அத்தியாயம் 16
அத்தியாயம் 16
அன்றைய பொழுதை எத்தனை இன்பமாகக் கழிக்க முடியுமோ அவ்வளவு தூரம் இருவரும் இன்புற்று இருந்தார்கள். நாளைய பொழுதைப் பற்றிய கவலை இருந்தாலும் இன்றைய பொழுதின் இன்பத்தை அவர்கள் இழக்கத் தயாரில்லை. கூடித் தீர்த்தார்கள், கொஞ்சி மகிழ்ந்தார்கள்.
அடுத்தநாள் உலகம் விடியலைப் பார்த்தபோது இவர்கள் சோர்ந்து போனார்கள். உள்ளமும் உடலும் வாட அந்த விடியலை வெறுப்போடு வரவேற்றார்கள். எதுவும் பேசாமல் காலை தேநீரைத் தயாரித்தான் தேவன். மனைவிக்கும் கொடுத்தவன் குளியலை முடித்தான். மூன்று நாட்கள் என்பதால் அதிக ஆயத்தம் தேவைப்படவில்லை. தனக்குத் தேவையான பொருட்களைத் தயார்பண்ணிக் கொண்டான்.
இந்திரா யாரோடும் போய் இருக்க மறுத்துவிட்டாள். தனியாக இந்தப் புதிய வீட்டில் மனைவி எப்படி மூன்று நாட்களைக் கடத்துவாள் என்ற கவலை தேவனுக்கு இருந்தபோதும் பெண் அதைப் பொருட்படுத்தவில்லை. அந்தப் பிரதேசம் மிகவும் பாதுகாப்பானது என்பதால் இருவரும் அந்தக் கவலையை ஒதுக்கி வைத்தார்கள்.
அந்த ப்ளாக் ஆடி தயாராக நின்றிருந்தது. ஏர்போர்ட்டிற்கு தேவன் மாத்திரம்தான் போகிறான். காரை எப்போதும் போல ஏர்போர்ட் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுப் போவதாக ஏற்பாடாகி இருந்தது. இந்திராவைத் தன்னோடு வராமல் வீட்டிலேயே இருக்குமாறு சொல்லிவிட்டான். அவன் பிரிந்து போவதை அவளால் தாங்க முடியாது. அது இருவருக்குமே தெரிந்திருந்தது.
“இந்திரா…” கிளம்பும்போதும் அவன் அவ்வளவு தயங்கினான். போய் வருகிறேன் என்று சொல்லவே தயக்கமாக இருந்தது.
“பாய் தேவ், டைமுக்குச் சாப்பிடுங்க, கால் பண்ணுங்க.” அக்மார்க் மனைவியாகப் பேசியவள் புன்னகைத்தாள். அவனும் எந்தப் பதிலும் சொல்லாமல் காரில் ஏறி உட்கார்ந்தவன் ஸ்டார்ட் செய்தான். அந்த ப்ளாக் ஆடி மெதுவாக நகர்ந்தது. ஏதோ ஒன்று தன்னைவிட்டுப் பிரிவது போலிருக்க வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் பெண்.
சற்றுத் தூரம் சென்ற வாகனம் மீண்டும் ரிவர்ஸில் வந்தது. மனைவியின் அருகில் காரை நிறுத்தியவன் உட்கார்ந்தபடியே அவளை இழுத்து முத்தமிட்டான். கன்னத்தில் கண்ணீர் வழிய அந்த இதழ் முத்தத்தை ரசித்தவள் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள். ஒரு சில நிமிடங்கள் மனைவியின் ஸ்பரிசத்தை அனுபவித்தவன் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. சட்டென அவளை விடுவித்துவிட்டு உடனடியாகக் கிளம்பிவிட்டான்.
அந்த ப்ளாக் ஆடி புள்ளியாக மறையும் வரை அப்படியே நின்றிருந்தவள் உள்ளே வந்தாள். வாழ்க்கையில் இனி எதுவுமேயில்லை என்பது போல வலித்தது. இப்படியே அமர்ந்திருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும் என்பதை உணர்ந்தவள் கௌசல்யாவை அழைத்தாள். அந்தப் பெண்ணோடு பேசி வெகு நாட்களாகின்றன.
“என்னம்மா புதுப்பொண்ணு! இது சரியில்லையே, இப்போ எங்க ஞாபகமெல்லாம் உங்களுக்கு வரக்கூடாதே!” அந்தக் கேலியில் இந்திரா வாய்விட்டுச் சிரித்தாள்.
“எப்பிடி இருக்கீங்க கௌசல்யா? அம்மா, அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“அதெல்லாம் நல்லா இருக்காங்க, வாய்ஸ் கொஞ்சம் டல்லடிக்குது, அண்ணா எங்க இந்திரா?”
“கம்பெனி விஷயமா யூ எஸ் போறாங்க, மூணு நாள் கழிச்சுத்தான் வருவாங்க.”
“ஓ… என்ன திடீர்னு? கல்யாணத்துக்கு லீவு எடுக்கலையா?”
“எடுத்தாங்க, ஆனாலும் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வந்தா மறுக்க முடியாது, நமக்கும் நல்ல வாய்ப்புத்தானே!”
“அப்ப நீங்களும் கூட போயிருக்கலாமே?”
“இல்லை கௌசல்யா, அவங்க என்னைப் பார்ப்பாங்களா, வேலையைப் பார்ப்பாங்களா? பாவம் அவங்க, மூணு நாள்தானே, சமாளிச்சிடலாம்.”
“அதுவும் சரிதான்.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தேவனின் தந்தை இவளை அழைத்தார். சில தடவைகள் அவரைப் பெண் சந்தித்திருக்கிறாள். தாரிணி ஒதுங்கியே இருப்பதால் அவரோடும் இவளால் சகஜமாக உறவாட முடியவில்லை. ஆனால் அவர் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உரிமையாகப் பேசுவார்.
“கௌசல்யா, தேவனோட அப்பா கால் பண்ணுறாங்க, நான் கொஞ்சம் கழிச்சு உங்களைக் கூப்பிடுறேன்.”
“சரி இந்திரா.” நண்பி அழைப்பைத் துண்டிக்கவும் அடுத்த அழைப்பை ஏற்றாள் பெண்.
“சொல்லுங்க மாமா.”
“இந்திரா, தம்பி கிளம்பிட்டானா?”
“ஆமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கிளம்பினாங்க.”
“தனியா இருக்க வேணாம்மா, சூர்யாவை நைட்டுக்கு வரச்சொல்லலாமே?” நேற்றுவரை தனியாக இருக்காமல் எங்கள் வீட்டிற்கு வா என்று அழைத்தவர் என்ன இப்போது இப்படிப் பேசுகிறார் என்று நினைத்தாலும் இவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
“இந்திரா…” எதையோ சொல்லத் தயங்கினார் மனிதர்.
“சொல்லுங்க மாமா.”
“அது யாரும்மா விக்ரம்?” அந்தக் கேள்வியில் பெண் ஆடிப்போனாள்.
“இன்னைக்குக் காலையில உங்க அத்தைக்கு ஃபோன் பண்ணிப் பேசியிருக்கான், நல்லபடியா பேசின மாதிரி தெரியலைம்மா.” இப்போது இந்திரா முழுதாக நிலைகுலைந்து போனாள். மழை நின்றும் தூவானம் விடாத கதையாக இது என்ன புதுக் குழப்பம்?!
“ஊருக்குப் போனப்ப என்னம்மா ஆச்சு? தேவ் மேல கைய வெச்சதா அந்தப் பயல் மார் தட்டுறான், அது உண்மையா? உங்கத்தை அதைக் கேட்டதுல இருந்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறா, தேவன் வேற ஊர்ல இல்லை, அந்தப் பயல் வேணும்னே தேவன் இல்லாத நேரம் பார்த்து தாரிணிக்கிட்ட எல்லாம் சொல்லியிருக்கான்னு தோணுதும்மா, எனக்கு என்னப் பண்ணுறதுன்னே தெரியலை, கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லதும்மா.” என்றவர் பேச்சை முடித்துக் கொண்டார்.
இந்திராவின் உலகம் இப்போது சுழன்றது. தாரிணி சும்மாவே அவள் விடயத்தில் குதிப்பார். இப்போது இவளால் தேவன் காயப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தால் இன்னும் என்னென்ன விபரீதங்கள் நிகழுமோ?! ஆனால் பரதனை நினைத்தபோது உடல் சிலிர்த்தது. என்ன மாதிரி மனிதர் அவர்! இத்தனை நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதும், தன் மகன் அடி வாங்கியிருக்கிறான் என்று தெரிந்த போதும் இவளை ஒரு வார்த்தைக் கடிந்து பேசவில்லையே! குறை கூறவில்லையே! மாறாக இவள் நலனில்தான் அக்கறைக் கொள்கிறார்!
இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. கணவன் ஊரில் இல்லை என்று தெரிந்துதான் விக்ரம் இப்படிச் செய்திருக்கிறானா? என்ன மாதிரியான செயல் இது?! நாகரிகமே இல்லாமல் படிக்காதவன் போல இப்படிக் கீழ்த்தரமாக இறங்கி வேலை பார்த்திருக்கிறான்! அலைபேசியை எடுத்தவள் சூர்யாவை அழைத்தாள்
“சொல்லுக்கா.”
“சூர்யா, இந்த விக்ரம் பார்த்திருக்கிற வேலையைப் பார்த்தியா?” என்றவள் மாமனார் அவளிடம் சொன்னதைத் தம்பியிடம் ஒப்புவித்தாள்.
“இந்த விக்ரமுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கா? என்ன வேலை பார்த்து வெச்சிருக்கான்? அதுவும் அண்ணா ஊர்ல இல்லாதப்போ?”
“சூர்யா, இதை இப்பிடியே விடுறது நல்லதுன்னு எனக்குப் படலை.”
“வேற என்னக்கா பண்ண முடியும்?”
“பேசலாம் சூர்யா, அந்த லூசைப் போய் பார்த்துப் பேசலாம், மிரிஸ்ஸவுல இதை நான் பண்ணியிருக்கணும், தேவனுக்கு அடிபட்ட கவலையில நான் எதுவும் பண்ணாம விட்டுட்டேன், அதான் பெரிய தப்பாப் போச்சு, இதை இப்பிடியே விட்டா இன்னும் இறங்கி அந்த விக்ரம் வேலை பார்ப்பான், இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.”
“அப்பாவையும் கூட்டிட்டுப் போகலாமா?”
“வேணாம், அம்மாக்குத் தெரிஞ்சா அது வேற பிரச்சினை ஆகிடும், நாம முதல்ல போய் அந்த ராஸ்கலைப் பார்க்கலாம், அவனோட மனசுல என்ன இருக்குன்னு அப்பதான் புரியும், எதுக்காக இப்போ தேவையில்லாம அந்தம்மாக்கிட்டப் பேசியிருக்கான் பொறுக்கி, அவங்களுக்கு சும்மாவே என்னைப் புடிக்காது, இந்த லட்சணத்துல இவன் வேற போய் பத்த வெச்சிருக்கான்.” அக்காவிற்கு இவ்வளவு கோபம் வரும் என்று அன்றைக்குத்தான் சூர்யாவிற்குத் தெரியும்.
தேவனிடம் சொல்லாமல் இந்த விடயத்தில் இறங்குவதற்கு இளையவன் பயப்பட்டாலும் இதை ஒரு முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்றுதான் தோன்றியது. இலங்கை வரை வந்து தேவனைக் காயப்படுத்தியது மட்டுமல்லாது இப்போது எதற்குத் தேவையில்லாத வேலை! தனக்கென்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணின் மனதை தேவன் மாற்றிவிட்டான் என்ற கோபம் முன்பு இருந்தது. ஆனால் இப்போது இந்திராவின் மனநிலை என்னவென்று தெரிந்த பிறகும் இப்படி நடப்பது சின்னத்தனமாகத் தோன்றியது.
தேவனிடம் கார் இருந்ததால் தனது காரை இந்திரா புதிய வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கவில்லை. தம்பி வந்து அழைத்துச் செல்லும் வரை காத்திருந்தாள். அக்காவும் தம்பியும் விக்ரமின் ஆஃபீஸுக்கு வந்தபோது மாலை மூன்று மணி. லண்டனின் மிகமுக்கியமான பகுதியில் அமைந்திருந்தது அவனது அலுவலகம். வரவேற்பில் சொல்லிவிட்டு இருவரும் அமர்ந்திருந்தார்கள். முன்பதிவு இல்லாததால் அவசரமாக பார்க்க முடியவில்லை. ஒரு மணிநேர காத்திருப்பிற்குப் பிறகு அவர்களை உள்ளே அழைத்தான் விக்ரம். வேண்டுமென்றுதான் அவர்களைக் காக்க வைத்தது போல இருந்தது.
“வாங்க வாங்க, எப்பிடி இருக்கீங்க?” தனது சுழல் நாற்காலியில் சுழன்றபடி இவர்களைப் பார்த்து எள்ளல் சிரிப்பொன்று சிந்தப்பட்டது. இப்படியொரு வரவேற்பை அக்காவும் தம்பியும் எதிர்பார்க்கவில்லை.
“உட்காருங்க, நீயாவது கொஞ்சம் படிச்சவன் மாதிரி பிஹேவ் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன் சூர்யா, ஆனா நீ கூட என்னை ஏமாத்திட்டே!” அந்த நாற்காலிகளில் அமர விருப்பம் இல்லை என்றாலும் நிலைமையைக் கருத்திற் கொண்டு இருவரும் அமர்ந்தார்கள்.
“யாரும் யாரையும் ஏமாத்த நினைக்கலை சார்.” இது சூர்யா. மிகவும் நிதானமாகவே பேசினான்.
“ஒரு காலத்துல அத்தான்னு கூப்பிட்ட வாய் இப்போ சார்ன்னு சொல்லுதில்லை?” இப்போது கண்களை இறுக மூடி இந்திரா தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். இங்கே வரும்போது தம்பி எச்சரித்துத்தான் அழைத்து வந்திருந்தான். எது நடந்தாலும் ஆத்திரப்படக் கூடாது. நிச்சயமாக விக்ரமின் பேச்சு கோபத்தை உருவாக்குவதாகத்தான் இருக்கும். இப்போது அவனது தேவையும் அதுதான் என்பதை சூர்யா நன்றாக அறிவான்.
“எல்லாமே அக்காவை மையப்படுத்தித்தான் சார், எனக்கு என்னோட அக்கா முக்கியம், அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும், அவ்வளவுதான், யாரையும் காயப்படுத்தணும்னு நாங்க நினைக்கலை.”
“ஏன்? என்னை நீங்க காயப்படுத்தலையா?”
“மனசு அறிஞ்சு உங்களைக் காயப்படுத்துறது எங்க நோக்கமில்லை, அக்கா சந்தோஷமா இருக்கணும், அந்தக் கல்யாணம் நடந்திருந்தா அக்கா காயப்பட்டிருப்பா.”
“அதால ஈஸியா என்னோட மனசை நோகடிச்சுட்டீங்கல்லை?”
“வேற என்ன சார் பண்ணியிருக்கணும்? புடிக்காத கல்யாணத்தைப் பண்ணி டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்கணுமா? அப்ப மட்டும் நீங்க காயப்பட்டிருக்க மாட்டீங்களா? அதுக்கு இது எவ்வளவோ மேல் இல்லையா?”
“பேசுறது ரொம்ப சுலபம் சூர்யா, வலியை அனுபவிச்சுப் பார்க்கணும், அப்ப தெரியும்.” இப்போது அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது. சூர்யா அக்காவைத் திரும்பிப் பார்த்தான். மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“நடந்தது எதுவுமே திட்டமிட்டுப் பண்ணினதில்லை, அதால நீங்க காயப்பட்டிருந்தா அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.” சட்டென்று தம்பியின் கரத்தைப் பிடித்து அழுத்தினாள் இந்திரா. எந்தத் தவறும் செய்யாமல் எதற்காக இவன் அந்தப் பொறுக்கியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! ஆனால் அந்த எண்ணம் தம்பியின் மனதில்லை. எப்படியாவது தன் அக்காவின் வாழ்க்கையிலிருந்து விக்ரம் என்னும் முள்ளை அகற்றவே நினைத்தான்.
“மன்னிப்புக் கேட்க வேண்டியவங்க அமைதியா இருக்காங்க, நீ எதுக்கு சூர்யா எங்கிட்ட மன்னிப்புக் கேட்கிறே?” ஒரு கோணல் சிரிப்போடு விக்ரம் கேட்டபோது இந்திரா பற்களைக் கடித்தாள்.
“இப்ப எதுக்கு சார் அத்தைக்கிட்ட வம்பு வளர்க்கிறீங்க? நீங்க பண்ணினதே தப்பான காரியம், இதுல உங்க மகனை நான் அடிச்சேன்னு பெத்தவங்களுக்கே கால் போட்டு சொல்லியிருக்கீங்க! அந்தளவுக்கா உங்களுக்கு டைம் இருக்கு?”
“அவ்வளவு சுலபத்துல நான் உங்களை விட்டுருவேன்னு நீங்க எப்பிடி சூர்யா நினைக்கலாம்?” வாய்விட்டுச் சிரித்தபடி கேட்டான் விக்ரம்.
“வேற என்ன பண்ணுறதா உத்தேசம்?” இது இந்திரா. இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவள் இப்போது வாய் திறந்தாள். விக்ரமின் சிரிப்பு சட்டென்று நின்றது.
“என்ன வேணும்னாலும் பண்ணுவேன் இந்திரா, எந்த எல்லைக்கு வேணும்னாலும் நான் போவேன்.” அவன் குரல் காட்டிய வைராக்கியத்தில் அவளுக்குள் குளிர் பரவியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.
“இங்கப்பாருங்க விக்ரம்,, ஆரம்பத்துல எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, ஆனா போகப்போக புரிஞ்சு போச்சு, நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகவே ஆகாதுன்னு, என்னோட எதிர்பார்ப்புகள் வேறா இருந்துச்சு, அதை உங்களால பூர்த்தி பண்ண முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எப்பிடி என்னால இதுக்குத் தலையாட்ட முடியும்? அதாலதான் ஒதுங்கிப் போனேன், நான் உங்களுக்கும் சேர்த்துத்தான் நல்லது பண்ணியிருக்கேன், அதைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.”
“எனக்கு எது நல்லதுன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன், அது தெரியாமத்தான் இவ்வளவு பெரிய பிஸினஸை எடுத்துப் பண்ணுறேனா? எனக்கு நடந்தது அநியாயம், அதைப் பண்ணிட்டு நீங்கெல்லாம் சந்தோஷமா இருப்பீங்க, நான் கஷ்டப்படணுமா?”
“ரொம்ப சீப்பா பிஹேவ் பண்ணுறீங்க விக்ரம், இப்ப இல்லைன்னாலும் இன்னும் கொஞ்ச காலம் போனதுக்கு அப்புறமா நீங்க பண்ணுறது எவ்வளவு கீழ்த்தரமான செயல்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க,.” என்றவள் அதற்குமேல் பேசவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டாள். சூர்யாவும் அக்காவோடு வந்துவிட்டான். இனியும் பேசுவதில் இலாபம் இருக்கும் என்று தோன்றவில்லை.
“அவர் பண்ணுற தப்பு அவருக்குப் புரியலைக்கா, பழிவாங்குற வெறி மட்டுந்தான் தெரியுது, பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை.”
“என்னோட கவலை எல்லாம் அந்தம்மாவைப் பத்தித்தான், சும்மாவே ஆடுவாங்க, இப்போ இவன் வேற சலங்கைக் கட்டி விட்டிருக்கான்.”
“ம்…” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மீண்டும் பரதன் அழைத்தார்.
“ஐயையோ! இப்போ எதுக்கு தேவனோட அப்பா கூப்பிடுறாரு! அவங்க திரும்பவும் ஏதாவது பிரச்சினை பண்ணுறாங்களோ?”
“பரவாயில்லை, எடுத்துப் பேசுக்கா.” தம்பி வற்புறுத்தவும் அழைப்பை ஏற்றாள் பெண்.
“சொல்லுங்க மாமா.”
“இந்திரா, தாரிணிக்குச் சின்னதா ஒரு ஆக்சிடன்ட்.”
“என்ன?! என்னாச்சு?!” அவள் பதறினாள்.
“பயப்பிடத் தேவையில்லைம்மா, கார்ல இருந்து இறங்கும் போது பக்கத்துல வந்த இன்னொரு கார் லேசா மோதிட்டான், கீழே விழுந்ததுல கால்லயும் கைலயும் அடி பட்டிருச்சு.”
“இப்போ எங்க இருக்கீங்க?”
“ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்திருக்கேம்மா.”
“நான் இப்பவே கிளம்பி வர்றேன்.”
“சரிம்மா.” என்றவர் ஹாஸ்பிடலின் லொகேஷனை அனுப்பி வைத்திருந்தார். தேவன் வாடகைக்கு எடுத்திருந்த புதிய வீட்டிலிருந்து அவ்வளவு தொலைவில் இல்லை அவனது பெற்றோர்கள் வசிப்பது. வைத்தியசாலையும் அதை அண்மித்த இடம்தான். மருத்துவம் பயிலும் தம்பி கூடவே இருந்தால் நல்லது என்பதால் அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள் இந்திரா. இந்தச் சந்தர்ப்பத்தில் தனியாக அவளால் தாரிணியை எதிர்கொள்ள முடியாது.
“ஹலோ.” சரியாக அப்போது தேவன் இவளை அழைத்தான்.
“இந்திரா, வெளியே இருக்கியா? சத்தமா இருக்கு?”
“ஆமா தேவ், வீட்டுல தனியா இருக்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் சூர்யாவைக் கூப்பிட்டு ரெண்டு பேரும் சாப்பிட வெளியே வந்தோம்.” பொய் பேசியது பெண். இப்போது விக்ரமின் கேவலமான செயலைக் கணவனிடம் சொல்ல அவள் பிரியப்படவில்லை.
“வெரி குட், தனியா இருக்க வேணாம், நான் இப்பதான் லான்ட் ஆனேன், அதான் கூப்பிட்டேன்.”
“சரி தேவ், வெதர் எப்பிடி இருக்கு?” வழமையான கேள்விகளைக் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
“அத்தையைப் பத்தி எதுவுமே சொல்லலையாக்கா?”
“வேணாம் சூர்யா, மாமா சொன்னாங்களா இல்லையான்னு தெரியலை, வேலை பார்க்கப் போன இடத்துல இவங்களை நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்க முடியுமா? அப்பிடி ஏதாவது அவசரம்னா மாமா சொல்லியிருப்பாங்க.”
“அதுவும் சரிதான்.” இருவரும் பரதன் கொடுத்திருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் பரதன் நின்றிருந்தார். இவர்களைக் கண்டதும் அவசரமாக வந்தார் மனிதர்.
“மாமா, என்னாச்சு?”
“லேசாத்தான் விழுந்தாம்மா, பெருசா அடிபட்டிருக்க வாய்ப்பில்லைன்னுதான் நினைச்சேன், ஆனா டாக்டர் என்னெல்லாமோ சொல்றார், சூர்யா… நீ கொஞ்சம் என்னன்னு பாருப்பா.”
“சரி மாமா.” என்று இளையவன் அப்பால் நகர மனிதர் மிகவும் பதட்டமாகக் காணப்பட்டார். எவ்வளவு திடமான மனிதர்கள் என்றாலும் மனைவிக்கு ஒன்றென்றால் கலங்கிவிடுவார்களோ!
“தேவ்க்கு சொன்னீங்களா மாமா?”
“இல்லைம்மா, வெளியூர் போயிருக்கிற புள்ளைக்கு எதுக்கு வீணான கவலையைக் குடுக்கணும், நாமளே என்னன்னு பார்த்துக்கலாம், இன்னைக்கே வீட்டுக்கு அனுப்பிடுவாங்கதானே?” ஆனால் அவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. கையில் இலேசான சிராய்ப்பு இருந்தது. ஆனால் வலது கால் எலும்பில் சின்னதாக ஓர் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
கைக்கு முதலுதவி செய்தவர்கள் காலிற்குப் பெரிதாக பேன்டேஜ் போட்டுவிட்டார்கள். காலை அசைக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. இந்த நிலைமை சீராக குறைந்தது ஐந்து வாரங்கள் தேவைப்படும். அதுவரை எந்த வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொன்ன போது பரதன் நிலைகுலைந்து போனார். அன்றைய இரவை ஹாஸ்பிடலில்தான் கழிக்க வேண்டுமாம்.
“என்ன சூர்யா இது? சின்ன அடிதானே? எதுக்கு இவங்க இப்பிடி ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்க?”
“சின்ன அடிதான் மாமா, ஆனா எலும்பு பாதிக்கப்பட்டிருக்கு, ரொம்ப பெயின் இருக்கு பார்த்தீங்களா? அத்தை ரொம்பக் கஷ்டப்படுறாங்க, ஒழுங்கா என்னன்னு பார்க்கணும், டாக்டர் சொல்ற மாதிரி கேட்கிறதுதான் நல்லது.”
“எப்பிடிப்பா…” கலங்கிய மனிதரின் கையைப் பிடித்துக் கொண்டான் இளையவன். அவருக்கு இப்போது ஆறுதல் தேவை.
“அத்தையோட ஆஃபீஸுக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுங்க, டாக்டரோட ரிப்போர்ட்டை அவங்களுக்கு அனுப்புங்க மாமா, இன்னைக்கு நைட் அத்தை இங்கேயே இருக்கட்டும், நாளைக்கு வீட்டுக்குப் போறது ஓகேன்னு சொன்னா கூட்டிட்டுப் போகலாம், அக்காவும் நானும் உங்கக் கூடவே இருப்போம்.” இதற்கிடையில் தங்கள் பெற்றோருக்கும் சூர்யா தகவல் சொல்ல அவர்களும் கிளம்பி வந்திருந்தார்கள்.
அதிக நேரம் ஹாஸ்பிடலில் அத்தனைப் பேரும் இருக்க முடியவில்லை. தாரிணியுடன் யாரும் இருக்கத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள். சூர்யாவும் அவன் பெற்றோரும் உள்ளே போய் பார்த்துவிட்டு வந்தார்கள். ஆனால் இந்திரா பின்னணியில் ஒதுங்கிக் கொண்டாள். இப்போது அவளைப் பார்த்தால் தாரிணி கோபப்படக் கூடும். ஏற்கனவே உடலளவில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவரை எதற்காக இன்னும் வேதனைப்படுத்த வேண்டும்!
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல விக்ரம் வேறு அவரின் கோபத்தைத் தூண்டிவிட்டிருக்கிறான். சும்மாவே இவள் என்றால் அவருக்கு ஆகாது. இப்போது அதற்கு இன்னும் தூபம் போடப்பட்டிருக்கிறது. சரியாக அப்போது மீண்டும் தேவன் அழைத்தான். இதற்கு மேலும் அவனிடம் எதையும் மறைப்பது நல்லதென்று இந்திராவிற்குத் தோன்றவில்லை.
“தேவ்…” என்று ஆரம்பித்தவள் அன்றைக்கு நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள். ஆனால் விக்ரமை அவர்கள் சென்று பார்த்ததை மட்டும் சொல்லவில்லை. அதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதை அவள் அறிவாள்.
“நீ இப்போ எங்க இருக்கே இந்திரா?”
“ஹாஸ்பிடல்லதான், இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க.”
“அம்மாவோட யாரும் இருக்க முடியாதா? அவங்களால தனியா சமாளிக்க முடியுமா?”
“யாரும் கூட இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, நர்ஸ் பார்த்துப்பாங்களாம்.”
“சூர்யா இங்கதானே இருக்கான்? டாக்டர்கிட்ட நல்லா விசாரிச்சானா? ஒன்னும் ப்ராப்ளம் இல்லைல்லை?”
“இல்லை தேவ், ஆனா பெயின் இருக்குதாம், ரொம்ப கஷ்டப்படுறாங்கன்னு சொன்னான்.”
“ஓ… நீ போய் பார்க்கலையா?” மிகவும் தயக்கத்திற்கு மத்தியில் வந்தது அந்தக் கேள்வி.
“இல்லை தேவ், சும்மாவே உங்கம்மாக்கு என்னைப் புடிக்காது, இப்போ அந்தப் பைத்தியம் வேற மிரிஸ்ஸல நடந்தது எல்லாத்தையும் அவங்கக்கிட்டச் சொல்லியிருக்கான், என்னைப் பார்த்தா கோபம் இன்னும் ஜாஸ்தியாக வாய்ப்பிருக்கு, இந்த நிலைமையில இது தேவையா?”
“ம்… ஆனா வீட்டுக்குப் போ இந்திரா.”
“தேவ்… அது சரியா இருக்குமா? நாளைக்கு உங்கம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க, அவங்க வீட்டுக்கு வரும்போது நான் அங்க…”
“இந்திரா… அது எங்க வீடு, இப்போ நம்ம வீடு, நான் வாழ்ந்த வீடு, அங்க போக நீ எதுக்குத் தயங்கணும், அங்க போக உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, அம்மா இல்லைன்னா அப்பா ரொம்பக் கஷ்டப்படுவாங்கம்மா, ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளு.”
“சரி தேவ்.” பெண் சட்டென்று சம்மதம் சொல்லிவிட்டாள். மனதுக்குள் தயக்கம் இருந்தாலும் கணவன் கேட்கும்போது மறுக்க முடியவில்லை.
“மத்த விஷயங்களை நான் வந்ததுக்கு அப்புறமா என்னன்னு பார்க்கிறேன், நீ அதுவரைக்கும் அமைதியா இரு.”
“ம்…” விக்ரமைத்தான் குறிப்பிடுகிறான் என்று புரிந்தது. ஆனாலும் அந்தப் பெயரை உச்சரிக்க இருவரும் விரும்பவில்லை. தாரிணி உண்டாக்கிய காயம் ரணமாக வலித்தாலும் தேவனின் ஓர் வார்த்தைக்காக அந்த வீட்டிற்குப் போவதென்று முடிவெடுத்தாள் பெண். தன் கணவனின் தாயார். ஒதுக்க முடியாத உறவு. வாழ்க்கைத் தனக்கு என்ன விதித்திருக்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
தேவனின் மனநிலையும் வித்தியாசமாகவே இருந்தது. அம்மாவை எதிரத்துத்தான் இந்திராவின் கரம் பிடித்தான். அம்மா தனது திருமணத்திற்கு வராவிட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம்தான் இருந்தது. தனி வீடு பார்த்தது, திருமணம் முடிந்த கையோடு அந்த வீட்டிற்குப் போனது என எல்லாமே அவனது முடிவாகத்தான் இருந்தது. அப்பா அவனுக்கு உறுதுணையாக இருந்தாலும் அவனது முடிவுகளால் அம்மா நிச்சயமாகக் காயப்பட்டிருப்பார் என்று தெரியும். தெரிந்திருந்த போதும் அதைப்பற்றி அவன் கவலைப்படவும் இல்லை.
தங்களுக்குத் தெரியாமல் மிரிஸ்ஸ வரை சென்று அம்மா செய்த காரியம் அவனை மிகவும் காயப்படுத்தி இருந்தது. தனக்குப் பிடித்த பெண் என்று தெரிந்த பிறகும் இந்திராவை அம்மா அவ்வளவு கேவலமாக நடத்தியதில் அவன் நொந்து போயிருந்தான். அதனாலேயே அம்மாவிற்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் எதையும் பொருட்படுத்தாமல் காரியங்களை எடுத்து நடத்தியிருந்தான்.
ஆனால் இப்போது நிலைமை வேறாக இருந்தது. உடலளவில் காயப்பட்டிருக்கும் அம்மாவை நினைத்த போது வேதனையாக இருந்தது. அம்மா இல்லாமல் அப்பா மிகவும் சிரமப்படுவார் என்பது அவனறிந்த விடயம். இந்த வேளையில் இந்திராவின் வருகை அப்பாவை மிகவும் சந்தோஷப்படுத்தும். அதற்காகவேனும் இந்திரா இப்போது அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். கூடிய சீக்கிரம் வேலைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்ப வேண்டும். நிலைமையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான் தேவன்.






Nice