arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 12
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 12 / 20

அத்தியாயம் 12

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 12

தாரிணி அமைதியாக அமர்ந்திருந்தார்.‌ தேவனுக்குக் கல்யாணப் பேச்சு ஆரம்பித்த நாளிலிருந்து அவர் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைய ஆரம்பித்துவிட்டது. பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களை வளர்ப்பது, படிப்பு என எத்தனையோ சவால்கள்! அப்போதெல்லாம் இவர்கள் எப்போது வளர்ந்து பெரியவர்கள் ஆவார்கள் என்ற எண்ணம் தோன்றும்.

ஆனால் உண்மையிலேயே சிரமமான காரியம் வளர்ந்த பிள்ளைகளைச் சமாளிப்பதுதான். இருபத்தி ஒன்பது வயதுவரைக் கல்யாணப் பேச்சை தேவன் ஆரம்பிக்க விடவில்லை. ஒரு நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று சொன்னான்.‌ அதற்கு அவன் அப்பாவும் ஆதரவு தெரிவித்ததால் தாரிணி அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் என்றைக்கு லட்சுமியைச் சந்தித்தாரோ அப்போது அவர் மனம் மாறிப் போனது.

நிதிலா மிகவும் அழகாக, அடக்கமாக இருந்தாள். வசதிக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஒரே பெண், ஆனாலும் அவ்வளவு பொறுப்பாக இருந்தாள். அதிர்ந்து பேச வராது அவளுக்கு.‌ ஆனால் அதையே மகன் ஒரு குறையாகச் சொன்னான்.

நிதிலாவை தேவனுக்குப் பேசி முடித்தபோது தாரிணி அவ்வளவு சந்தோஷப்பட்டார். மகனுக்கு நல்லதொரு இடத்தில் வாழ்க்கை அமைந்துவிட்டதில் ஒரு தாயாக அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி! கணவரோடு சேர்ந்து அதைக் கொண்டாடினார் என்றுதான் சொல்ல வேண்டும்.‌ ஆனால் முதலில் சந்தோஷமாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட மகன் பிற்பாடு வேறு பேசினான்.

நிதிலா தனக்குப் பொருத்தமான பெண் இல்லை என்று தேவன் சொன்னபோது தாரிணி ஆடிப்போய்விட்டார். நட்பு வட்டம், சொந்த பந்தம் என‌ அனைவருக்கும் இந்தச் செய்தி தெரிந்துவிட்டது. இப்போது வந்து இப்படிச் சொன்னால் அவரால் என்ன செய்ய முடியும்? இத்தனைக்கும் தேவன் சொன்ன காரணத்தில் எந்த நியாயமும் இல்லை என்பது அவரது எண்ணம்.

இதற்கிடையில் கல்யாணத்துக்கு நாள் குறிக்கப் பெண் வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார்கள். இதுவரை அவரோடு எல்லா விஷயத்திலும் கூட இருந்த கணவர் இப்போது மகன் பக்கம் சாய்ந்துவிட்டார். அதில் கணவர் மீது தாரிணிக்கு அளவில்லாத கோபம்.

“நீ எவ்வளவு சொன்னாலும் இந்த விஷயத்துல நான் தேவனை வற்புறுத்தமாட்டேன் தாரிணி, இது அவனோட வாழ்க்கை, அதை அவன் புடிச்சு வாழணும், உன்னோட ஃப்ரெண்ட்ஸ் என்ன சொல்லுவாங்க எங்கிறதுக்காக எம் புள்ளையோட வாழ்க்கையை என்னால நாசம் பண்ண முடியாது.” பரதன் உறுதியாகச் சொல்லிவிட்டார்.‌ தாரிணி எவ்வளவு விவாதம் பண்ணியும் அவரிடம் எதுவும் வேலைக்காகவில்லை.

மனைவியோடு பேசியது மாத்திரமல்லாது பெண் வீட்டுக்கும் அழைத்துத் தகவல் சொல்லிவிட்டார் பரதன். எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.மிகவும் வேதனையாகிப் போனது தாரிணிக்கு. லட்சுமி வேறு ஃபோனைப் போட்டு இவரிடம் காரசாரமாகப் பேசவும் உடைந்து போனார். தேவன் மேல் அவ்வளவு கோபம் வந்தது. ஆனால் கணவரையும் மகனையும் எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தேவன் ஊருக்குக் கிளம்பிய பின் ஒருநாள் கணவரோடு பேசுவது இவருக்குக் கேட்டது. யாரோ ஒரு ஃப்ரெண்ட்டை அழைத்துக்கொண்டு போயிருப்பதாக தேவன் தகவல் சொல்ல காமாட்சியிடமும் நன்றாகக் கவனித்துக் கொள்ளும்படி கணவர் சொல்வது இவர் காதுகளில் விழுந்தது. அதை அவ்வளவு பெரிய விஷயமாக அம்மா எடுத்துக்கொள்ளவில்லை. இது எல்லா வீடுகளிலும் நடப்பதுதானே என்று விட்டுவிட்டார்.

அவர் நினைத்திருந்தால் காமாட்சியை அழைத்து விபரம் கேட்டிருக்கலாம்.‌ அவர் இருந்த மனநிலையில் அதையும் அவர் செய்யவில்லை. ஆனால் அடுத்து வந்த சில நாட்களிலேயே பக்கத்து வீட்டுப் பெண்மணி அழைத்துச் சொன்ன விபரத்தில் தாரிணி நிலைகுலைந்து போனார்.

“என்ன தாரிணி, பையனுக்குக் கல்யாணம் பேசின கையோட எங்களுக்கெல்லாம் தெரியாம கல்யாணத்தையும் முடிச்சுட்டீங்களா? கொழும்புக்கு வந்து ஒரு ரிசப்ஷன் வெக்கலாமே?”

“நல்ல ஐடியாதான்.” தாரிணிக்கு அந்தப் பெண் என்ன பேசுகிறார் என்று ஒன்றும் விளங்கவில்லை. வார்த்தைகளைத் தன் வாயிலிருந்து விடாமல் தகவல் சேகரித்தார்.

“மருமகள் நல்ல அழகா இருக்கா! தேவனுக்கு நல்ல பொருத்தம்.” அன்றைக்கு தேவனும் இந்திராவும் பௌர்ணமி நாளன்று மாடி அறையிலிருந்து பேசியதை பக்கத்து வீட்டுப் பெண்மணி பார்த்துவிட்டார். இவர்கள் நின்றிருந்த அன்னியோன்யம் பார்த்து தேவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று அவர் முடிவுகட்டிவிட்டார்.

“காமாட்சியைக் கைல பிடிக்க முடியலை தாரிணி, புது மாப்பிள்ளையும் பொண்ணும் வந்தா வேலை ஜாஸ்தியாதானே இருக்கும்!” அப்படியென்றால் இந்தக் களவாணித்தனத்துக்கு காமாட்சியும் உடந்தையா? அதனாலேயே காமாட்சியை அழைத்து அவர் விபரம் கேட்கவில்லை.‌ இந்தத் தகவலை உறுதி செய்வது போல தேவன் இன்னுமொரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு கொழும்பில் தங்கினான். இப்போது தாரிணி உஷாராகிவிட்டார்.‌

அப்பாவும் மகனும் தனக்குத் தெரியாமல் ஏதோ தில்லுமுல்லுப் பண்ணுகிறார்கள் என்று புரிந்து போனது.‌ தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் தேவன் பற்றிய அனைத்துத் தகவல்களும் அவருக்கு வந்து சேர்ந்தன. நல்லவேளையாக இவர் தனது ஜேம்ஸ் பாண்ட் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பாக தேவனுக்கும் விக்ரமிற்கும் கைகலப்பு நடந்திருந்தது.‌ அதனால் அந்தச் செய்தி அம்மாவின் காதுகளுக்கு வரவில்லை.

தேவன் லண்டன் திரும்பும் வரை அமைதியாக இருந்தார்.‌ கூடவே அந்தப் பெண்ணின் தம்பியும் இருப்பது தெரிய வந்தது. எல்லோரும் கலைந்து போகட்டும் என்று காத்திருந்தவர் யாரிடமும் சொல்லாமல் திடீரென வந்திறங்கினார். எல்லோரையும் பந்தாட வேண்டும் போல வெறி வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டார்.

இதற்கு மேலும் மாடியிலேயே இருப்பது மரியாதை இல்லை என்பதால் கீழே இறங்கி வந்தாள் இந்திரா. அப்போதும் தாரிணி ஹாலில் கிடந்த சோஃபாவில்தான் அமர்ந்திருந்தார். ஃபோனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். இவள் தலையைக் காணவும் காமாட்சி அவசரமாக டீயோடு வந்தார். அவர்கள் இருவரையும் தனியே விடுவது அத்தனை உசிதமாகத் தெரியவில்லை.

“இன்னைக்குத்தான் வந்தீங்களா ஆன்ட்டி?” சிறியவள்தான் பேச்சை ஆரம்பித்தாள். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். நாமாகவே பேச்சை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தாள்.

“நீங்க வர்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாடிதான்…” பதில் சொன்ன காமாட்சியை ஓர் பார்வையால் அடக்கினார் தாரிணி.

“யாரும்மா நீ? நீ எதுக்கு எம் பையன் வாடகைக்கு எடுத்த வீட்டுல இருக்கே?” இரண்டே இரண்டு கேள்விகள்தான். ஆனால் இந்திரா முழுதாகச் சுருண்டு போனாள். வார்த்தைகளால் ஒருவரைக் கொல்ல முடியும் என்பதை அப்போதுதான் அவள் அறிந்தாள்.

“தாரிணிம்மா…”

“காமாட்சி, நான் உங்கூட பேசுறதுக்காக இவ்வளவு தூரம் வேலை மெனக்கெட்டு வரலை, நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?”

“இல்லைம்மா, நம்ம தம்பிதான்…”

“யாரு? தேவன்தானே? என்னோட புள்ளையைத்தானே சொல்றே?” என்றவர் இப்போது இந்திராவை ஓர் பார்வைப் பார்த்தார்.‌ தேவன் என் மகன், உனக்கு அவன் யார் என்று கேட்பது போல இருந்தது அந்தப் பார்வை. நெஞ்சை அடைப்பது போல இருந்தது இளையவளுக்கு. வேறு யாராவது அவளிடம் இப்படி நடந்திருந்தால் அவளது எதிர்வினை வேறாக இருந்திருக்கும். ஆனால் தேவனின் அம்மாவிடம் எப்படி அவளால் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள முடியும்?!

காமாட்சி விக்கித்துப் போனார்.‌ தாரிணி கோபமாகத்தான் இங்கே வந்திருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இந்திராவோடு இரண்டு நாட்கள் பேசிப் பழகினால் அந்தக் கோபம் தானாக மறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் இது என்ன மாதிரியான அணுகுமுறை?! சமாதானத்திற்கு நான் தயாரில்லை, சண்டை போடவே வந்திருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது.

“சொல்லும்மா? நீ யாரு?”

“எம் பேரு இந்திரா, உங்கப் பையன் தேவன்தான் என்னை இங்க தங்கச் சொன்னாரு, அது ஏன்னு நீங்க அவர்கிட்டத்தான் கேட்கணும், அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னும் நீங்க அவர்கிட்டத்தான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.”

“ஓ… யாரு கூப்பிட்டாலும் நீ போய் தங்கிருவியா?”

“தாரிணிம்மா!” இப்போது அலறியது காமாட்சி. அந்த வார்த்தைகளை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் ஒரு பெண்ணைப் பார்த்து இன்னொரு பெண் கேட்கக்கூடிய கேள்வியா இது?! அதுவும் நாளைக்குத் தனக்கு மருமகளாகப் போகும் பெண்ணைப் பார்த்து எப்படி இப்படிக் கேட்கலாம்?!

“யாரு கூப்பிட்டாலும் போற பொண்ணை உங்கப் பையனும் கூப்பிடுவாரா மேடம்? அந்த லட்சணத்துலதான் நீங்க புள்ளை வளர்த்திருக்கீங்களா மேடம்?” இப்படியெல்லாம் பேசவேண்டும் என்று இந்திரா நினைக்கவில்லை. ஆனால் பெரியவரிடமிருந்து வார்த்தைகள் கீழ்த்தரமாக வந்து வீழ்ந்தன. தவறாக இருந்தால் சரி செய்யலாம். ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் தன்னை நோக்கி வீசப்படுவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

“ஏய்! புள்ளை வளர்க்கிறது எப்பிடின்னு எனக்கு நீ பாடம் எடுக்கத் தேவையில்லை! எங்கேயிருந்து கிளம்பி வந்தே எம் புள்ளையை மயக்க? என்னோட வீடு வரைக்கும் வர உனக்கு வெட்கமா இல்லை?”

“தப்புத்தான் மேடம், உங்க வீட்டுக்கு நான் வந்தது தப்புத்தான், என்னை மன்னிச்சிடுங்க.” என்றவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் மாடிக்குப் போய்விட்டாள். காமாட்சி கொடுத்த தேநீரையும் அருந்தவில்லை.‌

வீடு கனமான அமைதியில் இருந்தது. யாருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. தனது அறைக்கு வந்த இந்திரா கதவைப் பூட்டிவிட்டு வெடித்து அழுதாள். தைரியமான பெண்தான். ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை இன்று வரை அவள் கேட்டதில்லை. அதுவும் தான் உளமார நேசிக்கும் மனிதனைப் பெற்றவள் தன்னை நோக்கி வீசிய வார்த்தைகள் அமிலத்தை விட மோசமாக இருந்தனவே!

அலைபேசியை அணைத்துக் கட்டிலில் போட்டவள் கண்களை மூடிக்கொண்டாள். வெறுப்பு, கோபம் இவற்றையெல்லாம் சந்திக்க நேரிடும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு வெறுப்பை எதிர்பார்க்கவில்லை. இப்போது யாராவது அழைத்தால் வெடித்துவிடுவோம் என்று பயந்தவள் அலைபேசியை மறந்து தலையணையில் சாய்ந்து கொண்டாள்.

ஆனால் காமாட்சி அப்படி இருக்கவில்லை. தாரிணி நடந்துகொண்ட முறை அவரை வெகுவாக கவலைக்குள்ளாக்கியது. கோபப்படுவார் என்று தெரியும். இந்திரா மேல் மட்டுமல்லாது தன் மீதும் தாரிணியின் கோபம் பாயும் என்று அவர் எதிர்பார்த்தார்.‌ எப்படியாவது நிலைமையைச் சமாளிக்கலாம் என்று நினைத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“தம்பீ!” எதைப்பற்றியும் யோசிக்காமல் தேவனை அழைத்தார்.

“சொல்லுங்கம்மா, நான் ஆஃபீஸ்ல இருக்கேன்.” இலங்கையில் மாலை ஆறு மணி. அப்போது லண்டனில் மதியம்.

“சில விஷயங்கள் ரொம்பத் தப்பா நடந்திடுச்சுப்பா, அம்மா இப்பிடி நடந்துக்குவாங்கன்னு நான் கனவுலயும் நினைக்கலை தம்பி.” என்றவர் கவலையின் கனம் தாங்க முடியாமல் விசும்ப ஆரம்பித்துவிட்டார். தேவன் திகைத்துப் போனான்.

“என்னாச்சு?! ஏன் அழுறீங்க?”

“அம்மா ரொம்பத் தப்பா பேசிட்டாங்க, ஒரு பொண்ணைப் பார்த்து அதுவும் உங்களுக்கு அந்தப் பொண்ணைப் புடிச்சிருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் இப்பிடிப் பேசுறது நல்லதில்லைப்பா.” என்றவர் சற்று முன்பு நடந்ததைச் சொன்னார். தேவனுக்கு இப்போது பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது.

“இந்திரா எதுவும் பேசலையா?”

“அம்மா தப்பா பேச ஆரம்பிச்சதும் அந்தப் பெண்ணும் பதில் சொல்லிச்சு, என்னோட வீட்டுக்கு வர நீ யாரு? உனக்கு வெக்கமில்லைன்னு சொன்னதும், தப்புத்தான் என்னை மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு மாடிக்குப் போயிட்டாங்க.”

“என்னம்மா இது? ஏன் அம்மா இப்பிடி நடந்துக்கிறாங்க? அவங்கதான் அப்பிடிப் பேசினா இவளும் பதிலுக்கு எதுக்கு வாயடிக்கிறா?”

“எனக்கு இப்போ என்னப் பண்ணுறதுன்னு தெரியலைப்பா, அம்மா சண்டைப் போடுறதுக்குன்னே கிளம்பி வந்த மாதிரி இருக்கு, யாரு கூப்பிட்டாலும் போயிடுவியான்னு கேட்கிறதெல்லாம் ரொம்ப அதிகம்னு எனக்குப் படுது.”

“இப்போ இந்திரா எங்க?”

“மாடிக்குப் போயிட்டாங்க.” ஒரு பெருமூச்சோடு அழைப்பைத் துண்டித்தான் தேவன். அம்மாவின் பேச்சு அநாகரிகத்தின் உச்சக்கட்டம் என்று புரிந்தது.‌ ஆனால் இப்போது அதைச் சொல்ல முடியாது. ஒருவேளை சொன்னால் அந்தக் கோபமும் இந்திரா மேல்தான் பாயும். இந்திராவை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.‌ ஆனால் அவள் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. என்ன செய்வது என்று புரியவேயில்லை.

அன்று இரவு அந்த வீடு மௌனத்திலேயே கழிந்தது. இரவு உணவை உண்ணக்கூட இளையவள் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. தாரிணி மாத்திரம் கீழே இறங்கி வந்தவர் உணவை உண்டுவிட்டு மீண்டும் மாடிக்குப் போய்விட்டார். யாருடனும் பேசவில்லை. காமாட்சிதான் உணவை ப்ளேட்டில் பரிமாறி இளையவளின் அறைக்கு எடுத்துச் சென்றார்.

“சாப்பிடுங்கம்மா.” அழுதிருப்பாள் போலும். முகம் சிவந்து வீங்கியிருந்தது.

“பசிக்கலைம்மா.”

“அப்பிடிச் சொல்லக்கூடாது, வயித்தைப் பட்டினி போடாம சாப்பிடுங்க, நாளைக்கு வேலைக்குப் போகணுமில்லை?” அந்த வற்புறுத்தல் கொஞ்சம் வேலை செய்தது. உண்ண ஆரம்பித்தாள் பெண். அவள் உண்டு முடிக்கும்வரை பெரியவர் எதுவும் பேசவில்லை.

“தாரிணிம்மா இன்னைக்கு நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பும்மா, எனக்கே ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு அவங்க பேசுறதைக் கேட்க, உங்களுக்கும் வேதனையாத்தான் இருந்திருக்கும், ஆனா தம்பிக்காக பொறுத்துக்கோங்கம்மா.”

“ம்…” கையைக் கழுவிக்கொண்டு வந்த பெண்ணின் கண்கள் மீண்டும் துளிர்த்தது.

“தம்பி உங்களுக்கு கால் பண்ணியிருப்பாங்க போல, ஆனா ஃபோன் ஆஃப்னு வருதாம்.”

“நாந்தான் ஆஃப் பண்ணி வெச்சிருக்கேன், இப்போதைக்கு தேவன்கிட்டப் பேசினா கோபத்துல வார்த்தைகள் தப்பா வந்து விழுந்திடும், நான் நாளைக்குப் பேசுறேன்னு சொல்லுங்க, நாளைக்கு ஆஃபீஸ்ல ஒரு விசேஷம், அதுக்கு நான் தயார் பண்ணணும், எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் நிம்மதியா தூங்கணும்.” கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சொன்னவளின் தலையைத் தடவிக் கொடுத்தார் காமாட்சி.

“அழாதீங்கம்மா, கூடிய சீக்கிரமே எல்லாம் சரியா போகும்.” ஆறுதல் வார்த்தை சொன்னவரைப் பார்த்துக் கசப்பாகப் புன்னகைத்தவள் தலையணையில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். அதற்கு மேலும் அங்கே நிற்காமல் பெரியவர் கீழே வந்துவிட்டார். மனது மிகவும் பாரமாக உணர்ந்தது. ஆனாலும் அவரால் என்னதான் செய்ய முடியும்?

அடுத்த நாள் எல்லா விடியல்களையும் போல அந்தக் கடற்கரையோரத்து வீட்டின் பொழுதும் அழகாக விடிந்தது. தாரிணி காலையிலேயே எழுந்து வந்தவர் தேநீர் குடித்துவிட்டுப் பத்திரிகையும் படித்துவிட்டு மாடிக்குப் போய்விட்டார். ஆனால் இந்திரா சற்றுத் தாமதமாகத்தான் வந்தாள். வரும்போதே குளித்து முடித்துவிட்டுப் புடவையும் கட்டிக் கொண்டு வந்தாள். பெண் புடவை அணிவதை காமாட்சி இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறார்.

“அடடே! இந்திராம்மா, உங்களுக்குப் புடவை ரொம்ப அழகா இருக்கு! புடவைதான் கட்டப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் ஏற்கனவே பூ வாங்கி வெச்சிருப்பேனே!” ஆதங்கப்பட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தவள் எதுவும் பேசாமல் காலை உணவை முடித்துக்கொண்டு வெளியே போய்விட்டாள். மறந்தும் நேற்றைய நாளைப்பற்றி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வீட்டைவிட்டு வெளியே வந்தபோது இந்திராவின் மனதில் மீண்டும் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. அவள் இன்று அணிந்திருப்பது தேவனோடு சென்று முதல்முதலாக வாங்கிய புடவை. அதை வாங்கிய நாளும் அணிந்திருந்த பொழுதுகளும் இப்போது நியாபகம் வந்தன. ஆனால் அன்றைக்கு மனதில் இருந்த சந்தோஷம் இன்றைக்கு இல்லையே! அதை முழுதாகத் துடைத்துப் போட்டவர் யார்? வழியில் இருந்த கோவிலுக்கு முன்பாக ஒரு பெண் பூக்கடை வைத்திருந்தார். அவரிடம் இரண்டு முழம் குண்டு மல்லி வாங்கியவள் அதையும் தலையில் வைத்துக் கொண்டாள்.

“அடடே! இந்திரா சூப்பர் போங்க! கலக்குறீங்க!” கௌசல்யா இவளை ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள். அன்று அவர்கள் ஆஃபீசில் வேலை செய்யும் மூத்த ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கான பிரியாவிடை வைபவம் நடக்க இருக்கிறது. பெண்கள் அனைவரும் புடவையில் வருவதாக நேற்றே தீர்மானம் பண்ணியிருந்தார்கள்.

“என்னாச்சு இந்திரா? ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?” கௌசல்யா உடனேயே கண்டுகொண்டாள். அவள் கேட்டதுதான் தாமதம். இவள் கண்களில் சட்டென்று நீர் நிறைந்து போனது.

“ஏய்! என்னாச்சுப்பா? என்ன திடீர்னு முகம் ஒரு மாதிரியா ஆயிடுச்சு? ஏதாவது பிரச்சினையா?”

“கௌசல்யா, அதைப்பத்தி நாம அப்புறமா பேசலாமே.”

“என்னாச்சு இந்திரா? அண்ணா கூட ஏதாவது சண்டையா? நேத்து வீட்டுக்குப் போகும்போது நல்லாத்தானே போனீங்க? அதுக்குள்ள என்னப்பா ஆச்சு?”

“தேவனோட அம்மா வீட்டுக்கு வந்திருக்காங்க கௌசல்யா, அது பெரிய கதை, அதை அப்புறமா பேசலாம், இப்ப ஃபங்ஷனை கவனிப்போம்.” என்றவள் அப்பால் போய்விட்டாள். கௌசல்யாக்கும் என்ன புரிந்ததோ அதற்கு மேல் இந்திராவைக் குடையவில்லை. ஆஃபீஸ் முடிந்த கையோடு அவளை நேராகக் கடற்கரைக்கு இழுத்துக் கொண்டு போனவள் அங்கே பேச்சை ஆரம்பித்தாள்.

“என்னப்பா நடந்துச்சு? அண்ணாவோட அம்மா ஏதாவது பிரச்சினைப் பண்றாங்களா? ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?”

“கௌசல்யா உங்களுக்குத் தெரியுமில்லை, தேவனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணப் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சு அது பாதியிலேயே நின்னு போச்சு, அந்த வருத்தம் அவங்க அம்மாக்கு நிறையவே இருக்கு, ஏன்னா அந்தப் பொண்ணு நிதிலா அவங்க ஃப்ரெண்டோட மகள்.”

“சரி, அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்? கல்யாணத்தை நிறுத்தினது அண்ணா, அவங்க பேசுறதா இருந்தா அவங்க மகன்கிட்டத்தானே பேசணும், எதுக்கு இங்க வந்திருக்காங்க? உங்களப்பத்தி அவங்களுக்கு எப்பிடி தெரியும்? இந்த அட்ரஸ் அவங்களுக்கு எப்பிடி கிடைச்சுது? யாரு குடுத்தா?” கேள்விகளை அடுக்கினாள் பெண்.

“எனக்கு எதுவும் தெரியாது கௌசல்யா, நேத்து வீட்டுக்குப் போகும்போது அந்த அம்மா சோஃபாவுல இருந்தாங்க, அப்பவும் எனக்கு அவங்க யாருன்னு தெரியலை, காமாட்சி அம்மாதான் தம்பியோட அம்மா லண்டன்ல இருந்து வந்திருக்காங்கன்னு இண்ட்ரடியூஸ் பண்ணி வெச்சாங்க, நான் ஆடிப் போயிட்டேன்.”

“ஓ…”

“அப்பவும் நான் அவங்கக்கூட நல்லாத்தான் பேச ட்ரை பண்ணினேன், ஆனா வார்த்தைகள் ரொம்ப தப்பா வந்து விழுந்துச்சு கௌசல்யா, அந்த வார்த்தைகளை என்னால ஜீரணிக்க முடியலை, நானும் பதில் பேசிட்டு ரூமுக்குப் போயிட்டேன்.”

“அண்ணாகிட்டப் பேசினீங்களா? அவங்க என்ன சொல்றாங்க?”

“இல்லை… நான் பேசலை, ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வெச்சுட்டேன், எனக்கு யார் கூடவும் பேச பிடிக்கலை, பேசினாலும் இப்போ வார்த்தைகள் சரியா இருக்காது, யாரையாவது காயப்படுத்தும், அதையும் நாம் விரும்பலை.” சொல்லிவிட்டு அலைகளை வெறித்துப் பார்த்தபடி இருந்த பெண்ணை கௌசல்யாவால் புரிந்துகொள்ள முடிந்தது.

“நீங்க சொல்றது சரிதான், ஆனா இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம அண்ணா ரொம்பக் கஷ்டப்படுவாங்க இல்லை?”

“எப்பிடியும் காமாட்சியம்மாவோட பேசுவாங்க, இங்க என்ன நடக்குதுன்னு அவங்க சொல்லுவாங்க.”

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறீங்க?”

“தெரியலை, ஆனா அந்த வீட்டுக்குப் போகவே புடிக்கலை கௌசல்யா.” நிலைமையின் விபரீதம் என்னவென்று கௌசல்யாவிற்கு லேசாகப் புரிந்தது. தேவனின் அலைபேசி எண் அவளிடம் இருந்ததால் உடனேயே அவனை அழைத்தாள்.

“கௌசல்யா எப்பிடி இருக்கீங்க? இந்திரா எப்பிடி இருக்கா?” அவசரமாக அழைப்பை ஏற்றான் தேவன்.

“என்னண்ணா நடக்குது உங்க வீட்டுல? இந்த அட்ரஸ் உங்க அம்மாக்கு எப்பிடி கிடைச்சுது?”

“எனக்குத் தெரியலைம்மா, ஆனா இப்போ அது முக்கியமில்லை, அம்மா எதுக்காக இப்போ அங்க வந்திருக்காங்க? வந்ததும் வராததுமா எதுக்கு இந்திராவோட சண்டைப் போடுறாங்க? என்னால எதையுமே புரிஞ்சுக்க முடியலை, ரொம்பக் குழப்பமா இருக்கு.”

“அம்மா கூட நீங்க பேசினீங்களா அண்ணா?”

“இல்லைம்மா, இப்ப எது பேசினாலும் தப்பாத்தான் தெரியும், நான் இந்திராக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு எங்கூட சண்டைக்கு வருவாங்க.”

“அப்போ இதுக்கு என்னதான் முடிவு? வீட்டுக்குப் போக புடிக்கலைன்னு இந்திரா சொல்றா.”

“இல்லம்மா, அது சரியா வராது, எங்கூட பேசலைன்னாலும் பரவாயில்லை, இந்திராவை வீட்டுக்குப் போகச் சொல்லுங்க, அவ மேல எந்தத் தப்பும் இல்லை, அப்பிடியே அம்மா குத்தம் சொல்றதா இருந்தாலும் அவங்க எங்கிட்டத்தான் பேசணும், அதை விட்டுட்டு அங்க வந்து அந்தப் பொண்ணோட சண்டைப் போடுறது எந்த வகையிலும் நியாயம் இல்லை.”

“அப்போ இந்தப் பிரச்சினைக்கு என்னதான் முடிவு?” ஒரு ஆண்மகனாக தேவன் தற்போது நிலைமையைச் சரியாகப் புரிந்து கொண்டான். யார் பக்கம் பேசினாலும் அது மற்றவர் மனதை நோகடிக்கும். அம்மாவிடம் பேச அவன் பிரியப்படவில்லை. இந்திரா அவன் அலைபேசி அழைப்பை ஏற்கவும் இல்லை. ஆனால் ஒன்றில் மட்டும் அவன் உறுதியாக இருந்தான். யார் எதிர்த்தாலும் இந்திராவைத் திருமணம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை.

அப்பாவிடம் நடந்த எதையும் அவன் மறைக்கவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்ட பரதனும் மிகவும் வருத்தப்பட்டார். மனைவி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று அவருக்கு விளங்கவே இல்லை. நடந்த நிகழ்வில் தன் மகனுக்கும் பாதி பொறுப்பு இருக்கும் போது அந்தப் பெண்ணை மாத்திரம் குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. கையைக் கட்டிக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க மட்டுமே அவராலும் முடிந்தது.

இரண்டு, மூன்று முறை இந்திராவை அலைபேசியில் அழைத்த தேவன் அவள் ஏற்க மறுக்கவும் அந்த முயற்சியைக் கைவிட்டான். ஆனால் அவள் லண்டன் திரும்பிய பிறகு அவர்களின் திருமணத்திற்கு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் அன்று முதல் செய்ய ஆரம்பித்திருந்தான். இது போன்ற நிகழ்வுகளுக்கு அதிக காலம் காத்திருக்க வேண்டும் என்பதால் இந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தான்.

வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் இந்திரா மிகவும் நொறுங்கிப் போனாள். தாரிணியின் அப்பட்டமான எதிர்ப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. அவர் மனதில் கோபம் இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் இத்தனை தூரம் வெறுப்பை அவர் கொட்டுவார் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அன்று மாலை ஆஃபீஸ் முடிந்து வீடு திரும்பியவள் அவளது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்துவிட்டாள்.

“இந்திராம்மா, என்னப் பண்ணுறீங்க?! தம்பி உங்களை இந்த வீட்டுலதான் இருக்கச் சொல்லிட்டுப் போயிருக்காங்க.” காமாட்சி பதறியதை அவள் கண்டு கொள்ளவே இல்லை. இவ்வளவும் நடக்கும்போது தாரிணி ஹால் சோஃபாவில்தான் அமர்ந்திருந்தார். இவள் வீட்டின் முன் கதவை நெருங்கவும் ஓடி வந்து அவள் கையைப் பிடித்து நிறுத்தினார் காமாட்சி.

“தம்பி எங்கிட்டக் கேட்டா நான் என்னம்மா பதில் சொல்றது? உங்களுக்குக் காவலுக்கு இருக்கச் சொல்லித்தானே என்னை இங்கே கூட்டிட்டு வந்தாங்க, இப்ப நான் என்ன பண்ணுறது?” பதறினார் காமாட்சி.

“உங்க தம்பிக்கு ஃபோனைப் போட்டு இந்திரா இந்த வீட்டுல இல்லைன்னு சொல்லுங்கம்மா, அதுக்கப்புறம் அவங்க என்ன சொல்றாங்களோ அதன்படி நடங்க.” அமைதியாகச் சொன்னவள் எதுவும் பேசாமல் யாரையும் பார்க்காமல் வெளியே போய்விட்டாள். அந்தக் கடற்கரையோர வீடு இப்போதும் அமைதியாக இருந்தது. மயான அமைதி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 13

அத்தியாயம் 13இந்திரா ஹோட்டலுக்கு வந்து இரண்டு நாட்களாகின்றன. இந்த இரண்டு நாட்களில் அவள் யாரோடும் பேசவுமில்லை. ஆஃபீஸில் மட்டும் கௌசல்யாவோடு தன் மன கவலைகளைப் பகிர்ந்து கொண்டாள். தேவன் பலமுறை அவளை அலைபேசியில் அழைத்திருந்தான். ஆனால் அந்த அழைப்பையும் ஏற்க மறுத்தாள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்