அத்தியாயம் 14
அத்தியாயம் 14
தேவன் மிகவும் இயல்பாக அந்த வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே இருந்த சோஃபாவில் வெங்கடேஷ் அமர்ந்திருக்க அவருக்குப் பக்கத்தில் விஷாகா. இவர்கள் வீட்டிற்கு அவன் வருவது தெரியாது என்பதால் இந்திரா ஆஃபீஸ் கிளம்பியிருந்தாள். ஆனால் சூர்யாவிற்கு எல்லாம் தெரியும்.
“அண்ணா, இந்திராக்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடலாமா? இல்லைன்னா எங்கூடத்தான் சண்டைக்கு வருவா.”
“வேணாம் சூர்யா, ஏற்கனவே தனியா இருந்துட்டு வந்திருக்கா, எங்கம்மா வேற தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்து வெச்சிருக்காங்க, அவளுக்கு இன்னுமின்னும் டென்ஷனை ஏத்த வேணாம்.” தேவன் உறுதியாகச் சொல்லிவிட்டான்.
“சரிண்ணா.” அம்மாவும் அப்பாவும் ஆஃபீஸிலிருந்து வீட்டிற்கு வந்த உடனேயே தேவனுக்குத் தகவல் போய்விட்டது. அவனும் கிளம்பி வந்திருந்தான். நாட்களை வீணாக்க அவன் விரும்பவில்லை. குறித்த தேதியில் பதிவுத் திருமணத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான்.
“என்னைப் பத்தி ஏற்கனவே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், இந்திரா சொல்லலைன்னாலும் சூர்யா கண்டிப்பா சொல்லி இருப்பான்.” மிகவும் பவ்வியமாக பேச்சை ஆரம்பித்தான் தேவன். கையில் ட்ரேயோடு வந்த சூர்யா எல்லோருக்கும் டீ கொடுத்தான். விஷாகா எதுவும் பேசாமல் டீயைப் பருக ஆரம்பித்தார்.
“இன்னும் ரெண்டு வாரத்துல டேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன், அன்னைக்கு நானும் இந்திராவும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கோம்.” இந்தச் செய்தி ஏற்கனவே அப்பா வெங்கடேஷுக்குத் தெரியும். ஆனால் அம்மா விஷாகா ஆடிப்போனார்.
“என்ன தம்பி விளையாடுறீங்களா?! இந்திராவைப் பெத்தவங்க நாங்க இன்னும் உயிரோடதான் இருக்கோம், நீங்க பாட்டுக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்னு சாதாரணமா சொல்றீங்க?!” விஷாகா படபடக்கவும் அவரின் புறங்கையின் மேல் தனது கரத்தை வைத்தார் வெங்கடேஷ்.
“என்னங்க நடக்குது இங்கே? நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு நம்மளையே வந்து இன்வைட் பண்ணுவாங்க, அதை நாம கையைக் கட்டிக்கிட்டுப் பார்த்துக்கிட்டு இருக்கணுமா?”
“அம்மா, இந்த விஷயத்தை உங்கக்கிட்டப் பேசினப்போ நீங்க ஏத்துக்கலை, நீ எம் பொண்ணே இல்லைன்னு சத்தம் போட்டீங்க!”
“நான் எம் பொண்ணுக்கு ஏற்கனவே மாப்பிள்ளைப் பார்த்துக் கல்யாணம் முடிவு பண்ணியிருந்தேன், விக்ரமை இந்த வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் புடிச்சிருந்தது, இந்திரா உட்பட.” விக்ரம் பற்றிய பேச்சை இப்போது பேசுவது அநாகரிகம் என்று புரிந்த சூர்யாவின் முகம் வேதனையைக் காட்டியது. ஆனால் இது தேவனைத் தாக்க அம்மா உபயோகிக்கும் ஆயுதம் என்பதை மகன் அறியவில்லை. ஆனால் தேவன் புரிந்து கொண்டான்.
“அதே விக்ரமைப் பின்னாடி இந்திரா வேணாம்னு சொல்லிட்டாங்க ஆன்ட்டி.”
“சாரி தம்பி, நாங்க எங்க குடும்ப விஷயம் பேசுறோம், நீங்க அமைதியா இருங்க.” சட்டென்று விஷாகா சொல்லவும் அப்பாவும் மகனும் திகைத்துப் போனார்கள்.
“அம்மாடி, வீடு தேடிவந்து பேசுறவங்கக்கிட்ட இப்பிடி நடக்கிறது நல்லா இல்லை!”
“என்ன வெங்கி பேசுறீங்க? அவ நம்ம பொண்ணு, ஏதோ மூணாவது மனுஷனுக்குப் பத்திரிகைக் குடுக்கிற மாதிரி வந்து தகவல் சொல்றாங்க, உங்களுக்குக் கோபம் வரலையா?” விஷாகா அவ்வளவு கோபப்பட்ட போதும் தேவன் அமைதியாகவே அமர்ந்திருந்தான். ஒரு தாயாக அவர் பேசுவது நியாயம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே தேவன் பற்றிய தகவல்கள் அவருக்குத் தெரிந்து போனது. உபயம் விக்ரம். விஷாகாவால் ஆசையாசையாகத் தன் மகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரம்! விக்ரமின் தோற்றம், பணம், பின்புலம் என அனைத்தின் மேலும் விஷாகாவிற்கு ஓர் மயக்கம் இருந்தது. தன் மகளுக்கு மிகவும் பொருத்தமான ஓர் மணமகனைத் தேர்ந்தெடுத்துவிட்ட மகிழ்ச்சியில் மிதந்தார். ஆனால் மகள் அவர் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டாள்.
அத்தோடு நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். திருமணத்தை நிறுத்திய கையோடு மகள் தேவனை அவள் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டது அவர் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. விக்ரம் இலங்கை வரை சென்று தேவனைத் தாக்கியது கூட அவருக்குத் தெரியும். கணவர் எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். இதோ! அந்த நேரமும் வந்துவிட்டது. ஆனால் தேவனின் மன உறுதி பற்றி அவர் அறிந்திருக்க நியாயமில்லை. இவர் எப்படி பால் போட்டாலும் அவன் சிக்ஸர் அடிப்பான் என்று அவருக்குத் தெரியவில்லை. அவனது நோக்கம் இந்திராவின் கரம் பிடிப்பது. அதை அவன் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வான் என்று அவருக்குப் புரியவில்லை!
“இதுல கோபப்பட என்னம்மா இருக்கு? அவங்களுக்குப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.”
“அவங்க முடிவு பண்ணினா சரியா? அப்போ பெத்தவங்கன்னு நாம எதுக்கு இருக்கோம்?”
“அவங்க ஆசையை நிறைவேத்தி வெக்கத்தானே நாம இருக்கோம்?”
“நல்லா இருக்கே உங்கப் பேச்சு? இந்தப் பையன் யாரு, எவரு, நம்ம பொண்ணுக்கு கரெக்டா இருப்பாங்களா, இவங்க குடும்பம் எப்பிடி, இவங்க அம்மா நம்மப் பொண்ணுக்கு ஒரு நல்ல மாமியாரா இருப்பாங்களா, இதெல்லாம் தெரியாம நீங்க சும்மா பொண்ணைத் தூக்கிக் குடுப்பீங்களா?”
“இந்திராக்குப் புடிச்சிருக்கும்மா.”
“அவளுக்கு என்ன தெரியும்? அவ சின்னப் பொண்ணுங்க, தங்கம் போல நாம பார்த்த மாப்பிள்ளையையே அவ வேணாம்னு சொன்ன ஆளு.” விஷாகா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. ஆனால் தேவன் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை.
“ஆன்ட்டி, வர்ற இருபத்தி மூணாம் தேதி நானும் உங்க பொண்ணு இந்திராவும் கல்யாணம் பண்ணுறதா இருக்கோம், எல்லாத்தையும் முறைப்படி பண்ணணும்னுதான் நாங்களும் ஆசைப்பட்டோம், ஆனா அதுக்கு யாரும் ஒத்துழைப்புக் குடுக்கலை, எங்கக் கல்யாணத்தை நாங்களே தீர்மானிக்க வேண்டியதா போச்சு.”
“எப்பிடி ஒத்துழைப்புக் குடுக்க முடியும்? நாங்க பார்த்த மாப்பிள்ளையை வேணாம்னு சொல்லிட்டு எங்களுக்குப் புடிக்காத விஷயத்துல இறங்கினா தலையாட்ட முடியுமா?”
“உங்கப் பொண்ணோட சந்தோஷம் உங்களுக்கு முக்கியமில்லையா ஆன்ட்டி?”
“தம்பி, இத்தனை வருஷம் பெத்து வளர்த்த எங்களை விட உங்களுக்கு இந்திரா மேல அக்கறை வந்திடுச்சா?”
“உங்களை எதிர்த்துப் பேசுறதா நினைக்காதீங்க, இத்தனை வருஷம் பெத்து வளர்த்த உங்கக்கிட்டச் சொல்லாமத்தான் அவ டுபாய்ல இறங்கினா, அதுக்கப்புறமும் நிறைய விஷயம் உங்களுக்குத் தெரியாமத்தான் நடந்துச்சு, ஒருசில விஷயங்கள் உங்க கவனத்துக்கு வந்தப்பவும் நீங்க அமைதியாத்தான் இருந்தீங்க.” விக்ரம் தன்னைத் தாக்கியது இந்தம்மாளுக்குத் தெரியும் என்பது தேவனுக்குத் தெரியும். விஷாகாவைப் பார்த்து அவன் மென்மையாகப் புன்னகைக்க அவர் வேறு பக்கம் பார்த்தார்.
“இப்பிடியெல்லாம் நடந்துக்கணும்னு நாங்களும் ஆசைப்படலை, ஆனா எங்களுக்கு இப்பிடித்தான் விதிச்சிருக்கு, ஆனா ஒன்னு மட்டும் உறுதி ஆன்ட்டி, மிரிஸ்ஸவுல எல்லாத்தையும் வாங்கிட்டு அமைதியா இருந்த மாதிரி லண்டன்ல நான் கையைக் கட்டிக்கிட்டு இருக்க மாட்டேன், போலீஸ், கேஸ்னு சந்தி சிரிச்சிடும், கவனமா இருக்கச் சொல்லுங்க.” என்றவன் அத்தோடு எழுந்துவிட்டான். இதற்கு மேல் இங்கே பேச என்ன இருக்கிறது?!
இவ்வளவு நடந்த பிற்பாடும் இன்னும் விக்ரமைப் பற்றி நாகரிகமே இல்லாமல் தேவனிடம் பேசுபவரை என்ன சொல்வது?! தன் பெண் இவ்வளவு வெறுப்பை அந்த மனிதன் மீது காட்டிய பிறகும் அவன்தான் நாங்கள் பார்த்த மாப்பிள்ளை என்பதும் அவன்தான் எங்கள் பெண்ணுக்குப் பொருத்தமானவன் என்பதும் என்ன வகையான பேச்சு! ஆனால் இதைப்பற்றி ஆராய இப்போது தேவனுக்கு நேரம் இருக்கவில்லை. அன்றைக்கு இரவே அவர்கள் வீட்டிலும் பேச்சை ஆரம்பித்தான்.
“அப்பா, வர்ற இருபத்தி மூணாம் தேதி நானும் இந்திராவும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கோம்.” டைனிங் டேபிளில் மூவரும் அமர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள். இந்தச் செய்தி ஏற்கனவே பரதனுக்குத் தெரியும். அதனால் அதிர்ந்து போகாமல் அமைதியாக இருந்தார்.
“என்ன?! என்னப் பேசுறே நீ?! யாருக்கிட்டக் கேட்டு இதெல்லாம் பண்ணுறே?”
“நான் யாருக்கிட்டக் கேட்கணும்?”
“எங்கக்கிட்டக் கேட்கணும்.” தாரிணியின் குரல் உயர்ந்தது. பரதன் எதுவும் பேசாமல் உணவை அமைதியாக உண்டார்.
“ஏன்? நீங்க எங்கிட்டக் கேட்டுக்கிட்டுத்தான் எல்லாம் பண்ணுறீங்களா?” அன்றைக்கு இந்திரா ஹோட்டலுக்குப் போன பிற்பாடு அந்த வீட்டைக் காலி பண்ணிவிட்டு அங்கிருந்தவர்கள் கொழும்பு வந்துவிட்டார்கள். வந்த வேலை செவ்வனே நிறைவேறி விட தாரிணியும் அடுத்த வாரம் லண்டன் கிளம்பிவிட்டார். வீடு வந்தவரிடம் யாரும் எதுவும் கேட்கவுமில்லை, விசாரிக்கவுமில்லை. அவர்களின் அமைதியை அம்மா தவறாகப் புரிந்து கொண்டார். எல்லாம் அடங்கிவிட்டது என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.
“நான் பெத்த பயல் நீ! உங்கிட்ட எல்லாம் சொல்லணுமா? துரை அவ்வளவு தூரம் வளர்ந்துட்டீங்களோ!”
“நான், நீங்க பெத்த பயல்தானே? அப்ப என்ன கேட்கிறதா இருந்தாலும் எங்கிட்டத்தானே கேட்டிருக்கணும்? அதை விட்டுட்டு எதுக்கு அங்கப் போனீங்க? ஊரான் வீட்டுப் பொண்ணைக் கேள்வி கேட்க நீங்க யாரு? ஒரு பொம்பிளை மாதிரியா நடந்திருக்கீங்க? ஒரு சின்னப் பொண்ணுக்கிட்ட நடந்துக்கிற மாதிரியா நடந்திருக்கீங்க?” இவ்வளவு நாளும் அம்மா மேலிருந்த கோபம் இன்றைக்கு வெடித்தது.
“ஓ… பார்த்தீங்களாங்க உங்கப் பையன் பேசுற பேச்சை? என்னை விட அவனுக்கு யாரோ ஒருத்தி பெருசா போயிட்டாளா?!” தாரிணி இப்போது கணவரைப் பார்க்க அவரும் மனைவியை ஆழ்ந்து ஒரு பார்வைப் பார்த்தார்.
“பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன், இந்த வீட்டுல நடக்கிற எல்லா கூத்தையும் நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன், ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்கு ஆடுறீங்க.”
“நான் ஆடலை, கண்டவளையும் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் ஆட்டம் போட்டது உங்கப் பையன்.”
“இத்தனை வயசுக்கு மேல உன்னைக் கை நீட்டி அடிக்க வேணாம்னு பார்க்கிறேன், இல்லைன்னா இப்போ இங்க நடக்கிறதே வேற, பெத்த புள்ளையை இப்பிடியெல்லாம் பேச உனக்கு வெட்கமா இல்லை? நீ நினைச்சது நடக்கலைன்னா உனக்கு அவ்வளவு ஆங்காரம் வருமா? எங்களுக்குத் தெரியாம இவ்வளவு வேலை பார்த்திருக்கே? ஒரு வார்த்தை எங்கிட்டச் சொல்லணும்னு உனக்குத் தோணலையா? குறிச்ச நாள்ல எம் பையனோட கல்யாணம் நடக்கும், நான் அதை சிறப்பா நடத்தி வெப்பேன், வர்றதா இருந்தா வா, இல்லைன்னா எக்கேடாவது கெட்டுப்போ!” என்றவர் எழுந்து போய்விட்டார்.
கணவரிடமிருந்து இப்படியொரு தாக்குதலை தாரிணி எதிர்பார்க்கவில்லை. வெட்கித்துப் போனார். எப்போதும் பரதன் இப்படிப் பேசுபவர் அல்ல. மனைவியைச் சார்ந்துதான் நடப்பார். அந்தத் தைரியத்தில்தான் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தார் அம்மா. ஆனால் கணவர் தனக்கு மேல் ஆடக்கூடியவர் என்று அவருக்குத் தெரியவில்லை. சில வீடுகளில் அம்மாக்கள் தங்களுக்குக் கிடைக்கும் மரியாதையை, கண்ணியத்தை இப்படித்தான் கெடுத்துக் கொள்கிறார்கள்!
***
அன்றைக்கு அந்த மாதத்தின் இருபத்தி மூன்றாவது நாள். தேவன், இந்திராவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். காலை பதினொன்று பத்திற்குத் திருமணப் பதிவிற்கு நேரம் கொடுத்திருந்தார்கள். சின்னதாக ஒரு ஹால் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். தேவனுக்கு அதிலும் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. ஆனால் அவன் தந்தையும் சரி, இந்திராவின் அப்பாவும் சரி, இருவருமே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“தேவ்… நம்ம வீட்டுல நீ மட்டுந்தான்டா எங்களுக்கு, நாங்க என்ன நாலு புள்ளையா பெத்து வெச்சிருக்கோம், உனக்குத்தானேடா எல்லாத்தையும் பண்ணி நாங்க அழகு பார்க்கணும்?” இது பரதன்.
“மாப்பிள்ளை, எனக்கு இருக்கிறது ஒரேயொரு பொண்ணு, அவளோட கல்யாணத்தைப் பத்தி எனக்கு ஆயிரம் கனவுகள் இருக்கு, கொஞ்சம் யோசிச்சுப் பண்ணுங்க.” இது வெங்கடேஷ். பெரியவர்களின் வார்த்தையைத் தட்ட முடியாமல் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டான்.
பரதனும் வெங்கடேஷும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள். முறையான சந்திப்பாக இல்லாத போதும் தங்கள் பிள்ளைகளின் ஆசைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். பரதன் தன் மனைவியைப் பார்த்த பார்வையில் இப்போதெல்லாம் அதிக வெப்பம் தெரிந்தது. ஆனால் வெங்கடேஷ் அப்படியல்ல. எப்போதும் மனைவியைச் சார்ந்தே பழகியவர் என்பதால் அமைதியாக எல்லாவற்றையும் செய்தார்.
“அப்பா க்ரேட் இல்லைக்கா! இவ்வளவு துரம் இறங்கி உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை.”
“கல்யாணத்துக்கு அம்மா வருவாங்களாடா சூர்யா?”
“வந்தா நல்லது, இல்லைன்னா வீடியோ பார்க்கட்டும், அது அவங்க விருப்பம், நீ எல்லாத்தையும் அள்ளித் தலையில போட்டுக்காத.” அன்றைக்கு தேவன் வீடு தேடி வந்து பேசியபோது அம்மா நடந்துகொண்ட விதத்தில் சூர்யாவிற்கு மிகுந்த கோபம் இருந்தது. நம் வீட்டு வாசலுக்கு வந்திருப்பவன் நாளை நம் பெண்ணை மணந்துகொள்ளப் போகிறவன். நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுதான் உண்மை என்கிற போது இப்படித்தான் நடந்து கொள்வார்களா? அப்பா எப்போதும் இதையெல்லாம் தட்டிக் கேட்கமாட்டார். ஆனால் சூர்யா, அம்மாவை முழுதாக எதிர்த்தான்.
“என்ன மாதிரியான பேச்சும்மா இதெல்லாம்? நீங்க இப்போ இப்பிடிப் பேசினதால எது மாறிடப் போகுதுன்னு நினைக்கிறீங்க? இந்தக் கல்யாணம் நின்னுடும்னு நினைச்சீங்களோ? விக்ரம் பத்தியெல்லாம் மேனர்ஸே இல்லாம பேசுறீங்க! எனக்குப் புரியலை, இந்த வீட்டுல இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, அந்த விக்ரம் இந்த மனுஷனைக் கை நீட்டி அடிச்சிருக்கான், நான் அவசரமா கிளம்பி ஸ்ரீலங்கா போறேன், அப்பெல்லாம் கமுக்கமா இருந்துட்டு அந்த மனுஷன் இங்க வந்தப்போ மட்டும் பேசுறீங்க? நீயும் உன்னோட குடும்பமும் எம் பொண்ணுக்குப் பொருத்தமில்லைன்னு சொன்னதும் வாலைச் சுருட்டிக்கிட்டு ஓடிடுவான்னு நினைச்சீங்களா? நீங்க என்னதான் பேசினாலும் சண்டைப் போட்டாலும் உங்கப் பொண்ணு கழுத்துல அவன் தாலி கட்டத்தான் போறான், அதுல எந்த மாற்றமும் இல்லை, அதால மரியாதையைக் காப்பாத்திக்கோங்க.”
“என்னடா? பயமுறுத்துறியா?”
“ம்ஹூம், உள்ளதைச் சொல்லுறேன், புரிஞ்சு நடந்துக்கோங்க.” சூர்யா பேசிய பிற்பாடு விஷாகா வாயைத் திறக்கவில்லை. என்ன நினைத்தாரோ, அமைதியாகவே இருந்தார். ஜவுளி எடுப்பதற்கென்று அப்பாவும் மகனும் கிளம்பியபோது அவர் கூட வரவில்லை. இந்திரா கொஞ்சம் கவலையாக நின்றபோதும் அதைப் பொருட்படுத்தாது அவளையும் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அவர்களோடு தேவனும் இணைந்து கொண்டான்.
அடர் மெரூன் வண்ணத்தில் தங்க நிற அரச இலைகளை அடுக்கி வைத்தாற் போல ஓர் பட்டுச்சேலை. தங்க நிற பார்டரில் மெரூன் வண்ணத்தில் வைர ஊசி வேலைப்பாடு. அதேபோல ப்ளவுஸும் இருந்தது. காதில் பெரிய குடை ஜிமிக்கி. அந்த ஜிமிக்கியின் கீழே அழகிய முத்து ஒன்று தொங்கியது. கை நிறைய வளையல்கள், கழுத்தித் மரகதம் பதித்த நீண்ட ஆரம். கூந்தலைத் தளர்வாகப் பின்னி அதில் மல்லிகை சூடியிருந்தாள். மகளின் அலங்காரத்திற்கென ஓர் அழகுக்கலை நிபுணரை ஏற்பாடு பண்ணியிருந்தார் வெங்கடேஷ்.
தேவன் கருநிற சூட் அணிந்திருந்தான். சிகையை முழுதாக ஜெல்லில் அடக்கியிருந்தான். கையில் சில்வர் நிற கைக்கடிகாரம். இரு தரப்பிலிருந்தும் மிக முக்கியமான விருந்தினர்கள் என ஐம்பது பேரை அழைத்திருந்தார்கள். அளவான மண்டபத்தில் ஆரம்பரமில்லாமல் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது அந்தத் திருமணம்.
“விஷாகா, நீ பண்ணுறது சரியில்லைம்மா.” வெங்கடேஷ்தான் பேச்சை ஆரம்பித்தார். கணவர் எதைப்பற்றிப் பேசுகிறார் என்று தெரிந்தும் மனைவி பதில் சொல்லவில்லை. மனதில் ஏற்கனவே எதையோ முடிவு செய்துவிட்டவர் போல அமர்ந்திருந்தார்.
“நடக்கப் போறது நம்ம பொண்ணு கல்யாணம், நம்ம வீட்டுல நடக்கிற முதல் விசேஷம், எதுலயுமே கலந்துக்காம இப்பிடி மூணாவது மனுஷி மாதிரி இருந்தா என்னம்மா அர்த்தம்?”
“அந்த எண்ணம் உங்க பொண்ணுக்கு இருக்கா?”
“அவ என்ன தப்புப் பண்ணிட்டான்னு அவளைக் கோபிக்கிறே? நாம ஒரு பையனைப் பார்த்தோம், ஆரம்பத்துல அவளும் எல்லாத்துக்கும் சம்மதிச்சா, அவ மனசுல என்ன எதிர்பார்ப்பு இருந்துச்சோ, அப்புறமா புடிக்கலைன்னு சொன்னா, நாம பார்த்துட்டோங்கிற ஒரே காரணத்துக்காக புடிக்காத ஒரு வாழ்க்கையை அவ வாழணுமா? கல்யாணத்துக்கு அப்புறமா விக்ரமை எனக்குப் புடிக்கலை, நான் விவாகரத்துப் பண்ணப் போறேன்னு வந்து நின்னிருந்தா நீ சந்தோஷப்பட்டிருப்பியா?”
“என்ன வார்த்தைப் பேசுறீங்க? முதல்ல வாயைக் கழுவுங்க.”
“நான் உள்ளதைத்தான் சொல்றேன், இந்திரா புடிவாதக்காரிங்கிறதை நான் உனக்குச் சொல்லத் தேவையில்லை, அந்தக் கல்யாணம் நடந்திருந்தா நான் சொன்னதுதான் நடந்திருக்கும்.” எதற்கும் முன்னிற்கவில்லை என்றாலும் திருமணத்தன்று எல்லோரோடும் ஒருவராகக் கலந்து கொண்டார் விஷாகா. அதில் தேவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. சூர்யாவும் அம்மாவின் மனமாற்றத்தில் மகிழ்ந்து போனான்.
திருமண சடங்குகள் ஆரம்பித்தன. மணமகள் தரப்பின் சம்பிரதாயங்கள், மணமகன் தரப்பின் சம்பிரதாயங்கள் என அனைத்தும் அழகாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. தன்னருகே புதிதாகப் பூத்த ரோஜாவைப் போல நின்றிருந்தவளைப் பார்த்த போது இத்தனை நாளும் பட்ட வேதனைகள் எல்லாம் தேவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. இவளுக்காக எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்றுதான் தோன்றியது.
தனது அலைபேசியில் இருவரையும் ஓர் செல்ஃபி எடுத்தவன் அதை காமாட்சிக்கு அனுப்பி வைத்தான். இவர்களது திருமணப் பேச்சு ஆரம்பமானதும் அதிகம் மகிழ்ந்தது அவர்தான். இன்றைக்கு அவர் இங்கில்லையே என்று தேவனுக்கு மிகுந்த வருத்தமிருந்தது. ஆனால் அவர் இங்கிலாந்து வருவது சாத்தியமில்லை என்பது போக அதற்கான வீசா முயற்சிகளில் இறங்குவதற்கு இவர்களிடம் போதியளவு கால அவகாசம் இருக்கவில்லை.
“உங்கம்மாவைப் பார்த்தியா இந்திரா?” அவளோடு பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தில் தேவன் முதலில் கேட்டது இதைத்தான். பெண் பதில் சொல்லவில்லை. மாறாக அம்மாவை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் அம்மா வந்திருக்கிறார் என்றால் அடுத்தது அவன் அம்மாவைப் பற்றிய பேச்சு வருமா? பரதன் எல்லா நிகழ்விலும் மனப்பூர்வமாகக் கலந்து கொண்டார். ஜவுளி எடுக்கச் சென்றபோது கூட இவளை அழைத்துப் பேசினார்.
“எங்கம்மாவும் வந்திருக்காங்க இந்திரா.” அந்தச் செய்தியில் இந்திராவிற்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளுக்கு இது தெரியாது. எப்போது வந்தார்?! இன்றைக்கு என்ன ஏடாகூடம் பண்ண வந்திருக்கிறார்?! பெண்ணுக்கு மூச்சடைத்தது.
“ஏய்! எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகிறே? அவங்க இன்னைக்கு வருவாங்கன்னு நாங்களே எதிர்பார்க்கலை, வந்திருக்காங்கன்னு தகவல் சொன்னேன், அவ்வளவுதான், அதுக்குப் போய் இவ்வளவு பதட்டப்படுறே?” அதற்கு மேல் அவளுக்கு நிம்மதி தொலைந்து போனது. அன்றைக்கு தாரிணி பேசிய வார்த்தைகளும் அவர் பார்த்த பார்வையுமே நியாபகம் வந்தன.
“விடும்மா பார்த்துக்கலாம்.” அவள் விரல்களை இலேசாக அழுத்திக் கொடுத்தவன் அவள் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான். மலர் தூவி அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். திருமணத்தை முறைப்படி பதிவும் செய்து கொண்டார்கள். சடங்குகள் அனைத்தும் நிறைவுபெற விருந்தும் பரிமாறப்பட்டது. தாரிணியாகட்டும் இல்லாவிட்டால் விஷாகாவாகட்டும், இருவருமே எந்தச் சடங்கிலும் முன்னிற்கவில்லை. தாலி கட்டும் போது விஷாகாவின் முகத்தில் ஓர் பூரிப்பு தெரிந்தது. ஆனால் அந்த உணர்ச்சியைக் கூட தாரிணி காட்டவில்லை!
விருந்து பரிமாற ஆரம்பித்த உடனேயே மணமக்களும் உணவுண்ண ஆயத்தமானார்கள். அப்போது யாரும் எதிர்பார்க்காத ஓர் விருந்தாளி உள்ளே நுழைந்தார். அது வேறு யாருமல்ல, நிதிலாதான்! தேவன் கொஞ்சம் திகைத்துத்தான் போனான். ஏனென்றால் பெண் தனியாக வரவில்லை. கூடவே தன் துணையையும் அழைத்து வந்திருந்தது!
“தேவ்.” எப்போதும் போல இனிமையான, அமைதியான அதே குரல். ஆனால் அதில் இப்போது ஓர் உற்சாகம் கலந்திருந்தது.
“எப்பிடியிருக்கீங்க இந்திரா?” நெடுங்காலம் பழகியது போல இயல்பான பேச்சு! நிதிலாவிற்கு இப்படியெல்லாம் பேச வருமா என்று தேவன் இமைக்க மறந்து பார்த்திருந்தான்.
“நல்லா இருக்கேன்… நீங்க?” இந்திராவிற்கு வார்த்தைகள் அவ்வளவு சுலபத்தில் வரவில்லை. ஒரு முறை இந்தப் பெண்ணைப் புகைப்படத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால் அந்த ஒரு சந்தர்ப்பத்திலேயே நெஞ்சில் பதிந்து போன முகத்தைச் சட்டென்று இனம்கண்டு கொண்டாள். பக்கத்தில் நின்றிருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள். முதலில் திகைப்பைக் காட்டிய அவன் முகம் இப்போது மலர்ந்து சிரித்தது.
“நான் நல்லா இருக்கேன், இவங்க ராஜேஷ், என்னோட ஹஸ்பன்ட்.” இயல்பாக அறிமுகம் செய்து வைத்தாள். அந்த மனிதருக்கும் நடந்தது எல்லாம் தெரியும் போலும். தேவனை இறுக அணைத்துக் கொண்டார்.
“நாங்க உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம்.” என்றார் நெகிழ்ந்து போய்.
“ஐயையோ! அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை.”
“கல்யாணத்துக்கு நீங்க அழைப்பீங்கன்னு எதிர்பார்த்தோம், பரவாயில்லை, உங்கப்பா எங்களை ஞாபகம் வெச்சுக் கூப்பிட்டாங்க.” அப்போதுதான் இவர்கள் வருகைக்கான சூத்திரதாரி யாரென்று தேவனுக்குப் புரிந்தது. அப்பாவைத் திருப்பிப் பார்த்தான். மகனையே பார்த்திருந்த பரதனும் சின்னதாகப் புன்னகைத்தார்.
“சாரி தேவ், என்னால தேவையில்லாம உங்க லைஃப்ல நிறையப் பிரச்சினைகள் வந்திடுச்சு, அங்கிள் எல்லாம் சொன்னாங்க, ஆன்ட்டி…” என்றவள் கண்களால் தாரிணியைத் தேடினாள். அந்த ஹாலின் ஓரமாகப் போடப்பட்டிருந்த ஓர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இவளையே வெறித்தபடி பார்த்திருந்தார்.
“ஆன்ட்டி…” நிதிலாவின் வாய் தந்தியடித்தது. சரியாக அப்போது தாரிணி அவர்களை நோக்கி நடந்து வர இந்திரா தேவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள். மீண்டும் ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று புரிந்து போனது. பரதனும் அவசரமாக மணமக்களிடம் வந்தார். மனைவியின் மனநிலை என்னவென்று அவருக்குத் துல்லியமாகத் தெரிந்தது..
“வாங்கம்மா, வாங்க வாங்க, ஏது இவ்வளவு தூரம்? எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” சத்தம் போடவில்லை. ஆனால் அத்தனை எள்ளல், ஏளனம் அந்தக் குரலில். தாரிணி ஒரு போருக்கு ஆயத்தமாக நின்றிருந்தார்.
“ஆன்ட்டி, உங்களை என்னால புரிஞ்சுக்க முடியுது, தப்பெல்லாம் எம்மேலதான், மன்னிச்சிடுங்க.”
“ஓ… நிதிலாக்கு இவ்வளவு பேச வருமா? எனக்கு அது முன்னாடி தெரியாம போச்சே! நான் ஒன்னுக்குமத்துப் போய் எம் புள்ளையைத்தானே திட்டினேன், என்ன சொன்னீங்கம்மா? நீங்க என்னைப் புரிஞ்சுக்கிறீங்களா? ரொம்ப சந்தோஷம்! அதைக் கொஞ்சம் உங்க அம்மாக்கிட்டயும் சொல்லுங்க, என்னமோ நானும் எம் புள்ளையும் உங்க வாழ்க்கையைக் கெடுத்துட்ட மாதிரி ஊர் முழுக்கப் பேசிக்கிட்டுத் திரிஞ்சாங்க.” காரமான வார்த்தைகள்தான். ஆனால் நிதிலா மறுத்து எதுவும் பேசவில்லை. இந்த இடத்தில் தாரிணி பேசுவது நியாயம் என்பதால் அமைதி காத்தாள்.
“தாரிணி, போதும்மா, அந்தப் பொண்ணு நம்ம பையன் கல்யாணத்துக்கு வந்திருக்கு.” இது பரதன்.
“ஆமாங்க, வந்திருக்கு, அது எனக்கும் நல்லா புரியுது, தீராத பழியை எம் பையன் மேல போட்டுட்டு அது பாட்டுக்கு ஜாலியா புருஷன் கூட வந்திருக்கு, ஆனா நான்… எம் பையன் கல்யாணத்துல மூணாவது மனுஷி மாதிரி ஒரு மூலையில உட்கார்ந்திருக்கேன், இதுக்கெல்லாம் யாரு காரணம்?” தாரிணியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“அம்மா…” தேவனுக்கு இப்போது அம்மாவைப் பார்த்தபோது பாவமாக இருந்தது. யார் மேலோ இருந்த கோபத்தை யார் மீதோ காட்டிவிட்டு இப்போது இப்படி நின்றிருக்கிறார்.
“இல்லை தேவ், உன்னை நான் தப்பா எதுவும் சொல்லலை, உனக்கும் இந்த அம்மாவை விட உன்னோட ஆசைதான் பெருசா போச்சு, தப்பெல்லாம் எம்மேலதான், நாந்தான் எதையும் புரிஞ்சுக்க முடியாம நடந்துக்கிட்டேன்.” என்றவர் அத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதற்கு மேல் என்ன பேசுவதென்று யாருக்கும் புரியவில்லை. சூழ்நிலை மிகவும் கனமாக இருந்தது.






Very nice