அத்தியாயம் 15
அத்தியாயம் 15
தாரிணி வெளிநடப்புச் செய்துவிட அந்த இடத்தில் கனமான அமைதி நிலவியது. என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்று தெரியாமல் அத்தனைப் பேரும் அமைதியாக நின்றிருந்தார்கள். விஷாகாவிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் அமைதியாகத்தான் இருந்தார். மாப்பிள்ளையைப் பெற்றவர் என்பதாலோ என்னவோ தாரிணியின் கை கொஞ்சம் ஓங்கித்தான் இருந்தது. காலம் மாறிப்போனதை அவர் புரிந்துகொள்ளவே இல்லை.
“நிதிலா, வாங்க சாப்பிடலாம்.” தேவன் அழைக்கவும் பெண் புன்னகைத்தாள்.
“இல்லை தேவ், நாங்க கிளம்பணும், உங்களையும் இந்திராவையும் பார்க்கணும்னு தோணுச்சு, அதான் வந்தோம்.” விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் என்று தெரியும். ஆனால் தாரிணி இந்தளவிற்கு இறங்குவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
தனது ஒற்றை மகனின் திருமணத்தைப் பற்றி அந்தத் தாயின் மனதில் ஆயிரம் கனவுகள் இருந்தன. அவை அனைத்தும் நிதிலா என்ற பெண்ணால் தொலைந்து போன கவலை அவருக்கு. தான் முன்னின்று நடத்த வேண்டிய திருமணத்தில் யாரோ போல ஓர் ஒதுக்குப்புறமாக நின்றிருந்ததன் முழுக்காரணம் நிதிலாதான் என்பதால் அவரது கோபம் பெண்ணை நோக்கிக் கட்டுக்கடங்காமல் பாய்ந்திருந்தது.
“இவ்வளவு தூரம் வந்துட்டு சாப்பிடாம போகக் கூடாது, வாம்மா, வாங்க ராஜேஷ்.” பரதன் இப்போது அழைக்கவும் இளையவர்களால் மறுக்க முடியவில்லை. அவரோடு கூடவே நடந்தார்கள்.
“அப்பா இவங்களை இன்வைட் பண்ணினது எனக்குத் தெரியாது இந்திரா.” தனிமைக் கிடைத்தபோது மனைவிக்கு விளக்கம் கொடுத்தான் தேவன். பெண்ணின் பார்வை கணவனை ஒரு பயத்தோடு தீண்டியது.
“என்னம்மா?” அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தலையை இடம் வலமாக ஆட்டினாள். மனதில் இருப்பதை வெளிப்படையாக அவனிடம் சொல்ல முடியவில்லை. சற்று முன்பு நடந்தவை அனைத்தும் அவளைப் புரட்டிப் போட்டிருந்தன.
தேவனுடனான இந்தத் திருமணத்தை அவள் எவ்வளவு தூரம் எதிர்பார்த்தாளோ அதேயளவு பயப்பட்டாள் என்பதுதான் உண்மை. அவன் வீட்டில் மட்டுமல்ல, அவளது வீட்டிலும் அம்மாவின் எதிர்ப்பு இருந்தது. ஆனால் விஷாகா இவள் எதிர்பார்த்த அளவு கோபத்தைக் காட்டவில்லை. அந்த வகையில் இவளுக்கு நிம்மதிதான். ஆனால் தாரிணி?!
அந்த அம்மாள் தங்கள் திருமணத்திற்கு வருவார் என்று இந்திரா மாத்திரமல்ல, யாருமே எதிர்பார்க்கவில்லை. மனதில் என்ன நினைத்தாரோ! எல்லோர் கணக்கையும் பொய்யாக்கிவிட்டு வந்திருந்தார். மனமிரங்கி வந்தபோதும் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தூரத்து உறவினர் போல பற்றற்று அமர்ந்திருந்தார். தேவன் சொல்லும்வரை அவர் வந்திருப்பது இவளுக்குத் தெரியாது. தெரிந்த பிறகு நெருப்பில் நிற்பது போல உணர்ந்தாள். தாரிணி என்ற அலையில் அவள் புரண்டு கொண்டிருக்கும் போது நிதிலா என்னும் இன்னுமொரு அலை தாக்கினால் அவள் என்னதான் செய்வாள்?!
நிதிலா என்ற பெண்ணின் புகைப்படத்தை முதன்முதலாக தேவன் காட்டியபோது இந்திரா எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. அந்த உணர்வைப் பொறாமை என்று சொல்ல முடியாது. நெஞ்சுக்குள் ஓர் வெறுமை படர்ந்தது. அவன் அன்பு இன்னொரு பெண்ணுக்குத்தான் என்று புரிந்தபோது அவனைவிட்டுத் தூரமாக ஓடிப்போனாள். ஆனாலும் உள்ளுக்குள் வலித்தது. பிற்பாடு அதே தேவன் தன்னிடம் காதல் சொன்னபோது அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இருக்கவில்லை.
அதே நிதிலாவை இன்று நேரடியாகப் பார்த்ததுமே பழைய நினைவுகள் அவளைப் பிடித்துக் கொண்டன. ஒரு காலத்தில் தனது கணவனின் அன்பு முழுதாக இந்தப் பெண்ணுக்கு உரித்தாக இருந்தது என்ற எண்ணம் அவளை வாட்டியது. இன்று தேவன் என்ற மனிதன் முழுதாக அவளுக்குத்தான் சொந்தம் என்றாலும் என்றோ ஒரு பொழுது இந்தப் பெண்ணின் மேல் அவன் ஆசை வைத்திருந்தான் என்ற எண்ணமே தொண்டைக்குள் கசந்தது. ஆனாலும் வாசல் தேடிவந்து வாழ்த்துபவளை என்ன செய்வது? மறுக்கவும் முடியாது, முகம் திருப்பவும் இயலாது.
“இந்திரா…” விருந்தினர்கள் இவர்களை நோக்கி வரவும் தேவன் மனைவியை அழைத்தான். பலத்த யோசனைகளோடு இருந்தவள் சுதாரித்துக் கொண்டாள். விருந்து முடிந்த கையோடு பலரும் விடைபெற்றுக் கொண்டார்கள். நிதிலா தம்பதியும் இவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியது.
“இந்திரா, ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்களுக்கு நாங்க ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம்.” மீண்டும் அதே வார்த்தைகளைச் சொன்னபோது உணர்ச்சிவசப்பட்டுப் பெண் கண்கலங்கியது.
“சந்தோஷமா இருக்குன்னு சொல்லிட்டு எதுக்காகக் கண் கலங்கணும்? எங்களைப் போல நீங்களும் ச்நதோஷமா இருங்க.”
“கண்டிப்பா.” என்றவள் இந்திராவின் கரத்தில் ஒரு மோதிரத்தை அணிவித்தாள். அவர்கள் இருவரும் விடைபெற்றுச் செல்ல புயல் அடித்து ஓய்ந்தது போல உணர்ந்தாள் மணப்பெண்.
மண்டபத்தைக் காலி பண்ணிவிட்டு இவர்கள் கிளம்பியபோது மணி மாலை ஆறு தாண்டியிருந்தது. அந்த ப்ளாக் ஆடி லண்டனை விட்டு சற்றே அப்பால் போய்க்கொண்டிருந்தது.
‘ஐல்ஸ்பெரி’ பச்சைப் பசேலென்ற அழகிய ஊர். லண்டனிலிருந்து ஒன்றரை மணிநேர பிரயாணத்தில் இருக்கிறது. புகையிரதத்தில் பயணம் செய்தால் இன்னும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். கார்டன் டவுன் என்று செல்லமாக எல்லோரும் அந்த ஊரை அழைப்பார்கள். அங்கேதான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று தேவன் முடிவு செய்திருந்தான்.
இதுவரையான இந்திராவின் வாழ்க்கை லண்டன் பரபரப்புடன்தான் கழிந்திருந்தது. எப்போதாவது இதுபோன்ற புறநகர் பகுதிகளுக்குப் பிரயாணம் செய்வாள். அவர்களது பரபரப்பான வாழ்க்கை முறை உல்லாசப் பயணங்களுக்கு இடம் கொடுத்ததில்லை. படிப்பு, பிற்பாடு வேலை. ஆனால் திருமணம் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
“வீடு புடிச்சிருக்கா?” அந்த ப்ளாக் ஆடியை நிறுத்திவிட்டுக் கேட்டான் தேவன். காரை விட்டு இறங்கியவள் இன்னும் மணப்பெண் அலங்காரத்தில்தான் இருந்தாள். ஒற்றைப் படுக்கையறை வீடு. ஆனாலும் வீட்டைச் சுற்றித் தோட்டம் இருந்தது. சுற்றிவர புதர்கள் செறிந்த வேலி இருந்தது. லண்டனில் இதுபோன்ற வீடுகளை அடுக்குமாடிகளில்தான் காணலாம்.
கண்களை விரித்து அந்த இடத்தின் அழகில் மயங்கி நின்றிருந்தவளின் கரத்தில் வீட்டின் சாவியைத் திணித்தான் கணவன். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தவள் புன்னகைத்துவிட்டு அவர்கள் வாழ்க்கையின் கதவைத் திறந்து வைத்தாள். சின்னதாக ஒரு ஹால், அதோடு சேர்ந்தாற்போல சமையலறை. மாடியில் படுக்கையறையும் பாத்ரூமும் இருக்க வேண்டும். தளவாடங்கள் அனைத்தும் கனகச்சிதமாகப் போடப்பட்டிருந்தன.
“எப்பிடியிருக்கு?”
“ரொம்ப நல்லா இருக்கு, இதெல்லாம் எப்போ பண்ணினீங்க?” அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இத்தனை சீக்கிரமாக திருமணத்தை ஏற்பாடு செய்து, வீடு வாடகைக்கு எடுத்து… இவையெல்லாம் வெளிநாடுகளில் அத்தனைச் சுலபம் அல்லவே!
“அதான் மேடம் எங்கூடப் பேசவே இல்லையே! வேற என்ன வேலை இருந்துச்சு, ஒன்னுமில்லை, அந்த நேரத்துல இதெல்லாம் பண்ணி முடிச்சேன், அப்பதானே நீங்க இங்க வந்ததும் உங்களைச் சட்டுன்னு என்னோட கைக்குள்ள கொண்டு வர முடியும்.” என்றவன் சொன்னதை இப்போது செய்தான்.
“எங்கிட்ட எதுவுமே சொல்லலை தேவ் நீங்க!” அவன் கைக்குள் அடங்கி நின்று குறைப்பட்டாள் பெண். மணப்பெண் அலங்காரத்தில் இலேசாக அலுங்கிப் போயிருந்தாள்.
“என்ன சொல்லணும் என்னோட தேவதைக்கிட்ட?” அவன் குரல் வேறாகி இருந்தது. அந்தக் குரல் செய்த மாயத்தில் அவன் முகத்தையே பார்த்திருந்தாள் பெண். கண்களை இமைக்க முடியவில்லை. அவனுமே இன்னும் முழு சூட்டில்தான் இருந்தான். அணிந்திருந்த ஷர்ட்டின் மேல் இரு பட்டன்களைத் தளர்த்தி இருந்தான். இயல்பாக அவள் கரம் உயர்ந்து அவனது இடது கழுத்து எலும்பை ஆராய்ந்தது.
“காயம் ஆறிடுச்சு.” இது தேவன். அன்றைக்கு விக்ரம் அவனை மூர்க்கத்தனமாகத் தாக்கிய போது ஏற்பட்ட காயம். அதைப்பார்த்து அவளும் அழுதிருந்தாள்.
“எல்லாம் என்னால.” பெண் மூக்கை உறிஞ்சினாள்.
“ஆமா, உன்னால… இந்த நொடி இவ்வளவு சந்தோஷமா இருக்கிறதும் உன்னாலதான்.” என்றவன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான். அவன் நோக்கம் புரிந்தவள் மெதுவாக முகம் திருப்பினாள்.
“ஹேய்… இந்திரா…” அந்தக் குரல் காட்டிய ஏமாற்றத்தில் அவள் புன்னகைத்தாள். தன்னை நோக்கித் திரும்பியிருந்த கூந்தல் காட்டில் மல்லிகை வாசம் பிடித்தான். கழுத்தோரத்தில் முத்தம் வைத்தான்.
“தேவ்…”
“தேவ்க்கு என்ன வெச்சிருக்கீங்க?”
“இன்னும் நீங்க எனக்கு வீட்டைச் சுத்திக் காமிக்கலை.”
“பார்க்கலாம், ஆறுதலா பார்க்கலாம்.” என்றவன் அவள் உதடுகளுக்குள் மூழ்கினான். மயங்கச் சொல்லிய மனதை வெகுவாகக் கட்டுப்படுத்தினாள் பெண். முற்றுமுழுதான தீண்டலுக்கு அனுமதி கிடைத்துவிட்ட தைரியத்தில் அவன் கரங்கள் கோடு தாண்டின. சின்னதாய் அதிர்ந்தவள் மெதுவாக விலகினாள்.
“ஏன்டா…”
“மேல… மேல போய் பார்க்கலாம் தேவ்.” அவன் முகத்தைப் பார்ப்பதற்கே அவளுக்குச் சங்கடமாக இருந்தது. அதற்கு மேலும் அங்கே நிற்காமல் படிகளில் ஏறினாள். ஏனென்று தெரியாமல் அந்த நொடி நிதிலாவின் முகம் அவள் மனக்கண்ணில் தோன்றியது. இன்றைக்கு அவள் நடந்துகொண்ட விதம் இவளைப் பாதித்திருந்தது.
“அவ்வளவு உரிமையா தேவ்ன்னு கூப்பிடுறாங்க?” அதற்கு மேல் அவளால் மனதிலிருப்பதை மறைக்க முடியவில்லை. கொட்டிவிட்டாள்.
“யாரும்மா?”
“அவங்கதான்… நிதிலா.” மேலே சுற்றிக்காட்ட அந்த வீட்டில் பெரிதாக ஒன்றுமிருக்கவில்லை. ஓர் படுக்கையறை, அடுத்துக் குளியலறை. ஆனால் மனைவி கேட்ட கேள்வியில் தேவன் சட்டென்று நிதானித்தான்.
“நிதிலா என்னை எப்பவுமே அப்பிடித்தானேடா கூப்பிடுவா!”
“முன்னாடி கூப்பிட்டாங்க ஓகே, அதுக்காக இப்பவும் அப்பிடிக் கூப்பிட முடியாதில்லை.”
“ஓ… வேற எப்பிடிக் கூப்பிடுறது?”
“ஏன்? தேவன்னு முழுசா உங்க பெயரைக் கூப்பிடுறதுதானே!”
“நியாயந்தான்.” என்றவனுக்குச் சிரிப்பு வந்தது. உனக்கு முன்பே அவளுக்கு என்னைத் தெரியும். அவள் எப்போதுமே என்னை அப்படித்தான் அழைப்பாள் என்று இவளிடம் எப்படிச் சொல்ல முடியும்?!
“அதான் எதுவுமே வேணாம்னு போயிட்டாங்களே, இப்ப எதுக்குத் திரும்ப வர்றாங்க?”
“இந்திரா, நான் நிதிலாவை நம்ம கல்யாணத்துக்குக் கூப்பிடலை, அப்பாதான் கூப்பிட்டிருக்காங்க, இல்லைன்னா அவங்க வந்திருக்க மாட்டாங்க.”
“கூப்பிட்டா உடனே வந்திர்றதா? சம்பிரதாயத்துக்கு எல்லாரையும் கூப்பிடுறதுதான், அதுக்காக…” மிகவும் தீவிரமாகப் பேசியபடி இருந்தவளைத் தன்னருகே இழுத்தான் கணவன். பேச்சில் மும்முரமாக இருந்தவளும் இவன் செய்கையை எதிர்பார்க்கவில்லை.
“நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?”
“அப்பிடியென்ன தப்பாப் பேசிட்டேன் நான்? என்னைப் பாரு என் அழகைப் பாருன்னு பார்லர் வரைக்கும் போய் ரெடியாகிட்டு வந்திருக்காங்க.” மனைவியின் பேச்சில் தேவன் திகைத்துப் போனான். இந்திராக்கு இப்படியெல்லாம் பேச வருமா? அவள் மனதில் இருப்பதெல்லாம் வெளியே வரட்டும் என்று அமைதிகாத்தான்.
“வந்ததே தப்பு, இதுல எந்தத் தைரியத்துல எங்கிட்ட வந்து பேசினாங்க? கிஃப்ட் கொண்டு வர்றாங்க, யாருக்கு வேணும் இவங்க கிஃப்ட்? உங்கம்மா இருப்பாங்கன்னு தெரியுமில்லை? தெரிஞ்சுக்கிட்டும் வந்திருக்காங்களா? இல்லை நம்ம கல்யாணத்துக்கு அவங்க வரமாட்டாங்கன்னு இவங்களே முடிவு பண்ணிட்டாங்களா?” பேசப்பேச மனைவியின் முகத்தில் தெறிக்கும் பாவங்களைப் பாரத்தபடி இருந்தான் தேவன்.
“என்ன சொல்ல வந்தாங்க? இல்லை நான் தெரியாம கேட்கிறேன், எதை ப்ரூஃப் பண்ண வந்தாங்க? உங்களை அவங்கதான் எனக்கு விட்டுக்கொடுத்தாங்கன்னு காட்ட வந்தாங்களா? அவங்க தூரப் போகலைன்னா இந்த தேவன் எனக்கில்லைன்னு சொல்ல வந்தாங்களா?” தேவனுக்குத் தலை கிறுகிறுத்தது. ஒரு மனிதனின் வருகையில் இத்தனை அர்த்தம் கற்பிக்க முடியும் என்று அவனுக்கு இன்றைக்குத்தான் தெரியும்!
“இந்திரா…” மனைவியை அவன் இன்னும் தன்னருகே நெருக்கமாகக் கொண்டு வந்தான். தன் கவலைகளோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் அந்த நெருக்கத்தைக் கவனிக்கவில்லை.
“நீங்களுந்தான் பல்லைக் காட்டிக்கிட்டுப் பேசினீங்க, அவங்களால நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்க, அதெல்லாம் மறந்து போச்சா? ஒரு பொண்ணு வந்து நின்னு பேசினா உங்களுக்கு நடந்தது எல்லாமே மறந்து போகுமா?” கடுகடுத்த மனைவியைப் பார்த்த போது சிரிப்பு வந்தது. ஆனால் இப்போது சிரித்து வைத்தால் அதற்கும் கோபப்படுவாள் என்று அமைதி காத்தான். கணவன் என்று வந்துவிட்டால் பெண்களுக்கு இயல்பாகவே இந்தப் பொறாமைக் குணம் வந்துவிடுமா?!
“சாரிடா, நான் அப்பிடி நினைக்கலை, நம்ம ஃபங்ஷனுக்கு மெனக்கெட்டு வந்திருக்காங்க, அவங்களை நல்லா கவனிச்சு அனுப்பணும்னுதான் நினைச்சேன், அதான் கூடவே அவங்க ஹஸ்பன்ட்டும் வந்திருந்தாரே, அப்புறம் என்ன?”
“ம்… ம்…” என்றவள் அப்போதுதான் அறையில் கிடந்த கட்டிலைக் கவனித்தாள். மெத்தை முழுவதும் மல்லிகை, ரோஜா இதழ்கள் என தூவப்பட்டிருந்தன. பெண்ணின் பார்வையை அவனும் கவனித்தான். பார்வையும் பார்வையோடு சேர்ந்த நாணமும் அவனுக்குள் ஆசையைத் தோற்றுவித்தன.
“என்னாச்சு? இவ்வளவு நேரமும் படபடன்னு பேசினீங்க, இப்போ சட்டுன்னு அமைதியாகிட்டீங்க?!”
“கீழே போகலாம்… தேவ்…”
“கீழே இருந்தா மேல, மேல இருந்தா கீழே… என்ன கண்ணாமூச்சி காட்டுறீங்களா?”
“இல்லை… ஏதாவது குடிக்கலாம்… தாகமா இரு…” அவன் கண்களைப் பார்த்த பெண்ணின் பேச்சு பாதியிலேயே நின்று போனது. ஏனெனில் அவன் கண்களில் வேறு தாகம் தெரிந்தது. மனைவியை அசையவிடாமல் செய்தவன் அவன் தாகம் தீர்க்க ஆரம்பித்திருந்தான். அவள் இதழ் தேன் சுவைக்க ஆரம்பித்திருந்தான்.
நீண்ட முத்தம்தான்! அவள் துவண்டு போக ஆரம்பிக்கவும் அவள் இடையை இதமாகப் பற்றிக்கொண்டவன் இதழ்களுக்குக் கொஞ்சம் விடுதலைக் கொடுத்தான். ஆனால் இதுவரைத் தயங்கித் தயங்கி நின்றிருந்தவள் அந்த விடுதலையை விரும்பவில்லைப் போலும். அவன் பிடரியை வாகாகப் பற்றியவள் அவனோடு இன்னும் இழைய ஆரம்பித்திருந்தாள்.
தன்னை மறந்த அவள் செய்கையில் அவன் இதழ்கள் சிரித்தன. அப்போதுதான் தான் செய்யும் காரியத்தை உணர்ந்தவள் அவசரமாக விலகினாள். முகம் வெட்கிச் சிவந்து போனது. கண்களில் இலேசாகக் கண்ணீர் துளிர்த்தது. அங்கிருந்து வேகமாக வெளியேறப் போனவளை தேவனின் கரம் தடுத்தது.
“இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா ஓடுறீங்க?” அப்போதும் அங்கிருந்து நகர்வதையே குறியாகக் கொண்டவளைத் தடுத்து நிறுத்தினான் கணவன். அவள் வெட்கம் புரிந்தது.
“இதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு இன்னும் கொஞ்ச நேரம் போனா தெரியும்.” என்றவன் அவளோடு இணைய ஆரம்பித்திருந்தான்.
“தேவ்…”
“இதெல்லாம் மிரிஸ்ஸ ஹோட்டல்ல வெச்சுப் பண்ணியிருக்க வேண்டியது, நமக்குத்தான் அப்ப பர்மிஷன் கிடைக்கலையே!” என்றவன் அன்றைக்கு அவனுக்குக் கிடைத்த அனுமதியின், உரிமையின் அளவை நிரூபிக்க ஆரம்பித்திருந்தான். இந்திராவால் இப்போது எதையும் மறுக்க முடியவில்லை. நாசியை முழுதாக நிரப்பிய அவன் வாசத்தை உள்ளம் வெகுவாக விரும்பியபோது அவளால் எப்படி மறுக்க முடியும்?! அந்த இனிமையான நிமிடங்களை இருவரும் ரசிக்கத் தொடங்கினார்கள். நிமிடங்கள் நீண்டுகொண்டே போயின!
காலையில் இந்திரா கண்விழித்த போது சூரியன் தலைகாட்ட ஆரம்பித்திருந்தான். இரவு எப்போது உறங்கினார்கள் என்று தெரியாது. பசித்தபோது உண்டார்கள். பேசினார்கள், சிரித்து மகிழ்ந்தார்கள். உறவில் திளைத்தார்கள். இமைக்க மறந்து விழித்திருந்தவர்கள் அணைத்தபடியே உறங்கிப் போயிருந்தார்கள். சரியாக அப்போது தேவனின் அலைபேசி ஒலி எழுப்பியது.
ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட ஏதாவது முக்கிய விடயங்கள் என்றால் மாத்திரம்தான் அலைபேசி அப்படி ஒலி எழுப்பும். கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்தவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான். மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அவசரமாக எழுந்து கட்டலில் சாய்ந்து உட்கார்ந்தபடி அதை ஆராய்ந்தான்.
“ஓ மை காட்!” அவன் புலம்பலில் இதுவரை அவனையே கவனித்திருந்தவள்,
“என்னாச்சு தேவ்?” என்றாள் பதறியபடி.
“ஹேய்! ஒன்னுமில்லைடா.” அப்போதுதான் அருகிலிருந்த மனைவி அவன் கவனத்திற்கு வந்தாள்.
“ஃபோனை பார்த்ததும் அப்செட் ஆகிட்டீங்க, என்னாச்சு?” மனைவிக்குப் பதில் சொல்லாமல் அலைபேசியை அவளிடமே நீட்டினான். ஆடையைச் சரி செய்தவள் அதை வாங்கிப் பார்த்தாள். அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. வேலை விஷயமாக மூன்று நாட்கள் அவன் அமெரிக்கா போக வேண்டும். இது அடிக்கடி நடப்பதுதான். இதற்கு முன்பு அவ்வளவு பெரிதாகத் தெரியாத ஒன்று இன்று புது மாப்பிள்ளையைக் கவலைக்குள்ளாக்கியது.
“கட்டாயம் போகணுமா?”
“ம்…” மனைவியின் கன்னத்தை வருடியவன் அவள் கையிலிருந்த அலைபேசியை வாங்கி அப்பால் போட்டான். புதிதாக முளைத்த உறவு, அது கொடுத்த இன்பம் என எதையும் அனுபவிக்க விடாமல் காலை வேளையிலேயே இதென்ன சோதனை?! அவள் முகத்தில் தெரிந்த கவலையில் அவனது மனதிலும் பாரம் ஏறியது. ஆனால் அதை அவளிடம் காட்டாமல் இழுத்து அணைத்துக் கொண்டான்.
“நாம ரெண்டு பேரும் திரும்ப எப்போ மிரிஸ்ஸ போறோம்?”
“எதுக்கு தேவ்?”
“ஹேய்! என்ன டார்லிங் இப்பிடி கேட்கிறீங்க? நம்ம ஹனிமூன் ஸ்பாட் அதுதான், திரும்பவும் அங்க போய் ஹோட்டல் புக் பண்ணி என்ஜாய் பண்ண வேணாமா?”
“தேவ்… நாளைக்கே போகணுமா? என்ன இப்பிடித் திடீர்னு சொல்றாங்க?” அவள் அந்தப் புள்ளியிலேயே நின்றிருந்தாள்.
“இது அடிக்கடி நடக்கிறதுதான் இந்திரா, ஆறு மாசம் முன்னாடி கனடா போய் வந்தேன், நல்ல சான்ஸ்தான், எப்பவுமே முடியாதுன்னு சொல்லமாட்டேன், ஆனா இப்போ…” அவன் முகத்திலும் கவலைத் தெரியவே மனைவி தன்னை மீட்டுக்கொண்டாள்.
“அதை நாளைக்குப் பார்த்துக்கலாம், இப்போ நான் டீ போடுறேன்.”
“இந்திரா…”
“என்ன தேவ்?” கட்டிலைவிட்டு எழுந்தவள் திரும்பிப் பார்த்தாள்.
“ரிப்ளை பண்ணணும், ஆஃபீஸுக்கு.”
“பண்ணுங்க, மூணு நாள்தானே, பார்த்துக்கலாம்.”
“ஏய்! என்ன பேசுறே நீ!” அதிர்ந்த கணவனைப் பார்த்துச் சிரித்தவள் குளியலறைக்குள் போய்விட்டாள். அவனில்லாத மூன்று நாட்களை நினைக்கும்போது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இதுபோன்ற வாய்ப்புகளைத் தவறவிடுவது அத்தனை நல்லதாகத் தோன்றவில்லை.
“இந்திரா.” வெளியே அவன் அழைக்கும் குரல் கேட்டது. அவசரமாகக் குளியலை முடித்தவள் ‘பாத் ரோப்’ ஐ அணிந்துகொண்டு எட்டிப்பார்த்தாள்.
“என்னாச்சு?”
“எவ்வளவு நேரந்தான் குளிப்பே? வெளியே வா.”
“நான் இன்னும் ட்ரெஸ்…” கதவின் இடுக்கு வழியாகப் பேசிக்கொண்டிருந்த மனைவியை அவன் கரம் அவசரமாக வெளியே இழுத்து அணைத்தது. பிரிவு கொடுக்க இருக்கும் வேதனை அவனை அப்போதே பிடித்துக் கொண்டது போலும். மிகவும் இறுக்கமாக அவளை அணைத்திருந்தான். இந்திராவுக்கும் அவன் மனநிலை புரிய அப்படியே சிறிது நேரம் நின்றிருந்தாள்.
“குளிச்சுட்டு வாங்க தேவ், டீ குடிக்கலாம்.”
“ம்…” என்றவன் மனமே இல்லாமல் நகர்ந்தான். அறைக்குள் வந்தவள் அவன் முதன்முதலாக வாங்கிக் கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டாள். அந்தச் சேலையை அணிந்தபோது அவன் மயங்கி நின்றது நினைவுக்கு வந்தது. கலைந்து கிடந்த படுக்கையையும் ஒழுங்கு பண்ணியவள் கசங்கிப் போயிருந்த மலர்களை அப்புறப்படுத்தினாள்.
நேற்றைய இரவின் நினைவுகள் நெஞ்சில் வந்து முட்டி மோதின. ராத்திரி முழுவதும் அவன் அவளைக் கொஞ்சித் தீர்த்ததை நினைத்த போது முகம் சிவந்தது. அவன் வெளியே வருவதற்கு முன்பாக கீழே இறங்கி வந்தாள் பெண். சமையலறையில் எல்லாம் தயாராக இருந்தது. நேற்றைய இரவு இருவரும் உண்டிருக்கவில்லை. பசித்தபோது பழங்களை மாத்திரமே உண்டார்கள். இப்போது பசி இலேசாக எட்டிப் பார்த்தது.
வெந்நீரைத் தயார் பண்ணியவளின் மனதுக்குள் இப்போது எக்கச்சக்கமான சிந்தனைகள் வந்தன. நாளை எத்தனை மணிக்கு தேவன் புறப்பட வேண்டும்? இந்த மூன்று நாட்களையும் தனியாக இவள் எப்படி சமாளிக்கப் போகிறாள்? இந்த ஊர் புதிது, இடம் புதிது, வீடு புதிது! தேவனின் பெற்றோர் வசிப்பது அதிக தொலைவில் இல்லை. ஆனாலும் அவளால் அங்கே போக முடியாதே! அவர்கள் வீட்டைப்பற்றிப் பெண்ணால் நினைக்கவே முடியாது.
“கல்யாணமாகி ரெண்டாவது நாளே உம் புருஷன் உன்னை விட்டுட்டுப் போயிட்டானா?” இப்படித்தான் அம்மா கேட்பார். அந்த வசையை அவளால் கேட்க முடியாது. சில்லிட்ட அவன் உதடுகள் தோளை உரசவே திடுக்கிட்டுத் திரும்பினாள் பெண். இப்போதும் அவன் கரங்கள் அவளை இறுக்கி அணைத்தன.
“பயந்துட்டேன் தேவ்!”
“எதுக்கு? எதுக்குப் பயப்பிடணும்?” கேட்டவாறே மீண்டும் அவள் இதழ்களை முற்றுகையிடப் போனவனை அவள் கரம் தடுத்தது.
“லைட்டா பசிக்குது, டீ போடணும், நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க.”
“முடியாது, நாளைக்கு இந்நேரம் ஃப்ளைட்ல சும்மாதானே உட்காரணும், அதுக்கு இப்ப ஏதாவது பண்ணிக்கிறேனே!” அந்த வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் அவள் கரங்கள் வேலை நிறுத்தம் செய்தன. தேவன் மனைவியைத் தன் புறமாகத் திருப்பினான்.
“முடியுமா இந்திரா? இந்த மூணு நாளையும் நம்மால கடந்து வர முடியுமா?”
“முடியாதுன்னு ஏதாவது இருக்கா தேவ்? இந்தக் கல்யாணம் நடக்கும்னு நான் நினைச்சும் பார்க்கலை, ஆனா நீங்க நடத்திக் காட்டலை?”
“இவ்வளவு நாளும் பிரிஞ்சு இருந்தப்போ இப்பிடியொரு ஆப்பர்சூனிட்டி வரலை, இப்பதான் ஒன்னா இருக்க ஆரம்பிச்சோம், அதுக்குள்ள ஏம்மா இப்பிடி?” ஆதங்கப்பட்டவனின் கன்னத்தை வருடிக் கொடுத்தாள் மனைவி.
“நடந்ததும் நடக்கிறதும் நன்மைக்குத்தான் தேவ், கவலைப்படாதீங்க.”
“நாளைக்குக் கிளம்ப வேண்டியிருக்கும், நீ உங்க வீட்டுல போய் இருக்கிறியா?”
“ம்ஹூம், வேணாம், நான் இங்கேயே இருக்கேன்.”
“எப்பிடிம்மா தனியா இருப்பே? சூர்யாவை வரச்சொல்லட்டுமா?”
“வேணாம், சூர்யா இங்க வந்தா அம்மாக்கு நீங்க அமெரிக்கா போறது தெரியவரும், அதை நான் விரும்பலை தேவ்.”
“அப்போ எங்கப்பாவை இங்க வந்து இருக்கச் சொல்லட்டுமா?” மனைவி தங்கள் வீட்டுக்குப் போக மாட்டாள் என்பதை அவன் அறிவான்.
“அதை அப்புறம் பார்க்கலாம், இப்ப ஒரு டீ குடிக்கலாமே!” அவள் கேலி போல சொல்லவும் மனைவிக்கும் சேர்த்துத் தேநீர் தயாரித்தான் கணவன். நாளைக்கு வர இருக்கும் சோகத்தை நினைத்து இன்றைய இன்பத்தை ஏன் இழக்க வேண்டும்?! அந்த நொடியை ரசித்து மகிழ இருவரும் சங்கல்பம் செய்து கொண்டார்கள். நாளை மட்டுமல்ல, அடுத்தடுத்து வந்த நாட்களும் அவர்களைப் புரட்டிப் போட்டன!






Nice