arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 08
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 8 / 20

அத்தியாயம் 08

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 08

பௌர்ணமி தினம் என்பதால் அன்றைக்குக் கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. ஷாப்பிங் மால், தியேட்டர் என எங்கும் போக முடியாது என்பதால் பெண்ணைத் தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வந்தான் தேவன்.

“வேணாம் தேவ், உங்க வீட்டுல காமாட்சி அம்மா இருப்பாங்க.”

“அவங்க இப்போ வீட்டுக்குக் கிளம்பியிருப்பாங்க, அப்பிடியேதான் அவங்க இருந்தாலும் என்ன இந்திரா? எதுக்குத் தயங்கிறே? என்னோட வீட்டுக்கு நீ வர்றதுக்கு அவங்க என்ன சொல்லிடப் போறாங்க?” அவள் எவ்வளவு மறுத்தும் அவன் கேட்கவில்லை.

ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். டைனிங் டேபிளில் உணவு வைக்கப்பட்டிருந்தது. முன்பு வந்தபோது அவள் பாவனை செய்த அறைக்குள் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தவளை உட்காரச் செய்து இருவரும் உண்டார்கள்.

“என்னோட வா இந்திரா.” என்றவன் அவள் கை பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றான்.

“இது என்னோட ரூம்.” ஒரு கதவைத் திறந்தான். மேல் தளத்திலும் இரண்டு அறைகள் இருந்தன. முக்கியமான தளவாடங்களோடு அந்த அறை கனகச்சிதமாக இருந்தது. சாளரத்தின் வழியே அலை பொங்கும் கடல் தெரிந்தது.

“ரொம்ப அழகா இருக்கு தேவ், கடலைப் பார்க்கணும்னா ஜன்னல் பக்கத்துல வந்து நின்னா போதுமில்லை?”

“ம்… இன்னைக்கு ஃபுல் மூன், நாம ரெண்டு பேரும் பீச்சுக்குப் போகலாம்.”

“என்னால லீவு எடுக்க முடியாதுப்பா, நாளைக்கு நான் ஆஃபீஸ் போகணும்.”

“நைட்டுக்கு இங்க தங்கிட்டு காலையில அஞ்சு மணிக்குக் கிளம்பினா ஏழரைக்கு அங்க போய் சேர்ந்திடலாம், உங்கூட நானும் வர்றேன்.”

“எதுக்கு தேவ் உங்களுக்குத் தேவையில்லாத சிரமம்?”

“இந்திரா…” ஜன்னலை அடுத்துப் பெண் நின்றிருக்க அவளருகே வந்து நின்றான் இளவல். இருவருக்கும் இடையில் அத்தனை இடைவெளி இருக்கவில்லை. அவன் கரங்கள் இரண்டும் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டன. தனது இடது கரத்தை உயர்த்தியவன் அது பற்றியிருந்த அவள் கரத்தில் முத்தம் வைத்தான். பெண் பிரமித்தாலும் மறுப்புச் சொல்லவில்லை.

“நீ எங்கூட இருக்கேன்னா அது எனக்குச் சந்தோஷம், உங்கூட நான் வர்றேன்னா உலகத்துல எந்த மூலையா இருந்தாலும் அது எனக்கு சந்தோஷந்தான்டா.”

“தேவ்… எப்பிடி…”

“தெரியலை கண்ணம்மா, எப்ப எனக்குள்ள நீ வந்தேன்னு சத்தியமா எனக்குத் தெரியலை, உண்மையைச் சொன்னா டுபாய்ல என்னோட ரூம்ல நீ தங்கினப்போ எப்பிடி இந்தப் பொண்ணை அந்த விக்ரம் கூட சேர்த்து வெக்கிறதுன்னுதான் நான் யோசிச்சேன்.” இப்போது அவள் முகம் கோபத்தைக் காட்டியது. தேவன் சிரித்தான்.

“நான் என்னோட அப்போதைய மனநிலையைச் சொன்னேன்.” என்றவன் இருவருக்கும் இடையிலிருந்த இடைவெளியை இன்னும் குறைத்தான்.

“சொல்லு இந்திரா, நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?”

“தேவ்…” அவள் குரலில் இன்னும் தயக்கம் தெரிந்தது. பற்றியிருந்த அவளது இடது கரத்தில் இன்னுமொரு முத்தம் வைத்தவன் இப்போது இதழ்களை நெருங்கினான்.

“தேவ்!” அவள் அதிர்ச்சியை அலட்சியம் செய்தவன் அங்கேயும் இதழ் பதித்தான். நிதானமான முத்தம் இருவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது. மெதுவாகவே விலகியவன் விழி மூடி அவனை அனுமதித்தவளின் கன்னம் தடவினான்.‌

“இப்ப சொல்லு, எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்?”

“நீங்க சொல்லுங்க.” இப்போதும் மூடிய அவள் விழிகள் திறக்கவில்லை.

“நாளைக்கு.”

“தேவ்?! நாளைக்கா?”

“அடுத்த வாரம் நான் கிளம்பணும் இந்திரா, ரெண்டு வாரந்தான் லீவு போட்டிருக்கேன்.”

“எனக்கு…‌ நான் இங்க மூனு மாசம் இருக்கணும் தேவ்.”

“தெரியும், அதாலதான் கேட்கிறேன், எதை எப்போ பண்ணுறதுன்னு முடிவெடுத்துக்கலாம், அடுத்த வாரமே கிளம்பட்டுமா? இல்லை இன்னொரு வாரம் இருக்கட்டுமா?”

“முடியுமா தேவ்? உங்க ஆஃபீஸ்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

“அது என்னோட பிரச்சினை, உனக்கு நான் இங்க இருக்கணுமா? கிளம்பணுமா?” அவன் முகத்தில் புன்னகை. குரல் கிறங்கிப் போய் கிடந்தது.

“இங்க இருந்தா நல்லா இருக்கும்…”

“அப்போ இருக்கட்டுமா? உங்கூட வந்து?”

“ம்…‌ எங்கூட வந்து இருங்க, ஆனா வேற ரூம்ல.” அவள் சொல்லி முடிக்கவும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“ஏன்டா?” காதல் வழிந்த அந்தக் குரல் அவளிடம் சரசம் பண்ணியது. பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

“புடிக்கலையா என்ன?”

“நான் உங்களைப் பார்த்து பயப்பிடலை, என்னைப் பார்த்துத்தான் பயப்பிடுறேன்.” சொல்லி முடித்த பெண் சில நொடிகளில் அவன் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

“அதாலதான்டீ ராட்சசி சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றேன், இருபத்தி ஒன்பது வருஷம் நல்லவனா வாழ்ந்தது போதாதா? இன்னும் நான் கையைக் கட்டிக்கிட்டுக் காத்திருக்கணுமா?”

“தேவ்…”

“என்னடா?”

“சூர்யாக்கிட்ட சொல்லட்டுமா? நான் இதுவரைக்கும் அவங்கிட்ட எதையுமே மறைச்சதில்லை, இப்ப ஏதோ தப்புப் பண்ற மாதிரி இருக்கு.”

“மறைக்கணும்னு நானும் நினைக்கலை, ஆனா என்னை அவன் சரியா புரிஞ்சுக்குவானா?”

“என்னோட கல்யாண விஷயத்தைத் தவிர எங்க வீட்டுல எனக்கு எல்லாமே பெஸ்ட்டாத்தான் பண்ணியிருக்காங்க.”

“அந்தக் கல்யாணம் கூட அவங்களைப் பொறுத்தவரை பெஸ்ட்தான்.”

“ஆனா என்னோட மறுப்பை அவங்கப் புரிஞ்சுக்கலை, ஆனா சூர்யா அப்பிடியில்லை, கோபம் வந்தா சத்தம் போடுவான், ஆனா என்னை எப்பவுமே புரிஞ்சுக்குவான், இப்பவும் என்னைப் புரிஞ்சுக்குவான் தேவ்.”

“புரிஞ்சுக்காட்டியும் அவனுக்கு விளக்கம் குடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு.” என்றவன் அலைபேசியை எடுத்தான்.

“அங்க இப்போ நேரம் ஏழு மணி, தூங்குவானா?”

“இல்லையில்லை, மார்னிங் ஏர்லியா எந்திருச்சுப் படிப்பான்.”

“ரொம்பப் படிப்பாளியோ? ப்ரூனல் யூனிவர்ஸிட்டியாம்! மெடிஸின் பண்ணுறானாம்?”

“ம்… நல்லா படிப்பான் தேவ்.” அக்காவின் முகத்தில் அத்தனைப் பெருமை. சூர்யாவிற்கான அழைப்பு பறந்தது.

“அண்ணா! எப்பிடியிருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் சூர்யா, டிஸ்டர்ப் பண்ணுறேனா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லைண்ணா.” குரல் இலேசான‌ சோர்வுடன் வந்தது.

“வீட்டுல இன்னும் ப்ராப்ளமா? என்ன சொல்றாங்க?”

“அக்கா மேல செம கோபத்துல இருக்காங்க, ஒரு நல்ல வரனை அக்கா வேணாம்னு சொல்லிட்டாளாம், அதோட அவங்க பேச்சைத் தட்டுறாளாம், எப்பப் பார்த்தாலும் வீட்டுல சத்தமாவே இருக்கு, ரெண்டு நாளா இந்திராவோட சண்டைப் போட்டுக்கிட்டே இருக்காங்க.” தம்பி பேசுவது அக்கா காதிலும் விழ அவள் முகம் இறுகிப் போனது. அவள் இங்கே கிளம்பி வந்ததற்கு அதுவும் ஒரு காரணம்தானே.

“அக்கா சொல்றதை அவங்க கொஞ்சம் என்னன்னு கேட்கலாமே சூர்யா, ஆரம்பத்துல அவங்க சொன்னதை இந்திரா கேட்டாதானே? இப்போ வேணாம்னு சொல்றான்னா ஏதோ காரணம் இருக்கும்னு ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?”

“எனக்கு யார் பக்கம் பேசுறதுன்னு தெரியலைண்ணா, அக்காவும் ஏன் இவ்வளவு பிடிவாதம் புடிக்கிறான்னு எனக்குத் தெரியலை.”

“ஏன் சூர்யா? அந்த விக்ரம் மட்டுந்தான் இந்த உலகத்திலேயே ஆம்பிளையா? அவனைத் தவிர உங்கக்காவை வேற யாரும் நல்லா பார்த்துக்க மாட்டாங்களா? எங்களையெல்லாம் பார்த்தா உங்க வீட்டுல நல்ல வரனா ஏத்துக்க மாட்டாங்களா?”

“அண்ணா! எனக்குப் புரியலை? நீங்க என்ன சொல்ல வர்றீங்க?!” தம்பி மட்டுமல்ல, இங்கே அக்காவும் இப்போது அதிர்ந்தாள்.‌ தம்பி என்ன பதில் சொல்வானோ என்ற பயம் அவளைக் கவ்விக் கொண்டது. தேவன் அவள் கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.

“சூர்யா, அவசரப்பட்டு எந்த பதிலும் சொல்லிடாதே, எனக்கு இந்திராவைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன், உங்கக்காக்கு ஒரு நல்ல வாழ்க்கையை, அவ எதிர்பார்க்கிற வாழ்க்கையை என்னால குடுக்க முடியும், அவளை என்னால சந்தோஷமா பார்த்துக்க முடியும்.”

“…” இந்த இடைப்பட்ட காலத்தில் தேவனின் திருமணம் நின்று போன விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு வந்திருந்தது. பேச்சுவாக்கில் அக்கா சொல்லியிருந்தாள். சூர்யா கண்களை இறுக மூடிக்கொண்டான். நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளச் சற்றே கடினமாக இருந்தது.

“இந்திரா இப்ப எங்கூடத்தான் இருக்கா சூர்யா.”

“ஓ…‌ எங்க?” அவன் குரலில் உயிர்ப்பில்லை.

“கொழும்புல, இன்னைக்குக் காலைலதான் வந்தா, உங்கிட்ட எதையும் மறைக்க அவளால முடியாதுன்னு சொன்னா, முதல்ல ப்ரப்போஸ் பண்ணினது நான், அப்போ முதல்ல இதைப்பத்தி உங்கிட்டச் சொல்ற கடமையும் எனக்குத்தான் இருக்கு.”

“…”

“நான் பேசுற விஷயம் உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம், ஒருவேளை எம்மேல கோபம் கூட வரலாம், வேலியே பயிரை மேயுதுன்னு நீ குத்தங்கூடச் சொல்லலாம், எதுவா இருந்தாலும் அதை நான் இந்திராவுக்காகப் பொறுத்துக்குவேன் சூர்யா, ஏன்னா அவளுக்கு உன்னை அவ்வளவு புடிக்குது, அதேயளவு உன்னை எனக்கும் புடிக்குது.”

“…”

“உன்னோட மனசு எனக்குப் புரியுது, வீட்டுல ஏற்கனவே ஒரு பிரச்சினை ஓடுது, இதுல இது இப்போ தேவையான்னு நீ நினைக்கலாம், ஆனா சில கேள்விகளுக்கு எங்கிட்டப் பதிலில்லை சூர்யா, எனக்கு இந்திராவைப் புடிச்சிருக்கு, அவசரமா எதுக்கு இப்பிடியொரு முடிவுன்னு நினைக்கலாம், ஆனா என்னோட மனசை என்னால மட்டுந்தான் உணர முடியும்.”

“அக்கா என்ன சொல்றா?”

“இந்த முடிவால எனக்குத் தேவையில்லாத சங்கடங்கள் வரும்னு ஒதுங்கப் பார்க்கிறா, ஆனா அது அவசியமில்லைன்னு எனக்குத் தோணுது.”

“அக்காக்கிட்ட ஃபோனை குடுக்கிறீங்களா, நான் அவகிட்ட பேசணும்.” தம்பி சொல்லவும் அலைபேசியை அவளிடம் கொடுத்தவன் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டான்.

“சூர்யா…”

“என்னக்கா இதெல்லாம்? என்ன அண்ணா திடீர்னு இப்பிடியெல்லாம் பேசுறாரு? என்னதான் நடக்குது அங்க?!”

“அது வந்து… சூர்யா…” என்று ஆரம்பித்தவள் தேவன் தன்னைப் பார்க்க வந்திருந்த போது தன் மனதிலிருப்பதைச் சொன்னது, தான் அதை மறுத்தது, இப்போது இங்கே கிளம்பி வந்திருப்பது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

“அப்ப நீ முடிவே பண்ணிட்டியா?”

“சூர்யா… அது…”

“அக்கா இது உன்னோட வாழ்க்கை, விக்ரமை எந்தப் பொண்ணுமே வேணாம்னு சொல்லமாட்டா, ஆனா நீ வேணாம்னு சொல்லிட்டு தேவனைக் கை காட்டுறீன்னா கண்டிப்பா அவர்கிட்ட என்னவோ உனக்குப் புடிச்சிருக்கு, ஆனா ரெண்டு தரப்புல இருந்தும் நீ நிறையச் சிக்கல்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.”

“புரியுது, சேர்ந்து சமாளிக்கலாம்னு தேவன் சொல்றாரு.”

“சொல்றதுக்கு எல்லாமே சுலபமாத்தான் இருக்கும், ஆனா அனுபவிக்கணும், அதுக்கு உன்னை நீ தயார்படுத்திக்கோ.”

“மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை, நீ என்ன சொல்றே சூர்யா? நான் தப்பான முடிவெடுத்திருக்கேன்னு நீ நினைக்கிறியா?”

“எனக்குத் தெரியலை, என்னைப் பொறுத்தவரை தேவன் ரொம்ப நல்ல மனுஷன், அதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது, நடு ராத்திரியில முழு போதையில இருக்கிற பொண்ணுக்கிட்ட எப்பிடி வேணும்னாலும் ஒரு ஆம்பிளை நடந்துக்கலாம், ஆனா உன்னைப் பாதுகாத்தது மட்டுமில்லாம எனக்கும் பொறுப்பா தகவல் சொன்ன மனுஷன் எப்பிடித் தப்பானவனா இருக்க முடியும்? ஆனா உனக்குப் பொருத்தமானவனான்னு நீதான் முடிவு பண்ணணும்.”

“தேவன் எனக்கு மட்டுமில்லை, நம்ம குடும்பத்துக்கே சரியானவரா இருப்பார்னு நான் நம்புறேன்.”

“மத்தவங்களை விடு, உனக்குச் சரியானவரா இருப்பார்னு தோணிச்சுன்னா போதும், அப்பிடி நினைச்சதாலதானே இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே!”

“சூர்யா…”

“இப்ப என்ன பண்ணப் போறே? நம்ம வீட்டுக்குத் தகவல் சொல்லப் போறியா?”

“என்ன செய்யலாம்னு நீ நினைக்கிறே?”

“அவசரப்படாதே, அவங்க வீட்டைப் பொறுத்தவரைக்கும் அண்ணாக்குப் பேசின பொண்ணு மனசுல இன்னொரு மனுஷன் இருந்திருக்கான், அந்தக் கல்யாணத்தை அண்ணா நிறுத்தினதை யாரும் தப்புன்னு சொல்ல மாட்டாங்க, ஆனா நம்ம வீட்டுல அப்பிடியில்லை, கல்யாணத்தை நிறுத்தினது நீ, இந்த நிமிஷம் வரை விக்ரம் உன்னை வேணாம்னு சொல்லலை.”

“அந்தப் பேச்சைப் பேசாதடா!”

“உனக்குப் புடிக்கலைன்னாலும் உண்மை அதுதான், இப்போ திடீர்னு நீ அண்ணாவைக் கொண்டு வந்து நிறுத்தினா இந்தக் கல்யாணம் நின்னு போனதுக்கான காரணம் அண்ணாதான்னு சொல்லுவாங்க, யாரு சொல்லாட்டியும் நம்ம அம்மாவே சொல்லுவாங்க.”

“அதுவும் சரிதான்.”

“என்னோட எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சிருச்சு, ரெண்டு நாள்ல செமஸ்டர் லீவு ஆரம்பிச்சிடும், நானும் அங்க வர்றேன், என்னப் பண்ணுறதுன்னு முடிவு பண்ணலாம்.”

“டேய் சூர்யா! நிஜமாவாடா? நிஜமா நீயும் இங்க வர்றியா?”

“எனக்கும் அண்ணாவைப் பார்த்த மாதிரி இருக்கும், உன்னோட தங்கின மாதிரியும் இருக்கும், நம்ம வீட்டுக்கு இப்போ எந்தத் தகவலும் தெரிய வேணாம்கா.”

“சரிடா, நீ இங்க வர்றது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?” அதற்குப் பிறகும் ஏதேதோ பேசிவிட்டு ரூமிலிருந்து வெளியே வந்தாள் பெண்.‌ மாடியில் அவன் இருப்பது போல தெரியவில்லை. படிகளில் இறங்கி வர கிச்சனில் அரவம் கேட்டது.

“தேவ்…” அவள் அழைத்தபடி உள்ளே நுழைய கையிலிருந்த டீயை அவளிடம் நீட்டினான்.

“என்ன சொல்றாங்க உங்கத் தம்பி?”

“சூர்யா இங்க வர்றானாம் தேவ்! அவனுக்கு உங்களைப் பார்க்கணுமாம், எங்கூட இருக்கணுமாம்!”

“ஓ…” இதை தேவன் எதிர்பார்க்கவில்லை. என்னதான் சூர்யாவிற்குத் தன்மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் தான் இப்போது எடுத்திருக்கும் முடிவு அவனைக் கோபப்படுத்தும் என்றுதான் எண்ணியிருந்தான். எது வந்தாலும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டுதான் கீழிறங்கி வந்தான். ஆனால் இந்தப் பெண் வேறு பேசுகிறதே!

“என்ன திடீர்னு?”

“ஏன் தேவ்? சூர்யா இங்க வர்றதுல உங்களுக்கு இஷ்டமில்லையா?”

“சேச்சே! அப்பிடி யாரு சொன்னா? சூர்யாவோட கொஞ்சம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும்னு நினைச்சேன்.” அவன் சொல்லவும் அவள் மலர்ந்து சிரித்தாள். அதுவரை நேரமும் இறுக்கமாக இருந்த பெண் இப்போது இப்படிச் சிரிக்கவும் இவனுக்கும் ஆறுதலாக இருந்தது.

“அடேயப்பா! தம்பிக்கிட்டப் பேசினதுக்கு அப்புறமாத்தான் அம்மிணி முகத்துல சிரிப்பே வருது!”

“தேவ்! எனக்கு என்னப் பிரச்சினைன்னாலும் சூர்யாக்கிட்டத்தான் சொல்லுவேன், ஸ்கூல்ல, யூனில, என்ன நடந்தாலும் அம்மா, அப்பாக்கிட்ட எதுவும் சொன்னதில்லை, பேருக்குத்தான் அவனுக்கு நான் அக்கா, ஆனா அவந்தான் எனக்கு அண்ணா மாதிரி நடந்துக்குவான், நான் எது பண்ணினாலும் அது சூர்யாக்குத் தெரியும், அவனுக்குத் தெரியாம நான்‌ எதுவும் பண்ண மாட்டேன்.”

“எம்மேல கோபமா இருக்கானா?”

“ம்ஹூம், அண்ணா ரொம்ப நல்லவராம், ஆனா உனக்குப் பொருத்தமா இருப்பாரான்னு நீதான் பார்த்துக்கணும்னு சொன்னான்.”

“பொருத்தமா இருப்பனா?” புன்னகையோடு கேட்டவனைப் பார்த்துப் புன்னகைத்தவள் காலியாகியிருந்த தேநீர் கோப்பையைக் கழுவி வைத்தாள். மனதிலிருந்த பாரம் இறங்கியதாலோ என்னவோ அவள் முகம் பளிச்சென்று இருந்தது.

“என்ன பதிலைக் காணோம்?” என்றவன் அவளருகில் வந்தான்.

“தேவ், சூர்யாவும் வந்தா தங்கிறதுக்கு என்னப் பண்ணுறது? பேசாம அங்க வீடொன்னு பார்த்திடலாமா? நாம எல்லாரும் ஒன்னா இருக்கலாம்.”

“என்னால இன்னும் ஒரு வாரந்தான் இங்க இருக்க முடியும், சூர்யா எவ்வளவு நாள் இங்க தங்குவான்னும் சரியா தெரியாம வீடெடுத்து என்னம்மா பண்ணுறது? அதுக்கப்புறம் உன்னால வீட்டுல தனியா இருக்க முடியுமா?”

“அப்ப என்னப் பண்ணுறது?”

“சூர்யா முதல்ல டிக்கெட் போடட்டும், அப்புறமா என்னப் பண்ணுறதுன்னு யோசிக்கலாம்.” விதி வகுத்து வைத்திருக்கும் நாடகம் புரியாமல் தங்களுக்குள் திட்டம் போட்டார்கள் இளையவர்கள்.

அன்று மாலையே காமாட்சி வந்துவிட்டார்.‌ அவர் வருவதற்கு முன்பாகவே கிளம்பிவிட வேண்டும் என்று இந்திரா செய்த முயற்சிகளை தேவன் ஆதரிக்கவில்லை. அன்றைக்கு ஒருநாள் அவர் விஷயம் தெரியாமல் என்மேல் இருக்கும் அன்பில் அப்படிப் பேசிவிட்டார். அதைப் பெரிதுபடுத்தாதே என்று சொன்னவன் வந்தவரிடம் தாங்கள் எடுத்திருக்கும் முடிவையும் சொல்லிவிட்டான்.

“தம்பி… வீட்டுல சொல்லிட்டீங்களா?” அவர் கேள்வியில் இந்திரா தலையைக் குனிந்து கொண்டாள். ஏனோ காமாட்சியின் முன்பாக அமர்ந்திருப்பது அசௌகரியமாக இருந்தது.

“இல்லைம்மா, கொஞ்ச நாள் போகட்டும், இப்பவே சொன்னா அம்மா ஏதாவது சொல்லுவாங்க, அவங்க கொஞ்சம் நிதானத்துக்கு வரட்டும்.”

“அதுவும் சரிதான்.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இந்திரா எழுந்து உள்ளே போனாள். இப்போது தேவனின் நெற்றி சுருங்கியது.

“அது ஒன்னுமில்லை தம்பி, அன்னைக்கு இந்திரா வந்தப்போ நான் கொஞ்சம் கடுமையாத்தான் நடந்துக்கிட்டேன், கல்யாணப் பேச்சு ஆரம்பமாகி இருக்கிற நேரத்துல நம்ம வீட்டுல இன்னொரு பொண்ணு வந்து தங்கிறது சரியா இருக்காதுன்னு நினைச்சேன், அவங்க மனசுல அந்த வருத்தம் இருக்கும், நான்‌ பேசுறேன்.” என்றவர் உள்ளே எழுந்து போனார். தேவனுக்குச் சிரிப்பு வந்தது.

“இன்னைக்கு ஃபுல் மூன், பீச்சுக்குப் போகணும்னு சொன்னா, ரெடியாகச் சொல்லுங்கம்மா.”

“சரிப்பா.” என்றவர் அறைக்கு வந்தார். ஜன்னலருகில் நின்றபடி வானத்தை வெறித்திருந்தாள் பெண்.

“தம்பி உங்களை ரெடியாகச் சொன்னாங்கம்மா, பீச்சுக்குப் போகணுமாம்.”

“ம்…” என்று நகரப் போனவளின் கரம் பிடித்து நிறுத்தினார் பெரியவர்.

“எம்மேல வருத்தத்துல இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்மா.”

“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை.” வாய் சொன்னாலும் முகம் வாடிப்போய் கிடந்தது.

“அன்னைக்கு நான் உங்கக்கிட்ட அப்பிடிப் பேசியிருக்கக் கூடாதும்மா, தம்பி கல்யாணம் நல்லபடியா முடியணுங்கிற ஆசையில அப்பிடிச் சொல்லிட்டேன், என்னை மன்னிச்சிருங்கம்மா.”

“ஐயையோ! என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க! அதெல்லாம் ஒன்னுமில்லை.”

“தம்பியை எனக்குச் சின்ன வயசுல இருந்து தெரியும், இந்த வீட்டுல நானும் ஒருத்தி மாதிரித்தான், இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்ச நாள்ல இருந்து எங்க வீட்டுல எல்லாருக்கும் அவ்வளவு சந்தோஷம், இது எங்க வீட்டு விசேஷம், அந்த விசேஷத்துக்கு எந்த இடைஞ்சலும் வந்துரக் கூடாதுன்னுதான் நினைச்சேன், ஆனா தம்பி மனசுல இப்பிடியொரு சஞ்சலம் இருக்கும்னு நான் நினைக்கலைம்மா.”

“பரவாயில்லை விடுங்க.” என்றவள் குளியலறைக்குள் போய்விட்டாள். காமாட்சிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இவ்வளவு சொல்லியும் இந்திரா இறங்கி வராதது கவலையைக் கொடுத்தது. தேவனுக்கு மனைவியாக வரவிருக்கும் பெண்ணை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஒரு பெரிய பட்டியலே இருந்தது. ஆனால் கடைசியில் இப்படியாகிப் போனதே!

“என்ன யோசனை?” இருவரும் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.‌ வானில் முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. தூரத்தே ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசை!

“காமாட்சி அம்மா வந்து பேசினாங்க.”

“ம்…”

“அன்னைக்குக் கொஞ்சம் ஹார்ஷா பேசினாங்க, கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளாத குறைதான்.”

“அதான் சாக்குன்னு நீங்க உடனேயே கிளம்பிட்டீங்க!”

“அப்பிடியில்லை தேவ்…”

“வேற எப்பிடி?”

“அது வேற, இது வேற.” இருவரும் இரயில் தண்டவாளங்களைக் கடந்து கால் புதைய மண்ணில் நடந்தார்கள். பௌர்ணமி என்பதால் சிறிது கூட்டம் இருந்தது.

“சரி, சொல்லுங்க கேட்கிறேன்.”

“நீங்க என்னைக் கேலி பண்ணுறீங்க.”

“வேற என்ன இந்திரா, அவங்களை எனக்குச் சின்ன வயசுல இருந்து தெரியும், அவங்க என்னவோ சொன்னாங்கன்னு இன்னைக்கு மூஞ்சைத் தூக்கி வெச்சிருக்கே.”

“அப்பிடியெல்லாம் இல்லை தேவ்.”

“பேசிக்கிட்டு இருக்கும்போதே பாத்ரூம்குள்ள போய்ட்டியாம், திரும்ப எங்கிட்ட வந்து கவலைப்பட்டாங்க.”

“கோபமெல்லாம் இல்லை, பேசக்கூடாதுன்னும் இல்லை, ஆனா என்னவோ…” பேசிக்கொண்டிருந்தவளைச் சட்டென்று தன் பக்கத்தில் இழுத்தான் இளையவன். எதிர்பாராமல் நடந்த அந்த நிகழ்வில் அவன் மேல் சரிந்தாள் பெண்.

“காமாட்சி அம்மாக்கும் உனக்கும் நடுவுல நடக்கிற பஞ்சாயத்தைப் பேசத்தான் இப்போ  இங்க வந்தமா? எனக்கிருக்கிற கவலை என்னன்னு உனக்குத் தெரியுமா?”

“என்ன தேவ்?”

“அறிவு கெட்ட கடைக்காரனுங்க! எல்லா கடையையும் இன்னைக்குப் பூட்டிட்டானுங்க, இல்லைன்னா புடவை ஒன்னு வாங்கியிருக்கலாம்.” ஏதோவொரு பிரச்சனையைப் பற்றி அவன் பேசப்போகிறான் என்று கவலையோடு காத்திருந்தவளுக்கு அவன் சொன்ன சேதியில் கோபம் வந்தது.

“இப்ப இதான் முக்கியமா? நான் புடவைக் கட்டுறது!”

“ஏய்! வானத்துல முழு நிலா, பக்கத்துல கடல், கை வளைவுல நீ, இப்பப் போய் யாராவது உன்னையும் அந்தம்மாவையும் எப்பிடி சமாதானம் பண்ணுறதுன்னு யோசிப்பாங்களா?”

“நியாயமான பேச்சுத்தான்.”

“அன்னைக்குப் புடவையில அவ்வளவு அழகா இருந்தே, கடையில புடவையைப் பார்த்ததும் சும்மாதான் ட்ரை பண்ணிப் பார்க்கலாமேன்னு தோணிச்சு, ஆனா அது உனக்கு அவ்வளவு அழகா இருக்கும்னு நினைக்கலை, வெளியே எங்கேயும் கட்டாதே, இந்த அழகு மொத்தமும் எனக்கு மட்டுந்தான்.” கிறக்கமாகச் சொன்னவன் அவள் இதழ்களை நெருங்கப் பெண் மெதுவாக விலகினாள்.‌

“இந்திரா…” அவன் குரலில் அவ்வளவு ஏமாற்றம். இருவரும் அழகானதொரு மயக்கத்தில் இருந்தார்கள்.‌ இந்த மனநிலை அவர்களுக்குப் புதிது. இதற்கு முன்பு அனுபவித்திராதது. அலைகளை நெருங்கிக் கரையோரமாக அவள் நடக்க அவள் பின்னே அவனும் நடந்தான். நிலவும் அவர்களோடு நடை பயின்றது.

மனது இலேசாக அந்த இருளில் நடந்து கொண்டிருந்தாள் பெண். முன்பு திருமணப்பேச்சு ஆரம்பமானபோது எதிர்பார்ப்பு இருந்தது. கூடிய விரைவில் அது கலைந்தும் போயிற்று! ஆனால் இந்த மயக்கம் எப்போதும் யார் மேலும் இருந்ததில்லை. இரண்டடி பின்னால் நடந்தவன் இப்போது அவள் பக்கத்தில் வந்திருந்தான். கால்கள் தங்கள் பணியை நிறுத்தவில்லை.

தன்னை உரசிய அந்தத் திண்ணிய தோளில் தலை சாய்த்துக் கொண்டது பெண். அவன் கரமொன்று அவள் இடை வளைக்க உரசிக்கொண்டே இருவரும் அமைதியாக நடந்தார்கள். எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் எந்தச் சஞ்சலங்களும் இல்லாமல் உலாப்போனார்கள். இரவும் நிலவும் உறவும் அவர்களுடன் சேர்ந்து நடந்தன!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 09

அத்தியாயம் 09அதிகாலையில் கிளம்பி இருவரும் மிரிஸ்ஸ வந்து சேர்ந்தார்கள்.‌ அந்தப் பயணத்தை அவர்கள் இருவராலும் மறக்கவே முடியாது என்பது போல அமைந்து போனது.‌ அன்றைக்கு வந்த ட்ரைவர்தான் இப்போதும் வந்திருந்தார். ஏழு முப்பது போல ஹோட்டலுக்கு வந்துவிட்டார்கள்."இன்னொரு ரூம் போடணுமா இல்லை..."…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

  1. Super. நந்தா நீ என் நிலா நாவல் போடுங்க அமேசானில் உங்கள் புத்தங்கள் வரவில்லை அதை கொஞ்சம் சரிபாருங்கள் Thank you

உங்கள் கருத்தைப் பகிருங்கள்