அத்தியாயம் 13
அத்தியாயம் 13
இந்திரா ஹோட்டலுக்கு வந்து இரண்டு நாட்களாகின்றன. இந்த இரண்டு நாட்களில் அவள் யாரோடும் பேசவுமில்லை. ஆஃபீஸில் மட்டும் கௌசல்யாவோடு தன் மன கவலைகளைப் பகிர்ந்து கொண்டாள். தேவன் பலமுறை அவளை அலைபேசியில் அழைத்திருந்தான். ஆனால் அந்த அழைப்பையும் ஏற்க மறுத்தாள் பெண்.
“இந்திரா, இன்னும் எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல தங்கப் போறீங்க? பேசாம எங்க வீட்டுல வந்து தங்குங்க.” கௌசல்யா வற்புறுத்த ஆரம்பித்திருந்தாள்.
“இல்லை கௌசல்யா, எதுக்கு உங்களுக்கு வீணான சிரமம், நான் பார்த்துக்கிறேன்.”
“அடிதான் வாங்கப் போறீங்க, நீங்க எங்க வீட்டுல வந்து தங்குறது எனக்குச் சிரமமா? அதெல்லாம் ஒன்னும் இல்லை, சொல்றதைக் கேளுங்க இந்திரா ப்ளீஸ்.” இன்னும் ஆறு வாரங்கள் அவள் இலங்கையில் இருக்க வேண்டும். அத்தோடு பணிக்கான காலம் நிறைவு பெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தை ஹோட்டலில் கழிப்பது என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. அதை இந்திராவும் உணர்ந்துதான் இருந்தாள்.
“ரொம்ப யோசிக்காதீங்க, சொல்றதைக் கேளுங்க, எங்க வீட்டுக்கு வாங்க இந்திரா.” கௌசல்யாவின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அண்மையில் நடந்த மகளின் நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் இப்போது கிளம்பிப் போயிருந்தார். வீட்டில் அம்மாவும் மகளும் மாத்திரம்தான் இருந்தார்கள். அதனால் அங்கே கிளம்பிப் போவது சரியான யோசனையாக இருக்கும் என்றுதான் இந்திராக்கும் தோன்றியது.
இந்த ஹோட்டலுக்கு வந்த பிறகு காமாட்சியம்மாள் இரண்டு மூன்று முறை அழைத்து இருந்தார். ஆனால் அவரின் அலைபேசி அழைப்பையும் அவள் ஏற்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள், வாடகைக்கு எடுத்த வீட்டை என்ன செய்தார்கள்? எதுவும் அவளுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அவள் பிரியப்படவுமில்லை.
அன்று மாலை ஆஃபீஸ் முடிந்த கையோடு ஹோட்டலில் இருந்த தனது பொருட்களை எடுத்துக்கொண்டு கௌசல்யாவின் வீட்டுக்குப் போனாள் இந்திரா. அத்தனைப் பெரிய வீடு என்று சொல்ல முடியாது. தனியாக அறை இருக்கவில்லை. அவளும் கௌசல்யாவும் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டார்கள். நல்ல விசாலமான அறை என்பதால் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை
“அக்கா, இப்போ உன்னோட பிரச்சினை என்ன? எதுக்கு தேவன் கூட பேசாம இத்தனை ரகளைப் பண்ணுறே?” குழப்பங்கள் வரும் என்று ஏற்கனவே தெரியும். இரு தரப்பையும் சமாளிப்பது மிகவும் கஷ்டம் என்பதும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனைப் பூதாகரமாக வரும் என்று சூர்யா எதிர்பார்க்கவில்லை.
“தேவன் கூட பேசி இப்ப நான் என்ன செய்யப் போறேன் சூர்யா?”
“ஏன் லூசு மாதிரி பேசுறே? அந்த மனுஷன் கூட பேசாம வேற யார் கூட பேச போறே?”
“நான் சொல்றதைத் தெளிவா புரிஞ்சுக்கோ, இப்ப பேசுறதால தேவனுக்குக் கஷ்டந்தான் மிஞ்சும், அவர் அம்மாவைப் பார்ப்பாரா, இல்லை என்னைப் பார்ப்பாரா? நீயே சொல்லு.”
“அதுக்காக அவர் கூட நீ பேசாமலேயே இருந்திடுவியா? என்ன முடிவுல தான் இருக்கே! எனக்கு ஒன்னும் புரியலைக்கா!”
“தெரியலைடா, இந்த உறவை நீட்டிக்கிட்டுப் போறது சரின்னு தோணலை, அப்பிடியே தேவன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா அவங்க அம்மாவோட உறவை இழக்க வேண்டியிருக்கும், அது சரியா? உங்கம்மா உன்னை விட்டுப் பிரிஞ்சாலும் பரவாயில்லை, நீ எனக்கு வேணும்னு எப்பிடிச் சொல்றது?”
“அப்போ உனக்கு தேவன் வேணாமா?”
“தெரியலை, தள்ளி இருக்கிறது நல்லதுன்னு தோணுது, இழப்புகளைத் தாங்க முடியாது, அதே நேரம் அவமானங்களையும் சகிச்சுக்க முடியலை.” இதைச் சொல்லும்போது அவள் குரல் கண்ணீரில் நனைந்தது.
“நான் அப்பவே சொன்னேனே! நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்னு, ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கலாம்னு டயலாக் எல்லாம் அடிச்சே, அந்தத் தைரியம் எல்லாம் என்னாச்சு?”
“சூர்யா, கஷ்டங்களைச் சமாளிக்கலாம், ஆனா இது என்ன மாதிரியான அணுகுமுறைடா?! அந்தம்மாக்கு நான் யாரு, எப்பிடிப்பட்ட பொண்ணு, என்னோட குணம் என்ன, கோத்திரம் என்ன, எதுவுமே தெரியாது, நிலைமை இப்பிடி இருக்கும்போது அவங்க என்ன பண்ணியிருக்கணும்? ரெண்டு நாள், இல்லைன்னா ஒரு வாரம் அந்த வீட்டுல தங்கி எங்கூடப் பழகியிருக்கணுமா இல்லையா? அதுக்கப்புறந்தானே ஒரு முடிவுக்கு வந்திருக்கணும்? அதை விட்டுட்டு எடுத்த எடுப்பிலேயே என்னை நிராகரிச்சா என்னால என்னப் பண்ண முடியும் சொல்லு? யாரு கூப்பிட்டாலும் வந்திடுவியான்னு கேட்டா நான் என்னடா பண்ண முடியும்?”
“எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு?!” தம்பி பல்லைக் கடித்தான். இத்தனை அருமையான மனிதனுக்கு இப்படியொரு அம்மாவா? அவனால் கற்பனைக் கூட செய்ய முடியவில்லை.
“இத்தனைக்கும் நான் அந்தம்மா கூட நல்லாத்தான் பேசினேன், ஆரம்பத்துல அவங்களுக்கு எம்மேல ஆத்திரம் வர்றது இயற்கைதானே? அதை நாம எதிர்பார்த்தோம்தானே? போகப்போக எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன், ஆனா அவங்க வெறுப்பைக் கொட்டுறாங்க சூர்யா, நம்ம பையனுக்கு இந்தப் பொண்ணைப் புடிக்குதுன்னு தெரிஞ்சும் இப்பிடியெல்லாம் பேசுறாங்கன்னா என்னடா சொல்றது? என்னோட நிலைமைல இருந்து யோசிச்சுப் பாரு சூர்யா.”
“என்னப் பண்ணுறதுன்னு தெரியலைக்கா, அந்த மனுஷன் பாவம், வந்து பார்க்கிற தூரத்துல நீயும் இல்லை, அம்மா பண்ணுற காரியங்களைச் சகிச்சுக்கவும் முடியலை, கஷ்டப்படுறாரு.”
“விட்டுரு, எல்லாத்தையும் அது பாட்டுல விட்டுரு, ஆண்டவன் விதிச்சது நடக்கட்டும், இந்த வில்லங்கம் எல்லாத்தையும் விட பெரிய வில்லங்கம் நம்ம வீட்டுல இருக்கு, நான் அங்க வந்ததுக்கு அப்புறம் இன்னும் என்ன காத்திருக்கோ தெரியாது.”
“எல்லாத்தையும் மனசுல போட்டு நீ குழப்பிக்காதே, லூஸ்ல விடு, பார்த்துக்கலாம், கௌசல்யா அக்காவோட வீடு வசதியா இருக்கா? ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?”
“இல்லைடா, சொல்லப்போனா அவகூட இருக்கிறது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு.”
“வெரி குட், நடுவுல நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமா இருக்கப் பாரு, கஷ்டந்தான், ஆனாலும் முயற்சி செய்.” எப்போதும் போல இப்போதும் ஒரு தம்பியாக இல்லாமல் அண்ணனாக அவளுக்கு அறிவுரை சொன்னான் இளையவன்.
ஆறு வாரங்கள் பறந்து போயிருந்தன. இலங்கையில் பணி நிமித்தம் தான் கழிக்க வேண்டிய காலத்தை முடித்துக்கொண்டு இந்திரா அன்றைக்கு லண்டன் புறப்படுகிறாள். எத்தனை மணிக்கு இங்கிருந்து கிளம்புகிறாள், லண்டன் ஹீத்ரோவை எத்தனை மணிக்குச் சென்றடைவாள் என்ற அனைத்துத் தகவல்களையும் சூர்யாவுக்கு அனுப்பி வைத்தாள். தம்பிக்கும் அன்று விடுமுறை நாள் என்பதால் ஏர்போர்ட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தான்.
“எனக்கு நீங்க பண்ணின உதவிக்கு நன்றின்னு ஒத்த வார்த்தையில பதில் சொல்லிட முடியாது…” கௌசல்யாவிடமும் அவள் அம்மாவிடமும் விடைபெறும் போது பெண் முழுதாக உடைந்து போனாள். அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அவர்கள் இருவரும் இல்லாமல் இந்த இடைப்பட்ட காலத்தைக் கடக்க அவள் வெகுவாகச் சிரமப்பட்டிருப்பாள்.
“அடடா! என்ன இந்திரா சின்னப் பொண்ணு மாதிரி! சந்தோஷமா கிளம்பிப் போய் ஜாம் ஜாம்முன்னு கல்யாணத்தைப் பண்ணுங்க, ஹனிமூனுக்குக் கண்டிப்பா இங்கதான் வரணும் சரியா?” கௌசல்யா கேலி பண்ணவும் இவள் சிரித்துக் கொண்டாள். அந்த உயிர்ப்பில்லாத சிரிப்பைப் பார்ப்பதற்குக் கவலையாகத்தான் இருந்தது.
கௌசல்யாவின் நிச்சயதார்த்தத்தின் போது தேவனும் இந்திராவும் எத்தனை மகிழ்ச்சியாகக் கலந்து கொண்டார்கள்! அன்றைய அவர்களின் முகங்களைப் பார்த்த போதே புரிந்ததே, இவர்கள் இருவரும் ஒருவர் மேல் மற்றவர் பைத்தியமாக இருக்கிறார்கள் என்று! கௌசல்யாவிற்கு நிச்சயித்திருக்கும் மாப்பிள்ளை அடிக்கடி அவளுக்கு கால் பண்ணுவான். பேசுவார்கள், சிரிப்பார்கள். அவர்களது மகிழ்ச்சியைப் பார்க்கும்போது தானும் மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் வெறுமை பரவுவதை இந்திரா உணர்வாள்.
தேவனை அழைத்துப் பேசலாமா என்று பலமுறை நினைத்திருக்கிறாள். அவள் அழைத்தால் அவன் நிச்சயமாக மகிழ்வான். அவளை நினைத்து அவன் வெகுவாக வருந்துவதாக சூர்யா பலமுறை சொல்லியும் இருக்கிறான். ஆனால் அவனை நெருங்க எதுவோ ஒன்று அவளைத் தடுத்தது. அது வேறு எதுவுமல்ல, தாரிணியின் கோப முகம்!
கொழும்பு வரை தனியாகவே வந்தாள் பெண். டாக்ஸியை அனுப்பிவிட்டு ஏர்போர்ட்டுக்கான அனைத்துச் சம்பிரதாயங்களையும் முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்த போதும் அவனது நியாபகம்தான் வந்தது. பக்கத்து இருக்கையில்தானே அன்று அமர்ந்திருந்தான். எவ்வளவு இன்பமான பயணம்! அன்று வசந்தத்தை அள்ளிக்கொடுத்த வாழ்க்கை இன்று கொடும் பாலைவனத்தைக் காட்டுகிறது!
அன்றைக்கும் டுபாயில் தரித்துப் பின்புதான் லண்டன் போகிறாள். பழைய நியாபங்கள் அனைத்தும் நெஞ்சில் முட்டி மோதின. டுபாயில் தங்கிவிட்டு இலங்கை போனபோது இதே விமான நிலையத்தில் இருவரும் சுற்றித் திரிந்தார்கள். அன்றைக்கு அவனோடு நின்றிருந்த இடங்களை எல்லாம் இன்றைக்குப் பெண் அசைபோட்டது. வலிக்க வலிக்க அந்த மணித்துளிகளை மனதுக்குள் ரசித்தது.
“சூர்யா, எங்க இருக்கே? ஃப்ளைட் லான்ட் ஆகிடுச்சு.” வந்ததும் வராததுமாக தம்பியை அழைத்தாள்.
“நான் வெளியேதான் இருக்கேன், நீ வா.” இலங்கையை அவ்வளவு தூரம் ரசித்தாலும் பிறந்து வளர்ந்த நாட்டில் கால் வைக்கும் போது ஓர் புத்துணர்ச்சி பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அன்றைக்கு விமான நிலையம் அத்தனை பிஸியாக இருக்கவில்லை என்பதால் விரைவாகவே தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் இந்திரா.
கண்கள் அவசரமாகத் தம்பியைத் தேடின. ஆனால் தேடிய கண்களுக்குத் தம்பி தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் அவளது தேவன்தான்! இந்திரா ப்ரேக் அடித்தது போல நின்றுவிட்டாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. இவளை அழைத்துச் செல்ல தேவன்தான் வருகிறான் என்று கடைசிவரை சூர்யா சொல்லவே இல்லையே!
“ஹாய் இந்திரா.” அந்த ஆழ்ந்த குரல் அவளருகே வந்திருந்தது. மற்றவர்களுக்கு வழி விடாமல் திகைத்துப்போய் நின்றிருந்தவளின் அருகே வந்தவன் ட்ராலியைத் தன்வசம் எடுத்துக் கொண்டான்.
“போகலாமா?” எதற்கும் அவளிடம் பதிலில்லை. எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அவன் முன்னே நடக்க வாயடைத்துப் போனவள் போல பின்தொடர்ந்தாள் பெண். கார் பார்க்கிங்கிற்குப் போகவேண்டும் என்றால் லிஃப்ட்டைத்தான் அணுகவேண்டும். ஆனால் அவன் வேறு திசையில் நடந்தான். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் எதுவும் பேசாமல் கூடவே வந்தாள்.
சற்று ஒதுக்குப்புறமான இடம் வந்ததும் இவளை நோக்கித் திரும்பியவன் சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டான். எலும்புகள் அனைத்தும் நொறுங்கிவிடும் என்னும் அளவிற்கு இறுகிய அணைப்பு! அப்போதுதான் ஒரு விமானம் தரையைவிட்டுப் பிரிந்திருக்கும் போலும். ஹோவென்ற இரைச்சலொன்று பெண்ணின் காதுகளை அடைத்தது.
“தேவ்!” அவள் அழைத்ததும் அணைப்பைத் தளர்த்தியவன் அதே வேகத்துடன் அந்த இதழ்களைத் தனதாக்கினான். இந்திரா கண்களை மூடிக்கொண்டாள். கடந்த இரு மாதங்களாக அவள் அனுபவித்த தனிமைத் துயருக்கு அந்த முத்தம் மருந்து போட்டது. யாரோ நடந்துவரும் சத்தம் கேட்கவும் பெண் விலக எத்தனித்தாள். ஆனால் அவளைத் தடுத்தவன் அப்படியே நின்றிருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் பெண்தான் வலுக்கட்டாயமாக விலகினாள். கலைந்து போயிருந்த கூந்தலைச் சரி பண்ணியவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவர்கள் நின்றிருந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை. அவள் முகத்தைத் தனக்காகத் திருப்பியவன்,
“எதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை?” என்றான் ஆதங்கத்துடன்.
“இப்பவும் இது சரியா வருமா இல்லையான்னு எனக்குத் தெரியலை தேவ்.”
“சரியா வந்தாலும் வரலைன்னாலும் நம்ம வாழ்க்கையை நாம வாழத்தானே வேணும்? ஆளுக்கொரு பக்கமா ஒதுங்கிப் போறதா நாம எப்பவுமே பேசலையே இந்திரா?”
“தேவ்… உங்களுக்குச் சொன்னா புரியாது, உங்கம்மா அங்க வருவாங்கன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கலை, வந்தவங்க கோபப்பட்டிருந்தா பொறுமையா இருந்திருக்கலாம், ஆனா அவங்க வெறுப்பைக் கொட்டினாங்க, என்னெல்லாமோ பேசினாங்க, வார்த்தைகள் ரொம்பத் தப்பா வந்து விழுந்துச்சு.”
“ம்…” தேவனின் தாடை இறுகியது.
“பேசுறது வேற யாருமா இருந்திருந்தா நிலைமை வேற, காமாட்சி அம்மா முடிஞ்ச வரைக்கும் உங்கம்மாவைச் சமாதானம் பண்ண முயற்சி செஞ்சாங்க, ஆனா அவங்களையும் பேசவிடலை, என்னை முழுசா தாக்குறதுதான் அவங்க நோக்கமா இருந்துச்சு, என்னைக் காயப்படுத்தணும், அவங்க பேசுற பேச்சுல நான் உங்க பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க, இதுக்கு மேல என்ன இருக்கு?”
“இதுக்கு மேலதான் எல்லாமே இருக்கு, இன்னும் ரெண்டு வாரத்துல டேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன், நாம கல்யாணம் பண்ணிக்கலாம் இந்திரா.”
“தேவ்!” பெண் அதிர்ந்து போனாள்.
“யாரு என்ன சொன்னாலும் சரி, நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவோம், நம்ம வீட்டுல இருக்கிறவங்களுக்குத் தகவல் சொல்லலாம், அவங்களுக்குப் புடிச்சா வரட்டும், இல்லைன்னா வரவேணாம்.”
“இது சரியான முடிவில்லை தேவ்.”
“எனக்குத் தெரிஞ்சு இந்த முடிவுல எந்தத் தப்புமில்லை இந்திரா, சம்பிரதாயம்னு ஒன்னு இருக்கு, கடமையும் இருக்கு, அதையெல்லாம் எந்தக் குறையும் இல்லாம நான் சரியா செய்வேன், நம்மளோட சேர்ந்து இருக்க விரும்புறவங்க சேரட்டும், விருப்பமில்லாதவங்க தள்ளியே இருக்கட்டும்.”
“தேவ் அது…”
“நான் உங்கிட்ட அபிப்பிராயம் கேட்கலைம்மா, நம்ம வாழ்க்கைப் பத்தின முடிவைச் சொல்றேன், நீ எங்கூடப் பேசலை, நானும் உன்னை வற்புறுத்தலை, அதுக்காக நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு அர்த்தமில்லை, அப்ப நான் எது பேசியிருந்தாலும் அது தப்பாத்தான் போயிருக்கும், அதால அமைதியா இருந்தேன், நீ இங்க எப்பிடியும் வந்துதானே ஆகணும், வந்ததுக்கு அப்புறமா உங்கிட்டப் பேசிக்கலாம்னு அமைதியா இருந்தேன், ஆனா என்னோட முடிவுல நான் உறுதியாத்தான் இருந்தேன்.”
இந்திரா இப்போது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். மூளை வேலை செய்ய மறுத்தது. தேவனோடு பேசாமல் இருப்பதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்பது அவளுக்கும் தெரியும். ஆனால் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. உண்மையைச் சொன்னால் இவன் ஏர்போர்ட் வரை வருவான் என்பதே அவள் எதிர்பாராதது. இப்போது இப்படி வேறு பேசுகிறானே!
“ரொம்ப யோசிக்காதே, வா ஒரு காஃபி குடிக்கலாம்.” என்றவன் அவர்கள் முதல்முதலாகச் சந்தித்த அந்த காஃபி ஷாப்பிற்கு அழைத்துப் போனான்.
“இங்க வெச்சுத்தான் ஒரு பொண்ணு என்னைப் பார்த்துக் கேலியா சிரிச்சா.” அலைபேசியில் நிதிலாவிடம் அவன் பொய் சொல்லிக் கொண்டிருந்த தருணம்! புன்னகையோடு இவளும் இப்போது தலையை ஆட்டினாள்.
“வாழ்க்கை நம்மளைப் புரட்டிப் போடுதுன்னு நாம நொந்துக்கிட்டாலும் சில நேரங்கள்ல அற்புதமாவும் காரியங்களை நடத்திக் குடுக்குது இந்திரா.”
“ம்…”
“உங்க வீட்டோட நிலைமை என்ன? எல்லாம் ஓகேவா? சூர்யா என்ன சொல்றான்?”
“தெரியலை தேவ், போனாத்தான் தெரியவரும்.”
“சமாளிக்க முடியலைன்னா எனக்கு கால் பண்ணு, இங்கேயும் பேசாம உட்கார்ந்தேன்னா வீடு தேடி வருவேன், அது நியாபகமிருக்கட்டும்.” இவ்வளவு பிரச்சனைகள் நடந்தபோதும் இவள் தரப்பிலிருந்து அப்பாவும் சூர்யாவும் மாத்திரமே பேசினார்கள். விக்ரமை நிராகரித்த கோபத்தில் இவளோடு பேசுவதையே அம்மா நிறுத்தியிருந்தார். எப்போதும் அம்மாவைச் சார்ந்தே பேசும் அப்பா இப்போது நடுநிலையாக நின்றது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த ப்ளாக் ஆடியில் இருவரும் போய்க்கொண்டிருந்தார்கள். கோடைகாலம் ஆரம்பித்திருந்தது. ஆனாலும் மெல்லிய குளிர் உடலை உரச இந்திரா ஆழ்ந்து மூச்சுவிட்டாள். இந்தக் காற்றிலிருக்கும் சுத்தத்தை இலங்கையில் எதிர்பார்க்க முடியாது. லண்டனை விட புறநகர் பகுதிகளில் காற்று இன்னும் சுத்தமாக இருக்கும். மரங்கள் ஏற்கனவே துளிர்விட ஆரம்பித்திருந்ததால் எங்கும் பச்சை மயம்.
இவர்கள் வீடு ஏர்போர்ட்டில் இருந்து அத்தனைத் தூரமில்லை. ஆனால் தேவன் சற்று தூரத்தில்தான் வசித்தான். காரை வீட்டிற்கு அருகில் நிறுத்தாமல் அடுத்த வீதியிலேயே நிறுத்தினான். இந்திராவின் அம்மா விஷாகாவிற்கு இவர்கள் உறவில் அத்தனை விருப்பம் இல்லை என்பதை இவனும் அறிவான்.
“வீடு பார்த்துக்கிட்டு இருக்கேன் இந்திரா.”
“யாருக்கு தேவ்?” அவளுக்கு விளங்கவில்லை.
“என்ன கேள்வி இது? நமக்குத்தான், கல்யாணத்துக்கு அப்புறமா நாம வாழுறதுக்கு வீடு வேணாமா?” பெண் இப்போது சட்டென்று மௌனமானாள்.
“என்ன எதுவும் பேசமாட்டேங்கிறே? நான் எது பண்ணினாலும் அதுல நமக்கு நன்மை மட்டுந்தான் இருக்கும், அதோட நான் எடுக்கிற எல்லா முடிவுலயும் எங்கப்பா, சூர்யாவோட தலையீடு இருக்கு, அவங்க ரெண்டு பேருக்கும் தெரியாம நான் எதுவும் பண்ணலை.”
“ம்…” என்றவள் காரை விட்டு இறங்கினாள்.
“எது நடந்தாலும் உங்கூட நான் இருக்கேன் எங்கிறதை மறந்துடாதே.” பெண்ணின் வீட்டில் அவளுக்கு அத்தனை வரவேற்பு இருக்காது என்பதை அவனும் அறிவான். அவள் வீட்டினுள் செல்லும் வரை தொடர்ந்தவன் அதன்பிறகே புறப்பட்டான்.
தன்னிடம் இருந்த சாவியின் மூலமாக வீட்டைத் திறந்தவள் உள்ளே வந்தாள். இவள் வருவது தெரியும் என்பதால் சூர்யாவும் அப்பாவும் வீட்டிலேயே இருந்தார்கள். இவளைப் பார்த்த மாத்திரத்தில் அப்பா வெங்கடேஷின் முகம் மலர்ந்து போனது. மூன்று மாதங்களுக்குப் பிறகு மகளைப் பார்க்கிறார்.
“இந்திரா, வாடா ராஜாத்தி!” எப்போதும் அவள் அப்பாவின் செல்லம். மூத்த குழந்தை, அதுவும் பெண்பிள்ளை. அப்பா அவளைக் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லைதானே!
“அப்பா!” என்றவளும் ஓடிப்போய் அணைத்துக் கொண்டாள். அம்மா விஷாகாவும் அப்போது அங்கேதான் இருந்தார். ஆனால் முகத்தில் உஷ்ணம் தெரிந்தது.
“பயணமெல்லாம் எப்பிடிக்கா இருந்துச்சு?”
“அதெல்லாம் ஓகே, நீ ஏன்டா ஏர்போர்ட் வரலை?” கேட்டவளைக் கண்டனமாகப் பார்த்தான் சூர்யா. நான் விமானநிலையம் செல்கிறேன் என்று தேவன் சொன்னபோது இவனால் மறுக்க முடியவில்லை. அவர்களுக்குத் தனிமைக் கொடுத்து ஒதுங்கிவிட்டான். இந்த முட்டாள் அது புரியாமல் அவனைக் கேள்வி வேறு கேட்கிறது!
“ஏன்? நீ என்ன சின்னக் குழந்தையா? ஏர்போர்ட்டுல இருந்து வீட்டுக்கு வர உனக்குத் தெரியாதா? படிக்கிறதுக்கு நிறைய இருக்குக்கா, இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம் இருக்கு.”
“உனக்கு எப்பதான் அது இல்லை!” அலுத்துக் கொண்டவள் அம்மாவைப் பார்த்தாள். அப்போதும் இவளைக் கவனிக்காமல் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தார் விஷாகா.
“அம்மா…” இவள் அழைத்ததுதான் தாமதம், சட்டென்று எழுந்து மாடிக்குப் போய்விட்டார். எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் வலித்தது. அப்பாவின் முகத்தை மகள் பார்க்க அவர் முகத்தில் புன்னகை அரும்பியது.
“எல்லாம் இருக்கிறதுதான்டா செல்லம், நீ கண்டுக்காதே, காலப்போக்குல எல்லாம் சரியாகிடும், அப்பா எப்பவும் உங்கூட இருப்பேன்.” அந்த வார்த்தைகள் தைரியத்தைக் கொடுத்தாலும் அம்மாவின் நடவடிக்கைகள் அவளுக்குக் கவலையைக் கொடுத்தன.
“போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கா.” அக்காவை அவளது அறைக்கு அனுப்பிய தம்பி சிறிது நேரம் கழித்து அங்கே வந்தான். ஒரு குளியலைப் போட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்திருந்தாள் பெண்.
“ஏர்போர்ட்டுக்கு தேவன் வந்திருந்தாரில்லை?”
“ஆமா, ஆனா நீ ஏன்டா வரலை?”
“இப்போ அதுதான் ரொம்ப முக்கியமா? உங்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னாரா?”
“ம்…” என்றவளின் முகத்தில் கவலைத் தோன்றியது.
“என்ன டல்லாகிட்டே?”
“இதெல்லாம் சரியா வருமா சூர்யா?”
“ஏன் வராது?”
“அவங்கம்மா இந்தளவு இறங்கி நடந்திருக்காங்க, அவங்க இதுக்குச் சம்மதிப்பாங்கன்னு நீ நினைக்கிறியா?”
“அவங்க அம்மா மட்டுமில்லை, நம்ம அம்மாவும் இதையெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க, அதுக்காக என்னப் பண்ணுறது? தேவனை வேணாம்னு சொல்லப் போறியா? முடியுமா உன்னால?”
“முடியாதுதான், ஆனா இப்பிடியெல்லாம் நடந்துக்கிறது தப்பில்லையா?”
“தப்புத்தான், நானும் இல்லேங்கலை, ஆனா ரெண்டு வீட்டையும் நல்லா கவனிச்சுப் பாரு, அந்தம்மா அங்க வந்து உங்கூட சண்டைப் போட்டுச்சே, அவங்களுக்கு உன்னைப் பத்தி ஏதாவது தெரியுமா? தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினாங்களா? பழகிப் பார்த்துட்டு இந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னு சொன்னா அது நியாயம், அதை விட்டுட்டு சண்டைப் போடுறாங்க! நம்ம வீட்டுல மட்டும் என்ன வாழுது?! அதே கதைதான் இங்கேயும், தேவனைப் பத்திச் சொன்னா என்ன ஏதுன்னு விசாரிக்காம நேரா ரிஜெக்ட் பண்ணுவாங்க, இவங்களையெல்லாம் கண்டுக்காதே, டைம் குடு, ஒருகட்டத்துல அவங்களா இறங்கி வருவாங்க.”
“ம்…” என்று தலையை ஆட்டியவள் தேவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுத் தூங்கினாள். நீண்ட இடைவெளிக்குப் பின் வீடு வந்தவளை அந்த மெல்லிய குளிர் அரவணைத்துக் கொண்டது. நிம்மதியான நித்திரையும் அவளைப் பிடித்துக் கொண்டது!






Very nice.