arrow_back
KAADHAL PESA VAA KANNE அத்தியாயம் 8
KAADHAL PESA VAA KANNE chevron_right பகுதி 8 / 13

அத்தியாயம் 8

visibility 425
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.9/5 (25 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 08

தடதடக்கும் நெஞ்சோடு எத்தனை நேரம்தான் அப்படியே நின்றிருப்பது. பத்து நிமிடங்கள்தான் கொடுத்திருக்கிறான். அதற்குள் வந்துவிட வேண்டுமாமே! முகத்தில் புன்னகைத் தோன்ற தனது அறைக்குச் சென்றவள் மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போனாள். 

வேலை அதன் பாட்டில் நடந்தாலும் மனம் முழுவதும் அவனையே வட்டமிட்டன. எதற்காக இன்றைக்கு முழுவதும் அலைந்து திரிந்திருக்கிறான். மிகவும் களைத்துப் போனேன் என்று வேறு சொன்னானே. தெரிந்தவர்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருப்பானா?

“வந்தனா.” அவன் வெளியே அழைப்பது கேட்டது. சட்டென்று குளியலை முடித்தவள் அவசரமாக ஆடையை மாற்றிக் கொண்டாள்.

“எவ்வளவு நேரம் குளிப்பே?” இவள் கதவைத் திறந்ததும் அங்கேதான் நின்றிருந்தான். மனைவியின் தோளில் கிடந்த டவலை எடுத்து அப்பால் போட்டவன் அவளைத் தன்னறைக்குள் அழைத்துக் கொண்டான். அதற்கு மேல் அவனும் பேசவில்லை, அவளுக்கும் பேச அனுமதி கொடுக்கவில்லை. அன்றைக்கு முழுவதும் அவனுக்கு அவள் எத்தனைத் தூரம் தேவைப்பட்டிருக்கிறாள் என்று காட்ட ஆரம்பித்திருந்தான்.இளமை வெகுநேரம் இன்பக் களியாட்டம் போட்டது. பெண் எதுவும் சொல்லாமல் அவன் போட்ட தாளத்திற்கு ஆடினாள்.

“வந்தனா…” தன் இஷ்டத்திற்கு ஆடி முடித்தவன் அவள் தலை கோதி அழைத்தான்.

“ம்…”

“எம்மேல கோபமா இருக்கியா?”

“இல்லைத்தான், நீங்கதான் எம்மேல கோபமா இருக்கீங்களோன்னு நினைச்சேன்.”

“உம்மேல கோபமெல்லாம் இல்லை, ஆனா நீ நேத்துப் பேசினது எனக்குப் புடிக்கலைடா.”

“புரியுது அத்தான், இனி திருத்திக்கிறேன்.”

“அர்ச்சனாவைக் கல்யாணம் பண்ணணும்னு நான் என்னைக்கும் நினைச்சதில்லை, ஆனா அந்தப் பேச்சை நான் ஆரம்பத்துலயே மறுத்திருக்கணும், அத்தை வீட்டுக்கு நாங்க கடமைப்பட்டிருக்கோம் எங்கிற பேச்சு எப்பவும் வீட்டுல இருக்கிறதால என்னால எதுவும் பேச முடியலை, ஆனா அது தப்பு, அந்தக் குற்ற உணர்ச்சி எம் மனசுல இருந்துக்கிட்டே இருக்கு.”

“புரியுது அத்தான்.”

“அப்பா என்னைக் குத்தம் சொல்லும் போது அதை நான் பெரிசு பண்ணலை, ஆனா நீ சொல்லிக்காட்டும் போது எனக்கு வலிக்குது, என்னால என்னைக் கன்ட்ரோல் பண்ண முடியலை.”

“சாரி அத்தான்.”

“நிலத்தை விக்க வேணாம்னு நீ நினைக்கிற, நீ சொல்ற காரணம் சரிதான், நிச்சயமா அப்பா அதைச் சொல்லிக்காட்டத்தான் போறாரு…” மேலே பேசாமல் அவன் நிறுத்தினான்.

“இப்ப என்னத்தான் பண்ணப் போறீங்க? யார்கிட்டவாவது கடன் வாங்கப் போறீங்களா?”

“என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன், ஜெகதீஷ்னு, கூடப் படிச்சவன், ஆனா இப்ப நானெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியாத உயரத்துல இருக்கான், இன்னைக்கு அவனைப் பார்க்கத்தான் போனேன்.”

“ம்…”

“கொஞ்சம் பணம் தேவைப்படுது, ஹெல்ப் பண்ணுன்னு கேட்டேன்.” 

“ஓ…” அவள் முகம் வேதனையைக் காட்டியது.

“இதெல்லாம் ஒரு மேட்டரா மச்சான்னு கேட்டான், நான் யார்கிட்டயும் அவ்வளவு சுலபத்துல உதவி கேட்கமாட்டேன்னு அவனுக்குத் தெரியும், ஒரு வருஷத்துக்குள்ள எப்பிடியும் திரும்பக் குடுத்திருவேன், அதுவரைக்கும் பத்திரத்தை உம் பேருக்கு மாத்திக் குடுக்கிறேன், உனக்கு அவசரம்னா வித்துடுன்னு சொல்லியிருக்கேன்.”

“பரவாயில்லை அத்தான், நீங்களே அந்த நிலங்களை வித்துடுங்க, பணம் கைக்கு வர்றப்ப திரும்ப வாங்கலாம்தானே?”

“இல்லைடா, ஜெகதீஷ்கிட்டப் பணத்தை வாங்கிறேன், என்னால முடியலைன்னா வித்திடலாம், ஒரு முயற்சிதானே, செஞ்சு பார்க்கலாம், தப்பில்லை.” அவன்‌ சமாதானம் செய்தான்.

“அத்தை இன்னைக்குச் சிரிக்கிறாங்க.”

“என்னவாம்?” மகனும் புன்னகைத்தான். 

“கடன் வாங்கிறதுன்னாலே எம்புள்ளை சண்டைக்கு வருவான், அப்பிடியானவனை இப்பிடி மாத்திட்டேனாம்!” 

“சரியாத்தானே சொல்லியிருக்காங்க, அந்த விஷயத்துல மட்டுமா என்னை மாத்தியிருக்கே? எவ்வளவு நல்ல பையன் நான், என்னை என்னெல்லாம் பண்ண வெக்கிறே!” என்றவனின் கைகள் கோடு தாண்டிச் சீண்டின.

“இதுல நேத்து ராத்திரி மனுஷனோட அவஸ்தைப் புரியாம புத்தகத்தை வெச்சு நோண்டிக்கிட்டு இருக்கே!” 

“நீங்க கோபமா இருந்தீங்க… எங்கூட பேசுவீங்களோ மாட்டீங்களோன்னு…”

“கோபமா இருந்தா பேசமாட்டேன், ஆனா இதெல்லாம் பண்ணமாட்டேன்னு உனக்கு யாரு சொன்னா?” அதன்பிறகு அவன் வேறாகிப் போக அந்த இரவு தித்திப்பாகக் கழிந்தது.

ஒரு வாரம் கடந்திருந்தது. ரங்கராஜின் கைகளுக்குப் பணம் வந்திருந்தது. அவன் நண்பன் ஜெகதீஷ் சொன்ன தொகையைக் கொடுத்திருந்தான். சினிமாவிலும் அரசியலிலும் அவனுக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. சுலக்சனாவின் பெயரில் இருந்த நிலங்களில் வயல் பூமியும் உண்டு. முப்போகமும் விளையும் பூமி. எதைப்பற்றியும் யோசிக்காமல் அவை எல்லாவற்றையும் நண்பனிடம் கொடுத்துவிட்டான் ரங்கராஜ். 

ஹோட்டல் வருமானம் கணிசமாக இருந்தது. அதைப் பாதுக்காக்க ரங்கராஜுக்குத் தெரிந்திருந்தது. சீட்டுப் போடுபவர்களிடம் மாதா மாதம் பணத்தைக் கொடுத்துவிடுவான். அதிலேயே பெரியதொரு தொகை சேர்ந்திருந்தது. அது போக ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போக மீதமிருக்கும் பணத்தை பேங்கில் போட்டுவிடுவான். அதுவும் ஒரு தொகை சேர்ந்திருந்தது. 

எல்லாப் பணத்தையும் சேர்த்தால் அத்தையின் வீட்டுக் கடனை அடைக்கப் போதும். ஆனால் ரங்கராஜுக்கு தங்கை ஷக்திக்குக் கொஞ்சம் பணம் சேமிப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனது கல்யாணம் இத்தனை அவசரமாக நடக்கும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒரு வருடம் பணம் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான்.

“அம்மா.” அழைத்தபடி உள்ளே வந்த மகனை ஓடிவந்து வரவேற்றார் சுலக்சனா. எங்கே அப்பா மேல் இருக்கும் கோபத்தால் மகன் வீட்டிற்கே வரமாட்டானோ என்று பயந்து போயிருந்தார்.

“வா ரங்கா, வா வா.” ஹால் சோஃபாவில்தான் அமர்ந்திருந்தார் மாணிக்கம். அன்றைக்கு ஹோட்டலில் வைத்துப் பார்த்த பின்பு இன்றைக்குத்தான் மகனைக் காண்கிறார். இடையில் ஒருதரம் கல்யாணத்துக்குக்கு அழைக்கிறேன் என்று வந்து போயிருந்தான்.

“அண்ணா! வாங்க வாங்க.” ஷக்தியும் வாசலுக்கு ஓடிவந்தாள்.

“வந்தனா வரலையா அண்ணா?” அப்பாக்குக் கேட்காமல் ரகசியம் பேசினாள்.

“பேர் சொல்லிக் கூப்பிட்டதெல்லாம் போதும், இனி ஒழுங்கா அண்ணின்னு கூப்பிட்டுப் பழகு ஷக்தி.” இது சுலக்சனா.

“ஹைய்! சூப்பர்! இதுவும் நல்லாத்தான் இருக்கு!” கைகொட்டிச் சிரித்த தங்கையின் தலையில் தட்டினான் ரங்கராஜ்.‌

“அம்மா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அப்பா உள்ள இருக்காரா?”

“ம்… இருக்காரு இருக்காரு.” சுலக்சனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எல்லோரும் உள்ளே வர ரங்கராஜ் ஆரம்பித்தான்.

“அம்மா, பணத்தை ரெடி பண்ணிட்டேன்.” மகன் சொன்னதும் அம்மாவின் முகம் மலர்ந்தது. மாணிக்கமும் ஆச்சரியமான பார்வை ஒன்றை மகனை நோக்கி வீசினார்.

“சீட்டுப் போட்ட பணத்துல ஷக்தி கல்யாணத்துக்குக் கொஞ்சம் ஒதுக்கணும்னு நினைச்சிருந்தேன்.”

“ஷக்தி கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் ரங்கா? அது நடக்கிறப்போ பார்த்துக்கலாம்.”

“இல்லைம்மா, காலம் ஓடிரும், அத்தை வீட்டுக்கு மொத்தமா பணத்தைக் குடுத்தோம்னா எதுவும் நமக்கு மிஞ்சாது, அதான் யோசிக்கிறேன்.”

“இதுல யோசிக்க எதுவுமில்லை தம்பி, மீனாட்சி வீட்டுக் கடனை இதுக்கு மேலயும் வெச்சிருக்கிறது உனக்கு மரியாதை இல்லை, முழுசா குடுத்துரலாம்.”

“நல்லா யோசிச்சுச் சொல்லுங்கம்மா, இதுதான் உங்க முடிவா?” என்றவன் அப்பாவைப் பார்த்தான். அவர் ஏதாவது கருத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தார். 

அத்தனைப் பேர் முன்னாடியும் அன்று மகனைக் கணவன் கைநீட்டி அடித்தது சுலக்சனாவை மிகவும் பாதித்திருந்தது. மீனாட்சியின் குடும்பம், மீனாட்சியின் மருமகன், போதாதென்று இவர்கள் வீட்டு மருமகன் என்று அன்றைக்குச் சபையில் எத்தனை மனிதர்கள் இருந்தார்கள்! அத்தனைப் பேருக்கும் முன்பாக மகனுக்கு அவர் பண்ணிய அவமானத்தை சுலக்சனா மறக்கவுமில்லை. மன்னிக்கவும் தயாரில்லை. 

அன்றைக்குப் பிறகு சில நாட்கள் கணவரோடு எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை அவர்.‌ அப்பாக்குத் தேவையானவற்றை ஷக்திதான் கவனித்துக் கொண்டாள். கல்யாணத்துக்கு மகன் வந்து அழைத்தபோது கல்லுப்போல அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்து அவருக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. அவர் போகாத திருமணத்திற்குத் தானும் போகக் கூடாது என்றுதான் அமைதியாக இருந்தார். ஆனால் மகனின் உறவை முற்றாக உதற அந்தத் தாயால் முடியவில்லை. 

மகன் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்தார். அது மாணிக்கத்திற்கும் தெரிந்துதான் இருந்தது. மனிதர் அதற்கும் ஓர் ஆட்டம் போடுவார் என்று இவர் எதிர்பார்த்திருக்க அப்படி எதுவும் நடக்கவில்லை. சுலக்சனாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. போனால் போகிறது என்று இப்போதுதான் ஒன்றிரண்டு வார்த்தைகள் அந்த மனிதரோடு பேசுகிறார். 

“நிலத்தை நான் விக்கலைம்மா, பணத்தை எப்பிடியோ புரட்டியிருக்கேன், வாங்கினவங்களுக்கு ஒரு வருஷத்துக்குள்ள பணத்தைத் திருப்பித் தர்றதா சொல்லியிருக்கேன், அதுவரைக்கும் நிலத்தோட பத்திரம் எல்லாம் அவங்கக்கிட்டதான் இருக்கும்.”

“சரிப்பா.” இப்போது மாத்திரம் மாணிக்கம் இலேசாக அசைந்தார்.

“நம்பிக்கையான ஆளுங்கதான், அதால நீங்க பயப்பிடத் தேவையில்லைம்மா.” இது கணவருக்கான பதில் என்பதால் சுலக்சனா எதுவும் பேசவில்லை. 

“ஒரு வருஷத்துக்கு வயல்ல இருந்து வர்ற பணம் நமக்கு வராதும்மா.”

“பரவாயில்லை தம்பி, நாம சமாளிக்கலாம், எனக்கு உன்னோட சந்தோஷந்தான் முக்கியம்.” என்றவர் கணவரை ஒரு பார்வைப் பார்த்தார்.

“எப்பவும் சீட்டுப் போடுறவங்கக்கிட்டப் பேசியிருக்கேன், இந்தத் தடவை முதல் பத்துக்குள்ள நமக்குக் குடுக்கணும்னு கேட்டிருக்கேன், சரின்னு சொல்லியிருக்காங்க, அந்தப் பணத்தை எடுத்து கடன் வாங்கினவங்களுக்குக் குடுத்திரலாம்மா.”

“நல்லதுப்பா, உன்னை ரொம்பச் சிரமப்படுத்திக்காத ரங்கா, பொண்ணுங்க எப்பிடியோ அப்பிடித்தான் எனக்கு நீயும், பசங்களைப் புழிஞ்செடுத்து பொண்ணுங்களை நல்லா வாழ வெக்கிற அம்மா நானில்லைப்பா, எனக்கு நீயும் நல்லா இருக்கணும்.” கண்களில் நீர் நிறைந்து போனது பெரியவருக்கு.

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைம்மா, ஷக்தி பேர்ல கொஞ்சம் பணம் போட முடியலேங்கிற வருத்தந்தான், மத்தபடி ஒன்னுமில்லை.”

“அண்ணா, இப்போ எம்பேர்ல பணம் போட்டு என்ன பண்ணப் போறீங்க? அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்ணா.” தங்கை அப்படிச் சொன்னது அவனுக்கு இன்னும் சந்தோஷமாக இருந்தது. இப்போதும் அப்பாவைத்தான் பார்த்தான். 

“அப்பா, நீங்க எதுவும் சொல்லலையேப்பா?” இது ஷக்தி. அப்பாவோடு அண்ணா பேசாவிட்டாலும் அவர் கருத்தை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொண்டாள்.

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு? அதான் எல்லாரும் பெரிய மனுஷங்க ஆகிட்டாங்களே! வீட்டுல இருக்கிற பொம்பளைங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அவங்க இஷ்டத்துக்குப் பண்ணட்டும்!” என்றார்.‌ ஷக்தி தன் அண்ணனைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தாள். ரங்கராஜும் வந்த புன்னகையை மறைத்துக் கொண்டான். சுலக்சனா முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்டவர் பின்வாசலுக்குப் போய்விட்டார். 

“நான் கிளம்புறேன் ஷக்தி.” என்றவன் போய்விட்டான். போகும் மகனைப் பார்த்திருந்த மாணிக்கத்திற்கு வருத்தமாக இருந்தது. அன்றைக்கு அப்படி நடக்கும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. தன் தங்கை மேல் அளவுகடந்த பாசம் இவருக்கு. அவர்களும் அப்படித்தான். தன் மகனைத் தங்கை வீட்டார் மாப்பிள்ளையாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்தபோது மகிழ்ந்து போனார். சுலக்சனாவும் அதற்கு எதிர்ப்புச் சொல்லாதது இன்னும் ஆனந்தத்தைக் கொடுத்தது. 

இரு குடும்பங்களும் இன்னும் பலப்படப் போகின்றன என்கிற தைரியத்தில்தான் கடனுக்கு மேல் கடனாக வாங்கினார்.‌ திருப்பிக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை.‌ ஆறுதலாகத் திருப்பலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அவரின் எல்லா கனவிலும் மகன் மண்ணை அள்ளிப் போடுவான் என்று அவர் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை. 

அத்தனைப் பேர் முன்பாக தனது தங்கை மகளை மகன் நிராகரித்தது அவருக்கு ஆத்திரத்தை வரவழைத்துவிட்டது. நிராகரித்தது மாத்திரமல்லாது தங்கவேலின் மகளை அவன் கைகாட்டியது அவரைக் கொதிநிலைக்கே கொண்டு போய்விட்டது. தங்கவேல் குடும்பத்தின் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. ஆனால் மனம் எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. 

வீட்டைவிட்டு வெளியே போ என்று சொன்னால் மகன் கொஞ்சம் இறங்கி வருவான் என்று அவர் எதிர்பார்த்திருக்க நடந்தது என்னவோ வேறு. மாணிக்கம் அந்த இடத்தில் பலமாக அடி வாங்கினார். மகன் தன்னை இத்தனைத் தூரம் உதாசீனம் செய்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் அடுத்தநாள் ஹோட்டலுக்கும் போனார். பிடி கொடுக்காமல் பேசிய மகன் அவருக்குப் புதிதாகத் தெரிந்தான். 

எல்லாவற்றிற்கும் உச்சமாகக் கல்யாண ஏற்பாட்டைப் பண்ணிவிட்டு அவன் வீடு வந்து தகவல் சொன்னபோது மனிதர் நொறுங்கிப் போனார். இத்தனைக் காலமாகப் பெற்று வளர்த்ததற்கு மகன் மிகப்பெரிய பரிசாகக் கொடுத்துவிட்டானே என்று நொந்து போனார். இது போதாது என்று மனைவி வேறு அவரை விலக்கி வைத்தாள். மூத்த மருமகன், ரங்கராஜ் மேல் எந்தத் தவறும் இல்லை என்று கொடி பிடித்தார். 

வாழ்க்கை வெறுத்துப் போனது மனிதருக்கு. ஒவ்வொரு மாதமும் பேங்கில் பணம் போடுவானாம். யாருக்கு வேண்டும் இவன் பணம்?! அந்த ஹோட்டல் இவரது சொந்த சம்பாத்தியம். இவர் கஷ்டப்பட்டு உருவாக்கியது. மூப்பில் இவர் கொஞ்சம் தளர்ந்துவிட்டதால் எல்லாம் தலைகீழாகிப் போனது. இனி எல்லாவற்றையும் மகன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தது தவறாகிப் போனது. 

அடுத்தநாள் மீனாட்சி அத்தையின் வீட்டிற்கு வந்திருந்தான் ரங்கராஜ். அந்த வீட்டினுள் காலை எடுத்து வைக்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் மனதைச் சமாதானம் செய்துகொண்டு உள்ளே வந்தான். இவர்கள் விஷயத்தில் அவன் மீதும் தவறு இருக்கிறது. ஆரம்பத்தில் இந்தப் பேச்சு வந்தபோதே அவன் தன் மறுப்பைச் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் இன்றைக்கு இப்படித் தயங்கி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். 

“வாப்பா ரங்கா, உள்ள வா, என்ன அங்கயே நின்னுட்டே?” நமச்சிவாயம்தான் இவனைப் பார்த்துவிட்டு வரவேற்றார். அப்பாவின் குரலில் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்தாள் ஆர்த்தி. 

“வாங்கத்தான்.” பெண் வரவேற்றாலும் அவள் முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை. 

“உட்காரு ரங்கா.”

“பரவாயில்லை மாமா, நான் உங்கக்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும், அதான் வந்தேன்.”

“முக்கியமான விஷயம் இல்லைன்னாலும் எப்பவும் போல இந்த வீட்டுக்கு நீ வரலாம்.” அந்த வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலாக இருந்தன. புன்னகைத்துக் கொண்டான்.

“மாமா… என்னை மன்னிச்சிடுங்க.”

“எதுக்குப்பா?” நமச்சிவாயமும் புன்னகைத்தார். உன்னை இழந்ததால் இங்கு யாரும் வருந்தவில்லை என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது. உண்மையும் அதுதான். மூத்த பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை எடுத்தவர்களால் அடுத்த பெண்ணுக்கும் நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருக்க முடியும். ஆனால் ரங்கராஜ் மேலிருந்த நல்லபிப்பிராயம் அவர்களை இந்தளவிற்குக் கொண்டு வந்திருந்தது.

“சொல்லணும்னு எனக்குத் தோணிச்சு மாமா.” என்றவன் அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தான் வந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

“மாமா, பணத்தை ரெடி பண்ணிட்டேன், உங்க வசதி எப்பிடின்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரிப் பண்ணிக்கலாம்.” பெரிய அளவில் தொழில் பண்ணும் மனிதர். திடீரென்று அவர் வங்கிக் கணக்கில் அத்தனைப் பணத்தையும் போட முடியாதே.

“அவ்வளவு பணத்துக்கு என்ன பண்ணினே ரங்கா?” மனிதரின் குரலில் இப்போது உண்மையான அக்கறைத் தெரிந்தது. தன் மகளை மறுத்திருந்தாலும் அந்தப் பொறுப்பான பையனை அவருக்குப் பிடிக்கும். 

“ரொம்ப நாளாவே உங்கப் பணத்தைத் திருப்பிக் குடுக்கணும்னு ஏற்பாடு பண்ணிக்கிட்டுத்தான் இருந்தேன் மாமா, நிலத்தை வித்துடலாம்னு ஆரம்பத்துல இருந்தே அம்மாவும் நானும் சொல்லிக்கிட்டுத்தான் இருந்தோம், ஆனா அப்பா எங்க பேச்சைக் கேட்கலை.”

“இப்போ நிலத்தை வித்துட்டியா என்ன?!”

“இன்னும் இல்லை மாமா, அவசியப்பட்டா அதையும் பண்ணுவேன், தப்பில்லைதானே?”

“முட்டாள் வேலை பார்த்துடாதே, எனக்குப் பணம் தேவைப்பட்டா நானே உங்கிட்டக் கேட்பேன், அப்ப குடுத்தா போதும், அவசரப்பட்டு நிலத்துல கை வெச்சிடாதே, இன்னும் ரெண்டு, மூனு வருஷம் போனா அந்த நிலத்தோட டிமாண்ட்டே வேற.”

“சரி மாமா, ஞாபகம் வெச்சுக்கிறேன், நீங்க பணத்தை வாங்கிக்குங்க.”

“உன்னை நீயே சிரமப்படுத்திக்கிறப்பா.”

“இல்லை மாமா, எப்ப இருந்தாலும் குடுக்க வேண்டிய பணந்தானே.” என்றவனை வருத்தத்துடன் பார்த்தார் நமச்சிவாயம். மாணிக்கம் போல இல்லை இவன். விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று வாழ்பவன். இந்தக் கல்யாணப் பேச்சு நின்று போனதால்தான் இத்தனை அவசரமாக இந்தப் பணத்தை ஏற்பாடு பண்ணியிருக்கிறான் என்று புரிந்து கொண்டார்.‌ அவன் தன்மானத்தைக் காத்துக்கொள்ள வேலை பார்த்திருக்கிறான்.‌

“சரி வாங்கிக்கிறேன், ஆனா உனக்கு எப்ப பணம் தேவைன்னாலும் எங்கிட்டக் கேட்கத் தயங்கக் கூடாது, புரியுதா?”

“ம்…” என்று தலையை ஆட்டிக் கொண்டவனுக்கு வேதனையாகிப் போனது. இந்தக் கல்யாணப் பேச்சு வராமல் இருந்திருக்கலாம். இவ்வளவு நல்ல மனிதரின் உறவு அவனுக்கு நீண்டகாலம் நீடித்திருக்கும்.

“ரங்கா, நீ சின்னப் பையன் இல்லை, நாம வெளிப்படையா சில விஷயங்களைப் பேசிக்கலாம்.”

“சொல்லுங்க மாமா.” 

“இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா நீ வரணும்னு நானும் உங்கத்தையும் ஆசைப்பட்டது உண்மைதான், நான் இல்லேங்கலை, நீ அர்ச்சனாவை மறுத்தது எங்களுக்கு வருத்தந்தான், இல்லைன்னு நான் பொய் சொல்லமாட்டேன், அதுக்காக நீ இப்பிடி தப்பு செஞ்சவன் மாதிரி எம் முன்னாடி நிற்கத் தேவையில்லை.”

“மாமா…”

“உனக்கே தெரியாம உன்னோட மனசுல வேறொரு பொண்ணு இருந்திருக்கா, அது தெரிஞ்சதுக்கு அப்புறமாவும் நீ என்னோட பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா அதுதான் தப்பு, அந்த இடத்துல நீ எம் பொண்ணைப் பத்தியும் யோசிச்சிருக்கே, அது எனக்குப் புடிச்சிருந்தது.”

“…” இவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான்.

“கல்யாணம் பண்ணிக்கிறது சுலபம், ஆனா அதுக்கப்புறம் ஒரு நல்ல வாழ்க்கையை அர்ச்சனாக்கு என்னால குடுக்க முடியுமான்னு உங்கம்மாக்கிட்டக் கேட்டியாம், அந்தப் பொறுப்புணர்ச்சியை நான்‌ பாராட்டுறேன், அப்பிடி ஏதாவது நடந்திருந்தா எம் பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது? அதுக்கு நீ இப்போ பண்ணியிருக்கிறது எவ்வளவோ மேல்.”

“என்னை மன்னிச்சிடுங்க மாமா.”

“இந்த மன்னிப்புக்கு அவசியமே இல்லை, அன்னைக்கு நான் அந்தப் பேச்சை எடுக்காம இருந்திருந்தா உன்னோட கல்யாணம் இன்னும் சிறப்பா நடந்திருக்கும், நாந்தான் அவசரப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டேன், அன்னைக்கு அத்தனைப் பேரு முன்னாடியும் உங்கப்பா நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு, அதை என்னாலயே ஜீரணிக்க முடியலை.” 

“பரவாயில்லை…”

“நடந்தது நடந்து போச்சு, எந்தக் குற்ற உணர்வும் இல்லாம நீ சந்தோஷமா வாழப்பாரு, புதுசாக் கல்யாணம் பண்ணியிருக்கே, செலவுகள் இருக்கும், அதை என்னன்னு பாரு, மாமாவோட பணத்தை ஆறுதலாக் குடுக்கலாம், உங்கத்தை ஏதாவது வலிக்கிற மாதிரிப் பேசினா கண்டுக்காத, அவ இப்போ வீட்டுல இல்லை, இருந்திருந்தா என்னால இவ்வளவு நிதானமா உங்கிட்டப் பேசியிருக்க முடியாது.”

“ஓ…” மீனாட்சியும் அர்ச்சனாவும் ஒரு திருமண வீட்டுக்குப் போயிருந்தார்கள். அர்ச்சனாவின் நண்பிக்குத்தான் திருமணம். அன்றைக்குத் தன் அண்ணன் வீட்டிலிருந்து வந்த பிற்பாடு மீனாட்சி ஒரு நாட்டியம் ஆடியது என்னவோ உண்மைதான். அர்ச்சனாவும் இரண்டு நாட்கள் சோகமாகத்தான் நடமாடினாள். ஆனால் இந்த வீடு அந்தப் பிரச்சனையிலிருந்து அவசரமாகத் தன்னை மீட்டுக் கொண்டது. மீனாட்சியைத் தவிர.

ரங்கராஜ் மிகவும் நிம்மதியாக உணர்ந்தான். நமச்சிவாயம் மாமவோடு பேசியது மனதுக்கு நிம்மதியாக இருந்தது. மனதை அழுத்திய பாரம் தீர்ந்திருந்தது. மாமா இத்தனை வெளிப்படையாகப் பேசுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த நல்ல மனிதரின் உறவு தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்று அவன்‌ உண்மையிலேயே வருத்தப்பட்டான். ஆனால் இத்தனை இணக்கமாக அவர் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.‌

இவர்கள் திருமணம் முடிந்த பிற்பாடு இன்றைக்குத்தான் வீட்டிற்குப் போயிருக்கிறான். அப்பா ஏதாவது ஆரம்பிப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்க அதுவும் நடக்கவில்லை. எல்லாம் அவனுக்குச் சாதகமாக முடிந்தது போல இருந்தது. என்ன…‌ இவர்கள் அத்தனைப் பேரும் வந்தனாவை ஏற்றுக்கொள்ளக் காலம் எடுக்கும். அதுவரை அவன் பொறுத்திருக்க வேண்டும்.‌ அது ஒன்றும் அத்தனைச் சிரமமில்லை!

வீட்டிற்கு வந்தவன் நடந்தது அனைத்தையும் மனைவியிடம் பகிர்ந்து கொண்டான். வந்தனாவும் மகிழ்ந்து போனாள். எங்கே கணவன் அவன் வீட்டோடான உறவைத் துண்டித்துக் கொள்வானோ என்று அவள் பயந்து போயிருந்தாள். நமச்சிவாயமும் இத்தனை இயல்பாக அவனோடு உரையாடியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

“வந்தனா, இன்னைக்கு நைட் உங்க வீட்டுக்குப் போகலாம், ரெடியா இரு.” என்று சொல்லிவிட்டு ஹோட்டலுக்குப் போயிருந்தான். வாழ்க்கை ஒரு சீரான நிலைமைக்கு வந்திருந்தது. காலையில் எழுந்தால் இருவரும் அவசர அவசரமாகக் கிளம்புவார்கள். காலை உணவை வந்தனா தயார் செய்திடுவாள். பகலுணவை அவன் ஹோட்டலில் பார்த்துக் கொள்வான். இவளும் யூனிவர்ஸிட்டி கேன்டீனில் உண்பாள்.‌ சாப்பாடு அங்கு அத்தனை மோசமாக இருக்காது. 

மாலை ஐந்து மணியளவில் இவள் வீட்டுக்கு வந்துவிடுவாள். ரங்கராஜ் வீடு வர ஆறு மணி தாண்டிவிடும். சில நேரம் வேலை அதிகமாக இருந்தால் ஏழு மணியாகிவிடும். இரவு உணவை வந்தனா ஆறுதலாகச் செய்வாள். அவன் வரும்வரை பாடங்களில் கவனம் செலுத்துவாள். இரவு உணவை முடித்துவிட்டால் ரங்கராஜ் ஏதாவது கணக்கு வழக்குகளைப் பார்ப்பான். இவளும் புத்தகங்களோடு ஐக்கியமாகி விடுவாள். இறுதியாண்டு என்பதால் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்தன. இன்னும் ஒருமாதப் படிப்பு மீதமிருந்தது.

லேப்டாப்பை வைத்துக்கொண்டு மனைவி வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டால் இவன் அதிகம் தொல்லை செய்யமாட்டான். அவள் படிப்பில் எந்தக் கவனக் குறைவும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் இருவரும் கவனமாக இருந்தார்களோ இல்லையோ சுலக்சனா மிகவும் உஷாராக இருந்தார்.

“எப்பிடியாவது டிகிரியை முடிச்சுட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சிடணும் வந்தனா.” என்று வரும்போதெல்லாம் அடிக்கடி சொல்லுவார். மருமகளின் படிப்பு முக்கியம் என்றாலும் அவள் படிப்பை முடிப்பதற்கு முன்பாகக் குழந்தை ஏதாவது உண்டாகிவிட்டால் என்ன செய்வது என்பது அவர் எண்ணம்.‌ அதை நேரடியாகச் சொல்ல முடியாமல் தவிப்பார்.

“எப்பவுமே இந்த லேப்டாப்பையே கட்டிக்கிட்டு இருந்தா நாம எதுக்குக் கல்யாணம் பண்ணினோம்?” சில இரவுகளில் மனைவியிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வான் கணவன்.

“இதுல உன்னோட அத்தைக்குப் பயம் வேற!”

“அத்தைக்குப் பயமா? என்ன பயம்?” இவளுக்கு அந்தளவிற்கெல்லாம் யோசிக்கத் தெரியாது.

“படிப்பு முக்கியம், படிப்பு முக்கியம்னு வரும்போதெல்லாம் எதுக்குச் சொல்றாங்கன்னு நினைச்சே? கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னு நமக்குச் சொல்லாமச் சொல்றாங்களாம்!”

“நீங்க அடக்கி வாசிக்கிறீங்களா அத்தான்?” அவள் குரல் கொஞ்சும். 

“அத்தான் இப்போ அடக்கித்தாண்டி வாசிக்கிறேன், என்னோட ஆட்டத்தை நீ இன்னும் முழுசா பார்க்கலை.” அவனும் காதுக்குள் ரகசியம் பேசுவான்.

“ஐயையோ! இதுக்கே மூச்சு முட்டுதே அத்தான்.” அவர்கள் இரவுகள் இனிமையாகக் கழியும். 

ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டான் ரங்கராஜ். இன்றைக்கு அவனது வீட்டுக்குப் போனது, அத்தையின் வீட்டுக்குப் போனது என்று மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதே மகிழ்ச்சியை மனைவிக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே மாமியார் வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.

“அம்மாக்குக் கால் பண்ணிச் சொல்லட்டா அத்தான்?”

“அதெல்லாம் நாங்க ஏற்கனவே சொல்லிட்டோம் மேடம்.” அவன் நல்ல மனநிலையில் இருப்பது தெரிய இவளையும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

“அக்கா!” இவர்களது பைக் சத்தம் கேட்கவும் மீரா வாசலுக்கே வந்து வரவேற்றாள்.

“வாங்கத்தான்.” பரீட்சை நெருங்குவதால் முன்பு போல மீராவால் இப்போது அடிக்கடி அக்கா வீட்டுக்குப் போக முடிவதில்லை. வந்தனாவும் படிப்பில் பிஸியாகிவிட்டதால் அக்காவும் தங்கையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்துக் கொள்கிறார்கள்.

“படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது மீரா?”

“நல்லா போகுதுக்கா.”

“அம்மா எங்க?”

“நீங்க வருவீங்கன்னு அத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னதும் கிச்சன் ரெண்டு படுது, அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம்.” அன்றொரு நாள் பிரச்சனை நடந்த இரவன்று இங்கு இவர்கள் வந்து போனதுதான். கல்யாணம் முடிந்த பிற்பாடு இப்போதுதான் ஒன்றாக வருகிறார்கள். 

“அப்பா எங்க மீரா? நாங்க வர்றோம்னு அப்பாக்குத் தெரியுமா?” 

“தெரியும்கா, அப்பா ஒன்னும் சொல்லலை, ஆனா எனக்குச் சந்தோஷப்பட்ட மாதிரித்தான் தெரிஞ்சுது.” என்றவள் அத்தானைப் பார்த்துச் சிரித்தாள்.

“உங்கப்பாக்கு அவ்வளவு கொழுப்பா மீரா? நாங்க வர்றோம்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவாரோ?” மனைவியை வேண்டுமென்று வம்பிழுத்தான் ரங்கராஜ். தங்கவேலைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசினால் மனைவி பொங்கிவிடுவாள் என்று அவன் நன்கறிவான்.

“வாப்பா ரங்கா, வா வந்தனா.” அப்போதுதான் இவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தார் ரேவதி.

“என்னங்க! வந்தனா வந்திருக்கா.” ஹாலில் அமர்ந்திருந்த தங்கவேல் நிமிர்ந்து பார்த்தார். உள்ளுக்குள் மகளைப் பார்த்து மகிழ்ந்திருப்பார் போலும். ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

“அப்பா!”

“வாம்மா, வா ரங்கா.” என்றார் சம்பிரதாயத்திற்காக. ஆனால் அதற்கே மகள் பறக்காத குறையாக அப்பாவிடம் போய்விட்டாள்.

“எப்பிடிப்பா இருக்கீங்க? ஆஃபீஸெல்லாம் எப்பிடிப் போகுது?”

“நல்லா போகுது, என்ன தங்கவேல், மகளுக்குச் செலவே இல்லாமக் கல்யாணம் பண்ணிட்டே போல இருக்குன்னு கேள்வி கேட்கிறாங்க.” அந்தப் பதிலில் வந்தனாவின் முகம் வாடிப்போனது. 

“என்னங்க நீங்க? வீட்டுக்கு வந்த பொண்ணுக்கிட்ட இப்பிடித்தான் பேசுவீங்களா?” 

“மாமி, இன்னைக்குச் சமையல் என்ன?” இது ரங்கராஜ். தங்கவேல் பேசியதையோ, மனைவியின் முகம் வாடியதையோ அவன் கண்டுகொள்ளவே இல்லை. 

“புட்டு பண்ணுறேம்பா, அன்னைக்கு உங்கம்மாவோட பேசும்போது ரங்காக்குப் புட்டும் மாட்டிறைச்சிக் கறியும் புடிக்கும்னு சொன்னாங்க, அதான் பண்ணுறேன்.”

“தேங்காய் சம்பலும் பண்ணுங்க மாமி.” மாமியார் வீட்டிற்கு விருந்தாட வந்தவன் போல ரங்கராஜ் பேசவும் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தங்கவேலும் விசித்திரமாகத்தான் மருமகனைப் பார்த்தார். ஆனால் மாமியும் மருமகனும் எதுவும் நடவாதது போல அந்த நொடியை அனுபவித்தார்கள்.

“இன்னைக்கு வீட்டுக்குப் போயிருந்தேன் மாமா.” சாப்பாட்டு மேசையில் பேச்சை ஆரம்பித்தவன் அன்று நடந்ததைச் சொல்லி முடித்தான். மீனாட்சி அத்தையின் வீட்டிற்குப் போனது, அங்கு நமச்சிவாயம் மாமா இதமாகப் பேசியது என்று எதையும் மறைக்கவில்லை.

“இவ்வளவு பணத்தை எப்பிடிப் புரட்டினே ரங்கா!” மருமகனோடு இருந்த மனத்தாங்கலை மறந்து கேட்டார் தங்கவேல்.

“அதை எப்பிடியோ புரட்டிட்டேன் மாமா, இதுக்கு மேலயும் அந்தப் பணத்தைக் குடுக்காம இருக்கிறது மரியாதை இல்லை.”

“நமச்சிவாயம் இத்தனை அனுசரணையா நடந்துக்கிட்டது சந்தோஷமாத்தான் இருக்கு.” 

“நிலத்தை வித்துடலாம்னுதான் ஆரம்பத்துல நினைச்சேன், ஆனா வந்தனா அதுக்குச் சம்மதிக்கலை, நமச்சிவாயம் மாமாவும் அதையேதான் சொன்னாரு, அவசரப்பட்டு நிலத்தை வித்துடாதேன்னு.”

“அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும், எங்க முதலீடு பண்ணினா எவ்வளவு அறுவடைப் பண்ண முடியும்னு தெரிஞ்ச மனுஷன், ஷக்தி கல்யாணத்துக்கு இன்னும் காலம் இருக்கு, நல்ல முடிவுதான் எடுத்திருக்கே.” என்றவர் சாப்பாட்டை முடித்துக் கொண்டார். ரேவதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மருமகன் கடனை அடைக்க ஏற்பாடு செய்துவிட்டார் என்பது ஒருபுறமிருக்க கணவர் இயல்பாகப் பேசியது இன்னும் ஆனந்தத்தை உண்டு பண்ணியது. அதே மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் புறப்பட்டார்கள் ரங்கராஜும் வந்தனாவும். 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 9

அத்தியாயம் 09 ரங்கராஜும் வந்தனாவும் கடைக்கு வந்திருந்தார்கள். பரீட்சைகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்தன. அடுத்தவாரம் பிரியாவிடை விழா இருந்தது. அதற்குப் பெண்கள் எல்லாரும் புடவை உடுத்துவதெனத் தீர்மானம் பண்ணியிருந்தார்கள்.‌  "வந்தனா, உனக்குப் புதுசா சாரி வாங்கலாம்." என்று அவன்தான் கடைக்கு அழைத்து…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 4 கருத்துகள் உள்ளன

  1. கனவில் நினைத்தவன்
    கல்யாணம் செய்து கண்முனே வாழ்க்கையில் கலந்து கொள்ள கண்ணில் மின்னலாக சந்தோஷம்…..

உங்கள் கருத்தைப் பகிருங்கள்