arrow_back
KAADHAL PESA VAA KANNE அத்தியாயம் 7
KAADHAL PESA VAA KANNE chevron_right பகுதி 7 / 13

அத்தியாயம் 7

visibility 452
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (18 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 07

வந்தனாவை அணைத்தபடி படுத்துக்கிடந்தான் ரங்கராஜ்.‌ முகம் முழுவதும் மலர்ந்து போயிருந்தது. தனக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளின் கலைந்த கூந்தலை மென்மையாக ஒதுக்கிவிட்டான். இவன் ஸ்பரிசத்தில் அவள் தேகம் கூசியது. ரங்கராஜுக்கு இப்போது சிரிப்பு வந்தது.

இந்தப் பெண்ணைத் தனக்கு இவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியாது. மீனாட்சி அத்தையின் வீட்டுப் பேச்சு வரும்போதெல்லாம் யாருக்கு வந்த விருந்தோ என்று கடந்து போய்விடுவான். அப்போதெல்லாம் அந்தப் பேச்சும் அவனைப் பாதித்ததில்லை, இந்தப் பெண்ணும் அவனுக்குள் வந்ததில்லை. ஆனால் இவள் நினைவுகள் அவன் ஆழ்மனதில் பதிந்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் இப்படி அவனால் சட்டென்று முடிவெடுத்திருக்க முடியாது. 

நேற்றிரவு அவள் கேட்ட கேள்வி இப்போது அவனுக்கு நியாபகம் வந்தது. அந்தக் கேள்வி அவளுக்குள் இருப்பதை கந்தசாமி அண்ணனின் வீட்டில் இருக்கும்போதே இவன் உணர்ந்திருக்கிறான்.‌ ஆனால் அதற்கான பதிலை அப்போது சொல்ல அவன் விரும்பவில்லை. இருவரும் அப்போது வித்தியாசமான மனநிலையில் இருந்தார்கள். இரு குடும்பங்களையும் எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அப்போதைய பிரச்சனையாக இருந்தது. 

“வந்தனா…” அவள் விழித்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் பதில் சொல்லாமல் அப்படியே படுத்திருந்தாள்.

“ஏய்…” தனக்குச் சொந்தமான மனைவி என்றாலும் அவனுக்கும் சற்றே கூச்சமாக இருந்தது. இரண்டு பெண் பிள்ளைகளோடு பிறந்து வளர்ந்தவன்தான். ஆனாலும் இப்படியொரு உறவு, இரவு அவனுக்குப் புதிது.

“வந்தனா, என்னைப் பாரு.” 

“ம்…” இப்போதும் அவனைப் பார்க்காமல் சிணுங்கியவளை முற்றாக அவனை நோக்கித் திருப்பினான். கலைந்து போயிருந்தவளின் முகம் நாணத்தில் சிவந்தது. தோளில் நழுவியிருந்த ஆடையைச் சரி செய்தவள் முகத்தை மறைக்கத்தான் முயற்சி செய்தாள். அவள் நிலைமை அவனுக்கும் புரிந்தது. 

“வீட்டுல பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணுறவனுங்க எல்லாம் எப்பிடித்தான் முதலிரவுலேயே எல்லாம் பண்ணுறானுங்களோ?! கூட வளர்ந்தவளைக் கட்டிக்கிட்ட நமக்கே வேர்த்து விறுவிறுக்குது!” அவன் புலம்பலில் அவள் பொங்கிச் சிரித்தாள். 

“என்னடி சிரிப்பு?” அவன் கேள்வியில் அவள் திடுக்கிட்டுப் போனாள். இதுவரை அவளை யாரும் ‘டி’ போட்டு அழைத்ததில்லை. நண்பிகள் கூட அழைக்கமாட்டார்கள். ஏதோ ஒரு கெட்டவார்த்தை போல, கோபத்தில் அழைப்பது போலத்தான் உணருவாள். 

“அத்தான்!” ஆனால் அவன் கண்களில் கோபமில்லை. மாறாகக் காதல்தான் இருந்தது. அவளின் பயந்த முகத்தைப் பார்த்து இவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“எதுக்குப் பயப்பிடுறே?” 

“இல்லை… நீங்க எம்மேல கோபமா இருக்கீங்களோன்னு நினைச்சேன்.”

“ஃபர்ஸ்ட் நைட் அதுவுமா எவனாவது பெண்டாட்டி மேல கோப்படுவானா?” அவள் முகம் மீண்டும் நாணத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.‌ 

“அதுவுமில்லாம நான் ஏன் உன்னைக் கோபிக்கணும்?”

“இல்லை… நீங்க ‘டி’ போட்டுப் பேசினீங்க…” என்றவளைத் தன்னருகே இழுத்து அவள் முகத்தைப் பார்த்தான். நாணத்தை மிஞ்சிய காதல் அந்தக் கண்களிலும் தெரிந்தது. 

“நேத்து ராத்திரி எங்கிட்ட என்னவோ கேட்டியே வந்தனா? அதை இப்போ திரும்பக் கேளு.”

“நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது அத்தான், எனக்குள்ள அந்தக் கேள்வி ரொம்ப நாளா இருக்கு.”

“அது எனக்கும் தெரியும், உண்மையைச் சொன்னா அந்தக் கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லைம்மா.”

“அத்தான்!”

“ஆனா நினைக்கிற மாதிரியில்லை, அர்ச்சனாவோட நடக்க இருந்த கல்யாணத்தை நிப்பாட்ட உன்னை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்னு நீ நினைக்கிற, இல்லையா?”

“…”

“ஒரு பொண்ணை வேணாம்னு சொல்றதுக்கு இன்னொரு பொண்ணை யூஸ் பண்ணிக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் கிடையாது.”

“நான் அப்பிடிச் சொல்லலை.”

“நீ சொன்னதுக்கு அர்த்தம் அதுதான், ஆனா உம்மேலயும் தப்பில்லையே, இத்தனை நாளும் ஒரு வார்த்தைப் பேசாத அத்தான் இப்போ திடீர்னு கல்யாணம் வரைக்கும் வந்தா உனக்குச் சந்தேகம் வருந்தானே? ஆனா…‌ உம் மனசுல நான் இருந்திருக்கேன், அது உனக்கு முன்னாடியே தெரியுமா?”

“அது…”

“வந்தனா, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த ஒளிவு மறைவும் இருக்கப்படாது, எங்ககிட்ட உண்மையை மட்டுந்தான் நீ பேசணும்.”

“உங்களை எனக்கு எப்பவும் புடிக்கும் அத்தான்.”

“ம்…”

“எனக்கு மட்டுமில்லை, எங்க வீட்டுல எல்லாருக்குமே உங்களைப் புடிக்கும், எங்க வீட்டுல எப்பவுமே உங்க பேச்சு இருக்கும்.”

“ம்… அர்ச்சனா பெயர் அடிபட்டப்போ உனக்கு வருத்தமா இருக்கலையா?”

“வருத்தம் இருந்துச்சு, ஆனா அதையும் தாண்டி முன்னாடி ஆர்த்தின்னாங்க, இப்போ அர்ச்சனாங்கிறாங்க, அத்தானோட மனசை யாரும் பார்க்கலையேன்னுதான் இன்னும் கவலையா இருந்துச்சு.” என்றவளை அவன் அணைப்பு இறுக்கியது.

“எங்க வீட்டுல இருந்தவங்க கூட இப்பிடி யோசிக்கலைடி.” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வலிக்க முத்தம் வைத்தான். அன்பு அதிகமாகும் பொழுதுகளில்தான் அவன் வாயிலிருந்து அந்த அழைப்பு வருகிறது என்று அப்போதுதான் புரிந்தது பெண்ணுக்கு. 

“எப்பிடியோ நீ எனக்குள்ள வந்திருக்க, எனக்குத் தெரியாமலேயே உன்னை எனக்குப் புடிச்சிருந்திருக்கணும், திடீர்னு கல்யாணப் பேச்சு வந்ததும் எனக்குள்ள இருந்த நீ திடீர்னு தலை காட்டியிருக்க.” அவன் சொன்ன விதத்தில் இவள் சிரித்தாள். 

“கொஞ்ச நாள் முன்னாடி தலை காட்டியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் அத்தான்.” அவள் சிரிப்பு அவனையும் தொற்றிக் கொண்டது. அவளை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். 

“உனக்குத் தூக்கம் வருதா?”

“ஏன் அத்தான்? எதுக்குக் கேட்கிறீங்க?” 

“வந்தனா…” என்றபடி அவன் வாசம் பிடிக்க,

“நாளைக்கு எனக்கு யூனி இருக்கு.” என்றாள் அவசரமாக.

“கண்டிப்பா போகணுமா?” அவன் குரலில் அத்தனை ஏக்கம்.

“அப்பிடியில்லை… ஆனா போனா நல்லது, நீங்களும் ஹோட்டலுக்குப் போகணுமில்லை?”

“நான் லேட்டா போனா போதும், கந்தசாமி அண்ணன் எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க, ப்ளீஸ்…” என்றவன் அவன் வேலையை மீண்டும் ஆரம்பித்திருந்தான். வந்தனா மறுப்பேதும் சொல்லவில்லை. புன்னகைத்துக் கொண்டாள்.

அடுத்தநாள் காலை அழகாகப் புலர்ந்திருந்தது. சுற்றி வர இருந்த வயல்வெளி பார்க்க அற்புதமாக இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த கணவன் இன்னும் அழகாக, அற்புதமாகத் தெரிந்தான். ஒரு கணவனுக்கான சகல உரிமைகளையும் எடுத்துக் கொண்டான்.‌ ஆனாலும் அத்தனைத் தயக்கம். இவள் முகம் பார்த்து, அனுமதி கேட்டுக் கோடு தாண்டியிருந்தான். 

அதற்கு மேலும் அப்படியே இருக்காமல் எழுந்து குளியலை முடித்தவள் கிச்சனுக்கு வந்தாள். எல்லா பொருட்களும் ஏற்கனவே வாங்கியிருந்ததால் சூடாக டீ தயாரித்தாள். கிச்சன் கதவைத் திறந்தால் வயல் தெரிந்தது. வயலில் வேலை செய்யும் பெண்கள் இவளைப் பார்த்துச் சிரித்தார்கள். இவர்களது திருமண விஷயத்தை ஒன்றிரண்டு நெருங்கிய நண்பிகளுக்கு மாத்திரம்தான் சொல்லியிருந்தாள்.

“என்னம்மா புதுப்பொண்ணு! என்ன இவ்வளவு சீக்கிரமா எந்திரிச்சுட்டே?” சந்தியாவை அலைபேசியில் அழைத்திருந்தாள்.

“மணி ஏழாச்சு, இதுக்கு மேல யாரு தூங்குவாங்களாம்?”

“நீ தூங்கணும், ஏன்னா நீ புதுப்பொண்ணு.” அந்தப் பக்கம் சிரிப்பொலி கேட்டது.

“அதெல்லாம் ஒன்னுமில்லை, சந்தியா…‌ என்னால இன்னைக்கு யூனிக்கு வர முடியாது.”

“சரி…‌ நீ நடத்து நடத்து.”

“ஹேய்! சும்மா இரு, இன்னும் கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு அத்தான் ஹோட்டலுக்குப் போயிடுவாங்க.”

“ஐயையோ! என்னப்பா சொல்றே?”

“அவங்க இன்னும் எந்திரிக்கலை, முதல்நாளே அவங்க எந்திரிக்கிறதுக்கு முன்னால கிளம்பி வர எனக்கு ஒருமாதிரியா இருக்குப்பா.”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீ இன்னைக்கு வீட்டுல இரு, அப்பிடி என்னத்தை வெட்டி முறிக்கப் போறாங்க இங்க, நான்‌ உனக்கு நோட்ஸ் அனுப்புறேன்.”

“ரொம்ப தேங்க்ஸ்பா.”

“அப்புறம், என்ன சொல்றாரு உங்கத்தான்? நேத்து ராத்திரி யம்மா! தூக்கம் போச்சுடீ யம்மா!” சந்தியா பாடவும் இவள் சிரித்தாள். 

“நேத்து அவங்களும் என்னை ‘டீ’ போட்டுக் கூப்பிட்டாங்க சந்தியா.”

“எவுங்க?”

“அடி வாங்கப் போறே நீ!”

“சரி… வேற என்ன சொன்னாங்க உங்கத்தான்?”

“வேற ஒன்னும் சொல்லலை, எனக்குத்தான் உன்னைப் புடிச்சிருக்குன்னு பார்த்தா உனக்கும் என்னைப் புடிச்சிருக்குன்னு ஆச்சரியப்பட்டாங்க.”

“அடேயப்பா! இப்பவாவது உங்கத்தான் இதைக் கண்டுபுடிச்சாரே, நல்லா சேர்ந்தீங்க ரெண்டு பேரும்.” அவள் மேலும் கேலியில் இறங்க அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டாள் வந்தனா. கணவனுக்கும் டீ தயாரித்தவள் அதை எடுத்துக்கொண்டு மாடிக்குப் போனாள். அவன் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருந்தான். இதற்கு மேலும் தாமதித்தால் எத்தனை மணிக்கு ஹோட்டலுக்குப் போவது?!

“அத்தான்…” அவளின் மெல்லிய குரல் அவனை எழுப்பப் போதவில்லை. திரைச்சீலை ஒன்றை இவள் இழுத்துவிட மெல்லிய இளங்காலை வெயில் உள்ளே வந்தது. கண்கள் கூச மெதுவாக விழித்தவனின் முகம் மனைவியைப் பார்த்ததும் மலர்ந்தது.

“டீ இருக்கு, நீங்க ஹோட்டலுக்குப் போகணுமில்லை அத்தான்.” 

“ம்… நீ யூனிக்குப் போகலையா?”

“நாளைக்குப் போறேன், இன்னைய நோட்ஸை சந்தியா அனுப்பி வெக்கிறேன்னு சொல்லியிருக்கா.”

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லையா?” 

“இல்லைத்தான்.” என்றவள் டீயை நீட்டினாள். கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவன் டீயை வாங்கிக் கொண்டான். நேற்றிரவு அணிந்திருந்த டீ ஷர்ட் இப்போது இருக்கவில்லை. அவனை அப்படிப் பார்க்க ஒருமாதிரியாக இருக்கவும்,

“நான் சாப்பிட ஏதாவது ரெடி பண்ணுறேன்.” என்று நகர்ந்தாள்.‌ ஆனால் அவன் ஒற்றைக் கரம் அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டது. 

“காலையிலேயே உங்களை யாரு மேடம் குளிக்கச் சொன்னது?”

“அத்தான் டீ ஆறிடப் போகுது, நீங்க இன்னும் குளிக்கலை, ஹோட்டலுக்குப் நேரத்துக்குப் போக வேணாமா?”

“இன்னைக்கு ஒருநாள் நானும் லீவு போடட்டுமா?”

“ஐயையோ! வேணாம் அத்தான், உங்கப்பாக்குத் தெரிஞ்சா என்னாகிறது?”

“என்னாகும்? அவரும் ஒரு காலத்துல கல்யாணம் ஆகி புது மாப்பிள்ளையா இருந்திருப்பார்தானே? அவரு என்னைப் புரிஞ்சுக்குவாரு.” 

“வில்லங்கமே வேணாம், எந்திரிச்சு ரெடியாகுங்க.” என்றவள் கட்டிலில் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். அவன் டீயை பருக ஆரம்பித்திருந்தான். 

“அத்தான்…”

“ம்…”

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“என்ன வந்தனா?”

“நேத்து அத்தைக்கிட்டப் பேசும்போது அவங்களோட நிலம் பத்திப் பேசினீங்களே, அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” 

“ஓ… அதுவா? அப்பாக்கு ஆப்பரேஷன் பண்ணும்போது ஹோட்டலை எம் பேருக்கு மாத்தி எழுதினாங்க, அப்போ அம்மாவும் அவங்களோடதை எனக்குக் குடுத்தாங்க, அதை விக்கட்டுமான்னு கேட்டேன், ஓகே சொல்லிட்டாங்க.”

“அதை விக்காம எதுவும் பண்ண முடியாதா?”

“கஷ்டம்டா, நானே ரொம்ப யோசிச்சுத்தான் அந்த முடிவுக்கு வந்தேன்.”

“அதைக் குடுக்கிறதா இருந்தா உங்கப்பாவே செஞ்சிருப்பாங்கல்லை? அவங்க பண்ணாததை இப்ப நீங்க பண்ணும்போது கோபம் வருமே!”

“அதுக்கு என்ன பண்ணலாம்மா? பேங்க்ல கடன் வாங்கினா அவனுக்கு உழைச்சுக் கொட்டியே என்னோட வாழ்நாள் போயிரும், அந்தத் தப்பை நான் பண்ணமாட்டேன், வேற என்ன வழியிருக்கு?” 

“இதுக்குத்தான் அர்ச்சனாவைக் கட்டிக்கோன்னு நான் சொன்னேன்னு உங்கப்பா சொல்லிக்காட்ட மாட்டாங்களா?” அந்த வார்த்தைகளை அவன் ரசிக்கவில்லைப் போலும். மளமளவென டீயை குடித்து முடித்தவன் குளியலறைக்குள் எழுந்து போய்விட்டான். இந்தத் திடீர் ரியாக்ஷனை வந்தனா எதிர்பார்க்கவில்லை. அவளறிந்த ஆண் என்றால் அது அவள் அப்பாதான். தங்கவேல் தன் பிள்ளைகளிடம் இப்படிக் கோபப்படமாட்டார். வார்த்தை கூட அதிர்ந்து வராது. 

“அத்தான்…” குளியலறைக் கதவை அவன் அடைத்த பின்புதான் அவளுக்கு வார்த்தையே வந்தது. ஆசை இருந்தாலும் அதிகம் பேசி, பழகியிராத அத்தான். திருமணமே நடந்துவிட்டாலும் நேற்று நடந்த உறவு கூட இத்தனை அவசரமாக நடந்திருக்க வேண்டாமோ என்பது அவளது எண்ணம். அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து, ஒருவர் மேல் ஒருவருக்கு கொள்ளை கொள்ளையாய் காதல் வந்து, அதன்பிறகு உறவு கொண்டு என்று அவள் பலதும் நினைத்திருந்தாள். ஆனால் அவன் ஆசையை மறுக்க முடியவில்லை. ஆசையாக நெருங்கும் அத்தானுக்கு எதையும் மறுக்கும் எண்ணமும் அவளுக்கில்லை.

அத்தான் புதிது, அவன் ஆசை புதிது, அவனது கோபம் அவளுக்கு இன்னும் புதிதாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாது அப்படியே அமர்ந்திருந்தாள்.‌ அர்ச்சனாவைப் பற்றிச் சொன்ன ஒரு வார்த்தைக்கு எதற்கு இத்தனைக் கோபம்?! அவளுக்குப் புரியவில்லை. சடாரென குளியலறைக் கதவு திறக்க இடையில் கட்டிய டவலோடு அவன் வெளியே வந்தான். சட்டென எழுந்தவள் ஜன்னல் திரையைப் பார்த்தபடி,

“தோசை ஊத்தட்டுமா அத்தான்?” என்றாள். அவன் பதில் பேசவில்லை. கப்போர்டில் இருந்த ஆடைகளை எடுத்தவன் அணிய ஆரம்பித்தான். அதற்கு மேலும் அங்கே நிற்கச் சங்கடமாக இருக்கவும் வெளியே வந்தவள் கிச்சனுக்கு வந்தாள். ஃபிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியே வைத்திருப்பாள். தடதடவென அவன் படிகளில் இறங்கி வரும் சத்தம் கேட்டது.

“அத்தான், தோசை சாப்பிட்…” அவள் சொன்னதைக் கேட்க அவன் அங்கே இல்லை. அவனது பைக் வேகமெடுத்துச் செல்லும் சத்தம் மட்டுந்தான் கேட்டது. வந்தனாவிற்குக் கண்களில் நீர் நிறைந்து போனது. எதற்காக இத்தனைக் கோபம்?! அவள் அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டாள்?

“அக்கா…” அலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

“சொல்லு மீரா?” 

“என்ன வாய்ஸ் டல்லடிக்குது?” அவள் கேட்டதுதான் தாமதம். வந்தனா விசும்ப ஆரம்பித்துவிட்டாள்.

“என்னக்கா? என்னாச்சு?” தங்கை பதறிப் போனாள்.

“அத்தான்… அவங்களுக்குக் கோபம் வந்திடுச்சு.”

“ஏன்? நீ என்ன பண்ணினே?”

“சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம்.”

“நேத்துத்தான் கல்யாணம் ஆகியிருக்கு, சும்மா பேசிக்கிட்டு இருக்கிற பொண்டாட்டிக்கிட்ட யாராவது கோபப்படுவாங்களா?”

“இல்லை மீரா…”

“அம்மா காலையிலேயே உங்களுக்காக ஃபூட் ரெடி பண்ணிட்டாங்க, குடுத்துட்டு வான்னு சொன்னாங்க, நான் அங்கதான் வந்துக்கிட்டு இருக்கேன், நீ ஃபோனை வை.” என்றவள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்துவிட்டாள்.

“அத்தான் எங்க?” 

“கிளம்பிப் போயிட்டாங்க.” இவள் கண்களில் மீண்டும் கண்ணீர்.

“அப்பிடி என்னத்தைப் பேசித் தொலைச்சேக்கா?” இளையவள் கோபமாகக் கேட்கவும் தங்களுக்குள் நடந்த சம்பாஷனையைச் சொன்னாள்.

“ஓ…‌ அந்தப் பேச்சை எடுத்தாலே அத்தானுக்கு அவ்வளவு கோபம் வருதா?”

“நான் சும்மா இயல்பாத்தான் கேட்டேன் மீரா.”

“புரியுதுக்கா, இதையே நான் பேசியிருந்தா அவங்களுக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது, பேசினது நீ, அதான் கோபத்துக்கான காரணம், இனிமேல் அந்தத் தவறைச் செய்யாத, சரியா?”

“ம்…” ஏதோ அவள் பெரியவள் போல அறிவுரை சொல்ல இவள் கேட்டுக்கொண்டாள்.

“நீ சாப்பிட்டியா?”

“ம்ஹூம், ரெண்டு பேரும் டீ குடிச்சோம், அப்பதான் இந்தப் பேச்சு வந்தது, தோசை ஊத்தட்டுமான்னு கேட்கும்போது கிளம்பிப் போய்ட்டாங்க.”

“சரி பரவாயில்லை விடு, இப்ப ஹோட்டலுக்குப் போயிருப்பாங்கல்லை, ஃபோனைப் போட்டுப் பேசு.” ஹோட்டல் நம்பருக்கு அழைத்தாள் வந்தனா.

“ஹலோ, ராஜ் பவன்.” அவன் குரல்தான் கம்பீரமாக வந்தது.

“அத்தான்… நான் வந்தனா…” சட்டென்று அழைப்பு துண்டிக்கபட்டுவிட்டது.

“என்னக்கா? அத்தான்தானா?”

“ம்… ஃபோனை வெச்சுட்டாங்க.” இவள் பாவம் போல சொல்லவும் மீரா பொங்கிச் சிரித்தாள். 

“அத்தானுக்கு இவ்வளவு கோபம் வருமாக்கா?” 

“தெரியலையே, நம்ம அப்பா மாதிரி இல்லை மீரா.”

“அப்பா வேற, அத்தான் வேற, நீ எதுக்கு ரெண்டு பேரையும் ஒப்பிடுறே? எனக்கு நேரமாச்சு, நீ  எப்பிடியாவது அத்தானைச் சமாதானம் பண்ணு, நான் கிளம்புறேன்.” என்றவள் சிரித்தபடி கிளம்பிவிட்டாள். 

அதன்பிறகும் பல முறை அவனது அலைபேசிக்கு அழைத்தது பெண். ஆனால் அவன் பேசவில்லை. குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள். இனி இதுபோல பேசுவதில்லை, மன்னித்துவிடுங்கள் என்று அனுப்பியிருந்தாள். பார்த்திருந்தான், ஆனால் பதில் சொல்லவில்லை. மதியத்துக்கு மேல் கந்தசாமி அழைத்தார்.

“அம்மா, தம்பி வெளி வேலையா போயிருக்கு, வர நேரமாகும், உங்களைச் சாப்பிடச் சொன்னாங்கம்மா.”

“அவங்க சாப்பிட்டாங்களாண்ணா?”

“ஹோட்டல்ல சாப்பிடுவாங்களாம், உங்களுக்கு வீட்டுல இருந்து சாப்பாடு வந்திருக்குன்னு சொன்னாங்க.”

“சரிண்ணா.” அப்படியென்றால் மீராவோடு பேசியிருக்கிறான்.‌ என்னோடு மாத்திரம்தான் பேசப் பிடிக்கவில்லையா? நினைத்த போதே கண்களைக் கரித்தது. சின்னதாக ஒரு வார்த்தைக் கேட்டதற்கு இத்தனைக் கோபமா? அன்றைய பொழுதை நெட்டித் தள்ளினாள் வந்தனா. இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் யூனிக்குப் போயிருக்கலாம். வீட்டில் இப்படித் தன்னந்தனியே உட்கார்ந்திருக்கத் தேவையில்லை.

சந்தியாவை உடனே அழைத்து அன்று நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டாள். அன்றைய பாடங்களை அவள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கவும் தனது அறைக்குச் சென்றவள் அவற்றைப் படித்தாள். குறிப்பெடுத்துக் கொண்டாள். மதிய உணவை உண்ட பிறகு இலேசாகத் தூக்கம் வந்தது. அவனது அறைக்குச் சென்று சற்றே கண்ணயர்ந்தாள். நேற்றைய இரவு நினைவில் வரவும் வெட்கம் வந்தது. ஆசையாக அவளை நெருங்கியவனுக்கும் இதே களைப்பு இருக்குமல்லவா?

நான்கு மணி போல கண்விழித்துவிட்டாள். கணவன் இன்னும் வீடு வந்திருக்கவில்லை.‌ எழுந்து முகம் கழுவியவள் வேறு உடை அணிந்து கொண்டாள்.‌ அவன் அலைபேசிக்கு மீண்டும் அழைக்க ஒரு மாதிரியாக இருந்தது. ஹோட்டலுக்கும் அழைக்க முடியாது. சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று அமைதியாகிவிட்டாள். டீ தயாரித்துப் பருகினாள். 

சரியாக ஐந்து மணி தாண்டும் போது அவனது பைக் சத்தம் கேட்டது. அதற்காகவே காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தவள் ஓடிவந்து கதவைத் திறந்தாள்.‌ அவனேதான்! முகம் மலர அவனையே இவள் பார்த்திருக்க ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்தவன் மாடிக்குப் போனான். பின்னோடு சென்று சமாதானம் செய்வதா, இல்லை அவனுக்குத் தனிமைக் கொடுக்க வேண்டுமா என்று தெரியவில்லை.‌ கிச்சனுக்குப் போனவள் அவனுக்கு டீ போட்டாள்.‌ கையில் டீயோடு இவள் மாடிக்கு வந்தபோது அவன் குளியலை முடித்திருந்தான்.

“அத்தான்… டீ…” எதுவும் சொல்லாமல் அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டான்.

“இன்னைக்குக் கொஞ்சம் வேலை இருந்துச்சு, அதான் உங்கூடப் பேச முடியலை.” சமாதானம் சொன்னாலும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. வேலை எப்போதும் இருப்பதுதானே. அதற்காக ஒரு வார்த்தைப் பேச முடியாதா என்ன? ஜன்னலோரமாகப் போய் நின்றவன் வெளியே தெரிந்த வயலைப் பார்த்திருந்தான்.

“சாரி, இன்னைக்கு நான் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது, இனி கவனமா நடந்துக்கிறேன்.” அவள்தான் இறங்கி வந்தாள். அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு மட்டும் வந்தது. நேற்றுத்தான் திருமணம் ஆனது. இன்றைக்கு இப்படியொரு மனஸ்தாபம் இருவருக்குள்ளும் வர வேண்டுமா?

“பண விஷயமா கொஞ்சம் அலைய வேண்டியிருந்துச்சு, சாப்பாடு கொண்டு வந்ததா மீரா சொன்னா, என்னால பேச முடியலை, அதாலதான் கந்தசாமி அண்ணன்கிட்டச் சொன்னேன்.”

“பரவாயில்லை அத்தான், நைட்டுக்கு என்ன சாப்பிடுவீங்க?”

“மீரா கொண்டு வந்ததையே சாப்பிடலாம், வேற எதுவும் வாங்கணுமா?”

“இல்லை.” பட்டும் படாமல் பேசுபவனை எப்படி நெருங்குவது என்று தெரியவில்லை. இரவு உணவை உண்டபோதும் சரி, அதன் பிறகும் சரி, ரங்கராஜ் ஒருவித யோசனையிலேயே இருந்தான். உண்டவற்றை ஒழுங்கு பண்ணிவிட்டு அவள் அறைக்கு வந்தவள் பாடப்புத்தகத்தோடு அமர்ந்துவிட்டாள். 

நேற்றைய இரவு இப்போது கண்சிமிட்ட மறக்கவில்லை. ஆனாலும் ஒதுங்கி நிற்பவனை எப்படி நெருங்குவது என்று அவளுக்கு விளங்கவில்லை. தனது அறையை எட்டிப் பார்த்தவன் தான் படித்துக் கொண்டிருந்ததால்தான் உள்ளே வரவில்லை என்பதை வந்தனா கவனிக்கவில்லை.

***

அடுத்தநாள் காலை கண்விழித்தவள் குளித்து ரெடியாகினாள். தனது அறையிலேயே தூங்கிவிட்டாள்.‌ இன்றைக்குப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். கீழே வந்தவள் டீ தயாரித்தாள். அவனது அறையிலும் அரவம் கேட்டது. ப்ரெட் சாண்ட்விச் செய்து வைத்தாள். இந்தப் பரபரப்பு அவளுக்குப் பழக்கம்தான். இரண்டு வாரங்களுக்கு முன்பு மீராவுக்குச் செய்தாள்.‌ இப்போது கணவனுக்குச் செய்கிறாள்.

“குட் மார்னிங்.”

“குட் மார்னிங் அத்தான், டீயும் சாண்ட்விச்சும் இருக்கு, சாப்பிடுங்க.”

“எத்தனை மணிக்குக் கிளம்பணும்?”

“டைம் இருக்கு, நான் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போயிருவேன்.”

“பரவாயில்லை, நான் ட்ராப் பண்ணுறேன், ஈவ்னிங் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவே?”

“நாலு மணிக்கு முடியும், அஞ்சுக்குள்ள வந்திருவேன்.”

“இன்னைக்குச் சாயங்காலம் அம்மா வருவாங்க, டின்னர் பண்ணி கொண்டு வர்றேன்னு சொன்னாங்க.”

“அப்பிடியா? ரொம்ப சந்தோஷம் அத்தான்.” உண்மையிலேயே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாணிக்கம் புறக்கணித்தாலும் சுலக்சனா இப்படி வந்து போவது மனதுக்கு இதமாக இருந்தது. 

அவளை பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு ஹோட்டலுக்குப் போய்விட்டான் ரங்கராஜ். இவர்களின் கல்யாண விஷயம் தெரிந்த நண்பிகளின் கேலியைச் சமாளிப்பதற்குள் இவளுக்கு வேர்த்தது. பாடத்தைக் கவனிப்பதை விட்டுவிட்டு இவள் படித்த பள்ளியறைப் பாடத்தை நோண்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் வந்தனாவால் அவர்களைச் சமாளிக்க முடியவில்லை. எப்போதடா நான்கு மணியாகும் என்று காத்திருந்து பஸ் ஏறிவிட்டாள். 

“வாங்கத்தை.” சரியாக ஐந்து மணிக்கு வந்துவிட்டார் சுலக்சனா. இன்னும் ரங்கராஜ் வீடு வந்திருக்கவில்லை.

“ரங்கா இன்னும் வரலையா? அவன் கேட்ட பத்திரம் எல்லாம் இதுல இருக்கு.” என்றவர் ஒரு ஃபைலை மேசைமேல் வைத்தார்.

“என்னத்தை இதெல்லாம்?” 

“நாந்தான் எல்லாத்தையும் வித்துட்டு வேலையைப் பாருன்னு சொல்லிட்டேனே, இதுக்கப்புறமும் இவன் எதுக்கு வந்தனா பணத்துக்கு அலையுறான்?”

“என்ன பணம் அத்தை?” அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“உங்கிட்ட அவன் எதுவும் சொல்லலையா? நிலத்தை வித்துட்டு அத்தையோட கடனைக் குடுத்துடுன்னு சொல்லிட்டேன், இவ்வளவு நாளும் சரின்னு சொன்னவன் இப்ப திடீர்னு விக்க வேணாம்மா, நான் வேற ஏற்பாடு பண்ணுறேன்னு சொல்றான்.”

“என்ன ஏற்பாடாம்?” அவள் சொன்ன வார்த்தைக்காகவா?!

“எனக்கும் சரியா தெரியலைடா, அதைப் பேசத்தான் இப்ப வரச்சொன்னான்.” சற்று நேரத்தில் ரங்கராஜ் வந்துவிட்டான். வந்தவன் அம்மா கொண்டுவந்திருந்த ஃபைலை எடுத்துப் பார்த்தான். அவன் பெயருக்கு மாற்றப்பட்ட அனைத்துப் பத்திரங்களும் அதில்தான் இருந்தன. 

“ஃப்ரெண்டுன்னு சொல்றே, நம்பிக்கையான ஆளா ரங்கா, நாளைக்கு எந்தப் பிரச்சினையும் வந்திடாதே?”

“இல்லைம்மா, அவன் ரொம்ப நல்ல பையன், இதெல்லாம் அவனுக்கு ஒரு விஷயமே இல்லை, எப்பவோ உதவி கேட்டிருக்கலாம், நாந்தான் எதுக்குன்னு விட்டுட்டேன்.” 

“இப்பவும் ஒன்னுக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சுக்கோ ரங்கா.”

“அம்மா, நமக்குக் குடுக்கப்போற தொகையெல்லாம் அவனுக்கு ஒன்னுமே இல்லை, பத்திரமெல்லாம் தேவையில்லைடான்னுதான் சொல்றான், ஆனா எனக்கு மனசு கேட்கலைம்மா, சும்மா காசை வாங்கிறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு.”

“திடீர்னு ஏம்பா முடிவை மாத்திட்டே?”

“உங்க மருமகளுக்கு நான்‌ நிலத்தை விக்கிறது புடிக்கலையாம்.” என்றவன் ஃபைலோடு மாடிக்குப் போய்விட்டான்.

“இவன் என்ன சொல்றான் வந்தனா? நீ ஏதாவது சொன்னியா?”

“அத்தை, அது வந்து…” அவள் தடுமாறவும் சுலக்சனா பக்கென்று சிரித்தார்.

“கடன் வாங்கிறதுன்னாலே அவனுக்கு அவ்வளவு கோபம் வரும், எப்பவுமே உங்க மாமாவோட அவனுக்குச் சண்டை வர்றதே அதாலதான், அத்தைக்கிட்டப் பணம் வாங்காதீங்கன்னு சத்தம் போடுவான், அப்பிடியான என்னோட புள்ளையை இன்னைக்கு இப்பிடி மாத்தி வெச்சிருக்கே?!” 

“…” வந்தனா பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவும் தெரியவில்லை. தன் மனதில் தோன்றியதை அவனிடம் சொன்னாள்.‌ அதை இவ்வளவு முக்கியமாக நினைத்து அவன் செயல்படுவான் என்று அவள் நினைக்கவில்லை. 

“அத்தை… மனசுல தோணினதைப் பேசினேன், அதை இவங்க…”

“சரி விடு, ரங்கா ஏதாவது பண்ணினா அதுல நியாயம் இருக்கும், யோசிக்காம எதையும் பண்ணமாட்டான், இதுல இட்லி, சாம்பார் எல்லாம் இருக்கு, ரெண்டு பேரும் சாப்பிடுங்க, நான் கிளம்புறேன்.” என்றவர் மகனிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். அம்மா வந்த ஆட்டோ போன பிற்பாடு வாசல் கதவை மூடியவன் மனைவியிடம் திரும்பினான்.

“இன்னைக்குப் படிக்கிற வேலை ஒன்னுமில்லையா?” 

“அத்தான், நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? உங்களை வருத்தப்படுத்திற மாதிரி…” அவள் முழுதாகப் பேசி முடித்திருக்கவில்லை.‌ அவள் கண்களில் தெரிந்த சஞ்சலத்தில் அவளை இழுத்து அணைத்திருந்தான் ரங்கராஜ். வலது கரம் அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தது. 

“இப்ப எதுக்கு இவ்வளவு பயப்பிடுறே?” அவன் கேட்கவும் அவள் கண்களில் நீர் கோர்த்தது.

“உங்களைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது, உங்களைப் புடிக்கும், அவ்வளவுதான், நீங்க எதுக்குக் கோபப்படுவீங்க, உங்களுக்கு எப்பிடிப் பேசினா புடிக்கும்னு ஒன்னுமே தெரியாது, எம் மனசுல பட்டதைச் சொன்னேன், நான் பேசினது புடிக்கலைன்னா என்னைத் திட்டுங்க, இப்பிடிக் கோபம் காட்டினா நான் என்ன பண்ணுவேன்? இப்பிடி எங்கூட பேசாம இருந்தா நான்‌ என்னதான் பண்ணுறது?”

“சாரி… உன்னை நோகடிக்கணும்னு நினைக்கலை, எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு உங்கிட்டச் சொல்லலாம்னு நினைச்சேன், இன்னைக்கு அவ்வளவு அலைச்சல், ரொம்ப டயர்டாகிட்டேன்.”

“அப்புறமா பேசிக்கலாம், முதல்ல சாப்பிடலாம் வாங்க.” என்றவள் அத்தை கொண்டு வந்திருந்த உணவைச் சூடாகப் பரிமாறினாள். சாப்பிட்டு முடித்தவன்,

“வந்தனா… படிக்கிற வேலை ஏதாவது இருக்கா இல்லை நீ ஃப்ரீயா?” பாத்திரங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவளின் பின்னால் நின்றபடி கேட்டான். குழைந்த அவன் குரல் வேறு சங்கதி சொன்னது.

“ஃப்ரீதான் அத்தான்.” அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. இந்த வாரம் முடிக்க வேண்டிய வேலைகள் அவளுக்கிருந்தன. ஆனாலும் உண்மையை மறைத்தாள்.

“பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு ரூமுக்கு வா, அதுக்கு மேல காத்துக்கிட்டு இருக்க முடியாது.” என்றவன் படிகளில் ஏறிப் போய்விட்டான். தடதடக்கும் நெஞ்சோடு நின்றிருந்தாள் பெண்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 8

அத்தியாயம் 08 தடதடக்கும் நெஞ்சோடு எத்தனை நேரம்தான் அப்படியே நின்றிருப்பது. பத்து நிமிடங்கள்தான் கொடுத்திருக்கிறான். அதற்குள் வந்துவிட வேண்டுமாமே! முகத்தில் புன்னகைத் தோன்ற தனது அறைக்குச் சென்றவள் மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போனாள்.  வேலை அதன் பாட்டில் நடந்தாலும் மனம் முழுவதும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 4 கருத்துகள் உள்ளன

  1. கோபத்திலும் காதலே பிரதானம்
    கணவன் சந்தோசமே சன்னிதானம்…..

உங்கள் கருத்தைப் பகிருங்கள்