அத்தியாயம் 10
அத்தியாயம் 10
இலங்கையில் மாலை ஆறு மணி என்றால் லண்டனில் மதியம் ஒன்று முப்பது. காதில் வந்து விழுந்த சேதியில் சூர்யா அதிர்ந்து போனான். விக்ரம் இந்தளவு இறங்கி வேலை பார்ப்பான் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. இதுவே லண்டன் என்றால் இந்நேரம் அவன் பார்த்த வேலைக்குப் போலீஸ் நிலையத்தில்தான் இருந்திருப்பான். ஆனால் தேவன் பெரிய மனது பண்ணியதால் பிழைத்தான்.
அக்கா எடுத்த முடிவால் விக்ரம் நிச்சயமாகக் கவலைப்படுவான் என்று இவனுக்குத் தெரியும். ஆனால் நாகரிகமே இல்லாமல் இப்படி ரவுடித்தனம் பண்ணுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. இது என்ன மாதிரியான அணுகுமுறை. தேவன் மேல் மனஸ்தாபம் வருவது இயற்கைதான். ஆனால் இப்படி பழிதீர்த்துக் கொள்வது சரியா? தான் விரும்பும் பெண்ணுக்குத் தன்மேல் நாட்டம் இல்லை என்று தெரிந்தால் விலகிப் போவதுதானே மரியாதை. அதை விட்டுவிட்டு எதற்காக இப்படி மூர்க்கத்தனமான செயலில் இறங்க வேண்டும்!
சூர்யா அன்று இரவே இலங்கை புறப்பட்டுவிட்டான். இரவு ஒன்பது முப்பதுக்கு விமானம். ஹீத்ரோ வந்தவன் எத்திஹாட் ஃப்ளைட்டில் இலங்கை போகிறான். அபுதாபியில் இரண்டு மணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் விமானம் ஏறினால் அங்கு மூன்று முப்பதுக்குப் போய் சேர்ந்துவிடலாம்.
“சூர்யா, என்னப்பா நடக்குது இந்த வீட்டுல? எனக்குத் தலை சுத்துது.” அப்பா கவலையோடு கேட்டபோது சூர்யாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பா மிகவும் மென்மையான மனிதர். அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்வார். மறுப்பாக ஏதாவது சொல்லி வீட்டிலிருக்கும் அமைதியைக் கெடுத்துகொள்ள எப்போதும் அவர் விரும்புவதில்லை. அதனாலேயே விக்ரம் தான் சாதிக்க நினைப்பவற்றை இந்திராவின் அம்மாவின் காதுகளுக்குக் கொண்டு செல்வான்.
“விக்ரம் ஏம்பா இப்பிடி நடந்துக்கிறாரு? சுத்தப் பைத்தியகாரத்தனமா தெரியலை உங்களுக்கு?”
“இந்திராக்கு என்னாச்சு சூர்யா? எல்லாம் புடிச்சுப் போய்தானே கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னா, இப்ப என்ன திடீர்னு?”
“ஆரம்பத்துல எல்லாம் ஓகேதான்பா, ஆனா விக்ரமோட கெடுபிடிகள் அவளுக்குப் புடிக்கலை.”
“அதெல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடும்.” அவர் வாழ்க்கை அப்படித்தானே கழிகிறது. அதை வைத்துப் பேசினார் மனிதர். ஆனால் அதை இன்றைய தலைமுறை ஏற்றுக் கொள்ளாது.
“அதை நீங்களும் நானும் சொன்னா சரியாப்பா? கல்யாணம் பண்ணிக்கப் போறவ சொல்லணும், அவளுக்குப் புடிக்கலையே!”
“அது யாரு தேவன்? அது என்ன புதுக்கதை?”
“அப்பா, தேவனை எனக்கும் தெரியும், ரொம்ப நல்ல மனுஷன்.” என்றவன் தேவனை இந்திரா சந்தித்த விதம், டுபாயில் நடந்தது என அனைத்தையும் தந்தையிடம் சொன்னான்.
“இதெல்லாம் சரியா வருமா சூர்யா?”
“தேவன் நல்ல மனுஷன், அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனா அக்காக்குப் பொருத்தமா இருப்பாரான்னு எனக்குத் தெரியாது, ஆனா அவளுக்கு இதுல முழு சம்மதம், மிச்சம் மீதியை நான் அங்க போய்த்தான் என்னன்னு பார்க்கணும்.”
“அம்மாவைத் தாண்டி என்னால ஒன்னும் பண்ண முடியாது, நான் அப்பிடியே வாழ்ந்து பழகிட்டேன்பா.”
“அம்மா முக்கியந்தான், ஆனா இந்திராவோட சந்தோஷம் எனக்கு அதைவிட முக்கியம்பா.”
“உங்கம்மா தாம் தூம்னு குதிக்கிறா, அவ எம் பொண்ணே இல்லைன்னு சத்தம் போடுறா, அவளை எப்பிடி சமாதானம் பண்ணுறதுன்னு எனக்குத் தெரியலை.” கவலையோடு சொன்ன அப்பாவைப் பார்த்த போது மகனுக்கு வேதனையாக இருந்தது.
“அக்கா பாவம்பா, அவளுக்குப் புடிக்காத வாழ்க்கையை அவ மேல திணிக்கிறது சரியா?”
“எனக்கும் புரியுது சூர்யா, ஆனா அது உங்கம்மாக்குப் புரிய மாட்டேங்குதே!”
“நான் அங்க போய் நிலைமை என்னன்னு பார்த்துட்டு உங்களுக்குச் சொல்றேன், நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
“நானும் இந்திராக்கிட்டப் பேசுறேன், கவனம் சூர்யா, பணம் வேணும்னா கால் பண்ணு, போட்டு விடுறேன்.”
“சரிப்பா.” என்றவன் கிளம்பிவிட்டான். மகன் இலங்கை கிளம்புகிறான் என்று தெரிந்த போதும் அம்மா அசைந்து கொடுக்கவில்லை. மகனும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. பிள்ளைகள் இருவரும் அம்மா மேல் பாசம் வைத்திருந்தாலும் அப்பாவைப் போன்று எல்லாவற்றுக்கும் அடிபணிந்து போகமாட்டார்கள். அது அம்மாவுக்கும் நன்றாகத் தெரியும்!
“சூர்யா!” தம்பியைக் கண்டதும் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் பெண். ஏர்போர்ட்டுக்கு அவள் மட்டும் தனியாகத்தான் வந்திருந்தாள். கௌசல்யா மூலம் வாகன ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் தனியாக வருவதில் எந்தப் பயமும் இருக்கவில்லை.
“தேவன் எங்கக்கா?”
“ஹோட்டல்லதான் இருக்கார்டா, காலைல எந்திரிச்சதுல இருந்து லைட்டா ஃபீவர் இருக்கு.”
“ஓ… அடி பலமோ?”
“ம்…” என்றவள் விழிகளில் நீர் நிறைந்தது.
“அழாதே! மெடிஸின் எடுத்துக்கிறாரில்லை?”
“ம்… என்னால அடிவாங்கிட்டுப் படுக்கிறார் அந்த மனுஷன், எனக்கு அது ரொம்பக் கஷ்டமா இருக்குடா.”
“வாழ்க்கைன்னா எல்லாந்தான், நீ உன்னோட ஒப்பாரியை முதல்ல நிறுத்துக்கா, கஷ்டம் எல்லாருக்கும் வர்றதுதான், சும்மா நசநசன்னு எல்லாத்துக்கும் கண்ணைக் கசக்காதே, அதான் நான் வந்துட்டேனில்லை?” தம்பியின் வார்த்தைகள் வேலை செய்தன. இருவரும் மிரிஸ்ஸ வந்து சேர்ந்தபோது மாலையாகிவிட்டது. இருள் கவிந்த அந்த கடற்கரையோரம் அத்தனை அழகாக இருந்தது.
“ஹாய் சூர்யா.” இளையவனைப் படு உற்சாகமாக வரவேற்றான் தேவன்.
“ஹாய்ணா.” என்றவனும் அவனுக்கு வலிக்காத வண்ணம் அணைத்தான். முதல் பார்வையிலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. இந்திராவின் சொந்தம் என யாரைக் கொண்டுவந்து நிறுத்தினாலும் தேவனுக்குப் பிடிக்கும். ஆனால் தேவனைப் பிடிக்கத்தான் வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் சூர்யாவுக்கு இல்லை. அதையும் தாண்டி தேவனை அவனுக்குப் பிடித்தது.
“இப்போ எப்பிடீண்ணா இருக்கு?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை சூர்யா, உங்கக்கா தேவையில்லாம பயப்பிடுறா.” நெடுநாட்கள் பழகியவர்கள் போல இருவரும் பேசிக்கொண்டார்கள்.
“ஒன்னுமில்லாமலா இன்னைக்கு உங்களுக்கு ஃபீவர் வந்துச்சு?”
“ஓ… அதையும் சொல்லியாச்சா!”
“மெடிஸினை டைமுக்கு எடுங்கண்ணா, ரெண்டு நாள் பார்க்கலாம், அதுக்கப்புறமும் பெட்டர் ஆகலைன்னா திரும்பவும் டாக்டர்கிட்டப் போகலாம்.”
“அதான் நீ இருக்கியே சூர்யா.”
“விளையாடாதீங்கண்ணா.” என்று உரிமையாக அதட்டியவன் அந்த ரூமை நோட்டம் விட்டான். இருவரும் அந்த அறையில்தான் இருக்கிறார்கள் என்று புரிந்தது. அந்தப் பார்வையை தேவன் கவனித்தான்.
“சூர்யா, நீ இந்த ரூம்ல அக்காவோட தங்கிக்கோ, நான் மத்த ரூமுக்குப் போறேன்.” அதே ஹோட்டலில் இன்னொரு ரூமை இவனுக்காக புக் பண்ணியிருந்தார்கள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஹோட்டல்லயே உட்கார்ந்திருக்கப் போறீங்க? பேசாம ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கலாம்ணா.”
“என்னால இன்னும் ஒரு வாரந்தான் லீவு போட முடியும், அதுக்கு மேல நான் கிளம்பணும், நீயும் போயிடுவே, இந்திரா மட்டும் எப்பிடிப்பா தனியா இருக்க முடியும்? அதைவிட ஏதாவது ஒரு ஹாஸ்டல் மாதிரி பார்த்தா சரியா இருக்குமில்லை?”
“அண்ணா, நான் இன்னும் ரெண்டு வாரம் இங்க இருப்பேன், அதுக்கப்புறம் யாராவது நம்பிக்கையான ஆளுங்களைக் கூட வெச்சா சரியா இருக்கும், வீடு எடுக்கிறதுதான் நல்ல ஐடியான்னு தோணுது, இவளுக்கு ஹாஸ்டல் எல்லாம் சரியா வராதுண்ணா.” தம்பி சொன்ன விதத்தில் தேவன் சிரித்தான்.
“நீ என்ன சொல்றே இந்திரா? காமாட்சி அம்மாவை ரெண்டு மாசத்துக்கு உங்கூட வந்து இருக்கச் சொன்னா இருப்பாங்க, ரொம்ப நம்பிக்கையான ஆளு, அவங்க வீட்டாக்காரரும் துணைக்கு வருவாங்க, உனக்கு ஓகேவா?”
“அவ என்ன சொல்லப்போறா! அதெல்லாம் ஓகேதான்.”
“ம்ஹூம், அந்த ஓகேயை இந்திரா சொல்லணும், ஏன்னா காமாட்சி அம்மாவை உங்கக்காக்குப் புடிக்காது சூர்யா.”
“இங்க வந்தே ரெண்டு வாரந்தான் ஆச்சு, அதுக்குள்ள யாரோடக்கா வம்பு வளர்த்து வெச்சிருக்கே?”
“ரெண்டு வாரமா? ரெண்டாவது நாளே புடிக்காமப் போச்சு.” தேவன் வேண்டுமென்றே அவளைச் சீண்டிப் பார்த்தான்.
“உங்களுக்கு வேற வேலை இல்லை.” என்றவள் போகிற போக்கில் அங்கிருந்த டவலை எடுத்து தேவனின் மேல் எறிந்துவிட்டுப் போனாள். வாய்விட்டுச் சிரித்தவன் அவள் எறிந்ததைப் பிடித்துத் தோளில் போட்டுக்கொண்டான். சூர்யாவிற்கு இதையெல்லாம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு குறுகிய இடைவெளியில் இவர்களுக்குள் எப்படி இப்படியொரு புரிதல் வந்தது?!
இரவு உணவிற்காக மூவரும் வெளியே வந்தார்கள். அறையிலேயே இருக்கும்படி தேவனிடம் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. அதிகம் தன்னைச் சிரமப்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்துவிட்டுக் கூட வந்திருந்தான்.
“சூர்யா வந்ததுக்கு அப்புறமா இப்பிடி வெளியே வரணும்னு எத்தனை நாள் பேசிக்கிட்டோம், இப்பப் போய் ரூம்ல இருன்னா என்ன அர்த்தம் இந்திரா? நான் இன்னும் ஒரு வாரந்தான் இங்க இருக்கப் போறேன், மாக்ஸிமம் என்ஜாய் பண்ணுறோம்.”
“அண்ணா! இந்த இடம் சூப்பரா இருக்கு, அதுவும் இப்பிடி நைட் டைம்ல பீச்சோரமா நடக்கிறது அவ்வளவு சுகமா இருக்கு.” இரண்டு நாட்களுக்கு முன்புதான் பௌர்ணமி என்பதால் வானில் நிலா பெரிதாகவே இருந்தது.
“சூர்யா.”
“சொல்லுங்கண்ணா.” ஒரு ரெஸ்டாரன்ட்டில் உணவை ஆர்டர் பண்ணிவிட்டு அமர்ந்திருந்தார்கள்.
“இவ்வளவு நேரத்துக்கு என்னைப்பத்தி உன்னோட மனசுல ஏதாவதொரு அபிப்பிராயம் வந்திருக்குமில்லை? அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” நேரடியாகவே கேட்டான் தேவன். இப்போது இந்திராவும் தன் தம்பியை ஆவலாகப் பார்த்தாள். இளையவன் புன்னகைத்தான்.
“இந்திராக்கிட்ட அப்பவே நான் சொல்லிட்டேண்ணா, நீங்க ஒரு நல்ல மனுஷங்கிறதுல எனக்கு எந்த டவுட்டும் இல்லை, ஆனா அவளுக்குப் பொருத்தமா இருப்பீங்களாங்கிறதை அவதான் முடிவு பண்ணணும்.”
“சரி, நீ என்ன நினைக்கிறே? உங்கக்காக்கு நான் பொருத்தமா இருப்பேனா? உண்மையைச் சொல்லு.”
“உங்களோட இருக்கும் போது அக்கா ஹாப்பியா இருக்கா, கலகலன்னு பேசுறா, அவ அவளா இருக்கா, இதெல்லாம் பார்க்க நல்லா இருக்கு, ஆனா இதெல்லாம் ஒரு கல்யாணத்துக்குப் போதுமாண்ணா?”
“போதாதா?”
“எனக்குத் தெரியலையே! இப்பதானே வந்திருக்கேன், இன்னும் ரெண்டு நாள் டைம் குடுங்க, உங்களை அண்ணான்னு கூப்பிடுறதா, இல்லை அத்தான்னு கூப்பிடுறதான்னு சொல்றேன்.” சொல்லிவிட்டு இவன் கலகலவென சிரிக்க இந்திராவும் தேவனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தார்கள்.
தேவனிடம் அப்படிச் சொன்னாலும் சூர்யாவின் மனது நிறைவாகவே உணர்ந்தது. தேவனோடு அவன் பேச்சுவார்த்தை வைத்துக் கொண்டாலும் இன்றைக்குத்தான் நேரில் பார்க்கிறான். ஆனால் புதிய மனிதன் ஒருவனோடு இருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றவில்லை. நெடுநாட்கள் பழகியவர்கள் போல பேசிக்கொண்டார்கள், சிரித்தார்கள்.
அக்காவும் இப்படித்தான் உணர்ந்திருப்பாளா? அதனால்தான் விக்ரமின் இடத்தில் சட்டென்று தேவனை அவளால் பொருத்த முடிந்ததா? ஏற்கனவே விக்ரமின் மேலிருந்த வெறுப்பு சரியான துணையாக தேவனைக் கண்டதும் காதலாக மாறிப்போனதா? முன்பே காதலித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பாட்டாள். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக செலவழிக்கிறாளா?! அக்காவின் முகத்தில் தெரிவது நிஜமான சந்தோஷம். தேவனோடு சேர்ந்து அவள் சிரிக்கும் போது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. மனம்விட்டு மகிழ்ந்து சிரிக்கிறாள்!
மூவரும் பேசிச் சிரித்தபடி உணவை உண்டு முடித்தார்கள். வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைந்திருந்தது. அதன்பிறகு கடற்கரை ஓரமாக அலைகளில் கால் நனைத்தபடி கொஞ்ச நேரம் நடந்தார்கள். சூர்யா தன் எதிர்காலத் திட்டங்கள் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொண்டான். மறந்தும் கடந்த சில வாரங்களாக அவர்கள் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை யாரும் பேசவில்லை. நேரம் மிகவும் இனிமையாகக் கழிந்தது.
ஏற்கனவே இருந்த அறையில் ஆண்கள் இருவரும் தங்கிக்கொள்ள சூர்யாவிற்கென முன்பதிவு செய்த அறையில் இந்திரா தங்கினாள். இரவு வேளையில் தேவனுக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம் என்று அக்காவும் தம்பியும் இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள். அதற்கு அவசியமில்லை என்று தேவன் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
அடுத்தநாள் காலை இந்திரா ஆஃபீஸ் கிளம்ப அவளோடு துணையாக தம்பி சென்றான். கௌசல்யாவை அழைத்து வீடொன்று பார்க்கும் படலத்தில் ஆண்கள் இருவரும் இறங்கிவிட்டார்கள். அது ஒன்றும் அத்தனைச் சிரமமாகவும் இருக்கவில்லை. உல்லாசப் பயணிகள் அதிகம் வந்து போகும் இடம் என்பதால் பலதரப்பட்ட வீடுகள் இருந்தன. முன்பணம் கூட செலுத்தாமல் எத்தனை நாட்கள் தங்குகிறார்களோ அத்தனை நாட்களுக்குப் பணம் செலுத்தினால் போதும் என்ற அடிப்படையில் வீடொன்று கிடைத்தது.
மூன்று அறைகளோடு கனகச்சிதமாக இருந்தது. கீழ்தளத்தில் ஹால், கிச்சன், கார்டன் இருக்க மேல் தளத்தில் மூன்று அறைகள் இருந்தன. தனித்தனியாக மூன்று அறைகளுக்கும் பாத்ரூம் வசதி இருந்தது. இந்திரா வேலையிலிருந்து வரும்போது இங்கே வீடு தயாராக இருந்தது. ஹோட்டலைக் காலி பண்ணிக்கொண்டு அன்று இரவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். தளவாட வசதிகளும் இருந்ததால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. வாடகைக் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் வீடு சௌகரியமாக இருந்ததால் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
“இவ்வளவு சீக்கிரமா வீடு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலைண்ணா, டூரிஸ்ட் வர்ற இடம் எங்கிறதால நாம பொழைச்சோம், இல்லைன்னா கஷ்டந்தான்.”
“ஆமா சூர்யா, கௌசல்யாக்கு இந்த விஷயமெல்லாம் அத்துப்படி.”
“யாருண்ணா அவங்க? ரொம்ப நல்ல லேடியா இருக்காங்க!”
“இந்திரா ஆஃபீஸ்லதான் வொர்க் பண்ணுறாங்க, போன வாரந்தான் நிச்சயதார்த்தம் நடந்துச்சு, நாங்களும் போனோம், இந்த வாரம் லீவுல இருக்காங்க போல, அவங்க இங்க இருக்கிறது இந்திராக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு.”
“நல்லதுதான்.” வீட்டிற்குப் பின்னால் அழகான தோட்டம் இருந்தது. தொட்டிகளில் பூச்செடிகள் நட்டிருந்தார்கள். ஒரு வட்ட மேசையும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. இவற்றுக்கு நடுவே அழகிய ஊஞ்சலும் இருந்தது. இருவர் அமரக்கூடியது. அன்றைக்கு இரவு வானில் காய்ந்த நிலவோடு மூன்று பேரும் அங்கு கூடிவிட்டார்கள்.
அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அவரவர் அறையில் ஒழுங்குபடுத்தியதால் சமைப்பதற்கு நேரம் இருக்கவில்லை. மாடியிலிருந்த மூன்று அறையை மூவரும் எடுத்துக் கொண்டார்கள். ஆண்கள் இருவரும் சென்று இரவு உணவை வாங்கி வந்தபோது சூர்யாவை அவன் அப்பா அலைபேசியில் அழைத்தார். வெங்கடேஷ்தான் அழைக்கிறார் என்று தெரியவும் தேவன் சட்டென்று வீடு வந்துவிட்டான். அவர்களுக்குள் பேச நிறைய விஷயங்கள் இருக்கும் என்பது அவனது எண்ணம்.
“சொல்லுங்கப்பா.”
“நீயா கால் பண்ணுவேன்னு காத்துக்கிட்டு இருந்தேன் சூர்யா.”
“சாரிப்பா, இன்னைக்குத்தான் வீடொன்னு பார்த்தோம், தொடர்ந்து ஹோட்டல்ல இருக்க முடியாதில்லை?”
“ம்… வீடு புடிச்சிருக்கா?”
“அதெல்லாம் சூப்பரா இருக்குப்பா, அந்த வேலையில அலைஞ்சதால உங்களுக்கு கால் எடுக்க முடியலை.”
“இந்திரா எப்பிடியிருக்கா? அந்தப் பையனைப் பார்த்தியா? உனக்குப் புடிச்சிருக்கா?”
“அப்பா, தேவனும் எங்கக்கூடத்தான் இருக்காரு.”
“என்ன சொல்றே சூர்யா?! அது சரியா வருமா?”
“அக்காவைப் பார்க்க வந்த இடத்துலதான் அந்த விக்ரம் இப்பிடி காட்டுமிராண்டி மாதிரி நடந்திருக்கான், உதடு கிழிஞ்சு உடம்பு முழுக்கக் காயம், இந்த நிலைமையில அந்த மனுஷனைத் தனியாவிட்டா நம்மெல்லாம் மனுஷங்களே இல்லைப்பா, இந்த விக்ரம் ஏம்பா இவ்வளவு மோசமா நடந்திருக்கான்? மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்கான்.”
“அந்தப் பையன் எப்பிடி இருக்கான்? டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போனீங்களா?”
“ம்… அக்காக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்காரு, எம்மேல அவனுக்குக் கோபம் வர்றது நியாயந்தானே சூர்யான்னு எங்கிட்டக் கேட்கிறாரு.”
“பையன் எப்பிடி சூர்யா? உன்னோட அபிப்பிராயம் என்ன?”
“என்னோட அபிப்பிராயம் இப்போ முக்கியமில்லைப்பா, அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கா, அதைப் பார்க்கும்போது எனக்கு வேற எதுவுமே பெருசா தெரியலை, அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கும்போது பார்க்க அவ்வளவு அழகா இருக்குப்பா, எனக்கு அந்த மனுஷன்கிட்ட எந்தக் குறையும் தெரியலை, உங்களுக்கும் தேவனைக் கண்டிப்பா புடிக்கும்பா.”
“சந்தோஷம், உங்கம்மாவை மீறி என்னால எதுவும் பண்ண முடியாது, ஆனா உம் மனசுக்குத் திருப்தி எங்கிற வார்த்தையைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கு.”
“அப்பா, கேட்கிறேன்னு தப்பா எடுக்காதீங்க, அம்மாக்கு இந்த விஷயத்துல உடன்பாடில்லை, அதுக்காக இந்தக் கல்யாணத்தை நீங்க என்னன்னும் பார்க்க மாட்டீங்களா? அம்மாவோட ஒன்னுமில்லாத புடிவாதத்துக்காக இந்திராவை நீங்க தண்டிக்கப் போறீங்களா?”
“சூர்யா… எனக்குக் கொஞ்சம் டைம் குடு, உங்களை மாதிரி என்னால எல்லாத்தையும் தடாலடியா பண்ண முடியாது, ஆனா கண்டிப்பா எம் பொண்ணை நான் விட்டுக்குடுக்க மாட்டேன்.”
“ரொம்ப சந்தோஷம்பா, இதைக் கேட்டா அக்கா ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணுவா.”
“சரி சூர்யா, நான் நாளைக்குக் கூப்பிடுறேன், நீ அங்க பார்த்துக்கோ.” என்ற வெங்கடேஷ் நிறைந்த மனதோடு அழைப்பைத் துண்டித்தார்.
“அக்கா சீக்கிரமா வா சாப்பிடலாம்.” வாங்கிவந்த உணவை கார்டனில் இருந்த மேசை மேல் வைத்து உண்ண ஆரம்பித்தார்கள். இந்திரா உணவோடு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
“யாரு சூர்யா ஃபோன்ல?”
“அப்பாதான், எம் பொண்ணு சௌக்கியமா? என்னோட மாப்பிள்ளை சௌக்கியமான்னு கேட்கக் கூப்பிட்டாரு.” சுலபமாகச் சொல்லிவிட்டு அவன் உணவில் கவனமானான். ஆனால் இந்திராவும் தேவனும் ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்துக் கொண்டார்கள். அப்பாவிடமிருந்து இப்படியொரு வார்த்தையை அவள் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் அம்மாவின் பேச்சை மீறாத அப்பா!
“சூர்யா! என்னடா சொல்றே?!”
“இந்த சாம்பார்ல இருக்கிற சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்.” இப்போதும் படு இயல்பாகப் பேசிய தம்பியைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள் பெண்.
“அண்ணா, எப்போ கல்யாணத்தை வெச்சுக்கிறதா முடிவு பண்ணியிருக்கீங்க?” ஏதோ சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கி வருவதைப் போல அவன் பேசவும் தேவனுக்குச் சிரிப்பு வந்தது.
“நீதான் டைம் கேட்டிருக்கியே சூர்யா, நீ அத்தான்னு கூப்பிட்டதுக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி யோசிக்கலாம்.”
“அண்ணான்னு கூப்பிட்டுப் பழகிட்டேன், இப்போ திடீர்னு அத்தான்னு கூப்பிட வரமாட்டேங்குது, நான் என்னப் பண்ணுறது?” சாதாரணமாகக் கேட்டவனை எழுந்து வந்து அணைத்துக் கொண்டான் தேவன்.
“நிஜமாத்தான் சொல்றியா சூர்யா?” தேவனின் குரல் கரகரத்தது.
“அண்ணா, என்னைப் பொறுத்தவரை நீங்க எப்பவுமே ஒரு நல்ல மனுஷன், அந்த நல்ல மனுஷன் எங்கக்காக்குப் பொருத்தமா இருப்பாராங்கிறது மட்டுந்தான் என்னோட கேள்வி.”
“அந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சுதா?”
“உங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு, உங்களோட இருக்கும் போது அக்கா சிரிச்சுக்கிட்டே இருக்கா, தாம் தூம்னு வேலை பார்க்கிறவக்கிட்ட இப்போ நிதானம் தெரியுது, இந்திராக்கு வெட்கமெல்லாம் வரும்னு இங்க வந்ததுக்கு அப்புறமாத்தான் எனக்குத் தெரிஞ்சுது.” நிலத்தில் கிடந்த சிறிய கல்லொன்றை எடுத்துத் தம்பியை நோக்கி வீசினாள் அக்கா. தேவன் பக்கென்று சிரித்தான்.
“ஆக மொத்தம் உங்கக்கூட இருக்கும் போது அக்கா சந்தோஷமா இருக்காண்ணா, எனக்கு அதைவிட வேறென்ன வேணும், கடைசிவரை இந்திரா இப்பிடி சந்தோஷமா இருக்கணும்.”
“கண்டிப்பா.”
“உங்க வீட்டுலயும் பேசுங்கண்ணா, நல்ல விஷயத்தை எதுக்குத் தள்ளிப் போடணும்? சீக்கிரமா கல்யாணத்தை வெச்சுக்கலாம்.”
“ம்…” சூர்யா இப்போது உள்ளே சென்றுவிட தேவன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவன் தோளில் பெண் தலை சாய்த்துக் கொண்டது. அவள் கரத்தைப் பற்றியவன் அதில் முத்தம் வைத்தான். வார்த்தைகள் தேவையில்லை என்பது போல இருவரும் பல நொடிகள் அமைதியாக இருந்தார்கள்.
“இந்திரா…”
“ம்…”
“என்ன எதுவும் பேசமாட்டேங்கிறே?”
“நீங்களும் பேசலையே தேவ்!”
“சந்தோஷத்தோட உச்சியில இருக்கேன், பேசணும்னு தோணலை, உன்னோட தம்பி வேற உள்ளே இருக்கான், இதுவே ஹோட்டலா இருந்தா என்னோட ரியாக்ஷன் இப்போ வேற மாதிரி இருந்திருக்கும்.”
“தேவ்…” அவள் செல்லமாகச் சிணுங்கினாள்.
“தேவ்க்கு என்ன வெச்சிருக்கீங்க மேடம்?”
“என்ன வேணும் தேவ்?” தலையைத் திருப்பி அவன் கண்களைப் பார்த்து அவள் கேட்க இளையவனின் முகத்தில் கோடி மின்னல்!
“என்ன வேணும்னாலும் கிடைக்குமா?” அவன் குரல் வேறாகியிருந்தது.
“கிடைக்கும்.” என்றவள் தன் முகத்துக்கு மிக அருகில் இருந்த அந்த இதழ்களில் சட்டென்று இதழ் பதித்தாள். இதை அவன் எதிர்பார்க்கவில்லைப் போலும். அவசரமாக எழுந்தவன் அப்பால் சென்று நின்றான். அவன் உடல்மொழியில் ஏதோவொரு பதட்டம் தெரிந்தது. தலையைக் கோதிக் கொண்டான். தன்னைக் கட்டுப்படுத்த அவன் போராடுவது வெளிப்படையாகவே தெரிந்தது.
“தேவ்…”
“நீ உள்ள போய் தூங்கு இந்திரா.” இப்போதும் அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. முதுகு காட்டியபடியே நின்றிருந்தான். அவன் அப்படித் தடுமாறுவது அவளுக்குப் பிடித்திருந்தது. எழுந்து சென்று அவன் முதுகைக் கட்டிக் கொண்டாள்.
“உங்க வீட்டுல பேசுங்க தேவ்.” அவள் வேறு பேசி அவன் கவனத்தைத் திருப்ப முயன்றாள்.
“சரிம்மா.”
“எதுக்காக டைமை வேஸ்ட் பண்ணணும்? எங்கப்பா கண்டிப்பா நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க, அம்மாவை நான் எதிர்பார்க்கலை, உங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க?”
“எங்க வீட்டுலயும் அதே நிலைமைதாம்மா, எப்பவுமே அப்பா என்னைப் புரிஞ்சுக்குவாங்க, ஆனா அம்மாதான் இப்போ பிரச்சினையே.”
“நீங்க பேசுங்க தேவ், உங்களை அவங்க புரிஞ்சுக்குவாங்க.”
“ம்… இதெல்லாம் ஃபோன்ல பேசுற விஷயமில்லைடா, வீட்டுக்குப் போனதும் பேசுறேன், முயற்சி செஞ்சு பார்க்கலாம்.”
“ம்… நான் உள்ள போகட்டுமா?” இதுவரை அவன் முதுகோடு நின்று பேசியவளைத் தனக்கு முன்னால் கொண்டு வந்தான் தேவன். கண்களில் அத்தனை ஏக்கம் தெரிந்தது. அந்த ஏக்கத்தைப் பார்த்தவளின் முகத்தில் மந்தகாசப் புன்னகை.
“இப்பிடி மூஞ்சை வெச்சுக்கிட்டு இருந்தா நான் எப்பிடி உள்ள போறது?” பிரிய மனமில்லாமல் இருவரும் நின்றிருந்தார்கள். மனதுக்குள் அவ்வளவு சந்தோஷம்! அந்த சந்தோஷத்தின் கனத்தைத் தாங்க முடியாமல் பெண் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டது.
அக்கா இன்னும் உள்ளே வரவில்லையே என்று நினைத்த சூர்யா அவன் அறையின் ஜன்னல் வழியாகத் தோட்டத்தை எட்டிப்பார்த்தான். அங்கே அவர்கள் நின்றிருந்த நிலையைப் பார்த்தபோது சிரிப்பு வந்தது. மனது நிறைவாக உணர்ந்தது. சில நாட்களாக அவன் தொலைத்த தூக்கத்தை அன்றைய இரவு கைப்பற்றினான். விடிந்து வெகுநேரம் ஆகியும் அவனது நிம்மதியான தூக்கம் தொடர்ந்தது.






Nice
Super 👌