அத்தியாயம் 09
அத்தியாயம் 09
அதிகாலையில் கிளம்பி இருவரும் மிரிஸ்ஸ வந்து சேர்ந்தார்கள். அந்தப் பயணத்தை அவர்கள் இருவராலும் மறக்கவே முடியாது என்பது போல அமைந்து போனது. அன்றைக்கு வந்த ட்ரைவர்தான் இப்போதும் வந்திருந்தார். ஏழு முப்பது போல ஹோட்டலுக்கு வந்துவிட்டார்கள்.
“இன்னொரு ரூம் போடணுமா இல்லை…” அவளை வேண்டுமென்று வம்பிழுத்தான் தேவன்.
“ரொம்ப வம்பு பண்ணினா வேற ரூம், சமத்தா இருந்தா இதே ரூம்.” ஆஃபீஸுக்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்தாள் பெண்.
“என்னைப் பார்த்துத்தான் நான் பயப்பிடுறேன்னு யாரோ நேத்து சொன்னாங்க!” அவளைத் தன்னருகே இழுத்தவன் மேலும் வம்பு வளர்த்தான்.
“தேவ்… கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா?”
“ம்ஹூம்… இல்லை, சும்மா இருக்கத்தான் அங்க இருந்து இங்க கிளம்பி வந்தாங்களா? நீ இப்போ ஆஃபீஸ் போயிடுவே, அதுக்கப்புறம் நான் சும்மாதானே உட்கார்ந்திருக்கணும்?”
“சரி, அப்போ இப்ப என்னப் பண்ணலாம்னு சொல்றீங்க?” என்றாள் குறும்பாக.
“என்னெல்லாமோ பண்ணலாம் பொண்ணே!” என்றபடி குனிந்தவனைத் தள்ளிவிட்டாள் பெண். வாய்விட்டுச் சிரித்தபடி கட்டிலில் சரிந்தான் தேவன்.
“இது சரிவராது தேவ், நான் போனதுக்கு அப்புறமா இன்னொரு ரூம் புக் பண்ணிடுங்க, வரவர நீங்க ரொம்ப மோசமாப் போயிட்டீங்க!” விரல் நீட்டி எச்சரித்தவளைப் பார்த்துச் சிரித்தான். லண்டனிலிருந்து இந்தப் பயணம் புறப்படும்போது இத்தனைச் சந்தோஷம் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்று யாராவது சொல்லியிருந்தால் இவன் நம்பியிருப்பானா?
“என்னாச்சுப்பா?” அவன் பார்வைக் கனிந்து போகவும் அவனுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தது பெண். இப்போது தேவன் அவள் மடியில் தலை வைத்துக்கொண்டான். சுகமாக இருந்தது.
“அந்த ஃப்ளைட்ல ஏறும்போது இப்பிடியெல்லாம் நடக்கும், எனக்கு இவ்வளவு சந்தோஷம் கிடைக்கும்னு நான் கனவுலயும் நினைக்கலைம்மா.” அவனது குரலின் நெகிழ்ச்சியில் அவளுக்குச் சிலிர்த்தது. உண்மையைச் சொன்னால் அவளுக்கும் இது பொருந்தும்தானே! எத்தனைக் குழப்பத்தோடு இருவரும் புறப்பட்டார்கள். ஆனால் இன்று? இந்த நொடி அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு, இணை இல்லையே!
“எனக்குந்தானே தேவ்!” என்றவள் தன் மடி மீது தலை வைத்திருந்தவனின் கன்னத்தில் குனிந்து இதழ் பதித்தாள். எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ!
“ஆஃபீஸுக்கு லேட்டாகுது இந்திரா.”
“ம்…” மனமே இல்லாமல் எழுந்து ஆயத்தமானார்கள். அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தபோது சூரியன் தனது வேலையை ஆரம்பித்திருந்தான். ஹோட்டலை விட்டு வெளியே வந்த பெண் திடுக்கிட்டுப் போய் அப்படியே நின்றாள்.
“என்னாச்சுடா?” என்றவன் பெண்ணின் முகத்தைப் பார்த்தான். பயத்தில் வெளுத்துப்போன அவள் முகம் வீதிக்கு அப்பாலிருந்த எதையோ வெறித்தது. அவள் பார்வையைத் தொடர்ந்த தேவனும் சற்றே திடுக்கிட்டான். ஏனென்றால் வீதிக்கு அப்பால் நின்றிருந்தது விக்ரம்! கறுப்பு நிற ரேன்ஜ் ரோவர் ஒன்றின் மீது சாய்ந்து நின்றிருந்தான். பார்வை இவர்களையே ஊடுருவியது!
“தேவ்…” பயத்தில் பெண்ணின் உடம்பு நடுங்கியது. இப்போது, இங்கே, இந்த நொடி விக்ரமை அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. தேவனே சற்று அதிர்ந்து போனான் என்றால் பெண்ணின் நிலையைக் கேட்கவும் தேவையில்லை. வெளிப்படையாகவே திணறினாள். தேவனின் கரம் பெண்ணின் கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டது.
“ஹாய் ஹனி!” அங்கிருந்தபடியே கையை அசைத்தவன் இவர்களை நோக்கி நடந்து வந்தான். தேவனின் கரத்திலிருந்த தனது கரத்தைப் பெண் விடுவித்துக் கொண்டது.
“ஹாய் டார்லிங்! எப்பிடி இருக்கே?” கேட்டவனின் விழிகள் தேவனை அளவெடுக்கத் தவறவில்லை. இதற்குள் பெண் தன்னைச் சுதாரித்துக் கொண்டது.
“என்ன விக்ரம் சொல்லாமக் கொள்ளாம திடீர்னு இப்பிடி வந்து நிற்கிறீங்க?” அவளின் தைரியம் மீண்டிருந்தது. தேவனே இப்போது கொஞ்சம் ஆச்சரியப்பட்டான். சற்று முன்பு நடுங்கிய பெண் இவளல்ல.
“ஹேய் இந்திரா! உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கேன், ஸ்வீட் சர்ப்ரைஸ்!”
“எதுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கீங்க? ஏதாவது பேசணும்னா கால் பண்ணியிருக்கலாமே?”
“உன்னைப் பார்த்து எத்தனை நாளாச்சு! நான் கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்க வேணாமா?” என்றவன் அவள் கன்னம் தொட முயற்சித்தான். பெண் சட்டென விலக தேவனின் உடல் இறுகியது. இதுவரை தேவனை யாரென்று அவன் விசாரிக்கவுமில்லை, இவள் அறிமுகப்படுத்தவுமில்லை.
தேவனை அறிமுகம் செய்வதில் பெண்ணுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் விக்ரமைச் சீண்டிப் பார்க்க அவள் பிரியப்படவில்லை. நண்பன் என்று தேவனைச் சொல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை. நான் காதலிப்பவன் என்று அறிமுகப்படுத்த, அதானால் தேவனுக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று அஞ்சினாள். சொல்லாமல் கொள்ளாமல் இப்படி வந்து நிற்பவன் மனதில் ஏதோ இருப்பது அவளுக்குப் புரிந்து போனது.
“இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு அன்னைக்கு நாந்தான் தெளிவா உங்கக்கிட்டச் சொல்லிட்டேனே?”
“நீ சொன்னதை நானும் உங்க வீட்டுல சொன்னேன், இந்திரா சின்னப் பொண்ணு, அவளுக்கு ஒன்னும் தெரியாது மாப்பிள்ளைன்னு உங்கம்மா சொன்னாங்க.” மாப்பிள்ளை, அம்மா என்ற வார்த்தைகளில் அதிக அழுத்தம் கொடுத்தான் விக்ரம். பெண்ணுக்கு உடம்பெல்லாம் எரிந்தது.
“அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் சின்னப் பொண்ணு, ஆனா உங்களுக்கு அப்பிடியில்லை, அதாலதான் என்னோட மனசுல இருந்ததை அவங்கக்கிட்டச் சொல்லாம உங்கக்கிட்டச் சொன்னேன்.” என்றாள் கறாராக.
“திடீர்னு இப்போ என்ன மனசுல மாற்றம்?” இதைச் சொல்லும்போது விக்ரமின் கண்கள் தேவனைக் குத்திக் கிழித்தன.
“மனசுல வந்த மாற்றம் இப்போ வந்ததில்லை, ரொம்ப நாளாவே இருக்கு, அதைச் சொல்ல சரியான நேரம் அமையலை, உண்மையைச் சொன்னா தைரியம் வரலை.”
“இப்போ அந்தத் தைரியம் எப்பிடி வந்துச்சு இந்திரா?”‘ இப்போதும் அவன் கண்கள் தேவனைக் கூறு போட்டன. நிலைமை விபரீதங்களைத் தோற்றுவிக்குமோ என்ற பயம் வந்தது பெண்ணுக்கு.
“நான் ஆஃபீஸுக்குக் கிளம்பணும் விக்ரம், எனக்கு லேட்டாகுது, என்னால லீவு போட முடியாது.”
“ஆனா ஒருநாள் லீவு கிடைச்சதும் ஊர் சுத்தப் போக முடியுமில்லை?” இந்த வார்த்தைகள் அவளைக் கோபப்படுத்தின. இந்திரா ஒன்றும் அத்தனைப் பயந்த சுபாவம் கொண்டவளல்ல. மனதிலிருந்த ஏதோவொரு குற்றவுணர்ச்சியால்தான் விக்ரமைப் பார்த்ததும் பயப்பட்டாள். ஆனால் தன் எதிரில் நிற்பவன் தன்னைத் தொடர்ந்திருக்கிறான் என்று அறிந்த போது ஜுவாலை உண்டானது.
“நான் எங்க போறேன், எங்க வர்றேங்கிறதுக்கு யார்கிட்டயும் பர்மிஷன் கேட்கத் தேவையில்லை விக்ரம்.”
“யார்கிட்டயும் கேட்கத் தேவையில்லை, ஆனா எங்கிட்டக் கேட்கணும் இந்திரா.”
“ஏன்? நீங்க கட்டின தாலி எங்கழுத்துல தொங்குதா? அப்பிடியே தொங்கினாலும் கூட நான் பர்மிஷன் கேட்க மாட்டேன்!” என்று அழுத்தமாகச் சொன்னவள்,
“எனக்கு லேட்டாகுது, போகலாம் தேவ்.” என்றாள் இவனைப் பார்த்து. தேவனும் எதுவும் பேசாமல் அவளோடு நகரப்போக விக்ரமின் கை அவன் நெஞ்சில் பதிந்து தடுத்தது. இந்திரா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்து நகர்வதே அவள் குறிக்கோளாக இருந்தது. ஆனால் தேவன் இதை எதிர்பார்த்தான். விக்ரமின் குறி இந்திரா அல்ல. நான்தான் என்பது அவனுக்கு உறுதி.
“இந்திரா, நீ ஆஃபீஸ் கிளம்பு, நான் சார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்.” என்றான் தேவன் நிதானமாக. விக்ரம் எப்படிப்பட்ட மனிதன் என்று அவனுக்குத் தெரியவில்லை. தான் உயிராக நினைத்த பெண் தன்னை மறுத்துவிட்டாள் என்ற வருத்தம் அவனுக்குள் நிறையவே இருக்கும் என்பது அவன் அறிந்ததுதான். ஆனால் இந்திராவை அவன் கண்காணித்திருக்கிறான் என்றபோது அந்த இடத்தில் விக்ரம் இலேசாகச் சறுக்கினான். தான் நினைத்தது போல இவன் அத்தனை சாது இல்லை என்று புரிந்தது.
“தேவையில்லை தேவ், நாம கிளம்பலாம், நீங்க வாங்க.” அவள் அவசரப்படுத்தினாள்.
“சார் யார்னு நீ இன்னும் சொல்லவே இல்லையே இந்திரா.” குரலில் அத்தனை ஏளனம்.
“அவர் யாரா இருந்தா உங்களுக்கென்ன விக்ரம்? எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தணும்னு கட்டாயம் ஒன்னுமில்லை.” அவள் பதிலும் காரமாக வந்தது.
“ஹேய் பேபி! கட்டிக்கப் போறவன்கிட்ட இதெல்லாம் சொல்லணும்மா.”
“விக்ரம்!” பெண் கர்ஜித்தாள்.
“இந்திரா, நீ கொஞ்சம் அமைதியா இரு, உங்களுக்கு என்ன சார் இப்போ வேணும்? நான் யாருன்னு தெரியணும், அவ்வளவுதானே? அதை உங்கக்கிட்டச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, நாந்தான் இந்திராவைக் கட்டிக்கப் போறேன், உங்கக்கூட நடந்த பேச்சுவார்த்தையை அவங்க எப்பவோ புடிக்கலைன்னு சொல்லி நிறுத்திட்டாங்க, அதுவும் எனக்குத் தெரியும், தேவையில்லாம பிரச்சினைப் பண்ணாதீங்க சார், கிளம்புங்க.” என்றவன் இந்திராவை அழைத்துக்கொண்டு அவள் ஆஃபீஸ் வந்துவிட்டான்.
“என்ன தேவ் நடக்குது? எனக்குப் பயமா இருக்கு, அந்த விக்ரம் உங்களைப் பார்த்த பார்வை அவ்வளவு நல்லா இல்லை.”
“ஹேய்! நான் என்ன சின்னக் குழந்தையா? அப்பிடி என்னப் பண்ண முடியும் அவனால?”
“ரொம்ப சீப்பா பிஹேவ் பண்ணுறான் தேவ், நான் எங்கப் போறேன் வர்றேன்னு பார்க்க ஆள் வெச்சிருக்கான், உங்களைப்பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு, அதான் கிளம்பி வந்திருக்கான், நீங்க கவனமா இருங்க.”
“சரி சரி, நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிறே? அமைதியா உன்னோட வேலையைப் பாரு.”
“அவன் ரொம்ப பிஸியான ஆளு, அப்பிடியானவன் கிளம்பி வந்திருக்கான்னா என்னமோ இருக்கு தேவ், உண்மையிலேயே எனக்குப் பயமா இருக்கு.”
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா, ஆனா நீ எங்கேயும் தனியா போயிடாதே, ஆஃபீஸ் முடியும்போது நான் வர்றேன், ஒன்னாவே ஹோட்டலுக்குப் போகலாம்.”
“ம்… பத்திரம்பா.” அவள் பயந்தது போல்தான் நடந்தது. தேவன் திரும்பி வரும்போது அவனை மீண்டும் சந்தித்தான் விக்ரம். இந்தச் சந்திப்பை தேவனும் எதிர்பார்த்திருந்தான். இவ்வளவு தூரம் கிளம்பி வந்தவன் அத்தனைச் சுலபத்தில் தன்னை விட்டுவிடுவான் என்று அவன் நினைக்கவில்லை. ஏர்போர்ட்டில் விக்ரமின் கண்களில் அவ்வளவு காதலை இவன் பார்த்திருந்தான். தான் ஆசை வைத்த பெண்ணை இன்னொருவனுக்குத் தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு அவனுக்குப் பரந்த மனது இருப்பது போலவும் தெரியவில்லை.
“விக்ரம் சார், அவங்கதான் உங்களை வேணாம்னு சொல்லிட்டாங்கல்லை? அதுக்கப்புறமும் ஏன் இப்பிடி நடந்துக்கிறீங்க?”
“ஏய்!” தேவன் சுமூகமாகத்தான் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நினைத்தான். ஆனால் விக்ரமின் முகம் இப்போது வேறாக இருந்தது. இந்திரா இருக்கும்போது அத்தனை மரியாதையாக நடந்து கொண்டவன் அந்த நொடி வேறாகி தேவனின் ஷர்ட் காலரைக் கொத்தாகப் பிடித்தான்.
“நீ எதுக்கு எனக்கும் அவளுக்கும் நடுவுல வந்தே? நீ வராம இருந்திருந்தா எல்லாம் கரெக்டா இருந்திருக்கும், இந்திராவை எப்பிடி சமாதானம் பண்ணணும்னு எனக்குத் தெரியும்.”
“என்னைப் பார்க்கலைன்னா கூட இந்திரா உங்களைக் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க, அதை நீங்க முதல்ல புரிஞ்சுக்கோங்க.”
“இந்த நொண்டிச் சமாதானம் எல்லாம் நீ சொல்லாதே! உன்னாலதான் எல்லாம் நாசமா போச்சு.” விக்ரம் வெறி கொண்டு பேசப்பேச தேவனுக்குக் கவலையாக இருந்தது. உண்மையிலேயே இவர்களுக்கு நடுவில் நான் வராமல் இருந்திருந்தால் எல்லாம் சீராக நடந்திருக்குமா என்று ஒருகணம் அவனே நினைத்து வருந்தினான். குறையென்று சொல்ல எதுவுமில்லாத ஆண்மகன். ஆனால் இந்திராவிற்கு அவனைப் பிடிக்கவில்லையே! அதேநேரம் தன் தம்பியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் பெண்.
“சூர்யா, எதுக்குடா இந்த விக்ரம் இப்போ இங்க கிளம்பி வந்திருக்காரு? எனக்கு என்னவோ சரியில்லைன்னு படுதுடா.”
“ஆமாக்கா, எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கு, விக்ரம் அங்க வர்றதை நம்ம வீட்டுல சொல்லலை, சொல்லியிருந்தா நம்ம அம்மாவோட வாய் இந்நேரம் சும்மா இருக்காதே?”
“நான் எங்க போறேன் வர்றேன்னெல்லாம் சொல்றாரு, அப்பிடீன்னா என்ன அர்த்தம்? என்னை ஃபாலோ பண்ணுறாரா?”
“அப்போ தேவன் யாருன்னு விக்ரமுக்குத் தெரிஞ்சிருக்கு, அதாலதான் சட்டுன்னு கிளம்பி வந்திருக்காரு.”
“ஆமா சூர்யா, நீ லேட் பண்ணாம கிளம்பி வாடா, நீயும் எங்கூட இருந்தா எனக்கு ஆறுதலா இருக்கும் சூர்யா.”
“சும்மா பயப்படாதே, அப்பிடி என்னத்தைப் பண்ணிடப் போறாரு?”
“தெரியலை சூர்யா, தேவனுக்கு ஏதாவது ஆபத்து வந்திருமோன்னு எனக்குப் பயமா இருக்குடா.”
“அதெல்லாம் ஒன்னும் நடக்காது, அந்தளவுக்கெல்லாம் விக்ரம் இறங்குவார்னு நான் நினைக்கலை.” ஆனால் அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்கினான் விக்ரம். அன்று மாலை அலுவலக நேரம் முடிந்ததும் அழைத்துச் செல்ல வருவதாகச் சொன்ன தேவன் வரவில்லை. மாறாக அலைபேசி அழைப்பே வந்தது.
“இந்திரா, என்னால இப்போ அங்க வரமுடியாது, நீ தனியா வராம உன்னோட ஃப்ரெண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு வர்றியா?”
“எதுக்கு தேவ்? பரவாயில்லை, நான் தனியாவே வர்றேன், நீங்க எங்க இருக்கீங்க?”
“ஹோட்டல்லதான், சொன்னா கேளு இந்திரா, தனியா வராதே, கௌசல்யா வந்திருக்காங்களா?”
“இல்லை, அடுத்த வாரந்தான் வர்றா.”
“சரி, அப்ப வேற யாரையாவது கூட்டிக்கிட்டு வா, தனியா வராதே ப்ளீஸ், சொல்றதைக் கேளு.”
“சரி தேவ்.” ஆமோதித்தாலும் உள்ளுக்குள் எதற்காக தேவன் இவ்வளவு பயப்படுகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. குரலும் ஒருமாதிரியாக இருந்தது. உடம்புக்கு முடியவில்லையா என்ன என்று நினைத்தவள் தன்னோடு பணிபுரியும் ஓர் பெண்ணின் துணையோடு ஹோட்டலுக்கு வந்தாள்.
“தேவ், என்னாச்சு? ஏன் ஆஃபீஸுக்கு வரலை நீங்க?” கேட்டபடி வந்தவள் அதிர்ந்து போய் நின்றுவிட்டாள். ஏனென்றால் தேவனின் இடது கன்னம் இலேசாக வீங்கிச் சிவந்து கடைவாய் கிழிந்து ரத்தம் கசிந்திருந்தது.
“தேவ்! என்னாச்சு உங்களுக்கு?! என்ன இதெல்லாம்?!” பதறியடித்து ஓடிவந்த பெண் அவனைத் தொட்டபோது,
“ஆ!” என்று அலறினான் தேவன்.
“என்னாச்சுப்பா? என்னதான் ஆச்சு உங்களுக்கு?!” என்றவள் அவன் அணிந்திருந்த ஷர்ட்டின் பட்டன்களைக் கழட்டினாள். உடம்பு முழுவதும் அடிவாங்கிய தடங்கள் சிவப்பாக இருந்தன.
“என்ன தேவ் இதெல்லாம்? என்னதான் நடந்துச்சு? சொல்லுங்களேன், அந்த விக்ரம் ஏதாவது பண்ணினானா?” அவள் கதறியழ ஆரம்பிக்கவும் தேவன் புன்னகைத்தான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை இந்திரா, நான் நல்லாத்தான் இருக்கேன், நீ எதுக்கு இப்போ அழுறே?”
“என்னப் பேசுறீங்க நீங்க? உடம்பு முழுக்கக் காயம் பட்டிருக்கு, உதடு வீங்கிப் போயிருக்கு, ஒன்னுமில்லைன்னு சொல்றீங்க! என்னதான் நடந்துச்சு?”
“ஒன்னுமில்லை இந்திரா, சின்ன ஆக்சிடன்ட், அவ்வளவுதான், நீ பயப்பிடுற மாதிரி எதுவுமில்லை.” பேசுவதற்கே அவனுக்குச் சிரமமாக இருந்தது.
“நீங்க பொய் சொல்றீங்க தேவ், இது அந்த விக்ரமோட வேலைதான், எனக்கு நல்லா தெரியும், அந்த ராஸ்கலை நான் என்ன செய்றேன்னு பாருங்க!” சூளுரைத்தபடி எழுந்தவளின் கரம்பிடித்துத் தடுத்தவன்,
“இந்திரா, சொன்னா கேட்கணும், நான் சொல்றதை நீ கேட்பியா மாட்டியா?” என்றான் குரலை உயர்த்தி.
“இவ்வளவு நடந்திருக்கு! அந்தப் பொறுக்கி இவ்வளவு தூரம் இறங்கி வேலை பார்த்திருக்கான், என்னைக் கையைக் கட்டி சும்மா வேடிக்கைப் பார்க்கச் சொல்றீங்களா?”
“கொஞ்சம் அமைதியா இரும்மா, என்னப் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.”
“என்ன தேவ் உங்களுக்குத் தெரியும்? நேரா போலீஸுக்குப் போயிருக்கணும் நீங்க, அட்லீஸ்ட் டாக்டர்கிட்டயாவது போனீங்களா?” கேட்டுவிட்டு மீண்டும் குலுங்கி அழுதாள் இந்திரா. ஒரு புன்னகையோடு அவளை அருகே அழைத்தவன் அவனுக்கு வலிக்காத வண்ணம் அணைத்துக் கொண்டான்.
“அவன் பண்ணின காரியம் தப்பா இருந்தாலும் விக்ரம் மேல நியாயம் இருக்கு இந்திரா.”
“அப்பிடி என்ன நியாயத்தைக் கண்டுட்டீங்க தேவ் நீங்க அவங்கிட்ட?”
“நீ நடுவுல வராம இருந்திருந்தா எல்லாம் கரெக்டா நடந்திருக்கும்னு சொன்னான்.”
“நீங்க வரலைன்னாலும் அந்தக் கல்யாணம் நடந்திருக்காது, நான் ஃப்ளைட் ஏறும்போது என்ன மனநிலையில இருந்தேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்.”
“அது உன்னோட மனநிலை இந்திரா, ஆனா அவனோட நிலையில இருந்து யோசிச்சுப் பாரு, அவன் சொல்றது கரெக்ட்தானே, ஒரு ஆம்பிளையா என்னால அவனைப் புரிஞ்சுக்க முடியுதும்மா.”
“அவங்கிட்ட அடியை வாங்கிட்டு வந்து அவனுக்கே சப்போர்ட் பண்ணுறீங்க தேவ் நீங்க!”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை இந்திரா, நான் எப்பவும் என்னோட மனசு என்ன சொல்லுதோ அதன்படிதான் நடப்பேன், இப்பவும் அப்பிடித்தான், அவனோட நியாயம் கரெக்ட்னு எம்மனசு சொல்லுது.”
“அவங்கிட்ட அடி வாங்குன்னும் உங்க மனசுதான் சொல்லிச்சா?” அவள் கேட்ட தொனியில் அவன் சிரித்தான்.
“அவன் ஒருத்தன்னா மாறி அடிக்கலாம், நாலு பேர் சேர்ந்து வந்தா நான் என்னம்மா பண்ணுறது? நான் என்ன சினிமா ஹீரோவா? பொட்டு பொட்டுன்னு அடிக்க?”
“நாலு பேரா?! அவன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் ராஸ்கல்!”
“இந்திரா ப்ளீஸ், இதை இத்தோட விட்டுரு, அடுத்து என்னன்னு நாம பார்க்கலாம், நமக்கு நிறைய வேலை இருக்கு.”
“அவன் இதோட நிறுத்துவான்னு என்ன நிச்சயம் தேவ்? திரும்பவும் அவன் வரமாட்டான்னு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“அவன் வரமாட்டான்.” உறுதியாகச் சொன்னவனை அவள் வியப்பாகப் பார்த்தாள். ஆனால் தேவனுக்குத் தெரிந்திருந்தது. இது விக்ரமுடைய இயலாமையின் வெளிப்பாடு. இந்திராவின் மேல் அவனுக்கு உண்மையாகவே அன்பு இருந்திருக்கிறது. ஆனால் அதை அவன் காட்டிய விதம் வேறு. அது பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. அதை ஏற்றுக்கொள்ள அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை. எல்லா தவறையும் தேவனது தலைமேல் போட்டுவிட்டான்.
தேவன் நினைத்தால் இந்த நிலைமையை அவனுக்குச் சாதகமாக முடித்திருக்க முடியும். அவன் மேல் காயம் வரும் அளவுக்குத் தாக்குதல் நடத்தியிருக்கிறான். போலீஸுக்குப் போனால் விக்ரமின் நிலை மிகவும் மோசமாகிவிடும். இருவரும் வெளிநாட்டவர்கள். எந்த முகாந்திரமும் இல்லாமல் இவனைத் தாக்கியிருக்கிறார்கள். தேவன் நினைத்தால் விக்ரம் திரும்பவும் இங்கிலாந்து செல்வதையே முடக்க முடியும். ஆனால் இதில் எதையும் அவன் செய்யவில்லை. வந்ததை ஏற்றுக்கொண்டான்.
அவனைப் பொறுத்தவரை அவனுக்கு இந்திரா வேண்டும். விக்ரம் என்ற முள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து நீங்க வேண்டும். அதற்கு அவன் இப்போது அமைதியாக இருக்க வேண்டும். இவனும் பதிலுக்கு ஏதாவது செய்யப்போக அது வன்மத்தில்தான் வந்து முடியும். அவனுக்குக் கிடைக்க இருந்ததைத் தான் தட்டிப் பறித்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி இலேசாகத் தோன்றியிருந்ததால் தேவன் மௌனம் காத்தான்.
“சூர்யா! அந்த ராஸ்கல் விக்ரம் பண்ணியிருக்கிற வேலையைப் பார்த்தியா?” என்று ஆரம்பித்தவள் தன் தம்பியிடம் நடந்தவற்றை அழுகைக்கு நடுவே விபரிப்பதை இவன் ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டான். விக்ரம் இவ்வளவு தூரம் இறங்குவான் என்று தேவனும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இறங்கிவிட்டானே! என்ன செய்வது?!
அன்றைய மாலைப்பொழுது முழுவதையும் இந்திரா அழுகையிலேயே கழித்தாள். அதற்காக தேவனைக் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் வேலைகள் அனைத்தும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக நடைபெற்றது.
“எதுக்காக நீ இவ்வளவு வருத்தப்படுறேம்மா? அதான் எனக்கு ஒன்னுமாகலையே.” அவன் எவ்வளவு சமாதானம் செய்தபோதும் இந்திரா அமைதியடையவில்லை. வெந்நீர் ஒத்தடம் போட்டாள். சாப்பாட்டை ஊட்டிவிட்டாள். ஆடைகள் மாற்ற அவளால் முடிந்தளவு உதவி செய்தாள். அவன் குளியலறைக்குள் போனபோது வாசலில் காவல் இருந்தாள்.
“இவ்வளவு கவனிப்புக் கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னும் ரெண்டு அடி சேர்த்து வாங்கியிருக்கலாம்.” சொல்லிவிட்டு அவள் முறைப்பைப் பதிலாக வாங்கிக் கொண்டான். இரவு ஒன்பது மணியிருக்கும். தேவன் போட வேண்டிய மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுப் படுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள் பெண். அப்போது அவள் அலைபேசி சிணுங்கியது. இந்திராவின் அம்மா அழைத்துக் கொண்டிருந்தார்.
“இவங்க இப்ப எதுக்குக் கூப்பிடுறாங்க?!”
“யாரு இந்திரா?”
“எங்கம்மா.”
“ஓ… எடுத்துப்பேசு.” அவன் சொன்னாலும் பெண்ணுக்கு எதுவோ சரியில்லை என்றுதான் தோன்றியது. விக்ரம் தனது ஆட்டத்தை வேறு வகையில் ஆரம்பித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.
“ஹலோ.”
“நீ அங்க வேலை பார்த்தது போதும், கிளம்பி வா இந்திரா.” பேச்சு ஆரம்பமான விதமே அத்தனை நல்லதாக இருக்கவில்லை.
“என்னாச்சு? ஏன் திடீர்னு இப்பிடிப் பேசுறீங்க?” இவளும் ஓர் முடிவுக்கு வந்திருந்தாள். எல்லா பிரச்சனைகளையும் தன் அம்மாவை வைத்து விக்ரம் தீர்த்துக்கொள்ள நினைப்பதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
“உன்னை அங்க வேலை பார்க்கத்தான் அனுப்பி வெச்சோம், நீ தேவையில்லாத வேலையெல்லாம் பார்க்கிறே!”
“என்ன தேவையில்லாத வேலையை இங்க நான் பார்த்துட்டேன்? அப்பிடி எந்தத் தகவலும் உங்கக்கிட்ட நான் சொல்லலையே!”
“நீ சொல்லலைன்னா எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நீ அங்க அடிக்கிற கூத்தெல்லாம் எங்கக் காதுக்கு வந்துச்சு.”
“சரி, வந்துச்சில்லை? எல்லாம் தெரிஞ்சு போச்சில்லை? சந்தோஷம்.”
“என்னடீ வாய் ரொம்ப நீளுது! நாங்க உனக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணியாச்சு.”
“நீங்க பார்த்த அந்த அருமையான மாப்பிள்ளையை நானும் வேணாம்னு சொல்லி ரொம்ப நாளாச்சு, மனுஷனா அவன்? ராஸ்கல்! ஆள் வெச்சு அடிக்கிற அளவுக்கு ரவுடித்தனம் பண்ணுறான், அவனோட பேச்சைக் கேட்டுக்கிட்டு நீங்க எங்கூட மல்லுக்கு வர்றீங்களா?”
“நீ ஒழுங்கா இருந்திருந்தா அவரு ஏன் இப்பிடியெல்லாம் நடந்துக்கப் போறாரு, கட்டிக்கப் போற பொண்ணு எவங்கூடவோ திரிஞ்சா யாருக்குத்தான் கோபம் வராது?”
“இப்பிடிப் பேச உங்களுக்கு வெக்கமா இல்லையாம்மா? பெத்த பொண்ணை விட யாரோ ஒருவன் பெருசா போயிட்டானா உங்களுக்கு?” சொல்லும் போதே பெண்ணின் கண்களில் நீர் திரண்டது. தனது கட்டிலில் அமர்ந்திருந்த தேவன் எழுந்து வந்து பெண்ணின் கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.
“மரியாதையா பேசு இந்திரா, அவரு நீ கட்டிக்கப் போறவரு.”
“அது இந்த ஜென்மத்துல நடக்காது, இன்னைக்கு அந்தப் பொறுக்கி நடந்துக்கிட்ட மாதிரிக்கு அப்பிடி ஏதாவது நினைப்பு இருந்துச்சுன்னா அதைத் தூக்கித் தூரப்போட்டிருங்க.”
“அப்பிடீன்னா எங்களுக்கொரு பொண்ணு இருந்தாங்கிற நினைப்பையும் தூக்கிக் குப்பைல போட்டிர்றோம்.”
“தாராளமா போடுங்க, அவந்தான் உங்களுக்கு என்னைவிட முக்கியம்னா தாராளமா பண்ணுங்க, என்னை மதிக்காத அம்மா எனக்கும் தேவையில்லை, பெத்த பொண்ணை விட அவந்தான் முக்கியம்னு நினைக்கிற அம்மா எனக்கு இருந்தா என்ன, இல்லாட்டி என்ன.”
“ஓ… அப்ப இதான் உன்னோட முடிவா? நாங்க உனக்குத் தேவையில்லையா?”
“சத்தியமா தேவையில்லை, அந்தப் பொறுக்கியைத் தலைல தூக்கி வெச்சுக் கொண்டாடுங்க, அம்மாங்கிற ஒரு உறவையே நான் மறந்து போயிடுறேன்.” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு வெடித்து அழுதாள்.
“இந்திரா…” நிலைமையை ஓரளவு கிரகித்த தேவன் அவளைச் சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றான்.
“தேவ், நீங்க சொன்ன மாதிரி நாம கல்யாணம் பண்ணிக்கலாம் தேவ், நாளைக்கே பண்ணிக்கலாம், இவங்க யாரும் எனக்கு வேணாம் தேவ், என்னைப்பத்திக் கவலைப்படாத யாரும் எனக்குத் தேவையில்லை தேவ்.” கதறியவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் தேவன். அவளைத் தேற்றும் வழி அவனுக்குத் தெரியவில்லை.






Very nice