arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 17
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 17 / 20

அத்தியாயம் 17

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 17

அன்றிரவு இந்திராவும் சூர்யாவும் கிளம்பி தேவனின் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அதில் தேவனின் அப்பாவிற்கு அவ்வளவு சந்தோஷம். மனைவி பார்த்த வேலையால் இனி மகனின் உறவு தனக்கு இல்லையோ என்று அந்த மனிதர் பயந்து போயிருந்தார். அவருக்கென்ன நான்கைந்து பிள்ளைகளா? ஒன்றே ஒன்று! அதுவும் இல்லையென்று போனால் அவரால் தாங்க முடியுமா?

“வாம்மா, வா சூர்யா, இது தேவனோட ரூம், இதுல அக்கா தங்கட்டும், அந்த ரூம்ல நீ தங்கிக்கோ சூர்யா.” இன்னொரு அறையைக் காட்டினார் பரதன். லண்டனை விட்டுச் சற்று அப்பால் இருந்த ஊர் என்பதால் வீடு நல்ல விசாலமாகவே இருந்தது.

“சரி மாமா.” விருந்தினர் அறை போலும். அதைத்தான் சூர்யாவிற்குக் கொடுத்தார் பரதன்.

“எந்தத் தயக்கமும் இல்லாம நீங்க ரெண்டு பேரும் இங்க தங்கணும், என்ன வேணும்னாலும் என்னை நீங்க கேட்கலாம்.” இவர்கள் இந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி அந்தக் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“நான் நைட்டுக்கு ஏதாவது ஆர்டர் பண்ணுறேன்.”

“தேவையில்லை மாமா, வீட்டிலேயே ஏதாவது சிம்பிளா பண்ணிக்கலாம்.” இது இந்திரா.

“அம்மாடி, இந்த வீட்டுக்கு நீ முதல்முதலா வந்திருக்கே, எப்பிடியோ வரவேண்டியவ! பரவாயில்லை, சங்கடமான சந்தர்ப்பம்னாலும் நீ வந்ததே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்மா.” என்று கண்கலங்கியவர் அப்பால் போய்விட்டார். அக்காவும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் சூர்யா, இன்னைக்கு முழுக்க அலைஞ்சது ரொம்ப டயர்டா இருக்கு.”

“அண்ணா பேசினாராக்கா? ஏதாவது சொன்னியா?”

“ம்… அந்தப் பொறுக்கியைப் போய் பார்த்ததை மட்டும் சொல்லலை, மீதியெல்லாம் சொன்னேன்.”

“என்ன சொன்னாங்க? கோபப்பட்டாங்களா?”

“இல்லைடா, வீட்டுக்குப் போன்னு அவங்கதான் சொன்னாங்க, அப்பா சந்தோஷப்படுவாங்கன்னு சொன்னாங்க, ஆனா இவ்வளவு சந்தோஷப்படுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை.” ஒரு புன்னகையோடு ஆமோதித்த சூர்யா தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் போய்விட்டான்.‌

தனது  அறைக்குள் வந்த பெண்ணுக்கு இலேசாகச் சிலிர்த்தது. அது தேவனின் அறை! இத்தனைக் காலமும் அவன் வாழ்ந்த இடம். இப்படியொரு சந்தர்ப்பம் தனது வாழ்நாளில் கிடைக்கும் என்று இந்திரா கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. இத்தனை விரைவாக நடந்திருக்கிறது!

“தேவ்!” கணவனை உடனேயே அழைத்தாள்.

“சொல்லுடா.” அவன் அழைப்பில் இணைந்ததும் வீடியோ காலுக்கு மாறியவள் அவள் நின்றிருந்த இடத்தைக் காண்பித்தாள். ஒரு சில நொடிகள் அவனும் எதுவும் பேசவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நின்றிருக்கிறான் என்று புரிந்தது.

“கனவில்லை தேவ், இது நிஜம்.”

“இன்னும் ரெண்டு நாள்தான், அப்புறம் உங்கூட நானும் அங்க இருப்பேன்.”

“ம்… நான் காத்துக்கிட்டு இருக்கேன்.”

“அம்மா எப்பிடியிருக்காங்க?”

“பெயின் ஜாஸ்தியாத்தான் இருக்காம், மாத்திரைக் குடுத்திருக்காங்க, நீங்க பேசலையா?”

“இல்லைடா, அப்பா கூட பேசினேன், ரொம்ப சந்தோஷத்துல இருக்காரு, மருமகள் அவரோட வீட்டுக்கு வந்திருக்காங்களாம்.”

“ம்… நானும் சூர்யாவும் இப்போ அதைத்தான் பேசிக்கிட்டோம்.”

“சூர்யா ஓகேவா? அவனுக்கு எல்லாம் வசதியா இருக்கில்லை?”

“தேவ், எதுக்கு இவ்வளவு அமர்க்களம் ப்ணணுறீங்க? நாங்க என்ன விசிட்டர்ஸா?” இப்போது அவன் சிரித்தான்.

“இந்திரா, அங்க ஒரு கப்போர்ட் இருக்கில்லை, அதைத் திற.” அவன் சொன்னதைச் செய்தது பெண். உள்ளே முழுவதும் அவன் ஆடைகள்.

“அதுல ஒரு ஆல்பம் இருக்கில்லை?”

“ஆமா.”

“ஃப்ரீயா இருக்கும் போது அதைப்பாரு, ட்ரெஸ்ஸுக்கு என்ன பண்ணப் போறே?”

“அதான் நீங்க எனக்கு எதுவுமே வாங்கி வெக்கலையே! கப்போர்ட் முழுக்க உங்க ட்ரெஸ் மாத்திரந்தான் இருக்கு.” அவள் வேண்டுமென்றே குறைப்பட்டாள். இங்கே வருவதற்கு முன்பாக அவர்களது வாடகை வீட்டிற்குச் சென்று மாற்றுடைகள் எடுத்துக் கொண்டுதான் வந்திருந்தாள். சூர்யாவிற்கும் இரவு ஆடை வாங்கியிருந்தார்கள். இப்போதும் அவன் அழகாகச் சிரித்தான்.

“வாங்கிக் குடுக்கிறேன், அதான் வந்துட்டேல்லை, எல்லாம் வாங்கிக் குடுக்கிறேன், இப்போதைக்கு அவசரத்துக்கு என்னோடது எதையாவது எடுத்து உடுத்திக்கோ.” அவன் குரல் வேறாகிப் போனது.

“இதுக்கு மேல பேசினா இன்னைக்கு வேலை பார்க்க முடியாது, நான் வெக்கிறேன்.” என்றவன் சட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டான். அவன் பார்க்கச் சொன்ன ஆல்பத்தை அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து புரட்டினாள் பெண்.

‘என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட பயணம்’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தான். அந்த ஆல்பம் முழுவதும் அவனும் அவளும் மாத்திரம்தான்! சில புகைப்படங்களை அவன் எடுத்தது அவளுக்குத் தெரியும். ஆனால் பல புகைப்படங்களை அவளுக்குத் தெரியாமல் எடுத்திருந்தான். அந்தப் பொறுக்கியிடம் அடிவாங்கியதைக் கூட விட்டுவிடாமல் நிழல்படமாக்கி ‘என் காதல் கொடுத்த காயம்’ என்று பெயரிட்டிருந்தான். கவலையையும் மறந்து பக்கென்று சிரித்துவிட்டாள் பெண்.

“இந்திரா, வாம்மா சாப்பிடலாம்.” வெளியே மாமாவின் குரல் கேட்கவும் ஆல்பத்தை மூடி வைத்துவிட்டு வெளியே வந்தாள். அன்றைய இரவை இளையவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் பரதன்.

அடுத்தநாள் மாலையே தாரிணியை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். காலையில் பல்கலைக்கழகம் சென்றுவிட்டு மாலை இங்கே மீண்டும் வந்துவிட்டான் சூர்யா. தேவன் இல்லாத குறையை அவன்தான் தீர்த்து வைத்தான். மருத்துவ மாணவன் என்பதால் ஹாஸ்பிடலிலும் வேலைகளை முடிப்பது இலகுவாக இருந்தது. கடைப்பிடிக்க வேண்டியவற்றை அவனிடமே சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

“காலை எக்காரணம் கொண்டும் அசைக்கக் கூடாது அத்தை, எவ்வளவு கவனமா பார்த்துக்கிறோமோ அவ்வளவு சீக்கிரமா குணமாகிடும்.” ஆச்சரியப்படும் விதமாக சூர்யாவிடம் தன் கோபத்தைக் காட்டவில்லை தாரிணி.

“எத்தனை நாளைக்குப்பா இப்பிடியே உட்கார்ந்திருக்க முடியும்?” கட்டிலில் சாய்ந்தபடி கேட்டார்.

“கொஞ்சம் கஷ்டந்தான் அத்தை, பொறுத்துக்கத்தான் வேணும்.” இந்திரா இப்போதும் மாமியாரின் முன்பாக வரவில்லை. பின்னணியிலேயே ஒதுங்கிக் கொண்டாள். பரதனும் மருமகளை வற்புறுத்தவில்லை. மனைவியின் குணம் தெரிந்ததால் அமைதியாக இருந்துவிட்டார்.

“இந்த சூப்பைக் குடிம்மா.” கணவர் புகட்டிய பானத்தை அருந்தியவர் கேள்வியாக அவரைப் பார்த்தார். கடையில் வாங்குவதற்கும் வீட்டில் தயாரிப்பதற்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?!

“எதைப்பத்தியும் யோசிக்காம அமைதியா இருக்கணும்.” தன்மையாக எடுத்துச் சொன்னார் கணவர். தாரிணி மறுப்பாக எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை தான் தயாரித்த உணவை வேண்டாம் என்று சொல்வார் என்று எதிர்பார்த்த இந்திராவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அமைதியாக அந்தப் பானத்தை அருந்தி முடித்தார் பெரியவர்.

மிரிஸ்ஸவில் வைத்து தாரிணி உண்டாக்கிய காயம் இன்றுவரை வலித்ததால் அவரைச் சென்று பார்க்க வேண்டும், பேச வேண்டும் என எந்த முயற்சியும் இந்திரா எடுக்கவில்லை. கணவன் ஓர் வார்த்தை ‘என் வீட்டிற்குப் போ’ என்று சொல்லிவிட்டான். அதை மறுக்க அவளால் முடியவில்லை. அது அவனது நியாயமான ஆசை. அத்தோடு காலம் முழுக்கத் தள்ளி வைக்கும் உறவும் இல்லை இது.‌ தேவனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டது பெண்.

அன்றைய நாள் முழுவதும் ஒருவித அமைதியிலேயே கழிந்தது. மருந்து, மாத்திரைகளின் உதவியோடு பெரும்பாலும் தாரிணி உறக்கத்திலேயே இருந்தார். சமையலுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருந்ததால் இந்திராவுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ஆரோக்கியமான சமையல் ஓரளவிற்கு அவளுக்கு நன்றாகவே வரும் என்பதால் தயங்கவில்லைப் பெண்.

இந்தக் கல்யாணத்தில் அத்தனை நாட்டம் இல்லை என்பதால் அவள் அம்மாவும் ஹாஸ்பிடலுக்கு வந்து பார்த்ததோடு சரி. அதன்பிறகு வரவில்லை. அப்பா மாத்திரம் வீடுவரை வந்து பார்த்துவிட்டுப் போனார். ஆனால் சூர்யா எல்லா குறையையும் தீர்த்து வைத்தான். தனது இருப்பு இப்போது இங்கு அவசியம் என்பதால் தினமும் லண்டன் போய் வருவதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

சரியாக மூன்றாவது நாள் மாலை அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு அடுத்தநாள் அதிகாலையிலேயே வீடு வந்தான் தேவன். அந்த ப்ளாக் ஆடி வீட்டின் முன்பாக வந்து நின்றபோது இருள் இலேசாகப் பிரிய ஆரம்பித்திருந்தது. வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் பரதன் வெளியே சென்றார். இந்திரா எப்போதும் பின்னணியிலேயே இருப்பதால் கிச்சனிலேயே நின்றிருந்தாள்.

“அம்மா எங்கப்பா?” தேவனின் குரல் இவளுக்கும் கேட்டது.‌ ஆனாலும் வெளியே வராமல் அவனுக்கான தேநீரைத் தயாரித்தாள்.

“உள்ளதான் இருக்கா, வந்து பாரு தேவ்.” பெரியவரின் குரல் கலங்கியது.

“கூடிய சீக்கிரமே எல்லாம் நார்மல் ஆகிடும்பா, ரொம்ப யோசிக்காதீங்க.” என்றவன் அம்மா இருந்த அறைக்குள் போனான். போகும்போது கண்கள் மனைவியைத் தேடின. அவள் சமையல் அறையில்தான் இருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டான்.

“தேவ்…” அதுவரைத் தூக்கத்தில் இருந்த அம்மா மகனின் அரவம் கேட்டதும் விழித்துக் கொண்டார். மிரிஸ்ஸவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் அத்தனை நல்ல உறவு இருக்கவில்லை. நீ வந்தாலும் வராவிட்டாலும் என் திருமணம் நடக்கும் என்ற அளவுக்கு மகன் துணிவான் என்று அம்மா கனவிலும் நினைத்திருக்கவில்லை. மகனின் செய்கையால் தாரிணி உடைந்து போனதென்னவோ உண்மைதான்.

ஆனால் இன்றைக்கு அம்மா, மகன் இருவருக்கும் நடந்தது எல்லாம் மறந்து போனது. அம்மாவின் காயமும் மகனின் ஆறுதலும் மாத்திரமே அந்த அறையை நிறைத்திருந்தது. கொஞ்ச நேரம் அந்த அன்பு வெள்ளத்தில் மிதந்த பரதன் மருமகள் அங்கே வரமாட்டாள் என்பதால் சமையலறைக்கு வந்தார்.

“அம்மாடி, தேவ் வந்திருக்கான்மா.” என்றவரைப் பார்த்துப் புன்னகைத்தவள் அவரிடம் டீ கப்பை நீட்டினாள். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டவர் அங்கிருந்து நகர்ந்தார். சற்று நேரத்தில் தன்னைப் பின்னிருந்து அணைத்த இரு வலிய கரங்களுக்குள் அடங்கியவள் அந்த அணைப்பைச் சில நொடிகள் அனுபவித்தாள்.

“வீட்டுக்குப் போங்கன்னுதானே சொன்னேன், அதுக்காக இங்க முழுநேர சர்வன்டா மாறிட்டீங்களா? இங்க இருந்து டீ குடுத்து அனுப்புறீங்க? அதுவும் அப்பாக்கிட்ட?” அவள் கழுத்து வாசம் பிடித்தபடி பேசினான் கணவன்.

“யாராவது வந்துடப் போறாங்க தேவ்.”

“வரட்டுமே! எனக்கென்ன வந்தது?” அவன் பதிலில் புன்னகைத்தவள் விலகினாள்.

“வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?”

“ம்… சூர்யா எங்கடா?”

“தூங்கிறான், இன்னும் கொஞ்ச நேரத்துல எந்திரிச்சு ரெடியாகிடுவான்.”

“ரொம்ப சிரமப்படுறானோ?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை, கொஞ்ச நேரம் ட்ரைவ் பண்ணணும், அவ்வளவுதானே?” இருவரும் பொதுவாகப் பேசினார்களே தவிர தாரிணியைப் பற்றிப் பேசவில்லை. இந்திரா பேச விரும்பவில்லை. இப்போது பேசினால் சரியாக இருக்குமா என்று தெரியாமல் தேவனும் அந்தப் பேச்சை ஆரம்பிக்கவில்லை.

மனைவியை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு வந்தவன் கதவை மூடிவிட்டு அதன் மீது சாய்ந்து கொண்டான். அந்த அறைக்குள் அவளைப் பொருத்திப் பார்ப்பது மிகவும் சுகமாக இருந்தது. முகத்தில் புன்னகைத் தவழ சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தான்.

“வீடெல்லாம் வசதியா இருக்கா?”

“ம்…” என்றவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான். அந்த நொடிக்காகவே காத்துக் கிடந்தவள் போல சிறிது நேரம் நின்றிருந்தவள் அவன் கைகள் எல்லைத் தாண்ட ஆரம்பிக்கவும் விலகினாள்.

“இப்போ சூர்யா வந்திடுவான், மாமாக்கும் சூப் பண்ணணும்.” இவர்கள் வாழும் இடத்தில் இலங்கை உணவகங்கள் இல்லை. அதனால் பெரும்பாலும் சமையல் வீட்டிலேயேதான் நடக்கும். அதுதான் ஆரோக்கியமும் என்பதால் அதைக் குறையாக யாரும் நினைப்பதில்லை.

“நானும் ஹெல்ப் பண்ணுறேன்டா.” என்றவன் சமையலறைக்கு மனைவியோடு வந்துவிட்டான். சில நிமிடங்களில் சூர்யாவும் வந்துவிட்டான்.

“அண்ணா! எப்போ வந்தீங்க?!”

“கொஞ்ச நேரம் முன்னாடிதான் சூர்யா, நீ எப்பிடி இருக்கே?” இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.

“நல்லா இருக்கேண்ணா, அத்தையைப் பார்த்தீங்களா?”

“ம்…‌ ஒன்னும் ப்ராப்ளம் இல்லைல்லை சூர்யா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லைண்ணா, நல்லா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும், நீங்க கவலைப்படாதீங்க.” தனது அக்காவை அவ்வளவு கேவலமாக நடத்தியவர் என்றாலும் தேவனின் அம்மா என்ற ஒரு உறவை சூர்யாவால் புறக்கணிக்க முடியவில்லை. மருத்துவ மாணவனது தொழில் தர்மமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தாரிணியைப் பற்றி இவர்கள் இருவரும் இலகுவாகப் பேசிக்கொண்டார்கள்.‌

“சின்னதா அடி பட்டிருக்குன்னு அப்பா சொன்னாங்க, நான் இவ்வளவு சீரியஸா நினைக்கலை.”

“சில நேரங்கள்ல அப்பிடித்தாண்ணா, ஒன்னுமே இல்லைன்னு நினைப்போம், ஆனா ஏதாவது இருக்கும், ஆரம்பத்துலேயே இதையெல்லாம் ஒழுங்கா கவனிக்கிறது பெட்டர், சின்ன வயசுன்னா சட்டுன்னு சரியாகிடும், அத்தையோட வயசுக்குக் கொஞ்சம் டைம் எடுக்கும்.”

“ரொம்ப தேங்க்ஸ் சூர்யா, சரியான நேரத்துல ரொம்பப் பெரிய உதவி பண்ணியிருக்கே, நீ இல்லைன்னா அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பாங்க.”

“இதுல என்னண்ணா இருக்கு, சொந்தம்னு எதுக்கு இருக்கோம், கஷ்ட நஷ்டத்துல பங்கெடுத்துக்கத்தானே!” தேவனிடம் விடைபெற்றுக் கொண்டவன் தன் அக்காவோடும் தனிமையில் பேசினான்.

“புது வீட்டுக்கு அண்ணா இப்போ வருவாங்கன்னு எனக்குத் தோணலைக்கா, நீ என்ன பண்ணப் போறே?”

“தெரியலை சூர்யா, ஒரே யோசனையா இருக்கு.”

“அவசரப்பட்டு நீயா எதுவும் அண்ணாக்கிட்டப் பேசிடாதே, அப்பிடியே உனக்கு இங்க இருக்க முடியலைன்னா எனக்கு கால் பண்ணு, நான்‌ உங்கூட வந்து இருக்கேன், பார்த்து நடந்துக்கோ, புள்ளை வந்ததும் அந்தம்மா ஏதாவது ஆரம்பிக்கும், அதுக்கு நீ இடம் குடுக்காம அமைதியா இரு, எந்த இடத்திலயும் அண்ணா உன்னைத் தப்பா நினைச்சிரக் கூடாது, கவனமா இரு.” ஆயிரம் புத்திமதி கூறிவிட்டுத்தான் தம்பி கிளம்பினான்.‌

அன்றைய பொழுது முழுவதும் தேவனின் நேரம் அம்மாவின் அறையிலேயே கழிந்தது. சதா புலம்புவதும் அழுவதுமாக நேரத்தைக் கடத்தினார் தாரிணி.‌ உள்ளே சொல்லவில்லை என்றாலும் வெளியே இருந்தவாறே என்ன நடக்கிறது என்று இந்திராவால் புரிந்துகொள்ள முடிந்தது. வலி அதிகம் இருக்கும் என்று தம்பியும் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அமைதியாகவே இருந்தாள் இளையவள்.

மூன்று நாட்கள் கணவனைப் பிரிந்த துயர் உள்ளத்தை வதைத்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அமைதி காத்தாள். இரவு கணவன் படுக்கைக்கு வந்தபோது நேரம் பத்தைத் தாண்டியிருந்தது. அமைதியாகத் தன்னைப் பார்த்துப் புன்னகைத்த மனைவியை ஒருசில நொடிகள் பார்த்திருந்தவன் என்ன நினைத்தானோ! சட்டென்று வந்து அணைத்துக் கொண்டான்.

“சாரி இந்திரா.”

“எதுக்கு தேவ்?” அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அணைப்பு இன்னும் இறுகியது.

“அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க, அம்மாக்கு நடந்தது மனசுக்குக் கஷ்டமா இருந்தாலும் அப்பிடி ஒன்னு நடக்கப் போகத்தானே மருமகள் வீட்டுக்கு வந்தான்னு திரும்பத் திரும்பச் சொன்னாங்க.” என்றவன் இப்போது அவள் விழிகளைப் பார்த்தான்.

“இந்திரா…” அவன் பார்வை மிகவும் ஆழமாக அவளை ஊடுருவியது.

“சொல்லுங்க தேவ்.”

“அம்மாவை இந்த நிலைமையில என்னால தனியா விட்டுட்டு வர முடியாதுடா.”

“வரச்சொல்லி நானும் கூப்பிடலையே.”

“நீ கூப்பிடமாட்டே, நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இங்க வந்து இருக்கிறே, அப்பிடி இருக்கும் போது நீயா எப்பிடிக் கூப்பிடுவே!”

“தேவ், இதைப்பத்தி எல்லாம் இப்ப யோசிக்காம அமைதியா இருங்க, போன வேலை என்னாச்சு?” மனைவி பேச்சின் திசையை மாற்றுவது அவனுக்குப் புரிந்தது.‌ ஆனால் இதைப்பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்தவன் தொடர்ந்தான்.

“இந்திரா, எங்கம்மா மோசமானவங்க கிடையாது, ஆனா என்னமோ தெரியலை, உன் விஷயத்துல ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க, அதைச் சரின்னு இப்பவும் நான் சொல்ல மாட்டேன், அதாலதான் அவங்களுக்குப் புடிக்குதோ இல்லையோ, எனக்குப் புடிச்சதை நான் நடத்திக்கிட்டேன், ஆனா இப்போ…”

“தேவ்… உங்க மனசு என்னன்னு எனக்கு நல்லாவே புரியுது, நீங்க எனக்கு எந்தளவு ஒரு நல்ல புருஷனா நடந்துக்கணுமோ அதேயளவு ஒரு நல்ல மகனாவும் நடந்துக்கணும், உங்க கடமைல இருந்து நீங்க விலக வேணாம்.”

“எம் மனசு என்னன்னு உங்களுக்கு நல்லாவே புரியுதா? அப்போ இப்ப எம் மனசுல என்ன ஓடுதுன்னு மேடம் சொல்லுங்க பார்க்கலாம்?” அவன் சரசம் பண்ணினான்.

“சும்மா பேசி டைமை வேஸ்ட் பண்ணுறது நீங்கதான், நானில்லை.” அவள் சொல்லி முடிக்கவும் அவன் வாய்விட்டுச் சிரித்தான்.‌ அதற்கு மேல் இருவருமே நேரத்தை விரயமாக்கவில்லை.

அடுத்தநாள் காலை இந்திரா ஆஃபீஸ் கிளம்பிவிட்டாள்.‌ திருமணத்திற்கென ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள். அது நேற்றோடு முடிந்து போனது. ஆஃபீஸ் விஷயமாக வெளிநாடு போய் வந்ததால் தேவனுக்கு அன்று விடுமுறை வழங்கி இருந்தார்கள். மனைவிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைப் பண்ணிவிட்டு விச்ராந்தியாக வீட்டில் இருந்தான் இளையவன்.

காலையிலேயே எழுந்து இந்திரா உணவைத் தயார் பண்ணியிருந்தாள். கூடவே தேவனும் மனைவிக்கு உதவிகள் பண்ணினான். பரதனும் அவராலான உதவிகளைச் செய்யவே வேலை சீக்கிரம் முடிந்திருந்தது. உரிய மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு அம்மாவுக்கான உணவோடு அறைக்குள் வந்தான் மகன்.

“தேவ்… விக்ரம்னா யாரு?” அத்தனை வலிகளுக்கு நடுவிலும் வந்தது கேள்வி.

“தாரிணி! இது இப்போ தேவையா?” கணவர் சத்தம் போட மனைவி அடங்கிப் போனாலும் தேவன் பதில் சொல்லத் தயங்கவில்லை. எப்போதிருந்தாலும் தெரிய வேண்டிய விஷயம்தான். உறவென்று வந்துவிட்ட பிறகு எதற்கு மறைக்க வேண்டும்? வெளிப்படையாகப் பேசிவிட்டால் நல்லது என்று தோன்றியது.

“இந்திராக்கு அவங்க வீட்டுல ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளைம்மா.”

“எதுக்கு இந்தத் தேவையில்லாத பேச்செல்லாம் தேவா! உங்கம்மாக்குத்தான் அறிவில்லைன்னா நீயும் அவளுக்குப் பதில் சொல்றே!”

“இல்லைப்பா, விஷயங்களை உடைச்சுப் பேசுறது நல்லதுன்னு தோணுது, இல்லைன்னா இந்திராக்குத்தான் தேவையில்லாத கெட்ட பெயர் வரும்.”

“எதுக்கு அந்தப் பயல் உம்மேல கை வெக்கணும் தேவ்?” இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் தேவன் சங்கடப்பட்டான். நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவளுக்கு நிச்சயம் பண்ணியிருந்தவன் எப்படி அவளை என்னிடமிருந்து நீ பிரிக்கலாம் என்று மல்லுக்கு வந்தான். குற்றவுணர்ச்சியின் காரணமாக அவன் கொடுத்ததை எல்லாம் நான் வாங்கிக் கொண்டேன் என்று அம்மாவிடம் எப்படிச் சொல்ல முடியும்?! ஆனால் சொல்லத்தானே வேண்டும்! இல்லாவிட்டால் நாளை தன் மனைவியின் பெயரோடு விக்ரம் என்ற பெயர் சேர்த்துப் பேசப்படும். தன் அம்மாவே அப்படிப் பேசக்கூடும்.

“அம்மா…” என்று ஆரம்பித்தவன் இந்திராவை முதல்முதலாக ஏர்போர்ட்டில் சந்தித்தது, பிற்பாடு டுபாயில் தங்கியிருந்தது, இலங்கையில் நிகழ்ந்தது என அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“அந்த விக்ரம் எம்மேல சும்மா கோபப்படலைம்மா, அந்தக் கோபத்துல நியாயம் இருந்துச்சு, அதாலதான் நான் அமைதியா போனேன், இப்ப எதுக்காக அவன் உங்கக்கிட்ட வந்திருக்கான்னு நான் விளக்கத் தேவையில்லை, சந்துல சிந்து பாட நினைக்கிறான், அதுக்கு நாம இடம் குடுக்க வேணாம்.”

“இந்த விளக்கமெல்லாம் தேவையில்லைப்பா, குடும்பம்னு ஆகிப்போச்சு, எல்லாரையும் அவங்க நிறை, குறைகளோட ஏத்துக்கிறது நல்லது, உங்கம்மா பண்ணின அவமானத்தை எல்லாம் மறந்துட்டு ஒரு அவசரம்னதும் மருமகள் ஓடி வரலையா? அந்த டாக்டர் தம்பிக்கு நமக்கு உதவி செய்யணும்னு என்ன தேவை இருக்கு! ஆனாலும் பண்ணினாங்க, அதுதான் மனுஷத்தன்மை.” சந்தர்ப்பம் அமைந்ததும் தன் பங்கிற்குப் புத்திமதி சொன்னார் அப்பா. தாரிணி பதில் சொல்லவில்லை. அமைதியாகவே கட்டிலில் சாய்ந்திருந்தார். அம்மா நிதானமாக யோசிக்கட்டும் என்று மகனும் மௌனித்தான்.

“இவ அமைதியா யோசிக்கிறதைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்குடா தம்பி!” அப்பாவும் மகனும் சமையலறையில் நின்றபடி பேசிக்கொண்டார்கள். அந்த வீட்டில் எப்போதும் அப்படித்தான். தாரிணிக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் ஆண்கள் இருவரும் சமையலறையைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அம்மாவுக்கு ஓய்வு வழங்குவார்கள். இன்றைக்கு இந்திரா பெரும்பாலான வேலைகளை முடித்துவிட்டதால் மீதி வேலைகளை இவர்கள் பார்த்தார்கள்.

“என்ன நடந்தாலும் எனக்காக இந்திரா எல்லாத்தையும் பொறுத்துக்குவாப்பா.”

“அது தப்பு தேவ், அவ உன்னை நம்பி வந்த பொண்ணு, உங்கம்மா பண்ணுற வில்லத்தனத்தை எல்லாம் தாங்கிக்கணும்னு அந்தப் பொண்ணுக்கு எந்த விதியும் இல்லை, அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்.”

“அதுக்காக இப்போ என்னால வீட்டைவிட்டுப் போக முடியாதுப்பா.”

“நானும் போகச் சொல்லலை தேவ், ஆனா கவனமா நடந்துக்கோ, அம்மா மேல பாசம் இருக்க வேண்டியதுதான், அதுக்காக பொண்டாட்டியைக் கவனிக்காம விட்டுடாதே, நான் இதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கேன், எங்கம்மா மேல எனக்கும் பாசம் இருந்துச்சுதான், அதுக்காக உங்கம்மாவை எந்த இடத்துலேயும் நான் விட்டுக் குடுத்ததில்லை, அதைப் புரிஞ்சுக்கோ.”

மாலை வீடு வந்த மனைவியை மிகவும் ஆர்ப்பாட்டமாகத்தான் வரவேற்றான் கணவன்.‌ லண்டனிலேயே பிறந்து வளர்ந்தவள். தினமும் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்வது ஆரம்பத்தில் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் தேவன் அதற்குப் பழக்கப்பட்டிருந்தான்.

“ரொம்ப டயர்டா இருக்கா இந்திரா?” அவள் கன்னக் கதுப்புகளில் தன் இதழ்களை உரசியபடி கேட்டான்.

“கொஞ்சம் டயர்ட்தான் தேவ், ஆனா நான் என்ஜாய் பண்ணினேன், ரொம்ப அழகா இருக்கு உங்க ஊர்.”

“நம்ம ஊர்.”

“ம்… நம்ம ஊர், இந்த இடத்தை எனக்கு ஃபுல்லா சுத்திக் காட்டுங்க, நீங்க படிச்ச ஸ்கூல், ஷாப்பிங் பண்ணின இடங்கள், திருட்டு தம் அடிச்ச இடம், பொண்ணுங்களை சைட் அடிச்ச இடம்…” பட்டியல் நீண்டு கொண்டே போக அவன் சத்தமாகச் சிரித்தான். தனது அறையில், தன் கை வளைவுக்குள் நின்றபடி தனது கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் மனைவி அழகாக இருந்தாள்.

“திருட்டு தம் மட்டுமில்லை, திருட்டு பியரும் இருந்திருக்கு.”

“ஓ…”

“ஆனா…”

“பொண்ணுங்களை நான் சைட் அடிச்சதே இல்லைன்னு தயவு செஞ்சு பொய் சொல்லாதீங்க.”

“அப்பிடி யாரு சொன்னா? பப்பி லவ்வெல்லாம் இருந்திருக்கு, சிக்ஸ்த் ஃபோர்ம் பண்ணும் போது திவ்யான்னு ஒரு பொண்ணு…” அவன் ஆரம்பிக்கவும் அவள் கண்களில் சுவாரஸ்யத்தையும் தாண்டி இலேசான கோபம் துளிர்த்தது. பெறாமைத் தெரிந்தது.

“இந்தக் கண்ணுல இப்போ லேசா பொறாமைத் தெரியுதே!” தன் இடது கண்ணில் முத்தம் வைக்க வந்தவனைத் தள்ளிவிட்டாள் மனைவி.

“எனக்கு மட்டுந்தான் பொறாமை வருமா? உங்களுக்கு திவ்யா மட்டுந்தானே? எங்கிட்ட ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நானும் சொல்ல ஆரம்பிக்கிறேன், அப்ப நீங்க என்னப் பண்ணுறீங்கன்னு நானும் பார்க்கிறேன்.”

“அடியேய்! பெரிய லிஸ்ட்டா?!”

“ஏன்? இருக்கப்படாதா? இவரு பெரிய மன்மதன்! இவருக்குப் பின்னாடி திவ்யா திரிஞ்சாளாம்.”

“திவ்யா எங்க திரிஞ்சா? நாந்தான் அவ பின்னாடி திரிஞ்சேன்.”

“ச்சீ! வெட்கமா இல்லை? பொண்ணுங்க பின்னாடி திரிஞ்சிருக்கீங்க?”

“பசங்கன்னா பொண்ணுங்க பின்னாடி திரியத்தான் செய்வாங்க, நீதான் பொய் சொல்லாம யாரை சைட் அடிச்சேன்னு சொல்லச் சொன்னியே?”

“அப்பிடி எதுவும் இருக்காதுங்கிற நம்பிக்கையில கேட்டேன், நீங்க இப்பிடி பொண்ணுங்க பின்னாடி அலையுற கேஸ்ன்னு எனக்குத் தெரியாது.” அவள் உண்மையிலேயே கோபப்படவும் தேவன் தவித்துப் போனான்.

“ஹேய் இந்திரா! பசங்கன்னா இதெல்லாம் சகஜம்டா, சூர்யாக்கிட்டக் கேட்டுப் பாரு, அவனும் இப்பிடி ஏதாவது கதை வெச்சிருப்பான்.”

“அதெல்லாம் கிடையாது, என்னோட தம்பி அப்பிடியில்லை, அவனுக்குப் படிக்கவே நேரம் போதாது, இதுல இதுக்கெல்லாந்தான் நேரம் இருக்கப் போகுதாக்கும்!” எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதற்கெல்லாம் நேரம் தானாக அமைந்து போகும் என்று இவளுக்கு யார் விளக்குவது?!

“அது போகட்டும், அது என்ன பெரிய லிஸ்ட்? யாருடீ அது உம் பின்னால திரிஞ்சது? இப்போ வந்து பார்க்கச் சொல்லு அவனுங்களை!”‌ இவன் வீராவேசம் கொண்டதை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவனிடமிருந்து விலகியவள் முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.

“இந்திரா…”

“நான் ரொம்ப டயர்டா இருக்கேன் தேவ், எனக்கு ரெஸ்ட் வேணும்.” மனைவியின் வார்த்தைகளில் ஆச்சரியப்பட்டவன் புன்னகைத்தான். எவ்வளவு படித்திருந்தாலும் நாகரிகமான உலகில் வாழ்ந்தாலும் பெண் எனப்பட்டவள் அடிப்படையில் இப்படித்தானா?! தன்னுடைய ஆண்மகன் என்று வந்துவிட்டால் அவளது பார்வையும் அணுகுமுறையும் வேறுதானா?!

எத்தனை முற்போக்கான பெண்ணாக இருந்தாலும் இனி தன் மனைவியிடம் மற்றைய பெண்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தேவன் புரிந்து கொண்டான். தாமதமான புத்திக் கொள்முதல் என்றாலும் இன்றைக்குப் படித்த பாடத்தை இனி ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதை நியாபக அடுக்குகளில் பதிந்து கொண்டான். இரவும் நிலவும் மாத்திரமே இன்றைக்கு அவனுக்குத் துணை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

அத்தியாயம் 18நான்கைந்து நாட்கள் கடந்து போயிருந்தன. வீடு வழமைக்குத் திரும்பியிருந்தது. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். தேவனும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தான். காலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாகக் கிளம்புவார்கள்.‌ அதே போல மாலையும் ஒன்றாகவே வீட்டிற்கு வருவார்கள்.அன்றைக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்