலை ஏற்கனவே மீரா மூலமாக அனுப்பியிருந்தான். இப்போதும் அதையேதான் வலியுறுத்திச் சொன்னான். 

“யாரு வர்றாங்க வரலைங்கிறது எனக்குப் பிரச்சினை இல்லை மாமா, ஆனா நீங்க கண்டிப்பா வரணும், நீங்க வராம உங்க பொண்ணு கல்யாணம் நடக்காது.”

“நீ புரிஞ்சுதான் பேசுறியா ரங்கா? உங்கப்பா ஏற்கனவே எங்க மேல கொலை வெறியில இருப்பாரு, இப்ப இதை வேற பண்ணினா அவ்வளவுதான், உன்னை வளைச்சுப் புடிச்சு மகளுக்குக் கட்டி வெச்சுட்டேன்னு சொல்லுவாரு.” தங்கவேல் ஆவேசமாகப் பேசியதை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

“எனக்கு எதைப்பத்தியும் கவலையில்லை, யாரைப்பத்தியும் அக்கறையில்லை, நீங்க வரலைன்னா எங்கக் கல்யாணம் நடக்காது, உங்கப் பொண்ணு ஆசையா எங்கிட்டக் கேட்ட முதல் விஷயம் நீங்க எங்கக் கல்யாணத்துக்கு வரணுங்கிறதுதான், அதை நான் பண்ணியே தீருவேன், நீங்க அங்க வரலைன்னா எங்கக் கல்யாணம் இந்த வீட்டுல நடக்கும்.” சொல்லிவிட்டு ரங்கராஜ் போய்விட்டான்.

“என்ன ரேவதி இவன்?! இப்பிடிப் பேசிட்டுப் போறான்! இவனுக்கு ஏதாவது புரியுதா இல்லையா?” 

“நாம போகலாங்க.” கண்ணீர்விட்டார் பெண்ணைப் பெற்றவர்.

“என்னப் பேசுறே நீ?! எப்பிடி நடக்க வேண்டிய கல்யாணம் இது? நம்ம வீட்டோட முதல் விசேஷம், வந்தனா கல்யாணத்தை எப்பிடியெல்லாம் பண்ணணும்னு நீயும் நானும் பேசியிருப்போம், திட்டம் போட்டிருப்போம், எல்லாத்தையும் இல்லாமப் பண்ணிட்டு இப்ப வந்து நம்மளை அதிகாரம் பண்ணிட்டுப் போறான்.”

“அதிகாரம் பண்ணினாலும் அதுல நம்ம பொண்ணோட ஆசையும் இருக்குதுங்க, இப்பக்கூட வந்தனா ஆசைப்பட்டுட்டான்னுதான் இங்க வந்து நிற்குது அந்தத் தம்பி, அதைக்கூட நாம புரிஞ்சுக்கலைன்னா எப்பிடிங்க? நம்ம பொண்ணோட கல்யாணம் எப்பிடி நடந்தாலும் நாம ஆசைப்பட்ட மாதிரித்தான் அவ வாழப்போறா, நீங்க ஏன் அதை நினைச்சுப் பார்க்கலை.” 

நேரம் பத்தை நெருங்கியிருந்தது.‌ அழைத்திருந்த அனைவரும் வந்துவிட்டார்கள். தன் அப்பா, அம்மா வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் ரங்கராஜ் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. தன் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.

“அண்ணா…”

“என்ன ஷக்தி?”

“அம்மாக்கு வரணும்னு ரொம்ப ஆசை, ஆனா அப்பா வரலைன்னதும் நின்னுட்டாங்க, திவ்யா அக்காவும் அத்தானும் வந்து கூப்பிட்டப்பவும் அழுதாங்க, நீங்க அம்மாவைத் தப்பா எடுத்துக்காதீங்க.”

“பரவாயில்லைம்மா, அப்பா வரமாட்டங்கன்னு தெரியும், ஆனா அம்மா வருவாங்கன்னு கொஞ்சம் எதிர்பார்த்தேன்.”

“ஃபோட்டோ எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க.”

“ம்…” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே திவ்யாவிடம் மன்னிப்புக் கோரிக் கொண்டிருந்தாள் வந்தனா.

“திவ்யா… என்னை மன்னிச்சிடு.”

“ஹேய் வந்தனா! லூசா நீ? எதுக்கு இப்ப எங்கிட்ட மன்னிப்புக் கேட்கிறே? நீ என்ன தப்பு பண்ணினே? இல்லை ரங்காதான் என்ன தப்புப் பண்ணிட்டான்? நீங்க ஆசைப்பட்ட கல்யாணத்தை எங்கப்பா பண்ணி வெச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்காதில்லை? அவங்க புடிவாதம் புடிச்சா இவனும் தன்னோட பங்குக்கு மோதிப் பார்க்கிறான், நீ எதைப்பத்தியும் கவலைப்படாம சந்தேஷமா இரு.”

“அத்தை…”

“அம்மாதான் பாவம், அவங்களுக்கும் இங்க வரணும்னு அவ்வளவு ஆசை, ஆனா அப்பாவை மீறி எதுவும் பண்ண முடியாம அமைதியா இருக்காங்க, ஆனா கண்டிப்பா இன்னைக்கு உங்க வீட்டுக்கு வருவாங்க.” இரகசியம் பேசிய திவ்யாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் வந்தனா.

“உண்மையாவா?! அத்தை வருவாங்களா?!”

“கண்டிப்பா வருவாங்க, ரங்கான்னா அவங்களுக்கு உயிரு, அவனைப் பார்க்காமலேயே அவங்களால இருக்க முடியாது, இன்னைக்கு வராம இருப்பாங்களா?” அந்தச் செய்தி இளையவளை மகிழ்ச்சிப்படுத்தியது. 

“உங்கப்பாவை என்ன இன்னும் காணோம்?”

“கண்டிப்பா வருவாங்க திவ்யா.” மகளின் வார்த்தைகளைப் பொய்யாக்காமல் சரியாக உரிய நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக ஆட்டோவில் வந்திறங்கினார் தங்கவேல். கூடவே ரேவதி. வந்தனாவைப் பார்த்துப் புன்னகைத்தான் ரங்கராஜ்.

“வாங்க தங்கவேல்.” இது கந்தசாமி.

“பார்த்தீங்களா கந்தசாமி, என்னோட பொண்ணு கல்யாணத்துக்கு உங்களை நான் வரவேற்கிறது போக நீங்க என்னை வரவேற்கிறீங்க.” சொல்லும் போதே மனிதர் உடைந்துவிட்டார்.

“ஐயையோ! என்ன இது சின்னப்புள்ளை மாதிரி, நாம நினைச்ச மாதிரியே எல்லாக் காரியமும் நடந்தா பின்ன நம்மளைப் படைச்சவன்னு ஒருத்தன் எதுக்கு இருக்கான்? நல்ல காரியம் நடக்கும்போது எதுக்கு இப்பிடிக் கண்ணு கலங்கிக்கிட்டு.” கண்கலங்கிய பெரியவரைப் பார்த்து அத்தனைப் பேரும் அமைதியாகிவிட்டார்கள்.

“ரங்கராஜ், வந்தனா.” அழைப்பு வரவும் எல்லோரும் உள்ளே போனார்கள்.‌ தங்கவேலும் கந்தசாமியும் சாட்சிக் கையெழுத்துப் போட இளையவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது.

“மாமா.” என்று தன் அம்மானைக் கட்டிக்கொண்டான் ரங்கராஜ். விலகி விலகிப் போனாலும் இப்படித் தேடிவந்து நடந்து கொள்பவனை என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்துப் போனார் தங்கவேல். 

“இன்னைக்கு உங்களுக்கு எம்மேல வருத்தம் இருக்கலாம், ஆனா கூடிய சீக்கிரமே ஒரு நாள் உங்க பொண்ணைப் பார்த்துச் சந்தோஷப்படத்தான் போறீங்க, என்னை உங்க மூத்த மருமகன்னு கொண்டாடத்தான் போறீங்க.” என்றான் ஆரூடம் போல. அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தவர் எதுவும் பேசவில்லை.

“அப்பா…” என்று வந்த மகளின் தலையைத் தடவிக்கொடுத்தார்.

“நல்லா இரும்மா.” என்றவர் அத்தோடு கிளம்பிவிட்டார். அவரோடே ரேவதியும் போய்விட்டார். ரங்கராஜின் நண்பர்களும் சிறிது நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிட மீதமிருந்த அனைவரும் புதிய வீட்டிற்கு வந்திருந்தார்கள். 

இரண்டு நாட்கள் கந்தசாமியின் வீட்டிலிருக்கத்தான் ஆரம்பத்தில் திட்டம் போட்டிருந்தான் ரங்கராஜ். ஆனால் அவன் நினைத்தது போல அத்தனை சுலபத்தில் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. அத்தோடு திருமணப் பதிவிற்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. வேறு வழியில்லாமல் கந்தசாமியின் வீட்டில்தான் இருவரும் தங்கியிருந்தார்கள். 

சிறியதாக இருந்தாலும் வீடு அழகாக இருந்தது. இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட புதிய வீடு. வீட்டின் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருக்கிறார்.‌ நாட்டிற்கு வந்தால் தங்குவதற்கென பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்தார். ரங்கராஜின் நண்பன் ஒருவன்தான் இந்த வீட்டைப் பார்த்துக் கொடுத்திருந்தான். இந்த வருடம் இலங்கைக்கு வரும் எண்ணம் வீட்டின் சொந்தக்காரருக்கு இல்லை என்பதால் வீடு கிடைத்திருந்தது. 

“ரெண்டு பேரு தங்கிறதுன்னா பிரச்சினை இல்லை, ஆனா வீட்டுல எந்த டேமேஜும் இருக்கப்படாது.” என்று சொல்லியே கொடுத்திருந்தார்.‌ வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் ரங்கராஜ் கவலைப்படவில்லை. வீடு அத்தனைத் திருப்தியாக இருந்தது. கீழே வரவேற்பறை, கிச்சன், பாத்ரூம். மேல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகள், பாத்ரூம் என வெளிநாட்டு பாணியில் அமைந்திருந்தது வீடு. வீட்டின் ஒரு பக்கமாக வயல் பூமி இருந்தது. 

“அக்கா, வீடு சூப்பர்!” மீரா ஆர்ப்பரித்தாள். 

“ஆமா வந்தனா, ரூம் பால்கனியில இருந்து பார்த்தா வயல் அவ்வளவு சூப்பரா இருக்கு!” திவ்யாவும் பாராட்டினாள். உறவுக்காரப் பெண்கள் என்பதால் கூடியிருந்து பேச அவர்களுக்கு அவ்வளவு விஷயம் இருந்தது.

“நான் வீட்டை வீடியோ பண்ணுறேன், அம்மா பார்த்தா சந்தோஷப்படுவாங்க.” என்ற மீரா வீட்டைப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டாள். இவர்களோடு வந்த புஷ்பா எல்லோருக்கும் டீ தயாரித்தார். பகலுணவை ஹோட்டலிலிருந்து வர ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். 

“ரூம் நல்ல வசதியாத்தான் இருக்கு.” என்றபடி வந்த திவ்யா வீட்டை நோட்டம்விட்டாள். வீட்டில் ஏற்கனவே தளவாடங்கள் அனைத்தும் இருந்தன.‌ உரிமையாளர்களின் பாவனையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் ஸ்டோர் ரூமில் வைத்துப் பூட்டிவிட்டுத்தான் இவர்களுக்கும் வீட்டைக் கொடுத்திருந்தார்கள். 

சமையலறைக்குத் தேவையான பெருட்களை ரங்கராஜ் வாங்கியிருந்தான்.‌ படுக்கை விரிப்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தன. மளமளவென அவற்றைப் பிரித்த திவ்யா எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தினாள். மணமக்களது உடமைகள் இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தன. இன்று காலையில்தான் இந்த வீட்டின் சாவி கிடைத்ததால் கந்தசாமியின் வீட்டிலிருந்து கொண்டுவந்த அனைத்துப் பைகளும் பிரிக்கப்படாமலேயே இருந்தன.‌

“அதெல்லாம் நான் பண்ணிக்குவேன் திவ்யா, எதுக்கு நீ கஷ்டப்படுறே?” 

“இது எனக்குக் கஷ்டமா? என்னோட தம்பி வீடு இது, நீ அப்பிடி நகரு.” என்றவள் தன் வேலையில் கவனமானாள். வந்தனாவுடன் கூடவே மாடிக்கு வந்த புஷ்பா இப்போது சிரித்தார்.

“ஆமா, ரெண்டு ரூம் இருக்கு, இதுல எது உன்னோட ரூம்? ரங்கா எந்த ரூமை யூஸ் பண்ணுவான்?”

“அது தெரியலை… அவங்க எங்கிட்ட இன்னும் எதுவும் சொல்லலை திவ்யா.” 

“இங்கப்பாரு வந்தனா, எங்கப்பாம்மா இந்தக் கல்யாணத்துக்கு வரலை எங்கிறதால இந்தக் கல்யாணம் இல்லைன்னு ஆகிடாது, நீயும் இப்போ படிக்கிறே, அதெல்லாம் எனக்கும் புரியுது, அதுக்காக அந்த ரூம்ல நீ, இந்த ரூம்ல ரங்கா எங்கிற விளையாட்டெல்லாம் கூடாது, புரியுதா நான் என்ன செல்றேன்னு உனக்கு?” 

“இதையேதான் நானும் சொல்லணும்னு நினைச்சேன் திவ்யா, அங்க எங்க வீட்டுல ஆளுக்கொரு பக்கமா இருந்தாங்க, அதுல ஒரு நியாயம் இருந்துச்சு, முறைப்படி கல்யாணம் நடக்காம ஒன்னா இருக்க முடியாது, அதுக்காக ஆசையா பேச வர்ற பையன்கிட்டப் பேசக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?” புஷ்பா சொல்லவும் வந்தனா திடுக்கிட்டாள்.

“நாங்களும் உங்க வயசை எல்லாம் கடந்துதான் வந்திருக்கோம் வந்தனா, எங்களுக்கும் எல்லாம் புரியும்.” புஷ்பா உடைத்துப் பேசவும் இவளுக்கு ஒருமாதிரியாகிப் போனது. அவர் சொல்வதும் உண்மைதான். அவர்கள் வீட்டில் இருந்தபோது சிலநேரங்களில் ரங்கராஜ் அவளிடம் ஆசையாகப் பேச வருவான். ஆனால் வந்தனா தவிர்த்துவிடுவாள். இரு வீட்டாரின் சம்மதமின்மை ஒருபுறம் என்றால் கண்களில் காதலையும் ஆசையையும் தேக்கியபடி நெருங்குபவனிடம் இவளுக்குப் பயம்தான் வந்தது. 

“என்ன சொல்றீங்க புஷ்பா ஆன்ட்டி? இவளுக்கு அவ்வளவு கொழுப்பா? என் தம்பியைச் சுத்தல்ல விடுறாளா?” விளையாட்டாகக் கோபப்பட்டாலும் திவ்யா தன் கருத்தைச் சொல்ல மறக்கவில்லை. 

“உன்னோட படிப்பு, அவனோட கடமைகள், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் இருக்கும், அதுக்காக உங்க வாழ்க்கையை நீங்க வாழாம இருக்க முடியாது வந்தனா.”

“கூடிய சீக்கிரமே புள்ளை குட்டின்னு பெத்தாத்தானே உங்கப்பாவை மலையிறக்க முடியும், மகனை வெறுக்கலாம், பேரப் புள்ளைங்களை வெறுக்க முடியுமா?” 

“அதைச் சொல்லுங்க ஆன்ட்டி.” அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமலே இருவரின் ஆடைகளையும் அந்த அறையின் கப்போர்டில் அடுக்க ஆரம்பித்திருந்தாள். வந்தனா எந்த மறுப்பும் சொல்லவில்லை.‌ இவர்கள் என்ன சொன்னாலும் இறுதி முடிவு அவனுடையது. ரங்கராஜ் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க வேண்டும். அதுதான் அவளது முடிவும். 

அதன்பிறகு மதிய சாப்பாடு வந்துவிட்டது. சாப்பிட்டு முடிந்த கையோடு கந்தசாமியும் மனைவியும் கிளம்பிவிட்டார்கள். எந்த உதவி வேண்டுமென்றாலும் தங்களை மறக்காமல் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளைப் போட்டுவிட்டுப் போனார்கள். திவ்யாவும் அதிக நேரம் தங்கவில்லை.‌ கணவன் மகளோடு கிளம்பிவிட்டாள்.‌ ஷக்தியும் மீராவும் தங்களுக்குள் பேசியபடி அமர்ந்திருந்தார்கள். ஐந்து மணி கடந்திருக்கும்.‌ இவர்களின் வீட்டை நோக்கி ஒரு ஆட்டோ வந்தது.

“யாரு வர்றது?” மீரா எட்டிப் பார்த்தாள்.

“எங்கம்மாவா இருக்கும்.” இரகசியமாகச் சொன்னாள் ஷக்தி. 

“நிஜமாவா?!” 

“ம்… காலையிலேயே ரொம்ப அழுதாங்க, அப்பாவை மீறி அவங்களால ஒன்னும் பண்ண முடியலை, அதான் இப்போ வர்றாங்க, எங்கிட்டக் காலையிலேயே சொல்லிட்டாங்க, சாயங்காலம் ரங்கா வீட்டுக்கு நான் வருவேன்னு.”

“ஓ…” மீரா ஆச்சரியப்படும் போதுதான் ஆட்டோவைப் பார்த்துவிட்டு வெளியே வந்தாள் வந்தனா. தங்கள் வீட்டுக்கு யார் வருவது என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சுத்தமாக அவள் தங்கள் அத்தையை அப்போது எதிர்பார்க்கவில்லை. 

“அத்தை…” குரல் நடுங்க அழைத்தவள் அப்படியே மலைத்தபடி நின்றுவிட்டாள். வெளி வேலையாகச் சென்றிருந்த ரங்கராஜும் அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்தான்.‌ அவனும் அம்மாவை எதிர்பார்க்கவில்லை போலும். இரண்டொரு நொடிகள் திகைத்துப்போய் நின்றிருந்தவன் ஓடி வந்து அம்மாவின் தோளை அணைத்துக் கொண்டான். 

“சத்தியமா நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை.” என்றவனின் குரலும் கலங்கியது. 

“எப்பிடி ரங்கா? எப்பிடி என்னால வராம இருக்க முடியும்?” என்றவர் வந்தனாவைத் திரும்பிப் பார்த்து,

“என்னடீ? அப்பிடியே மலைச்சுப் போய் நின்னுட்டே? அத்தையை உள்ள வாங்கன்னு ஒரு வார்த்தைக் கூப்பிடமாட்டியா?” என்றார் புன்னகையோடு.

“அத்தை!” என்று கதறியவள் ஓடிப்போய் சுலக்சனாவைக் கட்டிக்கொண்டாள். பெரியவரின் கண்களும் கலங்கின.

“எதுக்குடி பொண்ணே அழுறே? அதான் நான் வந்துட்டேன்ல.”

“இப்பதானே வந்திருக்கீங்க, காலையில வரல்லையே!”

“சரிதான்.” என்றவர் மூக்கை உறிஞ்சினார். ஈடுகட்ட முடியாத இழப்புதான். ஆனால் அவரால் என்னதான் செய்ய முடியும்?!

“எப்பிடி நடந்திருக்க வேண்டிய கல்யாணம், எம்புள்ளையோட கல்யாணத்தை வீடியோல பார்க்கணும்னு எனக்கு விதிச்சிருக்கு.”

“சரிசரி, உள்ள வாங்க.” விட்டால் இவர்கள் இருவரும் வாசலில் நின்றபடியே ஒப்பாரி வைப்பார்கள் என்று புரிந்து போனதால் உள்ளே அழைத்துச் சென்றான் ரங்கராஜ். 

“வந்தனா, அம்மாக்கு வீட்டைச் சுத்திக்காட்டு.” 

“வாங்கத்தை, மீரா, அத்தைக்கு டீ போடு.”

“சரிக்கா.” ஷக்தியும் மீராவும் கிச்சனுக்குள் போய்விட அத்தையை மாடிக்கு அழைத்து வந்தாள்.

“அம்மாவும் அப்பாவும் வந்திருந்தாங்களா வந்தனா?”

“வந்தாங்க அத்தை, மாமா மட்டுந்தான் வரலை.” 

“வருவாங்க, எங்க போயிடப் போறாங்க, சும்மா தேவையில்லாத புடிவாதம் புடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்காரு, இதால யாருக்கு என்ன லாபம்? பெத்த புள்ளைய விடவா தங்கச்சியும் அவ பெத்த பொண்ணும் பெருசாப் போயிட்டாங்க? அன்னைக்கு அத்தனைப் பேரு முன்னாடி எம் புள்ளையைக் கை நீட்டி அடிக்கிறாரு!” என்றவர் மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார். அவர் கண்களைத் துடைத்துவிட்டவள்,

“அத்தை… நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கலைல்லை?” என்றாள் கலக்கத்துடன்.

“சத்தியமா இல்லைடா, ரங்கா மனசுல இப்பிடியொரு எண்ணம் இருக்கும்னு எங்க யாருக்குமே தெரியாது, அர்ச்சனாவைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல அவனுக்கும் விருப்பம் இருக்குன்னு ஆரம்பத்துல நான் நினைச்சுட்டேன், கல்யாணப் பேச்சை மீனாட்சி ஆரம்பிச்ச உடனே இவன் தயங்கவுந்தான் சந்தேகம் வந்துச்சு, அப்பவும் ரங்கா மனசுல நீ இருப்பேன்னு நாங்க யாரும் சத்தியமா எதிர்பார்க்கலை.” 

“அத்தான்… எங்கூட அவ்வளவா பேசினது கூட இல்லை…”

“ஓ… பேசாமத்தான் அத்தனைப் பேரு முன்னாடி வந்தனாவைத்தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னானா?” இளையவளின் காதைப் பிடித்துத் திருகியபடி சுலக்சனா கேட்கவும் வெட்கத்தோடு சிரித்தவள் அவர் தோளிலேயே சாய்ந்து கொண்டாள். அம்மாவிடம் எதையோ பேச வந்த ரங்கராஜ் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அப்படியே கதவில் சாய்ந்தபடி நின்றுவிட்டான். 

“அர்ச்சனா ரொம்ப நல்ல பொண்ணுதான், குறைன்னு சொல்ல எதுவுமில்லை, ஆனா என்னோட அண்ணன் பொண்ணே என் வீட்டுக்கு மருமகளா வர்றது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” 

“ஆனா குடும்பங்களுக்குள்ள பகை வந்திடுச்சு அத்தை.”

“எத்தனை நாளைக்குடா, எல்லாம் கூடிய சீக்கிரமே சரியாகிப் போகும், நீ அதை நினைச்சு வருத்தப்படக் கூடாது, இவங்க எல்லார் முன்னாடி நீயும் ரங்காவும் நல்லா வாழ்ந்து காட்டணும், எம் புள்ளையோட தேர்வு சூப்பர்னு எம் புருஷன் அவர் வாயால சொல்லணும், புரியுதா?”

“ம்…” 

“ரெண்டு பேரும் பேசி முடிச்சுட்டீங்களா?” திடீரெனக் கேட்ட கணவனின் குரலில் சட்டென்று விலகினாள் வந்தனா. கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தவன் இவர்களைப் பார்த்துச் சிரித்தான்.

“வீடு ரொம்ப நல்லா இருக்கு ரங்கா, இங்க இருந்து வந்தனா யூனிக்குப் போறது ஈஸியா? பஸ் இருக்கா?”

“பஸ் ஸ்டாப் அவ்வளவு தூரமில்லைம்மா, இல்லைன்னாலும் நான் ட்ராப் பண்ணிடுவேன்.”

“எல்லாத்தையும் கரெக்டா ப்ளான் பண்ணிக்கோங்க, வந்தனாவோட படிப்புக்கு எந்தத் தடங்கலும் வந்துரக்கூடாது, டிகிரி முடிச்சு அவ வேலை பார்க்கணுங்கிறது அண்ணாவோட ஆசை.”

“சரிம்மா.” 

“நான் கிளம்பட்டுமா ரங்கா, ரொம்ப நேரம் இருக்க முடியாது.”

“நீங்க இங்கதான் வர்றீங்கன்னு அப்பாக்குத் தெரியுமா?”

“தெரியாம என்ன? தெரிஞ்சுதான் இருக்கும், ஆனா என்னால அதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது, எனக்கு எந்தளவு அவர் முக்கியமோ அதேயளவு புள்ளையும் முக்கியம், அவ்வளவுதான்.” என்றவர் வந்தனாவின் கரத்தில் இரண்டு வளையல்களை அணிவித்தார்.

“என்னத்தை இதெல்லாம்?!” 

“திவ்யா கல்யாணத்தப்போ நகை வாங்கினோம், அப்ப இது ரங்காக்கு வரப்போறவளுக்குன்னு நான் வாங்கி வெச்சது.” 

“அம்மா.”

“சொல்லு ரங்கா.” 

“நீங்க எம் பேருக்கு மாத்திக் குடுத்த நிலங்களை நான் என்ன வேணும்னாலும் பண்ணலாமில்லைம்மா?”

“தாராளமா.”

“அத்தையோட வீட்டுக்கடனை அடைக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்னால முடியாத கட்டம்னா அந்த நிலத்தை விற்கிறதுக்குத் தயங்கமாட்டேன்மா.”

“எதுக்குத் தயங்கணும்? திவ்யாக்கு எல்லாம் பண்ணியாச்சு, ஷக்திக்குக் கல்யாணம் பண்ண இன்னும் காலமிருக்கு, நமக்கு உதவாத காணியும் பூமியும் எதுக்கு? நான் சொன்ன மாதிரி அப்பவே அதை வித்திருந்தா இன்னைக்கு இவ்வளவும் நடந்திருக்குமா? எம் புள்ளையோட கல்யாணத்தை…” அம்மா மீண்டும் அழ ஆரம்பிக்கவும் அவரை அணைத்துக் கொண்டான் மகன். 

“அதையே திரும்பத் திரும்பப் பேசாதீங்கம்மா, அப்பா ஏதாவது சொல்லுவார்னு இங்க வராம இருந்துடாதீங்க, அடிக்கடி வந்து எங்களோட இருக்கணும், உங்கண்ணன் பொண்ணுக்குச் சமைக்க எல்லாம் வராது போல, உங்க சமையலை நான் மிஸ் பண்ணுவேன்.”

“என்னது? சமைக்க வராதா?!”

“ஐயோ அத்தை! உங்களவுக்கு எனக்குச் சமைக்க வராதுதான், ஆனா அத்தான் சொல்ற மாதிரியெல்லாம் இல்லை.” அவள் பதிலில் அம்மாவும் மகனும் சிரித்தார்கள். சுலக்சனா கிளம்பும்போது ஷக்தியும் அவரோடு போய்விட்டாள். 

“அப்ப நானும் கிளம்புறேன்கா, ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு, சமையல் பண்ண நேரமில்லைன்னா சொல்லு, அம்மா குடுத்துவிடுவாங்க, சரியா?”

“ம்… அப்பாவை நல்லா பார்த்துக்கோ மீரா, அடிக்கடி வந்து போ.”

“சரிக்கா.” எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். நேரம் இரவு ஏழை நெருங்கியிருந்தது. பகல் ஆர்டர் பண்ணிய உணவே மீதமிருந்ததால் அதையே இருவரும் உண்டார்கள். கிச்சனை ஒழுங்கு பண்ணிவிட்டு மாடிக்கு வந்தவள் தனது அளைக்குள் புகுந்து கொண்டாள். ரங்கராஜின் அறையில்தான் அட்டாச்ட் பாத்ரூம் இருந்தது. இவளது அறையில் அந்த வசதி இருக்கவில்லை. 

இரவு உடையை எடுத்துக் கொண்டு பொது குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். கலாசாலை விழாக்களுக்குப் புடவைக் கட்டுவது வழக்கம்தான். ஆனாலும் இன்று போல நாள் முழுவதும் கட்டியிருக்கமாட்டாள். வீட்டுக்கு வந்ததும் சட்டென்று புடவையை மாற்றிவிடுவாள். இன்றைக்கு எப்போதடா புடவையை மாற்றி நைட்டிக்கு மாறுவோம் என்றிருந்தது. 

இன்றைய நாள் அவளை மிகவும் மகிழ்வித்திருந்தது. அத்தையின் வீட்டில் அன்று நடந்த குழப்பத்தின் பிற்பாடு வந்தனா மிகவும் வருத்தப்பட்டாள். அது போதாதென்று கந்தசாமியின் வீட்டில் போய் இருந்ததும் அவளுக்குச் சங்கடத்தை உண்டு பண்ணியிருந்தது. கந்தசாமி அண்ணன் ரங்கராஜுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று இவளுக்குத் தெரியும். புஷ்பாவும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இருந்தாலும் மனதுக்குள் ஒரு சங்கடம் இருந்ததுதான். 

ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. இன்று அவர்களது திருமணநாள். ஆர்ப்பாட்டமாக நடக்கவில்லை என்றாலும் அம்மாவும் அப்பாவும் வந்தது மகிழ்வாக இருந்தது. திருமணத்திற்கு வரவில்லை என்றாலும் வீட்டிற்கு அத்தை வந்தது இன்னும் பரவசமாக இருந்தது. மாணிக்கம் மாமா மாத்திரம்தான் கோபமாக இருக்கிறார். ஆனால் அது அதிக நாட்கள் நீடிக்காது என்று அவளுக்கும் தெரியும். அவருக்கு ரங்கராஜின் மேல் பாசம் அதிகம். 

தலையை நனைக்காமல் குளியலை முடித்தவள் வெளியே வந்தாள். கழுத்தில் புதிதாகத் தொங்கிய தாலி அத்தனை அழகாக இருந்தது. அன்று முழுவதும் தலையில் வைத்திருந்த மல்லிகையின் மணம் அதை நீக்கிய பிறகும் தன் பணியைச் செவ்வனே செய்தது. குளியலறைக் கதவைத் திறந்தவள் அப்படியே நின்றுவிட்டாள். அவன் அறையின் கதவில் சாய்ந்தபடி இவள் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தான் கணவன்.

“உள்ள வா வந்தனா.” சொல்லிவிட்டு அவனுடைய அறைக்குள் செல்ல இவளுக்குக் கால்கள் தடுமாறின. அவனும் குளித்து இரவு ஆடைக்கு மாறியிருந்தான். பைஜாமா அணிந்திருந்தான். குளியலுக்கு வசதியாகக் கூந்தலை உயரத்திக் கொண்டைப் போட்டிருந்தாள் பெண். அது வேறு கலைந்து போயிருந்தது. ஒழுங்காக ஒரு பின்னல் கூடப் போடவில்லை.

“என்ன யோசனை?” 

“ம்ஹூம்… ஒன்னுமில்லை.”

“இன்னைக்கு எல்லாம் நல்லா நடந்துச்சில்லை?” உன் அப்பா வரவில்லையே என்று கேட்க நினைத்தவள் கேட்கவில்லை. அவனால் முடிந்தளவு சிறப்பாக எல்லாவற்றையும் செய்திருக்கிறான். இந்நேரம் எதற்குக் குறை சொல்ல வேண்டும்?

“அத்தை இங்க வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!” அவளை அறியாமலேயே மகிழ்ச்சி அவள் குரலில் வெளிப்பட்டது. அவன் முகத்திலும் புன்னகைத் தோன்றியது. 

“அம்மா அடிக்கடி இங்க வருவாங்க, அவங்களால என்னைப் பார்க்காம இருக்க முடியாது.”

“நீங்களும் உங்க வீட்டுக்கு அடிக்கடி போகணும் அத்தான், உங்கப்பா கோபம் ரொம்ப நாள் நீடிக்காது.”

“அது தெரிஞ்ச கதைதானே.” என்றவன் இவளருகில் வந்தான்.‌ பிரச்சனை நடந்த மறுநாளே மாணிக்கம் ஹோட்டலுக்கு வந்ததை இவளிடம் அவன் சொல்லவில்லை. கந்தசாமி அண்ணனையும் சொல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டான். 

மனைவியின் அருகே வந்தவனின் விழிகள் அவளை ஆசையோடு தழுவின. அந்தப் பார்வை உள்ளுக்குள் படபடப்பை உண்டுபண்ண வந்தனா தலையைக் குனிந்து கொண்டாள். கந்தசாமி அண்ணனின் வீட்டில் இருந்தபோது இரவு வேளைகளில் இப்படித் தனியே அழைத்துப் பேசுவான். இதுபோல ரசனையாகப் பார்ப்பதும் உண்டு. ஆனால் அந்தப் பார்வையை எதிர்கொள்ளும் தைரியம் இவளிடம் இருந்ததில்லை. ஓரிரு முறை கையைப் பிடித்ததும் உண்டு. இப்போது அவன் ஒற்றை விரல் அவள் கன்னம் தீண்டவும் பெண் திடுக்கிட்டது. கண்கள் அலைப்புற்றன.

“ஏன்?”

“…” அவளிடம் பதிலில்லை. எதிர்பார்த்ததுதான். இன்றைக்கு திவ்யாவும் புஷ்பாவும் கூட இதைத்தானே சொன்னார்கள். கன்னம் தடவிய விரல் கழுத்துக்குத் தாவியது. சிலிர்த்தவள் விலகி ஜன்னலை நோக்கி நடந்தாள். மூடியிருந்த ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த வயல் கொள்ளை அழகாக இருந்தது.‌ அவள் பின்னே வந்து நின்றபடி அந்த ஜன்னலைத் திறந்துவிட்டான். இரவு நேரத் தென்றல் அவர்களை இதமாகத் தழுவியது. ரங்கராஜின் கரங்கள் இரண்டும் வந்தனாவைத் தழுவிக் கொண்டன.

“அத்தான்…”

“ம்…” அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதவன் போல மனைவியைத் தன் புறமாகத் திருப்பியவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“இது… இப்போ…” அவள் தடுமாறினாள். சரியா என்று தெரியவில்லை. ஆனால் தடுக்கவும் மனம் வரவில்லை.

“கந்தசாமி அண்ணனோட வீட்டுல இருக்கும்போது நைட்ல சில நேரம் உன்னைக் கூப்பிட்டுப் பேசுவேன்ல?”

“ம்…” 

“பேசிட்டு நீ ரூமுக்குப் போகும்போது அவ்வளவு ஆசையா இருக்கும், அப்பிடியே உன்னை இழுத்துக் கட்டிக்கலாமான்னு தோணும்.” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். சில நொடிகள் அந்த ஸ்பரிசத்தை அனுபவித்தவன் கழுத்தில் முகம் புதைத்தான்.

“பூ வாசம் இன்னும் இருக்கு வந்தனா.” என்றவன் இப்போது அவள் முகம் பார்த்தான். அடுத்து நடக்க இருப்பதற்கு அவள் சம்மதம் அவனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் அந்தக் கண்களில் இலேசான கலக்கம் தெரிந்தது.

“என்னடா?”

“அத்தான்… உங்களுக்கு என்னைப் புடிக்குமில்லை?” அவள் கேள்வியில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவளுக்குள் இப்படியொரு கேள்வி இருப்பதை அவனும் உணர்ந்திருக்கிறான்.

“இந்தக் கேள்விக்கான பதிலை நாளைக்கு வார்த்தையா சொல்றேன், இப்போ செயல்ல காமிக்கிறேன்.” என்றவன் வந்தனாவின் கணவனாக மாறியிருந்தான். பணிந்து போவதைத் தவிர அவளுக்கும் வேறெதுவும் தோன்றவில்லை. அவள் ஆசைப்பட்ட அத்தான்! அந்த எண்ணம் மாத்திரம்தான் அவள் சிந்தையை அந்த நொடி வியாபித்திருந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 7

அத்தியாயம் 07 வந்தனாவை அணைத்தபடி படுத்துக்கிடந்தான் ரங்கராஜ்.‌ முகம் முழுவதும் மலர்ந்து போயிருந்தது. தனக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளின் கலைந்த கூந்தலை மென்மையாக ஒதுக்கிவிட்டான். இவன் ஸ்பரிசத்தில் அவள் தேகம் கூசியது. ரங்கராஜுக்கு இப்போது சிரிப்பு வந்தது. இந்தப் பெண்ணைத் தனக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 4 கருத்துகள் உள்ளன

  1. அதிரடி தான் அடுத்து அடுத்து என்று ….
    தந்தை தவிர்த்து தாய் வந்துது
    தாங்காத சந்தோஷம்….
    திருமணம் முடிந்து
    தாம்பத்தியம் தொடங்கி…..
    திருப்த்தி தான்…..

உங்கள் கருத்தைப் பகிருங்கள்