அத்தியாயம் 11
அத்தியாயம் 11
அடுத்து வந்த ஒரு வாரமும் அந்த வீடு மகிழ்ச்சியில் திளைத்தது. சூர்யா பெரும் கலாட்டா பேர்வழியாக இருந்தான். ஆனாலும் படிப்பில் கவனம் குறையவில்லை. கையோடு புத்தகங்களை அள்ளிக்கொண்டுதான் வந்திருந்தான். அவன் படிக்கும் படிப்பு முழுநேர உல்லாசத்திற்கு இடம் கொடுக்கவில்லை.
காலையில் எழுந்தால் புத்தகங்களோடு ஐக்கியமாகிவிடுவான். இந்திராவும் ஆஃபீஸ் கிளம்பிவிடுவாள். தேவனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. காலையில் பெண்ணை ஆஃபீஸில் விட்டுவிட்டு வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வருவான். மதிய உணவு இலேசாக இருக்கும்.
மாலையில் இந்திரா வந்த பிறகு தம்பி புத்தகங்களை ஓரங்கட்டி வைத்துவிடுவான். மூவருமாகச் சேர்ந்து இரவு உணவைச் சமைப்பார்கள். ஆளுக்கொரு வேலையைச் செய்வார்கள். அப்போது அந்தச் சமையலறை இரண்டுபடும். சில வேளைகளில் கார்டனுக்குப் போய்விடுவார்கள். அன்றைக்கு பார்பிக்யூ அமர்க்களப்படும்.
“அண்ணா, ஒரு பாட்டுப் பாடுங்க.” இது சூர்யா. அன்றைய இரவு சமையலறையில் மூவரும் கூடியிருந்தார்கள். மீன் அங்கு புத்தம் புதிதாகக் கிடைத்தது. லண்டனில் இப்படிப் பார்ப்பது அபூர்வம் என்பதால் கடலுணவுகளை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டார்கள்.
“சூர்யா, இந்த அண்ணாவை முதல்ல நிறுத்து, அத்தான்னு கூப்பிடு.” இது இந்திரா.
“எனக்கு அது வரமாட்டேங்குதுக்கா.”
“அடி வாங்கப்போறே நீ!”
“விடு இந்திரா, இப்போ அவன் அப்பிடிக் கூப்பிடலைன்னா என்ன?”
“நான் அக்கா, நீங்க அண்ணாவா இவனுக்கு? கேட்கவே சகிக்கலை!”
“நீங்க ரெண்டு பேரும் இப்பிடி வந்து நிற்பீங்கன்னு எனக்கென்ன தெரியும்? தெரிஞ்சிருந்தா அப்பவே உங்களை அத்தான்னு கூப்பிட்டிருப்பேன்.”
“இந்த வியாக்கியானத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை?” கோபப்பட்டவள் எழுந்து கார்டனுக்குப் போய்விட்டாள்.
“அவ கெடக்கிறா! நீங்க பாடுங்கண்ணா.”
“என்னடா பாட?” தேவனுக்கு நல்ல குரல்வளம் இருந்தது.
“ஏதாவது பழைய பாட்டா பாடுங்க, அப்பா, அம்மா காலத்துப் பாட்டு, இந்த ராத்திரி வேளைக்கு அதான் சரியா இருக்கும்.”
“பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்… காணாத கண்களைக் காண வந்தாள்…” தேவன் ஆரம்பிக்க அவனோடு இளையவனும் சேர்ந்து கொண்டான். சமையலறையில் சாப்பாட்டு வாசனையோடு சங்கீத வாசனையும் சேர்ந்து வந்தது. ஊஞ்சலில் அமர்ந்திருந்த இந்திராவின் முகத்தில் புன்னகைத் தோன்றியது.
இன்னும் இரண்டு நாட்களில் தேவன் கிளம்புகிறான். மிகவும் மோசமாக அவனை அவள் மனம் தேடும். அதுவும் இந்த இரவுப் பொழுதை அவனில்லாமல் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அவள் மட்டுமல்ல, சூர்யாவின் நிலையும் அதுதான். இன்னும் இரண்டு மாதங்களை அவனில்லாமல் அவள் எப்படி இங்கே கடத்தப் போகிறாள் என்று அவளுக்கு விளங்கவே இல்லை!
“அக்கா! சாப்பிடலாம் வா.” தம்பி அழைத்த போதும் இவள் உள்ளே போகவில்லை. ஊஞ்சலிலேயே அமர்ந்திருந்தாள். இப்போதெல்லாம் சூர்யாவும் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டுத் தனது அறைக்குப் போய்விடுவான். இருவரும் பக்கத்தில் அமர்ந்துகொண்டு பேச்சை மறந்தவர்கள் போல இருப்பார்கள்.
“சாப்பிடலையா இந்திரா?”
“தேவ்… நீங்க கிளம்பினதுக்கு அப்புறமா நான் என்னப் பண்ணுவேன்? எனக்குக் கஷ்டமா இருக்கு தேவ்.” இப்போதெல்லாம் இந்தக் கேள்வி அடிக்கடி அவள் வாயில் வருகிறது. ஆனால் இன்றைக்கு என்றுமில்லாத வண்ணம் பெண்ணின் கண்களில் நீர் துளிர்த்தது.
“ஹேய் இந்திரா! என்னம்மா இது?” அவனுக்கும் அவளைப் பிரிவது வேதனைதான். ஆனால் என்ன செய்வது? இங்கேயே உட்கார முடியுமா? பிழைப்பையும் பார்க்க வேண்டுமே!
“என்னால முடியலை தேவ், நாள் நெருங்க நெருங்க எனக்குப் பயமா இருக்கு, என்னால தாங்க முடியும்னு தோணலை.” சொல்லிச் சொல்லி அழுதவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“இப்பிடி அழுதா நான் எப்பிடிப் போறதும்மா?” அவனுக்குமே அவள் அழுகைப் பார்த்துக் கவலையாக இருந்தது.
“இப்பிடி அழக்கூடாது, ரெண்டு மாசந்தானே? அது பார்த்திருக்கும் போது பறந்து போயிடும், அதுக்கப்புறம் நீயும் அங்க வந்திடுவே, அவ்வளவுதானே இந்திரா, இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா?” தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் கன்னத்தை மெதுவாக அவன் விரல்கள் வருடின.
“பாட்டெல்லாம் பயங்கரமா இருந்துச்சு!”
“ம்… உன்னோட தம்பி உன்னைவிட கலாட்டாக்காரனா இருக்கான்.”
“அவனுக்கு மட்டுந்தான் பாட்டா?”
“அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா… அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா… மிச்சமா மீதமா இந்த நாடகம்… மென்மையே பெண்மையே வா வா வா…” வரிகளை அவன் பாடி முடிக்க அந்த அழைப்பைப் பெண் ஏற்றுக் கொண்டது. அவன் கழுத்தை வளைத்து அந்த முகத்தைத் தன்னருகே கொண்டு வந்தவள் இதழ்களைச் சேர்த்தாள்.
தேவனுக்கும் அந்த அன்னியோன்யம் அப்போது தேவைப்பட்டது. தன்னை மறந்து போனான். அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. கண்ணீர், கவலை என அனைத்தையும் மறக்கச் செய்யும் ஒரே மருந்து அவன் தீண்டல்தான் என்பதால் தேவன் விலகவில்லை. அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் மேலும் மேலும் அந்த இதழ்களைத் தீண்டியபடிதான் இருந்தான்.
ஒரு கட்டத்தில் அவன் மார்பில் சாய்ந்தவள் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள். உணவையும் மறந்து அமர்ந்திருந்தார்கள். தூக்கத்தையும் அவர்கள் வர அனுமதிக்கவில்லை. உள்ளே எழுந்து போனால் ஒருவரை மற்றவர் பிரியவேண்டி இருக்கும் என்பதால் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
இவர்களின் சத்தத்தைக் காணவில்லையே என்று தேடிவந்த சூர்யா இவர்கள் அமர்ந்திருந்த நிலை பார்த்து அப்படியே திரும்பிப் போய்விட்டான். அவனுக்குமே வேதனையாக இருந்தது. தேவன் போன பிற்பாடு அக்காவைச் சமாளிப்பது பெரும் கஷ்டமாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. என்ன செய்வது என்று புரியவேயில்லை!
அன்று தேவன் புறப்படுகிறான். காலையிலேயே இந்திரா வேலைக்குப் போய்விட்டாள். தம்பி எவ்வளவு தடுத்தும் அவள் கேட்கவில்லை. நேற்றுத்தான் காமாட்சி அம்மாவும் அவர் கணவரும் வந்து சேர்ந்திருந்தார்கள். அதனால் தேவனுக்கு பெருத்த நிம்மதி. மிகவும் நம்பிக்கையான கைகளில் அவளை ஒப்படைத்துவிட்ட திருப்தி.
“அக்கா எதுக்காக இப்பிடி சின்னக் குழந்தை மாதிரி நடந்துக்கிறா? இவ்வளவு அவசரமா வேலைக்கு ஓடணுமா?”
“விடு சூர்யா, அவளுக்கு எப்பிடி விருப்பமோ அப்பிடி இருக்கட்டும், பாவம்டா, அவளை நல்லா பார்த்துக்கோ.” இப்போது தேவனும் கலங்கவும் சூர்யா தலையில் அடித்துக் கொண்டான்.
“நல்லா சேர்ந்தீங்க ரெண்டு பேரும்!”
“அம்மா, இந்திரா உங்க பொறுப்பு, சாப்பிடாம இருந்திடுவா, அடிக்கடி கவனிச்சுக்கோங்க, ஆஃபீஸ் போகும்போது கண்டிப்பா லன்ச் பாக் பண்ணி குடுங்க, அங்க போய் சும்மா இருந்திடுவா, நான் கௌசல்யாக்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வெக்கிறேன்.”
“நீங்க கவலையே பட வேணாம், நான் பார்த்துக்கிறேன் தம்பி.” காமாட்சி அம்மாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இளையவர்களின் அன்பும் அன்னியோன்யமும் அவரை மகிழ்ச்சிப்படுத்தியது. அது போதாதென்று தான் இந்திராவிடம் எடுத்த கெட்ட பெயரை மாற்றிக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிக் கொண்டார்.
“தம்பி, இந்திராக்கு நான் இங்க வர்றது விருப்பமா?” என்று பல முறை கேட்டுவிட்டார். அன்றைக்கு அவ்வளவு விளக்கம் சொன்ன பின்னும் தன்னோடு அந்தப் பெண் சரளமாகப் பழகவில்லையே என்ற குறை அவருக்கு. எல்லாவற்றையும் இப்போது நேர் செய்து விடவேண்டும் என்று நினைத்தார்.
“இந்திராக்கு அப்பிடியெல்லாம் கோபத்தைப் புடிச்சு வெச்சிருக்கத் தெரியாதும்மா, கூடிய சீக்கிரமே அவ உங்களோட நல்லா ஃப்ரெண்ட் ஆகிடுவா.” எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு தேவன் கிளம்பினான். அவளை விட்டுச் செல்வது மிகவும் வேதனையாக இருந்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் இரண்டு மாதங்கள் லீவு எடுத்தால் அவனது வேலை போய்விடும். இந்திராவும் இங்கே இருந்துதான் ஆகவேண்டும். இந்தப் பிரிவை அவர்களால் தடுக்க முடியாமல் போனது.
மாலை ஆஃபீஸிலிருந்து வந்தவளை வரவேற்றது அவனில்லாத வீடு. நெஞ்சை எதுவோ அடைக்க இந்திரா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். ஏர்போர்ட் வரைக்கும் சூர்யா போயிருந்தான். அவனும் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. காமாட்சியும் அவர் கணவர் மகேந்திரனும் மாத்திரமே இருந்தார்கள்.
“டீ இந்தாங்கம்மா.” காமாட்சி நீட்டியதை வாங்கிக் கொண்டாள். அவளைத் தனியே விடவேண்டாம் என்று தேவன் கேட்டுக் கொண்டதால் பேச்சை ஆரம்பித்தார் பெரியவர்.
“நைட்டுக்கு என்னம்மா டின்னர் பண்ணட்டும்?”
“எதாவது சிம்பிளா பண்ணுங்கம்மா.”
“ஏம்மா இந்திரா, உங்கக் கல்யாணம் இங்க நடக்குமா? இல்லை லண்டன்ல நடக்குமா?” ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகத்தான் அந்த அம்மா திருமணப் பேச்சை ஆரம்பித்தார். ஆனால் பெண் விசும்ப ஆரம்பித்துவிட்டாள். பெரியவர் திகைத்துப் போனார்.
“அம்மாடி, தம்பி ஊருக்குக் கிளம்பினது வருத்தம்தான், இல்லேங்கலை, அதுக்காக இப்பிடியே அழுதுக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகிறது? கொஞ்சம் மனசைத் தேத்திக்கங்கம்மா, தம்பிக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க, நீங்க சந்தோஷமா இருந்தாத்தானே அவங்களால அங்க நிம்மதியா இருக்க முடியும்.” அந்த உருக்கமான வார்த்தைகள் இலேசாக வேலை செய்தன.
அடுத்து வந்த நாட்களில் இந்திரா தன்னையே சமாதானம் செய்து கொண்டு வாழப் பழகியிருந்தாள். முதலிரண்டு நாட்கள் தேவனோடு பேசவே மறுத்தாள். காமாட்சி அவள் வீட்டிலிருக்கும் நேரங்களில் கவனித்துக் கொண்டார். ஆஃபீஸ் நேரங்களில் கௌசல்யா பார்த்துக் கொண்டாள். எல்லோரையும் அலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை அறிந்து கொண்டான் தேவன்.
இந்திராவைப் பிரிந்து சென்றது ஒருபக்கம் வேதனை என்றால் அங்கே வீட்டில் அம்மா இன்னொரு வேதனையாக இருந்தார். வீட்டிற்குச் சென்ற இரண்டாவது நாளே தனது கோப முகத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். நிதிலாவுடனான திருமணப்பேச்சு நின்று போனதுதான் அந்தக் கோபத்திற்கான காரணம் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் அம்மாவின் காதுகளுக்கு வந்திருக்கின்றன என்று அப்போது மகனுக்குத் தெரியவில்லை.
“அதான் தெளிவா அந்தப் பொண்ணு சொல்லிடுச்சில்லைப்பா இந்தக் கல்யாணத்துல அவளுக்கு இஷ்டமில்லைன்னு, அதுக்கப்புறமும் அம்மா ஏன் இப்பிடி நடந்துக்கிறாங்க?”
“தேவ், இங்கக் கொஞ்சம் பிரச்சினையாகிப் போச்சுப்பா, ஆரம்பத்துல நீ கல்யாணத்தை நிறுத்தினதும் நிதிலாவோட அம்மா உங்கம்மாக்கிட்டக் கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டாங்க, நம்ம மேல தப்புன்னு உங்கம்மாவும் அமைதியாத்தான் இருந்தா, நீ அனுப்பின நிதிலாவோட மெஸேஜை பார்த்ததும் இவளுக்குக் கோபம் வந்திடுச்சு, லட்சுமிக்கு ஃபோனைப் போட்டு உம் பொண்ணோட லட்சணத்தைப் பார்த்தியான்னு கேட்டுட்டா, இவங்க ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு, அந்தக் கோபம் அவளுக்கு, அந்தக் கோபத்துல நியாயம் இருக்கு தேவ், நீ கொஞ்சம் பொறுத்துத்தான் போகணும்.”
“ம்…” அப்பா சொன்னதிலும் ஓர் நியாயம் இருந்ததால் தேவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. திட்டமிட்டதை விட ஒரு வாரம் அதிக விடுமுறை எடுத்துக் கொண்டதால் வேலைகள் தலைக்கு மேல் இருந்தன. அவற்றை முடிப்பதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
முழுதாக அவனை உள்வாங்கிய வேலைகள், அழுகையில் கரைந்த இந்திரா என இவற்றோடு போராடிய தேவன் அம்மாவைக் கவனிக்கத் தவறிவிட்டான். ஏர்போர்ட்டில் அவன் விட்டுச் சென்ற ப்ளாக் ஆடியை எடுப்பதிலும் சின்னதாகப் பிரச்சனை ஏற்பட்டது. எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு நிமிர்ந்த போது ஒரு வாரம் ஓடியிருந்தது.
இப்போது சூர்யாவும் லண்டன் திரும்பியிருந்தான். அலைபேசியில் மட்டுமே இருவரும் பேசியிருந்தார்கள். இவனுக்கும் செமஸ்டர் ஆரம்பித்துவிட்டதால் தேவனைப் போய் பார்க்க முடியவில்லை. தினமும் ஃபோனில் பேசிக்கொண்டார்கள்.
“நான் ஸ்ரீலங்கா போகணுங்க.” அன்றைய இரவு உணவின் போது அம்மா ஆரம்பிக்கவும் அப்பாவும் மகனும் திடுக்கிட்டுப் போனார்கள். இந்திராவைப் பற்றி அப்பாவிடம் மகன் பேசியிருந்தான். கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொண்டு அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.
“என்னம்மா திடீர்னு?” இது பரதன்.
“போகணும்னு தோணிச்சு, நீங்களும் வர்றீங்களா? உங்களுக்கு இப்போ லீவு கிடைக்குமா?”
“இல்லையே தாரிணி, திடீர்னு சொன்னா எப்பிடி லீவு கிடைக்கும்?”
“பரவாயில்லை விடுங்க, நான் தனியா போய்க்கிறேன்.” இது அவர்கள் வீட்டில் எப்போதும் நடப்பதுதான். மூன்று பேரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் ஒரே நேரத்தில் விடுமுறைக் கிடைப்பது அபூர்வம். அப்படி அமையும் போது அனுபவித்துக் கொள்வார்கள். இல்லாவிட்டால் அவரவர் வசதிக்கு ஏற்றபடி பிரயாணம் செய்வார்கள்.
“தனியா எப்பிடிம்மா?” மீண்டும் மகன் ஆரம்பித்தான்.
“அப்போ நீயும் கூட வர்றியா?” சட்டென வந்தது கேள்வி மகனை நோக்கி.
“போற ஐடியா இருந்திருந்தா எங்கூட வந்திருக்கலாமே? நான் இப்பதானே ஊருக்குப் போனேன்.”
“அப்ப போகணும்னு தோணலை, இப்ப தோணுது, உன்னோட பிரச்சினை என்ன தேவ்?” அம்மா கோபப்படவும் மகன் அமைதியாகிவிட்டான். தனியாகப் பிரயாணம் செய்ய முடியாத அளவிற்கு தாரிணிக்கு அப்படியொன்றும் வயதாகிவிடவில்லை. அவன் பிரச்சனை வேறாக இருந்தது.
“காமாட்சி அம்மா.” அன்றைக்கு இரவே அவரை அழைத்தான்.
“சொல்லுங்க தம்பி, இங்க எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்திரா நல்லா இருக்காங்க, சூர்யா தம்பி கிளம்பி அங்க வந்திடுச்சு.”
“தெரியும்மா, டெய்லி பேசிக்கிட்டுத்தான் இருக்கேன், இப்ப பிரச்சினை அதில்லை.”
“சொல்லுங்க தம்பி.”
“அம்மா அங்க கிளம்பி வர்றேன்னு சொல்றாங்க.”
“ஐயையோ! என்ன திடீர்னு?!”
“அது தெரியலை, ஆனா இன்னைக்கு அப்பாக்கிட்டச் சொன்னாங்க.”
“எப்போ வர்றாங்களாம்?”
“அதுவும் தெரியலை, எனக்கு என்னப் பண்ணுறதுன்னே புரியலை, உங்களை அவங்கக் கூப்பிடுறதுக்கு முன்னாடி விஷயத்தைச் சொல்லலாம்னுதான் நான் அவசரமாக் கூப்பிட்டேன்.”
“எனக்கு கால் பண்ணினா என்ன தம்பி சொல்றது?”
“ஏதாவது சொல்லி சமாளிங்கம்மா, இப்போதைக்கு அம்மா அங்க வந்தா நீங்க கொழும்புக்கு வரணும், இந்திராவைத் தனியா எப்பிடி விடுறது?”
“நான் எங்க மாமியார் வீட்டுக்கு வந்திருக்கேன்னு சொல்றேன், அவங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னு சொல்லலாம், அப்ப என்னால இப்போதைக்கு கொழும்புக்கு வர முடியாதுன்னு அவங்கப் புரிஞ்சுக்குவாங்க.”
“நல்ல ஐடியா, அப்பிடியே சொல்லுங்க.” ஆனால் இவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. தாரிணி யாரையும் தொடர்பு கொள்ளவுமில்லை, பேசவுமில்லை. இரண்டு நாட்கள் கழித்து இலங்கையில் போய் இறங்கியவர் நேராகத் தங்கள் வீட்டுக்குச் செல்லவில்லை. மாறாக மிரிஸ்ஸவுக்குச் சென்றவர் இந்திரா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அந்த வீடே இப்போது ஆடிப்போனது!
“தாரிணிம்மா!” வாசலில் வந்து நின்ற மனிதரைப் பார்த்து காமாட்சி திகைத்துப் போனார். அப்போது வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை. இந்திரா ஆஃபீஸ் போயிருந்தாள். காமாட்சியின் கணவரும் ஏதோ வேலையாக வெளியே போயிருந்தார்.
“உங்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை காமாட்சி.” அந்தக் குற்றச்சாட்டு வருத்தத்தைக் கொடுத்தாலும் தேவனுக்காகப் பொறுத்துக் கொண்டார்.
“உள்ள வாங்கம்மா.”
“யாரோட வீடுன்னு இங்க வந்து நீ இருக்கே காமாட்சி? எந்த உரிமையில என்னை உள்ள வாங்கன்னு கூப்பிடுறே?”
“இது நம்ம தம்பியோட வீடும்மா, நம்ம தேவன் தம்பிதான் என்னை இங்க கூப்பிட்டு எல்லா பொறுப்பையும் குடுத்தாங்க.” அந்த வார்த்தைகள் அவரைச் சமாதானம் செய்தன போலும். உள்ளே வந்தவர் வீட்டை ஒரு பார்வைப் பார்த்தார். பயணம் செய்து வந்தவர் என்பதால் களைத்துப் போய் தெரிந்தார்.
“ஒரு டீ குடு காமாட்சி.”
“இதோ…” என்றவர் மளமளவென டீ தயாரித்துக் கொண்டு வந்தார்.
“சாப்பிடுறீங்களாம்மா? எல்லாம் ரெடியா இருக்கு.”
“நான் குளிக்கணும், வீட்டுல வேற யாரும் இல்லையா?” அப்போது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது.
“இந்திரா… ஆஃபீஸ் போயிருக்காங்க, நாலு மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவாங்க.” இப்போது காமாட்சி தடுமாறினார். இதற்கு மேல் மறைக்க என்ன இருக்கிறது?!
“ம்… இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு, ஆனா உனக்கு ஒரு வார்த்தை எங்கிட்டச் சொல்லணும்னு தோணலைல்லை?”
“நடந்தது என்னன்னு ஆரம்பத்துல எனக்கே தெரியலை.” என்று ஆரம்பித்தவர் தேவன் முதல்முதலாக இந்திராவை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தது, அதன்பிறகு நடந்தது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.
“கல்யாணப் பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு, இப்போ எதுக்காக தம்பி இந்தப் பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருக்காங்கன்னு நானும் எதையும் ஆதரிக்கலை, கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன், அதால அந்தப் பொண்ணு இன்னைக்கு வரைக்கும் எங்கிட்ட சரியா முகம் குடுத்துப் பேசாது, ஆனா நல்ல பொண்ணும்மா.”
“என்னவோ போ! ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ பண்ணுறீங்க.” என்றவரை மாடிக்கு அழைத்துச் சென்றார் காமாட்சி. தேவன் உபயோகித்த அறையை அவருக்குக் காட்டவும் உள்ளே போனவர் குளியலறைக்குள் போய்விட்டார். அதுதான் சந்தர்ப்பம் என்று தேவனை அழைத்தார் காமாட்சி.
“சொல்லுங்கம்மா.”
“தம்பி! அம்மா வந்திருக்காங்க!”
“நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காம வந்திருக்காங்க, விடுங்க தனியா இருக்கட்டும்.”
“உங்களுக்கு விஷயம் புரியலை தம்பி, அம்மா இந்த வீட்டுக்கு வந்திருக்காங்க.”
“என்னம்மா சொல்றீங்க?! அந்த வீட்டைப்பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்? நீங்க ஏதாவது சொன்னீங்களா?!” தேவன் பதறினான்.
“ஐயையோ! நான் வாயைத் திறக்கலைப்பா.”
“அப்போ எப்பிடீம்மா?!” இந்தத் திடீர் விஜயத்தின் மர்மம் என்ன என்று யாருக்கும் புரியவில்லை.
“எனக்குத் தெரியலையே! திடுதிடுப்புன்னு வந்து நிற்கவும் நான் ஆடிப்போயிட்டேன்!”
“இந்திரா எங்க? ஆஃபீஸ்ல இருந்து வந்துட்டாளா?”
“இன்னும் இல்லை, வந்தா என்ன ஆகும்னு பயமா இருக்கு தம்பி!”
“நான் இந்திராக்கு கால் பண்ணிச் சொல்றேன்.”
“வேணாம்பா, நீங்க கால் பண்ணினா அந்தப் பொண்ணு எப்பிடி இங்க வரும்? பயந்து போயிடுவா, வேணாம் தம்பி, அம்மாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு, அதாலதானே இங்க வந்திருக்காங்க, இனி மூடி மறைக்கிறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை, என்ன… நீங்க இருக்கும்போது வந்திருந்தா நிலைமையைச் சமாளிக்க இலகுவா இருந்திருக்கும்.”
“எனக்கு என்னப் பண்ணுறதுன்னே தெரியலைம்மா, மண்டை வெடிக்குது!”
“நம்ம கைல எதுவுமில்லை, ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருங்க, நடக்கிறது எல்லாமே நன்மைக்குத்தான்.” அவர் சொல்வதும் சரி என்பதால் தேவன் அமைதியாக இருந்தான். எப்போது இருந்தாலும் இந்த நிலைமைக்கு இந்திரா முகம் கொடுக்கத்தானே வேண்டும்.
நான்கு மணி தாண்டியிருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் இந்திரா வீட்டிற்கு வரலாம். குளியலை முடித்த தாரிணி உணவை முடித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தார். இந்திராவைப் பற்றி எதுவும் காமாட்சியிடம் கேட்கவில்லை. காமாட்சிக்கும் என்ன நடக்குமோ என்று படபடப்பாக இருந்தது.
நேரம் நான்கு இருபது இருக்கும். கேட்டைத் திறந்து கொண்டு இந்திரா உள்ளே வருவது காமாட்சிக்குக் கேட்கவும் சமையலறையில் நின்றிருந்தவர் ஹாலுக்கு வந்தார். முன் கதவைத் திறந்து உள்ளே வந்த பெண் காமாட்சியைப் பார்த்துப் புன்னகைத்தது. அவரோடு அதிகம் பேசமாட்டாள் என்பதால் மாடிக்குப் போக நினைத்தவள் அப்போதுதான் தாரிணியைக் கவனித்தாள்.
“ஹலோ ஆன்ட்டி.” யாரோ காமாட்சிக்குத் தெரிந்தவர், சொந்தக்காரர் வந்திருப்பதாகத்தான் பெண் நினைத்தது. யாரிவர் என்று கேட்பது நாகரிகமில்லை என்பதால் காமாட்சியைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இவங்க… தாரிணிம்மா, தம்பியோட… அம்மா.” காமாட்சிக்குத் தொண்டை உலர்ந்தது.
“யாரு…” இந்திராவிற்குத் தன் காதுகள் சரியாக வேலை செய்யவில்லையோ என்ற சந்தேகம் வந்தது.
“லண்டன்ல இருந்து வந்திருக்காங்க.” இப்போது இளையவள் உறைந்து போனாள். தேவனின் அம்மாவை இங்கே அவள் எப்படி எதிர்பார்ப்பாள்? அவள் உலகமே ஒரு கணம் தன் இயக்கத்தை நிறுத்தியது போல இருந்தது.
“வாங்க…” என்ன பேசுவது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்திருப்பவரை வரவேற்பதுதானே முறை! ஆனால் தாரிணி பதில் ஏதும் பேசாமல் அவளையே ஊடுருவுவது போல பார்த்திருந்தார். பெண்ணுக்கு இப்போது வெலவெலத்தது.
“சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டாங்கம்மா, நீங்க போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க, நான் டீ போடுறேன்.” காமாட்சிதான் பதில் சொன்னார். விட்டால் போதுமென்று மாடிகளில் ஏறியவள் தனது அறைக்கு வந்தாள். கை அலைபேசியை எடுத்தது.
“தேவ்…” அவன் குரலைக் கேட்டதும் இவளுக்குப் படபடத்தது.
“இந்திரா, அம்மா அங்க வந்திருக்காங்கன்னு எனக்குத் தெரியும், நீ பதட்டப்படாம அமைதியா இரு.”
“எப்பிடி தேவ் இந்த அட்ரஸ் அவங்களுக்குத் தெரியும்?!”
“எனக்கும் அதான் பெரிய ஆச்சரியமா இருக்கு! காமாட்சி அம்மா குடுக்கலைன்னு சொல்றாங்க, ஸ்ரீலங்கா போறேன்னு சொன்னதும் கொழும்பு வீட்டுக்குப் போவாங்கன்னு நான் நினைச்சேன், ஆனா அங்க வந்து இறங்குவாங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கலை.”
“எனக்குப் பயமா இருக்குப்பா!” அவள் நடுங்கினாள்.
“ஏன்டா? அவங்க என்னோட அம்மா, எதுக்கு அவங்களைப் பார்த்து நீ பயப்பிடணும்?”
“அவங்களுக்கு என்னைப் புடிக்காம போச்சுன்னா?”
“அவங்களுக்குப் புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் நம்ம கல்யாணம் நடக்கும், நீ எதைப்பத்தியும் யோசிக்காம தைரியமா இரு, நீ நீயா இரு, அவங்களுக்கு உன்னைப் புடிச்சுதுன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன், அதுக்காக நீ அவங்களுக்குப் பணிஞ்சு போகணும்னெல்லாம் நான் எதிர்பார்க்கமாட்டேன்.”
“நான் அவங்கக்கிட்டப் பேசினேன் தேவ், ஆனா அவங்க பேசலை.”
“விடு, என்னதான் பண்ணுறாங்கன்னு பார்ப்போம், என்ன எண்ணத்துல இப்போ அங்க வந்திருக்காங்க, எப்பிடி வந்தாங்க, எதுவுமே புரியலை, நீ அமைதியா இரு, சரியா?”
“ம்… தேவ்…”
“என்னடா?”
“நாளைக்கு ஆஃபீஸ்ல ஒரு பார்ட்டி, எல்லாரும் சாரி கட்டிக்கிட்டு வர்றாங்களாம், நான் என்னப் பண்ணுறது?” வீட்டிற்கு வரும்போது இந்த எண்ணத்தில்தான் வந்தது பெண். அன்றைக்கு அவனோடு செலவழித்த அழகிய மணித்துளிகளை நினைத்தபடி வந்திருந்தாள்.
“புதுசு வாங்கணுமா இந்திரா? காமாட்சி அம்மாவைக் கூட்டிட்டுப் போய் வாங்கேன்.”
“ம்ஹூம், அதில்லை, வெளியே புடவைக் கட்டிக்கிட்டுப் போகாதேன்னு அன்னைக்கு நீங்கதானே சொன்னீங்க, அதான் கேட்டேன்.”
“ஹேய் பொண்ணே! நான் இப்போ ஆஃபீஸ்ல இருக்கேன், எதுக்குத் தேவையில்லாம எதையெதையோ ஞாபகப்படுத்துறே! நான் வேலை பார்க்க வேணாமா?”
“தேவ்…” வெளியே காத்திருக்கும் பூகம்பத்தை மறந்து இருவரும் சரசம் பண்ணிக் கொண்டார்கள். நேரம் கரைந்து கொண்டிருந்தது.






Very nice.